பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை’ – வர்ஜினியா வுல்ஃபின் சட்டைப் பைகளில் நிரப்பப்பட்ட கற்களும், சில கேள்விகளும்:

மரணம் ஒரு பெரும் வாதையின் முடிவு. மரணம் ஒரு தொடர் போதையின் இறுதி முத்தம். மரணம் ஒரு சிதறலின் உன்மத்த ஒன்று சேரல் - என்பதை உலகிற்கு நிரூபணம் செய்பவை தற்கொலைகளே. இயற்கையாகச் சம்பவிக்கின்ற மரணங்களை விடத் தற்கொலைகள் ருசிகரமானவை - செய்து கொள்பவர்களுக்கு; குரூரமானவை சாட்சிகளாய் அவற்றைக் கவனித்திருப்பவர்களுக்கு; தற்கொலைகள் வரலாற்றின் பல கணங்களில் தீடிரென்றும், சில கட்டங்களில் மிக நிதானமான திட்டமிடுதலுடன், ஒரு தேநீர் தயாரித்துப் பருகுவதனைப் போன்ற ஆசுவாசத்துடனும் மேற்கொள்ளப்படுகின்றன. பெரும்பாலான தற்கொலைகள் அவற்றைச் செய்துகொண்டவர்களை விடுத்து, அவர்களோடு தொடர்புடையவர்களை நிழலெனத் துரத்துபவை. தம் மீது தாமறியாமல் அறையப்பட்ட சிலுவைகளைத் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஒரு வலி உறைந்த விடுதலையின் மூலம் எதிரே இருப்பவர்கள் மீது இலகுவாக இறக்கி வைத்து விடுகிறார்கள். தம் வாழ்நாள் முழுவதும் தானாகத் தன்னை மாய்த்துக் கொண்ட ஒரு உயிரின் இறுதிமூச்சை என்ன செய்வது எனத் தெரியாமல் கனவுகளிலும், தனிமையிலும், துயரத்திலும் தன்னைத் தொலைத்துக் கொள்பவர்களது பட்டியலில் என் பெயரும் உண்டு.
"அற்புத மரங்களின் அணைப்பில்
நான் ஒரு காற்றாடி 
வேப்பமரக்கிளைகளின் இடையே 
நான் ஒரு சூரிய ரேகை.
பப்பாளிச் செடிகளின் நடுவே நான் ஒரு இனிமை
சடை கடையாய்த் தொங்கும் கொடிகளில் 
நான் ஒரு நட்சத்திரம்". 
என்றெழுதிய என் நேசத்திற்குரிய கவிஞன் ஆத்மாநாமையும்,
	"ஒரு நாள் இந்த நூற்றாண்டு தெலூஸியன் நூற்றாண்டு என்று அழைக்கப்படும்" என்று ஃபூக்கோவால் புகழப்பட்டபோது "அது ஒரு நகைச்சுவை" என்று சொன்ன, 1995 ஆம் ஆண்டு தனது அடுக்குமாடிக் குடியிருப்பின் ஜன்னல் வழியே குதித்துத் தற்கொலை செய்து கொண்ட, ஈடிபஸீக்கு எதிராக : முதலாளித்துவமும் மனப்பிறழ்வும் என்கிற மிக முக்கியமான நூலை எழுதிய, பின் நவீன இரட்டையர்களில் ஒருவரான, எனக்கு பிடித்த தெலூஸையும்,
அவள் ஒரு கதாபாத்திரமே என்றாலும், தனிமையின் நிழல் படிந்திருக்கும் ஒவ்வொரு ரயிலடியும், மரணத்தின் இரத்தம் சுவைக்கின்ற ஏதேனும் இரு தண்டவாளங்களும், இன்றளவும் நினைவுபடுத்துகின்ற, என் ப்ரியமான அன்னாகரீனினாவையும், மறக்க முடியாத இரவுகள் எனக்கும் வாய்ந்திருக்கின்றன.
இந்த இரவுகளை நான் உளவியல் திறனாய்வில் பெருந் திருப்பத்தை ஏற்படுத்திய பிராய்டின் துணைகொண்டே கடக்க முயற்சிக்கின்றேன். பிராய்டு கவிதையை நனவலி மனத்தோடு தொடர்பு படுத்தியவர். கவிதை மட்டுமல்ல கலை, இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களது நனவிலி மனமே படைப்பூக்கத்தின் தூண்டுதல் என்பதை நம்புவள் நான். இந்த நனவிலி மனம் நனவுடை மனதோடு நடத்தும் தொடர் போராட்டமே பொதுமைப் பண்பிலிருந்து அந்தரங்க உலகிற்கு ஒருவனை துரத்துவதென்பது. அதன் கண்ணியில் அனைத்துப் படைப்பாளிகலும் சிக்கியவர்கள் தானென்றாலும், சிலர் அதன் மீளாச் சிறையில் விரும்பி மாள முடிவெடுக்கையில் தற்கொலைகள் நிகழ்கின்றன. அவ்வாறு தற்கொலையின் ருசிக்குத் தன்னைத் தின்னக் கொடுத்தவர்கள் பெரும்பாலும் கலைஞர்களும், இலக்கியவாதிகளுமே!
"இத்தகைய நனவிலி மனம், ஒரே சீராக நேர்கோட்டில் அமைவதில்லை. ஒன்றினைத் தொட்டு ஒன்று படர்வதாக அமைகிற அதன் திசைகள் எண்ணிறந்தன; வேகம் அளவு கடந்தது. நனவிலி மனத்தின் இந்தப் பண்புகளின் பின்னணியில், அதனோடு தொடர்ந்து போராடுகிற நனவுடை மனத்தின் நானாவித இயங்கு திசைகளை சித்திரிப்பது, நனவோடை உத்தி (Stream of Consciousness) ஆகும். உள்ளார்ந்த தனிநிலைக் கூற்று (Interior Monologue) என்பது இத்தகையதேயெனினும் இது பெரிதும் நாடக பாணியிலே அமைந்ததாகும். நனவோடை என்பது கதைமாந்தரின் உளவியல் வாழ்க்கையையும் அதன் முனைப்புக்களையும் அவற்றின் போக்கிலேயே சென்று சித்திரிக்கின்றது. நிகழ்ச்சிகளையும் அனுபவங்களையும் சொல்லுகின்றபோது அவற்றை அவற்றின் நேர்வரிசை முறையில் அல்லாமல், அவை உணரப்படுகின்ற முறையில், ஒன்றனைத் தொட்டு ஒன்று தாவியும் உருண்டும் போகிற முறையில் சொல்லுகிறது" (இலக்கிய இஸங்கள் - இ.எஸ்.தேவசிகாமணி: 24, 25) என்பதை இலக்கிய உத்திமுறைகளில் பரிட்சயம் உள்ளவர்கள் அறிவார்கள். 
மேற்சொன்ன இருவகை படைப்புத்திகளில் இயங்கிய இரண்டு பெண் படைப்பாளிகள் - ஸில்வியா பிளாத் (Sylvia Plath), வர்ஜினியா வுல்ஃப் (Virginia Woolf). இருவருமே தற்கொலை செய்து கொண்டு தம் வாழ்வினை முடித்துக் கொண்டவர்கள். பெண்ணியவாதிகளென அறியப்பட்டவர்கள். வர்ஜினியா வுல்ஃப் புனைகதைகளின் களமான புதினங்களில் நனவோடை உத்தியைக் (Stream of Consciousness) கையாண்டவர் என்றால், ஸில்வியா பிளாத் தனது கவிதைகளில் உள்ளார்ந்த தனிநிலைக் (Interior Monologue) கூற்றினை வசப்படுத்தியவர். இவர்களது படைப்பும், வாழ்வும், அதிகாரத்திற்கெதிரான இவர்களது இயக்கமும், மனச்சிதைவும், தற்கொலை மரணமும் பற்றிய ஒரு உரையாடல், அவநம்பிக்கையின் மணி அடிக்கப்பட்ட நவீனகால, பின்நவீனக் காலகட்டத்தில் மிக அவசியமானதொன்று. சற்று விரிவாக வர்ஜினியா வுல்ஃபின் படைப்பு, வாழ்க்கைப் பின்புலம் குறித்து உரையாடுவதே என் நோக்கம்.
அதனை, ராமானுஜம் எழுதிய, தற்கொலைகளைக் கொண்டாடுவோம் எனும் தொகுப்பில் இருக்கின்ற ஷோபாசக்தியின் வெள்ளிக்கிழமை எனும் சிறுகதை குறித்த விவாதமோடு துவங்கினால் உசிதம் எனப்படுகிறது. அதில் ராமானுஜம் எழுதிய ஒரு முக்கியமான வரி: "நவீனத்துவத்தோடு இணையாதது அனைத்தும் கொல்லப்பட்டாலும் அவை தற்கொலைகளாகவே பதிவு செய்யப்படுகின்றன".
கதைசொல்லி, ஒரு அழுக்கு மனிதர் (வெள்ளிக்கிழமை என்று பெயர் வைக்கப்பட்டவர்), வயலின் வாசித்துப் பிச்சையெடுக்கும் 'அன்னா' - மூவரும் ஒரு மெத்ரோ ரயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். அந்த அழுக்கு மனிதர் பிச்செயடுத்து ஒரு குத்துவிளக்கு வாங்கி, ஒரு படத்தின் முன் அதனை ஏற்றிக் கும்பிட்டுப்,பிறகு வந்து கொண்டிருக்கும் ஒரு ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறார். கதைசொல்லியை, ஒரு Globalised Citizen ஆக முன்னிறுத்தும் ராமானுஜம், கதைசொல்லி, "அந்த அழுக்கு மனிதர் ரயிலின் முன் குதிக்கும்போது கூட எவ்விதமான பதற்றத்திற்கும் உள்ளாகாமல் அவருடைய பண்புக்கு ஏற்ற நிதானத்தோடு அதை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்" என விவரிக்கிறார்.
"நவீனத்துவம் என்பது நவீனத்துவத்திற்கு முந்தைய காலத்திய விழுமியங்களை முற்றாக அழித்துவிடும் என்ற நிலைப்பாட்டிலிருந்து கதைசொல்லியால் கொலை செய்யப்பட்ட அந்த அழுக்கு மனிதரைப் படைப்பாளி உயிர்த்தெழ வைக்கிறார். ஒரு கொலை தற்கொலையாகச் சித்திரிக்கப்படும் அபத்தங்களைக் கேள்விக்குட்படுத்துகிறார். 'அன்னா'வை ஏற்றுக்கொண்ட நம் படைப்பாளி ஏண் 'வெள்ளிக்கிழமை'யை நிராகரிக்கிறார்? ஏனெனில் அந்த அழுக்கு மனிதர் கதைசொல்லியின் நிழல். கதை சொல்லியால் ஏற்றுக்கொள்ள முடியாத, புரிந்துகொள்ள முடியாத அவனுடைய தர்க்கத்திற்கு அடங்காத அவனுடைய வரலாறு, அவனுடைய கலாசாரம், அவனுடைய நாகரிகம் இவை அனைத்தும் நவீனத்துவ மனத்திற்குச் சங்கடங்களாகவும் பிற்போக்குத்தன்னைங்களாகவும், மூடநம்பிக்கைகளாகவும் சுய மோகங்கள் கொண்டதாகவும் பார்க்கப்படுவதால் நவீனத்துவத் தளத்திலிருந்து கொலை செய்யப்படுவதற்குத் தகுதியாக்கப்படுகிறது. ஆனால் கேடுகெட்ட இந்த நவீனத்துவ மனம் கொலைகளுக்கான தார்மீகப் பொறுப்பேற்கும் வக்கற்று அதைத் தற்கொலைகளாக மாற்ற முயற்சிக்கிறது. ஆந்திராவிலும் மஹராஷ்ராவிலும் நடந்த விவசாயிகளின் (தற்) கொலைகளை நாம் இதனோடு இணைத்துப் பார்க்கலாம்" என்கிற ராமானுஜம் மிக நுட்பமாகத் தற்கொலை என்பது கொலையே எனவும், இக் காலக்கட்டத்தில் சமூகம் சாதுர்யமாகவும், வஞ்சகமுடனும் நம்மை எவ்வாறு தற்கொலைகளுக்குத் தூண்டுகின்றது எனவும் இக்கதை மாந்தர் மூலம் விளக்குகிறார்.
இந்த அவநம்பிக்கைகளைக் காலந்தோறும் ஒரு படைப்பு மனம் தகர்க்கவும், சாம்பலிலிருந்து உயிர்த்து எழவும் தம் படைப்பின் மூலமாகவே முயல்கிறது. பெளதலேர், எனும் பிரெஞ்சுக் கவிஞர்,
"Come on, come and travel.
in dreams, beyond the possible,
beyond the known"
என்று சொல்வதைப் போல, விழிப்பு நிலையை விடக் கனவு நிலையைக் காப்பாற்றிக் கொள்ளத் துடிக்கின்ற இரண்டு பெண் படைப்பாளி மனங்கள் இறுதியில் கனவுகளைத் தற்கொலையில் தக்கவைத்துக் கொள்வதென்பது இயல்பானதாகவே தோன்றுகிறது.
இருபதாம் நூற்றாண்டின் பெரும் தாக்கமான உளப்பகுப்பாய்வியலுக்கு பெரிதும் கடன்பட்டிருப்பவர் வர்ஜினியா வுல்ஃப் என்றால் மிகையில்லை. அவரது அலைகள் (The Waves) முழுவதும் நனவோடை உத்தியைப் பயன்படுத்தி எழுதப்பட்ட ஒன்று. "Restless Genius" என்று அழைக்கப்பட்ட வர்ஜினியா இலக்கிய வரலாற்றில் பெண்களுடைய இடம் அங்கீகரிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியான தெளிவுடன் இருந்தவர். 1882 ஆம் ஆண்டு ஜீலியா பிரென்செப் (Julia Prencep) - லெஸ்லீ ஸ்டீபன் (Lessly Stephen) பெற்றோருக்குப் பிறந்த வர்ஜினியாவே தனது A Room Of One's Own எனும் நூலின் மூலமாகப் பெண்ணிய விமர்சனத்தை ஆங்கில இலக்கியத்தில் ஒரு முக்கியமான கட்டத்திற்கு நகர்த்தியவர். கல்விச்செழிப்பும், பண்பாடும், கலை ஊக்கமும் நிறைந்த குடும்பச் சூழலில் பிறந்த வர்ஜினியா தனது பூட்டனாடமிருந்து கலை ஆர்வத்தையும், தனது பாட்டியிடமிருந்து நகைச்சுவை உணர்வையும், தனது பாட்டனாரிடமிருந்து மன அழுத்த உணர்வுகளைப் பெற்றார் எனவும் கூறப்படுகிறது.
வர்ஜினியாவின் உளநோய்க் கூறு அவரது இளவயதில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான பாலியல் அத்துமீறல் தொடர்பானதாக இருக்கலாம். தாஸ்தாவிஸ்கி எனும் புகழ்பெற்ற ரஷிய எழுத்தாளரின் மனநடத்தைக் கோளாறு நிலை பற்றி ப்ராய்ட், "தாஸ்தாவிஸ்கியின் இயற்கை மனப்போக்கு, அவருடைய தந்தையின் தொடர்பாக ஆண்பாலுக்குரிய (சேடிச) கிளர்ச்சிக்கும், பெண்பாலுக்குரிய (மேசாகிஸ) கீர்ப்படிதலுக்கும் இடையிலான தீர்வு காணப்படாத போராட்டத்தில் வேர்கொண்டுள்ளது" (ப்ராய்ட் - மிகச் சுருக்கமான அறிமுகம் - அந்தனிஸ்டோர்: 141) என்கிறார். அதுபோலவே வர்ஜினியாவிற்கும் அவரது இளவயதில் ஏற்பட்ட பாலியல் அத்துமீறல் (அவரது ஒன்றுவிட்ட சகோதரன் ஜெரால்ட் டக்வொர்த் (Gerald Duckworth) வர்ஜினியா நான்கு வயதாக இருந்தபோது அவர் மீது செலுத்திய பாலியல் அத்துமீறல்) பிற்காலத்தில் அவரது மனஅழுத்த நோய்க்கான அடிப்டைக் காரணியாக இருக்கலாம். தனது பதிமூன்று வயதில், தாய் ஜீலியாவை இழந்தது வர்ஜினியாவை மேலும் சோர்விற்கும் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாக்கியது. 1904- கோடைகாலம் வெனிஸ் நகரம் சென்றிருந்த வர்ஜினியா அதீத மன அழுத்தத்தின் காரணமாக ஜன்னலின் வழியே குதித்து சிறு காயமுடன் மீண்டது... அதன் பின் அவரது வாழ்க்கையில் ஒரு தொடர் நிகழ்வே. தனது சகோதரி வனேஸாவுடன் முரண்பட்ட பிரிவும் வர்ஜினியாவைத் தொடர்ந்து துன்புறுத்தித் தாக்கியது.
இவற்றினூடே பெண்களின் ஓட்டுரிமைக்கான பணியிலும் தன்னை இணைத்துக் கொண்ட வர்ஜினியா, தனது வருங்காலக் கணவர் லியோனார்ட் வுல்ஃப் அவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டியபோதும் மனச்சிதைவு நோய்க்கு ஆளானவர். பின்னாளில் திருமணத்திற்குப் பின்பும் ஒரு ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்வை அவர் விரும்பி ஏற்றுக் கொண்டவரல்ல. மனத்திரிபு (Paranoid) நோய்க்கூறுகளும் உடைய அவரது வாழ்வின் பல கால கட்டங்களைப் பார்க்கையில், "கலைஞர்கள் தங்கள் நேரத்தில் அவ்வளவு பெரும் பகுதியை, உன்னத வகையாக்கத்தின் விளைவாக உள்ள செயல்களில் ஈடுபடுத்துவதால், அவர்கள் சராசரி மனிதர்களை விட நரம்புப் பிணியாளி நிலைக்கு மிகப் பக்கத்தில் இருக்கிறார்கள்" என்று அந்தனிஸ்டோர் (ப்ராய்ட் - மிகச்சுருக்கமான அறிமுகம் : 147) சொல்வது மிகச் சரியே எனப்படுகிறது.
The Voyage out எனும் அவரது புதினமும் வாழ்வு, மரணம் குறித்தே பேசினாலும், 21ம் நூற்றாண்டின் முதற்பகுதியில் பெண்களது பங்கு என்ன என்பது குறித்தும் வினா எழுப்புகிறது. 1940இலிருந்து 1941 வரையிலான போர்ச்சூழல், பாதுகாப்பின்மை, இரண்டாம் உலகப்போரின் அழுத்தம் இவையே வர்ஜினியாவின் மன அழுத்த நோய்க்கும், (மூன்றுமுறைகள்) இறுதி மரணத்திற்கும் காரணம் எனப்படுகிறது. "கற்பனையிலேயே செத்துப்போ என்றது மனம் நானும் செத்துப் போனேன்" எனும் ஆத்மாநாமின் வரிகளைத் தினமும் சுமந்திருப்பாரோ வர்ஜினியா? அவரது July மாத நாட்குறிப்பு ஒன்று சுட்டுகிறது: "Never Settle, is my principle" "unless I am myself I am nobody". 
இது அவநம்பிக்கைகள் நிறைந்த காலம்' இரண்டு உலக யுத்தங்கள், ஸ்டாலின், நாஜி முகாம்கள், ஹிரோஷிமா, போல் பாட் (கம்போடியாவின் சர்வாதிகாரி), இருந்த கொஞ்ச நம்பிக்கைகளையும் தகர்தெறிந்துவிட்ட சோவியத் யூனியன் வீழ்ச்சி, 1960 மற்றும் 70களில் லத்தீன் அமெரிக்காவில் காணப்பட்ட புரட்சிக்கான உந்துதல் இவை எல்லாம் நம்மை எங்குதான் கொண்டு விட்டன. நம்பிக்கைகள் எல்லாம் வற்றிப்போய் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கி விட்டோம்”(தற்கொலைகளைக் கொண்டாடுவோம் - ராமானுஜம் : 35, 36, 57) என்கிற ராமானுஜத்தின் கூற்றுப்படி யதார்த்தத்தினை ஏற்றுக் கொள்ளாதவர்கள் - குறிப்பாகப் படைப்பு மனம் கொண்டவர்கள் தம் துயரைத்தின் சீழைத் துடைப்பது தற்கொலை எனும் பன்னீரால் என்கிறது வர்ஜினியாவின் வாழ்க்கை. 
Mrs. Dalloway என்கிற அவரது புதினத்திற்குப் பின் 1925இல் வெளியான To the Light House, புகழின் உச்சியில் அவரை உட்கார வைத்தது. தனது பிடிக்குள் இல்லாத அறிவையும், உடலையும் அவர் வெறுப்பதாக அவர் எழுதியது இக்காலக்கட்டத்தில்தான். "ஒரு மனோதத்துவக் கவிதை" என வர்ணிக்கப்பட்ட அது 1927இல் வெளியிடப்பட்டது. 1936இல் தனது மனைவி ஐந்தாவது முறையாகப் கடுமையான மன அழுத்த நோய்வாய்ப்பட்டதாக (Leonard) லியோனார்ட் குறிப்பிடுகிறார்.
இலக்கியப் படைப்பாளிகள் தமது கோட்பாடுகளைத் தமக்கான குறியீடுகளில் கற்பனைத் திறனுக்கும், சொல்லாற்றலுக்கும் ஏற்ப வெளிப்படுத்துவார்கள். வர்ஜினியாவும் "Never trust the artist. Trust the tale" எனும் D.H. Lawrence இன் படைப்புக் கொள்கையைப் பின்பற்றியவரே. தனது நாட்குறிப்பொன்றில் பின்வருமாறு மிக அழகாக அதனை ஒரிரு வாக்கியங்களில் உலகிற்குச் சொல்கிறார்:
"When Sydney web visits me- 
Sydney comes and I'm Virginia, 
When I write I'm merely a Sensibility" 
படைப்புரீதியாக இத்தனை தெளிவு மிக்க, ஒரு கலாபூர்வமான அக்கறை உள்ள பெண் தன் வாழ்நாள் முழுமைக்கும் சாவின் மேல் பெருவிருப்பம் கொண்டவராகவும், கடும் அழுத்த நோயாளியாக வாழ்ந்தாரென்பதும் எத்தகைய முரண்நகை? 
தனது Orlando படைப்பில் வெளிப்படுத்தியிருக்கின்ற தீவிர பெண்ணியக் கருத்துக்களுக்காக Herbert Marder, Ralph Samuelson போன்றோரால் விமர்சிக்கப்பட்ட, இருபத்தோரு வருடங்களில் பதினேழு புத்தகங்கள் எழுதிய வர்ஜினியாவின் பெரும்பாலான பெண் கதாபாத்திரங்கள் மனைவிகளும், அம்மாக்களுமே, என்பதுவும் ஒரு வியக்கத்தக்க முரணே! தனது புதினங்களில் அவர் விவரிக்கின்ற கதாபாத்திரங்கள் போலவே நிஜவாழ்க்கையில் திடம் x ஊசலாட்டம், ஆண்தன்மை x பெண்தன்மை, உண்மை x புனைவு - இவற்றிற்கிடையே எப்போதும் இழுபடுகின்ற பெண்ணாகவே இருந்த வர்ஜினியா,
"I am amphibious still, 
in bed and out of it" 
எனக் கூறியது அவரது ஒட்டுமொத்த ஆளுமையின் விவரிப்பு!
ஆண்மைய அதிகாரத்கெதிராகத் தொடர்ந்து பெண்மையக் கருத்துக்களை முன்வைத்த வர்ஜினியாவின் A Room of one's own எனும் படைப்பு மிக முக்கியமானது. நீட்சே, வான்கோ, சாய்கோவ்ஸ்கி போன்றோரின் சாதனைகள் அனைத்தும் அவர்கள் மனிநிலை பிறழ்ந்த சமயத்திலேதான் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. வர்ஜினியாவின் படைப்பூக்க உச்சமும் அவ்வாறான கட்டங்களில் தான் பரிமளித்திருக்கின்றது. தனது ஆணாதிக்க எதிர்ப்பை மிக நேர்த்தியாக ஒரு கல்லூரிச் சொற்பொழிவில் பதிந்திருக்கிறார். ஷேக்ஸ்பியருக்கு Judith என்றொரு கற்பனையான சகோதரி இருந்திருந்தால் ஷேக்ஸ்பியருக்கு இணையான அங்கீகாரம், புகழ் அந்தச் சகோதரிக்குக் கிட்டியிருக்குமா எனக் கேள்வி கேட்டு, 'இல்லை' என்று அவர் பெற்ற பதில், காலந்தோறும் 'பெண்' என்பதால் மறக்கடிக்கப்பட்டிருக்கின்ற வாய்ப்புக்களை, வரலாறுகளை நினைவூட்டுகின்றது.
தனது Orlando நூல் வெளியான சமயத்தில் கேம்பரிட்ஜ் பல்கலைக்கழகக் கல்லூரியில் (Arts Society of Newham College) பெண்களும் புனைகதையும் எனும் தலைப்பில் உயைாற்றும் போது ஆண்கள் கல்லூரிக்கும், பெண்கள் கல்லூரிக்கும் உள்கட்டமைப்பிலேயே (infrastructure) பேதமும், பாகுபாடும் நிலவியதைச் சுட்டுகிறார். தனது நாட்குறிப்பில் - சிறிய, இருண்ட, அலங்காரமற்ற பெண்கள் கல்லூரிகளின் வராந்தை (corridors) "leads to vaults in some horrid high church cathedral... cold & shiny" என்று குறிப்பிட்டு விட்டு, ஒரு ஆண்கள் கல்லூரி உணவு விடுதியில் தான் உண்ட வயிறு நிறையும் உணவையும், சற்றும் சமச்சீரில்லாத, குறைவான உணவு (meagre food) பெண் கல்லூரி உணவு விடுதியில் வழங்கப்படுவதையும் நினைவு கூர்கிறார்.
ஃபூக்கோ சுட்டுகின்ற "அமைப்பு ரீதியில் அதிகாரத்தைப் பயன்படுத்துகின்ற" இம்மாதிரியான விஷயங்களில் பெண்களுக்கு ஓட்டுரிமை தொடங்கி, தொடர்ந்து இயங்கிய வர்ஜினியாவைக் காட்டமாக இதற்காகப் பின்வருமாறு E.M. Forster விமர்சித்திருக்கிறார்: 
"In my judgement there is something old - fashioned about this extreme feminism; it dates back to her suffragette youth of the 1910's, when men kissed girls to distract them from wanting the vote, and very properly provoke her wrath. By the 1930's she had much less to complain of, and seems to keep on fumbling from habit. She complained, and rightly, that though women today have won admission into the professions and trades they usually encounter a male conspiracy when they try to get to the top. But she did not appreciate that the conspiracy is weakening yearly, and that before long women will be quite as powerful for good or evil as men. She was sensible about the past; about the present she was sometimes unreasonable. However, I speak as a man here, and as an elderly one. The best judges of her feminism are neither elderly men or even elderly women, but young women. If they, if the students of Fernham, think that it ex-presses and existent grievance, they are right". (Virginia Woolf: A collection of critical essays - Ed - Claire Sprague:23) ஒரு ஆணாகப் பேசுகின்ற E.M. Forster இன் இந்தக் குரல் ஒரு கயமைத் தனமான ஆணாதிக்க வெளிப்பாடு அல்லவா?
E.M. Forster வர்ஜினியாவை பகட்டுதன்மை உடைய ஒரு சீமாட்டி என்று அழைத்தது மட்டுமின்றி, "And her snobbery - for she was a snob- has more courage in it than arrogance" (Virginia Woolf: A collection of critical essays - Ed - Claire Sprague : 23) என்றும் சொல்கையில், வாழ்நாள் முழுவதும் வர்ஜினியா எதிர்த்த, ஒரு ஆண்மையக் குரலாகவே அதனைப் பார்க்க முடிகின்றது. சமூகத்தில் அதிகார உறவு, குறிப்பாக ஆண்மையை அதிகார மையம் எவ்வாறு கட்டமைக்கப்படுகிறது என்பது குறித்துப் பேசியும், புதினங்களில் எழுதியும் வந்த வர்ஜினியாவிற்கு அவரது கணவர் லியோனார்ட் வுல்ஃப் பெருந்துணையாக இருந்தார் என்பதே இங்கு ஆறுதல் அளிக்கும் ஒரு செய்தி. ஒரு அமைப்பு சார்ந்த சூழ்நிலையாக (Structural Situation) இல்லாமல், புரிதல், ஒத்துப்போதல், இணைந்து படைப்புகளை ஊக்கப்படுத்துதல் - இவற்றை லியோனார்டுடன் அனுபவித்தாலும், ஒரு உள்வாங்கிய மனநிலையாளராக (introvert) தற்கொலையை வர்ஜினியா பல சமயங்களில் பரீசீலித்துப், பயிற்சித்தும் பார்த்திருக்கிறார் என்பது ஃபூக்கோவை நினைவு படுத்துகிறது. தற்கொலைக்குத் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருப்பவர்கள் பைத்தியகரமான மனோநிலையில் இருப்பவர்கள். நாமனைவருமே வாழ்வின் எக்கணத்திலும் தற்கொலைக்குத் துரத்தப்படுகின்ற சாத்தியத்தோடு வாழ்பவர்கள் என்றவர் ஃபூக்கோ. பைத்தியக்கார மனோநிலை என்பது தனிப்பட்ட ஒன்றல்ல - நம்மில் அனைவரும் சதவிகிதத்தில் சிறிது மாறுபட்ட பைத்தியங்களே. ஃபூக்கோ, "பைத்தியம் என்ற கருத்துரு இதுநாள் வரையிலும் பைத்தியம் அல்லாதவனின் பார்வையிலிருந்து தான் வரையறுக்கப்பட்டு வந்தது. என்னுடைய கட்டுரை 'பைத்தியம் என்பதை அதற்குள்ளாகேவ' (Madness in itself) இருந்து பார்ப்பதாக இருக்கிறது" (ஃபூக்கோ - எம்.ஜி.சுரேஷ்: 16) என்கையில் தற்கொலைகளையும் நாம் அவற்றிற்குள்ளாக வைத்தே அணுகவேண்டியிருக்கிறது.
"I shall pass like a cloud on the waves" 
என்று சொன்ன வர்ஜினியா, தனது வாழ்வின் மிக முக்கியமான செய்தியொன்றைத் தனது குளியலறைத் தொட்டியில் சோம்பிக்கிடக்கையில் பெற்றார். அவரது "வீட்டின் தேவதையைக் கொல்வோம்" (Need to kill 'the angel of the house') எனும் கோஷம் பெண்ணியவாதத்தின் மிக முக்கியக் கருத்துருவாக்கமொன்றை எட்டியது. விக்டோரிய மேலைத் தட்டு மகளிர் கற்பிதம் செய்திருந்த மாதிரிப் பெண் என்பவள் மற்றவர்கட்குச் சேவை செய்பவதை மட்டுமே (Service) இலக்காகக் கொண்டவள் அல்ல - தன்னையும் கவனித்துக் கொள்பவள் என்னும் புதிய பெண்ணியப் பார்வையோடு அவர் முன்வைத்த இந்தக் கோட்பாடே அவரது அலைகள் (The waves) எனும் நாவலின் அடிப்படையாகவும் அமைந்தது. பால் சமத்துவம், மனித உரிமை, உழைக்கும் பெண்களைச் சமூகம் கேலிக்குள்ளாக்குதல் போன்றவற்றில் தீவிரமான கருத்துக்களை முன்வைத்த வர்ஜினியா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு அளித்த 'கிளார்க் சொற்பொழிவுகள்' (Clark Lectures) எனும் வாய்ப்பை நிராகரித்த பெருமைக்குரியவர். அதன் மூலம் கெளரவ முனைவர் பட்டம் பெற்றிருக்ககூடிய வாய்ப்பையும் இழந்தவர். காரணம் - இங்கிலாந்தின் பெருமைக்குரிய கல்விக்கூடங்கள் பெண்களை நடத்தியவிதம் இரண்டாந்தரமாக இருந்தது என்பதே.
பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை. பெண்களால் ஷேக்ஸ்பியரது நாடகங்களைப் போல எழுத முடியாது என்று சொன்ன பாதிரியாரைக் கண்டனம் செய்த குரல் வர்ஜினியாவினுடையது. ஏன் பெண்கள் எலிசபெத் அரசியின் காலத்தில் கவிதைகள் எழுதவில்லை எனக் கேட்ட குரல் வர்ஜினியாவின் பெண்ணியக்குரல். ஷேக்ஸ்பியருக்கு ஜீடித் என்றொரு சகோதரியைப் புனைந்துப் பெண்களை விழித்தெழ உலுக்கியது வர்ஜினியாவினுடையது.
தனது A Room of One's Own நூலில் ஒரு பெண்ணிற்கு ஏன் ஆணிற்கான வாய்ப்புக்கள், அங்கீகாரம் வழங்கப்படவில்லை, குறிப்பாகப், படைப்புலகில் என்று பின்வருமாறு கேள்வி எழுப்புகின்றார்: 
I told you in the course of this paper that Shakespeare had a sister; but do not look for her in Sir Sidney Lee's life of the poet. She died young - alas, she never wrote a word. She lies buried where the omnibuses now stop, opposite the Elephant and Castle. Now my belief is that this poet who never wrote a word and was buried at the cross roads still lives. She lives in you and in me, and in many other women who are not here tonight, for they are washing up the dishes and putting the children to bed. But she lives; for great poets do not die; they are continuing presences. (Virginia Woolf - A Room of One's Own: 354) எனும் அவரது இந்த ஆணாதிக்க அதிகாரத்திற்கு எதிரான குரல் அப்பொழுது பலரால் உற்றுக் கவனிக்கப்பட்டது. சமகாலப் பெண்கள் பலரையும் உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பிய தனித்துவக் குரலாகவும் அது அறியப்பட்டது.
நாஜிக்களின் வருகையில் பெரிதும் நிலை குலைந்தாலும், தங்களது பெயர் அறியப்படாத பெண் படைப்பாளிகள் குறித்து, Anon - ('Anonymous' என்பதன் சுருக்கம்) எனும் கட்டுரைத் தொகுப்பை அவர் எழுதியதும் அப்போதுதான். கடந்த காலம் x நிகழ்காலம், ஆண் x பெண், உணர்வு x அறிவு என்று இரும விண்மீன்களில் (Binaries) இறுதிவரை வாழ்ந்த வர்ஜினியா 1941, மார்ச், மாதம் மிக மோசமான மனச்சிதைவிற்கு ஆளாகின்றார். மார்ச் 18, ம் தேதி அவரது கணவர் முழுவதும் சேறு பூசிய வர்ஜினியா தனது நடைபயிற்சி முடிந்து திரும்புவதைக் கண்டு,அது ஒரு தற்கொலைக்கான முயற்சியே அறிந்து கொள்கிறார். வர்ஜினியா அடுத்தடுத்த தினங்களில் தொடர்ந்து மூன்று தற்கொலைக் குறிப்புக்களை எழுதுகின்றார் - அதில் முதலாவதில், 'இந்தப் பயித்தியக்காரத்தனம் என்னை நெருங்குகின்றது' எனவும், இரண்டாவதில், தனது தமக்கைக்குத் தான் பல குரல்களைக் கேட்பதாகவும் கற்பனை உருவெளித்தோற்றம் (Hallucination) தென்படுவதாகவும், தான் இம்முறை வெகுதூரம் சென்று விட்டதாகவும் குறிப்பிடுகின்றார்.
பெண்மைத் தன்மைக்கு எதிரான பெண்ணிய நிலைப்பாடாக, தங்களது ஆண்மையக் எதிர்ப்பினைப் பதிவு செய்த வர்ஜினியாவும், ஸில்வியா பிளாத்தும் ஆழமாக புரிந்து கொண்டு மிக விரிவாகப் பேசப்பட வேண்டியவர்கள். வர்ஜினியாவின் அலைகள் (waves) காட்சிகளுக்கு இடையே (Between the Acts) உம், ஸில்வியாவின் பெல் ஜார் (Bell Jar) உம் கருத்தொற்றுமை வாய்ந்தவை. அழிவு, (Chaos) வாழ்க்கை - இவை குறித்து ஒரே ரீதியில் ஆராய்பவை. அலைகளில் ஆறுவிதமான ஆளுமைகள் பற்றி (கிட்டத்தட்ட அவரது உடைந்த, வெவ்வேறான ஆளுமைக் குணங்கள் தாம் அவை) வர்ஜினியா பேசுவது போலவே, Bell Jar இல் தனது, வெந்நீர்க் குளியல் தொட்டி அனுபவத்தைப் பேசுகிறார் ஸில்வியா. காண்பவற்றிற்கும், உண்மைக்கும் இடையேயான ஊசலாட்டமே - Dangling between Perceptive and Factual Worlds - இருவரது அனுபவங்களும்! 
தனது Ariel கவிதையில் "The dew that flies / Suicidal /" எனும் போது, தரிசனம் (vision) எனும் ஒரு அனுபவத்தை இயற்கையின் மீது ஏற்றிப் பார்க்கின்ற ஸில்வியாவும், Between the Acts, இல் சாதாரணக் கண்ணாடியில் தனது உருவப் பிரதிபலிப்பினை முக்கோண வடிவக் கோணத்தில் (Prism - Sighted Dimension) காணும் Mrs. Giles Oliver ஐப் படைக்கின்ற வர்ஜினியாவும் ஒரே பெண் மனதின் வெவ்வேறு உருவங்களே! Schizophrenia (மனக்கோளாறு) நோயால் பீடிக்கப்பட்ட ஸில்வியாவும Bipolar (மனச்சிதைவு) நோய் பீடித்த வர்ஜினியாவும் ஒரே பெண்ணின் இருவேறு பிம்பங்களே. வர்ஜினியாவின் Rhodaவும், ஸில்வியாவின் Esther உம் தங்களைத் துண்டு துண்டான விவரணைகள், சிராய்ப்புக்களான உரையாடல்கள், இடையிடையே தொடர்பு துண்டிக்கப்பட்ட வாக்கியங்கங்களால் வெளிப்படுத்துபவர்கள். மனநோயாளிகளின் உலகம் இப்படி எல்லைகள் தூண்டாடப்பட்டவைதான். கோடுகள், விளிம்புகள், சட்டகங்கள் அற்ற இந்தப் பெண்களது உலகைப் பற்றிப் பேசுகின்ற ஜீலியா கிறிஸ்தவா (Julia Kristeva) தனது "In about chinese women", எனும் கட்டுரையில், இவர்களது தற்கொலையைத் தாய்மையின் குரலுக்கான பதில், "an answer to the Maternal call" என்கிறார். தந்தைமை சமூக ஆதிக்கத்தினால் முற்றிலும் தங்களைத் தாய்மையோடு மீண்டும் இணைத்துக் கொள்ள விழைந்து, முயன்று, தோற்று அதற்குத் தீர்வாகத் தற்கொலையைத் தேர்கிறார்கள் ஸில்வியாவும், வர்ஜினியாவும் எனும் கிறிஸ்தவாவின் பார்வை ஒரு புதிய கோணத்தைத் திறக்கிறது.
"In her chapter 'I who want not to be' Kristeva examines Suicide as a woman's answer to the maternal call. For her, this call of the mother, closely related to "the Socio - political battle", is victorious and irrestible for the vulnerable ego whom the weakening superego represented by family and history can not really support. The call, resulting from "The love that bound the little girl to her mother and lain in wait for her" is purely semiotic (பொருட்குறி). The woman hears "Voices", experiences "madness", "hallucinations" and "life itself cann't hang on: slowly, gently, death settles in" என்கிறார் விமர்சகர் ஒருவர்.
இந்த இரண்டு ஆளுமைகளில் வர்ஜினியா குறித்து விரிவாகப் பேசியாகிவிட்டது. ஸில்வியா குறித்துப் பிறிதொரு அவகாசத்தில் விரிவாக விவாதிக்கலாம். இருவருடைய படைப்புலகம், ஆளுமை, குறித்து ஆராய்ந்த Solenne Lestinne, (University of Paris), தற்கொலையின் மூலமாக இவர்கள் தேடிக்கொண்ட மரணம் இவர்களுக்கு தண்டனையோ, தப்பித்தலோ அல்ல- மாறாக அது ஒரு விடுதலை என்கிறார். "Death offers an Epiphany. It mends Plath's and Woolf's Fragments" எனும் Sollenne Lestienne இன் வாக்கியம் எவ்வளவு அர்த்தம் பொதிந்தது!
ஆம்-மரணம் இவர்களுக்கு ஒரு தெய்வீகத் தோற்றமே! (Death is a divine manifestation to them) 
இத்தற்கொலையின் பார்வையாளர்களாகிய, நீங்களும், நானுமே தற்கொலைக்குத் தூண்டுவதன் மூலம் தண்டனைக்குரியவர்களே! படைப்பாளிகளை, கலைஞர்களை அவர்களது மனநோயோடு, பயித்தியக்காரத்தனங்களோடு நாம் அங்கீகரிக்கையில், பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வது உறுதி செய்யப்பட்டுவிடும். ஒரு புகைப்படம், அதனை எடுத்தவரது தற்கொலை குறித்த பதிவொன்றை நிறைவாக இங்கு பகிர விரும்புகிறேன்.
'தெ நியூயார்க் டைம்ஸ்க்'கான கேவின் கார்ட்டருடைய புகைப்படம் ஒன்று - பசியினால் ஒடிந்து உள்விழுந்த ஒரு சூடான் சிறுமியின் அருகில் ஒரு கழுகு குந்தி இருக்கும் இந்தப்படம் பட்டினிக் கோலத்திற்கே படிமமாக அமைந்துவிட்டது. "தெ நியூயார்க் டைம்ஸ்" நடத்திய கேமிரா படப்பிடிப்புப் போட்டியில் மேற்கண்ட இந்தப் படத்திற்கு புகழ்பெற்ற புளிட்ஸர் பரிசு (Prize) கிடைத்தது. தனது 33 வயதில் - புளிட்ஸர் பரிசு அறிவிக்கப்பட்ட சில மாதங்களுக்குள்ளே 1994 சூலை 29 தேதியிட்ட 'த நியார்க் டைம்ஸ்' பத்திரிக்கையில் இறந்தோர் அறிவிப்புப் பகுதியில், தற்கொலை செய்து கொண்டார் என்ற அறிவிப்போடு கார்ட்டரின் படம் இடம் பெற்றது. செய்தியாக இது வெளியானபோது அறம்சார் அதிர்வலைகள் எழுப்பிய தற்கொலை அது.
"'தெ டைம்ஸ்' இதுழில் இது குறித்து "வேலைப்பாட்டின் கொடூரமான பேரச்சம்" என்ற தலைப்பில் கட்டுரை எழுதியவர், கார்ட்டருடைய அறவுணர்வு குறித்து பத்திரிக்கையாளருக்கேயான சில வினாக்களை எழுப்பினார். கார்ட்டர் ஏன் அந்தக் குழந்தைக்கு எந்த உதவியும் செய்யவில்லை? என நண்பர்கள் வியந்ததாகக் கூறுகிறார். இந்த மனிதர் அந்தக் குழந்தையின் துயரத்தை, வலது பக்கத்தில் இருந்து எடுப்பதற்குத் தனது கேமராவை ஒழுங்குப்படுத்தும்போது, அந்தக் கழுகைப் போலவே இவரும் ஒரு கொன்று தின்னும் மற்றொரு கழுகாகவே அந்தக் காட்சியில் வெளிப்படுகிறார் என எழுதினார்". (புனைவுகளும் உண்மைகளும் - க. பஞ்சாங்கம்: 361, 363) என்கிற இது தொடர்பான இன்னொரு செய்தியையும் வாசித்தபோது ஒரு தற்கொலைக்கான தூண்டுதலை செயலாக - அதனைப் பூர்த்தியாக்குகின்ற பாதையை, ஒரு இதயமோ, இரண்டு கண்களோ, இரு கால்களோ, இரு கைகளோ மட்டுமே செய்வதில்லை. பல்லாயிரம் சாட்சிகள் பங்கு கொள்கின்ற ஒரு மேடை நாடகம் அது என்கிற புரிதல் முகத்தில் அறைந்தது.
ஸ்ல்வியாவின், வர்ஜினியாவின் தற்கொலைகளைப் பார்த்தும், விவாதித்தும், துக்கித்தும், பின் வாழ்க்கையைத் தொடரும் நாமும் கழுகுகள் தானே! வர்ஜினியாவின் சட்டைப்பைகளுக்குள் நதிக்குள் மூழ்குவதற்கு முன்பு அவர் சேர்த்து வைத்த கற்களின் எடை ஆண்டுகளின் எண்ணிக்கையில் கூடுதலாகக் கனக்கும்போது - பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வது ஒரு கனவு மட்டுமே ! வர்ஜினியா பலமுறை ஒத்திகை பார்த்த அந்த நாடகத்தினை மிக நேர்த்தியாகப் பூர்த்தித்துக் கொண்ட அந்த இறுதி நாள் - மார்ச் 28ம் தேதி.
அதிர்ஷ்ட / துரதிர்ஷ்ட வசமான அந்த மார்ச்மாதம் 28ம் தேதியன்று, வர்ஜினியா தனது மூன்றாவது தற்கொலைக் குறிப்பை மிகத் தெளிவாக எழுதுகின்றார். "இந்த நோய்வராத வரையில் நாமிருவரும் மகிழ்ச்சியாகவே இருந்தோம்" என்று தன் கணவருக்கு எழுதிய அக் கடிதத்தைக் கணவரது பார்வையில் படும்படி கணப்படுப்பின் மீது வைத்துவிட்டு, வீட்டின் பின்புறவழியாக அவரது கணவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே வெளியேறுகிறார். தனது நிலை மாறாட்டங்கள் (disorders) தொல்லைகள், பேதலிப்பு (delirium) இவற்றை அணைத்தபடி, சமூகக் கட்டாயத்தனம் துரத்த, அவரது நனவிலி மனதின் கட்டளைக்குக் கீழ்ப்படிகின்றாார். தனது வழக்கமான காலனி, உரோமத்தோலாடை, ஊன்றுகோல் இவற்றோடு வெளியேறிய அவரை அதற்குப்பின் யாரும் பார்க்கவில்லை. லியோனார்ட் அவரைத் தேடியபோது, 'ஊஸ்' (Ouse) நதியின் கரையில் அவரது ஊன்று கோல் மட்டுமே கிடைத்தது. அதற்கு மூன்று வாரங்களுக்குப் பின், April 18ம், தேதி, அந்த ஆற்றோரம் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களால் கரையொதுங்கிய அவர் உடல் கண்டெடுக்கப்பட்டது.
இம்முறை மரணத்தைத் தள்ளிப்போடக் கூடாது எனும் உறுதியுடன் அவர் தனது மேலாடையின் சட்டைப் பைகளிலும் கற்களை நிரப்பியப்படி, தன் மரணத்தை நிச்சயம் செய்திருந்தார். 
தன் வீட்டின் பின்புறம் அந்தக் காலைப் பொழுதில் நடந்து சென்று தன் மரணத்தை வர்ஜினியா தழுவியதாக நான் நினைக்கவில்லை. ஏறக்குறைய தன் வாழ்நாளின் பெரும்பாலான நாட்களில், நனவிலி மனதின் ஆணைப்படி அவர் அந்தப் பாதையில் பலமுறை சென்று திரும்பி இருக்க வேண்டும். மரணத்தை அவர் ஒத்திப்போட்டோ, தள்ளிவைத்தோ தான் வந்திருக்கிறாரேயொழிய ஒருபோதும் அதனை வெறுக்கவோ, வென்றிருக்கவோ இல்லை என்றே தோன்றுகிறது. தற்கொலை மட்டுமே மரணத்திற்கு நிதானத்தின் ருசியை வழங்கமுடியும் என்பதை வர்ஜினியாவின் பதட்டமில்லாத தற்கொலைப் பாணி எனக்கு உணர்த்தியது.
அவரது தற்கொலைக்குப் பின்பு இருபத்தெட்டு ஆண்டுகள் உயிர்வாழ்ந்த லியோனார்ட் வுல்ஃப், தனது மனைவி நேசித்த அந்த வீட்டுத் தோட்டத்தில் (Garden at Monk's House) வர்ஜினியாவின் தலையளவு சிற்பத்தை அங்கிருந்த ஒரு மரத்தினடியில் வைத்து, அதனருகே அலைகள் எனும் (The waves) அவரது புதினத்தின் நிறைவு வரிகளை, இரங்கல் வரிகளாகப் பதிவு செய்திருக்கின்றார்:
"Against you, I will fling myself,
unvanquished, and unyielding, O, Death" என்பதே அவ்வரிகள்!
மரணமே – 
உனக்கு எதிராக, 
வெற்றிகொள்ள முடியாத, விட்டுக்கொடுக்க முடியாத 
என்னை 
நான் எறிவேன்!
	வர்ஜினியா தன் சட்டைப் பைகளில் நிரப்பிய கற்கள் நம் நடைபாதையெங்கும் கிடக்கின்றன: என்றேனும் ஒரு நாள் - நம்மில் யாருடைய சட்டைப் பைகளுக்காவது தாம் தேவைப்படுவோம் என்று அவைசொல்வது எனக்கு மட்டுமே கேட்கின்றது! ஏனெனில் நான் வர்ஜினியாவைக் காதலிக்கிறேன் - அவளது தற்கொலையின் ருசியோடு! அவளது மரணத்தின் தீராத பசியோடு!

உதவிய நூல்கள்: 

1) இலக்கிய இஸங்கள் - இ.எஸ்.தேவசிகாமணி 
2) புனைவுகளும் உண்மைகளும் - பேரா. க. பஞ்சாங்கம் 
3) தற்கொலைகளைக் கொண்டாடுவோம் - ராமானுஜம் 
4) சிக்மண்ட் ப்ராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல் - தி.கு. இரவிச்சந்திரன் 
5) ஆத்மாநாம் படைப்புகள் - பிரம்மராஜன் 
6) Virginia Woolf: A Collection of Critical Essays - Claire Sprague 
7) Virginia Woolf: A Room of One's Own

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *