அன்னம் மென்மையான ஒன்று; யானை பலம் வாய்ந்த ஒன்று; இந்த இரண்டையும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஒப்பிட்டுச் சொல்வது, அவரின் அகன்றாய்ந்த அறிவிற்கு எடுத்துக்காட்டாகும்.
“அன்னம்போல் மென்மையாகவும் இருப்போம். எதிரிகள் வந்தால் யானைபோல் பலம் பெற்றும் இருப்போம்…”
என்று விடுதலைப் போராட்ட வீரர்கள் விழாவில் விடுதலை வீரர்கள் பொதுவாக இருக்க வேண்டிய தன்மையும், போர்க்காலங்களில் பலம்பெற்றுச் செயல்பட வேண்டிய நிலையையும் குறிப்பிடுகிறார் கலைஞர். (அறிஞர்கள் பார்வையில் கலைஞர் : 110)
1988 ஆம் ஆண்டு சென்னை கடற்கரை சீரணி அரங்கில் தேசிய முன்னணி தொடக்கவிழா. வி.பி.சிங், என்.டி.ராமாராவ், இராம கிருஷ்ண ஹெக்டே, எஸ்.ஆர்.பொம்மை உள்ளிட்ட பல தலைவர்கள் மேடையில் அமர்ந்திருந்தனர். தலைவர் கலைஞர் பேசுகிறார். கூட்டத்தில் அமைதி நிலவுகிறது. அவர் எல்லா தலைவர்களின் பெயர்களையும் விளித்துக் கூறிவிட்டு இறுதியில் “என் உயிரினும், மேலான உடன்பிறப்புகளே” என்று கலைஞர் கூறியவுடனே கூட்டத்தில் பலத்த கைத்தட்டல், ஆரவாரம், எழுச்சி, மேடையில் இருந்த வி.பி.சிங் தனது அருகே அமர்ந்திருந்த அண்ணன் முரசொலி மாறனிடம் என்ன திடிரென்று கைத்தட்டல்? விசில் சத்தம்? இப்போது தானே பேச ஆரம்பிக்கிறார் என்று கேட்டார் வி.பி.சிங். கலைஞர் தமது தொண்டர்களை உடன்பிறப்புகளே என்று கூறியதை அண்ணன் மாறன் ஆங்கிலத்தில் விளக்கமாக எடுத்துச் சொல்ல வி.பி.சிங் வியந்து போனார். இந்தியாவில் எத்தனையோ அரசியல் கட்சிகள் உண்டு. ஆனால் எந்தக் கட்சித் தலைவனுக்கும் தொண்டனுக்கும் இத்தகைய இரத்தமும் சதையுமான உறவை காண முடியாது. (சாதனைச் சிகரம் கலைஞர் – கிள்ளை ரவிச்சந்திரன்: 97)
நீ வானம்:
எல்லா அரசியல் நட்சத்திரங்களும் உன்னிடம் உண்டு!
நீ சுதந்திரம்:
உன்னை எந்தத் தலைவனும் அடிமையாக்க முடியாது!
– தத்துவக் கவிஞர் குடியரசு
(சாதனைச் சிகரம் கலைஞர் – கிள்ளை ரவிச்சந்திரன்: 113)
அடுத்தடுத்து
உனக்கு
எத்தனை
அக்கினிப் பிரவேசங்கள்
ஆனால்
எந்த நெருப்பாலும்
உன்னைச் சுட முடிவதில்லை…
சூரியனல்லவா நீ
– கவிஞர் மு.மேத்தா
(சாதனைச் சிகரம் கலைஞர் – கிள்ளை ரவிச்சந்திரன்: 114)
அவர் விரைந்து சிந்திப்பார்; அதனினும் விரைவாக முடிவு செய்வார்; அதனினும் விரைவாக அதனை நிறைவேற்றுவார்.
He is Quick in thought
Quicker in decision
Quickiest in execution.
– நாத்திகம் பி.இராமசாமி
(சாதனைச் சிகரம் கலைஞர் – கிள்ளை ரவிச்சந்திரன்: 117)
சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் வரலாறு கலைஞரோடு பின்னிப் பிணைந்தது என்று சொன்னால் அதில் தவறில்லை.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த பிறகு முதலமைச்சர் பொறுப்புக்கு நான் வர விரும்பவில்லை, எனக்கு வேண்டாம் என்று கலைஞர் தெரிவித்தார். அது மட்டுமல்ல தம்பி மாறன் அவர்களையும் அனுப்பி வைத்து இந்தப் பதவி வேண்டாம் என்று தெரிவித்திடச் சொன்னார்.
கலைஞரின் துணைவியாரும் இதை தெரிவித்தார். ஆனால், நாங்கள் தான் அதை மறுத்தோம். ஆகவே, கலைஞர் அவர்கள் இந்தப் பதவியைப் விரும்பியவரல்லர். வேண்டுமென்று கேட்கவுமில்லை. மக்களின் விருப்பத்தை நிறைவேற்றத்தான் அவர் முதலமைச்சர் ஆனார். நாங்கள் எல்லாம் சேர்ந்து தான் அந்தச் சுமையை சுமக்க வைத்தோம். (சாதனைச் சிகரம் கலைஞர் – கிள்ளை ரவிச்சந்திரன்: 120)
– 8,9-ஏப்ரல்1972 செங்கல்பட்டு திமுக மாநாட்டில்
எம்.ஜி.ஆர் பேசியது
தமிழகத்தின் வரலாறு எழுதப்படும் போது திராவிட இயக்கமும் பொதுவுடைமை இயக்கமும் எவ்வாறு இணைந்து செயல்பட்டன, மக்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபட்டன என்பது எழுதப்படும்.
ஆற்றலுக்கும், அஞ்சாமைக்கும் வரலாற்றுச் சின்னம் கலைஞர், தெளிந்த நீரோடை என தெள்ளு தமிழ்ப்பேச்சு, இரத்தத்தை சூடேற்றும் வைர வரி எழுத்து. இலக்கிய வீதியில் உலா வரும் இணையற்ற எழுத்துலகச் சிற்பி, அறிஞர் அண்ணாவுக்குக் கிடைத்த அற்புதமான உயிரோவியம்.
தொண்டுள்ளமும், தூய தாய் உள்ளமும் கொண்டு, தொண்டர்கள் மத்தியில் நிலையான அன்பு சாம்ராஜ்ஜியம் நிறுவியுள்ளார். (சாதனைச் சிகரம் கலைஞர் – கிள்ளை ரவிச்சந்திரன்: 118)
– அருப்புக்கோட்டை, வே.தங்கப்பாண்டியன்
“திருச்சி மாநாட்டில் பேசும்போது அண்ணா அவர்கள் வெண்ணெயாக இருந்தார்கள். இப்போது அண்ணாவின் இடத்தில் என்னை வைத்திருக்கிறீர்கள்; நான் வெண்ணெய் அல்ல; சுண்ணாம்புதான். சுண்ணாம்பும் பயன்படாமல் போகாது; வெற்றிலையாக இருக்கிற தொண்டர்களையும், நாவலர் பேராசிரியர் போன்ற கழகத்தின் தளபதிகளைப் பாக்காகவும் ஆக்கி இந்தச் சுண்ணாம்பைக் கலந்தால் நல்ல தாம்பூலம் நிச்சயமாகக் கிடைக்கும்.” (அறிஞர்கள் பார்வையில் கலைஞர் : 114)
“கழகத்தினுடைய தொண்டர்கள் – கட்டப்பட்டிருக்கின்ற கோபுரத்தினுடைய அடித்தளத்தைப் போன்றவர்கள். அடித்தளம் வெளியே தெரிவதில்லை. கோபுரத்தினுடைய கலசம் வெளியே தெரியும். அதைப் போலத் தான் நாங்கள். தலைவர்களாக இருக்கிற நாங்கள் வெளியே தெரிகிறோம் ஆகாயத்தில் பறக்கின்ற காக்கை, கழுகு உங்களைத் தீண்ட முடியாது. ஆனால் கலசத்திலே எச்சமிடும். எச்சத்தைத் தாங்குகின்ற கலசத்தைப் போல மாற்றுக் கட்சிக்காரர்களுடைய பேச்சு, ஏச்சு, இழிவுரை… அத்தனையையும் தாங்கிக் கொள்கின்ற கலசங்களாக நாங்கள் இருக்கிறோம் என்பதையும் நீங்கள் மறந்து விடக் கூடாது.” (அறிஞர்கள் பார்வையில் கலைஞர் : 112)
“1996 இல் நான் மேயர் பொறுப்பை ஏற்றபோது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யும் முன்பு அந்த அறிக்கையின் முன்னுரையை தலைவர் கலைஞர் அவர்களிடம் காண்பித்தேன். அப்போது தலைவர் மேயர் “பதவி” என்று குறிப்பிட்டிருந்ததை அழித்தார். மேயர் “பொறுப்பு” எனமாற்றி தலைவர் என்னிடம் கூறினார். மக்கள் உனக்கு அளித்தது பதவி அல்ல பொறுப்பு எனவே மக்கள் அளித்த பொறுப்பை பொறுப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார். (அதியமான் நெஞ்சமும் அன்புத் தலைவர் உள்ளமும் – சுப.சீதாராமன் : 140)
மனித நேயத்திற்கு ஒரு கலைஞர் (2)
மூன்று வரம். புராணக் கதையில் அல்ல;
இந்த வரங்களின் சிறப்பம்சமே கேட்டவரின் நலத்தை எண்ணிக்கூடப் பார்க்காமல் கேட்டதுதான். தமிழக முதல்வர் கலைஞர் 10.5.2007 அன்று பிரதமர் மன்மோகன்சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் முன்னிலையில் வேண்டிக் கேட்ட வரத்தைத்தான் குறிப்பிடுகிறேன்.
கலைஞரின் ஐம்பதாண்டுச் சட்டமன்றப் பணியைப் பாராட்டுவதற்காக எடுத்த விழா அது. பள்ளிப் பருவத்திலேயே நாட்டுப் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தொடர்ந்து பணியாற்றிவரும் அந்தப் பெருமகனுக்கு நாடே நன்றி தெரிவித்துக் கொண்டது. இன்றைய பிரதமர், நேற்றைய பிரதமர்கள் நாடெங்கிலுமுள்ள பல கட்சிகளின் தலைவர்கள் என்று ஏராளமானோர் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டார்கள். அவர்களுக்கெல்லாம் நன்றி தெரிவித்து உரையாற்றும்போதுதான் பொன்விழாப் பரிசுகள் முன்று வேண்டும் என்று கேட்டார் கலைஞர். அவர் வேண்டிக் கேட்ட முதல் பரிசுப்பொருள். நதி நீர் இணைப்பு. அதற்கான உடனடிக் காரணத்தைக் காட்டும்போது அவர் அண்டை மாநிலங்களில் நட்புணர்வு குன்றியிருப்பதைச் சுட்டிக் காட்டினார். பெருத்த எச்சரிக்கையுடன் நட்புணர்வு குன்றியிருக்கிறது என்றுதான் சொன்னாரே தவிர, எதிர்ப்பு என்றோ, பகையுணர்வு என்றோ கூறவில்லை. நியாயமாகத் தமிழகத்துக்கு வந்து சேர வேண்டிய நீர்கூட வந்து சேரவில்லையே என்று கவலையை வெளிப்படுத்திக் கொண்டார். நாட்டின் நலனைக் கருதாமல் சராசரி மனிதாபிமானம் கூட இல்லாமல் தங்கள் மாநிலத்தின் நீரை மாநில மக்கள் மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற போக்கைக் குறித்து வேதனைப்பட்டார். (தென்னகத்தின் எழுச்சி – அ.அய்யாசாமி: 82, 83)
கலைஞர் கேட்ட இரண்டாவது வரம், மாநிலச் சட்ட மன்றங்களிலும் நாடாளுமன்றத்திலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களை மகளிருக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது. எல்லா அரசியல் கட்சிகளுமே கொள்கையளவில் ஏற்றுக்கொண்ட திட்டம் இது என்றாலும் அதற்குச் சட்ட வடிவம் கொடுத்து நடைமுறைக்குக் கொண்டுவர இயலாமல் ஒன்றன்பின் ஒன்றாக முட்டுக்கட்டைகள் தடுத்தவண்ணம் இருக்கின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை உள்ளாட்சிகளில் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டு எந்தவிதமான குழப்பமின்றி இந்தத் திட்டம் செயல்பட்டு வருகின்றது. ஊராட்சிகளுக்கும் நகராட்சிகளுக்கும் தலைவர்களாக வந்திருக்கும் மகளிர் ஆட்சி புரிவதில் ஆடவர்களுக்குச் சற்றும் குறைந்தவர்களல்ல என்று காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெண் உறுப்பினர்கள் தாங்கள் அங்கம் வசிக்கும் அமைப்புக்குச் சிறந்த பங்களிப்பு வழங்கி வருகிறார்கள்.
கலைஞர் வேண்டிய மூன்றாவது வரம். நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டுத் திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது. (தென்னகத்தின் எழுச்சி – அ.அய்யாசாமி: 84)
எனவே கலைஞர் கேட்ட மூன்று வரங்களும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவி செய்யக்கூடியவை. இணையற்ற மக்கள் தலைவரான கலைஞர் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்த விழா மேடையைத் தேர்ந்தெடுத்தார். நிறைவேறவில்லையே என்று குறைபட்டுக் கொள்ளாமல் விழாப் பரிசாக வழங்குங்கள் என்று இறைஞ்சினார். (தென்னகத்தின் எழுச்சி – அ.அய்யாசாமி: 85)
மனித நேயத்திற்கு ஒரு கலைஞர் (3) ‘நடுவணரசில் தமிழ்’
ஜூன் 3, 2007 அன்று நாடு முழுவதும் கலைஞரின் பிறந்த நாள் விழாக் கொண்டாடப்பட்டது. அதனையொட்டி அவர் இளைஞர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்தார். தமிழகத்தின் இளைஞர்கள் ஒன்று திரண்டு தமிழை நடுவண் அரசில் ஒரு ஆட்சி மொழியாக ஆக்க வேண்டுமென்பதே அந்த வேண்டுகோள். (தென்னகத்தின் எழுச்சி – அ.அய்யாசாமி: 86)
மனித நேயத்திற்கு ஒரு கலைஞர் (1)
1969 ஆம் ஆண்டில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் அவர் கொண்டுவந்த திட்டங்களில் ஒன்றுதான் மனுநீதித் திட்டம். அதன்படி ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமையன்று மாவட்ட ஆட்சியாளர்கள் மக்களை நேரடியாகச் சந்தித்து அவர்களின் குறைகளுக்கும் வேண்டுகோள்களுக்கும் செவிமடுத்து அவற்றுக்குத் தீர்வும் காண வேண்டும். அத்துடன் மக்கள் வேண்டுகோள் விடுப்பதற்கு முன்னரே முதலமைச்சரே அவர்களின் தேவைகளை உணர்ந்து கொண்டு வந்த திட்டங்கள் பல உள்ளன. அவற்றில் 1973இல் கை ரிக்ஷாவை அறவே ஒழித்த திட்டம்.
மற்றொரு முக்கியமான திட்டம் 1971இல் நிறைவேற்றப்பட்ட குடியிருப்புச் சட்டம். விவசாயக் கூலிகளில் தாங்கள் உழுது வந்த நிலத்திலேயே நிரந்தரமாகத் தங்க உரிமை வழங்கிய அந்தச் சட்டம் இலட்சக்கணக்கான ஏழை விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தது. ‘ஏராளமாகக் குருதி கொட்டிச் சாதிக்க வேண்டியதொரு காரியத்தைக் கலைஞர் ஒரு சொட்டு மை கொண்டு நிறைவேற்றிவிட்டார்’ என்று பொதுவுடைமையாளர் மணலி கந்தசாமி அந்தச் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டது இங்கே நினைவுக்கூறத் தக்கது.
சாலையோரத்தில் புழுக்களைப் போல் வசித்து வந்த வறியவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் வசிக்கத் தகுந்த வீடுகள் கட்டித் தருவதற்காகக் குடிசை மாற்று வாரியத்தை அமைத்தது தி.மு.க. அரசு. 1974ஆம் ஆண்டு ஆதித் திராவிட இனத்தவருக்கு இலவசமாகக் காங்கி¡£ட் வீடுகள் கட்டித் தரும் திட்டத்தைக் கலைஞர் அறிமுகப்படுத்தினார்.
அடுத்த ஆண்டே சிங்காரவேலர் மீனவர் இலவச வீட்டு வசதித் திட்டத்தை அறிமுகப்படுத்தி இயற்கையின் கருணையை நம்பியே வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வில் விளக்கேற்றி வைத்தார். (தென்னகத்தின் எழுச்சி – அ.அய்யாசாமி: 74, 75)
மனித நேயத்திற்கு ஒரு கலைஞர் (5) ‘நலிந்தவர் நலன்‘
கலைஞர் எப்போதுமே பிற்பட்ட வகுப்பின்பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள்பாலும் பரிவும் கனிவும் காட்டி வருபவர். 1969இல் அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்காகத் தனித்துறை ஒன்றை உருவாக்கி. அதற்கான ஒரு கேபினட் அமைச்சரை நியமனம் செய்தது. ஆதிதிராவிடர் நலத்துறை ஆதித்திராவிடர், மலைச்சாதியினர் ஆகியோரின் நலனை முழுமையாகக் கவனிக்க முடிந்தது. 2000இல் இந்தத் துறை மேலும் பிரிக்கப்பட்டு தாழ்த்தப்பட்ட மலைச்சாதியினரின் நலனுக்காகவென்றே தனித்துறை ஒன்று உருவாக்கப்பட்டது. (தென்னகத்தின் எழுச்சி – அ.அய்யாசாமி: 100)
மனித நேயத்திற்கு ஒரு கலைஞர் (6) ‘சமத்துவமும் சமூக நீதியும்‘
முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் கலைஞர் மேற்கொண்ட நடைமுறைகளில் ஒன்று. ஏற்கெனவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் நலத் திட்டங்களைக் கூர்ந்து ஆய்வு செய்து மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்வதற்காக ஏ.என்.சட்டநாதன் தலைமையில் ஒரு குழுவை நியமித்ததாகும். இப்படி ஒரு குழு நியமிக்கப்பட்டது இந்தியாவிலேயே அதுதான் முதன்முறை. தாழ்த்தப்பட்டவருக்கான இட ஒதுக்கீட்டைப் பதினாறு விழுக்காட்டிலிருந்து பதினெட்டாக உயர்த்துமாறும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 25லிருந்து 31 ஆக உயர்த்துமாறும் சட்டநாதன் குழு பரிந்துரைத்தது. இதன் மூலம் மொத்த இட ஒதுக்கீடு 49 விழுக்காடாக ஆயிற்று. பின்னர் எம்.ஜி.ஆர். அரசில் இது 69 விழுக்காடாக உயர்த்தப்பட்டு முழுமூச்சோடு தமிழக அரசால் பின்பற்றப்பட்டு வருகிறது. (தென்னகத்தின் எழுச்சி – அ.அய்யாசாமி: 112)
முதல் பேச்சு 1.5.1962
டில்லிக்கு நான் வந்து 10 நாட்களாகிறது. எல்லா இடங்களிலும் நான் சுற்றித் திரியவில்லை – என்றாலும் நான் மரமடர்ந்த சாலைகளுக்கு, புதுத் தெருக்களுக்கு, சோலைகளுக்குச் சென்றேன்.
ஒரு சாலைக்காவது தென்னாட்டார் பெயர் வைக்க வேண்டுமென்ற எண்ணம் இந்திய அரசுக்குத் தோன்றாதது ஏன்?
இது தென்னாட்டு மக்கள் இரண்டாந்தர மக்கள் என்பதைக் காட்டவில்லையா?
திருமதி.லட்சுமி மேனன் (வெளிநாட்டு அமைச்சர்): தியாகராஜரோடு என்ற ஒரு ரோடு இருக்கிறது
ராமரெட்டி: சங்கீத வித்வான் தியாகராஜாவின் பெயரில் ஒரு ரோடு இருக்கிறதே?
ஒரு உறுப்பினர்: இதைவிட உங்களுக்கு இன்னும் என்ன வேண்டும்?
(மேலும் பல குறுக்கீடுகள்)
அண்ணா: கனம் லிங்கம் அவர்களின் வாதம்பற்றி வியக்கிறேன். ஒரு தியாகராய ரோடினால் – அது சர்.தியாகராயர் பெயரில் அமைந்ததோ; அல்லது கீர்த்தனை புகழ் தியாகராயர் பெயரால் அமைந்ததோ தெரியவில்லை – அவர் திருப்தி அடைவாரேயானால் நான் சொல்லிக் கொள்ள விரும்கபுகிறேன், அதுமட்டும் தெற்கிற்குப் போதாது.
தெற்கே வாருங்கள், மோதிலால் நேரு சோலையில் உலவலாம்; நேரு வாசக சாலையில் நுழையலாம்; கமலா நேரு மருத்துவ மனைக்குப் போகலாம். (தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள் – கோ.வேள்நம்பி : 137)
மன்றத்தலைவர் அவர்களே! கன்யாகுமரியிலிருந்து இமாலயம்வரை ராமனும் கிருஷ்ணனும் தொழப்படுவதால், இந்தியா ஒற்றுமைப்பட்டுள்ளது என்று தாங்கள் முன்பொருதடவை கூறய பாண்டித்ய மிக்க வாசகங்கள் என் நினைவுக்கு வருகிறது.
அதேபோல் உலகமுழுதும் மரியாதையுடனும் பயத்துடனும் ஏகநாதர் தொழப்படுகிறார்.
இருந்தாலும் ஐரோப்பாவில் பலபல தேசிய நாடுகள் இருக்கின்றன. புதிய புதிய தேசிய நாடுகள் உலகில் வந்துகொண்டே இருக்கின்றன.
ஆகையால் தென்னத்தில் கொதித்தெழும் புதிய தேசிய இனம் பற்றிக் குடியரசுத் தலைவர் எதுவும் குறிப்பிடாதது பற்றி நான் மெத்த வருந்துகிறேன். (தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள் – கோ.வேள்நம்பி : 139)
இரும்புக் கரம் மூலம் இதயங்களைக் கவர இயலாது!
எனக்குமுன் பேசிய உத்தரப்பிரதேச நண்பர், ‘திடமாக இருங்கள்’ என்று தலைமையமைச்சரைப் பார்த்துக் கேட்டுக் கொண்டார்.
‘சட்டம் மீறப்பட்டாலும், ஒழுங்கு குலைக்கப் பட்டாலும், இரும்புக் கரம் கொண்டு அவற்றை அரசாங்கம் அடக்க வேண்டும்’ என்று கூறுவது அரசியல் துறையின் ஆரம்பப் பாடம் என்பது எனக்குத் தெரியும்.
வெளிப்பார்வைக்குப் பலவீனமாகத் தோற்றமளித்த போதிலும், நமது தலைமையமைச்சர் இரும்புக்கரம் படைத்தவர் என்பதும் எனக்குத் தெரியும்.
இரும்புக் கரம்கொண்டு மண்டைகளைப் பிளக்கலாம் – ஆனால் இதயங்களைக் கவர முடியாது!
நமது தலைமையமைச்சருக்கு இரும்புக்கரமும், பொன்போன்ற இதயமும் இருக்கின்றன என்று நான் நம்புகிறேன் –
பேராசிரியர் இரத்தினசாமி (சுதந்திரா-சென்னை): “கரம் தெரிகிறது – இதயம் வெளிப்படையாகத் தெரியவில்லை!”
அண்ணா: “மனிதனுடைய பெருந்தன்மையில் எனக்கு இன்னமும் நம்பிக்கை இருக்கிறது. அவருக்குப் பொன் இதயம் இருக்கவேண்டும்.”
பூபேஷ் குப்தா (கம். -மேற்கு வங்கம்): “இருக்க வேண்டும்”
அண்ணா: “அது மட்டுமல்ல; மொரார்ஜி தேசாயின் தங்கக் கட்டுப்பாட்டுக்கு முற்பட்ட பொன்னாக அது இருக்க வேண்டும்; 14 காரட் தங்கமாக அது இருக்கக் கூடாது.” (தமிழனை உயர்த்திய தலைமகன் உரைகள் – கோ.வேள்நம்பி : 332)
கோவிலிலிருந்து சாமியே வந்தது போல் ஸ்தபதிக்கு ஆனந்தம்:
டில்லி ராமகிருஷ்ணபுரத்தில் ‘மலைமந்திர்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீசுப்ரமணியசாமி கோவில் அந்தக் காலத்தில் கட்டப்பட்டு வந்தது. புகழ்பெற்ற திரு.கணபதி ஸ்தபதிதான் கோயில் சிற்பங்களை அமைத்துக் கொண்டிருந்தார். தலைவர் கலைஞர் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர். என்னிடம் பலமுறை தலைவர் அவர்களைக் கோவிலுக்கு அழைத்து வர வேண்டுமென கேட்டுக்கொண்டிருந்தார். தலைவர் டில்லிக்கு வந்தபோதெல்லாம் அவரும் நேரில் வந்து அழைப்பார். ‘ஏதாவது ஒரு நாள் வருகிறேன்’ என்று தலைவர் சொல்லி இருந்தார்கள். ஒரு தடவை தலைவர் டில்லிக்கு வந்திருந்தபோது மாலை நேரத்தில் சிறிது ஓய்வாக இருந்தார். என்னைக் கூப்பிட்டு ‘வா.கணபதி ஸதபதியைப் போய்ப் பார்த்து வருவோம்’ என்றார்கள். முன்கூட்டித் தெரிவிக்காமலே நாங்கள் சுமார் 5 மணிக்குப் போனோம். நேராக சிற்பங்கள் செதுக்கப்படும் இடத்திற்குப் போனோம். ஸ்தபதி தலை வரைக் கவனிக்காமல் என்னைப் பார்த்து மகிழ்ச்சியாக வரவேற்க ஆயத்தமானார். தலைவர் அப்போது தலையில் முண்டாசு கட்டியிருந்தார்கள். அப்போது அவரிடம் தலைவர் அவர்களைச் சைகையால் காண்பித்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. கோவிலிருந்து சாமியே வந்தது போல் அவருக்கு ஆனந்தம். தலைவர் அவர்கள் அங்கிருந்த கற்களின் மேல் உட்கார்ந்துகொண்டு அவரிடம் பல நுட்பங்களைக் கேட்டும் அவருக்குச் சில யோசனைகளையும் சொன்னார்கள். சுமார் 2 மணி நேரம் அங்குதான் இருந்தோம்.
அதற்குள் தலைவர் அங்கு இருக்கும் செய்தி பரவி ஒரு கூட்டம் சேர்ந்துவிட்டது. அப்போது திட்ட கமிஷனின் துணைத்தலைவராக இருந்த திரு.ஆர்.வெங்கட்ராமன் அவர்கள்தான் அந்தக் கோயிலின் நிர்வாகங்களைக் கவனித்துக் கொண்ட குழுவுக்குத் தலைவராக இருந்தார். அவருக்குச் செய்தி தெரிந்து வந்துவிட்டார். குழுவின் செயலாளர் திரு.பாலகிருஷ்ணன் என்பவர். அவர் அப்போது விவசாய அமைச்சகத்தில் இணைச் செயலாளர். அவர்களெல்லாம் தலைவர் அவர்களை வரவேற்று கோவிலைச் சுற்றிக் காண்பித்தார்கள்.
திரு.பாலகிருஷ்ணன் எனக்கு நன்கு தெரிந்தவர். அவர் என் காதில், ‘விவசாயத் துறையிலிருந்து ஒரு கடிதம் தமிழக அரசிடம் இருந்து வந்தால் தன் அமைச்சகத்திலிருந்து சுமார் 3 கோடி ரூபாய் தமிழக அரசுக்குக் கொடுக்க முடியும்’ என்று கூறினார். அருகிலிருந்த தலைவர் அவர்கள் என்னிடம் முழு விவரங்களையும் கேட்டு தமிழ்நாடு இல்லம் வந்தவுடன் சென்னைக்குத் தொலைபேசியில் சொல்லி காலையில் அந்தக் கடிதம் கொண்டுவரச் சொன்னார்கள். அப்போது விவசாயத் துறைச் செயலாளர் செல்வி அண்ணா ஜார்ஜ் IAS அவர்கள். பின்னர் டில்லியில் பல பதவிகளை வகித்ததோடு ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு.மல்கோத்ராவைத் திருமணம் செய்துகொண்டு, அண்ணா மல்கோத்ரா ஆனார். அவர் இரவே தலைமை செயலகத்திற்குப் போய், கோப்பைக் கண்டுபிடித்துப் பதில் தயார்செய்து, காலை விமானத்தில் கொடுத்து அனுப்பினார். நான் எடுத்துக்கொண்டு போய் திரு.பாலகிருஷ்ணனிடம் கொடுத்து ரூபாய் மூன்று கோடிக்கான காசோலையைப் பெற்றுவந்து தலைவர் அவர்களிடம் கொடுத்தேன். இதை ஏன் எழுதுகிறேன் என்றால். “தலைவர் இரவென்றும் பகலென்றும் பார்க்காமல் உழைக்கவும் செய்வார். மற்றவர்களிடமும் அதை எதிர்பார்க்கவும் செய்வார். திரு.பாலகிருஷ்ணனிடம் தொலைபேசியில் தலைவர் நன்றி சொன்னதோடு, “தான் கோவிலுக்கு வரும் போதெல்லாம் தமிழகத்தின் மேம்பாட்டிற்காகப் பணம் கொடுப்பது என்றால் தான் தினமும் வரத்தயார்’ என்றும் சொன்னார். (டில்லியில் தி.மு.க., அண்ணா, கலைஞர் என் பார்வையில் – டில்லி சம்பத்: 153, 154)
ஆஸ்திரேலியாவில் சிற்றரசு உடல்நிலையும் – தலைவரின் கவலையும்:
சிந்தனைச் சிற்பி சி.பி.சிற்றரசு தி.மு.க.வின் முன்னோடிகளில் ஒருவர். அவர் கழக ஆட்சியில் மேலவைத் தலைவராக இருந்தவர்.அவர் மறைவுக்குப்பின் அவரது சிலை சென்னை அண்ணாநகர் சாந்தி காலனி சாலையின் முகப்பில் நிறுவப்பட்டிருக்கிறது. அவர் மேலவைத் தலைவராக இருந்தபோது ஆஸ்திரேலியாவுக்குப் போயிருந்தார். அங்கு உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக தலைவர் கலைஞர் அவர்களுக்குத் தகவல் வந்திருந்தது. கழகத்தில் யாருக்காவது ‘உடல் நலம் சரியில்லை’ என்று தெரிந்தால் கலைஞர் அவர்கள் மிகவும் மனவேதனைக்குள்ளாவார்கள். அதுவும் திரு.சிற்றரசு கழகத்தில் முக்கியமான ஒருவர். அவருடன் தொடர்புகொள்ள முயற்சித்தார், முடியவில்லை. அப்போது தலைமைச் செயலாளராக இருந்த திரு.ராயப்பாவும், இணைச்செயலாளராக இருந்த திரு. டி.வி.வெங்கட்ராமன் அவர்களும் எவ்வளவோ முயற்சிசெய்தும் ஆஸ்திரேலியாவுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை.
மாலை 7 மணிக்குத் தலைவர் அவர்கள் தொலைபேசியில் எல்லா விவரங்களையும் சொல்லி, “நீ ஏதாவது செய்ய முடியுமா?” என்று கேட்டார்கள். “நான் முயற்சிக்கிறேன்” என்று சொல்லிவிட்டு ஆஸ்திரேலியா தூதரகத்துக்குத் தொடர்பு கொண்டேன். அவர்கள் டில்லியில் உள்ள அசோசியேட் பிரஸ் என்ற செய்தி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு உதவு செய்யுமாறு கேளுங்கள் என்றார்கள். உடனே அவர்களைத் தொடர்பு கொண்டேன். அவர்களும் உடனே என்னைத் தொடர்பிலேயே இருக்கச் சொல்லிவிட்டு, டில்லியிலிருந்து மேற்கே உள்ள லண்டனுக்குத் தொடர்பு கொண்டு, பிறகு அங்கிருந்து கிழக்கே உள்ள ஆஸ்திரேலியாவில் கேன்பெர்ராவுக்குத் தொடர்புகொண்டு, திரு.சிற்றரசு அவர்கள் பிரிஸ்பேன் என்ற நகரில் ஒரு மருத்துவமனையில் இருப்பதாகச் சொல்லி அங்கும் தொடர்பு கொண்டு, திரு.சிற்றரசுடன் பேச உதவி செய்தார்கள். நானும் அவர் நலம் விசாரித்துவிட்டு, ‘தலைவர் கலைஞர் ஆணையின்படிதான் தொடர்பு கொண்டேன்’ என்பதனைச் சொன்னேன். அவரின் உடல்நிலை பற்றி தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தும்படி சொன்னார். பின்னர் அவைகளைத் தலைவர் கலைஞர் அவர்களிடம் தெரிவித்தேன். இப்போதுதான் தான் நிம்மதி அடைந்ததாகச் சொன்னார்கள். நான் சாந்தி காலனி பக்கம் போகும்போதெல்லாம் திரு.சிற்றரசுவின் சிலையைப் பார்ப்பேன். அப்போது இந்த நிகழ்ச்சிதான் என் கண்முன் வரும். (டில்லியில் தி.மு.க., அண்ணா, கலைஞர் என் பார்வையில் – டில்லி சம்பத்: 159)
எஸ்.வி.நடராசனுக்கு சண்டிகர் டாக்டரின் சிகிச்சை:
தலைவர் கலைஞர் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் திரு.என்.வி.நடராஜன் அவர்கள். கழகத்தின் முன்னோடிகளில் ஒருவர். அவர் நோய்வாய்ப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நாள்தோறும் அங்கு போய் வருவதை வழக்கமாகவே தலைவர் அவர்கள் கொண்டிருந்தார்கள். நோய் கட்டுக்குள் வராததால் இந்த நோய்க்கென தலைசிறந்த ஒரு மருத்துவர் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. என்னிடம் தொடர்புகொண்டு அவரைப் பார்த்து சென்னைக்கு அனுப்புமாறு சொன்னார்கள். நானும் அந்த மருத்துவரைத் தொடர்புகொண்டு சண்டிகரிலிருந்து சென்னைக்கு அனுப்பு வைத்தேன். (டில்லியில் தி.மு.க., அண்ணா, கலைஞர் என் பார்வையில் – டில்லி சம்பத்: 160)
சேலம் உருக்காலை:
தலைவர் கலைஞர் அவர்கள் டில்லியில் நடந்த தேசிய அபிவிருத்திக் கவுன்சில் (National Development Council) கூட்டத்திற்கு ஒருமுறை வந்தபோது சேலம் உருக்காலை அமைக்க மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள். அதற்கு முன்னர் தமிழகத்தில் பல வருடங்களாகப் பலராலும் பேசப்பட்ட ஒன்றுதான் சேலம் உருக்காலை திட்டம். தமிழக மக்கள் எதிர்பார்ப்போடு இருந்த நேரம். பின்னர் பிரதமர் இந்திராகாந்தி அவர்களையும் நேரில் சந்தித்து வேண்டுகோள் வைத்து விட்டு வந்து விட்டார்கள். அப்போது நாடாளுமன்ற அவைகள் நடந்து கொண்டிருந்தன. தலைவர் பிரதமரைத் சந்தித்துக் கேட்டுக்கொண்டது காலை. நடுப்பகல் மக்களவையில் பிரதமர், சேலம் உருக்காலைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய விவரத்தைத் தெரிவித்தார்கள். செய்தி கிடைத்ததும் தலைவரிடத்தில் தெரியப்படுத்தினேன். “உடனே நாம் போய்ப் பார்த்து நன்றி சொல்லலாம்” என்று சொல்லி ஏற்பாடுகள் செய்யச் சொன்னார்கள். “ஒரு மாலையும் தயாராக வைத்திரு” என்றார்கள். பிரதமர் அலுவலகத்தோடு தொடர்புகொண்டு, பார்க்கும் நேரத்தை முடிவுசெய்து தலைவர் அவர்களை அழைத்துக்கொண்டு போனேன். அப்போது தொழில் அமைச்சராக இருந்த திரு.செ.மாதவன் அவர்களும் வந்தார்கள். அப்போதெல்லாம் தலைவர் டில்லி வரும் போதெல்லாம் திரு.செ.மாதவன் அவர்கள்தான் உடன் வருவார். தமிழ்நாட்டைப் போல் டில்லியில் சுலபமாக மாலைகள் கிடைக்காது. ஆகவே தமிழ்நாடு இல்லத்தில் இருந்த தோட்டத்திலிருந்து ரோஜா மலர்களைப் பறித்து ஒரு சிப்பந்தி ஒரு மாலையைத் தயார் செய்து கொடுத்தார். அதை எடுத்துப் போனேன். பிரதமரைச் சந்தித்து தலைவர் நன்றி சொல்லிவிட்டு மலர் மாலையை கொடுத்தார்கள். பிரதமர் அதைக் கழுத்தில் போட்டுக்கொண்டு பிறகு அதில் ஒரு புழு இருப்பதைப் பார்த்துவிட்டு தலைவரிடத்தில், “சென்னையிலிருந்து ஒரு புழுவைக் கொண்டு வந்தீர்களா?” (You have brought a worm from Madras) என்றார்க்ள. தலைவர் உடனே, “அது சென்னைப் புழு அல்ல, டில்லி புழுதான்” என்றார்கள். (No Madam, That is a Delhi worm) பிரதமரே சிரித்துவிட்டார். என்றென்றும் என் நினைவில் நிற்கும் நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. (டில்லியில் தி.மு.க., அண்ணா, கலைஞர் என் பார்வையில் – டில்லி சம்பத்: 171)
தலைவர் மீது இந்திரா அம்மையாரின் மதிப்பும், மரியாதையும்:
தலைவர் அவர்கள் ஒரு முறை வந்திருந்தபோது திருமதி இந்திரா காந்தி அவர்களிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்கும்போது, ‘தான் ஆக்ரா போனதில்லை’ என்று சொன்னார்கள். அதற்குப் பிரதமர், ‘அவசியம் போய் பார்த்து வரச்’ சொன்னார்கள். சென்னை திரும்புவதற்கு மறுநாள் காலை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆகவே மதிய உணவிற்குப் பிறகு கிளம்பி ஆக்ரா போய் தாஜ்மஹாலை நிலவில் பார்த்துவிட்டுத் திரும்பினோம். அப்போது உத்தரப் பிரதேசம் ஆளுனர் ஆட்சியில் இருந்தது. பிரதம மந்திரியின் ஆணையால் எல்லா ஏற்பாடுகளையும் பிரதம மந்திரியின் அலுவலகமே செய்தது. எங்களுடன் பிரதமர் அவர்களின் மெய்க்காப்பாளர்கள் இருவர் அவர்களின் கட்டளைப்படி வந்தார்கள். இதை எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால் அந்த அளவுக்கு பிரதமர் திருமதி.இந்திராகாந்தி அவர்கள் தலைவர் மேல் மதிப்பும் மரியாதையும், அக்கறையும் கொண்டிருந்தார்கள். (டில்லியில் தி.மு.க., அண்ணா, கலைஞர் என் பார்வையில் – டில்லி சம்பத்: 186)
தலைவருடன் பாட்னா பயணம்:
“பாட்னா பயணம்” பற்றி தலைவர் கலைஞர் அவர்கள் விளக்கமாக, தான் எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’யில் எழுதியிருக்கிறார்கள். “தேசிய முன்னணி சார்பில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத் தொடக்க விழா மார்ச் 18 ஆம் தேதியன்று பீகார் மாநிலத் தலைநகரான பாட்னாவில் ( பாடலிபுத்திரம்) நடைபெற்றது.
எனது உரையைத் துவங்கும் முன் நான் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள விரும்புகிறே. ‘ என் பெயர் கருணாநிதி! நான் ஒரு தேசவிரோதி! நான் வெளிநாடுகளுக்குத் தகவல்களைத் தந்தேன். எனவே இந்த நாட்டில் நான் ஒரு அபாயகரமான பேர்வழி! இந்தக் பட்டங்களையெல்லாம் லோகமான்ய பால கங்காதர திலகர், மற்றும் பல தியாகிகளுடன் பல ஆண்டுகளை அந்தமான் சிறையில் கழித்த விடுதலைப் போராட்ட வீரர்கள், மிகச் சிறந்த தேச பக்தர்கள் எனக்குச் சூட்டியவை என்று நினைக்கிறீர்களா? அவர்கள் யார் என்று உங்களுக்கே தெரியும்!” அவர்கள் என்னைத் தேசவிரோதி என்று அழைக்கிறார்கள். பொதுமக்கள் பிரச்சினைக்காக – மொழிப் பிரச்சினைக்காக – இருபதுக்கு மேற்பட்ட முறை நான் சிறைத் தண்டனையை அனுபவித்திருக்கிறேன். ஆனால் திரைப்படங்களிலும், வீடியோ படங்களிலும் மட்டுமே சிறைச்சாலையைப் பார்த்தவர்கள் என்னைத் தேச விரோதி என்கிறார்கள். இதில் பரிதாபம், சந்திரசேகரும் இதற்குத் தலையாட்டியதுதான்.’ இப்படித் தொடங்கிய என் பேச்சு நீண்டது! நான் பேசியபோது அந்த மக்கள் வெள்ளம் கையொலி செய்து வரவேற்று அன்பைப் பொழிந்தது. நான் பேச்சை முடித்துக் கொண்டு அமர்ந்ததும் மேடையிலே இருந்து தலைவர்கள் எல்லாம் என்னை நெருங்கி கைகளைக் குலுக்கி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்கள் வி.பி.சிங் என் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘இதற்காகத்தான் உங்களை நான் அடிக்கடி வடபுலத்திற்கு அழைக்கிறேன். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் உங்கள்மீது எவ்வளவு மதிப்பும் மரியாதையும் அன்பும் வைத்திருக்கிறார்கள் பார்த்தீர்கள் அல்லவா?’ என்று மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். ‘ஜெயப்பிரகாஷ் நாராயண் முழுப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்துப் பேசியது அந்த மைதானத்தில்தான் என்றும் அதற்குப் பிறகு இவ்வளவு பெரிய கூட்டம் அப்போதுதான் கூடியதாகவும்’ லல்லு பிரசாத குறிப்பிட்டார்.
அதற்கடுத்தநாள் பாட்னாவிலிருந்து வெளிவந்த அனைத்து ஏடுகளும் அந்தக் கூட்டத்தில் தலைசிறந்த உரை, “தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் உரைதான்” என்று கட்டம் கட்டி வெளியிட்டிருந்தன. 19-3-1991 தேசிய டைம்ஸ் ஆஃப் இந்தியா
‘STEALING SHOW: The man to steal the show today was the ousted DMK Chief Minister of Tamil Nadu, Mr.M.Karunanidhi, who despite communicating with an interpreter, held the attention of the audience and received a standing ovation at the end of his speech-‘ (டில்லியில் தி.மு.க., அண்ணா, கலைஞர் என் பார்வையில் – டில்லி சம்பத்: 190. 191)
1932 இல் பெரியார் தாம் மேற்கொண்ட உலகச் சுற்றுப் பயணத்தில் 26-3-1932 இல் இலண்டன் நகரை அடைந்தார். அன்று மேக்ஸ்பரோ ஹைட்ஸ்பார்க் என்னுமிடத்தில் அப்போதைய ஆட்சியிலிருந்த தொழிற்கட்சியின் தலைவர் திரு.லான்ஸ்பெரி என்பவரின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அக்கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்புப் பெற்ற தந்தை பெரியார் கிடைத்த வாய்ப்புக்காக உச்சி குளிர்ந்து போகவில்லை. வாய்ப்பளித்த தொழிற்கட்சித் தலைவரையோ, அவருடைய கட்சியின் ஆட்சியையோ வாயாரப் புகழ்ந்து மனமார மெச்சவில்லை. முகத்துதிக்காகவோ, கைம்மாறு கருதியோ மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத தலைவர் அவர். தொடங்கும்போதே ‘ஆட்சிப் பொறுப்பிலிருக்கும் தொழிற்கட்சியினராகிய நீங்கள் இந்தியர்களாகிய எங்களைப் பரிகசிக்கத்தக்கவர்களாகக் கருதுகிறீர்கள்! ஆனால் நாங்கள் பிரிட்டிஷ் தொழிற்கட்சியை மிகமிகப் பரிகசிக்கத் தக்கதாய்க் கருதுகிறோம்” என்று தொடங்கி இந்தியாவில் பிரிட்டிஷ் தொழிற்கட்சி ஆட்சியினர் தொழிலாளர்களுக்கு விரோதமாய் எடுக்கும் நடவடிக்கைகளைப் பட்டியல் போட்டுக்காட்டி உரையாற்றினார் பெரியார். அடுத்த தேர்தலில் தொழிற்கட்சி மக்கள் செல்வாக்கிழந்து தொற்றுப்போகும் நிலைக்கு ஆளானதற்குப் பெரியாரின் இப்பேச்சும் ஒரு காரணம் என்று வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டானியக் அரசியல் சபையில் தான் பேசிய உரையில் குறிப்பிடத்தக்கதாக, பிரிட்டானியக் கலைக்களஞ்சியத்தின் 1948 ஆம் ஆண்டின் பதிப்பு குறிப்பிடுகிறது.
இந்தியப் பொதுவுடைமையாளர்களின் முனனோடியும், சோவியத் புரட்சித் தலைவர் மாமேதை லெனின் அவர்களின் தோழரும், ரேடிகல் டெமாக்ரடிக் கட்சித் தலைவருமான திரு. எம்.என்.இராய் அவர்கள் 1941 பிப்ரவரியில் சென்னையில் தந்தை பெரியாரைச் சந்தித்து நாஜிகளுக்கு எதிராக அகில இந்திய அளவில் காங்கிரசல்லாத கட்சிகளை ஒன்று திரட்ட முயற்சித்தார். அதற்குச் பின் 1944 இல் கல்கத்தாவில் தாம் கூட்டிய மாநாட்டிலும் பெரியாரை அழைத்துப் பங்கேற்கச் செய்த இராய் அவர்கள், பெரியாரைத் தம் ‘நாத்திக ஆசான்’ என்று குறிப்பிட்டுப் போற்றி உலகத்தில் நாத்திகம் பற்றி இத்தனை நூல்களை எழுதியும், வெளியிட்டும் உள்ள மேதை, யாரும் எனக்குத் தென்படவில்லை என்று கூறி, அய்யா வெளியிட்ட நூல்களின் பட்டியலைக் காட்டினாராம். இந்தியாவிலேயே இந்திய மொழியொன்றில் (தமிழில்) முதல் முதலாக உலகப் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையைத் தமிழாக்கம் செய்து மக்களிடம் பரப்பியவர் அய்யாதான். (அறிஞர்கள் பார்வையில் கலைஞர் : 176, 177)
1972 இல் பங்களாதேஷ் யுத்தத்தின் போது அனைத்து மாநிலங்களும் நிதி திரட்டித் தந்தன. மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாடே மிக அதிக நிதி திரட்டிக் கொடுத்தது. சுமார் 6 கோடி ரூபாய்! அப்போது தமிழக முதலமைச்சராக இருந்தவர் கலைஞர்! நிதியைப் பெற வந்த பிரதமர் இந்திராகாந்தி அவர்களிடம், “பிரதமர் இந்திராகாந்தியின் மாநிலமான உத்திரப் பிரதேசத்தை விடப் பரப்பளவிலும், பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்திலும், ஜனத்தொகையிலும் கூடக் குறைவான தமிழ்நாடு தேசப்பற்றிலும் தியாகத்திலும் குறைந்ததல்ல என்பதைக் காட்டுமுகத்தான் கூடுதலான நிதியைத் தந்திருக்கிறது என்பதில் பெருமை கொள்ளுகிறேன்” என்று தன் மனதில் பட்டதைத் தயக்கமின்றிப் பிரதமரிடம் நேருக்கு நேராகவே அறிவித்தவர் கலைஞர். (அறிஞர்கள் பார்வையில் கலைஞர் : 175)
ஆம்! பாளையங்கோட்டை நகரில் உள்ளாட்சி மன்றத்தில் போட்டியிடும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தலைவர், முதல்வர் கலைஞர் அவர்களின் பொதுக்கூட்டம் முதன்முதலில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் அக்டோபர் 5 (05.10.2006) ஆம் தேதி வியாழன் அன்று மாலை ஜவகர் திடலில் தொடங்கியது.
“எனக்கு விருப்பமான நகரம் என்ன? என்று ஒரு பத்திரிகைப் பேட்டியில் கேட்டபோது பாளையங்கோட்டை நகரம் தான் என்று நான் சொன்னேன். தமிழகத்திலேயே எனக்குப் பிடித்த ஊர்களில் பாளையங்கோட்டையும் ஒன்று. அதனால் தான் சென்னை ஜார்ஜ் கோட்டையிலிருந்து பாளையங்கோட்டைக்கு வந்திருப்பதாக இங்கே கூறினார்கள். (அதியமான் நெஞ்சமும் அன்புத் தலைவர் உள்ளமும் – சுப.சீதாராமன் : 49)
1965-இல் மொழிப்போராட்டத்தின் போது தலைவர் கலைஞர் அவர்களை பக்தவசலனார் ஆட்சி, பாளையங்கோட்டை தனிமைச் சிறைச்சாலையில் அடைத்தது. அவரைக் காண வந்த அண்ணா அவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை பாளை மத்திய சிறைச்சாலையில் கனிவோடு கண்டு வந்தவுடன் தாமிரபரணி ஆற்றங்கரையில், பொருதை மணற்பரப்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கூறினார். “என் தம்பி கருணாநிதி வாடும் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலைதான் நான் வணங்கும் தவச்சாலை” என்றார். (அதியமான் நெஞ்சமும் அன்புத் தலைவர் உள்ளமும் – சுப.சீதாராமன் : 50)
நான் எங்கோ இருந்து தமிழகத்தை ஆளவந்தவன் இல்லை. ஆண்டவனால் அனுப்பட்ட அவதார புருஷனும் அல்ல. உங்களிடமிருந்து வந்தவன். உங்களில் ஒருவன் உங்கள் உடம்பு, சதை, ரத்தம், எலும்பு, மூச்சு அதனால் தான் இத்தனை காரியங்களையும் செய்துள்ளேன். (அதியமான் நெஞ்சமும் அன்புத் தலைவர் உள்ளமும் – சுப.சீதாராமன் : 52)
தூத்துக்குடியில் ஆழ்கடல் துறைமுக வேலையை தாமதப்படுத்தி அதை வெறும் மீன்பிடித் துறைமுகமாக மாற்றி சிறுமைப்படுத்த முயற்சி நடந்ததை அறிந்து துடித்துப் போன அண்ணா 1967 இல் சென்னை வந்த மத்திய கப்பல் துறை அமைச்சர் வி.கே.ராவ் அவர்களை அவர் தங்கியிருந்த தனியார் சிமெண்ட் ஆலை விருந்தினர் மாளிகையில் சந்தித்தார்.
அண்மையில் கடந்த மேதிங்களில் புதுடெல்லி சென்ற தலைவர் கலைஞர் அவர்கள் இந்த முறை சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தியே தீர வேண்டும் என்று வைராக்கியத்தோடு சென்றார். கடந்த மே மாதம் 18-ஆம் நாள் புதுடெல்லி சென்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அன்னை சோனியா காந்தி ஆகியோரைச் சந்தித்து சேது சமுத்திரத் திட்டத்துக்கு ஒப்புதல் பெற்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செய்தி அறிவிக்கப்பட்டது. (அதியமான் நெஞ்சமும் அன்புத் தலைவர் உள்ளமும் – சுப.சீதாராமன் : 55)
“இலட்சியத்தின் எல்லைக் கோட்டினைத் தொடர வேண்டுமானால் இளமையையோ, முதுமையையோ பலி கொடுத்திட முன்வந்தவன் நான் என்பதற்கு அடையாளமாக 1942-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் திராவிட நாடு வார இதழில் நான் முதன் முதலாக எழுதிய சொல்லோவியம் ‘இளமைப்பலி’ என்ற தலைப்பில் வெளிவந்தது என்று 1944-ஆம் ஆண்டு அப்போதுதான் முரசொலி துண்டு அறிக்கையில் கவிதை தீட்டி அதனை சிதம்பரத்தில் நடைபெற்ற வருணாஸ்ரம மாநாட்டில் விநியோகத்திடவும் முதல் இரவுக்காகவும் அங்கே சென்ற என்னை ஊருக்குள் நுழைய விடாமல் 144 தடை விதிக்கப்பட்ட நிகழ்ச்சியும் நடந்தது. (அதியமான் நெஞ்சமும் அன்புத் தலைவர் உள்ளமும் – சுப.சீதாராமன் : 63)
சோவியத் அரசின் அதிகார பூர்வமான பத்திரிகையான ‘பிராவ்தா’ அவரிடம் கேட்ட கேள்வியும், அதன் பதிலும்:
கேள்வி: திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்நெறி, இலட்சியம் என்னவென்று கூறுவீர்களா?
கலைஞர்: சமுதாயத்தில் சமத்துவம் – பகுத்தறிவு; பொருளாதார துறையில் சமதர்மம்; அரசியலில் ஜனநாயகம். (அறிஞர்கள் பார்வையில் கலைஞர் : 198)
இடஒதுக்கீடு முறையைக் குழப்புகின்றவர்களை வளமான சொல்லாட்சியாலும், வாதத் திறமையாலும் அவர்கள் வாதங்களை முனைமழுங்கச் செய்வதோடு, மாற்றாரையும் தெளிவுபெறச் செய்வார். இந்தியாவின் தலைமை அமைச்சர் திருமதி இந்திரகாந்தியை செல்வி (பேட்டி) கண்ட ஒரு தமிழ்ப் பெண் எழுத்தாளரின் திருத்தல் வேலையை அல்லது தலைமை அமைச்சரின் கருத்து எனச் சொல்லப்பட்ட பிழையான செய்தியை வெட்ட வெளிச்சமாக்கினார். ‘பிரதமர் இந்திராகாந்தி அம்மையார்’. இது யாருக்கும் நல்லது இல்லை. சமீபத்தில் தமிழ்நாட்டில் பனிரெண்டு பதக்கம் வாங்கிய ஒரு பெண்ணுக்கு ஜாதியின் அடிப்படையில் வைத்தியக் கல்லூரியில் இடம் கிடைக்காமல் போனது எங்களுக்குத் தெரிய வந்ததும், அவளுக்கு வேறு இடத்தில் ஏற்பாடு செய்து கொடுத்தோம். புத்திசாலித்தனத்தைத் தட்டிக் கொடுப்பதுதான் நாட்டுக்கு நல்லது. இதில் சாதியைப் புகவிடுவது தவறு:’ என்று பதிலளித்திருக்கிறார். பனிரெண்டு பதக்கம் வாங்கியிருந்த பெண்ணாக இருந்தாலும் ஆணாக இருந்தாலும் அப்படிப்பட்ட திறமைசாலிகளுக்கென்று தமிழ்நாட்டைப் பொறுத்த வரையிலே பொதுத்தொகுப்பில் முப்பத்திரண்டு சதவீத இடங்களுள் இந்தப் பனிரெண்டு பதக்கங்கள் பெற்ற பெண்ணை இடம்பறெச் செய்யாதது ஏன்? என்று பிரதமர் தமிழக அரசைக் கேட்டிருக்க வேண்டுமேயல்லாமல், வகுப்புரிமை கொள்கை அடிப்படையில் அம்மையார் அவர்கள் இதை எப்படி அணுகினார் என்பது எனக்குப் புரியவில்லை. கொள்கை அடிப்படையில் அம்மையார் அவர்கள் இதை அணுகியது தவறல்லவா? என்று தலைமை அமைச்சரின் கருத்தாக சொல்லப்பட்ட செய்திக்கு கண்ணியமான தெளிவான பதலை மக்கள் மன்றத்தில் வைத்தார். இது குறித்து மேற்கொண்டு விவாதங்கள் எழாமை செல்வி கண்ட எழுத்தாளரின் இருட்டடிப்பு வேலையே அன்றித் தலைமை அமைச்சரின் கருத்தாக இருக்க முடியாது என்பதைக் காட்டுகிறது.
இடஒதுக்கீடு ஒரு உலகு தழுவிய நீதி என்பதை சோவியத் நாட்டில் உள்ள இடஒதுக்கீட்டு ஏற்பாட்டை மேற்கோள் காட்டி இந்தியாவின் மார்க்ஸ்சிஸ்டுகளுக்குத் தெளிவுபடுத்தினார். கருநாடக மாநிலத்தின் முன்னாள் முதல் அமைச்சர் தேவராசு அர்சு செயல்படுத்திய இடஒதுக்கீட்டு முறையைச் சுட்டிக்காட்டி, பாராட்டியதோடு அதனைத் தமிழ்நாட்டிற்கும் பரிந்துரைத்தார். இத்திட்டத்தில் பொருளாதார நிலையில் பிற்பட்ட (பார்ப்பனர் முதல் தாழ்த்தப்பட்டவர் வரை) அனைத்து சாதியினருக்கும் அவரவர் தொகுதியில் 15 சதவிகித இடஒதுக்கீடு இருப்பது குறிப்பிடத்தக்கது. (அறிஞர்கள் பார்வையில் கலைஞர் : 165)
பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.விநாயகம் என்கிற சட்டமன்ற உறுப்பினர், அண்ணா அவர்களைப் பார்த்து “உங்களது நாட்கள் எண்ணப்படுகின்றன. (Your days are numbered) என்று ஆவேசமாகக் குறிப்பிட்டபோது அண்ணா அவர்கள் சிறிதும் ஆத்திரப்படாமல் ‘எங்கள் அடிகள் அளந்து எடுத்து வைக்கப்படுகின்றன. (Our Steps are measured)’ என்று நாகரிகமாக அதே விவிலிய மொழியில் பளீரென பதிலடி கொடுத்தார். இந்த மின்னல் வெட்டு போன்ற பதிலடி அவையை கலகலப்பூட்டியது மட்டுமல்ல, அவையின் வெம்மையைக் குறைத்து அண்ணா அவர்களின் விவேகத்தை வெளிப்படுத்தியது. (அதியமான் நெஞ்சமும் அன்புத் தலைவர் உள்ளமும் – சுப.சீதாராமன் : 89)
மறைந்த திரு.எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு என்.ஜி.ஓ. வினரின் வேலை நிறுத்தப் போராட்டம் உச்சக்கட்டத்தில் இருந்தது. அப்போது அரசு ஊழியர்கள் போராட்டப் பிரச்சினை குறித்து எதிர்கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள் தன் உரையில் உடன் தீர்வு காண வலியுறுத்தி பேசியபோது அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் குறுக்கிட்டு, ‘என்.ஜி.ஓ. வினர் போராட்டத்தை மக்கள் கவனித்துக் கொள்வார்கள்’ என்றார்.
உடனே எதிர்கட்சித் தலைவர் கலைஞர் அவர்கள் எழுந்து ‘எங்களிடமும் மக்கள் இருக்கிறார்கள்’ என்றதும் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் அமைதியாக இருந்துவிட்டார். இதற்காக அப்போதைய ஆளுங்கட்சியில் உள்ள அ.தி.மு.க. ஆர்ப்பரித்து குதிக்கவில்லை. அவர்களை உசுப்பிவிட்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் விஷமத்தனமாக வேடிக்கை பார்க்கவில்லை. (அதியமான் நெஞ்சமும் அன்புத் தலைவர் உள்ளமும் – சுப.சீதாராமன் : 90)
1957 ஆம் ஆண்டு இரண்டாவது பொதுத்தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நெருங்கிய நண்பர் டாக்டர் சீனிவாசன் அவர்களை எதிர்த்து அண்ணா அவர்கள் போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் கூட, “ஒரு நல்ல டாக்டரின் சேவையை காஞ்சிபுரம் இழக்கக் கூடாது என்னை சட்டசபைக்கு அனுப்புங்கள், டாக்டர் சீனிவாசன் காஞ்சிபுரத்திலிருந்து கொண்டே காஞ்சிபுரம் மக்களுக்கு மருத்துவ சேவை செய்யட்டும்”, என நகைச்சுவையுடன் பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் டாக்டர் சீனிவாசனை எதிர்த்து வென்று 15 தி.மு.க. உறுப்பினர்களுடன் தமிழக சட்டமன்றத்திற்கு முதன் முதலில் நுழைந்தார் நம் அண்ணா. (அதியமான் நெஞ்சமும் அன்புத் தலைவர் உள்ளமும் – சுப.சீதாராமன் : 104)
தலைவர் கலைஞர் அவர்கள் எவ்வளவோ மறுத்தும தந்தை பெரியார் அவர்களின் வற்புறுத்தலால், அண்ணா சாலையில் தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலையை அமைத்து அன்னை மணியம்மை அவர்களால் அது ஒரு மாபெரும் விழாவில் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் அண்ணா பெயர் தாங்கிய கட்சியினர் ஒரு இறுதி ஊர்வலத்தில் சென்றபோது தலைவர் கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலையை நெஞ்சிலும், மார்பிலும் கடற்பாறை போன்ற கருவிகளைக் கொண்டு குத்தி உடைத்து சேதப்படுத்தினர். இது அ.தி.மு.க. வினர் அரசியல் மாண்பினைக் காக்கும் லட்சணம். தலைவர் கலைஞர் அவர்கள் கூட இந்நிகழ்ச்சியை பற்றி அக்காட்சியை முரசொலியில் படத்துடன் வெளியிட்டு, “தம்பி என் நெஞ்சில்தானே குத்துகிறான் முதகில் அல்லவே” என்ற உருக்கத்துடன் குறிப்பிட்டார். இது தலைவர் கலைஞர் அவர்களின் மாண்புகளில் சிறந்த மாண்பல்லவா? (அதியமான் நெஞ்சமும் அன்புத் தலைவர் உள்ளமும் – சுப.சீதாராமன் : 105)
தமிழக சட்டப் பேரவையில் முதல்வராக இருந்த போது கலைஞர் பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் “இந்த பட்ஜெட் உப்பு சப்பு இல்லாமல் இருக்கிறது” என்றார். உடனே கலைஞர் “பட்ஜெட்டை படித்துப் பார்க்கத்தான் வினியோகித்தோமே தவிர நக்கிப் பார்க்க அல்ல” என்றார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் அ.இ.அ.தி.மு.க. விலிருந்து விலகி ‘நமது கழகம்’ என்று ஒரு கட்சி நடத்தினார். பிறகு அந்தக் கட்சியை மீண்டும் அ.இ.அ.தி.மு.க. வில் இணைத்து விட்டார். இது குறித்து ஒரு நிருபர் கலைஞரிடம் கருத்து கேட்டார்.
“எஸ்.டி.சோம சுந்தரம் அ.தி.மு.க. வில் மீண்டும் இணைந்திருப்பதால் தமிழக அரசியலில் ஒரு Change (மாற்றம்) இருக்கும் என்று பேசிக் கொள்கிறார்களே” என்று கேட்டார். அதற்கு கலைஞர் “சேஞ்ச்” (சில்லறை) தான் காரணம் என்றார்.
மன்னார்குடி அருகே உள்ள கிராமம் வடசேரி. இந்த வடசேரி கிராமத்தில் வேர்க்கடலை வணிகம் முக்கியமானது. தமிழகம் முழுவதும் உள்ள பகுதிகளில் நடைபெறும் வேர்க்கடலை வணிகம் பெரும்பாலும் வடசேரி கிராமத்தில் நடத்துகின்றனர். ஒருமுறை வடசேரியைச் சார்ந்த கழகப் பிரமுகர் இல்லத் திருமணத்திற்கு தலைமை ஏற்று வாழ்த்துரை வழங்கிய கலைஞர்.
“வடசேரி கிராமத்தினர் கடலை
வியாபாரம் செய்கின்றனர்.
எனக்குள்ள சந்தேகமெல்லாம்
அவர்கள் எஸ்கே கடலையே
வியாபாரம் செய்து விடப்போகிறார்களோ
என்று நான் கவலைப் படுகிறேன்.” என்றார்.
ஊருக்கு உகந்தபடி இடத்துக்கு ஏற்றபடி சமயோசிதமாக (Timing Joke) நகைச்சுவை உரையாற்றுவது கலைஞருக்கே உரித்தானது. (சாதனைச் சிகரம் கலைஞர் – கிள்ளை ரவிச்சந்திரன்: 137)
1957 மே நான்காம் நாள் தலைவர் கலைஞர் முதன் முதலில் தனது கன்னிப் பேச்சைத் தொடங்கினார்.
விவாதத்தில் கலந்து கொண்டு சான்றுகளையும் புள்ளி விவரங்களையும் அள்ளி வீசுவதில் கலைஞரின் சாதனையை இதுவரை யாரும் முறியடிக்கவில்லை.
குற்றச்சாட்டுகளை கலைஞர் பேரவையில் கூறும் போது ஏதோ அவசரத்தில் அள்ளித் தெளித்த கோலமாக இல்லாமல், ஆதாரங்களையும் சான்றுகளையும் வைத்தே பேசுவார்.
1978 ஆம் ஆண்டு பல்கேரிய கப்பல் பேர ஊழல் தொடர்பாக கலைஞர் சட்டப்பேரவையில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும்.
1980 ஆம் ஆண்டு அன்றைய அ.தி.மு.க. அமைச்சர் குழந்தைவேலு கலைஞர் மீது அவதூறு பரப்பி ஒரு குற்றச் சாட்டை கூறினார். அவரை முழுவதுமாக பேசவிட்டு இறுதியில் கலைஞர் அமைச்சர் இந்தக் குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் எதிர்க்கட்சித் தலைவர். சட்ட மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன் என்று அறிவித்தார்.
அமைச்சரும் பதில் சவால் விட்டார்.
போதிய ஆதாரங்களைத் தராமல் போலியான சில ஆதாரங்களை தந்தார் அமைச்சர் குழந்தைவேலு.
இறுதியில் பேரவைத் தலைவர் க.ராசாராம் அமைச்சரின் ஆதாரங்களை போலியானவை என்று தீர்ப்பளித்தார். ஆனால் சொல்லியபடி அமைச்சர் தனது பதவியைவிட்டு விலகவில்லை. தலைவர் கலைஞரும் நாகரிகமாக அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தவில்லை.
முதலமைச்சராக இருந்து சட்டப்பேரவையில் தலைவர் கலைஞர் அவர்கள் வெளியிட்ட அறிவிப்புகளும் மக்கள் நலத்திட்டங்களும் ஏராளம்.
1969 முதல் 1975 வரையிலும் 1989 முதல் 1991 வரையிலும் 1996 முதல் 2001 வரையிலும் நிதித்துறை பொறுப்பு வகித்த முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழக அரசின் வரவு செலவு திட்ட அறிக்கையினை (பட்ஜெட்) வெளியிட்டு சாதனை படைத்தார். தமிழக சட்டப் பேரவை வரலாற்றில் இத்தனை ஆண்டுகள் பட்ஜெட் தயாரித்து வாசித்தவர் கலைஞர் ஒருவரே பக்தவச்சலம், காமராஜர், ம.கோ.ரா. (எம்.ஜீ.ஆர்) ஆகிய முதல்வர்கள் கலைஞரின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் திணறிப் போயுள்ளனர்.
1983 ஆம் ஆண்டு இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து தலைவர் கலைஞர், போராசிரியர் தமது சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தனர். தலைவர் கலைஞர் சட்டமன்ற வரலாற்றில் இது முக்கிய நிகழ்வு. (சாதனைச் சிகரம் கலைஞர் – கிள்ளை ரவிச்சந்திரன்: 57, 58)
சட்டப் பேரவையை ஒரு போதும் கலைஞர் தவறாக பயன்படுத்தியதில்லை. சட்ட மன்றத்தை வெட்டி மன்றமாகவோ தன்னை புகழ்ந்து பேசும் பஜனை மடமாகவோ அவர் மாற்றியதே இல்லை. (சாதனைச் சிகரம் கலைஞர் – கிள்ளை ரவிச்சந்திரன்: 59)
28.7.71 அன்று எச்.வி.அண்டே என்ற சட்டமன்ற உறுப்பினர் “உங்கள் அரசு மூன்றாந்தர அரசு” என்று வாய்த் துடுக்காக கூறினார். கலைஞர் பதட்டப்படவில்லை, ஆத்திரப்பட்டவில்லை, சக உறுப்பினரை தூண்டி விட்டு முதுகில் தட்டவில்லை.
நிதானமாக எழுந்து எச்.வி.அண்டேக்கு கலைஞர் நறுக்குத் தெறித்தாற்போல் பதில் அளித்தார்.
“மூன்றாந்தர பாசிஸ்ட் அரசு
என்று யார் சொன்னாலும்
இது நாலாந்தர மக்களின்
நல்வாழ்வுக்கு பாடுபடும்
அரசு என்பதில் பெருமையுறுகிறோம்”
என்று தமது அரசு சூத்திர ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசு என்பதை பட்டவர்தனமாகச் சொன்னவர் கலைஞர்.
15.12.73 உயர் நீதிமன்ற 112 ஆண்டு வரலாற்றிலேயே முதல் முறையாக தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஏ.வரதராசன் நீதிபதியாக நியமனம் வர்ணாசிரமத்திற்க மற்றொரு சாவுமணி அடிக்கும் வேலையை சட்டமன்றத்தில் கலைஞர் செய்தார். (சாதனைச் சிகரம் கலைஞர் – கிள்ளை ரவிச்சந்திரன்: 60)
06.03.75 அன்று சட்ட மன்றத்தில் கலைஞர் ஆற்றிய உரை
“ஏற்கனவே 30 முறை திருத்தப்பட்டது அரசியல் சட்டம். இன்னும் அதை திருத்தும்படி கோருவது தவறில்லை. பிரிட்டன் அரசியல் சட்டத்தை ஏற்று சட்ட மன்றத்துக்குப் போன காங்கிரசார் பின்னர் அந்த சட்டத்தையே மாற்ற வில்லையா?
மாநில உரிமைகளுக்காக அரசியல் சட்டத்தைத் திருத்தும்படி கோர யாருக்கும் உரிமை உண்டு” (சாதனைச் சிகரம் கலைஞர் – கிள்ளை ரவிச்சந்திரன்: 61)
Conclusion:
அன்று (1972) இராஜாஜி மண்டபத்தில் தமிழ்நாடு என்.ஜி.ஓ. யூனியன் இரகசியக் குறிப்பேட்டு முறையை ஒழித்த முதல்வர் கலைஞர் அவர்களுக்கு அளித்த பாராட்டு விழாவில் கலந்து கொண்ட தந்தை பெரியார் அவர்கள் அரசு அலுவலர்களுக்கு கூறய அறிவுரை.
“கலைஞர் ஆட்சி! நம்ம ஆட்சி! நம்ம சொந்த ஆட்சி என்கிற உணர்வு உங்களுக்கு வேணும்! ஏதோ கலைஞர் அவிழ்த்து விட்டுவிட்டார்னு ரொம்பவும் துள்ளக் கூடாது. பொறுப்போடு நடந்து கொள்ளணும். (அதியமான் நெஞ்சமும் அன்புத் தலைவர் உள்ளமும் – சுப.சீதாராமன் : 86)
கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி அவர்களின் மொழிநடை – பொன்.கோதண்டராமன்
“நான் இந்தியத் துணைத் கண்டத்திலே மராட்டிய மண்டலத்திலே பம்பாய் நகரத்திலே பேசுகிறேன் என்பதை மறந்துவிட்டுப் பேசவில்லை. என்னுடைய தமிழ் இனம் கூடி இருக்கின்ற இடத்தில் நின்று கொண்டு பேசுகிறேன். எனவே தமிழன் இலங்கையிலே இருந்தாலும், பம்பாயிலே இருந்தாலும், சிங்கப்பூரிலோ சிகாகோவிலோ வாஷிங்டன்னிலோ இலண்டன் நகரிலோ இருந்தாலும் நமது தமிழினத்தின் மீது ஒரு தூசி படுகிறது என்றால் துடிதுடிக்கின்ற ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவன் தான் நான். அப்படிப்பட்ட இயக்கத்தைக் கட்டிக் காத்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா இவர்களின் கரம் பிடித்து வளர்ந்தவன் என்கின்ற முறையில் நான் சொல்லுகின்றேன்” (அறிஞர்கள் பார்வையில் கலைஞர் : 123)
“யாராவது ஒரு குறும்புக்காரன், இரண்டிலே ஒன்றைச் சொல், இந்தியனா? தமிழனா? இதிலே நீ எதுவாக இருக்க விரும்புகிறாய்? இரண்டிலே ஒன்றைத்தான் சொல்ல வேண்டும் என்று கட்டாயப் படுத்திக் கேட்பானேயானால் நான் அப்போது சொல்வேன்; நான் தமிழனாகத்தான் இருக்க விரும்புகிறேன்” (அறிஞர்கள் பார்வையில் கலைஞர் : 124)
அவரின் சமுதாய் அணுகுமுறை தந்தை பெரியாரின் கொள்கைகளையும், அறிஞர் அண்ணாவின் மறுமலர்ச்சிப் போக்கையும் இணைத்துக்கொண்டு பண்பாட்டுப் புரட்சியை உள்ளடக்கியுள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஆக்கபூர்வமான திட்டங்களைச் செயல்படுத்தியவர்; எதிர்காலத்திலும் செயல்படுத்த இருப்பவர். (அறிஞர்கள் பார்வையில் கலைஞர் : 170)
கலைஞரின் இந்த பண்பாட்டுப் புரட்சியினைக் கொச்சைப் படுத்த முயல்வோர் “தாழ்த்தப்பட்டவர்கள் அர்ச்சகராக வேண்டியதில்லை. ஐ.ஏ.எஸ். அலுவலர்களாக மாற வேண்டும்” என்றெல்லாம் மாறுவேடப் போட்டிக்குரிய பரிந்துரைகளை வழங்குகின்றனர். அண்ணல் அம்பேத்கர் 1936 இல் “… புரோகிதம் பரம்பரைத் தொழிலாக இராமலாவது இருக்க வேண்டும். இந்துக்களென்று சொல்லிக் கொள்கிறவர்களுக்கெல்லாம் புரோகிதனாக உரிமை இருக்க வேண்டும்… புரோகிதர்கள் இப்பொழுது தம் படமைகளை உணர்வதில்லை. உண்மையில் அவர்களுக்கு கடமைகளும் இல்லை. ஆனால் அவர்களுக்குச் சில உரிமைகள் இருக்கின்றன. அவைகளைக் காப்பாற்றவே அவர்கள் முயல்கிறார்கள்..” அண்ணல் அம்பேத்கர் இந்தக் கருத்துக்களுக்கு வலிவு சேர்க்க முனைந்தவர் கலைஞர். ஆனால் வெற்றி கிட்டவில்லை. இதற்காக இந்திய அரசியல் சட்டமே திருத்தப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
இந்திய தேசிய காங்கிரசின் தமிழ் நாட்டுப் பழம்பெரும் தலைவரும், தற்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான திரு.இளையபெருமாள் தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழுவின் அறிக்கை “எல்லா துரையை அளித்திருக்கிறது. இந்த அறிக்கையில் சொல்லப்பட்ட இப்பரிந்துரையின் பின்னணி அண்ணல் அம்பேத்காரின் கருத்துக்களாகும். திரு இளைய பெருமாள் குழுவின் அறிக்கையைத் தம் விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு திறனாய்வு செய்த சமுதாய இயல் அறிஞர் குப்புசாமி (பெங்களுரைச் சேர்ந்தவர்) அவரது நூலில் அர்ச்சகர் பதவி பற்றிய இளையபெருமாள் குழுவின் பரிந்துரையை மேற்கோள் காட்டி, இது திராவிட முன்னேற்றக் கழகப்பாணி (D.M.K. Pattern) அறிக்கை என்று கருத்து அறிவித்தார். அம்பேத்காரின் சிந்தனைக்கு வடிவம் கொடுத்த ஒரு காங்கிரஸ்காரரின் அறிக்கை கூட, திராவிட முன்னேற்றக் கழகப்பாணி அறிக்கையாவது தி.மு.க. விற்கும் கலைஞருக்கும் கிடைத்த புகழாரங்கள். “தி.மு.க. வானது தன் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு புதுவை அளவில் கட்டுப்படுத்திக் கொள்ளக்கூடும். ஆனால் அதன் தத்துவம் இந்திய யூனியனில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் சூழ்ந்து பரவிவிடும் என்பது உறுதி” என்று சிநேக பிரபா ரஸ்தோகி என்னும் வடநாட்டு அரசியல் துறை பேராசியை குறிப்பிட்டது சிந்திக்கத் தக்கதும், நினைவு கூரத் தக்கதுமாகும். (அறிஞர்கள் பார்வையில் கலைஞர் : 167)
பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின் நடைபெற்ற அரசு மாற்றத்தினைப் பற்றி மார்க்ஸ் கீழ்க்கண்டவாறு சொன்னதையே நமக்கு நினைவூட்டுகிறது.
“பிரான்சில் வர்க்கப் போராட்டம் ஏற்படுத்ய சூழல்களும் உறவுகளும் ஒரு கோமாளித்தனமான நபர் ஒரு மாவீரனின் பாத்திரத்தை வகிப்பதைச் சாத்தியமாக்கின.”
(“… the class struggle in France created circumstances and relationships that made it possible for a grotesque mediocrity to play a hero’s part.” Marx)
மார்க்ஸின் சொற்களால், தமிழகச் சூழலைச் சொல்வோமானால், புரட்சிகரத் தமிழினத் தலைவரின் ஆட்சிப் பாத்திரத்தை ஒரு கோமாளித்தனமான நபர் வகிக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டது.
கலைஞர் எந்த இடத்தை நிறைவு செய்கிறார் என்று பார்த்தால் ஒரு புலவருடைய இடத்தை அல்ல: ஒரு சட்ட மன்ற உறுப்பினருடைய இடத்தைக்கூட அல்ல: ஓர் எழுத்தாளருடைய இடத்தை அல்ல: தந்தை பெரியாரின் இடத்தையும், அறிஞர் அண்ணாவின் இடத்தையும் அவர் நிறைவு செய்கிறார். (சாதனைச் சிகரம் கலைஞர் – கிள்ளை ரவிச்சந்திரன்: 106)
கலைஞரின் தொண்டுக்கு தமிழ்நாடே தான் ஈடு – கலைஞரின் கொள்கை உறுதிப் பாட்டுக்கு தமிழ் மக்கள் எல்லாம்தான் ஈடு – கலைஞர் அவர்கள் இதுவரை நாட்டிற்கு வழங்கியிருக்கின்ற செல்வத்திற்குத் தமிழ் நாட்டில் இருக்கின்ற செல்வம் எல்லாம் ஈடு.
– பேராசிரியர் அன்பழகன்
1967 தேர்தலில் கோட்டூர் புரத்தில் கலைஞரைக் கொலை செய்ய கொடியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு அவர் ஒரு குடிசையில் இரவு முழுவதும் தங்கி செய்தியைக் கேட்டு அண்ணா அதிர்ச்சி அடைந்து கலங்கினார்.
ஒருநாள் காஞ்சியிலிருந்து அண்ணாவுடன் நானும், அண்ணன் இளமுருகு பொற்செல்வி அவர்களும் சென்னை சென்றோம், அப்போது அண்ணா என்னிடம் சொன்னது இன்னும் எனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. (சாதனைச் சிகரம் கலைஞர் – கிள்ளை ரவிச்சந்திரன்: 111)
“அன்பில்! கருணாநிதியிடம் சொல். அவன் உயிர் அவனுக்கு மட்டும் சொந்தம் அல்ல. தமிழகத்திலே இருக்கிற பல்லாயிரக்கணக்கான உயிர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிற உயிர். எத்தனையோ நபர் கழகத்துக்கு வரலாம், போகலாம் ஆனால் ஒரு கருணாநிதியைப் பெறமுடியாது” என்று அண்ணா கூறினார். (சாதனைச் சிகரம் கலைஞர் – கிள்ளை ரவிச்சந்திரன்: 112)
– அன்பில் தர்மலிங்கம்
No comment