நாடாளுமன்ற நாயகன் திருச்சி சிவா
தம் ஒரு கையில் ஒலியமரக் கிளையும், இன்னொரு கையில் விடுதலைப் போராட்டத்துக்கான துப்பாக்கியும் உள்ளன. எது வேண்டும் என்பதை உலகம் தீர்மானிக்கவேண்டும்
– யாசர் அரபாத்
பாலஸ்தீன விடுதலைப் போராளி யாசர் அரபாத் ஐக்கிய நாடுகள் மன்றப் பொதுச்சபையில் ஆற்றிய உரையின் சாரம்தான் இவ்வரிகள்.
“கோழைகள் விலகட்டும். வீரர்களே வாருங்கள்” என்று நெருக்கடி நிலைக் காலத்தில் அழைத்தவர் தலைவர் கலைஞர். அன்று விலகி ஓடிய கோழைகள் விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள்தான், வீரர்களாய்த் தலைவரைப் பின்தொடர்ந்தவர்களின் உழைப்பால்தான் இன்று இரண்டு கோடி உறுப்பினர்களுடன், இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாகவும், தமிழ்நாட்டை ஆறாவது முறை ஆட்சி செய்யும் திறனுடனும் திராவிட முன்னேற்றக் கழகம் திகழ்கிறது. அத்தகைய ஆற்றல்மிகு நம் இயக்கத்தைத் தாங்கிப் பிடிக்கும் கொள்கைத் தூண்களில் அண்ணன் திருச்சி சிவா அவர்களும் ஒருவர்.
தாயிடமிருந்து வந்த தலைமைப்பண்பு:
என் தாய் மடியில் நான் பால் குடித்தபோது
எனக்கு ஒன்று தோன்றியது
இந்த உலகம் என் தாயின் மார்பகத்தைவிட பெரிதில்லை
வளர்ந்தேன்
ஹுவாங் ஷான் மலையை என் கால்களால் கடந்தேன்
மஞ்சள் நதியை என் இடுப்புக்குக் கீழே ஓடவிட்டேன்
எல்லா நிலங்களையும் மலைகளையும் பறந்து பறந்து கடந்த பிறகு
நடு வயதுக்கு வந்த பிறகு
முதல் நரை என் தலையில் எட்டிப் பார்த்த பிறகு
இப்போதும் சொல்கிறேன்
இந்த உலகம் என் தாயின் மார்பகத்தைவிடப் பெரிதில்லை!
– சீனக்கவிதை
என்று புகழ்பெற்ற ஒரு சீனக்கவிதை உள்ளது. இந்தக் கவிதை அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு மிகவும் பொருந்தும்.
அப்பா இல்லாத பிள்ளை. மூன்று மாதக் குழந்தையாக இருந்ததிலிருந்தே அம்மாதான் பாசத்துடன் வளர்க்கிறார்.
ஈ, எறும்பு அண்டாத அரவணைப்புடன் கண்ணுங்கருத்துமாக வளர்க்கப்பட்டவர். எவரும் எந்தவொரு பழிச்சொல்லும் சொல்லிவிடக்கூடாது என்கிற கண்காணிப்புடன் பார்த்துக் கொள்ளப்பட்டவர். குதிரைக்குக் கடிவாளம் போட்டதைப் போல படிப்பில் மட்டுமே தன் மகன் கவனம் செலுத்த வேண்டும் என்ற அக்கறையோடு ஆளாக்கப்பட்டவர். தாய் சொல்லைத் தட்டாத மகனாக மாண்போடு வளர்ந்தவர்.
இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முளைத்த விதை:
ஐரோப்பாக் கண்டத்தில் நோயாளி நாடு எது என்று கேட்டால், உடனே உலக வரலாறு “துருக்கி நாடு” என்று கூறும். ஆனால், இன்று அதே நோயாளி நாடு தான், தனது தீராத அடிமை ஆதிக்க முடியாட்சி என்ற நோயை, விடுதலை வீரன் முஸ்தபா கமால் பாஷா என்ற குடியாட்சி டாக்டரால் குணமாக்கி ஐரோப்பாவிலே மட்டுமல்ல, உலக வரலாற்றிலேயே வீறுபெற்ற விடுதலை நாடாக விளங்குகின்றது.
மாவீரன் முஸ்தபா. 1881-ஆம் ஆண்டில், சலோனிகா என்ற துறைமுகத்தில் மிகச் சாதாரண எடுபிடி வேலையாளாகப் பணியாற்றிய அலிரிசா என்பவருக்கும், சபீதா என்ற இஸ்லாமியப் பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தார். தந்தையைவிட, தாய் எடுத்தக்காரியத்தை உடனுக்குடன் முடிக்கும் திறன்பெற்ற பெண்ணாக இருந்தார். சபீதா தனது மகன் முஸ்தபாவை அருமையாக வளர்த்து, தன்னால் முடியும் அளவுக்குரிய கல்வியைக் கற்றுக் கொடுக்க, கணவரின் நண்பர் ஒருவர் உதவியால், முஸ்தபா சலோனிகா நகரிலுள்ள ராணுவப் பள்ளியிலே சேர்ந்தார். திறம்படக் கற்றார்.
“சமூகத்தில் நல்ல மாற்றத்தை கொண்டுவர விரும்பினால்,
முதலில் உன்னில் மாற்றம் கொண்டு வா.”
அதைப்போலவே, அம்மாவின் வளர்ப்பில் அரிய பிள்ளையாக வளர்ந்து, இன்றைக்கு இந்தியாவே போற்றும் திமுக–வின் நாடாளுமன்ற சிங்கமாக வலம்வருவதற்கான விதை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது விழுந்தது.
இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தேன் என்றெல்லாம் சொல்ல முடியாத பத்து வயது மாணவன். ஆனால் ஒன்று மட்டும் மனதில் ஆழமாகப் பதிந்தது, சிந்தையை சிலிர்க்க வைத்தது, அந்த முழக்கம் எல்லா திசைகளிலும் கேட்ட காரணத்தால்.
“உடல் மண்ணுக்கு ! உயிர் தமிழுக்கு!”
சாலையில் செல்கின்ற வாகனங்கள் எல்லாவற்றிலும் இந்த வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட தாளினை கல்லூரி மாணவர்கள் கூட்டமாக நின்று மறித்து ஒட்டி அனுப்புவார்கள். எங்கெங்கு காணினும் இந்த வாசகங்கள்! முழக்கங்கள்! தொடர்ந்து ஐம்பது நாட்களுக்கும் மேல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படவில்லை! துறுதுறுப்புடன் கூட்டமாகப் பள்ளியில் துணிச்சலாக நுழைந்து முழக்கம் எழுப்பும் அந்தக் கல்லூரி மாணவர்கள் மீது ஓர் இனம்புரியாத பாசம்! அவர்களைப் பார்த்தவுடனே உற்சாகம் தொற்றிக் கொள்ளும். தமிழுணர்வு என்பது இன்றும் ஆழமாய் என் மனதில் பதிந்திருப்பதற்கு இந்த காலகட்டம் ஒரு பெரும் காரணம்’’ என்று ’எதிர்பாரத திருப்பம்’ என்னும் தன்னுடைய நூலில் அண்ணன் திருச்சி சிவாவே கூறியுள்ளார்.
தமிழ்நாட்டு முதல்வர் ‘தளபதி ’ பட்டம் சூடிய கதை:
மாவோ –வின் ஆறாயிரம் மைல்கள் நடந்த சாதனைப்பயணம்.
ப்யூக்கின் என்ற தென் சீன நகரிலிருந்து 95,000 வீரர்களோடு தொடங்கிய இந்தப் போர்நடைப்பயணம் 368 நாட்கள் நடந்தது. அவற்றில் 235 நாட்கள் நடப்பதில் செலவாயின. நடைப்பயணம் நிறுத்தப்பட்ட நாட்கள் 100. அந்த 100 நாட்களில் பயணத்தை மறித்து அதன் நோக்கத்தை முறியடிக்க முயன்ற சியாங்கே ஷேக் அரசின் சேனையோடு செஞ்சேனை போர் புரியச் செலவிட்ட நாட்கள் 56.
‘Migration of a Nation’ – ‘ஒரு தேசமே இடம் பெயர்வது போன்ற சரித்திர சாகசம்’ என்று எழுதிய எட்கார் ஸ்நோவின் கூற்று மிகையல்ல; மிக உண்மை. 95,000 செஞ்சேனை மறவர்களோடு தொடங்கிய போர்ப் பயணம் ஷென்சியில் முடிவுற்ற போது 45,000 வீரர்களே எஞ்சி இருந்தனர். இந்தப் பெருந்தியாகம் – நாற்பதாயிரம் வீரர்களின் உயிர்த்தியாகம் – இல்லாமல் நெடும்பயணம் நிறைவேறியிருக்க முடியாது.
மாவோ கொண்டு வந்த ‘லாங் மார்ச்’சின் விளைவுகள் இளைஞர்களிடம் எப்படி மாற்றம் உண்டாகக் காரணமாக இருந்ததோ அதுபோல தி.மு.க. இளைஞரணி என்பது தளபதி தலைமையில் களம் கண்டு 1989இல் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு முக்கிய காரணம் தளபதிதான். நம் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதல்வருக்குத் தளபதி பட்டம் வரக் காரணமானவர் அண்ணன் திருச்சி சிவாதான்.
வேலூர் கூட்ட மேடையில் உட்கார்ந்திருக்கும்போது, என் அருகில் தளபதி. பக்கத்தில் வெற்றிகொண்டான் உட்கார்ந்திருக்கிறார். தளபதியிடம், “என்னங்க, இவ்வளவு மக்கள் கூடியிருக்கிறார்கள்.” என்று சொன்னேன். அவர் “ஆமாம், ஆமாம்” என்றார். “நாங்கள் இனிமேல் உங்களை வேறு மாதிரி கூப்பிடப் போகிறோம்” என்று சொன்னேன். “என்னா? என்னா?” என்கிறார். “நீங்கள் பெரிய படைக்குத் தளபதி மாதிரி. அதனாலே உங்களை இனிமேல் ‘தளபதி’ என்றுதான் அழைக்கப்போகிறோம்” என்று சொன்னேன்.
“சும்மா இருங்க, இப்படி எதையும் பண்ணிகிட்டிருக்காதீங்க” என்று சொன்னார். “அறிஞர், கலைஞர், நாவலர், பேராசிரியர் என்றெல்லாம் சொல்கிறோம் அல்லவா, அதுபோல தளபதி என்பது நிற்கும். நாங்கள் இனிமேல் உங்களைத் ‘தளபதி’ என்றுதான் கூப்பிடப் போகிறோம்” என்று சொன்னேன். அவர் ஒப்புக்கொள்ளவில்லை. பக்கத்தில் இருந்த வெற்றிகொண்டான் என்னிடம், “அவரு அப்படித்தான் சொல்வார். நீ சொல்லிடுய்யா … ” என்றார்.
நான் பேசும்போது “இனி மு.க.ஸ்டாலின் தளபதி என்றுதான் அழைக்கப்படுவார். துண்டுப் பிரசுரங்களிலும், விளம்பரங்களிலும் ‘தளபதி மு.க. ஸ்டாலின்’ என்றுதான் இருக்கவேண்டும். இவர்தான் நமக்குத் தளபதி. இந்தத் தலைமுறைப் படையின் தளபதி”. எதிர்காலத்தை வழிநடத்திச் செல்கிற தளபதி. பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணாவுக்குப் பிறகு அந்தப் பெயருக்குத் தகுதியானவர் யாரும் வரவில்லை. அவர் இவர்தான்” என்று வேலூர் கோட்டைவெளி மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டத்தில் அறிவித்தேன் என்று அண்ணன் திருச்சி சிவா தன்னுடைய ’கேளுங்கள் சொல்கிறேன்’ என்கிற நூலில் கூறியுள்ளதைப் படித்துவிட்டு வியந்துபோனேன்.
கலைஞர் காட்டும் பாசம்:
இலட்சிய வெறிகொண்ட இளைஞனாக தனது அரசியல் வாழ்வைத் தொடங்கி, படிப்படியாக உயர்ந்து, இன்று இந்தியாவே அண்ணாந்து பார்க்கும் வகையில் ஆற்றல்மிகு நாடாளுமன்ற வாதியாகத் திகழ்பவர் சகோதரர் திருச்சி சிவா.
தொடர்ந்து அடுத்தடுத்து அவரைப் பதவிகள் தேடிச்சென்றது. என்றால், அது அவர் கேட்டுப் பெற்றதில்லை. அவரது ஆற்றல் அவருக்கு தேடிக் கொடுத்த தொடர் பரிசுகள்.
“மாநிலங்களவை உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து அவருக்கே அளிக்க வேண்டுமா? இந்த முறை வேறு யாருக்காவது தரலாமே” – என ஒரு முறை தலைவர் கலைஞரிடம் கழகத்தின் முன்னோடி ஒருவர் கேட்டபோது, “இது சிவா கேட்டுக் கொடுப்பதில்லை; சிவாவின் ஆற்றலுக்காகத் தருவது!” என்றார் கலைஞர்.
தலைவரே தந்தையுமானவர்:
தலைவர் கலைஞரைக் காண நேர்கிறபோதெல்லாம் உற்சாகப் பெருக்கோடும், அன்றைய அரசியல் சூழல் அவரை வதைக்கிற போதெல்லாம் ஆவேசம் கொண்டும் நான் எழுதியதெல்லாம் எழுத்து மாறாமல் முரசொலியில் அச்சேறி வலம் வந்திருக்கிறது! முரசொலியின் மலர்களில் எழுதுவது பெருமைக்குரிய ஒன்று!
மலர்களுக்கு கட்டுரை கேட்டு வருகின்ற கடிதம் திடீரென்று நின்று போக என்னுடைய சுபாவத்தின் காரணமாக நானும் எழுதுவதை நிறுத்திக் கொண்டேன். தலைவர் உடல் நலம் குன்றியிருந்த நேரம் ஒருநாள் கோபாலபுரம் மாடியில் பார்த்தபோது மெதுவாக அவரிடம், “முரசொலி மலருக்குக் கட்டுரை கேட்டு இப்போதெல்லாம் எனக்குக் கடிதம் வருவதேயில்லை” என்றேன். நிமிர்ந்து என்னைப் பார்த்து தெளிவான குரலில் “அவன் யாருய்யா உன்கிட்ட கட்டுரை கேக்குறதுக்கு? நீ எழுதி குடு! அவன் போடலைனா எங்கிட்ட வந்து சொல்லு.”
திருச்சி சிவா என்னும் இவர் யார்?
’’தொண்டு செய்து பழுத்த பழம்
தூய தாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்!’’
என்று பாவேந்தர் பாரதிதாசன் தந்தை பெரியார் குறித்துப் பாடியுள்ள வரிகளே இவையாகும்.
அத்தகைய தந்தை பெரியாரிடம் நீங்கள் யார்? என்று கேட்கிறார்கள். அவர் சொன்னார், ‘‘ஒரு பெரிய வலிமையான நாடு, வலிமை குறைந்த சிறிய நாட்டை ஆதிக்கம் செலுத்தினால், (பிடல் காஸ்ட்ரோவின் நண்பர் சேகுவேரா அடிமைப்பட்டு கிடக்கிற நாடெல்லாம் என் நாடு என்று சொன்னதுபோல) நான் இந்த சிறிய நாட்டின் பக்கம் நின்று எவ்வளவு வலிமைமிக்க நாடாக இருந்தாலும் அதனை எதிர்த்துக் குரல் கொடுப்பேன். இந்த சிறிய நாட்டில் மத ரீதியாக ஒருவன் பெரிய எண்ணிக்கையில் இருந்து ஒரு சிறிய மதத்தைச் சார்ந்தவனை ஒடுக்குவானேயானால் நான் அந்த சிறிய அமைப்பிற்கு ஆதரவாக இருப்பேன். இதில் ஒருவன் பெரிய சாதியாக இருந்து இன்னொரு சாதியை ஒடுக்கினால் நான் ஒடுக்கப்படுகிற சாதிக்கு ஆதரவாக இருப்பேன். இந்த ஒடுக்கப்படுகிற சாதியில் ஒருவன் முதலாளியாக இருந்து தொழிலாளியை அடக்குவானேயானால் நான் தொழிலாளிக்கு ஆதரவாக அந்த முதலாளியை எதிர்ப்பேன். இந்தத் தொழிலாளி நான் உழைக்கிறேன் என்ற பெயரால் அவன் மனைவியை அடிமைப்படுத்தினால் நான் அந்தப் பெண்ணுக்கு ஆதரவாகப் பேசுவேன்” என்று ஒரு விளக்கம் சொன்ன மனிதரை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. அது தனி மனிதனில் தொடங்கி, நாடு, அமைப்பு வரை யார் ஒடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்காக குரல் கொடுப்பேன் ’’ என்று கூறிய தலைவர் பெரியார்.
தந்தை பெரியார் எப்படி தன் வாழ்நாள் எல்லாம் எளியவர்களுக்காக. தன்னை அர்ப்பணித்துக் கொண்டாரோ அதைப்போல அண்ணன் திருச்சி சிவா அவர்களும் எளியவர்களுக்காகக் குரல் கொடுப்பதையும், அவர்களின்பால் நிற்பதையும் பெருமையாகக் கருதக்கூடியவர்.
சிறந்த நாடாளுமன்றவாதியான அண்ணன் திருச்சி சிவா அவர்கள் தனிநபர் மசோதா கொண்டு வந்து வெற்றி பெறுவதில் மிகவும் புகழ் பெற்ற ஒருவர். அவர் கொண்டு வந்த தனிநபர் மசோதாக்கள் பற்றித் தமிழ்நாட்டு முதலமைச்சர் தளபதி அவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டு இருக்கின்றது. 45 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டு வந்த பாலினச் சமத்துவத்துக்காகவும் திருநங்கைகள் உரிமைகளுக்காகவும் இவர் கொண்டு வந்த தனிநபர் மசோதா பிறகு இவருடைய பெரும் முயற்சியால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.
கலைஞர் ஏன் கை குலுக்குவதில்லை?
தலைவர் கலைஞரிடம் பலர் பேசத் தயங்குகின்ற சூழலில், இவர் சற்றும் தயக்கமில்லாமல் உரிமையோடு பேசும் ஆற்றலாளர். தலைவரும் அந்த இடத்தை இவருக்குத் தந்திருந்தார். கலைஞர் யாரோடும் கை குலுக்குவதில்லை. அதைப் பற்றி தலைவர் கலைஞரிடமே கேட்டிருக்கிறார். அதுபோல, “மாலைகள் அணிவித்தால் ஏன் தோளில் வாங்கிக் கொள்வதில்லை?” என்றும் கேட்டிருக்கிறார். அதிகமாக விவரம் தெரியாத பருவம் எதையும் கேட்டுவிடுவது என்ற உணர்வோடு கேட்டிருக்கின்றார். அதற்குத் தலைவரும் பதில் சொல்லியுள்ளார். அதை அண்ணன் சிவா இப்படி விவரிக்கின்றார்….
பெரியாரிடமும் அண்ணாவிடமும் வளர்ந்த அந்தத் தலைவர் எங்களைப் போன்றோரையும் சமமாக மதித்து பதில் சொன்னார், “கை குலுக்குகிறபோது யாராவது இறுக்கிப் பிடித்தால் நான்கு நாள்கள் எழுத முடியாது” என்றார். பல நேரங்களில் நான் அதை உணர்ந்திருக்கிறேன். அன்பை வெளிப்படுத்துவதற்காக, உறவை வலுப்படுத்துவதற்காகக் கரம் கொடுப்பதற்கு மாறாகப் பலத்தைக் காட்டுவதற்காகச் சிலர் வருவார்கள். பல நேரங்களில், பல மேடைகளில் கையை உருவிக் கொள்வோம். என்ன? எப்படி? என்று நினைப்பார்கள். விளைவு எங்களுக்குத்தானே தெரியும். அடுத்ததாக, “எனக்கென்ன மாலைகள் பிடிக்காதா? மாலையின் ஓரிதழ் கண்ணில் பட்டால், ஏற்கனவே அறுவை சிகிச்சைக்கு ஆளாகியிருக்கிற கண், அதிலும் ஏதாவது பட்டுவிட்டால் நான் என்ன செய்வேன். யோசித்துப் பார்” என்று சொல்வார். நமக்கு மனம் கலங்கும்.
அறிஞர் அண்ணாவின் அடியையொற்றி அண்ணன் சிவா:
“கல்லூரியில் படித்த காலங்களில் நான் ஒவ்வொரு முறை வீடு திரும்புகிறபோதும் என் தாத்தாவின் கழுத்திலோ காதிலோ ஏதோ ஒரு நகை குறைந்திருக்கும். அது எனக்காக என்று தெரியும்” என்று சொல்வார்.
அறிஞர் அண்ணா படித்து முடித்தவுடன் குடும்ப சூழ்நிலையினால் அவரை வேலைக்குச் செல்லச் சொல்கிறார்கள். நகர சபையில் ஒரு வேலை காலியாக இருப்பதை அறிந்து, சிபாரிசுக்காக ஒரு நீதிபதியிடம் செல்கிறார். அந்த நீதிபதி, அண்ணாவைப் பார்த்தவுடன் வெளியே வந்து “நானே உங்களைப் பார்க்கவேண்டும் என்றிருந்தேன். ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரிடம் நீங்கள் சிபாரிசு செய்யவேண்டும். அது உங்களால்தான் முடியும்” என்று சொன்னவுடன், “நாம் யாரிடம் வேலை கேட்டு வந்தோமோ, அவர் நம்மிடமே சிபாரிசு கேட்டு வருகிறாரே என்று வாயை மூடிக்கொண்டு திரும்பி வந்துவிட்டாராம். இதை எழுதிவிட்டு அண்ணா சொல்கிறார்: “ஒருவேளை அன்றைக்கு அந்த வேலை கிடைத்திருந்தால் உன்னுடைய அண்ணன் நகரசபையின் தலைமை குமாஸ்தாவாக இருந்திருப்பானே தவிர, தமிழ்நாட்டின் தலைமை அமைச்சராகி இருக்கமாட்டான்” என்று பின்னாளில் அண்ணா சொன்னார்.
அண்ணன் திருச்சி சிவா அவர்களுக்கு ஐஏஎஸ் கனவு இருந்தது. தான் ஒரு மாவட்ட ஆட்சியராக வந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்று ஒரு கனவினைக் கொண்டு இருந்தார். ஆனால், காலமும் தலைவர் கலைஞர் அவர்களும் அவரை மடைமாற்றியதால், இன்றைக்கு இந்தியாவின் சீர்மிகு நாடாளுமன்றவாதி என்று விருது பெறுகிற அளவுக்கு சிறந்த ஒரு அரசியல்வாதியாக உருவாகியுள்ளார்.
இராமேஸ்வரமும் காசியும்
ஒருமுறை அவரிடம் உத்திரப்பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கேட்டிருக்கின்றார். “ரொம்ப பிடிவாதமாகப் பேசுகிறீர்கள் சிவா, மனிதாபிமானத்தோடு பேசுங்கள்! கொஞ்சம் எனக்கு விளக்கம் சொல்லுங்கள்” என்று கேட்டிருக்கின்றார்.
“என்ன?” என்று கேட்டேன். “எங்கள் பகுதியில் இருந்து புண்ணியத்தலமாக இருக்கிற உங்கள் ராமேஸ்வரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். நீங்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் மட்டும்தான் அங்கே எழுதியிருக்கிறீர்கள். இந்தி மட்டுமே தெரிந்த அவர்கள் சிரமப்பட மாட்டார்களா? அவர்களுக்காக இந்தியிலும் சேர்த்து எழுதக்கூடாதா?” என்று கேட்டார்.
“அகிலேஷ், நியாயமான கேள்விதான். எனக்கு ஒரு சந்தேகம். எங்கள் ஊரிலிருந்து ஏராளமானோர் காசிக்கு வருகிறார்கள். நீங்கள் ஆங்கிலத்தில்கூட எழுதுவதில்லை. இந்தியில் மட்டும்தானே எழுதியிருக்கிறீர்கள். ஏன், ஆங்கிலத்திலாவது எழுதக்கூடாதா?” என்று கேட்டேன்.
“உங்களிடம் பேசினால் இப்படித்தான் பதில் கிடைக்கும்” என்று சொல்லிவிட்டுப் போனார்.
தி.மு.க. என்றாலே பேசத் தெரிந்தவர்கள் என்று சொல்வார்கள். மற்றவர்களுக்குப் பேசத் தெரியாதா? சரியாகப் பேசத் தெரிந்தவர்கள் என்று பொருள். நம் தானைத்தலைவர் அப்படி சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
சானிட்டரி நாப்கின்களுக்கு வரிவிலக்கு :
2014 முதல் 2020 வரை நான்காவது முறையாக ராஜ்ய சபா உறுப்பினராக திருச்சி சிவா பொறுப்பு வகித்தார். அப்போது, சானிட்டரி நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்கும்படி அரசிடம் வலியுறுத்தினார்.
சிறந்த நாடாளுமன்றவாதி விருது:
நீட் தேர்வுகள், குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை தொடர்பான விவாதங்களில் திருச்சி சிவா பங்கேற்று சிறப்பாக வாதிட்டார். 2019ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி சிறந்த நாடாளுமன்றவாதி விருது திருச்சி சிவாவுக்கு வழங்கப்பட்டது.
No comment