கழகத் தலைவர் தளபதி அவர்களைப் பாராட்டும் மாபெரும் பொதுக்கூட்டம் – 08.09.2018

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நடைபெற்ற கழகத் தலைவர் தளபதி அவர்களைப் பாராட்டும் மாபெரும் பொதுக்கூட்டம்
நாள்: 08.09.2018, இடம்: சண்முகா சாலை, தாம்பரம்.
ஆழமாக வேர் வீசி - ஆலமாக உருவெடுத்த தலைவர் தளபதி
 அவர்களைப் பாராட்டி பேசிய கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனின் பேச்சு

என்றும் நினைவில் நிலைத்திருக்கின்ற ஒப்புயர்வற்ற முத்தமிழறிஞருக்கு என்னுடைய புகழ் வணக்கம். 
‘தெற்கிலிருந்துதான் எதுவும் முதலில் தொடங்கும், ஆனால் எப்பொழுதும் பிந்திப்போவது தெற்குதான்’. இது வியட்நாம் நாட்டில் வழங்கப்படுகின்ற மிகப் பிரபலமான பழமொழி. அந்தப் பழமொழியை அந்த நாட்டின் புரட்சி வீரன் ஹோசிமின் அடிக்கடி தன்னுடைய மக்களுக்கு நினைவுப் படுத்திப் பேசுவானாம். அவனுடைய கருத்துப்படி வியட்நாமின் தெற்குப்பகுதி கடைசிவரை சுதந்திரம் பெறவில்லை. ஆதலால் அந்தப் பழமொழியை அவன் அடிக்கடி நினைவூட்டுவதுண்டு.
எதுவும் தொடங்கப்படுகின்ற உயிர் சக்தி தெற்கு திசைக்கே உண்டு என்பதை அந்தப் பழமொழி சுட்டிக்காட்டினாலும், தொடங்கப்படுகின்ற எதுவும் தெற்கு திசை என்றாலும், தொடங்கியதை தொடர்ந்து முடிப்பதும் தெற்கு திசைதான் என்று முழங்கிய, ‘தெற்கிலிருந்து உதித்த சூரியன்’ இன்றைக்கு பேரறிஞர் அருகிலே நீள்துயில் கொண்டிருக்கின்ற, ஒப்புயர்வற்ற தலைவருடைய தொண்டர், பேரன்பிற்குரிய அண்ணன்  தா.மோ.அன்பரசன் அவர்களால் மிகச் சிறப்பாகவும், சீரோடும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெறுகின்ற, கழகத் தலைவர் பாசத்திற்குரிய நம்முடைய தளபதி அவர்களைப் பாராட்டும் மாபெரும் இப்பொதுக்கூட்டத்தில் பேசுவது மிகுந்த மகிழ்ச்சி. 
நிலவிலே காலடி வைப்பதற்கு முதலில் ஆணை கொடுக்கப்பட்டது அல்டிரினுக்குத்தான். ஆனால் அவன் ஒரு கணம் தாமதித்ததால் நிலவிலே காலடி எடுத்து வைக்கின்ற பெருமை நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு கிடைத்தது. முதல் அடி என்பது எப்பொழுதும் சரித்திரத்தில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படுவது. அப்படி தளபதி அவர்களுக்குத் தமிழகத்தில் முதன் முறையாக பாராட்டுவிழாவை ஏற்பாடு செய்து, இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தை சரித்திரத்தின் பொன்னெழுத்துக்களில் பொறித்திருக்கின்ற, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளர், ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணன் தா.மோ.அன்பரசன் அவர்களே, தலைவர் ஒரு முறை வேடிக்கையாகச் சொன்னார், ‘என்னுடைய உடன்பிறப்புகள் தூங்கினால் கும்பகர்ணன், எழுந்தால் இந்திரஜித்’ என்று. வருகின்ற இடைத் தேர்தலிலே இந்திரஜித்தாக பணியாற்ற இருக்கின்ற, அன்பு கழக உடன்பிறப்புகளே - அனைவருக்கும் என்னுடைய வணக்கம்.
பல ஆண்டுகளுக்கு முன்பாக, ரோம் நகரத்தில் ரோம் நாட்டு பிரபு ரோஹன் ஏற்பாடு செய்திருந்த விருந்து ஒன்றில், அழைப்பில்லாவிட்டாலும் எப்படியோ கலந்துகொண்ட இளைஞன் ஒருவன், விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்த மற்ற பிரபுக்களோடு ‘கலகல’வென்று பேசிக்கொண்டிருந்தானாம். அந்த இளைஞனின் நடவடிக்கையை கவனித்த ரோஹன் பிரபு, ‘யார் இந்த இளைஞன் கூவிக் கூவிப் பேசிக்கொண்டிருக்கிறானே’ என்று கேட்ட பொழுது, தன்னுடைய நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ரோஹன் பிரபுவிற்கு முன்பாக வந்து நின்று, ‘பரம்பரைப் பெருமையோ, பட்டமோ, குடும்பப் பின்னணியோ இல்லை எனக்கு. ஆனால் என்னுடைய சாதாரண பெயரிலேயே அதற்கான அத்தனை பெருமைகளையும், அதற்குரிய அத்தனை மரியாதைகளையும் நான் தேடிக்கொள்வேன் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு. என்னுடைய பெயர் வால்டேர்’ என்றான். பிற்காலத்தில் புகழ்பெற்ற ஃபிரெஞ்ச் வரலாற்று ஆசிரியனாக, தத்துவவாதியாக உயர்ந்தவன் அந்த இளைஞன் வால்டேர். 
அதற்குப் பற்பல ஆண்டுகளுக்குப் பின்பாக ‘நான் தஞ்சாவூர் மாவட்டத்தில், திருக்குவளை என்கின்ற சாதாரண கிராமத்தில், ஒரு சாதாராண இசைக் குடும்பத்திலே பிறந்தவன். மிகச் சாதாரணமான விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன். அப்படி வந்தவனாகிய நான், இன்றைக்கு மிட்டா, மிராசுதாரர்கள் எல்லோருக்கும், அவர்கள் அடிபணிய வேண்டும் என்கின்ற சட்டத்தை இயற்றுகின்ற இடத்திலே இருக்கின்றேன்.  சட்டத்தை இயற்றுகின்ற இடத்திலே இருக்கிறேன் என்று ஏன் பெருமிதமாகச் சொல்கிறேன் என்றால், அந்த சட்டங்கள் ஏழைகளை வாழ்விக்க, பாட்டாளிகளை உயர்விக்க, ஒடுக்கப்பட்டவர்களை ஏற்றமடைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற சட்டங்கள்! ஆகவே அந்த இடத்திற்கு - மிட்டா, மிராசுதாரர்களுக்கு சட்டமிடுகின்ற இடத்திற்கு வந்ததை நான் பெருமையாக, உண்மையிலே மகிழ்ச்சியாக நினைக்கின்றேன்.’ என்று சொன்னார் ஒப்பற்ற ஒரு தலைவர், அவர் முத்தமிழறிஞர் கலைஞர்!  
சில நாட்களுக்கு முன்பாக, ‘இன்று நான் புதிதாகப் பிறந்தேன். என் தமிழகம் புதிதாக பிறக்கட்டும்’ என்று அறிவித்துக்கொண்ட ஒரு தலைவர், ‘நான் கலைஞர் இல்லை, அவரைப்போல எழுதவோ, பேசவோ அல்லது கூட்டத்தைக் கட்டிப்போடுகின்ற அளவிற்கு சொல்லாற்றலோ எனக்கு இல்லை. ஆனால் எனக்கு உழைக்கத் தெரியும். உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்கின்ற, நம் தலைவர் கலைஞர் எனக்குக் கொடுத்த முத்திரையின்படி எனக்கு உழைக்கத் தெரியும்’ என்று அறிவித்தார். 
ஃபிரெஞ்ச் வரலாற்று ஆசிரியர் வால்டேர், முத்தமிழறிஞர் கலைஞர், இன்றைய கழகத் தலைவர் தளபதி, இந்த மூன்று பேரின் குரல்களையும் ஒரு நேர்கோட்டில் வைத்துப் பாருங்கள். மூன்று குரல்களையும் இணைக்கின்ற ஒரே சரடு தனித்தன்மை, தன்னம்பிக்கை. தன்னுடைய முன்னோர்கள் தமக்குக் கொடுத்த செரிவான காலடிகளை எடுத்துக்கொண்டாலும் தன்னம்பிக்கையுடன், தன்னுடைய தகுதி எது, தனக்கு முன்னால் இருக்கின்ற உலகம் எது என்பதைத் தெரிந்திருக்கின்ற நிதானத்தினாலும், தன்னம்பிக்கையாலும் வருகின்ற குரல் அந்தக் குரல். 
தலைவர் கலைஞர், பேரறிஞர் அண்ணா பங்குபெறாத ஒரு மாநாட்டில் தலைமையேற்றபோது, ‘அண்ணா அவர்கள் சென்ற மாநாட்டிலே வெண்ணையாக இருந்தார். இந்த மாநாட்டிற்கு என்னை தலைமை தாங்கச் செய்திருக்கிறார். வெண்ணையாக இருந்த இடத்தில், இன்றைக்கு நான் சுண்ணாம்பாக உங்கள் முன்பாக நிற்கின்றேன். நான் சுண்ணாம்பாக இருந்தாலும், சுண்ணாம்பும் பயன்படாமல் போகாது. வெற்றிலையாக இருக்கின்ற கழக உடன்பிறப்புகளை, பாக்காக இருக்கின்ற பேராசிரியர் போன்றவர்களை என்னோடு இணைத்துக்கொண்டு, 	சுண்ணாம்பாக நான் பணி புரிந்தால், நல்லதொரு தாம்பூலமாக தமிழக மக்களுக்குக் கிடைப்பேன்’ என்றார். தலைவர் கலைஞர் நமக்குக் கொடுத்திருக்கின்ற தாம்பூலம்தான் நம்முடைய இன்றைய கழகத் தலைவர் தளபதி! 
தங்கத் தாம்பாளத்திலே வைத்துத் தளபதிக்குத் தலைவர் பதவி கொடுக்கப்படவில்லை. ‘தலைவர் கலைஞர் எப்படி பேரறிஞர் அண்ணாவிடமிருந்து, பேரறிஞர் அண்ணா எப்படி தந்தை பெரியாரிடமிருந்து வழிவழியாக பகுத்தறிவு, சுயமரியாதை, சமூகநீதி, சமதர்மம், ஆகியவற்றை எடுத்துக்கொண்டாரோ, அந்தக் காலடித் தடத்திலேயே நான் பயணிப்பேன்’ என்று அறிவித்துக்கொண்டு கடும் உழைப்பின் மூலம் தலைவரானவர் அவர்! 
பேரறிஞர் அண்ணாவின் இறப்பிற்குப் பின்பான ஒரு மாநாட்டிலே, ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம், ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்’ என்று தொடங்கி, ‘மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற ஐம்பெரும் முழக்கங்களை தலைவர் கலைஞர் அறிவித்தார். நம்முடைய கழகத் தலைவர் தளபதி ஈரோட்டில் நடந்த திருக்குறள் மாநாட்டிலே, மிக உருக்கமாக தலைவர் இருந்தும் கலந்துகொள்ள முடியாத மாநாடு என்பதை உணர்வோடு சுட்டிக் காட்டி, அவருடைய இடத்தில் நின்று, அவருடைய வழிகாட்டுதலின்படி, ஐந்து கொள்கை முழக்கங்களை நமக்குத் தந்திருக்கின்றார். புதிய உலகத்தின் தலைவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதற்கான புத்துணர்ச்சி முழக்கங்கள் அவை!
நெப்போலியன் ஒருமுறை மிகப் பெருமிதத்தோடு ‘நான் எண்ணியதைவிட, நான் விரும்பியதைவிட, நான் எதிர்பார்த்ததைவிட அதிகப்படியான அதிகாரத்தை என்னிடம் மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.’ என்று சொன்னான். ஒருபொழுதும் பதவியை அதிகாரம் என்று எண்ணியவரல்ல தளபதி. சென்னையின் மேயராகப் பொறுப்பேற்ற அந்தக் கணத்திலே ‘மேயர் பதவி என்பது எனக்கு பதவியோ, அதிகாரமோ அல்ல - பொறுப்புணர்வு’ என்று சொன்ன அந்தத் தலைவர், அந்தப் பொறுப்புணர்வோடு, நிதானத்தோடு புதிய உலகை படைக்க வேண்டும் என்கின்ற உத்வேகத்தோடு, ‘கலைஞரின் கட்டளைகளைக் கண்போல காப்போம்! தமிழரை உயர்த்தித் தமிழை வாழ வைப்போம்! அடக்குமுறையை அடித்து நொறுக்குவோம்! மதவாதம் மாய்த்து, மானுட நேயத்தை வளர்ப்போம்! வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம்!’ என விண்ணதிர ஐந்து முழக்கங்களைத் தளபதி முன்வைத்தபோது, இந்த புதிய உலகத்திற்கான தலைவர் இவர் தான் என்று தமிழகத்தின் இளைஞர்களும், யுவதிகளும் எதிர்பார்க்கின்ற ஒரு அருமையான விடியல் தொடங்கியது. இரண்டு மூன்று சரித்திரச் சம்பவங்களைச் சான்று காட்டி தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் அவர்களுடைய அடியொற்றி, இன்றைக்கு அகில இந்திய அளவிலும், இந்தியப் பிரதமரைத் தீர்மானிக்கின்ற அளவிற்கு ஒரு சிறந்த தலைவராக நம்முடைய தளபதி எப்படி வளர்ந்திருக்கிறார் என்பதைச் சுட்டுகிறேன்.
தலைவருடைய வாழ்க்கையில் நடந்ததாகச் சிலாகித்து சில சம்பவங்களை அவரே பகிர்ந்துகொண்டிருக்கிறார். தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், அப்போதைய பொதுப்பணித்துறை அமைச்சர், இன்றைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர், அன்பிற்குரிய அப்பா துரைமுருகனிடம் உரையாடிக்கொண்டிருந்தபொழுது நடந்ததாகப் பின்வரும் சம்பவத்தைத், தலைவர் பதிவு செய்திருக்கிறார். 
மரியாதைக்குரிய பொருளாளர் தலைவர் கலைஞரிடம் ‘எனக்கு ஒரு ஆசை. நீங்கள் குடும்பத்தினர் அத்தனை பேரோடும் சேர்ந்து வசிக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு நல்ல இல்லத்தை உங்களுக்குக் கட்டித்தர வேண்டும்.’ என்று சொன்னாராம். தலைவர் சொல்கிறார், ‘சொந்த வீட்டில், என்னுடைய, கோபாலபுரம் வீட்டில்தான் இருப்பேன் என்கின்ற என் கொள்கைக்கு மாறாக, என்னுடைய தம்பி துரைமுருகன் இந்த கோரிக்கையை என்னிடத்தில் வைத்தபோது, நான் சிரித்துக்கொண்டே ‘அப்படியா சரி’ என்று சொல்லிவிட்டேன். மிகத் துரிதமாகப் பணிகளைத் தொடங்கிவிட்டார் துரைமுருகன். அவ்வப்பொழுது என்னையும் அழைத்துச் சென்று அந்தப் பணிகளைக் காட்டுவார். இந்த இடத்தில் நீச்சல்குளம், அந்த இடத்தில் பூங்கா, இந்த இடத்தில் சலவைக் கற்கள் என்றெல்லாம் அந்தப் பணிகள் குறித்துச் சொல்லப்படுவதுண்டு. நானும் சிரித்தபடியே அதனைக் கேட்டுத் திரும்பி வருவேன். ஒரு நாள் ‘பணி நிறைவடைந்துவிட்டது, நீங்கள் குடும்பத்தோடு குடியேறலாம்’ என்று அவர் என்னிடம் சொன்னபோது, நான் சிரித்துக்கொண்டே ‘இந்த இல்லம் எனக்கு அல்ல, இந்த இல்லம் அண்ணல் அம்பேத்கருக்கானது. அண்ணல் அம்பேத்கர் பெயரில் ஏற்படுத்தப்பட்டிருக்கிற பல்கலைக்கழகத்தின் அலுவலகம் அமைந்திருக்கின்ற இடத்திற்கான இல்லம்தான் இது என்றேன்.’ 
தன்னுடைய வாழ்நாள் முழுவதும் சமூகநீதி, பகுத்தறிவு, சமதர்மம், சமத்துவம் என்ற நான்கிற்காகவும் ஓய்வின்றி, சமரசமின்றி உழைத்த ஒரு தலைவர், தன் வாழ்வின் சுக துக்கங்களைத் தள்ளி வைத்துவிட்டு, அண்ணல் அம்பேத்கருக்கென்று ஒரு இல்லத்தை உருவாக்கிய அந்தக் கணத்தை சரித்திரத்தின் பொற் கணமாக நான் நினைத்துப் பார்க்கின்றேன். சமூகநீதி என்கின்ற கொள்கையிலே ஒரு பொழுதும் தலைவர் சமரசம் செய்துகொண்டதே இல்லை. அதனை அடியொற்றி தளபதி எப்படி நடைபோடுகிறார் பாருங்கள்! 
சமூகநீதி என்று வரும்பொழுது, தீண்டாமைக் கொடுமையை எதிர்த்து அண்ணல் அம்பேத்கருடைய வழியில், தந்தை பெரியாரின் அடியொற்றி அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்கின்ற வரலாற்று சிறப்புமிக்க சட்டத்தைக் கொண்டுவந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த சட்டம் வந்தபொழுது பல சர்ச்சைகள் எழுந்தன. ஒரு நிகழ்ச்சியை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்திய தேசிய காங்கிரசின் தமிழ்நாட்டுப் பழம்பெரும் தலைவரும், அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினருமான திரு.இளையபெருமாள் நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்கின்றார். அந்த அறிக்கை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று சொல்லப்பட்டதன் பின்னணியில் அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைதான் இருக்கிறது என்பதை தெளிவாகச் சுட்டுகின்றது. அந்த அறிக்கையை தன்னுடைய ஆய்வுக்கும், விவாதத்துக்கும் எடுத்துக்கொண்ட பெங்களூருவைச் சேர்ந்த குப்புசாமி என்கின்ற சமுதாயவியல் அறிஞர், ‘இந்த அறிக்கை திராவிட முன்னேற்றக் கழக பாணியில் எழுதப்பட்ட அறிக்கை (It is a DMK Pattern Report)’ என்றார். அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்த ஒரு காங்கிரஸ்காரருடைய அறிக்கை, திராவிட முன்னேற்றக் கழக பாணியிலே இருக்கின்ற அறிக்கை என்று சொல்லப்படுவது, நம்முடைய முத்தமிழறிஞருக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எத்தனை பெருமை! ‘திராவிட முன்னேற்றக் கழகம் தன்னுடைய செயற்பாடுகளை தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலம் என்கிற அளவிலே நிறுத்திக்கொள்ளக்  கூடும். ஆனால் அதனுடைய தத்துவம் ஒருநாள் இந்தியா முழுமைக்கும் பரவி வியாபிக்கும், அதிலே மாற்றுக்கருத்து இல்லை, இது உறுதி’ என்று இதனைப் பின்பற்றித் தெரிவித்தார் சிநேக பிரபா ரஸ்தோகி என்னும் வடநாட்டு அரசியல் துறை பேராசியை. 
இத்தனை கட்டுக்கோப்போடு சமூகநீதியைத் தன்னுடைய இரு கண்கள் எனப் பாவித்த முத்தமிழறிஞரிடமிருந்து அதனை அப்படியே, மாரத்தான் தொடர் ஓட்டத்தில் கையிலே எடுக்கின்ற தீப்பந்தமென ஏந்திக்கொண்டவர்தான் நம்முடைய தங்கத் தளபதி! 
அருந்ததியருக்கு உள் ஒதுக்கீடு என்பது, இட ஒதுக்கீட்டின் நீண்ட நெடிய பயணத்தில் மிக முக்கியமான ஒரு மைல் கல். தலைவர் கலைஞர் இட ஒதுக்கீட்டில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளவில்லை என்பதற்கு இன்னும் ஒரு எடுத்துக்காட்டு உண்டு. பிரதமர் இந்திராகாந்தி அம்மையாரைத் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளப் பெண்மணி பேட்டி காண்கிறார். ‘தமிழ்நாட்டிலே பனிரெண்டு தங்கப்பதங்கங்கள் வாங்கியிருக்கின்ற ஒரு பெண்ணுக்கு, சாதியின் அடிப்படையில் அந்த இடம் மறுக்கப்பட்டுவிட்டது. இது எவ்வளவு கொடுமையான விஷயம்’ என்று பத்திரிகையாளர் கூறியவுடன், இந்திராகாந்தி அம்மையாரும் அதற்காக மனம் வருந்தி, ‘புத்திசாலித்தனம் ஊக்குவிக்கப்பட வேண்டும். இதிலே சாதியைப் புகுத்திவிடுவது தவறு’ என்று அறிவிக்கின்றார். அன்றைய தினம் தமிழக முதலமைச்சராக இருந்தவர் கலைஞர். இந்திராகாந்தி அம்மையாரோடு நல் உறவு கொண்டிருந்த காலகட்டம் அது. ஆனாலும் சற்றும் கலங்காமல் தலைவர் கலைஞர் ‘பனிரெண்டு தங்கப்பதக்கங்களைப் பெற்ற ஆணோ, பெண்ணோ, தமிழ்நாட்டில் இருக்கின்ற பொது சதவிகிதமான முப்பத்தி ஒன்று சதவிகிதத்திற்குள் அவர்கள் ஏன் வரவில்லை என்றுதான் பிரதம மந்திரி கேள்வி கேட்கலாமே ஒழிய, வகுப்பு வாரி உரிமையைக் கேள்வி கேட்பது என்பது மிகத் தவறு. சாதிய ரீதியாக இந்திராகாந்தி அம்மையார் எவ்வாறு வகுப்புவாரி உரிமையின் புரிதலின்றி இதை அணுகினார் எனப் புரியவில்லை’ என்று தன்னுடைய எதிர்ப்பைத் திடமாகப் பட்டவர்த்தனமாக பதிவு செய்தார்.
நினைவூட்ட வேண்டிய ஒரு தொடர்ச்சி - நாமக்கல் மாவட்டத்திலிருந்து உதவி பேராசிரியை பணிக்கான நியமனம் வேண்டி அருந்ததிய இனத்தைத் சேர்ந்த ஒரு பெண், தளபதிக்கு ஒரு கடிதம் எழுதுகின்றார். ‘நான் உதவிப் பேராசிரியை பணிக்கு முழுவதுமாக தகுதி பெற்றிருக்கிறேன். அருந்ததியர் இனத்தைச் சேர்ந்த எனக்கு உள் ஒதுக்கீட்டிலே அந்த வேலை வாய்ப்பை வழங்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு வந்த கடிதம் பார்த்து தளபதி (உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபொழுது), உள் ஒதுக்கீட்டின்படி உடனடியாக அவருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுத்து, சமூகநீதி என்கின்ற நீண்ட நெடிய தொடர் பயணத்தின் தீப்பந்தத்தைத் தான் ஏந்திக்கொண்டு நடக்கின்றேன் என்பதை நிரூபணம் செய்கின்றார். 
இந்தியன் எக்ஸ்ப்ரஸ் நாளேடு தலைவர் கலைஞரிடம், ‘நீங்கள் தளபதியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று ஒரு கேள்வி கேட்கின்றது. ‘ஒரு தந்தையாக நான் தளபதிக்கு எந்தவிதமான கடமையும் ஆற்றவில்லை. ஆனால் ஒரு மகனாக எல்லா கடமைகளையும் அவன் எனக்கு சரிவர ஆற்றியிருக்கிறான்’ என்று பதிலுரைத்தார் கலைஞர். அவர் ஆற்றிய அத்தனை கடமைகளிலும் மிகத் தலையாயக் கடமை, கலைஞருக்கு மெரினா கடற்கரையில் பேரறிஞருக்கு அருகில் நீள்துயில் கொள்கின்ற அந்த இடத்தை சற்றும் நிதானம் தவறாமல், ஒரு தலைவருக்கே உரிய பொறுப்புணர்வோடு பெற்றுத் தந்ததுதான். 
ஆப்ரஹாம்லிங்கன் குறித்து மார்க் டெர்ரான் எனும் அமெரிக்க எழுத்தாளன், ‘இரும்பிலே செய்யப்பட்டிருந்த கொள்கையைப் பேசுபவனாக இருந்தாலும், மிருதுவான மனித மலர்போன்ற இதயத்தைக் கொண்ட தலைவன் அவன்’ எனக் குறிப்பிட்டார். தளபதி அன்று கலங்கி அழுத அந்த கணத்தில் நான் இந்த வாசகத்தைத்தான் நினைவு கூர்ந்தேன். அது மட்டுமல்ல, அதற்குப் பின்பாக தொடர்ச்சியாகத் தலைவர் கலைஞருக்கு நினைவஞ்சலி, நினைவேந்தல் கூட்டங்கள் நடத்துகிறார். இந்திய சரித்திரத்தில் மட்டுமல்ல, உலக சரித்திரத்திலும்கூட எந்தத் தலைவருக்கும் இப்படித் தொடர்ச்சியாக, கொள்கை ரீதியாக, தந்தை மகற்காற்றும் நன்றி என்பது வேறு, ஒரு கழகத் தொண்டனாக ஒரு தலைவருக்கு நடத்தப்பட்ட நினைவஞ்சலிக் கூட்டங்கள் என்பது எங்கும் கிடையாது. தொடர்ச்சியாக நடைபெற்ற புகழஞ்சலிக் கூட்டங்களின் சிகரமாக அகில இந்திய தலைவர்கள் அனைவரையும் அழைத்து ‘தெற்கிலிருந்து உதித்த சூரியன்’ என்கின்ற மிக முக்கியமான முத்தாய்ப்புக் கூட்டத்தையும் நடத்திக் காட்டினார் நம் தளபதி!
எந்த வரலாற்றுச் சம்பவத்தோடு அதை ஒப்பிடலாம் என்றால், தேசிய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவர், ருஷ்ய அதிபர் லெனினின் நெருங்கிய நண்பரும், ரேடிகல் டெமாக்ரடிக் கட்சித் தலைவருமான எம்.என்.இராய், 1941 ஆம் ஆண்டு தந்தை பெரியாரைச் சந்தித்து, நாஜிகளுக்கு எதிராக காங்கிரஸ் அல்லாத அத்தனைபேரையும் சேர்த்து மிகப்பெரிய கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்வதற்கு முயற்சி செய்தார். அதனை ஒத்திருந்தது தளபதி அத்தனை தலைவர்களையும் அழைத்து, அன்றைக்கு மதவாதத்திற்கு எதிராக அறைகூவல் விடுத்து, அதே சமயம் ஒப்புயர்வற்ற தலைவருக்குப் புகழ் அஞ்சலியையும் நடத்திய அந்த நிகழ்ச்சி. 
ஒரு தலைவனாகப்பட்டவன், கொள்கை வழியிலே, கொள்கைக்காக போராடி, எப்பொழுதும் போர்க்களத்தை மட்டுமே எதிர்கொண்டிருந்தால் மட்டும் போதுமா? எது சரி, எது தவறு, எப்பொழுது முன்னேற வேண்டும், எப்பொழுது சற்றுப் பதுங்கிப் பாய வேண்டும் என்றெல்லாம் தெரிந்திருக்க வேண்டியவனும் அல்லவா! அதற்கும் இரண்டு உதாரணங்கள் இதோ:
தலைவர் கலைஞர் வாளும் கேடயமும் என்றொரு புத்தகத்தை எழுதுகின்றார். புத்தகம் எழுதப்பட்டது மிசாவை ஒட்டிய காலகட்டத்தில். காவல்துறையினரால் அப்புத்தகம் பறிமுதல் செய்யப்படுகிறது. அந்தப் புத்தகத்தைப் பற்றி தலைவர் நெஞ்சுக்கு நீதியிலே பகிர்ந்து கொண்டிருக்கிறார். எமெர்ஜென்சி காலகட்டம் - அதனை எதிர்த்த அரசியல் தலைவர்கள் பெரும்பான்மையோர் கைது செய்யப்பட்டிருந்த அந்த காலகட்டத்தில் - அவர்களுக்கு ஆதரவாக அதனை எதிர்த்துக் கூட்டங்கள், கட்டுரைகள், முழக்கங்கள் என்று அன்றைய முதல்வர் கலைஞர் செயலாற்றிய காலகட்டமது. சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கண்டித்து, அன்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஏ.ஆர்.மாரிமுத்து முன்மொழிய, கே.டி.தங்கமணி என்பவர் வழிமொழிய ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விவாதத்திற்கு வருகிறது. விவாதத்தின் போது ஒரு அ.தி.மு.க உறுப்பினர் எழுந்து, ‘எங்கு பார்த்தாலும் எமெர்ஜென்சியை எதிர்த்து செயற்குழு, பொதுக்குழு, பத்திரிகையாளர் சந்திப்பு இவற்றிலெல்லாம் பேசுகிறீர்களே, அதை ஏன் ஒரு தீர்மானமாக இந்த சட்டமன்றத்தில் நீங்கள் நிறைவேற்றக்கூடாது?’ என்று கேட்கின்றார். ஆட்சி கண்டிப்பாக கலைக்கப்படுமல்லவா, அதற்காக. தலைவர் கலைஞர் எழுந்து ‘போர்க்களத்திலே நிற்கின்ற வீரனுக்குத் தெரியும், எந்தக் கையில் வாளேந்துவது, எந்தக் கையில் கேடயத்தைத் தாங்குவது’ என்று மிக சாமர்த்தியமாகப் பதிலளிக்கிறார். 
அதேபோல தளபதி அவர்கள் தலைவராகப் பொறுப்பேற்றவுடன், ‘நான் இந்த உலகத்தைப் புதிதாகப் பார்க்கின்றேன். எனக்கு ஒரு நல்ல இனிமையான கனவு இருக்கிறது’ எனத் தொடங்கி, ‘எனக்குப் பின்பாக வரும்படி நான் உங்களை அழைக்கவில்லை. என்னோடு இணைந்து வாருங்கள்.’ என்றழைத்து, ‘நாம் முன்னேற்றப் பாதையிலே தொடர்ந்து முன்னேறுவோம். தேவைப்பட்டால் சில அடிகள் பின்னோக்கி வைக்கவும் வேண்டும்’ எனச் சொல்லிப் பதுங்கிப் பாய்தலின், நிதானத்தின் வலிமையை அடிக்கோடிடுகிறார். இயற்கையின் சமன்பாட்டின்படி பதுங்கிப் பாய்வதை அன்றைக்குத் தலைவர் கலைஞர் ‘எந்தக் கையில் வாளேந்துவது, எந்தக் கையில் கேடயம் ஏந்துவது’ என்று சொல்லியதை, மிக அழகாக ‘தேவைப்பட்டால் சில அடிகள் பின்னோக்கி வைக்கவும் வேண்டும்’ என்று நம் தலைவர் தளபதி ஒரு வாக்கியத்திலேயே சுட்டியதாகவே நான் கருதுகிறேன். 
  திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல, சமுதாய மறுமலர்ச்சி இயக்கம். அதையும் தாண்டி திராவிட முன்னேற்றக் கழகம் என்பது ஒரு பாசமிக்க, குடும்ப உணர்வோடு கூடிய மிகப்பெரிய ஆலமரம். தலைவர் கலைஞர் தன்னுடைய உடன்பிறப்புகள் மீது, அவர்களுடைய உடல் நலத்தின்மீது, அவர்களுடைய குடும்ப நிகழ்வுகளின்மீது அப் பாச உணர்வோடு, ஒரு குடும்பத் தலைவராக மாறாத அக்கறை கொண்டிருந்தவர். 
1980 ஆம் ஆண்டு சங்கரன் கோவில் சுப்பையா எனும் சட்டமன்ற உறுப்பினர் கார் விபத்தில் மரணமடைகின்றார். இரங்கல் தெரிவிப்பதற்காகச் சென்ற தலைவர் கலைஞர் ‘சங்கரன் கோவில் சுப்பையா குடும்பத்தை திராவிட முன்னேற்றக் கழகம் சுவீகரித்துக்கொள்ளும்’ என்று அறிவித்தார். அப்படி அறிவித்ததோடு மட்டுமல்லாமல் சுப்பையாவின் சகோதரர் தங்கவேலுவுக்குச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பும், மந்திரி பதவியும் கொடுத்து அழகு பார்த்தவர். கழகத்தின் மூத்த முன்னோடி சி.பி.சிற்றரசு மேலவைத் தலைவராக இருந்தவர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் ஒரு அருமையான சிலையை தலைவர் கலைஞர் சி.பி.சிற்றரசுவிற்கு வடிக்கச் செய்தார். சி.பி.சிற்றரசு ஆஸ்திரேலியா சென்ற சமயத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற செய்தியைக் கேள்விப்பட்டு, ஆஸ்திரேலிய தூதரகம், வழியாகத் தொடர்புகொண்டு, பிரிஸ்பேனில் மருத்துவமனையில் இருந்த சிற்றரசுவிடம் தொலைபேசியிலே பேசிய பிறகு தூங்கச் சென்றவர்தான் நம்முடைய கலைஞர். கழகத்தின் மூத்த தலைவர் என்.வி.என்.நடராஜன் உடல் நலம் குன்றியிருந்த சமயம். சென்னை மருத்துவர்களைவிட சண்டிகரிலிருந்து ஒரு மருத்துவர் வந்து சிகிச்சை அளித்தால் நல்லது என்று சொல்லப்படுகிறது. அதற்குரிய ஏற்பாட்டை உடன் செய்தவர் கலைஞர். 
இதனுடைய நீட்சியாக நம்முடைய கழக உடன்பிறப்புகளை எப்படி குடும்ப உறுப்பினர்களாகப் பாவித்து, அவர்களுக்கு ஒன்று என்றால் துடித்து நிற்கின்ற தலைவராக நம்முடைய தளபதி இருக்கிறார் என்றால், சென்னை கிழக்கு மாவட்டத்தைச் சார்ந்த 68 ‘அ’ வட்டக் கழகச் செயலாளர் லாசர் மறைந்துவிட்டார். உடனடியாக விரைந்து சென்று அந்த குடும்பத்துக்கு ஆறுதல் சொல்கிறார் தளபதி.
ஒரு தலைவன் தன்னுடைய வழிகாட்டிகளாக இருக்கின்ற தலைவர்களிடமிருந்து கொள்கைப் பிடிப்புகளை மட்டுமல்ல, அவர்கள் விட்டுச் செல்கின்ற, அவர்கள் நமக்கு கையளித்துச் செல்கின்ற மானுடப் பன்புகளையும், நேயமான விழுமியங்களையும் - திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒரு குடும்பமாக கட்டிக் காக்கின்ற உணர்சிமிகு உறவுப் பந்தத்தையும் கையெடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு முழு உதாரணமாக தளபதி நம்மோடு இருக்கிறார்!
சிரிக்கத் தெரியாமல் போனதால் ஒரு சாம்ராஜ்யத்தையே இழந்தான் ஜெர்மானியச் சக்கரவர்த்தி வில்லியம் கெய்சர் என்பார்கள். ஜார்ஜ் பெர்னாட்ஷாவாலேயே வில்லியம் கெய்சரை சிரிக்க வைக்க முடியவில்லை என்று கூட சொல்லப்படுவதுண்டு. ஆனால் எந்த இக்கட்டான சமயத்திலும் தலைவர் கலைஞர் தன்னுடைய நகைச்சுவை உணர்வைச் சற்றும் இழந்ததில்லை. 
ஒரு முறை நம்முடைய மாநில சுயாட்சி கொள்கை, குறித்த விவாதம் வரும்பொழுது, மாநிலத்திற்கும் மத்திய அரசிற்குமான அதிகாரப் பகிர்வுகளுக்காக ராஜமன்னார் கமிட்டி அமைக்கப்பட்டது. இன்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் பெரிதும் பாராட்டி வியக்கின்ற, அந்த ராஜமன்னார் கமிட்டியை அமைத்தவர் கலைஞரே! அது குறித்த விவாதம் அவையிலே வருகிறது. ஜேம்ஸ் என்கின்ற சட்டமன்ற உறுப்பினர் எழுந்து ‘இந்த ராஜமன்னார் கமிட்டி என்பது one side love – ஆகத்தான் இருக்கின்றது.’ என்கிறார். சற்றும் தாமதிக்காமல், ‘ஒரு தலைக் காதலிலே உறுப்பினர் ஜேம்ஸ்க்கு இருக்கின்ற அனுபவத்தைப் போல, நான் கண்டதில்லை’ என்கிறார் கலைஞர். சபை அதிர்கிறது.
தலைவர் கலைஞருக்கும், கருத்திருமனுக்கும் அடிக்கடி விவாதங்கள் நடப்பதுண்டு. ‘கருத்திருமனோடு நடந்த விவாதத்தில் உங்களால் மறக்கமுடியாத, நீங்கள் கொடுத்த பதில் என்ன?’ என்று கேட்டதற்கு, தலைவர் சொல்கிறார், ‘கருத்திருமன் ஒரு முறை என்னைப் பார்த்து அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று முழங்குவீர்களே, இப்பொழுது என்ன சுடுகாட்டிலா உட்கார்ந்திருக்கிறீர்கள்?’ என்று கேட்டார். நான் அமைதியாகச் சொன்னேன் ‘இல்லை உங்களோடு உட்கார்ந்திருக்கிறேன்’ என்று! 
ஒருமுறை தஞ்சை மாவட்டம் நன்னிலம் பகுதியிலே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு தோழர் சமூக விரோத சக்திகளால் படுகொலை செய்யப்படுகிறார். அந்தப் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்துவிட்டு இரங்கல் கூட்டத்தில் பங்குகொண்ட அய்யா தா.பாண்டியன், அதற்குப் பின்பாக தம்முடைய கட்சித் தொண்டர்களிடம் பேசும்போது ‘இனிமேல் காவல்துறையை நம்பிப் பயனில்லை. நம்முடைய தொண்டர்கள் அத்தனை பேரும் வேல்கம்பு, கத்தி முதலியவற்றைத் தற்காப்புக்காக வைத்துக்கொள்ள வேண்டும்’ என்று பேசினாராம். இந்த செய்தியை நண்பர்கள் சிலர் கலைஞரிடம் சொன்னபோது, ‘தா.பாண்டியன் எப்போது ஜான் பாண்டியன் ஆனார்’ என்றாராம்!
ஒரு தலைவர் தன்னுடைய தொண்டர்களோடு, பத்திரிகையாளர்களோடு, வெகுஜன மக்களோடு எப்படியெல்லாம் தொடர்ந்து உரையாடிக்கொண்டே வந்திருக்கிறார் என்பதற்குப் பின்வருகின்ற உதாரணத்தைப் பாருங்கள்:
பார்த்திபன் என்கிற சிறுவன் குற்றாலத்திலிருந்து ‘எனக்கு வயது பன்னிரெண்டு. நான் அரசியல் பேசலாமா? அரசியல் பற்றித் தெரிந்துகொள்ளலாமா?’ என்று கேட்கின்றான். அதற்குத் தலைவர் கலைஞர் ‘இந்த வயதில் அரசியல் என்பது அத்தை மகள் போல. பேசலாம், பழகலாம் ஆனால் தொட்டுவிடக் கூடாது.’ என்று பதிலளிக்கிறார். அதேபோல மேட்டூர் அணையிலிருந்து அனந்தப்ரியன் என்கிறவர் ‘நான் ஒரு ஏழை. தயவு செய்து என்னை உங்களுடைய ஸ்வீகாரப் புத்திரனாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று கேட்கிறார். அப்பொழுதுதான் ஜெயலலிதா அம்மையார் தன்னுடைய தத்துப் புத்திரனான சுதாகரனுக்கு ஊர் அதிர கோடிக்கணக்கில் திருமணம் செய்து வைத்திருந்த காலகட்டம். தலைவர் கலைஞர் அதற்கு ‘எனக்கு ஒரு ரூபாய் சம்பளம் கிடைக்கட்டும். அந்த அலாவுதீனின் அற்புத விளக்கு கையிலே வந்தபிறகு, நான் உங்களை தத்துப் புத்திரனாக ஸ்வீகரித்துக் கொள்கிறேன்.’ என்று கேலியும் கிண்டலுமாகச் சமகாலப் பிரதிபலிப்புடன் பதில் சொல்கின்றார்.  
தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் ஒன்றைச் சொல்கிறேன்: 
எப்படிப்பட்ட தலைவரை நீங்கள் உங்களுடைய அரசியல் தலைவராக எதிர்காலத்திற்கு தேர்ந்தெடுக்க இருக்கிறீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். இன்றைக்கு அரசியல்வாதிகள் அவதாரம் எடுத்திருக்கின்ற நடிகர்கள் அல்லது புதிது புதிதாக வருகின்ற ‘காளான் தலைவர்கள்’ அத்தனை பேரையும் ஒரு தட்டிலும், எங்களுடைய தளபதியை மறு தட்டிலும் வைத்துப் பார்த்து, சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு, சுயமரியாதை என்கின்ற இந்த நான்கு தூண்களை தலைவர் கலைஞர் வழியில் எவ்வாறு தளபதி எடுத்துச் செல்கிறார் என்பதை எண்ணிப் பாருங்கள்! மதவாத சக்திகள் தலை தூக்குகின்ற காலகட்டத்திலே, நம்முடைய முதல் அரசியல் எதிரி பாரதிய ஜனதா கட்சி என்பதை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டிய ஒரே தலைவர் - தமிழகத்தில் தளபதி மட்டுமே! ‘ஆங்கிலேயருக்கு வேறு எதுவுமே புரியாது. அவர்களுக்குப் புரிந்ததெல்லாம் அவர்களை எதிர்த்து நிற்பது ஒன்றுதான்’ என்று சொல்லப்படுவதுண்டு. அவ்வகையில் தான் தளபதி, மதவாத எதிர்ப்பைப் பிரதானமாகக் கையிலெடுக்கின்றார். பகுத்தறிவு பாதையிலே வந்தவர்கள் நாம். பிறருடைய உணர்வுகளை மதிப்பவர்கள் - ஆனால் மூட நம்பிக்கைகளை முற்றாக எதிர்ப்பவர்கள் என உறுதியாக நிற்கிறார்! அந்தத் தெளிவும், துணிவும் இங்கு வேறு யாருக்குண்டு? நாம் கடவுள் எதிர்ப்பாளர்கள் அல்ல - கடவுள் மறுப்பாளர்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, அனைத்து மதத்தினரையும் அரவணைத்துக் கொள்கிறார். இப் பெருந்தன்மை பேரறிஞரும், கலைஞரும் காட்டிய வழி அல்லவா?
அண்ணா அறிவாலயத்தில் முதன் முதலாகக் கலைஞர் திருமண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு திருமண நிகழ்ச்சிகளுக்காக விடப்படுகிறது. முதல் திருமணம் திருநெல்வேலியில் புகழ்பெற்ற அலங்கார் கந்தசாமிப் பிள்ளை இல்லத் திருமணம். சைவமுறைத் திருமணம். திருமணம் நடப்பதற்கு இரண்டு நாட்கள் முன்னதாகக் கலைஞர் மண்டபத்திற்கு வருகை தந்து, ஒரு சைவத் திருமணத்திற்கு என்னென்ன விஷயங்கள் வேண்டுமோ அத்தனையும் அங்கே இருக்க வேண்டும் என்பதைக் கவனித்துத், தானே முன்னின்று அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்தார். ஏற்பாடு செய்த தலைவர் ஒரு பகுத்தறிவுவாதி - சீர்திருத்த முறையில் திருமணம் செய்தவர். அதோடு மட்டுமா - தன்னுடைய மூத்த மகன், மகள் திருமணத்தை 1968 ஆம் ஆண்டு, ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை 4.30 – 6.00 ராகுகாலத்தில், பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் நடத்திக் காட்டியவர். ஆனால் பிறருடைய எண்ணங்களுக்கு, மத உணர்வுகளுக்கு, கொள்கைகளுக்குச் செவி கொடுத்து மதித்தவர். இந்தப் பண்பைத்தான், புரிதலோடு கூடிய Co-existence ஐத்தான் தளபதியும் ‘நாங்கள் கடவுள் எதிர்ப்பாளர்கள் அல்ல, மறுப்பாளர்கள். ஆனால் மாற்றுக் கருத்து உள்ளவர்களை மதிக்கின்ற மாண்புள்ளவர்கள்’ என்று மிக அழகாகத் தான் தலைவராகப் பதவியேற்றபோது சுட்டிக்காட்டியிருக்கிறார். 
தளபதியின் கையிலே கலைஞர் கொடுத்த தீப்பந்தத்தைத் தமிழக மக்களின் ஆதரவோடு எடுத்துச் சென்று நாளைய முதல்வராக அவர் அமர்கின்ற அந்த நாள்தான் தமிழக மக்களுக்கெல்லாம் பொங்கல் திருநாள் - கொண்டாடி மகிழும் நன்னாள்! 
ஜவஹர்லால் நேரு காலை எழுந்தவுடன் முதன்முதலாக விழிப்பது, பித்தளையால் செய்யப்பட்டு தன் மேஜை மீது வைக்கப்பட்டிருந்த ஒரு கரத்தைப் பார்த்தபடி தான். அழகும், வன்மையும், மென்மையும், வலிமையும் உடைய அந்தக் கரம் அணிகலனாக செய்யப்பட்டு அவருடைய மேஜையின் மேல் வைக்கப்பட்டிருந்த மாமேதை லெனினுடைய கரம். நேருவிற்குப் புத்துணர்ச்சியை ஊட்டிய அந்தக் கரம் போல நமக்கெல்லாம் புத்துணர்ச்சியை ஊட்டுகின்ற ஒரே ஒரு கரம் நம்முடைய கழகத் தலைவர் தளபதியினுடைய கரம்தான்! அவர் பின் நின்று, அவர் கரங்களை நாம் வலுப்படுத்துவோம். வலுப்படுத்துவதோடு, வலிமைப்படுத்துவதோடு இந்த தமிழ்நாட்டைத் தீய சக்திகளிடமிருந்து, செயல்படாத இந்த அ.தி.மு.க. அரசாங்கத்திடமிருந்து மீட்டெடுப்போம்!

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *