அபரிமிதத்தைக் குறைத்துப் பற்றாக்குறையை நிரப்பும் அமிர்தம் சூர்யாவின் கவிதைகள்.

அபரிமிதத்தைக் குறைத்துப் பற்றாக்குறையை
நிரப்பும் அமிர்தம் சூர்யாவின் கவிதைகள்.
-	தமிழச்சிதங்கப்பாண்டியன்

		"இந்த உலகத்தில் மிக மெலியது 
		மிக வலியதை வெல்ல முடியும் 
		வலுவின்மையிலும் நெகிழ்விலும் 
		நீருக்கு ஒப்பாக எதையும் சொல்ல முடியாது;
		என்றாலும், 
		வலியதையும், கடினத்தையும் தாக்குவதில் 
		நீருக்கு நிகராக எதுவும் இல்லை.
		ஏனென்றால், நீருக்கு மாற்று எதுவுமில்லை" - 
கவிதையும் மிக மெலியது - ஆனால் வலியதையும், கடினத்தையும் துளைக்கும் நீருக்கு ஒப்பான பேராற்றல் மிக்கது. 
	மனித மனதின் அபரிமிதத்தைக் குறைத்துப் பற்றாக்குறையை நிரப்புகின்ற கவிதைகளின் பணியை இந்த "வெற்றிடத்தை நீலத்தால் நிரம்பும் வானம்" செய்கிறது. 
	வெற்றிடம் எனும் சொல் எப்போதும் ஞானம், தரிசனம், கவித்துவம் - ஆகியவற்றோடு தொடர்புடையது. இங்கே அதனை நிரப்புகின்ற வானம் கவிதை என்றால், அதன் வண்ணங்கள் - அனுபவங்களா அதன் உணர்வுகளா?
	நல்ல கணக்கனுக்கு மணிச்சட்டம் எதுவும் தேவைப்படுவதில்லை - நன்றாக மூடத் தெரிந்தவனுக்குச் சட்டம், தாழ்ப்பாள் எதுவும் தேவைப்படுவதில்லை என்பார்கள். நல்லதோ அல்லதோ ஒரு கவிதைக்கு விமர்சனம் தேவையில்லை - அது தனியொருவனுக்குத் தருகின்ற கிளர்வு அல்லது உணர்வு நிலையே போதுமானது. கவிதை ஒரு தன்வயமான உன்னதச் செயல்பாடு என்ற அளவில், விமர்சனங்கள் இரண்டாம்பட்சம் என்பதால், அவற்றை அணுகுதல், உணர்தல், முடிந்தால் அதனைப் 'பகிர்தல்' எனும் அளவில் சூர்யாவின் தொகுப்பினைப் பற்றிய சில பகிரல்கள்களை முன்வைக்கிறேன். இவை பகுத்தல்களோ, தரம் அறிவித்தலோ அல்ல - அவன் குடத்து நீர் என் குவளையில் - முடிந்தால் நீங்களும் அதன் குளுமையில் தாகம் தீர்க்கலாம் - இல்லையெனில் அது என்மட்டோடு! 
		கனவின் பதற்றத்தை ஆசுவாசப்படுத்தி 
		மெய்மை அர்த்தங்களைக் 
		கண்டெடுக்க, 
		வாழ்வைத் துழாவுகின்ற - 
சூர்யாவின் கவிஉலகம் - வாழ்வு, காமம், ஞானம், மரணம் - முதலிய ஆதார, இயல்புணர்வுகளால் ஆனது. அவை 'தன்னுர்ச்சிக் கவிதைகள்' எனும் வகைமையில் வருவதாக நான் உணர்கிறேன்.  
	"கவிதை மீது கவனத்தைக் குவிக்கும் இலக்கியக் கோட்பாடு, வேறு விஷயங்களோடு சேர்த்து, கவிதைகளை மதிப்பிடும் பல்வேறுபட்ட முறைகளின் பரஸ்பர முக்கியத்துவத்தையும் விவாதிக்கிறது. வார்த்தைகளாலான கட்டமைப்பு என்ற வகையில், வெளிப்படுத்தப்படும் கவிதையைப் பொறுத்தவரை, அர்த்தத்துக்கும் ஒலி மற்றும் சந்தம் போன்ற சொற்பொருள் சாராத (non-semantic) மொழியின் அம்சங்களுக்கு மிடையேயுள்ள உறவு கவிதைக்கு ஒரு பிரதான பிரச்சினையாக உள்ளது. அர்த்தம் சாராத மொழியின் அம்சங்கள் எவ்வாறு செயல்படுகின்றன? அவை பிரக்ஞைபூர்வமாகவும் பிரக்ஞையற்ற விதத்திலும் என்ன விளைவுகளைக் கொண்டுள்ளன? அர்த்தம் சார்ந்த மற்றும் அர்த்தம் சாராத அம்சங்கள் தங்களுக்குள் எவ்வகையான பரஸ்பர பாதிப்பை எதிர்பார்க்கமுடியும்?. 
	ஆசிரியன் கவிதையைப் பேசுவதில்லை; கவிதையை எழுத, அதை அவனோ அவளோ வேறு ஒரு குரலோ பேசுவதாக ஆசிரியன் கற்பனை செய்துகொள்கிறான். அந்தக் குரல். ஆசிரியனால் கட்டமைக்கப்பட்ட கதை சொல்லியினுடையதாகவோ பேசுபவனுடையதாகவோ இருக்கும். இவ்வாறாக, ஒருபுறம் வரலாற்று ரீதியான ஒரு தனிமனிதராக கவிஞன் இருக்கிறான். மறுபுறம் இந்தக் குறிப்பிட்ட கூற்றின் குரல் இருக்கிறது. அவனுக்கும் அதற்கும் இடையே இடையீட்டாளராக வேறொரு உருவம் உள்ளது. இது ஒரு தனிக் கவிஞனின் கவிதைவீச்சின் ஆய்விலிருந்து மேலெழுந்து வரும் கவிதைக் குரலின் படிமமாகும். இந்த வெவ்வேறு உருவங்களின் முக்கியத்துவம் கவிஞனுக்குக் கவிஞன் மாறுபடுகிறது. மேலும் அது ஒரு விமர்சன ஆய்வுக்கும் மற்றொன்றிற்கும் மாறுபடுகிறது. ஆனால் தன்னுணர்ச்சிக் கவிதையைப் பற்றி யோசிக்கும்போது, கவிதையில் பேசும் அந்தக் குரலுக்கும் கவிதையைச் செய்த கவிஞனுக்குமிடையே உள்ள வேறுபாட்டிலிருந்து தொடங்குவது மிக முக்கியம். இதன் மூலம் அந்தக் குரலின் உருவத்தை உண்டு பண்ணலாம். 
	ஜான் ஸ்டூவர்ட் மில்லின் ஒரு புகழ் பெற்ற கூற்றின்படி தன்னுணர்ச்சிக் கவிதை என்பது தற்செயலாகக் காதில் விழும் ஒரு பேச்சு. நம் கவனத்தை ஈர்க்கும் ஒரு பேச்சு நம் காதில் விழும்போது நாம் குறிப்பிடத்தக்க விதத்தில் செய்வது என்ன வென்றால் பேசும் நபர் ஒருவரையும் ஒரு சூழமைவையும் கற்பனை செய்துகொள்கிறோம் அல்லது மறுகட்டமைப்பு செய்து கொள்கிறோம். ஒரு குரலின் தொனியை அடையாளம் கண்டுகொள்வதன்மூலம் நாம் பேசும் நபரின் தோற்ற அமைவு, சூழல்கள், அக்கறைகள் மற்றும் அவருடைய மனப்பான்மைகள் ஆகியவற்றை உய்த்துணர்கிறோம். இருபதாம் நூற்றாண்டில் இதுதான் தன்னுணர்ச்சிக் கவிதைக்குரிய முதன்மையான அணுகுமுறையாக இருந்தது. இலக்கியப் படைப்புகள் என்பவை 'நிஜ உலக'க் கூற்றுகளின் புனைவுரீதியான போலச் செய்தல்கள்தான். அப்படிப் பார்க்கும் போது, தன்னுணர்ச்சிக் கவிதைகள் என்பவை தனிநபரின் அந்தரங்கக் கூற்றுடைய, புனைவுரீதியான போலச் செய்தல்களேயாகும்.	இப்படிப் பேசுபவருடைய மனோபாவத்தின் நுட்பமான சிக்கல்கள் மீது, அதாவது, பேசுபவராக நாம் மறுகட்டமைப்பு செய்துகொள்பவருடைய சிந்தனைகள் மற்றும் உணர்ச்சிகளின் நாடகமயமாக்கக் கவிதையின் மீது கவனத்தைக் குவிப்பதே பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கவிதை ரசனைக்கான முதன்மை முறையாக இருந்து வருகிறது" - என்கிறார் ஜானதன் கல்லர் (இலக்கியக் கோட்பாடு ஒரு அறிமுகம்). 
	இது தன்னுணர்ச்சிக் கவிதைக்கான ஓர் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையாகும். 
	இதுபோலத்தான், அமிர்தம் சூர்யா எனும் கவிஞன் ஒரு அனுபவத்தினுடைய முக்கியத்துவத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்தனை செய்கிறான் - அருகிருப்பவரிடம் அல்லது வெற்றிடத்தில் அதனைப் பேச முனைகிறான் - வலுவான உணர்ச்சிகள் மிக இறுக்கமான கவி மொழியில் வெளிவருகின்றன. அவனது கவிதைகள் கதையாடல் கவிதைகள் அல்ல. ஏனெனில், கதையாடல் கவிதைகள் ஒரு சம்பவத்தை விவரிக்கின்றன - 
	குல தெய்வங்களின் ஆல்பம் எனும் கவிதையில் - வரிசையாகச் சம்பவங்கள் - பெண், தாய்மையின் அமுதமேந்தி ஆச்சி, ஆயா, அப்பத்தாவாகத் தோற்றுவாய் தருகின்ற நிகழ்வுகள் சுட்டப்படுகின்றன. ஆனால் சூர்யாவின் கவிதைகளை நான் ஏன் 'தன்னுணர்ச்சிக் கவிதைகள்' என்கிறேன் என்றால், அவை ஒரு சம்பவத்தை மட்டுமே விவரிக்கவில்லை - ஒரு சம்பவமாக இருக்க முற்படுகின்றன என்பதால். தன்னுணர்ச்சிக் கவிதையின் இலக்கணம் அதுதான். 
	புதிர்த்தன்மையும், மிகையான பிதற்றல் என எளிதில் நிராகரிக்கப்படக் கூடிய அபாயமும் இருக்கின்ற இரண்டு கவிதைகள் - ஆட்டங்களினூடே ஒரு ஆதி இருளின் பிரவேசம் மற்றும் கன்னித்தீவை ஏன் கண்டு பிடிக்கவில்லை?. முன்னதில் - முன்னிலையணிகள் எக்கச்சக்கம். அடர்வனமாய், பாலையாய் ஏணியாய், பாம்பாய்...... Shelly இன் - ஓர் அலையென, ஓர் இலையென, ஒரு முகிலென என்னைத் தூக்கேன் என்பதுபோல - ஒரு நிகழ்வு வார்த்தை உபயங்களின் மீது அமைக்கப்படுவதால் - பிதற்றல் எனும் அபாயமும், முந்தைய வரிகளின் கனகச்சிதமான புதிர்த்தன்மையால் கவித்துவமும ஒருங்கே பெற்ற கவிதை அது. 
	கன்னித் தீவை ஏன் கண்டுபிடிக்கவில்லை எனும் கவிதையோ, தன்னுணர்ச்சிக் கவிதையின் இலக்கணத்தை அச்சொட்டாக அடியொற்றி வார்த்தை வார்ப்பிலிருந்து அர்த்தமோ அல்லது கதையோ வெளிப்பட்டு வருவதைக் காட்டுகிறது. கன்னித்தீவு, சிந்துபாத் ஆகிய வார்த்தைகளிலிருந்து 'எல்லாப் பெண்களுக்குள்ளிருக்கும் லைலாக்களும், ஹைகூா வடிவிலிருந்து லைலா நிஜஉருவிற்குத் திரும்புவதை விரும்பாத ஆண்களும் புலப்படுகிறாாகள் சிந்துபாத் (மனிதன்) கன்னித்தீவைக் கண்டுபிடிக்க, கன்னித்தீவிலிருந்தே புறப்படுகின்ற முரணைக், கவிதையின் அர்த்தமாக்க இச்சம்பவம் உதவுகின்றது. 
	தொகுப்பு முழுக்க ருத்ரனும், சிவனும், பாம்பும், வராகமும், சாம்பலும், சாத்தானும், படிமங்களாக உலா வருகின்றனர். 
ஒரு கவிதையில் 
		உன்னைக் கொண்டு உன்னை வரைவது 
		எனக்கொன்றும் சிரமமில்லை -
		இது நீதான் என்று உனக்குப் புரியவைப்பதைத் தவிர!
என்று எழுதுகிற கவிஞரே, 
உம்மைக் கொண்டு உம்மை வரைவதில் 
எங்களுக்கும் சிரமமேதுமில்லை -
இது நீ தான் என்று இக்கவிதைகள் எமக்குப் புரியவைத்துவிடுகின்றனவே.
	சூர்யாவின் 10 வது கிரகத்தின் புதிய வழித்தடம் அப்படியொரு கவிதைதான் - அதிலே சில வரிகள் -
ஒரு பாசி படர்ந்த குளம், 
		குளம்தானா?
		கண்டேன் -
		யாரும் உபயோகிக்காததை 
		குளமென்று அழைத்தல் 
		சரியாவென்று 
		குளித்து அதைக் குளமாக்கினேன் -
		கரையேறுகயைில் அழுக்கு நீங்கி 
		தனிமை அப்பிக் கிடந்தது -
		என் சரீரத்தின் மீது!
	மரணத்தின் சுப வாசனை பெரும்பாலான கவிதைகளில் வியாபித்திருக்கின்றன - 
	தாத்தாவின் சவக்குழி, பித்ருக்களின் பூமராங், அவரவர்க்கான கல்லறை, தெவசம், சாவாமையின் வரைபடம், சாவுக் கூத்து, பாடை யாத்திரை, மலர் வளையங்கள், சங்கு, பறை ஒசை உருளும் சோழிகள், ஜனித்த தாயம் ஒன்று, சவம், பிணம் தின்னும் புழுக்கள் என மரணத்தின் நிழல் துரத்தும் வாழ்வை அவை சலிக்காது பேசுகின்றன.
	மரணம் இயல்பான, அழகானதொரு முத்தாய்ப்பு என்பதை 
		தெருவின் தேய்மானங்களுக்கு 
		ஒத்தடம் கொடுத்தபடி 
		உதிரிப் பூக்கள்
எனும் வரியும், 
		நிகழ்நது கொண்டே இருக்கும் மரணத்தின் 
		நேர்காணல்... 
		ஒவ்வொரு சாவும் 
		சாவாமையின் விதைகளை 
		உள் மறைத்திருக்கும் 
		முற்றிய கனியாயிருக்கிறது
எனும் வரிகளும் சொல்கின்றன. 
வண்ணத்துப்பூச்சி, சல்லிவேர், ஆதிப்பட்சிகள் அடர்வனம், தருக்கள், காட்டுப்பூக்கள் இவைகளைத் தொடர்ந்து தன் கவிதைகளில் பயணிக்க வைக்கிறார் கவிஞர். 
		மலர் என்பது இலையின் 
		இன்னொரு இலக்கிய முகம்தானே 
எனும் அழகிய கேள்வியை முன்வைக்கும் அதே கவிஞன்தான்
 		காலம் கூடவே வருகிறது -
		ஒரு தேர்ந்த மோப்ப நாயைப் போல 
என சலித்தும் கொள்கின்றான்.
		இறப்பிற்கு எதிரான வாழ்வின் நெடியை 
		தேடிப்பிடித்து
		ஒவ்வொருவரையும் மரிக்காமல் 
		பின்தொடர்கிறது ஒப்பாரியின் கடைசிவரி 
என்று நிலையாமையைத் தன் பெருமையென உடைய வாழ்வையும் முகர்ந்து கொள்கிறான்.  
சூர்யாவின் ஒப்பனை அறை எனும் கவிதை, பூனை, அதன் குட்டி, ஆண், பெண் - இவைகளினூடே 'வலி' என்கின்ற மாயக்கயிற்றால் ஆடும் பிம்பத்தினைச் சித்தரிக்கின்ற அற்புதமான கவிதை. 
ஆண்மையை அறிந்து கொண்டாலும் 
		பெண்மையைக் கடைப்பிடிக்கின்ற மனிதன் 
		உலகத்தைத் தன்னிடம் ஈர்த்துக்
		கொள்கின்ற கால்வாயாக மாறுகிறான் 
எனும் வரிகள் எனக்கு இங்கு நினைவிற்கு வருகின்றது. 
	சூர்யாவிற்கு கவிதையில் வாழ்வு தன்னைத்தானே புணரும் புண்புழுவாய் இருக்கிறது; அங்குசமின்றித் தவிக்கும் காமமோ காலத்தை பிரம்மச்சர்யத்திற்குள் எப்படித் தள்ளுவதென யோசிக்கும் இயலாமையாய்த் தகிக்கின்றது; நிர்வாணமோ - சங்கு மெல்லுடலி சுமந்த சமாதியாய் எட்டாத கனவாக ஈர்க்கின்றது; ஞானமும், தரிசனமும் - கல்தச்சன், தேவதச்சன் உருவில் அபயமளித்தாலும் நிரந்தரமான நிழல் தராத தேடுதலாகின்றன; மரணமோ - வாழ்வின் தேய்மானங்களுக்கு ஒத்தடம் கொடுக்கின்ற உதிரிப் பூவாய் நிறைகின்றது; 
	நடைமுறை நியதியில் தொலைந்து போகின்ற அபாயமிருக்கின்ற கவித்துவம் மட்டுமே இக் கவிஞனுக்குக் தக்க துணையாயிருக்கிறது - திடுக்கிட்டுக் குரைக்கிறது கருநாயாய் நடுச்சாமத்தில் வாழ்வு என அவன் சொல்கையில், அங்கே 'கவிதை' தான் வாழ்வின் மறு உருவாய் நிற்கின்றது. 
	இரவு போஜனத்திற்குக் கண்ணி வைத்துக் காத்திருக்கும் கிழப் பரத்தையும், ஒரு நொடிப் பொழுதில் தரையில் விழுந்த குட்டியின் நிழல் எலியாய் உறுமாறும் வலி நிறைந்த ஒப்பனை அறையும், "மானுட மன இருளறையில் (இப்பிரயோகம் சற்றே வார்த்தை ஜாலம் - கவிஞரே) பீதி தேங்கிக் கிடக்கின்ற பாலியல் குளமும், "காணாமல்போன தன் கைரேகைகளின் பட்டியலை, உண்மையை அணிந்த புனைவின் நிர்வாணமாய்" முன்னிறுத்தும் ரேகை உலாவும், நம்மைத் தூக்கம் தொலைக்கச் செய்கின்ற தொந்திரவுக் கவிதைகள். வாசகனைத் தொந்திரவு செய்வதுதானே கவிதையின் வெற்றி! 
	ஆட்டச் சுழல் எனும் கவிதை வழமையான கவிதையெனும் சட்டகம் தவிர்த்த, மேல், கீழாய் என்பதைக் கலைத்துப் போட்ட, உரைநடைக் கவிதையின் புதிய முயற்சி!
	சில புதிதான உவமைத் தெறிப்புக்களும் உள்ளன - ஒரு சோறு பதமாய் - 
		தன்னைப் பிளந்து 
		தன்விருத்தி செய்யும் 
		நெளியும் அலையும் 
		அகஅலை அமீபாக்கள்.

		பூவா தலையா எனச் 
		கண்டியிழுத்துத் தூக்கி எறிகையில் 
		நிற்காத சுழற்சியில் 
		தெறிக்குமோ மன நாணயத்தின் 
		அரூப சிதறலாய் மூன்றாம் பக்கம் 
என்பனவற்றைக் கூறலாம். 
	பெண் - தாயாய், தோழியாய், மனைவியாய்க், காதலியாய், பல்வேறு உணர்வு நிலைகளில் இவரது கவிதைகளில் வெளிப்பட்டாலும் - 'மாயமாதல்' எனும் கவிதையில் வருகின்ற அந்தப் பெண் சித்திரம் தான் முகத்தில் அறைகின்ற யதார்த்தம்.
		அந்த அம்மாபொம்மை 
		அப்படியே கிடக்கிறது -
		அப்பாவின் பரணில்.

		அம்மாவின் பொம்மையாய் 
		அம்மாவே பொம்மையாய் 
		அம்மாபொம்மையாய்....

		அப்பா இதை அறியும்போது 
		பரனும் பொம்மையும் 
		காணாமல் போயிருந்தது -

		அப்பாவும் தான்.
	சூர்யாவின் புதிர் நடை, இறுக்கமான சுண்டியிழுக்கின்ற மாய வாசல்கள் இவைகளற்றுச் சில நீர்த்துப் போன மொழிநடைக் கவிதைகளும் இருக்கின்றன - மிகச் சிலவே! அவற்றின் உள்ளடக்கம் அற்புதம் - ஆயின், உருவம் - Cliche எனப் படுகின்ற ஆரம்பகாலப் புதுக்கவிதைகளை நினைவூட்டுகிறது.
		சோற்றில் முட்டை வைக்கும் போதெல்லாம் 
		அம்மா முகத்தில் தெரியும் 
		குஞ்சு பொரிக்க முடியாக் 
		கோழியின் சோகம். 

		தோழிக்கும் காதலிக்குமான 
		இடைவெளியில் அடைகாக்கிறது 
		அந்த டைனஸார் -
		தன் காம முட்டைகளை

		பழைய சோறென இருக்கும் 
		என் வாழ்விற்கு
		இன்னமும் அவள்தான் 
		நினைவில் ஊறிய இழப்பின் மாவடு 
இவை போன்றவை பிற கவிதைகளிலிருந்து விலகி நிற்கின்றன - தொகுப்பின் தீவிரத்தன்மையினை இக்கவிதைகள் குறைப்பதாய்த் தோன்றுகிறது. கவிஞர் இவைகளைத் தவிர்த்திருக்கலாம். 
		வரையப்பட்ட வாழ்வியல் கோலத்தை 
		எல்லா மனிதர்களும் என்னைப் போலவே 
		தின்கின்றனர் -
		யுகயுகமாய் 
எனக் கவிஞரது கோலம் தின்னிகளில் வரும் கறுப்பு எறும்பு சொல்கிறது - இக்கவிதைகளை வாசித்து முடித்தவுடன் காப்காவின் மூட்டைப் பூச்சியாய் அதிகாலை உருமாறிய Grogory ஐப் போல நானும் கறுப்பு எறும்பாக உறுமாறி இருந்தேன். 
	இத்தாலியில் டோடி என்ற இடத்தில் பிறந்தவரான பாட்ரீஸியா காவல்லியின் கவிதைப் போக்கினைக் குறித்து, 
	"தீவிர வேட்கை, ஏமாற்றம், அதீதப் பற்றின் ஆக்கிரமிப்பு, மறுதலிப்பு, அச்சுறுத்தல், எதிர்த்து நிற்றல் ஆகிய அம்சங்கள் உள்ளடங்கிய ஒரு மாய வலையில் கட்டுண்ட நிலையில் எழுதுவதாய் அவரது படைப்புகள் அமைந்திருக்கின்றன. நடை அழுத்தமும், கடினத்தன்மையும் கூடியதாய் ஒருவிதப் பதட்டமும் அலைக்கழிப்புமாய் இயங்குவது. ஒரு காவல்லி கவிதையின் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அந்தரங்கமானதாய் இருந்தபோதிலும் வெறுமே தனிநபர் உலகினைச் சார்ந்ததாக மட்டுமாய் ஒரு போதும் இருப்பதில்லை. அவை வெளிநீண்டு இன்னும் பெரிய, நிலைத்ததன்மையும் நுண்மையும கொண்ட மெய்ம்மைகளைச் சென்றடைவதாக அமைந்திருக்கின்றன. அந்த வகையில் இழப்பைப் பற்றி அவர் எழுதும் போது மனித வாழ்வின் நிலையாமை குறித்தும் எழுதுகிறார். காதலைப் பற்றி எழுதும்போது வாழ்க்கையைப் பற்றி எழுதுகிறார்" என்கிறார் லதா ராமகிருஷ்ணன் (சமகால உலகக் கவிதை - தொகுப்பாளர் பிரம்மராஜன்).
	அமிர்தம் சூர்யாவின் கவிதைகளும் அப்படியானவையே. பெரும்பான்மை தன்னுணாச்சிக் கவிதைகளான அவை நுண்மையும், நிலைத்த தன்மையும் கொண்ட மெய்மைகளைத் தன் அனுபவம் சாந்தும், சிந்தனையின் நேர்த்தி கொண்டும், புதிரான மொழிநடையில் தேடிச் செல்கின்றன. நுட்பமான கவிரசனை கொண்ட எந்தவொரு வாசகனிடத்தும் அப்புதிரவிழ்க்கின்ற சாவி இருக்கக்கூடும்! என் சாவி எனக்கு - அவரவர் கைமணலே கடலளவும்!  

 
உதவிய நூல்கள் :
1)	ஜானதன் கல்லர் : இலக்கியக் கோட்பாடு மிகச் சுருக்கமான அறிமுகம் - 
தமிழில் ஆர். சிவகுமார்
2)	சமகால உலகக் கவிதை - தொகுப்பாளர் பிரம்மராஜன்
3)	தாவோ தே ஜிங் லாவோட்சு - தமிழில் சி. மணி.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *