“நறுக்குகள்” – காசி ஆனந்தன் புத்தக வெளியீடு விழா பேச்சு
உலகத்தில் எந்த மொழியிலும் இல்லாத கவிதை இலக்கணம். தமிழில் மட்டும் உள்ளது. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பாவும் அதற்குரிய செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் ஓசையும், தளை, தொடை அமைப்பும். உலகில் வேறு எந்த மொழிகளிலும் இல்லை. கே. இராமகிருஷ்ணன் என்னும் அறிஞர் (Studies in Dravidian Philologies) என்ற நூலில் ஆசிரியர் இந்தியாவிற்கு வந்து குடியேறியபோது திராவிடர்களுடன் கலந்து வாழ்ந்தனர். இக்கலப்பால் ஆரிய மொழியும், திராவிட மொழியும் கலந்து பலவைகத் திரிபுற்ற புது மொழிகள் ஏற்பட்டன என எழுதியுள்ளார்.
பின் நவீனத்துவம் எல்லாம் மேற்கத்தியச் சரக்கு நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை என்ற வாதமும் தப்பு; பின் நவீனத்துவமா அது மேற்கைப்போலவே அதே பண்புடனும் வீச்சுடனும் நம்மிடம் அச்சடையாளமாக அப்படியே உள்ளது என்ற வாதமும் தப்பு. வேறு ஒரு முறையில் அது நம்மிடம் பாதிப்பைச் செலுத்துகிறது. அதனால் அந்த வேறுமுறையையும் அதன் வடிவத்தையும் அர்த்தத்தையும் அறிந்து கொள்வது நமது கடமையாகிறது.
மேல்நாட்டுக் கருத்துக்களை நாம் நமது சமூகத்துக்கு எந்தளவு பயன்படும் என்ற நோக்கில் பார்க்க வேண்டும். பொருந்தாத கருத்துக்களைப் பற்றிச் சர்ச்சிப்பது வெறும் அக்கடமிக் அல்லது கல்வியல் சர்ச்சையாக மட்டும் இருக்கும். கல்வி நிலையங்களில் அதற்குத் தக்கச் சூழல் இருந்தால் இக்கருத்துக்கள் பிரயோஜனம் தரும். மற்றபடி பயனற்றவை.
தமிழில் மேற்கத்திய சிந்தனைகளும் அளவுகோல்களும் எடுபடுமா என்ற ஆய்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இருபதாம் நூற்றாண்டில் எல்லோரின் கவனத்தையும் கவர்ந்த புதுக்கவிதை பற்றிய விவாதம் நடந்தபோதே நவீனத்துவம் சார்ந்த மேற்கத்திய கேள்விகளும் சிந்தனைகளும் சர்ச்சிக்கப்பட்டன. ஒருவிதமான அனைத்துலகப் பண்பு தமிழ்க் கவிதையிலும் திறனாய்விலும் தவிர்க்க முடியாதபடி வரத்தான் செய்யும் என்று இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகளில் கூறப்பட்டது. பல மேற்கத்திய நவீனத்துவ (மாடர்னிச) எழுத்தாளர்கள் மொழி பெயர்ப்புக்களின் மூலமாகத் தமிழ் மொழி வாசகர்களுக்கு அறிமுகப் படுத்தப்பட்டார்கள்.
இக்கட்டத்தில் தோன்றிய அமைப்பியல்வாதம் (ஸ்ட்ரக்சுரலிசம்) ஆரம்பத்தில் ஒரு வெளிநாட்டுத் தத்துவ அறிமுகமாய் தோன்றிய பின்பு தொடர்ந்து, பின் அமைப்பியல்வாதம், பின் நவீனத்துவம் என்றெல்லாம் பரவியபோது பழந்தமிழ் இலக்கிய ஆராய்ச்சியில் புதுவேகம் ஏற்பட்டது. ‘மேலும்’ என்ற வரலாற்றில் விடுபட முடியாத காலாண்டிதழ் தோன்றியது. அதில் தொல்காப்பியம், உரையாசிரியர்கள், இலக்கணம் போன்ற பழந்தமிழ்த் துறைகள் ஆராய்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டன. சிமெயாடிக்ஸ் அணுகல் வழியாகத் தமிழிலக்கணமும் தமிழ்க் கவிதையும் மொழி முதன்மைப் பார்வைகளாக அணுகப்பட்டன.
அதாவது பழந்தமிழில் (சமணப் பாதிப்பாக இருக்கலாம்) ஒருவித மொழிவயப்பட்ட பார்வையே அதன் தேசியப் பார்வையாக இருந்தது என்பது பல ஆய்வுக்கட்டுரைகள் மூலம் வெளிப்பட்டன. ‘தமிழும் குறியியலும்’ என்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவன நூலும் ‘மேலும்’ ஆய்விதழில் வந்த ‘நச்சினார்க்கினியரின் செமியாடிக்ஸ்’ போன்ற கட்டுரைகளும் பிறவும் இத்திசையில் தமிழாய்வு அடி வைத்தைச் சுட்டின. இச்செயல்பாட்டால் ஊக்கம் பெற்ற சில தமிழ்த்துறையாளர்களும் மொழியியலாளர்களும்கூட பழந்தமிழ் இலக்கணத்திலும் தொல்காப்பியத்திலும் ஆர்வம் காட்டிக் கட்டுரைகளும் நூல்களும் எழுதத் தலைப்பட்டனர்.
தமிழ் இக்கியத்தில் வரும் மாங்காய் ஆங்கில இலக்கியத்தில் காய்ப்பதில்லை. ஆங்கில இலக்கியத்தில் வரும் ஆப்பிள் தமிழ் இலக்கியத்தில் கனிவதில்லை.
விட்மனும் – எசுறா பவுண்டும் – நிம்போவும் பிறரும் உருவாக்கிய புதுப்பா (புதுக்கவிதை) எனப்படும் இலக்கியம் பா இலக்கியம் அல்ல – உரை இலக்கியமே என்பதை இந்நூலில் நான் விரிவாக நிறுவியுள்ளேன்.
முதலில் மேலே சொன்ன மேனாட்டு இலக்கிய மேதைகள் மூவரின் முகங்களையும் உங்களுக்கு நான் அடையாளம் காட்ட வேண்டும்.
அடிமைத்தனத்துக்கு எதிரான விடுதலை உணர்வே ஓர் உண்மை இலக்கியனின் அடையாளமாகும்.
ஒடுக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்கும் இலக்கியர்களையே நான் இலக்கியர்களாக ஒப்புக் கொள்வேன்.
வால்ட் விட்மன் யார்? எசுறா பவுண்டு யார்? றிம்போ யார்?
அமெரிக்கன் ஆன வால்ட் விட்மன் அந்த மண் (அமெரிக்கா) செவ்விந்தியர்களுடையது – அதை ஆங்கிலேயர்கள் வன்பறிப்புச் (Aggression) செய்தார்கள் – அமெரிக்கா – செவ்விந்தியர்களிடம் அவர்கள் மண்ணை ஒப்படைக்கப்பட வேண்டும் என்று எங்காவது பாடி இருக்கிறானா?
இத்தாலியில் வாழ்ந்த காலத்தில் – மண்ணின் விடுதலையாளர்களுக்கு எதிராக – கொடுங்கோலன் முசோலினியை ஆதரித்து இலக்கியம் செய்தவனா இல்லையா எசுறா பவுண்டு?
அல்ஜீரியா தேசத்தின் மக்களை அடக்கி ஆண்ட பிரெஞ்சு நாட்டின் மண்பறிப்புப் படையில் ஒரு வெறிபிடித்த போர்வீரனாக அல்ஜீரியாவுக்கு ஆயுமேந்திப் போனவன் றிம்போ என்கிறேன் – மறுப்பர்களா?
வால்ட் விட்மன் காலத்தில் வாழ்ந்தவர் பாரதியார்.
பாரதியார் எழுதுகிறார்:
வால்ட் விட்மன் என்பவர் சமீப காலத்தில் வாழ்ந்த அமெரிக்க தேசத்துக் கவி. இவருடைய பாட்டில் ஒரு புதுமை என்னவென்றால் – அது வசன நடை போலேதான் இருக்கும். எதுகை மோனை தளை ஒன்றுமே கிடையாது. எதுகை மோனை இல்லாத கவிதைதான் உலகத்திலேயே பெரிய பாஷைகளில் பெரும் பகுதியாகும். ஆனால் – தளையும் சந்தமும் இல்லாத கவிதை வழக்கமில்லை’.
‘தளையும் சந்தமும் இல்லாத கவிதை வழக்கமில்லை’ என்று கூறி வால்ட் விட்மனின் புதுப்பா (புதுக்கவிதை) எனப்படும் இலக்கியத்தைத் தள்ளி வைக்கிறார் பாரதியார்.
தமிழ் மொழிக்குத் கிடைத்த முதல் இலக்கியம் ‘பா’ இலக்கியமே. ‘பா’வே வடமொழியில் ‘கவிதை’ என அழைக்கப்பட்டது.
தொடரோசை (சந்தம்) கொண்ட நாட்டுப் பாடல் இலக்கியம் தமிழ்மொழிக்கு ஒரு புதிய மொழி நடையைத் தொடக்கி வைத்தது.
அதுதான் ‘பாட்டு நடை’.
தமிழ்மொழி பாட்டு நடை – உரை நடை என இரு வேறுபட்ட மொழி நடை கொண்டு தழைத்தோங்கிற்று.
காதலன் ஒருவன் கழனியில் நின்று காதலியைப் பாடுகிறான்;
‘நெத்திக்கு மேலே
நிலா எழும்பி வாறதுபோல்
வேலிக்கு மேலே
வெள்ளைமுகம் தெரியுதுகா’
முதல் இலக்கியமாய் நாட்டுப்பாடல் (Folk Song) தோன்றிற்று. அது பாட்டுநடை கொண்ட ‘பா’ இலக்கியமாக மலர்ந்தது. அதுமட்டுமல்ல – பா ஓசையே (Rhythm) நாட்டுப்பாடலின் முதல் உயர்க் கூறாய் – மூலக்கூறாய் அமைந்தது.
‘Stuff set like this
in short lines
is not poetry’.
Don’t be bluffed. (these days too many people are)
எதுகை மோனை தேடிக் கொண்டிருந்தால் இலக்கியம் எப்படி வரும் என்பது புதுப்பா குழுவினர் எழுப்பும் கேள்வி.
‘சொற்களின் சோடிப்பில் இலக்கியம் இல்லை’ என்று சொல்கிறவன்தான் நான்.
ஆனால் –
இயல்பாக – பழகிப்போன சொல் ஆளுமையில் – எழுகையும் மோனையும் தானாக வந்து பாட்டில் விழுந்தால் அது இலக்கியமா? இல்லையா?
க.நா. சு. 1959இல் இப்படி எழுதினார் :
“இந்தப் புதுக்கவிதையிலே புதுசாக இன்றைய வாழ்வுச் சிக்கலைப் பூரணமாகப் பிரதிபலிக்கும் ஒரு வார்த்தைச் சிக்கலும் இன்றையப் புதுமைகளை எல்லாம் தொட்டு நடக்கும் ஒரு நேர்நடையும் அகவல் சந்தம் என்று நாம் சொல்லக்கூடிய ஒரு பேச்சு நடை அடிப்படைச் செய்யுள் வேகமும் எல்லாவற்றிற்கும் மேலாக இடைக்காலப் பழமைக்கு மேலாக, பண்டைக்கால, ஆதிகாலப் பழமையைப் போற்றும் ஒரு திறனும் காணக்கிடக்கின்றன”.
கவிதையின் நுட்ப மொழியைத் தொல் சான்றோர் காலக் கவித்துவ நெறிவழி புதியதை உருவாக்க வேண்டும் என்பதே இவர் கருத்து.
இரண்டாவது முக்கியக் கருத்து, இசையினின்றும் வேறான தனிக்கவிதை மொழி பற்றியதாகும். சி.சு. செல்லப்பா கூறுவது :
“வசனத்துக்கும் கவிதைக்கும் உள்ள வித்தியாசத்தைப் போலவே கவிதைக்கும் சங்கீதத்துக்கும் வித்தியாசம் உண்டு. பாரதி தன் கவிதைக்குள் பலவற்றில் சங்கீதத்திற் குரிய இசையம்சம் ஏற்றியிருப்பதைப் பார்க்கலாம். இந்த அளவு இசையம்சம் உள்ள அவர் படைப்புகள் கவித்தரம் குறைந்து தான் காண்கின்றன என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். இன்று அவரது அத்தகைய படைப்புக்களைப் பின்பற்றி எழுதப்படும் மெட்டுப் பாட்டுக்கள் எல்லாம், கவிதைகள் என்று கருதும் ஒரு ஏற்புநிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தச் சூழ்நிலை கவிதை வளர்ச்சிக்குப் பெரிதும் பாதகமாக இருக்கக் கூடியது. எனவே கவிதைக்கு வேண்டிய இசைத் தன்மை பிச்சமூர்த்தி கூறியது போலச் சவுக்கைத் தோப்பின் வழியே காற்று பாய்ந்து சென்று பிறகு தோன்றும் ஓயும் ஒலி என்பதுதான் முக்கியம்”” அந்தப் பாயும் ஒலி எது என்று அய்யா கேள்வி எழுப்புகிறார்.
இக்கருத்தை க.நா. சு.வும் கூறுகிறார். இசைக்குட்டியங்காதவாறு சங்ககால, சிலப்பதிகார மரபுக்கு முக்கியத்துவம் தருகிறார், க.நா.சு. அவர் கூறுவது :
“… தமிழ்க் கவிதைக்கு கோபால கிருஷ்ணபாரதியாரும் சுப்பிரமணிய பாரதியாரும் ஓரளவு புத்துயிர் தந்தார்கள். கவிதையோடு இசை என்னும் உயிர் சேர்த்துக் கவிதை செய்தார்கள் அவர்கள். பக்தி விஷேசம் இசை முதலிய வற்றால் முந்திய பாரதியாரும் சமூகநெறி சுதந்திர வேகத்தினால் பிந்திய பாரதியாரும் தமிழ்க்கவிதைக்குப் புதுமை தர முயன்றார்கள். இருவருக்கும் இசைநயமும் உதவியது. இந்த இசைநயம் ஓரளவுக்கு தனிக்கவிதை நயத்தைத் தீர்த்துக்கட்ட உதவியது என்றும் அதே மூச்சில் சொல்லலாம். தமிழோடு இசைபாடும் மரபு இருக்கலாம். ஆனால், சங்க நூல், சிலப்பதிகார (இசையற்ற அகவல், சொல்லளவு) மரபு தமிழுக்கு உண்டு என்பதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். தமிழில் புதக்கவிதை இலக்கணமாக இடைக்கால இலக்கண அணி மரபுகள் ஒழித்த மிகப்பழைய மரபுகளைத் தேடவேண்டும் என்பது ஒருவிதத்தில் தெளிவாகிறது என்று சொல்லலாம்”.
இசை என்ற உடன் சந்தம் ஒலிநயம் (Rhythm) போன்ற பண்புகள் இல்லாமல் எப்படிக் கவிதை இருக்கும் என்ற கேள்வி எழாமல் இருக்காது. இதற்குரிய விடையை சி.சு.செ. இவ்வாறு விளக்கி உள்ளார்:
“வசனத்திற்கும் ஒலிநயம் உறவு உண்டு என்றாலும் கவிதையில் உள்ள ஒலிநயத் தோற்றமே வேறு. இந்த ஒலி நயத்தைக் கொணர்வதில்தான். கவிஞன் சாமர்த்தியம் இருக்கிறது. சந்தத்தைக் கொண்டு வார்த்தைகள் ஓசையை தாளப்படுத்திக் காட்சிக் கவிதையை உணரச் செய்வதுதான் என்பதல்ல. இந்த மென்மையான ஒலி நயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுதான் புதுக்கவிதை முயற்சி, சந்த அமைப்பு ஒழுங்கற்றுக் கையாளப்பட்டிருக்கலாம். இசைப்பற்றிய அக்கறை இல்லாமலும் இருக்கலாம். ஆனால் அதில் ஓலிநயம் இருக்கத்தான் செய்யும்… ஆனால், சீர், அசை, தளைகளின் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வெளித்தெரியும் படியான தாளக் கட்டுடன் அமைந்த கவிதைகளைவிடப் புதுக்கவிதையில் ஒலிநயத்திற்கு இடம் அதிகம்.”
“சங்கீதம் வேறு கவிதை வேறு என்பதை ஆணித்தரமாகக் கூறுகிறார். சங்கீதத்துக்கு உரிய அளவு தேவையான இசைத் தன்மைக்கும் கவிதைக்கு உரிய அளவு தேவையான இசைத் தன்மைக்கும் உள்ள வித்தியாசத்தை எந்தச் சந்தர்ப்பத்திலும் அசந்து மறந்தும் கூட – குழப்பிக் கொள்ளக்கூடாது””
தமிழ்க்கவிதை மரபில் பொதுநெறி வேர்கள் கொண்டது சங்ககால மரபேயாகும். இடைக்கால நிலப்பிரபுத்துவ கால மிகை அலங்கார அணி மரபுக்கு எதிரானது எனலாம். நிலப்பிரபுத்துவ மனோபாவச் சங்கீதத்தை மீறி, தனிக்கவித்துவமாக உருவான புதுக்கவிதை.
இருபதாம் நூற்றாண்டின் புதிய உள்ளடக்கத்திற்கேற்பவே, இந்தப் புதிய ஒலிநயப்பாங்கோடு கூடிய புதுக்கவிதை பிறந்தது.
கீழ்க்கண்ட புதுக்கவிதை அமைப்புக் கூறுகள் இங்கே கருதத்தக்கன:
- வரிக்கு இத்தனை சீர், இத்தனை அசை என்று ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த வரையறுப்பைவிட, ஒரு நிறுத்தப்பேச்சு, அல்லது ஒ சிந்தனைப்போக்கு அளவைக் கொண்டு சுதாவான வரையறுப்பால் நிர்ணயிக்கப்படும் வரியே புதுக்கவிதைக்குரியது.
- இவ்வாறமையும் ஒவ்வொரு வரியும் அடிநாதமாக இடையறா ஒலி நயம் (Rhythmic Constant) கொண்டிருக்க வேண்டும்.
- ஒரே தொலை அசை, சீர்களைப் பயன்படுத்துகிற போது, திரும்பத் திரும்ப ஒரேவிதமான ஓசைநய சப்தம்தான் விளைகிறது. மரபான கவிதை இந்தவிதமான இடையறாத ஓசை நயத்தாலேயே முழுக்க முழுக்க ஆனது. ஆனால் சுயேச்சா கவிதையோ தன் உள்ளடக்கத் துக்கும் பேச்சுக்குரலின் கட்டுப்பாட்டுக்கும் உட்பட்டு ஏற்கப்பட்ட தேவைக்கேற்ப வேறுபாடும் ஒரு ஓசைநயத்தை முதன்மையாகக் கொண்டிருக்கும். இதற்குள்ளேயே ஒரு பாட்டர்ன் (தினசு) மற்றும் குரல் இறக்க ஏற்றம் (காடென்ஸ்) அமைந்திருக்கும்.
படிமம் – குறியீடு – மிகை இயல்பியம் எழுதுகிறவர்கள் எத்தகைய படாப்பாடு படுகிறார்கள் என்பதைத் தமிழன்பனே பதிவுசெய்கிறார்.
‘காவல் நிலையத்தில்
ஐந்தாறு நாய்கள்…
குடிகாரக் கண்வனால்
வெந்துபோன ஒரு பெண்ணின்
எலும்பைச்
சூப்பி எறிய
ஊரின் ஆத்திரம்
ஒன்று திரண்டபோது
துப்பாக்கிகளிலிருந்து
முப்பது பேருக்கு
மரணம் பிறந்தது…
அந்தப் பெண்ணை
குறியீடாக்குவதா?
படிம மாக்குவதா?
சர்ரியலி சமாய்ச்சமைத்தெடுப்பதா?
உத்தி முடிவாகாததால்
அவள் கதை
ஒத்திப் போடப்பட்டது’.
‘புதுப்பா’ (புதுக்கவிதை) இலக்கியத்தில் ஒரு ‘புத்துயிரும், மிடுக்கும்’ இருப்பதைப் புறம் தள்ளிவிடமுடியாது.
அருமையான இந்த இலக்கியத்தை நான் ‘பொழிச்சல்’ என அழைக்கிறேன்.
வீச்சாகப் பாயும் பொழிச்சல் தன்மையே ‘பொழிச்சல்’ இலக்கியத்தின் வீறுமிக்க உயிர்வடிவக் கூறாகும்.
பாட்டுநடை ஓசையின் தன்மை அல்ல – சொற்கள், சொல்வைப்பு – இவற்றின் விச்சுத் தன்மையே ‘பொழிச்சலாய்’ப் பாய்கிறது.
இயல்பான பொழிச்சலை நான் ‘சிந்தல்’ இலக்கியம் என்கிறேன். இயல்பை உடைத்த உந்தலான பாய்ச்சலை ‘நறுக்கு’ இலக்கியம் என்கிறேன்.
நறுக்கு
‘அடுப்பைப்
பற்றவை
அம்மா…
குளிராவது
காயலாம்…’ – இளம்பிறை
‘இசம்’களில் இடறி விழுந்தார்கள். ‘இசம்’கள் என்றால் ஒன்றா? இரண்டா?
பிராய்டிசம் – ராமன்டிசம் – எக்சிஸ்டென்சியலிசம் – இமேஜிசம் – சிம்போலிசம் – சர்ரியலிசம் – எலைற்றிசம் – ஆப்ஸ்கியோரன்டிசம் – ஸ்ரக்ரலிசம் – மார்டனிசம் – போஸ்ட் மார்டனிசம் என்று இலக்கியத்தைப் பிறந்து சாகடித்தார்கள்.
என்னைப் பொறுத்தவரை – ‘இசம்’களை நான் வெறுக்கிறேன். இருப்பினும் – எனக்கும் ஓர் ‘இசம்’ உண்டு. என்ன தெரியுமா அது? ‘இசம்லெஸ்இசம்’.
புதுப்பா (புதுக்கவிதை) என ஒரு குழுவினரால் அழைக்கப்படும் இலக்கியம் – பா(கவிதை) இலக்கியம் அல்ல – ஒரு புதிய உரைநடை இலக்கியமே.
இலக்கிய உலகில் உலாவரும் புதுப்பாக்கள் (புதுக்கவிதைகள்) எனப்படும் இச்சொல்லாக்கங்களில் பெரும்பாலானவை வெற்று ‘உரைக்கிறுக்கல்களே’ என்பதை நெஞ்சில் இருத்துங்கள்.
* * * * *
No comment