அழிபசி – தவசி கருப்பசாமி புத்தக வெளியீட்டு பேச்சு

எதிர்க்கின்றேன் - எதிர்த்தலால் இருக்கின்றேன்

    "We make the mistake of thinking that language will somehow clarify things between us and the native:
	நமக்கும், பூர்வகுடியினருக்கும் இடையே நிலவும் சில தடைகளை மொழியானது தெளிவுபடுத்திவிடும் என்று நினைக்கிற தவற்றை நாம் செய்கிறோம்.
-	Vincent O 'Sullivan,
Billy 1990 : 13
	கிராமம் நகரம் என்ற வித்தியாசங்கள் எதிர்காலத்தில் மனித அனுபவத்தில் சாத்தியம் தானா? இனியும் மனிதர்கள் வேர்களைத்தேடக் கூடிய இலக்கியம் சாத்தியப்படுமா? எனும் மிக முக்கியமான கேள்வியோடு அழிபசி தொகுப்பு குறித்து பகிர ஆரம்பிக்கிறேன்.
"இலக்கியத்தின் மிக முக்கியமான செயல்பாடாக உலகளாவிய தன்மையை வழங்கல் மற்றும் குறிப்பிட்ட மொழியை வாசிக்க இயலும் எல்லாரையும் பார்த்துப் பேசுதல் ஆகிய இரண்டின் இணைப்புக்குச் சக்தி வாய்ந்த ஒரு தேசியச் செயல்பாடு இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஆங்கில இலக்கியத்தின் கதாபாத்திரங்கள், பேசுபவர்கள், கதை அமைப்புக்கள் மற்றும் கருக்கள் ஆகியவற்றை உலகளாவிய சக்தி கொண்டவையாகக் காட்சிப்படுத்துவது என்பது ஒரு திறந்த அதேசமயம் எல்லை குறுக்கப்பட்ட கற்பனையான சமுதாயத்தை உயர்த்தி முன்னேற்றுவதாகும். இந்தச் சமுதாயமாகத் தாங்கள் மாற அவாவுவதற்கு பிரிட்டிஷ் காலனிகளின் குடிமக்கள் தூண்டப்படுகிறார்கள். உண்மையில், எவ்வளவுக்கு அதிகமாக இலக்கியத்தின் உலகளாவிய தன்மை வலியுறுத்தப்படுகிறதோ அதே அளவுக்கு அதற்கு ஒரு தேசியச் செயல்பாடு இருக்கிறது. ஜேன் ஆஸ்டினால் வழங்கப்பட்ட உலகப்பார்வையின் உலகளாவிய தன்மையை அழுத்திச் சொல்வது இங்கிலாந்தை ஒரு மிகத் தனிச்சிறப்பான நாடக, ரசனை மற்றும் நடத்தையின் உயர் தரங்களுடைய இருப்பிடமாக ஆக்குகிறது." 
பெனடிக் ஆண்டர்சனின் மேற்சொன்ன கருத்து முக்கியமானது.
	தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகக் கவிதைச் சூழலில் இந்த உலகளாவிய தன்மை வலியுறுத்திச் சொல்லப்படுகின்ற போக்கிற்கு ஒரு வலுவான காரணம், ஒரு நுண் அரசியலுண்டு. உலகளாவிய பார்வையுடைய சர்வதேசக் கவிதைகளை எழுதுவதாகத் தம்மை நினைக்கின்ற ஒரு குழுவினர், பிரதேசத் தன்மையோடு படைக்கப்படுகின்றவற்றை வட்டார வழக்குச் சொல்லாடல்கள், சொலவடை சொல் ஜாலங்கள் என எல்லைகளைக் குறுக்கி அவர்களை புறமொதுக்கிக் போவதற்கான நுட்பமான கனவான்களின் வன்முறை உத்தியே அது. தவசிக்கருப்பசாமியினது அழிபசி இந்தப் போக்கின் மீது அடவு கட்டி வைத்து அடிக்கப்படுகின்ற படுகளம்.
	இங்கிலாந்தோ, அமெரிக்காவோ, ஐரோப்பிய தேசங்களோ - இவற்றின் இலக்கியத்தினூடான தேசியச் செயல்பாட்டிற்றிற்கு வலிமையான ஒரு மாற்றுக்குரலை ஒரு மூன்றாம் உலக பின்காலனிய ஆசியப் பிரஜையாக முன்னெடுத்துச் செல்வது கீழைத்தேய இலக்கியவாதிகளின் கடப்பாடு. Oriental Wisdom எனப்படுகின்ற கீழைத்தேய ஞானமும், நிலம், மொழி, இனம், திணைசார் பண்பாடும் கொண்ட தமிழரது அகமும், புறமும், செவ்விலக்கியங்களும் ,மேற்குலகிற்கான ஒற்றைமயமாக்குதலுக்கும், 'உலகளாவிய தன்மையின்' அரசியலுக்கும் எதிரான மிகக் காத்திரமானதொரு குரல் மட்டுமல்ல - அவசியமானதும் கூட.
	செவ்விலக்கியங்களை விடத்தொன்மையானது நமது நாட்டார் கூத்து வடிவங்களும், செவிவழிப் பாடல் மரபும். அதன் தொன்மங்களுக்கு இணையாக கிரேக்க துன்பவியல் நாடகங்களில் கூறுகளைச் சுட்டலாம்.  அவற்றின் அழுத்தமான அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட தவசிக்கருப்பசாமியின் இக்கவிதைகள் சஞ்சாரிக்கின்ற உலகம் சமகாலத்தியது - ஆனால் பயணிக்கின்ற குதிரையோ துடியான அய்யனார் வாகனம்.
	அனுபவங்களே மனித நிலைகளைக் கட்டமைக்கின்றன என்றாலும் புறக்காரணிகளான சமூக, அரசியல், பொருளாதாரக் கூறுகள் தான் மனித நிலையைத் தீர்மானிக்கின்றன. இதில் நகரம், கிராமம் எனும் ஸ்தூலமான வித்தியாசங்களை விட, அவை தருகின்ற அனுபவங்கள், அதன் புறக் கூறுகள், மிக முக்கியமாக அதன் பின்னிருக்கின்ற அரசியல் கூர்ந்து உள்வாங்கப்பட வேண்டும். 
	கூடியப்பொறுப்பில் தேயாத பாதுகை சிரஞ்சுமக்கும்
	அதிகாரியவர்கள் சமூகத்திற்கு எனதம்பு வணக்கம்
	ஆகாரத்திற்கென நேரத்திற்கு மூன்று நிலை
	லத்தியிடும் கழுதைகள் கழிவறையில் தஞ்சம்
	ஆறப்பொறுக்காத விடைப்பு அருந்தப்பதைக்க
	பயத்தில் பெய்த மூத்திரமின்னும் சூட்டங்கவில்லை
	கோப்புகளில் ஒப்பமிடுந்தோறும் இட்டுக் கிண்டும்
	பாதாளசோதியில் நரம்பறுந்துத் தொங்கும் அப்பிராணிகள்
	நடையில் ஏய்க்க நீங்கள் குறைவள்ளம் அளக்கிறீர்கள்
	கொத்திய மூக்கன் கொம்பேறிப் பார்க்கும்
	நியாய தீர்ப்பு தகுதித்தேர்வன்று
	சி எனக்குறித்து குஞ்சிரிப்பு சிந்துகிறீர்கள்
	பேரன்பு நிலைக்கட்டும் அருள்கூர்ந்து சொல்லுங்கள்
	நாங்களென்றால் இளக்காரம்
	எங்கள் பீ யென்றால் பலகாரமா அய்யா.
எனும் கவிதையைப் பாருங்கள்:
	தான் கொத்திய ஆள் செத்துப் பிணத்தைச் சுடுகின்ற நெருப்பின் புகை தெரிகிறதா என மரத்திலேறி கொம்பேறி மூக்கன் பாம்பு பார்க்குமென்பது நம்பிக்கை. இக்காலத்தில் அப்பிராணிகளது திறமையைப் புறந்தள்ளி, அலட்சியமாகத், தகுதித் தேர்வெனும் உப்புக்குச் சப்பாணி அபத்தத்தை, நடப்பியலை இக் கவிதை பேசும் அரசியலும், "நாங்களென்றால் இளக்காரம் / எங்கள் பீ என்றால் பலகாரமா அய்யா" எனும் கேள்வியும் அற்புதம்.
	கடந்தகால ஞாபகம் (memory) என்ற ஒன்றிலே தான் மனிதனின் அகம் அதிகம் உயிர்த்திருக்கிறது. எதிர்காலத்தில் எல்லைகளற்ற Global Village-இல் எழுத்துவடிவமற்ற குறிகளான மொழியில் மட்டுமே கூட நாம் உரையாட நேரலாம். ஆனால் அப்போது கூட, நமது முப்பாட்டன், பாட்டன் எனத் தொடரும் மூதாதையரின் ஒரு சிறு கூறு நம் கைவிரல் நகத்தின் நுனியென நம்முடன் இருக்கும். நம்மில் தொக்கி நிற்கின்ற அச்சிறு துகள் ஒரு அணுவைப் பிளக்கின்ற அளவு வலிமை வாய்ந்தது - நமது வேர்களின் ஒரு பச்சயம் அதனில் ஒரு துளி உயிர்த்திருப்பதால்.
	இங்கு பொதியவெற்பனது மிக முக்கியமான பின்வரும் கூற்றை நினைவு கூர்கிறேன்:
	"தமிழ்க்கவிதையென்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மத்தியதரவர்க்கப் புத்திஜீவிகளின் மெளன வாசிப்பிற்கான அநுபூதியாக மட்டுமே, சூக்குமத்தின் சூட்சுமமாக மட்டுமே சுருங்கிக் கிடப்பதில் எமக்குச் சம்மதமில்லை. மட்டுமல்லாமல் பரந்துபட்ட மக்கள்திரள் மத்தியில் வெகுமக்களுக்கான பயன்கலைகளாகப் பரிணமிக்கும் மற்றைமையான கவிதைப்பாடுகளை அறவே புறமொதுக்கிப் போகும் அழகியலும் எமக்குப் பாசிசமாகவே படுகிறது. கலை நியாயங்களை கெளரவிக்கத் தயங்காத நாங்கள் சமூகதர்ம நியாயங்களைக் கணக்கிலெடுக்காத அழகியலாய் உறைந்து கிடக்கும் அரசியலை அம்பலப்படுத்திக் கவிதையையும் மக்கள் நாயகப்படுத்தவே விழைகின்றோம்.
	மெளன வாசிப்புக்கான அழகியல் வேண்டுமானால் புதிர்அழகியலாகவே இருந்து போகட்டும். ஆனால் இத்தகைய எதிர்மரபின் கலகக்குரலுக்கு ஊடான அழகியலை எதிர் அழகியல் எனலாம்."
	தவசிக்கருப்பசாமியின் அழிபசி கவிதை மக்கள் நாயகப் படுத்தப்படுவதன் அவசியத்தை உரத்துச் சொல்லும் தொகுப்பு. மகாபாரத, இராமாயணக் கதைகளின் அடிப்படையை உள்வாங்கிச் செழிப்பமாக வேரூன்றியிருக்கின்ற நமது கூத்துக்கலையின் கதைக் கூறுகளே தவசிக்கருப்பசாமியின் ஆடுகளம் - அதன் மொழியே அவரது கூராயுதம் - இலக்கிய மொழியில் சொல்வதானால் 'எதிர் அழகியல்'.
	இந்திய இலக்கிய மரபில் இவ்வகைக் கவிதைகள் இயல்பான வகைமையாய்க், காத்திரமான வடிவமாய் மராத்தி மொழியிலும், கன்னட மொழியிலும், ஏற்கனவே கையாளப்பட்டுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகளாய்த் தொடரும் கவிதை மரபில் நம் சித்தர்களிடமும் இத் தொகுப்பைப் போன்ற உணர்வு நிலையையும், வாக்கியப் பிரயோகங்களையும் காண முடியும். இதற்கு வலுவூட்டவும் பொதியவெற்பனது பின்வரும் கூற்றே கை கொடுக்கின்றது -
"கன்னட - மராத்தியத் தலித் கவிதைகளில் மட்டுமின்றித் திகம்பரகவிகளின் புரட்சிகரத் தெலுங்குக்கவி மரபிலும் இது காணப் கிடப்பதொன்றே. நள்ளிரவில் சுடுகாட்டில் ஒரு பாலியல் தொழிலாளியால் வெளியிடப்பட்ட திகம்பரகவிகளின் கவிதைக் தொகுதிக்கு தலைப்பென்ன தெரியுமா? ஆத்மாவின் சாமான்கள் என்பதே. ஆந்திரத்தில் வேத எதிர்ப்பு வீரசைவக் குரலாய் எதிரொலிக்கும் வேமனரின் குறீயீட்டுப் பாடல் ஒன்றையும் இங்கே காண்போம்: 
	"கள்ளைக் குடித்துப் பெரியோருடன்
	சீலையை அவிழ்த்துத் திரியும் சித்த வனிதை
	வேலை முடிந்தபின் மேலாடை கட்டுவாள்". 
	ஒரு தொன்மையான இனக்குழு பண்பாட்டு மரபின் வீர்யத்தை, அதன் கூத்து, நாட்டார் மரபான பாடல்கள், சொல்லாடல்கள் முதலியவற்றின் உதவியோடு, கவிதை எனும் ஊடகத்தின் மூலம் சமகால வாழ்வின் சிக்கல், அவஸ்தை, சாமான்யனது இருப்பு, கலைஞனது அடையாளம், இலக்கிய அரசியல், இன்னுமிருக்கின்ற வர்க்க பேதத்தின் எச்சம் - இப்படிப் பல தளங்களில் முன்னிறுத்துவதால் அழிபசி தமிழ்க்கவிதை உலகில் மிக முக்கியமான தொகுப்பு என்பேன்.
	
	இங்கு இப் பிரதி எப்படி ஒரு பின்காலனியப் பிரதியாக உருவெடுத்துள்ளது என்பதற்கான பின்னணியைக் கொஞ்சம் பார்க்கலாம்.
	70கள் வரை காமன்வெல்த் இலக்கியமாக இருந்தது, அதற்குப் பின், பின் காலனிய இலக்கியமாக முன்னிறுத்தப்படுகின்ற சூழலைச் சற்று கவனித்தால், பின் காலனிய மறுவாசிப்புகள் / ஆய்வுகளில், பிரிட்டிஷ் (அ) ஆங்கில இலக்கிய புனித இலக்கியத் தொகுப்புகளுக்கு, Cannon களுக்கு, அதீத முக்கியத்துவம், உருவாக்கப்பட்டதை அறிந்து கொள்ளலாம். பரந்திருந்த நவீன பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் காலனிய நாடுகளில் அவை Australia போன்ற Settler குடியமர்வு காலனிகளாகட்டும், அல்லது Sri Lanka, இந்தியா போன்ற ஆக்கிரமிக்கப்பட்ட காலனிகள் (Invaded Colonies) ஆகட்டும், ஆங்கில மொழியின் ஆதிக்கமானது வேரூன்றி இருந்தாலும் - ஆங்கிலம் மட்டுமே பின் காலனிய எழுத்திற்கான மொழி அல்ல என்பதை நாம் அறிவோம். ("While English is not the only language of post - colonial writing - in fact the incorporation of a variety of tongues is vital to post colonial literatures"). ஸ்பேய்ன், ப்ரான்ஸ், போர்ட்சுகல் ஆகிய நாடுகளின் முந்தைய காலனி நாடுகள், எதிர்ப்பின் அடையாளமாக தம் மொழிகளின் hybrid வடிவங்களையும் பயன் படுத்தியதை நினைவு கூறல் வேண்டும். சின்னுவா அச்சுபே தன்னுடைய Home and Exile எனும் புத்தகத்தில் தன் பள்ளி நாட்களைப் பற்றிச் சொல்கிறார். "எங்களுக்கான வார்த்தைகள் Igbo பொருட்களைப் பற்றியதல்ல; அவை வெகுதூர இடங்களையும், மனிதர்களையும் பற்றியது. அவற்றின் குற்றம் சாட்டும் தொனி வலியை உண்டாக்கியது. Igbo குழுவின் எதுவும் எங்களின் வாழ்க்கையில் இருந்து மறைந்து விடவில்லை. அவை இருந்தாலும், புறக்கணிக்கப்பட்டன," 
	காலனி ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடுகளின் தற்கால contemporary இலக்கியத்தைத் திறனோக்கும் பொழுது, பிரிட்டிஷ் பேரரசின் வரலாறு Imperial history - எனச் சொல்லப்படுகின்ற, பிரிட்டிஷ் காலனியாதிக்க வரலாற்றிலிருந்து அவற்றை பிரித்து எடுக்க முடியாது. Shiva Naipaul, என்கின்ற டிரினாட் எழுத்தாளர் குறிப்பிடுவது போல "எந்த ஒரு இலக்கியமும் காற்றில் மிதக்கும் ஒன்றல்ல, எந்த ஒரு இலக்கியமும் அது, வேர் கொண்டிருக்கும் ஒரு குறிப்பான வாழ்க்கைச் சூழலிலிருந்தே தனது ஆற்றலைப் பெறுகின்றது. ("No literature is free floating. Its vitality springs, initially, from its' rootedness in a specific type of world)".	
	அவ்வகையில் அழிபசி இரண்டு விதமான ஆதிக்கத்தை எதிர்க்கின்ற ஒரு பின்காலனியப்பிரதி 
	1. ஒரு பொது மொழி எனப்படுகின்ற (தனது மண்சார்ந்த வட்டார வழக்கு, தொன்மம், நம்பிக்கை சொலவடை, நாட்டார் பாரம்பர்யம் இவற்றை வலுவிலே தவிர்த்து) பிரதேசத் தன்மையின் அடையாளமற்ற கவனத்துடன் எழுதப்பட்டு, அவையே நவீன கவிதைகள் எனக் கொண்டாடப்படுகின்ற மைய நீரோட்டத்திற்கு எதிரான குரல்.
	2. நுண்கலைகள் எனப் பிரதானப்படுத்தப்படுகின்ற மேட்டுக் குடி சார் கலைகளுக்கு எதிராக, தனது கூத்து மரபின் தொன்மம் சார்ந்த ஒரு வகை கவிதை மரபினை, அதன் பிரதேச மொழித் தன்மையுடன் முன்னெடுக்கின்ற கலைஞனது குரல்.
	சின்னுவா அச்சுபே ஆங்கிலத்தில் இனி எழுத மாட்டேன் என அறிவித்துத் தனது இனக்குழு மொழிக்குத் திரும்புவதை உலகளாவிய அறிவுஜீவிகள் "It is a political statement" என்று கொண்டாடுகிறார்கள். ஆனால் எங்களது தவசிக்கருப்பசாமி முழுவதும் அவரது இனக்குழு வாழ்வின் ஆதி வேர்களைப் பற்றி, அதன் கூறுகளான வாய்வழிப் பாடல்கள், செவி வழிக் கதைகள், குறுகத் தெரிக்கும் சொலவடைகளில் ஒரு கவிதைத் தொகுப்பு எழுதினால், இது வெறும் மொழி விளையாட்டு, தகவல்களின் சொல்லடுக்கு, வெறும் தொன்மத்தின் நினைவுகூறல், அல்லது நாட்டார் மரபுக் கவிதை என்று முத்திரையிட்டு பீப்பாய்க்குள் பீமனை அடைத்து, "இது ஒரு பொது மொழி அல்ல", "நுட்பமான கவித்துவத்தின் எக் கூறுமற்றது" என்றெல்லாம் சக்கரவியூகமும் சுற்றிக் கட்டி, விமர்சனக் கடலுக்கடியில் போட்டு விடுவதா என்ன?
	காலனிய ஆதிக்கத்தின் மிக முக்கியமான அடிப்படை marker - மொழியாகும். பிரிட்டிஷ் பேரரசின் காலனியப்படுத்துதலில் ஆங்கில மொழியின் பங்கே பிரதானம். பூர்வகுடியினரை, நாகரிகப் படுத்துதல் எனும் பெயரில், அவர்தம் ஆதிமொழியினைப் பேச விடாது தடுப்பதுடன், முழுதுமான ஆங்கில மொழி பேசுபவர்களாக மாற்றுவதன் மூலம், அவர் தம் மூலப்பண்பாட்டை வேரறுக்கும் செயலை காலனியாதிக்கம் செய்தது. அவ்வகையில் தம்முடைய இனக்குழு மொழியில் கவிதை எழுதுவதென்பது மையமான பொதுத் தமிழ் மொழிப் பிரயோகத்தின் தனித்த ஆதிக்கத்திற்கு எதிரானது தானே?
	Jack Davis இன் நாடகத்தில் வருகின்ற Doll எனும் கதாபாத்திரம் சொல்கிறது "wetjalas" (white) fellas (fellows - in Australian context) 'killed her language'.
	காலனியத்தின் இந்த ஆதிக்கத்தினைப் பின் காலனிய படைப்பாளிகள், மிகக் குறிப்பாகக் கவிஞர்கள் - எதிர்ப்பதற்கான, to resist - குறியீடுகளாய் இரண்டு வகைகளைக் கையாண்டார்கள்.
	(a)	appropriation - the act of taking (something which belongs to somebody else especially without permission)
	(b)	abrogation to refuse the authority
இங்கு Helen Gilbert இன் விளக்கம் சற்று தெளிவு தரலாம்.
	"...an imperial language alters when its" speakers are expressed to other languages. Indigenous works that are more descriptive or accurate than any imposed terms become 'adopted' into English and its grammatical structures are sometimes interested into those of other languages. Some colonised subjects abrogate - or refuse to privilege - the imposed language, at least in its more formal registers, in order to regain a speaking position, that is not determined by the Coloniser. Other colonised subjects appropriate words or forms of English and employ them to a different purpose in an indigenous or a creolised language, again to make the language articulate a different authority
	...These strategies are just a few of the methods by which colonised subjects decentre the European hegemonic powers embedded in an imposed language" 
இதன் தமிழ்ச்சுருக்கம் - ஒரு ஆதிக்க மொழியை 'abrogate' 'appropriate' எனும் இரண்டு முக்கியமான உத்திகள் மூலம் பூர்வகுடிகளின் மொழி எதிர்க்கின்றது. 
	'abrogate' என்றால் - நிறுவப்பட்ட ஆதிக்க மொழியைத் தனது பிரதேச அடையாளமுடைய சொல்லாடல்களால் (registers) கொட்டிக் கவிழ்ப்பது.
	'appropriate' என்றால் - ஆதிக்க மொழியோடு இடையிடையே தனது இனக்குழு மொழியும் கலந்த நடையில் படைப்பது - இதனைக் Creole எனவும் Pidgin எனவும் வகைப்படுத்துவர்.
	தவசிக்கருப்பசாமி தனது அழிபசியில் மிக முக்கியமாகக் கையாண்டுள்ள உத்தி மேற்சொன்ன appropriation & abrogation.
	கவிதை எழுதப்படுவதற்கான ஒரு மொழியைத் தீர்மானிப்பது என்பதே ஒரு அரசியல் செயல்தான் - தவசிக்கருப்பசாமி தனது தனிப்பட்ட பிரதேச மொழியில் கவிதை எழுதுவதைப்போல புகழ்பெற்ற நூகி வா தியாங்கோ, மிகச் சமீபமாக, ஆங்கிலத்தில் எழுத மறுத்து, Gikuyu மொழியில் தன் நாடகம், நாவல், விமர்சனம் முதலியவற்றை எழுத முனைந்திருக்கிறார் - அவை Kenya மக்களுக்கானவை என்பதால்.
	தென் ஆப்பிரிக்காவின் Natal Workers Theatre எனும் நாடகக் குழு "Zulu" மொழியில் தன் நாடகங்களை நிகழ்த்துவதும் இப்படித்தான்.
	Imperial standard எனப்படுகின்ற ஆங்கில மொழியின் ஆளுமையினை உடைத்து, காலனிய நாடுகளின் மக்களின் மொழியை, அதனூடாகப் புகுத்தி கையாள்வது என்பதனை காலனிய அதிகாரத்தை மறுதளிக்கின்ற செயலாகவே பின் காலனிய நாடக ஆசிரியர்கள் முன்னெடுத்தார்கள். Jack Davis இன் Nyrongah கதாபாத்திரங்கள் "wetjala" என பிரயோகிப்பது அப்படியான மறுதலிப்புதான். அது ஒரு (பூர்வகுடி மக்களது) வார்த்தையல்ல. ஆங்கில வார்த்தைகளான white & fellow வை இணைத்து உருவாக்கப்பட்டது. (வெள்ளை ஆஸ்திரேலியர்களால் 'fella' என உச்சரிக்கப்படுவது). அவ்வார்த்தை ஒரு derogatory sense இல் இங்கு உபயோகப்படுத்தப்படுவதைக் காணலாம்.
	இதனையே ஆங்கிலத்தில் - subverting its authority என்கிறார்கள். இது பின்காலனிய நாடக ஆசிரியர்களால் ஒரு அரசியல் உத்தியாகவும் பயன்படுத்தப்படுகின்றது. 
	இங்கு 'Creole' and 'Pidgin' என்பவற்றைப் பற்றிப் புரிந்து கொள்வது அவசியம்.
	(a)	ஒரு ஆதிக்க மொழியுடன், பூர்வகுடியினரின் மொழியும் கலக்கையில் பிறப்பது - Pidgin.
	(linguistic forms arisen from the blending of one imperial language with an indigenous language)
	(b)	ஒன்றிற்கும் மேற்பட்ட பல மூல மொழிகளின் கலவை - Creole
	- the input of several source languages - Creole.
இங்கே Bill Ashcroft இன் கூற்றை நினைவு கூர்வது மிக முக்கியம்: 
	"This variable use of language - referred to as 'code Switching' - Can be an effective means of abrogating the imperial standard in favour of a culturally significant discourse. Helen Gilbert இதனையே 'to make it 'speak' a powerful form of resistance to hegemonic norms' என்கிறார். Pidgin ஐ பற்றிச் சொல்லும்பொழுது அவர், "English becomes further decentred in favour of the more culturally expressive and locally accessible Pidgin" என்கிறார்.
	இந்த Subverting its authority எனும் உத்தியைக் கவிதையில், இதுகாறும் கையாளப்பட்டு வந்த மைய மொழிப் பிரயோகத்திற்கு எதிராகக் கையாண்டு, அதனைப் பூர்வகுடியின் அரசியலாகக் கலையின் வழி முன்னெடுப்பது அழிபசி தொகுப்பு.
	"ஆப்ரிக்கக் கவிதைகளைத் தனித்திருந்தது வாசிப்பது கஷ்டம் அவை உரத்து ஆவேசமாக அலறப்பட வேண்டியவை. பறையொலி அவர்கள் வாழ்க்கையின் பேசும் அங்கம். ஆட்டமும் பாட்டமும், பேச்சும் பறையொலியுடனும் கூடியது. தூரக் காணும் கிராமத்திலிருந்து வரும் பறையொலி என்ன சொல்கிறது என்பது இந்த கிராமத்திற்குத் தெரியும். அவன் விடுதலை முழக்கம் பறையொலியாய்ப் பிறந்தது. அவன் ரெளத்திரமும் கவிதையும் பறையொலியில் ஒன்றாகின்றன. அந்த உரத்த ஒலி அவன் வாழ்க்கையோடும் பறையோடும் உறவு கொண்டது அவன் கோபத்தோடும்" எனச் சித்திரிப்பார் இன்குலாப். 
வேசங்கட்டிக் குக்கவைத்துக் குந்தி குச்சி பிடிப்பவனின் பாட்டைச் சொல்லும்,
	"வசூலான பணத்தை சொக்குப் போட்டுத் தோற்றவன்
	காகம் கொக்கு கருங்கூவி மயில்ராவணனின் 
	மிஞ்சினால் ராவணன் மீறினால் கும்பகர்ணன்
	விடிந்தால் விபீஷணன்"
எனும் கவிதையைப் பாருங்கள் -
	குட்டிநாயும் குழந்தைப்பிள்ளையும் இட்டக்கையை பார்க்க 
	அன்னமுண்டு ஆறுநாள் சோறுண்டு மூணுநாள்
	தின்ன தின்ன கேக்கிறது பேறுகண்ட வயிறு
	தெவிட்டாபானம் பசியடக்கவில்லை - ஊருப்பாட்டுக்கு பால்மாறி
	சந்தைகோபாலத்திற்கு போன மாமியாள் சத்திரம் திரும்பவில்லை
	தோல் புதுமைக் கூத்துக்கு 
	சீட்டுக்கொடுத்து டெண்டு நிறைந்திருக்கிறது
	வசூலான பணத்தை சொக்குப்போட்டுத் தோற்றவன்
	காகம் கொக்கு கருங்கூவி மயில்ராவணன்
	மிஞ்சினால் ராவணன் மீறினால் கும்பகர்ணன்
	விடிந்தால்தான் விபீஷணன்
	பாகபிரிவினையில் மூக்கு போன பதுமைகள்
	விசைக்கையிற்றில் கால்பரப்பி விகாரம் காட்ட
	சூர்ப்பனகை கர்வப்பங்கமா சீதை வனவாசமா
	இந்த குழிக்கு துடியான அலங்காரந்தான் எடுக்கும்
	கல்விழுமுந்தி மத்தளம் தட்ட வேண்டும்
	குக்கவைத்துக் குந்தி குச்சிப் பிடித்தேன்
	அச்சாரத்திக்கொரு தூமைக்கட்டி அடியில் விழுகிறது 
	பாடூன்றினால்தானே களிறு.
	பேறுகால முடிந்த சூட்டோடு கூத்துக் கட்டும் பெண்ணின் தூமைக்கட்டி சொல்வது எதோ ஒரு குக்கிராமத்தின் இராக்கூத்தை மட்டுமா? மாதாந்திர அவஸ்தை சமயங்களில் சொல்லொண்ணாத் துயரமாகும் கணங்களை வலியுடன் பிழைப்பிற்காகக் கடக்கும் இந்த 21ம் நூற்றாண்டின் அலுவலகம் செல்கின்ற பெண்ணின் நிலையையும் தானே? ஆனால் பின்னவளை விட முன்னவளின் பேறுகண்ட வயிற்றின் துயரம், பாடும் கூடுதல். இந்தக் கூத்துக் கலையின் மீதான பிடிப்பும், காதலுமே அது. வேறு தொழிலுக்குத் தாவத் தெரியாத பேதமை, சென்றாலும் ஒட்டாத நிர்க்கதி முன்னவளை மூதேவி ஆக்குகின்றது.
	"நீங்கள் உங்களை மேற்கு உலகத்தவராக அடையாளப் படுத்திக்கொள்ளவில்லையென்றால், ஒரு குறிப்பிட்ட பண்பாட்டின் அங்கமாக இருந்தும் அதன் அதிகாரத்துவக் குரல்களினால் ஒதுக்கப்படுபவராக இருந்தால், உள்ளே இருந்தும் அன்னியராக உணர்ந்தால், பின்காலனியத்துவம் உங்களுக்கு உலகை வேறாக அணுகுவதற்கான வழியைக் காட்டுகிறது. உங்களது அக்கறைகளைப் பின்னுக்குத் தள்ளாமல், முதன்மையாக முன்வைக்கும் ஒரு மொழியையும், அரசியலையும் வழங்குகிறது" என்கிறார் யங்.
	காலனிய நாடுகளின் பிரஜைகளை நாகரிகமாக்குவதற்கு "குறிப்பான, பண்பாட்டுச் சூழல்களுக்கு ஏற்பட தகவலமைப்பது குறித்த எந்தவிதமான அக்கறைகளுமின்றி, பிரிட்டிஷ் மதிப்பீடுகளையும் ரசனைகளையும் பழங்குடி இன இளைஞர்களிடத்தில் வலுவில் விதைப்பதே நாகரீகமயப்படுத்தும் பணியாக" இருந்தது. ("'to civilize' native students by inculcating in them British tastes and values regardless of the exigencies of the local contexts"). ஆங்கில இலக்கியப்போதனை என்பது காலனிய நாடுகளின் வகுப்பறைகளில் பிரதான பணியாக இருந்தது. நினைத்துப் பார்த்தால் - Daffodil என்ற மலர் ஒன்றைப் பார்த்திராத, அதன் தாவரவியல் குணத்தைச் சற்றும் அறிந்திராத ஒரு கென்ய, இந்திய, வெண்ட் இன்டீஸ் சிறுவன் / சிறுமிக்கு "Wordsworth இன் Daffodil மவர்களைப் பற்றிய கவிதை எத்தகைய அனுபவத்தைத் தரும்?" George Ryge தன்னுடைய "The ecstasy of Rita Joe (1967 இல் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம்) (The ecstasy of Rita Joe and other plays, Toronto : New press) என்கிற நாடகத்தில் Rita Joe என்கிற கனேடிய பூர்வகுடிப் பெண், எவ்வாறு தனது ஆசிரியர் மனப்பாடம் செய்யச் மனனிக்கச் சொன்ன கீழ்க்கண்ட வரிகள், தனக்கு அர்த்தமற்றதாகச் தெரிந்தன எனச் சொல்கிறார். 
	"The lines the teacher quotes and expects to hear in echo blur into meaninglessness as the poetry and social lessons intermingle when Rita Joe perceives the teacher to order, "Say after me! "I wandered lovely as a cloud, that floats on high o'er vales and hills... when all at once I saw a crowd... a melting pot". 
	அகவழி உள்ளொளி, ஞானம், தரிசனம் என்றெல்லாம் கவிதையின் ஒருவகைக் கூறுகளை மட்டுமே ஒளிவட்டம் போட்டுப் பிரதானப்படுத்திய தமிழ் கவிதை விமர்சனப் பிதாமகன்களுக்கு இந்தக் கனேடியப் பூர்வகுடிப் பெண்ணின் பதிலே போதுமானது.
	அந்த Rita Joe விற்கு - உள்ளே இருந்தும், அன்னியராக உணர்ந்தவர்களுக்கு, பின் காலனியத்துவம், Yung சொன்னதுபோல "உலகை வேறாக அணுகுவதற்கான வழியையும், அவர்தம் அக்கறைகளைப் பின்னுக்குத் தள்ளாமல், முதன்மையாய் முன்வைக்கும் ஒரு மொழியையும், அரசியலையும்" வழங்குகிறது. 
	அவ்வகைமையில் உள்ளே இருந்தும் அன்னியராக உணர்ந்த, உணர்கின்ற திருநங்கைகளுக்கு, வேசை எனப்படுகின்ற கூத்தியார்களுக்கு, தாலி எனும் உரிமை தரப்படாத வைப்பாட்டிகளுக்கு ஒரு மொழியையும், அரசியலையும் முதன்முறையாக இந்த அழிபசி வழங்குகின்றது. இதற்கு முன்பாக நானறிந்த அளவில் மேற்சொன்னவர்களுக்காக, இந்த அளவிற்கு அவர்தம் அரசியலைச் சொன்ன கவிதைகள் வேறெதுவுமில்லை. மையமான ஒரு பொதுமொழியின் ஆதிக்கத்திலிருந்து விலகி, விளிம்பு நிலையிலுள்ள மற்றமைகாக்க (Other) எதிர் உரையாடலை இவ்வாறு முன்வைப்பது ஒரு இலக்கிய வகைமை என்பதை Helen Tiffin எனும் விமர்சகர் நிறுவுகின்றார். தனது மரபான கூத்தின் செயல்முறை உத்திகளை, தனித்துவமான மொழியாக மடைமாற்றம் செய்து, இதுகாறும் ஸ்தாபிக்கப் பட்டிருக்கின்ற "பொது மொழியொன்றைப் பேசுகின்ற உலகளாவிய தன்மையுடைய கவிதைப் போக்கு" என்கிற ஒன்றைக் கேள்விக்குட்படுத்துகிறார் தவசிக்கருப்பசாமி.
	Helen Tiffin இதனை 'a Canonical Counter - discourse' என்கிறார். இந்த 'counter - discourse' எதிர் உரையாடல் என்பது எவ்வாறு அதிகார மையங்களைக் கட்டுடைத்து, ஒரு elaborate, on the story localized enunciation ஐ (பிராந்திய) உருவாக்குகின்றது என்பதை நாம் பின்வரும் தவசிக்கருப்புகாமியின் கவிதைகள் சிலவற்றில் பார்க்கலாம். 
	பந்து ஸ்தனங்கள் தானெனினும்
	படல்களுக்கும் கண்கள் முகிழ்க்கும்
	சிக்குமுடி வகிடெடுக்கையில் மொய்க்குமவை
	அறியாவென் கும்பிவாட்டம்
	வந்த கூத்தாடிகள் வாசலில் தேவுடுகாக்க
	கட்டுச்சேவல் கறிச்சாறு வார்த்து உள்ளே நடக்கும் செல்லவிருந்து
	பத்துச் சோற்றுப்பருக்கையும் பருப்புக்குழம்பும் 
	அன்னப்போஜன மிட்டக்கை
	ஊக்கியில் வைத்து உரூவா குத்தி
	காம்பைநிமிண்டி சாடை காட்டும்
	மண்புழுவிற்கு இரையாகிமாயும் மச்சமல்ல
	யான்
	மகா சக்தி
	வேசத்தோடுப் போய் நலிக்கமுடியாது
	விடிந்தால் அவன் வரமாட்டான்.
	பட்ட கடன்தீர்க்க குத்தடவுப் பிடிப்பேன்
	வாரி மண் உள்ளிட்டு உள்ளிட்டுச் சிரிப்பான் சகபாடி

	முந்திவிரிக்காத குத்தம் அர்ச்சுனன் வேடம்
	ஓடவிட்டு கல்லெறிவார் அண்ணாவியார்
	நம்பி உடைகளைந்து குட்டையில் நீராடினால்
	பிட்டத்தை போட்டோவெடுக்கிறான் சிறுப்பத்திரிக்கைகாரன்
	சோமாரம் செவ்வாய் புதன் செவ்வி நேர்காணல் சந்திப்பு
	நோண்டி துங்கெடுத்தவர்களிடம் அந்தரங்கம் புட்டுவைத்து
	போனால் போகட்டும் இன்றார்முறை என்றேன்
	ஒருவன் ஆகாசத்தைப்பார்க்கிறான் ஒருவன் பூமியை.
	பிள்ளைப்பாசம் காமமாய் பெருகி கரமேந்த
	காது மூக்கு கொங்கை கொண்டை
	முன்னும் பின்னும் கொய்துச் சூறையிட்டீர் 
	பொத்த புங்கங்காய் தானுமின்றி முண்டக்கட்டையாய்
	வெக்கங்கெட்டலைகிறது அற்றாள் அழிபசி
	நடைக்கொரு சீலைமாற்றி நாழிக்கொரு ஆபரணஞ்சூட்டி
	இறுமாப்புடன் நடமிடும் உனதாசைப் பெருமிதம்
	அங்கம் அறுபத்தி நான்கும் வங்கம் திறந்து
	தானாய் சூல்கொள்ளுமொரு வன்மம்
	பெறுவேனொரு திருநங்கையை - பெற்று
	வளர்ப்பேன் நின் வஞ்சகஞ்சொல்லி
	அயாக்கிராமா சிரம் அறுப்பாள் சிகண்டி
	கொதிப்படங்க உதிரங்குடிப்போம் யாம்.
	"கண்ணீர்த்துளிகளில் இருந்து முத்தத்திற்கும், காதலில் இருந்து அரசியலுக்கும், இயற்கையில் இருந்து தெருக்களுக்கும், ஏகாந்தத்திலிருந்து மக்கள் திரளுக்கும், குறியீட்டு மொழியிலிருந்து, வாய்மொழிக்கும், எழுத்துக் கவிதையிலிருந்து உரைமுழக்கக் கவிதைக்கும், கவின்கலையில் இருந்து பயன்கலைக்கும் பரிணமித்ததே 'பாட்டுத் திறத்தோலே வையம் பாலிக்கும்' பாப்லோ நெரூடாவின் கவிதைப் பயணம்" எனச் சுட்டுவார் பொதியவெற்பன்.
	தனிமனிதக் கூற்றிலிருந்து இனக்குழு திரளுக்கும், குறியீட்டு மொழியிலிருந்து கூத்து மொழிக்கும், எழுத்துக் கவிதையிலிருந்து "பொத்த புங்கங்காய் தானுமின்றி முண்டக்கட்டையாய் வெக்கங்கெட்டலைகிறது அற்றாள் அழிபசி" என சனங்களின் மொழிக் கவிதைக்கும், "வரிசைக் கூத்துக்குப் போன கப்பத்தரசன் மண்டலங்கழித்து அந்தப்புரம் வந்திருக்கின்றான்" என கவின் கலையிலிருந்து பயன்கலைக்கும் பயணிப்பது தவசிக்கருப்பசாமியின் கவிதைகள்.
	
	ஒரு கூத்தியாளின் 'பொச கெட்ட பொழப்பைச்" சொல்லும் பின்வரும் கவிதையைப் பாருங்கள் - 
	மூத்தகுடி பிள்ளை செல்லப்பிள்ளை
	இளையகுடி பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை
	கூத்தியார் சினையானால் கலி தாங்குமா
	மைக்கண்ணிக்கு மசக்கை மாப்பிள்ளைக்கு அவஸ்தை
	மாத்திரைக்கு கரையவில்லை
	வாரிக்கொடுத்தாலும் காரியமாகாது
	மருத்துவர் ரொம்போ நல்லவர்
	மேலே மொழுக்கு உள்ளே லொடக்கு
	பாத்தியப்பட்டவன் தொடர்பெல்லைக்கு அப்பாலிருக்கிறான்
	எருக்கங் குச்சியோ பொவிலைக்குச்சியோ
	உசுர எடுக்காமலா போய்விடும்.
	புரையோடிப் போன அபாயமான கருக்கலைப்பு முறை, அதன் பலிஆடான கூத்தியார்களின் நிலை, இவற்றைத் "தொடர்பெல்லைக்கு அப்பாலிருக்கின்றான்" எனச் சமகாலச் சிக்கலுடன் இணைத்துச் சொல்லும் முறை - இவற்றால் மிகச் செறிவான பெண்ணியக் கவிதை என இதனைச் சுட்டலாம்.
	"கவிதையில் 'சர்வதேச பாணி' என்ற ஒன்று கிடையாது. கவிதையைப் படைக்கும் மூலப்பொருள் மொழியாக இருக்கும் வரையிலும், கலைகளிலேயே அதிகமாக பிரதேசத் தன்மை கொண்டது கவிதையாகத்தான் இருக்க முடியும். "மொழிபெயர்க்க இயலாதது எதுவோ அதுவே கவிதை" என்று வரையறை செய்யும் அளவுக்கு பிரதேசத் தன்மை கொண்டது கவிதை இதனை பிற நவீனக் தமிழ்க்கவிஞர்களும் புரிந்து கொள்வார்களெனில் இன்றயை தமிழக்கவிதை உள்ளீடற்ற, போலியான, ஒரு கானல் மண்ணில் வேர்கொள்ள முயன்று, துவண்டு போகாமல் தப்பிக்க முடியும். நமக்குள்ளேயே தோண்டிச் சென்று நமக்குள் இருக்கும் சிறப்பான பண்புகளை, வெளிப்பாடுகளை சர்வதேச கவிதை உலகிற்கு தமிழின் பரிசாகக் கொடுக்க நம்மாலும் பெறமுடியும்," எனும் இந்திரன் கூற்று சுட்டும் இந்தத் திசையில் தான் பயணப்படுகிறது தவசிக்கருப்பசாமியின் கவிதை.
	எனக்கென்ன ராசாத்தி தங்கமாயிருக்கிறேன்
	கோவணம் அவிழ்த்த அப்பனுக்குத்தான் நேரஞ் சரியில்லை
	கோடாலிக்காம்பு குலத்தையழிக்க
	ஊன்றக்கொடுத்த கோல் உச்சியைப் பிளக்கிறது
	முக்கிப் பெற்ற ஆத்தாளுக்கு
	போகும் தடத்தில் பொய்க்குழி
	நடக்கும் வழிதனில் நச்சி முள்
	குளிக்கும் குளத்தில் கூர்வசி
	உண்கின்ற சோற்றில் நஞ்சு
	ஒட்டிப்பிறந்த தட்டைக் காய்க்கு
	கண்டுபேச காரியம் - எதிரில் வர அச்சம்
	சொந்தம் பந்தம் - அந்நி அசல்
	கப்பலேறிய மானம் தரையிறங்கவில்லை	
	முந்தாநேத்து நடுச்சாமம் இன்னொருத்தரம் என்றதற்கு
	கொழுநன் காரி உமிழ்ந்த எச்சில்
	மொகரக்கட்டையில் இன்னும் மணத்துக்கிடக்கிறது
	எனக்கென்ன ராசாத்தி தங்கமாயிருக்கிறேன்.
மேற்சொன்ன அங்கதக் கவிதையை எப்படி மொழிபெயர்ப்பீர்கள்? இது முழுக்க, முழுக்க தமிழ் உணர்திறன், குறிப்பாக நாட்டார் வழி தமிழ் உணர்திறன் (localised Tamil Sensibility) ஐ அடிப்படையாகக் கொண்ட கவிதை. மொழிபெயர்த்தால் அடிக்குறிப்புகளுக்கென்றே தனிப்பக்கமொதுக்க வேண்டும். சாம்பலென்பது நெருப்பின் மொழிபெயர்ப்பாகுமா? எனக் கேட்ட George Steiner இன் கேள்வியை உறுதிப்படுத்தும் வண்ணம் அச்சு அசலான பிரதேசக் கவிதையிது. கிராமப்புற பெண்களின் புழங்கு வெளியில் பாலியல் வேட்கை, துய்த்தல் குறித்த பகிர்தல்கள் வெகு சாதாரணமாக, இயல்பாகப் பேசப்படுவதும், அது "எச்சில் மணத்துடன்" இங்கு பதியப்படுவதும் நுட்பம். இங்கு மிக முக்கியம் - இந்த எச்சில், தற்காலத்து கணினித்துறைப் பெண்களுக்கும், நகர்புறத்து, மேல்தட்டு வர்கத்துப் பெண்களுக்கும் கூட சமயங்களில் கிடைப்பதுதான்.
	நோபெல் பரிசு பெற்ற, 77 வயது ஐ.பி. சிங்கரிடம் "நீங்கள் ஏன் எப்போதும் உங்களது சின்னஞ்சிறு வட்டமான யூத மக்களைப் பற்றி மட்டுமே எழுதுகிறீர்கள்?" என்று கேட்கப்பட்டபோது அவர் சொன்னார்:
	"உண்மையான கதாபாத்திரங்கள் உண்மையான மக்களிடமிருந்தே பிறக்கின்றன. உண்மையான மக்களுக்கு ஆழமான வேர் உண்டு. வெறுமனே ஒரு பொதுவான மனிதனைப் பற்றி ஒரு நாவல் எழுதிவிட முடியாது.அதற்காக தனக்கென ஒரு முகவரி உள்ள ஓர் ஆணையோ, பெண்ணையோ தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால் தான், உண்மையான எழுத்தாளர்கள் தங்களுக்குச் சொந்தமான சூழலிலேயே, தங்களுக்குச் சொந்தமான மூலையிலேயே தங்கிவிடுகிறார்கள்". 
	யாராகிலும் இங்கு தவசிக்கருப்பசாமியிடம் "ஏன் எப்போதும் உங்களது சினன்ஞ்சிறு வட்டமான கூத்துக் களம், நாட்டார் மரபு, தொன்மக் கூறுகள், சொலவடை போன்றதொரு மொழிநடைப் பிரயோகம்" எனக்கேட்டால், மேற்சொன்ன கூற்றைச் சுட்டலாம். சரி, தன் வாக்கைத் தன் மண்ணிலிருந்து, தனது கூத்தின் பெருங்காப்பியக் கதை மாந்தர்களிடமிருந்து எடுத்திருப்பதால் மட்டுமா தவசிக்கருப்பசாமி ஒரு கவிஞன்? இந்த அழிபசி ஒரு உண்மையான இலக்கியப் பிரதி?
	அதில் சமகாலத்தின் வாழ்வனுபவச் கீற்றொன்றின் மெய்மை சுடர்கிறதல்லவா - அதுவே தவசிக்கருப்பசாமியைக் கவியாகவும், அழிபசியை ஒரு செறிவான சமகால இலக்கியப் பிரதியாகவும் கொண்டாட வைக்கின்றது. உதாரணத்திற்குப் பின்வரும் கவிதை - 
	மெட்டா பிக்சன் ஆட்டோ ரைட்டிங்
	பொடிப் பையனெல்லாம் பீற்றிக்கொள்கிறானே
	நீங்களொரு நாவல் எழுதினாலென்ன
	ஒன்றிரண்டு ஆர்வக்கோளாறுகள் ஏதோ கிறுக்குகின்றன
	கவிதைக்குப்பைகளை யார் சீந்துகிறார்கள்
	உலகச்செம்மை சிறுகதைக்கு காணாது - மட்டுமல்ல
	ஆயிரம் ஆண்டன் செக்காவ்க்கள் மனமுவந்து
	வந்துங்கள் சிரசின் மீதிறங்குவார்களா
	நம்மாட்கள் அசோகமித்திரனும் அ.முத்துலிங்கமும்
	இன்னும் மண்டையைப் போட்டுத் தொலையவில்லை
	சொல் புதிது - களம் புதிது - விஸ்தீரமானது
	பல திறப்புக்களை கொண்டது
	ஆடலாம் பாடலாம் புகுந்தங்கு விளையாடலாம்
	பாத்திரவார்ப்பு காத்திரம் - படிமமோ அடி வண்டல்
	எடிட்டிங் - கட்டிங் - ஸ்வெட்டிங்
	உவத்தல் காய்தல் நேர்மையான விமர்சனம் 
	பதிப்பாளர் பார்த்துக் கொள்வார்
	காப்புரிமை ஐயத்திற்கு இடமில்லை
	கேளாமலே நிறையற்ற அளப்பார்கள்
	தத்துவ விசாரம் புள்ளியாகவேணும் கோந்திருக்க நலம்
	வரலாறு நம்போ நம்போ முக்கிலியம் பிரோ 
	அதுசரி - ஆனை ரத்தி போடுகிறதென்று குதிரையும்
	ரத்தி போட்டால் சூத்து கிழிந்து விடாதா சின்ராசு.
	"பதிப்பாளர் பார்த்துக் கொள்வார் 
	காப்புரிமை ஐயத்திற்கு இடமில்லை"
என உள்ளபடியே இலக்கிய உலகின் பதிப்புச் சூழலின் அரசியலைப் புட்டு வைக்கின்ற கவிதையிது. இதில் 'முக்கியம்' என்பதை 'முக்கிலியம்' எனவும், "நிறைய்ய, ரொம்ப" என்பதனை 'நம்போ, நம்போ' எனவும் கவிழ்ப்பதன் மூலம் (techniques of 'approrpiation & abrogation) ஒரு எதிர் அழகியல், பகடித் தொனி, நிறைவாகக் "கானமயிலாடக்கண்டிருந்த வான்கோழி" எனும் நகாசு மொழியைச் சாக்கடையில் போட்டுவிட்டு, மணக்க, மணக்க ஆனை லத்தியைக் கையிலெடுக்கிறார். புதிதான சிந்தனையைச், சமகால இலக்கியச் சூழலின் தகிடுதத்தங்களை, பழமொழி எனப்படுகின்ற சொலவடையின் துணைகொண்டு முத்தாய்ப்பிடுவது ஒரு கைதேர்ந்த உத்தியும் கூட. சவாசு தவசிக்கருப்பசாமி!
	வேர்களை விட்டுவிடுங்கள் - எதைத்தான் இந்த 21ம் நூற்றாண்டு மனிதன் தேடுகின்றான்? 'எதை' என்பதைவிட 'இலக்கற்ற தேடல்' ஒன்றே அவனுக்குப் பிரதானமாயிருக்கிறது. அந்த 'இலக்கற்ற தேடலையும்' ஒரு இலக்கியத்தின் முக்கியமானதொரு குணாம்சமாக, சிதைவினையும் ஒரு பொருட்படுத்தக் கூடிய கூறாகவும் நாம் அங்கீகரித்தாக வேண்டும்தான். ஒற்றைத்தன்மை விடுத்து பன்மைத்தன்மையையும் உயர்த்திப் பிடிக்கின்ற பின் நவீனத்துவப் பார்வையின் படி பார்த்தாலும் கூட, (விருது என்றால் அது 'ஆஸ்கார்' தான், நாடு என்றால் அது 'அமெரிக்கா' தான் என்பதை எவ்வாறு நாம் மறுதளிப்போமோ அதே போல்) இலக்கியத்திற்கு 'உலகளாவிய பார்வை' அவசியம் தான் - ஆனால் அப்படைப்பின் மூலத்தில் நம் வாழ்வனுபவத்தின் ஒரு சிறு கூறு - ஒற்றைத் தன்மையின் நேர்மையுடனும், பன்மைத்தன்மையின் நெகிழ்வுடனும் சுடர் விடவேண்டும். 
	தோழர்கள் மன்னிக்கவும் - அதி அற்புதமான அங்கதச் சுவையில் உலகளாவிய பார்வை கொண்ட கவிதை பின் வருவது :
	கூடுதலாகவோர் கரண்டி குருமா கேட்டதற்கு
	எனையோர் பூர்ஷூவாவென பழித்தானே யாரிந்த எழுத்தாளன்
	பகற்போல் நிலவடிக்கிறது - செருப்பில்லாமல்
	சின்னவீட்டிற்கு வழி நடந்தேன்
	சமத்துவங் குழைந்ததென்றுச் சாடுகிறான்
	புதுபொண்டாட்டிக்கு சுடிதார் பரிசளித்தால்
	பாட்டிக்கி நைட்டி வாங்கி தரச்சொல்லி பாடாய் படுத்துகிறான்
	ஈடுமுறை பங்காளி செத்தான் இலவு காண
	போகவில்லையென குமைந்து முகங் கோணுகிறான்
	ஊர் சேவிக்கும் நாவிதரிடம் அவசரத்திற்கோர் நாள்
	அக்குளை சிரைக்கச்சொன்னேன் சுயங்காயமென்று
	மன்னிப்பு கேழ்க்கச் சொல்கிறான்
	காராபூந்தியை கடித்து மெல்லுகிறதற்கில்லை
	கருப்பட்டி காபியை உறுஞ்சி குடிப்பதற்கில்லை
	சினிமா பார்க்க விடுகிறதில்லை சீரியலறவே கூடாது
	அட குத்துப்பாட்டுக்கு விசிலடித்தால் கோபித்துக்கொள்கிறானப்பா
	தானும் புணர்வதில்லை தள்ளியும் படுப்பதில்லை
	மாடு கண்டால் ஒதுங்குகிறதில்லை
	மனிதரை கண்டால் சிரிப்பதில்லை
	ஈனவுந் தெரியவில்லை நக்கவுந் தெரியவில்லை
	கட்டிய வீட்டிற்கெல்லாம் எட்டு வக்கணையெடுக்கிறானே
	பயபிள்ளையை எலுமிச்சை யென்றால் என்னவென வினவினேன்
	எலுமிச்சை யென்றால் தெரியாதா
	இஞ்சி போல தித்திப்பாயிருக்குமே என்கிறான்.
	பேச்சு மொழி, சொலவடைகளின் வீச்சு இவை மட்டுமென்றால் இது வெறும் தரவு தான். ஆனால் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தந்தைப் பின்பற்றுபவர்கள் எவ்வாறு ஒரு சாமான்ய மனிதனது இயல்பு வாழ்க்கையில் புகுந்து குழப்புகிறார்கள் என்பதைச் சொல்கின்ற வாழ்வனுபவம் அடிநாதமென்கையில், கவிதைக்கான பொதுத்தன்மை உள்நுழைந்து இதனையும் பண்பட்ட கவிதையெனப் பதிய வைக்கின்றது.
	தேடல் நின்றுபோகும்போது வாழ்வும் முடிந்துவிடுமென்பது எவ்வளவு சத்தியமோ அதுபோலத்தான் வேர்களுக்கான தேடல் தொடரும் என்பதுவும். மல்லாங்கிணறில் இருந்து மெல்பர்ன், அங்கிருந்து செவ்வாய் கிரகம் என மனிதன் பயணிக்கலாம். மொழி, இனம், பண்பாடு இவை ஏதும் பயனில்லாத ஒரு Unicode அடையாள அட்டையை Swipe செய்தபடி அவன் 'உலகக் குடிமகன்' ஆகிவிடலாம். ஆனால், கலை, இலக்கியப் படைப்பென்று வருகையில் - அவன் பசிக்கு அவன் மட்டுமே உண்ண முடியுமென்பதுபோல, அவன் தூக்கத்தை அவனே தூங்கித் தொலைக்க வேண்டும் என்பது போல, அவன் பாலுணர்வை அவனேத் துய்த்துத் தீர்க்க வேண்டும் என்பதுபோல - தனக்கான இசையை தன் நினைவில் இருக்கின்ற மூதாதையரின் மூங்கில் காட்டிலிருந்து தான் அவன் பெற முடியும். 
	அப்படிப் பெற்றதுதான் இந்த அழிபசி. சிலர் இதன் நடை, வடிவம், பிராந்தியத்தன்மை போன்றவை கவிதானுபவத்திற்குத் தடையென உணரலாம் - வெறும் சொல்லாடல் உத்திகள், தொன்மை மீட்டுறுவாக்கல் கவிதையாகாது என வாதிடலாம். அவர்களுக்கு க.பூர்ணசந்திரனது பின்வரும் கூற்றை நினைவு படுத்துகின்றேன்:
	"வாசகனது சமகாலச் சூழலும், இருப்புமே ஓர் இலக்கியப் பிரதியின் அர்த்தம் என்பதைத் தீர்மானிப்பதில் முதன்மை கொள்கின்றன. தோன்றியபோது ஒரு கவிதை என்ன அர்த்தத்தைக் கொண்டிருந்தது என்பதை நாம் இன்று முழுமையாகத் தீர்மானிக்கவே முடியாது. நமது வாசிப்பின் எல்லைகளுக்குள் நின்றே அதனைத் தீர்மானிக்கமுடியும். ஆகவே எந்த ஒரு வாசிப்புமே ஓரளவிலேனும் misreading எனப்படும் மாறுபடு / தவறான வாசிப்பாகவே இருக்க இயலும். எந்த வாசிப்புமே மாறுபடுவாசிப்பு என்னும்போது உண்மையான, அல்லது சரியான வாசிப்பு என்பதோ, குறித்த நிலைத்த அர்த்தம் என்பதோ இருக்கவே முடியாது. இனி விமர்சனம் பற்றிக் காணலாம்.
	ஒரு நூல், ஒரு மனிதர்மீது உண்டாக்கிய உணர்ச்சி விளைவை தர்க்கா£தியாக எடுத்துச்சொல்வதே விமர்சனம் ஆகும். விமர்சனம் ஒருபோதும் ஓர் அறிவியலாக முடியாது. ஏனென்றால், முதலில், கவிதை மிகவும் அந்தரங்கமான ஒரு விஷயம். இரண்டாவது, விஞ்ஞானம் புறக்கணிக்கக்கூடிய வாழ்க்கை மதிப்புகளைப் பற்றிப் பேசுவது அது. கவிதையின் உரைகல் உணர்ச்சியே அன்றிப் பகுத்தறிவன்று. நமது நேர்மையான உணர்வின்மீது ஏற்படுகின்ற விளைவினை அல்லது பாதிப்பை வைத்தே ஒரு கலைப்படைப்பைக் கணிக்க முடியுமே அன்றி, வேறு வழிகளால் இயலாது. நடை, வடிவம் என்றெல்லாம் வளவளப்பது, போலித்தனமான அறிவியல் முறைகளால் வகைப்படுத்துவது, புத்தகங்களைப் பகுத்தாராய்வது இவையெல்லாம் பிற அறிவுத்துறைகளைப் பார்த்துப் போலி செய்வதாகும். இவை பொருத்தமற்றவை மட்டுமல்ல, சலிப்பூட்டுகின்ற வார்த்தைக் கூட்டங்களாகவே இவை எஞ்சுகின்றன.
	ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியரும் கவிஞருமான டி.எச்.லாரன்ஸ், ஜான் கால்ஸ்வொர்தி என்னும் இன்னொரு நாவலாசிரியரைப் பற்றிப் பேசும்போது 1928ஆம் ஆண்டில் கூறிய விஷயம் மேற்சொன்னது."
	என் பூட்டியின் பெயரை, என் பேத்தி அறிந்திருக்காத அடுத்த தலைமுறையும் கூட நிச்சயமாய்த் தன் வேருக்கான தேடலைத் துவங்கும். அவளை அவ்வாறு நிர்பந்திக்கின்ற அந்த இனிய தூண்டலை அவள் விரும்பித் தழுவிக் கொண்ட, இந்த 21ம் நூற்றாண்டின் அடையாளமிழந்த மொண்ணைக் கலாச்சாரமே அவளுக்கு வழங்கும். கிராமம், நகரம் எனும் பெயர்கள் வேண்டுமானால் இனிவரும் நூற்றாண்டுகளில் மாறிவிடலாம். ஆனால் அங்கும் பலமாடிக் குடியிருப்பு வாசி, பங்களா வாசி, அரசுக் குடியிருப்பு வாசி, சேரி வாசி எனும் பல வாசிகள் வெவ்வேறு பெயர்களில், நிறங்களில், இனங்களில், மொழிகள் பல மொழிகள் பேசி வசிப்பார்கள். சென்ற பல நூற்றாண்டுகளுக்கு முன் லெமூரியா கண்டத்தின் ஒரு பகுதி சிதறியதில் இருந்து பிரிந்த நிலப்பரப்பில் - என்றே அவர்களும் அவர்களது வேர்களுக்கான தேடலை துவங்குவார்கள். இதில் ஆறுதல் தருகின்ற விஷயம் என்னவென்றால் - வேர்கள் புனிதமானவை என்றோ, மாற்ற முடியாத, அல்லது கேள்வி கேட்க முடியாத கிரீடம் அணிந்தவையோ அல்ல - ஆனால் மிக முக்கியமானவை, 'அடையாளம், ஞாபகம்' என்கின்ற மனிதத் தேவையின் ஆதாரமானவை எனும் தெளிவோடு, மூன்றாம் உலக பின்காலனிய பிரஜையாகவும், 21ம் நூற்றாண்டின் பின்நவீனத்துவ மனிதனாகவும் ஒரே சமயத்தில் நம்மால் அவற்றைத் தேடி பயணிக்க முடிவதுதான்!
	'உலகம்' எனும் ஜோதியில் இனம், மொழி, நாடு, மண் இவற்றையெல்லாம் மாயை எனச் சொல்லி ஒன்றாவதற்கு முன் (சிலருக்கு அது சாத்தியமானதும், பலருக்கு அது அவசியமானதும் என்றாலும் கூட) இந்தக் கணத்தில், நாம் George Orwell எழுதிய Animal Farm எனும் அங்கதச் சுவை புதினத்தை நினைவு கூர்வோமாக! எந்த ஒரு நிலைத்த கட்டமைப்பிற்கு எதிரான புரட்சியும், கலகமும் மற்றொரு கட்டமைப்பிற்கு கண்டிப்பாக இட்டுச்செல்லும் என்பதை Orwell ஆணித்தரமாக அதில் நிறுவிஇருப்பார். 
	தவசிக்கருப்பசாமியினது இந்த எதிர் உரையாடலும், மையச் சிதைப்பும் இன்னொரு மையமாகக், கட்டமைப்பாக உருவாகுமென்றால், அதனையும் அவர் உடைப்பாரென நான் நம்புகின்றேன். ஆதாரம் - அவரது "சூலிமயக்கம் சுடுகாட்டு ஞானம் சிறிது தூரம்" எனும் கவிதையே.
	சூலிமயக்கம் சுடுகாட்டு ஞானம் சிறிது தூரம்
	ஊத்து பொத்து உடைப்பெடுத்து கொண்டுவிட்டது
	கன்னாபின்னாவென்று பெருக்கெடுக்கிறது கற்பனைப்பிரவாகம்
	ஐயோ கதை கட்டுரை எழுதுவேனாயில்லை
	கவிதை நாவல்தான் எழுதுவேனா
	தொடருக்கு அரியாய் அரிக்கிறார்கள்
	பெங்குவின் காரர்கள் மிக மோசம்
	எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்
	உள்ளூர் சிற்றிதழ்கள் மொட மசுரு பிடித்தவை 
	ஆவிப்போக பேசுமே ஒழியவை அஞ்சிபைசா அவிழ்க்காது
	வண்ண முகப்பட்டை பேரிதழ்களுக்கு சந்தா சேகரிக்க வேணும்
	படைப்பு வந்தாலும் பிரதி வந்துச் சேராது
	நம்மை வைத்து சுதாரிக்க ஹாலிவுட்டுக்கு கையாலாகாது
	பாலிவுட்டில் இந்திக்காரர்களின் பாடையை திருப்பமுடியாது
	கோலிவுட்டில் சிறுப் பிள்ளைகள் ராச்சியமாயிருக்கிறது
	சின்னதிரைக்குழைத்தால் சொத்து குவிக்கலாமென
	சிலாகிக்கிறான் எழில் வரதன்
	விருதுகள் வேறு கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள்
	ஒன்பது புலிட்ஜர் வாங்கிவிட வேண்டாமா
	புரண்டழுகுவது யார் - நீங்களா
	ஓலையில் யான் எழுத்தாணி ஊன்றவில்லை என்று
	புரண்டழுகுவது யார் - நீங்களா
	சூலிமயக்கம் சுடுகாட்டு ஞானம் சிறிது தூரம்.
மேற்சொன்ன தெளிவிருக்கின்ற படைப்பாளி, குறிப்பாகக் கலைஞன் "மனோலயம் பெற்றால் மனிதன். மனோ நாசம் பெற்றால் ஞானி" என்பதை மறக்காதவன். தன்னைத்தானே பகடி செய்தபடி, தான் போகும் பயணத்தின் கானல்நீர் காமத்தின் பால் செவ்வித் தலைப்படுபவன்.
	தமிழ் இலக்கியச் சூழலில் ஒரு போக்குண்டு - "கவிதை என்பது ஒரு பொதுக் கருத்தைப் பேசிய உடனேயே அது கலைத் தன்மையை இழந்து விடுகிறது. அது பிரச்சாரமாகிவிடுகிறது" எனும் அபத்த வாதம்தான் அது.
	இதற்கு மிகச் சரியான பதிலாகப் பொதியவெற்பனது முற்சுட்டிய கூற்றையே பதிவுசெய்கிறேன்.
	"தமிழ்க்கவிதையென்பது தமிழகத்தைப் பொறுத்தவரை மத்தியதரவர்க்கப் புத்திஜீவிகளின் மெளன வாசிப்பிற்கான அநுபூதியாக மட்டுமே, சூக்குமத்தின் சூட்சுமமாக மட்டுமே சுருங்கிக் கிடப்பதில் எமக்குச் சம்மதமில்லை. மட்டுமல்லாமல் பரந்துபட்ட மக்கள்திரள் மத்தியில் வெகுமக்களுக்கான பயன்கலைகளாகப் பரிணமிக்கும் மற்றைமையான கவிதைப்பாடுகளை அறவே புறமொதுக்கிப் போகும் அழகியலும் எமக்குப் பாசிசமாகவே படுகிறது. கலை நியாயங்களை கெளரவிக்கத் தயங்காத நாங்கள் சமூகதர்ம நியாயங்களைக் கணக்கிலெடுக்காத அழகியலாய் உறைந்து கிடக்கும் அரசியலை அமபலப்படுத்திக் கவிதையையும் மக்கள் நாயகப்படுத்தவே விழைகின்றோம்
	"ஃபிரான்ஸ் ஃபனான் தனது The Wretchd of the Earth எனும் புத்தகத்தில் சொல்வது போல், இந்தியாவோ, இலங்கையோ - ஆங்கிலேயக் காலனி ஆதிக்கத்தின் கீழே இருந்த ஒவ்வொரு நாட்டிற்கும் தமது சொந்தப் பண்பாட்டை ஒரு மீள் கண்டுபிடிப்பிற்கு உள்ளாக்க வேண்டிய ஒரு நிலைமை உள்ளது. இத்தகைய சுமை தமிழ்க்கவிதைக்குமுண்டு. (இச்சுமை பிரெஞ்சு, ஜெர்மானிய, டச்சு, ஆங்கிலக் கவிதைகளுக்கில்லை)". அதனை ஒரு கூத்துக் கலைஞனின் பட்டறிவு, தொன்ம ஞானம், மண்மொழி இவற்றின் பட்டறிவோடு, நவீன வாழ்வின் சிக்கல்கள், மனிதனது இருப்பு, அவனது இக்காலத்து வாழ்வின் அபத்த நிலை முதலியவற்றின் ஊடுபாவோடு செறிவான கவிதைகளாகத் தந்திருக்கிறார் தவசிக்கருப்பசாமி.
	
	ஆப்ரிக்க, லத்தீன் அமெரிக்கக் கவிதைகளில் எல்லாம் சமூகப் பிரச்சனையை எடுத்துப் பேசுவது கவிதையினுடைய இலக்கியத் தகுதிக்கு எந்த விதத்திலும் ஊறு செய்வதில்லை என நம்பும்போது, தமிழ் இலக்கியப் பரப்பில் அகம் சார்ந்தவை மட்டுமே கொண்டாடப்பட்டும், அகம், புறம் இரண்டையும் அற்புதமான புள்ளியில் இணைத்துப் பேசுபவை புறந்தள்ளப்படுவதும் ஏன்?
	தவசிக்கருப்பசாமியினது உள்கட்டுமானத்தை மட்டுமல்ல, ஒரு தரமான, செறிவான தமிழ்க் கவிஞனது உள்கட்டுமானத்தை, அவனது உத்தரவைக் கேட்காமலேயே நிர்மாணிப்பது - ஒரு தமிழ் Sensibility தான்.  தமிழ்ப் பண்பாடு, அடையாளம் இவற்றைத் தாண்டி நாட்டார் பண்பாடு, இனக்குழு அடையாளம், மண்சார் கொச்சை மொழிப் பிரயோக உத்தி இவற்றின் மூலமாக தவசிக்கருப்பசாமி 'எதிர் அழகியலோடு' கூடிய அற்புதமான கவிதைகளைத் தந்திருக்கிறார். எனக்கு அவற்றில் குறையொன்றுமில்லை - ஏனெனில் all of them are politically charged and they are no mere pesonal poems. Chinua Achebe யும் தனது Home & Exile நூலில் சொல்வது இதுதான்: 
	"Joyce Cary எனும் Anglo - Irishman இன் Mister Johnson எனும் புதினம் இதுவரையிலும் எழுதப்பட்டவற்றைக்காட்டிலும் "ஆப்பிரிக்காவைப் பற்றி எழுதப்பட்ட மிகச் சிறந்த நாவல்" என Time Magazine இல் புகழப்பட்டது.
	அந்த நாவலில் ,
	Nigeria பூர்வகுடியினரைப் பற்றி விவரிப்பு இப்படிப் போகின்றது -
	"the demonic appearance of the naked dancers, grinning, shrieking, scowling, or with faces which seemed entirely dislocated, senseless, and unhuman, like twisted bags of bard, or bladders".
	அச்சுபே சொல்கிறார் - "இதே கூட்டத்தைப்பற்றிய குறிப்பினை நான் Joseph Conrad இன் Heart of Darkness இலும், (அது Congo வில் நடப்பதாக இருந்தாலும்), சந்திக்க நேர்ந்தது. ஆனால், Cary எனது தாய்நாட்டைப் பற்றியல்லவா இப்படி எழுதுகிறார் -"
	இவை எழுப்பும் மிக முக்கியமான கேள்வி - ஆதிக்க மொழியின் துணை கொண்டு வரலாற்றைத் தான் எழுதுவது என்பதை பின் காலனிய படைப்பிலக்கிய வாதிகள், குறிப்பாகக் கவிஞர்கள் எவ்வாறு மறுதளித்து ஒரு காலனியப் பிரஜைக்கான மற்றமை வெளியை, சொல்லாடலை உருவாக்குகிறார்கள் என்பதே. அழிபசி அப்படி ஒரு மற்றமை வெளியைத் தமிழ்க்கவிதைப் பரப்பில் உருவாக்கியிருக்கின்ற கவனிக்கப்பட வேண்டிய கவிதைத் தொகுப்பு.
	தவசிக்கருப்பசாமியும், ஜப்பானியக் கவிஞரும் சிற்பியுமான டக்கமுரா கொட்டாராவும் எனக்கு ஒரே புள்ளிதான். 
	டக்கமுரா கொட்டாரோ 
	என் கவிதை 
	என் கவிதை மேற்கத்திய கவிதையின் பகுதியல்ல. 
	இரண்டும் தொடுகின்றன, சுற்றளவும் சுற்ளவும் 
	எதிரெதிராய் 
	ஆனால் சற்றும் ஒன்றுள் ஒன்றாய்ப் பொருந்துவதில்லை. 
	மேற்குலகின் கவிதைக்கான பேருணர்ச்சி எனக்கு உண்டு. 
	ஆனால் என் கவிதை வேறாக உருவாகிறதென்பதை 
	நான் மறுக்கவில்லை .
	ஏதென்ஸின் காற்றும் கிறித்துவத்தின் பூமியடி நீரூற்றும்
	மேற்குலகச் சிந்தனை மற்றும் சொற்தொகுதியை வளர்திருக்கிறது.
	அதன் முடிவற்ற அழகாலும் உரத்தாலும் ஆழச் சென்று 
	என் இதயத்தைத் தொடுகிறது - 
	ஆனால் அதன் உடற்செயலியல், 
	கோதுமை - உணவு, வெண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி 
	ஸ்டீக்கும் 
	என் மொழியின் தேவைக்கு எதிராய் இயங்குகின்றது.
	என் கவிதை என் குடல்களிலிருந்து உருவாகிறது - 
	தூரக்கிழக்கின் சேய்மை எல்லைகளில் பிறந்து 
	சோறு, சோயா பீன்ஸ், மால்ட், மற்றும் மீன் கறியில் 
	வளர்ந்து 
	என் ஆன்மா - காந்தாரத்தின் நிலைப்புறும் சுகந்தினால் 
	ஊடுருவப்பட்டு 
	ஜப்பானிய கிளாஸிக்குகளின் முணுமுணுக்கும் 
	நீரோடையில் முங்கி - 
	இப்போது பிளந்த அணுவின் சக்தியைக் கண்டு பரபரத்த
	வியப்படைகிறது...
	என் கவிதை நானன்றி வேறல்ல
	நான் என்பது தூரக்கிழக்கு சிற்பி என்பவனைத் தவிர 
	வேறல்ல.
	எனக்கு இப்பிரபஞ்சம் படைப்பின் மூலப்பிரதி, 
	மற்றும் கவிதை என்பது எதிர்ப் புள்ளிகளின் கலைஒழுங்கு.
	மேற்கின் கவிதை என் இனிய அண்டைவீட்டார், 
	ஆனால் என் கவிதையின் போக்குவரத்து வேறான 
	பாதையில் போகிறது. 
உங்கள் கவிதையையின் போக்குவரத்து மிகச் சரியான பாதையில் செல்கிறது, தவசிக்கருப்பசாமி.
	மிகப் புதுமையான, காத்திரமான, சமகால அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த, ஒரு முக்கியமான பின்காலனியப் பிரதியாக இந்த அழிபசி தொகுப்பினை நான் பார்க்கிறேன். ஏனென்றால், "சிங்கங்கள் தமது வரலாறை எழுதவில்லை என்றால் வேட்டைக்காரர்கள் எழுதியதே சரித்திரம்" என்றாகிவிடும். ஓசை நயமிக்க அதன் அமைப்பு, சடங்குகளின், ஆதிக் கனவுகளின், காப்பியங்களின் தொன்மக் கூறுகளை நவீன கருக்களை வெளிக்கொணர மீள் உருவாக்கம் செய்கின்ற உத்தி, இனக்குழு வாழ், வீழ் முறையின் தொல் காலடித் தடத்தோடு வெளிப்பட்டிருக்கின்ற அவற்றின் உருவமும், உள்ளடக்கமும், பகிடியும் ஒரு தனித்துவமிக்க படைப்பாக இதனை என்ன உணரச் செய்கின்றது.
	ஏகலைவன் கட்டை விரலென, விமர்சகர்கள் எனப்படுவர்களுக்கு இக் கவி வெளிப்பாட்டை ஒப்புக் கொடுத்து விடாதீர்கள் தவசிக்கருப்பசாமி. கொற்றவையின் சிலம்பம் நமது ஆரவல்லி, சூரவல்லிகள் அடக்கிய காளைகளின் கழுத்து மணிகளானது. அதன் இசையைக் கேட்க முடியாதவர்கள் கொடுப்பினை அற்றவர்கள் - கேட்டுத் துய்க்கின்றவர்கள் அவளோடு சேர்ந்து கூத்தாடட்டும்! 
	வாழ்த்துக்கள். 
உதவிய நூல்கள்:

•	கவிதையியல் - பூரணச்சந்திரன்
•	கவிதை-ஓவியம்-சிற்பம்-சினிமா - இந்திரன்
•	சமகால உலகக் கவிதை - பிரம்மராஜன்
•	சமகால கவிதைகளும் கவிதைக் கோட்பாடுகளும் - வே.மு.பொதியவெற்பன்
•	கற்பனையான சமுதாயங்கள் : தேசியத்தின் தோற்றமும் பரவலும் பற்றிய சிந்தனைகள் - பெனடிக் ஆண்டர்சன்
•	பின்காலனியம்-மிகச் சுருக்கமான அறிமுகம் - ராபாட் ஜே.சி.யங் தமிழில் அ.மங்கை
•	Post-Colonial Drama, Theory, Practice and Politics - Helan Gilbert & Joanne Tompkins
•	The Empire Writes Back - Bill Ashcroft, Gareth Griffiths & Helen Tiffin

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *