“ஜவஹர்லால் நேரு போன்ற ஒருவரால்
வழிநடத்தப்பட்ட இந்த நாட்டிற்கும் பாராளுமன்றத்திற்கும்
நான் பொறுப்பாளராக இருக்க வேண்டும்
என்ற உண்மையை நினைவு கூர்ந்தால்
நான் நடுங்குகிறேன்.”
– லால் பகதூர் சாஸ்திரி
நேருவுக்கு பிறகு இந்திய தேசத்தை வழிநடத்தக் கூடிய தலைமை பொறுப்புக்கு வந்த லால் பகதூர் சாஸ்திரிக்கு எத்தகைய நடுக்கமும் அச்சமும் இருந்ததோ அதைப்போன்று பெருந்தலைவர் காமராஜரிடம் நேர்மையைக் கற்றுக் கொண்ட நம்முடைய சித்தன் ஐயாவிற்கும் தன் வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருக்க வேண்டும், அரசியலில் தூய்மையாக இருக்க வேண்டும் என்கிற நடுக்கமும் கவனமும் இருந்து கொண்டே இருந்தது. அதை இன்றைக்கு வரையிலும் தற்காத்துக் கொண்டு நேர்மையைத் தன் உயிர்மூச்சாகக் கொண்டு அரசியலில் தூய்மையைப் பேணி வரும் ஒரு உன்னதமான தலைவரே சித்தன் ஐயா.
இன்றைக்கு அரசியலுக்கு வருகின்ற இளந்தலைமுறையினர் எப்படி நேர்மையாகவும் தூய்மையாகவும் மக்கள் பணியாற்ற வேண்டும் என்று கற்றுக் கொள்வதற்கும் அனுபவப் பாடத்தைப் பெற்றுக் கொள்வதற்கும் ஒரு வாழும் உதாரணமாக இருப்பவரே பழம்பெரும் அரசியல்வாதி சித்தன் ஐயா.
மகாத்மா காந்தி 1921-ஆம் ஆண்டு மதுரைக்கு வந்தார். அப்போதுதான் முதன்முதலாக பெருந்தலைவர் காமராசர் அவரைப் பார்த்தார். பார்த்த அந்த நொடியே இந்தியாவுக்கு மட்டுமல்ல தனக்கும் மகாத்மா காந்தியே வழிகாட்டி என்று முடிவெடுத்தார். கர்மவீரர் காமராசரிடம் இடம்பெற்றிருந்த சுயமரியாதை, எளிமை, நேர்மை ஆகிய அனைத்து உயர்ந்த பண்புகளுக்குமான உந்துசக்தியாக இருந்தவர் மகாத்மா காந்தியே ஆவார். அதன்பிறகு ஜவகர்லால் நேருவையும் தனது உள்ளத்தின் உயர்ந்த பீடத்தில் பெருந்தலைவர் காமராசர் வைத்துக் கொண்டார். இளம் வயதிலேயே அவருக்குள் மறைந்திருந்த துடிப்புமிக்க தலைவனை இனங்கண்டு கொள்ள வைத்தவர் ஐயா சத்தியமூர்த்தி. நெஞ்சுக்குள் பச்சை குத்திக் கொள்ளாத குறையாக வாழ்நாள் முழுவதும் தன் தலைவராகச் ஐயா சத்தியமூர்த்தி அவர்களையும் பெருந்தலைவர் காமராசர் ஏற்றுப் பின்பற்றினார்.
சொத்து சுகம் நாடார் ,
சொந்தந்தனை நாடார்
பொன்னென்றும் நாடார் ,
பொருள் நாடார்,
தான்பிறந்த அன்னையையும் நாடார் ,
ஆசைதனை நாடார் ,
நாடொன்றே நாடித் – தன்
நலமொன்றும் நாடாத
நாடாரை நாடென்றார்.
என்று கவியரசு கண்ணதாசன் கர்மவீரரைப் போற்றிப் பாடியுள்ளார்.
பெருந்தலவர் காமராஜர் எப்படி மகாத்மா காந்தியடிகளையும் ஜவஹர்லால் நேருவையும் தீரர் சத்தியமூர்த்தியையும் தன்னுடைய முன்னோடித் தலைவர்களாக, வழிகாட்டிகளாக நெஞ்சத்தில் பதித்துக் கொண்டு தன் வாழ்நாளெல்லாம் வாழ்ந்து சிறந்தாரோ, அதைப்போல தன்னுடைய வாழ்நாளில் அரசியலின் முன் மாதிரியாக சித்தன் ஐயா பெருந்தலைவர் காமராசரை நெஞ்சுக்குள் பதித்து வைத்துக் கொண்டார்.
பெருந்தலைவர் காமராசரைச் சந்தித்து விட்டு அவர் திரும்பிய அந்த முதல் பார்வையிலேயே தன்னுடைய அரசியல் வாழ்வின் கடைசி வரை நேர்மையாகவும் எந்தப் பழிபாவத்துக்கும் லஞ்ச லாவண்யத்துக்கும் இடம் கொடாமல் நேர்மையாக வாழ வேண்டும் என்று தன்னுடைய ஆழ் மனதில் பதித்துக் கொண்டு அறம் சார்ந்த அரசியலை முன்னெடுத்தவரே சித்தன் ஐயா.
சித்தன் ஐயா தனது முப்பதாவது வயதில் முதன்முதலில் 1967 ஆம் ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். அப்போதிருந்து, 1991 ஆம் ஆண்டைத் தவிர, மற்ற அனைத்துச் சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றிவாகை சூடி வந்திருக்கின்றார். இந்த வெற்றிகள் அவருடைய கலப்படமில்லாத நேர்மைக்குக் கிடைத்த பெருமைகளாகும்.
ஐயாவின் தேர்தல் சாதனை:
கடைசியாகத் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான காங்கிரஸ் வேட்பாளராக சித்தன் ஐயா நின்ற போது, அவர் எண்பது வயது இளைஞர். அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, தேர்தல் களத்தில் அனுபவம் வாய்ந்த ஒரு முன்னுதாரணத் தலைவராக உள்ளார்.
அவர் கடந்த ஐம்பதாண்டு காலமாக இதுவரை பன்னிரண்டு முறை இந்திய பாராளுமன்றத்துக்கும் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கும் பல தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். 1957 முதல் தேர்தல் களத்தில் இருக்கும் தானைத்தலைவர் கலைஞருக்கு அடுத்து, சித்தன் ஐயா அதிகத் தேர்தல்களில் போட்டியிட்டு சாதனை படைத்திருக்கின்றார். ஒரு பாராளுமன்றவாதியாக நான் மிகப் பிரம்மித்து வியந்து பார்க்கின்ற சாதனை இது!
கேள்வியின் நாயகராக சித்தன் ஐயா:
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு அல்லவா! அந்த வகையில் மக்கள் பணியாற்றுவதற்காகப் பாராளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் செல்லுகின்ற மக்கள் பிரதிநிதிகளில். துணிச்சலோடும் போர்க்குணத்தோடும் தங்கள் தொகுதியில் தீர்க்கப்படாமல் இருக்கின்ற மக்கள் பிரச்சினைகளைப் பேசுகின்ற சிலருள் சித்தன் ஐயா முக்கியமானவர். சட்டமன்றத்தில் அதிகப்படியான கேள்விகளை எழுப்பிப் பதக்கம் வெல்லுகின்ற அளவுக்குக் கேள்விக்கணைகளைத் தொடுத்து மக்கள் பணியாற்றி இருப்பதே சித்தன் ஐயாவின் தனிச் சிறப்பாகும்.
தான் தேர்ந்தெடுக்கப்பட்ட திருமங்கலம் தொகுதிக்காகவும் நாடாளுமன்றத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட திண்டுக்கல் தொகுதிக்காகவும். தொடர்ந்து கேள்வி நேரங்களில் கேள்வி எழுப்பி அந்த மக்களின் மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் வித்திட்டவர்.
1967-71 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிகபட்ச எண்ணிக்கையிலான (ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட வினாக்கள்) கேள்விகளை எழுப்பியதற்காக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகத்திடமிருந்து வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்திருக்கின்றார். இது அவர்தம் கடமையுணர்ச்சிக்கான சான்று!
அதுமட்டுமல்லாமல், 1997 ஆம் ஆண்டு ஐ.நா. பொதுச் சபையில் இந்தியக் குழுவின் உறுப்பினராக இருந்து எழுச்சியுரையாற்றி உள்ளார். தன்னுடைய ஆங்கிலப் புலமையாலும் வரலாற்றுப் பேரறிவாலுமே இத்தகைய சாதனையை அவரால் படைக்க முடிந்திருக்கின்றது.
இளந்தலைவர் ராஜீவ்காந்தியின் மீதான பற்று:
திண்டுக்கல் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் பிரதமர் திரு.ராஜீவ் காந்தி, ஜி.கே.மூப்பனார் ஐயா ஆகியோரின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. அப்போது தான் நேசித்த தலைவர்களை வாயாறப் புகழ்ந்து விதந்தோதினார். அதிலும் அன்றைய இளைய இந்தியாவின் சிற்பியாகத் திகழ்ந்த தலைவர் ராஜீவ் காந்தியின் மீது அளப்பரிய அன்பு வைத்திருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட என்.எஸ்.வி.சித்தன் ஐயா பேசும்போது, “கட்சித் தாவல் தடைச்சட்டம், தொலைத்தொடர்பு வசதி உள்ளிட்ட பல்வேறு சட்டங்களையும், திட்டங்களையும் நாட்டில் அறிமுகப்படுத்தியவர் இளந்தலைவர் ராஜீவ் காந்தி. அவருடைய துடிப்பான செயல்பாடும் எட்டுத்திக்கிலும் உள்ள புதிய தொழில்நுட்பங்களை இந்தியாவிற்குக் கொண்டு வந்து சேர்க்கும் பாங்கும் வேறாருக்கும் வாய்க்காத அரிய திறன்” என்று திரு.ராஜீவ்காந்தியின் செயல்திறத்தைப் போற்றிப் புகழ்ந்தார்.
தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பதின்மூன்று முறை திரு.ராஜீவ் காந்தி தமிழ்நாட்டிற்கு வந்ததாகக் குறிப்பிடும் சித்தன் ஐயா, திரு.ராஜீவ் காந்தியின் மறைவால், இந்தியாவின் வளர்ச்சி முப்பது ஆண்டுகள் பின் தங்கிவிட்டது என்று தன் வருத்தத்தை அக்கூட்டத்தில் அழுத்தந்திருத்தமாகப் பதிவு செய்தார். இப்படி தன் மனதிற்குப் பட்டதை எந்தச் சபையிலும் சொல்லத் தயங்காத சீர்மிகு தலைவர் அவர்.
பிரதமர் மாண்புமிகு மோடியை விமர்சிக்கும் அரசியல் கூர்நோக்கு:
அரசியலில் இருந்து ஒதுங்கி நின்றாலும், தேசத்தின்மீது கொண்ட பற்றின் காரணமாகப் பிரதமர் மோடி அவர்களின் ஆட்சியையும் உற்று நோக்குகின்றார். மோடியின் அரசு, நாட்டின் வளர்ச்சிக்காக என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். காங்கிரஸ் அரசு செய்யாத எந்தத் திட்டத்தை, அவர்கள் செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டும் என்று ஒரு கவலை மிக்க பார்வையை முன்வைக்கின்றார்.
மேலும், காங்கிரஸின் தியாகத்தையும், திறனையும் வெல்லுமளவுக்கு இன்றைய ஆட்சியாளர்களிடம் எந்தப் பேராற்றலும் கிடையாது. அடுத்தடுத்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பின், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பேரியக்கத்தின் நிர்வாகிகள் கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட வேண்டும் என்ற அறிவுரையுடன், நாட்டுநலனில் அக்கறை கொண்டவராக இன்றளவும் திகழ்கின்றார். அரசியல் களத்தில் சிந்தனையாளர்களுக்கு, ஓய்வில்லை என்பதை நம்பும் இளைஞர் அவர்!
பெருந்தலைவர் காமராசரைக் காண வாய்ப்பில்லாதவர்கள் போற்றும் நம்காலத்து நேர்மையாளர்:
முதலமைச்சராக இருக்கும்போது, பெருந்தலைவர் காமராசர் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்த ஒரு சமயத்தில், அவருக்கு நிறைய ஊர்களில் கதர்த்துண்டுகள் போர்த்தி மரியாதை செய்திருக்கிறார்கள். நிறையத் துண்டுகள் போர்த்தப்பட்டதைக் கவனித்த ஒரு தொண்டர், இவ்வளவு துண்டுகளையும் வைத்து பெருந்தலைவர் காமராசர் என்ன செய்யப் போகிறார், நம்மைப் போன்ற தொண்டர்களுக்குத்தானே கொடுக்கப்போகிறார், என்று எண்ணி ஒரு பெரிய துண்டை எடுத்துத் தனக்காக வைத்துக்கொண்டிருக்கிறார்.
கூட்டம் முடிந்து தங்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தவுடன் அந்தத் தொண்டரைக் பெருந்தலைவர் காமராசர் அழைத்து, “ஒரு துண்டை நீ எடுத்து வைத்திருக்கிறாய் அல்லவா? அதை அந்த மூட்டையில் சேர்த்துவிடு” என்றாராம். அந்தத் தொண்டர், ஒரு சாதாரணத் துண்டை எடுத்ததற்கு இவ்வளவு தூரம் நினைவு வைத்துத் தலைவர் கேட்டுவிட்டாரே என மனம் வருந்தியிருக்கிறார். அதற்கு “தம்பி உனக்கு நான் வேறு நல்ல துண்டு வாங்கித் தருகிறேன். ஆனால், இந்தத் துண்டை நாம் தொடக்கூடாது. ஏனென்றால், இவையெல்லாம் சென்னையில் இருக்கிற பாலமந்திர் ஏழைப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்குக் கொடுக்க வேண்டியவையாகும். ஏழைகளுக்கு உதவுவதற்காகத்தான் இந்த ஏற்பாடு” என்றிருக்கிறார் பெருந்தலைவர் காமராசர்.
பெருந்தலைவர் காமராசரின் இந்த இரக்கக் குணத்தையும், நேர்மைத்தன்மையையும் தனக்குள் புகுத்திக் கொண்டு, தன் அரசியல் பயணத்தின் நெடுகிலும் நல்மன அரசியல் தலைவராக இன்றளவும் நம்மிடையே வாழும் பெருமைக்குரியவரே அவர்!
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
எனும் வள்ளுவன் வாய்மொழியின்படி, வாழ்ந்து சிறந்து நிற்பவரே சித்தன் ஐயா என்றால், அதில் எள்முனையளவும் மிகையில்லை.
நாடாளுமன்றத்தையே வீடாகக் கருதியவர்:
இரு அவைகளிலும் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்படும் போதும், மிக முக்கிய விவாதங்களின் போதும், குளிர்காலக் கூட்டத்தொடர்களின் போதும் தொடர்ந்து வருகைபுரியாத எத்தனையோ மக்களவை உறுப்பினர்களைப் பார்த்திருக்கின்றோம். மிகக் குறைவான வருகைப்பதிவைக் கொண்டவர்களும் இருக்கின்றார்கள்.
ஆனால், நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் ஏறத்தாழ முழுமையான வருகைப் பதிவைத் தந்து சிறந்த அரசியல்வாதியாக, சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக, சிறந்த சட்டமன்ற உறுப்பினராக ஜனநாயகக் கடமை ஆற்றியவரே சித்தன் ஐயா. அந்த வகையில் எனக்கெல்லாம் மிகச் சிறந்த உந்துதல் தருகின்ற முன்னோடி அவர்!
திருமங்கலமும் திண்டுக்கல்லுமே உயிர்மூச்சு:
தான் இளம் வயதில் வெற்றி பெற்று சென்ற முதல் சட்டமன்ற வாய்ப்பிலேயே திருமங்கலம் தொகுதி மக்களுக்காகக் கூர்மையான கேள்விகளை எழுப்பி அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களைக் கொண்டு வந்து சேர்க்கக் காரணமாக இருந்திருக்கிறார். அவருக்கு வாக்களித்த மக்கள் தொடர்ந்து அதே தொகுதியில் எத்தனை முறை நின்றாலும் அவருக்குத் தொடர்ந்து வெற்றிக்கனியையே பரிசாகத் தந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவருடைய நேர்மையின் மீதும் அவருடைய மக்கள் பணியின் மீதும் மக்கள் மாபெரும் மரியாதையை இன்றளவும் வைத்திருக்கின்றார்கள்.
மனிதர்களை எங்களால்
மந்திரிகளாக்க முடிகிறது
மந்திரிகளைத் தான் எங்களால்
மனிதர்களாக்க முடியவில்லை
என்று கவிஞர் வாலி ஐயா ஒரு கவிதை எழுதி இருப்பார். ஆனால் நம்முடைய சித்தன் ஐயா அவர்கள் எப்படி தன்னுடைய முப்பதாவது வயதில் எளிய அரசியல்வாதியாக, எளிய மனிதராக மக்களோடு மக்களாக நின்று போராடும் சாமன்யராகத் தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினாரோ அதை இன்றுவரை கடைப்பிடித்து வருகின்ற ஒரு நேர்மைமிகு நின்றசீர் சித்தனாகத் திகழ்ந்து வருகின்றார்.
இன்றைக்கும் தமிழ்நாடு அவருடைய நேர்மையைப் போற்றிப் புகழ்கிறது. எங்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த சிறந்த பாராளுமன்றவாதி ஐயா சித்தன் அவர்கள் நீண்ட ஆயுளோடு நீடூழி வாழ வேண்டும் என்று வாழ்த்தி மகிழ்கிறேன். அவருடைய இந்தச் சிறு நூலாக்கம் இனி வரக்கூடிய இளந்தலைமுறை அரசியல்வாதிகளுக்கு ஒரு கையேடாக இருந்து அவர்களை நல்வழிப்படுத்த உதவிடும் என்று நம்புகிறேன்!
அவர்தம் குடும்பத்தில் எனது மூத்த மகள் சரயுவின் திருமண உறவின் மூலம் மருத்துவர் சித்தார்த்தராம் M.D.R.D-ஐ மருமகனாகப் பெற்று இணைந்த எங்களது பந்தம், அவரது மேலான வழிகாட்டுதலுடன் தொடர்கிறது. மனம் நிறைகிறது…
* * * * *
No comment