அதன் முத்தம் அனைவருக்குமானது!

இறுதியில்
				இந்தச் சாலையில் தான் 
				வந்தாக வேண்டும் நான் 
				என நன்றாகத் தெரியும்
				ஆனால், 
				இன்றுதான் அந்த நாள் என்று
				எனக்குத் தெரியாது நேற்று.
	-ஒரு ஜென் கவிதை
	மிக ஆழ்ந்த வாசிப்பு அனுபவம், அறிவின் கூர்மை, தேர்ந்த ஞானத்தின் தேஜஸ், அற்புதமான சொல்லற்றலோடு கூடிய நண்பர் இறையன்புவை நான் அவரது எழுத்துக்கள் மூலமாகவே அதிகமாக அறிவேன். அவரது தத்துவப் பார்வையின் எளிமையும், வசீகரமுமே அவர்பால் என்னப் பெருமதிப்பு கொள்ள வைத்தது. அவரை எண்ணும் போதெல்லாம் மொகமத் தர்வீஸின் பின்வரும் கவிதை நினைவிற்கு வருவதுண்டு:
				கவிதை வீட்டுக்கு வீடு
				ஒரு விளக்கை எடுத்துச் செல்லவில்லையானால் 
				ஏழைகளுக்கு அதன் அர்த்தம் 
				விளங்கவில்லையானால் 
				அதை விட்டொழிப்பது உத்தமம். 
				உழைப்பாளியின் கைச்சிற்றுளியாக 
				உழவனின் கைக்கலப்பையாக 
				ஒரு சட்டையாக 
				ஒரு கதவாக
				ஒரு சாவியாக 
				ஆக வேண்டும் கவிதை.
	இறையன்புவிற்கு எழுத்தும், பேச்சும் மேற்சொன்னது போலத்தான். சாமானிய வாசகனின் புழக்கத்திற்கு வாகான ஒரு சட்டைப்பையாக, ஒரு கைப்பிடியாக, ஒரு சாவியாக இருப்பது அவரது எழுத்தும் - சொற்பொழிவும். பொதுவாக எழுத்தும், சொற்பொழிவும் - ஒருங்கிணைந்த ஆற்றலைப் பெற்வர்கள் மிகச் சிலரே. கூடவே, நல்ல கனவுகளையும், நம்பிக்கைகளையும் விதைக்கக் கூடியவர் அதனினும் சொற்பம். இறையன்பு அப்படி ஒருவரே. மானுடத்தின் மீது மாறாத அன்பும், வாழ்வின் மீது தீராக் காதலும் கொண்ட அவர், அதன் பொருட்டே அரசுப் பணியோடு, இலக்கியப் பங்களிப்பினையும் இணைத்து மிகச் செறிவாகச் செயல்படுகிறார். 
	அவரது மரணத்தின் நிழல் எனும் புதினத்தைப் படித்தது ஒரு தத்துவார்த்த பயணம் எனக்கு. ஞானம் என்பது கூட சமயங்களில் தோற்குமிடம் - மரணத்தில் மட்டுமே! வாழ்க்கையை உதறிவிட்டு விலகி ஓடுபவன் கூட மரணத்தைத் தவிர்க்க முடியாது. அதன் முத்தம் அனைவருக்குமானது. பட்டறிவு, வாழ்வியல் அனுபவம், தேடல், - இவற்றின் ஒருமித்த ஒளி ஞானமெனில், அதன் ஒரு துளி இந்தப் புதினத்தைப் படித்து முடிக்கையில் நமக்கு ருசிக்கக் கிடைக்கலாம். 
	 மரணம் என்பது ஒரு இருள் என்றுதான் நமக்கு திரும்பத் திரும்ப சொல்லப்படுகிறது. அது கொஞ்சம் இருளைப் போன்றுதான் நமக்கு காட்சி தருகிறது. சில மரணங்கள் கொண்டுவரும் இருளை நம்மால் கடக்கவே முடியாது என்று தோன்றிவிடுகிறது. ஆனால், அது உண்மையில் இருள் மட்டும்தானா? இந்த வாழ்க்கை எவ்வளவு சாதாரணமானதாகவும் கஷ்டங்கள் நிறைந்ததாகவும் இருந்தபோதும் அது மகத்தானது என்ற தரிசனத்தை நமக்குத் தருவது மரணம் மட்டுமே. மரணமே வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் சுடர்விட்டுப் பிரகாசிக்க வைக்கிறது. ஆப்படியெனில், மரணத்தைப் பற்றிய புரிதல்தான் வாழ்க்கையை அவ்வளவு பிரகாசிக்க வைக்கிறதா? இருளும் வெளிச்சமும் ஒன்றாக இருக்கும் தத்துவம், மரணத்துக்கு அல்லாமல் வேறு எதற்கு சாத்தியம்? 
	வெ.இறையன்புவின் இந்தப் புதினம், இந்த மகத்தான உண்மையை சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. பொதுவாக வாழ்வை மையமாகக் கொண்டு எழுதப்படும் கதைகளின் நடுவே மரணத்தையே மையமாகக் கொண்டு ஒரு முழு புதினத்தை எழுதுவது சாகசம். அந்த சாகசத்தை இறையன்பு இந்தப் புதினத்தில் வெகு நேர்த்தியாக நிகழ்த்தியிருக்கிறார். ஏனென்றால், மரணத்தின் ரகசியத்தை திறந்து பார்ப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். இதன் சஞ்சலமூட்டும் பாதையைத் தொடர்ந்து போவதற்கு ஒரு மன உறுதி வேண்டும். இறையன்புவுக்கு அந்த உறுதி இருக்கிறது. இந்த நாவலில் அவர் ஒரு கதை சொல்லியின் பாத்திரத்தையும் ஒரு தத்துவவியலாளனின் பாத்திரத்தையும் ஒரே நேரத்தில் ஏற்கிறார். ஒன்று இன்னொன்றை அழுத்திவிடாமல் இரண்டையும் வெகு அழகாகச் சமநிலையில் கையாள்கிறார்.
	கதையின் மையப்பாத்திரமான நசிகேதன், தன்னுடைய வாழ்க்கையில் இடையறாத மரணங்களைப் பார்க்கிறான். குறிப்பாக நம்பமுடியாத, ஏற்க முடியாத அகால மரணங்கள். காலப் பொருத்தமற்ற மரணங்கள். நாம் நம்மை மனோரீதியாகத் தயாரித்துக் கொள்ள அவகாசம் தராத மரணங்கள். இந்த மரணங்களை இறையன்பு காட்டும் விதம் நசிகேதனை மட்டுமல்ல - நம்மையும் நிலைகுலைய வைக்கிறது. நசிகேதனின் வாழ்வில் இருந்தது யார், எந்த நேரத்தில் மறையப் போகிறார்கள் என்கிற பெரும் பதற்றத்தை நாவலாசிரியர் உருவாக்கிவிடுகிறார்.
	நசிகேதன் ஒவ்வொரு மரணத்தையும் தன்னுடைய மரணமாக அறிகிறான். தன்னுடைய வலியாக, தன்னுடைய இன்மையாக உணர்கிறான். குறிப்பாக, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பார்த்திபனின் மரணத்தை நினைக்கும்போது சுருக்குக் கயிறு அவனது கழுத்தில் இறுக்குகிறது. அந்த அனுபவத்திற்குள் முழுமையாக தன்னை இழக்கிறான். உண்மையில் இதுவும் மரணம்தான். 
	தொடர்ச்சியான, நெருக்கமான மரணங்களின் வழியே நசிகேதன் கடும் மனமுறிவுக்கு ஆளாகிறான். வாழ்வின் அர்த்தமும் மரணத்தின் அர்த்தமும் அவனை எண்ணற்ற புதிய கேள்விகளுக்கும் நிம்மதி இன்மைக்கும் இட்டுச் செல்கின்றன. மரணத்தின் புதிரை விடுவிக்க அவன் மேற்கொள்ளும் பயணமே புதினத்தின் பிற்பகுதி.
	காடுகள், மலைகள் வழியாக சித்தர்கள், ஞானிகளைத் தேடி அவன் மேற்கொள்ளும் இந்தப் பயணத்தில், அவன் அறியும் உண்மைகளும் மறைபொருள்களும் நமது சிந்தனையின் புதுப்புது கதவுகளைத் திறக்கின்றன. கீழைத்தேய இயற்கை அறிவியல் மரபும் தத்துவ மரபும் உருவாக்கிய மகத்தான சிந்தனைகளை நசிகேதனின் பயணத்தின் வழியே, இறையன்பு நமக்கு வெகு அற்புதமாகத் தொகுத்து அளிக்கிறார். 
	பயமற்ற மனிதனே மரணத்தை வெல்ல முடியும் என்ற பாடம், அவனுடைய பயணத்தில் குறுக்கிடுகிறது. அவன் மேலும் மேலும் உண்மையைத் தேடிச் செல்கிறான். இப்புதினத்தின் மூன்றாவது பகுதியாகிய 'சலனம்' என்ற பகுதியில் காலம் உறைந்து நின்றுவிட்ட தீவில் வசிப்பவர்களின் துயரம் நம்மை பெரிதும் சஞ்சலப் படுத்தி விடுகிறது. மரணம் மகத்தான விடுதலை என்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது. 
	இறையன்புவின் ஆற்றொழுக்கான நடை இப்புதினத்திற்கு மிகுந்த சுவாரசியத்தையும் விறுவிறுப்பையும் ஏற்படுத்துகிறது. சம்பவங்களையும் உரையாடல்களையும் வெகு வேகமாக நகர்த்திச் செல்கிறார். ஆழமான தத்துவார்த்த விஷயங்களை விவாதிக்கும் போது கூட அவற்றைச் சிக்கல் இல்லாமல், சுவை குன்றாமல் சொல்கிறார். 
	ஒரு வாழ்வியல் சிந்தனையாளராக தனது முத்திரையை நீண்ட காலமாக பதித்துவரும் இறையன்புவின் ஆளுமையில் இன்னொரு ஆழமான முத்திரை இந்தப் புதினம்.
	நல்ல நண்பரான இறையன்புவின் இலக்கிய முகத்தை, அவரது ஓயாத தேடலை, நுட்பமான புரிதலை கொஞ்சம் கூடுதலாகப் புரியவைத்திருக்கின்ற இந்தப் புதினத்திற்கு நன்றி.
                                        * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *