“அவன் வனத்தில் நுழையும்போது சருகுகள் நொறுங்குவதில்லை” -ஒரு ஜென் கவிதை புகழ் என்று நான் அன்போடு கூப்பிடுகின்ற குகை மா.புகழேந்தியின் மரம் குறித்த கவிதைப் பகிர்வுகள் தொகுக்கப்பட்டு ஒரு புத்தகமாக வெளிவருவது, புதிதாக நடப்பட்ட ஒரு செடி கொஞ்சம் செழித்து, ஒரு பூ பூத்து நிற்பதைப் பார்ப்பது போலிருக்கிறது. சொற்கள், வார்த்தைகள், வாக்கியங்கள் எனும் ஸ்தூல வடிவம் மறைந்து அவரது ஆன்மா ஒரு தொல்மரமாக நம்மை ஆரத் தழுவுகிறது. ஒரு மரத்தைப் பற்றிக் கொள்வதற்காக ஒரு செடியாக, பறவையாக, மலராகக், கிளையாக, இன்னொரு மரமாக நீண்டபடியே இருக்கும் புகழின் கைநிழலில் கதகதப்பாகக் கண்மூடி, நான் மரத்தாலானவளானேன்! புகழின் மூன்று வரிக் கவிதைகளுக்கு நான் மிகத் தீவிரமான ரசிகை. அவரது கோணமும், வாழ்வை அன்பாலும், நம்பிக்கையாலும் கொண்டாடும் கவி மனதும் என்னை எப்போதும் ஈர்ப்பவை. “செடிகளை வளர்ப்பது சுலபம்தான்; ஆனால் - பூக்களைப் பத்திரப்படுத்துவதுதான் எப்படி என்று தெரியவில்லை” என்பார்கள். ஆனால் புகழ் பத்திரப்படுத்தியிருக்கிறார் அப்பூக்களை - இக் கவிதைகளாக. மரத்தை அணுஅணுவாகக் காதலித்து, நேசிப்பின் ஆரத் தழுவுதலில் உள்வாங்கி, செல்லம் கொஞ்சி, உச்சி முகர்ந்து, முத்தமிட்டு, அதன் ஆன்மாவில் கலந்து, தன்னையும் அதற்கு உண்ணக் கொடுத்து, தனது உயிர்ப்பின் பூப்பாக உலகெங்கும் மரங்கள் பிறப்பதைக் கனவு காணும் ஒரு கவிஞனின் அகம் எவ்வளவு அழகு - எவ்வளவு அரிது - எவ்வளவு கனிவு! புகழின் அக் கவிமனம் எளிதில் யாருக்கும் கிட்டாத வரம். அதற்கு நான் பூரணமான விசிறி எனச் சொல்வதிலே எனக்குத் தனிப்பட்ட மகிழ்ச்சி. மராமரம்.. மராமரம்… என்று மரத்தின் பெயரை ஓயாமல் மனதுக்குள் கூவி கூவி.. பின் அது ராம் ராம் என்ற மந்திரமாய் மாறி அதன் மூலம் பிறந்தது தான் ராமாயணம் என்பது ஒரு இதிகாச புனைவு. ஆக ஒரு மரம் தான் இதிகாசம் பிறக்க ஆதிகாரணம் என்றும் வாதிடலாம். இது புறநிலை என்றால் மரம் தான் திருடனை கவிஞனாக்கியது என்பதை அகநிலையாய்க் கொள்ளலாம். இங்கும் நவீன இலக்கியவெளியில் மரமே அகமாயும் புறமாயும் மாறி ஒரு கவிஞனுக்கு கவிதை நூல் வெளிவரக் காரணமாகியுள்ளது. அந்த கவிதை நூலின் பெயர் அகம் புறம் மரம். எழுதிய கவிஞன் - குகை மா.புகழேந்தி. இந்த தொகுப்பு மரம் குறித்தான பல்வேறு பார்வைகளை அவதானிப்புக்களை சமூக அக்கறைகளை ஒரு ஆய்வை போல் கவித்துவமாய் சொல்லி செல்கிறது. நமது திருவள்ளுவர், திருக்குறளில் இரு இடங்களில் பனை, மூங்கில் என்று மரத்தை குறிப்பிட்டு இருப்பார். புகழுக்கோ பக்கத்துக்கு பக்கம் மர சிந்தனை தான். அனைத்தும் அறச் சிந்தனைகளும், அன்புச் சிந்தனைகளும் தான். மரம் குறித்து இந்தக் கவிதை பிரதியில் எவற்றை எப்படியாகப் பதிவு செய்துள்ளார் என்று நீங்கள் கேள்வி கேட்டால் நான் பதில் சொல்லிவிடமுடியும். ஆனால் கேட்பதற்கு உங்களிடம் கேள்விகள் பற்றாமலிருக்கும் என்பதால் உங்கள் சார்பாக நானே கேட்டு நானே பதிலளிக்கலாம் - இப்படியாக - மரத்திற்கு உதடு எது? இலைகள் தான். இலைகளின் ஒற்றுமையை எப்படி புரிந்துக்கொள்வது? நிழலாகத் தான். நிழலென ஒட்டியிருக்கும் இலைகளுக்குள் என்ன இருக்கிறது? அதற்குள் ஒரு பச்சை சாறு நிரம்பிய குளம் இருக்கிறது. குளம் வற்றிப்போனால் என்னவாகும்? சருகு என்ற புனைப்பெயரை சூட்டிக்கொள்ளும். சருகான இலையின் ஓசை எதைச் சொல்லுகிறது? வனத்துக்குள் புகுந்து மரங்களை வெட்டவந்த மனிதனைப் பற்றி சலசலத்து பேசுகிறது. மரத்தை வெட்டாமல் நானும் மரமாய் மாற என்ன தகுதி வேண்டும்? புல்லின் தைரியத்தை கைப்பற்றிக்கொள்ள வேண்டும். அப்படி மரமான பின் பழங்களை ஏன் பிரசவிக்க வேண்டும்? புறவைகள் கொத்தித் தின்னும் அழகை ரசிக்கத் தான். அழகான இலைக்கு ஏன் இலையுதிர்காலம் வருகிறது? அது பறவையின் பிரிவினைச் சொல்ல இறகுகளை இலையாக மாற்றி உதிர்க்கும் யுக்தி. மரத்திலிருந்து இலைகள் குதிப்பது போல் வேறு எதேனும் குதிக்குமோ? அட - கடவுளும் மரத்திலிருந்து குதித்தவர் தான்! என்றெல்லாம் இந்த தொகுப்பிலிருந்தே குவித்துக் கருத்துக்களை நான் பட்டியலிட முடியும். ஆனால் அவையெல்லாம் வெறும் கருத்துக்கள் மட்டும் அல்ல - கவிதைகள்! நாம் சாதாரணமாய் செய்யும் செயலையும் அசாதாரண புனைவுக்கு மாற்றிவிடும் சாதுர்யம் புகழிற்கு வாய்த்து விடுகிறது. “இடைவெளியோடு நாம் விதைகளை விதைத்தாலும் நெருக்கத்தின் பேரன்பை வளர்ந்துபின் காட்டிவிடுகிறது மரங்கள்” “கோணலாய் இருந்தாலும் மரங்களின் குணம் எப்போதும் நேரானது தான்” என்று விருட்சத்திற்காக தன் வாதத்தை வளமான வார்த்தைகளால் வசப்படுத்தி விடுகிறார். “பூமியின் பச்சையை அழிக்கும் ரப்பர் மனிதர்கள், ஐம்பூதங்களின் செல்லக்குழந்தையான மரங்கள், ஒவ்வொரு மரமும் ஒரு காடு” என்றெல்லாம் எழுதும் புகழை வாசிக்கையில், “நான் வாளொன்றையும் சுமந்து செல்லவில்லை சிரசொன்றயும் செதுக்கியதில்லை இதுவரை நான் செல்லும் போது புவியின் கதவை மூடிச்செல்கிறேன் எனக்குப் பின்னால்” என்று ஒரு மரம் என்ற தலைப்பில் ஸிரியக் கவிஞர் அடோனிஸ் எழுதிய கவிதை நினைவில் வந்து செல்கிறது “பூமியிலே, மண்ணின் ஆழத்திலே, வேர்கள் மரக்கிளைகள்: மேலே காற்றிலே, கிளைகளே வேர்கள்” என்றார் மகாகவி தாகூர். புகழிற்கோ மனிதர்கள், பறவைகள், கட்டடங்கள், மலை, கடல், நதி, பள்ளத்தாக்கு, வானம், மேகம் இப்படிப் பார்க்கும் அனைத்துமே மரத்தின் வடிவம்தான் - அதன் வண்ணம்தான். “மரமாட்டம் நிற்காதே” என்பது இனி இப்புவியில் வசைச் சொல் அல்ல புகழின் கவிதையால் - அது இசைச்சொல்! மரம் வீழ்த்துதல் என்ற தலைப்பில் போலந்து நாட்டு கவிஞன் ததயூஸ் ரோஸ்விட்ச்ட் எழுதுகையில் “வீழ்த்தப்படுவதற்காய் அழிவின் வெண்ணிறக் கோடுகளாய் குறியிடப்பட்டமரம் இன்னும் சுவாசித்தபடி இருந்தது அதன்கிளைகளும் குச்சிகளும் விரைந்து கடக்கும் மேகங்களைப் பிறாண்டிக்கொண்டு” என்று எழுதுவார். எங்கள் தமிழ்தேசக் கவிஞன் குகை மா.புகழேந்தியும் இவர்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவன் அல்ல. மரங்கள் பற்றிய கவிதைகளால் ஒரு அழகிய ஆவணத்தை தந்து, வனமாய் வியாபித்திருக்கின்ற புகழின் இத் தொகுப்பு பல்வேறு விதைகளை இப் பூவுலகிற்குக் கொடையளிக்கட்டும். நேசம் அதன் நிழலில் இளைப்பாறட்டும். * * * * *
No comment