ராஜம் கிருஷ்ணன் படைத்துக் காட்டிய பெண்ணுக்கான சுதந்திரப் பொன்னுலகம்
Novels are encyclopedic. Can put inside anything
– Orhan Pamuk
தேன் சுவையானது மட்டுமன்று; உடலை வலுவாக்கும் வல்லமை பெற்றது. அதுவும் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப்பூவின் ‘குறிஞ்சித் தேன்’ அபூர்வமானது. எழுத்தாளர்களில் ராஜம் கிருஷ்ணனும் அப்படிப்பட்ட குறிஞ்சித்தேன்தான்.
எழுத்தை ஆயுதமாகக் கொண்டு பல நூற்றாண்டுகளாகத் தான் அடைக்கப்பட்டு இருந்த இருட்டைக் கடந்து ஒரு பெண் எழும் பொழுது, இந்த உலகம் அவளோடு எழுகின்றது. சக பயணிகள் தன் உணர்வுகளைத் தன் உரிமைகளை, ஒரு பெண் எழுத்திலே படித்த பெருமையில் பூரிப்போடு அவளோடு பயணிக்கின்றனர். அவளைக் கொண்டாடுகின்றனர். இதெல்லாம் இந்த நூற்றாண்டில் நாம் கண்முன்பாகக் காணுகின்ற கனவு. இந்தக் கனவு கைவசப்படாத ஒரு காலகட்டத்தில் எழுத்தை மிகக் குறிப்பாகப் பெண் இருப்பிற்கான, உயிர்ப்பிற்கான ஆயுதமாகக் கையேந்திய நம்முடைய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய எழுத்தாளர் அம்மா ராஜம்கிருஷ்ணன். அவருடைய நூற்றாண்டு விழா சிறப்புக் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்து, அந்தக் கருத்தரங்கத்தினை மிகச் சிறப்பாக ஒழுங்கமைவு செய்திருக்கின்றனர்.
பெண்களுடைய குரல் மேடைகளிலாகட்டும் பொதுவெளிகளிலாகட்டும் எங்கெங்கு வெளிப்பட்டாலும் அதனை ஏந்திக் கொள்ளுகின்ற சமூகமாக இந்தச் சமூகம் மாறும்வரை தொடர்ந்து அவர்களை அரவணைப்போம்; எழுத்திலே அவர்களுக்கு இடம் கொடுப்போம் என்று உறுதி எடுத்து அவர் தம் கதைகளை Her stories என்று தொடர்ச்சியாக வெளிக்கொணர்கின்ற Her stories தோழர் நிவேதிதா லூயிஸைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
இந்த நிகழ்ச்சிக்கு நான் தலைமை உரை வழங்க வேண்டும் என்று தொடர்ச்சியாகப் பாராளுமன்றம் ஒரு மாத காலம் கூடினாலும் சரி! அதற்குப் பின்பாக வாருங்கள் என்று ஆர்வமோடு காத்திருந்து, என்னை எப்பொழுதும் ஊக்குவிக்கின்ற, மிகக் குறிப்பாகப் பெண் ஆளுமைகள், படைப்பாளர்கள் குறித்துத் தொடர்ச்சியாக கல்லூரி காலகட்டத்திலே மாணவிகளுக்கு அவர்கள் தம் வகுப்பறைகளிலே பெண் குறித்த புரிதலை உருவாக்கியதோடு, எழுத்திலே பதிய வைத்துப் பல்வேறு ஆளுமைகளை அறிமுகப்படுத்தி இலக்கியத்திற்கும் செழுமையான பங்களிப்பு செய்திருக்கின்றார். சமீபத்திலே அவர் தொகுத்திருக்கின்ற கதைகளை நீங்கள் வாசித்திருப்பீர்கள். இத்தனை சிறப்புகளைக் கொண்ட என்னுடைய மதிப்பிற்குரிய பேராசிரியர் முனைவர் பிரேமா முன்பு உரையாற்றுவதில் எனக்கு எல்லையில்லா உவகை.
கல்லூரியினுடைய முதல்வர், துணை முதல்வர், துறைத் தலைவர்கள் ஆகியோரே – அனைவருக்கும் வணக்கம். மிக மகிழ்வான நிறைவுமிக்க அரங்கமாக இந்த அரங்கத்தை இன்றைக்கு மாற்றி இருக்கின்ற என்னுடைய அரும்பெரும் தோழமைகள், தோழிகள், பேராசிரியப் பெருமக்கள் இங்கே கூடியிருக்கின்றனர். கிட்டத்தட்ட 25 ஆண்டு காலமாக ஐயா எஸ்.வி.ஆர் (எஸ்.வி.ராஜதுரை) அவர்களோடு எனக்கு அறிமுகமாகி அறிவு உலகத் தாக்கத்தோடு பெண்கள் இயங்க வேண்டிய அந்தக் கட்டாயத்தைத் தன்னுடைய எழுத்திலும் பேச்சிலும் படைப்புக்களிலும் தருகின்றவர் தோழர் வ.கீதா.
பெண் ஆளுமைகள் குறிப்பாக அறியப்படாமல் பொதுவெளியிலே அதிகம் கொண்டாடப்படாமல், ஆனால், காத்திரமான படைப்புகளைத் தந்திருக்கின்ற அம்மா சூடாமணி உட்பட இன்றைக்கு ராஜம் கிருஷ்ணன் வரை அவர்களோடு களப்பணியிலும் பயணித்து சூடாமணி அம்மையாருடைய அத்தனை நூல்களையும் கொண்டு வருவதற்கு அந்த அறக்கட்டளையின் வாயிலாக இன்னமும் சிறப்பாகப் பணிபுரிகின்றவர் என்னுடைய அன்புத் தோழி பேராசிரியை பாரதி.
மிக மகிழ்வோடு சூடாமணி அவர்களுடைய மொத்த நூல்கள் குறித்து நான் உருவாக்கிய அந்த ஆய்வு உரையை இங்கே நான் நினைவு கூர்கின்றேன். அதற்கான அருமையான வாய்ப்பைக் கொடுத்தவர் பேராசிரியை பாரதி அவர்கள்தான். தன்னுடைய அயராத களப்பணியில் எந்த விஷயம் என்றாலும், அதிலே ஒரு பெண்ணிய நோக்கோடு பெண்களுக்கு அல்லன எது? நல்லன எது? உரிமைகளுக்கான விஷயங்கள் எது? என்பதைத் தொடர்ச்சியாக விவாதக் களத்தில் முன்னெடுத்து வைப்பது, புத்தகங்களைக் கொணர்வது, எழுதுவது என்று செயல்படக்கூடியவர்கள். அதோடு கூட மிகவும் விளம்பரமில்லாமல் பல மாணவ மாணவிகளுக்குப் படிப்பிற்கு உதவி செய்வது என்கின்ற வேலையைச் செய்கின்ற ஜீவா எனும் ஜீவசுந்தரி தோழர். மாணவ மாணவிகளுக்கு யாரும் அறியாமல் அத்தனை உதவிகளை அவர்களுடைய படிப்பிற்காகச் செய்திருக்கின்றார்.
விழா மேடையின் முன்பாக அமர்ந்திருக்கின்ற பேராசிரியர் ராஜலட்சுமி என்னுடைய மாணவி. இன்றைக்கு ஆங்கிலத் துறையினுடைய துறைத்தலைவர் என்கின்ற பெருமையை எனக்குப் பெற்றுத் தந்திருக்கின்ற மங்கை என்னுடைய மேனாள் ராணிமேரிக் கல்லூரினுடைய மாணவி. அம்மா எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணனுடைய இந்த ஒரு நாள் கருத்தரங்கம் அவருடைய ஆளுமையினுடைய எந்தெந்தக் கோணங்களை எல்லாம் வெளிப்படுத்த இருக்கின்றது? வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தில் ஒரு பெண் என்றால், இதைப் பேச வேண்டும்; இதை உடுத்த வேண்டும்; இதை உண்ண வேண்டும்; இப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் இருந்த காலகட்டத்தில் அத்தனை தடைகளையும் மீறிய ஒரு பெண்ணாக அதனைத் தொடர்ச்சியாகத் தன்னுடைய எழுத்துக்களிலும் வெளிப்படுத்தியுள்ளார். ஒரு போராளியாக உரிமைக்குரல் எழுப்பிய பெண்ணாக அவர் படைப்புக்களை இங்கே பகிர்வதைக் காணவும் கேட்கவும் கூடியிருக்கின்ற என்னுடைய அருமை மிகுந்த மாணவிகளே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
இங்கே நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கின்ற முனைவர் நிர்மலா, சித்ரா பாலசுப்பிரமணியம், மித்திலா, தோழர் தமிழ் ஆகிய அத்தனை பேருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.
பொதுவாகக் கருத்தரங்க உரை என்றால் அந்த நிகழ்வின் தலைமை உரையை ஆற்றிவிட்டு செல்லுகின்ற தலைமை விருந்தினராக நான் ஒருக்காலும் இருந்ததில்லை. ஒரு இரண்டு மணி நேரம் அல்லது அரைநாளாவது இருந்துவிட்டுச் செல்வதுதான் ஒரு பேராசிரியையான எனது வழக்கம். அதுதான் அதற்கான மாண்பும் கூட. ஆனால் அரசியல் நம்மிடமிருந்து காவு எடுக்கின்ற பல விஷயங்களில் எனது நேரமும் ஒன்று என்று கருதுவதால், என்னுடைய தலைமை உரைக்குப் பின்பாக நான் உங்களிடமிருந்து விடைபெற நீங்கள் எனக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
பல கூட்டங்களில் பல மேடைகளில் தினம்தோறும் பேசி வருகின்ற பேசுவதற்கான சந்தர்ப்பம் அமைகின்ற பெண்தான் நான் என்றாலும், குறிப்பாக இந்தக் கூட்டம் இந்தக் கருத்தரங்கத்தினுடைய தலைமை உரை என்பது உள்ளபடியே நிறைவையும் மகிழ்ச்சியையும் கூடுதலான திருப்தியையும் அளிக்கின்றது. காரணம் தோழர் நிவேதிதா போன்ற அறியப்பட வேண்டிய பெண் ஆளுமைகள், அவர் தம் கதைகள் குறித்துக் கொண்டு வருகின்ற அவர்களுடைய பங்களிப்பு.
நிகழ்விற்கு முன்பாக மிக அருமையான செய்தி ஒன்றை நிவேதிதா தோழர் அவர்கள் பகிர்ந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சிக்கான முழு ஒத்துழைப்பையும், ஊக்கத்தையும் தந்திருக்கின்ற அம்மா திருமதி உமா நாராயணன், எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் மீது கொண்ட பெருமதிப்பின் காரணமாக இந்த முழுநாள் கருத்தரங்க நிகழ்ச்சியை அவர் ஒழுங்கு செய்து தந்ததோடு மட்டுமல்லாமல், அம்மா ராஜம்கிருஷ்ணனுடைய அனைத்து நூல்களும் ரோஜா முத்தையா நூலகத்தின் இணையதளத்திலே அனைவரும் படிக்கும் வண்ணம் அதனை டிஜிட்டலைஸ் செய்திருக்கின்றார். இப்பணியைச் செவ்வனே செய்த அம்மா திருமதி உமா நாராயணனுக்கு என்னுடைய அன்பான பாராட்டுக்கள். அவர்களை நேரில் நான் சந்திக்கவில்லை என்றாலும் நிச்சயமாக சந்திக்கும் பொழுது இந்த மகிழ்வைப் பகிர்ந்து கொள்வேன். முறையான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் .
நிகழ்விற்கு வருவதற்கு முன்பாக நான் பெருமையோடு மகிழ்வோடு நினைத்துக் கொண்ட இன்னொரு விஷயம் நாட்டுடமை ஆக்கப்பட்ட எழுத்தாளருடைய நூல்கள் பலவற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள். நாட்டுடைமை ஆக்குவது என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உயிரோடு ஒரு எழுத்தாளர் இருக்கும் பொழுதே நாட்டுடைமை ஆக்கப்படுவது என்பது வெகு சிலருக்கே கிடைக்கின்ற கௌரவம். அதுவும் வெகு சிலர் அதிலே முயற்சி எடுத்து அந்த ஒரு மிக முக்கியமான காரியத்தைச் செய்திருப்பார்கள். அந்த வகையிலே முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவருடைய முயற்சியால் ராஜம் கிருஷ்ணன் அம்மா உயிரோடு இருக்கும் பொழுதே அவர்களுடைய நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு, தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சரே அன்றைக்கு அதனை நேரிலே சென்று அவர்களுக்கு வழங்கினார்கள் என்பதை நான் மகிழ்வோடு மனநிறைவோடு இங்கே நினைவு கூர்கின்றேன்.
சார்த்தார் என்கின்ற மிகப்பெரிய நாவலாசிரியரைக் கைது செய்ய வேண்டும் என்று பிரெஞ்ச் நாட்டினுடைய காவல் துறை முடிவு செய்கின்றது. காவல் துறையினர் முடிவு செய்துவிட்டு அப்போதைய பிரெஞ்ச் அதிபரான டிகாலேவிடம் அதற்கு அனுமதி கேட்கிறார்கள். யாரைக் கைது செய்யப் போகிறீர்கள் என்றால், சார்த்தார் என்னும் நோபல் பரிசை மறுத்த அந்தப் பெருமைக்குரியவரை. அப்பொழுது டிகாலே சொல்கின்றார். சார்த்தாரை நீங்கள் கைது செய்வது என்பது இயலாத காரியம். ஏனென்றால், பிரான்ஸ்தான் சார்த்தார்; சார்த்தார் தான் பிரான்ஸ் என்று சொன்னார். எழுத்தாளர்களை மிகக் குறிப்பாகத் தன்மீது சுமத்தப்பட்ட நூற்றாண்டு கால இருட்டைக் கடந்து ஒரு வெளிச்சக்கீற்றாக பெண்களுக்கான உரிமைகளை முன்வைத்து கிட்டத்தட்ட 50, 60 ஆண்டுகளுக்கு முன்பாக இயங்கிய எழுத்தாளர்களைக் கொண்டாடுவது அவர்களுக்கான உரிய கௌரவத்தைத் தருவது என்பது ஒரு அரசாங்கத்தின் கடமை. அந்த வகையிலே எனக்கு மிகப் பெருமை. அதிலே, ஒரு பங்காக நானும் இருந்திருக்கிறேன் என்பது குறித்து. பேசுவதற்காக அம்மாவினுடைய படைப்புக்கள் அத்தனை படைப்புகளையும் ஒரு பருந்துப் பார்வை பார்த்தேன்.
18-ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்ற நாவல் வடிவம்தான் முதன்முதலாக உருவாகிய உலக மயமாக்கல். அதாவது இலக்கிய உலக மயமாக்கல். லிட்ரரி குளோஃபலைசேஷன் என்கின்றார் ஒரான் பாமுக். நாவலானது உலகின் எந்த மூலையில் இருப்பவர்களாலும் தமது சூழ்நிலைமைகளுக்குள் வைத்து வாசிக்கப்படக்கூடியது. அதற்குள் எல்லா வகையான வடிவத்தையும் நீங்கள் புகுத்தி விடலாம். சிறுகதை, கவிதை என்று எல்லா வகையான வடிவத்தையும் நீங்கள் புகுத்தி விடலாம். “That’s the novel are encyclopedic. you can put inside anything”. இப்படி பல்வேறு வகையான விவரிப்புகளை நாவல் குறித்தோ, சிறுகதை குறித்தோ அல்லது கவிதை குறித்தோ உங்களோடு நான் பகிர்ந்து கொள்ள முடியும்.
அமெரிக்க இலக்கியத்தை சமுத்திரத்துடன் மட்டுமே ஒப்பிடமுடியும். Oral Tales-ல் இருந்து, Native American Literature, African American Literature என்பது மட்டுமல்லாமல், குடிபுகுந்தோர் படைக்கும் இலக்கியம், Asian-American Literature, Arab-American Literature, Anglo-American Literature என்று ஏராளமான பிரிவுகள். அமெரிக்க இலக்கியம் பதினேழாம் நூற்றாண்டில் இருந்தே எப்போதும் நவீனத்தன்மையைத் தக்கவைத்துக் கொண்டது. அதிலும் எத்தனைவிதமான எழுத்துகள், Poe மற்றும் Melville-ல் இருந்து Fitzgerald மற்றும் Proud வரை, Wallace and Stevens-ல் இருந்து Gwendolyn Brooks and Thomas Pynchon வரை என்று எத்தனைவிதமான எழுத்துகள்!
ஒரு குறிப்பிட்ட Genre-ஐ மட்டும் எடுத்துக்கொண்டாலேயே நூற்றுக்கணக்கான எழுத்தாளர்கள் இருக்கும் அமெரிக்க இலக்கியத்தில், சில contemporary பெண் எழுத்தாளர்களே நிறைய பேர்கள் உள்ளனர். இருபதாம் நூற்றாண்டில் இருந்து மட்டும் என்று வரையறுத்துக் கொள்கையில் கூட Joyce Carol Oates, Edith Wharton, Anne Tylor போன்ற பல முக்கியமான எழுத்தாளர்கள் விடுபடுவது அமெரிக்க இலக்கியத்தின் பரந்த வீச்சுக்குச் சான்றாகும்.
அப்படி கல்வி வாய்க்கப் பெற்ற மேல் மத்தியதர மக்கள் தான் முதலில் வாசிப்பு எழுத்து எனத் தொடங்கினார்கள். அப்படி கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி எழுத்துலகில் கொடி நாட்டியவரே ராஜம் கிருஷ்ணன்.
ஆனால் ஒரு தமிழ் இலக்கியச் சூழலிலே, குறிப்பாகப் படிப்பு அதற்குரிய சூழல் கல்வி கற்கக்கூடிய சூழல் மறுக்கப்பட்ட ஒரு சூழலிலே பற்பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு பெண் எழுத வேண்டும் என்று ஏன் தீர்மானிக்கின்றார்? அதிலும் மிகக் குறிப்பாக இந்த வடிவத்தை ஏன் தீர்மானிக்கின்றார் என்பது மிக முக்கியம். என்னிடத்திலே பல பேர் கேட்பது உண்டு. ஏன் நீங்கள் நேரடியாக ஆங்கிலத்தில் எழுதுவது கிடையாது. எழுதினால் ஒரு நாளில் இல்லை என்றாலும், ஓராண்டிலாவது உலகப் புகழ் பெறலாம் அல்லவா என்று!
Chinua Achebe (சினுவா அச்சிபே) தன்னுடைய அதுகாறும் ஆங்கிலத்தில் எழுதி வந்துவிட்டு, ஆங்கிலத்தில் எழுதுவதை நிறுத்திவிட்டு, இனிமேல் தன்னுடைய இனக்குழு மொழியிலே எழுதப் போகிறேன் என்று அறிவித்த பொழுது, It is political statement என்று சொன்னார். அது ஓர் அரசியல் நிலைப்பாடு! என்னுடைய கரிசல் காட்டுப் பெண்களைக் குறித்து மிகக் குறிப்பாக படிப்பறிவில்லாத பாட்டாளி மக்களான உழைக்கின்ற கரிசல் காட்டுப் பெண்கள் எனக்கு என்ன அனுபவப் பாடத்தைத் தந்திருக்கிறார்கள். எனக்கு எப்படி முன் உதாரணமாக இருக்கிறார்கள் என்பது குறித்து என் மொழியில் நான் எழுத வேண்டும். It is writing against the Canonical literature as post colonial writing and that is my political statement. அந்த வகையிலே பார்க்கும் பொழுது அம்மா ராஜம் கிருஷ்ணனுடைய படைப்புக்கள் ஒவ்வொன்றுமே மிகக் குறிப்பாக பெண்மீது அதுகாறும் அந்தச் சமுதாயம் ஏதாவது கற்பித்து வைத்திருந்த பிம்பங்களைச் செலுத்தினால் அல்லது அந்தப் பிம்பத்திலேயே அவள் இருக்க வேண்டும் என்று விரும்பினால், அதற்காக அந்தக் காலகட்டத்தில் எழுந்த முதல் குரல் அம்மா ராஜம்கிருஷ்ணனுடைய குரல். அதற்கு அவர் எடுத்துக்கொண்ட ஒரு வகைமைதான் நாவல் என்கின்ற அந்த வகைமை. வெறும் பிரச்சாரமாக மட்டுமல்லாமல் ஒரு கலை வடிவத்தோடு ஒரு படைப்பை நீங்கள் கொடுக்கும் பொழுது உலகலாவிய அளவிலே அது சென்று சேரும். அந்த வகையிலேதான் அம்மாவை நாம் இந்த நூற்றாண்டு விழாவிலே நினைவு கூர்கின்றோம். மிக முக்கியமாக ஆரம்பக் காலகட்டத்திலே தொழிற்புரட்சிக்குப் பின்பாக அச்சகங்கள் மிக மிக வேகமாக வளர்ந்து வருகின்ற காலகட்டத்திலே எழுதக்கூடிய வாய்ப்பு என்பது படித்த ஓரளவுக்கு மேல்தர வர்க்கத்துப் பெண்களுக்கு மட்டுமே சாத்தியப்பட்டிருந்த காலகட்டத்தில் எழுதுவதும் வாசிப்பதும் அந்தப் பெண்களுக்கு மட்டுமே ஓரளவிற்குச் சாத்தியப்பட்டிருந்த அந்தக் காலகட்டத்தில் எழுத்தைத் துணைகொண்டவர் ராஜம் கிருஷ்ணன். அது அமெரிக்காவாக இருந்தாலும் சரி! இங்கே இந்தியாவாக இருந்தாலும் சரி! 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலே சுத்தமாக உயர்கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு இளவயதிலேயே திருமணம் செய்யப்பட்டு, ஒரு மிகப்பெரிய கூட்டுக் குடும்பத்தில் சென்று தன்னுடைய திருமண வாழ்க்கையைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருந்த அம்மா ராஜம் கிருஷ்ணனுக்குப் படைப்பாற்றல் மட்டுமே; எழுத்து மட்டுமே அவர்களுடைய மூச்சுத் திணறலில் இருந்து வெளிவந்து ஒரு ஆசுவாசம் தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது.
நறிய பொன்மலர் மென்சிறு வாயினால்
நங்கை கூறும் நவீனங்கள் கேட்டீரோ?
என்றும்
’நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’
என்றும் பாடிய பாரதியை முன்னோடியாகக் கொண்டு வாழ்நாள் முழுவதும் ஒரு பெண்விடுதலைப் போராளியாகவே வாழ்ந்தவர் ராஜம் கிருஷ்ணன். அது, அவரது குறிப்பிடத்தக்க மற்றுமொரு சிறப்பான முகம். பெண்ணினம் சார்ந்த பிரச்சினைகளில் ஆக்க பூர்வமான – தீர்வை நோக்கிய ஈடுபாடு காட்டி வந்த ராஜம் கிருஷ்ணன் ,’காலந்தோறும் பெண்’ ,’காலந்தோறும் பெண்மை’, இந்தியச் சமுதாய வரலாற்றில் பெண்மை’, ’பெண் விடுதலை’ போன்ற ஆழமான கட்டுரை நூல்கள் பலவற்றை நமக்குப் படைத்துத் தந்திருக்கின்றார் .
தனக்கு வாய்த்த எழுத்தாற்றலை அவர் வெறுமனே பெண்களை விதந்து ஓதுவதற்கும், பெண்கள் குறித்து ஆஹா! ஓஹோ! இப்படி இருக்க வேண்டும்; அப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுவதற்காக மட்டுமா பயன்படுத்திக் கொண்டார்? அப்படி இருந்தால் நாம் அவரை இன்றைக்குக் கொண்டாடி இருக்க மாட்டோம். ஷேக்ஸ்பியரை ஏன் மார்க்ஸ் தன்னுடைய வீட்டினுடைய செல்லம் கொழிக்கின்ற கவிஞராக கொண்டாடினார்? அவர் அந்தக் காலத்து பிரபுக்கள் காலகட்டத்தினுடைய மேன்மைகளை அல்லது அந்தக் காலகட்டத்தினுடைய செல்வம் மிகுந்த கீர்த்திகளை விதந்து ஓதி படைப்புகளைக் கொண்டு வந்திருந்தார் என்றால், மார்க்ஸினுடைய செல்லம் கொழிக்கின்ற கவிஞராக அல்லது இன்றைக்கும் Before the spirit of art உயர்ந்து நிற்கின்றவராக இருக்க மாட்டார். அந்தக் காலகட்டத்தின் சமூக அவலங்களைப் பிரபுத்துவக் காலகட்டத்தின் Hegemonicle Attitude என்று சொல்லக்கூடிய அந்த விஷயங்களை ஒரு மனிதனுக்கே உரித்தான தள்ளாட்டங்களோடு அத்தனையும் The flaws of human characters கொண்டு வந்ததால் மட்டுமே இன்றளவும் நாம் கொண்டாடுகின்றோம். தான் வாழ்கின்ற சமூகத்தின் கட்டுக்கோப்புக்குள்ளேயே நின்று இது உயர்ந்தது; இது மிக மிக அபரிமிதமானது; பெண்களுக்குக் கட்டி வைக்கப்பட்ட பிம்பங்களில் அவர்கள் இத்தனை சேவைகளைச் செய்தார்கள்; இத்தனை போராட்டங்கள் செய்தார்கள் என்றெல்லாம் சொல்லுவது அம்மையாருடைய வேலை அன்று. எங்கெல்லாம் அவர்களுக்கான அந்தப் பிம்பங்களை உடைக்க வேண்டுமோ சொல்லப்போனால் தந்தை பெரியாரைப் போலக் குரல் கொடுத்தவர். திருக்குறளிலே மாறுபட்ட கருத்துக்கள் உடைய அந்த அதிகாரத்தில் குறள்களை எடுத்துவிட்டு திருக்குறளைப் பாடப் புத்தகங்களில் வைக்க வேண்டும். நீங்கள் ஏன் பரத்தையர் என்று சொல்லக்கூடிய அளவிலே மொத்தமாக as a community of women ஒதுக்கி வைக்கிறீர்கள்? எனத் திருவள்ளுவரைப் பார்த்துக் கேள்வி கேட்டவர் அம்மையார். ஆனால் பரத்தையரைச் சென்று சேர்கின்ற ஆண்களை மட்டும் இழிமகன், ஆண்மகன் என்று Why should you have addresses as a singular person? என்றவர். ஒட்டுமொத்தமாக பெண்களைப் பரத்தையர் என்று ஒரு கூட்டமாக கம்யூனிட்டி எனச் சொல்லிவிட்டு, அந்த வேலையைச் செய்கின்ற ஆண்மகனை இழிமகன் என்று ஏன் ஒருமையில் நீங்கள் சுட்ட வேண்டும்? எனக் கேட்டவர்.
அதேபோல பெண்ணடிமை கருத்துக்களை உடைய அதிகாரங்களை எடுத்துவிட்டு திருக்குறளைப் பாடத்திட்டத்தில் வையுங்கள் என்று தந்தை பெரியார் சொன்ன பொழுது, அதனைத் தொடர்ந்து வந்த குரல் அம்மா ராஜம் கிருஷ்ணனுடைய மிக மிக முக்கியமான குரல். பெண் ஒருபொழுதும் வாழ்க்கையிலும் இலக்கியத்திலும் ஒன்று போல சித்தரிக்கப்படுவது கிடையாது. உங்களுக்குக் கொடுக்கின்ற இலக்கியங்களிலே இருந்து நீங்கள் சமகாலகட்டத்தில் 22 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் உங்களுக்கான சிக்கல்கள் என்ன? உங்களுக்கான இருப்பின் கேள்விகள் என்ன? வலிகள் என்ன? என்பதை முன்வைத்து கடந்த கால இலக்கியங்களை மீட்டுருவாக்கம் செய்து கேள்விகளைக் கேட்டு அதனை உணர்ந்து உங்கள் படைப்புக்களைச் செய்வதாகட்டும் ஆய்வதாகட்டும் இருக்க வேண்டும். அதற்கான முன்னோடி நம்முடைய அம்மா ராஜம் கிருஷ்ணன்.
ஒரு வீட்டினுடைய சமையலறையின் மூலையிலே அமர்ந்து கொண்டு அம்பையின் வீட்டின் மூலையின் சமையலறை என்கின்ற சிறுகதைத்தொகுப்புதான் நினைவிற்கு வருகின்றது. ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் எத்தனை தோசைகள் வார்த்திருப்பார்? எத்தனை இட்லிகள் சுட்டிருப்பார்? என்ற மிக முக்கியமான கேள்வி இந்தச் சமூகத்தின் முன்பாக வைத்த கதை அது. அந்த இடத்திலே அமர்ந்து கொண்டு மளிகைப்பொருள்கள் வாங்கிய ரசீதின் பின்புறமாக தன்னுடைய எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர் அம்மா ராஜம் கிருஷ்ணன்.
மணிக்கொடி பத்திரிக்கை சிறுகதைகளில் பல சோதனை முயற்சிகள் செய்து வந்த காலம். ராஜம் கிருஷ்ணனை முதன்முதலாக மிக மிக முக்கியமாகப் பாதித்த புத்தகம் அம்மையார் ராமாமிருதம் எழுதிய ’தாசிகளின் மோசவலை அல்லது மதிபெற்ற மைனர்’. இங்கே தோழர் வ.கீதா அமர்ந்திருக்கிறார். அ.மங்கை அவர்களுடைய நாடக ஆக்கத்திலே மிக முக்கியமாக இந்த நூலை எடுத்து, அந்த நாடக ஆக்கத்தைச் செய்தவர் நம்முடைய அன்பிற்குரிய தோழர் வ.கீதாதான். இங்கே இருக்கின்ற மாணவிகள் மிக முக்கியமாக இந்தப் புத்தகத்தைப் படிக்க வேண்டும். அந்த நாடகத்தையும் நீங்கள் கண்டுகளிக்க வேண்டும்.
பாரதி மோகம் இவருக்கு ஏழு எட்டு வயதிலேயே வந்துவிட்டது. பாரதியின் குயில் பாட்டையும் பாஞ்சாலி சபதம் காவியத்தையும் பெரியவர்களுக்குப் படித்துக் காட்டி அதன் இன்பத்தில் தான் மூழ்கியதாகப் பின்னாட்களில் அவர் சொன்னார். ஆனால், பாரதியார் குறித்து வெறும் இன்பத்தில் மட்டும் அவர் மூழ்கவில்லை. பாரதியார் குறித்துக் கேள்விகளை அவர் வைத்திருக்கின்றார். அதுகுறித்து, ஒரு நாவலையும் எழுதி இருக்கின்றார். பாரதியாருடைய துணைவியார் விதவைப் பெண்ணாக இன்னொரு மறுமணம் செய்வதாக, அதற்கு எப்படி எதிர்ப்பு வந்தது அவர்களுடைய குடும்பத்திலே என்று ஒரு கற்பனையில் ஒரு புதினமும் எழுதி இருக்கின்றார்.
இந்தப் பார்வை தான் நமக்கு வேண்டும் பலபேர் என்னிடம் கேட்பார்கள். ஏன் நீங்கள் கவிஞர் என்று போட்டுக் கொள்வதில்லை; வேண்டாம் என்று ஏன் சொல்கிறீர்கள் என்று? மகாகவி பாரதியார் கவிஞர். நான் கவிஞரா? படித்து வாங்கிய முனைவர் பட்டத்தை நீங்கள் போட்டால் போதும் என்று நான் சொல்வேன். பாரதியை எப்பொழுதுமே அவன் இருந்த காலகட்டத்தை வைத்துதான் ஆய்வு செய்ய வேண்டும் என்பதிலே எனக்கு மாற்றுக் கருத்து கிடையாது. அந்த ஆய்வுப் போக்கைக் கொண்டு உள்ளவள் நான். ஆனால், அவரை விதந்து ஓதுவதோடு இப்படி ஒரு கேள்விக்கு உட்படுத்திய ஒரு புதினத்தையும் அம்மா அவர்கள் படைத்திருக்கின்றார். அவர்களை உற்சாகப்படுத்தியவர் கி.வா. ஜகநாதன் அவர்கள். அவருடைய முதல் பரிசு பெற்ற ’பெண் குரல்’ என்ற நாவலை தன்னுடைய பத்திரிக்கையிலே கலைமகளில் தொடராக வெளியிட்டார். சாவி அவர்கள் நடத்திய வெள்ளி மணியில் தான் அவருடைய முதல் சிறுகதையான வெள்ளி டம்ளர் வந்தது.
இவருக்கு மிகப்பெரிய பிடித்தமான விஷயம் களப்பணி செய்வது. ஒரு புதினத்தை எழுதுவதற்கு முன்பாக கிட்டத்தட்ட ஓரிரு வருடங்கள் இன்னும் சொல்லப்போனால் நான்கைந்து வருடங்களாவது களப்பணி என்பது மிக அவசியம். Novel has a very broad Canvas. it has to tell the cross section of society of particular period. ஒரு ஐந்து கரிசல் காட்டு கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு ஒரு சிற்றூரிலே ஒரு 40 பக்கங்கள் எழுதப்படுவது என்பது நாவல் அல்ல.
ஒரு படைப்பாளி ஒரு நாவலாசிரியனோ, கதாசிரியனோ அல்லது ஒரு கவிஞனோ, தான் வாழும் காலத்தில் சாட்சியாகவும் பங்காளியாகவும் இருக்க வேண்டும். அவன் அப்படி சாட்சியாகவும் பங்காளியாகவும் இருந்தான் என்பதற்கான அடையாளங்கள் அவன் படைப்பிலே புலப்பட வேண்டும். அதுதான் அம்மையாருடைய மிகப்பெரிய ஒரு முக்கியமான சாதனையாக நான் கருதுகின்றேன்.
இடதுசாரி இயக்கங்களோடும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தோடும் நெருங்கிய உறவினைக் கொண்டவர். களப்பணி செய்து முக்கியமாக தன்னுடைய கணவர் பணி நிமித்தமாக செல்லுகின்ற எல்லா இடங்களுக்கும் தானும் உடன் சென்று அந்த இடங்களிலே இருக்கின்ற மனிதர்களைப் படித்து அவர் எழுதிய புதினங்கள் தான் ஏராளம்.
காலம்தோறும் பெண், காலம்தோறும் பெண்மை, இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை. இந்த பெண்மை என்கின்ற அந்த வார்த்தை என்பது இங்கே இருக்கின்ற நான் உட்பட பலரை ஒரு மழுங்கடிக்கச் செய்திருக்கக் கூடிய வார்த்தை. பெண்மை என்றால் அழகு, பெண்மை என்றால் மென்மை, பெண்மை என்றால்… இப்படிச் சொல்லப்பட்ட உங்களுக்கான விஷயங்களுக்குள் புகுத்தி விடுவது அல்ல. இந்தப் பெண்மை ஆண்மை என்கின்ற இரு துருவங்களே அழிக்கப்பட வேண்டும் என்பதுதான் ஐயா பெரியாருடைய சித்தாந்தம்.
அலுவலகத்துக்குச் செல்கின்ற மக்களுடைய சிக்கல்களைப் பேசும் ’விலங்குகள்’, ’ஓசைகள் அடங்கிய பிறகு’, பெண் சிசுக்கொலை பற்றி உசிலம்பட்டி பின்னணி கொண்ட ’மண்ணகத்துப் பூந்துளிகள்’, மிக முக்கியமாக தேவதாசி முறையிலிருந்து விடுபட எண்ணி தனக்கென ஒரு வாழ்வை அமைத்துக் கொள்ளும் பெண்ணைப் பற்றி பேசும் ’மானுடத்தின் மகரந்தங்கள். இந்த தேவதாசி முறை குறித்து இது எவ்வளவு அடக்கு முறையை உள்ளடக்கியது என்பது குறித்தும், அதற்காக எத்தனை போராட்டங்கள்? மிக முக்கியமாக அம்மா முதல் எம்எல்சி என்று சொல்லப்படுகின்ற அம்மா முத்துலட்சுமி இந்த மசோதாவை தாக்கல் செய்து பேசுகின்றார்.
ஒரு பெண்மணியாகச் சட்டத்தின் குரலைப் பெண்களுக்கான விஷயங்களைப் பேசுகின்ற அந்த முதல் குரலாக அம்மா முத்துலட்சுமி முன்னெடுத்தது தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்கின்ற மசோதா. அத்தனையும் கேட்டுக்கொண்டு காங்கிரஸ் மூத்த தியாகி ஐயா சத்தியமூர்த்தி இதெல்லாம் சரிதான், ஆனால் தேவதாசிகள் இல்லை என்றால் குடும்ப அமைப்பு என்னாவது ? என்கிறார்.
அம்மையார் அதற்குக் கொடுத்த பதில் வரலாற்று சிறப்பு மிக்க பதில், இங்கே இருக்கின்ற ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதில், ’’சரி! இந்த மசோதாவை நான் வாபஸ் பெற்றுக் கொள்கின்றேன். இத்தனை எதிர்க்கிறீர்கள்! வாபஸ் பெற்று கொள்கிறேன். இதுகாறும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இந்தத் தொழிலை; தேவதாசி தொழிலைச் செய்து வந்தார்கள். இனிமேல் கொஞ்ச காலத்திற்கு உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் அதைச் செய்து வரலாமே’’ என்றார்.
அந்த குரல் என்றைக்கு ஒலித்த குரல்? ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக இங்கே ஒலித்த அந்தக் குரலால் தான் இன்றைக்கு நாம் இங்கே தலை நிமிர்ந்து அமர்ந்திருக்கின்றோம். அதைப்போல முன்னெடுத்த ஒரு குரல் ஆளுமைதான் நம்முடைய அம்மா ராஜம் கிருஷ்ணன். இதிகாசத்தினுடைய மறு ஆக்கமாக சீதையினுடைய வாழ்வை மீட்டு உருவாக்கிய ’வனதேவியின் மைந்தர்கள்’ மிக மிக முக்கியமான புத்தகம். இவை அனைத்தும் அதைத்தான் நான் சொல்வது உங்களிடம் இலக்கியம் எதை உங்களிடம் இலக்கியம் என்று கைக்கொள்கிறதோ, Apart from enjoying its meritorious aesthetic style or technique அதனுடைய அழகுகள் அதன் சந்தம், பாக்கள் இவற்றை நீங்கள் அனுபவிப்பது ஆராய்வது என்பது ஒருபுறம் இருக்க, கருத்து கன்டென்ட் என்ன சொல்கின்றது? என ஆய்ந்து உணருங்கள்.
சாதிய வர்க்கத்தோடு ஒன்று சொல்லப்படுகின்றதா? பெண் அடிமை கருத்துக்கள் சொல்லப்படுகின்றதா ? பாஞ்சாலியிலே என்னை வைத்த பின்பு அவரை அடமானம் வைத்தானா? அவனை வைத்த பின்பு என்னை வைத்தானா? என்று கேட்கின்ற அந்தக் கேள்வி. அதே கேள்வியைத்தான் சீதையும் கேட்க வேண்டும் என்றுதான் இந்தக் கதை எழுதப்படுகின்றது.
உங்கள் முன்பாக வைக்கப்படுகின்ற கதாபாத்திரங்களை நீங்கள் எப்படி உங்கள் சமகால சிக்கலோடு உங்களுடைய இருப்போடு, நீங்கள் பொருத்திப் பார்க்கிறீர்கள் என்ற கோணம் மிக முக்கியம். எனக்கு மிகப் பிடித்த ஒன்று அவருடைய வீடு. அந்த வீடு புதினத்தில் தன்னுடைய ஐம்பதாவது வயதில் வீட்டை விட்டு வெளியேற ஒரு பெண் முடிவெடுக்கின்றார்.
இப்பொழுதெல்லாம் கொஞ்சம் வயசாகிவிட்டாலே நீங்கள் We just get settled societal pressure. இதற்கு மேல் வெளியே போய் என்ன செய்ய போகிறோம்? இதற்கு மேல் என்று ஒன்று வந்துவிடுகிறது. ஆனால், ஐம்பதாவது வயதில் அந்தப் பெண் தன்னுடைய அந்தக் காலகட்டத்திற்கான கடமைகளை முடித்துக் கொண்டு தனக்கான ஒரு வாழ்வு வேண்டும் என்று முடிவெடுக்கின்ற அந்த ’வீடு’ கதை மிக மிக முக்கியமான ஒன்று. இந்திய மரபில் குடும்பமே ஒரு குழந்தையைப் போல தன்னுடைய இடுப்பிலே இருக்கின்ற நம்முடைய மரபிலே, பெண் விடுதலை என்பது எத்தனை போராட்டங்களுக்குப் பிறகு சாத்தியமாக கூடியது என்பதை மிக மிக நேர்மையாக அவர் பதிவு செய்திருக்கின்றார்.
‘வீடு’ புதினம் இப்சன் என்ற நாடக ஆசிரியர் எழுதிய ‘பொம்மை வீடு’ என்ற நாடகத்தினைப் போன்றது இது. ஆனால் ராஜம் கிருஷ்ணன் இப்சனைப் படித்ததில்லை. இருப்பினும் வீடு நாவலின் கதாநாயகியான யசோதாவை இப்சனின் டோராவுடன் ஒப்பிடலாம். யசோதா கொடுமைக்காரப் புருஷனின் மனைவி. அவளைப் பொறுத்துக் கொள்கிறாள். தன் பெண் திருமணம் முடியும் வரை காத்திருக்கிறார். பெண்ணின் திருமணம் முடிந்த பின்னர், ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியேறுகிறாள். இது பெண் விடுதலை பற்றிய அவரது கருத்தின் ஒரு புதிய பரிமாணமாக உள்ளது.
இன்னொரு முக்கியமான விஷயம் எனக்கு ஐயா தி.ஜானகிராமனுடைய புதினங்கள் மிகப் பிடிக்கும். அம்மா வந்தாள் எனக்கு மிகப் பிடித்த புதினம். ஆனால், தி.ஜானகிராமனுடைய ’சக்தி வைத்தியம்’ என்ற தொகுப்புக்கு சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்ட போது, அதை எதிர்த்து வந்த முதல் குரல் ராஜம் கிருஷ்ணனுடையது. படைப்பு என்னவென்றாலும் சரி அதனுடைய கருத்து மிக மிக முக்கியம் என்கின்ற அந்தத் தெளிவான பார்வையை அவரிடமிருந்துதான் நாம் பெற்றுக்கொண்டோம். அந்தப் படைப்பின் சில பகுதிகள் பெண்ணை மலினப்படுத்தும் கருத்தியல் கொண்டதாக இருப்பதாகக் கருதி உண்மையும் அதுதான் என்பதால், மிக மிகக் காத்திரமாக தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்கின்றார்.
அதேபோலத்தான் தினமணி 97 தீபாவளி மலரில் ஜெயேந்திரர் விதவைப் பெண்ணைப் பற்றி ஒன்றும் விளையாத தரிசு நிலம் என்று சொன்ன பொழுது, அதனைக் கடுமையாக விமர்சித்து அதற்குரிய எதிர்ப்பையும் பதிவு செய்தவர் அம்மா. தரிசு கோட்பாடு என்ற தலைப்பிலேயே அவர் தினமணியிலே ஒரு கட்டுரை எழுதுகின்றார். தரிசு கோட்பாடு என்ற தினமணி நடுப்பக்கத்திலேயே அது வெளியானதும் வரலாற்று நிகழ்வுகளாக நாம் அவருடைய உச்சபட்ச துணிவைச் சொல்லுகின்ற நிகழ்வுகள். பெண்கள் மிகக் குறைவாக எழுதிக் கொண்டிருந்த காலகட்டத்தில் தமிழ் புனைவெழுத்தில் கால்பதித்து வணிகப் போக்கிற்குப் புறம்பாக, Not in the commercial aspects but question about yourself. உங்கள் குறித்து கேள்வி எழுப்புவது சமுதாயத்திலே உங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற பிம்பங்களை உடைத்தெறிவது இவை குறித்தெல்லாம் எழுதிய அவரைப்போல பெண் எழுத்துக்களில் ஆழமாகவும் அகலமாகவும் எழுதியவர்கள் யாரும் இல்லை.
பெரிய ஆளுமைகள் பிரிட்டனில் அருகிவந்த 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், தீவிரமாகச் சிந்தித்தும் எழுதியும், இலக்கிய உலகில் ஆழமான தாக்கத்தை விட்டுச் சென்றுள்ளவர் விர்ஜீனியா உல்ஃப் (1882-1941). நாவல், விமர்சனம், பெண்ணியம், வரலாறு என்னும் தளங்களில் புதிய போக்குகளை அறிமுகப்படுத்தியவராக, தனது ஆளுமைப்பொலிவோடு உருகொண்டதற்கிணங்க, தனது எழுத்தையும் உருக்கொள்ள வைத்தவர். வாழ்ந்தது போல் எழுதியவர். சிந்தித்தது போல் வாழ்ந்தவர். இறக்கவும் செய்தவர்.
அவருடைய கவனக்குவிப்பெல்லாம், “தற்போதைய கணம், புரிதலுடன் முழுதாக ஆழமாகப் பிரவாகிக்கும் வரை, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தால் இன்னும் முழுமையாக நிரம்புமாறு” செய்வதாக இருந்தது.
இதுதான் அவருக்கு எழுத்திலும் வாழ்விலும் இருந்த சவால். இரண்டாம் உலகப்போர் கட்டவிழ்த்து விட்டிருந்த பீதியுணர்வு, இலக்கிய உலகில் நிலவிய காழ்ப்புணர்வுகள் – பாரபட்சங்கள், தன் உடல் சார்ந்த நோய் குறிகள் – மனநிலை பாதிக்கப்பட்ட துயரங்கள் ஆகியவற்றின் பின்புலத்தேதான் விர்ஜீனியா இயங்கினார். எழுத்தின் மீது அவர் கொண்டிருந்த தீவிர பற்றுதலும் அர்ப்பணிப்புமே அவரது கணிசமான பங்களிப்புக்கு அடிப்படை. நாவல்கள், விமர்சனக்கட்டுரைகள், பெண்ணிய விவாதங்கள், கடிதங்கள், நாட்குறிப்புகள் என நிறையவே விட்டுச் சென்றுள்ளார்.
பெண்கள் மிகக்குறைவாகவே எழுதிக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தமிழ்ப் புனைவெழுத்தில் கால் பதித்து வழக்கமான வணிகப்போக்குக்கு மாறான தீவிரம் கொண்ட சமூக விமரிசனங்களாகத் தன் நாவல்களை உருவாக்கியவர் ராஜம் கிருஷ்ணன். பெண் எழுத்தாளர்களில் அவரைப்போல அகலவும் ஆழவும் உழுதிருப்பவர்கள் வேறு எவரும் இல்லை. தன் உச்சபட்சப் படைப்பின் காலகட்டத்திலேயே சாகித்திய அகாதமி, பாஷா பரிஷத், நேரு சோவியத் லேண்ட், இலக்கிய சிந்தனை போன்ற நிறைவான பல அங்கீகாரங்களைப் பெறும் வாய்ப்புக் கிடைக்கப்பெற்ற பெண் எழுத்தாளரும் அவர் ஒருவர் மட்டுமே. அந்தளவுக்குக் காத்திரமான படைப்பாளியாகவே கடைசிவரை திகழ்ந்தார்.
ராஜம் கிருஷ்ணனின் நாவல்களில் மிக முக்கியப் படைப்பாக கருதப்படக்கூடியது ‘பாதையில் பதிந்த அடிகள்‘ நாவல் ஆகும். இது மணலூர் மணியம்மை என்னும் விட்டு விடுதலையாகி நின்ற ஒரு பெண் போராளியின் வாழ்க்கைக் கதை. இதை “வரலாற்றுப் புதினம்” என்றே ராஜம் கிருஷ்ணன் சொன்னார். வரலாறு உண்மை சார்ந்தது. புதினம் கற்பனையும் கலந்த சுவையானது. உண்மையையும் சுவையையும் ஒருசேர கையாள்வது சவாலான ஒன்று. மணியம்மை வாழ்க்கை என்றோ நடந்த ஒன்றல்ல. எழுபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அதிசயம் அது.
தினமணிக்கதிரில் பத்திரிகையின் இணைப்பு புத்தகத்தில் தொடராக வந்தது. ஓவியப் பேராசான் கோபுலு தன் தூரிகையால் மணியம்மையை உயிர்த்தெழச் செய்து நம் கண்முன் காட்டியிருப்பார். பிற புதினங்களைவிட, இப்படைப்பில் ராஜம் கிருஷ்ணனின் எழுத்து முதிர்ச்சியும் மூர்க்கமும் கொண்டு திகழ்கின்றது. மணலூர் மணியம்மையில், ராஜம் கிருஷ்ணன் தன்னையே மணியம்மையாகக் கண்டாரோ என்று கருதுமளவுக்கு உயிர்ப்புமிகு படைப்பாகப் படைத்துத் தந்து சென்றுள்ளார்.
நான் மிக ரசித்த இந்தப் படைப்பில் மணியம்மாளை ரத்தமும் சதையுமாக உலவவிட்டு, திருவாரூரைச் சுற்றி இருக்கின்ற அந்தக் கதாபாத்திரங்களை முன்வைத்து அவர் எழுதி அந்த புதின வார்ப்பை நீங்கள் முக்கியமாக வாசிக்க வேண்டும். உணர்வு கொப்பளிக்கும் புதினமாக ராஜம் கிருஷ்ணனால் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு சீர்மிகு புதினத்தை எழுதுவதற்கு எழுத்தாளனுக்கு ஏதாவது ஓர் உள்ளுந்துதல் காரணம் இருக்கக்கூடும். அதேபோல, புத்துயிர்ப்பு நாவலை டால்ஸ்டாய் எழுதுவற்கு இருந்த காரணம் மிகவும் ஆச்சரியகரமானது.
ரஷ்யாவில் 1898-இல் பனிரெண்டாயிரம் டுகோபார்ஸ் (Dukhobors) குடும்பங்கள் அங்கிருந்து அகதிகளாக வெளியேறி கனடாவில் தஞ்சம் புகும் அவலச் சூழ்நிலை தோன்றியது. ரஷ்யாவில் இருந்து அந்தக் குடும்பங்கள் கப்பல் ஏறி ஆறாயிரம் மைல் தூரம் பயணம் செய்யத் தேவையான பணமும் பொருள் உதவியும் தேவைப்பட்டது. அந்த உதவியைச் செய்தவற்காகவே டால்ஸ்டாய் தனது ஐந்தாவது புதினமாக Resurrection-ஐ எழுத முன்வந்தார். அந்நாவலுக்குக் கிடைக்கும் ராயல்டி தொகையை டுகோபார்ஸ் இயக்கத்திற்கும், அகதியாக செல்லும் மக்களின் வழிச்செலவிற்கும் பயன்பட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக உழைத்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க அப்புதினத்தை எழுதத் துவங்கும்போது டால்ஸ்டாயிக்கு எழுபத்தெட்டு வயது. பத்தாண்டுகாலம் அவர் புதினம் எதையும் எழுதவும் இல்லை. முந்தைய நாவல்களான ANNA KARENINA , WAR AND PEACE இரண்டும் மகத்தான வெற்றி பெற்ற புதினங்களாகும். ஆனால் புத்துயிர்ப்பு புதினத்தை படைத்த காலக்கட்டத்தில் டால்ஸ்டாயின் மனது ஆன்மீக விசயங்களில் அதிகமாக ஈடுபாடு கொண்டிருந்தது, அவர் நேரடியான மக்கள் பணியைப் பெரிதும் விரும்பினார். அதுவே மேன்மையானது எனக் கருதினார்.
யாருமறியாத புத்தம்புது களங்களையும், புதிய மனிதர்களையும் வாசகப் பரப்புக்குத் தருவதே இவர் புதினங்களின் நோக்கமாகும். இதுபோன்ற சிந்தனைப்போக்கைக் கொண்டவரே ராஜம் கிருஷ்ணன்.
பெண்ணியப் படைப்பாளிகள் என்றாலே குடும்பம் சார்ந்த கதை எழுதுபவர்கள் என்ற ராஜம் கிருஷ்ணன் கருத்தாக்கத்தை உடைத்தெறிந்தார். அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகளைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினார். நிறைய புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார். தென்னிந்திய மொழிகளையும், ஆங்கிலத்தையும் சுய முயற்சியில் கற்றார். ரஷ்ய மொழியையும் ஓரளவு அறிந்து வைத்திருந்தார். ஒரு புதினம் எழுத வேண்டுமெனில் அவர் தேர்ந்தெடுத்துக் கொண்ட உள்ளடக்கத்துடன் தொடர்புடைய இடங்களுக்குப் பயணம் செய்து, அந்த மக்களுடன் கலந்துறவாடிக் களப் பணியாற்றி எழுதிய முதல் பெண் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் தான்.
அம்மா ராஜம் கிருஷ்ணனின் ‘முள்ளும் மலர்ந்தது’ எனும் புதினம் பீகார் சம்பல் கொள்ளையர்களைப் பற்றியது. கொள்ளைக்கூட்டத் தலைவன் ‘டாகுமான்சி’யை சந்திக்க சம்பல் செல்ல தீர்மானித்ததும், அவர் கணவர் கிருஷ்ணன் தன் பணியிலிருந்து விலகி, அவருக்குத் துணையாக உடன் சென்றார். நானூறு கொலைகள் செய்த தாசில்தார் சிங்குடன் நான்கு மணி நேரம் உரையாடினார். இப்படிப் பல்வேறு விதமான கள அனுபவங்களைப் பெற்ற பிறகே முள்ளும் மலர்ந்தது புதினம் உயிர் பெற்றது. வாசகனின் உணர்வைத் தொட்டது.
ஷேக்ஸ்பியர் தன் வாழ்நாளில் முப்பத்தொன்பது நாடகங்களை எழுதியிருக்கிறார். இந்த நாடங்களை வரலாறு, நகைச்சுவை, துன்பியல், காதல் என நான்கு வகைகளாகப் பிரித்திருக்கிறார்கள். அவற்றில் ’கோடைக்கால நடுவில் கனவு வந்த இரவில்’ (A Midsummer Night’s Dream), சூறாவளி (The Tempest), வெனிஸ் நகர வியாபாரி (The Merchant of Venice) போன்ற நகைச்சுவை நாடகங்கள் மிகவும் புகழ்பெற்றவை.
ஏறத்தாழ ஐம்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்த ஷேக்ஸ்பியர் தன் வாழ்நாளில் சுமார் ஒரு மில்லியன் சொற்களை எழுதியிருக்கிறார்! இத்தகைய ஷேக்ஸ்பியர் எந்த ஆண்டு பிறந்தார்; எந்த ஆண்டு மறைந்தார்; ஏன் நாடகங்களை எழுதினார்; ஒவ்வொரு நாடகத்துக்கும் எவ்வளவு காலம் எடுத்துக்கொண்டார் என்பது பற்றி எந்த ஆய்வாளராலும் துல்லியமாக ஆராய்ந்து சொல்ல இயலவில்லை.
ஷேக்ஸ்பியரின் நாடகப் படைப்புகளில் எது மிகச் சிறந்தது என்று கேட்டால் என்ன சொல்ல முடியும்? ஷேக்ஸ்பியர் எழுதிய ‘ரோமியோ ஜூலியட்’ நாடகத்தில், ‘நீங்கள் என்ன பெயர் சொல்லி அழைத்தாலும் ரோஜா பூவின் வாசம் இனிமையாகவே இருக்கும்’ என்கிற ஒரு வாக்கியத்தைத்தான் அந்த வினாவுக்குரிய விடையாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஷேக்ஸ்பியரின் படைப்பில் எல்லாமே முத்துக்கள்தான். அதே போன்ற சிறப்புக்குரியவர்தான் நம் தமிழ்க்கவி மகாகவி பாரதியும்.
பாரதியின் வாழ்க்கைக் கதையைப் பலர் பல கோணங்களில் எழுதியுள்ளார்கள். ஆனாலும் ஒரு பெண்ணியப் பார்வையோடு எழுதியது ராஜம் கிருஷ்ணன்தான். நம் கூத்து, நாடகம், வியாசர், வில்லிபுத்தூரார் யாரும் செய்யாத வேலையைப் பாரதி செய்தான். பாஞ்சாலியைத் ‘தன் உணர்வோடு’ பேச வைத்தான் மகாகவி பாரதி. அதனால்தான், மூளையைக் கசக்கிப் பிழிந்து வடித்த மகாகாவியம் இது என்று பாரதியே பறைசாற்றுகிறான். அதனால்தான், பெண்ணியப் பார்வையோடு எழுதிய பாரதியின் “வரலாற்றுக் கதைக்கு” ‘பாஞ்சாலி சபதம் பாடிய பாரதி’ என்று அம்மா ராஜம் கிருஷ்ணன் தலைப்பிட்டார். இதன்மூலம், தன் பாரதி பற்றுக்கு நன்றி பாராட்டிக் கொண்டார்.
ராஜம் கிருஷ்ணன் 1963-ஆம் ஆண்டு படைத்த ‘குறிஞ்சித்தேன்’, புதின உலகில் அவருக்கெனத் தனி இடத்தைத் தந்தது. இந்த நாவலுக்கு முன்னுரை எழுதிய டாக்டர் மு.வரதராசன், குறிஞ்சித் தேன் நாவலை உரைநடைக் காவியம் என்று போற்றிப் பாராட்டுகின்றார். அதோடு வேகமாக மாறிவரும் நீலகிரி மலை மக்களின் வாழ்க்கையை முன்வைத்து “இயற்கையோடு ஒட்டிய வாழ்வையும் செயற்கையால் ஓங்கும் இடர்களையும் இணைத்துக் காட்டியுள்ளார் ராஜம் கிருஷ்ணன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதினத்தின் ‘பாரு’ என்னும் கதாபாத்திரத்தின் மீது தன் மனதைப் பறி கொடுக்கிறார். மேலும் அதுபற்றி மு.வ. அவர்கள், “நல்ல வேளை பாரு அமைதியாக நிலமகளின் மடியில் உயிர் நீத்தாள்” என்று சொல்கின்றார். அவள் உயிர் நீத்ததே மு.வ க்கு நிம்மதியைத் தந்திருந்தால், பாருவின் வாழ்க்கையை ராஜம் கிருஷ்ணன் படைத்தவிதம் எவ்வளவு உயிர்ப்பானது! என்பது நமக்குப் புரிந்து விடும்.
அன்றைக்குப் பெரும்புகழ் பெற்றிருந்த பேராசிரியர் முனைவர் மு. வரதராசனாரே சிலாகித்துப் பாராட்டுமளவுக்குத் தன்னுடைய எழுத்து வன்மையால் ராஜம் கிருஷ்ணன் உச்சம் தொட்டிருந்தார்.
தோழர் ஜீவசுந்தரியின் ’’பிரபலமான லட்சுமி, அனுத்தமா போன்ற பெண் எழுத்தாளர்கள் எல்லாம் தோழருடைய கருத்து மணிப்பிரவாள நடையிலும், பிராமண நடையிலும் பெரும்பாலும் எழுதிக் கொண்டிருந்த நிலையில் சாதாரண மக்கள் பேசும் மொழியில் எழுதியவர் ராஜம் கிருஷ்ணன் அவதானிப்பும் மிக முக்கியமானது.
ஆங்கிலப் பேராசிரியராக எனக்கு இங்கு அடிசன், ஷேக்ஸ்பியருந்தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள். அடிசனை நாம் நினைவு கூர்வதில்லை பெரும்பாலும். ஆனால், ஷேக்ஸ்பியரை நாம் மறப்பதே கிடையாது. Because addison spoke in the language of poets. Shakespeare spoke in the language of common men. கவிஞர்களின் மொழியில் அடிசன் பேசினான். ஆனால், சாதாரண மக்கள் மொழியில் ஷேக்ஸ்பியர் பேசினார். அதனால் அவர் நிலைத்து நிற்கின்றார் என்று சொல்லப்படுவதுண்டு. ஆங்கிலத்தில் மட்டுமன்று, உலகின் மூலையில், எந்த மொழியில் எழுதினாலும் மக்கள் மொழியைக் கைக்கொள்பவர்களே நிலைத்து நிற்க முடியும்.
ஆங்கிலத்தில் எழுதிய… எழுதும்… ஜேன் ஆஸ்டென், எமிலி ப்ராண்டே, உர்சுலா லே க்வின் , ஷிர்லி ஜாக்சன், மஹாஸ் வேதாதேவி, அம்ரிதா ப்ரீதம், இஸ்மத் சுக்டா வரிசையில் ராஜம் கிருஷ்ணனுக்கும் நிச்சயமான ஒரு நிலைத்த இடமுண்டு.
மிக அருமையான ஒரு வாய்ப்பாக இந்த நல்வாய்ப்பு இன்றைய காலை எனக்குக் கிட்டியது. மனம் ஒத்துப் பயணிக்கின்ற தோழமைகளைச் சந்திக்கின்ற வாய்ப்பு, புதிய எண்ணங்களை விதைக்கின்ற ஒரு நல்வாய்ப்பாக இந்தக் கருத்தரங்கத்தில் நீங்கள் அமர்ந்திருக்கின்ற இந்தக் காட்சி இவை அனைத்தும் மேலும் உற்சாகத்தைத் தருகின்றது. நிவேதிதா பதிப்பகத்திற்கு வாழ்த்துகள்! இத் தருணத்தை எனக்கு நல்கியதற்கு மனமார்ந்த மகிழ்ச்சியும் நன்றியும்.
* * * * *
No comment