அண்ணா நூற்றாண்டுவிழா திங்கள் அறக்கட்டளை சொற்பொழிவு

28.11.2008 அன்று, சென்னை, தரமணியில் உள்ள உலகத் தமிழராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ``அண்ணா நூற்றாண்டுவிழா திங்கள் அறக்கட்டளை சொற்பொழிவு’’ நிகழ்ச்சியில்
கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் ஆற்றிய உரை

இந்த நிகழ்ச்சியினை மிக அருமையாக, ஒரு தொடர் சொற்பொழிவாக அமைத்து, தமிழகத்தின் தலைசிறந்த சிந்தனாவாதிகளையும், பேச்சாளர்களையும் இங்கே அழைத்து, முக்கியமான கருத்துப் பரிமாற்றங்களைச் செய்ய ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியினை இங்கே தொடங்கியிருக்கின்றோம். என்னுடைய மரியாதைக்குரிய முனைவர், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் திரு.குணசேகரன் அவர்களுக்கும், என்னை முதலில் அறிமுகப்படுத்திய இந்த நிறுவனத்தின் இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பாளர் முனைவர் வளர்மதி அவர்களுக்கும், இங்கே கூடியிருக்கின்ற பேராசிரியப் பெருமக்களுக்கும் என்னுடைய வணக்கம். 

பேரறிஞர் அண்ணா குறித்து, அதிலும் மிகக் குறிப்பாக, ``அண்ணாவும், பிறநாட்டு அறிஞர்களும்’’ என்ற தலைப்பிலே பேசவேண்டும் என்பது குறித்து, ஓரிரு தினங்களாக, நான் எதைப் பேசுவது என்று நினைத்துப் பார்த்திருந்தாலும், நேற்றைக்கு நமது நாடு சந்தித்திருக்கிற அந்த தீவிரவாதத் தாக்குதலில், அண்ணா எத்தகையதொரு முக்கியமானதொரு படிப்பினையை நமக்கு விட்டுச்சென்றிருக்கிறார் என்பதை நினைவூட்டி, என்னுடைய இந்த உரையைத் தொடங்கலாம் என்று நினைக்கின்றேன். 

திராவிட நாடு பிரிவினை கொள்கையை உயிர்மூச்சாக நினைத்திருந்த அண்ணா, ஒரு காலகட்டத்தில் அதனைக் கைவிட நேர்ந்தது. ஆனால், எந்த சந்தர்ப்பத்திலே அதனை கைவிடுவதற்கான தன்னுடைய அறிவிப்பினை அவர் செய்தார் தெரியுமா? சீன ஆக்கிரமிப்பின்போது அண்ணா சொல்கின்றார், ``நாங்கள் நம்பியிருந்த திராவிடநாடு பிரிவினைக் கொள்கையைவிட, இந்தியாவின் பாதுகாப்பும், இறையாண்மையும் மிக முக்கியம் என்பதால், நாங்கள் இந்தக் கணத்தில் அதனை பின்னுக்குத்தள்ளி, இந்தியாவின் பாதுகாப்பையே மிக முக்கியமாக முன்னே வைக்கின்றோம்’’ என்று சொன்னார். அவருடைய அந்தக் கருத்து, நேற்றைய நிகழ்வுகளுக்குப்பின் எத்தகையதொரு அறிவூட்டலையும் படிப்பினையையும் நமக்குத் தந்திருக்கிறது என்பதை நினைவூட்டி, நான் இந்தப் பகிர்வினைத் தொடர்கின்றேன்.

உலகப் பரப்பிலே பல்வேறு மனிதர்கள் பிறந்திருக்கிறார்கள், மறைந்திருக்கிறார்கள், வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் பற்பலரும் சென்ற அந்தச் சுவடிலேயே பின்தொடர்ந்து சென்று, அவர்களிடம் இருந்து அனைத்தையும் எடுத்துக்கொண்டு, அவர்களின் அடியொற்றியே வாழ்ந்தவர்கள் அனைவரும் பிறவித் தலைவர்களாகப் போற்றப்படவில்லை. தனக்கான ஒரு பாதையை தேர்ந்தெடுத்துக்கொண்டு, முதல் பயணம் தொடங்கியவர்களே உலகில் எல்லாவிதமான, முன்னோடியான பாதைகளுக்கும் வித்திட்டிருக்கிறார்கள். உதாரணத்திற்கு, தனிப்பயணம் அமைத்துக்கொண்ட கலிலியோ, தாமஸ் ஆல்வா எடிசன், நியூட்டன், மேரி கியூரி இவர்கள் அனைவரும் தன்னந்தனியராய் தமக்கான ஒரு வழியை தேர்ந்தெடுத்தார்கள். தமக்கான முன்னோர்கள் விட்டுச்சென்ற அந்த பாரம்பரியமிக்க தோள்களின்மீது அமர்ந்துகொண்டதால்தான் என்னால் இந்த உலகத்தை மேலும் நன்றாகப் பார்க்கமுடிகிறது என்று சொல்கின்ற பெருந்தன்மை ஐன்ஸ்டினுக்கு இருந்தது. உண்மைதான், விஞ்ஞானிகளாகட்டும், மெய்ஞ்ஞானிகளாகட்டும் அல்லது இலக்கியவாதிகளாகட்டும், யாராக இருந்தாலும், முன்னோர்கள் விட்டுச்சென்ற அந்தத் தடத்தினை திரும்பிப் பார்த்து அவர்களிடமிருந்து செரிவான காலடிகளை எடுத்துக்கொண்டாலும், அதற்குப் பின்பு அவர்கள் தொடங்குகின்ற அந்த தனித்த பயணமே அவர்களை தனித்து நிற்கின்ற ஒற்றை நட்சத்திரமாக அந்தப் பால் வீதியிலே காட்டி வந்திருக்கிறது. அந்த வகையிலே பார்க்கும்போது, மேநாட்டு அறிஞர்கள் பலரையும் படித்து, கிரகித்து, அவர்களிடமிருந்த அரசியல், பொருளாதார நிலவழிச் சிந்தனைகளை தனக்குள்ளே செறித்துக்கொண்டு, தனித்ததொரு தமிழ்த் திராவிட தேசியம் பேசிய பேரறிஞர் அண்ணா, தனித்ததொரு நட்சத்திரமாகத்தான் பால் வீதியிலே இன்று வரை நமக்கு கண்ணுக்குத் தெரிகின்றார். "In the history of the art, genius is the thing of rare occurrant. Rarer still however are the competent reporters and recorders of that genius. The world has had many hundreds of admirable poets and philosophers; but of these hundreds, only a few, very few have had the fortune to attract a Bosewell or Eckerman"

பேரறிஞராய்ப் பிறப்பதே அரிது, ஆனால் அரிதிலும் அரிது, அந்தப் பேரறிஞர் தமக்கென்று ஒரு தக்க வாரிசை ஈர்ப்பது. ஆனால் நம்முடைய பேரறிஞர் அண்ணா, தம் கருத்துக்களால், ஒருவரை, இருவரை அல்ல, லட்சோப லட்சம் தம்பிகளைக் கவர்ந்திழுத்து, ஓர் இயக்கத்தை நிறுவியிருக்கின்றார். திரு.அவ்வை நடராஜன் அவர்கள், அண்ணாவைப் பற்றிய தன்னுடைய பேருரையிலே ஓரிடத்திலே - ``பேசா நாளெல்லாம் பிறவாத நாளே’ என்று வாழ்ந்த பேரறிஞரை பிற அறிஞர்களோடு ஒப்புநோக்கிப் பேச நான் முனையும்பொழுது, இந்த ஒப்பு நோக்குகின்ற தன்மை குறித்து `லெனினும், அண்ணாவும்’ என்கின்ற அந்தப் புத்தகத்திலே, அந்தப் புத்தகம் அண்ணாவோடு மிக நெருங்கிப் பழகிய திரு.ஏ.எஸ்.வேணு அவர்களால் எழுதப்பட்டது. அந்தப் புத்தகத்திற்கு மரியாதைக்குரிய திரு.கோவேந்தன் அவர்கள் முன்னுரை எழுதியிருக்கின்றார். அந்த முன்னுரையிலே, இந்த ஒப்புநோக்கும் தன்மையைப் பற்றி நகைச்சுவையோடு அவர் ஒரு செய்தியை சொல்லுகின்றார். அந்தச் செய்தி என்னவென்றால், இந்த ஒப்புநோக்குவதிலே மூன்று வகையுண்டு. யானைக்கும் பானைக்கும் ஒப்பிட்டு, பாவின் இடையில் நிற்கும் கோடில்லை, மற்ற வகையில் இரண்டிற்கும் வேறுபாடில்லை என்று எழுத்து ஒற்றுமை பார்ப்பது ஒரு வகை. உடல், குடல் இரண்டுமே நீளம். குழை, உள்ளீடு, உள்ளவை என்பதோடு எழுத்தளவில் முதல் எழுத்தைத்தவிர பின் இரண்டு எழுத்தும் ஒத்துள்ளன என்று ஒலி வடிவ ஒப்பீடு செய்வது இரண்டாவது வகை. புலியும், எலியும் நான்கே நான்கு கால்களும், ஒரு வாலும் கொண்டு, பிறருக்கு தொல்லை தருவதில் ஒற்றுமைகொண்டு, அளவில் மட்டும் வேறுபட்டுள்ளன என்றாலும், இரண்டும் விலங்கினமே என்ற உள்ளீடற்ற உருவ ஒப்பிடு ஒரு வகை என்று சொல்லலாம்’’ என்று குறிப்பிடுகின்றார். ஆனால் என்னைப் பொறுத்தவரை, நான் எந்த வகையிலே பேரறிஞரையும், பிற நாட்டு அறிஞர்களையும் ஒப்பிட்டு நோக்குகிறேன் என்றால், எந்த அளவிற்கு தத்துவார்த்த ரீதியாகவும், எந்த அளவிற்கு சிந்தனா ரீதியாகவும், எந்த அளவிற்கு ஒரு பகுத்தறிவுவாதியாகவும், அவர்களுடைய அந்த சாராம்சங்களை தன்னிலே உள்வாங்கிக் கொண்டு, அதனை தனக்கான ஒரு தமிழ்த் தேசிய திராவிடமாக அண்ணா முன்னெடுத்தார் என்பதையே நான் என்னுடைய அனைத்து மேற்கோள்களிலும் ஒரு குறிப்பிட்ட திக்குத்திசையாக உங்களிடம் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். ஏனெனில், பேரறிஞரைப் பொறுத்தவரை அவர் மிகப்பெரிய படிப்பாளி. புதிய புதிய சொல்லாடல்களை அவர் தமிழிலே புகுத்துவதற்கு அவருடைய கற்பனாசக்தியும் அவருடைய சிந்தனாசக்தியும் ஒரு காரணம் என்றாலும், அவருக்கு அடித்தளமாக அமைந்தது அவருடைய அந்தப் பரந்த படிப்பாற்றல்தான். ஆகவே, பிறநாட்டு அறிஞர்களிடத்திலிருந்து எதையதையெல்லாம் அவர் எடுத்துக்கொண்டிருக்கின்றார், அதோடுகூட சிற்சில சம்பவங்களும், சிற்சில குணாதிசயங்களும் எப்படி அவருக்கு சில நாட்டு அறிஞர்களோடு ஒத்துப்போகின்றன என்பதைச் சொல்லியே என்னுடைய உரையின் போக்கினை நான் தீர்மானிக்கின்றேன். 

ஓரிடத்திலே அண்ணா, அடுக்கடுக்காக பிற நாட்டு அறிஞர்களுடைய பெயர்களைக் குறிப்பிட்டு, நம்முடைய தமிழகத்திலே மண்டியிருக்கின்ற அந்த வைதீகத்தின் அழுக்கையும், மௌடீகத்தின் போக்கையும் சாடுகின்றபோது எழுதுகின்றார், ``விசித்திர வைதீகர்களை வீதி சிரிக்கச்செய்தார் சாக்ரடீஸ்! வைதீகத்தின் மடமையை விரட்டினார் வால்டேர்! மக்கள் மன்றத்திற்கு மதிப்புத் தரவேண்டும் என்று வாதாடினார் ரூசோ! வேத புத்தகத்தை விற்று விபச்சார விடுதிக்கு பணம் தரும் போக்கினைக் கண்டித்தார் விக்லிப்! ஆண்டவன் பெயரால் நடக்கும் அட்டூழியங்களை அம்பலப்படுத்தினார் மார்ட்டின் லூதர்! சீனரின் சிறுமதியைப் போக்க பாடுபட்டார் சன்யாட்சன்! துருக்கியின் மதி தேய்வதைத் தடுத்தார் கமால் பாட்சா! மதத்தின் பெயரால் மக்களை வதைப்பதை எதிர்த்தான் இங்கர்சால்! பேதமையைப் போக்கும் பணியை மேற்கொண்டார் பெர்னாட்ஷா! பொருளாதார ஏற்றத்தாழ்வை அடித்து நொறுக்கி பொதுவுடைமை கண்டான் காரல் மார்க்ஸ்!. இப்படி இந்தப் பெயர்களெல்லாம், அதுகாறும் பஜனையிலும், புராண கதாபாத்திரங்களின் பெயர்களையும், இன்ன இன்ன கடவுள்களை பூஜித்தால் இன்ன இன்ன பலன்களைத் தரும் என்ற அளவிலே அறியப்படும் கடவுளர்களின் பெயர்களை மட்டுமே தெரிந்துவைத்திருந்த பொதுமையாக இருந்த ஒரு தமிழ்ச் சமூகத்திற்கு, இத்தனை பெயர்களையும் தான் பேசுகின்ற மேடைகளிலே கொண்டு அறிமுகப்படுத்திய அந்த அபாரத் துணிச்சலும், அவையெல்லாம் சென்று சேரும் என்ற அந்த நம்பிக்கையும் அந்தப் பேரறிஞருக்கு இருந்தது. மிகக் குறிப்பாக ஒன்றைச் சொல்லவேண்டும் என்றால், அவர் ஓரிடத்திலே சொல்லுகின்றார் பேச்சுவழக்கிலே, “கேட்டுப் பழகிய கை, போட்டுப் பழகிய பை, சொல்லிப் பழகிய பொய் இவையெல்லாம் என்றைக்கும் மாற்ற முடியாதவை” என்று சொல்லுகின்றார். இதே வாக்கியத்தைப் பேசிய பேரறிஞர்தான் நான் முற்சொன்ன அத்தனை சொற்றொடர்களையும் பேசுகின்றார். அவர் என்றைக்குமே பொதுமக்களிடம் பேசுகையில், இந்தப் பெயர்கள் எல்லாம் என்ன மாதிரி தெரியுமோ, அறியப்படுமோ என்கின்ற சந்தேகம் கொண்டு, சற்று தன்னை மாற்றிக்கொண்டு, அல்லது ஆங்கிலத்திலே diluted language என்று சொல்லுவோம், கொச்சையாகப் பேசுகின்ற ஒரு வழக்கம். அந்த மாதிரியான நடைமுறையை தன்னுடைய சொல்லாடல்களிலோ, தன்னுடைய பேச்சு முறையிலோ அவர் கையாண்டதே இல்லை. மிகமிக அழுத்தமான நம்பிக்கையை, கேட்கின்ற அந்தப் பார்வையாளர்கள் மீதும் வைத்திருப்பதோடு, தன்னுடைய மேதமைத்தனத்தை மட்டுமே பறைசாற்றுகின்ற பேச்சாகவோ, உரையாகவோ, எழுத்தாகவோ என்றைக்குமே அவருடைய வெளிப்பாடுகள் இருந்ததில்லை. இத்தனை அறிஞர்களை அவர் அடுக்கடுக்காக சொல்வதற்குக் காரணம் என்ன? தூங்கிக் கிடந்த தமிழகம் எழும்பவேண்டும், அதுவரையிலும் பாரம்பரியமிக்க நீண்ட நெடிய கலை, இலக்கியப் பண்பாடு, 3500 ஆண்டுகளைக் கொண்ட அந்தப் பண்பாடு, தமிழினம் தன்னுடைய பெருமையை மீண்டும் உணரவேண்டும். இவர்களுக்கு நிகராக இருந்தவன்தான் தமிழன். கங்கையிலே தன்னுடைய கொடியைப் பறக்கவிட்டு, கடாரத்திலேயும் புலிக்கொடியை பொறித்துவிட்டு, ரோம் நாட்டிற்கே பொன்னாடை விற்றவன் தமிழன் என்பதை சொல்லித்தான், இத்தனை அறிஞர்களையும் அவர் சொல்லியிருக்கின்றார். ஆக, அண்ணா எடுத்துப்பேசாத கிரேக்க நாட்டு அறிஞர்களோ, ரோம் நாட்டு அறிஞர்களோ, இங்கிலாந்து நாட்டு அறிஞர்களோ, அமெரிக்க நாட்டு அறிஞர்களோ, ரஷிய நாட்டு அறிஞர்களோ அல்லது இலக்கியவாதிகளோ கிடையவே கிடையாது. கிரேக்கத்திலிருந்து நாம் தொடங்கலாம். கிரேக்கம் நாம் அனைவரும் அறிந்தபடி, நாகரிகத்தில் அல்லது அறிவியல் தர்க்கத்தில் அல்லது logic என்று சொல்லப்படுகின்ற அந்த உடையாடல் முறையின் ஆரம்ப அரிச்சுவடி என்பதை நாம் அனைவரும் அறிவோம். அந்த கிரேக்கத்திலே தோன்றிய முதல் பேரறிஞர் பெரிக்கிலிஸ். கிரேக்க சொற்பொழிவுகளை, முதன்முதலாக நன் மேடையே கண்டது கிரேக்கம், என்று சொல்லுவார்கள். நன் மேடை என்றால் பேச்சுமேடை. அந்தப் பேச்சு மேடையை மூன்று வகையாகப் பிரிக்கின்றார் அரிஸ்டாட்டில். விழாக் காலச் சொற்பொழிவு, அரசியல் சொற்பொழிவு, குறிப்பிட்ட நேரங்களிலே ஆற்றப்படுகின்ற சொற்பொழிவுகள் என்று. பெரிக்கிலிஸ் விழாக்கால சொற்பொழிவுகளில் மட்டுமல்ல, மேலே சொன்ன அனைத்து சொற்பொழிவுகளிலும் சிறந்து விளங்கிய ஒரு பேச்சாளர். பெரிக்கிலிசிடமிருந்து அந்தப் பேச்சாற்றலின் முதல் விதையை தேர்ந்தெடுக்கிறார் அண்ணா. பெரிக்கிலிசிற்குப் பிறகு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தவர் சாக்ரடிஸ். உலகத்திலே முதன்முறையாக உரையாடல் முறை என்ற ஒன்றை, அதுகாறும் சொற்பொழிவுகளாக இருந்த அந்த தடத்தை முற்றிலுமாக அழித்து, உரையாடல் முரை dialogue method என்கின்ற ஒன்றை அறிமுகப்படுத்தியவர் சாக்ரடிஸ். தத்துவத்தின் முதல் பலி, தத்துவத்தின் தியாகி என்று சொல்லப்படுகின்ற, அறிவு என்ற ஆயுதம் ஒன்றைக் கொண்டுதான் நீங்கள் இந்த உலகத்தை வெல்லவேண்டும் என்று சொல்லி, hemlock என்ற விஷத்தைப் பருகி, சாகின்ற அந்த கணத்திலும், தான் கடன் வாங்கிய அந்தக் கோழிக்குஞ்சை திருப்பிக்கொடுக்காமல் போகின்றேனே என்கின்ற வருத்தத்தோடு உயிர் துறந்த சாக்ரடீஸ், அண்ணாவோடு மிகச் சரியாக பொருந்திப்போகின்றார். எந்த விதத்திலே என்று நீங்கள் பார்த்தீர்கள் என்றால், அண்ணாவினுடைய அந்த சொல்லாற்றல், மிகமிக முக்கியமாக அந்த வினா-விடை என்று சொல்லப்படுகின்ற அந்த முறையிலே அமைந்திருக்கும். கேள்வியைக் கேட்டு பதிலைச் சொல்லுகிற முறை. அண்ணா சொல்லுகின்றார் ஒரு இடத்திலே, “திருவாவடுதுறை தம்பிரானுக்கு பத்து விரலிலும் மின்னும் வைர மோதிரம் ஏன்? கையில் கமண்டலம் ஏன்? காதில் குண்டலம் ஏன்? குண்டலத்தின் நடுவே தங்கம் ஜொலிப்பதேன்? பக்கத்தில் பாடும் குயில்கள் ஏன்? ஆடும் மயில்கள் ஏன்? இதுவா துறவரம்?” என்று. இப்படி கேள்விகளைக் கேட்டு அதற்கான பதில்களை சொல்லும்பொழுதோ அல்லது கேட்பவர்களிடமிருந்து வாங்கும்பொழுதோ பேச்சிலே ஒரு பங்கு கொள்கின்ற தன்மை என்பது உருவாகின்றது. ஒரு மணி நேரம் நானே உரையாற்றும்பொழுது உங்களுக்கு ஏற்படுகின்ற மனச்சோர்வை இந்த உரையாடல் முறை அப்படியே அக்கு அக்காகப் பிய்த்து மாற்றிப் போடுகின்றது. அதனை ஆதிகாலம் தொட்டே கண்டெடுத்து தமிழகத்து பொன்மேடைகளிலே அறிமுகப்படுத்தியவர் பேரறிஞர் மட்டுமே. 

டெமஸ்தனிஸிற்கு வரலாம். டெமஸ்தனீஸ், பிளேட்டோவின் மாணவர், அதோடுகூட ஐசோகிரிடிஸ் என்று சொல்லப்படுகிற அந்நாளைய பேச்சு அறிஞரான ஐசோகிரிடிசிடமிருந்து பேச்சுக் கலையின் நுட்பங்களை தெளிவாகக் கற்றுக்கொண்டவர் டெமஸ்தனீஸ் என்று சொல்லுவார்கள். அண்ணாவை நாம் அனைவரும் ‘திராவிட டெமஸ்தனீஸ்’ என்றே சொல்லுவோம். அந்த அளவிற்கு டெமஸ்தனீஸினுடைய அந்தத் தாக்கம் அண்ணாவிடம் இருக்கின்றது. கிமு 354லேயே, தன்னுடைய முப்பதாவது வயதில் டெமஸ்தனீஸ் ஆற்றிய முதல் சொற்பொழிவு, அவன் அரசியல் உலகின் அரிமா என்று போற்றப்பட்ட அளவிற்கு இருந்தது. அண்ணாவும் அப்படித்தான். அவருடைய முதல் சொற்பொழிவே அவரை அரசியல் அரங்கத்தின் அரிமா என்று உலகிற்கு அறிவித்தது. டெமஸ்தனீஸ் பேசுகின்ற முறை எப்படித் தெரியுமா? உலகச் செய்திகள் அனைத்தையும் குறிப்பிட்டு, அதிலும் மிகக் குறிப்பாக கிரேக்க நாட்டின் பழம்பெருமை, பண்டைய பெருமையைச் சொல்லி, இப்படி இருந்த கிரேக்கம் இன்று எப்படி இருக்கவேண்டும்? என்பதை சுட்டிக்காட்டிப் பேசுகின்ற முறைதான். அண்ணாவும் அந்த வழியையே பின்பற்றினார். அவர் நெசவாளர்களுக்காகப் பரிந்து பேசுகையில் சொல்லுகின்றார், “சங்க இலக்கியத்தில், சிலப்பதிகாரத்தில் பெருங்கதையிலே, எலி மயிரினால் பட்டு நெய்த தமிழகத்தை கேள்விப்படுகின்றோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, பிற நாடுகள் துணி உடுக்கத் தொடங்குவதற்கு முன்பு, வட நாட்டில் அசோகன் ஆண்டதற்கு முன்பு, பட்டு நெய்த அந்த நெசவாளர் பரம்பரையில் வந்தவர்களே, நீங்கள் உங்களுடைய நிலையை இன்றைக்கு நினைத்துப் பாருங்கள். நீங்கள் மட்டுமல்ல, மற்ற தமிழர்களும் நினைத்துப் பார்க்க வேண்டும்” என்று. ரோம் நாட்டு அறிஞர்களில் முதன்மையாகத் திகழ்ந்தவர் சிசரோ. “மற்ற எல்லோருடைய பேச்சிலும் நாம் இலக்கியத்தைக் காண்கிறேன், ஆனால் சிசரோவின் பேச்சிலேதான் ரோம் நாட்டு மக்களையே காண்கின்றேன்” என்று உலகம் சொல்லுகின்ற அளவிற்கு மிகமிக புகழ்பெற்ற பேச்சாளர். சீசருக்கு எதிராக சிசரோ பேசிய அந்தப் பேச்சானது உலக வரலாற்றிலே இன்றைக்கும் மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகின்றது. 

1961ல் நேருவின் முன்னிலையில், அவருக்கு எதிரான கருத்துக்களை, அதாவது தான் சார்ந்திருந்த திராவிட நாடு கோரிக்கையை வலியுறுத்தி அவருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துப் பேசிய அண்ணாவின் பேச்சு, சீசருக்கு எதிராகப் பேசிய சிசரோவின் பேச்சோடு இன்றென்றைக்கும் ஒப்புமை வைத்து பார்க்கக்தக்க அளவிற்கு பெருமையுடையது. புதியதொரு சொல்லாடலை அண்ணா அன்றைக்கு எப்படிப் புகுத்தியிருக்கிறார் என்பதைப் பாருங்கள். “வயலிலே ஏர் பிடித்து உழும் உழவுத் தொழிலாளி திராவிடன்; இயந்திரங்களின் நடுவே உழன்று வேலை செய்பவன் திராவிடன்; கூலி வேலை செய்பவன் திராவிடன்; குப்பை கூட்டும் குப்பன் ஒரு திராவிடன்; மூட்டை சுமப்பவன், வண்டி இழுப்பவன் திராவிடனே; வாழ வீடு கட்டுபவன் திராவிடன்; காடுகளிலே கட்டை பிளப்பவன், பிளந்த கட்டைகளைச் சீவிக் கட்டிலும் மேசையும் நாற்காலியும் செய்பவன் திராவிடன்” என்று சொல்லுகின்றார். சிசரோ எழுதிய “மேடை நாவன்மை” என்ற நூலினை படித்துத்தான் பற்பலரும் உலகின் மிகச்சிறந்த சொற்பொழிவாளர்கள் ஆனார்கள் என்பது உண்மை. மிகக் குறிப்பாக கிளாட்ஸ்டன் என்ற புகழ்பெற்ற ஆங்கில சொற்பொழிவாளர், நாவலர், “அந்தப் புத்தகத்தைப் படித்த பின்பே நான் பேச்சுக் கலையில் மிகவும் வல்லவன் ஆனேன்” என்பதை தன்னுடைய சுயசரிதையிலே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கின்றார். அண்ணாவினுடைய வானொலிப் பேச்சாகட்டும், மேடைப் பேச்சாகட்டும், அவருடைய பேச்சுக்கள் எல்லாம் நூல் வடிவிலே வந்தபின்பு, உதாரணத்திற்கு, `நிலையும் நினைப்பும்’, `ஆற்றங்கரை’, `தாழ்ந்த தமிழகமே’, `திராவிட நிலை’, `தலைப்பின்றி தவிக்கின்றது’, `நாடு’ ஆகிய இந்தப் புத்தகங்களையெல்லாம் படித்து, அன்றைய தமிழகத்திலே கணக்கற்ற பேச்சாளர்கள் உருவானார்கள். 

ஆன்டனியையும், அண்ணாவையும் எடுத்துக்கொள்வோம். மார்க்கஸ் அரலியஸ் ஆன்டனி என்பவர் பேச்சுக்கலை என்பதிலே சிம்மாசனமிட்டு அமரக்கூடிய அளவிற்கு வல்லுநர் அல்ல என்றாலும், ஓரிடத்திலே மிக முக்கியமான பேச்சின் மூலம் சாதனை செய்கின்றான். சீசர் கொல்லப்பட்டுக் கிடக்கின்றான், புரூடஸ் தன்னுடைய நாவன்மையால், சீசரைக் கொன்றது சரிதான் என்று ரோம் நாட்டு மக்களை நம்பவைத்திருக்கின்றான். ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகத்திலே ஒரு காட்சி வருகின்றது, அந்தக் கணத்திலே அங்கு வருகின்றான் ஆன்டனி. ரோம் நகர மக்கள் சீசர் கொல்லப்பட்டது சரியே என்று நம்பியிருக்கும் கணத்திலே, உள்ளே வந்த ஆன்டனி ஆரம்பிக்கின்றான், “புரூடஸ் உயர்ந்தவனே, ஆனாலும் அவனைவிட உயர்ந்தவன் சீசர்” என்று ஆரம்பித்து, அவன் ஆற்றிய சொற்பொழிவிலே ரோம் நகர மக்கள் மனம் மாறி, இறுதியாக புரூடஸ் தற்கொலை செய்ய நேரிடுகிறது. அப்படிப்பட்ட நாவன்மை உடையவர் நம்முடைய பேரறிஞர் என்பதற்கு எத்தனையோ சான்றுகள் சொல்லலாம். ஒரு சமயம், சட்டசபையிலே அவரிடத்திலே எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் சொல்லுகின்றார், delayed judgement is denied judgement, தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்று, உடனடியாக இவர் சொல்லுகின்றார், hurried judgement is buried judgement என்று. உடனடியாக சமயோசிதமாகத் தலையிட்டு, அந்தக் கணத்திலே அந்த இடத்திற்கான நிவர்த்தியை தன்னுடைய பேச்சின் மூலமாக செய்வதிலே அண்ணாவை மிஞ்சுவதற்கு எவருமில்லை. 

ஒரு கூட்டத்திற்குச் செல்லுகின்றார், மிகத் தாமதமாகச் செல்லுகின்றார். பத்தரை மணி ஆகிறது. வெகு நேரம் காத்திருந்த மக்களுக்கு அண்ணா மீது எரிச்சல் வருகின்றது. அவர் பேச்சினை ஆரம்பிக்கும்போது சரியாக மணி பத்தரை. அண்ணா சொல்லுகின்றார், “மாதமோ சித்திரை, உங்களில் பாதி பேருக்கு நித்தரை, இங்கே சில பேருக்கு இருக்கலாம் சர்க்கரை, மணியோ பத்தரை, ஆனாலும் நான் பதிப்பேன் என் பேச்சிலே முத்திரை” என்று. கூடியிருந்த கூட்டம் கோபத்தை விட்டுவிட்டு அண்ணாவின் பேச்சிலே மயங்கிவிட்டது. இன்னொன்றைச் சொல்லவேண்டும், கலகம் எழுப்பாது, அமைதிப் புரட்சியை உருவாக்கியவர் மார்க்கஸ் ஆன்டனி. அந்தக் கணத்திலே. அண்ணாவும் அப்படித்தான், எந்தக் காலத்திலும் அணித்தரமான கருத்துக்களை முன்வைத்து தன்னுடைய கோர்வையான சொற்பொழிவை ஆற்றுவாரேயொழிய வன்முறையையோ, எந்தக் காலத்திலும் மிகப் பெரிய புரட்சியைத் தூண்டும் அளவிற்கான ஒரு வன்முறைப் பேச்சினையோ அவர் உபயோகித்ததே கிடையாது. 

இங்கிலாந்து எண்ணற்ற சொற்பொழிவாளர்களை, நாவலர்களை நாட்டுக்குக் கொடுத்திருக்கின்றது. தலைசிறந்த நாவலராக சொல்லப்படும் எட்மண்ட் பர்க், நம்முடைய இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த வாரன் ஹேக்ஸ்டிங்ஸ் (அந்த கவர்னர் ஜெனரல்தான், வெள்ளையருடைய ஆட்சி இங்கே வேர்ப்பிடிப்பாகப் பதிவதற்கு உறுதுணையாக இருந்தவர்) புரிந்த அடாத செயல்களையெல்லாம் அடுக்கடுக்காக அடுக்கி, அவர் மீது அரச துரோகம் குற்றம் சுமத்தி, Impeachment of Waren Hasting என்கின்ற அருமையான சொற்பொழிவை ஆற்றியவர் எட்மன்ட் பர்க். அவருடைய சொற்பொழிவுகள் இன்றைக்கும் ஆங்கில இலக்கியத்திலே பாடத்திட்டமாக வைக்கப்பட்டிருக்கின்றன. எட்மன்ட் பர்க்கிற்கும், அண்ணாவிற்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. சொல்வன்மை தவிர, எட்மன்ட் பர்க்கை சந்திக்கின்ற யாருமே இவர் ஒரு வித்தியாசமான தலைசிறந்த மனிதர் என்று சொல்லுவார்களாம். அண்ணாவோடு உரையாற்றிய பலரும், he is an extraordinary man என்று வியந்து சொல்லியிருப்பதை நாம் சரித்திரத்தின் பக்கங்களில் காண்கின்றோம். அதுபோல, புறத்தோற்றத்திலும் இருவருமே ஆர்வமில்லாதவர்கள். வேட்டியினுடைய அந்த முனை நேர்மாறாக இருப்பதைக்கூட கவனித்துக்கொள்ளாமல், அண்ணா கலைந்த தலையோடு காட்சி தருவார் என்று பலரும் சொல்ல கேள்விப்பட்டிருக்கின்றோம். எட்மன்ட் பர்க் 1766ல் இங்கிலாந்து நாடாளுமன்றத்திலே ஆற்றிய கன்னி உரைதான் அவரை உலகின் மிகப்பெரிய வித்தகராகவும், அரசியல் சொற்பொழிவாளராகவும் உயர்த்தியது. 1957ல் சட்டப்பேரவையிலே அண்ணா ஆற்றிய அந்த கன்னி உரைதான் அவரையும், உலகத்தின் அரங்கிலே வெளிச்சம் போட்டுக் காட்டியது. 

உலகப் புகழ் பெற்ற டிஸ்ரேலியும், கிளாட்ஸ்டனும்கூட அண்ணாவோடு ஒப்புநோக்கத் தக்கவர்களே. 19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலே வாழ்ந்த டிஸ்ரேலியின் பேச்சிலே இருக்கின்ற கம்பீரமும், கிளாட்ஸ்டனின் பேச்சிலே இருக்கின்ற நகைச்சுவை உணர்வும், அண்ணாவிற்கு மிக மிகக் கைவந்த கலையாகும். கோவில் திருட்டு பற்றி ஓரிடத்திலே அண்ணா சொல்லுகின்றார், அந்த நகைச்சுவை உணர்வை, நீங்கள் டிஸ்ரேலியினுடைய அந்த rhetorical எழுத்திலே மிக அதிகமாகப் பார்க்கலாம். கிருஷ்ணதேவராயர் ஆட்சியிலே, திருவாருரில் உள்ள சிவாலயத்தில் ஒரு அர்ச்சகர், நாகராஜன் நம்பி என்பவர், 63 நாயன்மார்கள் விக்கிரகங்களில் ஒரு இரண்டு விக்கிரகங்களை திருடி விற்றுவிடுகின்றார். திருவாரூர் சிவபக்தர் ஒருவர் அந்தச் செய்தியை அறிகின்றார். ஆனால், தன்னால் நேரிலே சென்று அரசரிடத்திலே சொல்ல முடியாததால், ஒரு கிளியிடம் இந்தச் செய்தியை சொல்லி வைக்கின்றார். அந்தக் கிளி, அரசர் திருவாரூருக்கு வரும்பொழுது, அவரிடத்திலே சென்று இந்தச் செய்தியை சொல்லுவதாக ஒரு தனிப்பாடல் இருக்கின்றது. அண்ணா, “நாங்களா, பகுத்தறிவுவாதிகளா இறைவனைப் பற்றி குற்றம் சொல்லுகின்றோம்? உங்களிடத்திலேயே அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன” என்பதை சுட்டிக்காட்டும்போது மிக நகைச்சுவையாக இந்தப் பாடலை எடுத்துத் தருகின்றார். நம்முடைய தமிழ் இலக்கியத்திலே தனிப்பாடலாக இருக்கின்ற அந்தப் பாடல் இது :

கிருஷ்ணதேவராயா, கிருஷ்ணதேவராயா 
முன்னாள் அறுபத்துமூவர் இருந்தார் 
இந்நாள் 2 பேர் ஏகினார் -
கன்னான் நறுக்குகின்றான். 
விற்றுவிட்ட நாகராஜன் நம்பி இருக்கின்றார்!
கிருஷ்ணதேவராயா! கிருஷ்ணதேவராயா! 

என்று கிளி சொல்கின்றது. அதை எடுத்துக்காட்டி அண்ணா, “இதை நாங்கள் சொல்லவில்லை, நீங்கள் சொல்லியிருக்கின்றீர், உங்களுடைய சமயம் சார்ந்த இலக்கியம் சொல்லியிருக்கின்றது” எனச் சொல்கின்றார். அதைப்போல மிக நகைச்சுவையாக பதில் சொல்வதிலும், அதிலும் பகுத்தறிவைப் புகுத்துவதிலும் பேரறிஞர் எப்படி கிளாட்ஸ்டனுக்கு இணையாக இருந்தார் என்பதற்கு ஒரு சான்று. கோட்டாறிலே ஒருவர் அண்ணாவைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கின்றார், `ஸ்ரீ ஜின்னா ஆரியரா, திராவிடரா?’ என்று. தயங்காமல் பதில் வருகின்றது அண்ணாவிடமிருந்து, “ஸ்ரீ ஜின்னா ஆரியர், ஜனாப் ஜின்னா முஸ்லீம், திரு ஜின்னா திராவிடர்”. இப்படி நகைச்சுவையோடு சொல்லும்போதும்கூட, அதில் பகுத்தறிவுக் கருத்தை உட்புகுத்திய அந்த வலிமையும், அந்த நுட்பமும் பேரறிஞருக்கு இருந்தது. 

உலகத்தையே புரட்டிப்போட்ட பிரன்ச்சு புரட்சிக்கு மூலகாரணமாகவும், ஆதாரமாகவும் இருந்த பேரறிஞர், பிரன்ச்சு தத்துவ சிந்தனாவாதியாக வாழ்ந்த வால்டேர், பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பதற்கு எதிரானவை வால்டேருடைய எழுத்தும், பேச்சும் என்பதை நாம் அவருடைய கருத்துப் பரிமாற்றங்களிலே தெரிந்துகொள்ளலாம். அண்ணாவும் அப்படித்தான். வால்டேர் ஓரிடத்திலே, பிரபுக்கள் எப்படி வரி ஏமாற்றம் செய்கின்றனர் என்பதை, “ஒருவன் பிரபு என்பதற்காகவோ, மதத் தலைவன் என்பதற்காகவோ வரி விதிக்கப்படுவதிலிருந்து விலக்களிக்கப்படுவதில்லை. அது மூன்றாம் வில்லியம் காலத்தியது. ஏழைகள் தங்கள் வீட்டுக் கூரைகளை புதுப்பித்துக்கொண்டால் வரி போட்டுவிடுவார்களோ என்று அஞ்சுகிறார்கள்”, என்று சொல்கின்றார். பின் வந்த அண்ணா எழுதுகின்றார், “வியாழனன்று தேவ குருவை பூஜிக்க கல்வி வளரும், வெள்ளியன்று லஷ்மியைப் பூஜிக்க தனம் பெருகும், சனியன்று சனி பகவானைத் தொழ பீடைகள் ஒழியும்; மறக்க வேண்டாம் - அந்தப் `பொதுவிதி’. பிராமணர்களுக்கு தானங்கள் செய்துவிட்டு, அவர்களைக்கொண்டு நடத்தினால்தான் பலன் உண்டு எனும் விதி. இத்தனையும் இருந்தால் கோமளம் ஏன் குதூகலமாக இருக்கமாட்டாள்? குமுதினி ஏன் வீணை வாசிக்கமாட்டாள்?” என்று. அன்றாடம் புழங்குகின்ற பெயர்களை தன்னுடைய கருத்திலே உட்புகுத்தி அதனை ஒரு வித்தியாசமான பாணியிலே சொல்லும்பொழுது, வால்டேர் செய்த அந்த புரட்சிகரமான பாணியைத்தான் அண்ணாவிடத்திலே நாம் காண முடிகின்றது. 

கரிபால்டிக்கு வரலாம்; இத்தாலி நாட்டு ஒற்றுமைக்காகப் பாடுபட்டதிலே மிகச் சிறப்பான ஒரு இடத்தைப் பெற்றவர் கரிபால்டி. கரிபால்டிக்கும், அண்ணாவுக்கும் இருக்கின்ற மிக முக்கியமான ஒற்றுமை என்னவென்றால், இருவருமே இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்தவர்கள். இளைஞர்களால் மட்டுமே சீர்திருத்த கருத்துக்களை, இன்றைய சமுதாயத்திலே மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என்று நம்பியவர்கள். அதேபோல, சீனாவின் சன்யாட்சனை நாம் அனைவரும் அறிவோம். அவர் சீன நாட்டை, பொதுவுடைமைத் தத்துவம் மனக்கும் செஞ்சீனமாக மாற்றியதிலே பெரும் பங்கு வகித்தவர். அவரைப்பற்றியும் அண்ணா படித்துச் சொல்லியிருக்கின்றார். சீனாவிலே சன்யாட்சனின் உதவியால்தான் பழையை சீனாவை இடித்து, புதிய சீனாவை உருவாக்கியிருக்கின்றார், என்கிறார். 

துருக்கியை அண்ணா விட்டுவிட்டாரா? இல்லை. துருக்கியின் கமால் பாட்சாவைப் பற்றியும் அண்ணா சொல்லியிருக்கின்றார். கமால் பாட்சாவும், கிட்டத்தட்ட அண்ணாவிற்கு மிக உத்வேகமான கருத்துக்களைக் கொடுத்தவர்தான். அண்ணா கமால் பாட்சாவைப்பற்றிச் சொல்லுகின்றார் - ``ஐரோப்பாவின் நோயாளியாக கருதப்பட்ட துருக்கி, இன்று தலைநிமிர்ந்து நிற்பதற்குக் காரணம் கமால்பாட்சா இளைஞர்களின் உதவியைப் பெற்றதால்தான்’’ என்று. ஆக, உலக வரலாற்றினைக் கூர்ந்து அவதானித்து, எந்தெந்தத் தலைவர்கள் எப்படிப்பட்ட மக்கள் மையங்களை தேர்ந்தெடுத்து அதன் மூலமாக தங்களுடைய புரட்சிகரமான எண்ணங்களை இயக்குகிறார்கள், வெற்றிபெறுகிறார்கள் என்பதை அண்ணா கூர்ந்து கவனித்து வந்திருக்கிறார் என்பதை அவருடைய பற்பல வெளிப்பாடுகளிலே நாம் மிக நன்றாக உணரமுடியும். 

வெப்ஸ்டர் என்பவர் அமெரிக்காவிலே இருந்த மிகப் சிறந்த சொற்பொழிவாளர். ஜான் ஆடம்ஸ், தாமஸ் ஜபர்சன் ஆகிய அமெரிக்காவின் முதலாம், இரண்டாம் அதிபர்களை குறித்து, வெப்ஸ்டருடைய இரங்கல் உரை என்பது மிகப் புகழ் பெற்ற இரங்கல் உரை. அண்ணாவின் இரங்கல் உரைகளும் அப்படித்தான். காந்தி சுடப்பட்டு இறந்தபொழுது, அவர் எழுதிய அந்த உரையில், மிகக் குறிப்பாக, பட்டுக்கோட்டை அழகிரியைப்பற்றி எழுதிய அந்த உரை மிகக் குறிப்பாகப் பேசப்படுபவை. ஒன்றே ஒன்றை சொல்லவேண்டும். வெப்ஸ்டருடைய குறிப்பிடப்பட்ட உரை ஒன்று இன்றளவிலும் வரலாற்றிலே பதியப்பட்டிருக்கிறது. 1850ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி அமெரிக்காவின் செனட் சபையில் மூன்று மணி நேரம் 11 நிமிடங்கள் பேசிய அவரது உரை வரலாற்றுப் பிரசித்திபெற்றது.

திராவிட நாடு கொள்கையைவிட யூனியனின் பாதுகாப்பே மிக முக்கியமானது என்று சீன ஆக்கிரமிப்பின்போது அண்ணா சொன்ன அந்தக் கருத்து இதோடு ஒத்துப்போகின்றது. கால அளவைப்பற்றி இங்கே நமக்குக் கவலையில்லை. அண்ணா, கொடுக்கப்பட்ட, கிடைத்திருக்கின்ற ஓரிரு நிமிடங்களில்கூட வார்த்தை ஜாலங்களினால் தான் சொல்லவந்த கருத்தை மிகத் தெளிவாகவும் அதேசமயம் புத்திசாதுர்யமாகவும் கேட்பவர்கள் மனதிலே விதைத்து விடுகின்ற திண்மையைப் பெற்றிருந்தார். லிங்கனைச் சொல்லாமல் அண்ணாவைப் பேச முடியுமா? 

லிங்கனும், அண்ணாவும் கிட்டத்தட்ட இரு பிறவிகள் என்று சொல்லுகின்ற அளவிற்கு அவர்களுடைய வாழ்க்கையிலேயும் ஒற்றுமை இருக்கின்றன. 1809ல் பிறந்தவர் லிங்கன். 1909ல் பிறந்தவர் அண்ணா. லிங்கனும் ஏழைக் குடும்பத்திலே பிறந்தவர், அண்ணாவும் ஒரு எளிய குடும்பத்திலே பிறந்தவர். லிங்கன் இரவு முழுவதும் கண் விழித்துப் படிப்பவர், விடிய விடிய புத்தகங்களூடே வாழ்க்கையை நடத்தியவர் நம்முடைய பேரறிஞர். லிங்கனைப்பற்றிச் சொல்லுவார்கள், கிட்டத்தட்ட ஐம்பது மைல் சுற்றளவிலே அவர் படித்து முடித்திராத புத்தகங்களே இல்லை என்னும் அளவிற்கு அவர் புத்தகங்களைக் கரைத்துப் குடித்திருந்தார் என்று. பல்லாயிரக்கணக்கான நூல்களை அடக்கிய கன்னிமாரா நூலகத்தில் அத்தனையையும் கரைத்துக் குடித்திருந்தார் பேரறிஞர் என்பது நாம் அனைவரும் அறிந்துகொண்ட உண்மைதான். சற்றேனும் ஆடம்பரம் இல்லாதவர் லிங்கன், அடக்கத்தின் மறுஉருவம் அண்ணா. சினம் சிறிதும் அண்டாதவர் லிங்கன், ஆத்திரப்பட்டுப் பார்த்ததே இல்லை என்று இராணி அம்மையார் முதற்கொண்டு உடன்பிறப்புக்கள் அனைவரும் சொல்லக்கூடிய அளவிற்கு தன்னுடைய அந்த ஆளுமையை, தன்னுடைய கட்டுக்குள் எப்பொழுதும் வைத்திருந்தவர் அண்ணா. நகைச்சுவைப் பேச்சிலும், லிங்கனையும் அண்ணாவையும் எப்பொழுதுமே நீங்கள் ஒப்புநோக்கலாம். லிங்கனுடைய நகைச்சுவைக்கு ஒன்றைச் சொல்லாம். பீட்டர் கார்ட்ரைட் என்பவர் (சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலிலே லிங்கனை எதிர்த்துப் போட்டியிட்டவர்) லிங்கனைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கின்றார் ஒரு கூட்டத்திலே. அமெரிக்க அரசியல் சூழ்நிலையிலே நீங்கள் எதிர்க்கட்சித் தலைவரோடு ஒன்றாக அமர்ந்து வாதம் புரியலாம், நீங்கள் பேசுகின்ற கூட்டங்களுக்கு அவர்கள் வருவார்கள், அந்த நாகரிகம் அங்கே உண்டு. ஆக இந்தக் கூட்டம் நடைபெறுகிறபொழுது இருவருமே இருக்கிறார்கள். பீட்டர் கார்ட்ரைட் மத நம்பிக்கை மிகுதியாக உடையவர். அவர் இந்தக் கூட்டத்திலே எப்படியாவது லிங்கனுடைய மத நம்பிக்கையின்மையை அமெரிக்க மக்களுக்கு தெரிவித்துவிடவேண்டும் என்ற முடிவோடு தன்னுடைய உரையை முடித்துவிட்டு பார்வையாளர்களைப் பார்த்துச் சொல்லுகின்றார், ``உங்களில் யார் யாருக்கெல்லாம் சொர்கத்தில் நம்பிக்கை இருக்கின்றதோ, அவர்கள் எல்லாம் எனக்கு ஓட்டுப் போடுங்கள்’’ என்று சொல்லிவிட்டு, ``சொர்கத்திற்கு போக விரும்புகிறவர்கள் எழுந்து நில்லுங்கள்’’ என்று சொல்கின்றார். சொர்கத்திற்குப் போக விரும்புகிறவர்களும், எனக்கு ஓட்டுப் போட விரும்புகிறவர்களும் எழுந்து நிற்கலாம் என்கின்ற இரட்டை அர்த்தத்திலே. கிட்டத்தட்ட சொர்கத்திற்கு போக விரும்பாதவர்கள் யார்? அதிலும் மத நம்பிக்கை உள்ளவர்கள் அனைவருமே ஆம் என்று தானே சொல்லுவோம், அரங்கம் முழுவதும் எழுந்து நிற்கின்றது. லிங்கன் மட்டுமே உட்கார்ந்திருக்கின்றார். லிங்கனைப் பார்த்து அவர் கேட்கின்றார் எகத்தாளமாக, ``நீங்கள் சொர்கத்திற்குப் போக விரும்பவில்லையா?’’ என்று. லிங்கன் தன்னுடைய குடையை எடுத்துக்கொண்டு எழுந்து நிற்கிறார். மிகக் கிண்டலாக இவர் கேட்கின்றார், ``எங்கே போகிறீர்கள் லிங்கன்?’’ என்று. லிங்கன் அமைதியாக சொல்லுகின்றார், ``நான் காங்கிரசுக்குப் போகிறேன்’’, என்று. உறுப்பினர்கள் வென்ற பின்பு போகவேண்டிய சபையினுடைய பெயர் காங்கிரஸ் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒரு சமயம் யாகாவாராயினும் நாகாக்க என்கின்ற குறள் நம்முடைய பேருந்துகளில் எல்லாம் எழுதப்பட்டிருப்பது குறித்து விநாயகம் என்கின்ற ஒரு உறுப்பினர் கேட்கின்றார், ``இப்படி எழுதப்பட்டிருக்கின்றதே, இது யாருக்காக?’’ என்று. பயணம் செய்பவர்களுக்காக, என்று அண்ணா சொன்னால் அது எங்களுக்குத் தெரியாதா? என்று பொதுமக்கள் கோபப்படுவார்கள். அல்லது ஓட்டுனருக்கா அல்லது நடத்துனருக்கா என்றாலும் அவர்களை புண்படுத்துவதாக அது அமையும். ஆக, அவரை எப்படியும் மடக்கிவிட வேண்டும் என்று விநாயகம் கேட்கின்றார். இந்தக் குரள் எழுதப்பட்டிருக்கின்றதே இது யாருக்காக? என்று. அண்ணா சொல்கின்றார், ``யாருக்கெல்லாம் நாக்கு இருக்கின்றதோ அவர்களுக்காக’’ என்று. ஆக, நகைச்சுவை உணர்விலும் லிங்கனும், அண்ணாவும் ஒன்றுபட்டவர்கள்தான். மிக அதி நவீன முக்கியமான ஒற்றுமை என்னவென்றால், இருவருமே தாங்கள் போட்டியிட்ட முதல் தேர்தலிலே தோல்வியைத் தழுவியவர்கள். இல்லியனாஸ் என்கின்ற மாவட்டத்திலே தோற்றவர் லிங்கன். அண்ணாவும் அப்படித்தான், முதன்முதலாகப் போட்டியிட்ட மாநகராட்சி பெத்தநாயக்கன் பேட்டையிலே போட்டியிட்டு தோல்வியை தழுவியவர். 1863ல் லிங்கன் ஆற்றிய கெட்டிஸ்பர்க் உரை என்பது இன்றளவும் வரலாற்றிலே ஒரு மறக்கமுடியாத உரையாக பொறிக்கப்பட்டிருக்கின்றது. லிங்கன் 267 சிறு சிறு ஆங்கில வார்த்தைகளில் அவ்வுரையை தயாரித்திருந்தார். அந்த உரைதான் இன்றளவும் உலகச் சொற்பொழிவுகளிலே தலையானதாக வைக்கப்பட்டு போற்றப்படுகின்றது. எப்படி கெட்டிஸ்பர்க் தோல்வியிலிருந்து அமெரிக்க இனம் மீண்டு வரவேண்டும் என்பதை உணர்வுபூர்வமாக ஆற்றிய லிங்கனின் சொற்பொழிவுக்கு இணையாக அண்ணா ஒரே ஒரு சொற்பொழிவை மட்டுமல்ல பற்பல சொற்பொழிவுகளை பல்வேறு காலகட்டங்களில் தமிழகத்திலே நிகழ்த்தியிருக்கின்றார். மிக முக்கியமாக இருவருக்கும் கொள்கை ரிதியிலே ஒரு ஒற்றுமை உண்டு. தனி மனித நலனைவிட பொது மனித நலனே முக்கியமானது என்பதை இருவருமே உணர்த்தியவர்கள். வேட்டு முறையைவிட ஓட்டு முறை சிறந்தது என்று அண்ணா அடிக்கடி சொன்னார். அதை எங்கிருந்து எடுத்தார் தெரியுமா? Tha ballot is stronger than bullet என்ற சொல்லிய லிங்கனின் வார்த்தைகளிலிருந்துதான். 

கடவுள், மதம், சமுதாயம் இவற்றைப்பற்றி பலவகையான புரட்சிகரமான கருத்துக்களை சொன்னவர் இங்கர்சால் என்னும் அறிஞர். கடவுளைப்பற்றி சிறிதேனும் நம்பிக்கையில்லாமல் பகுத்தறிவுக் கருத்துக்களை உலகமெங்கும் புகுத்தியதிலே இங்கர்சாலின் பணி மிகக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியது. அவர் சொல்லுகின்றார், ``கடவுள் இல்லை என்று நான் சொல்லவில்லை - ஏனென்றால் எனக்கு அது தெரியாது. ஆனால் - நான் சொல்லுகின்றேன், கடவுள் இருக்கிறார் என நான் நம்பவில்லை! ஏனென்றால், அதற்கான சாட்சியங்கள் என்னிடத்திலே இல்லை’’, என்று. அண்ணா சொல்கின்றார், “கடவுள் இல்லை என்றோ, கடவுள் இருக்கிறார் என்றோ நான் கூறவில்லை - அறிவோடு, ஆற்றலோடு கூடிய ஆபாசமற்ற கடவுள் நமக்கு இருக்கவில்லை என்றுதான் கூறுகின்றேன்” என்று. தாமஸ் வுட்ரோ வில்சன் என்கின்ற அறிஞர் 1920ல் உலக அமைதிக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர். அவர்தான் 1917ல் உலக நாடுகளின் ஸ்தாபனம் என்கின்ற அந்த அமைப்பு உருவாவதற்குக் காரணமாக இருந்தவர். அவரைச் சுட்டிக்காட்டி, அவரை அடியொற்றி அந்த ஐ.நா. நிறுவனம் நடக்கவேண்டும் என்பதை ஐ.நா. சபையிலே அண்ணா ஆற்றிய அந்த சொற்பொழிவிலே பதிய வைத்திருக்கின்றார். “வுட்ரோ வில்சன் சொன்னதுபோல், இந்த ஐ.நா. சபை என்பது இமைப்பொழுதும் உறங்காத கண்ணாக இருந்து உலக அமைதிக்காகப் பாடுபடவேண்டும் என்று”. 

ரஷ்யா, உலகத்தின் மிகப்பெரிய புரட்சியைக் கண்டு, அதனை உலகின் பிற பாகங்களுக்கும் கொடையளித்த நாடு. ரஷ்யாவின் லெனினோடு அண்ணாவை நாம் ஒப்பிட்டுப் பார்க்காமல் எப்படி இருப்பது? ஜாரின் கொடுமைகளுக்கு ஆளான அந்த கொத்தடிமைப் பாட்டாளி மக்களுக்கு ஒரு புத்துணர்வையும், புரட்சிக் கருத்துக்களையும் ஊட்டி, அவர்கள் வாழ்விலே ஒளியேற்றி வைத்தவர் லெனின். புரட்சிக்குப் பின்பு மின்சாரம் வந்தபொழுது ரஷ்ய நாட்டு மக்கள் மின்சார விளக்குகளை இலியீச விளக்குகள் என்றே அன்போடு அழைத்தார்கள். இலியீச என்பது லெனினுடைய இயற்பெயர். அதேபோல ஊ 120 என்று இலக்கமிட்ட இரயில் என்ஜினை ரஷ்ய மக்கள் என்றைக்குமே மறக்கமாட்டார்கள். ரஷ்யப் புரட்சியின்போது செஞ்சேனை வீரர்களுக்கு மிகவும் பிடித்த இரயில் பெட்டி அது. ஆதிக்க சக்திகளின் குண்டுகளால் துளைக்கப்பட்ட அந்த குறிப்பிட்ட இரயில் என்ஜினை இந்த மக்கள் புரட்சிக்குப் பின்பு புனரமைத்து, கம்யூனிஸ்டுகளக்கு பரிசாக வழங்குகிறார்கள். லெனின் அதனுடைய கொளரவமான டிரைவராக தேர்ந்தெடுக்கப்படுகின்றார். அண்ணாவினுடைய வாழ்க்கையிலும் இதுமாதிரியாக சுட்டிக்காட்டப்படுகின்ற எத்தனையோ சம்பவங்கள் உண்டு. 

உதாரணத்திற்கு, பெரியார், `பெட்டிச்சாவியை உன்னிடத்தே தருகின்றேன்’ என்று சொன்ன அந்த சம்பவம். முதலாளித்துவத்திற்கு எதிரான ஒன்றாக ரஷ்யா இருப்பது மட்டுமல்ல, முதலாளித்துவத்திற்கு எதிரான அமைப்பாக உலகமெங்கும் வந்து, எங்கும் பாட்டாளியினுடைய கொடி பறக்கவேண்டும் என்று நம்பியவர்தான் லெனின். இதே கருத்தைத்தான் இங்கே முன்வைத்து, எப்பொழுதும் உழைக்கின்ற மக்களுக்காகவும், அதுகாறும் மேலோங்கியிருந்த அந்தக் குறிப்பிட்ட சாதியினுடைய ஆதிக்கத்தை ஒடுக்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக கடைசிவரை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியா முழுவதற்குமே சேர்த்து குரல் கொடுத்தவர்தான் பேரறிஞர் அண்ணா. இருவருமே பொருளாதார மெய்ப்பொருள் சொற்களை உருவாக்கி புதிதாக அதனை பேச்சு வழக்கிலே கொண்டுவந்தவர்கள். இருவருமே இளமைக் காலத்திலே பாடத்தை ஒழுங்காகப் படித்து வகுப்பிலே முதல் மாணவனாக வந்தவர்கள். லெனின் எப்பொழுதும் சொல்வார், `நமது ஆயுதம், அறிவு, ஆற்றல் என்பதுதான்’. அண்ணாவும் நம்மிடத்தே எப்பொழுதும், குறிப்பாக இளைஞர்களிடத்தில் அறிவையும், அது தருகின்ற ஆயுதத்தையுமே வலியுறுத்திப் பேசியவர். லெனின்தான் நமது ஆயுதம், நமது அறிவு, நமது ஆற்றல் என்று கொண்டாடினார்கள் ரஷ்யர்கள். அண்ணாதான் நம்முடைய தளபதி, அண்ணாதான் நம்முடைய தலைவர், அண்ணாதுரையாக இருந்தவரை, அண்ணா பேரறிஞர் என்று போற்றிக் கொண்டாடியது தமிழகம். ருஷ்ய மொழியை மேடைப் பேச்சிற்கும், கொள்கைப் பரப்பிற்கும் ஏற்ற ஒரு மொழியில் உருவாக்கி பயன்படுத்தியவர் லெனின். மிகக் குறிப்பாகச் சொல்லப்போனால், ருஷ்ய மொழியிலேயே ஒரு அகராதியை உருவாக்கிய பெருமை லெனினுக்கு உண்டு. அதே வழியிலேதான் அண்ணாவும், தனக்கான ஒரு நடையை சற்றேனும் நீர்த்துப்போகாத ஒரு நடையை உருவாக்கிக் கொண்டவர். 

அண்ணாவினுடைய நாடகங்கள் மிகப்பெரிய சமூக மாற்றத்தை உருவாக்கிய கருவிகள். அந்த நாடகங்கள் மட்டும் இல்லையென்றால், இன்றைக்கு தமிழ்ச் சமூகத்திலே இப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதற்கு சாத்தியங்களே இல்லையென்று சொல்லலாம். அந்த நாடகங்களைப் பார்த்த பலரும் அண்ணாவை ஜார்ஜ் பெர்னாட்ஷாவோடு, கேல்ஸ்வொர்த்தோடு, இப்ஸனோடு ஒப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்கள். மிகக் குறிப்பாக, அண்ணாவினுடைய முதல் நாடகம் `வழக்குவாபஸ்’, அடுத்த நாடகம் `சந்திரோதயம்’. அந்த சந்திரோதயம் திராவிட நாடு இதழில் பணியாற்றிய பணியாளர்களாலும் அவருடைய நண்பர்களாலுமே நடத்தப்பட்டது. அடுத்து வந்தது `நீதி தேவன் மயக்கம்’, அடுத்து வருகின்றது `ஓர் இரவு’. இத்தனை நாடகங்களையும் பார்க்கும்பொழுது, கிண்டல் தொனியோடு சமூகத்திலே புரையோடியிருந்த அந்த அவலங்களை ஒரு அங்கதச் சுவையோடு வெளிப்படுத்திய அண்ணாவை குறித்து பாரதிதாசன் சொன்னது நினைவுக்கு வருகின்றது. பாரதிதாசன் சொல்லுகின்றார், ``புத்தெழுச்சியை, புதிய போக்கை, புதிய வாழ்வை, புதிய சிந்தனையை புதிய புதிய சொற்களை கொண்டவை அண்ணாவின் நாடகங்கள். நோக்கிலும், போக்கிலும் அவை மோலியர் போன்றோரின் நாடகங்களைக் காட்டிலும் சிறந்தவை’’ என்று. அண்ணா, திராவிட நாடு இதழிலே, `எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்ற தலைப்பிலே ஒரு அரசியல் விமர்சக விளக்கக் கட்டுரையை எழுதுகின்றார். அது ஜார்ஜ் பெர்னாட்ஷாவினுடைய `ஆப்பிள் காட்’ என்கின்ற ஒரு நாடகத்தைத் தழுவி எழுதியது என்பதை நாம் அறிவோம். அதற்குப் பின்புதான், கல்கி அவர்கள், அண்ணாவை, `தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று புகழ்கின்றார். 

அண்ணாவினுடைய அரசியல் முன்னோடி, தத்தவ முன்னோடிகள் பலர் இருந்தாலும், சிந்தனாபூர்வமாக, இனவழிச் சிந்தனை, நிலவழிச் சிந்தனை பொருளாதாரச் சிந்தனை ஆகிய மூன்றிற்கும் அவர் தன்னுடைய முன்னோடியாக எடுத்துக்கொண்டது ஹெரால்ட் லாஸ்கி என்கின்ற இங்கிலாந்து நாட்டு அரசியல் நிபுணருடைய புத்தகங்களையும், அவருடைய கருத்துக்களையும்தான். இங்கிலாந்து நாட்டின் தொழிற்சங்கத் தலைவராக இருந்த லாஸ்கி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், யேல் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்த மிகச் சிறப்பிற்குரிய ஒரு பேராசிரியர். அவருடைய தனிச்சிறப்பு என்ன தெரியுமா? வரிசைக்கிரமமாக, தர்க்கரீதியாகக் கருத்துக்களை தொகுத்துக்கொண்டு, பின்னர் எதிராளியை எதிர்கொள்வது என்பதாகும். அண்ணா அநேகமாக தன்னுடைய பேச்சு நடையிலும், உரைநடையிலும் இந்த ஒரு கருத்தாக்க முறையையே பயன்படுத்தினார் என்று சொல்லலாம். 

குடியரசுத்தலைவர் ராஜேந்திரப் பிரசாத்தின் உரை மீதான விவாதம் ஒன்றை நான் இங்கே எடுத்துக்காட்டாக சொல்லுகின்றேன். மூன்று வகையாக அண்ணா அதனைப் பிரிக்கின்றார். அந்த விவாதத்தின்போது அண்ணா பதிலளிக்கின்றார், அந்த மூன்று அம்சங்கள் என்ன தெரியுமா? முதல் அம்சமாக, தேர்தல் சுமூகமாக, சுதந்திரமாக நடைபெறவில்லை என்பதை சுட்டிக்காட்டுகின்றார். இரண்டாவதாக, குடியரசுத் தலைவரின் உரையிலே காணப்படுகின்ற உன்னத தத்துவங்களிலே, ஜனநாயகம் உருக்குலைந்துவிட்டது, சமதர்மம் சாரமற்றதாகிவிட்டது, தேசியம் திரித்து கூறப்படுகின்றது என்று சொல்லுகின்றார். மூன்றாவதாக, புதிய தேசிய திராவிட உணர்வுகளுக்கு அவர் இடமே கொடுக்கவில்லை என்று சொல்லுகின்றார். மிக முக்கியமாக அவர் ஹெரால்ட் லாஸ்கியிடமிருந்து எடுத்துக்கொண்ட கருத்து என்ன தெரியுமா? லாஸ்கியின் “சமத்துவம் என்பது எல்லோரையும் ஒரே விதமாக நடத்துவது அல்ல, எல்லோருக்கும் சம வாய்ப்பு தருவதாகும். Equality is not identity of treatment, but affording equal opportunity for all” என்ற கூற்றைத்தான் சமூக நீதிக்கான முதல் வித்தாக, முதல் முன்னோடியாக அண்ணா இந்த தத்துவத்தைத்தான் எடுத்துக்கொண்டார். அண்ணாவை இலக்கிய ரீதியாக டால்ஸ்டாயுடன் ஒப்பிடலாம்; எமலி ஜோலாவோடு ஒப்பிடலாம்; பகுத்தறிவுக் கருத்துக்களுக்கு ரஸ்ஸலோடு ஒப்பிடலாம், இப்படி எத்தனையோ அறிஞர்களைச் சொல்லி, சுட்டிக்காட்டி நீங்கள் அண்ணாவோடு அவர்கள் பொருந்துவது குறித்து வாதம் புரிந்துகொண்டே போகலாம். ஆனால் ஒன்றே ஒன்றை நீங்கள் கவனமாகப் பார்க்கவேண்டும். அவர்களிடத்திலே எடுத்துக்கொண்ட, கற்றுக்கொண்ட எதனையும் அப்படியே கிளிப்பிள்ளை சொல்லுவதைப் போல ஒருக்காலும் திருப்பித்தந்தவர் இல்லை அண்ணா. அதனை நம்முடைய நிலப்பரப்பிற்கு, நம்முடைய இனத்திற்கு ஏற்றவாறு, நமக்கான ஒரு தளத்திலே புதுமையான கருத்துக்களைப் புகுத்தி தன்னுடைய கருத்துக்களையும் இணைத்து, தனக்கான ஒரு தனிப் பாதையாகப் போட்டுக்கொண்டவர் தான் அண்ணா. செல்லப்பட்ட பாதையிலேயே சென்று அவர்கள் பின்னாலேயே சென்ற கிளிப்பிள்ளை அல்ல அவர். Robert Frost-இன் ஒரு கவிதை, "two roads diverged in a wood, I took the one less travelled by and that is made the difference in journey" (மிகக் குறைவாக பயணப்பட்ட ஒரு பாதையை தேர்ந்தெடுத்தேன், அதுதான் என்னுடைய வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது) என்று. ஆகவே, இத்தனை அறிஞர்கள் சொல்லியிருந்த கருத்துக்களை அவர் உள்வாங்கிக்கொண்டாலும் அந்த அறிஞர்கள் போட்டிருந்த பாதையிலே அவர் பயணம் செய்திருந்தாலும், கண்மூடித்தனமாக, அல்லது எடுத்துக்கொண்ட அந்த சாரங்களை அப்படியே பிழிந்தெடுத்துத் தருகின்ற அந்த வேலையை ஒருபோதும் அண்ணா செய்ததில்லை. 

ஓரிடத்திலே அவருக்கு ஒரு கேள்வி கேட்கப்படுகின்றது. நீங்கள் இறைவன் மீதே எப்பொழுதும் குற்றஞ்சாட்டிப் பேசுகின்றீர்கள், ஆனால், இறை நம்பிக்கை உடைய எத்தனையோ பேர் இந்தத் தமிழகத்திலே இருக்கும்பொழுது அவர்களுடைய மனம் புண்படாதா? என்று. அவர் சொல்லுகின்றார், “நான் புதிதாகவா இதைச் சொல்லுகின்றேன், உங்கள் சமயங்கள்தான் இதைச் சொல்லுகின்றன, அதிலிருந்து நான் ஒன்றை சொல்லுகின்றேன்” என. இரண்டு புலவர்கள் இருக்கின்றார்கள். ஒருவர் முடவர், ஒருவர் குருடர். குருடர் எப்பொழுதும் தன்னுடைய முதுகிலே முடவரை ஏற்றிச்செல்வார். இவர்கள் இருவரும் எழுதிய பாடல்கள் தமிழ் இலக்கியத்திலே பிரசித்தி பெற்ற பாடல்கள். அவர்களைக் குறித்து இந்த ஒரு கருத்தை அவர் முன்வைக்கின்றார். இந்த இரண்டு புலவர்களும் கோயம்புத்தூர் ஜில்லாவிலே இருக்கின்ற ஈங்கூறுக்குச் செல்லுகின்றார்கள். சிவபெருமான் கோவிலுக்குப்போய் சிவபெருமானை தரிசனம் செய்கின்றார்கள். அர்ச்சகர் ஆராதனை காட்டிவிட்டு தட்டின் மேல் துணியைமூடி எடுத்துக்கொண்டு சென்றுவிடுகின்றார். இவர்கள் இருவருக்கும் பிரசாதம் வழங்கப்படவில்லை. அதைப் பார்த்த குருடர் பாடுகின்றார், 

தேங்குபுகழ் ஈங்கூர் சிவனே, 
வில்லாளி அப்பா! 
நாங்கள் பசித்திருக்க நியாயமோ’’ 
- என்று. உடனே, சிவன் விடையளிப்பது போல அந்த முடவராய் இருக்கின்ற புலவர் பாடுகின்றார், 
போங்காணும், கூறுசங்கு, 
தோல் முரசு கொட்டு ஓசை அல்லாமல், 
சோறுகண்ட மூளி யார்சொல், 

- என்று. அண்ணா இதனை எடுத்துக்காட்டிவிட்டுச் சொல்கின்றார், ``நான் சொல்லவில்லை, நீங்கள் சொல்லியிருக்கின்றீர்கள், திரும்பிப் பாருங்கள், புரட்டிப் பாருங்கள், எடுத்துப் பாருங்கள், கொஞ்சம் அதோடு சிந்தித்துப் பாருங்கள்’’ என்று. இந்த தடத்தையேதான் அண்ணா இறுதிவரை தன்னிடத்திலே கொண்டிருந்தார். அந்த வகையிலே நீங்கள் பற்பல மேல்நாட்டு அறிஞர்களோடும், விற்பன்னர்களோடும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்த்தாலும் தனக்கான ஒரு தனித்திருக்கின்ற உள்ளங்கையை அவர் வைத்திருந்தார். 

ஐந்து விரல்களையும் இந்த விரல்களோடும், பிற நாட்டு விரல்களோடும் கைகளோடும் நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஆனால் உங்களுக்கான ரேகை என்பதும், உள்ளங்கை என்பதும் மிகப் பிரத்யேகமானது, மிகமிக வித்தியாசமானது, தனித்தன்மை வாய்ந்தது. அண்ணாவினுடைய கரங்களும் அப்படித்தான். ஆகவே, அவரை எத்தனைதான் நான் பிற நாட்டு அறிஞர்களோடு ஒப்பிட்டு நோக்கினாலும், அவருக்கான வரலாற்றிலே பதியப்பட்ட இடம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. அண்ணாவை எனக்கு அறிமுகப்படுத்திய இந்த இயக்கம் என்பது என்னுடைய வாழ்க்கைக்கும், என்னுடைய தந்தையினுடைய வாழ்க்கைக்கும் ஆதாரமான ஒரு இயக்கமாகும். அந்த இயக்கம் குறித்தோ, அதன் தலைவர் குறித்தோ ஓரிரு வார்த்தைகள் சொல்லாமல் அண்ணாவைக் குறித்ததான என்னுடைய பேச்சு நிறைவு பெறாது என்று நான் நினைக்கின்றேன். நேரு ஒரு முறை சொன்னார், “அது ஒரு அழகான கரம், மென்மையும், வன்மையும், அழகும் நிறைந்த கரம், அதனை நான் தினமும் காலையில் எழுந்தவுடன் பார்ப்பேன், அது எனக்கு மிகவும் வலுவூட்டுகின்றது” என்று. அந்தக் கரம் பித்தளையினால் செய்யப்பட்டு அவருடைய மேஜையிலே அணிகலனாக வைக்கப்பட்டிருந்த லிங்கனுடைய கரம்தான். எனக்கும் எப்பொழுதும் வலிமையூட்டிக்கொண்டும், வலுவூட்டிக்கொண்டும் இருக்கின்ற கரமாகிய தலைவர் கலைஞர் அவர்களை இந்தக் கணத்திலே நான் நினைவுகூர்ந்து, இந்த அருமையான வாய்ப்பினை எனக்கு நல்கிய இந்த நிறுவனத்திற்கும், முனைவர் குணசேகரன் அவர்களுக்கும், பசி நேரத்திலும் பொறுமையோடு இந்த உரையைக் கேட்ட உங்களுக்கும் நான் நன்றி கூறுகின்றேன். சி.ராஜ நாராயணன் ஓரிடத்திலே சொல்லுவார், “மழைக்காகக்கூட நான் பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்கியதில்லை, அப்படி நான் ஒதுங்கியபோதும்கூட பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல், மழையையே பார்த்துக் கொண்டிருந்தேன்” என்று. ஆனால் நான் நம்புகின்றேன், நீங்கள் ஒதுங்கியபோதும், மழையைப் பார்க்காமல் என்னைக் கொஞ்சம் கவனித்திருப்பீர்கள் என்று. 

நன்றி, வணக்கம் !!!பின் குறிப்பு :
கட்டுரைக்கான கருத்துக்கள், மேற்கோள்கள் சில தமிழ்நாடு அரசு நூலகத்துறையின் பேரறிஞர் நூற்றாண்டு நினைவு மலரிலிருந்து (2008) எடுக்கப்பட்டு உள்ளன.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *