உக்கிரத்தின் கூர்முனையில் உயிர்வலி பதியும் பயணம்

அகரமுதல்வனின் கவிதைகளைக் கையில் வைத்திருக்கின்ற இந்த இரவு பாலச்சந்திரனின் 'கடைசி உணவு'க் காட்சியைக் கண்டு தூக்கமிழந்து, பித்து முற்றிய இரவு. 'இனி எழுதித் தீர என்ன இருக்கிறது?' என மனமுடைந்து வார்த்தைகளைச் சபித்த இரவு. அவன் போல பல பாலச்சந்திரன்கள் முள்ளிவாய்க்காலில் உறைந்ததை மீண்டும் தோண்டியெடுத்த இரவு. வெறும் கோஷங்களை மென்று துப்பி துர்நாற்றமெடுக்கின்ற என் வாயை இயலாமையின் இரத்தம் கொண்டு சுத்தம் செய்த இரவு. இவ்வளவு நிர்க்கதியோடு இருக்கின்ற ஒரு மனம், நம்பிக்கையின்மையின், அவலத்தின் உச்சத்தில் இருக்கின்ற ஒரு மனோ நிலையில் - கவிதைகள் - குறிப்பாகப் போர்ச்சூழலில் பிறந்து, ஊர் ஊராகத் திரிகின்ற ஒரு ஈழத் தமிழனது கவிதைகள் குறித்து என்ன எழுத முனையும்? வெறும் எழுத்துக்கள் கோர்க்கப்பட்ட வாக்கியங்களை வைத்துக் கொண்டு அதிகாரத்தின் முன் மன்றாடியாயிற்று, கதறி அழுதாயிற்று, நீதி கேட்டுப் போராடியாயிற்று - அத்தனையும், 
	"அரிசி மூட்டையிலிருந்து சிதறிய 
	அரிசி மணிகள் போல் 
	தப்பித் தவறி திசை தடுமாறி ஓடிவந்த
	சின்னஞ்சிறு சிற்றெறும்பு போல் 
	மொஸைக் தரையில் தவறிப்போன
	ஒற்றைக் குண்டூசி போல் 
	இவற்றைப் போன்ற இன்றும் 
	ஆயிரக்கணக்கான போல்கள்"-
என ஆத்மாநாம் சொல்வது போல் ஆயிரத்து ஒன்றாவது போலாயிற்று. 
	இருந்தாலும் "எவற்றிற்கும், எவருக்கும் தன்னை ஒப்புக் கொடுக்காத" கொள்கைகளைத் தன் எழுத்தின் மூலமாக முன்வைக்க ஒரு இளைஞன் முயலுகையில், அவனது பாதையை, வலியை, அதன் உக்கிரத்தை, தடைகளை, ஓட்டத்தை - அவன் கவிதையில் பகிர்ந்து கொள்கையில் சற்று திரும்பிப் பார்க்கத்தான் வேண்டியதிருக்கிறது. முற்றிலும் கையறு நிலையிலிருந்து அவனது கவிதையெனும் முழுங்கையூன்றிச் சற்று உட்காரவும் கூட!
	"முகம் மலர்ந்து போய்
	சிரிக்க விரும்பிய போது, 
	கோபத்தோடு கிடக்கிறது
	பகை மீதான என் வன்மம்"
என்கிற அகரமுதல்வனது கவிதைகள் முழுவதிலும் ஈழத்தின் போர் நிகழ் களம், களப்பலி, தொலைத்த நிலம், விரட்டப்படுகின்ற அம்மாந்தர் தம் துயரம், இவற்றையெல்லாம் மீறி மிக அழுத்தமாக, மீண்டும், மீண்டும், பகை வீழ்த்தி நிலம் மீட்கத் துடிக்கும் ஒரு உ¡¢மைக் குரல் உரத்து எழுகிறது. 
	"கடல் பிரித்திரிந்தும் தொப்புளால் இணைந்திருக்கின்ற" நம் கண்முன்னே நடந்து முடிந்த வரலாற்றுத் துயரின் சாம்பல் பூசி, நாம் மெளனித்திருக்கையில், 
	"கல்லறையில் தெய்வங்களிருக்கும் தேசத்தில் 
	கருவறைக் கடவுள்களுக்கு வேலையில்லை -
	அற்புதம் எங்களால் மட்டுமே நிகழ்த்தப்படும்"
எனும் அகரமுதல்வனது நம்பிக்கை -
	புனித வெள்ளி எனும் மனோமோகனின் பின்வரும் கவிதையை நினைவூட்டியது. 
	"நம்பமுடியாதபோதும் கூட
	அது அப்படித்தான் நடந்தது
	அப்பழுக்கற்ற உனது வெள்ளங்கியின் மீது
	குருதியின் ஈரம் பரவிக் கொண்டிருந்தது
	சற்றுமுன் சுடப்பட்ட தோட்டா
	இடதுபுற மார்பில் சற்று மேலோ
	சரியாக மார்புக் காம்பிலோ பட்டிருக்க வேண்டும் 
	முப்பதாவது வினாடியே உனது உயிர் பிரிந்தது
	சுட்டவனுக்கு அசலாக எனது முகம் 
	ஆனாலும் அது நானில்லை 
	என்பதை எப்படி உன்னிடம் சொல்வது 
	அதுவும் இறந்துவிட்ட உன்னிடம் 
	இனி அந்த சிலுவைக்கு
	நீ உபயோகப்பட மாட்டாய் 
	அந்த ஆணிகளுக்கும் கூடத்தான்
	கொண்டு வந்த சிலுவையையும் ஆணியையும் 
	திரும்ப எடுத்துப் போவதில் 
	சரத் பொன்சேகாவுக்கு உடன்பாடில்லை
	கிடத்தப்பட்ட சிலுவையில் 
	உனக்குப் பதிலாக என்னைக் கிடத்தினான்
	ஆணியடித்து நிமிர்த்தப்பட்ட எனக்கு
	அசலாக உனது முகம்" 
மெளனத் துயரென அலைந்து உழல்கின்ற புலம்பெயர்தலை, 
	"கடந்த வாழ்வே 
	மீண்டும் என்னை அணைத்துக் கொள் -
	அன்றைக்கு என்னை நீ விட்டுச் சென்றபின் 
	இன்றுவரை நான் ஏதிலி"
எனப் பகிர்கின்ற வரிகள்,  
	"சிறுவர்கள் சாகடிக்கப்படும் யுகத்தில் 
	ஒரு பாலஸ்தீனச் சிறுவனைப் போல
	நான் ரொட்டிக்கு அலைந்தேன் 
	கிழிந்த என் அகதிப் பைகளுக்குள் 
	இறுதிவரை உனக்காகச் சில ரொட்டித் துண்டுகளிருந்தன"
எனும் தீபச்செல்வனது கவிதையைத் தொட்டுச் செல்கிறது.
	அகரமுதல்வனது ஆற்றாமை -
	"என்னூரில் நான் இல்லாமலிருந்து 
	இன்று எவ்வளவு நாளாகிவிட்டது"
எனத் தொடங்கி, முற்றத்து செவ்வரத்தை, வைரவர் கோவில், இரட்டைக்கேணி அம்மளாச்சியின் கோவில் மணி, சாவகச்சேரி கலையமூர்த்தியின் நாதஸ்வர இசை, பாளைநகர், செந்தில் நகர் - என்று அவரது ஊரின் பசுமை நினைவுகளை பட்டியலிடுகின்றது என்றால், அவரது காதல், 
	"உன் சிரிப்பில் குளிர்ந்தபடி 
	நான் திரும்பியபோது
	புதிதாய்ப் பிறந்தெழுந்த ஒரு ஆட்டுக்குட்டியாய்த் 
	துள்ளியபடி சிலிர்ப்புடன் ஓடி வந்தது மனது"
என்கிறது. தொகுப்பின் மீறலின் தர்மம் காதலுக்கு எனும் கவிதை எளிமையான மொழியில் காதலின் தர்மம் மீறல் தான் என்கிறது. 
	அகரமுதல்வனுக்கு அவர்தம் அடிபட்ட வாழ்க்கை - வலியோடு, ஒருவித உக்கிரத்தையும் கொடுத்திருக்கிறது. உக்கிரத்தின் கூர்முனையில் யதார்த்தத்தினை மிகையற்றுப் பதிவு செய்வது மிகக் கடினம். செய்திருக்கிறார் அதை -
	"எங்கள் வீட்டில் மூத்திரம் போகவே
	அடையாளப் பத்திரம்
	காட்டவேண்டியதாய்த் தொடர்கிறது
	எங்கள் மூத்திர வாழ்வு" என்று. 
கவிதையின் ஒவ்வொரு சொல்லும் காலம், இடம், பொருள், ஏவல் கருதிப் பல்வேறுவிதமான அர்த்தங்களைக் கொடுப்பவை. அவ்வகையில் - 'மூத்திரம்' எனும் சொல் அடைந்திருக்கின்ற உக்கிர உருமாற்றம் இங்கே கவனிக்கத் தக்கது. 
	ஒரு புறச் செய்தியை ஒரு கவிஞன் எவ்விதமாகப் புரிந்து கொள்கிறான் என்பது தான் அவனது ஆளுமையைக் காட்டுகிறது என்பார்கள். போர் -நமக்கெல்லாம் ஒரு புறச்செய்தி. அகரமுதல்வனுக்கோ அது வாழ்விற்கும் சாவிற்குமான மரண ஊடாட்டம். அந்த ரணத்தினை எட்ட நின்று தத்துவார்த்தமாக, அல்லது அதில் முழுக்க ஒன்றி மிகையுணர்ச்சியுடன் வெளிக்கொணர்வது - என்கிற இந்த இரண்டு எதிர்முனைகளில், அகரமுதல்வன் இரண்டாவதையே தேர்ந்தெடுத்திருக்கிறார். புரிந்து கொள்ள முடிகின்ற தேர்வு. 
	"தமிழச்சிகளின் யோனிகளினால் 
	அரசமர இலைகளுக்குப் பச்சயம் தயாரிக்கப்படுகின்றது. 
	துட்ட கைமுனுக்களால் 
	அரசமரத் தேவனுக்கு
	எங்கள் ரத்தத்தில் அபிஷேகம் செய்யப்படுகிறது
	என் உறவுகளின் அங்கங்களின் போர்ச்சிதைவுகளிலிருந்து 
	கண்ணை மூடியபடியே வருகிறான் புத்தன்" 
-இது உரைநடை வசனம் தான். ஆனால் அதன் பின்பிருக்கின்ற வலி உண்மையானது, அனுபவத்தின் நேர்மையில் இவ்வரிகள் "கவிதை தானா" எனும் தர்க்கம் கடந்து தகிக்கின்றன. 
	விருட்சத்தின் உரம் குருதி எனும் கவிதையில், 
	"எமைக்கொல்லும் விமானங்கள் 
	தேசியப்பறவையாய் பிறப்பெடுத்தது" 
என்கிற உருவகத்தை - 'ஆஹா, அற்புதம்' என ரசித்தால், 
	"பிணவாடை அடிக்கிறது" எனும் கவிதையில், "..... அவள் குறிகளில் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது சப்பாத்துக்காரனின் ஆண்மை" எனும் சித்தரிப்பை ஒரு கவித்துவமான உத்தி எனக் கடந்து சென்றால் - அது எவ்வளவு பெரிய வன்முறை! 
	".... நான் மெதுவாகக் கற்றுக்கொள்கிறேன்
	ஒரு கவிதையில் நிஜமாய்ப் பொருட்படுவது 
	என்னவென்று" 
எனச் சொல்லும் வாஸ்கோ போப்பாவை நினைத்துக் கொண்டேன் - அகரமுதல்வனின் அத்தனை கவிதைகளையும் படித்து முடித்தபின்பு, அவரது கவிதைகளில் நிஜமாய்ப் பொருட்படுவது தீராத வலி குறித்த துயரும், அதனைத் தடவிப் பார்த்தபடி, ரணம்கீறி, மீண்டும் விடுதலையை முன்னெடுக்கின்ற உறுதியும் தான். இவை கவிதைகளென நான் அறுதியிடவில்லை - அது அவசியமுமில்லை. ஏனெனில், இவற்றின் பின்பிருக்கின்ற உண்மை அளவிடுதலுக்கு அப்பாற்பட்டது. 
	தனது தீவிரமான மன எழுச்சியை, இடை வரு(டு)கின்ற காதலுணர்வைப் பகிர்ந்து கொண்டிருக்கின்ற அகரமுதல்வன் தனது தாய் மண்ணின் போர்க்காலம் குறித்த வரலாற்றுப் பதிவுகளோடு தனது விடுதலையின் கனவையும் சேர்த்துப் பொதிந்திருக்கிறார் இக் கவிதைகளில். இது அவருக்கு ஆறுதல் தருமாயின் - அகரமுதல்வன் இத்தடத்தில் தொடர்ந்து பயணிக்கட்டும். 
	எல் சால்வடரின் சிறந்த கவிஞர் கிளாரிபெல் அலெக்ரியாவின் பின் வரும் கவிதையோடு "அத் தருணத்தில் பகைவீழ்த்தி" எனும் தொகுப்பிலிருந்து இத்தருணம் விடைபெறுகிறேன் -
இரவு நேர விஜயங்கள் 
எண்ணிப்பார்க்கிறேன் நான் 
நமது வலுவிழந்துபோன வீரர்களின் பெயரறியாப்
பிள்ளைகளை 	
உடலுறுப்பு அறுபட்டவர்களை
முடமாக்கப்பட்டவர்களை
இருகால்களையும் இழந்தவர்களை
கண்கள் இரண்டையும் பறிகொடுத்தவர்களை
தீக்குவாய் பதின்பருவத்தினரை.
இரவில் காதுகொடுத்துக் கேட்கிறேன்	
அவர்களின் ஆவியுருக்கள் என் செவிக்குள்
பெருங்கூச்சலிடுவதை 
மந்தநிலையிலிருந்து 
என்னை உலுக்கி எடுப்பதை 
எனக்குக் கட்டளை பிறப்பிப்பதை 
எண்ணிப் பார்க்கிறேன் 
அவர்களின் நைந்து கிழிந்த வாழ்வுகளை
ஜூரவேகமாய்த் தகிக்கும் அவர்கள் கைகள் 
நம் கைகளை இறுகப் பற்றிக்கொள்ள
நீள்வதை.
அவர்கள் பிச்சை கேட்கவில்லை 
உரிமை கோரிக்கை வைக்கின்றனர்
உழைத்துப் பெற்றிருக்கிறார்கள் 
அவர்கள் உரிமையை 
நமக்கு உத்தரவிட 
நம் உறக்கத்தை முறிக்க
விழித்தெழுந்துகொள்ள
என்றைக்குமாய் இந்த 
அயர்வை உலுக்கித் தள்ள. 
                                                                                            * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *