ஒவ்வொரு மனமும் ஒரு தனி உலகம் (cada cabeza es un mundo) (மா.அரங்கநாதன் அய்யாவின் காளியூட்டு புதினத்தை முன்வைத்து ஒரு பகிரல்)

ஒவ்வொரு மனமும் ஒரு தனி உலகம்
(cada cabeza es un mundo)
(மா.அரங்கநாதன் அய்யாவின் காளியூட்டு புதினத்தை முன்வைத்து ஒரு பகிரல்)
- தமிழச்சி தங்கபாண்டியன்

	கலையின் பிறப்புபற்றி மிகச் சிறந்த எழுத்தாளரும், பேராசிரியருமான நபக்கோவ் ஒரு நாட்டார் கதை மூலம் சொல்லியதை சற்றே தழுவி நம்மூர்க் கதைமூலம் முன்வைத்துத் துவங்குகிறேன்:
	"'புலி வருது, புலி வருது' என்று அலறும் ஆடு மேய்க்கும் சிறுவனை உண்மையிலேயே புலி வந்து அடித்துக் கொன்று சாப்பிட்ட நாளில் இலக்கியம் பிறக்கவில்லை. ஒரு நீதிதான் கற்பிக்கப்பட்டது. மாறாக, புலியே வந்திராதபோது, 'புலி வருது, புலி வருது' என்று சிறுவன் தன் கற்பனையில் புலியை உருவாக்கி அலறிய நாள்தான் இலக்கியம் பிறந்த நாள். அவன் அடிக்கடி பொய் சொல்லி ஏமாற்றியதால் அவனைப் புலி அடித்துச் சாப்பிட்டதென்பது தற்செயலானது. ஆனால், கலையின் மந்திரமென்பது, அவன் தன் கற்பனையில் திட்டமிட்டு உருவாக்கிய புலியின் நிழலில் தங்கியிருக்கிறது. அது, புலி பற்றிய அவனுடைய கனவிலிருக்கிறது. அவன் ஒரு மந்திரவாதி; ஒரு கண்டுபிடிப்பாளன். எனவே, அவன் ஒரு கலைஞன். அவனிடமிருந்தே கலை பிறக்கிறது". (சி.மோகன் கட்டுரைகள் - சி.மோகன் : 35) 
	இத்தகைய கலைஞர்கள், படைப்பாளிகளை மாதந்தோறும் அறிமுகம் செய்வதன் மூலம் இலக்கியத்தைக் கொண்டாடுகின்ற அற்புதமானதொரு மனோபாவத்தை, வாசகர்களிடம் முக்கியமான படைப்புக்களை அறிமுகம் செய்கின்ற வரவேற்கத்தக்க செயல்பாட்டை மாதந்தோறும் நடத்துகின்ற தமிழ்ப் புத்தக நண்பர்கள் அமைப்பிற்கு என் வணக்கமும் நன்றியும்.
	கிரேக்கத் தொன்மமான தியத்தில் பிளோட்டோ, "ஒரு ஆசிரியன் மாணவனைத் தேர்ந்தெடுக்கமுடியும். ஆனால் எந்த ஒரு நூலும் வாசகனைத் தேர்ந்தெடுப்பதில்லை" என்கிறார். உண்மைதான் - நாமே தேடிச்சென்று அடையவேண்டிய 'அனுபூதி' அல்லவா அது? அவ்வகையில் அய்யா அரங்கநாதனின் காளியூட்டு எனும் புதினத்தைத் தேடிச் சென்று துய்க்கின்ற அனுபவம் வாய்த்தது எனக்கு மகிழ்வும், மனநிறைவும்.
	ஞானம் சார்ந்த அவைதீகம், அழகியல், தமிழ் தொன்மப் பிடிப்பு, மதம் சாரா தென்நாட்டுத் தத்துவ விசாரம், பூரணம் - எனக் கனிந்து நிற்கும் அரங்கநாதன் எனும் இலக்கிய ஆளுமை இரண்டாயிரமாண்டு மரபின் தொடர்ச்சியுடன் நவீனத்துவத்தையும் இணைத்தவர்.
	அனைத்துத் தத்துவ மரபுகளிலும், (கீழைத்தேய, மேலைத்தேய நாடுகள், அரபுத் தேசம், ஐரோப்பிய கண்டம்) தமிழன் திளைத்து எழுந்தாலும், சமூக மாற்றமும், அதற்குக் காரணமான தனிமனிதனும் தனக்கென ஒரு தத்துவத்தைத் தேர்வது காலத்தின் கட்டாயமாகின்றது. அவ்வகையில் அரங்கநாதன் அய்யா, தனக்கெனத் தான் கண்டடைந்த 'இன்மை' என்கின்ற தத்துவத்தை, 'இருக்கலாம் - இல்லாமலிருக்கலாம்' எனும் சூட்சுமத்தை அடிநாதமாகக் கொண்டது அவரது காளியூட்டு. இயற்கையோடு இயைந்து நிற்கின்ற ஆதித் தமிழ் மரபின் வழியே பயணித்து, நாட்டார் தெய்வ மரபான 'பேய்ச்சியை' வழிபடுகின்ற காளியூட்டுத் திருவிழாவினை மையாக வைத்து, இப் புதினத்தில், வலிந்து அல்லாமல், அனுபவத்தின் உண்மையோடும், பொதுத்துவத்தின் கடமையோடும் தனக்கான தத்துவத்தைப், படைப்புத் திறனின் நுணுக்கங்களுடன் முன்னெடுக்கிறார் அவர்.
	"வேதம், வர்ணாஸ்ரம் அமைப்பு, உபநிஷத் இந்த மூன்றை மூர்க்கமாக எதிர்த்த மூன்று தத்துவங்கள் 1) உலகாயுதம், 2) சமணம், 3) புத்தம். ராமாயணத்தில் ஜாபாலி எனும் அமைச்சர் இந்தத் தத்துவத்தைச் சொல்கிறாராம் – 
	"யாருக்கு நிச்சயமாகத் தெரியும்/
	யாரால் உறுதியாகச் சொல்ல முடியும்?
	எப்போது இது பிறந்தது?
	எபபோது இந்த படைப்பு நிகழ்ந்தது?
	இந்த உலகம் படைக்கப்பட்ட பின்பு
	கடவுளர்கள் பிறந்தனர்:
	அப்படியெனில் யார் அறிவார்
	இது எப்போது எழுந்தது என்று?
	எப்போது படைப்பு எழுந்தது
	என்று எவருக்கும் தெரியாது
	அவன் இதை உற்பத்தி செய்தானா
	இல்லையா என்றும் தெரியாது
	சொர்க்த்திலிருந்து இதைக் கண்ட 
	அவனுக்கு மட்டுமே இது தெரியலாம்.
	ஒருவேளை அவனுக்கும் இது தெரியாதிருக்கலாம்". 
	சமணத்தை மிக விரிவாக எடுத்து வைக்கும் சிலம்பும், 'அருகனை' முன்னிருத்தும் 	அதன் செய்திகளும், கவுந்திஅடிகள் எனும் கதாப்பாத்திரமும் சமயக் கூறுகளைவிடத், தத்துவத்தை முன்னிறுத்துபவையே! காவியப்படைப்பில் தத்துவ விசாரணையை ஒரு அங்கமாக வைத்திருத்தல் தமிழின் இலக்கியப் பாராம்பர்யம் அல்லவா?" (தமிழரின் தத்துவமரபு - அருணன்) 
	அதனை முழுவீச்சில் அதி லாவகமாக, உருத்தாத, இயல்பான சம்பவக் கண்ணிகளுடனும், துருத்தி நிற்காத எளிமையான உரையாடல் கோர்வைகளுடனும், Numero Uno ஆகவும், Binaries ஆகவும் முத்துக்கருப்பன் எனும் கதாபாத்திரத்தை, சிவ.முத்துக்கருப்பன், சுடலை. முத்துக்கருப்பனும் எனும் Binaries ஆகவும் சித்தரித்து, மரபின் அச்சில் புதுமையின் சக்கரத்தினைச் சுழலச் செய்கிறார் அரங்கநாதன் அய்யா.
	பொதுவாகப் ஒரு புதினத்திற்குள் நுழைபவர்கள், பின்பாக அதனை அனுபவித்து உணர்ந்தபின், விமர்சனம் (அ) திறனாய்வு என்கிற அடுத்த தளத்திற்குச் செல்கையில் அதன் தொடக்கம், பின் கதைச்சுருக்கம், இறுதியாக நிறைவுப் பகுதி என நேர்கோட்டு முறையில் செல்வார்கள். நான் இதிலிருந்து சற்றே விலகி, புதினத்தின் நிறைவுப் பகுதியிலிருந்து (ஒரு வசதிக்காக Epilogue எனலாம்) துவங்கலாமென நினைக்கிறேன்.
	"எனது பெயர் முத்துக்கருப்பன். தகப்பனார் சிவதாணு - பிறந்தது சென்னை. எட்டு வயதில் இந்தப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டேன். தகப்பனார் பட்டாளத்தில் இருந்து காலமாகிவிட்டார். கோவிந்தன் நாயர் என்பவர் வீட்டில் - வீடு அல்ல ஓர் அறை - கொலைகாரன் பேட்டை என்ற சென்னைப் பகுதியில் - நான் இருந்தேன். காளியூட்டு நேரம் என்னை அவர் மேலூர் பக்கம் அழைத்து வந்தார். எதற்காக அழைத்து வந்தார் என்று எனக்குத் தெரியாது. அம்மன் திருவிழாவிற்கு இருக்கும் என்றிருந்தேன். அப்பா ஒரு தங்க நகையை அவரிடம் கொடுத்து ஊர் பேச்சியம்மனுக்குப் போட்டுவிடவேண்டும் என்று சொன்னது சிறிது எனக்கு விளங்கியிருந்தது.
	ஆனால் என்னை அழைத்து வந்த கோவிந்தன் ஊருக்குள் செல்லாமல் வேறு இரண்டு பேரிடம் என்னை ஒப்படைத்துவிட்டு நகையை மட்டும் எடுத்துக்கொண்டு செல்ல முயற்சிக்கையில் நான் அதைப் பிடுங்கி ஆற்றில் வீசிவிட்டு ஓடப்பார்த்தேன். அவர் விடவில்லை. அந்த இரண்டு பேரிடம் என்னைவிட்டு விட்டு போய்விட்டார். தேடிப்பார்த்தும் நகை கிடைக்கவில்லை. காட்டுப்புதூர் மலைப்பக்கம் இராப்பாடி குடும்பத்தாரிடையே சிறிது காலம் இருந்து பின்னர் மருத்துவாழ் மலை சித்தர் சாமியிடம் நான் சேர்க்கப்பட்டேன். மலையிலே என்னால் நிறைய படிக்க முடிந்தது - இராப்பாடியாகவே நான் படித்தேன்.
	இப்போது இங்கே நடந்த கூத்தால் ஒரு நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எனது இடத்தில் வேறொரு பையனைக் கொண்டு வந்து நிறுத்தப்பார்க்கும் போது நான் எல்லாவற்றையும் சொல்ல வேண்டி வந்துவிட்டது. அதுவும் நல்லதுதான்.
	இன்றைக்கு இப்படி தயார் செய்த ஒரு பையனை அழைத்து வந்து ஆற்றைத் தாண்டி வருகையில் தெரிந்துவிட்டது. என் சித்தப்பா பையன் முத்துக்கறுப்பனுக்கு வந்த ஆத்திரத்தைக் கண்ட கோவிந்தன் நாயர் பயந்துபோய் பின்வாங்கிய போது, தலைகுப்புற ஆற்றில் விழுந்துவிட்டார். கல்லில் தலைபட்டு அடி - போய்விட்டார் - ஆனால் யாரும் யாரையும் தாக்கவில்லை.
	சிவ.முத்துக்கறுப்பன் சொல்லாத, ஒரு வேளை சொல்லத் தெரியாத விஷயங்களும் உண்டு. (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 73,74)
	சிவ.முத்துக்கறுப்பன், அவன் தகப்பனார், ஆகியோர் பிறப்பதற்கு முன்பே, குற்றாலிங்கம், பெத்தாச்சி ஆகியோர் பிறப்பதன் முன்பே, சமஸ்தான மன்னர்களின் முடி சூட்டலுக்குப் பயந்து ஓடிய குடும்பம் காட்டுப்புத்தூர் பிரதேசத்திலிருந்தது. கந்தன் என்பவனின் முன்னோர் கதை அது. அவன் பிள்ளைகள் முத்தையா, மீனாட்சி ஆகியோருக்குக் கருங்குளம் தஞ்சம் கொடுத்தது. பப்புக்குட்டியின் உபயம் அது. அந்தக் குழந்தையின் பெயர் கூட அவர் கொடுத்தவைதாம்.
	அந்த ஊரிலேயே பப்புக்குட்டியின் உறவுக்காரர் என்ற பெயரோடு வளர்ந்து, திருமணம் நடந்து முத்தையா அங்கேயே தங்கிவிட மீனாட்சி மேலூர் வந்தாள். அன்றைய தினம் பேச்சியம்மாள் தான் கண்ட ஆற்றங்கரை காட்சியையும் அங்கே சம்பந்தப்பட்ட ஒருவனால் தான் நிர்மூலமாக்கப்பட்ட விஷயத்தையும் மீனாட்சி அத்தையிடம் மட்டுமே சொல்லிவிட்டு தன்னைப் பொசுக்கிக் கொண்டாள். காளியூட்டன்று பேச்சியம்மாள் நண்பகலில் ஆற்றங்கரையிலிருந்து திரும்பிச் செல்வதைக் கண்ட பப்புக்குட்டி மேற்கொண்டு மீனாட்சி அறிந்த விஷயத்தையும் தெரிந்துகொண்டு யாருமறியாது சிவ.முத்துக்கறுப்பனை மீட்டு கருங்குளத்திற்கு அனுப்ப வகை செய்தார். (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 75)
	பப்புக்குட்டி, குற்றாலிங்கம், மீனாட்சி, முத்தையா ஆகியோர் அறியாத விஷயங்களும் உண்டு. 
	மீனாட்சியும் பேச்சியம்மாளும் அறியாத விஷயங்களும் உண்டு. பேச்சியம்மாள் கத்திரிவயலில் இருந்தவாறு எல்லாரையும் - எல்லாவற்றையும் பார்த்துவிட்டாள் என்று கண்டுபிடித்து, அதற்கான வழிமுறைகளை நாயரிடம் சொன்னவர் பெத்தாச்சியா பிள்ளைதான்.
	பெத்தாச்சியா பிள்ளையும் அறிந்திராத சங்கதி உண்டு.
	ஊரிலே அத்தனை அன்புடன் எல்லாரிடமும் நடந்துகொள்ளும் அவர் - சாந்தமானவர் என்றும் பெயரெடுத்த அவர் ஏன் அப்படி என்று ஆழ்ந்து பார்த்தால் கூட இப்படி ஒரு குரூரம் ஏற்பட காரணம் தெரியவில்லை. யாருக்கும் விளங்காத ஒன்று. பெத்தாச்சிக்கும் தெரிந்திருக்காது - மனித குல பலகீனம்.
	எல்லாவற்றிற்கும் மேலாக அரச மரத்துத் துறையிலிருந்து முத்துக்கறுப்பன் தன்னை போற்றியின் வீட்டில் பார்த்துவிட்டானோ என்ற உறுத்தலும் இருக்கலாம் - சொல்ல முடியாது. 
	சுடலை முத்துக்கறுப்பனுக்குத் தெரியாத விஷயம் முக்கியமானது. (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 76)
	இராப்பாடியாக அவனிடம் அட்டிகை பற்றி சொன்னதும் ஆற்றங்கரையில் சந்தித்ததும் பப்புக்குட்டியா பிள்ளையின் அறிவுரையின் பேரிலும் எல்லாவற்றிற்கும் மேலாக மருந்துவாழ் மலை பெரிய சித்தர் சாமிக்கும் தெரிந்தே நடந்த விஷயம். தெரிந்தோ தெரியாமலோ நடந்த நிகழ்ச்சிகள் வாழ்நாளில் மறக்கமுடியாத காட்சிகளாக மாறின.
	ஊருக்குத் தெரியாத விஷயம் - மார்ஸ்டன் என்பவனிடம் செல்லம், கணபதி ஆகியோரைப் பற்றிச் சொன்னது சங்கரய்யர்.
	உங்களுக்கும் எனக்கும் மற்ற எல்லார்க்கும் தெரியாத விஷயங்கள் பல. அவை யாவும் பதிலை உள்ளடக்கிக் கொண்ட விஷயங்கள். அவை பிரித்துப்பார்க்க முடியாதவை. நல்லவை என்றோ கெட்டவை என்றோ அறியப்பட முடியாதவை. இதுவே வாழ்க்கை என்று சுட்டிக்காட்ட ஒரு போதும் போதுமானவையாக இருக்காது. தெரிந்து கொள்ள முடியாது என்றிருந்தாலும் தேடுதல் இருக்கும். என்றும் இருக்கும் அது. 
	பேய்ச்சி என்ற அந்த மேலூரில் அறியப்பட்ட தெய்வமும் சாந்தம் - குரூரம் - உண்மை - பொய் என்றெல்லாம் அறியவொண்ண மாட்டாத ஒன்றுதான்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 77)
	புதினத்தின் சாராம்சம் இதுதான் - "எதையும் செய்யவேண்டாம். இதுதான் என்று அதை அறிந்து கொள்வது மட்டுமே உண்மையான வைதிக எதிர்ப்பு ஆகும்" என்று அரங்கநாதன் அய்யா தனது பின்னுரையில் சுட்டுவதும் இதுதான்.
	அன்போடு இறைவனைப் புகழ்ந்தும் சமூக அநீதிகளையும் வழக்கமான மத வழிபாட்டு நெறிமுறைகளையும் விமர்சித்தும் எழுதிய, சித்தர் மரபை ஒத்த மிகப் பெரிய இந்தியக் கவிஞர் கபீர்.
	"உனக்காக நான் வாழ்கிறேன்,
	ஓ அல்லாஹ் இராமா
	உன்னுடைய அடிமைக்கு இரக்கம், காட்டு,
	என் தெய்வமே	
	மசூதிகளில் மட்டும் இறைவன் குடியிருந்தால்,
	இடையில் யாருடைய நிலம் உள்ளது?"
என்ற கபீரின் குரலின் இன்னொரு நீட்சியே, "அன்பிலார் நெஞ்சில் தமிழைப் பாடி அல்லல் நீக்க மாட்டாயா" எனும் பாரதிதாசனின் வரியில் தன் வாழ்வை ஒப்புக்கொடுத்த அரங்கநாதன் அய்யாவின் தொனியும்.
	"புனிதர்களே, இந்த உலகம் பைத்தியக்காரத்தானமானது என்று நான் கருதுகிறேன்" என்றும் மற்றொரு கவிதையில் சொல்கிறார் கபீர். இன்றளவும், இந்தக் குரல் ஒரு பின்நவீனத்துவக் கவிஞரோடு ஒத்துப்போகின்ற குரல். கபீரின் அன்புடை சரணாகதி நெஞ்சமும், அதேபோழ்து, மதமெனும் சங்கிலியைக் கட்டறுக்கும், சாதியத் துருவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பரிந்து கோபமுறும் நவீனத்துவமும் பின்னிப் பிணையுமொரு வெளிப்பாடு புதினத்தின் பின்வரும் பகுதிகள். 
	"மேலூரின் வடக்குப் புறமிருந்தது பேச்சியம்மன் கோவில். இந்தக் கோவிலுக்கு காட்டுப்புதூர் கருங்குளம் குடும்பங்கள் சொந்தம் கொண்டாடின. பன்னிரண்டு ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும் காளியூட்டிற்கு இரண்டு ஊர் மக்களும் இருக்கிற நெல்லை விற்றாவது நன்கொடை தந்தனர். பேச்சி அம்மன் மிகுந்த சக்தியுள்ள கடவுள் என்று பேசப்பட்டது.
	"சக்தி இல்லாத கடவுள் எது" என்று கேட்டுவிடுவார் குற்றாலிங்கம் பிள்ளை."
	குற்றாலிங்கத்தின் இக்கேள்வி மேலோட்டமாக வைதீகமாகப் பட்டாலும் அடிப்படையில் இது ஒரு அப்பட்டமான அவைதீகக் குரல்.
	இது ஒரு பின்நவீனத்துவக் கேள்வியும் கூட; அதனை அடுத்து வரும் பத்தியைப் பாருங்கள் –
	"அது பேய்ச்சி - நாமெல்லாம் பேயாகவும் கடவுளை அந்தக் காலத்திலிருந்தே கும்பிட்டு வாரோம். எல்லா நாட்டிலும் அப்படித்தான். நம்ம கனகசபை இதுபத்தி எல்லாம் எழுதியிருக்கான் - தெரியுமில்லா - இது வந்து 'வாக்தேவி'யாக்கும் அப்படின்னு சங்கரய்யரு சொல்வாரு - அது தப்பு - அண்ணாச்சி - தங்கச்சி அப்படின்னு நாம சொல்றது போலத்தான் பேய் பேய்ச்சி ஆனது."
	"அந்தக் கூட்டத்தில் மேலூர் சார்ந்த சேரிவாழ் மக்களும் இருப்பார்கள். இந்த 'பேய்' வணக்கமே அந்தச் சேரி வாழ்மக்களிடமிருந்துதான் வந்தது என்பதைக் கூட அறியா மாந்தர்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 35) 
	சமகால அவலத்தை," ஐயோ, இதுகள் இப்படியுமா இருக்குமென, மிக அழுத்தமாகப் பதிகின்ற பிராந்தியத் தமிழ்க் குரலிது. (இது என்பது அன்பின்பாற் சொல்லப்படுகின்ற கிராமத்து வழக்கேயன்றி இழிசொல் அல்ல என்பதைக் கவனத்தில் கொள்க) இதனைத் தமிழவன் மிக நுட்பமாக உணர்ந்து பின் வருமாறு பதிவு செய்கிறார்.
	"மா.அரங்கநாதனின் உள ஆளுமை அவரது பிறப்புப் பின்னணிதான். அவருடைய தமிழ் அவருடைய கிராமம் கொடுத்ததுதான். 1952 வாக்கில் நேசமணி தலைமையில் முன்னெடுக்கப்பட்ட தமிழ்ப் போராட்டம் ஆழமான பாதிப்பை மா.அரங்கநாதனுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். ஏனெனில் அவருடைய சமூகத்தினர் தமிழ்ப் போராட்டத்தில் நேசமணிக்கு உற்ற தோழர்களாய் இருந்தனர். மா.அரங்கநாதனைப்பற்றி முழுசாய் அறிய குமரி மாவட்ட வரலாறு தெரிய வேண்டும். மா.அரங்கநாதன் "மலையாளத்தமிழ் எழுத்தாளர்களுக்கு" எதிரான ஆளுமை. அதனாலேயே மா.அரங்கநாதனை அந்த மலையாளத்தமிழ் எழுத்தாளர்கள் பலர் எங்கும் குறிப்பிடுவதில்லை. 
	என்னைப் பொறுத்தவரையில் நேசமணி 1 கோடி சனங்களை பட்டம் தாணுப் பிள்ளையின் பிடியிலிருந்து காப்பாற்றி அவர்கள் மலையாளிகளாகாமல் தமிழர்களாக்கினார். (அக்கால காங்கிரஸ் தலைமை நெய்யாற்றின்கரைத் தமிழர்களை மலையாளிகளாக்கியதை மறக்கக்கூடாது). மா.அரங்கநாதன் தமிழ் இலக்கியத்தை "மலையாளத் தமிழ் எழுத்தளர்களிடமிருந்து" காப்பாற்றினார். நேசமணி சென்னையின் ஆட்சிக்குக் குமரி மாவட்டத்தைக் கொண்டுவந்ததைப்போல் மா.அரங்கநாதன் தமிழ்க் கற்பனையை சென்னையின் தொடர்பால் புதிய தமிழ்ப் படைப்பாய் உருவாக்கினார். இவை எல்லாம் தமிழ் அரசியலைச் சுற்றி நடப்பவையாகும்." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம் : 5,6)
	அரங்கநாதன் அய்யாவின் தத்துவம் எதிர்காலத் தமிழ் அரசியலுக்கு மிக முக்கியமான சாளரங்களைத் திறந்துவிடும் தன்மை வாய்ந்தது.
	"நல்லது - எல்லா பிரதேசங்களிலும் மேலூர், கீழுர் என்றும் தெற்கூர், வடக்கூர் என்றும் இருக்கலாம். ஆனாலும் இந்த மேலூர் மனித குல வரலாற்றின் ஒரு பகுதியை விண்டுவைக்கும் மாண்பைப் பெற்றுக்கொண்டுவிட்டது என்று சொல்ல வேண்டும். எல்லாக் கால கட்டத்திலும் மலையும், கடலும், வயலும் சார்ந்த இடங்கள் நம்மிடையே சிலவற்றைத் தோற்றுவித்து - தோல்விகண்டாலும் - படைப்பு ஒன்றை நம்மிடையே ஏற்படுத்திப் புதிய பொருளைத் தரும் ஒரு வாழ்வை, உலகிற்கு அளித்ததென்றால், இந்தப் பிரதேசத்தில் நிகழ்ந்த ஒன்றின் மூலம் வன்முறை எத்தனை தூரம் மனித இனத்தை பாதாளத்திற்கு அனுப்பி வேடிக்கை பார்த்தது என்று தெரிந்து கொள்ள முடியும். கனவுகளும் விடுதலை உணர்வும் எத்தனை மகோன்னதமான விஷயங்கள் என்று புரிந்துகொள்ள முடியும். அற்புதமோ சிவனருளோ என்று மலைத்து நிற்கும் விஷயங்கள் எங்கும் எப்போதும் நடந்து தான் வந்திருக்கின்றன. என்றாலும் இங்கு நடந்தவை மகோன்னதமானவை என்பதற்கு வேறு சில காரணங்கள் உண்டு. கடவுள் என்பது ப்றறி முழுதான அறிந்து மெளனமடைந்தோரும், அது பற்றி மூடத்தனம் மிகுந்தோரும் இந்த மண்ணைவிட்டால் வேறெங்கு கணிசமாக இருந்திருக்கிறார்கள். அருள் என்ற சொல் இங்கே புதிய தொரு பொருளைப் பெற்றுக் கொண்டது என்று சொல்லமுடியும்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 67) என்று அவர் சொல்கையில், "பிராந்தியங்களால் கட்டப்பட்ட இந்தியாதான் சாத்தியம். ஏக இந்தியா அல்ல. இந்தப் புது இந்திய அரசியலைத் - தமிழ்ப் பிராந்தியம் முன்வைத்த 'அன்பு', ஆவுடை, இன்மை, சங்க இலக்கியம், திருமூலர், பாரதிதாசன், அரங்கநாதன் - எல்லாம் எல்லோரும் முழுங்க வேண்டும்" எனும் தமிழவன் கனவு கைகூடும் எனப்படுகிறது.
	"தமிழ்த் தன்மையே தமிழிலக்கியத்தின் பிரதானமான குணம். தமிழிலக்கியத்தை தமிழின் விளிம்புகளான மலையாளக் கட்டுக்கோப்பை வைத்து எழுதும் குமரி மாவட்டத்திலேயே தமிழின் அசலான எழுத்தாளரும் உதித்திருப்பது முரண்நகைதான்." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம் : 8) எனத் தமிழவன் சுட்டுவது எவ்வளவு உண்மை!
	"இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சுச் சமூகக் கோட்பாட்டாளரான எமிலி துர்க்ஹைம் (Emile Durkhiem), அவருடைய உடன்பிறந்தாரின் மகனான மார்சல் மாஸ் (Marcel Mauss) இருவரும் மனிதர்கள் வகைப்படுத்திப் பார்க்கும் திறனானது நம்முடைய சமூகத் தன்மையின் (social nature) நீட்சியாகும் என்றனர். சமூகம் என்பது வகைப்படுத்தும் சிந்தனைக்கான ஒரு மாதிரியாக (model) இல்லை; சமூகத்தில் உள்ள சமூகப்பிரிவுகளின் வகைகளே வகைப்படுத்தும் முறைக்கான அடித்தளம் என்றனர். சமூக வகையினங்களே தர்க்கரீதியான முதல் வகையினமாகும். மனிதர்களுக்குள் ஏற்பட்ட வகைப்பாடுகளே முதல் வகைப்பாடாக அமைந்தது. இதன்பின் மற்ற வகையினங்கள் ஒன்றிணைக்கப்பட்டன. அரை நூற்றாண்டுக்குப் பின் அமைப்பியல் மானிடவியலைத் தோற்றுவித்த கிளாட் லெவிஸ்ட்ராஸ் (Claude Levi-Strauss) மனிதர்களிடம் காணப்படும் வகைப்படுத்தும் மரபென்பது உலகளாவியது என்றார். இது உலகளாவிய நிலையில் காணப்படுவதற்குக் காரணம் மனித மனம் தன்னேற்பாடாகக் கொண்டுள்ள எதிரிணைச் (binary opposition) சிந்தனை வழி ஏற்படும் 'ஆழ்நிலை அமைப்புகள்' (Deep strctures) ஆகும். இவை புறநிலையில் வெளிப்படும்போது காண்பவையே நம்முடைய வகைப்பாடுகள் ஆகும் என்பார். மனிதர்களின் அறிவுசார்ந்த செயல்பாடுகள் எல்லாவற்றையும் காணும்போது ஒழுங்குபடுத்துதல் (ordering) எனக்கூடிய ஒரு பொதுத்தன்மை காண்ப்படுகிறது. இப்பிரபஞ்சத்தில் மனித மனம் ஒரு பகுதியாக உள்ளது என்றும் இப்பிரபஞ்சங்கூட குழப்பத்தன்மை ஏதுமில்லாமல் ஓர் ஒழுங்கு நிலையில் பேணுவதும் இத்தகு ஒழுங்கு அமைவதற்குக் காரணமாகிறது." (சமூக-பண்பாட்டு மானிடவியல் - ஜான் மோனகன், பீட்டர் ஐஸ்ட்)
	இப் புதினத்தில் வருகின்ற முத்துக்கருப்பன் தொடர்ந்து அரங்கநாதன் அய்யாவின் சிறுகதைகள், படைப்புக்கள் அனைத்திலும் இருப்பவன்தான். நம் தமிழ்ச் சமூகத் தன்மையின், குறிப்பாகக் குமரி நாட்டுப், பஃறுளி ஆற்றுச் சமூகத்தின் நீட்சிதான் அரங்கநாதன் அய்யா தன்னை முத்துக்கருப்பனாக வகைப்படுத்திப் பார்க்கும் திறன்.
	இந்த மரபென்பது உலகளாவியது எனும் லெவிஸ்ட்ராஸின் கூற்றை அரங்கநாதன் அய்யா தனது ஜேம்ஸ் டீனும் செண்பகராமன் புதூர்க்காரரும் எனும் சிறுகதையில் - வெவ்வேறு கலாசச்சாரத்தைப் பிரதிபலிக்கக் கூடிய இருவரையும், இணைந்து பயணிக்கச் செய்து ஒரு கோட்டில் இணைக்கிறார்:
	"அவர்கள் இருவருமே நட்சத்திரங்களைப் பார்க்கும் பழக்கம் உள்ளவர்கள். மலை, ஆறு, குளம்... இப்படி, இதைப் பார்ப்பதினால் பலவிதமான உண்மைகள் அவனுக்குத் தெரிகிறது என்று நான் கருதுகிறேன்" (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம்)
	லெவிஸ்டாஸ் சொன்ன ஒழுங்குபடுத்துதுதல் எனும் பொதுத்தன்மைதான் அந்த இரண்டு பேரையும் ஒரு Universal Man ஆக ஆக்குகிறது.
	இதைப் போலவே காளியூட்டிலும் ஒரு மலையும், ஆறு பார்க்கும் காட்சி முன்வைக்கப்படுகின்றது.
	"ஒரு குழந்தை போல ஆறு ஓடிக் கொண்டிருக்கிறது. மலையிலிருந்து தோன்றிவிடுகின்ற ஆற்றிற்கு ஓர் அழகு. இந்த ஆறும் அப்படித்தான். வடக்கேயுள்ள மலையில் தோன்றி தெற்கே கடலில் சேர்கிறது. கிழக்கே மருந்து வாழ்மலை. அந்த மலையிலிருந்து கொண்டும் இந்த ஆற்றின் கதியைப் பார்க்க முடியும்.
	சிவ.முத்துக்கறுப்பனுக்கு அந்த வாய்ப்பு இருக்கிறதென்றால் சுடலை முத்துக்கருப்பனுக்கு ஆற்றங்கரையிலிருந்து கொண்டு மலைகளைப் பார்க்கும் வாய்ப்பு"
	எஸ்.சண்முகம் தனது நேர்காணலில் கேட்கிறார், "எல்லா கதைகளிலும் முத்துக்கருப்பன் வருகிறார் அல்லவா? சில கதைகளில் முத்துக்கருப்பன் இரண்டாக வந்திருக்காரா?
	இருக்கும், சில கதைகளில் இருக்கும். மகத்தான ஜலதாரைல பேரே சொல்லவில்லை. கருப்பன் சாவடின்னு அந்த ஊர் அழைக்கப்படலாம் என்பதால், அந்த ஊருக்குக் காரணமானவன் முத்துக்கருப்பன்னு ஆகிவிட்டது. இந்த மாதிரி சில கதைகளில் வந்திருக்கிறது.
	முத்துக்கருப்பன் பிரதியில் இரட்டையா எழுதியிருக்கீங்களா?
	இரட்டைகளாகவும் இருக்கிறது.
	அப்ப இரட்டைகளை யூஸ் பண்ணுகிற யுக்தி எப்படி?
	ஒரு குறிப்பிட்ட கதையில மட்டும் முத்து என்று ஒருவனும், கருப்பன் என்று ஒருவனும் வருவதாக சொல்லியிருக்கிறேன். மற்றபடி, தமிழ்நாட்டிலே முத்துக்கருப்பன் என்ற பெயர் பொதுவாக இருக்கிறதால அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தேன்.
	ஏன் இந்த முத்துக்கருப்பன் பெயரையே..?
	அதுதான் சொன்னேனே.. பொதுவாக தமிழ் சொசைடியில் எங்கே எடுத்துக் கொண்டாலும், கன்னியாகுமரியோ, திருநெல்வேலியோ, ராமநாதபுரமோ, மதுரையோ, திருச்சியோ, விழுப்புரம் வரையுமே எங்கே எடுத்துக் கொண்டாலும், முத்துக்கருப்பன் பிள்ளை, முத்துக்கருப்பன் செட்டியார், முத்துக்கருப்பன் நாடார் - என்று இந்தப் பெயரில் எல்லோருமே வந்திருக்கிறார்கள். ஸோ, அதில் ஒரு ஒன்நெஸ் கிடைக்குமோ என்ற நம்பிக்கை எனக்கு இருந்திருக்கலாம்." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம் : 43)
	"சில விஷயங்களை நானாகச் சொல்ல முடியவில்லை அப்ப முத்துக்கருப்பன் எனக்கு ஹெல்ப் பண்ணுகிறான்" என அரங்கநாதன் அய்யாவே ஒத்துக் கொண்டுள்ளார். அதுவே அவரை ஒரு Universal Man ஆக வெளிப்படுத்தப் பயன்படுகிறது.
	இப்புதினம் ஒரு வாசகியாக எனக்கு ஒரு நிறைவையும், படைப்பனுபவத்தின் விகாசமான பகிரலையும் சற்று அதீதமாகவே தந்தது. ஏனென்று யோசித்தால் - அதற்குரிய பதிலையும் அய்யாவே தருகிறார். 
	"புதுமைப்பித்தன் கதைகளில் வரக் கூடிய ஒன்றுபட்ட தன்மை... ஓ... இது நம்ம ஊராச்சே, இது நம்ம இடமாச்சே... இந்த சாப்பாட்டை நாம் சாப்பிட்டிருக்கிறோமே... இதுபோன்ற ஒன்றுபட்ட தன்மையை மெளனியின் கதைகளில் பார்க்க முடியவில்லை." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம்: 30) என்கிறார்.
	எனக்கும் பேச்சி, முத்துக் கறுப்பன், இது எல்லாமே நம்ம ஊர், நம்ம இடம், என்கிற ஒன்றுபட்ட தன்மையைத் தருகிறது.
	ஆனால் அது மட்டும்தானா, அந்தத் தமிழ்த் தன்மை, தமிழ் sensibility மட்டும் தானா இதன் பலம்? இந்தப் புதினத்தின் கட்டுமான அடித்தளம் அதுதான். ஆனால் அது தொடுகின்ற உயரம் அசாரணமான உலகப் பொதுத்துவம் உடையதல்லவா? அதன் விஸ்தீரணம் வைதீகத்தை அடிவேரறுத்து, the journey is more important than the destination என்பதை 'முன்னால் அந்த மலை இல்லை' என்கிற இன்மைத்துவத்தை, Phallic Symbol க்கு எதிராகத் தென்னாட்டின் ஆதி ஆவுடையை நிறுத்துகின்ற தத்துவத்தை தனது கதாபாத்திரங்கள், அவர்தம் உரையாடல்கள் (குறிப்பாகப் பப்புக்குட்டி, மீனாட்சி) மூலம் "கண்டறியாதன கண்டேன்" எனத் தருவதல்லவா?
	அரங்கநாதன் அய்யாவின் இலக்கிய கோட்பாடு என்னவென்றால் "உள்ளுணர்வு சார்ந்த ஒரு கலாச்சார அறிவை அல்லது புரிந்து கொள்ளலை" ஒரு படைப்பனுபவமாக தமிழ் அழகியலோடும், நவீனத்துவத்துடனும் முன் வைத்தல். இதுதான் வனப்பேச்சியை, முத்தாலம்மனை, கன்னிமார்களை, சீலைக்காரியை "எஞ்சோட்டுக்காரிகளாக" எண்ணும் என்னை அவரிடம் ஈர்க்கிறது. ஆனால் ஈர்ப்பது மட்டுமே ஒரு படைப்பின் பணியல்ல - கட்டி இழுத்து, கழுத்தைத் திருப்பவிடாமல் அதனுள் அமிழ்த்தி இறுக்கி, அதன் சுகமோ, துக்கமோ - ஒரு உண்மை அனுபவத்தை மாந்தத் தருவது. அது இப்பிரதியில் எனக்கு எங்கு கிடைக்கிறது?
	"The pleasure of text" என்பதைத் தாண்டி "the desire for the text" என்பது இப்புதினத்தில் எனக்கு எங்கு நிகழ்கிறது?
	"தொல்லுலகில் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளாகத்தான் பெண் தெய்வ வழிபாடு மாறி கடவுள் ஆண்மகனாக தெரிய வந்தார் என்று சொன்னார்கள். இந்த சமஸ்தான மண்ணில் அதை ஒப்புக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தண்ணீரால் மட்டுமே ஆட்கொள்ளப்பட்ட இடந்தவிர மாற்ற எல்லா பிரதேசங்களும் அன்னை வழிபாட்டில் ஒன்றையொன்று மிஞ்சின. தானாகத் தோன்றியதாகையால், அந்த இயற்கை வழிபாட்டிற்கு எந்த எதிர்ப்புமில்லை. (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 47) - இது தமிழ்த் தொன்மம் சார் வாழ்வின் ஒருகீற்று என்றால் –
	"தாடகை மலைப்பக்கம் கணியக்காரர் உலவினர். காட்டுப்புதூர் பக்கம் மாடுகள் மேய்ந்தன. மேலூர் பக்கம் உழுதனர். எல்லாரையும் பாலித்த அருள் அந்த அம்மை. கணியக்காரர் மந்திரத்தில் வல்லுநர். அவர்களில் சிலர் சித்துகளில் இறங்கி நகரங்களுக்குச் சென்று அங்கே அவர்கள் பெயர் பத்திரிகைகளில் வரும் அளவிற்குப் பிரசித்தி பெற்றனர். தன்னை ஆட்கொள்ளாத மந்திரம் வேறு யாரைச் சேரும்?" - இது அதன் வலிமையின் உரத்தோடு அதனை உயரத்தாண்டும் ஞானம்.
	மேற்சொன்ன பத்தியில் உள்ள அந்தக் கடைசி வரி தான் என்னை அமிழ்த்தி, அடித்துப் போடுகின்ற அனுபவம். 
	"தன்னை ஆட்கொள்ளாத மந்திரம் வேறு யாரைச் சேரும்?" 
	இந்த ஒரு புள்ளியில் பெரியாரும், திருமூலரும் ஒரு சேரச் சந்திக்கிறார்கள். தன்னை ஆட்கொள்ளாத உதவாக்கரை மந்திரம் - வெங்காயம் எனலாம் பெரியார். "தெய்வம் அவதாரம் எடுத்து வருவதில்லை. தானாகவே தோன்றும்" - எனலாம் திருமூலர். "வண்டே, நாங்களெல்லாம் உண்மையைத் தேடி வீணாய்ப் போனோம். நீயல்லவா அதைக் கண்டு விட்டாய் நேரடியாக" - எனத் தானாகவே வருகிற ஞானம் - எனலாம் காளிதாசன். இந்த "வாழ்க்கை சார்ந்த இன்மை" தான் ஞானம் என உலகளாவிய உண்மையைச் சொல்வதுதான் - மதம் சார்ந்த இன்மை அல்ல - ஒரு பொதுத்தன்மையை அரங்கநாதன் அய்யாவின் அனைத்துப் படைப்புகளுக்கும் தருகின்றன - குறிப்பாக, அவரது இந்தப் புதினத்திற்கும். 
	இந்த அவைதீக ஞானத்தினாலேயே அவர் நவீனத் தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளியாகவும் கொண்டாடப்பட வேண்டியவர். இதைத் தானே தனது முன்னுரையில் சா.கந்தசாமியும், "வாழ்க்கையைப் போலவே எளிதாகவும் - புரிவது மாதிரியே புரிபடாமலும் இருப்பது. அறிந்ததையெல்லாம் அர்த்தமிழக்க வைப்பது. புதிதாகப் பொருள் கொள்ள வைப்பது...
	அகத்தை அறிகிற போது புறம் தான் வசப்படுகிறது", என்கிறார்.
	'ஆன்மாவைப்' பற்றி ஆதித் தமிழன் சிந்தித்தவனல்ல நடைமுறை வாழ்வியல் தத்துவவே ஆதித் தமிழரின் மரபு. "இன்னாது அம்ம இவ்வுலகம் இனிய காண்க அதன் இயல்புணர்ந்தோரை" என்று உணர்ந்து வாழ்ந்தவன் அவன்.
	இப்புதினத்தில் "தலையெண்ணி பாகம்" என்றொரு வழக்கம் பற்றிய குறிப்புண்டு. "பெத்தாச்சியா பிள்ளையின் தமக்கையொருத்தி "தலையெண்ணி பாகம்" வேண்டுமென்று தன் பெற்றோர் மீதே வழக்கொன்று தொடர்ந்து குடும்பச் சொத்தில் அதிக பாகத்தைப் பெற்றிருந்தாள்.
	"அந்தப் பிரதேசத்தில் வழக்கிலிருந்த ஒரு முறை விசித்திரமாகவும் அதே சமயம் ஏதோ ஒருவகை நியாயத்தைக் கொண்டிருப்பதாகவும் தெரிந்தது. ஒருவரது பிள்ளைகள் கல்யாணமாகிக் குழந்தை குட்டி என்று ஆகிவிட்டபின்னர் குடும்பச் சொத்தைப் பங்கிட வேண்டும் என்ற நிலை வருகையில், அந்தப் பாகம் ஒவ்வொருவருக்கும் இருக்கிற குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அமையும். மூத்தவனுக்கு ஒரு குழந்தையிருந்து அவன் தம்பிக்கோ தங்கைக்கோ நாலு குழந்தையிருந்தால், அதிக குழந்தை உள்ளவர்கள் அதிக பாகத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இதை தலையெண்ணிப் பாகம் என்றார்கள். (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 50) மிக முக்கிய மரபு வழக்கொன்றைக் மேற்கண்டவாறு குறிப்பிடுகிறார் இப் புதினத்தின் போக்கில் அரங்கநாதன் அய்யா.
	இந்த இயல்பான வாழ்வியல் அறம் தொலைகின்ற, தடம் புரள்கின்ற கணங்களைச், சம்பவங்கள் வாயிலாகக் கோர்த்து சொல்கையில் நமது தமிழ்ச் சமூக மரபின். வழக்கங்கங்களுக்கும், தனி மனிதச் செயல்களுக்குமடையே உள்ள உறவையும் உட்புகுத்தி, இப்புதினத்தை readable as well as a questioning work of art ஆகச் செய்கிறார். இதன் மூலம் தமிழ்ப் பிரதேச அமைப்பும், உணர்வும், செழுமையும் என்றால் இதன் வலிமையான இலக்கு உலகம் தழுவிய ஞானமும், கனிதலும், பூரணத்தை உணர்கின்ற இன்மையும்.
	இயற்கை, மனிதன், சிந்தனை ஆகியவற்றின் பொதுத்தன்மைகளைத் தர்க்க ரீதியான உரையாடல்கள் மூலம் ஆய்வதல்ல இவரது தத்துவங்கள். கதாபாத்திரங்கள் பேசுவதைவிடச் சம்பவங்களில் பங்கேற்பவர்களாகவோ, சாட்சிகளாகவோ, வேடிக்கை பார்ப்பவர்களோ புனையப்பட்டு அதன் வாயிலாகவே கேள்விகளும், தேடலும், ஞானமும் கைவரப் பெறுகின்றன. இப் புதினத்தில் ஒரு மாடு இறந்துவிட, அதனை அப்புறப்படுத்த மறுக்கும் குழுவனைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. அச்சம்பவத்தையொட்டி ஒரு தெளிதலும், புரிதலும், கனிதலும் - பயணம் என்பது அதற்கான தயாரித்தலே எனும் ஞானமும் சொல்லப்படுகிறது.
	"குளிக்க வந்தவர் ஒருகணம் சமைந்து நின்றார். "இதுக்காகத்தான் ஒன்னை வைச்சிருக்கோம்" என்ற வாக்கு எத்தனையோ விஷயங்களைத் தனக்கு அறிவுறுத்தியதாக பிறகு கூறினார். 
	அது உண்மைதான். நிலமுள்ள விவசாயிகள் செய்த அபத்தமான - அசுரத்தனமான - ஆனால் அவசியம் என்று கருதப்பட்ட அநியாயம். நிலமற்றவன் நமது உறவினனாக இருந்தால் கூட வேறு வேலை செய்யட்டும். பரம்பரை பரம்பரையாக அவர்கள் அந்தந்த வேலையைச் செய்து கொண்டிருக்கட்டும் என்ற மனநிலை நிலமற்றவர்களை என்ன பாடுபடுத்தியிருக்கும் என்று கேட்டுக்கொண்டார்.
	இந்த செத்தமாடு இழுக்கும் குழுவனும், இராப்பாடியும் பனையேறி பிழைப்போரும் நிலமுள்ளவராக இருந்துவிட்டால் - அப்படி இருந்தவர்கள் தாமே என்றும் கேட்டார் - ஏதோ திடீரென மாறிவிட்ட ஒரு பேராசிரியர் போல கேட்டார்.
	நாடு விடுதலையடைந்த பின்னரே பயணம் உண்மையில் ஆரம்பிக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டார் போலும்.
	இந்தப் பயணத்திற்குச் சாலைகள் கிடையாது. மண் போட்டு சாலைகளை உண்டு பண்ணுவதுதான் பயணம்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 46)
	இதில் பெரிதான தர்க்க மனோபாவம் இல்லை. ஒரு திடுக்கிடல், திகைத்தல், தேடுதல், உணர்தல், ஞானம் என்கிற எளிய உத்தி தான் இருக்கிறது.
	போலவே "எல்லாம் எனது ஊர் - எல்லாரும் என் சொந்தக்காரர் என்று தானாக எல்லாரிடமும் வரும் கடவுள் குணத்தை கொண்டிருக்க வேண்டிய ஒரு கூட்டம் - எப்படி ஆயிற்று - ஏன் ஆயிற்று - கேள்விகளை மட்டும் கேட்டிருந்தால் கூட போதுமானதாக இருந்திருக்கும். பதில் வேண்டாம். அதற்குக் கூட வக்கற்று விட்ட பாட்டன்மார் செய்தவை எப்படி எப்படி ஆட்கொண்டு விட்டது - அந்நிய ஆட்சி - என்றெல்லாம் சொல்லத்தெரிகிறதல்லவா - இதைப்பற்றி கொஞ்ச நஞ்ச எண்ணமாவது ஏற்பட்டதுண்டா?" (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 57) என்பதிலும் ஒரு ஆற்றாமை, ஆதங்கம், அதே சமயம், "யாதும் ஊரே" என்ற கணியனாரின் பரந்த மானுடப் பார்வையைக் கடவுள் குணமெனச் சுட்டும் தரிசனமும் இருக்கிறது.
	புதினம் நடக்கின்ற கதைக்களம் சுதந்திரத்திற்கு முன்-பின் என்கின்ற விரிவான பின்புலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. தேச விடுதலைக்குப் பின் ஊர் திரும்புகின்ற குற்றாலிங்கம் இப்போது பிற விஷயங்களில் கவனம் செலுத்தகிறார். அவற்றில் மலை வாழ் மக்கள் குறித்த அவரது கரிசனம் மேலூர் வாசிகளைப் பின்வருமாறு ஆச்சர்யப்படுத்துகிறது.
	"நேதாஜியைப் பற்றிப் பேசக் கூடியவர் என்பதுதான் பொதுவாக குற்றாலிங்கம் பிள்ளையைப் பற்றி மேலூர் அறிந்த விஷயம். விடுதலைப் போராட்டம் பற்றிப் பல்வேறு சங்கதிகளைச் சொன்னவர்தாம் அவர். இப்படி இவர் அடிப்படையிலேயே வேறு விஷயம் பேச வேண்டிய அவசியம் என்ன என்பது போல ஊர்க்காரர் பார்த்துக் கொண்டனர். மலைவாழ் மக்கள்தாம் மாடுகள் மேய்த்தனர் - கடலில் மீன் பிடித்தனர் - உழவைக் கண்டு பிடித்தனர் - சரிதான் - யார் இல்லை என்றார்கள் - ஒவ்வொரு இடத்திலும் கொஞ்சம் மாறி இருந்தாலும் அடிப்படை இதுதான் - மனித குல வளர்ச்சி சமாச்சாரம் அல்லவா இது - உண்மை - அதைப் பற்றி இப்போது என்ன வந்தது? இத்தனை காலமும் வராத ஒன்று. அதுதான் புரியாத ஒன்றாக இருந்தது. (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 40)
	குற்றாலிங்கம் காளியூட்டு பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். இந்தப் பூசனை காலங்காலமாக நடந்து வந்ததென்றால், அதன் காரணம் இந்த ஊர் மக்கள் விவசாயத்தைப் பற்றியும் குடும்பங்கள் பற்றியும், வரவிருக்கிற மாதங்களின் காலநிலை பற்றியும் பேச ஒரு வாய்ப்பைத் தருவதற்காகத்தான் என்றார்.
	அந்த வாய்ப்பு சரியானபடி நிறைவேற்றப்பட்டால், அது மேலான ஒரு நிலைக்கு நம்மை எடுத்துச்சொல்லும் - அது தவிர மற்றவை நம்மை பாதாளத்திற்கு அனுப்புகிற வெறும் சடங்குகள் தாம் என்றார்.
	கற்ற கல்வி மூலமாக வந்தடைந்தவை என்று அவரது கூற்றை சொல்ல முடியாது. சொல்ல முடியாத விஷயங்கள் பல இப்படித்தான் வெளிவரும் என்று சொல்லிக் கொள்ளலாம்." (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 41)
	நம் இனக்குழுவின் தொன்மம், இயற்கைத் திணை வாழ்சார் பின்புலம், விவசாயம் செய்கின்ற சமூகத்திலும் பொருளியிலில் ஏற்றத்தாழ்வு, பெளதீக உலகோடு இயைந்திருத்தல் - அதே சமயம் 'இன்மை'க்கான தேடல்- இவற்றின் கலவையாகக் குற்றாலிங்கத்தின் கூற்றைக் காணலாம். மிகத் தீவிரமாக வெறும் சடங்குகளென மாறிவிடும் அபாயமிருப்பதைச் சுட்டுகின்ற அதி நவீன அவைதீக மனமும், கூடவே பகுத்தறிவினால் முற்றுமுணர முடியாத அனுபவ ஞானமும், இப் புதினத்தினைக், கூட்டு மரபின் உன்னதத்தையும், தனி மனித மனதின் தென்னாட்டு சிந்தாந்தமுணர்ந்து கனிதலையும் மிகச் சரியானதொரு கலைப்படைப்பாக மாற்றுகின்றது.
	"காரணம் எதுவும் இல்லாம - பிடிபடாம - ஆனா தானா தோணி ஒரு அமைதியைக் கொடுக்கிறதைத்தான் கடவுள்னு சொல்லிக்கிட்டு வாரோம் - எப்பவும் அப்படித்தான் இருக்கப்போறோம்"
	"கோமரத்தாடிக்காரங்களிலிருந்து இராப்பாடி வரை இந்த சாமி ஒரே மாதிரி பேசுவாரு"
	"இராப்பாடியே இந்தச் சாமியாகவும் இருக்கலாம்". (காளியூட்டு - மா.அரங்கநாதன் : 49) 
	புதினத்தில், ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரம் பேசுவது போலல்லாமல், மேற்சுட்டியது போல பல தெறிப்புக்கள் இருக்கின்றன. இதனை நாவலாசிரியரின் குரலாகவே நான் உணர்கிறேன். "இராப்பாடியே இந்தச் சாமியாகவும் இருக்கலாம்" என்கிற அந்த துலக்கமற்ற, ஆனால் உறுதியான பரப்பு தான் - அந்த hypenated space தான் - அதில் இயங்குவதுதான் அரங்கநாதன் அய்யாவின் பலமும், உத்தியும்.
	"இந்தத் துணைக் கண்டத்தில் தோன்றிய எந்தத் தத்துவத்தையும் தமிழர்கள் அறியாமலில்லை. அவற்றை ஆராயாமல் இல்லலை. மணிமேகலையும். நீலகேசியும் அதற்கான இலக்கியபூர்வமான சரித்திரப் பதிவுகளாக உள்ளன. சமயங்கள் எனப் பேசப்பட்டடாலும் அவரவர் கடவுள் குறத்த பெருமைகளையும். சடங்கு சமபிரதாயங்களையும் அவை வாதித்துக் கொண்டிருக்கவில்லை. நவீன உலகின் தத்துவத் துறை இப்போதும் எந்தெந்தக் கூறுகளைத் தர்க்கித்துக் கொண்டிருக்கிறதோ அவற்றையே அன்றைக்கு விவாதித்திருக்கிறார்கள்" - எனத் தமிழர்கள் குறித்துப் பெருமிதப்படுகிறார், அருணன். (தமிழரின் தத்துவமரபு - அருணன்)
	அவ்வகையிலேயே, ஆவுடை என்கிற தென்னாட்டுத் தத்துவத்தையும் முன்வைத்து, ஒரு நவீன படைப்பாளிக்குரிய கூர்மையான, விசாலமான, சமகாலச் சிக்கல்களுக்கும் பயணிக்கிறார் அரங்கநாதன் அய்யா.
	"ஒன்று நிச்சயம். மனிதர்கள் எப்போது மதங்களின் பிடியிலிருந்து விலகி தத்துவத்தைச் சார்ந்து நிற்கிறார்களோ - நம்பிக்கையின் பிடியிலிருந்து தப்பி பகுத்தறிவின் வசம் வந்து சேருகிறார்களோ - அப்போதே நாகரீகம் தொடர் வளர்ச்சியைக் காண்கிறது. ஐரோப்பிய கண்டத்திலும் மதங்கள் இருந்தன. ஆனால், தத்துவஞானிகள் அவற்றை மட்டும் சார்ந்து நிற்கவில்லை. தத்துவத்தை ஒரு தனித்த அறிவுப் பிரிவாக வளர்த்ததார்கள். அதனால்தான் அங்கே தத்துவம் வளர்ந்தது. அதைத் தொடாந்து விஞ்ஞானம் வளர்ந்தது. தொழிற்புரட்சி நடந்தது. ஒரு புதிய சமூகம் பிறந்தது. இந்த மண்ணில் அது நடக்காமல் நிலப்பிரபுத்துவ சமூகமாகவே முடங்கிப் போனதற்கான முக்கியமான காரணம் தத்துவம் தனித்து வளர்கப்படாமல் மதங்களுக்குள் - குறிப்பாக சைவ, வைணவ மதங்களுக்குள் - கரைந்து போனது" - என்று அருணன் மேலை நாடுகளின் போக்கிலிருந்து இந்தியத் தத்துவ மரபைப் பிரித்துக்காட்டுகிறார்.
	ஆனால் அரங்கநாதன் அய்யா இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறார். தத்துவம் - குறிப்பாக ஆதித் தமிழர் வாழ்வில் சங்க காலத்திற்கு முன்பாகவே, தொல்காப்பியருக்கு முன்பாகவே, இந்த மண்ணுக்கென்று ஒரு சித்தாந்தம் இருந்திருக்கின்றது. தானாகவே வருகின்ற ஞானம் தானது என்கிறார் அரங்கநாதன் அய்யா.
	அவரது இந்தப் போக்கு எனக்கு தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் கூற்றை நினைவூட்டியது. டாக்டர். இராதாகிருஷ்ணன், தாஸ்குப்தா ஆகியோரது மாணவரான அவர், பின்னாட்களில் இவர்களை மிகக் கடுமையாக விமர்சிக்கின்ற மார்க்சியப் விமர்சனப் பார்வையுடையவராகத் தன்னைச் செதுக்கிக் கொண்டவர்.
	மிகக் குறிப்பாக சட்டோபாத்யாயா "கடவுள் என்ற கருத்து தோன்றுவதற்கு முன்னிருந்த நாத்திகவாதம் என்று ஒன்று இருந்தது - அது தாமிர இரும்புக் கருவிகள் தோன்றுவதற்கு முன்னிருந்த விவசாயப் பொருளாதாரத்தின் விளைபொருள் ஆகும். இதற்கு லோகாயதா என்று பெயர். இதன் பொருள் உலகத்தை அது உள்ளவாறே புரிந்து கொள்வது என்பதாகும். இது மாய வித்தைகளையும் மந்திரங்களையும் தன்னகத்தே கொண்டு இருந்தது. இதனை ஜார்ஜ் தாம்ஸன், ஜோசப் நீடாம் போன்றவர்களின் நூல்களைக் கொண்டு ஆசிரியர் விளக்கிக் காட்டுகிறார். இந்தப் பகுதிகள் ஒரு கருத்தியல் சிந்தனை என்பது எப்படி ஒரு பொருளாதார நடவடிக்கையில் பின்னிப் பிணைந்துள்ளது என்பதை வாசகர்களுக்கு மிகத் தெளிவாக விளக்கு கின்றது" - என அவரது பங்களிப்பு குறித்து பதியப்பட்டுள்ளது. (தமிழரின் தத்துவமரபு - அருணன்)
	இந்த 'லோகாயதா' தான் அரங்கநாதன் அய்யாவின் இன்மைக்கு அருகில் வருகின்ற தத்துவ மரபு என நான் கருதுகின்றேன். 'வாழ்க்கை சார்ந்த இன்மை' என்பது 'லோகாயதா' தான். அதனையே முத்துக்கருப்பன் மூலமாகச் சொல்கிறார். இதற்கு அய்யா தருகின்ற விளக்கம் அபாரமானது.
	"அவனுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தை வைத்துத்தானே சொல்ல முடியும். ஒரு கிரியேட்டிவ் லிட்டரேச்சரோட கிரியேட்டிவ் இலக்கியப் பண்பே இதுதானே. உங்களுக்குத் தெரிந்த ஒரு விஷயத்தைக் கொண்டு இதுவரை சொல்லாத ஒரு விஷயத்தை சொல்கிறோம். அதை அவன் சொல்கிறான். தேரோட்டம், தேர் போகிறது, விழா எடுப்பதெல்லாம் அந்த ஊர் வழக்கம். ஒரே கலகலப்பாக இருந்தது, இப்போது அந்தக் கலகலப்பு இல்லை. அசைவின்மையை எப்படிச் சொல்ல முடியும்? அசைவின் மூலம்தான் சொல்ல முடியும். ஒண்ணுமே இல்லாத ஒன்றை அணில் ஓடுவதன் மூலமாக இன்னொன்றைச் சொல்வதுதான். இந்தக் கவிதைப் பண்பு மனசை ரொம்பக் கவர்ந்தது. பூங்குன்றனார், அணிலாடு முன்றிலார் இன்னும் ஒன்றிரண்டு பேர் எல்லாருமே ஒரே ஒரு கவிதைதான் எழுதியிருக்கிறார்கள். இவர்கள் பேர்கூடத் தெரியாது. இது இன்மையைப் பற்றியுள்ள சமாச்சாரம்தான். இது எனக்கே தெரியாமல் உள்மனதில் இருந்திருக்கலாம். இது ஒரு வெளிப்பாடு." (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம் : 24)
	வெறும் தத்துவ விசாரம் மட்டுமா காளியூட்டு? ஒரு திருவிழாவினை குவிமையப்படுத்திச் சம்பவங்களின் கோர்வையை அதில் கரை தட்டி நிற்கச் செய்வதன் தாத்பர்யம் என்ன? அரங்கநாதன் அய்யாவே அதற்கான விடையையும் தருகின்றார்:
	"காளியூட்டு என்பது ஒரு கிராமத்துத் திருவிழா. அந்த விழாவைப் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அந்தத் திருவிழாவைப் பற்றியே ஒரு நாவல் எழுதணும் என நீங்கள் எண்ணியது ஏன்?" எனச் சண்முகம் தனது நேர்காணலில் கேட்க, அதற்கு,
	"முதல் காரணம், கிராமங்களிலுள்ள ஆட்களுக்காகவே ஏற்படுத்தப்பட்ட ஒரு கோயில். அந்த கோயிலில் நடைபெற்று வருகிற திருவிழா. இது நாஞ்சில் நாடு முழுவதும் நடக்கக்கூடிய திருவிழா. திருநெல்வேலியிலும் நடக்கும் காளியூட்டுன்னு பேரு. காளிக்கு நாம உணவு கொடுக்கிறோம். மழை பெய்யாத காலத்தில் பன்னிரண்டு வருஷத்துக்கு ஒரு தடவை விழா நடத்துவாங்க. மூணு நாள் நடத்துவாங்க. திருவாதிரை நட்சத்திரத்துல ஆரம்பிச்சு பூசம் நட்சத்திரம்வரை நடைபெறும். 'ஆதிரை சிவனுக்கு பூசம் சேயோனுக்கு' பழமொழி சின்னப் பிள்ளைகளுக்குக்கூடத் தெரியும். காளியூட்டு சமயத்தில் ஒரே சாதி மக்கள்தான் இங்கே கூடுவாங்க. ரொம்ப தயவுபண்ணி ஆதிதிராவிடர் மக்களை வெளியே உக்காரும்படியா சொல்லுவாங்க. பிராமணர்கள் வரமாட்டார்கள். பகல், ராத்திரின்னு மூணு நாட்கள் இந்த விழா நடக்கும். வைதீகச் சாயல் துளியும் இருக்காது. இந்த விழா முடிந்தவுடனேயே, அநேகமாக மழை பெய்யும். ஒரு தடவை மழை பெய்யுறத நான் பார்த்திருக்கிறேன். அதுக்கு காரணம் என்ன்னா அப்ப கத்திரி வெயில் முடியும். அதுக்கப்புறம் மழை பெய்யதானே செய்யும். அதை நியாயப்படுத்தலை. மழை பெய்யத்தான் செய்யும். மழை பெய்யுற காலத்தல விழாவை ஆரம்பிக்கிறாங்க. அந்த கிராமத்தில் உள்ளவர்களிடம் இருக்கிற சாதிவெறியும், வைதீக மனப்பான்மையும் பிராமணர்களைவிட அதிகம். அதைத்தான் சொல்ல வந்தேன்," எனப் பதிலளிக்கிறார்.
	வைதீகம் என்பது மனப்பான்மை, அது பிராமணர்களிடம் மட்டுமே இருப்பதல்ல என்கின்ற அதி நவீன மனதின் படைப்புச் செறிவே காளியூட்டு. இதுவே புதியதொரு கோணத்தை இப்புதினத்திற்குத் தருகிறது. 
	இப்புதினம் பக்க அளவில் சிறியதுதான். 79 பக்கங்கள் தான். ஆனால் அளவல்ல ஒரு புதினத்தின் வீர்யத்தைக், காத்திரத்தைத் தீர்மானிப்பது. கால அளவில் நீண்டதொரு கதைக் களம், மேலூரின் மாந்தர்கள், அவரது வாழ்வில் நேர்ந்த சம்பவங்கள் இவற்றின் வாயிலாக இப் புதினத்தைச் செதுக்க அரங்கநாதன் அய்யா காலம் சார்ந்த கதைசொல்லல் எனும் உத்தியைப் பயன்படுத்துகின்றார்.
	"கதை சொல்லி சம்பவங்களை அவை நிகழ்ந்த காலத்திலிருந்தோ அல்லது கொஞ்ச காலம் கழித்தோ அல்லது நீண்ட காலத்துக்குப் பிறகோ குவிமையப்படுத்தலாம். சம்பவம் நிகழ்ந்த அந்த நேரத்தில் குவிமையப்படுத்துபவருக்கு என்ன தெரிந்ததோ அல்லது அவர் என்ன நினைத்தாரோ அல்லது காலத்தால் தள்ளி நின்று பார்ப்பதால் கிடைக்கும் அந்தப் பின்னறிவு அனுகூலத்தோடு அவர் (கதை சொல்லி) விஷயங்களைப் பிறகு எப்படிப் பார்த்தாரோ அவற்றின் மீது குவி மையம் பிரயோகிக்கப்படலாம்.
	கதை சொல்வதற்காகக் காலம் சார்ந்த குவிமையப்படுத்தல் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு கதையாடலின் விளைவுகளில் மிகப்பெரிய வேறுபாட்டை உண்டாக்குகிறது. எடுத்துக்காட்டாகத் துப்பறியும் கதைகளில் குவிமையப்படுத்துபவருக்குப் புலன் விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும் என்ன தெரிந்ததோ அது மட்டுமே விவரிக்கப்படும். விசாரணையின் முடிவைப் பற்றிய தகவல் உச்சகட்டத்திற்காகப் பாதுகாத்து வைக்கப்படுகிறது" என்கிறார் ஜானதன். (இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர் : 144,145)
	இப்போது நான் உரையின் துவக்கத்தில் ஆரம்பித்த நிறைவுப் பகுதிக்கு வரலாம். விசாரணையின் முடிவைப் பற்றிய தகவல்கள் இங்கும் உச்சகட்டத்திற்காகப் பாதுகாத்து வைக்கப்படுகிறது - ஆனால் அது ஒரு உத்தி என அறியாமலேயே வாசகர்களாகிய நமக்கு ஒவ்வொரு கட்டத்திலும் என்ன வேண்டுமோ அது மட்டுமே தரப்பட்டது. காளியூட்டுத் திருவிழாவிலோதான் உச்சகட்டமான திருப்பங்களுக்கான முழுத் திருப்தியுமடைகிறோம் நாம்.
அடுத்ததாக, பார்வைக் கோணம் - யார் பார்க்கிறார்கள்?
	"கதையாடல் குறித்த விவாதங்கள் 'கதை சொல்லப்படும் பார்வைக் கோணம் (point of view)' பற்றி அடிக்கடிப் பேசுகின்றன. ஆனால் பார்வைக் கோணம் என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்துவது, யார் பேசுகிறார்கள்? மற்றும் யாருடைய பார்வை முன்வைக்கப்படுகிறது? என்ற இரு வெவ்வேறான கேள்விகளைக் குழப்பிக் கொள்கிறது. ஹென்றி ஜேம்ஸின் நாவலான 'மேஸீ தெரிந்துகொண்டது (What Maisie knew)' என்பதன் கதைசொல்லி ஒரு குழந்தை அல்ல; ஆனால் மேஸீ என்ற ஒரு குழந்தையின் பிரக்ஞையின் ஊடாகவே நாவல் தன்னுடைய கதையை வெளிப்படுத்துகிறது. மேஸீ கதை சொல்லி அல்ல; 'அவள்' என்று படர்க்கையிலேயே அவள் வர்ணிக்கப்படுகிறாள். ஆனால் நாவல் பல விஷயங்களை அவளுடைய பார்வையிலேயே வழங்குகிறது. எடுத்துக் காட்டாக, அவளைச் சுற்றியுள்ள வயது வந்தோர்களுக்கிடையேயான உறவுகளின் பாலியல் பரிமாணம் அவளுக்கு முழுக்கப் புரிவதில்லை. கதையாடல் குறித்த கோட்பாட்டாளர்களான மீக்கே பல் (Mieke Bal) மற்றும் ழெரர் ழெனெத் (Gerard Genette) போன்றோரால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு கலைச்சொல்லைப் பயன்படுத்த வேண்டுமானால் இந்த நாவலின் கதை அவள் வழியாகக் குவிமையப்படுத்தப்படுகிறது. இங்கு அவருடைய பிரக்ஞை அல்லது நிலையின் ஊடாகச் சம்பவங்கள் குவிமையப்படுத்தப்படுகின்றன. 'யார் பேசுகிறார்கள்?' என்ற கேள்வி 'யார் பார்க்கிறார்கள்?' என்ற கேள்வியிலிருந்து வேறுபட்டது. யார் பார்வைக் கோணத்திலிலிருந்து சம்பவங்கள் குவிமையப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றன? குவிமையப்படுத்தப்படுபவர் கதை சொல்லியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். பல மாறுபடும் நிலைகள் இங்கே உள்ளன" என்று தொடர்கிறார் ஜானதன் கல்லர். (இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர் : 144) 
	இங்கு, முத்துக்கருப்பனது பார்வைக் கோணத்திலிருந்து புதினம் விவரிக்கப்படுகிறது. இடையிடையே பல கதாபாத்திரங்கள் பேசலாம் - பேசுகிறார்கள். ஆனால் "யார் பார்க்கிறார்கள்?" என்ற கேள்வி தான் இங்கு மிக முக்கியம். அவ்வகையில், முத்துக்கருப்பனே முன்னிலை பெறுகின்றான். அவனது பிரக்ஞையினூடாகவே புதினம் தன்னுடைய கதையை வெளிப்படுத்துகிறது.
	"அப்போது பொங்கல் கழிந்து இரண்டு மூன்று நாள்கள் ஆகியிருக்கும். அவன் பக்கத்தூருக்கு ஆற்றைக் கடந்து கோய்க் கொண்டிருந்தான்" என்று சுடலை முத்துக்கறுப்பனிடமிருந்து துவங்குகிற புதினம், 
	"அவன் தன்னையே பார்த்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தான்" என்று சிவ முத்துக்கறுப்பனோடு முடிகிறது.
	79 பக்கங்களில் "தமிழின் உயிர்த்துவம்" அனைத்தையும் பொதிந்து இப் புதினத்தைப் படைத்திருக்கிறார். இது சுருக்கமல்ல - செறிவு. 
	இதனைச் "சுருக்கமாக எழுதி இருக்கிறீர்களே உங்கள் படைப்புக்களை" என எஸ்.சண்முகம் கேட்க, அதற்கான பதிலாக,
	"நான் சாண்டில்யனோ, வை.மு.கோதைநாயகியோ இல்லை. இன்னும் பத்து பக்கம் வேணுமா? பிரஸ்ல உக்கார்ந்துகிட்டு கொடுங்க பேப்பரன்னு சொல்லி, இன்னொரு பத்து பக்கம் எழுதித் தருவதற்கு நம்மால முடியாது." என்கிறார் அரங்கநாதன் அய்யா.
மேலும்,
	"அந்த சுருக்கத்துக்குக் காரணம் இதுதானா? இல்ல, உங்க சிந்தனை முறையிலேயே அந்தச் சுருக்கம் இருக்கிறதா?" எனச் சண்முகம் கேட்க,
	"ஹெமிங்வே நூறு பக்கத்துல நாவல் எழுதிக் கொடுத்துட்டு பதிப்பாளர்கள் 'ஒரு பேரா சேர்க்கணும்'னு சொன்னபோது, 'ஒரு வரிகூட சேர்க்க முடியாது'ன்னு சொன்ன மாதிரி நம்மால முடியாது.
	புத்தகத்தை நாம் படிக்கிறோம். புத்தகமும் நம்மைப் படிக்கிறது என்று ஆங்கில அறிஞர் ஒருவர் சொன்னார். அதுமாதிரி ஞானக்கூத்தன் கவிதையைப் படித்தாலோ அல்லது வேறொருவர் கவிதைகளைப் படித்தாலோ அது என்ன பண்ணியது என்பதை நான் சொல்றேன். அதை விமர்சனமாகவும் எடுத்துக்கலாம்" எனப் பதிலளிக்கிறார். (இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்மகம் : 59)
	இந்தப் புத்தகமும் என்னைப் படித்தது - இன்னும் சொல்லப் போனால், என்னைத் தேடி வந்து படித்தது. அது தானாகத் தேடி வருகின்றதொரு வரம் - தனியாகத் திளைத்து எழுகின்றதொரு தியானம். தனது நேர்காணலில் அய்யா ஒரு நிகழ்வினை நினைவு கூர்கின்றார்.
	"முதல் முதலில் ப்ரான்ஸ் காஃப்காவினுடைய நூல் ஆங்கிலத்தில் வந்தபோது அதை புதுமைப்பித்தன் படித்துவிட்டு கநாசுவிடம் கொடுத்தாராம். கநாசு அதைப் படித்துவிட்டு, சிதம்பரத்துக்குப் போய் அதை மெளனியிடம் கொடுத்தாராம். நீங்கள் படித்துப் பாருங்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு வந்ததாக அவரே எழுதி இருக்கிறார். மெளனி அதைப் படித்துவிட்டு," நீ எல்லாம் இதை ஏன் படிக்கிறாய்? காஃப்காவானவன் எனக்காக வேண்டியல்லவா எழுதி இருக்கிறான்" என்றாராம்.
	நானும் சொல்வேன் - நீங்களெல்லாம் ஏன் இதனைப் படிக்கிறீர்கள்? அரங்கநாதன் அய்யாவானவர் எனக்காக வேண்டியல்லவா எழுதி இருக்கிறார் என்று.
	ஏனெனில் - நான் ஒரு பிச்சி - வனப் பேய்ச்சியின் பிச்சி.
	ஆக, பேய்ச்சி தான் என்னைப் படித்தாள் - நான் வெறுமனே அருவாக் கருப்பன்களுக்கான காட்டையல்லவா பார்த்துக் கொண்டிருந்தேன். 
	அட - அருவாக் கருப்பன் கூட முத்துக் கருப்பன் தானே!

உதவிய நூல்கள் :
•	இன்மை-அனுபூதி-இலக்கியம் மா.அரங்கநாதன் - எஸ்.சண்முகம்
•	இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர், தமிழில் ஆர்.சிவகுமார்
•	தமிழரின் தத்துவமரபு – அருணன்	
•	சி.மோகன் கட்டுரைகள் - சி.மோகன்
•	சமூக-பண்பாட்டு மானிடவியல் - ஜான் மோனகன், பீட்டர் ஐஸ்ட்

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *