தோழமை அமைப்பின் சார்பில், சென்னை எழும்பூர், இக்சா மையத்தில் 29.10.2008 அன்று நடைபெற்ற “அண்ணா - பெருங்கடலிலிருந்து சில துளிகள்” ஆவணப்பட திரையிடல்-கருத்தரங்க நிகழ்ச்சியில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆற்றிய உரை : நிகழ்ச்சி : தலைமை : ”நக்கீரன்”’ கோபால் வாழ்த்துரை : தி.மு. கழக மாணவரணிச் செயலாளர் இள. புகழேந்தி கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மாநில மகளிர் ஆணையத் தலைவர் கு.ம.ராமாத்தாள் இயக்குநர் செல்வபாரதி மற்றும் ஆவணப்பட இயக்குநர் கோவி.லெனின் உள்ளிட்டோர். * * * * * “புதிய சிந்தனைகளால் சமுதாயத்தை மாற்றிய தலைவர்கள் அறிஞர் அண்ணாவும், தலைவர் கலைஞரும்” “எத்தனையோ அவலங்கள், துயரங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதுகூட வாழ்க்கை ஓடத்தான் செய்கின்றது, ஆனாலும், நாம் அவற்றின் தடத்தோடு, அந்தத் தடத்தைப் போட்டுச் சென்றவர்களுடைய நினைவுகளோடு போராட்டங்களை முன்னிலும் காட்டமாக முன்னெடுத்துச் செல்வோம்’’ என்று சொல்லிக்கொண்டு இந்தக் குறிப்பிட்ட நிகழ்வுக்கு நான் வருகின்றேன். “அண்ணா - பெருங்கடலிலிருந்து சில துளிகள்” என்கின்ற இந்தக் கருத்தரங்குக்கு, தலைமை தாங்குகின்ற நக்கீரன் கோபால் அவர்களுக்கும், மேடையை என்னோடு பகிர்ந்துகொண்டிருக்கின்ற, என்னுடைய மரியாதைக்குரிய அண்ணன் இள.புகழேந்தி அவர்களுக்கும், மரியாதைக்குரிய மாநில மகளிர் ஆணையத் தலைவர் ராமாத்தாள் அவர்களுக்கும், இயக்குநர் செல்வ பாரதி அவர்களுக்கும், இந்த அருமையான படத்தை எழுதி இயக்கியிருக்கின்ற தோழர் கோ.வி.லெனின் அவர்களுக்கும், இங்கே குழுமியிருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். இந்தத் திரையிடலின் ஆரம்பகட்டத்திலே, மாணவர்கள் கூறிய சில கருத்துக்களை, எனக்கு முன்பாகப் பேசிச் சென்றவர்கள் தொட்டுவிட்டுச் சென்றார்கள். அந்த மாணவர்களுக்கு ஓர் அனுபவ முதிர்ச்சி பெற்ற அரசியல்வாதி என்பதற்கும், அவர் ஒரு வயதான அரசியல்வாதி என்பதற்கும் உள்ள வேறுபாடு தெரியவில்லை. அந்த அண்ணா பல்கலைக்கழக மாணவர்களோடு ஆரம்பித்து, அண்ணா பல்கலைக்கழகத்திலேயே, அந்த முகப்பிலேயே இந்தக் குறும்படத்தை தோழர் அவர்கள் முடித்திருக்கிறார்கள். “பெருங்கடலிலிருந்து சில துளிகள்” என்று பெயரிட்டிருந்தாலும், எந்தத் துளியும் கரிக்கவில்லை. அண்ணா இறந்த அந்தக் காட்சிப்படத்துளி மட்டுமே நம் கண்ணீரின் உப்பினால் கரித்திருந்தது என்று நாம் சொல்லலாம். தமிழ் இலக்கிய உலகிலே தமிழிலே பெயர் பெற்றிருந்த மூன்று மீசைகள் உண்டு. ஒன்று ரசிகமணி மீசை, அதுவும் தமிழுக்காக கொஞ்சம் தொங்கி தாழ்ந்துதான் இருக்கும். அடுத்தது மா.பொ.சி மீசை, அதுவும் தமிழைச் சுமப்பதற்காக சற்று தொய்ந்துதான் இருக்கும். தமிழுக்காக கூட தொய்யாமல் எப்போதும் உயர்த்தியே இருக்கின்ற, தமிழுக்காகவே வாழ்ந்த ஒரே ஒரு மீசை எங்களுடைய ஊர்க்காரர், எங்களுடைய குடும்பத்திலே ஒருவரான நக்கீரன் கோபால் அவர்களுடைய மீசைதான். தான் எண்ணுகின்றவற்றையும், தான் நம்புகின்றவற்றையும் எழுத்தில் மட்டுமல்ல, பத்திரிக்கையாளராக மட்டுமல்ல, ஒரு ஆவணப்படமாகவும் தயாரிக்க வேண்டுமென்ற முனைப்போடு நக்கீரன் குழுமம் இந்த முயற்சியை முன்னெடுத்து இருக்கின்றது. “அண்ணாவின் வாழ்க்கையில் அபூர்வ நிகழ்ச்சிகள்” என்று திரு. சவிதா ஜோசப் அவர்களால் எழுதப்பட்ட அந்தப் புத்தகமும் நக்கீரன் முயற்சியிலே வெளிவந்ததாக நான் அறிகிறேன். ஒரு புத்தகத்திலே ஆளுமை குறித்து எழுதப்படுவதற்கும், அதிலும் மிகவும் குறிப்பாக, வாழ்கின்ற ஆளுமையாய் நமக்கென ஒரு வரலாற்று தடத்தைப் போட்டு மறைந்திருக்கின்ற ஆளுமை குறித்து, புத்தகத்திலே எழுதுவதற்கும், அது குறித்து ஆவணப்படமாக தயாரிப்பதற்கும் மிக நீண்ட நெடிய வித்தியாசங்கள் உண்டு. அண்ணா என்கின்ற ஆளுமையில் அவர் எப்படிப்பட்டவர் என்பதற்கு முன்பாக ஒரு சின்ன முன்னுரையோடு நான் அவருக்கு வரலாம் என்று கருதுகிறேன். பிரேசில் நாட்டில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பிலே, உலகின் மிகப் புகழ்பெற்ற சிந்தனையாளரான மிச்சேல் ஃபுகோவை சுற்றி நின்று பத்திரிகையாளர்கள் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுக்கிறார்கள், நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? உங்களுடைய நம்பிக்கை என்ன? உங்களுடைய அரசியல் நிலை என்ன? என்கின்ற அந்த சரமாரியான கேள்விகளினால் சோர்ந்து தடுமாறிப்போனார் மிச்சேல் ஃபுகோ என்ற அந்த புகழ்பெற்ற தத்துவவாதி. அவற்றுக்கான பதில்களை தன்னுடைய அடுத்த நூலிலே எழுதினார். “நான் யார் என்று என்னை கேட்காதீர்கள், அதோடு நான் எப்போதும் மாறாமல் இருக்கவேண்டுமென்று என்னை நிர்ப்பந்திக்காதீர்கள், இந்தக் கேள்விகளை எல்லாம் அரசு அலுவலர்களிடமும், போலீஸ்காரர்களிடமும் விட்டுவிடுங்கள். நம்முடைய ஆவணங்களை அவர்களே சரி பார்த்துக் கொள்ளட்டும்”, என்று அந்த பிரசித்தி பெற்ற பதிலைச் சொன்னார். உலக வரலாற்றிலே அதிகார மையங்கள் இந்த மனிதனை மிக அதிகமாக வெறுத்து ஒதுக்கியதைப் போல, வேறு எந்த மனிதனையும் அவை வெறுத்து ஒதுக்கியது இல்லை. அதனாலே இலக்கியத்திலே தனி பீடமிட்டு அமர்ந்திருந்த சார்த்தரை தன்னுடைய ஒரே கேள்வியின் மூலம் கீழே விழச் செய்தவர் மிச்சேல் ஃபுகோ. அவர்களது நண்பர்களும், ஆதரவாளர்களும் “புதிய காண்ட்” என்று போற்றிய அந்த மிச்சேல் ஃபுகோ, தன்னுடைய வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாக உலகத்திற்கு முன்னால் வைத்தவர். ஃபுகோவினுடைய எழுத்துக்கள் எல்லாம் ஒரே ஒரு கருத்தைத்தான் முன்வைத்தன, உரையாடல் என்கின்ற ஒன்றைத்தான். அவர் எதைச் சொல்கிறார் என்றால் நம்முடைய அடையாளம், சிந்தனை எல்லாமே அதிகாரத்தினால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன, எனவே, அந்த அதிகாரத்திற்கு எதிராக ஓர் உரையாடலை முன்னெடுப்பதே இன்றைய இந்தக் காலக்கட்டத்தில் மிக முக்கியமான தேவை என்றார். 18ம் நூற்றாண்டுக்கு முன்பாக மனிதன் என்பவன் பிறக்கவே இல்லை. அதற்கு முன்பாக மனிதன் என்ற இனம் இருந்ததுதான். ஆனால், அப்போது கடவுள் இந்தப் பிரபஞ்சத்துக்கு மையமாக இருந்தார். நீட்சே, கடவுளின் மரணத்தை அறிவித்தபோது, மனிதன் தன்னந்தனியனாக வாழவேண்டிய அவசியம் ஏற்படுகிறது. தன்னுடைய வாழ்க்கைக்கு தானே பொறுப்பேற்கின்ற அந்த நிலை வந்தபோது தான் மனிதன் பிறக்கின்றான் என்று ஃபுகோ அறிவிக்கின்றார். சார்த்தரை அவர் எப்படி ரத்து செய்தார் என்பது தெரியுமா? சார்த்தர் சொன்னார் - “அர்த்தத்திற்கு முன்பாக இருத்தல் வந்துவிடுகிறது. மனிதர்களுக்கு என்று தனியாக அர்த்தம் இல்லை. மனித வாழ்க்கைக்கு, தனக்குத்தானே அவன் அர்த்தத்தைத் தேடிக்கொள்கிறான். அதற்கான சுதந்திரம் அவர்களுக்கு இருக்கிறது’’ என்று. அடுத்து வந்த ஃபுகோ சொன்னார் - “மனிதர்கள் யாருமே சுதந்திரமானவர்கள் அல்ல. அவர்களுடைய அனைத்தையுமே அதிகாரம் என்கின்ற கண்ணுக்குத் தெரியாத ஒன்று வடிவமைத்துக் கொண்டே இருக்கிறது. அதிகாரத்தினால் கட்டமைக்கப்பட்ட அவர்கள், தங்கள் சுதந்திரத்தைப் பெற அதற்கான மாற்று உரையாடலை வைப்பதே ஒரே ஒரு தீர்வு” என்று. பல்கலைக்கழகத்திலே நான் பார்த்த மாணவர்கள் அனைவருக்கும் மிச்சேல் ஃபுகோவைத் தெரியும். 1926ல் பிறந்த மிச்சேல் ஃபுகோவைத் தெரியும். ஆனால், 1909ல் பிறந்த, “ஆரியம் என்கின்ற அந்த மையத்திற்கும், வைதீகம் என்கின்ற அந்த அதிகாரத்திற்கும், இந்துத்துவம் என்கின்ற அந்த அதிகாரத்திற்கும் மிக முக்கியமாக மௌடீகம் என்ற அந்த அதிகாரத்திற்கும் எதிராக, மிகப் பெரிய மாற்று உரையாடலை, `திராவிடத் தமிழ் தேசியம்’ என்று முன்வைத்த “பேரறிஞர் அண்ணாவை” தெரியாது. அது தான் மிக மிக வருத்தமான செய்தி. இந்த இளைய தலைமுறையினர் மிச்சேல் ஃபுகோவை, இன்றளவும் உலகத்தில் 20ஆம் நூற்றாண்டில் தலைசிறந்த சிந்தனையாளர் என்று கொண்டாடப்படுகின்ற அந்த ஃபுகோவைவிட, அதற்கு நிகரான, அதிகாரத்திற்கு எதிரான, மாற்று உரையாடலை; தமிழன் தன்னுடைய இனம், மொழி, திராவிட தேசியம் என்பதன் மூலமாக அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை முன்வைத்த பேரறிஞர் அண்ணாவை தெரியாத அவலத்தைப் போக்குவதற்காகத்தான் தோழர் லெனின் இந்த ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் என்று நம்புகின்றேன். என்னுடைய மாணவர்களுக்கு நான் சொல்வேன். சுயமரியாதைத் திருமணங்களுக்கு சட்ட வடிவம் கொடுத்தது அண்ணா என்று சொன்னால் அவர்களுக்குத் தெரியாது. `அலைபாயுதே’ என்கிற படத்திலே வரும் இருவரும் திருமணம் செய்து கொண்டும் அவர்கள் வீட்டுக்குத் தெரிவிக்காமல் இருக்கின்ற ஒரு வசதி இருக்கிறது தானே, இந்த வகையான திருமணங்களுக்கு மிக முன்னோடியாக இருந்தவர் பேரறிஞர் அண்ணா என்று சொன்னால் அவர்கள் அதனைச் சரியாகப் புரிந்துகொள்வார்கள். அப்படிப்பட்ட ஒரு நிலைமை இங்கே இருக்கும்போது, அந்தத் தலைமுறையினருக்கு செலின் டியோன் பெர்பியூம், சிலிகான் பள்ளத்தாக்கு, சீன் கானரி, இப்படி அயல் பண்பாட்டுச் சூழலிலே தம்மை இழந்து வருகின்ற அவர்களுக்கு, கடிகாரமோ, படிகாரமோ, எம்.ஆர்.ராதாவோ, பொய்க்கால் ஆட்டமோ, பந்தக்காலோ எதுவுமே தெரியாது. அவர்களுக்கு பேரறிஞர் அண்ணாவை நீங்கள் எப்படிக் கொண்டுபோய் சேர்ப்பீர்கள் - ஒரு புத்தகமாகக் கொண்டுபோய் சேர்க்கும்போது அதிலே அலுப்பு வரலாம், சலிப்பு வரலாம், பக்கங்களைப் புரட்டும்போது அதிலே ஒரு ஆசிரியரினுடைய தொனி எப்போதுமே இருந்துகொண்டே இருக்கும். புத்தகங்களிலே ஒரு தத்துவத்தை ஒரு மாணவன் மிக மிக எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஆனால், காட்சி ஊடகம் என்று வரும்போது அவனுக்கான சுதந்திர வெளி இங்கே விரிவாகப் பரந்து கிடக்கின்றது. தனக்கான தீர்வை, அண்ணா என்கின்ற அந்த ஆளுமையை நான் எப்படி பார்க்கிறேன். எவற்றை அதிலிருந்து எடுக்கிறேன் என்று அதிலிருந்து அந்தக் கணக்கானத் தீர்வை அவன் எடுத்துக்கொள்வதற்கான சுதந்திரத்தை இந்த ஆவணப்படம் அல்லது குறும்படம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று பார்வையாளனுக்கு வழங்குகின்றது. அந்த வகையிலே இன்றைக்கு மாற்று ஊடகங்களின் சக்தி என்பது நாம் யாருமே மறுக்க முடியாத ஒரு கட்டாயமாக இருக்கிறது. ஜப்பானில் செல்போனில் நாவல் எழுதுகின்ற அளவிற்கு அங்கே அந்த ஊடகங்களின் நிலை வளர்ந்து இருக்கின்றது. ஒரு புகைப்படத்தை `சங்கேதமற்ற செய்தி` என்று சொல்வார்கள். ஆயிரமாயிரம் செய்திகள் சொல்லாத அந்தத் தாக்கத்தைக் கூட ஒரு புகைப்படம் தந்துவிடும் என்கின்ற அந்த ஒரு நிலையிலிருந்து பார்க்கும்போது குறும்படமோ, ஆவணப்படங்களோ குறிப்பாக இளந்தலைமுறையினரிடையே எத்தகையதொரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அவர்களிடத்திலே கொண்டுசென்று சேர்ப்பதற்கான ஒரு நிகழ்ச்சியை இந்தக் குழுமம் செய்கின்றது என்பது மிகவும் பாராட்டுதலுக்குரியது. அந்தப் புகைப்படங்களின் கோர்வையாகத்தான் இந்தப் படத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறார்கள். ஏனெனில், ஒரு பயோகிராபருக்கும், ஒரு ஆவணப்படம் எடுப்பவருக்கும் வித்தியாசம் உண்டு. பயோகிராபர் என்பவர் தகவல்களை சொல்லிக்கொண்டு செல்வதை ஒரு நேர்த்தியோடு சொல்லும்போது அது இலக்கியமாகி விடுகிறது. ஒரு ஆவணக் குறும்படத்தை எடுக்கின்றவர் தகவல்களை சற்று நேர்த்தியாகச் சொல்லும்போது அது கலையாகிவிடுகின்றது. அந்தக் கலையை மிக்க சரிவர செய்திருக்கின்றார் தோழர் லெனின். உதாரணமாக, அண்ணா அவர்களுடைய துணைவியாரைப் பற்றிய ஒரு குறிப்பு வருகிறபோது, அதில் பெண்கள் அனைவருமே கறுப்பு வெள்ளை புகைப்படத்தில் இருக்கும்போது, ராணி அம்மையாரினுடைய படம் மட்டும் வண்ணத்திலே வரும். அந்த ஒரு இடம் அவர்களுடைய அந்த நேர்த்தியை சுட்டுவதாக நான் பார்க்கிறேன். பெண்மையப் பார்வையாகவும் நீங்கள் இதனை வைத்துக்கொள்ளலாம். காட்சி ஊடகத்தின் முக்கியத்துவம் என்று வரும்போது, காட்சி ஊடகம் எதைக் கொண்டு இயங்குகிறது? படிமங்கள், உருவங்கள் மூலம் மொழியின் கறார்த்தன்மை என ஒன்று இருக்கிறது அல்லவா? அந்தக் கறார்த்தன்மையை உடைத்துக்கொண்டு ஒரு நிழல் படம் வருகின்றது. உதாரணத்திற்கு, அண்ணாவின் புன்னகையை நாம் எத்தனை முறை பார்த்தோம். இப்போது புகைப்படத்திலே கூட பார்த்தோம். விதவிதமான புன்னகையைப் பார்த்தோம். அந்த ஒரு படிமத்தோடுதான் நாம் இந்தப் படத்தைப்பற்றி எழுதுகிறோம். அந்தப் பின்னணியிலே அசைகின்ற கூட்டங்கள் கைகளை உயர்த்திக் கொண்டு ஒவ்வொரு முறையும், அது இந்தி எதிர்ப்பு போராட்டமாகட்டும் அல்லது எந்தப் போராட்டமாகட்டும், முகம் தெரியாத மக்கள் அவருக்கு கொடுக்கின்ற அந்த ஆர்ப்பரிப்புக் குரல், கைகள் - இவை அனைத்துமே மொழியை, வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லும்போது, மிகக் குறிப்பாக, இசை, மௌனம், உரையாடல், புகைப்படம், ஓவியம் மூலமாக ஒரு ஆவணப் படத்தை உருவாக்கும்போது, ஒருவிதமான உணர்வையும், ஒருவிதமான இதயத்தை பறித்து எடுத்துக்கொண்டு செல்கின்ற முயற்சியின் தாக்கத்தையும் அதிலே பார்க்க முடிகின்றது. அது மட்டுமே இன்றைய இளைய தலைமுறையை இருக்கையிலே இருத்தி வைக்க முடியும். ஒரு சமயம், அண்ணா, “இன்று முதல் எங்களுடைய திராவிட முன்னேற்றக் கழகத்திலே தமிழை மட்டும்தான் பேசுவோம்” என்று அறிவித்தபோது, மா.பொ.சி அவர்கள் மிக மிக நக்கலாகச் சொன்னாராம், “எங்களுடைய தமிழரசு கழகம் இதனை ஏற்கனவே அறிவித்துவிட்டது. இப்பொழுதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மொழிப்பற்று வந்திருக்கிறது போலும், நாங்கள் தமிழரசு கழகத்தில் ஏற்கனவே ஆங்கிலத்தில் பேசுவதை எப்போதோ நிறுத்திவிட்டோம்”, என்று சொன்னாராம். அதற்கு அண்ணா சொன்னாராம், “திருவோடு ஏந்தி தெருவோடு திரிகின்ற பரதேசி சொன்னானாம், நான் பட்டு பீதாம்பரத்தை விட்டுவிட்டேன் என்று, அதுபோல இருக்கிறது மா.பொ.சியின் கூற்று, ஏனெனில் அவருக்கு ஆங்கிலம் தெரியாது” (சிரிப்பு). இப்படியாகப்பட்ட சம்பவங்களை நீங்கள் ஒரு காட்சி வடிவமாக இளைஞர்களிடம் கொண்டு போய் சேர்க்கும்போது, அது இன்னும் அவர்களிடம் தாக்கத்தை உருவாக்கும். தோழர் லெனின், அண்ணா என்ற அந்த ஆளுமையை, ஒரு போராளியாக, படைப்பாளியாக, மொழிப் புலமை வாய்ந்தவராக, அதோடு கூடவே சேர்ந்து கலைஞன் என்ற ஒன்றை தன்னுடைய பிரச்சாரத்திற்கு கையிலே எடுத்துக் கொள்பவராக இருக்கிறார் என்பதையும், மிக மிக கவனமாக தோண்டி எடுத்துக் கொண்டு வந்திருக்கின்றார். உதாரணமாக, அண்ணா அவர்களுடைய பள்ளிப் பருவ காட்சியாகட்டும், அவர் பட்டம் பெற்ற அந்த காட்சியாகட்டும், அந்த புகைப்படங்களின் வழியே, ஒலிநாடாக்களில் சொல்வது, அதோடு கூட பெரியாரை முதன் முதலாக சந்தித்த அந்த காட்சி, அதோடுகூட அவருடன் தொடர்புடைய அந்த மாநாடுகள், பெரியாருடன் பிணக்கு கொண்டது, பிறகு அவரையே தன்னுடைய தலைவராக அறிவித்தது, காமராஜரை கண்டனத்துக்கு அழைத்துச் சென்றது, இப்படிப்பட்ட அனைத்துமே, அவர் இன்னும் ஒரு புலிப் பாய்ச்சலோடு வருகின்ற மாண்டேஜ் (montage) காட்சிகளாக வைத்திருந்தால், இது அதி தீவிரமான தாக்கத்தை இன்றைய இளைய தலைமுறைக்கு கொண்டு போய் சேர்த்திருக்கும். என்னுடைய தந்தை ஆசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர். அவர் முதன் முதலாக எம்எல்சியாக, தலைவர் கலைஞர் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டு, பேரறிஞர் அண்ணாவால் நியமிக்கப்பட்டவர். பேரறிஞர் அண்ணாவினுடைய பேச்சினை கேட்பதற்காக கமுதியிலிருந்து அருப்புக்கோட்டை வரைக்கும் சைக்கிளிலே வருவேன் என்று என் தந்தை கூறியிருக்கிறார். நாங்கள் எல்லாம் அண்ணா அவர்களைப் பற்றி இளம் பிராயத்திலே அறிந்தும், படித்தும், உணர்கின்ற ஒரு வாய்ப்பினை பெற்றிருந்தோம். பார்பி பொம்மை, பெப்சி, கோக் பானம் என்று இருக்கிற என்னுடைய குழந்தைகள், இன்றைக்கு அவற்றைப் பெற்றிருக்கிறார்களா என்றால், இல்லை என்று நான் சொல்வேன். அவர்களுக்கு புத்தகங்களை விட, இப்படிப்பட்ட ஆவணப் படங்கள், மிக அதிகமாக, அழுத்தமாக அண்ணாவைப் பற்றி புரிய வைக்கும். அது இந்த காலத்தின் கட்டாயம். பூம்புகாரில், இந்திர விழா நடக்கும்போது, ஏன் இந்த அரசியல் விழா என்று அரசியலிலே தலைவர் கலைஞருக்கு எதிராக இருக்கின்றவர்கள் கேள்வி வைக்கின்றார்கள். எதற்கு ஆர்ப்பாட்டமாக இந்த விழா என்று கேட்கிறார்கள். அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் பதில் சொல்கின்றார். “திருவாரூரிலே தேரோட்டம் நடக்கின்றது, அதிலே அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை, மதுரையிலே மீனாட்சியம்மனுக்கு திருவிழா நடக்கின்றது, அரசியல்வாதிகளுக்கு அதிலே அக்கறை இல்லை, மைலாப்பூரில் அறுபத்து மூவர் விழா நடக்கின்றது, அதிலே அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை. ஆனால் இங்கு மட்டும் ஏன் அக்கறை, விமர்சனம் என்றால், இது பக்தி திருவிழா அல்ல, இது ஆண்டவனுக்கு எடுக்கும் விழா அல்ல, தமிழகத்தை ஆண்டவர்களுக்கு எடுக்கும் விழா’’, என்று சொன்னார். நம்மை ஆண்டவர்கள், நம்மை ஆண்ட அண்ணா குறித்தும், நம்மை இனிமேல் ஆளப் போகின்ற இளைய சமுதாயம், ஆண்டவர்கள் குறித்து ஆளப் போகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக, இப்படிப்பட்ட முயற்சியை நீங்கள் எடுத்து இருக்கின்றீர்கள் என்று நான் கருதுகின்றேன். ஒரு கவிதை கவிதையாக இருப்பதிலே ஒரு பெரிய பயன் ஏதும் வந்துவிடப்போவதில்லை. அதில் நேற்று இருந்தது இன்று இல்லை என்று சொல்கின்றபோது, கால மாற்றத்தினை பதிவு செய்யும்போது, ஒரு வரலாற்று ஆவணமாகவும் ஆகிவிடுகின்றது. ஒரு கவிஞன் தான் வாழும் காலத்தின் சாட்சியாகவும், பங்காளியாகவும் இருந்திருக்கின்றான் என்பதற்கான அடையாளமும், அதற்கான கூறுகளும் அவனுடைய படைப்பிலே தென்பட வேண்டும். ஒரு படைப்பாளியும் அப்படித்தான். காலூன்றி இருக்கும் பூமியின் அதிர்வுகளும், எதிர்விளைவுகளும், படைப்புக்கான தருணத்தை நிகழ்த்தியபடியே இருக்கின்றன. ஒரு படைப்பாளியினுடைய பணி என்ன? அந்தத் தருணங்களை நிலைநிறுத்தி, தன்னுடைய காலத்தின் ஒரு பகுதியாக்கி, பின் அதை அனுபவத்தின் பொதுமையாக்குவதே. பார்வையாளர்களும், வாசகர்களும் அந்த தருணத்தை மீண்டும் உருவாக்கி, தன்னுடைய அனுபவத்திலே அதற்கு ஒரு புத்துயிர் கொடுத்துக் கொள்கின்றார்கள். பேரறிஞர் அண்ணா அவர்களின் சொற்பொழிவுகளை கேட்டிருக்கின்றோம். பற்பல புத்தகங்களையும் பார்த்திருக்கின்றோம். பற்பல ஊடகங்களின் மூலமாக தெரிந்து கொண்டிருக்கின்றோம். இருந்தாலும், காட்சி ஊடகம் ஒன்றின் மூலமாக அவருடைய புன்னகை, அவருடைய சட்டை அணியாத அந்தத் தோற்றம், அவருக்குப் பின்னால் நின்றிருக்கிற அந்த ஆயிரமாயிரம் உயர்ந்த கைகள், அவரின் இறப்பின்பொழுது அவருக்காக மாரடித்துக் கொண்டு அழுத அந்த பெண்கள், அவருடைய வாசகம், அவரைப் பற்றி அறியாத இந்த இளைய தலைமுறைக்கு இதை ஒரு கோர்வையிலே கொடுக்கின்ற இந்த படம் சாதித்த அந்த சாதனையை எந்த புத்தகத்தினாலும் ஏற்படுத்திவிட முடியாது என்று சொல்லி, இந்த குழுமத்திற்கு என்னுடைய பாராட்டினை தெரிவித்துக்கொள்கிறேன், நன்றி, வணக்கம். * * * * *
No comment