கவிதைக் குரல் இதயத்திலிருந்து எழ வேண்டுமே தவிர புத்தியிலிருந்தல்ல - வால்ட் விட்மன் ‘சாகாமல் இருப்பதற்காக’ மட்டுமே கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கின்ற திருக்குமரனின் விழுங்கப்பட்ட விதைகள் கவிதைத் தொகுப்பினைச் செத்துச் செத்துத்தான் படிக்க வேண்டியிருக்கிறது. ஈரக்குரலையைப் பிழிந்தெடுக்கின்ற குற்ற உணர்வின் கனம் தாங்காத சுட்டுவிரலால் ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டுகின்றேன். ‘கண்ணீரோடடேதான் விதைத்தோம் கம்பீரத்தோடேதான் அறுப்போம்!’ எனும் அவரது அந்த வரிகளின் மேல் விழுகின்ற என் சொட்டுக் கண்ணீரில் பிரதிபலிக்கின்றது எனது கையாலாகாத பேடித்தனம். வாழ்வதற்கான எல்லா உரிமைகளையும் உடைய எம் இனத்தின் ஒரு பகுதி அடியோடு கருவறுக்கப்பட்டதை நான் வேடிக்கை பார்த்த அவலத்தை, நாளாந்த வாழ்க்கையில் எல்லாவற்றையும் ஒரு பசி ஏப்பத்தில் மறந்து போனதை, திருக்குமரனின் ஒவ்வொரு கவி வரியும், உந்திச் சுழியில் முள்ளாய்த் தைக்கிறது. ஐம்பது ஆண்டுகால விடுதலைப் போராட்டத்தின் தீரமும், பெருந்தியாகங்களும் பயனற்றுப் போனமைக்கு நானும் ஒரு மௌனசாட்சி எனும் துரோகத்தின் கொடுங்கயிறு என்னை மூச்சிறுக்குகிறது. நேற்றிருந்தவர் இன்றில்லை எனும் பெருமையினை உண்மையிலேயே உடையதா இவ்உலகு எனும் கேள்வி உறுத்த, உறவுகளை விட்டு, உயிர் நசிந்து, உடல் நொந்து, அயல் தேசமொன்றில், ஆன்மாவின் சுயபலம் ஒன்றில் மட்டுமே தொங்கிக் கொண்டுத் தக்கை வாழ்வு வாழ்கின்ற அவரது கவிதைக்குள் பயணிக்கிறேன். "கண்டங்களும் கடல்களும் கடக்கக் கடக்கத்தான் / திரும்பித் செல்ல வேண்டும் என்ற எண்ணம் / எம்முள் தீவிரமாகிறது!" என்கிற திருக்குமரனின் குரல் தனிக்குரலல்ல. போரின் எச்சிலென நிர்க்கதியாய்ப் புலம்பெயர்ந்து, தலைமறைவு வாழ்வு வாழ நேர்ந்துகொண்டிருக்கும், அத்தனை பேரின் ஒற்றைக் குரலும். ஒடுக்கப்பட்ட தேசத்தின் ஓட்டுமொத்தக் குரல், ஓடிப்பறக்கிறது காலம் எனும் கவிதையொன்றில் தெரிக்கிறது. என்றேனும் ஊர் திரும்ப நேர்ந்தால், ஊரின் நிலை எவ்வாறிருக்குமெனச் சொல்கையில், "நண்பர்கள் பெரும்பாலும், திக்கொன்றும் திசைக்கொன்றும் / கண்பார்த்துப் பேசேலாக் காலத்தில் இருப்பார்கள் / நல்லூர் நம்முடைய செனற் இன்றி வெறித்திருக்கும் / எங்கேனும் கள நண்பர் வீடென்று கண்டுவிட்டால் / அங்கேயும் படமும் மாலையுந்தான் மீந்திருக்கும்" எனும் வரிகள் வாழ்வதற்கான எந்தவிதப் பிடிப்புமின்றிச் சருகாய் நகருகின்ற வலியினைச் சொல்கின்றன. தொகுப்பின் கவிதைகளில் மரபின் சந்தமும், கோர்வையும் உணர்ந்த பின்பே, அவை அகவற்பாக்களெனவும், அறுசீர்விருத்தத்தில் அமைந்தனவென்றும் அறிந்தேன். ரஷ்யக் கவிதை உலகின் மிக முக்கியமான கவிஞர் மரீனா ஸ்வெட்டயேவாவினைப் பற்றிப் பிரம்மராஜன், "அலெக்ஸாண்டர் ப்ளாக் பயங்கர வருடங்கள் என்று அழைத்த ரஷ்யாவின் வரலாற்றுக் கட்டத்தில் கவி - சாட்சிகளாகவும், தேசத்தின் குரல்களாகவும், அதன் மதிப்பீடுகளை நிலைப்படுத்து பவர்களாகவும் இருந்த சிறு குழுவில் தன் தளர்வுறாத நேர்மையையும், திறன்களையும் வெளிப்படுத்தினார் மரீனா" எனச் சொல்லிவிட்டு, "தனது நாற்பத்தெட்டாவது வயதில், மனிதனால் பொறுக்க முடிந்த அளவு வாழ்க்கையின் வெளி விளம்பில் அதுவரை வாழ்ந்த மரீனா, 31 ஆகஸ்ட் 1941ல் தற்கொலை செய்து கொண்டார்" எனக் குறிப்பிடுகிறார். மனிதனால் பொறுக்க முடியாத வன்கொடுமைகளை, மனிதஉரிமை மீறல்களை, இடப்பெயர்வை, மரணங்களை, நிலமற்றுப் போவதை, முடமாக்குதலை, மொத்தத்தில் சாம்பலான ஒரு நிலத்தின் குரலைக் கவிதைகளாக்கியிருக்கிறார் திருக்குமரன். இதில் கவிதை பற்றிய கோட்பாடுகளோ அல்லது இவை நவீனக் கவிதைகளா எனும் கேள்விகளோ அர்த்தமற்றவை. எமிலி டிக்கின்ஸன் ழபைபiளேடிn க்கு எழுதிய கடித வரிகளாகப் பிரம்மராஜன் பதிவு செய்திருப்பதை இங்கு நினைவு கூர்கிறேன் : “If I read a book and it makes my whole body so cold that I know no fire can ever warm me, I know that is poetry” திருக்குமரனின் மனைவி எழுதிய கடிதங்கள் கவிதையும், நானும் மகனும் கவிதையும் ஒருபோதும் கதகதப்பு ஊட்ட முடியாத சவத்தின் சித்தரிப்பை நமக்குத் தருகின்றன. கணவன் விட்டுச் சென்ற செருப்பு முதல் கவிதையில் ஒரு வலி மிகுந்த குறியீடாகின்றது. அந்தச் செருப்பு கணவனது இருப்பைச் சொல்கின்ற ஸ்தூலப் பொருள் என்பதையும் தாண்டிப் பிறிதொரு கனமான தளத்திற்கு வாசகனைக் கூட்டிப்போகின்றது. மனைவி எழுதுகிறாள் - "நீ நாளாந்தம் போட்டுத் திரிகிற செருப்பு / அப்படியே இன்னும் வாசலில் கிடந்தது / இப்போது உங்கள் மகன் அதைக் கொண்டோடித் திரிகிறான் / மேசையில் வைக்கிறான் / கட்டிலில் வைக்கிறான் / சாமித் தட்டில் கூட ஒரு நாள் வைத்திருந்தான் / செருப்பை ஏன் இங்கெல்லாம் வைக்கிறாய் / எனக் கையோங்கினால் அப்பா / எனக்காட்டி அழ வைத்து விடுகிறான்" கவிதைகளில் பெரும்பாலும் உரைநடை தூக்கலான வரிகள் தான் - ஆனால் அதன் பின்னிருக்கும் வலி சத்தியமானது. தொகுப்பின் மிக முக்கியமான கவிதையென நானும் மகனும் கவிதையைச் சொல்லலாம். நாளைய தலைமுறையின் இன்றைய கேள்விகளுக்கான விடை நேற்றைய நிகழ்வுகளில் இருக்கிறது என்பதை மிக அழகாகச் சொல்கிறது இக்கவிதை. "ஒவ்வொரு மகனும் உன் போலவே / ஆயிரமாயிரம் கேள்விகளுடன்" என்ற வரிகளுடன் கவிதை முடிந்துவிட்டது. அடுத்த வரிகளின் விவரிப்புக்கள் அனாவசியம். ‘நிச்சயமின்மை’ எனும் சொல்லே இன்றைக்கு ஒவ்வொரு ஈழத் தமிழரது தலைக்கு மேல் ‘Damocles Sword’ ஆகத் தொங்கிக் கொண்டிருக்கின்றது என்பதையும், நடந்து முடிந்த தியாகங்களும், விடுதலைக்கான ஐம்பது வருடப் போராட்டங்களும், ‘வெறும் கனவாய்ப் பழங்கதையாய்ப்’ போயினவோ எனும் பெருந்துயரே புலம்பெயர்ந்து அலைகின்ற ஒவ்வொரு தமிழனின் துக்கம் என்பதனையும் திருக்குமரனின் அனைத்துக் கவிதைகளும் முகத்தில் அறைந்து சுட்டுகின்றன. வெறும் வலியை, வேதனையை, இருப்பின் கொடுமையினைப், பிரிவின் ஆற்றாமையை, வேர்களற்றுப் புலம்புதலைக் கவிதைக்குரிய ‘இலக்கணத்திற்குள்’ (அவை நவீனமோ, மரபோ), திருக்குமரனின் கவிதைகள் சொல்கின்றனவா என்பது பற்றி எனக்குக் கவலையில்லை. இவை அப்பட்டமான வலியைக், குமுறலை, துரோகமிழைத்த சக போராளியைக் கண்களைச் சந்தித்து, "மாற்றுக் கருத்தெண்டும் மயிரெண்டும் கதையளந்தே / காட்டிக் கொடுத் தழித்தோர் ஒரு பக்கம் / நீ வேறு / கூட்டிக் கொடுத்தெம்மைக் கொல்கிறாய் / வெடிபட்டு மண் வீழும் வீரம் உனக்கில்லை / அடிபட்டுச் சாகாதே" என்று நேர்மையாகச் சொல்கின்றன என்பதே எனக்கு முக்கியம். மனம் வெதும்பி, விரக்தியின் உச்சத்திலிருக்கின்ற ஒரு போராளியிடம் திருக்குமரனது இக்கவிதையொன்று ‘விடுதலைக்கான ராகமொன்றை’ மீண்டும் தயார் செய்யலாம்! நிசம் உணர்ந்தணிந்த நெருப்பாடை எனும் கவிதையில் திருக்குமரன் - "வெடித்த குண்டுகளின் / வீச்சில் சிதறிப்போய் / துடித்துக் கொண்டிருக்கும் துண்டுத் தசைகளிடை / சாதியினை மட்டும் சரியாகப் பிரித்தெடுத்து / நாலு சொல்லு பெண்ணியத்தை அதற்குள் / பிரட்டிக் குழைத்துவிட்டு / மாற்றுக் கருத்தாளன் / என்கின்ற மறைப்புக்குள் / மாற்றானின் திட்டத்தை மறைத்து மேட்டிமையில் / இது எங்கள் நாட்டுக்குரிய நல்ல கறி" எனத் தருவது சரியா? எனக் கேட்கின்ற இவரது கேள்வி மிக முக்கியமானது. இங்கு, இரத்தமும், சதையுமான ஒரு போராட்டத்தில் புத்தி ஜீவிகளின் பங்களிப்பை அல்லது அவர்களது நிலைப்பாட்டைத் தன் எளிமையான மொழியில், திடமாகக் கேள்விக்குள்ளாக்குகிறார். இப்படிப்பட்ட தொகுப்புகளுக்கு ‘வாழ்த்துரை’ அல்லது ‘விமர்சனம்’ என்கிற சொல்லே மிகப் பெரிய அபத்தம். ஒரு பகிர்தல் மட்டுமே சாத்தியம். கவிதைகள் கிளறிய எனது மனவோட்டத்தைக், குற்றவுணர்வின் மை கொண்டுக் கொட்டித் தீர்த்த சிறு பகிரல் மட்டுமே இது. தனது பிறப்பின் பேறாகத் தன் காலத்திற்குள் தன் தேசம் விடியலைச் சுவைப்பதைக் காணத் தவமிருக்கும் திருக்குமரனுக்கு, அவரது அந்தத் தளராத நம்பிக்கைக்குத், தோள் கொடுக்கும் ஒரு சகோதரி, சமயத்தில் அவரது ஒரு சொட்டு கண்ணீரைத் துடைக்கும் சுட்டுவிரல் - இவை மட்டுமே சாத்தியம் இப்போதைக்கு! செக்கஸ்லோவாகியாவின் நவீன கவிஞர்களின் ஒருவரான மிராஸ்லாவ் ஹோலூப்பின் ‘A History of Lesson’ என்ற கவிதையில் வருகின்ற ஒரு வரி உலகப் பிரசித்தம். அந்தக் கவிதையில் "ராஜ்ஜியங்களின் பெருமிதமான விவரணைகள், போர்கள், மரணதண்டனைகள் ஆகியவற்றின் விளக்கங்களுக்குப் பிறகு ஒரு குழந்தை கேட்கிறது" - அந்தக் காலத்திலும் கூட வலித்திருக்குமா? எல்லாக் காலங்களிலும் வலி இருப்பதுதான் - ஆனால் ஈழத் தமிழரின் வலி என்பது சாதாரணமானதல்ல; கவிதை அதன் ஒரு நக நுனியளவைச் சொல்ல முயல்கிற சிறு ஊடகம் மட்டுமே. படித்து முடித்தவுடன், மிக வலிக்கிறது திருக்குமரன். நெஞ்சு பொறுக்காத வலி... பகிர்ந்துகொள்கிறேன், குற்றவுணர்வின் முட்சிலுவையுடன்.... * * * * *
No comment