குழந்தைகள் தின விழா பேச்சு - 14.11.2014 இராஜபாளையம் இவர்களது எழுதுகோலுக்குள் இருப்பது எழுதுகின்ற மையா பிறர்தம் ஊன் இல்லை உயிர்ச் சுடரை உருக்குகின்ற நெய்யா இவர்கிளருக்கின்ற மேடையிலே நானும் இருக்கின்றேன் என்பதென்ன மெய்யா? என என்னை வியக்க வைக்கின்ற விழாவினைக் சிறப்பிக்க வந்திருக்கின்ற மூத்த தமிழறிஞர் Dr அவ்வை நடராஜன் அவர்களே மதிப்பிற்குரிய திரு.குமாரசாமி I.P.S அவர்களே என் இனிய குடும்ப நண்பர் திரு. சந்திரசேகரன் I.A.S அவர்களே விழாவின் சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் திரு. பிரபாகர் I.A.S அவர்களே ஆரோக்யமான ஒரு குழந்தையை விட்டுச் செல்வதன் மூலமோ, அழகான ஒரு சிறிய தோட்டத்தை உருவாக்குவதன் மூலமோ, ஒரு ஏழைக்கு எழுத்தறிவிப்பதன் மூலமோ நீங்கள் இந்த உலகத்தை முன்பிருந்ததைவிட மேலும் அழகானதாக விடுகிறீர்கள் என்று சொல்வதற்கிணங்க, ஒரு சிறந்த பள்ளியை உருவாக்கித் தனது கல்விப் பணியின் மூலம் இந்த உலகத்தை மென்மேலும் அழகாக்கிவிட்ட, மீனாட்சி Matriculation பள்ளியின் நிறுவனர், நண்பர் திரு.சந்திரசேகரன் அவர்களே, ஒரு பெரிய ரோஜா ஆரத்தைத் தொடுத்தது போன்று என் முன் அமர்ந்திருக்கின்ற பள்ளிக் குழந்தைகளே... அந்த ஆரத்தை ஆர்வமுடன் தொடுத்திருக்கின்ற ஆசிரியப் பெருமக்களே... இந்த அற்புதமான ரோஜாக்களைச் சூழற்றுப் பேணி வளர்த்து, அவற்றை இந்த மண்ணில் அர்ப்பணித்துச், செழுமைப் படுத்தித், அதன் மூலம் தம்மையும் மலரச் செய்து கொண்ட பெற்றோர்களே... உங்களனைவருக்கும் என் இனிய மாலை வணக்கம். பிள்ளைப் பிராயத்திலே தன் பிஞ்சுக் கைகளுக்குப் பிடிபடாத அந்த அழகு நிலாவிலேயே பின்னொரு நாளில் காலடி பதித்த ஆம்ஸ்ட்ராங்கின் அற்புதமான மனோநிலையில் உங்கள் முன் நிற்கிறேன் நான். ஆம்... நீச்சலடித்துக் கொண்டே முத்துக் குளிக்கின்ற திறமையுள்ள பூரண சந்திரர்கள் பலர் நிறைந்திருக்கும் இம் மேடையில், நீச்சலே தெரியாத, இன்னும் பிறை நிலாவாகக் கூட அறிமுகமாகாத என்னைப் பேச அழைத்திருப்பது – 10 மனிதர்களுடைய கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கிறது என்பதால் இருக்கலாம். கிடைத்த வாய்ப்பினை எண்ணி ஆனந்தமும், அதனை அடியொட்டி சிறு பயமும் எழுகின்றது என்றாலும், கூரையின் விளிம்பில் புறாக்கள்... பெருவெளியில் எவ்வளவு குறைந்த இடத்தைப் பிடித்துக் கொண்டு எவ்வளவு பெரிய அழகை ஏற்படுத்துகின்றன, என்று சொன்ன எழுத்தாளர் சுந்தரராமசாமியின் வாக்கியத்தை நினைத்துப் பார்த்து, சின்னஞ் சிறிய புறாவாய் என் சிறு உரையைத் தொடங்குகிறேன். எளிய மனம் படைத்தவர்கள், கபடம் இல்லாமல் நெஞ்சைத் தருகிறவர்கள் குழந்தைகள். அவர்களைப் பற்றி ஒரு கவிஞர், "வர்ணக் கனாக்களின் வாரிசு நீ அர்த்தம் தெரியாமலே நேசிக்கப்படும் ஒரு தேசியமொழி உனது மழலை மட்டுமே விளைந்து வெளிந்த பிறகும் சிப்பியைக் கெளரவப்படுத்தும் ஒரு வித்யாச முத்து நீ! விஞ்ஞானம் உன்னை விதையன்கிறது கலையோ உன்னை மலரென்கின்றது! என்று அழகாகச் சொல்லுகிறார். ஒரு தேசத்தின் எதிர்காலமே தன் குழந்தைகளை அது எவ்வாறு நடத்துகிறது என்பதில் தான் இருக்கிறது எனும் பெருமையைப் பெற்றவர் நீங்கள். உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த பள்ளி வாழ்க்கையில் நீங்கள் உங்கள் புலன்களைக் கூர்மையாக்கக் சற்றுக் கொள்ள வேண்டும். அதன்பின் இந்த உலகத்தை உற்று நோக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் அப்படி உற்றுக் கவனித்து நோக்கினால், நீங்கள் பூமியிடமிருந்து பொறுமையைக் கற்றுக் கொள்ளலாம் காற்றிடமிருந்து அனைவரையும் சமமாக மதிக்கக் கற்றுக் கொள்ளலாம் ஆகாயத்திடமிருந்து நிர்மலமான மனதுடன் இருக்கக் கற்றுக் கொள்ளலாம் தண்ணீரிடமிருந்து பிறருக்குச் சேவை செய்யக் கற்றுக் கொள்ளலாம் சூரியனிடமிருந்து கடமையுணர்வைக் கற்றுக் கொள்ளலாம் சந்திரனிடமிருந்து பிறரை மகிழ்விக்கக் கற்றுக் கொள்ளலாம் கடலிடமிருந்து முயற்சியைக் கற்றுக் கொள்ளலாம் அனைத்தையும் கற்றுக் கொண்ட பின்னர் அரும்பாடுபட்டு வளர்த்த பெற்றோரையும், அரவனைத்திருந்த ஆசிரியர்களையும் மறக்காதிருக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். சத்யமோகன் என்கிற கவிஞரின் போய்ச் சேராக் கடிதம் என்கின்ற கவிதையைக் கேளுங்கள்... ப்ரிய அம்மா... நீ ஆசையாய்க் கொல்லையில் நட்டு வைத்த செடி என் வீட்டில் பூ விட்டுள்ளது நீ முடிச்சிட்டுக் கொடுத்த துணைவியும் நலமே நீ நீர்பாய்ச்சி 29 வருடம் காத்த பி.ஈ படித்து வேர்விட்ட நானும் நல்ல சுகம் நீ எவ்விடத்தில் சுகமற்று நலம் தேய்ந்து படர வழியற்று எம் மனவெளியில் திரிகிறாயோ இவ்வறுபது வயதில்? தந்தையைக் கவனிக்க முடியாத ஒரு மகனின் ஏக்கத்தைப் படிக்கையில் நம் பெற்றோரை நாம் நன்கு கவனித்துக் கொள்ளவும் கற்றுக் கொள்ள வேண்டும். காரைத் தரையில் என் குழந்தையின் தளிர் நடை ஒவ்வொரு அடிக்கும் சிராய்ப்பு மனதில் எனக் குழந்தைகளைப் போற்றி வளர்க்கின்ற பெற்றோரும் குழந்தைகள் அவர்களுக்காகவே இருக்கின்ற பெற்றோரைவிட அவர்களுடன் இருக்கின்ற பெற்றோரையே அதிகம் நேசிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளல் வேண்டும். கண்டிப்பும், பயமும் குழந்தைகளின் சுதந்திர உணர்வைப் பாதித்துவிடக் கூடாது. கண்டித்தே வளர்க்கப்பட்ட குழந்தைகள் எவ்வாறு sterio - typed children ஆகிவிடுகிறார்கள் என்பதற்கு ஒரு சின்ன உதாரணமாக இதனைச் சொல்லலாம். Tom Story – அதே போல் பயமுறுத்தியே வளர்க்கப்பட்ட குழந்தை பின்னாளில் இப்படி ஒரு கவிதை எழுதலாம் – "எப்பொழுது சென்றாலும் கடல் நீரில் குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் சென்றதேயில்லை. அலைகளிடம் பயமில்லை... பயம் - அப்பாவிடம்தான்" அதோடு, பெற்றோரும் எவ்வாறு இன்றைய உலகில் குழந்தை வளர்ப்பு கடினமானதோ, அதை விட மிகக் கடினமானது இன்றைய உலகில் குழந்தையாக இருப்பதுவும் தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்ததாக... இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல் எனக் கண்டறிகின்ற ஆசிரியர்கள். பெரும்பாலான இன்றைய குழந்தைகள் புத்திசாலிகளாகவே இருக்கிறார்கள். ஒரு சின்னக் கதை நினைவிற்கு வருகின்றது. அம்மாவும், குழந்தையும் - மிட்டாய்க் கடையும். எனவே அவர்களின் மனவோட்டமறிந்து, இந்தியச் சரித்திரத்தைப் பிரம்பசைவால் முதுகு வழியாகச் செலுத்த முடியாது. என்பதையும் உணர்ந்து கற்றுக் கொடுங்கள். கடுமையான சட்ட திட்டங்களுடான கண்டிப்பை எதிர் கொள்கின்ற குழந்தைகள் ஒரு கவிஞன் கேட்டது போல்... "வேலிக்கு வெளியே தலையை நீட்டிய என் கிளைகளை வெட்டிய தோட்டக்காரரே வேலிக்கு அடியில் நழுவும் என் வேர்களை என்ன செய்வீர்கள்?" எனக் கேட்கலாம். ஏனெனில் ஒவ்வொரு குழந்தையின் வேர்களும் வித்யாசமானவை. இப்படித்தான் ஒரு முறை ஒரு ஓவிய வகுப்பு ஆசிரியர் வகுப்பில் மரத்தின் படத்தினை வரைந்து அனைவரையும் வரையுமாறு கூறினார். Story... அதே மாதிரி ஒரு குழந்தை தின்பண்டத்தைப் பார்க்கும்போது, வாய்ப்பேச்சல்ல, கண்கள் சொல்வது அல்லவா முக்கியம். அந்தக் கண்களின் பேச்சை ஆசிரியர்கள் அறிந்து கொண்டு அவர்களுக்குச் சிகரத்தில் பனியாக இருப்பது முக்கியமல்ல சமவெளியில் நதியாக நடந்து வருவது முக்கியம் என்பதைக் கற்றுத் தர வேண்டும். Tell me... I will forget Show me... I may remember Involve me... I shall understand என்றொரு அருமையான சீனப் பழமொழி உண்டு. ஈடுபடச் செய்தலின் மூலமே, புரியவைக்க முடியும் என்ற உண்மையைப் பெற்றோரும், ஆசிரியர்களும் உணர்ந்து கொண்டால், உறவுகளில் நேர்மை; உண்மை மீது மதிப்பு; பொது நன்மை சார்ந்த சில சுய நியதிகளைக் கடைப்பிடித்தல் முதலிய உன்னத குணங்களை குழந்தைகளிடம் உருவாக்கலாம். அதன்பின் இந்த உலகமே உன்னதமாகிவிடும்தானே? அத்தகைய அதிசயத்தை நிகழ்த்துகின்ற ஆற்றல், ஆசிரியர்களே... உங்கள் கைகளுக்குத்தான் இருக்கிறது. "இந்தக் கை ஒரு நெம்புகோலை அழுத்தும் பொழுது வலிமை கொள்ளும் ஒரு பிச்சைக்காரனை அலட்ச்சியப் படுத்துகையில் நாணம் கொள்ளும். உள்ளங்கையில் நீர் ஊற்றிப் பாருங்க்ள உலகையே தலைகீழாகப் பார்க்கலாம். இந்தக் கை ஒரு ஆப்பிளை எவ்வளவு அற்புதமாக ஏந்துகிறது... அதனால், ஆசிரியர்களே... அந்தக் கரங்களால் ஒரு ஒப்பற்ற மாணவச் சமுதாயத்தை உருவாக்குங்கள்.
No comment