சொல்லில் உயிர்க்கும் ப்ரெய்லி நகரம்
படிகளின் மீதிருக்கும் குழந்தையிடம்
நீங்கள் பேச முடியாது
படிகளின் மீதிருக்கும் குழந்தை காரணமாக
அழ மட்டுமே முடியும் உங்களால்
படிகளின் மீதிருக்கும் குழந்தைக்கு
எதையும் நீங்கள் தர முடியாது
படிகளின் மீதிருக்கும் குழந்தை தன்னந்தனியாய்…
ஆனால் அது பெயரற்றது –
எனவே நீங்கள் அதைக் கூப்பிட முடியாது
நீங்கள் மாத்திரமே கூப்பிடப்படுவீர்கள்
ஷண்டாரோ தனிக்காவா(1931- )
(சமககால உலகக் கவிதை (கவிதைகள்) – பிரம்மராஜன் : 462)
ஒரு கவிதையும் அப்படித்தான். அதனோடு நீங்கள் உங்கள் மொழியில் பேச முடியாது; அதற்குப் பிடிமானமாக எதைத் தருவீர்கள் – அது தனித்திருக்கும் குப்புற விழுதலின் அபாயத்தோடும், சமநிலை தவறாத சாத்தியத்தோடும்; உண்மையில், அதுவும் பெயரற்றது, பெயர் வேண்டாதது, பெயரிடமுடியாததும்கூட; அதுவாக வேண்டி விரும்பி உங்களை அழைக்கலாம்; நீங்கள் அதனைக் கூப்பிட முடியாது. ப்ரெய்லியில் உறைந்திருக்கும் நகரம் ஒரு சில இளக்கங்களில் என்னை அழைத்ததை உங்களிடம் பகிர வந்திருக்கிறேன்.
“அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிதை இதழ் Choice. அது தன் 7+8ஆம் இதழ்களை ஒரு பெரும் தொகுப்பாக வெளியிட்டது(1972). அறியப்பட்டவர், புதியவர், ஆசிரியர், அவரது மாணவர், அமெரிக்கர், அல்லாதவர் எனும் வேறுபாடுகளற்றுக் கவிதைகள் தெரிவு செய்யப்பட்டன.” (தமிழ்நாடன் – உலகக் கவிதைகள்:12)
இதுவரை அச்சு எழுத்தில் புத்தக வடிவில் அறியப்படாதவர், ஆனால் தகுதியானவர், புதியவர், என்கிற அடையாளம் மட்டுமே உடைய இளங்கோவின் இத்தொகுப்பு பல புதுமைகளைத் தாங்கி, மதிப்பிற்குரிய கவிஞர்.சுகுமாறன் சொன்னது போல, எமது பொறாமையின் வெதுவெதுப்போடு வெளி வந்துள்ளது.
பல கவிதை நூல்கள் வெவ்வேறு வித்யாசமான முயற்சிகளோடு வெளி வந்திருக்கின்றன. தன்னை ஆகர்சித்த, வியப்புறவைத்த வடிவமைப்புக்கள் குறித்து திரு.சுகுமாறன் பட்டியல் ஒன்றை மிக அழகாக முன்னுரையில் தந்திருக்கின்றார். என்னை மிகக் கவர்ந்த முயற்சி ஒன்றுண்டு –
ராபர்ட்டோ யூவாரோஸ் (1925-1995)
“யூவாரோயின் முதல் கவிதைத் தொகுதி 1958 Vertical Poetry என்ற தலைப்பில் வெளியானது. 1963 இல் வெளிவந்த இரண்டாவது தொகுதி Second Vertical Poetry என்று அழைக்கப்பட்டது. இதற்குப் பிறகு இரண்டு தொகுதிகள் இதுவரை வெளிவந்திருக்கின்றன – எண் வரிசை மாத்திரம் கூடுதலாக்கப்பட்டு, மற்றபடி தலைப்பு ஒன்றேதான். ஒரு வாழ்நாளில் அடுத்தடுத்த படைப்புகள்போல அவருடைய எந்தக் கவிதைக்கும் தலைப்பு கிடையாது, வெறும் எண்கள் மாத்திரமே தரப்பட்டுள்ளன.” (சமககால உலகக் கவிதை – பிரம்மராஜன்: 324 – 325) வாழ்வே நீண்டதொரு, பகுக்கவியலாக் கவிதை எனும் குறியீடாகப் பட்டது அவரது மேற்சொன்ன முயற்சி.
மேலிருந்து கீழாக அல்லாமல், கீழிருந்து மேலாக, பக்கவாட்டிலிருந்து, குறுக்கும் நெடுக்குமாக – இப்படிப் பல உத்திகள், உலகளவில் பல கவிதைத் தொகுப்புகளிலே பரிட்சித்துப் பார்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால் தமிழிலக்கியச் சூழலில் தரமானதொரு பதிப்பைத் தன் கைச்செலவின்றி வெளிக்கொணர்வதே கானல் நீர் என்கையில்,
ஒரு தனித்த புல்டோஸர் தன் மலையுடன் போரிடுகிறது
ஒரு கவிஞனைப் போல,
(சமககால உலகக் கவிதை – பிரம்மராஜன் : 364)
என்பது போலத் தரமாகப் பிரசுரிப்பது கடினமென்கையில், இளங்கோவிற்குக் கிடைத்த இந்த வாய்ப்பு அவரது கவிதைகளுக்குக்கான பரிசு என்றே சொல்ல வேண்டும்.
மொழியில் கடைசியான கண்ணீர்த் துளி
இருக்குமெனில்
அது எனது கோப்பைக்குள் விழட்டும். (பாப்லோ நெருதா கவிதைகள்: ப.103) (கவிதையின் அழியாத காதலன் – பா.இரவிக்குமார்)
என்பது போல இதுவரை பிரசுரம் காணாத இக் கவிஞனின் துளியைத் தனது கோப்பைக்குள் ஏந்திக் கொண்ட பதிப்பாளர் திரு.சீனிவாசனுக்கு எனது பாராட்டுக்கள்.
உணர்ச்சிவயப்படுதலின் நிறங்களை
என்ன செய்வதென்று
உலகின்
ஆகச் சிறந்த ஓவியனின் தூரிகையை விட
பிஞ்சு விரல்களுக்குத் தெரிந்திருக்கிறது.
(ப்ரெய்லியில் உறைந்திருக்கும் நகரம்)
ஆச்சர்யமான ஒற்றுமை பாருங்கள்
தூரிகை ஏந்துகிற பிஞ்சுவிரல் இந்தப் பதிப்பாளருடையது!
‘மெய்ப்பொருள்’ காண்பது அறிவை மட்டுமல்ல கவிதையின் ஊற்றையும் கூடத்தான், என்று மெய்ப்பித்திருக்கிறார்.
ஒருங்கிணைந்த இத்தாலியை உருவாக்கியவர்களில் ஒருவரான கேவர் 19ஆம் நூற்றாண்டில் கூறினார்: ‘நமது நாட்டுக்குச் செய்ததையெல்லாம் நமக்குச் செய்துகொண்டால் என்ன வகையான அயோக்கியர்கள் நாமெல்லாம்” (அரசியல்–கென்னத் மினோக்: 76,77)
தனக்கே தான் செய்து கொள்ளாதைக் கூட இளங்கோவிற்கு, சீனிவாசன் நீங்கள் செய்திருக்கிறீர்கள் என்றால், அதற்கான யோக்யத்தன்மை எப்படிப்பட்டதாக இருக்கும்! மனப்பூர்வமான பாராட்டுக்கள்!
சரி, ஒரு கவிதைத் தொகுப்பிற்கு ஏன் இவ்வளவு மெனக்கிட வேண்டும்? வெறும் அச்சு வடிவில் அவற்றைக் கடத்துவதுதானே அறிவுஜீவித்தனம்? இம்மாதிரி முயற்சிகளெல்லாம் not on par with intellectuals என high brow வாசகர்கள், விமர்சகர்கள் தோள் குலுக்கி, ஒதுக்கலாம். அவர்களுக்கு நான் நீட்சேவின்,
“ஒரு தத்துவவாதிக்கு ‘நன்மையும் அழகும் ஒன்றே’ என்று சொல்வது பெரும்பழி; அதில் ‘உண்மையும்’ என்று சேர்த்துக்கொண்டால், அவனை நன்றாக உதைக்க வேண்டும். உண்மை குரூபமானது (அழகற்றது). நாம் உண்மையால் அழிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் கலையை வைத்திருக்கிறோம்,” (நீட்சே – மைக்கேல் டேனர்:117) கூற்றை நினைவூட்டுவேன்.
கலாரசனையுடன், புதுமையாக ஒரு பிரதி, குறிப்பாகக் கவிதைப் பிரதி வருவது நம்மை நாம் மேலும் உயிர்ப்பித்துக் கொள்ளத்தானே?
“ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில்
தீர்ந்து விடலாம் பிறவித் தாகம்
ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில்
தீர்வதாயில்லை பிறவித் தாகம்”
என்கிற இளங்கோவின் இத் தொகுப்பு முழுக்க, முழுக்க சொற்கள், சொற்கள் – அவற்றின் பல்வேறு ஊடுபாவு அர்த்தங்கள். சொல் இவருக்குச் சொர்க்கமும், சிலுவையுமாய், இவரை அடி முதல் முடி வரை ஆக்ரமித்துக் கொண்டிருக்கின்ற கவிதைத் தோலாகாவுமிருக்கின்றது. அதுவே ‘கவிதைக்காரன்’ என்கிற இவரது அடைமொழியினை இவர் அணிந்து கொள்வதனை அங்கீகரிக்கும் அங்கியாகவுமிருக்கிறது.
இவ்வுலகில், ‘சிறப்புரிமை பெற்ற பார்வையாளன் எவனும் இல்லை’ என்கையில் அதென்ன இவர் மட்டும் ‘கவிதைக்காரன்’ (என்னை அதென்ன இவர் மட்டும் தமிழச்சி, அப்போ நாங்களெல்லாம் யார் எனச் சிலர் கேலி தடவிய குரோதத்தோடு கேட்பது போல) நீங்கள் கேட்கலாம். அவர்களுக்கெல்லாம் ‘சொற்கள்‘ எனும் புத்தகமெழுதிய சார்த்தரின் “சொற்களின் மூலமாக இந்த மனிதகுலம் முழுவதையும் வியாபித்திருப்பேன்” என்ற சொற்றொடரை நினைவூட்டி, அதனை அச்சொட்டாக இத் தொகுப்பில் நிகழ்த்தி இருக்கிறார் இளங்கோ என்பதையும் சுட்டிக் காட்டி, அவரது அடைமொழிக்கான நியாயம் சொல்வேன்.
“எழுத்தாளர்கள் மந்திரவாதிகள் மாதிரி சந்திரனைக் காட்ட தங்க நாணயம் கேட்பார்கள். கடைசியில் அவர்கள் நாலாணாவிற்கு முதுகைக் காட்டுவார்கள்.”
என்று சொன்ன அதே சார்த்தர் தான், மனிதன் தன்னை இடைவிடாது தினந்தோறும் புதிது புதிதாகக் கண்டுபிடித்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் கடமை எழுத்தாளரிடம் இருப்பதுதான் என்றும் கூறினார். (சார்த்தர் விடுதலையின் பாதைகள் – எஸ்.வி.ராஜதுரை : 66)
தன்னை புதிது புதிதாகக் கண்டு பிடிக்கிறானோ இல்லையோ, தன்னை உற்று நோக்க, உடன் புற உலகையும் உள் வாங்கி வெளிக் கொணர, சிந்தனையும், உணர்வெழுச்சியும் ஒரு சேரச் சந்திக்கும் புள்ளியில் பிரசவிக்கப்படும் கவிதையொன்றைக் கருக்கொள்வதென்பது ஒரு படைப்பாளிக்கான இயல்பான தேவையாகிவிடுகின்றது. தனக்கெனக் கடமை ஒன்று இல்லாவிட்டால் தான் என்ன, குடியா முழுகிவிடும் எனக் கேட்கும் பின்நவீனத்துவ காலகட்டப் படைப்பாளிகள், ஒடுக்கப்படும், சுரண்டப்படும் மக்களின் உரிமைக்குப் போராடுவதற்காக எழுத்துப் பணியை நிறுத்திவிடுவதற்கு எப்போதும் தயாராக இருந்த சார்த்தரைத் தாண்டி வந்துவிட்டார்கள்.
உதாரணத்திற்கு,
மிஷல் ஃபூக்கோ, “சார்த்தரின் ‘இயங்கியல் அறிவு பற்றிய விமர்சனம்’ (Critique of Dialectical Reason) என்னும் நூல் “இருபதாம் நூற்றாண்டைக் கற்பனை செய்து பார்க்கும் பத்தொன்பதாம் நூற்றாண்டு மனிதனால் எழுதப்பட்டது” என்று கூறினார். மார்க்ஸைப் பற்றியும்கூட இதே தொனியில் ஃபூக்கோ எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது: “எப்படி மீன் தண்ணீரில் வாழும் ஜீவராசியோ அப்படி மார்க்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டு ஜீவராசி” (அதாவது பத்தொன்பதொம் நூற்றாண்டுக்குப் பிறகு மார்க்ஸின் பொருத்தப்பட்டு மறைந்துவிட்டது).” (சார்த்தர் விடுதலையின் பாதைகள் – எஸ்.வி.ராஜதுரை : 13) ஆனால் அவர்களே கூட, கருத்துப் பரப்புக்காகக் கவிதையைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் சுத்த இலக்கியவாதிகளைப் ‘பில்லி சூன்ய வேலைக்காரர்கள்’ என்று வர்ணித்த நெருதாவின் கவிதைகளை ஏற்க மறுக்கவில்லை. கொண்டாடத் தவறவில்லை.
தத்துவத்தை விடக் கவிதை ஒரு படி மேலாகக் கர்வமுற்றிருப்பது அதனால்தான் – ஒரு அனுபவத்தை மூளையால் அள்ளும் போது குறைபடும் இடத்தைக் கவிஞன் தன் இதயத்தைக் கொண்டு நிரப்புகிறான். மேலான தத்துவவாதிகள் எப்போதும் தம்மைவிட மேலான கவிஞர்களைப் பின் தொடர்ந்து வருவது அதனால்தான்.
தொகுப்பில் தொடர்ந்து பேசப்படுபவை – வனம், ஏடன் தோட்டப் பின்புலம், ஆதாம், ஏவாள், ஆப்பிள், நாகம், விலா, வெயில், சிறகுகள் – என்றாலும்,
“சொல் தனக்குகந்த வாசகனைச்
சென்று சேர்ந்துவிடும்” என்று பால்ஸெலான் நம்பியதைப் போலவே இத்தொகுப்பில் என்னைப் பெரிதும் ஈர்த்தவை சொல், சொற்கள் – இவை குறித்த, பற்றிய கவிதைகள்.
சொல்லின் சருகுகள், கைப்பற்றி முறுக்கிடத் தீரும் அவஸ்தையின் சொற்கள் கூட்டம்,
கடக்கும் சந்தையிலிருக்கும் அனைத்துத் தூரிகைகளும் ஒளிந்து கொள்கின்றன
தமக்கு வாகான ஒரு சொல்லின் பின்னே,
உன் சொற் கூச்சலை வேடிக்கை பார்க்கச் சொல்லி
இரண்டு காதுகளையும் அறுத்து வைக்கிறேன்
வான்கோவின் கத்தி கொண்டு –
சொற்களின் வினோத வடிவங்கள் மீது கானல் நீரின் நிழல் மிதக்கிறது,
ஏந்திய கை நிறைய காளானாக முளைத்துவிட்ட சொற்குடைகளின்
வனத்தைத் தவளையிடம் காண்பித்தேன்.
கருவளையத்தை விட்டுக் கீழிறங்கும் சொற்கள்.
சொல் மீது பரவும் சத்தியத்தின் ரத்தக் கசிவு,
புசிக்கத் தூண்டும் நாவலில் பதியனிட்ட சொற்கள் சுரக்கும்,
வெளியேறிய சொற்களின் தந்திரத்தை
இரவின் குளிர்ந்த உடல் பொத்தலிடத் தொடங்குகிறது –
வெளியேறிய சொற்களின் தந்திரம் கொண்ட
நனவிலிச் செதிலின் தவம் என
உடல் முழுக்க வீங்கும் சொற்கள்,
திறக்க மறுக்கும் உதடுகளுக்குப் பின்னே
நாக்கின் நுனியில் விஷம் குளிர்ந்து உலரும் சொல்லின் ருசியை,
கொசுக்களின் ரிங்காரச் சிறகுகளில் மின்னுகிறது சொற்களின் வெளிச்சம்.
சொற்கள் நொறுங்கும் உடைவை கையேந்தித் தவறும் கேவல் ஒலி,
நேற்றைய கெட்ட வார்த்தையின் துர்வாடை,
சொற் பைத்தியங்கள் திணறுகின்றன,
யாவற்றுக்கும் ஒத்திசைந்து திணறும் சொற் பைத்தியங்களின் சபை.
நிறம் மயங்கும் சொற்கள்,
பரிமாறலில் தவறிவிழுந்த சொற்களின் வெளிச்சம்,
அனிச்சையாய் உதிர்ந்து விழும் ஒரு சொல்லின் அர்த்தத்தைக்
கழுவி வழிகிறது புனித ரத்தம்.
(பிரெய்லியில் உறங்கும் நகரம்)
எனப் பல்வேறு கவிதைகளில் சொற்கள் குறித்து வெவ்வேறு சித்திரங்களை எழுப்பினாலும், ஒரு சோறு பதமாகத், தற்கொலையை இவ்வளவு நுட்பமான படிமக் கவிதையாக வடிக்க முடியுமா என்று என்னை வியக்க வைத்த, பின் வரும் கவிதையைப் பகிர்கிறேன்.
அடுக்குக் குலையும் நொடியிழை பிம்பம்
காயங்கள் ஆறுவதற்கான கயிறு
தனிமைப் பிசிர் கொண்டு முறுக்குகின்றது குரல்கட்டை
சொற்கள் நொறுங்கும் உடைவை
கையேந்தித் தவறும்
கேவல் ஒலி
கண் பிதுக்கும் இறுதிக்காட்சி நொடியிழை பிடித்து
உறையத் தொடங்குகிறது அடுக்குக் குலையும் பிம்பமாக
வெளிவரும் நாக்கின் நீளத்தை
நுனியில் தொங்கும் கடைசி உச்சரிப்பை
கால் உதறலோடு உருளும் ஸ்டூலின் கால்கள்
மல்லாந்து திகைக்கின்றன
(பிரெய்லியில் உறங்கும் நகரம்)
தொகுப்பில் சொற்கள் அளவிற்குக் கையாளப்பட்ட சொல் இறகு, சிறகுகள்:
சாபத்தின் சிறகுகளில் ஒட்டடை படிந்திருக்கிறது
சிறகு பிய்ந்து தரையிறங்கும் பறவை இறகைத் தவிர வேறில்லை.
(பிரெய்லியில் உறங்கும் நகரம்)
என்று பிரயோகங்கள் பல இருப்பினும் அவை எனக்குத் தட்டையாகவே பட்டன. விதிவிலக்காக, அற்புதமானதொரு பின்னலாக, மனித உடல், உரையாடல், பறவை, கூடு, பறத்தல், மெளனம் – இவற்றைக் கொண்டு வெகு அழககாகப் பின்னப்பட்ட நிறமற்று உதிரும் உடல்களின் இறகு எனும் பின்வரும் கவிதை என்னை மிகக் கவர்ந்தது.
நிறமற்று உதிரும் உடல்களின் இறகு
நம்
இருவருக்கிடையில் ஒரு குறுகிய மௌனமிருந்தது
அதுவரை பேசிய உரையாடல்கள் அங்கு மிதக்கின்றன
அவற்றிலிருந்து வெளியேறும் பறவைகள்
கூடு திரும்புவதில்லை என்றுமே
நிறமற்ற அதன் சிறகிலிருந்து உதிர்ந்த இரண்டொரு
இறகுகளோடு
நாம் திரும்ப வேண்டியிருந்தது
தத்தம் உடல்களுக்கு
சாய்ந்த பொழுதின் துயரைப் பூசி
கூடுடைய பறவையின் திசையெங்கும் பரவத் தொடங்குகிறது
பொன்னந்தி நிறத்தில் உரையாடலின் இசை
ஊற்றுக்கண் பிளக்கும் ரகசியத்தின் முதல் துளியில்
உப்பென பூக்கிறது பறத்தலின் மௌனச் சொல்
(பிரெய்லியில் உறங்கும் நகரம்)
வான்கோவும், காதுகளும் கலைஞர்களுக்கும், படிப்பாளிகளுக்கும் சலிக்காத உந்துதல் என்பதை மெய்ப்பிப்பது போல இளங்கோவின் பல கவிதைகளில் காதுகள், அறுபட்ட காதுகள் ஒரு படிமமாக முன் வைக்கப்படுகின்றன
காதுகளை அறுத்து மெளனத்தின்
குப்பைத் தொட்டியில்
போடும்படி கட்டளையிடுகிறது.
சாத்தானின் முணுமுணுப்பு ரிங்கரிக்கும்
சில்வண்டு இரவில் கடவுளின் செவிகளிரண்டும்
கழன்றுவிழுகின்றன
ஆப்பிள் தோட்டத்தில்
உன் சொற் கூச்சலை
வேடிக்கை பார்க்கச் சொல்லி
இரண்டு காதுகளையும் அறுத்து வைக்கிறேன்
வான்கோவின் கக்தி கொண்டு
(பிரெய்லியில் உறங்கும் நகரம்)
நீர்மையும், நீர்மைப் பொழுதுகளும், மெளனக் கோப்பைகளின் தளும்பலும், கண்ணாடி, கண்ணாடிச் சில்லுகளின் உருவகங்களும் தருகின்ற வழமையான சக்கை வார்த்தைகள் அதிகமுள்ளனவோ என்கிற சந்தேகத்தை உடைத்து எரிகின்றன இளங்கோவின் இந்த இணையவெளி நூற்றாண்டிற்கான தனிப்பட்ட வார்த்தைகள்.
மைக்ரோ நீர்ப்புள்ளி, உலோக வேர்கள், ஒளியாண்டுத் தொலைவு, நியூரான் பின்னுகிற செய்தி, ஸ்கேனர் சிகப்பொளி, பஸ்ஸர் ஒலி, உலோக வரைபடங்கள், கேலக்ஸிக்கள், வளி மண்டலம், புதிய கிரகம், புற ஊ¡தாக் கதிர்கள், சாட்டிலைட், அலை ஒலி ஈர்ப்புக் கருவியின் ஆன்ட்டனாக்கள், நேனோ நொடி… எனப் புதிய பயன்பாட்டுப் புழங்கு சொற்கள் கவிதைகளில் மிக இலகுவாகக் கையாளப்பட்டிருக்கின்றன. இவற்றின் பிரயோகம் இளங்கோவின் கவிதை ஒரு மிகை உணர்ச்சி வகை (Romantic poetry) என்கிற வட்டத்திற்குள் அடைபட்டு விடாமல், நடப்புலகின் யதார்த்தத்தைப் பிறிதொரு உரைநடை உருவக மொழியில் சொல்லும் உத்தியைச் செயல்படுத்துகிறது.
‘தான்யா’ பற்றிய இரண்டு கவிதைகளுமே பிடித்தவை. எனக்கும் இளங்கோவிற்குமான பிடித்ததொரு ஒற்றுமை ஒன்றுண்டு – எனது கவிதைகளைப் போலவே இவருடைய கவிதைகளிலும் வெயில் வீடு சுற்றும் பூனையாய்த் தொடர்ந்து வருகின்றது.
வெப்பம் அனற்றும் அலமாரிக் கண்ணாடிக் கதவுகள்.
புன்னகைக்கிறாய்
அதிலிருந்து வீசும் வெயில் கண் கூசுகிறது.
சருகாகும்வரை காத்திருப்பதாக
என் மீது வெயில் பூசுகிறாய்.
இலைகளை ஊடுருவி
தோள்களின் வழியே நழுவும் வெயில்
நீ வந்த பிறகு
உன் மீதும் வரைய தன்னோடு வைத்திருக்கிறது
பூக்களின் நிழல்களிரண்டை.
பிறந்து சுழலும் துயரின் நிழல்
ஜன்னல் துளை வழியே இறங்கும்
வெயில் கற்றையைப் பற்றிக் கொள்கிறது.
(பிரெய்லியில் உறங்கும் நகரம்)
மிக ரசித்தேன் – வெயிலோடு இவருக்கிருக்கின்ற இந் நெருக்கம் எனக்கும் மிக அணுக்கம் என்பதால். குறிப்பாகப் பாராட்டப்பட வேண்டிய கவிதை – தான்யாவும், வெயிலும் பாத்திரங்களான, பின்வரும் அற்புதமான படிமக் கவிதை.
காகிதங்கள் மீதமரும் உடைந்த சதுரங்கள்
வராண்டாவில்
திசைக்கொன்றாக
உடைந்து கிடக்கிறது வெயில்
அதன் சதுரங்களை சீராக அடுக்கி
மேஜையில்
காகிதங்கள் பறக்காமலிருக்க வைத்தபடி
கைகளைத் தட்டி நிதானமாய்
பிடரி துள்ள நடந்து போகிறாள் தான்யா
(பிரெய்லியில் உறங்கும் நகரம்)
துவினோ எலிஜிஸ் (இரட்டைக் கையறுநிலைகள்) என்பதன் தொடக்கத்தில் ரில்கே எழுதுகிறார்: ‘அழகு என்பது ஒன்றுமில்லை/ஆனால் பயங்கரத்தின் தொடக்கம். அதையும் நாம் எப்படியாவது தாங்கிக்கொள்ளலாம்/ஆனால் அது அமைதியாக நம்மை அழிக்க மறுத்துவிடுவதால் நாம் பிரமிப்புக்குள்ளாகிறோம்’ (நீட்சே – மைக்கேல் டேனர்: 26,27)
இளங்கோவின் பின் வரும் 13வது குறிப்பு கவிதையில் அழகு மட்டுமல்ல, ICONS எனப்படுபவையும் கூட பேராபத்தாக மாறுகின்ற விதத்தை அழகாகப் பகடி செய்கிறது.
13வது குறிப்பு
உனது அழகைப் பற்றிய துண்டுக் குறிப்புகளை
உனக்கு மின்னஞ்சல் அனுப்பி வைத்தேன்
நேரில் சந்தித்தபோது சொன்னாய்
படியலில் இடம்பெற்றிருந்த
13வது குறிப்பு
மிகவும் பிடித்தமானதென்று
ஓர் அடையாளத்துக்காக சுழியிடப்படும் எண்கள்
வழிப்பாட்டுக்குரிய கடவுளாக மாறுவதை
எந்த யுகத்திலும் நிறுத்த முடிவதில்லை
உணர்வுகள் உறையவைக்கப்பட்டு அவை நிறுவனமாவதன் (branding) தொடக்கம் ஒருவேளை இது தானோ?
மெல்லப் பரிச்சயமாகும் ப்ரைலி புள்ளிகளோடு வந்து நிற்கிறது
எப்போதும் யாவற்றையும் நிறுத்திப் பார்க்கும்
ஓர் அசாதாரண முற்றுப் புள்ளி
(பிரெய்லியில் உறங்கும் நகரம்)
எனும் வரிகள் கவிதைத் தொகுப்பின் தலைப்பிற்கு நியாயம் செய்கின்றன. பின்வரும் புதிய சொல்லாடல்கள் சிலவற்றையும் இத் தொகுப்பிலே படித்து ரசித்தேன்:
தட்டும் கதவொலியில் டிக் என்று தொங்கியபடி இறக்கிறது சாவித் துவாரம்
மூத்தோர் விந்து உமட்டும் நாபி உள் முடிப்பில் தாயின் மூச்சுக்காற்று திணறுவதையும்
தற்கொலை பற்றி இன்னொரு சந்தர்பத்தில் பேசிக்கொள்வோம் துணைக்கு இரண்டொரு ஆட்கள் சேரட்டும்.
மிக அருகிலிருந்து பார்க்க நேர்ந்த ஒரு மரணத்திற்குப் பிறகு ப்ரியமானவளை புணரத் தூண்டும் ஹார்மோன்களை நொந்து கொள்ள வேண்டியதில்லை
எப்போதும் போலவே
அப்போதும் இருக்கலாம்.
புறங்கையில் நெளியும் பழைய நரம்பைப் போன்ற
இந்தத் திமிரை என்னசெய்ய என்று தெரியவில்லை
ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில்
தீர்ந்துவிடலாம் பிறவித் தாகம்.
ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில்
தீர்வதாயில்லை பிறவித் தாகம்.
கடவுளின் கால் பூட்சுக்குள்
ஒளிந்து கொண்டிருக்கிறது எனது துர் இரவு
ஒவ்வோர் எழுத்தின் வன்மைத்தையும்
அலசித்
தழுதழுத்த நாக்கின் நுனி சிவந்திருந்தது.
ஒரு மாய மானின் உடல் மொழியைக் கற்றுக்கொள்
என்று மின்னஞ்சல் அனுப்புகிறாய்
இடது புறங்கையின் நாள வீக்கத்தில்
புடைத்துக் கொண்டு நிற்கிறது
ஓர் ஏககால நினைவு
ஓர் அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு
கழற்றியெறியப்படும் கையுறையை ஒத்திருக்கிறது
நீ விரித்து வைத்த சந்தர்ப்பம்.
(பிரெய்லியில் உறங்கும் நகரம்)
எனில், குறைகளே இல்லாத தொகுப்பா என்கிற ஐயப்பாடு எழலாம். உண்டுதான். ஆனால் பல வருடங்கள் தொடர் பயணிக்கின்ற கவிஞனொருவனது வரைபடத்தில் இவை இயல்பான இடறல்களே – அவற்றை விட நிறைகள் நிறைய, அவை நிறைவு தருவனவும் கூட. உதாரணமாகக் ‘கூறியது கூறல்‘ எனும் கீழ் வருகின்ற, வார்த்தை, வாக்கியப் பிரயோகங்கள்:
ஓர் அந்தரங்கத்தில் அபூர்வ ரகசிய வழி மதில் மேல் பதிந்து கண்ணாடிச் சில்லுகளைக் கேட்டுப் பெறுகிறது.
அபூர்வத்தின் ரகசிய வழி அந்தரங்கத்தின் இருட்கிளையில்
ஒரு வேதாளமென தொங்கிக் கொண்டிருக்க
நெஞ்சு அதிர இறைஞ்சும் மன்றாடலின் முகட்டிலிருந்து நழுவி வீழ்கிறது ஒப்பந்த வாக்குறுதிகள்
நெஞ்சதிர இறைஞ்சிய மன்றாடலின் அசெளகரியத்தைப் பற்றி விவாதிக்கும் மாலைநேரம்.
இன்னும் திறவாத கதவொன்றின் வாசலில் மெழுகப்படுகிறது எளிதில் கடக்க முடியாத காலத்தின் சொற்ப நிழல்
இன்னும் திறவாத கதவுக்குப் பின்னால் விரியும் பெருங்காடு.
வெளியேறிய சொற்களின் தந்திரத்தை இரவின் குளிர்ந்த உடல் பொத்தலிடத் தொடங்குகிறது –
வெளியேறிய சொற்களின் தந்திரம் கொண்ட நனவிலிச் செதிலின் தவம் –
சொற் பைத்தியங்கள் திணறுகின்றன,
யாவற்றுக்கும் ஒத்திசைந்து திணறும் சொற் பைத்தியங்களின் சபை.
ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில்
தீர்ந்துவிடலாம் பிறவித் தாகம்.
ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில்
தீர்வதாயில்லை பிறவித் தாகம்.
(பிரெய்லியில் உறங்கும் நகரம்)
மேற்சொன்னவற்றிலும் விதிவிலக்காக
ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில்
தீர்ந்துவிடலாம் பிறவித் தாகம்.
ஒரு சொல் சொட்டச் சொட்ட வழிவதில்
தீர்வதாயில்லை பிறவித் தாகம்.
என்கிற வரிகளைச் சொல்லாம்.
அவ்வளவு ஆழம் – கூறியது கூறல் இங்கு!
அது போலவே இளங்கோ விழிப்போடு தவிர்க்கவேண்டிய ஒரு நடையாக ஒன்றைச் சுட்டுவேன் – ஒரு வாக்கியத்தை மறுபடி மறுபடி உபயோகித்து ஒரு உணர்வை, சிந்தனையக் கிளருதல்.
உதாரணமாகக் கொடுக்க விரும்பிய முத்தம் போன்ற கவிதைகள்.
கொடுக்க விரும்பிய முத்தம்
மறுக்கப் படும் போது
அதுவரை பேசிய விஷயங்கள் சற்றே
அமைதி இழக்கின்றன
கொடுக்க விரும்பிய முத்தம்
மறுக்கப் படும் போது
திரும்பமுடியாத எல்லை நோக்கி நாம்
அனுப்பப் படுகிறோம்.
… இவ்வாறு தொடருகின்ற கவிதை எனக்கு வேறொரு கவிஞரின் சாயலை நினைவூட்டுகின்றன – அது கடிதற்குரிய குறை அல்ல என்றாலும் அசலாகப் பல பொறிகள் இளங்கோவின் கவிப் பயணத்தின் வெற்றியை உறுதி செய்கையில் இவை போன்ற Clichளூs கொஞ்சம் சலிப்பூட்டுகின்றன.
உதாரணமாக,
“வெவ்வேறு சாயலின் வெவ்வேறு பாதைகள்”
‘நீங்கள் ஏன் இப்படி இருக்கிறீர்கள்’
“ஓர் இயலாமையின் பார்வை இத்தனை கூர்மையாய் இருக்குமென்று நான் நினைக்கவில்லை.”
“நேனோ நொடிக்கவிதை”
(முதன்முதலாக) “ஒரே ஒரு முறை மட்டும் கவிதை.”
“தனிமைக்கு என்று ஒரு அறையை நிறுவுதல்”
அதையே நினைத்து என்ன
ஆகப் போகிறது” என்று பல கவிதைகளைச் சொல்லலாம்.
(பிரெய்லியில் உறங்கும் நகரம்)
“ஒரு கவிஞனை ஏன் எல்லோரும் ஒருமித்துப்
புரிந்து கொள்ள வேண்டும்”
என்கிற கவிதை கவிதைக்காரனின் ஒட்டு மொத்த அடையாளம் தான்.
“அவனுடைய நிலவு
இரவெல்லாம் அனலாய் எரியக் கூடியது
அவன் ஒரு பைத்தியத்தின் நிழல்
காலப் பெருவெளியின்
விரும்பட்படாத அகாலம்
அவனுடைய சூரியன்
ரொம்பவும் குளிர்ச்சி மிகுந்தது”
என்றெல்லாம் சொல்கின்ற கவிதை மிகச் சரியான வெளிப்பாடுதான். ஆனால் தன் சுய குறிப்பற்ற, எளிமையின் சிறு புள்ளியை, யதார்த்தத்தின் ஒரு கண்ணியை, மாயக் கோலமென ஒரு படிமத்தில், உருவகத்தில், காட்சியில் கண்முன் கொணர்ந்து, அனுபவப் பொதுமைக் கிளர்வை ஏற்படுத்தும் அவரது கவ்விக் கொள்ளும் மயில்களின் அழகு எழுதிய அந்தக் கவிதைக்காரனைத்தான் அதிகம் பிடிக்கின்றது.
கவ்விக் கொள்ளும் மயில்களின் அலகு
அதிர்ந்து விலகும் கள்ளத்தனத்தை
புத்தகத்துக்குள் ஒளித்து வைத்துவிடுகிறேன்
மறந்துவிட்ட பக்க எண்கள்
கனவில் வந்து கண்களைத் தட்டுகின்றன
தவறான முகவரி என்று திருப்பி அனுப்பிய பிறகு
கவ்விக் கொள்ளும் தூக்கத்தில்
மயில்களின் அலகில் துருத்திக் கொண்டு
குட்டி போடுகிறது கள்ளத்தனம்
வைகறை பரவும் வாசல் படியில்
தூக்கக் கலக்கத்தோடு
முகவாயில் கை தாங்கி மடியில் புத்தகத்தோடு
உட்கார்ந்து கொண்டிருக்கிறது
அறுபத்து ஒன்பதாம் பக்க எண் (பிரெய்லியில் உறங்கும் நகரம்)
மேற்சொன்ன கவிதையின் சொற்சிக்கனம், கள்ளத்தனம் ஒரு நபர் போல எண் வடிவில் படம்பிடிக்கப்பட்ட புதுமை – அற்புதம்.
தூரன் குணாவின் எனக்கு மிகப் பிடித்த கவிதை பின்வருவது
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்
முந்தைய நாட்களின் பணிச்சுமையால்
பெருகிய மனவழுத்தத்தோடும்
உறங்கவியலாமையால் சிவந்த கண்களோடும்
தனிமை கொடுத்த துயரமைதியோடும்
விடுமுறைநாளில் அலுவலகம் செல்ல
ஏறிய பேருந்தில் பணியிலிருந்தாள்
மூக்குத்தி அணிந்த பெண் நடத்துனர்
பயணச்சீட்டை நீட்டும்போது
அவள் முகத்தை உற்று நோக்கினேன்
ஏதோவொரு தூரநிலத்தின் சாயைகொண்ட
அச்சாதாரண முகத்தில்
ஒன்று அதற்குச் சரியான இடத்தில்
பொருந்துவதின் பேரழகோடு
மின்னிய அம்மூக்குத்தி
கண் நிறைந்த கணத்தில்
இருதயத்திற்குள் பெருகிய
காதலற்ற காமமற்ற சகோதரமற்ற
ஆனால் உயிரை ஆற்றுப்படுத்தி
வாழ்தலின் ருசியை மீட்டெடுத்த
அவ்வுணர்ச்சியின் பெயரை அறியேன்
உயிரின் பதட்டங்கள் மெல்லடங்க
காலமும் சமைந்து சிலையாகையில்
கண்களை மூடிக்கொண்டேன்
உள்ளே உருப்பெற்றது
ஒற்றை மூக்குத்தியால்
ஒளிபெற்ற ஒரு பிரபஞ்சம்.
வார்த்தை ஜாலங்கள், திருகு மெழியின் வர்ணங்களற்ற தூரன் குணவின் இந்த நடைதான் வாழ்தலின் ருசியை அப்படியே ஒரு மூக்குத்தியின் ஒளியில் எனக்கும், உங்களுக்கும் கடத்துகிறது. அதே மூக்குத்தி தான் இளங்கோவிற்கு இங்கு ஒரு ப்ரைலி புள்ளி, ஆதி டி.என்.ஏக்களின் பழைய உச்சரிப்பைச் சுமந்த ஒரு சொல், ஹாரன்கள் அலறும் நகரத்தின் விலாவில் பசியோடு புரண்டு திரும்பும் செம்பட்டை ஏவாள்.
வாழ்த்துக்கள் இளங்கோ – இவ்வளவு வருடங்கள் தொகுப்பு கொண்டுவர வேண்டுமென்கிற யத்தனமின்றி, உங்கள் பயணத்தை ரசிப்போடு, நிதானமாகத் தொடர்ந்ததிற்கு!
வாழ்த்துக்கள் இளங்கோ – இப்பொழுதேனும் உங்கள் சொற்களின் மாயத் திறப்பை எங்களோடு ஸ்தூல வடிவில் பகிர்ந்து கொண்டமைக்கு!
உதவிய நூல்கள் :
சமகால உலகக் கவிதைகள் – பிரம்மராஜன்
தமிழ்நாடன் – உலகக் கவிதைகள்
அரசியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) – கென்னத் மினோக், தமிழில் மா.ஆனந்தராஜ்
நீட்சே (மிகச் சுருக்கமான அறிமுகம்) – மைக்கேல் டேனர், தமிழில் க.பூரணச்சந்திரன்
கவிதையின் அழியாத காதலன் – பா.இரவிக்குமார்
சார்த்தர் விடுதலையின் பாதைகள் – எஸ்.வி.ராஜதுரை
No comment