நான் உண்ணும் ஒரு பிடி அன்னம் கலைஞரது பெயரெழுதிய உயிர் நெல்மணிகளால் விளைந்தது. நான் அருந்தும் ஒரு குவளை நீர் கலைஞரது பெயரெழுதிய மூலக்கூறால் நிரம்பியது. நான் சுவாசிக்கின்ற சிறு மூச்சு கலைஞரது பெயரெழுதிய உயிர்க்காற்றால் பிறந்தது. நான் துயிலும் ஓரிரவு உறக்கம் கலைஞரது பெயரெழுதிய நற் கனவுகளால் நிறைந்தது. என் ஊனிலும், உயிரிலும் கலந்திருக்கின்ற ஒப்புயர்வற்ற ஒரே தலைவர், முத்தமிழறிஞருக்கு முதல் புகழ் வணக்கம்! வான்கோ எனும் உலகப் புகழ் பெற்ற ஓவியரைப் பற்றி - “வான்கோ ஒரு புள்ளி வைத்தால் அந்த ஒரு புள்ளி ஆரஞ்சுச் சூரியன் ஆகின்றது. மற்றவர்கள் தீட்டுகின்ற சூரியனோ ஒரு புள்ளியாக மாறிவிடுகிறது” என்பார்கள். கலைஞர் எனும் மாமனிதர் வைத்த அந்த ஒரு புள்ளியில், இன்றைக்கு இந்தியாவெங்கும் ஒளிர்ந்து சுடர்விடும் பெருஞ்சூரியன் தளபதி - மாமன்னன் ராஜராஜனின் பெரும் புகழுக்கு இணையாக உலக சாதனை படைத்து, பூர்வதேசமும், கங்கையும், கடாரமும் கொண்ட கோப்பர கேசரி வர்மன் என்று புகழப்பட்ட அவனது மகன் ராஜேந்திர சோழனைப் போன்ற பெருமை பெற்ற தளபதி - “பிறந்து எட்டாண்டு முடிவதற்குள் காடு சென்று சிங்கத்தை நாய்போல இழுத்து வந்தவன், இருபது வயதில் இரும்புத்தூணை உடைத்தவன், பகை நுழையா அரண் அமைத்துத் தமிழ் மன்றம் அமைத்தவன், போரில் இந்திரனையே தோற்கடித்ததால் இந்திரஜித்தன்” என்று தலைவர் கலைஞரால் புகழப்பட்ட பெருமைக்குரிய இந்திரஜித்தைப் போல இன்றைய தமிழகத்தை, நாளைய இந்தியாவை வழிநடத்துகின்ற கழகத் தலைவர் தளபதிக்கு வணக்கம். இனமானப் போராளி, ஈரோட்டுப் பட்டறையின் ஈடில்லா இரும்பாயுதம் - மானமிகு ஆசிரியப் பெருந்தகையே, தளபதியை வாழ்த்த இங்கு நாங்கள் தமிழர்கள் என நெஞ்சு நிமிர்த்தி, பகுத்தறிவுக் கருஞ்சட்டை அணிந்து, தமிழ்க் கவிதை முத்து கோர்க்கத் தலைவர் முத்தமிழ் அறிஞர் மீது தணியாத பற்றுக் கொண்ட வைர நெஞ்சமுடன், நட்புக் கை விரித்து, தோழமையெனும் பம்பரத்துடன் மேடையிலிருக்கின்ற பெருந்தகையீரே - வணக்கம். “திமுக என்பது உணர்வுகளின் கலப்பு, உணர்வுகளின் சங்கமம். ரத்தக் கலப்பு மிகுந்த இயக்கம் திமுக. சாதாரண ரத்தக் கலப்பு அல்ல. சுத்த, சுயமான தமிழ் இரத்தக் கலப்பு மிகுந்த இயக்கம்” என்ற முத்தமிழறிஞரின் தளபதிக்காக உணர்ச்சிகளால் ஒரு விழா எடுத்திருக்கின்ற கலைஞர் தொலைக்காட்சிக்கு நன்றி! யார் தலைவன்? ஒரு மாபெரும் இலட்சிய இலக்கை அடைவதைக் குறிக்கோளாகக் கொண்டவன். அதனை அடைவதையே வேட்கையென வரித்துக் கொண்டவன். அதற்காக யாரும் பயணிக்க அஞ்சுகின்ற புதிய பாதையில் முதற்காலடி எடுத்து வைப்பவன். தன்னை வளர்த்துக் கொண்டும், புதுப்பித்துக் கொண்டும், செதுக்கிக் கொண்டும், உரம் பெற்று ஒவ்வொரு அடியாக உறுதியுடன் முன்னேறுகிறவன்! அதன் பின்பான வெற்றியில் தலைகனமின்றித், தோல்வியில் பக்குவத்தோடு - அதன் நற்பலன்களைப் பகிர்ந்து கொண்டு, துர்ப்பலன்களைத் தன் தோளில் சுமப்பவன்! இவ்வாறு உலக அரங்கில் வளர்ந்து முத்திரை பதித்த தலைவர்கள் தங்கள் மக்களை, தான் சார்ந்த இயக்கத்தவரை அழைத்த முறை ‘விளி’ எவ்வளவு முக்கியமானது தெரியுமா? சீசருக்கு ஆதரவாக ரோம் நகர மக்களைத் திசைமாற்றிய ஆன்டனி, Friends, Romans, Countrymen என்றழைத்தான். கார்ல் மார்க்ஸ் “உலகத் தோழர்களே” என்றார். ஆபிரகாம் லிங்கன் “எனதருமைக் குடிமக்களே” என்றார். உலக அரங்கிலேயே முதன்முறையாக ‘தம்பி’ எனத் தன் இயக்கம் சார்ந்தவர்களை அழைத்த தலைவர் பேரறிஞர் என்றால், அதனை சகோதர, சகோதரிகளுக்குமான உறவுச் சொல்லாக, உயர்ந்ததொரு விளியாக ‘உடன் பிறப்பே’ எனச் சிகரத்தில் ஏற்றி வைத்தவர் கலைஞர். ‘உங்களில் ஒருவன் நான்’ என்று அந்தச் சிகரத்தில் தோளோடு தோள் சேர்த்து சமத்துவக் கொடி ஏற்றியவர் சரித்திரத் தலைவர் தளபதி! இன்றைக்கு உடன்பிறப்புக்களின் தலைவராக உயர்ந்து நிற்கின்ற தளபதி எங்கோ இருந்து தமிழகத்தை ஆளவந்தவர் இல்லை. ஆண்டவனால் அனுப்பட்ட அவதார புருஷனும் அல்ல. உடன்பிறப்புக்களிடமிருந்து வந்தவர். உடன்பிறப்புக்களில் ஒருவர். உடன்பிறப்புக்களின் உடம்பு, சதை, ரத்தம், எலும்பு, மூச்சு. ‘உங்களில் ஒருவன்’ என உதித்து, இன்று நம்மை வழி நடத்துகின்ற இந்தத் தலைவர் ஏன் உடன்பிறப்புகளின் தலைவன் என்று கொண்டாடப்படுகிறார் தெரியுமா? அவரது சிந்தனையால் சொற்களால், செயல்களால் - தொண்டினால், சாதனையால், தியாகத்தினால் மட்டுமல்ல - லட்சோபலட்சம் உடன்பிறப்புக்களை ஒரு சேர அரவணைத்து வழிநடத்தும் மாண்பினால், அன்பினால், பண்பினால்! அதிகாரம் என்பது ‘எடுத்துக்கொள்ளப்படுவது’ என்று ஒருவன் நினைத்தான் - ‘அரசன்’ தோன்றினான். அதிகாரம் என்பது ‘அளிப்பது’ என்று ஒரு கூட்டம் நினைத்தது - ‘உயர்குடி, செனட் போன்ற அமைப்பும் உறுப்பினர்களும்’ பரிணமித்தார்கள். அதிகாரம் என்பது ‘அனுமதிப்பது’ என்று மக்கள் நினைத்தார்கள் - ‘ஜனநாயகம்’ மலர்ந்தது. ஆனால் - அதிகாரம் என்பது பொறுப்பு என்று தளபதி நினைத்தார் - அவர் உடன்பிறப்புகளின் தலைவரானார்! இரவு உணவின் போது மதுக் கோப்பைகளை உயரத் தூக்கிப் பிடித்து விருப்பத்தைச் சொல்லி உரக்க வாழ்த்தும் மேற்கத்தியரின் பழக்கத்தை ‘டோஸ்ட்’ (Toast) என்று சொல்வார்கள். 1972 ஆம் ஆண்டு ஒட்டோவா நகரில் அமெரிக்கத் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸனும் கனடாவின் பிரதமர் பியர் எலியட் ட்ரூடோவும் கலந்து கொண்ட இரவு விருந்தின் போது நிக்ஸன் ‘கனடாவின் வருங்கால பிரதமர்’ என்று பிரதமரின் நான்கு மாதமே ஆன மகனின் பெயரைச் சொல்லி டோஸ்ட் செய்தார். நிக்ஸனின் வாழ்த்து பலித்தது 2015ல். ஆம், ஜஸ்டின் பியர் ட்ரூடோ கனடாவின் பிரதமரானார். பிரதமரான பின் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்குபெற்ற ஜஸ்டின், ‘என்றாவது ஒரு நாள் எனது எட்டு வயது மகள் என்னைப் போல கனடாவை ஆள வேண்டுமென்று ஆசைப்படுகிறேன்’ என்றார். ஆனால் தி.மு.க. என்பது சங்கர மடம் அல்ல. இங்கு வாரிசுரிமை எனும் பேச்சிற்கே இடமில்லை - என்று அறிவித்தவர் தலைவர் கலைஞர். தொண்டர்களது ஆசைப்படி, உடன்பிறப்புக்களின் ஓயாத வேண்டுகோளின்படி, சோர்வற்ற தன் உழைப்பினால் ஜனநாயக முறைப்படி படிப்படியாக பதவிகளுக்கு வந்தவர் தளபதி. தலைமை வேறு - தலைமைப் பண்பு என்பது வேறு. பொறுப்பிலும், நிர்வாகத்திலும் உயர்ந்த நிலையிலிருந்தால் அது தலைமை. ஒரு நல்ல பொது நோக்கத்திற்காக ஒரு குழுவை வழி நடத்தினால் அது, தலைமைப் பண்பு. தலைமை தனது பணியினைச் செய்யும். தலைமைப் பண்பு தனித்தன்மையை வெளிக் காட்டும். ஓர் உயர்ந்த இலட்சியத்தை நோக்கி பயணிக்க வைக்கும். “கழகத் தொண்டன், பொதுக்குழு உறுப்பினர் அரசியல் மிசா கைதி இளைஞர் அணி மாநில செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் மேயர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் கழகப் பொருளாளர்” கழகச் செயல் தலைவர் கழகத் தலைவர். எனப் படிப்படியாகத் தலைமைப் பண்பினால் தலைவரானவர் தளபதி! அரசியல் குடும்பத்திலிருந்து வருபவர்கள் வெற்றி பெறுவதற்கு ஜப்பானிய மொழியில் ஜிபான் (Jiban), கன்பான் (Kanban), கபான் (Kaban) என்ற மூன்று காரணங்கள் கூறுவதுண்டு. குடும்பத்திற்கு மக்களிடமுள்ள செல்வாக்கு (Jiban), குடும்பத்தால் ஏற்படும் பிரபலம் (Kanban), மற்றும் தேர்தலில் வெற்றி பெற வேண்டிய ஆள், அமைப்பு பலம் (Kaban) என்றதன் அர்த்தம். இவை மூன்றும் இருந்தவை தாம் தளபதிக்கும் - ஆனால் தன் தனித் தகுதியால் பெருமை பெற்று, தொண்டினால் பதவி பெற்று, சாதனையால் புகழ்பெற்று, தியாகத்தினால் நிலைபெற்று - இவற்றால் தலைமைப் பொறுப்பிற்கு வந்தவர் தளபதி. எந்த பின்புலமும் இல்லாத தலைவர் கலைஞர் கட்சி ஆரம்பித்த இருபது ஆண்டுகளில் கட்சிக்கும் ஆட்சிக்கும் தலைமையேற்கும் வாய்ப்பைப் பெற்றார். எல்லா பின்புலமும் இருந்தும் தளபதி 1973ஆம் ஆண்டு திமுகவின் பொதுக் குழுவிற்கு தேர்வாகி 45 ஆண்டுகள் கழித்து தலைவராகியிருக்கிறார். உலகில் அரசியல் குடும்பங்களில் நீண்ட நாட்கள் தன் சுயபலத்தில், தன்னம்பிக்கையின் துணைக் கொண்டு, தலைமைப் பொறுப்பிற்காகப் பொறுமையுடன் காத்திருந்தவர்கள் இருவர். 49 ஆண்டுகள் கியூபாவில் ரால் காஸ்ட்ரோ, 45 ஆண்டுகள் தளபதி. இப்பொறுமையும், நிதானமும், ஊக்கமுடன் கூடிய தொடர் உழைப்பினாலுமே அவர் “உடன்பிறப்புக்களின் தலைவர்!” பல ஆண்டுகளுக்கு முன்பாக, ரோம் நகரத்தில் ரோம் நாட்டு பிரபு ரோஹன் ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றில், அழைப்பில்லாவிட்டாலும் எப்படியோ கலந்துகொண்ட இளைஞன் ஒருவன், விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்த மற்ற பிரபுக்களோடு ‘கலகல’வென்று பேசிக்கொண்டிருந்தானாம். அந்த இளைஞனின் நடவடிக்கையை கவனித்த ரோஹன் பிரபு, ‘யார் இந்த இளைஞன் கூவிக் கூவிப் பேசிக்கொண்டிருக்கிறானே’ என்று கேட்ட பொழுது, தன்னுடைய நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ரோஹன் பிரபுவிற்கு முன்பாக வந்து நின்று, ‘பரம்பரைப் பெருமையோ, பட்டமோ, குடும்பப் பின்னணியோ இல்லை எனக்கு. ஆனால் என்னுடைய சாதாரண பெயரிலேயே அதற்கான அத்தனை பெருமைகளையும், அதற்குரிய அத்தனை மரியாதைகளையும் நான் தேடிக்கொள்வேன் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு. என்னுடைய பெயர் வால்டேர்’ என்றான். பிற்காலத்தில் புகழ்பெற்ற ஃபிரெஞ்ச் வரலாற்று ஆசிரியனாக, தத்துவவாதியாக உயர்ந்தவன் அந்த இளைஞன் வால்டேர். அதற்குப் பற்பல ஆண்டுகளுக்குப் பின்பாக ‘நான் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்குவளை என்கின்ற சாதாரண கிராமத்தில், ஒரு சாதாராண இசைக் குடும்பத்திலே பிறந்தவன். மிகச் சாதாரணமான விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன். அப்படி வந்தவனாகிய நான், இன்றைக்கு மிட்டா, மிராசுதாரர்கள் எல்லோருக்கும், அவர்கள் அடிபணிய வேண்டும் என்கின்ற சட்டத்தை இயற்றுகின்ற இடத்திலே இருக்கின்றேன். சட்டத்தை இயற்றுகின்ற இடத்திலே இருக்கிறேன் என்று ஏன் பெருமிதமாகச் சொல்கிறேன் என்றால், அந்த சட்டங்கள் ஏழைகளை வாழ்விக்க, பாட்டாளிகளை உயர்விக்க, ஒடுக்கப்பட்டவர்களை ஏற்றமடைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற சட்டங்கள்! ஆகவே அந்த இடத்திற்கு - மிட்டா, மிராசுதாரர்களுக்கு சட்டமிடுகின்ற இடத்திற்கு வந்ததை நான் பெருமையாக, உண்மையிலே மகிழ்ச்சியாக நினைக்கின்றேன்.’ என்று சொன்னார் ஒப்பற்ற ஒரு தலைவர், அவர் முத்தமிழறிஞர் கலைஞர்! - தமிழினத்தின் தலைவர்! சில மாதங்களுக்கு முன்பாக, ‘இன்று நான் புதிதாகப் பிறந்தேன். என் தமிழகம் புதிதாக பிறக்கட்டும்’ என்று அறிவித்துக்கொண்ட ஒரு தலைவர், ‘நான் கலைஞர் இல்லை, அவரைப்போல எழுதவோ, பேசவோ அல்லது கூட்டத்தைக் கட்டிப்போடுகின்ற அளவிற்கு சொல்லாற்றலோ எனக்கு இல்லை. ஆனால் எனக்கு உழைக்கத் தெரியும். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்கின்ற, நம் தலைவர் கலைஞர் எனக்குக் கொடுத்த முத்திரையின்படி எனக்கு உழைக்கத் தெரியும்’ என்று அறிவித்து, “என் பின்பாக வரவேண்டாம், என்னோடு இணைந்து நடந்து வாருங்கள்!” என உடன்பிறப்புக்களுக்கு அழைப்பு விடுத்தார் ஒரு தலைவர் - அவர் நம் தளபதி - அதனாலாலேயே அவர் உடன்பிறப்புக்களின் தலைவர்! ஃபிரெஞ்ச் வரலாற்று ஆசிரியர் வால்டேர், முத்தமிழறிஞர் கலைஞர், இன்றைய கழகத் தலைவர் தளபதி, இந்த மூன்று பேரின் குரல்களையும் ஒரு நேர்கோட்டில் வைத்துப் பாருங்கள். அந்தக் குரல்களில் ஒலிப்பது வெறும் தலைமையின் தொனி அல்ல - தலைமைப் பண்பு! ஒரு தலைவன் கொள்கைவாதியாக, தன்னுடைய கொள்கைகளை நாடெங்கும் சென்று பரப்புபவனாக, வெற்றி ஈட்டித் தருபவனாக, வலிமை வாய்ந்தவனாக இருந்தால் மட்டும் போதுமா? தன்னுடைய கழகத் தோழர்களோடு, உடன் பிறப்புகளோடு அவன் எப்படி ஒரு குடும்பத் தலைவன் போல, அல்லது நண்பன் போல, சகோதரன்போல பழகுகிறான், இந்த இயக்கத்தைக் கட்டிக் காக்கிறான் என்பது முக்கியம் அல்லவா? அதற்கு எத்தனையோ உதாரணங்களை தலைவர் கலைஞர் விட்டுச் சென்றிருக்கிறார். ஒரு உதாரணம் கேளுங்கள் - தேர்தல் வரும் காலத்திலெல்லாம் நம்மில் பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும், நம்மில் பலருக்கு மறுக்கப்படும், சிலருக்கு மன வருத்தம் உண்டு. ஆனால் பெயர்கள் அறிவிக்கப்பட்ட அடுத்த கணம் அத்தனையையும் மறந்துவிட்டு உடனே போர்க்களத்திற்குச் செல்லுகின்ற ஒரே கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்தான். 1962ம் ஆண்டு தஞ்சாவூர் தொகுதியிலே வெற்றி பெற்றிருந்த கலைஞர் அவர்கள், 1967ல் சென்னை சைதாப்பேட்டை தொகுதியிலேயே வேட்பாளராகப் போட்டியிட முடிவு செய்திருந்தார். அண்ணா அவர்களும் அதை மாநாட்டிலே அறிவிக்க இருந்தார்கள். அதுபோல் தஞ்சை தொகுதியில், தஞ்சாவூர் நடராசன் அவர்களை நிறுத்த அண்ணா முடிவு செய்திருந்தார். அதே நேரத்தில், மற்றொரு கட்சித் தோழராக ஏ.வி.பதி அவர்களும், தஞ்சையில் நிற்க விரும்பினார். ஆனால் அண்ணா அவர்களோ, தஞ்சாவூர் நடராசர் பெயரையே அறிவித்தார். தனக்கு வேட்பாளராக வாய்ப்புக் கிடைக்கவில்லையே என்ற கவலையில் இருந்த ஏ.வி.பதி அவர்களை சமாதானம்செய்து கலைஞரிடம் அழைத்துச் சென்றார்கள், அய்யா மண்ணையும், பண்ணைமுத்துக் கிருஷ்ணனும், தென்னன் அவர்களும். கலைஞரைச் சந்தித்த பதி அவர்கள், “கலைஞரே நான் எத்தனை காலமாக கட்சிக்குப் பாடுபட்டு வருகிறேன். நீங்கள் தாய்போல் இருக்க வேண்டியவர் - பால் கொடுத்து ஊட்டி வளர்க்க வேண்டிய பிள்ளையைப் போல் நானிருக்கிறேன். அண்ணாவிடம் நீங்களே சொல்லியிருக்கக் கூடாதா? இது நியாயமா?” என்று கேட்டார். உடனே கலைஞர் அவர்கள், “நீங்கள் சொல்வது போல், நான் தாய் நிலையிலிருந்து பாலூட்டி வளர்க்க வேண்டியவன்தான். ஆனால், தாய் ஒவ்வொரு குழந்தையாகத்தானே பாலூட்ட முடியும்? இந்த முறை நடராஜன், அடுத்தமுறை பதி என்றுதானே நான் பாலூட்ட முடியும்” என்றதும் சண்டை போடவந்த பதியே சிரித்து சமாதானமடைந்து விட்டாராம். அதற்குச் சற்றும் சளைத்தவரல்ல நம் தளபதி! ஒரு தாய் போல உடன்பிறப்புக்களைக் காத்துப் பாசம் வைத்திருப்பவர். உங்களது வாழ்க்கையில் எப்போது மிகச் சமீபத்தில் கண் கலங்கினீர்கள் என்று முன்பொருமுறை கேள்வி கேட்கப்படுகிறது தளபதியிடத்தில் - “கரூர் மாவட்டத்தில் கழகத்தை வழிநடத்திய வீராங்கனை வாசுகி முருகேசன் விபத்தில் மறைந்த போதும், தர்மபுரி வடக்கு மாவட்ட செயலாளர் பெரியண்ணன் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்த போதும் கட்டுப்படுத்த முடியாமல் அழுதேன். இரண்டும் சமீபத்தில் அடுத்தடுத்து எனக்கு ஏற்பட்ட இழப்புகள்.” என்பது அவரது பதில். தலைவர் கலைஞருக்கு நீள் துயில் கொள்ள மெரினா கடற்கரையில் இடம் கிடைத்தவுடன், உடைந்து அழுத தளபதி - தொண்டர்களின் தலைவர் என்றால், கழகத் தோழர்களின் மறைவின் போது கட்டுப்படுத்த முடியாமல் கலங்குபவர் - உடன்பிறப்புக்களின் தலைவன்! திராவிட இயக்கத்தின் மூத்த முன்னோடி, பனகல் அரசரை ஒரு முறை “உங்கள் பொது வாழ்வில் நிறைவு பெற்றுள்ளீர்களா?” என்று கேள்வி கேட்டார் ஒருவர். அதற்குப் பனகல் அரசர் - “என் பொது வாழ்வில் நிறைவு பெற்றிருக்கிறேன். காரணம் நான் எந்தக் கொள்கைக்காக பொதுவாழ்வில் ஈடுபட்டேனோ, அவை முளைவிட்டு இலையும், கிளையுமாக படர்ந்திருக்கிறது” என்றார். இன்றைக்கு அவர் இருந்திருந்தால் மேலும் பெருமையோடு சொல்லி இருப்பார் - அவை தளபதி எனும் பெருஞ்சூரியனாகப் பிரகாசிக்கிறது என்று! அப் பிரகாசத்தின் ஒளிச்சுடரில் இலையும், கனியும், மலரும் உதிரும்! இரட்டை இலையும், மாங்கனியும், தாமரைப் பூவும் உதிரும்! மக்களின் மகிழ்ச்சி மட்டுமே வளரும்!
No comment