அறிஞர் கலைஞர் கவிதைகள் ``திராவிடம் பேணும் தீப்பிழம்பு : மானுடம் பேசும் மயிலிறகு’’ “Orator fit, poeta nascitur” (“ஒரு பேச்சாளன் உருவாக்கப்படுகிறான், கவிஞனோ பிறக்கிறான்”) ரோமானியர்கள், கவிஞனை `வேட்ஸ்’ (vates) என அழைத்தார்கள் - அந்த வார்த்தைக்கான வேர், ‘Vaticinium, Vaticinari’ எனும் வார்த்தைகளிலிருந்து எடுக்கப்பட்டது. அதற்கு, `கடவுள் தன்மையுடையவன்’ (diviner), `காலக் கணிப்பாளன்’ (foreseer) அல்லது `இறைதூதர்’ (prophet) என்ற பல அர்த்தங்களுண்டு. கிரேக்கர்களே, கவியைக் `கவிஞன்’ (poet) என்கின்ற சொல்லால் முதன்முதலில் அழைத்தவர்கள். அது, கிரேக்க வார்த்தையான `பொயஸின்’ (poicin) எனும் வார்த்தையிலிருந்து எடுக்கப்பட்டது. ஆங்கிலத்தில் அதற்கு ‘to make’ எனப் பொருள். தமிழ்க் கவிதைப் பரப்பில், மிகக் காத்திரமானதொரு தடமாய் “ஓடி வந்த இந்திப் பெண்ணே கேள்! நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே” என்ற அணிவகுப்புப் பாடலுடன் 1938இல் தனது 14 வயதில், தன் முதல் கவிதையை எழுதிய, நம் தலைமுறையின் மூத்த கவி, முத்தமிழ் அறிஞர் கலைஞரை, எப்பெயரில் அழைக்க - லத்தீன் மொழியின் ‘vates’ என்றா, கிரேக்க மொழியின் ‘poicin’ என்றா, அல்லது நம் மூத்த, ஆதித் தமிழ் மொழியின் `புலவர்’ பெருமகன் என்றா - எப்பெயரிட்டு அழைத்தாலும் `ரோஜா ரோஜா’ தான் என்பது மாதிரி - அடைமொழிக்குள் அடக்க முடியாத ஆழிப் பேரலை அவர் என்பதை - அவருடைய முதல் தொகுப்பின் தலைப்பான `கவிதையல்ல’ என்னும் தனித் தேர்வே தமிழ் உலகுக்கு அறிவித்தது. “கலையின் பணி உலகத்தைப் பற்றி விவரித்துக் கூறுவதல்ல; மாறாக, உலகை விமர்சிப்பதும், கேள்விக்குள்ளாக்குவதும் மட்டுமே கலையின் பணியாக இருக்கமுடியும்” என்பதையே தன் இலக்கியப் பணிக்கான உந்துதலாகக் கொண்டவர், முத்தமிழ் அறிஞர் கலைஞர். இந்த இருபது-இருபத்தியோராம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்ப் போராளியாகவும், படைப்பாளியாகவும் திகழ்கின்ற அவரது கவிதைப் பரப்பை, உணர்வுபூர்வமாய் ஒன்றிச் சுவைத்தல் மட்டுமன்றி, அதன் ஆழ, அகலத்தினை, அது எப்படி அவர் காலத்திய சமூகத்தின் நிலையினை விமர்சிக்கின்ற வரலாற்று ஆவணமாகவும், “உணர்ச்சி, கற்பனை, வடிவம், பொருள்” எனும் நான்கின் அடிப்படையில் நெடிது வாழ்கின்ற இறவாப் படைப்பாகவும் இருக்கின்றது என்பதனையும் இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்வதும் இன்றியமையாதது. கவிதை என்பது “பகுத்தறிவிற்குத் துணையாகக் கற்பனையை அழைத்துக் கொண்டு இன்பத்தையும், உண்மையையும் ஒருங்கிணைக்கும் ஒரு கலையாகும்” என்கிறார் டாக்டர். ஜான்சன். “வாழ்க்கை எனும் இறவா உண்மையின் நிலைத்து நிற்கும் படிமமே கவிதை” என்கிறார் ஷெல்லி. “பண்டு வந்த செழும் பொருளே! பார் அடர்ந்த இருட்கடலில் படிந்த மக்கள் கண்டு வந்த திருவிளக்கே களிப்பருளும் செந்தமிழே” எனும் பாரதிதாசனின் வரிகளுக்கு ஏற்ப, இன்றுவரை தமிழர்தம் திருவிளக்காய்த் திகழ்கின்ற முத்தமிழ் அறிஞர் கலைஞரது கவிதை, தமிழ் மக்களுக்காக, தமிழ் மக்கள் குறித்து, உலகத் தரத்துடன் ஒளிர்பவை. எப்படி எனில், டாக்டர். ஜான்சன், ஷேக்ஸ்பியர் எனும் பெருங்கவிஞனுக்கான முன்னுரையில், “அடிஸன் கவிஞர்களுக்கான மொழியைப் பேசினான்; ஷேக்ஸ்பியரோ மக்களுக்கான மொழியைப் பேசினான் - அதனால் இறவாமலிருக்கின்றான்”, என்று கூறியது போல், பெரியாரும், அறிஞர் அண்ணாவும் மீட்டெடுத்த இன, மான, மொழி உணர்வு அடையாளங்களைத் தக்கவைத்துக் கொள்வதுடன், சுயமரியாதையும், பகுத்தறிவும் சற்றும் கூர் மங்கிவிடாதிருக்க, நகைச்சுவை (humour), புத்திசாலித்தனமான சொற்ச்சிலம்பங்கள் (wit), உணர்வின் உச்சம், (height of emotion), - அனைத்தும் மிகச்சரியானதொரு கலவை கொண்ட புதிய கவி நடையை (வசன கவிதை) மக்களுக்கான மொழியில் தமிழுக்குத் தந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். என்றும் நிலைத்திருக்கின்ற ஜீவிதக் கவிதைகள் பலவற்றை எழுதியிருக்கின்ற அவரது கவி ஆளுமையினை ஒரு பருந்துப் பார்வை பார்ப்பதென்பது “ஆல்ப்ஸ் மலையின் பனிச்சிகரங்களை கோடை காலத்தில் துய்ப்பதற்கொப்பானது”. உருகாத பருண்மையினை உணருகையில், உருத்தெரியாமல் கரைவதுதானே கவிதை வாசிப்பின் தனிப் பேரின்பம்! ஆங்கிலேயரின் பாராளுமன்ற வரலாற்றிலே மிகப் புகழ்பெற்றது - முதலாம் எலிசபெத் ராணியார், `அர்மடா போர் வெற்றி’ குறித்து `டில்பரி’ எனும் முகாமிலிருந்த தன்னுடைய படை வீரர்களுக்குப் புத்துணர்வு ஊட்டி ஆற்றிய உரையாகும். ‘The House of Commons’ல், ராணியார் நிகழ்த்திய அந்த உரை குறித்து - வரலாற்றில், “I know I have the body of a weak and feeble woman, but I have the heart and stomach of a King, and a King of England too!” என்று பதியப்பட்டு, எளிமையும், உணர்ச்சியும் நிறைந்ததொரு அற்புதமானதொரு கவிதை உரையாக இன்றுவரை போற்றப்படுகிறது. அதற்கு நிகரானதொரு கவிதை வடிவினை, தன்னுடைய கவி அரங்கக் கவிதைகள் மூலம் முதன் முதலில் தமிழ்ப் பரப்பிலே அறிமுகப்படுத்தியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மட்டுமே. இன்றைய தமிழர் இன்பம் துய்க்க, எளிய தமிழில், உணர்வுபூர்வமுடன் அவர் ஆக்கியிருக்கின்ற ‘சங்கத் தமிழ்’, ‘தொல்காப்பியப் பூங்கா’, ‘வான்புகழ் கொண்ட வள்ளுவம்’ முதலியன, அவரை ஒரு அற்புதமான கவி ஆசிரியப் பெருந்தகையாய், தமிழ் உலகிற்கு அடையாளம் காட்டியவை. புலவரே ஆசிரியராகவும் ஆகிவிடுகின்ற அந்தக் கணங்களின் ரஸவாத வித்தையை, கண்டு, கேட்டு, படித்து, உணரும் வாசகனின் ஐம்புலன்களும் பெரும் கிளர்ச்சி அடைகின்றன. முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மேற்சொன்ன படைப்புக்களைப் படிக்கும்பொழுது, இருபதாம் நூற்றாண்டின் புகழ்பெற்ற நவீனத்துவ விமர்சகர், ரொலாண் பார்த் நினைவிற்கு வருகின்றார். அவர் கூறுகின்றார், ``ஏதோ ஒரு நூற்றாண்டில் ஓர் ஆசிரியனால் பயன்படுத்தப்பட்ட மொழியானது, தற்காலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு சொல்லக்கூடும் என்று நாம் கருத முடியாது. ரெஸினின் காதல் சார்ந்த உளவியல், மிலேயின் அரசியல் பார்வை, சாதேயின் பாலியல் இலக்கணம் ஆகியவை, இன்றைய வாசகனுக்கு, வாசிப்பு இன்பம் தருவதாக இல்லை. இந்தப் பிரதிகளில் ஒட்டிக்கொண்டு இருக்கும் ஆசிரியனின் பார்வை மற்றும் நோக்கத்தைப் பிய்த்து எடுத்துவிட்டு, அதில் மீதம் இருக்கும் கலாச்சார, அறிவு, இலக்கியம் ஆகியவற்றை நாம் துண்டாடிப் பார்க்கும்பொழுது, முழுப் பிரதியில் இல்லாத இன்பம், இந்தத் துண்டுகளில் கிடைக்கிறது’’. முத்தமிழ் அறிஞர் கலைஞரது கைவண்ணத்தில், மூலப்பிரதிகள் புதிய கோணத்தில் அலசப்பட்டு, தனி இன்பம் தருகின்ற தனித்துவ பிரதிகளாகின்றன. தமிழர் தம் பண்பாட்டினை, திணைக் கோட்பாட்டினை, வீரத்தினை, காதலுணர்வை, அகம், புறம் எனப் பிரித்து, அவர்தம் சேர்ந்து வாழ்ந்திருந்த செழுமரபு, கலாச்சாரம், அறிவு, இலக்கியம் ஆகியவற்றைப்பற்றி இன்றைய இளைய தலைமுறை, அவர்தம் எழுத்தோவியத்தின் மூலம் அறிந்துகொள்கின்ற மகத்தான பணியை, இந்நூற்றாண்டின் மிகச் சிறந்த கவிதை ஆவணமாய்த் தந்திருப்பவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மட்டுமே. முத்தமிழ் அறிஞர் கலைஞருடைய கவிதைகளை பின்வருமாறு வகைப்படுத்தலாம்: “Elegy” எனச் சொல்லப்படுகின்ற அவலச் சுவை மிகுந்த கவிதைகள்; திராவிடத் தளபதி கே.வி.கே. சாமி, கலைவாணர் என்.எஸ்.கே, தோழர் ஜீவா தொடங்கி, பேரறிஞர் அண்ணா வரை, அவர்களனைவரும் மறைந்தபொழுது எழுதப்பட்ட அற்புதமான கவிதைகளை உள்ளடக்கியது, சமூகத்தின் விளிம்புநிலை மாந்தர்கள் பற்றிய கவிதைகள்; மாற்றுக் கதாநாயகர்கள் (alternate heroes) எனப்படுகின்ற இராவணன், இந்திரஜித், வாலி பற்றிய கவிதைகள்; பகுத்தறிவையும், மொழியுணர்வையும், சமூகக் கடமையையும் வலியுறுத்தும் கவிதைகள்; இரணியன், பாரதிதாசன், நேரு மற்றும் ஜனநாயகம் குறித்ததான பல்வேறு கவிதைகள், பல்வேறு கவிஅரங்கங்களில் பலதரப்பட்ட தலைப்புகளில் வாசித்த கவிதைகள். இவை அனைத்தையும் ஏறத்தாழ உள்ளடக்கிய முத்தமிழ் அறிஞர் கலைஞரின் “கவிதை மழை” தொகுப்பினை தீவிர வாசிப்பிற்கு உட்படுத்திப் பார்த்தால், ஒரு கவிஞராக அவரது மிகப்பெரிய ஆளுமை - வார்த்தை நயம், ஒலி நயம், நடை நயம் (உவமை, உவமானம், படிமம்) இவை அனைத்தையும் தாண்டியதொரு அதி அற்புதமான கவிமனம் - ஊடுபாவாக அதன் உள்ளோடுவது புரிபடும். “If the poetry of the decade had any one dominant motive, it was an acute social consciousness, with a strong infusion of rebellious and divided, self-conscious” - என ஆங்கிலத்தில் சொல்வது போல், இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதைப் பரப்பில் ‘சமூக நீதி’, ‘சமூக மாற்றம்’ என்கிற இரண்டு மந்திரச் சொற்களை, தன்னை வழி நடத்தும் கவிதைக்கான `அ’கரமும், `ஆ’காரமுமாகக் கொண்டவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். “கவி வளத்தைப் பெற்றேனில்லை கவிதை பாடக் கற்றேனில்லை, தளையறுத்த வீரர் கதை பாடுவதால் தளையகற்றிப் பாடுகின்றேன் நானும் - அவர் தொடை தட்டும் என் பாட்டும் ! - என் கவிதை யாப்பின்றிப் போனாலும் போகட்டும் - நம் நாடு, மொழி, மானம், உணர்வெல்லாம் காப்பின்றிப் போதல் கூடாதெனும் கொள்கை” என்ற அற்புதமான முத்தமிழ் அறிஞர் கலைஞரது இக்கவிதை, 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த John Skeleton (ஜான் ஸ்க்கெல்ட்டன்) எனும் புகழ் பெற்ற கவிஞரின் ‘Sprung Rhythm’ என்றொரு ஓசை நயமிக்க தனி நடையினை நினைவுபடுத்துகிறது. ஸ்க்கெல்ட்டன், ஆங்கில இலக்கியத்தில், ‘medieval poetry’ எனச் சொல்லப்படுகின்ற காலகட்டத்தைச் சார்ந்தவராயினும், தன்னுடைய உணர்வினாலும், வெளிப்பாட்டினாலும், மறுமலர்ச்சி காலத் தடத்திலேதான் அறியப்பட்டவராக இருந்தார். கொடுக்கப்பட்ட மரபார்ந்த வடிவங்களுக்கு உள்ளாக, தனித்தன்மை வாய்ந்த ஒரு கவிதை நடையினைப் பரீட்சித்துப் பார்த்து, ஆங்கில இலக்கிய வரலாற்றில் `ஸ்க்கெல்டானிக் புதுயுகம்’ (skeltonic revival) என்ற ஒரு தனித் தடத்தினை உருவாக்கிய அவரைப் போலவே, முத்தமிழ் அறிஞரும், ஒரு புதிய கவி மனதைத் தன் காலத்திய கவிதைப் பரப்பில் ஒரு பெரும் பாய்ச்சலில் உட்புகுத்தி, பழமைக்கும், புதுமைக்குமான ஒரு மொழி நடைப் பாலத்தைச் செதுக்கியவர். தான் வாழுங்காலத்தின் சமூக, கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளை உள்வாங்கி, கூர்மையாக அவதானித்து, அதே சமயத்தில் மிகப் பெரிய கலகத்தினையும், கேள்விகளையும் எழுப்புகின்ற, ஒரு நவீன கலக மனதினை, கவிதைகளில் - அவை மரபார்ந்த அல்லது புதுக்கவிதை வடிவங்களிலாகட்டும் - ஒரு மெல்லிய அங்கதத்தோடு, தமிழ்ச் சூழலுக்கு முன்வைத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். Shakespeare-ன் Sonnets, 1609ல் பிரசுரிக்கப்பட்டன. அவற்றின் கரு, படிமங்கள், ஊடுபாவு முதலியன, காலங்கடந்தும் நிற்கின்ற சாத்தியத்தைத் தந்திருக்கின்றன. முத்தமிழ் அறிஞர் கலைஞரின் குறுங் கவிதைகள் பலவும் அப்படித்தான். அவரது இந்தப் படிமத்தைப் பார்ப்போம் – “சூதறியாச் சோதரியைச் சூர்ப்பநகை ஆக்கிவிட்ட காதெரியும் செய்தி கேட்பின்” ‘காதெரியும் செய்தி’ என்கின்ற இப்படிமம் தரும் பிம்பம், அது எழுப்புகின்ற அதிர்வலை மிக நுட்பமானது. நினைத்துப் பார்த்தல் அல்லது தத்துவார்த்தக் கவிதைகளுக்கான முதல் விதையை ஊன்றிய புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் சேப்மேன் (Chapman) என்பவர், கவிதை ஒரு படிப்பினை தருவது (didactic conception) என்பதனை வலியுறுத்தியவராக இருந்தாலும், மூலதனம் `பகுத்தறிவே’ (the keystone is reason) என்பதை வலியுறுத்தியவர். அந்த மரபினை அடியொற்றி, ஆனால் அதற்கு முற்றிலும் புதிதான, அவைதீக அல்லது நாத்திக மரபினை முன்னிறுத்துகின்ற கவிதைகள் முத்தமிழ் அறிஞர் கலைஞருடையவை. 1600களில், ஆங்கிலக் கவிதைப் பரப்பிலே நான்கு தத்துவவாதிகள் (John Davies, Samuel Daniel, George Chapman and Lord Brooke) ஒன்றிணைந்து, ‘ஒரு கிருத்துவ மனிதம்’ என்கிற சட்டகத்தினுள், தத்துவக் கவிதைகள் எழுதத் தொடங்கினார்கள். இங்கே, நம் தமிழ்க் கவிதைப் பரப்பில், ‘திராவிட மானுடம்’ எனும் சட்டகத்தை இருபதாம் நூற்றாண்டில், 1938ல், `இயக்கத்தின் விழா வாழ்த்து’ என்கிற தன் முதல் கவிதையுடன் ஆரம்பிக்கின்றார் முத்தமிழ் அறிஞர் கலைஞர். “இந்நாட்டான் இங்கு பிறந்து வாழ்ந்தான் எந்நாட்டையும் புறங்காணும் புகழுடையான் தமிழ்நாட்டான் தலை குனிந்தான்; இதோ நிமிர்ந்தான் - இனிக் கொழுத்துவிட்ட உமிகள்தாம் குள்ளநரிக் கூட்டத்தார் பழித்துவிட்டான் பகுத்தறிவால் பக்தி, மதம், கடவுளர் எல்லாம் பாழ்! பாழ்!” என்று அறிவுபூர்வமான, உணர்வும் ஒத்திசைகின்ற, கேள்விகளின் மூலம் சமூக நடப்புகளை ஓர் அங்கதமுடன் முன்வைக்கின்ற, முத்தமிழ் அறிஞர் கலைஞரது `கலகக் கவிதைகள்’, தெளிவையும், எளிமையையும், அதேசமயம் மரபார்ந்த முறைகள் மீது அவருக்கிருந்த மொழி ஆளுமையினையும் ஒருங்கே புலப்படுத்துகின்ற ஓர் அபூர்வக் கலவையாகும். “Drink to me only with thine eyes” ‘உனது கண்களால் மட்டுமே என்னைக் குடி’ என்கிற புகழ்பெற்ற ஆங்கிலேய படிமத்திற்கு (iஅயபந) இணையாக, அவரது “கண்ணுக்குள் பாவைபோல் வருண்டிடும் உள்ளம் கைம் பெண்ணுக்கு இருப்பதையும் உணர்ந்திடுவாய்” எனும் படிமத்தைக் கூறலாம். டாக்டர் ஜான்சன், தன்னுடைய Life of Cowley (1779) எனும் புத்தகத்தில், கவிதையின் மிக முக்கியமான நடை உத்திகளில் (techniques) ஒன்றான ‘conceit’ குறித்து, “the violent yoking of unlike ideas and images” என்றிருந்தாலும், நவீன விமர்சகர்கள், அதனை “the fusion of thought and feeling” என்றே குறிப்பிடுகிறார்கள். ‘Conceit’ என்கிற கவிதை உத்தி, ஜான் டன் (John Donne) (1572-1631) என்கிற புகழ்பெற்ற ஆங்கிலேயக் கவிஞரை நினைவூட்டும். ஜான் டன், சாப்மேனைப் போல தத்துவார்த்தக் கவிஞர் அல்ல என்றாலும், தத்துவத்தின் கூறுகளைத் தொடர்ந்து பயன்படுத்தியவர். அவர், rhetoric என்று சொல்லப்படுகின்ற உரைநடையினை வெறுத்து விலக்கவில்லை. மாறாக, ஒரு புதுவிதமான உரைநடை உத்தியைக் கவிதைகளில் கட்டமைத்தவர். அது, சாமானியமான பேச்சு வழக்கு, நாடகத்தன்மை, அங்கத யதார்த்தம் முதலியவற்றை உள்ளடக்கியது. முத்தமிழ் அறிஞர் கலைஞருடைய பல கவிதைகளில், இந்த உத்தி மிகச் சாமர்த்தியமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். உதாரணத்திற்கு, இலங்கை வேந்தன் இறந்தபின் மண்டோதரியின் மரணத்தை, “ஆளன் இறந்த பின்னர் இறப்பதற்கு மட்டுந்தான் நீள் இமையைத் திறந்திட்டாள் மண்டோதரி!” என எழுதுகிறார். இறப்பிலே கண்கள் மூடுவது என்பதன் முரணாக, இறப்பதற்காகக் கண் திறந்தாள் என்பது மிகப் புதுமையான நடை உத்தி. “புலவரிடை பகை மூண்டால் புதுமையுண்டு தமிழுக்கு” என்று சொல்வதும், “வானக் கிழவன் இருமுதலே இடியென்னும் வாடிப் பிதுங்கும் அவன் கண்ணொளியே மின்னல் அவன் வடிக்கின்ற கோழை எச்சில்தான் மழை” என்பதுவும், ‘நேர்மறை அழகியல்’ எனும் புது உத்தி. பன்முகத் தன்மை கொண்ட முத்தமிழ் அறிஞர் கலைஞரது பல கவிதைகளில் - உச்சபட்ச ஒரு கவிமன உணர்வையும், ஒரு மிருதுத் தன்மையையும், வாதிடலையும், கவித்துவமான இசையையும், இவை அனைத்தையும் ஒருங்கிணைக்கின்ற ஒரு நகைச்சுவை வகைமையினையும் நாம் பார்க்கலாம். எப்பொழுதும், காதல், காலத்தையும், மரணத்தையும் வெற்றிகொண்டே வந்திருக்கிறது என்பதை வலியுறுத்தியவை ஜான் டன் எனும் கவிஞனுடைய கவிதைகள். முத்தமிழ் அறிஞர் கலைஞரது சங்கப் பாடல்கள் குறித்த “சங்கத் தமிழ்” எனும் கவிதை விளக்கம் இதனை அடியொற்றியவையே. “What if this present were the worlds’ last night?”- என்று அந்த கவிஞன் கேட்டது போலவே, முத்தமிழ் அறிஞர் கலைஞரது நற்றிணையின் (பாடல் 177) விளக்கமொன்றில், தோழி தலைவியிடம் இப்படிக்கேட்கிறாள் - “ஒரு நாள் மட்டுமே இந்த உலகம் இருக்குமெனக் கணக்கிட்டு, இன்பத் திருநாள் முழுவதையும் நடத்தி முடித்துவிட்டீர்; வாழ்க! வாழ்க! சேப்மேன், ஜான் டன் ஆகியோரைத் தாண்டி, ஜார்ஜ் ஹெர்பட் (George Herbert) எனும் கவிஞருடைய நடை உத்தியும், உள்ளடக்கமும்கூட, முத்தமிழ் அறிஞர் கலைஞருடைய கவிதைகளில் தென்படுவதையும் காணலாம். ஹெர்பட்டை, “இசையின், மகிழ்ச்சியின் காதலன்” என்பார்கள் (is a lover of music and mirth). அவரது “காதலும் பயணியும்” என்கிற கவிதை மிகப் பிரசித்தி பெற்றது. அக்கவிதையில், இருவிதமான கற்பனைப் படிமங்களுண்டு. ஒருபுறம் ‘காதல்’ எனும் தோற்றம் அளவற்ற மோகமுடன் கெஞ்சிக் கொண்டிருக்கும். அதன் எதிர்ப்புறம், அதன் உபசரணைகளை மறுத்து, தவறுகளுக்குப் பயப்படுகின்ற `பயணியின்’ உருவம் அலைபாய்ந்து கொண்டிருக்கும். இறுதியில், அம்மனிதன் காதலில் சரணடைவதை, மிக எளிமையாக, ஆனால் உணர்வுபூர்வமாக, ஹெர்பட், “நான் பணிந்தேன், சரணடைந்தேன்’’ (So I did sit and surrender myself) என முடித்திருப்பார். முத்தமிழ் அறிஞர் கலைஞருடைய பகுத்தறிகின்ற, நாத்திக, அவைதீக மனதின் ஒரு குரலிலிருந்து வருகின்ற கவிதையில், ஆங்கிலக் கவிதை இலக்கியத்தின் மிக முக்கியக் கவிதைக்களமான “metaphysical poetry”ன் சில கூறுகளைப் பார்க்கும்பொழுது, அவரது மொழி ஆளுமையும், தொலைநோக்கும், நுட்பமும், புதுமைப்பசியும், அனுபவங்களை புதிய உத்திகளில் பதிய வைக்கின்ற தன்முனைப்பும் நம்மை பெரும் வியப்பிற்குள்ளாக்குகின்றன. எத்தனையோ அற்புத வரிகளை எழுதிய என் தலைவரது அந்த எழுதுகோலில் இருப்பது வெறும் மை தானா? எனப் பலமுறை வியந்திருக்கிறேன். எனது தந்தை திரு.வே.தங்கபாண்டியன் மறைந்தபின், ஒரு நிகழ்ச்சியிலே கலந்துகொண்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் எழுதிய `ஹைகூ’ பாணி கவிதை இது : “அரங்கம் நிறைந்திருக்கிறது ஓர் இடம் காலி நான் அழுகிறேன்” படித்தபின்பு என் கண்ணீருக்குத் தெரிந்தது - அவரது பேனாவில் இருப்பது வெறும் `மை’ அல்ல - அது உணர்வு `மை’, தமிழர்களது உயிர் `மை’, அதுவே அவரது கவிதையின் வலி`மை’ என்று. புகழ்பெற்ற ஆங்கில நாடக ஆசிரியர் பெர்னார்ட் ஷா, தன்னுடைய `பிக்மாலியன்’ எனும் பிரசித்தி பெற்ற நாடகத்தில், கதாநாயகியான ஒரு பூக்காரப் பெண்ணிற்கு ஆங்கில மொழியின் பெருமையினைப் பற்றிச் சொல்லும்போது, “உன்னுடைய தாய்மொழியானது ஷேக்ஸ்பியருடைய உன்னத மொழி; மில்ட்டனுடைய கவித்துவ மொழி; பைபிளின் கடவுள் மொழி என்பதை நினைவில் வைத்துக்கொள்” என்கிறார். இருபதாம் நூற்றாண்டின் தமிழ்க் கவிதைப் பரப்பிலே, முத்தமிழ் அறிஞர் கலைஞரின் எழுத்தைப் படிக்கின்ற ஒவ்வொரு தமிழனும் தலைநிமிர்ந்து சொல்லிக் கொள்ளலாம் – “என் தாய்மொழியானது சங்கப் புலவர்கள் பெற்றெடுத்த மொழி; வள்ளுவனும் இளங்கோவும் வார்த்தெடுத்த மொழி; பாரதியும், அவனுக்குத் தாசனும் புத்துயிரூட்டிய மொழி; முத்தமிழ் அறிஞர், என் தலைவர் கலைஞர், திராவிடச் சூடேற்றி, மானுட மயிலிறகு வீசிய தனித்தமிழ் மொழி” என்று. * * * * *
No comment