அம்மாவின் கண்டாங்கிச் சேலையும், பூவரசமரக் குளிர்ச்சியும் – செல்வகுமாரன் கவிதைகளை முன்வைத்து ஒரு பகிரல்

"கவிதை என்பது அறிதல், விமோசனம், சக்திநிலை, தன்னிலை மறுத்தல்விட்டு விடுதலையாகி நிற்பதற்கான ஒரு வழி" எனும் அக்டேவியா பயஸின் (Octavia Pias) வாசகத்தை நினைத்துக் கொண்டே முனைவர். செல்வகுமாரனின் கவிதைத் தொகுப்பிற்குள் நுழைந்தேன். எனது நேசத்திற்குரிய கல்யாண்ஜியின் "கவிதை-சாம்பல் பூத்த தணல் மீது தன் மூச்சை ஊதி நெருப்பை உயிர்ப்பிப்பது. கண்காணாத காட்டருவிச் சத்தங்களின் இழைகளைப் பற்றியபடி வனங்களில் தன் திசையை நிர்மாணிப்பது" எனும் வரிகளுடன் உள்ளே பயணித்தேன். விளக்கங்கள் எனும் கைப்பிடிக்குள் அடங்காத பேரலை கவிதை, கைநழுவும் குறுமணல் அந்தப்பிசாசு எனும் புரிதலோடு வெளியே வந்தேன். தொகுப்பிலிருந்து வந்தேனேயொழிய - கவிதைகளிலிருந்து மீளவில்லை.  
	சிதம்பரத்தில் கிளை பரப்பி இருக்கின்ற செல்வகுமாரனது வேர் குமரி மாவட்டத்தில் என அவரது ஒவ்வொரு கவிதையும் தன் நாடித் துடிப்பால் சொல்கிறது. அந்த வழக்கு மொழியின் அழகும், வெள்ளந்தித்தனமும் மண்பானைத் தண்ணீரின் லோட்டா குளிர்ச்சியென என்னுள் பரவியது. 
	உன்னை நல்லா சமிட்டியாச்சு என்று தனது நிழலில் துப்புகின்ற மகனை அப்பா உணருகின்ற கணத்தைப் பதிவு செய்கிறது ஒரு கவிதை. நகரத்தின் நான்காவது மாடி குடியிருப்பில் மீன் கறி தின்ற துர்நாற்றம் நீங்க, தெளிக்கப்பட்ட சந்தன sprayயின் செயற்கை மணம் பற்றி இன்னொன்று. ஒரு தீ விபத்திற்கு உடனடி நிவாரணமாய் திறந்தவெளித் தொட்டி நீர் ஊற்றவோ, வாளி மண் எடுத்து வீசவோ வாய்ப்பளிக்காத நகரம் கொடுங்காட்டின் இருளாகிறது இன்னொரு கவிதையில். 
	மங்களா (ஹால்), விடிலி, தட்டு, பனங்கம்பு, கிராமச்சி வேர், வறுத்த புளியமுத்து, அம்மன்கொடை, உச்சக் கொடை, குச்சி சவுக்கு மிட்டாய், வரையாந்தை (வராண்டா), வெள்ளரிப் பிஞ்சு, நொண்டங்காய், சொக்காரன்மார்கள், அரங்கு வீடு, சாமியாடி, செண்டைமேளம் - எனக் கவிதைகளில் தன் மண்ணின், நிலத்தின், பேச்சையும், மூச்சையும் பதிவு செய்திருக்கின்ற கவிஞர், 
	எனது தேசமாய் அறியப்பட்ட 
	இன்னொரு நிலத்தில் நான். 
	யாதும் ஊரே யாவரும் கேளிர் 
	எனக்குள்ளும் பால்யம் முதலே 
	கற்பிதம் செய்யப்பட்டிருந்தது. 
	அந்த நிலம் எனக்குள் 
	அந்நியப்பட்டே கிடக்கின்றது - 
	கால்பதிக்க முடியாத 
	பூச்சி முள்ளின் கூர்மையுடன் 
என்பது நியாயமான பரிதவிப்பு தானே. 
	ஆஸ்திரேலியா ஆதிக்குடிப் பெண் லிஸ் மெக்நிவன் (Liz Mcniven) இனின் கிழ்க்கண்ட கவிதையொன்று, நினைவிற்கு வருகிறது. 
	பல ஆண்டுகளாக 
	நாம் பாடிக் கொண்டிருக்கும் பாட்டும் 
	பழம் நினைவுகளும் 
	கதவைத் தட்டுகின்றன. 
	அந்தப்பாட்டு நம்மை செயல்படுத்துகிறது. 
	அது நமக்கு வலிமையூட்டுகிறது. 
	அது நமக்குரிய நிலத்தின் பண்பாட்டைப் புதுப்பிக்கிறது. 
எனும் அந்தக் குரல், அதன் துயரம், ஒரு அழுத்தப்பட்ட பழங்குடி இனத்தின் வரலாறு என்றாலும், தன் சிறு கிராமம்விட்டுப் பிழைத்தலுக்காகப் பெருநகரம் செல்கின்ற எவரும் உணர்ந்து, பொருந்தக் கூடிய தன்மை வாய்ந்தது. செல்வகுமாரனின் கவிதைக் குரலும் அது போன்றதே. 
	அவரது பூவரசம் பூ எனும் கீழ்வரும் கவிதையே தொகுப்பின் அச்சும், கவிஞனின் ஆன்மாவும்;  
	தோப்பங்காட்டு மணலில் 
	வீடு கட்டிச் சோறு வாங்கி 
	செம்மண்ணில் குழம்பு வைத்து 
	கருப்பட்டி செய்து புட்டவித்து 
	பூவரச இலையில் பரிமாறி 
	தின்று தீர்த்த பொழுதுகள், 
	குதும்பலில் தேர் செய்து இழுத்து 
	பூவரச இலையில் ஊத்து ஊதி 
	பனங்கூந்தலில் வண்டி செய்து 
	தெருவெங்கும் சுற்றிய நாட்கள் -
	பூவரசம் பூவாய் மாறிப்போனது 
	மஞ்சளில் இருந்து சிகப்பாக 
	‘மரணம் தன்னைத் தீர்க்க முடியாத ஒரு சிகரெட்டைப் புகைக்கிறது’ என்பார்கள். இத்தொகுப்பிலும் மரணம் ஒரு கருநிழலாய் நம்முடன் வருகிறது பல கவிதைகளில். 
	...... பாம்பாய் நெளிகிறது மேம்பாலம் 
நெடுகிலும் தூவப்பட்டுக் கிடக்கின்றன மலர்கள்
தொற்றிக் கொண்டது மரணம் 
என்றும், 
	அனந்தர சொக்காரன்மார்கள் 
	அம்மா இறந்தபோது வந்திருந்தனர் 
	மறுபடியும் வருவார்கள் அப்பா இறக்கும்போது 
	நான் முன்பு இறந்துபோனாலும் வரலாம் 
என்றும், 
	கொலையாளிகள் 
	கொலைக் கருவிகள் 
	கொலைக் கூடங்கள் 
	துரத்திக் கொண்டே வருகின்றன 
	கொலைக்கான காரணங்கள் ஏதுமின்றி 
	எங்கும் உலராத ஈர இரத்தத்தின் நெடி 
என்றும் - மரணத்தின் அஞ்சலி உடை அணிந்த கறுப்பு நிறக் கவிதைகள் பல! 
	இவரது நிலப்பரப்பின் கடலும், பனையும், தெழுவும், புன்னை மரக்கிளையும், கருப்பட்டி காப்பியும், புளிய மூட்டம்மன் கோவில் ரிக்காடுமாக - நம் கண்முன் வார்த்தைகளுக்குப் பதில் கவிதைகளில் காட்சிகளே (எளைரயடள) அதிகம். தனது தொலைந்து போன பால்யத்தை, இல்லாமல் போன பரணை, காணாமல்போன கதம்பலை, கடைராட்டில் கயிறு திரிக்கும் ஆசானை, புழக்கமற்றுப் போன, மசிய அரைக்கின்ற அம்மியைக், குழுவியை, இறந்துபோன தங்கம்மா கிழவியைத், தொடராத அம்மாவின் பண்டிகை நாட்களை - காட்சிப் படுத்தியிருக்கும் ஒவ்வொரு கவிதையும் ஒரு கண்புலக் காட்சிதான். கண் வழி உள் புகும் வலி மட்டுமே அவரது கவிதையின் அடிநாதமும், வெற்றியும்! 
	கையில் முடைகின்ற பெட்டிகளில் இத்தனை வகையுண்டா என என்னை மலைக்க வைத்த கவிதை பெட்டி எனும் தலைப்புடையது. ‘கொட்டப்பெட்டி, நாருப்பெட்டி, பிளாப்பெட்டி, மடக்குப் பெட்டி...’ என குமரி மண்ணின் கைநேர்த்தியை, அன்றாட வாழ்வின் தேவைக்கேற்றவாறு விதவிதமாக முடையப்பட்ட பெட்டிகளை, அவற்றைக் காவுவாங்கிவிட்ட இந்த நாகரீகத்தின் அசுர வளர்ச்சியை, அந்தக் கவிதை (விவரணையின் தொனியிருந்தாலும்) மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறது. 
	தெறிப்பாய்ப் பின்வரும் சில உவமைகளும் இவரின் கவித்திறனுக்குச் சாட்சியாக: 
	நட்பு உயரமாய் வளரும் பொழுதே 
	பகைமையும் படரத் துவங்குகின்றது 
	ஊத்தைவாயின் துர்நாற்றமாய் 

நிறை மரக்காலில் 
	மறுகை அள்ளிவைத்து நிலைநிறுத்தம் 
	அப்பாவின் கைகளுக்குள் கட்டுப்படாது 
	உருவிப் பாய்ந்திடும் நெல்மணியாய் 
	வழிந்தோடியது நாட்கள் 

	அடை மழை நாளின் புளியம்பழமாய் 
	கரைந்து போகின்றேன் 
	ஒரு நீண்ட படிமக் கவிதை சாத்தியம் தானா? என்று எஸ்ரா பவுண்ட் ஒருமுறை கேட்டாராம். கவிஞரது, மிகச் சிறியதான படிமக் கவிதை இது - 
	இடதுகை பெருவிரலில் 
	நகம் வெட்டிய போது 
	எனக்குள்ளும் பிறையின் நினைவு.
கவிதைகளை வாசித்து, உள்வாங்கிப், பயணப்படுகின்ற தன் அனுபவம் என்பதுவும், அந்த அகவய அனுபவத்தை முழுமைபெறாத வார்த்தைகளால் பகிர முற்படுவதும் வெவ்வேறான தளங்கள். அன்பு மிகுதியினால் வாழ்த்துரைகள் எழுதலாம். ஆனால் தகுதியும், கொஞ்சம் பாதிப்பும் இருந்தால் மட்டுமே பகிரல் சாத்தியம். செல்வகுமாரனது கவிதைகள் பலவற்றில் அவை இருக்கின்றன. குறிப்பாக, தனது நிலத்தின் ‘நெல்அவித்த மண்பானை’ மணமும், ‘காயப்போட்ட பெரிய ஓலைப்பாய்’ விரிவும் ஊடுபாவி இருக்கின்றன. 
                                                                                   * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *