கவிஞர் ஈழவாணியின் – ஒரு மழை நாளும் நிசிதாண்டிய ராத்திரியும் புத்தக வெளியீட்டில் ஆற்றிய உரை.

"படைப்பாளியின் அனுபவம் மொழிக்குள் புகைபோல் நடமாடுகிறது. வாசக அனுபவமும், கவிதையில் ஒளிந்து இருக்கும் அனுபவமும் இணையாத போது இருள் ஏற்படுகிறது. ஏதோ ஒரு புள்ளியில் இணையும் பட்சத்தில் கவிதை அவளுக்கென புரிதலைத் தந்துவிட்டு  அடுத்த வாசிப்பிற்குத் தாவிவிடுகிறது" என்றொரு வாசகம் படித்தேன்.
        மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்ற ஈழவாணியின் இத்தொகுப்பிலே அவரது அனுபவம் இப்படி ஒரு புகைப்படலமாகத் தான் வியாபித்திருக்கிறது. கையில் ஸ்தூலமாகப் பிடிக்க முடியாமல், ஆனால் நம்மை முழுவதுமாக ஆட்கொள்வது தானே புகையின் இயல்பும், அழகும் - வாணியின் இந்தக் கவிதைகளும் அப்படித்தான்.
இது எனக்கான கவிதை 
இது எனக்கான கவிதை 
இதை சரிசெய்யத் தோன்றவில்லை 
என்னூடான பிழைளோடே 
சுவாசிக்க முனைகிறேன் 
எதற்கு இத்தனை ஆணவமுனக்கு 
முடிந்தால் 
பிழைகளோடே வாசித்துச் செல்லு 
உனக்கான போலி மதிப்புகளில் 
செம்மைப்படுத்த விரும்பவில்லை 
பிடிக்காது தீ மறுத்தால் கூட 
மறுபரிசீலனைக்கு இங்கே இடமில்லை 
இவை இப்படியே தான் 
தவறுதலாக எழுதப்பட்ட 
தவறுகளோடானவையாகத்தான் 
பிழைத்துச் செல்லும் ஏனெனில் 
இது எனக்கான கவிதை.
அதனைத் தொடர்ந்து ‘அந்தர ஆன்மா’ என்று ஒன்று. 
கால்களோடு சில 
காலங்களாய் பயணித்த 
கதைகளை 
ஒரு ராத்திரியும் 
பல தாழ்களை அடக்கிய 
ஒரு குறிப்பேடும் 
முடித்துவைத்திடலாமென முற்றாய் 
முயன்று முயன்று தோற்றுநிக்க 
மோச வார்த்தை வீச்சுக்களோடு 	
சரசப்பட்டுக்கிடந்த பரந்த 
மேகக்கூட்டங்களை 
ஆற்றுப்படுத்தியவாறே மேலாய் 
உயர்ந்துகொண்டிருந்தது 
கால்களை இயக்கிவந்த 
அந்தர ஆன்மா. 
இரண்டுமே மிக வலிமையான, தெளிவான குரல் - ஒரு பொதுக்குரல் தான். பெண் எழுதியது எனும் அடையாளம் வேண்டாத கவிக்குரல். ஆனால், தொடர்ந்து வருகின்ற பல கவிதைகளில் ஒரு பெண் குரல், தன் இருப்பையும், உணர்வையும், சக உயிரிகள், சமூகம் இவற்றோடு தனித்தும், உறவாடியும் கொடுத்தும், பெறுகின்ற நிலையையும் சொல்கின்றன இவரது கவிதைகள். "நட்சத்திரத் தோழர்களை நடுநிசி தாண்டிய துணையாய்த் தேடும்" இவரது தனிமை தான் இந்தக் கவிதைகள் - அவற்றின் அந்தர ஆன்மா.
	தொகுப்பு முழுவதும் தனித்துத் அலைகின்ற ஈழவாணியின் ‘அந்தர ஆன்மா’வைத் தான் நான் தரிசித்தேன். பொதுவாக ஈழத்திலிருந்து வருகின்ற கவிதைகளுக்கேயான மொழி நடையற்று, போர் பற்றிய பதிவுகளுடனும், அதே சமயம் ஒரு பொதுமைக் குணத்தோடு நம்முடன் உறவாடுகின்றன இவரது கவிதைகள்.
	முதற் பகுதி கவிதைகளில், 
	வரிக்கொரு படிமம், 
	வார்த்தைகளின் அடுக்கில், அர்த்தம் பிடிபடக் கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். ஆனால் கவிதை என்பது வெறும் அர்த்தத்தின் வெளிப்பாடு மட்டும் அல்லவே. இவற்றின் ஊடாக ஒழுகும் ஈழவாணியின் ஆன்மா, காதலுடன், விரக்தியுடன், காமமுடன், பிரிவுடன், சலிப்புடன், நம்மை நேர்கொள்கிறது. இதில் என்னைச் சட்டென்று கட்டிப்போட்ட விஷயம் அவரது தனித்த பெண் குரல் தான் உயிர்மெய், எனும் இக்கவிதையில் எப்படி ஒரு பெண் தனது காதல் செய்கின்ற விதத்தைப் பூச்சற்று அறிவிக்கிறாள் என்றால், தனது இணை குறித்த அக்கறையுடனும், அதே சமயம் தனது காமம் குறித்த தெரிவுடனும். இதுதான் - இந்தக் குரல் தான் - இவரது கவிதைகளின் தனித்தன்மை.
உயிர்மெய் 
உனை 
எப்படி காதல் செய்வது 
எப்படி காதல் செய்தால் 
பிடிக்கும் உனக்கு 
பூவாய்...
புயலாய்...
பனியாய்...
மழையாய்...
போர்விக்கவா
இரத்தமாய் ...
அணுவணுவாய் 
சதைப்பிண்டமாய் 
புசிக்கவா 
எது 
உனக்குப் பிடிக்கிறது 
உன் பார்வைகளோடு 
ஊஞ்சலாடுவதாய் கூறுவா 
என் கோமோன் கலகங்களில் 
தீர்வு நீதானெனவா 
எனையுர்வீட்டியது 
உன்னாண்மை மட்டுமென்பதா 
அறிவாயா...
அருவருப்பாயா...
அளவெடுப்பாயா...
அலகுகளால் 
சிலர் கருத்தாய் 
காதல் வெறும் காமத்தூண்டலின் திறப்பெனவா
இல்லை எனைப்போல் 
அழகான உயிர்ப்பெனப் பொழிந்து 
கவிதைகளாய் போன 
கிறுக்கல்களெனவா 
எது 
உனக்குப் பிடிக்கிறது 
அசட்டுத்தனங்களா மற்றவர் 
போலி அறிவுத்தனங்களா 
எதுவானாலும் கூறு
உனைக் காதல் செய்வதால் 
உண்மையாய் செப்பு 
உனக்காய் தயார்ப்படுகிறேன் 
ஏனெனில் 
என் மெய்க்கு உன் 
மெய்யான நேசம் 
மெய்யோடு வேண்டும் 
புணரியலில் தெளியட்டும் எமக்காய் 
புதிய உயிர் மெய்யொன்று. 
இரண்டாவது பாகத்தில் - ஈழப் போரின் விளைவு குறித்த பதிவுகள் : 
"இது குருதி எம் குருதி 
எம் அண்ணன் அக்காமார்
தம்பி தங்கைமார் 
நாம் உயிர் வாழக் கொடுத்த "அவர் உயிர்கள்"
நான் இறந்தால் கதறாதீர் 
மௌனமாகச் செலுத்துங்கள் அஞ்சலி. 
எனக்காக அல்ல - என் மண்ணுக்காக". 
இந்தப் பிரிவின் மிகச் சிறந்த கவிதை, இந்த ஆணைமுகனும் அடிமை. 
ஆனைமுகனும் அடிமை 
	புத்தனின் புனித தந்தமாம் 
	சுமக்கத் தயாராகிறது 
	யானை நம் 
	ஆனைமுகன்...
	மானங்கெட்ட யானை 
	துரத்திவிட்டுத் தம் குடியிருப்பில் 
	குந்தியிருந்து ஆட்சிபிடித்த 
	புத்தனுக்கு
	அடிபணி செய்யத் தயாராகிறது
	புத்தரை சுமக்க தயாராகிறது 
	முகமனோடு ஒரு யானை...
	நமக்குப் புரியவேயில்லை 
	நமக்கு முன்னாலேயே 
	நம் ஆனைமுகன் அடிமையாக்கப்பட்டது.
	"அன்னியன் இவன் வன்னிக்குள் 
	குருதி கலக்கிறான்" எனும் "கலப்பிலொரு இன அழிப்பு" 	கவிதையும்,
	"என் குழந்தைகளை 
	என் தேசத்தின் அழகிய செல்வங்களை 
	எந்த தேவதையாலும் 
	ஏன் ஏந்திக்கொள்ளமுடியவில்லை 
	தேவதைகள் வெறும் 
	உருவேறிய இறகு பொம்மைகள் 
	தேவவார்ப்புக்களின் ஜடங்கள் 
	அழகியேலாடுமட்டும் கொஞ்சுபவை
	குரூர வாழ்வை நகைக்க மட்டும் தெரிந்த 
	அழகிய தேவ பிண்டங்கள் 
	எனக்குத் தேவதைகள் 
	பிடிப்பதில்லை என் 
	அவலட்சணங்களால் அல்ல 
	அவை வெறும் 
	கறுப்பு முகங்களுக்கு
	அழகியல் சாயம் பூசப்பட்ட 
	போலி வார்ப்புகளென்பதாலுமே 
	தேவதைகள் எனக்குப் 
	பிடிப்பதில்லை". 
	வாணியின் மொழிநடை போர் குறித்த கவிதைகளில் எளிமையான, நேரடித்தன்மை கொண்டிருக்கின்றது. இதர கவிதைகளில் முற்றிலும், தனக்குள்ளேயே தனிமையில் சுழல்கின்ற ஒரு பூடக மொழியைக் கையாள்கின்றது. 
	எனக்குப் பிடித்த இன்னொரு சிறப்பான கவிதை - அழுத்தமான, மிகக் காத்திரமான நவீன பெண் குரலுடன் ஒலிக்கிறது. 
சீதைக்கும் சிறந்திருப்பான் ராவணன்
சீதைக்கும் இராவணன் 
சிறந்திருப்பான்...
அழகிய தேசமொன்றை 
அக்னி மூட்டியழித்து 
அடங்காக்கிரமம் பண்ணி 
அழைத்துவந்து தன்னை 
ஊருக்கும் உறவுக்கும் 
ஊறற்றவளென 
உத்தமியாய் காட்ட 
தீக்குள் தள்ளிய வேளை 
ராவணன் உயர்ந்திருப்பான் 
ராமனிலும் அவள் மனதில் 
சிறைப்பிடித்தும் கண்ணியங்காத்த 
அவனெங்கே 
தீக்குள் தள்ளியெனை 
தீண்டவில்லை இவள் கற்பை 
மாற்றானென மற்றவர்க்காய் 
மார்த்தட்டும் இவனெங்கே என 
குடியான ஒருவனின் 
குடியுளரலில் புகன்ற 
சொற்கேட்டு தன்னைப் 
புக்கம்விட்டுத் துரத்துகையில் 
சீதை சிரந்தாழ்த்தியிருப்பாள் 
ராவணனின் சீர் குணத்திற்காய் 
பெண்மையைப் போற்றத் தெரிந்த 
பெருமகன் அவனென. 
இந்தக் கவிதையும் அப்படித்தான்.. 
அரக்கர் என்றால் அழகரோ 
அரக்கர் என்றால் 
அழகரோ...
சிவனின் மைந்தனோ இவன் 
சிந்தித்தானாம் அனுமன் 
இராவணன் மகன் 
இந்திரஜித்தின் அழகில் மயங்கி 
பின் அந்த அனுமன் 
மண்டோதரியைக் கண்ணுற்று 
இவரோ சீதை என சிந்தித்தானாம் 
இன்பத்திழைப்பில் இருந்தமையாலிவர் 
துன்புற்றல்லே இருப்பார் சீதை 
எனத்தெளிந்தானாம் 
ஆக 
பேரழகியான சீதையோடு 
சிறந்தவர் அழகியானமண்டோதரி பின் 
அரக்கர் என்பதேன் 
அழகில் சிறந்தோர் என்பதாலோ 
அரக்கர் என்றால் அழகரோ? 
கம்பனைக் கேள்வி கேட்க்கின்றார்.. 
"திராவிடத் தலைவனைத் தீட்டுடையோன்
ஆக்கியதேன்?"
என்று கருத்தில் வேற்றுமை இருப்பினும், கம்பரது சொல்லாட்சி, அவரது சோழ மன்னனுக்கு அடிபணியாத கம்பீரம், சீதையை ராமனை நோக்கி - என் கற்பு, தவம், இவையெல்லாம் பித்தாய்ப் போனதே -  
"உன்னை மீட்பான் பொருட்டு உவரி தூர்த்து, ஒளிர்
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர்அற
பின்னை மீட்டு உறுவனாக கடந்திலேன் பிழை
என்னை மீட்பான் பொருட்டு இலங்கை எய்தினேன்"
கேட்டுத் துடித்த சீதை சவுக்கடியாய் ஒன்றைச் சொல்கிறாள் -
	"எந்தவம் எந்நலம் என்னகற்பு நான்
	இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்
	பித்து எனல் ஆய், அவம் பிழைத்தாம் அன்றே
	உத்தம! நீ மனத்து உணர்த்திலாமையால்!

இந்த நூற்றாண்டிற்கான அதிநவீனப் பெண்ணியச் சிந்தனை இது! எனும் நேர்மையும் எனக்கும் பிடித்தவை.
"யார் பேசுகிறார்கள் என்பதைப் பொறுத்து கிரேக்கர்கள் படைப்புகளை மூன்று பெரிய வகைகளில் பிரித்தார்கள்.
1)	கதை சொல்லி தன்னிலையில் பேசினால் கவிதை (அல்லது) தன்னுணர்ச்சிப் பாடல்
2)	கதை சொல்லி தன்னுடைய குரலிலேயும் பேசி அதே சமயம் கதாபாத்திரங்களை அவர்களுடைய குரலிலும் பேச அனுமதித்தால் அது காவியம் (அல்லது) கதையாடல்
3)	கதாபாத்திரங்கள் மட்டுமே பேசினால் அது நாடகம்

மூன்று வகையானவற்றிலும் உள்ள வேறுபாட்டை இன்னொன்றின் மூலமாகவும் அறியலாம் - பேசுபவனுக்கும், கேட்பவர்களுக்கும் உள்ள உறவின் மீது கவனத்தைக் குவிப்பதன் மூலம் -
1)	காவியத்தில் வாய்மொழி ஒப்புவித்தல் நடைபெறுகிறது.  உற்றுக் கேட்பவர்களைக் கவிஞன் நேரிடையாக எதிர்கொள்கிறான்.
2)	நாடகத்தில் ஆசிரியன் பார்வையாளரிடமிருந்து மறைந்திருக்கின்றான்.  இங்கு மேடையிலுள்ள பாத்திரங்கள் பேசுகின்றன.
3)	மிகக் சிக்கலான தன்னுணர்ச்சிப் பாடல்களிலோ கவிஞன் பாடவோ அல்லது ஓதவோ செய்யும்போது கேட்பவர்களுக்குத் தன் முதுகைக் காட்டி நிற்பதைப் போல இருக்கின்றான்.  தனக்குத்தானே பேசிக் கொள்கின்ற பாசாங்கும் அங்கு உண்டு".
கம்பநாடனோ இந்த மூன்றிற்குள் பொருந்துகின்ற அற்புதமான ‘மாக்கடல்’. "காவியமும் துன்பவியல் நாடகமும் பழங்காலத்திலும் மறுமலர்ச்சிக் காலத்திலும் இலக்கியத்தின் சிகரமான சாதனைகளாகவும் செயலூக்கம் கொண்ட எந்தவொரு கவிஞனுடைய மிக உயர்ந்த வித்தகங்களாகவும் இருந்தன.  ராபர்ட் குசடிளவஇன் இரண்டு வரிக் கவிதை இது: 		
We dance round in a ring and suppose,
But the secret sits in the middle and knows	
"ஒரு மனிதனின் சொர்க்கமானது அவனது சொந்த நற்குணத்தன்மைகளே" என்றார் Ezra Pound (எஸ்ரா பவுண்ட்). ஏன் "எம் ஈழத்தைச் சிங்களத் தீ" என்றாய் பாரதியைக் கேள்வி கேட்கும் வாணி, காக்காய், குயிலை முன்வைத்து அழகிற்கு புது அர்த்தம் தேடும் வாணி, பச்சை உடம்புக்காரியான சிங்கள விதவை குறித்துக் கவலைப்படும் வாணி, (வீதியோடு சிதறிய பிணமாய்க் கிடந்த கூலிப்படை சிலதில் இவள் புருஷனுமாம்), "இப்பொழுதுகளில் எல்லாம் அன்றறுக்கிறானோ கடவுளும்" என்று சபிக்கும் வாணி - இவற்றில் எல்லாம் நாம் தேடுவதும், பிடிபடாமல் நழுவவிடுவதும் நற்குணத் தன்மைகளைத்தான்! 
	ஈழவாணியின் இரண்டாவது தளமே என்னை மிகக் கவர்ந்தது. "கவிஞன் உணர்ச்சிகளின் நிபுணர். உணர்ச்சிகள் என அழைக்கப்படுபவற்றிற்குக் குறைந்தபட்சம் இரு தளங்கள் உள்ளன. முதல் தளம் அறியப்பட்டதும் ஒப்புக் கொள்ளப்பட்டதுமானவற்றைத் தாங்கித் செல்கிறது. இரண்டாவது தளம் - பெயரிடப்படாத யாருக்கும் சொந்தமற்ற பிரதேசம்". ஈழவாணியின் இத்தொகுப்பு நல்லதொரு அனுபவப் பகிரலுக்கு இட்டுச் செல்கிறது. வாழ்த்துக்கள்.

                                                                                     * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *