அறிமுகம்

அவளென்ற நான்

சென்னை, இராணிமேரிக் கல்லூரியில், ஆங்கில விரிவுரையாளராகப் பனிரெண்டு ஆண்டுகள் பணிபுரிந்த த.சுமதி (தமிழச்சி தங்கபாண்டியன்), ஆஸ்திரேலியாவில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களது ஆங்கிலப் படைப்புக்களில் அவர்தம் அலைந்துழழ்வு உணர்வு குறித்துச் (குறிப்பாக, ஆஸ்திரேலிய வாழ் இலங்கைத் தமிழரான, எர்னஸ்ட் தளையசிங்கம் மெக்கின்டையர் எனும் நாடக ஆசிரியரது ஆங்கில நாடக ஆக்கங்களை முன்வைத்து) சென்னைப் பல்கலைக்கழகத்தில், முனைவர் (Ph.D) பட்டம் பெற்றுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் – மல்லாங்கிணறு எனும் கிராமத்தில் பிறந்த இவர், தமிழச்சி எனும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதுகிறார். இவரின் எஞ்சோட்டுப் பெண் (மித்ர பதிப்பகம்) எனும் முதல் கவிதைத் தொகுப்பு, தமிழ் இலக்கியம் 2004 என்கிற இலக்கிய விழாவில் சென்னையில் ஜனவரி 2004இல் வெளியிடப்பட்டது.

இவரது கவிதைகள், சிறு பத்திரிக்கைகளிலும், வெகுஜனப் பத்திரிக்கைகளிலும் பிரசுரமாகியுள்ளன. பன்னாட்டு அரங்குகளின் இலக்கிய நிகழ்வுகளிலும் பங்கு பெற்றிருக்கின்றார்.

ஆஸ்திரேலிய இந்திய கவுன்சில் (AIC) எனும் அமைப்பின் விருதான AIC Fellow 2002 எனும் விருதினை பெற்று, ஆஸ்திரேலிய மோனாஸ் (Monash) பல்கலைக்கழகத்தில் தன் கள ஆய்வை முடித்தவர். கரிசல் மண் மக்களது வாழ்க்கையினைப் பதிவு செய்திருக்கின்ற இவரின் முதல் தொகுப்பான எஞ்சோட்டுப் பெண் எனும் கவிதை நூலிற்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருது 2004, மகாகவி பாரதியார் அறக்கட்டளையின் கல்வியியல் விருதான மகாகவி பாரதியார் விருது 2005 ஆகிய விருதுகள் அளிக்கப்பட்டிருப்பதோடு, அந்நூலின் சில கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு, நந்தனம் அரசு கலைக்கல்லூரி, லயோலா கல்லூரி, எத்திராஜ் மகளிர் கல்லூரி மற்றும் ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியின் தமிழ் பட்டப் படிப்பிற்கான பாடத் திட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளன. எஞ்சோட்டுப் பெண் எனும் முழுக் கவிதைத் தொகுப்பும், பெரியார் பல்கலைக் கழகம் (சேலம்), முதுகலை தமிழ் இலக்கியப் பிரிவு (2017 – 2020) பாடத்திட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது. வனப்பேச்சி எனும் முழுக் கவிதைத் தொகுப்பும், நிர்மலா மகளிர் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர் – இளங்கலை முதலாமாண்டு தமிழ் இலக்கிய மாணவிகளுக்கான பாடத்திட்டத்திலும் (2018) சேர்க்கப்பட்டுள்ளது.

இவரது படைப்புலகம் குறித்து, தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண் – ஓர் ஆய்வு: அழகப்பா பல்கலைக்கழகம் (2006), தமிழச்சி கவிதைகளில் உள்ளடக்கமும் உருவமும் – அழகப்பா பல்கலைக்கழகம் (2006), தமிழச்சியின் எஞ்சோட்டுப் பெண் கவிதைகளில் பன்முகத்தன்மை – பச்சையப்பன் கல்லூரி (2010), தமிழச்சி தங்கப்பாண்டியன் கவிதைகளில் பன்முகப் பார்வை – மதுரைக் கல்லூரி (தன்னாட்சி – 2012) மற்றும் பன்முகப்பார்வையில் தமிழச்சியின் வனப்பேச்சி – பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி – 2013), தமிழச்சியின் மண்வாசத்தில் மருத்துவக் குறிப்புகளும் மக்கள் உறவுகளும் – பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி (தன்னாட்சி – 2014) ஆகிய இளமுனைவர் (M.Phil) பட்ட ஆய்வுகள் தமிழில் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழச்சியின் படைப்புகளில் பெண்ணியச் சிந்தனைகள் எனும் தலைப்பில் இவரது படைப்புகள் குறித்து கொடைக்கானல், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் (2014) முனைவர் பட்ட ஆய்வேடு (Ph.D.) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தமிழச்சியின் கவிதைகள் நோக்கும் போக்கும் என்னும் தலைப்பில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (2015) முனைவர் (Ph.D.) பட்டத்திற்காக ஆய்வேடு அளிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனா பதிப்பகம் சார்பில், டிசம்பர் 2004 இல் உறவுகள் – எஸ்.பொ, (தொகுப்பு பா.இரவிக்குமார் & த.சுமதி) புத்தகம் வெளிவந்துள்ளது.

இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வனப்பேச்சி (உயிர்மை பதிப்பகம்) – டிசம்பர் 2007 இல் வெளியிடப்பட்டது. இந்த தொகுப்பிற்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் ஏலாதி இலக்கிய விருது – 2008, மற்றும் திருப்பூர் தமிழ்ச்சங்க விருது – 2009 அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசு, 2009ஆம் ஆண்டிற்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதினை இவருக்கு அளித்து கௌரவித்துள்ளது.

களம் புதிது இலக்கிய குழு கடந்த இருபது ஆண்டுகளாக திருமுதுகுன்றத்தை (விருத்தாசலம்) மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. 2010ம் ஆண்டிற்கான சிறந்த கவி ஆளுமை விருது இவருக்கு களம் புதிது இலக்கியக் குழு சார்பாக வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி அறக்கட்டளையின் 2013 ஆண்டிற்கான சிறந்த கவிஞர் விருது வழங்கப்பட்டுள்ளது.

பாரதியார் சங்கத்தின் 2015 ஆண்டிற்கான பாரதி பணிச் செல்வர் விருது வழங்கப்பட்டுள்ளது.

கலகம் கலை இலக்கியத் தமிழ்த் தேசியத்தடம் 2015 ஆண்டிற்கான சிறந்த பாடலாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் 2017 இல் விடியல் அறக்கட்டளையின் சார்பாக இவரின் படைப்புத் திறன், பன்முக ஆற்றலைப் பாராட்டி பாரதி விருது அளிக்கப்பட்டுள்ளது.

MADRAS DEVELOPMENT SOCIETY (Chennai) ஏப்ரல் 2017 இல் இவருக்கு CROWN JEWEL OF SOCIAL ACTIVIST (சமூக ஆர்வலர் மாமணி) எனும் விருதினை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

கவிமுகில் அறக்கட்டளை கவிஞாயிறு தாராபாரதி விருதினை ஜூன் 2017 இல் இவருக்கு வழங்கிச் சிறப்பித்துள்ளது.

ஆகஸ்ட் – 2017 இல் கம்பன் கழகம் சென்னை, நீதியரசர் மு.மு.இஸ்மாயில் நினைவுப் பரிசினை இவருக்கு வழங்கிக் கௌரவித்துள்ளது.

SPARRC – IISM (Indian Institute of Sports Medicine) பிப்ரவரி – 2018 இல் இவருக்கு PRIDE OF INDIA எனும் விருதினை His Excellency ESL. Narasimhan, Hon. Governor Telangana & Andhra Pradesh மூலமாக வழங்கிச் சிறப்பித்துள்ளது.

பல்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்த இவரது நேர்காணல்கள் தொகுக்கப்பட்டு பேச்சரவம் கேட்டிலையோ (உயிர்மை பதிப்பகம்) எனும் தலைப்பில் ஜனவரி – 2009 இல் வெளிவந்துள்ளது.

சிறு பத்திரிக்கைகளில் வெளியான இவரது கவிதைகளின் தொகுப்பு மஞ்சணத்தி (உயிர்மை பதிப்பகம்) எனும் கவிதை நூலாக டிசம்பர் – 2009 இல் வெளிவந்துள்ளது.

அன்னை முத்தமிழ் பதிப்பகம் சார்பில், டிசம்பர் – 2010 இல் நவீனத்துவவாதி கம்பன் புத்தகம் வெளிவந்துள்ளது.

டிசம்பர் – 2010 இல், சென்னையில் உயிர்மை பதிப்பகத்தின் சார்பில், காற்று கொணர்ந்த கடிதங்கள் (தமிழச்சியின் படைப்புலகம் குறித்த விமர்சனக் கடிதங்களின் தொகுப்பு), காலமும் கவிதையும் (தமிழச்சியின் படைப்புலகம் குறித்த விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு), சொல் தொடும் தூரம் (பிற படைப்பாளிகள் குறித்த தமிழச்சியின் விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு), பாம்படம் ஆகிய நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

குமுதம் தீராநதியில் வெளியான இவரது கவிதைகளின் தொகுப்பு அருகன் (உயிர்மை பதிப்பகம்) எனும் கவிதை நூலாக டிசம்பர் – 2011 இல் வெளிவந்துள்ளது.

அவள் விகடன் பத்திரிக்கையில் வெளியான இவரது கட்டுரைகளின் தொகுப்பு மயிலறகு மனசு எனும் விகடன் பிரசுரமாக மே – 2012 இல் வெளிவந்துள்ளது.

அவள் விகடன் பத்திரிக்கையில் வெளியான இவரது கட்டுரைகளின் தொகுப்பு மண்வாசம் எனும் விகடன் பிரசுரமாக ஜூலை – 2013 இல் வெளிவந்துள்ளது.

புலம் பெயர்ந்து வாழ்கின்ற இலங்கைத் தமிழர்கள் குறித்த இவரது ஆங்கிலப் புத்தகம் Island to Island (தமிழச்சியின் முனைவர் பட்ட ஆய்வு நூல்) – 2013 ஜனவரியில் எமரால்ட் பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 2015 இல் அவளுக்கு வெயில் என்று பெயர் (கவிதைத் தொகுப்பு), பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை (தமிழச்சி எழுதிய விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு) – (உயிர்மை பதிப்பகம்) எனும் இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

மரியா ரேமோந்தஸ் அவர்களின் கலீசிய மொழிக் கவிதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு கல்லின் கடுங்கோபம் (உயிர்மை பதிப்பகம்) எனும் கவிதை நூலாக செப்டம்பர் 2017 இல் வெளியிடப்பட்டது.

ஜனவரி 2018 இல் இவரது ஆங்கிலப் புத்தகமான Island to Island, சா.தேவதாஸ் அவர்களால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு நிழல் வெளி எனும் நூலாக (உயிர்மை பதிப்பகம்) வெளியிடப்பட்டது.

காமதேனு பத்திரிக்கையில் வெளியான இவரது கட்டுரைகளின் தொகுப்பு சொட்டங்கல் எனும் நூலாக டிசம்பர் 2018 இல் (தமிழ் திசை பதிப்பகம்) வெளியிடப்பட்டது

ஜனவரி 2019 இல் இவரது சிறுகதைகளின் தொகுப்பு முட்டு வீடு எனும் நூலாக உயிர்மை பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது.

பிப்ரவரி 2019 இல் இவரது வனப்பேச்சி எனும் கவிதை நூலிலிருந்து சில கவிதைகள் Dr.C.T.இந்திரா அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு Internal Colloquies எனும் நூலாக (Rubric Publishing) வெளியிடப்பட்டது.

ஜனவரி 2020 இல் இவரது தமிழச்சி தங்கபாண்டியனின் கவிதை வெளி (தமிழச்சியின் படைப்புலகம் குறித்த விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு) எனும் நூல் உயிர்மை பதிப்பகம் சார்பில் வெளியிடப்பட்டது.

இலக்கிய விமர்சனக் கட்டுரைகளை, த.சுமதி என்கிற தன் இயற்பெயரிலே எழுதுகின்ற இவர், மொழிபெயர்ப்பு இலக்கியத்திலும் முனைப்பு கொண்டு, புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களது சிறுகதைகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, சென்னைப் பல்கலைக்கழகத்திலும், பன்னாட்டு தேசிய கருத்தரங்கங்களிலும் அவை குறித்து ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ளார்.

சிறுகதை எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருக்கின்ற இவரது சிறுகதைகள் சில ஆனந்த விகடன் மற்றும் அவள் விகடனில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.

தேர்ந்த கவித்துவம், சொல்வளம், தொடர்ச்சியான கவிதை இயக்கம், அரசியல் உள்ளீடு கொண்ட படைப்பு பலம், தொன்மையும் நவீனமும் இணையும் பாங்கு, அடித்தட்டு மக்களின் மீதான அக்கறை, தமிழ் தேசிய நலனில் கரிசனம், உலகமயமாக்கலின் அடையாள அழிப்பிற்கு எதிர்திசையில் தமிழின் பன்முக அடையாளங்களை தேடிப் படைக்கும் ஆற்றல் – என விரிவான கவித்தளத்தில் இவரது கவிதைகள் இயங்குகின்றன.

பரதநாட்டியத்தினை முறையாகப் பயின்றிருக்கின்ற இவருக்கு, அரங்கம் எனப்படுகின்ற மேடை நாடகத் தளத்தில் ஆர்வமும், பங்கேற்பும் உண்டு.

தமிழ் நாடக அரங்கில் பங்களிப்புகள்

  • தமிழ் நாடக அரங்கின் தனித்துவமிக்க இயக்குநர், கலைத்துவத்துடன் அரசியலை முன்வைக்கின்ற நாடக நெறியாளர் பிரசன்னா ராமஸ்வாமியின் பாரதியார் கவிதைகள் குறித்த நாடகத்தில் இவரது பங்களிப்பு கலாஷேத்ராவிலும், சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் பரவலான கவனத்தைப் பெற்றது. அவரது இயக்கத்தில் சேரன், சுகுமாறன் ஆகியோரது கவிதைகள் குறித்த நிகழ்த்துகலை நிகழ்விலும் பங்கேற்றிருக்கிறார்.
  • 'வெளி' ரங்கராஜன் அவர்களுடைய நாடகவெளி சார்பாக சென்னை அலையன்ஸ் ப்ராங்கை அரங்கில் தமிழின் பழம்பெரும் எழுத்தாளர் கு.ப.ரா.வின் அகலிகை நாடகத்தில் அகலிகையாகப் பங்கேற்று நடித்திருக்கின்றார். நவீனப் பெண்ணிய குரலாக இந்நாடகம் பாராட்டப்பட்டது.
  • இவர் சூர்ப்பநகையாக நடித்த, கு. அழகிரிசாமியின் வஞ்சமகள் எனும் நவீன நாடகம், சென்னைப் தமிழ் நாடகப் பரப்பிலே குறிப்பிடத்தகுந்த நாடக நெறியாளரான அ.மங்கை அவர்களது இயக்கத்தில், கவிஞர். இன்குலாப் அவர்களது குறிஞ்சிப் பாட்டு எனும் இரண்டு மணி நேர நாடகத்தில் பங்கேற்றுள்ளார். சென்னை மற்றும் சேலத்தில் இந்நாடகம் நடத்தப்பட்டது. ஒடுக்கப்பட்ட மரபுகளையும், பழம்பெரும் கலாச்சார வேர்களையும் மீட்டெடுக்கும் முயற்சியாக இந்நாடகம் அறியப்பட்டது.
  • இவர் சூர்ப்பநகையாக நடித்த, கு. அழகிரிசாமியின் வஞ்சமகள் எனும் நவீன நாடகம், சென்னைப் தமிழ் நாடகப் பரப்பிலே குறிப்பிடத்தகுந்த நாடக நெறியாளரான அ.மங்கை அவர்களது இயக்கத்தில், கவிஞர். இன்குலாப் அவர்களது குறிஞ்சிப் பாட்டு எனும் இரண்டு மணி நேர நாடகத்தில் பங்கேற்றுள்ளார். சென்னை மற்றும் சேலத்தில் இந்நாடகம் நடத்தப்பட்டது. ஒடுக்கப்பட்ட மரபுகளையும், பழம்பெரும் கலாச்சார வேர்களையும் மீட்டெடுக்கும் முயற்சியாக இந்நாடகம் அறியப்பட்டது.
  • பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில் அரங்கேற்றப்பட்டு, நன்கு வரவேற்கப்பட்டது.
  • இன்னொரு ஏதோ எனும் நவீன நாடகத்தை, கனடா வாழ் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சிறீசுவுடன் அரங்கேற்றியுள்ளார்.
  • தியேட்டர் லேப் என்கின்ற நாடகக் குழுவினருடன் இணைந்து சென்னை, அலையன்ஸ் ப்ராங்கை அரங்கில் மகாத்மா காந்தியின் கடைசி ஐந்து விநாடிகள் எனும் மொழிபெயர்ப்பு நாடகத்தில் (தமிழில் - ஜி.கிருஷ்ணமூர்த்தி) சி.ஜெயராவின் இயக்கத்தில் நடித்திருக்கிறார். அதிகாரத்திற்கு எதிரான அமைதியின் குரலாக இந்நாடகம் பார்வையாளர்களால் விமர்சிக்கப்பட்டது.
  • தமிழச்சியினுடைய நூல் வெளியீட்டு நிகழ்வுகளின் துவக்க நிகழ்வாக அவரது கவிதைகளை நாடக வடிவில் சிறந்த அரங்கக் கலைஞர் கருணா பிரசாத்தின் நெறியாள்கையில் மூன்றாம் அரங்கு குழுவினர் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர்.
  • விஸ்டம் பதிப்பகத்தாரின் சிறந்த இளவயது நாடகக் கலைஞர் விருது, நிகழ்த்துதல் கலைக்காக இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

தமிழச்சியின் கவிதையும், அரசியலும்

ஒரு மூன்றாம் உலகப், பின் காலனீயக், கிழக்கு ஆசியப் பிரஜையின் குரலை, அரசியலை என் கவிதை முன்வைக்கின்றது. தொன்மவியலும், நாட்டுப்புற வழக்காற்றியலும், சடங்குகளும், சிறுதெய்வ வழிபாட்டு முறையும், நாட்டார் கலைகளும், செவிவழிச் சொலவடைகளும், நம்பிக்கைகளும், பழ மரபுக் கதைகளும் கொண்ட உலகம் எனது. நான் அந்த கரிசல் நிலத்தின் இடைச்சி, மேய்ச்சி, பேச்சி.

மேற்குலகின் தனியாள் நனவிலிக் குரலுக்கு எதிராக அல்லது மாற்றாக இருப்பது எனது கூட்டு நனவிலிக் குரலான கவிதை.

யூங்கின் கூற்றுப்படி ‘முழுமையையும், சுயத்தையும்’எனது கவிதைகள் வழி நேர்த்தியாகச் சொல்ல முயற்சிப்பவள். அவரது கூற்றுப்படியே ‘நனவு நிலையில் தனி மனுஷியாக இருந்தாலும், நனவிலியில் கூட்டு மனிதராக இருக்கிறேன்’. கவிதை என்பது முழுக்க ஒரு அக நிலைச் செயல்பாடு. ஆனால், அதில் எனது கூட்டு நனவிலி மனதையே முன்னிறுத்தி எனது படைப்பினை நிகழ்த்துவதில் ஒரு முக்கிய அரசியல் உண்டு. அது, கூகி வான் தியாங்கோ, ஆங்கில மொழியில் எழுதுவதை நிறுத்திவிட்டு, தனது இனக்குழு மொழிக்குத் திரும்பியபொழுது சொன்ன, “It is a political statement” என்பதற்குச் சற்று பொருந்தி வருகின்ற அரசியல். மொண்ணைத்தனமான ஒற்றை முகக் கலாச்சாரம், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் – இவற்றிற்கு மாற்றாகத் தனது அடையாளத்தை, வேரை, மொழியைச் ‘சிக்கெனப் பற்றிக் கொள்ளும்’ – தாயின் முலை விட்டகல விரும்பாத சிசுவின் ஆதிச் செய்கை எனது கவிதை.

பிற மொழி இலக்கியங்களில் (குறிப்பாக ஆங்கிலம்), தத்துவங்களிலும், கோட்பாடுகளிலும் தீவிர ஈடுபாடும், விருப்பமும், சிறிதளவு அறிமுகமும் உள்ள நான், முழுக்க எனது கவிதைகளில் ‘சர்வ தேசியத்திற்கு’ எதிராக அல்லது மாற்றாக எனது நிலம் சார்ந்த அடையாளங்களை முன்வைப்பது என்பது ஒரு பின் நவீனத்துவ செயல்பாடுதான். நவகாலனிய ஆதிக்கச் சூழலுக்கு எதிரான கேள்வி எழுப்புவதே என் அரசியல்.

என் தந்தை ஆசிரியர் திரு.வே.தங்கபாண்டியன், திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கடைநிலைத் தொண்டராக 1949ல் தி.மு.க.வில் இணைந்தவர்.

மேலவைக்கு பேரறிஞர் அண்ணாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைவர் கலைஞர் வாழ்த்துக்களுடன் அனுப்பிவைக்கப்பட்டவர். மக்களின் அன்பும் ஆதரவும் பெற்றவர் என்பதால், 1996-97 காலகட்டத்தில் அமைச்சர் பொறுப்பும் வகித்தார். என் அரசியல் ஆசானும் வழிகாட்டியும் என் தந்தைதான். என் சகோதரர் தங்கம் தென்னரசுவும் தி.மு.க. அமைச்சரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் சமச்சீர் கல்வித் திட்டம், எனச் சிறப்பான முறையில் பணியாற்றியவர்.

தொடக்கக் கல்வியை எங்கள் கிராமத்தின் அரசுப் பள்ளியில் தொடங்கி, பின்னர் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று, சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கிலத்துறை பேராசிரியராகப் பதிமூன்று (13) ஆண்டுகள் பணிபுரிந்த நான், அரசியலின் வழியே சமூகத்துக்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிக்க நினைத்தேன். பேராசிரியர் பணியைத் துறந்தேன். தி.மு.க.வின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் மாநிலத் துணைத் தலைவராக கலை சார்ந்தும், சமூகம் சார்ந்தும் இயங்கி வருகிறேன். மேடைப்பேச்சு, எழுத்து என நாடகக்கலை கலை இலக்கிய வெளியிலும் சாமானியர்களின் உணர்வுகளையும், வாழ்வியலையும் தடயமாகப் பதித்திருக்கிறேன்.

தற்சமயம் தென் சென்னைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் புதியதொரு பயணத்தைத் துவக்கி உள்ளேன்.

தொடர்பு கொள்க