பாலாவும் இவரும் நண்பர்கள். இலக்கிய விவாதங்களில் இவர்களுடைய பொழுதுகளை கழிந்தன. அவர் நிறைய ஆங்கில இலக்கியங்களை இவருக்கு அறிமுகப்படுத்துவார். பல்வேறு மொழிகளின் கவிதைச் சூழல் பற்றி இவரிடத்திலே பேசுவார். அப்பொழுது இவர் புதுக்கவிதையை ஏற்றுக் கொள்ளவில்லை. ‘புதுக்கவிதை சோம்பேறிகளின் சொப்பனம்’என்று இவர் நினைத்துக் கொண்டிருந்த காலம். அதற்குக் காரணம் மரபுக் கவிதை என்பது பலகாலப் பயிற்சிக்குப் பிறகு வரக்கூடிய ஒரு வடிவம். ‘புதுக்கவிதை என்பது சொல்லுவதை எல்லாம் எப்படி வேண்டுமானாலும், எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் சொல்வது’ என்று புதுக் கவிதைக்காரர்கள் சொல்வதை இவர் ஒத்துக் கொள்வதில்லை. அதே சமயத்தில் அந்தக் காலகட்டத்தில் புதுக் கவிதையை எழுதிக் கொண்டிருந்தவர்கள் – ஏறத்தாழ இறக்குமதி செய்து கொண்டிருந்தார்கள் – வெளிநாட்டில் இருக்கின்ற அறிவு ஜீவிகளினுடைய, கவிஞர்களுடைய படைப்புகளினுடைய தாக்கத்தை தமிழில் இறக்குமதி செய்து கொண்டிருந்தார்கள். இந்த மண்ணிலிருந்து முளைக்காத மரங்கள் அவை. தொட்டிச் செடியாகக் கொண்டு வரப்பட்டு இங்கே நடப்படுகின்றன என்று நம்பியவர்.
அப்பொழுதுதான் கோவைக்குச் செல்கின்றார். வானம்பாடி நட்பின் காரணமாகப் புதுக்கவிதையை எழுதத் தொடங்கினார். அப்போது கூட மரபுக் கவிதையைத் தாக்குகிற போக்கையும், மரபை முழுக்க முழுக்க தகர்க்கிற போக்கையும் இவர் எதிர்த்தார். ‘மரபுக்கும் புதுமைக்கும் நான் பாலமாக இருப்பேன்’ என்று முதன் முதலாக நடந்த வானம்பாடிகள் கூட்டத்திலே அறிவித்தவர். அப்போதுதான், ‘இந்தப் பூமி உருண்டையைப் புரட்டி விடக்கூடிய நெம்புகோல் கவிதையை உங்களில் யார் பாடப் போகிறீர்கள்’ என்ற புகழ்பெற்ற கேள்வியை; வானம்பாடிகளை நோக்கி முன்வைக்கிற கவிதையை எழுதினார். அவர்தான் இன்றைக்கு வழங்கப்படக்கூடிய விருதைப் பெற்று, அந்த விருதிற்குப் புகழ் சேர்க்கக் கூடிய கவிஞர் ஐயா மு.மேத்தா அவர்கள்.
புதுக்கவிதை உலகில் ஒரு தனிக்காட்டு ராஜாவாக விளங்கியவர் கவிஞர் மு. மேத்தா. புதுக்கவிதை மூலம் பலவற்றைப் பேசியுள்ளார். படம் பிடித்துக் காட்டியுள்ளார். ’அரளிப் பூ அழுகிறது’ என்னும் அவரின் கவிதை குறியீட்டிற்கு நல்ல உயிர்ப்பான சான்று.
பூக்களிலே நானு மொரு
பூவாய்த்தான் பிறப்பெடுத்தேன்
பூவாகப் பிறந்தாலும்
பொன் விரல்கள் தீண்டலையே
பொன் விரல்கள் தீண்டலையே – நான்
பூமாலையாகலையே
நாட்டுப்புறபாடல் வடிவில் அமைந்து இருந்தாலும் குறியீடும் இக்கவிதையில் முக்கிய பங்கு வகிக்கறது. ’அரளிப்பூ’ என்னும் சொல்லே ஒரு முதிர்கன்னியைக் குறிக்கிறது.
‘கடற்கரையில் தூங்கும் கடல்’ என்று தலைவர் கலைஞருக்கு இரங்கற்பா பாடிய ஐயா மு.மேத்தா அவர்களை, விருது பெறும் இந்த இனிய தருணத்தில் போற்றி மகிழ்கின்றேன்.
No comment