இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள் நூல் வெளியீட்டு விழா- மலர்ச்சி பிரபாகரன்

2002 இல் க்ரியாவில் வெளிவந்த C.மணி அவர்களின் ‘தாவோ தே ஜிங்’ - லாவோட்சு, இன்று வரை எனக்கு பெரிய பொக்கிஷம். மேற்கு மலைத் தொடரின் பல பகுதிகளில் இயற்கை இயலாளர், புகைப்படக் கலைஞர் இயான் லாக்வுட் எடுத்திருந்த புகைப்படங்களுடன், மிக நேர்த்தியான முறையில், அருமையான வடிவத்தில் தயாரிக்கப்பட்டிருந்த அந்தப் புத்தகம் எனக்குப் பல வாசல்களைத் திறந்துவிட்டது. பல்வேறு பண்பாடுகளின் மறைஞானச் சிந்தனைகளைக் கற்றவர், ஆங்கிலப் பேராசிரியர் எனும் பின்புலமுடன் தமிழின் முன்னோடிக் கவி ஊ. மணி தான், ‘தாவோயிஸம் என்பது பௌத்தம் முதலியவை மாதிரித் தனிமனித ஞானத்தின் விளைவு அல்ல. மாறாகப், பல காலகட்டங்களில் பல தலை முறைகளின் தேடலில் கிடைத்த விஷயம்’ என்கிற புரிதலைத் தந்தவர். தாவோவின் சாராம்சம் - 1) தனிமனித நலம், 2) சமூக இணக்கம், 3) பிரக்ஞையின் பரிணாம வளர்ச்சி எனவும், அதன் மூலம் ஞானம் பெற்றவர்கள் """"அந்த ரகசியத்தை மறைக்கவும் விரும்பவில்லை, பறைசாற்றவும் விரும்பவில்லை - நயமாகப் பரப்ப விரும்பினார்கள் - அதன் விளைவே, 1) லாவோட்சு எழுதிய ‘தாவோ தே ஜிங்’ உம், சுவாங் ட்சு எழுதிய ‘சுவாங் ட்சு’ என்ற நூலும் எனவும் தெரிந்து கொண்டேன். 
	‘தாவோ’ என்பது ஆமாம் என்பதற்கும், இல்லை என்பதற்கும் அப்பால் இருக்கிறது ; அது உடன்பாட்டுக்கும் எதிர்மறைக்கும் அப்பால் இருக்கிறது - எனவேதான் லாவோட்சு தாவோ பற்றிப் பேசும்போது, ‘தோன்றுகிறது’, ‘கருதப்படுகிறது’, ‘என்கிற மாதிரி இருக்கிறது’ என்பனவற்றைப் பயன்படுத்துகிறார் எனவும் தெரியவந்தது. 
‘தே’ என்றால் ஒரு விதையில் புதைந்திருக்கின்ற முளை.
		முளைப்பது விதையின் தே 
		அசைவது காற்றின் தே
		காண்பது கண்ணின் தே 
எனவும், 
‘வே’ என்றால் செய்வது, செல்படுவது, 
‘வூ’ என்றால் எதிர்மறை முன்னொட்டு, 
ஆகையால் ‘வூவே’ என்றால் ‘செய்யாமல், செயல்படாமல்’ இருப்பது 
எனவும் புரிந்துகொண்டேன். 
	குறைந்தபட்ச முயற்சியுடன், சரியான சமயத்தில், இயல்பாகச் செயல்படுவது - வூவே - 1) நீர் புவி ஈர்ப்பு விசையோடு சென்று, வளத்தைச் சேர்ப்பது மாதரி, 2) கைக்குழுந்தை ஒரு விரலை நீட்டி அல்லது ஒரு பார்வையை ஒட்டிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வது என்ற C.மணியின் விளக்கம் அதன் மீது பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தியது. 
	"வூவே யைப் பழக முடியாது அன்பைப் பழக முடியாத மாதிரி" என்றவுடன் இன்னும் பிரமிப்பும் ஈர்ப்பும் கூடியது. 
	‘தே’ என்பது போவது, நேரான இதயம் என்கிற 3 குறியீடுகளால் ஆனது. "ஒரு மனிதனின் வெளிப்புறப் பாதிப்பும், ஆத்மாவின் உட்புறப் பாதிப்பும் தான் ‘தே’.
	காப்பியம், மறைநூல் என்பதற்கான சீன வார்த்தை ஜிங், அது துணியில் நீட்ட வாக்கில் இருக்கிற பாவு நூல்; அது நீண்டு துணி முழுவதும் நுழைந்து செல்வது ‘அனுபவிப்பது’, ‘நடத்துவது’. 
	தாவோ தே ஜிங் என்றால் தாவோ மற்றும் தே பற்றிய நூல் எனவும் தெரிந்து கொண்டு பின் லாnhட்சு விற்குள் நுழைதலே தகும் என்பதால் இந்த நீண்ட விளக்கம், 
a) 5000 சித்திர எழுத்துக்களில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் இதுதான் பைபிளுக்கு அடுத்து மிக அதிக அளவில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல். 
b) காரணம் - ஒன்று - அதன் சுருக்கம், இரண்டாவது - முக்கிய விஷயங்களை முற்றிலும் புதிய கோணத்தில் பார்த்தல் - எளிமையாகச் சொல்லுதல். 
சீன மூல மொழியின் படைப்பை, ஆங்கில இடைமொழியின் வாயிலாக உணர்ந்து, அதனைத் தமிழில் மொழி பெயர்ப்பது அதிலும் மறைஞானச் சிந்தனைத் தளத்தில் இயங்கும் ஒன்றைத் தமிழில் மொழிபெயர்த்தல் மிகக் கடினம் சாரம் கெடாமல், சில முக்கியச் சீனப் பெயர்களையும், வார்த்தைகளையும், யின், யாங், சீ முதலானவற்றைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து, பின் பழக்கப்படுத்தி, அவனை நுழைய விடுதல் என்பது சுலபமான காரியம் அல்ல. 
தோழர் மலர்ச்சி பிரபாகரன் அதனைச் செரிவாகச் செய்திருக்கிறார் - ‘இருளுக்குள் இருள்’ எனும் தலைப்பிட்டு. பொதுவாக இந்த ஆசிரியர்களின் பெயர்களை வைத்து ஜாலம் பண்ணித் துவக்குவதிலே எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் - ‘மலர்ச்சி’ என்கிற அந்த அடைமொழியும், ‘பிரபாகரன்’ என்கிற பெயருமே ஒரு ‘தே’ தான். 
ஆத்மாவின் உட்புறப் பாதிப்பாய் ‘மலர்ச்சியும்’ மனிதனின் வெளிப்புறப் பாதிப்பாய் ‘பிரபாகரனும்’. C.மணியின் மொழிபெயர்ப்பில் கவிதைகளுக்குத் தலைப்பில்லை. அவருக்கு ‘ஞானி’ - பிரபாகரனுக்கோ ‘சித்தர்’- இப்படிப் புத்தி ஒட்பு நோக்க விழைந்தது. ‘நுங்’கென்று தலையில் குட்டுவைத்தது ‘தே’ - அவரவர்க்கான ‘தே’ வேறு - பாதை வேறு, இயல்பு வேறு இது புரியாமல், இந்த அடிப்படை இல்லாமல், தாவோ விற்குள்ளோ ‘அல்லது’ ‘இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருளுக்குள்ளே நுழையாதே என்றது’. 
"அழகாயிருப்பது அழகு என்று 
எல்லோரும் புரிந்து கொண்டால் 
விகாரம் தோன்றுகிறது. 
நன்மையை நன்மை என்று 
எல்லோரும் புரிந்து கொண்டால் 
தீமை தோன்றுகிறது. 
எனவே இருத்தல் 
இருத்தலின்மையைச் சுட்டிக்காட்டுகிறது. 
எளிமை 
கடினத்தைத் தோற்றுவிக்கிறது" 
எனும் C.மணியின் வரிகளும், 
"கடினமும் இலகுவும் வளர்ச்சியிலிருந்தும் 
தொலைவும் பக்கமும் அளவிலிருந்தும், 
முன்னும் பின்னும் வரிசையிலிருந்தும் உருவாகின்றன
எல்லாமும் ஒன்றையொன்று சார்ந்து 
தம்மை வெளிப்படுத்துகின்றன 
ஒப்பீடுகள் ஒன்றை ஒன்று அளவிடுகின்றன
ஆகவே, சித்தர் 
எதையும் செயலின்றிச் செயலாற்றுகின்றார்".
எனும் பிரபாகரினின் வரிகளும் ‘ஒப்பிடுதல்’ என்கிற அபத்தத்திலிருந்து என்னை ஒரு குட்டு வைத்து வெளியேற்றின. 
	அவரே மிகச் சரியாக, "அனுபவம் வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கிறது, புத்தகமும் அதிலுள்ள கருத்துக்களும் அனுபவம் பற்றிப் பேசுவதே அல்லாமல் இது உங்கள் அனுபவம் ஆகாது"" என்று தன் உரையில் குறிப்பிட்டும் விடுகிறார். 
	Heraclites என்ற அறிஞன் சொன்னது போல - ஒரே நதி என்றாலும் இரண்டாவது முறை அதிலே இறங்கும்போது அது வேறு நதி"". ஒரே லாவோட்சு தான் - ஆனால் பிரபாகரனின் மொழிபெயர்பில், இரண்டாவது முறையாக இறங்கும்போது அது எனக்கு வேறு அனுபவம். மிக முக்கியமாக, இதில் அவர் கையாண்டுள்ள ‘சித்தர்’ என்கிற பதம். ‘ஞானி’ என்கிறபோது கொஞ்சம் விலகி நிற்கின்ற தமிழ் மனம், ‘சித்தர்’ என்றவுடன் ஒரு அணுக்கமுடன் ஒட்டிக் கொள்கிறது. 
	"ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்போர்க்கு
	ஞானந்தான் ஏதுக்கடி - குதம்பாய்
	ஞானந்தான் ஏதுக்கடி 
	தாவரம் இல்லை தனக்கொரு வீடில்லை 
	தேவாரம் ஏதுக்கடி - குதம்பாய் 
	தேவாரம் ஏதுக்கடி 
	மாங்காய்ப்பால் உண்டு மலைமேல் இருப்போர்க்குத் 
	தேங்காய்ப்பால் ஏதுக்கடி - குதம்பாய் 
	தேங்காய்பால் ஏதுக்கடி 
	எனும் குதம்பைச் சித்தரும், 
	ஊத்தைச் சடலமென்றெண்ணாதே இதை 
	உப்பிட்ட பாண்டமென்றெண்ணாதே
	பார்த்த பேருக்கே ஊத்தையில்லை இதைப் 
	பார்த்துக் கொள் என்றன் உடலுக்குள்ளே"
என்ற கொங்கணச் சித்தரையும் கொண்ட தமிழ் மரபிற்குள் கி.மு. 571-ல் பிறந்த லாவோட்சுவை அறிமுகப்படுத்த இவர் கையாண்ட உத்தி மட்டுமல்ல அது. 
	‘சித்தர்’ என்ற அர்த்த பூர்வமான உருவகம் ‘ஞானி’ என்றதனையும் உள்ளடக்கியது என்கிற புரிதலும் அதிலே புலப்படுகிறது. 
	கிறித்துவின் காலத்திற்கு முன்னரே தமிழில் மொழிபெயர்ப்பு முயற்சிகள் உள்ளதை நாம் அறிவோம். 
	"நாடா கொன்றோ...." எனத் தொடங்கும் புறநானூற்றுப் பாடல், பாலி மொழியில் அமைந்த ‘தம்மபதம்’ எனும் பௌத்த நூலில் ‘அரகந்த வர்க்கம்’ எனும் பகுதியில் பேசப்படும் அறநூல் கருத்தின் நேரடி மொழிபெயர்ப்பே என்பதை மு.கு. செகநாதராசா நிறுவி உள்ளார். மணிமேகலையின் ‘சமயக் கணக்கர் தம் திறங்கேட்ட காதையில்’ பெரும்பகுதி சிறந்த மொழிபெயர்ப்புக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதை மயிலை சீனி வேங்கடசாமி ஆராய்ந்து காட்டியுள்ளார் (பக்கம்-66, நாள் மலர்கள் - தொ.பரமசிவன்). 
	சீன மொழியின் மிகத் தொன்மையான தாவோவைத் தமிழ் மொழியில் தரும்பொழுது உரைநடையின் வீச்சு சற்று அதிகமாகத் தென்படுகிறது பிரபாகரனது மொழிபெயர்ப்பில். ஆனால் அது கூட வாசகனுக்காக, அவன் நெகிழ்ந்து நுழைவதற்காகக், கவிதை வடிவத்தில் மிக இறுக்கமின்றி இலகுவாகச் செய்யப்பட்டிருக்கலாம் அல்லது நீரின் நெகிழ்வியல்வோடு அவர் தாவோவை அவ்வாறே அறிந்து, உய்த்திருக்கலாம். 
	"சித்தர் வயிற்றிற்காகக் கொடுக்கிறார், புலன்களுக்காக அல்ல, சித்தர், நிறைவைத் தேடுவதில்லை தேடலின்றி, எதிர்பார்ப்பின்றி அவர் விழிப்புடன் இருக்கிறார் - அவரால் அனைத்தையும் வரவேற்க முடியும்" 
"பிறரைச் சம்மதிக்க வைக்க அவர் முயல்வதில்லை, 
	ஏனெனில், அவர் தன்னுள் நிறைவடைந்து உள்ளார், 
	பிறரது அங்கீகாரச் சான்றிதழ்கள் 
	அவருக்குத் தேவையில்லை, 
	ஏனெனில், அவர் அவரை 
	ஏற்றுக் கொண்டுள்ளார் - போன்ற கனகச்சிதமான வாரிகளும்,  
அதனால், 
	அகில உலகமும் அவரை ஏற்றுக் கொள்கிறது"" 

மரத்தச்சன் இளவசரன். 
	புத்தர் சொல்கிறார். "ஒரே ஒரு களங்கமற்ற உயர்ந்த நம்பிக்கை கூட மனிதனை மாற்றிவிடும். ஒரு களங்கமற்ற நம்பிக்கை...." அதனை மறுபடியும் லாவோட்சு மூலம் எனக்குள் விதைத்திருக்கிறார், பிரபாகரன். அவருக்கும் ‘எழுத்து’ பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள். 
	ஏசு சொல்கிறார்..... "நீங்கள் இரண்டை ஒன்றாக்க ஆரம்பிக்கும்போது, உங்களுடைய உள்ளத்தை வெளிக்காட்டும் போது, வெளியை உள்ளாக்கும்போது, மேல் கீழாகும் போது, ஆண் ஆணாக இல்லாது, பெண் பெண்ணாக இல்லாது, ஆணும், பெண்ணும் ஒன்றாக மாறிப் போகும்போது தான் ராஜ்யத்தில் நுழைய முடியும்" 
	லாவோட்சுவின் ராஜ்யத்திற்குள் கொஞ்சம் நுழைய முடிந்த இந்த வாய்ப்பிற்கு நன்றி.
                                             * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *