"மலரோடும் ஆராய்ச்சி நடத்த வேண்டும் மழைபாடும் சங்கீதம் ருசிக்க வேண்டும் சிலரோடு கவிதைகளைத் துய்க்க வேண்டும் சிந்தனையைக் காற்றாகப் பரப்ப வேண்டும் நிலவோடு நதிநீரில் குளிக்க வேண்டும் நித்திரையைக் கலைக்காத கனவு வேண்டும் பலரோடும் ஒன்றாகப் பழக வேண்டும் பனித்துளிக்குள் உலகத்தைப் பார்க்க வேண்டும்". சாக்ரடீஸ் தனது உரையாடல் ஒன்றில் "பேச்சுதான் உண்மையானது. எழுத்து பொய்யானது. எழுத்து என்பது கெட்ட ஞாபகம் (ஈவில் மெமரி). பேச்சு என்பது சட்டபூர்வமான வாரிசு. எழுத்து சட்டபூர்வமான தகப்பன் இல்லாமல் பிறந்த மகன் (பாஸ்டர்ட்)" என்கிறார். "நான் பேசும்போது உயிர்ப்புடன் பேசுபவனாக இருக்கிறேன். என் பேச்சுக்கு நான் தகப்பனாக இருக்கிறேன். ஆனால் நான் எழுதும் பிரதியோ நான் இல்லாமல் கூட இருக்கிறது. அது தனது தந்தையுடன் எவ்விதத் தொடர்புமின்று ஒரு சட்ட விரோத வாரிசைப் போல் தனியே இருக்கிறது. பேச்சு உயிருள்ளது. எழுத்தோ இறந்தது. அதனால்தான் எழுத்து இறந்தவர்களின் கல்லறைகளின் கல்வெட்டுகளில் உறைந்த நிலையில் காணப்படுகிறது" என்றெல்லாம் சாக்ரட்டீஸ் எழுத்தை இழித்துப் பேசுகிறார். சாக்ரட்டீஸிற்கு ஒரு வேளை கவிஞரது கவிதைகளைப் படிப்பதற்கு வாய்ப்பு கிட்டியிருந்தால் - பேச்சு மொழி வாயிலாகத் நம் மூதாதையர், தாய், தந்தையர், பாட்டிமார்கள், பங்காளிகள், தோழிமார்கள், பேசிய வட்டார வழக்கு மூலமாக, எழுத்தை எவ்வளவு உயிர்ப்பு உள்ள ஒரு மொழியாக, சாகாவரம் பெற்றதாக, ஒரு இலக்கிய வடிவமாக மாற்ற முடியும் என்கின்ற ரசவாதத்தை அதன் மூலம் அவர் உணர்ந்திருப்பார். மேற்சொன்ன தன் கருத்தையும் மறுபரிசீலனைக்கு அவர் உட்படுத்தி இருக்கலாம்! கவிதையும் பாடலும் இலக்கியக் கிளையின் வெவ்வேறு விழுதுகள் என்ற போதிலும் இரண்டும் உள்ளடக்கங்களால் வேறுபடுகின்றன. கவிதை (Poem) என்பது பொதுவாகப் பொது உணர்ச்சி என்றும் பாடல் (lyric) என்பது பொதுவாகத் தன்னுணர்ச்சி என்றும் இலக்கியத்தின் கருதுகோள் கூறுகிறது. lyric என்ற சொல்லே lyre என்ற கிரேக்கச் சொல்லின் வேரடியில் முளைத்தது. lyre என்பது ஓர் இசைக்கருவி. அது ஓர் ஏழ்நரம்பு யாழ். lyre கருவிகொண்டு இசைத்துப் பாடப்பட்ட பாடல் காலத்தால் மருவி lyric ஆயிற்று என்பது வரலாறு. "As we cry we sing and ringing the sentiment in you and you in me" இதுதான் 2300 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கத்தில் பாடப்பட்ட முதல் இசைப்பாடல் என்று கண்டறியப்பட்டுள்ளது. (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 29) இந்த மண்ணிலுள்ள மக்களுடைய சுவாசத்தை தன்னுடைய மூச்சிலும், அவர்களுடைய பேச்சு மொழியை தன்னுடைய ரத்தத்திலும், அவர்களுடைய கவுச்சி மணத்தைத் தன்னுடைய இலக்கிய மொழிநடையிலும், பொதிந்திருக்கின்ற கவிஞரது கவிதைகள், கவிதைகளாக மலர்ந்திருக்கின்ற அவரது திரை இசைப் பாடல்கள் என்ன சொல்கின்றன என்பதை நான் உங்களிடையே இப்போது பகிர வந்திருக்கிறேன். ஆனால் அவை என்ன செய்கின்றன என்பதை நீங்கள் ஒவ்வொருவரும் தனியே அமர்ந்து தங்களுக்காகவே பயணித்து, அதனைப் படித்தும், கேட்டும் பின் அனுபவித்துப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் அவரது பலகவிதைகள் அச்சுகோர்த்து, எழுத்துவடிவிலே கொடுக்கப்பட்ட புத்தகங்கள் மட்டும் அல்ல. கூடு வைரமுத்துவின் சிறந்த கவிதைகளில் ஒன்று. புறம் போக்கு நிலத்தில் கட்டப்பட்ட தனது கனவு வீடு இடிக்கப்படுவது கண்டு புலம்பும் ஒரு தாயின் குரலில் கவிதை விரிகிறது. அவள் கண்ணீரும் கவி நிறைந்த புலம்பலும் அந்த வீட்டைக் காப்பாற்றவில்லை. நாமும் விதிர்த்துப் போயிருக்கும் போது கவிதை சட்டென்று திரும்புகிறது: "கொல்லையில எம் மகதான் மல்லியப்பூ நட்டிருக்கா நீர்குடிச்ச கொடி இப்ப வேர் பிடிச்சு நின்னுருக்கு பொத்தி வளத்த கொடி பூப்பூக்கும் முன்னால கத்தி எறியாதீக கடப்பாரை வீசாதீக ஆசையில வச்ச கொடி அசங்காம இருக்கட்டும் அவ வச்ச மல்லிகைதான் எவளுக்கோ பூக்கட்டும்" (வைரமுத்து கவிதைகள் - சூர்யா : 49,50) இது வெறும் கவிதையல்ல வீச்சறிவாள்; இது உங்களுடைய பூட்டிகளால் கட்டிவைக்கப்பட்ட களத்துமேட்டுக் கம்பு; இது உங்களுடைய அப்பத்தாவினுடைய அந்த ஆட்டு உரல்; இது உங்களுடைய அம்மத்தாவின் சுருக்கு பை; இது உங்களுடைய அக்காமார்களும், மதனியார்களும் ஒருவருக்கு ஒருவர் முழங்கையால் குத்திக்கொள்ளும் உலக்கை; இது உங்கள் தகப்பன்மார்களின் குழுதாடி; இது உங்களது ஆத்தாமார் தங்களுடைய கண்ணீரையும், மகிழ்வையும் மசாலாவோடு சேர்ந்து அறைத்த அம்மிக்கல்லும், திருகைக்கல்லும்! ஒரு மூன்றாம் உலகப் பிரஜைக்கான உறுதி, திடம், மொழி, பண்பாடு, திமிர், கலை, இலக்கியச் செறிவு, முதுசொம் - அனைத்தும் நிரம்பிய கவிஞரது கவிதைகள் சிலவற்றிலும் பாடல்களிலும் வாழ்வியலும், அழகியலும் எப்படி இணைந்து பயணிக்கின்றன எனப் பார்க்கலாம். மயாகோவ்ஸ்கி என்கின்ற உலகப் புகழ்பெற்ற ரஷ்ய கவிஞர் கவிதைகள் பிறப்பது எவ்வாறு என்று எழுதி வெளியிட்ட ஒரு சிறிய வெளியீட்டில் சொல்கின்றார் - "ஒரு படைப்பாளிக்கு, ஒரு கலைஞனுக்கு, ஒரு கவிஞனுக்கு சமூக ஆணை என்பது மிக மிக முக்கியம். சமூக ஆணை என்றால் என்ன? சமூக ஆணை என்பது சமூக யதார்த்தத்தில் கலைஞனின் தலையீடு ஆகும். அரசியலில் அறிவியல் சோசலிசம் அப்படியோ அது போலக் கலையில் சமூக ஆணை". 'சமூக ஆணை'யும் மென்மையான மானுட உணர்ச்சிகளும் எதிரும் புதிருமாக இருக்க வேண்டியதில்லை என்பதற்கு மயாகோவ்ஸ்கியின் வாழ்க்கையும் கவிதைகளுமே சாட்சி. ஒரு மனிதகுமாரன் சிந்திக்கிறான் ஒரு மனிதகுமாரன் சிந்திக்கிறான் இருண்டு கிடக்கும் இதயக் கிழக்குகள் விடிவதற்காகவும் மனிதகுலத்தின் கண்ணீரை சந்தோஷத்தின் சமிக்ஞையாய் மட்டும் தரிசிக்கவும் பச்சையம் இல்லாத மனிதத்தாவரங்களும் ஒளிச்சேர்க்கை செய்யும் உத்தி காணவும் ஒரு மனிதகமாரன் சிந்திக்கிறான் ஒரு மொட்டு பூவாய் வெடிக்கும் ரகசியச் சப்தத்தை ஒலிப்பதிவு செய்ய முடியாதா? அலைகளின் மொழிக்கு ஓர் அகராதி காண முடியாதா? சூரியச் சிலந்தி பின்னும் மேகவலைகளைத் தன் பேனாவை உயர்த்திப் பிய்த்துவிட முடியாதா? பூமாதேவியைப் பார்த்துக் கண்ணடிக்கும் மின்னலைக் கைதுசெய்ய முடியாதா? என்ற சின்னச் சின்ன ஆசைகளில் சிம்மாசனமிட்டும் ஒரு மனிதகுமாரன் சிந்திக்கிறான் அழகியல் அவனுக்கு அந்நியமல்ல கலைகளின் பெருமூச்சும் அவனுக்குச் சங்கீதமே கலைகள் மனிதனைப் பதிவுசெய்யும் மகத்துவம் பெறவும் அந்த மனிதகுமாரன் சிந்திக்கிறான் தனது இரத்தக் கையெழுத்தில் எழுத்துப் பிழைகள் எண்ணுவோரைக் கண்டு சிரித்தக் கொண்டும் சிலரின் கைகுலுக்கல்களுக்குப் பிறகு தன் விரல்களைச் சரிபார்த்துக் கொண்டும் நாளையின் வானில் கிழக்கில் ஒரு கிரணமாவோம் என்ற நம்பிக்கையோடும் சாட்சிகளில்லாத ஊமைகளின் வழக்கில் ஆஜராகத் துடிக்கும் அவசரத்தோடும் அவன் சிந்தித்துக் கொண்டுதான் இருக்கிறான். (வைரமுத்து கவிதைகள் - சூர்யா : 228,229,230) ஒரு காத்திரமான சமூகக் கடப்பாடும், மென்மையான மானுட உணர்வான அழகியலும் அருமையாகப் பொருந்திப் பயணிக்கின்ற அற்புதமான கவிதை இது. "இலக்கியத்தின் உதவியோடு தன் பூர்விகத்தை அறிந்து கொள்வது ஏன் மனித நடவடிக்கையாக இருக்கக் கூடாது?" - என்பது வரலாற்றில் மானிடவியலாளர்களின் மிக முக்கியமான கேள்வி. தனது வேர் குறித்து கவிஞரது பதிவு: "'ஜா' வராது நம்ம சனங்களுக்கு. 'ராஜா' ன்னு சொல்லமாட்டாக; 'ராசா'ன்னு தான் சொல்லுவாக. ரோஜான்னு சொல்லச் சொல்லுங்க; 'ரோசா' தான் வாயில வரும். 'எம்ச்சியார்', 'சிவாசி'ன்னு சொல்லித் தான் பழக்கம் நம்ம நடிகர்கள. பேரு வச்சிருக்கான் பாரு பேரு - வாயிலேயே நொழையாத பேரு மூளையிலயா ஏறப் போகுது? பேருன்னா வெறும் பேரா? அதுல ஊரும் மண்ணும் ஒட்டியிருக்கணுமா இல்லையா? பேருல நம்ம ரத்தமும் வேர்வையும் கலந்து ஒரு வாடை அடிக்கணுமா இல்லையா? வம்சவரலாறு இருக்குடா ஒரு பேர்ல. பேருங்கறது வெறுஞ் சத்தமா? சரித்திரமடா. ஒட்டாத பேரு வச்சா ஓட்டுமா உதட்டுல? வெள்ளைக்காரன் எவனாச்சும் விருமாண்டின்னு பேரு வைக்கிறானா? டி.வி.யில சொல்றாகல்ல அமெரிக்க சேனாதிபதி ஒபாமான்னு - அந்தாளு பொண்டாட்டி பேரு ஓச்சம்மா-ன்னு வச்சா நல்லாயிருக்கும்ல.. வச்சிருக்கானா? வட நாட்ட எடுத்துக்க. பெரியக்கான்னு பேரு வைக்குமா பிரியங்கா? தண்டுச்சாமின்னு வப்பானா டெண்டுல்கரு? அவுக ஊரு மண்ணு பரம்பரையை ஒட்டித்தான வச்சிருக்காக. நாம மட்டும் மாறிப் போனா மூதாக்கமாரு விட்ட மூச்சு வீணாப் போகும்டா" - எழுதி வைக்க வேண்டும் இந்தத் தலைமுறைக்கு கவிஞரது இந்த வரிகளை ஒரு ஆத்தி சூடியென! சொல்லித்தர வேண்டும் இந்த உணர்வை நமது இளைய தலைமுறைக்கு ஒரு விழிப்பூட்டலென! - ஒரு சமூக ஆணையென! ஏன் நம் மண்ணில் செல்லப்பாண்டி என்றும், தங்கப்பாண்டி என்றும், சின்னப்பாண்டி என்றும் பெயர் வைக்கிறார்கள்?. ஏன் கருப்பையா, மூக்கைய்யா, வெள்ளைச்சாமி, முத்துப்பேச்சி, வனப்பேச்சி என்று பெயர் வைக்கிறார்கள்? அவர்கள் அனைவரும் நம்முடைய பாட்டன், பூட்டன்மார்கள். நம் மண்ணில் ஏதோ ஒரு காலத்தில் உலவி, ஊர்க் காற்றில் கலந்தவர்கள், தமது ரத்தத்தை வியர்வையென நமக்காகக் தந்திருப்பவர்கள். ஒரு காலக்கட்டத்தில் ஊருக்காக, ஏதோ ஒரு பகை தீர்க்க, குறை களைய, நல்ல விஷயத்திற்காகத் தன் உயிரைக் கொடுத்த குடும்பத்திலுள்ள ஒருவரின் பெயராக அவை இருக்கலாம்!. ஆகவே ஒரு பெயரைச் சொல்லும்போது வரலாற்றின் உண்மை அதில் தகிக்கிறது. கவிஞர் இதனைச் செய்வதின் மூலமாக மிக முக்கியமான மனித நடவடிக்கையினை - தனது பூர்விகத்தை நிலை நிறுத்துவதை, ஒரு இலக்கிய செயல்பாடாகக், கலையின் வழியாக இங்கே முன்னிறுத்துகிறார். ஊருக்குப் போயிருந்தேன் என் பாசத்துக்குரிய பழைய முகங்களே உங்களுக்கு நான் அந்நியமில்லை என் வெள்ளைச் சட்டை உங்களுக்கு விரோதியில்லை புகழ் என்னும் போதை வஸ்து உங்கள் பெயர்களைக் கூடவா மறக்கடித்து விடும்? எனக்குத் தெரியும் பொருளும் தலைமுடியும் ஒரே ஜாதிதான் இரண்டும் உதிர்ந்து விடுவது நிச்சயம் அன்றி குறைந்து விடுவது சத்தியம் உங்கள் வார்த்தைகளில் வீசும் வட்டார வாசனை நுகர வந்தேன் நான் பழகிய பழைய கண்களைப் பார்க்க வந்தேன் என் உடம்பில் இருக்கும் இரத்தம் தான் புதிது இருதயம் பழசுதான் உங்களின் காய்த்துப் போன கைகளின் ஸ்பரிசம் என் உள்ளங்கைகளுக்கு ஞாபகம் இருக்கிறது உங்கள் கிண்டலில் இருக்கும் மண்ணின் மணம் எப்போதும் பிடிக்கும் எனக்கு எங்கே? என்னைத் தன் தோள் நாற்காலியில் தூக்கிக் கொண்டு அத்தனை சினிமாவுக்கும் அழைத்துச் செல்வானே... எங்கே அந்த ஆதிதிராவிட அண்ணன்? எனக்குப் பிரியமாய்க் கடன் கொடுக்கும் பெட்டிக் கடைக் கிழவரும் மரணமா? (வைரமுத்து கவிதைகள் - சூர்யா : 340-343) அடையாளம் என்பதற்கும் தன்னிலை என்பதற்குமான வேறுபாடு மிக முக்கியம். கவிஞருடைய அடையாளம் - தமிழ் மொழி, இனம், நாடு, பண்பாடு, இலக்கியம் இப்படியாக இருக்கலாம். ஆனால் அவருடைய தன்னிலை - அது ஒரு உலகப் பிரஜையாக மானுடத்தின் மடியில் மட்டுமே அடைக்கலமாகி இருப்பது. கலை, இலக்கியமும் மட்டுமே அதைத் நமக்குப் புரிந்து, உணரவைக்க முடியும். ஒன்பதாம் யோகம் வைகை நீர்த்தேக்கத்தின் வட புலத்தில்... ஓணான்களின் ஜென்மபூமியான கள்ளிக்காடுகளில்... கற்றாழைக் கதகதப்பில் பாம்புறங்கும் கரடுகளில்... இலந்தையும் நெருஞ்சியும் இந்திய ஜனத் தொகையாய் அடர்ந்திருக்கும் வனாந்திரத்தில்.. கால்சட்டை கிழிக்கும் காற்றின் வெடவெடப்பில் நான் மாடு மெய்த்திருக்கிறேன் மாடுமேய்த்தல் கல்வி மாடுமேய்த்தல் தவம் மாடுமேய்த்தல் ஞானம் மாடுகள் நுனிப்புல் மேய்கையில் நான் தமிழின் வேர்வரை மேய்ந்ததும் அங்குதான் அந்த வெயில் என் ஊனினை உருக்கியது அந்தத் தனிமை என் உள்ளொளி பெருக்கியது அது பார்வைக்குக் கூர்மைதந்தது மனதுக்கு ஒருமைதந்தது ஞானிகளே ஆய கலைகள் அறுபத்துநான்கா? அறுபத்து ஐந்து மாடுமேய்த்தல் யோகம் மொத்தம் எட்டா? ஒன்பதாம் யோகம் மாடுமேய்த்தல் (வைரமுத்து கவிதைகள் - சூர்யா : 486,487,490) ஒரு கீழ்காட்டுத் தமிழனாக மாடுமேய்ப்பது எனும் வாழ்வியல் அனுபவத்தை, ஒன்பதாம் யோகமென உலக ஞானத்தின் பாற் பொதுமைப் படுத்துகையில் அடையாளமும், தன்னிலையும் இலக்கியத்தில் ஒரு மகோன்னதமான இடத்தைப் பெறுகின்றன. தங்களது கொண்டாட்டங்களுக்குச் சிறந்த வடிகாலாகவும், தங்களது மன அவலங்களை ஆழ்ந்து அனுபவிக்கவும் திரைப்படப்பாடல்கள் தமிழர்களுக்கு உதவிய அளவுக்கு வேறு எந்த இனத்திற்கும் உதவியதாகத் தெரியவில்லை. இத்திரைப்படப்பாடல்களில் கவிஞர் முகம், இசையமைப்பாளர் முகம், பாடகர் முகம் நடிகர் முகம் என்று நான்கு முகங்கள் காணக் கிடைக்கின்றன. பாடலுக்குக் கிடைத்த புகழ் முதல் முதலில் கவிஞருக்குச் சேர்ந்து கொண்டிருந்தது. பிறகு நடிகருக்கு என்றாகித் தற்போது இசையமைப்பாளர் அந்த அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறார். உண்மையில் இதன் முழு உரிமை கவிஞருக்குத் தான் உரியது. சங்க காலத்திலும் பாணர், விறலியர், கூத்தர் என எல்லோரது முகங்களே காலத்தை வென்று நிற்கின்றன. எக்காலத்திலும் தட்டிக் கொடுப்பவர்களும், தட்டிக் கேட்பவர்களும் அவர்கள் தாம். அவர்கள் முகமிழந்து கடைச்சரக்காகிப் போகாமல் இருப்பதற்கு அவர்களது தன்மான உணர்வும், பெருமிதமும் உதவவேண்டும். இது சாதியும் இனமும் மட்டும் சார்ந்து வருவதல்ல. தனக்கென்று ஓர் அடையாளம் இருக்கிறது என்று உணரும் எந்தத் தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் அமைந்து வர வேண்டிய அம்சங்கள் தான். இசை தன்னளவில் ராஜாவாக இருக்கலாம். ஆனால் மொழியோடு சேரும் போது அது தாளம் போட்டுத்தான் ஆகவேண்டும். இது இசைக்கு இழிவு இல்லை. மாறாக அது மொழியின் பலத்தை அதிகரித்து மொழியின் பாகமாக ஆகிறது. (வெங்கட் சாமிநாதன்) கவிதைகளை ரட்சியும் அதிகாலை சூரியன்கூட இன்னும் முகம் கழுவவில்லை வாசிக்க ஆளில்லை எனினும் வானப்புத்தகம் திறந்திருந்தது எனது தவச்சாலையாய் மொட்டைமாடி நட்டுவைத்த மெளனங்களாய் மரங்கள் அங்கங்கே புள்ளினங்களின் பூபாளம் கலை என்பது இயற்கை வாழ்க்கை இரண்டின் மொழிபெயர்ப்போ? "அப்பா உங்களைப் பார்க்க நிறையப்பேர்" என் மகன் கதவு தட்டிக் கனவுடைத்தான் கலைந்த தலை கசங்கிய லுங்கி முகத்தில் முள் பரவாயில்லை கவிதைக்கும் கவிஞனுக்கும் நிஜமே கம்பீரம் கீழே வந்தேன் முகங்கள் முகங்கள் முழுக்க முழுக்க முகங்கள் படித்த முகங்கள் பாமர முகங்கள் கனவு முகங்கள் கழுவாத முகங்கள் அன்பில் குழைத்த ஆர்வ முகங்கள் மழலை சுமந்த மாதர் முகங்கள் "வணக்கம்" ஓ! ஒரே பொழுதில் அத்தனை உதட்டிலும் பூப்பூக்க வைக்கும் அற்புத மந்திரமா "வணக்கம்"? "எந்த ஊர் நீங்க?" ஊர் சொன்னார்கள் "என்ன விஷயம்?" "ஒங்க பாட்டுன்னா உசுரு" லுங்கி சிறகானது "எல்லோருக்கும் டீ சொல்லுப்பா" தேநீரைப் போலவே சுடச்சுடக் கேள்விகள் "ஒரு பாட்டு எழுத எவ்வளவு நேரம்?" "அதிகபட்சம் அரைமணி நேரம்" "பாட்டுக்கு எவ்வளவு பணம் வாங்குறீங்க?" "வாங்கவில்லை கொடுக்கிறார்கள்" "பாரதிராஜா உங்களுக்குச் சொந்தக்காரரா?" "ஆமாம் - கலைச்சொந்தம்" "ரஜினியோடு சாப்பிட்டதுண்டா" "உண்டு" "கமல் டெலிஃபோன் பண்ணுமா?" "எப்போதாவது" "நடிகைகள் வருவார்களா?" "வந்திக்கிறார்கள் கல்யாண அழைப்பிதழ் கொடுப்பதற்கு" "உங்களைப் பற்றியும் கிசு கிசு வருகிறதே" "என் புகழுக்கு அது போதாது" "உங்களைத் தொந்தரவு செய்கிறோமா" "இல்லை தோகை, மயிலுக்குத் தொந்தரவா?" "உங்களுக்குப் பிடித்த பாட்டு" "காதல் சிறகைக் காற்றினில் விரித்து" "நீங்கள் நினைத்து நிறைவேறாமல் போன ஆசை?" "மொட்டை மாடியிலிருந்து குதிக்க வேண்டும்" "உங்கள் பலம் எது? பலவீனம் எது?" "பலம் பகை பலவீனம் சொந்தம்" "குறைந்த நாளில் நிறையச் சம்பாதித்த கவிஞர் நீங்கள் தான்" "இல்லை எனக்கும் மாசக்கடைசிகள் உண்டு" "எங்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" "மீண்டும் வணக்கம் சொல்ல விரும்புகிறேன்" சிரித்தார்கள் அலையலையாய் அழகழகாய்ச் சிரித்தார்கள் கலைந்தார்கள் கனவுகளாய் கலர்க் கலராய் கலைந்தார்கள் எல்லோரும் போனபின் அந்த அறையில் யாரோ முனகுவது கேட்டது திரும்பிப் பார்த்தேன் தன்னை யாரும் விசாரிக்கவில்லையே என்ற விசாரத்தில் கண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தது என் கவிதை (வைரமுத்து கவிதைகள் - சூர்யா : 473-476) கவிதையை இதுகாறும் விசாரித்தாகிவிட்டது. இனித் திரை இசைப் பாடல்களுக்கு வருவோம். திரையுலகத்தில் பாடலாசிரியனுக்கு மட்டும் ஒரு தனித்தகுதி உண்டு. எந்த மொழி பேசுகிறவரும் எந்த மாநிலத்திலும் நடிகராகலாம்; எந்த மொழிப் படத்தையும் எவரும் இயக்கலாம்; தயாரிக்கலாம்; ஒளிப்பதிவு - ஒலிப்பதிவு செய்யலாம்; இசையமைக்கலாம்; பாடலாம். ஆனால், தாய்மொழி வேறாயினும் தமிழ்நாட்டில் பிறந்து தமிழ்த் தண்ணீர் குடித்துத் தமிழ்க் காற்றை சுவாசிக்காத யாரும் பாடலாசிரியனாக ஆகிவிடமுடியாது. தமிழ் மொழிக்கு மட்டுமல்ல; எம்மொழிக்கும் இது பொருந்தும். ஏனென்றால் ஒரு பாடலாசிரியன் என்பவன் மண்ணோடும் மக்களோடும் வளர்த்தெடுக்கப் படுகிறவன். அவன் பாடல்களின் ஊடாக சமூக வரலாறு படைக்கிறவன் அல்லது பதிவு செய்கிறவன். (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 30) காற்றின் தேசம் எங்கும் - எந்தன் கானம் சென்று தாங்கும். காதல் ஓவியம் படத்தில் ஒரு பாடல் வரி. இது வெறும் சினிமாவுக்காக எழுதிய வார்த்தைகள் அல்ல. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் மக்களைத் தன் வார்த்தைகளால் வசியப்படுத்தி வைத்திருக்கும் வைரமுத்து என்கிற பாடலாசிரியர் - கவிஞரின் ஆளுமையின் மிக முக்கியமான ஒரு பரிமாணத்தை - தன்னம்பிக்கையை - பிரபதிலிக்கும் வார்த்தைகள். கவிதை எழுத இனி நான் பிராயாசைப்பட வேண்டியதில்லை என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்லுமளவுக்கு இவரது தன்னம்பிக்கை இவருடன் வாசம் புரிகிறது. (அரவிந்தன்) (பம்பாய் - மலரோடு மலரிங்கு மகிழ்ந்தாடும் போது) மலரோடு மலர் இங்கு மகிழ்ந்தாடும் போது மனதோடு மனம் இங்கு பகைகொள்வதேனோ மதம் என்னும் மதம் ஓயட்டும் - தேசம் மலர் மீது துயில் கொள்ளட்டும் வழிகின்ற கண்ணீரில் நிறமில்லையே உதிரத்தின் நிறம் இங்கு வேறில்லையே காற்றுக்குத் திசை இல்லை தேசம் இல்லை மனதோடு மனம் சேரட்டும் துளியெல்லாம் கைகோத்துக் கடலாகட்டும் கடலோடு கடல் சேரட்டும் துகளெல்லாம் ஒன்றாகி மலையாகட்டும் மண்ணோடு விண் சேரட்டும் விடியாத இரவொன்றும் வானில் இல்லை வாழ்வோடு ஒளிசேரட்டும் (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 515) வாழ்வியலுக்கான உதாரணம் மேற்சொன்ன அந்தப்பாடல் என்றால் அழகியலுக்கு கீழ்வரும் இந்தப்பாடல். (இந்தியன் - பச்சைக்கிளிகள் தோளோடு) பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு பூலோகம் ஆனந்தத்தின் எல்லை - இந்த பூமிக்குக் கண்ணீர் சொந்தம் இல்லை அந்த விண்ணில் ஆனந்தம் இந்த மண்ணில் ஆனந்தம் - அடி பூமிப் பந்தை முட்டி வந்த புல்லில் ஆனந்தம் வெயிலின் சுத்தம் ஆனந்தம் மழையின் சத்தம் ஆனந்தம் - அட மழையில் கூடச் சாயம் போகா வானவில் ஆனந்தம் வாழ்வில் நூறானந்தம் வாழ்வே பேரானந்தம் - பெண்ணே நரை எழுதும் சுய சரிதம் அதில் அன்பே ஆனந்தம் ஆனந்தம். (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 538) பொழுது போக்குக்கு என்று மட்டும் தமிழ்ச்சமூகம் கலை வடிவங்களை ஒரு போதும் உண்டாக்கிக் கொண்டதில்லை. சமூக ஒருங்கிணைப்பு புராண அறிவு. பக்தி வடிவம், இசை, அனுபவம், இலக்கிய ரசனை என்பவற்றோடு சேர்த்துப் பொழுதுபோக்கும் ஓர் அம்சமாக இருந்தது. இரவு நேரத்தில் தூக்கத்தைக் கெடுத்துக் கொண்டு பார்ப்பதை எப்படிப் பொழுது போக்காக எடுத்துக் கொள்ள முடியும்? தெருக்கூத்து, உடுக்கடிப்பாட்டு, கணியான் கூத்து முதலிய வடிவங்கள் வாழ்க்கையைப் பற்றிப் புரிந்து கொள்ள உதவின. வாழ்க்கை பற்றிய பயத்தையும் உருவாக்கின. பயங்கள் மூலம் விழுமியங்கள் பெறப்பட்டன. இப்போது நிலைமை மாறிவிட்டது. தொழிற்புரட்சியின் மூலம் ஏற்பட்ட முதல் கேடு கலை வாணிகமாக்கப்பட்டதுதான். ஆரம்ப காலத்தில் புராண இதிகாசங்களும், தொன்மங்களும் சினிமாவின் பாடு பொருளாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் சினிமா அவற்றை உதறித்தள்ள வேண்டியதாயிற்று. தொழில் நுட்பம் மேலும் மேலும் வலிமை பெற்றுக் கொண்டே வர பாடலும் வசனமும் அதன் பலத்திற்கு அடிபணிய வேண்டியதாயிற்று. ஒவ்வொரு சமூகக் குழுவும் தனக்கென்று சில கலை வடிவங்களை உருவாக்கி வைத்திருந்தது. தொழில்நுட்பம் அதைச் சிதைத்தது. ஆனாலும் இந்தச் சமூகக் குழுக்கள் தோன்றிவரும் புதிய கலை வடிவங்களை ஏற்றுக் கொண்டன. இப்புதிய கலை வடிவங்களின் ஆக்கத்தில் அந்தந்த சமூகக்குழுக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள். உழவர் சமூகத்திற்கும் இது பொருந்தும். பொது மரபின் ஒரு பாகமாகவே இருந்து கொண்டு தனி மரபுகளையும் பேணிக் கொண்டு வந்த உழவர் சமூகம் மாறிவரும் கலை வடிவங்களோடு இணைந்தும், விலகியும் உறவு கொண்டிருந்தது. மரபிலிருந்து முற்றிலும் தங்களைத் துண்டித்துக் கொள்ளாமல் அதேசமயம் புதிய கலை வடிவங்களின் மயங்கு தன்மையிலிருந்தும் விடபட முடியாமல் புதிய அடையாளங்களைத் தேடிய ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக வெளிப்படுவர்தான் கவிஞர். (ப.கிருஷ்ணசாமி) (கருத்தம்மா - காடு பொட்டக்காடு...) காடு பொட்டக்காடு செங்காத்து வீசும் காடு வீடு கீத்து வீடு எலியோடு எங்க பாடு... கூழு சோளக் கூழு வெங்காயம் கூடச் சேரு தை மாசம் நெல்லுச் சோறு பூமி எங்க பூமி வானம் பாத்து வாழும் பூமி தூங்கிப் போச்சு எங்க சாமி அந்தி நேரம் வந்தா தலையெல்லாம் எண்ணிப்பாரு ஆடு மாட்டச் சேத்து எங்க வீட்டில் ஏழு பேரு ஆறு எங்க ஆறு அட போடா வெக்கக்கேடு மழை வந்தா தண்ணி ஓடும் மறுநாளே வண்டி ஓடும் கண்ணு பெத்த கண்ணு - எங் கன்னுக் குட்டியும் பொண்ணும் ஒண்ணு கஞ்சி ஊத்தும் எங்க மண்ணு (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 475) சிற்பியினுடைய 'சிகரங்கள் பொடியாகும்' என்ற கவிதை உள்ளடக்கத்தில் ஒரு கிராமத்துப் பெண்ணின் சோகக் கதையைக் கூறுவது. ஆனால் அதன் வடிவம் ஒரு வேதியியல் மாணவனுக்கு மட்டும் புரியக்கூடிய வடிவம். உடலாலும், உள்ளதாலும் தன் சமூகத்தைச் சார்ந்து நிற்காத எந்த எழுத்தும் இப்படி அடையாள மிழந்து போவது இயற்கை தான். கி.ராஜநாராயணன், தோப்பில் முகமது மீரான் என்ற இரண்டு உதாரணங்களில் இந்த அடையாளம் துலக்கம் பெறுவதைக் காணலாம். கவிஞருக்கு தன் சமூகத்தைப் பற்றிய ஒரு தெளிவு இருக்கிறது. அதன் ரசனை, அதன் தேவை என்பது குறித்த கணிப்பும் இருக்கிறது. திரைப்படங்களுக்குப் பாடல் எழுதுகிறபோது தன்னுடைய சமூகத்தைப்பற்றிய அறிவோடு தொழில் நுட்பம் உருவாக்கி வைத்திருக்கிற 'ஒட்டுமொத்தச் சமூகத்தையும்' கணக்கில் கொண்டு தான் செயல்படுகிறார். அதன் அறியாமை, அதன் பலவீனம், அதன் ஆசாபாசங்கள் என்பவற்றோடு அதன் எதிர்ப்பார்ப்புகளும் அவருக்குத் தெரியும். (ப.கிருஷ்ணசாமி) "நீரில் பொருட்கள் எடை இழக்கும் நிலவின் மனிதன் எடையிழப்பான் காதலில் கூட எடையிழக்கும் கண்டு கொண்டேனடி உன்னாலே" என்பதுபோன்ற அறிவியல் உண்மைகளை இவர் அங்கங்கே இடைச் செருகலாகச் செருகி விடுகிறார். (டாக்டர் பேரா.சு.சண்முகசுந்தரம்) தன் ஆளுமைச் சிறப்புடன் புதுக்கவிதையின் பேச்சுப் பாணி, படிமத் தன்மை, நகரமயம் போன்ற தன்மைகளுடன் வாய்மொழிமரபு சார்ந்த நாட்டுப்புற இலக்கிய வளத்தையும் திரைப்படப் பாடல்களுக்குள் கொண்டு வந்தார். (வைரமுத்து இலக்கியத் தடம்) (கருத்தம்மா - தென்மேற்குப் பருவக்காற்று) தென்மேற்குப் பருவக்காற்று தேனிப் பக்கம் வீசும்போது சாரல் இன்பச்சாரல் தெம்மாங்கு பாடிக் கொண்டு சிலு சிலுவென்று சிந்துதம்மா தூறல் முத்துத் தூறல் வெங்காட்டுப் பொத்தக்கள்ளி சட்டென்று மொட்டு விட செங்காட்டுச் சில்லிச்செடி சில்லென்று பூவெடுக்க நீ என்றும் நான் என்றும் இரு வார்த்தை ஒன்றாகி நாம் என்ற ஓர் வார்த்தை உண்டானதே ஆணென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே காதல் என்ற மந்திரத்தின் மாயம் என்ன கல்லும் முள்ளும் இப்போது பூவானதே வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே. (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 474) கவிஞராக, பாடலாசிரியராக தமிழ் நாட்டில் அவர் வெற்றி பெறுவது எனக்குப் புரிகிறது. ஆனால் தேசிய அளவில் இத்தனை மொழிப் பாடலாசிரியருக்கு இடையே அவர்கள் யாருக்கும் புரியாத, தமிழ்ப் பாடலாசிரியருக்கு, பல மொழிப் பிராந்தியங்களிலிருந்து வரும் தமிழ் அறியாத நடுவர்கள் வைரமுத்துவைச் சிறந்த பாடலாசிரியர் என்று தேர்ந்தெடுத்தது எவ்வாறு? வைரமுத்துவின் தமிழ்ப் பாடல்களில் அவர்கள் என்ன கண்டார்கள்? என்ன ரசித்தார்கள்? (வெங்கட் சாமிநாதன்) ஆனால் வைரமுத்துவுக்குப் பரிசு கொடுத்துப் பெற ஏதும் இல்லை. அதுவும் பாடலுக்கு, வட இந்தியாவில் மிகப்புகழ் பெற்ற கவிஞர்களும் பாடலாசிரியர்களும் இருக்க, அவர்கள் பாடல்களைக் கேட்டு இந்தியத் துணைக்கண்டமென்ன, மத்திய ஆசியா என்ன, அனைவரையும் மனம்கிறங்கவைக்கும் பாடலாசிரியர்கள் இருக்க, மொழி புரியாத, தகுதி நிர்ணயிக்க இயலாத, தேர்வு நியாயம் சொல்ல இயலாத, அவர்கள் அறியாத தமிழ்மொழிப் பாடலைச் சிறந்த பாடலாகத் தேர்ந்தெடுக்க அவ்வளவு நடுவர்களையும் சரிக்கட்டுவது என்பது எந்தச் செல்வாக்குக்கும் அரசியல் சக்திக்கும் சாத்தியம் இல்லை. சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும் ஒருமுறை சரி, ஐந்து முறை சாத்தியமா? அவசியமா? அவர்களுக்கு ஏன் தேசிய விருது ஒரு முறை கூடக் கிடைக்கவில்லை? யாருக்காவது ஐந்து முறை கிடைத்துள்ளதா? இசையமைப்பாளர்களோ பரிசு பெறுவது எனக்குப் புரிகிறது, ஆனால் பாடல்? (வெங்கட் சாமிநாதன்) இதன் அடித்தளம், தன் படைப்பிற்குச் செலாவணி உண்டு, மக்கள் கவர்ச்சி உண்டு என்ற பலம். செல்வாக்கினால், அரசியல் பலத்தால், விருதுகள் பெறலாம்; பதவிகள் பெறலாம். ஆனால் மக்கள் விரும்பும் ஒரு திறனை யாரும் ஏதும் செய்து விடமுடியாது. வைரமுத்து பாடலாசிரியராகப் பெறும் வெற்றி அரசியல் வெற்றியல்ல. ஒரு குழு, பதவி திருப்தி அடைந்த வெற்றி அல்ல. மார்க்கெட்டினாலேயே, மக்கள் ஆதரவினாலேயே துலாக்கோல் நிலுவையாகப் புகழும் வரவேற்பும் தீர்மானிக்கப்படுவது திரைப்பட உலகம். இத்தனை ஒதுக்கீடு. கதாநாயகர்களில், கதாநாயகிகளில், இடம் வேண்டும் என்று போராட்டம் நடத்த முடியாது. கோட்டையிலிருந்து அரசு ஆணை பிறப்பிக்க முடியாது. தமிழ்த் திரைப்பட உலகம் தமிழருக்கே, வந்தேறிகளுக்கு இல்லை என்று கோஷம் எழுப்ப முடியாது. இப்படித் தொடமுடியாத இடத்தில் இருக்கிறது வைரமுத்துவின் பலம். (வெங்கட் சாமிநாதன்) இந்தி மொழிப் பாடல்களை இவர் தமிழில் செய்யும் போது நினைத்துப் பார்க்காத சிகரத்தை இவரது பாடல்கள் சென்றடைகின்றன. சான்றாக மணிரத்னம் இயக்கிய 'தில்சே' 'உயிரே' ஆனது. அதில் குல்சார் "முகமூடிப் பெண்ணே நீ எங்கே, உன்னைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்" என்று எழுதினார் வைரமுத்து. "பூங்காற்றிலே உன் சுவாசத்தைத் தனியாகத் தேடிப் பார்த்தேன் கடல்மேல் ஒரு துளி வீழ்ந்ததே அதைத் தேடித் தேடிப் பார்த்தேன்" என்று கவிதை செய்தார். "காற்றின் அலைவரிசை கேட்கின்றதா? இதயம் கருகும் ஒரு வாசம் வருகின்றதா?" என்று நாயகன் வானொலி அறிவிப்பாளன் என்பதையும் மனதில் கொண்டு பாடலைக் கவிதைத் தளத்துக்கு உயர்த்திவிட்டார். இவரது பாடல்கள் பிறமொழிகளுக்குப் போகும்போது பிறமொழிக் கவிஞர்கள் மொழிபெயர்க்குபோது இவர் உயரம் தொடமுடியாமல் திணறுகிறார்கள். 'ஜீன்ஸ்' படத்தில் ஒரு காதல் பாடல், அதனை வைரமுத்து, "ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது உன் கூந்தலில் நின்றாடத்தான்" என்று எழுதியுள்ளார். இதனை ஜாவேத் அக்தர் இந்திக்கு மொழி மாற்றம் செய்யும்போது 'ஒற்றைக்காலில் என்னால் தவம் செய்ய முடியாது' என்று சொல்லிவிட்டாராம். இவரது கற்பனையை வியந்து கரைந்து போனாராம். (டாக்டர் பேரா.சு.சண்முகசுந்தரம்) தமிழ்த் திரைப் பாடல் வரலாற்றில் ஐந்து விடி வெள்ளிகளை அடையாளம் கண்டு சொல்ல முடியும். பாபநாசம் சிவன், உடுமலை நாராயணகவி, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கண்ணதாசன், வைரமுத்து ஆகியோர் ஐந்து நட்சத்திரங்கள். இதில் வைரமுத்து ஐந்தாவது நட்சத்திலம் என்றாலும் ஏனைய நான்கு பேரையும் செரித்து அவர்களின் சத்தையும் சாரத்தையும் உள்வாங்கி ஒளிவீசம் துருச நட்சத்திரம் என்றால் மிகையன்று. (வைரமுத்து இலக்கியத் தடம்) கண்ணதாசனின் காலம் கொடுத்த பல்வேறு செளகரியங்களை இவர் பெற வாய்ப்பில்லாமல் போயிற்று இப்போது மிக நல்ல கதைகளும், நடிகர்களும், கதாபாத்திரங்களும் குறைவு. சிவாஜி, எம்.ஜி.ஆர், போன்ற மிகப் பிரம்மாண்டமானவர்கள் கோலோச்சிய காலத்தில் கொடி கட்டி வாழ்ந்தவர் கண்ணதாசன். இந்த இரண்டுங்கெட்டான் காலத்தில் திரைப்படத்தில் கவிதைப் பயிர் செய்வது கடினம். எனினும் வைரமுத்து தேசியம், திராவிடம், பொதுவுடைமை, பகுத்தறிவு போன்ற பாடல்கள் எழுத இயலாத காலகட்டத்தில் காதல் சமூகம் என்ற இரண்டையும் மட்டுமே கருப்பொருளாகக் கொண்டு வெற்றி பெற்று வருகிறார். அதுவும் 99.5 விழுக்காடு மெட்டுக்கு எழுதியவை என்பதும் குறிப்பிடத்தக்கது. (செங்கோட்டை - பாடு பண் பாடு) பாடு பண் பாடு - எங்கள் பாரதப் பண்பாடு விண்ணோடு காற்றோடு மண்ணோடு ஒளியோடு பண்பாடு இங்கேதான் பிறந்ததென்று கொண்டாடு மொழி பிறந்ததும் இங்கேதான் கலை பிறந்ததும் இங்கேதான் காதல் பிறந்ததும் இங்கேதான் கற்பு பிறந்ததும் இங்கேதான் வில்லவன் ராமன் சீதையை மீட்க வில்லூன்றியதும் இங்கேதான் அக்கினி தீர்த்தம் கோடித்தீர்த்தம் அத்தனை தீர்த்தமும் இங்கேதான் தாலி என்று சின்னக்கயிறு வேலி ஆவதும் இங்கேதான் தாரம் தவிர இன்னோர் பெண்ணைத் தாயாய் நினைப்பதும் இங்கேதான் சிற்பக் கலைகள் என்னென்ன சித்திரக் கலைகள் என்னென்ன நடனக் கலைகள் என்னென்ன நாதம் கீதம் என்னென்ன காளிதாசனும் கம்பநாடனும் கவிதை சொன்னது என்னென்ன ராஜ ரிஷிகளும் ஞான முனிகளும் வேதம் சொன்னது என்னென்ன விஞ்ஞானத்தால் முடியா இன்பம் ஞானம் தந்தது என்னென்ன இதயம் திறந்து சொல்லடி பெண்ணே இதைவிட சொர்க்கம் வேறென்ன. (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 556) 'இருவர்' படத்தில் வரும் "நறுமுகையே நறுமுகையே" பாடல், கவிஞரின் உச்சபட்சக் கவித்துவமும் புதுமையும் கொண்டது. திரைப்பாடப்பாடல் வரலாற்றிலேயே வெற்றிபெற்ற ஒரு சோதனை முயற்சி. சங்கப்பாடல் வரிகள் போலவே திரைப்படத்திற்கு எழுதிச் சாதனை செய்திருக்கிறார். ஓர் அழகுபட்ட செவ்வியல் தன்மை பாடல் முழுக்க விரவியிருக்கும். வெறும் திரைப்பட பாடலாசிரியர் அல்லர் இவர். கவிஞர் என்பது புரியும். "கண்ணுக்கு மைஅழகு கவிதைக்குப் பொய்யழகு அவரைக்குப் பூவழகு அவருக்கு நானழகு மழை நின்றபின்னாலும் இலை சிந்தும் துளியழகு அலை மீண்டும் போனாலும் கரைகொண்ட நுரையழகு இமை கொட்டும் விண்மீன்கள் இரவோடு தானழகு இளமாறன் கண்ணுக்கு எப்போதும் நானழகு ஆனந்த மஞ்சத்தில் அவிழ்ந்தாலும் குழலழகு அடையாள முத்தத்தில் அழிந்தாலும் பொட்டழகு பெண்ணோடு காதல் வந்தால் பிறைகூடப் பேரழகு என்னோடு நீ இருந்தால் இருள்கூட ஓரழகு" இந்தப் பாடல் ஒரு நல்ல கவிதையாகவே திரண்டு உருக்கொண்டு விடுகிறது. கட்டுகளற்ற சுதந்திரம் தந்தால் திரை இசைப்பாடல்களையே இவர் கவிதையாக்கி விடுவார் என்பதற்கு ஒரு சரியான எடுத்துக்காட்டு இது. இப்படி நவரசங்களையும், நல்லபடி எழுதுகிற கவிஞர் இவர். ஒவ்வொரு சங்கீத வித்வானும். ஒவ்வொரு ராகத்தில் தேர்ந்தவனாக இருப்பான், சிறப்பாக, மற்ற ராகங்கள் வராது என்பதில்லை இதற்குப் பொருள். கவிஞர் வைரமுத்து காதல் ராகத்தில் தேர்ந்த வித்வான் என்பது ஒரு பார்வை இவற்றின் உணர்வுபூர்வம், கற்பனை வளம், அனுபவ அடர்த்தி, துடிகொண்ட குரல், புதுமை நயம், எளிமை, இனிமை, மெய்ம்மை - எல்லாமும் உள்ளபடியே பெறுமதி உடையவை. ஒரு நல்ல திரைப்படப்பாடலாசிரியன் தமிழ்ப் பெருவாழ்வில் கலந்துவிடுகிறான். திசையெட்டும் உள்ள தமிழ்ப்பெருங்குடி மக்கள் தலைமுறை தலைமுறையாக அவனைக் கொண்டாடிக் கொண்டேயிருப்பார்கள். (விக்ரமாதித்யன்) "மொழியும் மொழி சார்ந்த வாழ்க்கையும்தான் என் வாழ்க்கை" என்று 13 வயதிலேயே தீர்மானித்துவிட்டதாகக் கூறும் கவிஞர் தனது மொழி சார்ந்த யாத்திரையில் பதித்த முத்திரைகள் அனேகம் தமிழ்க் கவிஞர் - பாடலாசிரியர்களில் யாரும் இவரைப் போல மூன்று முறை உலகம் சுற்றியதில்லை. முப்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியதில்லை. ஐந்து முறை ஜனாதிபதி விருது வாங்கியதில்லை. (வைரமுத்து இலக்கியத் தடம்) (அந்தி மந்தாரை - சகியே நீ தான் துணையே) அடிமை இந்தியாவின் விடுதலைக்குப் பாடுபட்டு சுதந்திர இந்தியாவில் கைவிடப்பட்ட முதியோர் காதல் இது. காவிரி நதியும் ரெண்டாகக் கூடும் கொள்ளிடம் வந்து ஒண்ணாகச் சேரும் காலத்தின் கணக்கு யார் காணக் கூடும் நீண்ட முடி கொஞ்சம் நிறம் மாறிப் போச்சு சங்குக் குழியோடு குரல் மாறிப் போச்சு ஓடி வயசாச்சு உருமாறிப் போச்சு நினைப்பது மட்டும் தான் மாறாம இருக்கு என்னைச் சுற்றி ஒரு கூட்டம் சிரிக்கின்ற போதும் ஒன்னப் பத்தி என் உதடு ஓயாமப் பேசும் காத்து மழை எதனாலும் கரையாத பாசம் கட்டையிலும் வேகாது கைதொட்ட வாசம். (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 550) (என் சுவாசக் காற்றே - சின்னச் சின்ன மழைத்துளிகள்) மழை கவிதை கொண்டு வருது - யாரும் கதவடைக்க வேண்டாம் ஒரு கருப்புக்கொடி காட்டி - யாரும் குடை பிடிக்க வேண்டாம் - இது தேவதையின் பரிசு - யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம் - நெடுஞ் சாலையிலே நனைய - ஒருவர் சம்மதமும் வேண்டாம் அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய் நீ வாழ வந்த வாழ்வில் ஒரு பகுதி இழுக்கிறாய் நீ கண்கள் மூடிக் கரையும் போது மண்ணில் சொர்க்கம் எய்துவாய். (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 692) தன்னையொத்த உயிர்க் கூட்டத்தையும், பயிர்க்கூட்டத்தையும் அவற்றின் இருப்பையும். வாழ்வையும் ஏற்றுக்கொள்வதே கலாசாரத்தின் ஆணிவேராகும். கற்றுத் தரப்படாத, தன்னியல்பான இந்த ஏற்பே மனிதனை மனிதனாக்குகின்றது. 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்' வாடச் செய்து அவனைக் கவிஞனாகவும் ஆக்குகின்றது. காலம் (Time) வெளி (Space) என்ற இரண்டு பரிமாணங்களின் பின்னணியில் மனிதவாழ்வின் அசைவுகளைப் புரிந்து கொண்ட கவிஞர்களுக்கே இது சாத்தியமாகும். கவிஞர் வைரமுத்துவிற்கு இது சாத்தியமாகியிருக்கிறது. பாடலாசிரியர் என்ற எல்லையைக் கடந்த வைரமுத்து கவிஞர்தான். 'கூடு' கவிதை போன்ற 'பேர் சொல்லும் பிள்ளைகள்' அவருக்கு நிறையவே இருக்கின்றன. (டாக்டர் தொ.பரமசிவன்) (அசல் - சிங்கம் என்றால் எம் தந்தைதான்) சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படத்தில் கதாநாயகன் தந்தையின் பெருமை பேசுவதாக ஒரு பாடல். படத்தில் கேட்டால், கதாநாயகன் தன் தந்தைக்குப் பாடுவதாகவும் - தனியே கேட்டால் நடிகர்திலகம் சிவாஜியை நினைவூட்டுவதாகவும் வரிகளை அமைத்தார் கவிஞர். பாடலைக் கேட்டு நடிகர் திலகத்தின் குடும்பமே ஆனந்தக் கண்ணீர் சிந்தியது - எனக்கு மிகப் பிடித்த அவரது திரை இசைப் பாடல் அது – சிங்கம் என்றால் எம் தந்தைதான் செல்லம் என்றால் எம் தந்தைதான் கண் தூங்கினால் துயில் நீங்கினால் எம் தந்தைதான் எம் தந்தைதான் எல்லோருக்கும் அவர் விந்தைதான் விண்மீன்கள் கடன் கேட்கும் அவர் கண்ணிலே வேல்வந்து விளையாடும் அவர் சொல்லிலே அவர் கொண்ட புகழ் எங்கள் குலம் தாங்குமே அவர் பேரைச் சொன்னாலே பகை நீங்கும் அழியாத உயிர்கொண்ட எம் தந்தையே ஆண்வடிவில் நீ என்றும் எம் அன்னையே வீரத்தின் மகனென்று விழி சொல்லுமே வேழத்தின் இனமென்று நடை சொல்லுமே நிலையான மனிதன் எனப் பேர் சொல்லுமே நீதானே அசல் என்று ஊர் சொல்லுமே உன் போல் சிலரின்று உருவாகலாம் - உன் உடல் கொண்ட அசைவுக்கு நிகராகுமா எப்போதும் தோற்காது உன் சேனைதான் இருந்தாலும் இறந்தாலும் நீ யானைதான் கண்டங்கள் அரசாளும் கலைமூர்த்தி தான் கடல்தாண்டிப் பொருள்ஈட்டும் உன் கீர்த்திதான் தலைமுறைகள் கழிந்தாலும் உன் பேச்சுதான் தந்தை எனும் மந்திரமே எம் மூச்சுதான். (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 1134) பெயரில் என்ன இருக்கிறது என்பார்கள்? எல்லாமே உண்டு என்பதைப் பார்த்தோம் – வைரமுத்து பற்றி நினைக்கும் போதே முதலில் எனக்கு குறிப்பாகப்படுவது வைரமுத்து என்ற பெயர்தான். இவ்வளவு புகழ் பெற்ற மனிதர் அதுவும் கவிதை உலகில். அதிலும் பார்க்கத் திரைப்பட உலகில் கோலோச்சுபவர், எப்படி வைரமுத்து என்ற பெயரை விடாப்பிடியாகத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்? சினிமா உலகிலும் சரி, கவிதை உலகிலும் சரி கவர்ச்சிகரமான, புதுமையான. சட்டென யாருடைய கவனத்தையும் கவரும், வேறு எந்த சிந்தனையிலோ, காரியத்திலோ ஈடுபட்டிருந்தாலும் சிண்டைப் பிடித்து இழுத்து, 'இதோ பார் இந்தப் பெயரைக் கவனி' என்று கட்டளையிடும் பெயராக அல்லவா வைத்துக் கொள்ள அவண்டும்? இந்த இரண்டு துறைகளிலும், கவர்ச்சிகரமான பெயர்கள் புனைந்து கொள்ளாதவர்கள் மிகக்குறைவு. முத்து, பொன்னுசாமி, அழகிரிசாமி, ராமையா, செல்லப்பா, என்ற சாதாரணப் பெயர்கள் (இவர்கள் எல்லாம் யார்? பலசரக்குக்கடை எடுபிடிகளா, சினிமா கொட்டைகையில் சோடா விற்கும் பையன்களா?) உலவும் கதைத்துறையிலே கூட, புதமைப்பித்தன் என்ற தேர்வில் அமெரிக்க விளம்பர யுக்தி படிந்திருப்பதாக புதுமைப்பித்தனே வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்; தான் அதிகம் பேர் கவனத்தை ஈர்த்து நினைவில் நிலைத்து விடக்காரணம் தன் புதுமையான பெயர்தான் என்று ஞானக்கூத்தன் ஒருமுறை சொன்னார். இந்தப் பெயர் சொன்ன மாத்திரத்திலேயே, இவர் ஏதோ வித்தியாசமான கலை ஈடுபாட்டில் இருப்பவர் என்று சொல்லியாகிவிடுகிறது, இதில் பெயரே ஒருவகைக் கருத்து வெளிப்பாடு (Statement) ஆகிவிடுகிறது. (வெங்கட் சாமிநாதன்) (ராவணன் - கோடு போட்டாக் கொன்னு போடு) கள்ளிக் காட்டுப் புள்ளத்தாச்சி கல்லப் பெத்தா வீரனடா சல்லிக் கட்டு மாடு கிழிச்சா சரியும் குடலே மாலையடா செத்த கெழவன் எழுதி வச்ச ஒத்தச் சொத்து வீரமடா கோடு போட்டாக் கொன்னு போடு வேலி போட்டா வெட்டிப் போடு எங்க காத்து மீன் சுட்ட வாசம் அடிக்கும் எங்க தண்ணி எரி சாராயம் போல் ஒறைக்கும் வத்திப்போன உசுரோடு வாழ்வானே சம்சாரி - ஒரு சப்பாத்திக் கள்ளி வாழ வேணாமே மும்மாரி எட்டுக்காணி போனா - அட எவனும் ஏழை இல்ல மானம் மட்டும் போனா - நீ மய்க்கா நாளே ஏழை மனைவி மாதா மட்டும் இல்ல மண்ணும் கூட மானம் தான் சிய்யான் காட்டத் தோண்டிப் பாத்தா செம்மண் ஊத்து ரத்தம்தான் கோடு போட்டாக் கொன்னு போடு வேலி போட்டா வெட்டிப் போடு. (ஆயிரம் பாடல்கள் - வைரமுத்து : 1122) ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த எழுத்தாளரும், சிறையிலிருந்த போது உலகின் முதல் நாவல் என்ற கருதப்படுகின்ற "டான் குவிக்சோட் டி லா மான்ச்சா" வை எழுதிய டான்குவிக்சட் (Don Quixote) தொடங்கி, Ulysses எனும் மகத்தான நாவலை எழுதிய James Joyce வரை, தலைசிறந்த நாவலாசிரியர்களின் பலமே - அவர்களது இலக்கிய மொழி "என்ன சொல்கிறது" என்பதைவிட "என்ன செய்கிறது" என்பதுதான்.
No comment