கண்விழிக்கக் காதலுற்றேன் இப் ‘பூங்குவளைப் போதில்’ – ராஜி பார்த்தசாரயின் நூலிற்கு எழுதிய முன்னுரை

'ராஜி' என நான் அன்போடு கூப்பிடும் ராஜி பார்த்தசாரதியின் புற உலகம் கணினிகளானது என்றாலும், அவரது அக உலகம் பாரிஜாதம், தொட்டாச்சிணுங்கி, செம்மயிற்கொன்றை எனும் பூக்களோடும், மரங்களோடும், தாவரங்களோடுமானது.  கூடவே தோழமையுடனானதும்.  வாழ்நிலைகள் எதுவாயினும் ஒரு பூவை உற்று நோக்கி, மெய்மறந்து முகரும் அந்த ஒரு அற்புத நொடி நம்மில் எத்தனை பேருக்கு இந்த அவசர உலகில் கிட்டியுள்ளது? ராஜிக்கு அது வாய்த்திருக்கிறது.  பால்யத்தின் வாசனை அவருக்கு மலர்களின் மணமாகவும், மரங்களின் தொடுதலாகவும், தாவரங்களின் பச்சயமாகவும் மட்டுமே பதிந்திருக்கிறது.  அதனை ஒரு தரவுத் தளமாகப் பகிருகின்ற ஆய்வுப் பின்புலம் அவரது கல்விப் பணியின் 'நுண்மான் நுழை புலத்தால்' அவருக்கு ஏற்கனவே இருப்பது கூடுதல் சிறப்பு.
	நூலின் தனிச்சிறப்பு - பழந்தமிழரது செவ்விலக்கியப் பரப்பின் பல்வேறு மலர்களைக், குறிப்பாக ஐந்துவகைத் திணை நிலங்களை, மலர்களை, தித்திக்கும் அவற்றின் தமிழ்ப்பெயர்களை இளைய தலைமுறைக்கு, மிகவும் சுவைபட, அவற்றின் தாவரவியல் பெயர்களோடு அறிமுகப் படுத்தியிருப்பது.  பெப்சியும், ஆர்கிட் மலர்களும், காகிதத்தில் ஜிகினா பதித்த பூக்களுமான இன்றைய இளைஞர்களின் தக்கை உலகத்தினை, இவரது 'உவப்பூட்டும் உழிஞைப்பூக்களும்', அதன் சங்க இலக்கியப் பெயரான 'பூளைப் பூக்களும்', காயலின் புன்னைப் பூக்களும், கபிலரது குறிஞ்சிப் பாட்டின் தும்பைப் பூக்களும், நிச்சயமாக உயிரூட்டி மலரச் செய்யும்.  இந்நூலிற்கான மூவரது ஆய்வும் என்னைப் பிரமிக்கச் செய்கிறது.  குறிப்பாக, ஒரு தாவரம் அல்லது மலர் பற்றிய விவரிப்பில், அவற்றின் தற்போதைய நிலம் அல்லது ஊர், அவை தலவிருட்சங்களெனில், அந்தத் தலம் பற்றிய கூடுதல் செய்திகள் - இவற்றைத் திரட்டுவதற்கான உழைப்பு.
	திணைப்பூக்கள், காப்பியப் பூக்கள, இலக்கணப் பூக்கள், குறிஞ்சிப் பூக்கள் என விரியும் இப்புத்தகம் மூன்று பேராசிரியைகளின் இயற்கை ஈர்ப்பையும், தமிழ் ஆர்வத்தையும் புலப்படுத்துகிறது.  சுவாரஸ்யமானதொரு நடையில், ஆங்காங்கே தாகூரின் "தனிமலர் முட்களின் பன்மைக்கு ஏக்கம் கொள்தல் என்ன தேவை?" எனவும்,
	"..வசந்தத்தின் தென்றல் வந்தபின்னோ
	பல்நூறு பூக்கள் அதே மரத்தில்"
எனும் ஜப்பானியக் கவிதையுடனும் நூலின் நோக்கத்தை நமக்கு அழகாக எடுத்துச் சொல்கிறது.
	அவ்வையின் "கண்டவை கையளவு மலர்கள் - இருப்பவையோ பெருங்கானகம் அளவு" எனும் கூற்று வாழ்க்கை பற்றியதுதான்.  வாழ்வின் தேடலுக்கான சிறு முயற்சியில் பூவின் காம்புகளைத் தட்டுத் தடுமாறிப் பற்றியேறுகின்ற எறும்புகள் தானே நாமெல்லோரும்? ப்ரிய ராஜி, திருமதி.நாகநந்தினி, திருமதி.த.ஹேமலதா ஆகிய மூவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் - என்னை மீண்டும் காம்பு பற்றித் தட்டுத் தடுமாறி, கிறங்கி ஏறுகின்ற எறும்பாக்கியமைக்கு! ஒரு சொட்டுத் தேனை நான் சுவைக்க நேர்கையில் அதில் இந்த ஆறு கரங்களின் அபார உழைப்புத் தான் ருசிக்கின்றது.
	உலகெங்கிலும் உள்ள பூக்களைத் தேடித் தனது அடுத்த பயணத்தைத் தொடங்குவதாக ராஜி நிறைவாகக் குறிப்பிட்டுள்ளார்.  அவரது இந்தத் தேடல் தான் அவரை இப்போதும் புன்சிரிப்புடன் வழிநடத்துகிறது.  அந்தப் பயணத்திலும் அவருக்கு இனிதான தென்றலின் வெளியும், இன்னுமொரு மழைச்சாரலும், பிறிதொரு மரக்கிளை மழைநீரும், அள்ள அள்ளக் குறையாத ஆற்றுச் சுமையாய் வாய்க்கட்டும்.  உங்களது அடுத்த மாயப் பூங்காவிற்குள்ளும் என்னை அழைத்துச் செல்வீர்கள்தானே ராஜி? உங்களிடமிருந்து நான் பெற்ற பெரும் பொக்கிஷம் - அடுத்தமுறை எனது கிராமத்திற்குப் பயணிக்கையில், என் நிலத்தின் ஆதி மரங்களை, அவற்றின் நற்பூக்களை, என் மகளுக்குத் தொல் தமிழில் என்னால் சொல்ல முடியுமென்பதே.  நன்றி ராஜி!
	இராஜி, உங்களுடன் மிக அரிதாக உரையாடினாலும், உள்ளூற ஒரு தோழமைச் சுடர் நம்மைக் கதகதப்பாக்குவதை நாமிருவருமே உணர்வோம்.  அத்தோழமையின் பரிபூரண நெகிழ்வுடன் உச்சி முகர்ந்து உங்களுக்கு என் அன்பு முத்தம் ஒன்றும், வாழ்த்துக்கள் பலவும்! மன்னிக்கவியலாத என் மெத்தனமான தாமதத்திற்கு ஒரு தும்பைப் பூ மன்னிப்பை உங்கள் பூ மனசு தருமென்கின்ற நம்பிக்கையோடு.
                                                                                     * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *