குணா கவியழகனின் கர்ப்பநிலம் புத்தக வெளியீட்டு உரை

பாசிசம் - எனும் நூலில் கெவின் பாஸ்மோர் சுட்டிக்காட்டிய நிகழ்வுடன் எனது உரையைத் துவக்குகிறேன்.
	“பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிரான்சின் மத்திய தரைக்கடல் பகுதியில், உப்பளப்பணி பெருமளவு இயந்திர மயமாக்கப்படாமல் இருந்தது. உப்பெடுத்தல் களைப்பூட்டும் கடுமையான வேலையாக இருந்தது. தொழிலாளர்கள் ஆகஸ்டு மாதச் சுட்டெரிக்கும் வெயிலில் கனமான உப்பு வண்டிகளை மரப்பலகைகளின்மீது உருட்டிச் சென்று மலையெனக் குவிக்கப் பட்டிருக்கும் உப்போடு சேர்த்தனர். இவ்வேலை குறிப்பிட்ட பருவகாலத்திற்கு மட்டுமே உரியதாக இருந்ததால் ஏழை நாடோடித் தொழிலாளர்களே அதனைச் செய்தார்கள். பிரான்சில் உழைப்பாளர் எண்ணிக்கைக் குறைவாக இருந்ததால், புலம் பெயர்ந்துவந்த இத்தாலியர் பலர் இத்தொழிலில் ஈடுபட்டனர்.
	ஆகஸ்ட் 16, 1893: உப்பளங்களில் இத்தாலியர்கள் மூன்று பிரெஞ்சுத் தொழிலாளர்களைக் கொன்றுவிட்டதாகப் புரளி கிளம்பியது. உடனே இத்தாலிய குடியேறிகளை நோக்கிய தாக்குதல் தொடங்கியது. அடுத்தநாள் காலை, காவல்துறையினர் இயன்ற அளவு இத்தாலியர்களை ரயில் நிலையத்திற்குப் பாதுகாப்பாக இட்டுச் சென்றனர். வழியெங்கும், பீதியில் ஆழ்ந்திருந்த இத்தாலிய தொழிலாளர்கள் பிரெஞ்சுக்காரர்களால் மிருகத் தனமாக தாக்கப்பட்டனர். குறைந்தது ஆறு இத்தாலியர்கள் வழியில் கொல்லப்பட்டனர். இருவர் வேறொரு இடத்தில் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இத்தாலியர்களுக்கு அய்குவே - மார்டெஸ் பகுதியில் இருந்த மத்தியகால ஊரான டூர் தெ கான்ஸ்டன்ஸில் (Tour de Constance) புகலிடம் வழங்கப்பட்டது. அடுத்த இரு நாட்களில் உப்பளப் பகுதிகளில் எத்தனை இத்தாலியர்கள் அநாமதேயமாகச் செத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது.
	1890இல் வெளிவந்த மோரிஸ் பாரே (Maurice Barres) எழுதிய லா ஜார்தான் தெ பெரனிஸ் (Le Jardin de Berenice) என்னும் நாவல் தற்செயலாக அய்குவெஸ் - மார்டெஸைப் பின்புலமாகக் கொண்டிருந்தது. அது டூர் தெ கான்ஸ்டன்ஸை ஒரு புதிய வகைத் தேசியத்தின் குறியீடாகப் பயன்படுத்தியது.
லெ ஜார்தான் தெ பெரனிஸின் கதாநாயகனால் டூர் தெ கான்ஸ்டன்ஸின் உச்சியிலிருந்து பரந்து விரிந்த பிரெஞ்சு நாட்டுப்புறத்தைப் பார்க்க முடிகின்றது. அவன் பிரெஞ்சு நாட்டின் கடந்துபோன மத்திய காலத்துடன் உறவாடுகிறான். ஒரு தனிநபர் என்னும் வகையில் தான் ‘இந்தப் பரந்த நாட்டில் ஒரே ஒரு நிமிடம் மட்டுமே’ என்பதை உணர்கின்றான். பாரேயின் நாயகன் மண்ணின் மைந்தனாக பிரெஞ்சுத் தேசத்துடன் ஒன்றிவிடுகிறான். புலம் பெயர்ந்து இங்கு குடியேறியவனால் அப்படி ஒருபோதும் இந்த தேசத்துடன் ஒன்றிவிட முடியாது.” (பாசிசம் - மிகச் சுருக்கமான அறிமுகம் - கெவின் பாஸ்மோர்: 1-3)
“கடந்த நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் நிகழ்ந்த மாபெரும் மனிதப் பெயர்வில் இந்த நாவல் தொடங்குகிறது. இந்த நூற்றாண்டின் முதல் மனிதப் பேரழிவில் இந்த நாவல் முடிய வேண்டும். வஞ்சகத்தில் இழந்துபோன தம் நிலத்தை மீட்க அழுத்தப்பட்டுப் போர் நிகழ்த்திய மக்களின் கதை இது. போரே வஞ்சகம் என ஆன மக்களின் கதையும் இது. இந்த மக்கள் கூட்டங்களின் வேரையும் விழுதையும் தேடித்தரும் பயணமாக ஆகிவிட்டது கர்ப்பநிலம்.
வரலாறெங்கும் சிலுவையேற்றப்பட்ட பாட்டன்களைப் பேரன்கள்தான் உயிர்த்தெழ வைக்கிறார்கள்.” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: I)
கதையின் மாந்தர்கள் Dr.மதி, Dr.கனிமொழி, Dr.ப்ரியா நாகமணியர் கிளி அவரது பேரன் கதி. அலுகோஸ், அவரது மனைவி சிதம்பரம், அவரது மனைவி.
“வன்னிப் பெருநிலமே திகைப்போடு பார்த்தது; யாழ்ப்பாணம் குடி எழும்பி வந்திருப்பதை!” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 318)
என விரியும் கதைக்களம் யாழ்ப்பாணத்திலிருந்து முற்றிலும் இடம்பெயரும் தமிழ் மக்களின் துயரினூடாக இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய இனப்பேரழிவை, படுகொலையை - புதினத்தின் வழி முன்வைக்கின்றது.
	இது மிகவும் தனித்ததொரு குரூரமான போர். அரசே தனது மக்களைக் கொன்றொழித்த போர். 
“குடாநாட்டின் நாலுபுறமும் படைகள் சூழ்ந்த யுத்தத்தின் நடுநிலத்தில்தான் இத்தனை நாள் வாழ்ந்தார்கள். குண்டுகளின் பகை முழக்கங்கள் பழக்கமானதுதான். ஆனால் இப்போது நடப்பது வேறு. அழித்துவிடப் போகிறார்களா?” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 83)
	“குடாநாட்டின் பெரும் பகுதியான வலிகாமம் முழுவதும் இடம்பெயரும் ஒரு யுத்தம். தமிழன் எதிர்பார்த்திருக்காத யுத்தம். இதில் எதுவும் நடக்கலாம்.” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 85)
	புத்தகத்தின் சூத்திரதாரி, ஆசிரியர் - அந்த யுத்தத்தின் சாட்சி. இரத்தமும், சதையுமாக வருகின்ற கதை மாந்தர்களின் ஓலத்தையும், பாடுகளையும் கண்ணெதிரே பார்த்தவர். ஆனால் பார்ப்பதோ, பங்கெடுப்பதோ மட்டுமே ஒரு படைப்பாளியை உருவாக்கிவிட முடியுமா?
	“எல்லாப் பெண்களும், அல்லது எல்லா இனக்குழுவினரும் ஒரே மாதிரியான அனுபவங்களையோ, ஒரேமாதிரியான மதிப்புகளையோ பகிர்ந்து கொள்வதில்லை.
	மார்கரெட் தாட்சர் பிரிட்டனின் முதல் பெண் பிரதமர். ஆனால், பெண்களின் பிரச்சினைகள் எனப் பெண்ணியவாதிகள் வரையறுத்தவற்றின்மீது அவர் அனுதாபம் காட்டவில்லை. 1990களில், அமெரிக்க இராணுவத்தில் மிக உயர்ந்த பதவியில் இருந்தவர் காலின் பவல் என்னும் கறுப்பர். ஆனால் இருபதாம் நூற்றாண்டின் அமெரிக்கக் குடியரசுத்தலைவர்களில் மிகப் பழமைவாதியான ரொனால்டு ரீகனின்கீழ் அவர் பணிபுரிந்தார். தனது இனச் சிறுபான்மை சார்ந்த போராட்டங்களில் அவர் பங்கேற்றதே கிடையாது.” (சமூகவியல் - மிகச் சருக்கமான அறிமுகம் - ஸ்டீவ் புரூஸ்: 121)
ஆனால் குணா அப்படியல்ல. சிலுவையேற்றப்பட்ட - பாட்டனை உயிர்த்தெழ வைக்கிற பெயரன்! நடுகற்கள் என்பவை நம் நாடி, நரம்பெல்லாம் பெருமைகொள்கிற பெருந் தியாகத்தின் சின்னங்கள் என்பதை இந்தத் தலைமுறைக்கு எடுத்துச் சொல்கின்ற பெயரன். தன் இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தின் பங்காளி, சாட்சி! மட்டுமல்ல அதை கலைப்படைப்பாக, சொற்களின் வழி மாற்றுகின்ற படைப்பாளி!
	“அரசியலின் இரக்கமற்ற தர்க்கமுறை, தேசிய நலனைப் பாதுகாக்க மனிதர்களும் வளமும் தியாகம் செய்யப்பட வேண்டும் என்று வேண்டுகிறது. இந்தத் தேவை எப்போதும் தெரிந்ததுதான். ஒருங்கிணைந்த இத்தாலியை உருவாக்கியவர்களில் ஒருவரான கேவர் 19ஆம் நூற்றாண்டில் கூறினார்: ‘நமது நாட்டுக்குச் செய்ததையெல்லாம் நமக்குச் செய்துகொண்டால் என்ன வகையான அயோக்கியர்கள் நாமெல்லாம்.” (அரசியல் - மிகச் சுருக்கமான அறிமுகம் - கென்னத் மினோக்: 76)
	இந்த ‘நமது நாட்டுக்குள்ளேயே நசுக்கப்பட்டு, அழிக்கப்பட்ட தமிழினத்தின்’ நியாயங்களை, ‘அரச பயங்கரவாதம்’ எப்படித் திக்கற்றதாக, குரலற்றதாக ஒடுக்குகிறது என்பதை புதினத்தின் கதைமாந்தர்கள் நினைவுகளின் வழி, தம் மனவோட்டத்தை வெளிபடுத்துகின்ற உரையாடல் வழி உலகின் பார்வைக்குக் கடத்துகிறார்கள்.
	நாகமணியார் சொல்கிறார், “அந்தக் கலவரத்தில, சிங்களக் காடையங்கள் தமிழரை வெட்டுறதுக்குக் காதில கடுக்கன் இருக்கா என்று பார்த்துதான் வெட்டுறது. தமிழ் ஆம்பளையளின்ர காதில கடுக்கன் இருக்கும். பொம்பளையளுக்குப் பொட்டு. எனக்கெல்லாம் ஏழு வயசில காதுகுத்து. அதைக் காதுகுத்துக் கலியாணம் எண்டு சொல்லுவாங்கள். ஊரடங்க மேளதாளத்தோட கொண்டாட்டம். அப்புவையும் காத்துக்கொண்டிருப்பாங்கள் எண்டு ஐயா என்னை கடுக்கன் கழட்டச் சொல்லிட்டார். பிறகு என்ர மகன் வளர்றதுக்கிடையில இரண்டு மூண்டு கலவரம். காதில ஓட்டையே வேண்டாம் என்று குத்தல்ல. தமிழர்ட காதுக்குத்து நிண்டது நாகரிகத்தால மட்டும் இல்லையடா தம்பி... கேட்டிச்சா?” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 75)
“நெப்போலியன் எல்லைப் பகுதியின் வழியே பாதெனுக்குள் (Baden) டக்டியெங்கியெனை (due d’Enghien) பிடித்துச் சுட படைகளை அனுப்பியபோது, அந்த நடவடிக்கை ஐரோப்பா முழுவதையும் அதிர வைத்தது என்று டல்லிரன்ட் என்பவர் கூறினார்.” (அரசியல் - மிகச் சுருக்கமான அறிமுகம் - கென்னத் மினோக்: 76)
ஆனால் யாழ் நகரை இராணுவம் நெருங்கிய போது துவங்கி, முள்ளிவாய்க்கால் வரை ஒரு சின்ன அதிரல் கூட மேற்குலக அரசுகளிடம் இல்லை என்பதே கசப்பான நிதர்சனம்!
அந்த நாட்களைப் பாருங்கள்...
	“யுகசாபம் ஒன்று துரத்துகிற மனிதர்களாக ஊழியை அடையுமுன் தப்பிக்க ஒரு தரை வேண்டும் மனிதர்களாக சனங்கள்! யாருமற்ற சனங்கள்!
கார் என்பது வெறும் இரும்பு என அதை வெளியில் கைவிட்ட சாரதி!
தாகத்தில் சனங்கள் தவிக்கின்றன. குழந்தைகள் மிரண்டு அழுகின்றன. கதறியழச் சக்தியற்ற சனங்களின் நாவுகள் வறட்சியில் துடிக்கின்றன. கூடவந்த வளர்ப்புப் பிராணிகளை வசவுகளும் சூழ்கின்றன. சூழும் துயரத்திற்கோ முடிவிடம் தெரியவில்லை. பார்த்திருக்கப் பொறுக்காத நீரேரிப் பறவைகள் எழுந்து இறகுகள் உதிர அப்பால் பறக்கின்றன. உதிர்ந்த இறகுகளோ போகும் திசையறியாது காற்றில்...” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 175)
“வேர்விட்ட மண்ணை ஓரிரவில் பிரிந்துபோகும் மக்கள்! புலிகளின் ஒரு சொல்கேட்டு, ஒரே ஒரு சொல்கேட்டு தலையாட்டி ஆமோதித்துத் தம் மண்ணைவிட்டுப் போகும் மக்கள். படித்த யாழ்ப்பாணத்தின் ஆச்சரியம்; முதல் அதிசயம் இது.
யாழ் நகரோ இருளில் மூழ்கியது. அதன் மௌனமோ போரின் குண்டு மழையால் பிளக்கப்படுகிறது. தன்னைப் பிரியும் மக்களை நினைத்து மௌனத்தில் அழக்கூட மண்ணிற்கு வாய்க்கவில்லை. போரின் அதிர்வு மண்ணின் நெஞ்சைப் பிளக்கிறது. அதன் காதுகளைச் செவிடாக்குகிறது. நடப்பதெதையும் காண முடியாமல் கண் மூடிக்கிடக்கிறது அந்த மண்.
கைவிடப்பட்ட குலதெய்வங்கள் செய்வதறியாது இருக்கின்றன. தோட்டத்தில் பயிர்களோ அழுதழுது சாய்கின்றன. ஓங்கி வளர்ந்த மரங்கள் குண்டுபட்டு தலையறுந்து வீழ்கின்றன. வளர்த்த பரிணிகளோ அவலக் குரலெழுப்பி வானத்தை அண்ணாந்து அழுது முடியாமல் திணறுகின்றன. வீடுகளில் படியும் துயரத்தை சுவர்களாலும் தாங்க முடியவில்லை. யுகம் யுகமாக நடப்பதுதான். மனிதன் நாகரீகம் அடைந்தான் என்றில்லை. அடையப் போவதுமில்லை. எப்போதும் எங்கோ ஒரு இடத்தில், பூமி தன்னில் வேர்விட்ட மக்களைப் பிரிகிறது. இப்போது அது யாழ் மண்ணின் முறை. என்றழுதது யாழ் மண். 
யோகர் அப்போதே சொன்னார். ‘நீ ஒரு நாள் பொட்டு ஒளியையும் இழந்து இருக்க நேரும்’ என்று மண்தான் அவரை நம்பவில்லை. அவர் சொல்லை விசர்ச் சித்தனின் சீடன் வேறென்ன சொல்வான் என்று அலட்சியமாய் இருந்துவிட்டது.” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 178)
“ஸ்பிக்நியூ ஹெர்பர்ட் சொல்கிறார்: 
போர் என்கிற ஒரு நிகழ்வு ஐரோப்பிய வரலாற்றில் இரண்டு முறை நடக்காது போயிருக்குமானால் ஐரோப்பிய சிந்தனையும் கலாச்சாரமும் இன்றவை சந்தித்திருக்கிற நெருக்கடிகளையும் அந்த நெருக்கடிகளால் வளர்ந்த சிந்தனைத் தெளிவுகளையும் அடைந்திருக்கவே முடியாது. இரண்டாம் உலகப் போரின்போதே "கவிதையின் நடனம் முடிவுக்கு வந்துவிட்டது" என்று போலந்து கவிஞரான ததயூஸ் ரோஸ்விச் அறிவித்தார். ஹிட்லரின் யூத வதை முகாம்களுக்குப் பிறகு கவிதை எழுதுவதே சாத்தியம் இல்லாமல் போகும் நிலை வந்துவிடும் என்று கூறினார் நவீன கலாச்சார விமர்சகரான தியோடர் அடார்னோ. எனினும் மானிடம் போரையும் மனித வதை முகாம்களையும் தாண்டியும் தாக்குப் பிடித்துக்கொண்டிருப்பதைப் போலவே கவிதையும் தாக்குப் பிடித்திருக்கிறது.” (சமகால உலகக் கவிதை - பிரம்மராஜன்: 77) இப்புதினமும் அப்படித்தான்!
இப்புதினத்தினைக் கண்ணீரின் கரிப்பில்லாமல், குற்றவுணர்வின் நெஞ்சடைப்பில்லாமல் என்னால் பல இடங்களில் கடக்க முடியவில்லை. ஒரு படைப்பு மனம் நெருங்கடியிலும், அடக்குமுறை, ஒடுங்குமுறை, வலி - இவைகளின் பின்பாக ஆவேசத்துடன் கிளர்ந்தெழுவது, படைப்பது, இலக்கியத்திற்கு வளமை சேர்க்கலாம். ஆனால் அதற்கான விலை? ஈழத்தில் இனப்படுகொலையும், விடுதலைப் போருக்கான வழிகளை அடைத்தலையும் திருப்திகரமாகச் செய்து முடித்த அரசு, (அதற்கு உதவிய அண்டைய, மேற்குலக நாடுகள்) இவற்றால் விடுதலையின் குரல்வளை நெறிக்கப்பட்ட ஒரு மனிதனது இப்படைப்பை, இலக்கிய அங்கீகாரத்திற்கானதாக மட்டுமே கருதமுடியாது.  தனக்கான, தன் குமுறலுக்கானதொரு வெளிப்பாடு மட்டுமே. அது கலையின் நேர்த்தி கொண்டது அதன் பிரச்சாரத் தொனியற்ற மொழியாலும், சம்பவங்களைக் கோர்த்துச் சென்ற நேர்த்தியாலும்! அவன் யாருடைய பெயரன் பாருங்கள் - 
	“இஞ்ச பார் ஒன்றை... மண்ணை வைச்சு நடக்கிற யுத்தங்கள், பிணக்குகள் இலேசில முடிவுக்கு வராதடா தம்பி. தலைமுறை கடந்தும் நீளும். மண்ணுக்கும் உயிருக்கும் ஒரு பந்தம் இருக்கு. ஒரு நிலம் பாட்டன் நிலம் என்றாலே பேரன் விடமாட்டான்.” (கர்ப்பநிலம் -குணா கவியழகன்: 17)
ஏன் இந்த தலைப்பு கர்ப்பநிலம்?  அதன் கதைமாந்தர்களுக்கென்று ஒரு வரலாறு, தன் பூர்வீகம் குறித்த தொப்பூள் கொடி கதைகள் உண்டு. அவற்றை அந்த நிலம், மண் சுமந்து பொதிந்திருக்கின்றது. அதனால் தான் இது கர்ப்பநிலம்.
	“அந்தத் தென்னங்காணி சனங்களாலும் கதைகளாலும் மீளக் கர்ப்பமுறும் பொலிவடைந்தது. அன்று வாழ்வின் பழைய பாடுகளைப் பேசிப்பேசி இரவைத் தேய்த்தார்கள். இந்தக் கதைகளுக்கெல்லாம் தென்னங்காணி சாட்சியாய் முன்னொரு காலம் இருந்ததுதான். தலைவாசல் கொட்டிலின் வளைமீது தொங்கிய படத்தில் யோகரைக் கதிர் கண்டான். யோகர் சம்மணத்தில் இருந்தபடி கதிரைப் போலவே கதை கேட்டுக் கொண்டிருந்தார்.” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 76)
இதில் வருகின்ற எந்தக் கதாபாத்திரமும் மிகையாகச் சித்தரிக்கப்படவில்லை என்பதே இதனை ஒரு தரமான இலக்கியப் படைப்பாக்குகிறது. அதோடு, இதன் தொனி கழிவிரக்கத்தைக் கோராத ஒரு தொனி. அதன் மாந்தர்கள் சொல்லொண்ணாத் துயருறுகிறார்கள் தான். ஆனால் அவர்கள் வேண்டுவது கழிவிரக்கமல்ல. புரிந்து கொள்ளுதலே அதன் ஆதுரமே! செல்வம் என்கின்ற புலிகளின் படையின் இரண்டாம் அணித் தலைவர் குறித்த விவரணை அதற்குச் சான்று:
	“தொண்ணூறாம் ஆண்டு யாழ் கோட்டையை புலிகள் தொடர் முற்றுகைக்குள் வைத்திருந்தபோது கோட்டையின் இறுதி நாட்கள் எண்ணப்பட்டுக்கொண்டிருந்தன. அப்போ மண்டைதீவில் இருந்து கோட்டைக்கு உதவி வழங்கவும் முற்றுகையை உடைக்கவும், கோட்டை பின் நீரேரியால் படகுமூலம் ஒரு நடவடிக்கையை தொடுத்தது இராணுவம். இது ஒரு அசலான திட்டம். தரையில் சுற்றி வளைத்து நிற்கும் புலிகளால் இந்த நீரேரி நடவடிக்கையை எதிர்கொள்ள முடியவே முடியாது என்பது திண்ணம். புலிகளே இதை எதிர்ப்பார்க்கவில்லை. அந்த இராணுவ நடவடிக்கையை முறியடித்தது செல்வம்தான். தனிமனிதத் திறமையால் நிகழ்ந்தது அது என்றும் சொல்லலாம். 
	இந்திய இராணுவத்திடம் புலிகள் மணலாற்றில் கைப்பற்றிய ‘கால் கஸ்ரோ‘ வகை ஏவுகணைகள் சில இருந்தன. கோட்டை சண்டையில் பொன்னம்மான் படையணியில் கால்கஸ்ரோ வைத்திருந்தது செல்வம். தனது அணியை வைத்து நான்கு ஏவுகணைகளில் மூன்று படகை நீரேரியில் அன்று கவிழ்த்தவன் இவன். வெட்டை வெளியில் நின்று அந்தத் தாக்குதலைத் துணிந்து செய்தான்.” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 155)
	“செல்வத்தின் திறன் அறிந்துதான் லீமா கோப்பாய்ப் பாலத்தைக் காக்க அவனை அந்த இடத்தில் நிறுத்தினார். சிறிய அணியை வைத்து அவன் அதைச் செய்வான் என்று நம்பினார். ஆனால் ஆனானப்பட்ட செல்வத்திற்கு அச்சம் மனதில் ஏறியது. யுத்தத்தின் சத்தமே உள்ளூர நடுங்கியது. அவன் அதைக்காட்டாமல் இருக்க பெரும் சிரமப்பட்டான். ஒருகாலம் அரசியல் அவலை செய்பவர்களை ‘போராளிகளா இவர்கள்?’ என நக்கல் செய்தவன் ஆச்சரியமாய் இருந்தது. எந்த வீரனும் போர்ச் சூழலிலிருந்து அந்நியப்பட்டடுவிட்டால் போர் மீண்டும் புதியது போன்ற அச்சம் தரும் என்று பட்டு உணர்கிறான். போரை எதிர்கொள்ள நெஞ்சில் உறுதி இருக்கிறது. ஆனால் போர் எதிர்த்து வருகையில் அச்சம் எங்கிருந்தோ பிறக்கிறது. அவன் தன்னையே புரியமுடியாத விந்தையாகக் கண்டான் அந்தத் தருணம்.” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 156)
மனித மனதை ‘மனம் ஒரு பொல்லாப் பொருள்’ என்கிற இந்நாவலாசிரியர், அதன் ஊடாடட்டத்தை, ஒரு போராளியின் நிதரிசனமான ஊடாட்டத்தைப் பாசாங்கற்று முன்வைப்பதுடன், இவற்றைத் துரிதமாகக் கடக்க முயற்சித்து, விடுதலை எனும் வேள்வியில் பயணிக்க சூழல் எவ்வாறு அவனை உந்துகிறது என்பதையும் காட்டுகிறார்.
மொஹமத் தர்வீஷின் கவிதை ஒன்று - அதன் தலைப்பு விருப்பங்கள் குறித்து

“என்னிடம் சொல்லாதே:
நான் மட்டும் அல்ஜியர்ஸில் ரொட்டி விற்பவனாக இருந்தால்
நான் ஒரு போராளியுடன் சேர்ந்து பாடுவேன்.

என்னிடம் சொல்லாதே:
நான் மட்டும் ஒரு இடையனாய் ஏமனிலிருந்தால்
காலத்தின் நடுங்கல்களுடன் நான் பாடுவேன்.

என்னிடம் சொல்லாதே:
நான் மட்டும் ஹவானாவின் காபி விடுதியில் வெய்ட்டராக இருந்தால்
துயர்ப்படும் பெண்களின் வெற்றிகளுக்காக நான் பாடுவேன்

என்னிடம் சொல்லாதே:
ஆஸ்வானில் ஒரு இளம் தொழிலாளியாக நானிருந்தால்
நான் பாறைகளிடம் பாடுவேன்.

என் நண்ப,
நைல் நதி வோல்காவில் பாயாது,
காங்கோவோ அல்லது ஜோர்டான் நதியோ யூஃபிரட்டஸில்.
ஒவ்வொரு நதிக்கும் தன் சொந்த தோற்றுவாய் உண்டு,
அதன் போக்கு மற்றம் அதன் வாழ்வு.
என் நண்ப, நம் தேசம் தரிசல்ல.

ஒவ்வொரு தேசத்திற்கும் பிறப்பதற்கான பிரத்யேக நேரமுண்டு,
ஒவ்வொரு விடியலும் ஒரு போராளியுடனான சந்திப்பு.”
(சமகால உலகக் கவிதை - பிரம்மராஜன்: 381)
செல்வம், லீமா, சென்பகா ஆகிய போராளிகளைச் சந்திக்க நேருகின்ற பக்கங்களில் உள் மனம் நடுங்குகிறது. பதைத்து ஒடுங்கிப் பின் வணங்குகிறது!
இந்த நூற்றாண்டின் மிக அவலமான இந்த இன ஒழிப்பின் பின், 60 ஆண்டுகளாகத் தமிழினத்தின் உரிமைகளுக்கும், விடுதலைக்கும் போரிட்ட ஒரு மாபெரும் போர்ப்படை, மிகச் சிறந்ததொரு தேசியத் தலைவரின் ஈடு செய்ய இயலாத தியாகம் - இவை குறித்து விமர்சனங்களை எத்தனையோ பேர் முன்வைக்கலாம். ஆனால் நான் ஒரு அப்பட்டமான புலி ஆதரவாளர், தேசியத் தலைவரையும், அப்படையையும் அப்படியே நேசித்துப், போற்றி ஏற்றுக் கொள்கின்ற பெண். இவ்வகையில் நானொரு அறிவுசீவி அல்ல - முழு முட்டாளென முத்திரையிடப்பட்டாலும் அது குறித்துக் கிஞ்சித்தும் கவலை இல்லாதவள்! விடுதலைக்கான பேரழுச்சியின் முன், தியாகத்தின் முன், ‘புத்தி’ எனும் மூன்றெழுத்துச் சொல் தூசெனக்கு! ‘நடுநிலை’ எனும் சொல் கடும் விஷமெனக்கு!
ஆனால் நாவலாசிரியர் விமர்சனங்களை கேள்விகளால், சரியான பதில்களால், தன் கதாபாத்திரங்களின் வழி கடந்து செல்கிறார். உணர்வுபூர்வமான அத்தளத்திலிருந்து விலகி நின்றும் தன் பக்கத்து நியாயங்களை நாகமணியார் வழியாக மிகச் சரியாகப் பகிர்கிறார். 
சென்பகா கேட்கிறாள்:
“எங்கட இயக்கம் மற்ற இயக்கங்களைத் தடை செய்தது. அவர்கள்மேல் தாக்குதல் நடத்தினது எல்லாம் பிழைதானே. அவையளும் போராட வந்தவையள்தானே?”
	“சரி-பிழை இல்லை இங்க பிரச்சினை. தர்மம்தான் முக்கியம். அந்த நேரத்தில் அது தர்மம்தான்.” “அது அறமா?”
	“அறம் என்றது வேற தர்மம் வேற. அததற்கு உள்ள நியாயம் தான் தர்மம். கத்தியோட தர்மம் வெட்டுறதுதான். வெட்டா விட்டால் கத்தி தன்ர தர்மத்தைக் கடைப்பிடிக்கேல்ல என்றுதானே அர்த்தம் இல்லையா? போராட்டத்தை முன்னெடுக்கிறதுக்கு ஒரு தடை இருக்குமென்றால் அதை அகற்றுறது தர்மம்தானே?”
	“சரி, கத்தி வெட்டுறது தர்மம். அது அறமா?” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 161)
	“வெட்டுறது கத்தியின்ர தர்மம். ஆனால், இன்னொன்றுக்கு அதனால் கேடு என்றால் அது அறமில்லை. ஆனால், தர்மம்.”
	“போராட்டம் என்ற பொது அறத்திற்குக் கடைப்பிடிக்கபடுகிற தர்மம்கூட அறம்தான்.”
	“கடவுளே! இப்ப எனக்குப் புரிஞ்சிட்டு நல்லா.” 
	“என்ன புரிஞ்சிட்டு?” அவளையே உற்றுப் பார்த்துக் கேட்டார் மென்சிரிப்போடு.
	“அதை அறம் என்று நியாப்படுத்த வேண்டியது உங்களோட தர்மம். நீங்க உங்கட தர்மத்தை மீறமாட்டிங்க... ஸ்ஸப்பா... என்ன விளக்கம்?” அவள் கண்களைச்செருகி போலிமயக்கம் காட்டினாள் வீம்பாக.
அப்படிச் சொன்னாலும் அவள் உள்ளூர நியாயம் ஒன்றை உணர்ந்தாள். (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 162)
ஜான் எச்.அர்னால்டு சொல்கிறார்:
“நான் அதிகம் மதிக்கும் எழுத்தாளர் ஒருவர் இருக்கிறார், டிம் ஓ‘பிரியென் (Tim O’Brien) எனப்படும் அமெரிக்க நாவலாசிரியர். ஒரு ராணுவ வீரராகச் சில காலங்கள் வியட்நாமில் கழித்தார். அவருடைய எழுத்து, ‘போர் பற்றிய உண்மைக் கதையை’ சொல்வதன் சாத்தியங்கள், சாத்தியமின்மைகள் மற்றும் உண்மைக்கதையென்பது என்னவாக இருக்கலாம் என்பவற்றுடன் போராடுகிறது. அவரது வாக்கியம் - கதைகளால் நம்மைக் காப்பாற்ற முடியும்” என்பது. (வரலாறு - மிகச் சுருக்கமான அறிமுகம் - ஜான் எச்.அர்னால்டு: 177) இந்தக் கதை ஒரு வரலாற்றை, அதன் நியாயத்தைக் காப்பாற்றுகிறது!
கதை மாந்தர்கள் புனைவாக இருக்கலாம். ஆனால் கதை உண்மை. ஒரு பிரதிக்கான முழு அர்த்தமும் அதன் சூழமைவைப் பொறுத்தே - அந்தக் காலகட்டம், பின்புலம், பொறுத்தே முக்கியத்துவம் பெறுகின்றது. இப்பிரதியை - (செய்தியாகப், பரப்புரையாக இல்லாமல்) மாந்தர்களின் பாடுகள், கையறு துயரமாகப் பதிவு செய்கின்ற அதன் முழு ஆழத்தையும், அர்த்தத்தையும் அதற்கான போர்ச் சூழல், அரச பயங்கரவாதம் எனும் சூழமைவில் வைத்து நோக்கினால் தான் நாவலாசிரியனின் செய்நேர்த்தியும் (Craft), உள்ளடக்கமும் (Content) ஒன்றோடு ஒன்று இயைந்து பயணிக்கின்ற தன்மை புரியும். அது உண்மையின் கை பற்றி ஒரு குழந்தை நேர்த்தியாக நடைபயில்வதை ஒத்தது!
இந்த உதாரணத்தைப் பாருங்கள் - 
ஜானதன் கல்லர் சுட்டுகிறார்: “அமெரிக்க வரலாற்றில் அடிமை முறையின் பிரசன்னம் (presence) பல சமயங்களில் ஒப்புக்கொள்ளப்படவில்லை. ஆனால் அது அமெரிக்க இலக்கியத்தில் தனது அடையாளத்தை ஆழமாகப் பதித்திருக்கிறது என்று டோனி மாரிசன் வாதிடுகிறார். மேலும் எல்லைப்புறச் சுதந்திரம், தடையற்ற சாலை வழி உரிமை, தடையற்றக் கற்பனைச் சுதந்திரம் என்று சுதந்திரம் பற்றிய பிரச்சனையில் அமெரிக்க இலக்கியம் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட இடங்கள் இந்த அடிமையாக்கச் சூழமைவில் வைத்து வாசிக்கப்பட வேண்டும். ஏனெனில் இந்த அடிமையாக்கச் சூழமைவிலிருந்துதான் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. பிரிட்டிஷ் பேரரசின் காலனிகளில் நிகழ்ந்த சுரண்டல்தான் பிரிட்டனில் மதிப்புமிக்க குடும்ப வாழ்க்கையின் ஆதாரமான செல்வ வளத்தை வழங்குகிறது. இந்தப் பின்புலம் ஜேன் ஆஸ்டினுடைய நாவல்களில் விலக்கப்பட்டுப் போயிருக்கின்றன. ஆனால் அந்தப் பின்புலத்தில் வைத்தே அவை விளக்கப்பட வேண்டும் என்று எட்வர்ட் சயீத் சொல்லியிருக்கிறார். அர்த்தம் சூழமைவுக்குக் கட்டுப்பட்டது.” (இலக்கியக் கோட்பாடு - மிகச் சுருக்கமான அறிமுகம் - ஜானதன் கல்லர்: 108) போரின் அவலம், கையறு நிலை, அறமற்ற அரச பயங்கரவாதம் எனும் சூழலில் வைத்தே இப்புதினத்தின் அர்த்தத்தை - அத்தனை அழிவிலும் - ஒரு ஆதுரமான சக மனித மனம் மானுடம் பேசுவதை முன்வைக்கிறது! அலுக்கோஸை விட்டுவிட்டு நவமணியாரோ, கிளியோ தாம் மட்டும் தப்பியோடத் தயாராக இல்லையே!
எனில், இப்புதினம் தனி மனித, அல்லது தனித்த ஒரு இனத்தின் நிலமும், அடையாளமும் அழித்தொழிக்கப்பட்ட துயரம் மட்டுமா?
	இல்லை - உலகம் முழுமைக்குமான, ‘Cleansing’, ‘Pure Genocide’ எனப்பட்ட வரலாற்று நிகழ்வுகளின் பிற்பாடானான மனித குலத்தின் இருப்பும், அதன் கேள்விகளுக்குமான பெருந்துயரம் அல்லவா?
	‘கலை ஓர் உலகளாவிய மொழி’ என ஜான் டியூவி கூறியது இதைத்தான்.
	அதே போல “கலையின் மொழியை அதற்குரிய சமூகக் குழுவின் உயிர்நாடிக்குள் நுழைந்துதான் கற்றாக வேண்டும்” என்றும் அவர் நினைத்தாரெனப் படித்திருக்கிறேன். அவ்வகையில் எம்மக்களின் உயிர் நாடிக்குள் சென்று அம்மொழியை இப்புதினத்தில் வசப்படுத்தியிருப்பவர் நாவலாசிரியர் குணா.
	இப்புதினத்தின் வழி அவர் வைத்திருக்கின்ற அரசியல் தெளிவை நம் தமிழகத்து வாசகர்கள், மக்களும் அறிந்து கொள்ள வேண்டும். 
	சிங்களவர் எனும் இனம் நம் எதிரியல்ல, நான் சிங்களன் எனும் உணர்வுதான் எதிரி எனும் உண்மையான புரிதலுக்கும், அதன் வழியாக ‘நான் தமிழன் எனும் உணர்வின்’ மூலமே விடுதலை என்பதையும் முன்வைக்கும் நாகமணியார் சொல்கிறார் - கேளுங்கள் - 
“அவன் சிங்களவன் ஆரியன் இல்லை எண்டு சொல்லுறன். கேள் நீ... கலியாணம் மாமன்ர மகளை கட்டுறது எங்கட முறை வழக்கு. சிங்களவனுக்கும் அதுமுறை வழக்கு. வட இந்தியாவில ஆரியனுக்கு மாமன் பொண்ணு சகோதரி முறை. கேட்டிச்சா..? ஒரு இனம் எந்தப் பழக்கத்தை மாத்தினாலும் கலியாண முறைப் பழக்கத்தை மாத்தாது... கண்டியா?”
“பிறகென்ன சேர்ந்து வாழவேண்டியதுதானே?” ஐயன் வெறுப்போடு கேட்டான். வெத்திலை எச்சிலை வெளியே துப்பிய விதத்தில் தெரிந்தது வெறுப்பின் வன்மம்.
	“சரி, சேர்ந்து அரசாங்கத்துக்கு எதிரா இந்த சண்டையப் பிடிக்க வேண்டியதுதானே” சுவாமிப்பிள்ளை மறுபடி தன் விவாதத்திற்கு வந்தார். படு உற்சாகம் அவருள்.
	“உணர்வு மாறிப்போச்சுதே. கூட்டு என்றது உணர்வுதானே. இரத்தமா? இல்லையே! ‘நான் சிங்களவன்’ எண்டது உணர்ச்சியாடா. அதை அவன் விடமாட்டான். அப்ப, நாங்கள் தமிழன் எண்ட உணர்ச்சிக்குள்ளதான் தப்பிப் பிழைக்க முடியும் வேற வழியில்லை.” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 220)
	போலவே புத்த பிக்குகளின் அரசியல் செல்வாக்கும் தலையீடும் ஆர்யரத்னா, விஜயதாச, விமாலினி போன்ற கதாபாத்திரங்களின் வழி அரசியல் தகிடுதத்தங்கள் இவற்றையும் பதிவு செய்கிறது இப்புதினம்.
மைக்கேல் கேரிதர்ஸ் சொல்கிறார்:
	“அநுராதபுரம், இலங்கையின் பண்டைய தலைநகரம்; அதன் இடிபாடுகளுக்கிடையில், புல்தரையின் மேல் ஒரு பீடத்தின் மீது தன்னந்தனியாகப் புத்தரின் சிலை ஒன்று உள்ளது. 
அதன்முன் நின்றுகொண்டு, முதிய ஆங்கிலேய சமூகவியல் அறிஞர் ஒருவர் என்னிடம் சொன்னார்: மொத்த மனித வரலாற்றுக் குளறுபடியிலும் குறைந்தது இது - இந்தச் சிலையும், இது குறித்து நிற்கும் யாவும் - நாம் பெருமைப்பட்டுக்கொள்ள முடிகிற ஒரு விஷயம்.” (புத்தர் - மிகச் சுருக்கமான அறிமுகம் - மைக்கேல் கேரிதர்ஸ்: 1)


ஆனால் நடந்ததென்ன - புதினம் சுட்டுகிறது:
“புத்தனைப் பூசிக்கும் தலைமை விகாரை அதிபதி பிக்குகள் அவசரமாக விமானத்தில் பலாலி இராணுவத் தளத்துக்கு அனுப்பப்ட்டார்கள். படைத்தளபதிகளும், பௌத்தத் துறவிகளும் சிப்பாய்கள்முன் தேசபக்தி பேசினார்கள். புத்தனால் மதம் வாழத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த நாட்டுக்கான யுத்தத்தினதும், அந்த யுத்தத்தின் வெற்றிக்காக உயிரை அஞ்சாது கொல்பவனது வீரத்தினதும் மகத்துவத்தைப் பேசினார்கள். புனிதக் கடமையை ஆற்றும் வீரர்களின் புகழை போதித்தார்கள். ‘புனிதப் போர்’ என்று வழுவும் காவியுடையை தோளில் எறிந்து உருக்கொண்டார்கள்.
“தம்ம தீப” என்று ஈற்றில் கோசமிட்டார்கள். புத்தன் ‘தேர்ந்தெடுத்த தீவு’ என்று இதற்கு அர்த்தம்.
வென்ற இடமெங்கும் இதுவரை வெறுமை பரப்பி வந்த காற்று, மெல்லென பலாலித் தளத்திலிருந்து போதை ஏந்தி வந்ததிப்போது. மெல்லெனப் பரவும் போதையது. ஆனாலும் மென்போதையல்ல அது.
இம்முறை சனங்கள் புலிகளோடு பின்வாங்கிவிடக்கூடாது. அப்படி நடந்தால் சர்வநாசமாகிவிடும் என்று அரசுக்குப் பேசத் தேவை இருக்கவில்லை. அந்த அறிவு புகட்டத் தேவை இல்லாமலே, சிப்பாய்கள் வெற்றியைக் கொண்டாட வேண்டுமெனில் சனங்கள் வேண்டுமென்பதை முதல் யுத்த வெற்றியின் பாடத்திலிருந்து பட்டுணர்ந்து கொண்டார்கள்.” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 211)
	ஒரு ராணுவ வீரனின் மனப் போராட்டைச் சொல்கிற அந்தக் காட்சியில் சிங்களத், தமிழர் இடையேயான உறவு, அரசாங்கமும், அரசியல்வாதிகளும் ராணுவத்தைப் பகடைக்காயாக்கும் கபடம் இவற்றைத் தெளிவாகத் தன் கதாபாத்திரங்கள் வாயிலாகக் கொணரும் நாவலாசிரியர், ராணுவ வீரனொருவனின் சீயா (தாத்தா) அவனது மாமா வாயிலாக முன் வைக்கும் கேள்விகள் மிக முக்கியமானவை:
	“ ‘நீ எதுக்குப் படைக்குப் போகோணும்? நிலத்தை மீட்கவா? அது உன்ர நிலமா? சீயா சொன்னார்தானே, எங்களுக்கே இங்க நிலம் இருந்ததில்லை. இவங்கள் உன்னை நிலம் மீட்க வா என்று சொல்றாங்கள். திருப்பிக் கேள். இந்த அரசியல்வாதிகளிட்டயும் ‘பிட்சு’களிட்டயும் முதலில இங்க நிலமில்லாமல் இருக்கிற குடும்பங்களுக்குத் தேவைக்கு அதிகமாக நிலம் வைச்சிருக்கிறவனிட்ட இருந்து அதை மீட்டுக் குடுக்கச் சொல்லு. இங்க உன்ர ஊரில அரசாங்கத்தின்ர அதிகாரத்தில இருக்கிற நிலத்தைக் குடுக்கச் சொல்லு. செய்வாங்களா? பிறகு எந்த நிலத்தை யாருக்காக மீட்கப் போறாய்?
	‘நீ சிங்களவன்தானே! உன்ர சொந்த ஊரிலயே உன்ர தலைமுறை வேர்விட்ட மண்ணிலயே இவங்கள் உனக்கு நிலம் தரேல்ல. உன்னை சிங்களவன்ர மண்ணை மீட்க வேணும் போருக்கு வா என்றாங்கள். நீ தமிழரோட - அவங்கள் வேர்விட்ட மண்ணைப் பறிக்கப்போறாய். உன்ர தலைமுறை இருந்த மண்ணைத்தானே நீ மீட்கவேண்டும்? அதுதானே நியாயம்? நீ யாரோட போர் செய்யவேணும்? இந்த அரசாங்கத்தோடதான் நீ போர் செய்யவேணும். அதுதான் உன்ர எதிரி. உன்னை எங்க கூட்டிப் போறாங்கள்?’ “ (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 291)
சார்லஸ் டவுன்ஷென்ட் என்பவரது கூற்று இது:
“இராணுவ வீரனை அவனது ஆயுதங்கள் கீழே இழுக்கின்றன... உயர் உலகங்களை எண்ணி நிலையாகப் பறக்கின்ற கவிஞனை ஒருக்காலும் அவனால் எட்டிப்பிடிக்க முடியாது.” (பயங்கரவாதம் - மிகச் சுருக்கமான அறிமுகம் - சார்லஸ் டவுன்ஷென்ட்: 26)
	இராணுவத்தில் நப்பாசை காட்டிச் சீயானின் சம்மதமில்லாமல் சேர்ந்துவிட்ட இராணுவ வீரன் சுனில் சொல்கிறான்: (சுனிலின் சீயாவுக்கு இரண்டு சிப்பம் புகையிலையும், ஆறு கட்டுப் சுறுட்டுப் பொட்டலங்களும் கொடுத்து, வியாபாரத்தில் வேரூன்றி விட்டவர் நாகமணியார் தாத்தா அரசு நாகனும், ராசுவின் தாத்தா பொன்னுக்கோனாரும் தான்).
	“ ‘என்னைப்போல இதே நேரம் அங்கும் ஒருவன் தன் வீட்டை விட்டுப் பிரிந்து பயிற்சிமுகாம் ஒன்றில் பயிற்சி பெற்றுக் கொண்டிருப்பான். அவர்கள் எப்படி இருப்பார்கள்? தங்கள் மக்களையும் மண்ணையும் காக்கும் பெருமைமிக்க படையாக இருப்பார்கள். அவர்கள் அனைவரும் நண்பர்களாக இருப்பார்கள். ஒருவருக்கு ஒருவர் உயிரைவிடும் தோழர்களாக இருப்பார்கள். மாமா சொன்னது சரிதான். புரட்சி என்பது பேறு. அரசப் போர் என்பது வேறு. இரண்டும் ஒன்றில்லை.” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 292)
“‘மனிதனே’ நூலை எழுதியபின் வாக்னருக்குத் தம்முடைய கையெழுத்திட்ட பிரதியை நீட்சே அனுப்பி வைத்தார். அப்போது வாக்னர், நான் இதைப் படிக்காமலிருந்ததற்காக நீ ஒருநாள் நன்றி சொல்லக்கூடும் என்றாராம்.” (நீட்சே - மிகச் சுருக்கமான அறிமுகம் - மைக்கேல் டேனர்: 38)
	நானும் இதைப் படிக்காமலிருந்திருக்கலாம். ‘காரென்பது வெறும் இரும்புதான்’ என அதன் சாரதி, ஒரு கண அறிவிப்பால் யாழ் நகரை விட்டுக் கிளம்பிய சனக்கூட்ட நெரிலில் உணர்ந்து கொள்கிறான். அந்த இரும்பின் கனம் - குற்றவுணர்வின் உதிராத துருவென எப்பொழுதும் உறுத்தும் அதன் சுமை, இப் புதினத்தைக் கீழே வைத்தவுடன் நினைக்கத் தூண்டியது - நான் இதனைப் படிக்காமலே இருந்திருக்கலாம். 
	இப்புதினத்தின் கட்டமைப்பும், கதை மாந்தர்களை முதலில் சிதறல்களாகத் தொடர்பற்றவர்கள் போல் அறிமுகம் செய்து விட்டுப், பின் ஏதோவொரு புள்ளியில், அவர்களனைவரும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களாகக் காட்டிச், சட்டென்று அவர்களைக் கண்ணியில் இலகுவாக இணைக்கும் உத்தி என்பதுவும், பாராட்டத்தக்கது. (உதாரணம் அன்புச் செல்வன் என அவள் அறிந்த, கனிவதனன் என்ற அடையாள அட்டை கொண்ட, வைகையன் என்ற இயக்கப் பெயருடைய பொன்னுக்கோனரின் பேரனும ராசு-பூமகளின் மகனுமாகிய ஆதி இராணுவ எல்லைக்குள் நுழைந்துவிட்டான், வெற்றிகரமாக) உண்மையின், அனுபவத்தின் செழுமையின் மீது புனைவு அழகாகப் படிந்திருக்கும் மேகம் போல இசைவாகப் பொருந்துவதன் வெற்றி இது. அது நாவலாசிரியருக்கு இப்படைப்பில் அதிலாவகமாக கை கூடியிருக்கிறது.
 இலக்கியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதன் நுதல்பொருளாக எப்போதும் இருந்து வருபவன் உலகிலுள்ள சாதாரண மனிதன்தான் என்று கூறினார் சார்த்தர் எனும் ஃப்ரெஞ்ச் தத்துவவாதி.
	நாம் இந்த உலகில் வெறும் பார்வையாளர்களாக இருக்க முடியாது. போர்க்களத்தை விட்டகன்று, மலையுச்சியில் வசதியாக உட்கார்ந்து கொண்டு, யார் உதைக்கிறார்கள், யார் உதைபடுகிறார்கள் எனத் தீர்ப்புக் கூறி, போர் எப்படி முடியப் போகிறது என்பதைப் பற்றிக் கனவு கண்டுகொண்டிருக்கும் உரிமை ஏதும் நம்மில் யாருக்கும் இல்லை. 
இலங்கைப் பெண் கவிஞரின் கவிதை ஒன்று,
	"எங்கும் போர், பஞ்சம், குடிகளப் பெருக்கம், இடப் பெயர்வு
	பசி, பட்டினி, கற்பழிப்பு, மரணம் -
	இந்நிலையில் தோழியின் திருமணம் -
	எதைப் பரிசாகத் தர?
	புத்தகத்தையா, பாவனைப் பொருட்களையா,வாசனைத் திரவியத்தையா? 
	எதைத் தருவேன் -
	கர்ப்பத்தடை மாத்திரைகளைத் தவிர? "
	இந்தத் துயரத்தில் நாம் பங்கு பெற்றாக வேண்டும். இன்னும் சொல்லப் போனால், இந்த உலகில், சிறப்புரிமை பெற்ற பார்வையாளன் எவனும் இல்லை. வாழ்க்கை ஒவ்வொரு கணமும் பல புதிரான கேள்விகளுக்குள் நம்மை இழுக்கின்றது.
	மிக முக்கியமான சில கேள்விகளை இப் புதினம் தமிழக மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியர்களுக்கு மட்டுமல்ல, உலக மக்களுக்கு முன்வைக்கின்றது -
	“ ‘போரை எதிர்த்தவனின் மார்க்கம் (புத்தனின் மாக்கம்) எப்படிப் போர்செய்யத் தூண்டுகிறது? போரை எதிர்க்கும் மார்க்கத்துக்காகப் போரா? அது என்ன தர்மம்? மும்மணிகளுக்குள் அடங்காத தர்மம் இது. கொல்லாமையை போதிக்கும் மார்க்கத்தைக் காக்கக் கொல்வதே தர்மமா? தமிழர்கள் மார்க்கத்தை எங்கே அச்சுறுத்தினார்கள்? அதன்மீது எங்கே போர் தொடுத்தார்கள்?’ “ (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 307)
	“தமிழர்களுடன் நீ ஏன் போரிட வேண்டும். அவர்களை நீ ஏன் தேடிப்போய்க் கொல்லவேண்டும்? அவங்கள் உன் நிலத்தைக் கேட்டார்களா, உன் மதத்தைக் கேட்டார்களா. உன் சொத்தைக் கேட்டார்களா, உன் எதைத்தான் அவர்கள் கேட்டார்கள்? எதுக்கு அவர்களின் நிலத்தில் போய் யுத்தம்செய்து கொல்ல விரும்புகிறாய்?”
நிறைவாக அந்த இராணுவவீரன் உணர்கிறான் -
“இது வளவுக்காரர்களின் வஞ்சகம் என்று! எஜமானர்கள் அடிமைகளை வைத்துப் போர் செய்யத்தான் விரும்புவார்கள் என்று அவர் சொன்ன சொல்லின் பொருளை உணரமுடிகிறதிப்போது.” (கர்ப்பநிலம் - குணா கவியழகன்: 309) என்கிறான்!
 
Conclusion:
	“ஜோஹான் ஃபிச்டே (Johann Fichte - 1762-1814) மகா அலெக்ஸான்டர் (Alecander the Great) பற்றி எழுதிய ஒரு வாசகம் மறக்க முடியாதது:
அவனுடைய வழிநெடுக மடிந்துவிழுந்த ஆயிரக்கணக்கானவர்களைப் பற்றியோ, அதற்கடுத்து நிகழ்ந்த அவனது இளவயது மரணத்தைப் பற்றியோ என்னிடம் கூறாதீர்கள். அவனது லட்சியம் ஈடேறிவிட்டபின் அவனுக்குச் சாவதைத் தவிர உயர்ந்ததாகச் செய்வதற்கு என்ன உள்ளது?” (வரலாறு - மிகச் சுருக்கமான அறிமுகம் - ஜான் எச்.அர்னால்டு: 23)
நம் லட்சியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். ஆனால் அந்த தியாகத்தை விட உயர்ந்ததாகச் செய்வதற்கு என்ன உள்ளது? உலகத்தின் எந்த தலைவராலும் ஈடு செய்ய முடியாத இணையற்ற அறமும், தர்மமுமான நிலைப்பாடு அந்த மகாமனிதனுடையது! தேசியத் தலைவரெனும் அச்சொல் நம் யுகப் பெருமை அல்லவா?
“1934இல் யூகோஸ்லாவிய அரசன் அலெக்சாண்டரைக் கொல்ல முயற்சி நடந்தது. அதன் எதிர்வினையாகத்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு சர்வதேச அமைப்பை உருவாக்கும் முதல் முயற்சி எடுக்கப்பட்டது. அதன் நோக்கத்தைக் குறித்து ஒரு பிரிட்டிஷ் அதிகாரி சொன்னார் - ‘அரசியல் நோக்கங்களுக்காக வன்முறையைப் பயன்படுத்தும் முறைகளை நாகரிகக் கருத்துகள் யாவும் கண்டிக்க வேண்டும்.’ ஆனால் நாகரிகத்தைத் தீர்மானித்து செயல்படுத்தும் நீதிபதிகள் யார்? 
எல்லாக் காலங்களிலும் எல்லா அரசுகளும் பண்பான முறையில் நடந்துகொண்டால் அப்படிப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்க முயலும் எவரும் பொதுமக்களின் எதிரியாகக் கருதப்பட வேண்டும். ஆனால் அரசாங்கமே பயங்கரவாதமுறையில் செயல்படும்போது அதனைக் கவிழ்க்கத் தனக்குக் கிடைக்கும் ஒரே ஆயுதத்தினால் போராடுகின்ற ஒருவனை அப்படிக் கருத முடியாது.
ஒருவனுக்குப் பயங்கரவாதி, இன்னொரு பெண்ணுக்குச் சுதந்திரப் போராட்ட வீரன்.” (பயங்கரவாதம் - மிகச் சுருக்கமான அறிமுகம் - சார்லஸ் டவுன்ஷென்ட்: 28)
எனக்கு தேசியத் தலைவர் ஒரு யுக புருஷர்!
	“A History Lesson என்ற கவிதையில், ராஜ்ஜியங்களின் பெருமிதமான விவரணைகள், போர்கள், மரண தண்டனைகள் ஆகியவற்றின் விளக்கங்களுக்குப் பிறகு ஒரு குழந்தை கேட்கிறது:
“அந்தக் காலத்திலும் கூட வலித்திருக்குமா?” (சமகால உலகக் கவிதை - பிரம்மராஜன்: 146)
எளிதில் கடக்க முடியாத அந்தக் குழந்தையின் கேள்வி இன்னமும் இருக்கிறது நம் அனைவரின் முன்பும்! பதில் தெரியுமென எண்ணிக் கொண்டிருப்பவாகள் முதல் கல்லை எறியலாம்! என்றுமே அப்பதிலை அறிய முடியாது என ஒப்புக் கொள்ளும் நான் இந்தக் ‘கர்ப்பநிலத்தின்’ முன் மண்டி இடுகிறேன் - குற்றவுணர்வின் எச்சிலும், சீழும் கமறுகின்ற முதுகுடன்!





உதவிய நூல்கள்:

1.	சமகால உலகக் கவிதை - பிரம்மராஜன்
2.	பாசிசம் - மிகச் சுருக்கமான அறிமுகம் - கெவின் பாஸ்மோர்
3.	சமூகவியல் - மிகச் சருக்கமான அறிமுகம் - ஸ்டீவ் புரூஸ்
4.	அரசியல் - மிகச் சுருக்கமான அறிமுகம் - கென்னத் மினோக்
5.	வரலாறு - மிகச் சுருக்கமான அறிமுகம் - ஜான் எச்.அர்னால்டு
6.	இலக்கியக் கோட்பாடு - மிகச் சுருக்கமான அறிமுகம் - ஜானதன் கல்லர்
7.	புத்தர் - மிகச் சுருக்கமான அறிமுகம் - மைக்கேல் கேரிதர்ஸ்
8.	பயங்கரவாதம் - மிகச் சுருக்கமான அறிமுகம் - சார்லஸ் டவுன்ஷென்ட்
9.	நீட்சே - மிகச் சுருக்கமான அறிமுகம் - மைக்கேல் டேனர்

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *