பிளவுபட்ட நிலையின் பெருந்துயரும், பின்காலனிய இருப்பின் தொல்குரலும் கலந்திசைக்கும் சாம்பல் பறவையின் அகவல். - தமிழச்சி தங்கபாண்டியன் "பறவைகளின் மொழி எழுத்துக்களில் அடங்குவதில்லை பறவைகளை அவதானிக்கும் போது கால நெருடல்கள் இல்லை நமக்கு திருப்பியும் தருகிறது கொஞ்ச நேரமேனும் நம்மை." தம்பி உதயா ஒரு பறவைதான். முகநூலில் அவனது முகம்தெரியாமல், கவிதை முகம் கொண்டே நான் அவனை அறிந்தேன், அணுகினேன். என்னுடைய முகநூலில் உள் பெட்டியில் நானாகச் சென்று உரையாடுகின்ற நெருக்கமான நண்பர்கள், தோழிகள் ஒரு ஐந்தாறு பேர் மட்டுமே இருப்பார்கள். மற்றபடி வரும் பகிர்தலுக்கு நன்றி கூறுதலோ அல்லது சம்பிரதாயமான பதில் கூறுதலோ மட்டுமே அடங்கியது எனது உள்பெட்டி. விதிவிலக்காக, க.உதயகுமார் என்கிற உதயாவிற்கு அவனது கவிதைகளைப் படித்துவிட்டு என் உணர்வுகளை நானே சென்று அவனது உள்பெட்டியில் பதிந்தேன். அது அவனது கவிதைகள் செய்த மாயமன்றி, உதயா என்கின்ற இந்த மனிதனின் அன்போ, குழந்தை மனமோ, நிபந்தனையற்ற ப்ரியமோ செய்த நிகழ்வல்ல. கவிதை மட்டுமே அதன் துவக்கப் புள்ளி, அன்று தொடங்கியது தான் ஒரு அழகான, நிறைவான சகோதரப் ப்ரியமிக்க இவ்வுறவு. அவனது கவிதைகள் தொகுப்பாக வெளிவரவேண்டுமென மிக ஆசைப்பட்டவள் நான். அது நிறைவேறுகையில் நிச்சயம் நானிருப்பேன் என உறுதியளித்தேன். மிக மகிழ்வோடும், ததும்புகின்ற நிறைவோடும் இதோ இங்கு நிற்கின்றேன். அச்சுவடிவப் புத்தகத்தை இன்னும் பிரித்து முழுதாகப் பார்க்கவில்லை - "என் கையில் இருந்த பரிசைப் பிரிக்கவில்லை - பிரித்தால் மகிழ்ச்சி அவிழ்நதுவிடும் போலிருக்கிறது. என் அருகிலிருந்தவர் அவசரமாய் அவரது பரிசைப் பிரித்தார். பிரிக்காமல் மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்?" என்பது போல் இருக்கிறது என் இக்கணத்து மனோநிலை. என்னுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ள தோழன் யவனிகா தத்துவம் குறித்து நெருப்பை நக்குதல் எனும் கவிதையில் பின்வருமாறு எழுதியிருப்பார் : "தத்துவத்தின் மூலையிலிருந்து ஒரு துண்டை நறுக்கி ஆலிவ் ஆயிலில் வறுப்பது அதை மொறுமொறுக்கச் செய்கிறது கருந்துளையிலிருந்து புறப்பொருளாகவும் கடலிலிருந்து உப்பாகவும் பழத்திலிருந்து விதையாகவும் சூலகத்திலிருந்து உயிராகவும் தத்துவத்தை அடையாளம் காட்டியவர்களை நானூறு வருடம் வாழும் ஆமைகள் என்றும் சொல்லலாம் பிறகு தத்துவத்தை தொட்டிச்செடியில் வளர்ப்பது எப்படி என்று ஒரு பத்தகமே இருக்கிறது அதைவிட தத்துவத்தில் ஒரு சொட்டுத் தேன் கலந்து அதிகாலையில் குடித்து வந்தால் உடல் மெலியலாம் மற்றபடி தத்துவத்தின் நாக்கோ பேராசை கொண்டது" (திருடர்களின் சந்தை - யவனிகா ஸ்ரீராம்) தத்துவத்தினைப் பகடி செய்யும் அபாரமான கவிஞனைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, ஒரு கவிதைப் புத்தக விமர்சனத்தைத் தத்துவத்தின் துணை கொண்டு துவங்குவது சிரமம்தான். அது மட்டுமா? "உதாரணத்திற்கும் பிறந்தவர்களால் நிறையும் பூமியில் ஒரே ஒரு வாய்ப்புத்தான் மிச்சமிருக்கிறது" (திருடர்களின் சந்தை - யவனிகா ஸ்ரீராம்) என்று வேறு கிண்டலாக எழுதியிருக்கிறார். அன்புத் தோழா, கோட்பாடு உதாரணங்களை ஒத்துழைக்க அழைப்பதற்கு அச்சம்தான் உன் பகடியின் முன். ஆனால் அதற்கான தேவை மற்றெல்லா புத்தகங்களையும் விட க.உதயகுமாரின் கூதிர்காலத்தின் துயரப்பாடல் தொகுப்பிற்கு மிக அவசியமாகின்றது. ஏனென்றால், "செத்த மரங்களிடையே பூக்களைத் தேடுகின்ற" நம் மரங்கொத்தி விமர்சகர்கள், ஒரு கழுகுப் பார்வையில் இக் கவிதைகளை Sheer Nostalgic Poems, வெற்றுப் புலம்பல்கள், புனைவியல் (Romantic Poems) என்று முத்திரையிட்டுப் புறம்தள்ளிக் கடந்து விடுவார்கள். ஆனால் இவை அவை மட்டுமல்ல - கவிதைகள் தாம் என்று சொல்ல நான் தத்துவவாதிகளையும், கோட்பாட்டாளர்களையுமே துணைக்கழைக்க வேண்டியுள்ளது. அன்பின் பொருட்டு ஒரு கவிதை நூலை வெளியிடலாமே தவிர, அன்பின் நிமித்தம் அவற்றைத் திறனாய்வு செய்ய முடியாதல்லவா? ஒரு சிறந்த பொருத்தப்பாடாகவும், அதேபோழ்து வியப்பான முரணாகவும் யவனிகா இந்த இளங்கவிஞனைப் பற்றி இங்கு பேசுவது அமைந்துள்ளது. (யவனியும் என்னைப் பொருத்தவரை என்றும் இளங்கவிஞன் தான் - காதலின் பரம ரசிகனவர் - "அதிகாலையில் விரிந்த ஒரு மலரை அப்படிப் பார்க்கிறோம், கடவுளின் முகந்தான் எனினும் அதுவே காதலின் நம்பிக்கை" என்றெழுதியவன் என்றும் இளைஞன்தானே!) "அழகியல் லயிப்பு, சிலாகிப்பு, போதம், இடம், காலம் போன்ற ரிலேட்டிவிட்டி தியரி யாவும் பியூடல் சார்ந்த நவீனத்துவ விமர்சனப் போக்குதான். அவை கவிதைகளுக்கு நீண்ட ஆயுளைக்கோரி நிற்கின்றன. ஒருவித லட்சியவாதம் மிகுந்த இவற்றிலிருந்து சந்தேகத்துடன் எனது கவிதைகள் விலகி ரொமானடிசிஸத்தைக் கேள்விக்குட்படுத்துகின்றன" (திருடர்களின் சந்தை - யவனிகா ஸ்ரீராம்) என்பவர் என் தோழர் யவனிகா. ஆனால், உதயாவின் கவிதைகள் பலவும் புனைவியல் (Romantic Poetry) வகைமை சார்ந்தவை. இது முரண் என்றால், பொருத்தப்பாடும் உண்டு. யவனிகாவிற்கும், உதயாவிற்கும் இருவரது வாழ்நிலத்திற்கு வெளியேதான் தொழிலும், பயணங்களும். அதன் அனுபவங்களை இருவரும் கவிதை எனும் ஊடகத்தினூடாக வடித்துத் தருகையில் "மொழி, உள்ளடக்கம், தீவிரத்தன்மை" எனக் கவிதை அரசியினைக் கட்டி ஆள்வதில் பெரும் வெற்றி பெற்றவர் முன்னவர் - பின்னவரோ அரசியிடம் சரணாகதி அடைந்து மழலையில் மிழற்றத் துவங்கியிருப்பவர். இருந்தாலும் இருவருக்குமான இணைப்பு இழை - தொன்மம், வனவாசி, ஆதிக்குடி, விவசாயி, பறவை, நிலம் - இவை குறித்த பதிவுகள். முன்னவரிடத்தில் மேற்சொன்னவை தெளிவான பின்காலனிய அரசியலாக, அபாரமான கருணைக் கசிவாக, அடிவயிற்றின் தீராப் பசியாகக், கோபமுற்று உரிமை கோரும் தீக்குரலாக, சமரசமற்ற நிறுவன எதிர்ப்பாக, உலகவர்த்தகச் சந்தை எனும் காட்டெருமையை எதிர்ககின்ற தீரமிக்க கேலியாத்தாக வெளிப்பாடுகையில், உதயாவின் கவிதையில் அவை தீவிரமான இயங்குதளம், இறுக்கம், படிம வெளிப்பாடுகள் எனச் செப்பமாக வெளிப்படவில்லை - எனினும் மேற்சொன்னவை குறித்த ஆதங்கம், அடையாளத் தேடல், நிலம் குறித்த அக்கறையான பெருமிதம் என அவை தெறிக்கப்பட்டுள்ளன. சுருங்கக் கூறினால், இருவருமே இந்த மூன்றாம் உலகின் பின்காலனிய பிரஜையின் குரலைக் கொண்டவர்கள். யவனிகா அதனை வரலாறாக, தத்துவமாக, தனக்கானக் கவி மரபாக, பெருங்கதையாடல்களை, நிறுவனங்களை உடைக்கின்ற ஆதிக்கனவொன்றினை, விவசாயத் தொன்மத்தினை, நவீனத்துவத்தின் மொழி வீச்சின் ஆளுமையோடு முன்வைத்து வெற்றி கண்டவர். உதயாவோ அதன் உணர்வு, பிரக்ஞை, தொப்பூள் கொடி பகிர்வு என்கிற ஆரம்பகால உணர்ச்சி நிலைக் கொந்தளிப்பில் கவிதை படைப்பவன். ஆனால் இருவருக்குமான ஊடுபாவு பிணைப்புச் சரடு பின்காலனியத்தின், எதிர்ப்புக் குரல் இலக்கியமே - In the genere of Resistance Literature. உதயாவின் கவிதைகளுக்கு நான் இரண்டு வகையான வாசிப்புக் கோரல்களை முன்வைக்கின்றேன். ஒன்று : தற்கொலை, கழிவிரக்கம், ஒப்புக்கொள்ளல், ஒப்புக்கொடுத்தல், புலம்பல், சுயவிளக்கம், சரணாகதி, தன் தனிமைக்கு புறத்தைக் குற்றங்கூறல் - என, மேம்போக்கான மொழிநடையில், அனைத்தும் தனி ஒருவனது சம்பவக் கோர்வையில், முன்வைக்கப்படுகின்ற தன் உணர்ச்சிக் கவிதைகள் & விவரணைக் கவிதைகள். இவைபோன்ற கவிதைகள் இன்று பல இளைஞர்கள், யுவதிகளால் இதே போல் எழுதப்படுகின்றன - அவர்தம் 21ம் வாழ் சூழல் சார்ந்தது. எழுதியர்களது பெயர்களை எடுத்துவிட்டாலும், இந்த வகைக் கவிதைகளனைத்தும் ஒருவரே எழுதியது போன்ற நடை, கரு, மொழியமைப்பு உடையவை. இரண்டாவது : அற்புதமான மொழிக் கட்டமைப்பு, ஆழ்ந்த பார்வை, மரபின் அச்சிலே இன்றின் புதுமைக் கரு என வெளிப்பட்டிருக்கின்ற, சங்கப்பாடல் சாயல் சுமக்கின்ற, நிலம், இனம், மொழி குறித்த சற்றே பெருமிதத்தோடு கூடிய, நவீனத்துவக் காலத்தின் மீது நம்பிக்கையிழந்த ஆதித் தொல்குடியின் அழுகுரல், காதல் குரல், உரிமைக்குரல் - இவற்றைக் கொண்ட சுத்த சுயம்புக் கவிதைகள். இதன் மொழி தனித்துவமானது. இதுவே உதயாவை அவரது சமாகலப் பிற கவிஞர்களிடமிருந்து வேறுபடுத்துவது. இக்கவிதைகளில் சொல்லணி வகைகள் (Rhetorical fiures) என்று சொல்லப்படுகின்ற கவிதை உத்தி கைவந்திருக்கிறது உதயாவிற்கு - அவரறியாமலே. "கவிதைகள் புலம் பெயர்வதில்லை. அவை எந்த நிலத்திற்குரியனவோ அங்கேயே காலூன்றி விடுகின்றன. அவை நிலம், தேசம் தேடும் மரபு கொண்டவை" என்பதை அச்சொட்டாக நிரூபிப்பவை உதயாவின் இரண்டாவது வகைக் கவிதைகள். சாம்பல் குருவி, மஞ்சள் மலர்கள், வலி, வாதை, நோய்மை, எரிக், கிளாரா, தனிமை, - இவை நிரம்பிய உதயாவின் முதல்வகைக் கவிதைகளும் இலக்கியக் கோட்பாட்டின் வழி ஒரு வகையான மேம்போக்குக் கவிதைகள் தாம் - அவற்றைப் புரிந்து கொள்வேன், ரசிப்பேன், பகிர்ந்து கொள்வேன். ஆனால் - யாழ், பாணன், பசலைத் தலைவன், நெய்தல், நம் நிலத்திணைகள், காளி, சிவன், கொற்றவை, கரிகாலன், பனைமரங்கள், பாலை மணல் - இவை நிரம்பிய உதயாவின் இரண்டாவது வகைக் கவிதைகளை ஆரத் தழுவிக் கொள்வேன். ஆசை தீர உண்டு மகிழ்வேன். சிறந்த கவிதைகளென உச்சி முகர்வேன். அவையே உதயாவின் கவி ஆளுமையின் அடையாளம் என்பேன். சுத்த சுயம்புவான நீண்ட கவி மரபின் ஒரு கண்ணித் தொடர்ச்சியான, பின்காலனியப் பிரஜையான இளைஞனொருவனின் குரல் கவித்துவமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்ற கவிதைகள் இரண்டாம் வகை சார்ந்தவை. அனைத்து விதமான ஏகாதிபத்தியங்களுக்கும், நிறுவனங்களுக்கும், கட்டமைக்கப்பட்ட சட்டகங்களுக்குமெதிராகத் தன் மரபை, ஆதித் தொல் குடியின் கனவை, நிலத்தின் மீதான உரிமைப் பிடிப்பை, காதலை, பசலையைப், பிரிவைத், தமிழின் கவி வீச்சோடு முன்வைக்கின்றவை அவரது இவ் வகைக் கவிதைகளே. "கவிதையில் சொற் சுருக்கம், நுட்பம், அழகியல், தொலைவு, ஒருங்கிணைந்த பார்வை வேண்டும்தான். ஆனால் அறவியல் தெளிவு, உண்மை, தன்னறிவு, முதிந்த அனுபவம் ஆகியவே முக்கியம்" என்பார்கள். அதனை வலியுறுத்துபவை, ஒரு அறிவியல் தெளிவை தம்மில் கொண்டவை, உதயாவின் இவ்வகைக் கவிதைகள். ஆகவே அவைதாம் தொகுப்பின் சிறந்த கவிதைகளாகவும் என்னை ஆகர்சித்துக் கொண்டவை. "தன்னுணர்ச்சிக் கவிதை உண்மையில் கேட்பராக இல்லாத ஒன்றை (காற்று, புலி அல்லது இதயத்தை) பார்த்துப் பேசுவதற்காகப் பேச்சின் வழக்கமான பாதையிலிருந்து விலகியோ அல்லது சொல்லணிகளைப் பிரயோகப்படுத்தியோ செல்கிறது. இவ்வாறு செல்வது அவரைத் தீடீரென்று பேசத் தொடங்க வழிவகுத்த வலுவான உணர்ச்சியைக் குறிப்பதாகச் சில சமயங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த உணர்ச்சியின் தீவிரம், குறிப்பாக விளித்துப் பேசுதல் அல்லது வேண்டுதல் என்ற செயலலோடு தன்னை இணைத்துக்கொள்கிறது. இந்தச் செயல் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையை விரும்புகிறது. மேலும் இது பேசுபவரின் ஆசைக்கு ஏற்பத் தங்களை வளைத்துக் கொள்ளுமாறு உயிரற்ற பொருட்களை வேண்டுதல், கோருவதன் முலம் அந்தச் சூழ்நிலையை உண்டாக்க முயல்கின்றது. 'ஓ ஓர் அலையன, ஓர் இலையென, ஒரு முகிலென என்னைத் தூக்கேன் (O lift me as a wave, a leaf, a cloud)' (An Ode to Westwind) என்று ஷெல்லியின் கவிதையில் பேசுபவர் மேற்காற்றை வற்புறுத்துகிறார். பிரபஞ்சம் தாங்கள் சொல்வதைக் கேட்கவும் அதற்கேற்ப நடக்கவும் செய்யும் என்ற மிகையான கோரிக்கை என்ற அடி எடுத்துவைப்பதன் மூலம் கவிதையில் பேசுபவர்கள் தங்களை விழுமிய நிலைக் கவிஞர்களாக அல்லது மயாக்காட்சி காண்பவர்களாக உருவமைத்துக் கொள்கிறார்கள். அல்லது அவர்கள் ஒரு தீர்க்க தரிசியாக, அதாவது, இயற்கையைப் பார்த்துப் பேச முடிகிற, இயற்கையும் அதற்கான எதிர்வினையாற்றக்கூடிய எவரோ ஒருவராக உருவமைத்துக் கொள்கிறார்கள். வேண்டுதலில் வரும் 'ஓ' கவிதைத் தொழிலின் ஒரு சொல்லணி; அதன் மூலம் கவிதையில் பேசுகின்ற குரல் கவிதையைப் பேசும் வெறும் குரலாக அன்றி கவிதை மரபு மற்றும் கவிதை ஆன்மாவின் பண்புரவாகத் தன்னை நிலை நாட்டிக் கொள்கிறது. காற்றை வீசச் சொல்வதும் அல்லது உங்கள் புலம்பலை இன்னும் பிறக்காதது கேட்கக் கோருவதும் கவிதைச் சடங்கு தொடர்பான ஒரு செயலாகும். காற்றும் வருவதில்லை, பிறக்காததும் கேட்பதில்லை என்பதனால் அது சடங்கு ரீதியானது. குரல், அழைப்பு விடுவதற்காகவே இருக்கிறது. அது குரலை நாடக மயமாக்கவே அழைக்கிறது. அது வதைக் குரலாகவும் தீர்க்கத் தரிசனக் குரலாகவும் தன்னுடைய அடையாளத்தை நிறுவிக்கொள்ளத் தன்னுடைய சக்தியின் உருவங்களை வரவழைக்கவே அழைக்கிறது. முன்னால் இல்லாததை விளித்துப் பேசும் சாத்தியமில்லாத மிகயைான கட்டளைகள் கவிதைச் சம்பவங்களை வரவழைத்து நிகழ்த்துகின்றன. இந்தச் சம்பவங்கள், நிறைவேற்றப்பட வாய்ப்பிருந்தால், அவை கவிதையின் நிகழ்ச்சியில் போக்கில் நிறைவேற்றப்படும்," (இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர்: 124, 125) எனும் கூற்று இங்கு மேற்கோளிடத் தகுந்தது. உதயாவின் பின்வரும் முதல் வகைக் கவிதைகள் மிகையான கட்டளைகள், கவிதைச் சம்பவங்களை வரவழைத்து நிகழ்த்துகின்றன. "கடவுளின் கனிவோடு என்னை நெருங்காதீர்கள் ...... உங்கள் அலாதி அன்பின் சத்தம் குறைவாயிருத்தல் நிம்மதி.... என்றதில் துவங்கி, "எல்லாம் தவறாகிப் போன என் வாழ்வின் பக்கங்களை இக் கூதிர் காலத்தின் குளிரில் நடுங்கிப் புரட்டிக் கொண்டிருக்கிறேன் நீயோ 'எப்படி இருக்க' என்று ஸ்மைலியோடு செய்தி அனுப்புகிறாய்" எனச் சலிப்பதில் தொடர்ந்து "என் கடைசிக் கவிதையின் முற்றுப்புள்ளி தூக்கமாத்திரையின் சாயலில் இருக்கும் அல்லது ஒரு கோர விபத்தில் சொற்கள் சிதறிக் கிடக்கும் அப்போது மட்டும் நீங்கள் கதறி அழ என்ன இருக்கிறது" எனக் கேட்பதில் முடிகின்றது. (நான் காணாமல் போகிறேன் : ஒரு கூதிர் காலத்தின் துயரப் பாடல்) "கதையாடல் கவிதைகள் ஒரு சம்பவத்தை விவரிக்கின்றன; தன்னுணர்ச்சிக் கவிதைகள் ஒரு சம்பவமாக இருக்க முற்படுகின்றன என்று நாம் சொல்லலாம். ஆனால், தன்னுணர்சிசக் கவிதை ஒழுங்காக வினையாற்றும் என்பதற்கு உறுதி கிடையாது, ஆரவாரமான, குழப்பமூட்டக் கூடிய வகையில் 'கவிதைத்தன்மை' கொண்டது. அதிக அளவில் புதிர்தன்மை கொண்டது; மிகையான பிதற்றல் என்று எளிதில் நிராகரிக்கப்பட வாய்பப்புள்ளது. 'ஓர் அலையென, ஓர் இலையென, ஒரு முகிலென என்னைத் தூக்கேன்!' நிச்சயம் நடந்தமாதிரிதான். ஒரு கவிஞனாக இருப்பது என்பதே இவ்வகையான விஷயத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டவும் ஏராளமான பிதற்றல் என்று நிராகரிக்கப்படாது என பந்தயம் கட்டவும் முயல்வதாகும்." (இலக்கியக்கோட்பாடு - ஜானதன் கல்லர்: 124) என்பதுவும் இங்கு நினைவு கூரத்தக்கதே. "ஒரு எழில் புன்னகயைின் ஒளியில் மினுக்கும் என் நிலா கோலக் குயிலொலியில் புலரும் என் பொழுது அண்டத்தின் இருள் நீங்கி சுணங்கிய விரல் மீட்டும் வீணையிசையில் சிறகு விரிக்கும் ஊர்க்குருவி வானத்தின் நீளம் குருவியின் சிறகளக்கும்" எனும் உதயாவின் கவிதை ஷெல்லியின் மேற்காற்றைப் போல "நிச்சயம் நடந்த மாதிரிதான்", ஆனால் ஆரவாரமானது. அதுபோலவே பின்வருகின்ற, "எனக்குப் பச்சைத் துரோகம் இழை நம்பி அண்டினால் கழுத்தறு முதுகின் பின்னால் புறங் கூறித் தூற்று ஆற்றமுடியாத காயங்களைப் பரிசளி ..... ஏதேனும் ஒரு தருணத்தில் உனைப் பார்த்துப் புன்னகைக்க நேர்ந்தால் நான் உன்னை மறக்கவே முடியாதபடி என் முகத்தில் காரி உமிழ்" மிகையான பிதற்றல் என நிராகரக்கப்படலாம். (மறக்கமுடியாதபடி : ஓர் கூதிர் காலத்தின் துயரப்பாடல்) நார்த்ராப் ப்ரை, தன்னுணர்ச்சிக் கவிதை மற்றும் பிற இலக்கிய வகைமைகளைக் குறித்த மதிப்புமிக்க ஒரு செறிவான நூலான 'திறனாய்வின் உள் அமைப்பிய'லை (Anatomy of Criticism) எழுதியவர். அவர் அதில் "தன்னுணர்ச்சிக் கவிதையின் அடிப்படை ஆக்கக் கூறுகளைப் பிதற்றல் (babble) என்றும் கிறுக்கல் "(doodle) என்றும் அழைக்கிறார்." இவற்றின் மூலம் முறையே மந்திரம் (Charm) மற்றும் புதிர் (riddle) என்கிறார். கவிதைகள், ஒலி, சந்தம், எழுத்துகளைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தல் என்ற அர்த்தம் சாராத மொழியம்சங்களை முன்னணிப்படுத்துவதன் மூலம் மந்திர அல்லது உச்சாடன விளைவை ஏற்படுத்துவதற்காகப் பிதற்றுகின்றன. எடுத்துக் காட்டாக., திஸ் டார்க்சம் பர்ன், ஹார்ஸ்பேக் ப்ரெளன், ஹிஸ் ரோல்ராக் ஹைரோட் ரோரிங் டெளன் என்ற வரிகளைப் பாருங்கள். கவிதைகள் அவற்றின் மனம்போன போக்கிலான, சுற்றி வளைப்பான சொல்முறைகளாலும் புதிர்த்தன்மையான சொல்லமைப்புகளாலும் நம்மிடம் கிறுக்கல் அல்லது புதிரைத் தருகின்றன," (இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர் : 126) என்கிறார். "நீ இக்கணம் வாசிக்கத் தகுந்தது யாழில்லை யாழில்லையடி தொண்டகப் பறையெடு! அதன் தோல் கிழியக் கிழிய அடித்திசை சோதரி! அடித்திசை! துடி பறையெடுத்து விரல்கள் பத்தால் முழங்கிசை சோதரி! முழங்கிசை! இதன் ஒலி, சந்தம், திரும்பத்திரும்ப வார்த்தைகளைப் பயன்படுத்ததார், கவிதைக்கான ஒரு கூறு என்று நான் சொன்னால் மறுக்க முயலும் நீங்கள், நார்த்ராப் ப்ரை, நிறுவினால் ஏற்றுக்கொள்வீர்கள் அல்லவா? (ஓர் கூதிர் காலத்தின் துயரப்பாடல்) எனும் உதயாவின் கவிதையே அவரது கூற்றுக்குச் சான்றாகும். தன்னுணர்ச்சிக் கவிதை என்பது "இலக்கியம், கதையாடல் மற்றும் அர்ததத்தின் புனைவுகோளான மையத்தை அவற்றின் சொல் சாாந்த அம்சங்களில் வார்த்தை - ஒழுங்கமைப்பாகவும் வார்த்தை - வார்ப்பாகவும் (word - order and word - pattern) மிகத் தெளிவாகக் காட்டும் இலக்கிய வகையாக உள்ளது' என்று நார்த்ராப் ப்ரை (Northrop Frye) எழுதுகிறார். அதாவது, தன்னுணர்ச்சிக் கவிதை வார்த்தை - வார்ப்பிலிருந்து அர்த்தமோ அல்லது கதையோ வெளிப்பட்டு வருவதைக் காட்டுகிறது. சந்த அமைப்பில் ஒலி இயைபோடு வரும் வார்த்தைகளைத் திரும்பத் திரும்பதச் சொல்லிப் பார்த்துக் கதையோ அல்லது அர்த்தமோ வரவில்லையா என்று பாருங்களேன்," (இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர் : பக். 126) என்றும் மற்றுமொரு விளக்கமுண்டு. மேற்சுட்டிய கூற்றிற்கு அச்சொட்டான இன்னொரு உதாரணம் உதயாவின் திசைகள் நடுங்க மீளப் பிறக்கிறேன் எனும் கவிதை. "யாமத்தின் சுவர்களை உடைத்துக் கொண்டு சாநித்தியமானாள் காளி ..... பட்சிகள் யாவும் பயந்து பறந்திட பச்சை மரங்கள் முறிந்து வீர்ந்திட ..... அழாதே மகனே இனி நீ காளியின் பிள்ளை இனி நீ காளியின் பிள்ளை.... தத்தகிட தத்தகிட தத்தகிட தத்தோம் தித்தகிட தித்தகிட தித்தகிட தித்தகிட ....... இனி நான் காளியின் பிள்ளை இனி நான் காளியின் பிள்ளை (ஓர் கூதிர் காலத்தின் துயரப்பாடல்) உதயாவின் இரண்டாவது வகைமைக் கவிதைகளுக்கு இனி வருவோம். "நெர்வஸ் கன்டிசன்ஸ்(1988) நூலில், கதைசொல்லியான தம்புட்ஸாய் கல்வி பற்றிக் கனவுகள் நிறைந்தவள். அவளது உறவினரான தலைமையாசிரியர் வீட்டிற்குள் நுழைகிறாள். அவர் வெள்ளையர் வாழ்முறையைப் பின்பற்றுபவர். அவளுக்கு எங்கு உட்காருவது, ஒரு அறையின் மரபுசார் குறியீடுகளை எப்படிப் புரிந்துகொள்வது, எந்த மொழியைப் பயன்படுத்துவது என்று விளங்கவில்லை. ஆங்கிலம் பேசுவதா? தோனா மொழி பேசலாமா? இத்தகு சமூகத்தில் வாழ்பவர்களது வேதனையை ஃபனான் கலப்புத்தன்மை கொண்ட, பிளவுண்ட இருப்பு என விளக்குகிறார். அவர்கள் இரு வேறு நபர்களாக, ஒத்துவராத இருவராக ஒரே நேரத்தில் வாழ முயற்சி செய்கிறார்கள்," (பின்காலனியம் - அ.மங்கை: 29) என்ற பதிவினை ஒரு முகாந்திரமாக இங்கு வைத்துத் தொடர்கின்றேன். ஒரு பின்காலனிய பிரஜையின் இந்த அடையாளச் சிக்கலில் துவங்கி, வேறோரு வாழ்நிலத்தில் பணிநிமித்தம் வாழ் நேர்வதால், மீண்டும் தன் மண் தேடிப் போகின்ற தன்மையோடும், மிகத் தனித்துவமான, தொன்ம மரபின் உயிர்ப்போடும் கவி வெளிப்பாடு கண்டிருப்பவை உதயாவின் இவ்வகைக் கவிதைகள். நெய்தல் நிலம் தழுவும் கடலாகப் போகிறேன், தலைவன் இசைக்கும் பசலைப்பாடல், பசலைத் தலைவன் ஈழ விடுதலை, இனப்படுகொலை, இசைப்ப்ரியாவின் வதை இவற்றைப் பேசுகின்ற கவிதைகளை இந்த வகைமைக்கு உதாரணமாகச் சுட்டலாம். "ஆமாம். நாங்கள் அவர்களுக்கு அச்சுறுத்தல்தான். ஒவ்வொரு முறை நாங்கள் ரொட்டித்துண்டை உண்ணும்போதும், அவர்களுள் ஆயிரக்கணக்கானோர் எங்கள் பற்களுக்கிடையே அரைபடும் அபாயத்தில் உள்ளார்கள். ஒவ்வொரு முறை நான் திராட்சை, போரிச்சம்பழம், மல்பெர்ரி பழம் அல்லது வாதாங்கொட்டை உண்ணும்போதும் இங்கிலாந்தில் யாரேனும் பயத்தில் உறைய வேண்டும். ஓவ்வொரு முறை எனது மகன் அத்தி மரத்தில் ஏறிப் பழம் பறிக்கும்போதும், இங்கிலாந்தின் நாசூக்கான ஏகாதிபத்திய சீமான்களுக்கு ஆபத்து நெருங்குகிறது. ஆனால், நாங்கள் எப்போதும் செய்ய விரும்பியதெல்லாம் எங்கள் வாழ்க்கையை, அவர்கள் இல்லாமல், வாழ விரும்பியதுதான்," (பின்காலனியம் - அ.மங்கை: 52) என்று ஒரு நாள் இரவு தொலைக்காட்சியில் வயதான இராக்கியப் பெரியவர் சொல்வதைக் கேட்டதாகத் தனது பின்காலனியம் நூலில் அ.மங்கை செய்துள்ள பதிவு உதயாவின் பின்வரும் கவிதைகளின் தொனியைச் சுட்டுகின்றது. உதயாவின், "உங்கள் தலைவன் எங்கே அவன் பரம்பொருள் ஆகிவிட்டான்" எனும் வரிகளும் "ரத கஜ துராதிபதிகள் சுற்றி வளைத்த போதும் நெஞ்சில் உரமிருந்த வல்வெட்டித்துரையை எந்த ஏவுகணை நிலத்தில் சாய்க்கும்? நீங்களோ ரகு வம்சம் அவளோ சமர் மரபு நீங்கிடாத ராவண வம்சம்" (ஓர் கூதிர் காலத்தின் துயரப்பாடல்) எனும் வரிகளும் மிக வலுவான ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இனக்குழுவின், பின்காலனியக் குரல்தான். "சமூகத்தின் விளிம்புகளில் வாழ்வோர் மீதே பின்காலனியத்துவத்தின் கவனம் குவிகிறது. பெயர்க்கப்பட்ட பண்பாட்டு அடையாளங்களை, உலக முதலாளித்துவச் சக்திகளால் நிலைகுலைக்கப்பட்டவர்களின் பண்பாடுகளை அக்கறையோடு அணுகுகிறது. புகலிடத்தில் தஞ்சம் புகுந்தோர், கிராமப்புறங்களிலிருந்து நகரங்களின் வறுமைப்பிடியின் ஓரங்களுக்குத் தள்ளப்பட்ட புலம் பெயர் மக்கள், முதல் உலகில் அன்றாட வாழ்க்கைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கடைநிலையில் வாழும் புலம் பெயர் தொழிலாளர்கள் ஆகியோர்பால் தனது கவனத்தைச் செலுத்துகிறது. அரசியல் அதிகாரி அல்லது உயர் கல்வி அதிகாரியின் பார்வையல்ல அதன் அடிப்படை. எத்தியோப்பியப் பெண் விவசாயிதான் பின்காலனியத்துவத்தின் கண்கள்; காதுகள்; வாய்!" (பின்காலனியம் - அ.மங்கை: 142, 143) என்ற கூற்றை நினைவு படுத்திக் கொண்டு, "ஒன்பது தேசங்கள் ஒன்று சேர்ந்தீர்கள் ஒற்றை ஆளாய் களம் கட்டி நின்றவன் வீரன் இல்லை என புத்தன் சொல்லட்டும் அவனைக் கழுவிலேற்றுவேன் நிலமெல்லாம் பூத்த ரத்தத்தில் மீண்டும் மலரும் இசைபிரியா பூக்கள் அப்பொழுது உங்கள் இடைக் கச்சையை உருவி புத்தனின் பக்கத்தில் அமரைவைப்போம்" (ஓர் கூதிர் காலத்தின் துயரப்பாடல்) எனும் உதயாவின் கவிதையை மீள் வாசிப்புத் செய்தால் ஒன்று விளங்கும் – நிலம் பிடுங்கப்பட்ட, மானம் பறிக்கப்பட்ட எம்மினத்துச் சகோதரி இசைப்பரியாதான்- அப்பெண்தான், பின்காலனியப் போர்க்குரலின் கண்கள் - காதுகள் - வாய்! மேலும் உதாரணங்களாகப் பல உண்டு. ஒரு சோறு பதமே மேற்சொன்ன கவிதை உதாரணம். நிறைவாகக், குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இரண்டு கவிதைகள் உண்டு: ஒரு தலைவி பசலை படர்ந்து தலைவனுக்காக ஏங்குகின்ற சங்கப் பாடலை மாற்றி ஒரு ஆண்மகனது பிரிவுத் துயரைப், பசலையென, சங்கத்தின் மொழி வார்ப்பிலேயே வடித்துள்ள கவிதைகளும், தனது ஆன்மாவின் அணுக்கத் தோழியான ஸில்வியா பிளாத்திற்கு எழுதிய மரணச்சுவை அறிந்தவள் எனும் அற்புதமான கவிதையும், என்னை மிக மிகக் கவர்ந்தவை. "அவள் அப்போது சிறுமி மரணத்தின் சுவை அறிய ஆவலாய் இருந்தாள் ....... எனத் துவங்கி அவள் பருவமங்கை, இரு பிள்ளைகளின் தாய், இறுதியாக, முடிவுக்கு வந்தது வலிகள் நிறைந்த கவிதை அவள் இப்போது. மரணத்தின் சுவை அறிந்த தேவதை" (ஓர் கூதிர் காலத்தின் துயரப்பாடல்) என உதயா எழுதுகையில், ஃபிரென்ச் தத்துவ அறிஞர் ரூசோவின் சீமாட்டி லாரன்ஸின் மீதான விவரிப்புக்களுக்கு அப்பாற்பட்ட அவரது அன்பு நினைவிற்கு வருகிறது. உதயாவின் ஸில்வியா பிளாத் மீதான இயல்பிற்கு மீறிய ஈடுபாட்டினை, பந்தத்தினை நாம் உணர வேண்டுமாயின் பின்வரும் ரூசோவின் வாழ்வுப் பக்கத்தைப் படித்தல்வேண்டும். தன்னுடைய வளரிளம் பருவத்தில் சீமாட்டி வாரன்ஸ் என்ற பெண்மணிமீது தான் கொண்ட காதலை கன்பக்ஷன்ஸில் ருசோ விவரிக்கிறார்; அப்பெண்மணியின் வீட்டில் அவர் வசித்திருக்கிறார்; அவரை 'அம்மா' என்றும் அழைத்திருக்கிறார். "என் நேசத்துக்குரிய அம்மா இல்லாத நேரங்களில் அவருடைய நினைவால் தூண்டப்பட்டு நான் செய்த முட்டாள் தனங்களையெல்லாம் நுணுக்கமாக விவரிக்க வேண்டுமென்றால் என்னால் சொல்லிமாளாது. அவர் படுத்துறங்கியதை நினைவுகூர்ந்து எத்தனை முறை நான் என்னுடைய படுக்கையை முத்தமிட்டிருக்கிறேன்; அவருக்குச் சொந்தமானவை என்பதாலும், அவருடைய அழகான கைகள் அவற்றைத் தொட்டிருக்கின்றன என்பதாலும் நான் என்னுடைய திரைச்சீலைகளையும் அறையில் இருந்த எல்லா இருக்கைகளையும் முத்தமிட்டிருக்கிறேன்; அவர் காலடிபட்ட தரைமீது நான் குப்புறப்படுத்து அதைக்கூட முத்தமிட்டிருக்கிறேன். இந்த பொருட்களெல்லாம் அப்பெண்மணி இல்லாத நேரங்களில் அவருடைய பிரசன்னத்துக்கான நிறைவூட்டல்களாகவோ பதிலிகளாகவோ செயல்படுகின்றன. ஆனால் அவர் நிஜத்தில் அருகில் இருக்கும்போதுகூட அதே கட்டுமானம், நிறைவூட்டல்களுக்கான அதே தேவை தொடர்கிறது." ரூசோ தொடர்கிறார், "ஆவேசமான காதலால் மட்டுமே தூண்டப்படக்கூடிய சில மட்டுமீறிய செயல்களை அவரது பிரசன்னத்திலும் கூட சில சமயங்களில் நான் செய்திருக்கிறேன். ஒரு நாள் உணவு மேஜையில் ஒரு கவளம் உணவை அவர் வாயில் போட்டபோது அதில் ஒரு முடியைப் பார்த்ததாக நான் கத்தினேன்; அவர் உணவுத் துண்டை தட்டில் திரும்ப வைத்துவிட்டார்; நான் அதை ஆவலுடன் எடுத்து விழுங்கி விட்டேன். அவளுடைய பிரசன்னமின்மை முதலில் அவளுடைய பிரசன்னத்துடன் வேறுபடுத்துகிறது. அப்போது அவளை அவரது நினைவுக்குக் கொண்டுவரும் பதிலிகளையோ குறிகளையோ வைத்து அவர் சமாளித்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் அவளது நிஜப் பிரசன்னம் மனநிறைவுக்கான கணமாகவோ, விரும்பிய பொருளை அணுக ஏதுவாக்கும் கணமாகவோ இருப்பதில்லை; அப்போதும் நிறைவூட்டல்களோ அல்லது குறிகளோ தேவைப்படுகின்றன. அவள் வாயில் போட்ட உணவை ரூசோ, நாம் சொல்வதுபோல, அப்பெண்மணியைச் 'சொந்தமாக்கிக்' கொண்டிருந்தாலும் கூட அவள் அவரைவிட்டுக் கைநழுவிப் போய்விட்டது போலவும், அவளை எதிர்ப்பாக்கவும், நினைவுகூரவும் மட்டுமே முடியும் என்பது போலவும்தான் அவரால் உணர முடியும். ரூசோவுக்கு எப்போதும் தெரிந்திராத அவருடைய அம்மாவுக்கு ஒரு பதிலியாகத்தான் இந்த 'அம்மா' இருந்திருக்கிறாள்; அவருடைய அம்மாவேகூட, ஒருபோதும் போதுமானதாய் இருந்திருக்கமாட்டாள். எல்லா அம்மாக்களையும்போலவே, மன நிறைவு அளித்திருக்கத் தவறியிருப்பாள். அந்த அம்மாவுக்கும் நிறைவூட்டல்கள் தேவைப்பட்டிருக்கும்." (இலக்கியக் கோட்பாடு - ஜானதான் கல்லர் : 41) உதயாவிற்கு ஸில்வியாயும் ஒரு அம்மாதான், சகோதரிதான், சிநேகிதிதான். அதீதமான உணர்ச்சி நிலை அல்லது பிறழ்வு நிலை படைப்பூக்கத்தின் ஒரு கூறாகக் கருதப்படுவதுண்டு. அம்மாதிரியான மனோநிலையில் தமது ஆதர்ச பிம்பங்களோடு படைப்பாளிகள் அதி வேட்கையோடு உறவாடுதலும், அவற்றைப் படைப்பாக வெளிப்படுத்துதலுமுண்டு. உதயாவின் ஸில்வியாவிற்கான தொடர் கவிதைகள், கடிதங்கள் அப்படி அமைந்தவைதான். "இலக்கியம் என்பது சில வகையான கவனங்களை வெளிக்கொணரும் ஒரு செயல்பாடு அல்லது பிரதி நிகழ்வு என்று நாம் முடிவு செய்துகொள்ளலாம். தகவல் தெரிவிப்பது, கேள்விகள் கேட்பது அல்லது வாக்குறுதிகள் கொடுப்பது போன்ற பிற பேச்சுச் செயலிலிருந்து அது வேறுபட்டு நிற்கிறது. ஏதோ ஒன்றை இலக்கியமாக அடையாளம் காட்டும் ஒரு கவிதைப் புத்தகம் அல்லது ஒரு இதழின் ஒரு பகுதி, நூலகம் அல்லது புத்தகக்கடை, என்று ஒரு சூழலில் காண்பதுதான், ஏதோ ஒன்றை இலக்கியம் என்று வாசகர்களைக் கருதவைக்கிறது." (இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர்: 41) எனப் படித்துள்ளேன். அந்த ஏதோ ஒன்று ஸில்வியாவிற்கான உதயாவின் இக்கவிதையில் இருப்பதாக நான் உணர்ந்தேன். என்னை வெகுகாலத்திற்குப் பின் அழவைத்த சில கவிதைகளில் இதுவுமொன்று. யவனிகாவில் தொடங்கினேன், அவரிடமே முடிக்கின்றேன் - உதயா எனும் தனிமனிதனின் அந்தரங்கமே, அதன் உணர்வு வெளிப்பாடுகள் மட்டுமே கவிதையாகிவிடுமா? எனக் கேட்பார்கள் சிலர். அவர்களுக்கு யவனிகாவின் கீழ்வரும் பதிலே மிகச் சரியான விளக்கம் :- "ஒருவரின் அந்தரங்கம் என்று ஒன்றுமில்லை, அது மொழியின் அந்தரங்கம் தான். பாட்டாளி வர்க்கப் புரட்சி என்ற பதம் கார்ல் மார்க்சின் அந்தரங்கமா? மறைக்கப்பட்ட, நடைமுறைச் சாத்தியமுள்ள, அதற்கு முன்னாள் மொழியப்படாத சமூகத்தின் அந்தரங்கம், சாத்தியமுள்ள ஒன்றை ஏன் மொழியில் மறைக்க ேவ்ணடும் அல்லது பூடகப் படுத்த வேண்டும். பகிரங்கமே அனைத்தும்". (திருடர்களின் சந்தை - யவனிகா ஸ்ரீராம்) தனிமையிலும், துயரத்திலும் தம்மைத் தொலைத்த, தற்கொலையின் தீராத ருசிக்கு இறுதியில் தம்மைத் தின்னக் கொடுத்த என் ப்ரிய ஆத்மாநாம், எனது மதிப்பிற்குரிய பின் நவீனத்துவத் தத்துவவாதி தெலூஸ், அவநம்பிக்கைகளின் குரூர நிழலைக் காலந்தோறும் எதிர்த்த ஒரு படைப்பு மனம், இறுதியாகத் தற்கொலையின் மூலம் அதனை எப்படித் தகர்த்து நிறையெவ்துகிறது என்பதை உலகிற்கு உணர்த்திய எனதன்பு ஸில்வியா பிளாத், "பூனைகள் சொர்க்கத்திற்குச் செல்வதில்லை. பெண்களால் ஷேக்ஸ்பியரது நாடகங்களைப் போல எழுத முடியாது" என்று சொன்ன பாதிரியாரைக் கண்டனம் செய்த என் ஆருயிர்த் தோழி வர்ஜினியா வுல்ஃப், ஏன் பெண்கள் எலிசபெத் அரசியின் காலத்தில் கவிதைகள் எழுதவில்லை எனக் கேட்ட, ஷேக்ஸ்பியருக்கு ஜீடித் என்றொரு சகோதரியைப் புனைந்து பெண்களை விழித்தெழ உலுக்கிய, இறுதியில் தனது மேலாடையின் சட்டைப் பைகளில் கற்களில் நிரப்பியபடி, மிகத் தெளிவாகத் தன் தற்கொலைக் குறிப்பை எழுதிய பின், தனது வீட்டின் பின்புறமோடும் 'ஊஸ்' (Ouse) நதியில் இறங்கித் தற்கொலை செய்து கொண்ட என் அணுக்கமான Soulmate ஆன அதே வர்ஜினியா உல்ஃப் - இவர்கள் அனைவருமே தற்கொலையின் காதலர்கள். இவர்களோடு தம்பி உதயாவின் பெயர் இணைந்துவிடக் கூடாது எனும் பதட்டம் எனக்கு இன்றளவும் உண்டு. அதேசமயம், இவர்களனைவரையும் இயக்கிய நனவிலி மனத்தின் கட்டளையை தனது படைப்பின் ஊன்றுகோலோடு அவன் கடந்து சென்று விடுவான் எனும் நம்பிக்கையும் உண்டு. ஒரு சகோதரியாக அதுவே எனது ப்ரியதம்பிக்கு இந்த மகிழ்வான தினத்தின் வேண்டுகோள் - அதுவே அவன் எனக்களிக்கின்ற மிகச் சிறந்த பரிசுமாகும். வர்ஜினியா தன் சட்டைப்பபைகளில் நிரப்பிய கற்கள் நம் நடைபாதையெங்கம் கிடக்கின்றன; என்றாவது ஒருநாள் - நம்மில் யாருடைய சட்டைப் பைகளுக்காவது அவை தேவைப்படலாம். ஆனால் அது தம்பி உதயாவின் சட்டைப்பையாக மட்டும் இருக்கக்கூடாது என்பதுதான் என் விருப்பமும், ஆசையும். உதவிய நூல்கள் : இலக்கியக் கோட்பாடு - ஜானதன் கல்லர், தமிழில் ஆர்.சிவக்குமார் பின்காலனியம் - அ.மங்கை திருடர்களின் சந்தை - யவனிகா ஸ்ரீராம் * * * * *
No comment