கவிப்பேரரசு வைரமுத்துவின் தமிழாற்றுப்படை அறிமுக விழா – திருப்பூர் – 28.08.2019

தேதி: 27 Aug 2023
வைரமுத்து என்னும் மொழிக் கலைஞன்
(தமிழாற்றுப்படை ஓர் ஆய்வுப்பார்வை)

”என் தாய்மொழி 
நாளை மடிவதாக இருந்தால்
நான் இன்றே
மடிந்துவிட விரும்புகிறேன்”
என்று தன் தமிழ்ப்பற்றைத் தமிழ்கூறு நல்லுலகிற்கு ஓங்கியுரைத்தவர் கவிப்பேரரசு வைரமுத்து. தன் தமிழ்கொண்டு தமிழுக்குத் தொண்டு செய்தவர்…செய்துகொண்டிருக்கிறவர். எதிர்காலத்திலும் எதிர்பாராத இலக்கியங்கள் செய்து சிகரத் தமிழுக்குச் சிறப்பு செய்வார். பிறந்தநாள், விருதுநாள், பாராட்டுநாள், மகிழ்ந்தநாள்,துக்கநாள் என எல்லா நாள்களிலும் தமிழ் செய்தவர். காய்ச்சல் நாள்களிலும் கவிதை செய்தவர். 
       இவரிடம் செவ்வியல் இலக்கியத்தின் செறிவையும் காணலாம். நாட்டார் இலக்கியத்தின் நுட்பங்களையும் காணலாம். அற்பப்பொருளையும் நுட்பக்கவிதையாய்த் தீட்டும் நுண்மாண் நுழைபுலம் கொண்டவர். இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த கவிஞனாய் அடையாளப்பட்டவரும் ஆறு தேசிய விருதுகளை அள்ளிக் குவித்தவரும் சாகித்ய அகாடமி விருதை இடக்கரத்திலும் பத்மபூசன் மரியாதையை வலக்கரத்திலும் ஏந்தி வந்தவரும் தன் எழுத்தையே எரிதழலாக ஏந்தியவரும் ஒருவரே. அவரே காலப்பெட்டகம் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். விழா நாயகனான அவரையும் அவையையும் வணங்கி மகிழ்கிறேன்.

’’எழுதிய படிதான் நடக்கும்
எல்லாம் விதிவசம்
என்பதை விட்டுவிடு
இளமையுன் தோள்களில்
இருக்கும்போதே
எதுநிசம் என்பதை எட்டிவிடு
படி படி படி
அதுவே வெற்றிப்படி
ஒரு காக்கா 
உன் தலைக்குமேல் 
பறப்பதை உன்னால்
தடுக்க முடியாது
அதுவே உன் தலையில்
கூடு கட்டுவதை 
உன்னால் தடுக்க முடியும்!”

என்று இளைஞர்களுக்கு எழுச்சியூட்டியும்

பட்டுவேட்டி பற்றிய 
கனாவில் இருந்தபோது
கட்டியிருந்த கோவணமும்
களவாடப்பட்டது

என்று விடுதலையை விமர்சித்தும்

எந்தப் பேய்மழைக்கும் உண்டு
ஒரு கடைசித்துளி
எந்த இரவுக்கும் உண்டு
ஒரு சூரிய முற்றுப்புள்ளி
எங்களுக்கும் விடிந்தது

என்று கடைக்கோடி மனிதனுக்கும் நம்பிக்கையூட்டியும்

”கட்டாகிப் போச்சு கரண்ட்டு. இருட்டுக்குள்ள முங்கிக் கெடக்கு ஊரு. சத்தத்தத் தொடச்சு வெளிய போட்டுட்டு இப்ப நான் மட்டும்தான் இருக்கேன்னு சொல்லுது இருட்டு. இருட்டை எதுத்து என்னால நிக்க முடியலையேன்னு அழுதுகிட்டிருக்கு கருத்தமாயி வீட்டு லாந்தரு…”

என்று மூன்றாம் உலகப் போரில் முற்போக்கு இலக்கியம் படைத்தும்…காற்றழுத்த தாழ்வுநிலை காலத்திய அடைமழையைப் போல தொடர் இலக்கியச் சாதனை செய்யும் கவிப்பேரரசுவின் அடுத்த படைப்புதான் தமிழாற்றுப்படை. காற்று நுழைய முடிந்த இடமெல்லாம் கவிஞரின் குரல்வழி இந்நூலின் சாரம் ஒலியாகச் சென்றிருக்கிறது. ஒளி நுழைய முடிந்த இடமெல்லாம் நூலாக இவரின் எழுத்து சென்றிருக்கிறது. 
       அடுத்த தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு சேர்க்கும் அரிய முயற்சியே இந்த நூலாக்கம். இளைஞர்க்குத் தமிழை ஆற்றுப்படுதுவதே இந்நூலின் நோக்கம். இளைய தலைமுறைக்கும் இணைய தலைமுறைக்கும் தமிழை அறிமுகப்படுத்தும் பெரிய பொறுப்புணர்வே இந்நூல். ஈராயிரமாண்டு காலத் தமிழைச் சுண்டக் காய்ச்சிச் சுருங்கச் சொல்லும் யுகப்பணியை யாரோ செய்வார் என்றில்லாமல் நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள் என்ற இளங்கோவடிகளைப் போல கவிஞரே களத்தில் நின்று தாமே செய்த தார்மீகப் படைப்புதான் ரத்தமும் சதையுமாய்ப் புத்தம்புதிதாக உதித்திருக்கும் இந்தத் தமிழாற்றுப்படை.

கவிப்பேரரசுவுக்கு என் செம்மாந்த இருபத்துநான்கு பாராட்டுகள்.பாராட்டு - 1 

      தொன்மை மொழியாம் தமிழை வியந்தோத வந்த கவிஞர், ஒல்காப் புகழ் தொல்காப்பியனிருந்து தொடங்குகிறார். முதலில் தொல்காப்பியத்தின் காலம் குறித்துப் பல்வேறு ஆய்வாளர்கள் கூறிய கருத்துக்களைப் பட்டியலிடுகிறார். இதில் தொல்காப்பியத்தின் காலம் கி.பி. 400 என்று கூறியுள்ள கால ஆராய்ச்சிக் கலகக்காரர் எஸ். வையாபுரிப்பிள்ளையின் மீது ஒரு சின்ன கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளமை சிறப்பு.
      தொல்காப்பியத்தின் காலம் குறித்து ஆயிரம் கருத்து வேறுபாடுகள் பூமிப் பந்தெங்கும் நிலவினாலும், அது தாய்த் தமிழுக்குப் பொற்காலமே என்பதில் அறிஞர்கள் யாருக்கும் கருத்து வேறுபாடு நிலவ வாய்ப்பில்லை என்று கவிஞர் நம்பிக்கையை நட்டுச் செல்கிறார்.
       இயற்கையிலிருந்து கருவானதாலும் இலக்கணம் என்னும் அறிவியல் கொண்டு திட்டமிட்டுக் கட்டப்பட்டிருப்பதாலும் மட்டுமே தமிழ் இன்றளவும் உயிர்த்திருக்கிறது என்று தமிழ் நிலைப்புக்குத் தக்க காரண காரியம் கற்பித்துச் செல்கிறார். மொழி ஓர் உயிரி. அதிலும் தமிழ்மொழியை ஒரு பேருயிரி என்று குறிப்பிட்டுள்ளமை அபாரம். 
       பொருளதிகாரம் குறித்து மிக நுட்பமாகச் சிந்தித்திருக்கின்ற கவிப்பேரரசு அவர்கள், அது தமிழர் வாழ்க்கைக்கான இலக்கணம் என்கிற அழுத்தத்தை இன்னும் சற்று கொடுத்திருக்கலாம். ஏனெனில், உலகில் எல்லா மொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் சொன்னது. தொல்காப்பியன் மட்டுமே வாழ்க்கைக்கு இலக்கணம் சொன்னவன். 

பாராட்டு – 2

      குறிஞ்சித் திணை பாடுவதில் வல்லவன் கபிலன். மலையும் மலைசார்ந்த நிலக்காட்சியை உணர்ச்சி பொங்கச் செய்யுளாக்கியவர் கபிலர். 99 பூக்களைப் பட்டியலிட்டதிலேயே கபிலரின் பாண்டித்தியமும் குறிஞ்சிநிலக் காதலும் புலப்படுகிறது.
       தலைமகன் வாய்மையில் பொய்மை தோன்றினால் அது திங்களுள் தீத்தோன்றியதுபோல…(குறிஞ்சிக்கலி: 41) என்கிற இந்த ஒரு வீரிய உவமை போதும் கபிலனை உலகக் கவியென்று ஓதிட. மேலும், பாரி மகளிரின் மீது காட்டிய பரிவும், இயற்கையோடு இயைந்து வாழாவிடில் மனிதராசிக்கே இறுதியேற்பட்டுவிடும் என்ற சுற்றுச்சூழல் எச்சரிக்கையும் கபிலரின் மனிதநேய மேன்மைகள். இப்படி பாசத்தோடு பாராட்டுப் பத்திரம் வாசித்துள்ளார். இருக்காதா பின்னே ஒரு கபில கர்வம்? அதனால்தானே கவிப்பேரரசு தன் இரண்டாம் மகனுக்குக் கபிலன் என்று பெயர் சூட்டியுள்ளார்.

பாராட்டு – 3

       ஒளவையார் என்று சொல்லாமல் அவ்வையார் என்றெழுதியதேன்? ஒளகாரம் தவிர்த்து அகரம் கொண்டு சிகரக்கிழவியின் பெயரெழுதியதேன்? என்று கவிஞரிடம் ஒரு வினா வைக்கிறேன்.  
      வாழ்வாங்கு வாழ்ந்து சொல்லாலும் செயலாலும் அறம்காத்த மூதாட்டியார் அனைவரையும் ஒளவை என்று விளிப்பதே தமிழ்மரபு என ஒளவைக்குப் புத்தர்த்தம் சொல்லிப் பெண்மூலத்திற்கே பொன்முலாம் பூசியுள்ளமை கைத்தட்டலுக்குரியது. பிற்கால ஒளவையின் பிற்போக்குத்தனத்தை விளக்கியுள்ளமையும் சிறப்பு. தண்ணீரில் அம்பு கிழித்த தடம் அடுத்த நொடியே அழிந்துவிடும் என்பது போன்ற சொற்பயன்பாடுகளைக் கவிஞர் அழகாக வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார்.
பாராட்டு – 4

      கவிப்பேரரசின் வள்ளுவக் காதல் சிலிர்க்க வைக்கிறது. தன் சவத்தின் மீது வள்ளுவம் போர்த்தப்பட வேண்டும் என்ற வரத்தை உயிலாகக் கேட்கிறார். அறம், பொருள், இன்பம், வீடு என்று சொல்லும் சமஸ்கிருதத்தின் தர்மம் வேறு; அறம், பொருள், இன்பம் என்று மட்டும் சொல்லும் வள்ளுவ தர்மம் வேறு என்பதனை ஏழையின் வைராக்கியத்தைப் போல வீரியமாகப் பதிவு செய்துள்ளார்.
      கெளடில்யர் படைத்த அர்த்தசாஸ்திரத்தை விட, திருவள்ளுவரின் திருவள்ளுவம் அர்த்த சத்து நிறைந்தது என்பதைக் கவிஞர் ஆணியடித்துக் கூறியுள்ளார். கல்வேர்களால் தாங்கப்படும் மலைபோல வள்ளுவர் ஓங்கி நிற்கிறார் என்ற இடத்திலும் (வடமொழிக் கவி பர்த்ருஹரி அவநம்பிக்கை விதைக்க… வள்ளுவனோ ஊழையும் உப்பக்கம் காண்போம் என நம்பிக்கை விதைக்க…) மனிதனின் நம்பிக்கையைக் குலைப்பதென்பது கல்லீரலில் ஆணியடிப்பது  போன்ற கடுஞ்செயலாகும் என்ற இடத்திலும் வள்ளுவனுக்கு வாரிசாக வைரமுத்துவைப் பார்க்க முடிகிறது.பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட வள்ளுவத்தை நிலா முட்ட நிமிர்த்திப் பிடித்திருக்கிறார்.

பாராட்டு – 5

       இறை வாழ்த்தில் தொடங்காமல் இயற்கை வாழ்த்தில் தொடங்கிக் காப்பியம் படைத்த புரட்சித் துறவி இளங்கோவடிகள். ஐம்பெருங்காப்பியங்களின் ஆரம்பப் புள்ளி சிலப்பதிகாரம். Of the people For the people By the people என்று ஜனநாயகத்திற்கு விளக்கம் தந்த ஆபிரகாம் லிங்கனுக்கு மூத்த முன்னோடியாக, அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்று சொன்ன இளங்கோவடிகளைக் கொள்ளலாம்.
       இந்திய மாநிலங்களில் எந்த மாநிலத்தின் பெயரிலும் நாடு என்ற பின்னொட்டில்லை. தமிழ்நாட்டிற்கு மட்டுமே தகைசான்ற அந்தப் பெருமையுண்டு. அந்தப் பெருமையின் தொடக்கம் இளங்கோவடிகள். அதாவது, அந்தப் பதத்தை, ”இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய…” என்று தன் சிலப்பதிகாரத்தில் முதன்முதலாகப் படைத்துக் காட்டுகிறான். சிலப்பதிகாரம் இல்லாவிடில் தமிழ்நாடு என்ற பெயருமில்லை. சிலப்பதிகாரம் இல்லாவிடில் தமிழிசையும் சாத்தியப்பட்டிருக்காது. 
      கண்ணகியைச் சொல்ல வந்த கவிஞர் புகைபடிந்த பூவாய்…மழையூறிய சித்திரமாய்…சொல்லோவியம் தீட்டிச் செல்கிறார். கண்ணகி முலை திருகியெறிந்து மதுரையெரித்த சர்ச்சைக்கு ஒரு வீரிய விளக்கம் தந்துள்ளமை நன்று. ஞாயிறு போற்றுதும்; திங்கள் போற்றுதும்; மாமழை போற்றுதும்….வைரமுத்து போற்றுதும்.

பாராட்டு – 6

       சமயத்தைச் சலவை செய்து சைவத்தைச் சிகரத்தில் வைத்தவர் திருநாவுக்கரசர் என்கிற அப்பர் பெருமகனார். சமணத்தின் கொட்டமடக்கும் கொள்கை கொண்டு வென்றவர். வடமொழியை வாகைசூடி, தமிழைச் சமயபீடத்தில் சஞ்சரிக்க வைத்த சமயப் போராளியே அப்பர். 
      அச்சத்தைக் கருவறு… பொறுமை சூடு…பெறுவாய் பீடு என்றிருந்த அப்பர் வாழ்வை அப்பழுக்கற்றுச் சாறுபிழிந்து தந்திருக்கிறார். இத்தகைய ஒரு ஆத்திக ஞானியை, நாத்திக சல்லடை கொண்டு சலித்தெடுத்திருக்கிறார் கவிஞர்.

பாராட்டு – 7

       சமயம் சமைத்து வைத்த கட்டுப்பெட்டித்தனங்களைத் தகர்த்தவர் ஆண்டாள் என்னும் பெண்ணாழ்வார். ஆண்டாள் என்ற கருத்தாக்கம் எப்படியிருப்பினும் ஒரு பெண்ணாக எண்ணியதை எண்ணியாங்கு எய்தியது பெருஞ்சாதனைதான். 
      சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாளை ஆழ்வாராக அணுகுவதில்தான் சிடுக்குகள். அவரைக் கவிதாயினியாக அணுகுவதில் எந்தச் சிராய்ப்பும் இல்லை. ஓர் ஆய்வாளர் என்ற அளவில் தன் கருதுகோளுக்கு நேர்மையாகவே கவிஞர் கடைசிவரை நின்றமை போற்றுதலுக்குரியது. 

பாராட்டு – 8

        பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பாராட்டப்பட்ட பழங்கவி. காதலையும் களத்தையும் கடவுளையும் பாடிய கவிகளுக்கு நடுவில். பேய்களைப் பாடிப் பெருமை கொண்டது வியப்புதான். கற்பனைப் பேய்களைப் படைக்க செயங்கொண்டாரிடம் ஒரு பேய்க்கற்பனை மூண்டிருக்கிறது. 

       குலோத்துங்கனின் வரலாற்றையும் கருணாகரத் தொண்டைமானின் பின்புலத்தையும் எடுத்தோதியுள்ளமை கவிஞரின் வரலாற்றுத் தேடலுக்குச் சான்றாகிறது. ஆயிரம் போர்களில் வென்றாலும், ஆயிரம் யானைகளை அமரிடைக் கொன்றாலும் அமைதியே அனைவரின் ஆர்வமும் என்று கவிஞர் கச்சிதமாகச் சொல்லிச் செல்கிறார். 96 வகைச் சிற்றிலக்கியத்தில் பரணியைத் தேர்ந்தெடுத்தது ஏன்? என்ற வினாவைக் கவிஞர் முன் வைக்கிறேன்.

பாராட்டு – 9

       ’கம்பன் கவிதைக் கொம்பன்’ என்றால் அது மிகையில்லை. கம்பனைப் போன்ற கவி காலத்தின் கொடைதான். உலகின் எந்தக் கவியோடு ஒப்பிட்டாலும் கம்பனின் புலமை தலைமை தாங்கும் தரங்கொண்டதே. அதனால்தான் மகாகவி பாரதிகூட கம்பனைக் கொண்டாடினான். 
       வால்மீகியே கம்பனைத் தோள்மீது தூக்கிக் கொண்டாடுவான் என்பது மிகையில்லை. ஷேக்ஸ்பியரோடும் வால்மீகியோடும் கம்பனை உரசிப் பார்த்து ஒரு ஒப்பில்லா ஒப்பிலக்கியம் படைத்திடக் கவிப்பேரரசு முயன்றுள்ளமை மெச்சத்தக்கது.

பாராட்டு – 10
        தமிழ் மூவாயிரம் படைத்த  திருமூலனே மனித உடலெனும் எந்திரக் கூட்டின் ரகசியங்களை மந்திரமாகச் சொன்னவன். ”உடம்பார் அழியில் உயிரார் அழிவர்” என்ற உன்னத மருத்துவம் செப்பியவன். மூச்சுக்காற்றின் நதிமூலம் ரிஷிமூலம் கூறியவன். ஆழ்ந்து சுவாசித்தால் வாழ்ந்து கிடக்கலாம் என்ற ஆயுள் அறிவியலை எடுத்துரைத்தவன் திருமூலன். 
        படுத்திருந்தால் நுரையீரல் எவ்வளவு காற்று குடிக்கும்; உட்கார்ந்திருந்தால் நுரையீரல் எவ்வளவு காற்று குடிக்கும்; நடக்கும்போது நுரையீரல் எவ்வளவு காற்று குடிக்கும் என்று கவிஞர் தரும் காற்றுக்கணக்கெல்லாம் நம்மைத் திகைக்க வைக்கிறது.

பாராட்டு – 11
        கால்டுவெல் என்னும் இந்த அயர்லாந்து அறிஞன் வந்திறங்கியிருக்காவிட்டால், ஆரிய மாயைக்கு முன் திராவிடம் தேய நேர்ந்திருக்கும். இடையன்குடி தேடி, இந்த இங்கிலாந்து சாமி வாராதிருந்திருந்தால்  தமிழின் தடம் முடமாகிப் போயிருக்கும். 
        திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணமே ஐரோப்பியர்களின் அறிவுக்கண்ணை அகலத் திறந்தது. தெற்கின் திருக்கூட்டத்தைக் காட்டுமிராண்டிகள் என்றே வடக்கின் வந்தேறிக் கூட்டம் ஓயாமல் நாக்குநீள வாக்குமூலம் தந்தது. கால்டுவெல்லின் காரியத்திற்குக் கண்கசிய நன்றி சொல்லும், கவிப்பேரரசின் அமுதூற்றுத் தமிழ் சிலிர்க்க வைக்கிறது.

பாராட்டு – 12

    ”அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 
     தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி…” 
என்று சொல்லி இனி ஒளியே வழியென புதுவிதி சமைத்த வள்ளலார் காலம் தந்த கொடை. அதிலிருந்து பிரிந்த கிளைகள்தான் நாத்திகப் பெரியாரும் கவித்துவ பாரதியாரும் ஆவார். காவிக்கு மாற்றாக வெண்மையைத் தந்த ராமலிங்க அடிகளாரின் அருட்பாவை மருட்பா என்று ஏசினார்கள். சேற்றை வாரிப் பூசினார்கள். 
       எத்தனை இடர் படர்ந்தாலும் வடலூரில் பற்ற வைத்த நெருப்பு இதுவரை அணையவில்லை. இதுவே வள்ளலாரியம் வாழ்வதற்குச் சாட்சி. நாளை ஏதேனுமோர் நாள் சமரச சன்மார்க்க ஆட்சி மலர்ந்தே தீரும் என நம்பிக்கை விதைக்கிறார் கவிஞர்.

பாராட்டு – 13

       என் சரித்திரம் தீட்டிய தமிழ்த்தாத்தாவின் நூல் பதிப்பிப்பு அனுபவங்களைப் பொன் சரித்திரமாய்ப் பொறித்துள்ளமை பாராட்டுக்குரியது. எவ்வளவோ சுவடிகளைக் கண்டறிந்த உத்தமதானபுரம் வேங்கடசுப்பு சாமிநாதையர் பிறந்த ஊரான சூரியமூலையைக் கண்டறிந்து,
     ”சூரியமூலையில் பிறந்த
      ஆரிய மூளையே
      உமக்கு எம் திராவிட வணக்கம்…” 
என்று அதற்கொரு கவிதை சொல்லி முடித்தமை சிறப்புக்குரியது.
பாராட்டு – 14

        தனித்தமிழ் இயக்கம் கண்ட மறைமலையடிகளாரே வடமொழியென்னும் வாதையிலிருந்து தனித்தமிழ் என்ற பாதைக்கு மாற்றியவர். அவரின் அரும்பணி தொடர வேண்டும். பெயர்ச்சொற்களெல்லாம் பிறமொழிச் சொற்களாக நிறம் மாறிக் கொண்டிருக்கின்றன. அதைத் தமிழ்ப்படுத்த வேண்டும். 
       தமிழ்ப்பெயரும், தமிழ்க்கல்வியும் சாத்தியமாக வேண்டும். எட்டுக் கோடி பேரும் தமிழ்ப்பெயர் சூடிட, சட்டென எட்டுக்கோடி பெயர்ச்சொற்கள் கிடைக்கும். மொழி மேன்மையுறும். வேதாசலம் மறைமலைகளாக வேண்டும்; மறைமலைகள் வேதாசலங்களாக மாறிவிடக் கூடாது எனக் கவிஞர் தன் ஆதங்கத்தைக் கூர்மையாக வெளிப்படுத்தியுள்ளார். 

பாராட்டு – 15

       பாரதி ஒரு தீ… எந்த ஊழிப்பெரு வெள்ளத்தாலும் அழிக்க முடியாத கவிதைப் பெருந்தீ. சோதிமிக்க நவ கவிதை படைத்த சீற்றக் கவியை உச்சிமேல் வைத்து மெச்சுகிறார் கவிப்பேரரசு. சனாதனத்திற்குச் சாட்டையடி கொடுத்த பாரதி சாதாரணன் இல்லை… அசாதாரணன். 
       
பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே - வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும் போச்சே
என்று மகாகவி எக்காளமிடுகிறான். கனகலிங்கத்துக்குப் பூணூல் போட்டதும், காக்கை குருவி எங்கள் ஜாதி என்றதோடு மட்டுமில்லாமல் கழுதையைத் தூக்கி முத்தமிட்டதும் தான் பாரதியைச் செயல்கவியாகவும் புயல்கவியாகவும் கொண்டாட வைக்கின்றது. தமிழால் பாரதி தகுதி பெற்றானோ இல்லையோ… பாரதியால் நிச்சயம் தமிழ் தரமான தகுதி பெற்றதென்பது சாகாத உண்மையே. வ.உ.சி..யிடமிருந்து பாரதியின் இன்னொரு பக்கத்தையும் பதிவுசெய்த கவிஞரின் துணிவைப் போற்றுகின்றேன்.

பாராட்டு – 16

        பரம்பொருளுக்கே சம்மட்டி அடிகொடுத்த பெரும்பொருள் பெரியார். சுயமரியாதைச் சூரியன், பாமர மேதை, கலகக்காரர், பகுத்தறிவு நெருப்பு என எப்படி விளித்தாலும் அதற்குள் பெரியார் தெரிவார். பிராமணன் – சூத்திரன், ஏழை – பணக்காரன், கற்றவன் – கல்லாதவன், ஆண் – பெண் என எல்லா பேதங்களையும் நில்லாமல் செய்த பெரியாரைக் கூரிய ஆயுதமாகத் தீட்டித் தருகிறார் கவிப்பேரரசு. 
       தமிழின் இரண்டு வார்த்தைகள் முட்டிக் கொண்டால் திருநீறு கொட்டுகிறது; ஒரு தமிழ் வாக்கியத்தை முகர்ந்து பார்த்தால் துளசி வாசமடிக்கிறது என்பதில் வைரமுத்துவின் யுகக்கோபம் தெரிகிறது. நீங்கள் கொல்லப்படுவீர் என்று மகாத்மா காந்தியிடமே சொன்ன பெரியாரைப் பெரியார் என்று சொல்லாமல் வேறெப்படிச் சொல்வது?
       இந்த நூற்றாண்டின் தமிழ்வெளியில் இருவர் மட்டுமே நின்று நிலைப்பார்கள்… ஒருவர் பிரபாகரன்; மற்றொருவர் தந்தை பெரியார் என்று எழுதியுள்ள கவிஞரைப் பார்த்தால் பிரமிப்பே மேலிடுகிறது.

பாராட்டு – 17

   எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் 
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு! 
என்று பாடிய கனக சுப்புரத்தினமே பார் போற்றும் பாரதிதாசன். பனிக்கட்டி மீது உருண்டோடும் ஆப்பிள் போன்ற தடையற்ற ஓட்டமே பாரதிதாசனின் கவியோட்டம் என்று கவிஞர் சொல்லும்போதே செல்கள் சிலிர்த்துச் சில்லிடுகிறது. பாவேந்தரின் தமிழ்ப்பற்றும், பகுத்தறிவுப் பற்றும் போற்ற வேண்டிய பொக்கிசம்.
      எட்டயபுரக் கவியாளுமையும் ஈரோட்டுக் கருத்தாளுமையுமே பாவேந்தரின் பாட்டுத்திறம். தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன் என்ற புரட்சிக்கவிஞரை உவமைக் கவிஞர் சுரதா என் அதங்கோட்டாசான் என்று முரசறைந்து சொல்கிற தகவலைக் கவிஞர் எடுத்துரைக்கத் தவறவில்லை. பாரதிதாசன் என்ற கவியாளுமையைப் பறைகொட்டி பாராட்டியுள்ளார் கவிப்பேரரசு.
பாராட்டு – 18
      ’தான்தோன்றி’ என்று ராஜாஜியால் கணிக்கப்பட்டவர் புதுமைப்பித்தன். காலப்பதிவாளன் மற்றும் கலைப்பதிவாளன் என்று கவிஞர் புதுமைப்பித்தனுக்கொரு பாராட்டுப் பத்திரம் தீட்டுகிறார். தொந்தரவு செய்து கதைகேட்ட, பத்திரிகை ஆசிரியரிடம் ” எலே என் எழுத்து நெருப்பு. உம்பத்திரிகை சாம்பலாகிப் போகும்லே..” என்று கம்பீரம் காட்டியவர் கதைப்போராளி புதுமைப்பித்தன்.
        அந்தக் காலத்திலேயே பிஏ படித்தவர். முழுநேர எழுத்தாளர். உலகின் எந்த எழுத்தாளரோடும் ஒப்புநோக்கத்தக்கவர் சொ.விருத்தாசலம் என்கிற புதுமைப்பித்தன். இத்தகையவரைக் காசநோயும், காசுநோயும் தின்றுதீர்த்தது. சினிமா சிதைத்தவர்களில் புதுமைப்பித்தனும் ஒருவர். படுத்த படுக்கையாகிறார். பார்க்க வரவில்லை பழகியவர்கள் யாரும். சிலர் சொல்லிவிட்டும் வரவில்லை. அழைக்காமல் வந்தது மரணம்தான்… இந்த வரிகளை அழாமல் படிக்கமுடியவில்லை கவிஞரே. 
பாராட்டு – 19
      பச்சையப்பன் கல்லூரி மாணவனாக…. பெரியாரின் தொண்டனாக… பாராளுமன்ற உறுப்பினராக… முதலமைச்சராக… பச்சைத்தமிழனாக…. பேரறிஞர் அண்ணாவின் பெரும்பயணம் பிரமிப்பானது. யேல் பல்கலைக் கழகம் வரை அண்ணாவின் உரைவீச்சு ஆட்சி செய்தது. தமிழர்களுக்குப் பாயசம் போல் இனித்தது அண்ணாயிசம்.
      No sentence can end with because because, because is a conjunction என ஆங்கிலத்திலும் சொற்சிலம்பமாடும் அறிவுலக மேதை அண்ணா. திரைப்படத் தமிழைச் செப்பனிட்டார். அரசியலில் அதிசயம் நிகழ்த்தினார். 1962 தேர்தலில் தோற்றாலும் ஒரு விரலில் தன் கண்ணீர் துடைத்து, ஒன்பது விரல்களால் ஊர்க்கண்ணீரைத் துடைத்தார். கடைசிவரை பெரியாரையே தன் தலைவராக ஏற்றுச் செயல்பட்டார்…என்று கவிஞர் எழுத்தை வாசிக்கும்போதே அண்ணா கண்முன் வந்துபோகிறார். சி.என். அண்ணாதுரை என்ற பெயரில் சி.என் என்பது சிங்க நிகர் என்றே பொருள் புரிவோம்.
பாராட்டு – 20
        ஒரு தலைவன் இத்தனை பெரிய தாக்கங்களை ஏற்படுத்த முடியுமா? ஒரு தலைவன் இத்தனை பெரிய மாற்றங்களை உருவாக்க முடியுமா? ஒரு தலைவன் இத்தனை பெரிய சீர்திருத்தங்களைச் செயல்படுத்த முடியுமா? முடியும்… அதற்கு முத்தமிழறிஞர் கலைஞர் ஒரு வாழ்ந்த … வாழும் உதாரணம். 
       பாட்டு சினிமாவைப் பேச்சு சினிமாவாக மாற்றி பிரளயம் செய்தவர் டாக்டர் கலைஞர். பயமறியாத இளைஞனாக தமிழின் நயமறிந்து எழுதியவர் டாக்டர் கலைஞர். சரித்திரப் படத்திலும் சமூகமே பேச வைத்தவர் டாக்டர் கலைஞர். சிலந்திக்கூடாகக் கிடந்த தமிழ்நிலத்தைச் சிங்கத் திருநாடாக்கியவர் டாக்டர் கலைஞர்…இப்படி கலைஞர்காதலோடு கவிப்பேரரசு அடுக்க அடுக்க அந்த உன்னதத் தலைவரின் உயரம் இன்னும் நன்றாகப் புரிகிறது.
       பெரும்பேறு கிடைத்தாலும் கடைசிவரை திருநீறு பூசாத, ஆத்திகம் பேசாத அந்த நாத்திக வைராக்கியம்தான் கலைஞர். நல்லாட்சி நாயகர் கலைஞரைத் தமிழ்நாடு ஒருபோதும் மறக்காது. வள்ளுவக்கோட்டம் எழுப்பிய தலைவர் கலைஞருக்குக் கவிஞர் எழுத்தோவியம் தீட்டிய திறத்துக்கு எழுந்துநின்று கைதட்டத் தோன்றுகிறது. 
பாராட்டு – 21
        எட்டாம் வகுப்பு படித்த கண்ணதாசன் எட்டாத உயரத்துக்குத் தரக்கவிதை தந்தவர். சிறுகூடல்பட்டி முத்தையாவே சிகரம் தொட்ட கண்ணதாசன்.
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் 
தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன் 
ஏற்றதொரு கருத்தென்று எனதுள்ளம் ஏற்குமாயின்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன், அஞ்சேன்”

என்று சுயம்புவாகச் சுற்றித் திரிந்தவர். தன் அக வாழ்வைக் கூட, அனைவரும் அறியும்படி வாழ்ந்தார். அத்தனை கட்சியிலும் அடைக்கலமானார். கவிதையில் மட்டும் யாரும் அசைக்க முடியாத படைக்கலமானார். தமிழ் இலக்கிய வரலாற்றில் கண்ணதாசன் ஒரு ஆச்சரிய அதிசயம்தான். அனுபவக் கவி அவர். என் வீரிய விளைச்சலுக்குப் பலர் காரணமானாலும், என் விதைநெல்லுக்குக் கண்ணதாசனே காரணம் என்று கவிஞரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது அருமை.

பாராட்டு – 22

       செங்கப்படுத்தான்காட்டில் பிறந்த பட்டுக்கோட்டை தங்கமெடுத்தான் பாட்டில். 29 ஆண்டுகள் என்னும் சின்ன வாழ்வில் பட்டுக்கோட்டை எட்டிய உயரம் எவருக்கும் கிட்டாதது. பொதுவுடைமையையும் பாரதிதாசனையும் தின்று செரித்து நின்று நிலைத்தவன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
         தான் வாழவிருந்த ஆயுளையும் தன் பாட்டுக்கு ஊட்டிவிட்டு விண்ணுக்குச் சென்றுவிட்டார். அவரால் எழுதப்படாத பாடல்கள் காலவெளியில் கலங்கி நிற்கின்றன. 
"உறுப்பறுந்து போனாலும் உள்ளம் கலங்கேன் - இந்தச் 
செருப்பறுந்து போனதற்கா சிந்தை கலங்குவேன்.. 
கொதிக்கும் தார்… எனக்குக் குளிர் நீர்…
என்று வீரியம் பேசியவன் பட்டுக்கோட்டை. அந்தப் பட்டுக்கோட்டைக்குக் கவிஞர் ஓர் உயில் எழுதியிருக்கிறார். அந்த நூற்றாண்டு விழா கனவை உங்கள் மகன்களல்ல…நீங்களே நிறைவேற்றுவீர்கள் கவிஞரே.
பாராட்டு – 23
       எளிய மக்களின் எழுத்தாளன் ஜெயகாந்தன். விளிம்புநிலை மக்களின் கண்ணீரையும், கஷ்டத்தையும், வியர்வையையும், வேதனையையும் தன் எழுத்தில் பதிவு செய்தவர். ஞானபீடம் வாங்கியவனின் எழுத்தில் ரத்தமும் சதையுமாய் எளிய மனிதர்கள் கதைமாந்தர்களாக உலவித் திரிகிறார்கள்.
       திரைப்படம் எல்லோரையும் போல ஜெயகாந்தனையும் பதம் பார்த்திருக்கிறது. ஒரு நாளும் இதம் சேர்க்கவில்லை. ஆகையால், கசப்போடு சினிமாவை விட்டு வெளியேறுகிறார். எளியவர் மொழியை இலக்கியமாக்கிய ஜெயகாந்தனுக்குச் சினிமா சிரமம்தான் . ஞானபீடம் வென்ற யுகக் கலைஞன் ஜெயகாந்தனை வரிவரியாகக் கவிஞர் மிகையில்லாமல் போற்றியுள்ளார். 


பாராட்டு – 24
       புவிக்கோள் முழுவதும் போற்றப்பட வேண்டியவர் கவிக்கோ அப்துல் ரகுமான். அவர் கழுத்தை கெளரவிக்க, ஒரு பொன்மாலையைத் தயாரிக்காமலே காலந்தாழ்த்திவிட்டது தமிழ்கூறும் நல்லுலகம். இவரை இன்னும் பெருமைப்படுத்தியிருக்க வேண்டும். சித்திரைத் திருவிழாவில் புல்லாங்குழல் வாசித்தவரைப் போல அதிகம் கவனப்படுத்தப்படாமலே போய்விட்டார். குடிசை விளக்காகவல்ல… மாளிகை விளக்காக மகிமைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் கவிக்கோவை…
        கவியரங்கத்தில் புது சகாப்தம் படைத்தார். சர்ரியலிசம் கொண்டு சத்தான கவிதை செய்து சரித்திரம் படைத்தார். ஒருவித தத்துவத் தன்மைகள் தவழும்படி கவிக்கோ தன் கவிதைகளைப் உருவாக்கினார். வாழ்நாள் முழுவதும் வாசித்தார்…எழுத்தையே யோசித்தார்… கவிதைகளை மட்டும் ரகசியமாய் நேசித்தார். சமகாலப் பெருங்கவிஞனுக்கு ஒரு சொட்டுக் கண்ணீரைக் காணிக்கையாக்குவதோடு நூல் நிறைவடைகிறது. 
நிறைவாக…
தமிழாற்றுப்படையைப் போற்றுகிறேன்!
கவிப்பேரரசுவைப் பாராட்டுகிறேன்!
இன்னும் மின்னும் நூல்வரிசையைக் கூட்டுங்கள்!
தமிழின் பெருமையை உங்கள் தமிழ் கொண்டு நீட்டுங்கள்!

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *