கலைஞருக்கு வீர வணக்கம் நான் உண்ணும் ஒரு பிடி அன்னம் கலைஞரது பெயரெழுதிய உயிர் நெல்மணிகளால் விளைந்தது. நான் அருந்தும் ஒரு துளி நீர் கலைஞரது பெயரெழுதிய மூலக்கூறால் விளைந்தது. நான் சுவாசிக்கின்ற சிறு மூச்சு கலைஞரது பெயரெழுதிய உயிர்க்காற்றால் பிறந்தது. நான் துயிலும் ஓரிரவு உறக்கம் கலைஞரது பெயரெழுதிய நற் கனவுகளால் நிறைந்தது. என் ஊனிலும், உயிரிலும் கலந்திருக்கின்ற ஒப்புயர்வற்ற ஒரே தலைவர், முத்தமிழறிஞருக்கு முதல் புகழ் வணக்கம் ! ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தந்தை உண்டு. ஆனால் நமக்கெல்லாம் தந்தை என்றால் அது தந்தை பெரியார்தான். அண்ணா என்றால் பேரறிஞர்தான். பேராசிரியர் என்றால் அது பேராசிரியர் பெருந்தகைதான். ஆசிரியர் என்றால் அது அய்யா மட்டும்தான். கலைஞர் என்கின்ற இந்தச் சொல் தொல்காப்பிய காலம் தொட்டு, கலைகளை ஆளுகின்ற கூட்டத்தினரை பண்மையில் குறிக்கின்ற சொல். அன்று அந்த சொல் பெயர்ச் சொல். இன்று அது பெயர்ச் சொல் அல்ல, உலக மக்களின் உயிர்த்துடிப்பு என்று சொன்ன மரியாதைக்குரிய அய்யா பொன்னம்பல அடிகளார் இன்னொன்றையும் சொல்லியிருக்கின்றார். தமிழை மட்டுமே ஆண்டவர்கள் உண்டு, தமிழ்நாட்டை மட்டுமே ஆண்டவர்கள் உண்டு. ஆனால் தமிழையும் தமிழ்நாட்டையும் சேர்த்து ஆண்ட முத்தமிழறிஞர் அவர் என்றும் சொன்னார். தமிழ் அரசர்கள் கிள்ளி, நலங்கிள்ளி இவர்களுக்குப் பின்பாக அரசனாகவும் புலவனாகவும் இருந்தவர் நம்முடைய ஒப்புயர்வற்ற ஒரே தலைவர் கலைஞர் அவர்கள்தான் என்பதை தமிழ் கூறும் நல் உலகம் அறியும் வண்ணம், நீசர்கள் முன் நெருப்பிலே தமிழ் செய்து வைத்தான். தவித்தவர்கள் முன் தண்ணீரில் தமிழ் செய்து வைத்தான் என்று கலைஞர் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்த மேடையிலே அமர்ந்திருக்கின்ற தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு வணக்கம். ஒருமுறை மாவீரன் நெப்போலியனிடம் ஒரு கேள்வி கேட்டார்கள், ‘உங்கள் படையிலே எத்தனை படை வீரர்கள் இருக்கிறார்கள்?’ என்று, ‘ஏறக்குறைய ஐம்பதாயிரம் படை வீரர்கள்’ என்று சொன்னான். ‘உங்களையும் சேர்த்து எத்தனை பேர்? அந்தக் கணக்கிலே நீங்களும் வருகிறீர்களா?’ என்று கேட்டதற்கு, ‘என்னையும் சேர்த்து ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர்’ என்று சொன்னானாம். நெப்போலியன் ஒரு ஆள் ஒரு லட்சம் போர் வீரர்களுக்கு சமானம் என்றால், மதிப்பிற்குரிய சகோதரர் மாவட்டச் செயலாளர் அண்ணன் சேகர் பாபுவும் அப்படித்தான். தமிழகத்தின் நாளைய விடிவெள்ளி, கழகத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிற அன்பிற்குரிய தளபதி அவர்களுடைய போர்ப்படை முன்னணி வீரராக இருக்கின்ற அண்ணன் சேகர் பாபு அவர்களுக்கும் வணக்கம். ‘தலைவர் கலைஞர் அவர்கள் தந்தைப் பெரியாரின் தட்ப வெப்பம் அறிந்தவர். அறிஞர் அண்ணாவின் ஈரப்பதத்தில் வளர்ந்தவர். அதனால் கலைஞர் வாழுமிடமே தமிழர்கள் வந்து வானிலை அறிக்கை கேட்கும் இடம்’ என்று கவிஞர்களால் புகழப்பட்ட அந்த பெருமகனாருக்கு புகழ் வணக்கம். கலைஞர் எந்த இடத்தை நிரப்புகிறார் என்று பார்த்தால், ஒரு புலவருடைய இடத்தையா, இல்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினரின் இடத்தையா, இல்லை. அல்லது ஒரு எழுத்தாளருடைய இடத்தையா, இல்லை. அவர் தந்தை பெரியாருடைய இடத்தையும், பேரறிஞர் அண்ணாவுடைய இடத்தையும் நிறப்புகிறார் என்கின்ற பேராசிரியர் பெருந்தகையின் பெருமை மிகு வாக்கியங்களை இங்கு நினைவு கூர்கிறேன். தலைவர் கலைஞர் அவர்களுடைய தொண்டிற்கு ஈடு தமிழ்நாடேதான். அவருடைய கொள்கைகளுக்கு ஈடு தமிழ் மக்களேதான். அவர் இந்த நாட்டிற்கு அளித்திருக்கின்ற செல்வத்திற்கெல்லாம் ஈடு தமிழ்நாட்டுச் செல்வம்தான் என்ற கூற்றையும் நினைவு கூர்கிறேன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஒரு படைப்பாளியாக, சமூகத்தில் பங்கு பெறுகிற ஆர்வமுள்ள ஒரு பெண்ணாக என்னுடைய வாழ்க்கையை எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் மாற்றி ஒளியேற்றினார் என்பதையும் நினைவு கூர்ந்து அந்தப் பெருந்தகைக்கு புகழ் வணக்கம். உலகில் எத்தனையோ மாபெரும் மனிதர்கள் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள், இறக்கிறார்கள். ஆனால் தமக்கு முன்பாகச் சென்றவர்கள் விட்டுச் சென்ற அந்தக் காலடிகளில் பின்பாகத் தொடர்ந்து சென்று, அவர்களுடைய அடியொட்டியே நடந்து செல்பவர்கள் யாரும் பிறவித் தலைவர்களாக உருமாறுவதில்லை; தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. தனக்கு என்று தனித்ததொரு முதல் பயணத்தை துவக்கி, அதுகாரும் யாரும் நடந்து செல்ல முடியாத, நடந்து செல்ல தேர்வு செய்திறாத பாதையை தேர்வு செய்து, தீயை தாண்டுகின்ற துணிச்சலான முடிவை எடுக்கின்றவனே உலகத்தின் மிகப் பெரிய தலைவனாகிறான். ராபர்ட் கிராஸ் என்கின்ற ஆங்கிலக் கவிஞன், ‘காட்டில் ஓரிடத்தில் இரண்டு பாதைகள் பிரிகின்றன. ஒன்று காலடிகளால் அதிகம் தேய்க்கப்பட்ட பாதை. ஒன்று காலடித் தடமே பதிந்திராத யாருமே சென்றறிந்திராத பாதை. நான் யாருமே சென்றறிந்திராத அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அது மிகப்பெரிய மாற்றத்தை என்னிலே கொண்டு வந்தது’ என்று சொன்னதைப் போல, மிகப்பெரிய மாற்றத்தை தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் தான் தேர்ந்தெடுத்த பாதையின் மூலம் கொண்டு வந்த அந்த முப்பெரும் அறிஞருக்கு, தமிழாய்ந்த தலைமகனுக்கு என்னுடைய முதல் வணக்கம். புகழ் உடம்பு என்பது மறுமை அல்ல, எழுமை அல்ல. இறந்த பின்பும் நினைவால் வாழ்வதுதான் தமிழனின் மரபு. வள்ளுவனுக்கு அதனால்தான் எழுமையும், மறுமையும் கிடையாது. புகழுடம்பு உண்டு என்பதை நாம் அறிவோம். புகழுடம்பு போற்றுதல் என்பது அன்னாருடைய நினைவலைகளை போற்றி, அவர் நமக்காக ஆற்றிய பணிகளை, சீரிய கடமைகளை சீர் தூக்கிப் பார்த்து, அவர் செல்கின்ற வழியிலே கொள்கைகளை கடைபிடிப்பதுதான் என்பதை தமிழக மக்கள் மிக நன்றாக அறிவார்கள். ஆனாலும் எடுத்துச் சொல்ல வேண்டிய இந்த கூட்டங்கள் எதற்காக என்றால், தலைவர் கலைஞர் அவர்களின் சாதனைகளை எண்ணி எண்ணி மகிழ்வதோடு, இன்றைய இளைய தலைமுறைக்கும் இப்படிப்பட்ட மகா பெரிய வாழ்க்கையை வாழ்ந்த ஒரு மாமனிதன் இந்த பூமியிலே நடந்து சென்றான் என்பதைச் சுட்டுவதற்காகவும்தான் வீர வணக்கக் கூட்டங்கள் நடைபெறுகின்றன. சரித்திரம் என்றால் என்ன? சரித்திரம் என்பது மிகப்பெரிய மன்னர்கள், பிரபுக்களுடைய போர்கள், பூசல்கள், ரேச்சிகார விளைாயட்டுகள், வியூகங்கள் இவகளைப் பற்றிய விவரங்கள் மட்டும்தானா? சரித்திரம் என்பது சாதாரன மனிதர்கள் அன்றாட வாழ்க்கையிலே அவர்கள் சந்திக்கின்ற அவலங்கள், கவலைகள், அழகுகள் இவைகளைப் பற்றியும், குழந்தை – குட்டி என்று குடும்ப வாழ்க்கையில் குமிழித் தளும்புகின்ற, குடும்ப வாழ்க்கையில் அழுகின்ற சாதாரன குடிமகன்கள், தங்களுடைய பண்பாட்டை, தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை எப்படி உயர்த்த வேண்டும் என்கின்ற கனவுகளோடு இந்த பூமியிலே நடந்தார்கள் என்பதை பதிவு செய்வதுதானே! சரித்திரத்தின் வழக்கமான அம்சங்கள் இல்லாமல், சரித்திரத்தின் மிக மிக அழுத்தப்பட்ட, இதுகாரும் வெளியே சொல்லப்படாத பக்கங்களை, காட்டுமிராண்டிதனத்திலிருந்து உலக நாகரீகத்திற்கு சிறுகச் சிறுக இந்த உலகை இழுத்து வந்த சாமான்ய மனிதனின் சிந்தனைக் கருவூலத்தை விளக்கமாகப் பதிவு செய்த வரலாற்று ஆசிரியர் யார் என்று ஃபிரெஞ்ச் அறிஞர் பெருமக்களைப் பார்த்து வால்டேல் என்ற இளைஞன் அன்றைக்கு கேள்வி கேட்டதற்கு ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்கள் என்ன பதில் சொன்னார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் அதற்கான சரியான பதிலை இந்தியாவில், தமிழ்நாட்டிலிருந்து சொன்னவர் நம்முடைய முத்தமிழறிஞர். 14 வயதில் மொழிக்காக தன்னுடைய முதல் கொடியை உயர்த்திப் பிடித்து துவங்கிய அந்தப் பயணம், ரோம் நகரிலே ‘டியூபோரா’ என்றால் ‘யார் நலம் பெறுகிறார்கள்’ என்பதாக ஒரு அர்த்தமாம், யாருக்காகப் பேசுகிறேன், யாருடைய நலத்திற்காக எழுதுகிறேன், யாருடைய உரிமைக்காகப் பேசுகிறேன் என்று அன்று தொடங்கிய அந்தப் பயணத்தின் மூலம் தன்னுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அடிச்சுவட்டிலும் சாதாரணங்களின் சரித்திரத்தை சிகரத்தில் ஏற்றி வைத்த அந்தப் பெருமகனாருக்கு என்னுடைய புகழ் வணக்கம். சரித்திரத்தின் மகா புருஷர்களைக் குறித்து, மன்னர்களைக் குறித்து நம்முடைய ஒப்பற்ற தலைவர் முத்தமிழறிஞர் எழுதியிருக்கின்றார்; பேசியிருக்கின்றார்; பாராட்டியிருக்கின்றார். அசோகர்களுக்கு முன்பாக, மௌரியர்களுக்கு முன்பாக சோழர்களும் பாண்டியர்களும் எப்படிப்பட்ட மா மன்னர்களாக விளங்கினார்கள், நாம் அவர்களுடைய பாரம்பரியத்தில் வந்தவர்கள் என்று தமிழர்களுடைய வரலாற்றுப் பெருமையை மீட்டெடுப்பதற்காக, மன்னர்களுடைய பெருமைகளைப் பட்டியலிட்டிருக்கிறார். ராஜ ராஜ சோழனுக்கும் விழாக்கள் எடுத்தவர்தான் தலைவர் கலைஞர் அவர்கள். பல இடங்களில் சேரன் செங்குட்டுவன் குறித்தும் பெருமையோடு பேசியிருக்கின்றார். தலைவர் கலைஞர் அவர்கள் பூம்புகாரில் சிலப்பதிகார கலைக்கூடம் திறந்து வைத்து சிலப்பதிகார விழா நடத்தியபோது, அந்தக் காலகட்டத்தில் இவ்வளவு செலவு செய்து இந்திரவிழா என்ற பெயரில் ஏன் விழா எடுக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் கலைஞர் அவர்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு விமர்சனம் வைத்தபோது நடந்த விழா அது. அந்த விழாவின் துவக்கத்தின்போது தலைவர் கலைஞர் அவர்கள் சொல்கின்றார், ‘மைலாப்பூரிலே மூவர் உற்சவம் நடக்கின்றது, அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை. திருவாரூரிலே தேர் திருவிழா நடக்கிறது, அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை. மதுரையிலே சித்தரை திருவிழா நடக்கிறது, அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை. ஆனால் பூம்புகாரில் சிலப்பதிகார விழா எடுத்தால் மட்டும் அரசியல்வாதிகளுக்கு அக்கறை. ஏனென்றால் இங்கே நான் இருக்கின்றேன், நாம் இருக்கின்றோம், தமிழர்கள் இருக்கின்றார்கள். இது புராணத் திருவிழா அல்ல, பக்தித் திருவிழா அல்ல. ஆனால் இது ஆண்டவர்களுக்கு எடுக்கின்ற விழா. தமிழகத்தை ஆண்டவர்களுக்கு எடுக்கின்ற விழா’ என்று ஆண்டவர்கள் குறித்து கலைஞர் அவர்கள் பல முறை பெருமையாகப் பேசியிருக்கிறார். ஆண்டவர்களைப் பற்றிப் பேசி அவர்களுடைய புகழை செதுக்கிய கரங்கள், மிக முக்கியமான தீர்ப்பொன்றை, 112 ஆண்டுகால தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக 1973 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஏ.வரதராஜன் என்பவரை தமிழகத்தின் நீதிபதியாக நியமித்து சாதாரன மனிதனுடைய வாழ்க்கையை சரித்திரமாக்கியவர் முத்தமிழறிஞர்தான். சாதாரன மக்களுடைய பாடுகளையும் அவர்களுடைய அவலங்களையும் அவர்களுக்கென்று உரிமைக் குரலை எழுத்திலும், பேச்சிலும், சிந்தனையிலும் கலைஞர் அவர்களைப் போல முழங்கியவர்களும், அவரைப்போல வீறிட்டுக்கொண்டு சேர்த்தவர்களும் இந்த இந்தியாவிலேயே எங்கும் கிடையாது. ‘நீங்கள் யார்?’ என்ற கேள்விக்கு ‘எப்பொழுதும் நான் ஒரு மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று தன்னை வருணித்துக்கொள்கின்ற தலைவர் கலைஞர் அவர்களிடம் ‘உங்களுடைய கட்சியன் செல் நெறி, இலட்சியம் என்ன?’ என்று பிராவ்தா பத்திரிகை கேள்வி கேட்கின்றது. அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் ‘சமுதாயத்திலே சமத்துவம், சுயமரியாதை. பொருளாதாரத்திலே சமதர்மம், அரசியலிலே ஜனநாயகம், இந்த மூன்றையும், அரசு அதிகாரத்தின்போது தன்னுடைய பேனா தலைகுனிந்து கையெழுத்திட்ட காலத்திலெல்லாம் தமிழர்களையும், தாழ்த்தப்பட்டவர்களையும் அந்தப் பேனா தலைகுனியும்போது, தலை நிமிர்த்தியவர் நம்முடைய ஒப்பற்ற ஒரே தலைவர்தான். தான் வாழ்கின்ற சமூகத்தின் கட்டுக்கோப்புக்குள்ளேயே நின்று, அதுதான் அழகு என்றும் அதனுடைய சீரழிவுகளை அழகியலோடு சொல்கின்ற படைப்பாளிகளை நாம் யாரும் பொருட்படுத்துவது கிடையாது. வரலாறு அவர்களை நினைவில் வைத்துக்கொள்வது கிடையாது. ஷேக்ஸ்பியர் பிரபுத்துவ காலத்தில் கீர்த்திகளை மேன்மைப்படுத்தி நாடகம் வடித்திருந்தார் என்றால், அவர் மார்க்ஸினுடைய குடும்பக் கவிஞராக செல்லம் பெற்றிருக்க மாட்டார். அந்தக் காலகட்டத்தின் அவலங்களை தோலுறித்துக்காட்டியதால், ஷேக்ஸ்பியர் இன்றளவும் பேசப்படுகிறார். நம்முடைய முத்தமிழறிஞரும் அப்படித்தான். என் பதின் பருவத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற புத்தகத்தை என்னுடைய தந்தையார் எனக்கு வழங்கினார். இன்றுவரை பலமுறை படித்தாலும் ஒவ்வொரு முறையும் ஒரு புதுத் தகவலைத் தருகின்ற களஞ்சியமாக அந்தப் புத்தகம் எனக்கு இருக்கின்றது. வால்சாக் என்கின்ற மிகப்பெரிய ஃபிரெஞ்ச் ஆசிரிரயர் குறித்து ஏங்கல்ஸ் ஒருமுறை சொன்னார் ‘இந்த வால்சாக் எப்படிப்பட்ட மிகப்பெரிய எதார்த்த எழுத்தாளர்! ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் – 1816 ஆம் ஆண்டிலிருந்து 1818 ஆண்டு வரை முதலாளித்துவ சமுதாயத்த்தின் முற்போக்கு வளர்ச்சிகளை இவ்வளவு அழகாக பட்டியலிட முடிகிறது’ என்று சொல்லிவிட்டு ‘அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த, வரலாற்றுபூர்வமான, உத்யோகபூர்வமான ஆசிரியர்கள், புள்ளி விவர நிபுணர்கள், தொல்லியல் ஆசிரியர்கள் இவர்கள் அத்தனை பேரும் சொன்ன கருத்துக்களைவிட இந்த ஒரு புத்தகத்தின் மூலம் நான் அதிகமாக அறிந்துகொண்டேன்’ என்று சொன்னார். ‘நெஞ்சுக்கு நீதி’ புத்தகத்தை பார்க்கும் பொழுதெல்லாம் படிக்கும் பொழுதெல்லாம் இந்தக் கூற்றுதான் என் நினைவுக்கு வரும். ‘நெஞ்சுக்கு நீதி’ அப்படித்தான் எனக்கு அத்தனையும் கற்றுக் கொடுத்தது. மிகச் சமீபத்திலே ‘நெஞ்சுக்கு நீதி’யிலிருந்து ஒரு உதாரணத்தைப் படித்தேன். மகிழ்ச்சியைக் குறித்துப் போசும்போது, ‘போப்பை சந்திப்பதற்கு ஹென்றி எட்டாம் அரசன் சென்றால், அது எப்படி வியப்பிற்கும் மிகிழ்ச்சிக்கும் உரியதாக இருக்குமோ, அந்த அளவிற்கு நான் மகிழ்ச்சியை அடைந்தேன்’ என்று எழுதுகின்றார். உடனே நான் அந்த காலகட்டத்திலே எட்டாம் ஹென்றியினுடைய வரலாறு என்ன? போப்பிற்கும் அவருக்கும் இருந்த தகராறு என்ன? என்பதைப் படித்துத் தெரிந்துகொண்டேன். தலைவர் கலைஞர் அவர்களுடைய வாழ்க்கையில் சுயமரியாதையையும், பகுத்தறிவையும், எப்படி தமிழ்நாட்டையும் தமிழனையும் இரு கண்கள் என பாவித்து வந்தாரோ, அதுபோலவே இறுதிவரை பாவித்தவர். ஒரு முறை தலைவர் கலைஞர் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. ‘குமுதம் பத்திரிகை உங்களையும், திரு.கி.வீரமணி அவர்களையும், அவர்கள் ஆத்திகர்களாகி நெடுங்காலமாகிவிட்டது என்று சொல்லியிருக்கிறதே, அது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?’ அதற்கு தலைவர் கலைஞர் அவர்கள் பதில் சொல்கின்றார் ‘குமுதம் இரவிலே மலருகின்ற ஒரு மலரல்லவா, இருட்டிலே அதற்குக் கருப்புச் சட்டை தெரியாது’ என்று சொன்னாராம். தலைவர் கலைஞர் அவர்களிடம் மாப்பிள்ளைக் குப்பம் என்ற ஊரிலிருந்து கி.முருகன் என்பவர் ஒரு கேள்வி ‘தேசிய நீரோட்டம் என்கிறார்களே அதற்கு விளக்கம் என்ன? தலைவரே எனக்கு விளங்கவில்லை.’ என்று கேட்கின்றார். அதற்கு ‘காது கிழிய, வாய் நீட்டி தேசியத்தைப் பற்றிப் பேசிவிட்டு, காவிரி நீர் ஒரு துளிகூட தரமாட்டோம், தரமாட்டோம் என்று சொல்வதுதான் தேசிய நீரோட்டம்’ என்று பதில் சொல்கின்றார். இன்றைய காலகட்டத்திற்கும் பொறுத்தமான தலைவர் கலைஞர் அவர்களுடைய பதில்களும், witch அல்லது humor என்று சொல்லப்படுகின்ற அந்த நேரத்திலே வருகின்ற தெரிப்பான அதே சமயம் அரசியல் பூர்வமான பதில்களும் இந்த இருபத்தியோராம் நூற்றாண்டு இளைஞர்களும் யுவதிகளும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள். அதனைத்தான் நாங்கள் இந்தப் புகழ் வணக்கத்தின் மூலம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு தலைவர்கள் தோன்றுவார்கள், ஏதாவது ஒரு கொள்கைகளை கொண்டு சேர்ப்பார்கள், எத்தனையோ விதமான நன்மைகளை இந்த நாட்டிற்குத் தருவார்கள் என்றாலும், முத்தமிழறிஞருடைய முழுச் சிந்தனையும் தமிழையும் தமிழ்நாட்டையும் பற்றித்தான். தலைவர் கலைஞர் அவர்கள் 1989 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்கின்றார். அதிகாலை முதலே சிந்தனை வயப்பட்டவராக இருந்த தலைவர் அவர்கள், தன்னுடைய உதவியாளர் அய்யா திரு.ராஜமாணிக்கத்தின் மூலம் ‘தொலைபேசியிலே கணபதி சபதியை தொடர்பு கொள்ளுங்கள்’ என்கிறார். கணபதி சபதி தொலைபேசியிலே அவருக்குக் கிடைத்த உடன், அவரிடத்திலே ‘சபதியாரே வள்ளுவருக்கு கன்னியாகுமரியிலே ஒரு சிலை அமைக்க வேண்டும். ஏனென்றால் நாடு இங்கே முடிகிறது என்கிறார்களே, அது அப்படி அல்ல. நாடு இங்கேதான் தொடங்குகிறது என்பதுபோல இங்கே சிலை வைக்க வேண்டும். இந்தியா தமிழ்நாட்டிலிருந்துதான் தொடங்குகிறது என்பதுபோல சிலை வைக்க வேண்டும். அந்தச் சிலை வள்ளுவர் குமரியிலிருந்து இமயத்தைப் பார்ப்பதுபோல அமைய வேண்டும்’ என்கின்றார். நாம் வள்ளுவரையும், இளங்கோவையும், கம்பனையும் அத்தனை சங்கத் தமிழ் புலவர்களையும் பாராட்டுபவர்கள்தான். ………………… என்ற நாடகத்தை எழுதியவர் ஜார்ஜ் பெர்னாட்ஷா. அந்த நாடகத்தில் வருகின்ற கதாநாயகி ஒரு பூக்காரி. தன்னுடைய தாய் மொழி ஆங்கில மொழியினுடைய பெருமையைக் குறித்து அந்தக் கதாநாயகி அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, அந்தக் கதாநாயகியிடம் ‘உன்னுடைய தாய்மொழி ஷேக்ஸ்பியரின் உன்னத மொழி, மில்டனுடைய கவித்துவ மொழி, பைபிளில் கடவுளின் மொழி இதனை நீ நினைவிலே வைத்துக்கொள்ள வேண்டும்’ என்றார். ஒரு படைப்பாளியாக, எழுதுவதற்கு உந்துதல் கொடுக்கின்ற எத்தனையோ படைப்புகளை எனக்கும் இந்த தமிழ் கூறும் நல் உலகத்திற்கும் அளித்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். நான் எப்பொழுதும் மிகப் பெருமையோடு சொல்வேன், ‘என்னுடைய தமிழ்மொழி சங்கப் புலவர்கள் பெற்றெடுத்த மொழி. வள்ளுவரும், தொல்காப்பியரும், இளங்கோவும், கம்பனும் வார்த்தெடுத்த மொழி. பாரதியாரும் அவருக்குப் பின்னான பாரதிதாசனும் புத்துயிர் ஊட்டிய மொழி. ஆனால் திராவிடச் சூடேற்றி, மானுடம் என்கின்ற மயிலிறகு மூலம் தமிழக மக்களுக்கு இனமான உணர்வை ஊட்டிய தலைவர் கலைஞர் அவர்களுடைய தனிமொழி நான்காம் தமிழ்மொழி, அதனைப் பேசுகின்றவள் நான்.’ ஒரு தலைவன் நல்லவனாக, வல்லவனாக இரண்டும் சேர்ந்து இருந்தால்தான் அவன் நாட்டு மக்களால் நேசிக்கப்படுவான்; கொண்டாடப்படுவான். வின்ஸன்ட் சர்ச்சில் உலகப் புகழ் பெற்ற பேச்சாளர். உலகமே கொண்டாடுகின்ற அளவிற்கு மிக முக்கியமான இங்கிலாந்து உலகப்போர் வெற்றிக்குக் காரணகர்த்தா. அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது அவருடைய எந்த இலக்கிய பங்களிப்பிற்கும் அல்ல. அவருடைய போர்க்கால சொற்பொழிவுகளுக்காக வழங்கப்பட்டது. இன்றளவும் கொண்டாடப்படுகின்ற அந்த வின்ஸன்ட் சர்ச்சில் ஆசியர்கள் குறித்து, குறிப்பாக தென் கிழக்கு ஆசிரியர்கள் குறித்து மிகக் கீழான கண்ணோட்டம் கொண்டிருந்தவர் (condescending attitude). மகாத்மா காந்தியையே அரை நிர்வாணப் பக்கிரி என்று வர்ணித்தவர் அவர். மரியாதைக்குரிய மேனாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினம் ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. ராதாகிருஷ்ணன் அவர்களையும் ஒரு முறை அவமதித்தவர் வின்ஸன்ட் சர்ச்சில். ஒரு முறை விருந்து உண்ணும்போது, ராதாகிருஷ்ணன் அய்யா அவர்களைப் பார்த்து சர்ச்சில் கேட்டாராம், ‘இந்தியர்களாகிய உங்களுக்கும் இன்னமும் நாசூக்காக கத்தியாலும், முழுக் கரண்டியாலும் உண்ணுவதற்கு தெரியவில்லையே’ (you haven’t learned etiquette of using folks and knifes) அதற்கு ராதாகிருஷ்ணன் அய்யா சற்றும் தாமதிக்காமல் ‘இந்தியர்களாகிய நாங்கள் எங்களுடைய கைகளைத் தவிற வேறு எதையும் நம்புவதில்லை. மேலும் எங்களுடைய கைகள் சுத்தமானவை’ என்று சொன்னாராம். அப்படிப்பட்ட மனோபாவம் உடைய சர்ச்சில் என்னதான் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவார் என்றாலும், என்னதான் அரசியல் ராஜதந்திரி என்றாலும், என்னதான் உலக அரங்கிலே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை தூக்கி நிறுத்துகின்ற மிகப் பெரிய பணியைச் செய்தாலும் மனிதாபிமானம், சக மனிதனை நேசித்தல், இன வெறி என்று வரும்பொழுது, சர்ச்சில் அந்த உன்னதமான இடத்தில் வைத்து பார்க்கப்பட முடியாதவர் அவர். ஆனால் எந்தவிதத்திலும் முத்தமிழறிஞர் எத்தனை விதமான பணிகள் இருந்தாலும், அரசுப் பணி, ஆட்சிப் பணி, இலக்கியப் பணி எத்தனை இருந்தாலும் தன்னுடைய கழகத்தின் கடைக்கோடி தொண்டனை, அவனுடைய குடும்பத்தை, அவனுக்கு ஒன்று என்றால் அந்தக் குடும்பத்தை நேரில் சென்று விசாரிப்பதும், அந்தக் குடும்பத் தலைவர்கள் நோயுற்றாலோ, மரணமுற்றாலோ அந்தக் குடும்பத்தை சுவீகரித்துக்கொள்வதையும் தலைவர் கலைஞர் அவர்கள் தன்னுடைய வாழ்நாளில் மிக முக்கியமான அங்கமாக வைத்திருந்தார். என் குடும்பத்தையும் அப்படி சுவீகரித்து ஒளிவிளக்கு ஏற்றியது அவர்தான். என்னுடைய திருமணம், என் வாழ்வின் மிகப்பெரிய பேராக தலைவர் கலைஞர் அவர்களின் தலைமையில் மதுரையில் நடந்தது. அன்றைய தினம் அவர் குறிப்பிட்ட சொற்றொடரை என்னால் மறக்க முடியாது. நான் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படிப்பை முடித்திருந்தேன். திருமண மண்டபத்திற்கு உள்ளே நுழைந்தவுடன், இடது புறம் சுமதி – சந்திரசேகர் திருமணம் என்று தமிழில் எழுதியிருந்தது. வலது புறம் Sumathi weds Chandrasekar என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. தலைவர் கலைஞர் அவர்கள் அதனைப் பார்த்துவிட்டு, ‘ஏதோ போனால் போகிறது என்று சுமதி அவர்கள் சந்திரசேகரை திருமணம் செய்து கொள்கிறார்கள் போல. அது Chandrasekar weds Sumathi என்றிருந்தாலும், ஏதோ போனால் போகிறது சந்திரசேகர் அவர்கள் சுமதியை திருமணம் செய்து கொள்கிறார்கள் போல என்றுதான் இருக்கும். ஆங்கிலத்தில் அதை மிகச் சரியாக Sumathi Chandrasekar Wedding என்றுதான் நீங்கள் எழுதியிருக்க வேண்டும்.’ என்று சொன்னார். அவருடைய ஆங்கிலப் புலமையையும், தன்னைச் சுற்றி நடக்கின்ற விஷயங்களை கூர்ந்து கவனிக்கின்ற அந்த அபாரமான ஆற்றலையும் நினைத்து நான் அப்படியே அசந்து போனேன். பல முறை என்னுடைய உள்ள சோர்ந்தபொழுதெல்லாம், என்னுடைய தந்தையை இழந்து நான் கலங்கி நின்ற அந்த காலகட்டத்திலெல்லாம், தலைவர் கலைஞர் அவர்களுடைய எழுத்துக்களும், பேச்சுகளும், திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வெறும் அரசியல் கட்சி மட்டும் அல்ல, சமுதாய மறுமலர்ச்சி இயக்கம் என்பதோடு, ஆலமரத்தைப் போன்ற மிகப் பெரிய குடும்பம் என்ற உணர்வுதான் என்னை தூக்கி நிறுத்தியிருக்கின்றது. எப்படி எதிரிகள் என்றால் இறுக்கமாக, பலமுள்ளவராக, போர்ப்படைக்குரிய ஓர் அரசனாக இருக்கின்ற அவர், குடும்பம், கழகம், கழகத் தொண்டர்கள் என்று வரும்பொழுது, எப்படி மனம் இளகிவிடுகிறார் என்பதெல்லாம் நான் வியந்து பார்ப்பதுண்டு. தலைவர் கலைஞர் அவர்களுடைய உடன்பிறப்பு கடிதம் ஒவ்வொன்றையும் எண்ணிப்பார்க்க வேண்டும். லெனின் வாழ்வில் நடந்ததாக ஒரு சம்பவம் சொல்லப்படுவதுண்டு. ஒரு முறை லெனின் அவர்கள் தன்னுடைய வரவேற்பரையைில் கடிதம் ஒன்றை எழுதிக்கொண்டிருக்கும்பொழுது, மிக முக்கியமான நபர் அவரைச் சந்திக்க வருகின்றார். அந்த நபரைப் பார்த்து ‘சற்று காத்திருங்கள். நான் ஒரு முக்கியமான வேலையாக இருக்கிறேன். சற்று பொறுத்து உங்களைச் சந்திக்கிறேன்’ என்று சொல்கிறார் லெனின். அந்த முக்கியமான நபரும் லெனினுக்காகக் காத்திருக்கின்றார். காக்க வைக்கப்பட்ட அந்த நபர் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர் மாக்ஸிம் கார்க்கி. லெனின் அவரை காக்க வைப்பதற்காகச் சொன்ன காரணம், ‘நான் மனம் சோர்ந்து இருக்கின்ற என் கட்சித் தொண்டனுக்கு உற்சாகத்தையும், ஆர்வத்தையும் தந்து ஒரு கடிதத்தை எழுதிக்கொண்டிருக்கிறேன். அதனை முடித்துவிட்டு உங்களைப் பார்க்கிறேன்.’ அதுபோலத்தான் தலைவர் கலைஞர் அவர்களும். தன்னுடைய கட்சிப் பணி, ஆட்சிப் பணி, அரசுப் பணி அத்தனை சுமைகளுக்கும் நடுவிலும் எங்கோ இருக்கின்ற, என்னுடைய தந்தையைப் போன்ற தொண்டர், அவருடைய குடும்பம், அவருடைய மகள், அவருடைய மகன் அவர்களுக்கென்று ஒரு ஊறு அல்லது துன்பம் வரும்பொழுது உடனடியாக அங்கு சென்று தனக்கான ஆறுதல் வார்த்தைகளைப் பதிய வைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவருடைய இழைப்பை எப்படி நாம் தாங்கிக்கொள்வது. தன்னுடைய தாயை இழந்தபொழுது தன்னை அவர் எப்படித் தேற்றிக்கொண்டேன் என்பதை மிக அழகாக பதிவு செய்திருப்பார். அபாரமான வாசிப்பாற்றல் உள்ளவர் தலைவர் கலைஞர் அவர்கள். கிரேக்க வரலாற்றாசிரியர் பெரிக்லிஸ்ஸை அவர் படித்திருக்கின்றார். ‘பெரிக்லிஸ் எப்படி மக்களை இழந்த பெற்றோருக்கு ஆறுதல் சொன்னாரோ, அதுபோல நான் என்னுடைய தாயை இழந்தபொழுது அண்ணா எனக்கு சொன்ன ஆறுதல் மொழியினால், எழுத்தில் என்னுடைய மனநிலையை அப்படியே பிரதிபலித்து, என்னை சமனப்படுத்திக் கொண்டேன்’ என்று சொன்னார். பெரிக்லிஸ் சொன்ன ஆறுதல் வார்த்தைகளுக்கு இணையாக நமக்கெல்லாம் ஆறுதல் அளிக்கின்ற அடுத்த இமயமாக, நம்முடைய ஒப்பற்ற தலைவர் தளபதி இருக்கின்றார். போருக்குச் சென்றால் தளபதிக்குக் கட்டுப்படு. அரசவைக்குச் சென்றால் அரசனுக்குக் கட்டுப்படு. இன்றைக்கு நமக்குத் தளபதியாகவும், அரசனாகவும் இருக்கின்ற அவருக்கு மட்டுமே கட்டுப்படுவோம். தளபதியின் கரத்தை வளுப்படுத்தி, ஆட்சியிலே அமர்த்துவோம். என்னுடைய உயிர் உள்ள அளவு முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய புகழை போற்றுவேன்; பாடி வணங்குவேன். அந்த ஒப்பற்ற ஒரே தலைவருக்கு என்னுடைய புகழ் வணக்கம்...
No comment