'காளி' நமக்குச் சொன்ன கதை : (சே.பிருந்தாவின் 'மழை பற்றிய பகிர்தல்கள்', 'வீடு முழுக்க வானம்', 'மகளுக்குச் சொன்ன கதை' - கவிதைத் தொகுப்புக்களை முன்வைத்து ஒரு பகிரல்) - தமிழச்சி தங்கபாண்டியன் "எனைச் சூழ்த்தங்கியுள்ள யாவும், என்றும் என் கவிதையில் தங்கியிருக்கும் தொலை தூரக் கடலோசை கானகப் புள்ளினங்கள் கத்தும் சத்தம் மண்டிக்கிடக்குமொரு மாயப் புதராக தன்னளவில் விழங்கொணாமல் தான் பற்றி எரிகின்ற காதல்... நம்புகின்றேன் நான் நான் பிறந்தது தீர்ப்புகளை விதிப்பதற்கன்று நேசித்தலுக்கென்றே" எனும் பாப்லோ நெரூடாவின் கவிதைபோன்றே "யாரோ விழுந்து கிடக்கையில்" ஏன், எதற்கு, எப்படி எனக் கேள்விகளற்று, இப்படி, அப்படி, அதனால்தான் எனும் தீர்ப்புக்களற்று, "யாரோ விழுந்து கிடக்கையில் தூக்கி விடுகின்ற யாரோவாக நானுமிருக்க விரும்புகின்றேன்", என்பவைதான் பிருந்தாவின் கவிதைகள். ஒரு கவிதைத் தொகுப்பை வெறும் பிரதியாக மட்டும் ஒருபோதும் என்னால் வாசிக்க இயலாது. அப்படியெனில் சிறுகதை, புதினம், பிற இலக்கிய வடிவங்களை? முடியும் - மற்றெல்லா இலக்கிய வகைமைகளையும் பிரதியாக, ஆசிரியரின் மரணம் எனும் பிரகடனத்துடன், என்னால் வாசித்து விமர்சிக்க முடியும். டெரிதாவின் சிதைவாக்கத்தையும் ஒரு கவிதையுடன் தொடர்பு படுத்திப் பார்க்கவியலும் என்பதை எனது தர்க்க மனம் ஒப்புக்கொள்கிறது. அதனை நியாயப் படுத்த, கிறிஸ்தேஃபர் பட்லரைச் சொல்வேன்: "மொழியின் எல்லாக் கட்டத்திலும் தெளிவான வெளிப்படைத் தன்மை கொண்ட ஒவ்வொரு சொல்லும் உருவகத்தன்மை உடையதாகவும் உள்ளது (ஜியோர்ஜ் எலியோட்டின் மிக மிக எதார்த்தவியல் மொழி உட்பட). தத்துவத்தையும் வரலாற்றையும் இலக்கியம் போலவும் இலக்கியத்தைத் தத்துவம், வரலாறு போலவும் வாசிக்க முடியும் (நடப்பினைச் சொல்லும் அல்லது உண்மையைச் சொல்லும் சொல்லாடல்கள் என்ற சிறப்புரிமை இவற்றிற்கு கிடையாது). நடப்புண்மை (லிடரல்) என்பதை இனி நாம் நம்பத் தேவையில்லை. (அதாவது மெய்நிலை என்பதைப் பொருள் மயக்கம் இன்றிக் குறிப்பிடுவதாகச் சொல்லும் ஒரு வகை மொழியை). ஏனென்றால் நடப்புண்மை என்று உரிமை கொண்டாடும் அனைத்தையும் மிக நெருங்கி ஆய்ந்து பார்த்தால் அவை உருவகத்தன்மை உடையவை என்பதை நிரூபிக்க முடியும்," (பின்நவீனத்துவம் - கிறிஸ்தோஃபர் பட்லர் : 35) எனும் போது கவிதைக்கு மட்டுமென்ன சிறப்புரிமை என்பது நியாயமே. இவ்வகையில் எந்த ஒரு பிரதியையும் அடிப்படைத் தகர்ப்பு செய்து, கட்டுமானக் கலைப்பினை நிகழ்த்திவிட முடியும்தான். ஆனால் கவிதையில் இதனை எனது ஆழ்நிலை, நனவிலி மனம் ஏற்பதில்லை. தர்க்கங்களின் முகத்தில் வெதுவெதுப்பான மனித எச்சிலை உமிழ்வதன் மூலம், கவிதை இதனை தாண்டிச் செல்கிறது. ஒரு எளிய உண்மையான தரிசனத்தின் மூலம் அது தர்க்கத்தை நிர்க்கதியாக்குகிறது என நான் நம்புகின்றேன். கவிதைக்கான எந்த 'அழகியல்' & இன்னபிற சிறப்புரிமையையும், ஒரு படைப்பை, ஒரு பிரதியாக அறியும் பின்நவீனத்துவப் பார்வை வழங்குவதில்லை. அது நியாயமானதும் கூட என்றாலும், கவிதைக்கு அந்தச் சிறப்புரிமையை பகுத்தறியாது வழங்குகின்ற பயித்தியக்காரியாக இருப்பதே எனக்குப் பிடித்திருக்கிறது. "கடந்தகாலம் என்பதற்கும் கதைகூறல் என்பதற்கும் இடையே ஒரு துல்லியமான தொடர்பு சாத்தியமில்லை. ஒரே நிகழ்ச்சியைப் பலவிதமான முறைகளில் நாம் விவரிக்க முடியும். சான்றுகளை நாம் எப்போதும் ஒரு இடைநிலை ஊடகம் மூலமே பெறுகிறோம், முழுத் துலக்கமானது என்று எதுவும் இல்லை. வெற்றிடங்கள், இடைவெளிகள், திரிபுகள் போன்றவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது," என்பார்கள். (பின்நவீனத்துவம் - கிறிஸ்தோஃபர் பட்லர் : 35) கவிதை இதில் கச்சிதமாகத் தன்னைப் பொறுத்திக் கொண்டு, மற்ற வகைமைகளைவிட வெற்றிடங்களையும், இடைவெளிகளையும் வசப்படுத்துவதால் முழுக்க உள்நோக்கியதொரு அகவழிப் பயணத்தையும், அதனைச் சுண்டி இயக்குகின்ற ஒரு அனுபவக் கிளர்ச்சியினையும் தருகின்றது. பகுத்தறிவிற்கு ஒவ்வாத வேட்கை, பயித்திய மனோநிலை, உணர்வெழுச்சியின் தீர்க்கம், 'மெய்நிலை' அற்ற ஒன்றோ எனும் சந்தேகமற்று மெய்நிலையே எனும் கடப்பாட்டோடு கைப்பற்றியிருத்தல் - இவையே கவிதைக்கான எனது ஒரு சார்பு நிலைக்கான வாதங்கள். "பின்நவீனத்துவம் மற்றும் அதன் பிரச்சாரகர்கள் கூற விரும்புவது போல மொழி மெய்நிலை என்பதைக் கட்டமைக்கிறதே தவிர எடுத்துரைப்பதில்லை என்ற பார்வையை எல்லோரும் ஒன்றும் ஏற்றுக்கொள்வதில்லை," (பின்நவீனத்துவம் - கிறிஸ்தோஃபர் பட்லர் : 168) என்பதுவும் எனக்குக் கைகொடுக்கின்றது. சே.பிருந்தாவின் மூன்று தொகுப்புகளை - (மழை பற்றிய பகிர்தல்கள், வீடு முழுக்க வானம், மகளுக்குச் சொன்ன கதை) மொத்தமாகப் படித்ததில் அவரது கவிதைப் பயணம் குறித்து ஒரு அனுமானத்திற்கு மட்டுமே வர முடிந்தது. முதல் தொகுப்பிலிருந்து முற்றிலுமான பெரும் பாய்ச்சல் போலன்றி, நிதானமாக, அவசரமின்றி பயணித்தாலும், பாடுபொருள் பல்தன்மை கொண்டனவாகவும், செயல்நிலையும் மாறியிருப்பதாகவும் படுகின்றது. இது ஒரு அனுமானம் மட்டுமே. முற்றான முடிவோ அறிவிப்போ அல்ல. "நாவலின் ஒரு பாத்திரத்திற்கு என்ன பொருந்துமோ அது எழுத்தாளர்களுக்கும் பொருந்தும்: அவர்கள் பேசவைத்த மொழியாலேயே அவர்களும்கூடப் பேசப்படுகிறார்கள். (எடுத்துக் காட்டாக, இலக்கியப் பயிற்சிப் பள்ளி) எழுத்தாளரைவிட நல்ல நிலையில் இல்லாத வாசகருக்கும்கூட இது பொருந்தும். வாசகரும்கூட மொழியின் இடைவெளிகளூடாகக் கலைத்துப் போடப்படுகிறார், குறிப்பீடுகளின் முடிவற்ற தொடர்கண்ணியில் சிக்கிக் கடைசியில் தொலைந்துபோகிறார். இந்தப் பார்வையின் படி ஒரு 'மனித இருப்பு' என்பது, ஒரு ஒருங்கிணைப்பு அல்ல. ஒரு தன்னுரிமை கொண்டதல்ல, அது தொடர்ந்த கட்டுமானத்தில் உள்ள தொடர்ந்து முரண்படக்கூடிய, எப்பொழுதும் மாற்றத்திற்குள்ளாகக்கூடிய ஒரு செயல்நிலை." (பின்நவீனத்துவம் - கிறிஸ்தோஃபர் பட்லர் : 75,76) எனும் மேற்சொன்ன கூற்றை மெய்ப்பிப்பதாகவே உள்ளது பிருந்தாவின் "இருப்பும்". அவரது முதல் தொகுப்பான மழை பற்றிய பகிர்தல்களில் "அக்கா படிப்பது போல அம்மா சமைப்பது போல காற்றிற்கு நெற்பூக்கள் மடங்குவது போலும்" தனக்குத் தெரிந்ததைச் செய்ததாகச் சொல்கின்ற பிருந்தா கூடுதலாக மகளுக்குச் சொன்ன கதையில் "அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு, அது 'குயில் குஞ்சு' என்று தெரிந்தது தெரிந்த பிறகு "இனிமேல் நாம் சேர்ந்து வாழமுடியாது போய்விடு" என்றது. ஒரு விடியலில் குயில் குஞ்சு 'கூ' என்று கூவியது - அன்று தானொரு குயில் என்று கண்டு கொண்டது" என்று தனக்கான அடையாளத்தை தெளிவாகச் சொல்கிறார். "அம்மா சமைப்பது போல" என்பது பிற்போக்கு உவமை எனப் பெண்ணியவாதிகளால் முத்திரையிடப்படும் அபாயமிருக்கிறதே எனும்போதே, ஜான்ஸிராணியைப் பற்றிய சரித்திரம் - "ஒரு நாட்டுக்கே ராணி. குழந்தையைப் பார்த்துக் கொள்ள யாருமில்லையா?" என்று கேட்டு "அப்பாடா - தப்பித்துவிட்டார்" என வீடு முழுக்க வானம் எனும் இரண்டாவது தொகுப்பில் பெருமூச்சு விட வைக்கிறார். முதல் தொகுப்பிற்கும் இரண்டாவதற்கும் பத்தாண்டுகள் இடைவெளி.. இரண்டாவதற்கும் இன்றைய மகளுக்குச் சொன்ன கதைக்கும் ஐந்தாண்டுகள். "வளர்ந்திருக்கிறேனா?" எனக் கேட்கிறார். அதைச் சொல்லுமளவிற்கு நான் வளரவில்லை - என்றாலும் வெகுதூரம் பயணப்பட்டு விட்டார் இந்த பதினைந்து ஆண்டுகளில். குறிப்பாக நான் வியந்து சிலாகிப்பது, பிருந்தாவின் நிதானம் தான். தமிழ்க் கவிதைப் பரப்பில் இதுவரை இவரது ஒட்டுமொத்தக் கவிதைகள் குறித்துப் பேசப்படாமல், பதியப்படாமல் போனது எனக்கு மிக வருத்தமே. சமயங்களில் சிற்சில தனிக்கவிதைகளைப் படிக்க நேர்கையில் அவற்றின் பூச்சற்ற, மென்மையாய் ஆனால் உறுதியாய் ஒன்றைச் சொல்கின்ற தொனியில் கவரப்பட்டு அவரிடம் நான் பகிர்ந்திருந்தாலும், ஒரு முழு வாசிப்பனுபவம் இப்போதுதான் வாய்த்துள்ளது. இங்கு ப.சிங்காரம் குறித்த சி.மோகனின் பின்வரும் பதிவு நினைவிற்கு வருகின்றது: "எவ்விதப் பிரகடனமோ, பிரயாசையோ இன்றி ப.சிங்காரம் வெளியுலகு அறியாமல் தன் தனிப்பட்ட வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்த படைப்பாளி. அவருடைய படைப்புகளின் வெளிச்சித்தில்தான் இன்று அவர் புலப்பட்டுக்கொண்டிருக்கிறார். காலம், சற்று நிதானமாகவேனும், தன் பொக்கிஷங்களைச் சேகரம் செய்துகொள்ளத் தவறுவதில்லை. ஆரவாரப் பொக்குகள் வெகு சீக்கிரமாகவே தூசுகளாக மறைந்துவிடுகின்றன. காலத்தின் பார்வை, சற்றுத் தாமதமாகவே என்றாலும், தீட்சண்யமாகப் பதிந்து, ப.சிங்காரத்தின் இரு நாவல்களும் துலக்கம் பெற்று ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. நவீன தமிழ் இலக்கியத்தின் மகத்தான நாவல் படைப்பாளியாக ப.சிங்காரம் நிலைபெற்றிருக்கிறார்." (சி.மோகன் கட்டுரைகள் : 85) பிருந்தாவின் மூன்று தொகுப்புக்களுமே உரக்கப் பேசாதவை. முந்தைய இரண்டு தொகுப்புக்களும் அதிகம் கவனம் பெறாதவை. ஆனால் பிடிவாதமான தன்னிலை இருப்பொன்றை அழுத்தமாக முன்வைப்பவை. "தொலைவுகளைத் தன் வசம் செய்வேன் காற்றைப் பிடித்து உச்சியின் மேல்முனைக்குச் செல்வேன் அத்தனை உயரத்தையும் அங்கிருந்து பறப்பேன் - என்றெல்லாம் என்னை வியக்க நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். மிக வழக்கமாகவே நான் நிலம் பதிய நடந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் ஆச்சர்யப் படாமல் ஒரு பறப்பு - நீலத்தைக் கிழிக்க வல்லதல்ல அது நீலத்தைக் கடக்கிறது அவ்வளவே" (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த நிதானம்தான், புரிதல்தான், அழுத்தமான உறுதிதான் பிருந்தாவை கவனிக்க வைக்கிறது. "தண்டவாள நடுவே தேங்கின மழை நீரை அதிராமல் குடித்துப் போகும் ஆட்டுக் குட்டியின் அழகோடு" (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த அதிராமைதான் இவரது பலமே. சந்திப்பிற்குத் தட்பவெப்பம் முக்கியமெனக் கருதும் பிருந்தாவை எனக்கு அவ்வளவு பிடிக்கிறது. Let me be a diehard romantic in this as you sound Brindha – நேற்றைக்கு இதே நேரம் நாம் சந்தித்துக் கொண்டோம் உன் அலுவலக ஓய்வறையில் வெப்பப் பெருமூச்சுகளில் தஹித்துக் கிடந்தது அறை. சுழலாத மின்விசிறியுடன் சட்டெனக் கவிழ்ந்த அமானுஷ்யத்தில் மூச்சுமுட்ட மூழ்கிப் போனேன் மனிதர்கள் வித்யாசமாய்ப் போனார்கள் நீயும் கூட தாங்கவே முடியாமல் வந்தனம் சொல்லிப் பிரிந்தேன் அடுத்த சந்திப்பேனும் இளங்காலைக் குளிரில் பூக்களின் மலர்வோடு அமைய வேண்டும் நமது கனவுகளைப் பகிரும் விதமாய். (மழை பற்றிய பகிர்தல்கள்) ஏனெனில் எனக்கு ஒரு கவிதைத் தொகுப்பை அதிகாலை அல்லது அந்திமாலையில் மட்டுமே வாசிக்கப் பிடிக்கும். பிற இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபடுகையில் பங்களிப்பதை விட, ஒரு கவிதை தருகின்ற அனுபவத்தினைப் புறச் சூழல் பெருமளவு தகவமைக்கிறது என நான் நம்புகிறேன். இசைவான தனிமை, உடலினை இம்சிக்காத மிதமான தட்பவெப்பம், நிசப்தம் - இவை என்னை ஒரு கவிதைக்குள் ருசிக்கத் தள்ளிவிடும் தாய்முலை. "உறுத்தாமல் உன் தனிமைகளை பங்கிட விரும்புகிறேன் உன்னோடு உன் சுவாசம் போல (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த உறுத்தாமைதான், "இலக்கியம் பற்றியும் பெண்ணியம் குறித்தும் உரத்துச் சிந்தித்த உன் பேச்சு ரஸிக்கவில்லை அதைவிட இலைகள் அசைவது மிகப் பிடித்திருக்கிறது" (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த யதார்த்தம்தான், "ஜன்னல் கம்பியில் ஜில்லென்று கன்னம் பதிய மழை பார்க்கையில் கண்ணில் இடறின என்பற்றிய லஜ்ஜையற்று பறந்தபடி புணர்கிற பட்டாம் பூச்சிகள். மறுபடி என்று வாய்க்குமோ இதுபோல மழையும் இயல்பான சரசமும் (மழை பற்றிய பகிர்தல்கள்) எனும் இந்த நுட்பமான ரசித்தல் தான் பிருந்தாவின் முதல் தொகுப்பை (மழை பற்றிய பகிர்தல்கள்) என்னைக் கவனிக்கச் செய்தது. அவரது வீடு முழுக்க வானம் புத்தகத்தில் அவர் குறித்த தன் விவரப் பதிவில் 1976 மழை (நவம்பர்) மாதம் இரண்டாம் நாள் பிறந்தவர் எனும் ஒற்றை வரிக் குறிப்பே கவித்துவமாக இருந்தது. அதற்கு பிருந்தாவிற்கொரு மழை முத்தம். தன்னுரையில், "எது கவிதையென்று இப்பவரை தெரியாது" வில் அந்த இப்பவரை சட்டென்று அவரோடு என்னை ஒட்ட வைத்தது. இந்தப் பேச்சு வழக்குச் சொல் அவரது கவிதைகளிலும் ஊடுறுவி வருவதுண்டு. அந்த "இப்பவரையைப்" பிடித்துக்கொண்டு "வானத்திலிருந்து நீண்டு கிடந்த ஒற்றையடிப்பதை" வீடு முழுக்க வியாபித்ததை துளித்துளியாகப் பருகினேன். ஒரு அற்புத அனுபவக் கணத்தை அடைய பிருந்தாவிற்கு மழை, வண்ணத்துப்பூச்சி, குழந்தை, காற்று, மரம், பறவை, ஒற்றை மேகம், நட்சத்திரங்கள், ஆமை ஒடு, சாலை, காதல், பிரிவு, சந்திப்பு - இப்படி எல்லாமுமிருக்கின்றன. மேற்சொன்னவற்றையெல்லாம் அவர் அன்பின் உள்ளங்கைப் பொதிவில் ஏந்தி, ஒரு ஆழ் முத்தத்தின் வெதுவெதுப்புடன், தனிமையின் தொப்பூள் கொடி சுற்றி நமக்குத் தருகிறார். "புரிந்து கொள்ளேன்" எனும் தவிப்பும், "பற்றிக் கொள்ளேன்" எனும் தகிப்பும், "பகிர்ந்து கொள்ளேன்" எனும் கெஞ்சலும் இருந்தாலும், "இருள் கவியும் மாலையில் கூடடைந்து விடும் பறவையின் சுதந்திரம். நான் காற்றாக விரும்புகிறேன்" (வீடு முழுக்க வானம்) எனும் தன்னிலை உறுதிதான், அந்த 'அகமி' தான் பிருந்தாவின் உள்ளொளி, தன் தேர்வு. "காதலைச் சொல்லத்தான் வந்தேன் மரம் சிலிர்த்து இலைகளசைவதில் லயித்து விட்டேன். இரண்டும் சாத்யமில்லை - காதலைச் சொல் கவிதையை மற (வீடு முழுக்க வானம்) என்பதில் கவிதையைக் காதலிக்கின்ற பிருந்தா என்றுமே காதலைச் சொல்லமாட்டார் எனப் பிடிபடுகின்றது. இத்தொகுப்பில் முத்தம், காதல், பிரிவு, திகட்டத் திகட்ட அன்பு, வாழ்வு, மரணம், தாய்மை எல்லாமும் இருக்கிறது. சிலவற்றில் அற்புதமான கவிதையாக, சிலவற்றில் வெறும் உணர்வாக மட்டுமே! படித்தவுடன், ரஷ்யக் கவிஞர் மரீனா ஸ்வெட்டயேவாவின், "என்னால் என்ன செய்யமுடியும் இவ்வளவு அபரிமிதங்களுடன் ஒரு அளவிடப்பட்ட உலகத்தில்" எனும் கேள்வி நினைவிற்கு வந்தது. பிருந்தாவிற்கு நாம் அசட்டையாகக் கடக்கின்ற ஒரு நிகழ்வு, ஒரு நிமிடம், ஒரு உதாசீனம், ஒரு புன்னகை ஏன், முகப்புத்தகமே கூட கவிதைக்கான அனுபவத்தைக் கொடுத்து விடுகின்றது. "கூழாங்கற்கள் வசப்படுத்த முடியாதவை. இறுதிவரை அவை நம்மைப் பார்க்கும் சாந்தமான மற்றும் தெள்ளிய கண்ணுடன்" என்பது போல பிருந்தாவின் கவிதைகள் சாந்தமான, தெள்ளிய கண்ணுடையவை - அவற்றின் விவரிப்பான உரைநடை சமயங்களில் அயர்ச்சி தந்தாலும், ஒரு மினுக்கம், ஒரு ஊவாமுள் வலி அதனுள் ஒரு வரியிலிருந்து எட்டிப் பார்க்கிறதல்லவா - அதுபோதும் எனது ஈர்ப்பிற்கும், லயிப்பிற்கும். மகளுக்குச் சொன்ன கதை கவிதைகளுக்கு வருவோம். பெரும்பான்மை உரைநடைக் கவிதைகள் தான். ஆனால் அவற்றில் சிலவற்றில் 'அட' என்று அள்ளி வைத்துக் கொள்ளத் தோன்றும் கவி வரிகள் உண்டு எனக்கு. "பசலையில் இளைத்த உடம்பு பற்றிதான் இலக்கியங்கள் பேசுகின்றன டிப்ரஷனில் ஊதி வெடிக்கத் தயாரான உடல்களை அவை சந்தித்ததில்லையோ". மேற்சுட்டியதில் உள்ளடக்கம் ஒரு கவிதைக்கான பொறிதான் - ஆனால் வெறும் உரைநடைத்தனமான கேள்வி வடிவம் அதன் தகிப்பைக் குறைத்து விடுகிறதல்லவா? இதை விட, "வெறும் சிலைகளால் ஆனதல்ல இவ்வுலகம் அது மலைகள் நிரம்பியது" (மகளுக்குச் சொன்ன கதை) எனும் அனுபவ வீச்சு கவிதையாயிருக்கின்றது எனக்கு. "ஒரு தேரை நிறுத்துவது போலக் கவிதையை எங்கே நிறுத்தவேண்டுமென ஒரு தேர்ந்த கவிஞனுக்குத் தெரிந்திருக்க வேண்டும்" என கலாப்ரியா சொன்னதாக நினைவு. "ஒரு அலைபேசி எண்ணைத் தொலைப்பது ஒரு மனிதரைத் தொலைத்தாகிறது என்னைத் தொலைக்கிறாய்" (மகளுக்குச் சொன்ன கதை) மேற்சுட்டியதில், 'என்னைத் தொலைக்கிறாய்' என்பது ஆறாவது விரல். கவிதையின் ஐவிரல் "ஒரு மனிதரைத் தொலைத்தாயிற்று" என்பதோடு முடிந்துவிடுகிறது என்பது நாமறிந்ததுதான் - ஆனால், அந்த நிறுத்துதலை நிர்ணயிக்க நாம் யார் - எது அதன் எடைகல் என்பதில் இன்றுவரை தெளிவிருக்கிறதா என்ன? பூமியெல்லாம் மகளுக்கு என்றொரு கவிதை. .... நிலவை - தேயும் தினங்கள் எனக்கென்றும் வளரும் தினங்கள் அவளுக்கென்றும் ஒப்பந்தித்தாள் இருந்தாலும் கூட நிலா இல்லாத தினம் யாருக்கென்று முடியா வழக்கொன்று நடந்து கொண்டிருக்கிறது. என்னைக் கேட்டால் இறுதி வரியை "நிலா இல்லாத தினம் யாருக்காம்?" என்று முடித்திருப்பேன். அந்த "யாருக்காவில்" அம்மாவும் மகளாயிருப்பாள். ஆனால், பிருந்தாவும் நானும் வேறு வேறு அம்மாக்கள், வெவ்வேறு அனுபவப் பேறு பெறுபவர்கள். நான் எனது மகளோடு அந்த 'யாருக்காமில்' ஐக்கியமாகி நின்று விட்டிருக்கலாம். பிருந்தாவோ இன்னமும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதால் வழக்காடிக் கொண்டிருக்கலாம். இதில் இந்த அம்மா, எப்படி அந்த அம்மாவைக் 'கவிதை' என்றால் அதை நீங்கள் அங்கே அப்படி, அந்த வரியோடு நிறுத்தியிருக்க வேண்டுமெனச் சொல்ல முடியும்? பின்வரும் இக்கவிதை எனக்கு மிகப் பிடித்த ஒன்று பறவைகள் ஒருபோதும் நடப்பது குறித்து யோசிப்பது இல்லை மரங்கள் மலைகள் இடம் பெயர்வதில்லை நதிகளுக்கு யார்மீதும் புகார்களில்லை நிலவு சூரியன் கிரமம் தவறுவதில்லை கடிகாரம் சலிப்பதில்லை ஊஞ்சலாடும்போது உத்தேசமாக பறவை - நீரில் மீன்- மழையில் மரம்- காட்டில் சிறு பூவென இந்த வாழ்க்கையின் வண்ணத்துப் பூச்சி நான் ! (மகளுக்குச் சொன்ன கதை) தத்தமது இயல்பில் தாமிருப்பது - அது குறித்தான புகார்களற்று வாழ்வைக் கொண்டாடும் தனிமனித மனம் தனதனுபவத்தைப் பொதுமைப்படுத்துமொரு அற்புதம் மேற்சொன்ன கவிதை. "காட்டில் சிறு பூ" என்று கவிதை முடிந்திருந்தாலே போதுமானதுதான். "இந்த வாழ்க்கையின் வண்ணத்துப் பூச்சி நான்!" இன்னுமொரு ஆறாவது விரல் தான் - ஆனால் அது இருந்துவிட்டுப் போகட்டுமே. அது மிகையுணர்வு, இவ்வகை அறிவித்தல்கள் கவிதையல்ல என்றெல்லாம் சொல்லலாம்தான். ஆனால், பயனற்றது என்பதற்காக ஆறாவது விரலை அறுவைச் சிகிச்சை செய்ய விமர்சகனுக்குச் சிறப்புரிமை உண்டா என்ன? இவ்வகை விளித்தல்களை, ஏற்றுக்கொள்ளலைத், தன்னுணர்ச்சிக் கவிதைகள் என்று வரையறுத்த Literary Criticism, Shelly இன் மேலைக்காற்றிற்கு (ODE To West Wind) எனும் கவிதையைச் சிறந்ததென்று கொண்டாடுகிறதே? எனக்கு, "நான் போராளி, புரட்சிக்காரி, அந்த வாதி, இந்த இசத்துக்காரி" என்றெல்லாம் முழக்கமிடாமல், ஒரு சொட்டு மிகையுணர்வுடன், பரவச வண்ணம் பூசிக் கொள்கின்ற இந்த வண்ணத்துப் பூச்சிக்காரியை, பகுத்தறிவின் திரைகளற்றுக் கட்டிப் பிடித்து, "அப்படியா, ததாஸ்து" என்று சொல்லத் தோன்றுகிறது. வாசக மனம் vs விமர்சகப் பார்வை எனும் சதுரங்க ஆட்டத்தில் கவிதையைப் பொறுத்தவரை முன்னதே எனக்குப் பிரேமம், உத்தமம், உசிதம். கொஞ்சம் வளவளப்பான விமர்சகராகவே இருந்தாலும் பாதகமில்லை - தேர்ந்த வாசகராக, ரசிகனாக இருப்பது போதுமெனக்கு. ஒரு தனிமனித அனுபவத்தின் உண்மை, உலகளாவிய ஒன்றாகப் பொதுமைப்படுத்தப்படும் ரசவாதத்தில் நடை, வடிவம், உத்தி முதலியவற்றைச் சிலாகிக்கும் கறார் விமர்சகனகாக மட்டுமே கவிதையில் நானிருக்க முடியாது. ஒரு வாசகனாக, ரசிகனாக, ஒரு நேர்மையான, வாழ்வின் ஒரு உயிர்க்கீற்றை உணரக் கொடுக்கும் சில வரிகளின் உபாசகனாக, அவற்றைச் சிருஷ்டித்த கரங்களுக்கு முத்தமிடுபவளாக இருப்பதில் மகிழ்வெனக்கு. அவ்வகையில் பிருந்தாவின் மகளுக்குச் சொன்ன கவிதை தொகுப்பு எனக்குப் பல அனுபவ இழைகளின் நயத்தைக் கொடுத்த ஒன்று. உதாரணத்திற்கு அவளின் கேள்விகள் நூதனமானவை எனத் தொடங்கும் கவிதை. - ரயிலை யார் கழுவுவார்கள் - பாசிபடர் குளத்தை எப்படிச் சுத்தம் செய்வது - ரோட்டோர சிறுமி ஏன் புத்தகம் விற்கிறாள் ..... - சோறு சாப்பிட்டால் வயிறுதானே வளரணும் கையும் காலும் எப்படி வளருகிறது... இந்தக் கவிதை அவளின் முடிவுறாக் கேள்விகளோடே இப்படி முடிகிறது - அவளின் அப்பா ஏன் வீட்டுக்கே வருவதில்லை? சாமிக்குப் பிரியமானவர்களை தன்னுடன் அழைத்துக் கொள்வார் என்றால் நாமெல்லாம் சாமிக்குப் பிடிக்காதவர்களா? (மகளுக்குச் சொன்ன கதை) பிருந்தாவின் மேற்சொன்ன கவிதையைப் படித்தபோது நானடைந்த அனுபவக் கிளர்ச்சியைப் பின்வரும் ஷான்டோராவின் கவிதையொன்றில் வெகுகாலத்திற்கு முன்பே நான் உணர்ந்ததுண்டு. உலகெங்கும் உள்ள மகள்கள் அனைவருக்குமான கேள்விகள் தான் - இதில் அம்மாவின் பதிலொன்றைச் சொல்லும் கவிதையொன்று. நதி: அம்மா, நதி ஏன் சிரிக்கிறது? காரணம் சூரியன் நதியைக் கிச்சுகிச்சு மூட்டுவதால், அம்மா, நதி ஏன் பாடுகிறது? காரணம் ஸ்கைலார்க் பறவை நதியின் குரலைப் புகழ்ந்தது. அம்மா, நதி ஏன் ஜில்லென்றிருக்கிறது? அது ஒரு காலத்தில் தான் பனியால் காதலிக்கப்பட்டதை நினைத்துக் கொள்கிறது. அம்மா, நதிக்கு என்ன வயது? என்றென்றும் இளமையுடைய வசந்தகாலத்தின் அதே வயதுதான் அதற்கும். அம்மா, நதி ஏன் என்றுமே ஓய்வெடுப்பதில்லை? நல்லது, கடல் தாய் நதி வீட்டுக்கு வரக் காத்துக் கொண்டிருப்பதுதான் காரணம். (ஷண்டாரோ தனிக்காவா(1931- ) (சமககால உலகக் கவிதை - பிரம்மராஜன் : 468 , 469) மேற்சொன்ன கவிதைக்குச் சற்றும் குறைந்ததன்று பிருந்தாவின் கவிதையும். சற்று உறுத்தலாக, "இந்தக் கவிதை அவளின் முடிவுறாக் கேள்விகளோடே இப்படி முடிகிறது -" எனும் வரி தேவையற்று இடறுகின்றது. அதனாலென்ன 'பரவாயில்லை' எனக் கடக்கவுமுடிகிறதென்பதால் எனக்கு, இது ஒரு சிறந்த கவிதைதான். சமயங்களில் வடிவமும், உணர்வுநிலையும் ஜாடிக்கு மூடியெனப் பொருந்தாதுதான் - ஆனால் அப்படிப் பொருந்தியிருக்கிறதென்பதற்குச் சான்றாகப் பல கவிதைகளை பிருந்தாவின் இத் தொகுப்பில் என்னால் இனங்கான முடிந்தது. உதாரணத்திற்கு, முத்தம் என்பது வெறும் முத்தமாகமட்டுமில்லை என உணர்த்தும் பல கவிதைகள். ஒரு படிமத்தை , ஒரு சொட்டென எடுத்து, நீவி விட்டு, மெல்ல விகசித்துப் பறக்க விடுகின்ற செறிவும் இவருக்குக் கூடி வந்துள்ளமைக்கு பின் வரும் கவிதையைச் சுட்டலாம். நீந்திக் கடப்பதோ பறந்து செல்வதென்பதோ இயலாத இந்த இரவை காகிதம் போல எடுத்து மடக்கி கப்பல் செய்து நீரில் மிதக்க விட்டு பாதி கிழித்து பறவையாக்கி வானில் பறக்கவிட்டு அதிலும் மிச்சத்தில் ஒரு கவிதை யெழுதி என்ன செய்தும் தீராமல் இந்த இருள் ......... இந்த தனிமை ........ இந்த மரணம் ....... (மகளுக்குச் சொன்ன கதை) அவை கவிதைக்கான உத்தி எனத் தெரியாமலேயே (பிருந்தாவிற்கும் நகாசு வேலைக்கும் வெகு தூரம் - அவரது 'நட்பூக்களை'க் கூட 'குரங்காட்டி வித்தையாக' அல்ல, ஒரு குழந்தமைக் கிண்டல் தொனி என்று தான் நானுணர்ந்தேன் - போலவே அவரது "உபரி முத்தத்தில் / வெளிப்படுகிறது / உன் உபரி அன்பு / " எனும் வரிகளும். இந்த வரிகளை குழந்தமையற்ற பிருந்தா ஒருபோதும் வெவ்வேறு அர்த்த நிழல்களின் பிரக்ஞையற்று எழுத இயலாது) உருவகங்களும், உவமைகளும் இலகுவாக ஊடுபாவுகின்ற வரிகளுமுண்டு சில கவிதைகளில். இத்தனை தூரத்தில் அன்பு மனது என 'கைகாட்டி'கொண்டு சொல்ல முடிந்தால் ... துக்கத்தையெல்லாம் கடுங்காப்பி ஆக்கி கொட்டிக் கவிழ்த்து மகிழ்வை யெல்லாம் தேநீராகக் குடிக்க இயலுமெனில் .... (மகளுக்குச் சொன்ன கதை) எனும் உருவகக் கவிதையும், காமத்தைப் பெருந்திணைக் காதல் குப்பிகளாக்கும் உவமைக் கவிதையும், பெருங்காற்று மழையில் ஒரு தீபமேற்றுவது - மகள்களுக்கு அம்மாவாயிருப்பது, கடவுளைப் போல அறியப்படாதது நம் தொலைவு எனும் உவமைகளும், தேர்ந்த கவிதைச் செறிவிற்கான அடையாளமெனப் பட்டாலும், எனக்கு, அழைத்ததும் அழைக்க மறந்ததும் எப்போதும் உன் ஞாபகத்திலில்லை அத்தனை எளிதில்லை - ஒரு அலைபேசி அழைப்பைப் பற்றிக் கொண்டு அன்பின் வழி நடத்தல் அன்பின் மறுதலிப்பை அன்போடு ஏற்றல் பசித்த கொடிய மிருகத்தை புன்னகைக்க வற்புறுத்துதல் (மகளுக்குச் சொன்ன கதை) "நதி மீதொரு சருகு என்னவானதென மரமும் நினைக்கவில்லை நதியும் நிற்கவில்லை" "பாம்பு குடியிருந்தாலும் சந்தனம் குளிர் தருவே - கபீர் வாக்கு நீ பாம்பா சந்தனமரமா சொல்லென் அன்பின் குரலே" (மகளுக்குச் சொன்ன கதை) எனும் நேரடியான மொழிபேசுகின்ற வெகுளிமனக் கவிதைகளும் பிடிக்கின்றன. "உண்ணச் செரிக்காத தனிமையை தின்னத் தெடங்கினேன்" ..... "ஒரு கண்ணிலிருந்து மறுகண்ணின் தூரம் வாழ்விற்கும் மரணத்திற்கும்" "அது யார் மனதையும் அசைத்து விடுகிற அழுகை - அசையாது கிடக்கிற மரணம்" "உதிரும் அத்தனை பூக்களையுமா மரம் நினைவு கொள்ளும்?" "பழகிய மிருகங்களிடம் பதற்றமுறுவதில்லை மனது. பழகிய என் தனிமையும் புதிதாக இருக்கிறதுன் பிரிவில்" எனும் வாழ்வின் மெய்மையை ஒரு கணம் திடுக்குற்று உணரச் செய்கின்ற சாதுர்ய மொழிக் கவிதைகளும் - என்னைக் கவர்கின்றன. என்றாலும், "தானாக மனங் குளிர்ந்து என்று வரமருளுமோ என் சாமி" எனும் கள்ளமற்ற வெள்ளந்திக் குரல் - அதன் தேடல், ஒப்புக்கொடுத்தல், அன்பை அன்பென்ற சொல்லால் மட்டுமே சுட்டிக் கொட்டித் தீருமதன் தாபம், பலர் நடுவே உணருமதன் தனிமை, பெரிதான தத்துவ விசாரமற்ற சமன்பட்ட தொனி, கேள்விகளின் குழந்தைமையைக் குலைக்காத அதன் வியப்பு, மரணத்தின் நித்தியத்தை அநித்ய வாழ்வின் கொண்டாட்டதினால் ஊடறுத்துச் செல்லும் அதன் இலகு - இக்குரல் மட்டுமே மிக முக்கியமாகப் படுகின்றது. தன்னளவில் இக்குரலின் கட்டளைக்கு மிக நேர்மையாக, உண்மை அனுபவத்தின் ஒரு கீற்றுத் தரிசனத்தை இக்கவிதைகள் சிலவற்றில் நேர்த்தியாகக் கடத்தியிருக்கிறார் பிருந்தா. ஓரிரு குறைகளுண்டு - நம்பகத்தன்மை பிறழ்ந்தபோது எனச் சற்றும் 'பிருந்தாத்தனமில்லாத' மொழிக் கவிதை அவசியமற்றது. ஒரு தேய்ந்த மொழிநடையிலான அக்கவிதை இவரது வெளிப்பாட்டிற்கு மிக அந்நியமானது. தன்னைப் பிறரது தோளுக்கு மேல்நிறுத்தி, 'இது இப்படி ஆகிவிடலாமென' ஒரு போதும் பிருந்தாவின் கவிதைகள் இதுவரை உபதேசித்ததில்லை. இக்கவிதையின் அத்தொனி கடவாய்ப் பல் அகப்பட்ட கல் போன்றதொரு ஒவ்வாமை. தோளில் கைகூடப் போடத் தயங்குகின்ற, ஆனால் எப்போதும் போடுவதற்குத் தயாராக இருக்கின்ற அந்த பிருந்தாவை மேற்சொன்ன கவிதையில் நான் காணவில்லை. உரையாடல் தொனியோடு நீண்டு செல்கின்ற கவிதைகளை விட, இரண்டு அல்லது நான்கு வரிக் கவிதைகளில்தான் பிருந்தாவின் ஆன்மா கூர்ந்து ஒளிர்கின்றது. இருளில் கூடுதலாகத் துலங்கி ஊடறுக்கும் விலங்கின் கண்களையொத்த தீர்க்கம் அவ்வகைக் கவிதைகளில் வடிவத்தோடு பொருந்திய உணர்வின் வார்ப்பாக மெருகேறி உள்ளதாக நான் உணர்கிறேன். அவ்வாறே உள்வாங்கவும் செய்கிறேன். ஆனால், பிருந்தா, எவ்வகைமையில், எத்தொனியோடு பயணிப்பதென்பதை ஒரு 'தன்னிலை'யாக நீங்கள் முடிவெடுங்கள். 'கவிஞன்' என அடையாளப் படுத்தப்படுவதை விட, ஒரு 'தன்னிலை'யாக உங்களுக்குப் பிடித்த, சரியெனப் படுகின்ற உரையாடலை முன்னெடுங்கள். "'அடையாளம்' என்பது ஒருமித்த தன்மை; அது ஒன்றுதான் அதற்குப் பொருள்; மாறாக, தன்னிலைகள் தங்களுக்குள்ளேயே கூட வித்யாசப்பட்டு இருக்க முடியும்". பேச்சுவராத ஒருவனைக் கவிதைக்குத் தாசனாக்கிய காளிக்கு "தானாக மனங்குளிர்ந்து என்று வரமருளுமோ என் சாமி" என வெள்ளந்தியாகக் கேட்கும் உங்களைப் பிடிக்கும். நிச்சயமாக அவளுக்குப் பிடித்த கள்ளமற்ற பிள்ளை நீங்கள். விமர்சனங்களின் வழிகாட்டுதலின் படி 'வீணைவாசிக்க' முயற்சிப்பதைவிட 'கொட்டாங்கச்சி' தானெனக்கு எனும் தன்னிலை ஓர்மம் முக்கியம். விமர்சனம் கவிதைக்கு வழிகாட்டியா அல்லது கவிதை விமர்சனத்திற்குக் கைகாட்டியா எனக் காலந்தோறும் தொடர்கின்ற கேள்விக்கு ஒரு பொம்மை சொன்ன பதில் எனக்கு நீதி போதனை: கேதரின் பெல்ஸியின் 'பின் அமைப்பியல்' (மிகச் சுருக்கமான அறிமுகம்) (தமிழில் : அழகரசன்) எனும் புத்தகத்தின் தொடக்கத்தில் ஒரு குறிப்பு வருகின்றது. ஆங்கில எழுத்தாளர் லூயி கரோலின் புதினமான 'Through the looking glass' -இல் ஹம்பி டம்டி என்ற பொம்மைக்கும், சிறுமி ஆலிஸூக்கும், "பொருள் பற்றி நடக்கும் விவாதத்தில் யார் சொல்வது சரி" எனக் கேட்கின்ற பெல்ஸி, இருவருக்குமான அந்த உரையாடலின் ஒரு பகுதியினையும் மேற்கோள் காட்டுகிறார்: "நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது, அதற்கு நான் எப்படிப் பொருள் கொள்ள விரும்புகிறேனோ அதைத்தான் குறிக்கிறது. அதற்குக் கொஞ்சமும் கூடவோ குறையவோ அல்ல' என்றது ஹம்டி டம்டி எரிச்சலுடன். 'அப்படிச் சொற்களைப் பல பொருள் குறிக்கச் செய்யமுடியுமா என்பதுதான் கேள்வி' - ஆலிஸ் சொன்னாள். 'யார் யாருக்கு எஜமானாக இருப்பது என்பதுதான் இப்போது பிரச்சினை' என்று ஹம்டி டம்டி சொன்னது." இந்த எஜமானப் பிரச்சனையைக் கிடப்பில் போட்டுவிட்டுத், தன் போக்கில் பலூனூதிச் செல்லும் குழந்தமையின் கண்களோடு கவிதையில் பயணியுங்கள். ஊமையாயிருந்த கவிமனதின் உரையாடலைப் புரிந்து கொண்ட காட்டுப் பெண் காளி உங்கள் பலூன்களுக்கும் காற்றடைத்துத் தருவாள். மகளுக்குச் சொன்ன கதை தவிர்த்தும் இன்னும் பேச எவ்வளவோ இருக்கலாம் - உங்களுக்கும் எனக்கும். அவற்றைப் பகிர்ந்து கொள்ள, அதற்கான மழை, திரண்டு உருக்கொள்ள இனியும் சில ஆண்டுகளாகலாம். அதுவரை 'உரையாடாமல்', சும்மா பேசிக் கொண்டிருங்கள். ஏனெனில், "பேசுவது என்பது - எல்லாவற்றிற்கும் மேலாக - மற்றவர்களிடம் பேசுவது தான்". கவிதைக்கு அது போதும். உதவிய நூல்கள் : • பின்நவீனத்துவம் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - கிறிஸ்தோஃபர் பட்லர், தமிழில் – பிரேம் • சி.மோகன் கட்டுரைகள் - சி.மோகன் • சமகால உலகக் கவிதைகள் – பிரம்மராஜன் • பின் அமைப்பியல் (மிகச் சுருக்கமான அறிமுகம்) - கேதரின் பெல்ஸி, தமிழில் - அழகரசன்)
No comment