பெருநகர வெளியில் அலைவுறும் வனப்பேச்சி தமிழச்சி தங்கப்பாண்டியன்

 

தமிழில் இன்று வெளியாகிக்கொண்டிருக்கும் பெண் கவிஞர்களின் கவிதைகளில் கவிஞர் தமிழச்சியின் கவிதை வரிகள் தனித்துவமானவை. பெண் எழுத்து என்று பால் அடையாளத்துடன் முன்னிறுத்தப்படும் கவிதைகளிலிருந்து விலகி தனக்கான புதிய தடத்தை உருவாக்கி வரும் தமிழச்சி தங்கப்பாண்டியனை மழைச்சாரல் பொழிந்திடும் காலை வேளையில் சந்தித்தோம். கிராமத்துப் பெண்போல் எதார்த்தமாக பேசத் தொடங்கிய அவருடைய பேச்சு கவிதையில் தொடங்கி வெவ்வேறு தளங்களுக்கு நகர்ந்தது. சங்கப் பெண் கவிஞர்களின் திணை மரபினை நவீன மொழியில் பதிவாக்கிடும் தமிழச்சியின் குரல் புதிய பிரதேசங்களுக்குள் பயணமானது. தமிழ் தமிழரென ஆழமான விசாரணையை முன்னிருத்தும் தமிழச்சியின் கவிதை அனுபவங்கள் வாசக மனத்திற்கு மிக நெருக்கமானவை.

 

  • வசீகரம் மிக்கதாகத் திகழ்கிற உங்கள் ஆளுமைக்கும் உங்களுடைய கவிதை இயக்கத்திற்கும் தொடர்பு உள்ளதா?

இல்லை.

எனது ஆளுமையின் சில கூறுகளான கல்வித் தகுதி (ஆங்கில இலக்கியப் படிப்பு), நடனம், பயிற்சி, இசையார்வம், அரங்கச் செயல்பாடு முதலியவை ‘கவிதை’ குறித்த எனது புரிதல்களுக்கும், ரசனைக்கும் உதவி இருக்கின்றன. ஆனால் கவிஞர் கீட்ஸின் வார்த்தைப்படி, ‘கவிதை மரங்களிலிருந்து இலை உதிர்வதைப் போல இயல்பாக’ வர வேண்டும் என நினைப்பவள் நான்.  அது எனது மிக அந்தரங்கமானதொரு, உள்முக பயணம்.  மனிதன், அவனைச் கூற்றி நடக்கும் அதிர்வுகளே கவிதைக்கான கரு.  எனது ஆளுமையின் உதவி கொண்டு நான் அதனை நுட்பமாகச் செதுக்கி, மெருகூட்ட முனைந்ததில்லை.  ஒரு படிமமோ, உவமையோ, தாயின் முலைப் பால் சொட்டெனத் தானே வரவேண்டும்.  பகுத்தறிய முடியாத மின்னலெனக் கை வர வேண்டும்.  ‘என் கவிதை என் குடல்களிலிருந்து உருவாகிறது’ – எனும் ஜப்பானியக் கவிஞர் டக்கமுரா கொட்டாரோவின் கட்சி நான்.  ஆளுமையின் ஜொலிப்பில் வளர வேண்டிய அவசியமில்லாத, வளரக் கூடாத கள்ளிச்செடி என் கவிதை.  ஆனால் எனது ஆளுமையின் சில பகுதிகள், கவிதை பற்றிய புரிதலுக்கு, குறிப்பாக, ‘உலகக் கவிதைகள்’ பற்றிய பரிச்சயத்திற்கும், தெளிவிற்கும் உதவி செய்திருக்கின்றன.

 

  • அனைவரையும் கவர்கின்ற கவிதை மொழியின் மூலம் நீங்கள் நிகழ்த்த விரும்பிய உரையாடல்கள் என்ன வகையான அரசியலை முன்வைக்கின்றன?

ஒரு மூன்றாம் உலகப், பின் காலனீயக், கிழக்கு ஆசியப் பிரஜையின் குரலை, அரசியலை என் கவிதை முன்வைக்கின்றது.

தொன்மவியலும், நாட்டுப்புற வழக்காற்றியலும், சடங்குகளும், சிறுதெய்வ வழிபாட்டு முறையும், நாட்டார் கலைகளும், செவிவழிச் சொலவடைகளும், நம்பிக்கைகளும், பழ மரபுக் கதைகளும் கொண்ட உலகம் எனது.  நான் அந்த கரிசல் நிலத்தின் இடைச்சி, மேய்ச்சி, பேச்சி.

மேற்குலகின் தனியாள் நனவிலிக் குரலுக்கு எதிராக அல்லது மாற்றாக இருப்பது எனது கூட்டு நனவிலிக் குரலான கவிதை.

யூங்கின் கூற்றுப்படி ‘முழுமையையும், சுயத்தையும்’ எனது கவிதைகள் வழி நேர்த்தியாகச் சொல்ல முயற்சிப்பவள்.  அவரது கூற்றுப்படியே ‘நனவு நிலையில் தனி மனுஷியாக இருந்தாலும், நனவிலியில் கூட்டு மனிதராக இருக்கிறேன்’.  கவிதை என்பது முழுக்க ஒரு அக நிலைச் செயல்பாடு.  ஆனால், அதில் எனது கூட்டு நனவிலி மனதையே முன்னிறுத்தி எனது படைப்பினை நிகழ்த்துவதில் ஒரு முக்கிய அரசியல் உண்டு. அது, கூகி வான் தியாங்கோ, ஆங்கில மொழியில் எழுதுவதை நிறுத்திவிட்டு, தனது இனக்குழு மொழிக்குத் திரும்பியபொழுது சொன்ன, “it is a political statement” என்பதற்குச் சற்று பொருந்தி வருகின்ற அரசியல். மொண்ணைத்தனமான ஒற்றை முகக் கலாச்சாரம், உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் – இவற்றிற்கு மாற்றாகத் தனது அடையாளத்தை, வேரை, மொழியைச் ‘சிக்கெனப் பற்றிக் கொள்ளும்’ – தாயின் முலை விட்டகல விரும்பாத சிசுவின் ஆதிச் செய்கை எனது கவிதை.

பிற மொழி இலக்கியங்களில் (குறிப்பாக ஆங்கிலம்), தத்துவங்களிலும், கோட்பாடுகளிலும் தீவிர ஈடுபாடும், விருப்பமும், கொஞ்சம் பரிச்சயமும் உள்ள நான், முழுக்க எனது கவிதைகளில் ‘சர்வ தேசியத்திற்கு’ எதிராக அல்லது மாற்றாக எனது நிலம் சார்ந்த அடையாளங்களை முன்வைப்பது என்பது ஒரு பின் நவீனத்துவ செயல்பாடுதான். நவகாலனிய ஆதிக்கச் சூழலுக்கு எதிரான கேள்வி எழுப்புவதே என் அரசியல்.

இங்கும் டக்கமுரா கொட்டாராவின் இக்கவிதை தான் எனது தெளிவு:

“என் கவிதை மேற்கத்திய கவிதையின் பகுதியல்ல

மேற்குலகின் கவிதைக்கான பேருணர்ச்சி எனக்கு உண்டு.

ஆனால் என் கவிதை வேறாக உருவாகிறதென்பதை

நான் மறுக்கவில்லை.

ஏதென்ஸின் காற்றும் கிறித்துவத்தின் பூமியடி நீரூற்றும்

மேற்குலகச் சிந்தனை மற்றும் சொற் தொகுதியை வளர்த்திருக்கிறது

அதன் முடிவற்ற அழகாலும் உரத்தாலும் ஆழச் சென்று

என் இதயத்தைத் தொடுகிறது –

ஆனால் அதன் உடற்செயலியல்,

கோதுமை – உணவு, வெண்ணெய் மற்றும் மாட்டிறைச்சி ஸ்டீக்கும்

என் மொழியின் தேவைக்கு எதிராய் இயங்குகின்றது.”

 

  • உங்கள் குடும்பப் பின்னணி, இயக்க சார்பு, அதிகார மையத்துடன் உள்ள தொடர்பு இவற்றால் உங்களுடைய கவிமனம் ஆளுமை பெற்று உள்ளதா?

நிச்சயமாக இல்லை.

‘கவிமனம்’ என்பது நீங்கள் மேற்சொன்ன அத்தனையும் சேர்ந்த மூலப்படிவம்தான்.  நான் அதனை மறுக்கவில்லை.  ஆனால் கவிதைச் செயல்பாடு என்று வருகையில், அது முழுக்க அகம் தொடர்புடைய ஒன்று.  அகம் சார்ந்த, அது தீர்மானிக்கின்ற உள்ளுணர்ச்சியின் வெளிப்பாடு கவிதை.  உளச் செயல்பாட்டினைப் பாதிக்கின்ற, மேம்படுத்துகின்ற, ஊடறுத்தும் செல்லுகின்ற அல்லது தொந்தரவு செய்கின்ற பல நிகழ்வுகள் எனது குடும்பப் பின்னணி, இயக்க சார்பு, அதிகாரத்தின் அருகில் இருத்தல் மூலமாக எனக்கு நிகழ்ந்திருக்கலாம். அவற்றைச் சமயங்களில் கவிதை வழி நான் உணர்த்தியிருக்கலாம். ஆனால், என் ‘கவிமன’ ஆளுமைக்கும் இவற்றிற்கும் தொடர்பில்லை. எனது கவிதை சுதந்திரத்திற்குள்ளும் இவை எதுவும் நுழைந்ததில்லை. நுழைந்துவிடக்கூடாது என்பதில் நான் கவனமாகவும் இருக்கிறேன். ‘கவிஞர்கள், ஒவ்வொருவரும் அவரவர் சுதந்திர சாம்ராஜ்யத்திற்குள் தனித்தனியாகவே நுழைகிறார்கள் எனும் சீனப் பெண் கவிஞர் யாங் லியூஹாங்கின் கூற்று மிக முக்கியம். அரசியல் குடும்பம், கட்சி உறுப்பினர் எனும் புற அடையாளங்கள் தொட முடியாத தனித் தீவு என் கவிதை. “கவிதைகளின் வழியாக அக வாழ்க்கை பூர்த்தியாகிறது” என்பதே எனக்கு மிக முக்கியமான விஷயம். எனது கவிதைக்கான எல்லைகளை இவை ஒருபோதும் குறுக்கியதில்லை, தீர்மானித்ததுமில்லை.

 

  • சுமதி – தமிழச்சியாக, தமிழச்சி – தமிழச்சி தங்கபாண்டியனாக பரிணமித்ததின் இடைவெளியில் நிகழ்ந்த மாற்றங்கள் உங்களுடைய தன்னுணர்வை பாதிக்கவில்லையா?

சுமதி – ‘தமிழச்சியாக’ மாறியதோ அல்லது தமிழச்சி – ‘தமிழச்சி தங்கபாண்டியனாக’ மாறியதோ எவ்வகையிலும் என்னுடையத் தன்னுணர்வைப் பாதிக்கவில்லை.

ஏனென்றால், ‘தமிழச்சி’ எனும் எனது புனைபெயரை, “தமிழ் மட்டுமே உயர்ந்தது, நான் மட்டுமே சுத்தத் தமிழச்சி” எனும் தொனியில் நான் தேர்ந்தெடுக்கவில்லை.  எனது முதல் தொகுப்பான ‘எஞ்சோட்டுப் பெண்’ வெளிவருகையில் ஏற்கனவே சுமதி மணிமுடி எனும் கவிஞர், ‘கல்மரம்’ எழுதிய சுமதி படைப்புலகில் இருந்ததினால், ஒரு புனைபெயரை யோசித்தேன்.  கிராமத்துத் தமிழ்ப் பெண் என்பதன் அடையாளமாக மட்டுமே (without any fanaticism or fundamentalism) ‘தமிழச்சி’ எனும் பெயரைத் தேர்ந்தெடுத்தேன். அந்த சமயத்தில், கலைஞர் அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நான் எழுதிய கவிதை ‘தமிழச்சி’ என்கிற பெயரில் ‘முரசொலியில்’ வெளிவந்ததும் ஒரு காரணம்.

நான் எனது திருமணத்திற்குப் பின்பும் கூட த.சுமதி தான்.  தங்கப்பாண்டியன் எனும் எனது தந்தையின் முதலெழுத்தைத் தான் நான் இன்று வரை வைத்துள்ளேன்.  கணவரது பெயரின் முதல் எழுத்தை அல்ல; தமிழச்சி ‘தங்கப்பாண்டியன்’ என்பது இன்னொரு புனை பெயரல்ல.  திருநெல்வேலி திமுக இளைஞரணி மாநாட்டில் கலைஞர் என்னைக் கொடியேற்றிடச் செய்தபொழுது, அடையாளத்திற்காக, எனது தந்தையாரையும், குடும்பத்தையும் கௌரவிக்கின்ற விதமாக ‘தங்கப்பாண்டியன்’ எனும் பெயரைத் தமிழச்சியின் பின் இணைத்தார்.  இதிலே என் உணர்வு எங்கே பாதிக்கப்பட்டிருக்கிறது?  த.சுமதியில் முன்பாக இருக்கின்ற ‘த’, தமிழச்சியின் பின் ‘தங்கப்பாண்டியனாக’ வருவது இயல்பான, பெருமைக்குரிய ஒரு விஷயம். புதிதான எந்த ஒரு கிரீடத்தையும் (முள்ளோ/மலரோ) இந்த மாற்றங்கள் எனக்குத் தரவில்லை.

 

  • நவீன கவிதை இயக்கத்தில் பெண்ணியத்தின் பங்கு என்னவாக இருக்கின்றது? அதில் உங்கள் பங்கு என்ன?

ஒரு புத்தகமாக எழுத வேண்டிய விஷயம் உங்கள் கேள்விக்கான முதல் பகுதிக்கான பதில்.

எது ‘பெண்ணியம்?’ என்பதில் தொடங்குகிறது விவாதம். அதிலும் மேலை நாட்டுப் பெண்ணியம், ஐரோப்பியப் பெண்ணியம் ஆகியவற்றின் தகவமைப்பை அல்லது சட்டகத்தை அப்படியே நமக்கான பெண்ணியமாக உருமாற்றுதல் என்பது எனக்கு உவப்பானதல்ல. நமது பிராந்தியத்தின் பிரச்சனைகளான பண்பாட்டு அடிமைத்தனம், கலாச்சாரப் போலிமைவாதம், சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறை, மதம், திருமணம், பாலியல் முதலிய பல அலகுகளை உள்ளடக்கிய ‘பிராந்திய பெண்ணியத்தை’ வார்த்தெடுக்க வேண்டும் என்பதே சரி.  வெறும் உடலரசியல் மட்டும் பெண்ணியம் அல்ல – அது பெண்ணியத்தின் மிக முக்கியமானதொரு கூறு மட்டுமே.

“ ‘Feminism’ என்பதை நாகார்ஜுனன் 1987ல் அபர்ணா சென்னின் ஒரு கட்டுரையை மொழி பெயர்க்கும்போது ‘பெண்நிலைவாதம்’ என்று மொழி பெயர்த்தார். ஆனால் அவருக்குப்பின் யாரும் அதனைப் பிரயோகிக்கவில்லை. சிறுமி தொடங்கி முதுகிழவி வரை பெண் தன் நிலையை வாதிட்டால் அது பெண் நிலைவாதம்” என்று சமீபத்தில் தோழர் சாந்தாராம் எனக்கு எழுதியது நினைவிற்கு வருகிறது.

‘பெண் நிலை வாதம்’ என்பது சங்ககாலம் முதல் திருப்பாவை தொடர்ந்து, நவீன, பின் நவீன காலம் வரையிலான கவிதைகளின் மிகக் காத்திரமான ஆதிக்குரல். நவீன கவிதை இயக்கப் பரப்பில் தவிர்க்க முடியாத, முன்னிலும் பார்க்க திடமுடனும், கட்டுகளற்றும் ஒலிக்கின்ற குரல், ‘பெண்நிலைவாதி’களின் குரல். ‘பெண்நிலைவாதத்தை’ இரா.மீனாட்சி துவங்கி, சுகந்தி சுப்ரமணியம், கிருஷாங்கினி, ரிஷி, பெருந்தேவி பலர் 70, 80-களில் துவங்கி இன்றுவரை மிகச் சரியாக இதனைக் கவிதைகளில் முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.

என்னைப் பொறுத்தவரை, எனது பங்கு என்பது இதில் ஒன்றுமேயில்லை – ஏனென்றால் ‘பெண்நிலைவாதம்’ என வரும்பொழுது ஒரு களப்பணியாளராக நான் இருந்ததில்லை.  எனவே, ‘எனது பங்களிப்பு’ என்று நான் எதையும் (கவிதைப் பரப்பில்கூட) சுட்டும் தார்மீக உரிமை எனக்கில்லை. எனது கவிதைகளின் வழி மூன்றாம் உலகைச் சார்ந்த, உழைக்கின்ற பாட்டாளி வர்க்கப் பெண்களின் நிலை – அவர்களது பாடு. இவை பற்றிப் பதிவு செய்திருப்பதன் மூலமாக மட்டுமே ‘பெண்நிலைவாதத்திற்காகப்’ பங்காற்றி இருக்கிறேன் எனும் சிறு அங்கீகாரம் கோருவதென்பது அபத்தம். கிராமிய நிலப்பிரபுத்துவம் ஒருவகையில் பெண்ணை அடிமை செய்வதையும், உலகமயமாக்கல் எனும் வர்த்தகம் நுகர்வுப் பொருளாக, முதலாளித்துவ முகம்கொண்டு இன்னொரு வகையில் அடிமைப் படுத்துவதையும் நான் எனது கட்டுரைகளில்தான் அதிகம் பதிவு செய்திருக்கிறேன்.

இங்கு “மூன்றாம் உலக நாடு மக்களின் வறுமையைக் காண்கையில், எந்தவோர் இலக்கியப் படைப்பும் அர்த்தமிழந்து போகின்றது” என்ற சார்த்தரின் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றன.  “செத்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையையும் ‘குமட்டல்’ நாவலையும் எடைக்கு எடை பார்க்கும்போது, இந்த நாவல் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது” என்ற அவரது கூற்று எனக்கு மிக முக்கியம். ‘பெண்நிலைவாதத்தின்’ முழு வீச்சையும், அதன் வலிமையையும் அனுபவித்து அறியாத, இன்னும் பெருமளவில் வாழ்கின்ற கரிசல்காட்டு குருவாச்சிகள், சிலம்பாயிகளின் முன் அது பற்றிய என் கவிதையை எடைக்கு எடை பார்த்தால் அது ஒன்றுமேயில்லை.  இதிலே என் பங்கு அப்பம் எங்கே என்று கேட்பது அநாகரீகம் அல்லவா?

 

  • உங்கள் கவிதைகளை ஆழ்ந்து வாசிக்கும்போது ஒரு பெருநகரவாசியாக தகவமைவதில் உங்களுக்கு சிரமமிருப்பதாக உணரமுடிகிறது. இது ஏன்?

உண்மைதான். நான் மேலோட்டமாக ஒப்பனையிலும், உதட்டுச் சாயத்திலும், உடைகளிலும் பெருநகரப் பெண்ணாகத் தோற்றமளித்தாலும் அடிப்படையில் ‘மல்லாங்கிணற்றுக்காரி’ தான்.  நகரத்தை நான் நம்ப மறுக்கின்றேன்.  நுழைவுச் சீட்டு இல்லாமல் எங்கும் உங்களை அனுமதிக்காத அந்த சமூகத்திற்கு நான் அந்நியள். என் கிராமத்தில் கண்காணிப்பு உண்டு, சாதிவெறி உண்டு, மனிதனின் அந்தரங்கத்திற்குள் தலையிடும் அநீதி உண்டு, அதிகாரக் கட்டமைப்பின் ஆளுமையும், ஒடுக்கப்படுபவரின் கண்ணீரும் உண்டு. ஆனால், இவற்றோடு கூடவே “எந்த ஒரு மனிதனும் அனாதையல்ல” என உணர வைக்கின்ற ஒரு இயல்பான கருணை உண்டு. ஒருவேளை நான் இடைஜாதிப் பெண்ணாக, அதிலும் மிகக் கொண்டாடப்பட்டு இளவயதில் வளக்கப்பட்ட பெண்ணானதால் அதன் செழுமையான மனித நேசிப்பும், வெகுளித்தன்மையும், குழுவாழ்க்கைக் கொண்டாட்டமும் – இவை மட்டுமே எனக்கு அறிமுகமாகி, மிக ஆழப் பதிந்திருக்கலாம். உத்யோகம், படிப்பு என நகரத்திற்குப் பெயர்கையில் என்னைத் தனது இரக்கமற்ற தராசினால் நகரம் தள்ளுபடி செய்கிறது.  வளர்ச்சி, தனி மனித உரிமை, அந்தரங்கம் காப்பற்றப்படல் போன்ற பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் கண்ணுக்குத் தெரியாத அதிகாரத்தினால் மிக நுட்பமாக இங்கும் நான் கண்ணியமான வன்முறைகளால் துரத்தப்படுகிறேன். ‘வளர்ச்சி அல்ல வீக்கம்’ என Mac Donalds-ம் Shopping Mall-களும் Star Hotels-ம் பயமுறுத்த, உலகச் சந்தையில் மூச்சுத்திணறி, (திருவிழாவில் தொலைந்த குழந்தையென) எனது கிராமத்திற்குச் செல்கின்றேன்.  கிராமம் அல்லது தொலைத்த வாழ்வு பற்றிய புலம்பல்கள் மட்டுமே எனது கவிதை என்பவர்களுக்கான பதில் இது தான் – இரு எதிர்மைகளுக்கிடையேயான வலியே அவை. ஆங்கிலக் கவிஞர் Wordsworth இங்கிலாந்தின் வயல்வெளிகளை விதந்தோதி எழுதினால் கொண்டாடுபவர்கள், ‘நிலம்’ என்கின்ற அடையாளத்தை முன்நிறுத்தி ஒரு கரிசல் பெண் எழுதினால், அவரைக் ‘கரிசல்காட்டுப் பிற்போக்குக் கவிஞர்’ என்பீர்களா? உண்மையின் சிறு தெரிப்பும், அனுபவத்தின் தனிக்கூறு பொதுமையாகும் மாயமும் எனது வாழ்நிலத்தில், நான் பால்யத்தில் வாழ்ந்த வாழ்க்கையில் தான் எனக்கு ஏராளமாகக் கிடைக்கிறது. அவையே கவிதைகளாகின்றன. எச்சரிக்கையும், நம்பகத்தன்மையுமற்ற நகரத்தை விட அழுக்கு நிறைந்த, பிற்போக்கான எனது கிராமம் எனக்கு ‘ஒசத்தி’ தான்.

 

  • வனப்பேச்சி உங்கள் நிழலைப் போல் பின்தொடர்கிறாளே. அவள் உங்களுக்கு யார்? அடிப்படையில் நீங்கள் நிகழ்த்த நினைக்கும் கலகங்களைத்தான் வனப்பேச்சியின் ஊடாக நிறைவேற்றிக்கொள்கிறீர்களா?

‘வனப்பேச்சி’ எனது alter-ego. நான் எப்படி வாழ, செயல்பட விரும்புகிறேனோ அப்படி எல்லாம் வாழ்பவள், செயல்படுபவள்; எனது வாழ்நிலத்தின் ஆதிபராசக்தி;

gun fight Kanjana; என்னுடைய கலாசாரத்தின் குறியீடு; என் ஒட்டுமொத்தமான அனுபவத்தில் தவிர்க்க முடியாததொரு அங்கமானவள்; அதனால் எனது கவிதையில் ஒரு படிமமாகத் தொடர்ந்து வருபவள்; பெண் பற்றிய பொதுப் புத்தி, மதிப்பீடுகளுக்கு மாறான பிச்சி அவள்; கட்டற்ற சுதந்திரமும் வலிமையையும் உடையவள்.  என் மக்களின் கறிச்சோற்றையும், கள்ளையும் புசித்து மகிழ்கின்ற பெண்னுரு; மர்மங்கள் எதுவுமற்றவள்.  ஆனால், மாயக்காரி.  மிக முக்கியமாக, நான் மரணம் குறித்து அஞ்சியபடி காத்திருக்கும் எனது கடைசி நிமிடங்களில், குற்றவுணர்வின்றி விடைபெற வழிநடத்துகின்ற மனசாட்சி.

கலகக் குறியீடுதான் அவள். 21ம்நூற்றாண்டு தொடங்கி வைத்த புதிய போக்கான, பெருங்கதையாடலுக்கு (meta-narrative) எதிராக உரத்து ஒலிக்கின்ற இனக்குழுவின் ‘கானா’ பாடல் அவள். எம் மக்களின் துடியான ‘ஒப்பாரி’ அவள்.

 

  • மேற்குலகம் சார்ந்த போக்குகளை நன்கறிந்தவர் நீங்கள் அவற்றின் பாதிப்புகளை ஒர் இடத்தில் கூட உங்கள் கவிதைகளில் காண இயலவில்லை. உங்கள் வாசிப்பு ஒரு தமிழ்ப்பெண் என்கிற மன அமைப்பில் உடைவை ஏற்படுத்தவில்லை எனக் கருத வாய்ப்பு இருக்கிறதா? இல்லை இதற்கு வேறுகாரணங்கள் உள்ளனவா?

இதே கேள்வியினை தாகூர் மீது பிரேமமும், பிரமிப்பும் கொண்டு அவரை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மேலை நாடுகளுக்கு அறிமுகப்படுத்திய இங்கிலாந்து நாட்டின் புகழ்பெற்ற கவிஞர் W.B.Yeatsயிடம் கொஞ்சம் மாறுதலுடன், “கீழைத் தேய நாடுகளின் போக்குகளை நன்கறிந்தவர் நீங்கள். குறிப்பாக இந்தியாவின் வங்காளத்தின் புகழ்க் கவி தாகூரின் பாதிப்பு உங்களிடத்தில் உண்டு.  ஆனால், உங்கள் கவிதைகளில் அவற்றை ஓர் இடத்தில் கூட காண இயலவில்லை.  உங்கள் வாசிப்பு ஒரு ஆங்கிலேயர் என்கிற மன அமைப்பில் உடைவை ஏற்படுத்த வில்லை எனக் கருத வாய்ப்பு இருக்கிறதா?” என்று நீங்கள் கேட்பீர்களாயின் அது எவ்வளவு அபத்தமானது!

வாசிப்பு அனுபவம் என்பதும் வாழ்வனுபவம் என்பதும் வேறு வேறு.  வாசிப்பு அனுபவம் என்பது நமது படைப்பின் தளத்தை விரிவுப்படுத்தலாம்; நுட்பங்களுக்கும், நகாசு வேலைகளுக்கும் அது கை கொடுக்கலாம்.  அதிலே, புத்திக்கே முதலிடம்.  ஆனால், வாழ்வனுபவம் என்பதுதான் படைப்பின் அச்சு; ஆணிவேர் அதிலே இதயத்திற்கே முதலிடம்.

நான் எனது வாசிப்பினை அகலிக்கையில் தான், கிரேக்க, ஐரோப்பிய, ஃப்ரென்ச் தத்துவங்களையும், சிந்தனைகளையும் படித்துப் புதிய போக்குகளை அறிந்து கொள்ளும் போது தான் எனது கண்ணோட்டம் மாறுகின்றது; நான் தேங்காமல் ஓடும் நீராகின்றேன் என்பது உண்மைதான்.  ஆனால், எனது வாழ்பனுவத்தின் ஒரு கீற்றை நான் புனைவின் துணை கொண்டு உலகப் பொதுமையாக்குகையில் தான் படைப்பு சாகாவரம் பெறுகிறது.  தத்துவம் குறைபட்டு நிற்பது அது கவிதையாகாமால் போகும் போது தான்.  “ஒரு மேலான சிந்தனையாளன், ஒரு தத்துவஞானி அதனால்தான் ஒரு கவிஞனைத் தொடர்ந்த வண்ணமே இருக்கிறான். ஒரு மனிதன் அனுபவத்தை மூளையால் அள்ளும்போது குறைபடும் இடத்தைக் கவிஞன் தன் இதயத்தால் இட்டு நிரப்புகின்றான்” என்பார்கள்.

மேற்குலகம் சார்ந்த விஷயங்களில் எனது புத்திக்கு அதிக வேலை. இதயத்திற்கோ எனது நிலமும், நிலம் சார் வாழ்வும், தவிரவும், ‘தமிழ்ப் பெண்’ என்ற மன அமைப்பு இரண்டாவது கட்டம் தான். முதற்கட்டமாக ‘பெண்’ எனும் மன அமைப்பில் உடைவை ஏற்படுத்தியதில், சிமோன் த பூவாரும், மார்க்ஸூம், பியாட்டிரிஸ் வெப்பும், ஸாஃபோவும் எனக்கு மிக முக்கியமானவர்கள்.  இவர்களுக்கு நிகராக இந்தத் ‘தமிழ்ப் பெண்’ என்கின்ற கட்டமைப்பைப் போட்டுடைத்த தந்தை பெரியாரை முழுவதும் உள்வாங்க முயற்ச்சிப்பவள்.  ஆனால், இந்தத் தாக்கங்களையும், அவற்றின் என் மீதான பாதிப்பினையும் முன் வைத்துக் கவிதை புனைந்தால் அது கோஷமாக அல்லது வெற்றுப் பிரச்சாரமாக அல்லது கோட்பாட்டு அடிப்படையிலான ஒன்றாக மாறலாம். அதில் எனக்கு உடன்பாடில்லை.

மரபு, நம்பிக்கை, மொழி அனைத்தையும் கட்டமைக்கப்பட்டவையே – புனிதம் என்று போதிக்கப்பட்டவையே எனும் கருத்தியலில் முழு நம்பிக்கை எனக்குண்டு.

அவை குறித்த கேள்விகள், விவாதங்கள் என் கவிதையில் உண்டு.

‘தமிழ்ப் பெண்’ எனும் மன அமைப்பே என் மூதாதையர் கட்டமைத்தது தான் – இத் தமிழ்ச் சமூகம் என் மீது ஏற்றிவைத்த கலாச்சாரப் பதிவு தானே? பூ, பொட்டு, புடவை, வளையல்கள் அணிந்திருந்தால் மட்டும் தானா ‘தமிழ்ப்பெண்’?

மற்றபடி W.B.Yeats ஆங்கிலேயர் என்பதால் ஆங்கிலத்தில், அந்த இலக்கியத்திற்கான போக்குகளில் கவிதை எழுதியதைப் போலவே, நானும் தமிழில் இயங்குகின்றேன் அவரளவிற்கு உயரம் தொடாவிட்டாலும் – it is as simple as that.

 

  • சார்த்தர் இலக்கியத்துக்கு சமூக அரசியல் நிலைப்பாடு வேண்டுமென்கிறார். இருண்மையை அவர் அங்கிகரிக்கவில்லை. ஆனால் ரோலான் பார்த்தோ அவருக்கு எதிராக எழுத்தாளனின் மரணம் குறித்து பேசுகிறார். அர்த்தத்தையும் ஒழுங்கையும் எழுத்து பகடி செய்ய வெண்டுமென்கிறார். உங்கள் எழுத்துகள் சார்த்தரின் கூற்றுக்கு நெருக்கமாக இருப்பது போல் தெரிகிறது?

“ழான் பால் சார்த்தரின் ‘இலக்கியம் என்றால் என்ன?’ எனும் கட்டுரையைப் படித்துவிட்டு ஃபிரெஞ்ச் இலக்கிய உலகில் பிரவேசித்த பார்த், பின்னாளில் அதே கட்டுரைக்கு எதிராக ‘பிரதி தரும் இன்பம்’ என்னும் கட்டுரையை எழுதி சார்த்தருக்கு விடை கொடுத்து அனுப்பினார்” எனப் படித்துள்ளேன்.

சார்த்தர் இன்று காலாவதியாவிட்ட சிந்தனையாளர் எனச் சொல்லப்பட்டாலும், பார்த்தின் பின் நவீனக் கருத்துக்களின் தான் எனக்கு மிக ஈடுபாடு என்றாலும், பார்த் ‘கவிதை’ எனும் படைப்பை முற்றாக நிராகரித்தவர்.  கவிதையின் எதிரியான பார்த்துக்கு ஜப்பானிய ஐக்கூ கவிதை மட்டும் எப்படிப் பிடிக்கின்றது?

சார்த்தருக்கு நான் கடமைப்பட்டவள் – ஒரு மூன்றாம் உலகப் பிரஜையாக. அவரது “சாரத்திற்கு முன்பே இருத்தல் இருக்கிறது” என்பதில் இருந்துதான் நான் மிஷேல் ஃபூக்கோவிற்கு வந்தேன்.  ஆனால், சார்த்தர் “எழுத்து தெளிவான விவரிப்புத் தன்மை கொண்டதாக இருக்கவேண்டும்” என்று சொன்னதிலும், “எழுத்தாளன் மண்வெட்டியை மண்வெட்டி என்றுதான் எழுத வேண்டும்” என்றதிலும் எனக்கு உடன்பாடில்லை. “சொல்ல வருவதைத் தெளிவாகத் துல்லியமாகத் தெரிவிப்பதற்கு மாறாக அவன் கையாளும் மொழியை மீறிய நிர்பந்தம் அவன் மேல் சுமையாகக் கனக்கிறது” எனும் பார்த் தான் எனக்கு நெருக்கம்.  எனது கவிதைக்கு ஒரு அரசியல் நிலைப்பாடு உண்டு தான்.  ஆனால், பார்த் கூற்றுபடியே பார்த்தாலும், அர்த்தத்தையும், ஒழுங்கையும் எழுத்து பகடி செய்ய வேண்டும் என்பதே மரபார்ந்த, அதிகாரத்திற்கு எதிரான அரசியல் நிலைப்பாடு தான்.  “ஒவ்வொரு சொல்லிற்குப் பின்பும் ஒரு வர்க்கத்தின் முத்திரை இருக்கிறது” என்று மார்க்ஸ் சொன்னதுபோல இலக்கியத்திற்கு சமூக, அரசியல், நிலைப்பாடு உண்டு. ஆனால், மேற்சொன்ன மூன்று மட்டுமே இலக்கியத்தின் அளவுகோல்கள் அல்ல. வெறும் பிரச்சாரம், கோட்பாடு அல்லது கோஷம் இலக்கியமல்ல.  அது கலையாக மாறுகின்ற ரசவாதமே இலக்கியம்.

 

  • உங்கள் கவிதைகளில் ஒருவித பிரக்ஞைபூர்வ தருக்க இழை தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. வாசகரிடம் முழுமையாகப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிற தவிப்பு தெரிகிறது. ஆனால் இதை நீங்கள் வனப்பேச்சி கவிதைகளில் கலைக்க முயற்சிப்பதும் நிகழ்கிறது. இத்தகைய போக்கு உங்களிடம் தொடருமா?

கவிதை என்பதே இரண்டு வகையான உரையாடல் தான்.  ஒன்று வாசகனிடம் பேசுவது (dialogue), மற்றொன்று  தனக்குத்தானே அரற்றிக் கொள்வது (monologue).  அரசியல், அறம், அழகியல் மூன்றில் சரிசமமான வெளிப்பாடு தான் கவிதை. உரைநடையில், புனைகதையில் வாசகனை முன்வைத்து பொறுப்புணர்ச்சியோடு இயங்குங்கள் என்று சொன்ன சார்த்தர் கூட கவிதை பூடகமாயிருக்கலாம் என்கிறார். கவிதையின் எதிரி பார்த்தும் எனக்கும் கைகொடுக்கிறார் – “இலக்கியம் குறிகளால் ஆனது” எனச் சொல்லி. வனப்பேச்சி ஒரு குறியீடுதான். கவிதையைப் பொறுத்த வரை எனது இரண்டு வகை உரையாடல்களில் monologueஇல் இருண்மையும், dialogueஇல் வாசகனிடம் பகிர்ந்து கொள்கிற தவிப்பினால் வெளிப்படைத்தன்மையும் இருக்கலாம்.

என் கவிதைகளில் எந்தவிதமான ‘போக்கும்’ இருந்துவிடக் கூடாதென்பதுதான் எனது கடந்த கால யத்தனமும், வருங்கால ஆசையும். பேச்சி மனது வைக்கட்டும்.

 

  • கவிதையை ஒரு படைப்பாக கருதுகின்றீர்களா? அல்லது ஒர் அழகியலாக எண்ணுகிறீர்களா? ஒரு தொழில் நுட்பம் என்கிற அளவில் மொழி விளையாட்டா? அல்லது அரசியல் சமூக மாற்றத்துக்கான ஆயுதமா?

கவிதையை ஒரு படைப்பு என்று மட்டுமே கருதுகிறேன்.  ஆனால் படைப்பு என்பதன் components எவையெனில், உணர்வெழுச்சி, உள்ளீடு, அழகியல், craft என்கிற வார்த்தைகளைச் செதுக்கும் நுட்பம், ஒரு உருவகம், படிமம் என்கின்ற நுண்மைகள் இவை எல்லாம் தானே? போலந்தின் கவிஞர் ததயூஸ் ரோஸ்விட்ச்ட் கவிதையின் மொழி குறித்து எழுப்புகின்ற சந்தேகம் மிக முக்கியமானது.  அவர் சொல்கிறார்: “எந்த அளவிற்கு அதிகமாக வேலைப்பாடு மிக்கதாய், ஆச்சர்யமிக்கதாய், நுண்மைகள் உடையதாய் ஒரு கவிதையில் வெளிப்பகுதி அமைந்துள்ளதோ அதைவிட சந்தேகத்திற்கு இடமானதாய் அதன் உள்ளீடும், உணர்வுத் தீவீர நிகழ்வும் இருக்கும். ஒரு கவிஞன் படிமங்களைத் தன் கவிதைகளுக்கு விளக்கம் தரவே பயன்படுத்துகிறான். எனவே அது ஒரு சுற்று வழி…. படிமமும், உருவகமும் நிஜமான கவிதையின் அர்த்தத்தை வாசகன் எதிர்க்கொள்வதைத் துரிதப்படுத்துவதற்குப் பதிலாகத் தாமதப்படுத்தவே செய்கின்றன”.

ஆனாலும் ரோஸ்விட்ச்ட் படிமங்களைப் பயன்படுத்தினார்.  நானும் பயன்படுத்துகின்றேன்.  எது படைப்பின் நித்யத்தைப், பூரணத்துவத்தைத் தீர்மானிக்கிறது என்பதிலும் பார்க்க, ‘இது என் படைப்பு’ என்கிற எளிமை தான் என் பலம்.  ஆனால், கண்டிப்பாகக் கவிதை எனக்கு அரசியல் சமூக மாற்றத்துக்கான ஆயுதமல்ல.  இலங்கைப் பெண் கவிஞர் சிவரமணியின் கவிதை வரிகள் ஆயுதம் தான்.  ஆனால் ஆயுதமாக வேண்டும் என்கிற உத்தேசித்திற்காக மட்டுமே எழுதப்பட்டவை அல்ல அவை.  எனக்குக் கவிதை ஒரு உள்நோக்கிய பயணம் மட்டுமே.  (மற்றபடி அதை வைத்துக் குண்டூசி செய்கிற உத்ததேசம் கூட இல்லை)

 

  • Define Poetry என்றால் என்ன சொல்வீர்கள்?

கவிதை எனக்குக் காமமும், மரணமும்.

மொழியின் உச்சபட்ச சவால் கவிதைதான்.  இங்கும் ததயூஸ் ரோஸ்ட்விட்ச்ட் இன் கூற்றுதான் உதவுகின்றது :

“கவிதை உத்தேசமாய்

ஒரு கவிதையைப் பற்றியதாய்

ஒரு முத்து

முத்துக்களைப் பற்றிப் பேசுவது போல்

ஒரு பட்டாம் பூச்சி

பட்டாம் பூச்சிகளைப் பற்றிப் பேசுவது போல்”

இருக்கவேண்டுமென்பதே என் ஆசை. “A poem is what it does to you” என்பதிலும் எனக்கு நம்பிக்கை உண்டு.  ஒரு கவிஞன் இந்த உலகத்தை நாம் வார்த்தைகளில் கிரகித்து விட முடியும் என நம்பி செயல்படுவது மிகப் பெரிய அபத்தம் என்றாலும், அதைத் தவிர, அந்த அவஸ்தையைத் தவிர வேறு வழி? காலமெல்லாம் மொழியின் போதாமையை உணர்த்துகின்ற, என்னைப் பகடி செய்கின்ற சித்திரக்குள்ளி, கவிதை.

 

  • உங்கள் கவிதையைக் கடுமையாக விமர்சிக்கும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்?

கண்டிப்பாகக் கோபம் வராது.  ஆனால் ஒரு விதமான பதற்றமும், கலக்கமும் வரும்.  வெளியே ஒரு புன்னகையுடன் உன்னிப்பாகக் கவனிப்பது போலப் பாவனை செய்தாலும், எப்படி பதில் சொல்வது என்கிற தயாரிப்பில் உடனடியாகப் புத்தி இறங்கும்.  ஆனால், நான் react செய்வதை விட, respond செய்யவே விரும்புவேன்.  Issue மட்டுமே முக்கியம், சம்பத்தப்பட்ட நபர் அல்ல என்பதில் எனக்கும் தெளிவு உண்டு.  என் கவிதைகளைக் குப்பை என்று சொல்பவர்களுடன் காபி அருந்திக் கொண்டு, ஒரு cafeஇல் அது குப்பையில் எந்த வகை என்று விளக்கமாகச் சொல்லுங்கள் எனக் கேட்கின்ற பக்குவம் எனக்குண்டு. மேலும், “விமர்சனத்துறை” குறிப்பாக “The English Literary Critical Tradition” னின் பிதாமகர்களை (T.S. Eliot, Mathew Arnold, F.R. Leavis) எனக்கு 80 களில் அறிமுகப்படுத்திய எனது பேராசிரியர் T.V. Subba Rao எனக்கு விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிற, விவாதிக்கின்ற பக்குவத்தை, தேவையினை மிக வலியுறுத்தியவர். படைப்பை விட நேர்மையானதாக விமர்சனம் இருக்கும் பட்சத்தில் எனக்கு அதில் வருத்தங்கள் வராது.

 

  • கவிதை எழுதி முடித்த பிறகு மீண்டும் அதை வாசித்துச் செப்பம் செய்வீர்களா? அது தீவிர மன எழுச்சியில் விளைந்த கலைப்பொருள் அதை தொந்தரவு செய்ய வேண்டாம் என விட்டுவிடுவீர்களா?

என்னுடைய முதல் தொகுப்பில் (‘எஞ்சோட்டுப் பெண்’) நான் செப்பங்கள் செய்யவில்லை.  அதற்காக அவற்றைக் கலைப் பொருள் என்றெல்லாம் கருதிச் செய்யாமல் விட்டேன் என அர்த்தமில்லை.  கவிதை எனும் பரப்பில் தொடர்ந்து செயல்பட வேண்டுமென பயணப்படுகையில், (‘வனப்பேச்சி’ தொகுப்பில்) சிலவற்றை எழுதிய பின்பு மறுபடி, மறுபடி edit செய்தேன்.  கவிதை மிக அடர்த்தியாக, செரிவாக, சிக்கனமாக இருந்தால் தேவலாம் என்று பட்டதால் அந்த முயற்சியும் கூட.  அதனை நான் ‘செப்பம்’ என மாட்டேன். ‘மொழியின் போதாமை’ எனும் சவாலில் நான் தோற்றுத், தோற்று – மாற்றிய, இட்டு நிரப்பிய, அகற்றிய வார்த்தைகள் – எனலாம்.  ஆனால், ஒரு படிமமோ, உவமையோ, வந்தால்

வந்தது தான். பின்னர் அதனை மாற்றுவதில்லை.

 

  • உங்கள் கவிதைகள் எப்படி உருவாகின்றன?

தீவிரமான உணர்வெழுச்சியில்தான். சமயங்களில் பத்திரிக்கைகளில் ‘பொங்கலுக்கு’, ‘தீபாவளிக்கு’ என்று சிறப்பு மலர்களுக்காகக் கவிதை எழுதி அனுப்ப

dead line வந்துவிட்டாலும் ஒன்றுமே எழுத முடியாமல் போனதுண்டு.  எனக்கென்று ஒரு emotional spark வேண்டும் கவிதை எழுத.  ‘கவியரங்கக் கவிதைகள்’ எல்லாம் நான் செய்தவை, படைத்தவை அல்ல. அவற்றில் எனக்கு உடன்பாடுமில்லை. புறத்தில் நடைபெறுகின்ற ஒரு நிகழ்வோ அல்லது மன அடுக்கின் ஒரு அனுபவமோ என்னைப் பாடாய்படுத்தித் தூக்கமின்றித் துரத்த வேண்டும்.  எப்படி இதிலிருந்து விடுபட எனும் உந்துதலோடு நான் எழுதினால் மட்டுமே அது கவிதையாக வெளிவரும்.  அதற்காக அச்செயல்பாடு வெறும் வடிகாலோ, அல்லது catalyst ஒ அல்ல. அது என்னைப் பிடித்திருக்கும் அழகான பிசாசு அல்லது சிந்துபாத் கிழவன் எனலாம்.

 

  • நவீன கவிதைகளுக்கான வாசக எண்ணிக்கை சொற்பமானதாக இருக்கிறதா?

வெகுஜன வாசகர்களைவிட சொற்பம்தான்.  “யதார்த்தவாதியாக இல்லாத கவிஞர்கள் செத்துப் போனவர்கள்.  ஆனால் யதார்த்தவாதியாக மட்டுமே இருக்கும் கவிஞர்களும்கூட செத்துப் போனவர்கள்தான்.  அறிவுக்குப் புரியாத வகையில் எழுதும் கவிஞர்களின் கவிதைகள் அவர்களுக்கும் அவர்களை நேசிப்பவர்களுக்கும் மட்டுமே புரியும்.  இது மிகவும் வருந்தத்தக்கது.  அறிவுக்குப் புரியும் வகையில் மட்டுமே எழுதும் கவிஞர்களைக் கழுதைகளாலும் கூடப் புரிந்து கொள்ள முடியும்.  இதுவும் வருந்ததத்தக்கது தான்” எனும் எஸ்.வி. ராஜதுரை அய்யா மேற்கோள் காட்டிய வரிதான் நினைவிற்கு வருகிறது.  வாசகர்களுக்காக, அவர்களை முன்வைத்து கவிதைகளை எழுத முடியாது. கவிஞனைப் புரிந்து, உணர வாசகன் தான் பிரயத்தனப்பட வேண்டும். நம்மால் முடிவதெல்லாம் எண்ணிக்கை குறித்துக் கவலைப் படாமல் கவிதை எழுதுவது தான்.

 

  • தமிழ்க்கவிதைகள் மையச் சமூகத்தின் கைகளிலிருந்து இன்று விளிம்பு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் தலித்துகளின் பிரதிகள் பெருமளவில் புத்துணர்வை அளிப்பதாக உள்ளன. இந்த மாற்றம் உங்களுக்கு உவப்பளிக்கிறதா?

நிச்சயமாக உவப்பளிக்கின்றது. மையத்திலிருந்து விளிம்பிற்கு நகர்ந்தது மட்டுமல்ல – மையத்தையே தகர்த்துக் கொண்டுமிருக்கின்றன.  ஆனால், மையங்களைத் தகர்க்கின்ற விளிம்புகள் மறுபடி தங்களுக்குள் ஒரு மையத்தை உருவாக்கி விடுகின்ற அபாயமும் இதிலே இருக்கின்றது.  (George Orwellஇன் புகழ்பெற்ற நாவல் ‘Animal Farm’ சொல்வது போல).  அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

 

  • ஒர் இயக்கத்தின் கட்டுப்பாடு மற்றும் தத்துவச் சட்டங்களுக்கு உட்பட்டு முழுமையான கவி மனம் இயங்கமுடியுமா? பெருவெளி அரசியலில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய இடங்களில் கவிமனம் தடையாக அமையாதா?

இயங்க முடியாது.  ஏனெனில் கவிதையின் அடிநாதம் ‘சுதந்திரம்’.

பெருவெளி அரசியலில் சமரசம் செய்து கொள்ள வேண்டிய இடங்களில் கவிமனம் தடைதான்.  குற்ற உணர்ச்சி குறைய ஒரு கவிதை எழுதுதல் மட்டுமே சாத்தியம் அப்போது.

 

  • சமகாலத்து கவிஞர் ஒருவரின் கவிதை உங்களுக்கு பிடித்திருக்கும் பட்சத்தில் மனம் திறந்து பாராட்டுவீர்களா?

பாராட்டி இருக்கிறேன்.  போன மாதம் ‘தீரா நதி’ படித்தவுடன் கடற்கரய்,

அ.வெண்ணிலா இவர்களை உடனே தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினேன். இளம்பிறை, அமிர்தம் சூர்யா, முருகேஷ், அய்யப்பமாதவன், அஜயன்பாலா, பாலை நிலவன், மனுஷ்யபுத்திரன் இவர்களுக்கும் சுடச்சுட பாராட்டுகளைத் தெரிவித்துவிடுவேன்.  தமிழ்ச் சூழலில் பத்திரிக்கைகளின் வெளிச்சம் அதிகம்படாத சிறப்பான பெண் கவிஞர்கள் பலர் (செ.பிருந்தா, மு.சத்யா, கு.உமாதேவி) இருக்கின்றனர்.  அதே போல் பெண்கள் எழுதுகின்ற கவிதைத் தொகுப்பிற்கு ஒரு சிறு முன்னுரையாவது எழுதி விடுவேன்.

 

  • உங்கள் தந்தையிடம் உங்கள் கவிதைகளை வாசித்துக் காட்டியிருக்கிறீர்களா? அவருடைய எதிர்வினை எப்படியிருந்தது?

எனது முதல் கவிதை (?)யை ‘மாரி’ எனும் தலைப்பில் எனது 16 வயதில் எழுதி அவரிடம் தான் காண்பித்தேன்.  சிரித்தார்.  மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்தபொழுது ‘அருவி’ என்றொரு இலக்கிய இதழை (விடுதி மாணவிகள் மட்டுமே பங்களித்தது) வெளியிட்டேன்.  அதில் பிரசுரமான எனது ‘அசுணப் பறவை’ எனும் சிறுகதையையும், ‘சந்திப்பு’ எனும் கவிதையையும் நன்றாக இருந்ததாகச் சொன்னார்.   தி. ஜ. ரா, கல்கி இவர்களது படைப்புலகம் குறித்த எனது விமர்சனக் கட்டுரையை மிகவும் ரசித்தார்.  ஆனால், நான் அவரது இறப்பிற்குப் பின் தான் மிக அதிகமாகக் கவிதைகள் எழுதத் தொடங்கினேன்.  நாட்டியக் கலைஞர், நாடகப் பங்கேற்பாளர் ஆக என்னை அவர் பார்த்து ரசித்ததே அதிகம்.

 

  • உங்களுடைய கவிதைகளை உங்கள் கணவர் குழந்தைகள் வாசிக்கின்றனரா? ஒரு கவிஞராக உங்களை அவர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள்?

இந்த ‘கவிஞர்’ என்கிற அடைமொழியில் எனக்கு விருப்பமில்லை. நான் மிகவும் மதிக்கின்ற, அய்யா இன்குலாப் அவர்களே அதனைப் பயன்படுத்தாதபொழுது, நானெல்லாம் எம்மாத்திரம்!

‘எஞ்சோட்டு பெண்’ தொகுப்பை எனது மூத்த மகள் சரயு  முழுவதுமாகப் படித்தாள்.  இளைய மகள் நித்திலாவிற்கு ‘ஆயிஷா’ குறித்த எனது கவிதையை நானே வாசித்துக் காண்பித்தேன்.  கொஞ்சம் புரிந்து கொண்டாள். எனது கணவர் சந்திரசேகர் தனது Civil Service தேர்வுக்குப் பாடமாகத் தமிழ் இலக்கியத்தைத் தேர்வு செய்து எழுதியவர்.  தொடர்ச்சியாக எனது கவிதைகளைப் படித்ததில்லை.  தொகுப்பாகக் கண்டிப்பாகப் படித்து விடுவார்.

ஒரு கவிஞராக அவர்கள் எனது இருப்பை மிகச் சரியாகப் புரிந்து கொண்டவர்கள்.  நான் ஒரு emotional woman என்பதையும் உணர்ந்தவர்கள்.  எனது இளைய மகளுக்குத் தான் நான் அவளது பள்ளியில் ஒரு ஆசிரியையாக வேலை பார்க்காமல் கவிஞராக இருக்கிறேன் என்று வருத்தம். ஒரு கவிஞராக என்னை அவர்கள் புரிந்து கொண்டாலும், துணையாகவும், அம்மாவாகவும் மட்டுமே பார்க்கிறார்கள்.

 

  • மேடைகளில், நேர்காணல்களில் இலக்கியம் குறித்த உங்கள் பார்வைகளைத் தெளிவாகக் கூறுகிறீர்கள். ஒப்பீட்டளவில் பெண்கள் விமர்சனத் துறையில் ஈடுபடுவது குறைவாக இருக்கிறதல்லவா?

உண்மைதான்.  பிறபடைப்பாளிகளின் படைப்புகளைப் படிப்பதும், அது குறித்து விவாதிப்பதும் தமிழ்ச் சூழலில் மிகக் குறைவாகவே நடைபெறுகிறது.  தஞ்சையில் பிரகாஷ் அவர்களது காலம் தொட்டு இயங்கி வரும் மிக முக்கியமான படைப்பாளியான சி.எம். முத்து அவர்களுக்கு மிகச் சமீபத்திலே தான் ஒரு விமர்சனக் கூட்டமே நடத்தப்பட்டது.  அடிப்படையில் “விமர்சனத்துறை” என்பது உலகளாவிய வாசிப்பினையும், தத்துவம், சிந்தனை, கோட்பாடு முறைகள் இவைகள் மீதான தீவிர கவனத்தையும் கோருவது.  அதற்கான நேரத்தை ஒதுக்குதல் என்பது அனைவருக்கும் சாத்தியப்படாதது தானே.

 

  • உங்கள் பிள்ளைகள் கவிதை எழுத முன் வந்தால் வரவேற்பீர்களா?

வரவேற்பேன்.  Upper middle class வீட்டுப் பிள்ளைகள் கவிதை எழுதுவதில் பிரச்சனையேதுமில்லையே.  அவர்களுக்கு I.T. Company வேலை அல்லது புகழ்பெற்ற மருத்துவப் பணி என வருவாய்க்கு வழி இருக்கும் போது, கவிதை தாராளமாய் எழுதலாம். (இதுவரை வீட்டில் அப்படி எதுவும் அசம்பாவிதம் நடக்கவில்லை)

 

  • காந்தியம் தாய்மொழி கல்வியை வற்புறுத்துகிறது. இங்கு தமிழில் கற்பது குறைந்து வருகிறது. தாய் மொழியில் கற்காமல் தாய்மொழி, தாய்நாட்டுப் பற்று வளருமா?

தமிழ்நாட்டில் தான் தாழ்மொழிக் கல்விக்கு எதிராகப் பெற்றோர்களே நீதிமன்றம் சென்றிருக்கின்ற அவலம் இருக்கிறது.

ஆனால், தாய் மொழியில் கற்றால் மட்டுமே தாய்மொழி, தாய்நாட்டுப் பற்று வளரும் என்று கூறமுடியாது.  தாய்மொழிப் பற்று, நாட்டுப் பற்று என்பவை எல்லாம் கற்பிதங்களே என விவாதிக்கின்ற பின் நவீனத்துவக் காலகட்டத்தில், தாய்மொழி அறியாமல், அதனைப் பேசாமல் இருப்பது ஒரு அவமானம் என இளைய தலைமுறை உணர்ந்தாலே போதும், பற்று என்பது அடுத்த கட்டம் தான். நம் தாய் மொழியை, அதன் இரண்டாயிரமாண்டு இலக்கிய விழுமியத்தை இன்றைய இளைய தலைமுறை உணர்ந்தாலே போதும்.

 

  • இன்று பள்ளிக்கல்வித்துறையில் மறுமலர்ச்சி நிகழ்ந்துள்ளது. செயலடிப்படையில் அமைந்த கல்வி, படைப்பாகக் கல்வி (ABL, ALM) நடைமுறையில் உள்ளது. குழந்தைகளை மையமாகக்கொண்ட இக்கல்வி முறையை இந்தியாவெங்கும் அறிமுகப்படுத்த வேண்டுமென்கிறார் கபில்சிபல். ஒரு சகோதரியாக கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் செயல்பாட்டை எப்படி மதிப்பிடுவீர்கள்?

ஒரு சகோதரியாகக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் செயல்பாடுகளில் எனக்கு மிகுந்த மனநிறைவும், பெருமையும் உண்டு.  சமச்சீர் கல்வியும், படைப்பாக்கக் கல்வியும் மிகப் பெரிய மைல் கற்களே.  அமைச்சரே எங்களது கிராமத்துப் பள்ளியின் மாணவர் என்பதாலும், புதிய முறைகளைப் பரீட்சித்துப் பார்ப்பதில் ஆர்வமுள்ளவர் என்பதாலும் தான் இது சாத்தியமாகி உள்ளது.  சகோதரி என்பதைவிட தமிழ்நாட்டுப் பிரஜை, மேநாள் பேராசிரியை என்ற முறையிலேயே நான் அதிகம் மகிழ்ச்சியடைகிறேன்.

 

  • ஆசிரியப்பணி மதிப்பு மிகுந்த பணி. நமது கலையை, அரசியலை மாணவர்களிடம் விதைப்பதற்குக் கிடைத்த அருமையான வாய்ப்பு. நம்மை எப்போதும் இளமையாக உணர்வதற்கான சந்தர்ப்பங்களை அளிக்கும் பணி. ஆனால் நீங்கள் ஆசிரியப்பணிக்கு விருப்ப ஒய்வு கொடுத்த போது உங்கள் மனநிலை என்ன?

விருப்ப ஓய்வு அல்ல.  ராஜினாமா செய்தேன்.  எனது பெற்றோர் ஆசிரியர்கள்.  ஆசிரியப் பணி என்பது எனக்கு ஒரு வேலை மட்டும் அன்று.  அது ஒரு வாழ்க்கை முறை.  மென்மேலும் கற்றுக் கொண்டும், கற்பித்துக் கொண்டும், வளர்ந்து கொண்டுமிருந்த நான் அதனை விட்டு விலகிய பொழுது வருத்தம் தான். ஆனால், நான் பெரிதும் மதிக்கின்றதொரு தலைவர் எனக்கு வழங்கிய அரசியல் பணியை, இன்னுமொரு பயணமெனவே எடுத்துக் கொண்டேன். இன்றுவரை எனது மாணவிகளை, சக பேராசிரியர்களை miss பண்ணுகின்றேன்.

 

  • கிராமம் குறித்த மிகையுணர்வு உங்கள் கவிதைகளில் காணப்படுகிறது. நிலபிரபுத்துவ மதிப்பீடுகள் குறிப்பாக ஆணாதிக்கம், ஆதிக்க சாதி மேலாண்மை பற்றிய பதிவுகள் மிகக்குறைவாகவே உங்கள் கவிதைகளில் காணப்படுகின்றன. இது குறித்து நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

முழுவதும் செழுமையான பகுதி எனது பால்யமும், வளர்பருவமும்.  என்னைச் சுற்றி என்னைச் சீராட்டிக், கொண்டாடிய ஆண்களே இருந்தனர்.  ஒரு வேளை ஒடுக்கப்பட்ட ஒரு சூழலில் பிறந்த, வளர்ந்த பெண்ணாக இருந்திருந்தால் மேற்சொன்னவைகளைக் கவிதையில் பதிவு செய்திருப்பேனோ என்னவோ? எனது கட்டுரைகளில், பத்திகளில் நான் இவைகளைப் பதிவு செய்திருக்கிறேன். கவிதையில் செய்கையில் அது பிரசாரகர் அல்லது emphathiser எனும் அடையாளம் தந்து விடலாம். கிராமம் குறித்த மிகையுணர்வு என்பதை நான் மறுக்கின்றேன்.  எனது அனுபவத்தின் ஒரு கூறுதான் அது.  எனக்கான,

என் கிராம வாழ்க்கையின் கீற்று அவ்வாறு இருந்தால், அது எவ்வாறு மிகையாகும்? கவிதை என்கிற ஊடகத்தினை நான் நேர்மையுடன், எனது அனுபவங்களின் உண்மை மூலம் அணுகி இருக்கிறேன்.

 

  • திராவிட அரசியலில் மேடைப் பேச்சிற்கு முக்கிய இடம் உண்டு. திராவிட இயக்கங்களில் பிரச்சார சாதனமே மேடைப் பேச்சு தான். ஊடகப் பெருக்கத்தினாலோ அல்லது மேடைப்பேச்சு வெறும் அக்கப்போராக அமைந்ததாலோ இன்று மேடைப் பேச்சை கேட்பவர்கள் கூட்டம் குறைந்திருக்கிறது. இச்சூழலில் திமுகவின் நட்சத்திரப் பேச்சாளராகவும் உருவாகிக்கொண்டிருக்கிறீர்கள் அந்த அனுபவம் எப்படி?

“எழுதுவதை விடப் பேச்சு எளிதானது.  அது ஒரு இயக்கம். செயல்பாடு.  உடனடியாக அது உங்களை ஒரு விழாக்கால மனோ நிலைக்கு இட்டுச் சென்று விடுகிறது” என்றார் பக்தின்.  எனது பள்ளிப்பருவம் தொட்டே நாட்டியம், மேடை நாடகம் முதலியவற்றில் பங்கேற்றதால் எனக்கு மேடைக் கூச்சம் இருந்ததில்லை.  ‘பேச்சு’ என்பதே என் மனதிற்கு உகந்த விஷயம்.  உரக்கப் பேசுகின்ற கிராமப்புற கலாச்சாரத்தில் தானே என் வேர். ஆனால் ‘மேடைப் பேச்சு’ என்பதை ஒரு கலையாகக் கற்று, என்னை மெருகூட்டிக் கொள்ள தி.மு.க. வின் மேடைகள் எனக்கு வாய்ப்பளிக்கின்றன.  நேரடியாக, மக்களைப் பார்த்து, அவர்கள் முன் பேசுகின்ற இவ்வாய்ப்பு எனக்குப் புதிதானதொரு அனுபவம்.  மற்றபடி ‘நட்சத்திரப்’ பேச்சாளரல்ல நான்.  இன்னும் எட்டு (8) போடத் திணறுகின்ற காரோட்டி தான்.

 

  • ஈழத்தமிழர்கள் குறித்து உணர்வு பூர்வமாகச் செயல்பட்டிருக்கின்றீர்கள். ஈழத் தமிழ்ர்களின் அழிவுக்கு இலங்கைக்கு உறுதுணையாக இருந்தது இந்தியா. இந்தியாவை ஆளும் காங்கிரஸ் அரசுடன் உறவு வைத்திருக்கும் திமுக பெரிய அளவில் மத்திய அரசுக்கு நிர்பந்தம் அளிக்காதது ஏமாற்றமில்லையா?

இவ்விஷயத்தில் ஒரு திராவிடக் கட்சிக்கு இருக்கின்ற அக்கறையை விட ஆளும்கட்சியாக அதன் நடப்பு சிக்கல்கள், நிர்பந்தங்கள் இவற்றை விவாதிக்கின்ற இடமல்ல இது. ஈழத் தமிழர்களுக்காக இன்று வரை உணர்வு பூர்வமாக அவர்களோடு இருக்கின்றேன் என்பதைத் தவிர வேறெந்த தார்மீக பதிலும் என்னிடத்தில் இல்லை.

 

  • செம்மொழி மாநாடு ஒரு வகையில் குற்ற உணர்வின் வெளிப்பாடு என தமிழ் எழுத்தாளர்களில் ஒருசாரர் கருதுகின்றனரே?

இல்லை.  ‘செம்மொழி’ என்கின்ற அந்தஸ்து குறித்து சாமான்யர்களும் அறிந்து கொண்ட விஷயத்தை அம்மாநாடு செய்திருக்கிறது.  தமிழை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் குறித்து அது விவாதித்து இருக்கிறது.  அப்படி விமர்சனம் செய்பவர்கள் ஒரு சாரார் மட்டும் தானே.

 

  • இன்றைய இந்திய அரசியலில் மிக மூத்த ஆளுமை தமிழக முதல்வர் அவரோடு அருகில் இருக்கும் போது உங்களுக்கு எத்தைகைய உணர்வு ஏற்படும். உங்கள் கவிதைகள் பற்றி அவர் ஏதாவது கருத்து தெரிவித்திருக்கிறாரா?

தமிழக முதல்வர் கலைஞர் எங்களது குடும்பத் தலைவர். என் குருதியோடு கலந்தது அவர் மீதான என் பற்று. பல சமயங்களில் பாச உணர்ச்சி மேலோங்கிய நிலையிலே தான் பேச்சற்று அவரது அண்மையில் இருந்திருக்கின்றேன்.  அவர் எனது தமிழ் உச்சரிப்பினைத் திருத்தித் தலையில் குட்டிய நிமிடங்கள் எனது பொக்கிஷ நேரங்கள்.

எனது தந்தையார் குறித்த இரங்கற் கவிதைகளை முரசொலியில் அவர் படித்திருப்பார். பிற கவிதைகள் குறித்து கருத்து தெரிவித்ததில்லை.  எனது மஞ்சணத்தி நூலில் உள்ள ‘போன்சாய்’ என்ற கவிதையில் ‘அகண்ட பச்சை இலை’ என்று எழுதியதைப் பார்த்துவிட்டு நீயும் ‘ட’ னா தானா? ‘ற’ னா இல்லையா? என்று சிரித்தவாறே கேட்டார்.

 

  • கல்வியாளர், அரசியல்வாதி, கலைப்பண்பாட்டு ஆளுமை இதில் எவ்வாறு அடையாளம் காணப்பட நீங்கள் விரும்புகிறீர்கள்?

கலைப்பண்பாட்டு ஆளுமை.  ஒரு கல்வியாளராக, அரசியல்வாதியாக எத்தனையோ பேர் இருக்கலாம்.  ஆனால் கலைப்பண்பாட்டு ஆளுமையாக இருப்பவர்கள் மிகக் குறைவு.  ஆனால், ‘செமதி’ என அழைக்கப்படுகின்ற, ஒரு கரிசல்காட்டு கிராமத்துப் பெண்தான் என் உண்மையான அடையாளம்.

 

  • உங்களுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரங்களுக்கு நீங்கள் தகுதியுடையவர்தான் என்ற உணர்வு உங்களிடம் உள்ளதா?

நிச்சயம் உள்ளது.  “ஏதோ திடீரென்று பத்திரிக்கை வெளிச்சத்தில் பிரபலமாகி விட்ட பெண்” என்று சிலர் நினைக்கலாம்.  ஆனால் எதுவும் எனக்கு இலவசமல்ல.  கல்விப் பின்புலம், கலை, இலக்கியப் பரிச்சயம், பாரம்பர்யமான தி.மு.க. குடும்பப் பின்ணனி, மூன்றாண்டு இயக்கப் பணி இவையனைத்துமே எனது தகுதிகள் தான்.  தற்பெருமை அல்ல இது.  எனக்குத் தகுதியற்ற எதையும் நான் இரந்து பெறவில்லை எனும் தன்னம்பிக்கை.

 

  • இலக்கியத்தில் உங்கள் முன்னோடிகளாக யாரைக் கருதுகிறீர்கள்?

மிக நீண்ட பட்டியல் அது.  தமிழ் இலக்கியத்தில், ‘சங்க இலக்கியம்’ தவிர பிறவற்றில் எனக்கு ஆழங்கால் பட்ட பாண்டியத்யமோ, பரிச்சயமோ கிடையாது.  எனது ஆங்கில இலக்கியப் படிப்பு மேற்கத்திய, ஐரோப்பிய செவ்வியல்களை மிக இளவயதிலேயே எனக்கு அறிமுகப்படுத்தியது.  T.S. Eliot இன் “Tradition and Individual Talent”-ம், Waste Land-ம் எனக்கு மிகப் பெரிய திருப்பு முனை.  D.H. Lawrence-ம், George Eliot-ம், John Donne-ம் ஆதர்ஸம் என்றால் Balzac-ம், Doistoivesky-ம், Samuel Becket-ம், Shakespeare-ம் இப்பொழுதும் துணை நிற்கிறார்கள். கிரேக்கத் துன்பவியல் நாடகங்கள் எனக்குக் கற்றுத் தந்தவை ஏராளம். Gibson-ம், Hegal-ம், Marx-ம், Nietzhe-ம், பெரியாரும், இராமானுஜரும் எனது கண்ணோட்டத்தை மாற்றியவர்கள்.

தமிழ்க் கவிதைப் பரப்பிலே 2,000 ஆண்டு பாரம்பர்யமிக்க எனது முன்னோடிகளின் தோள் மீது அமர்ந்து கொண்டிருப்பதால் தானே என்னால் இந்த உலகத்தை இன்னும் நன்றாகப் பார்க்க முடிகிறது?

திருப்பாவையையும், பாசுரங்களையும், குறவஞ்சியையும் பாடி, ஆடி வளர்ந்தவள் நான்.  தேவதச்சனின் தீவிரமான ரசிகை. ப்ரமிளும், ஆத்மாநாமும், சமயவேலும், வைத்தீஸ்வரனும் மிகப் பிடிக்கும். சமகாலத்தில் மனுஷ்யபுத்திரன், லஷ்மி மணிவண்ணன், இசை, ப்ரான்ஸிஸ் கிருபா, ரமேஷ்-ப்ரேம் ஆகியோரது கவிதைகளும் எனக்கு நெருக்கமானவை.

பெருந்தேவி, ரிஷி, உமாமகேஸ்வரி, ஆழியாள், ஈழத்தின் அனார் என நீளும் பெண் கவிஞர்கள் பட்டியலும் உண்டு.

எனது கவிதை யாருடைய சாயலுமற்று எனக்கான ‘கவுச்சி வாடையுடன்’ இருக்க வேண்டுமென விரும்புகின்றேன்.

 

  • தமிழ் இலக்கிய சமகாலப்போக்குகள் எவ்வாறு உள்ளன?

சிறு பத்திரிக்கைகளின் வளர்ச்சியும், எண்ணிக்கையும் நம்பிக்கை அளிக்கின்றது. புதினம், சிறுகதை, நாடகம், கவிதை என அனைத்து தளங்களிலும் பரீட்சார்த்த முயற்சிகளும், நவீனத்தின் பின்னான நவீனத்துவ முயற்சிகளும் அரங்கேறியுள்ளன.  முழுவதுமாக ஒரு கழுகுப் பார்வை பார்க்கின்ற அளவிற்கு எனக்கு விரிவான வாசிப்பு அனுபவம் இல்லையென்பதால் இக்கேள்விக்கு நேர்மையான பதிலைத் தர இயலவில்லை.

 

  • தமிழ் படைப்பாளிகள் சரியாக அங்கீகரிக்கப்படுகிறார்கள் என கருதுகிறீர்களா?

இல்லை. அருகே இருக்கின்ற கேரளாவில் எழுத்தாளர்கள் கொண்டாடப் படுகிறார்கள். கேரளாவில் கவிஞர் ஒருவர் இறந்தபொழுது அவரை அடையாளம் காட்டியவர்கள் ஒரு செவிலி, வழிப்போக்கர், ஊழியர் ஆகிய மூவர். அங்கே மக்களுக்குப் பரிச்சயமானவர்களாக இலக்கியவாதிகளை ஊடகங்கள் கொண்டு சேர்க்கின்றன.  ஒரு எழுத்தாளன் எழுத்தை நம்பி மட்டுமே வாழமுடிகின்ற கண்ணியமான நிலை இன்னும் வரவில்லை.  இங்குள்ள ஊடகங்கள் வெகுசன, பிரபல கலாச்சாரத்தின் பிரதிநிதிகளையே அங்கீகரிக்கின்றன. சமரசமற்ற, தேர்ந்த இலக்கியவாதிகளுக்கான சிம்மாசனம்

வேண்டாம் –  ஒரு மர நாற்காலி கூட இங்கு இல்லை.

 

  • இலக்கிய செயல்பாட்டில் உங்களுடைய எதிர்கால கனவும் திட்டமும் என்னவாக இருக்கின்றன?

இலக்கியச் செயல்பாடு என்று மட்டுமல்ல – எவ்வகையான செயல்பாட்டிலும் எனக்குப் பெரிதாகக் கனவுகளும், திட்டங்களும் கிடையாது.  திட்டமிடாத, கொஞ்சம் பகல்கனவு மட்டும் உண்டு – எனது தந்தையின் பெயரால் ஒரு பள்ளி, தமிழ் நாடக அரங்கிற்கென்று சென்னையில் ஒரு இடம் – இப்படிச் சில.  அன்றாட வாழ்வை, அப்படியே எதிர் கொண்டு வாழ்கின்ற, இலக்கற்ற பயணம் எனது.  இடையில் வருபவைகளை ஏற்றுக் கொள்கின்ற மனப் பயிற்சி கூட இன்னும் கை கூட வில்லை.

இலக்கினை அடைகின்ற முயற்சியில் பயணத்தின் அழகுகளைத் தவறவிடாத பயணியாக இருந்தால் போதுமெனக்கு.

மற்றபடி,

“You are on this earth, and there is no cure for that”.

 

* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *