கே.பாலச்சந்தர் – பாராட்டு விழா

தாதாசாகேப் விருது பெற்ற முதல் தமிழ்த்திரைப்பட இயக்குநர் K.B. அவர்கள் இந்த விருதைப் பெற்றவுடன் கடவுளுக்கோ, உற்றவர்களுக்கோ அதை அர்ப்பணிக்கவில்லை. மாறாக, தனக்கு ஊக்கமும், உயர்வும் கொடுத்த, உலகம் முழுதுமுள்ள தமிழ் ரசிகர்களுக்கு இதை அர்ப்பணித்திருக்கிறார். இதற்கு முன்பாகவே விருதுகள் பல பெற்றவர்தான். ஆனாலும், பல படங்களை இயக்குவதற்காக இதனைப் பெற்றேன் எனச் சொல்வதை விட, பல நல்ல கலைஞர்களை அறிமுகம் செய்து, கலை உலகிற்குக் கொடுத்திருக்கிறேன் என்பதையே இத்தருணத்தில் நினைத்துப் பார்ப்பதாகச் சொல்கின்ற பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர்.
	அவரைப் பாராட்ட இலக்கிய உலகில் இருந்து நான் ஏன் இங்கு வந்திருக்கிறேன் என்றால் - இரண்டு காரணங்கள். ஒன்று - ஒரு இலக்கியவாதியோ, கலைத்துறை படைப்பாளியோ உண்மையை அறிய மூளையையும், எண்ணங்களையும் நம்பியிருப்பதில்லை. இதயத்தை மட்டுமே நம்புகிறார்கள். இலக்கியம், சினிமா இரண்டுமே வெவ்வேறு அனுபவங்களைத் தருவதாக இருந்தாலும், இரண்டுமே மனிதனின் கற்பனையைத் தூண்டி, அக்கற்பனை விரிவில் ஒரு அனுபவத்தை ஏற்படுத்துபவை. அவ்வகையில் திரு.K.B., அவர்களது படைப்புகளை உன்னிப்பாக ரசித்து, உய்த்து அனுபவித்தவள் நான்.	இரண்டாவதாக, த்ரூஃபோவின் படங்கள் பற்றி ழான் கோலே சொன்னதைப் போல, நம் சம காலத்தின் மிக முக்கியமான படைப்பாளியைப் பாராட்டுவதில் எனக்குத் தனிப்பட்ட பெரும் விருப்பமுண்டு. 
	ழான் கோலோ சொன்னார் "நம் வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில், நாம் நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில், நம் உடல் ஆரோக்யம் குன்றியிருக்கும் போது, சில சமயங்களில் ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து நம்முடைய உள்மனதை ஒளிர்விக்கும். ஒரு காட்சியோ, வசனமோ போதும், நமக்குத் தைரியம் அளிப்பதற்கு, வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு. இந்தக் காரணத்திற்காகவே த்ருஃபோவின் படங்களைப் பார்ப்பவர்கள் உண்டு".
	எனக்கு K.B. அவர்களின் திரைப்படங்கள் அப்படித்தான். நேர்கோட்டுக் கதைகள் எனக்குப் பிடிக்காது - ஏனெனில் வாழ்க்கை சீரானதன்று. அது, மாபெரும் புதிர். அதன் நெளிவு, சுளிவுகளைக் கோணல்களை அதன் போக்கிலேயே வெளிச்சமிட்டுக் காட்டியவை அவரது படைப்புக்கள்.
	செனகல் என்ற ஒரு சிறிய மேற்கு ஆப்பிரிக்க நாடு. அங்கிருந்து வந்து உஸ்மான் செம்பீன் என்ற இயக்குநர், உலக அளவில் பேசப்படுகிறார். பொலிவியா ஒரு வறுமையான நாடு - அங்கிருந்து வந்த ஸான்ஹினேஸ் விவாதிக்கப்படுகிறார். மிகச் சிறிய நிலப்பரப்பான கூபாவிலிருந்து எத்தனை தரமான இயக்குநர்கள் உலகம் முழுவதும் பேசப்படுகிறார்கள்?
	ஆனால், தமிழ் நாட்டில், திரையுலகில் மிகச் சிறந்த இயக்குநர் ஒருவருக்கு இப்போதுதான் நாட்டின் மிக உயரிய அங்கீகாரம் இத்துறையில் கிடைத்திருக்கிறது. தாமதமாகவேனும், கொடுக்கப்பட்ட அதனைக் கொண்டாட, அண்ணன் சிவா முனைந்திருப்பதற்கு எனது பாராட்டுக்களும், நன்றியும். மிகப் பெரிய கலாரசிகர் சிவா அண்ணன். நல்ல படிப்பாளி. உலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான Verner Hersak இன் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை ஒரு எழுத்தாளரது புத்தகத்தில் வாசித்து அயர்ந்து போனேன். ஒரு முறை ம்யூனிச்சிலிருந்து பாரிஸீக்கு நடந்தே சென்றார் ஹெர்சாக். இதைப் பற்றி If walking on Ice எனும் புத்தகமே எழுதியிருக்கிறார். அவரது தோழியும் சினிமா விமர்சகருமான Liot Eisner என்பவர் பாரிஸில் மரணப்படுக்கையில் கிடந்த போது அவரைப் பார்ப்பதற்காக ம்யூனிசிச்சிலிருந்து Hersak நடந்தே சென்றபோது கடும் குளிர்காலம். போய்ச் சேர அவருக்கு ஒரு மாத காலம் ஆயிற்று. அப்படி நடந்து போனால் ஐஸ்னர் பிழைத்து விடுவார் என்று ழநசளயம நம்பினார். அவ்வாறே நடந்து ஜஸ்னரும் பிழைத்துக் கொண்டார்.
	சிவா அண்ணன், K.B. அவர்களிடம் வைத்திருக்கும் அன்பும், மரியாதையையும் அப்படித்தான். அவரைப் பார்க்க திருச்சியிலிருந்து சென்னைக்கு நடந்து சென்று விடும் அளவிற்கு ஆழமானது. அதனால் தான் இப்படிப்பட்ட ஒரு விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் பங்கேற்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி.
	ஆனந்த விகடனின் ஆரம்பகால கட்டத்தில் R.K. நாராயண், (சுவாமியும், சிநேகிதர்களும்) எழுதியவர் - சினிமா விமர்சனம் கூட எழுதினார் - எப்படி தெரியுமா ? இப்படி (இந்தப் படத்தில் நன்றான நடித்தவர்கள் பின்வருமாறு 1. தென்னைமரம், 2. குதிரைவண்டி......... ஆனால், K.B. இன் படங்களில் ரயிலும் நடித்தது. திரைச்சீலைகளும் கூட நடித்தன.
	S.S.வாசனது குறிக்கோள் - """"ஒரு பாமரனைத் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தைக் காட்டிலும் அவனுடைய தேவையுணர்ந்து மதிப்பதே மக்கள் மத்தியில் நீடித்து வெற்றி காண முடியும்"", என்பதே. K.B. யும் அப்படித்தான்.
	Hollywood சித்தாந்தம் என ஆரம்பத்தில் ஒன்றைச் சொல்வார்கள் - சில விஷயங்களில் "thus for & no further" என மிகக் கண்டிப்பாக இருப்பது. அதை உடைத்த படங்களாக ‘Deep Throat, ‘The Last Dango in Paris’ ஐச் சொல்வார்கள். பாலச்சந்தரது அரங்கேற்றம், அபூர்வ ராகங்கள், அவர்கள் - மூன்றும் இப்படித்தான். புனிதம் எனப்படுபவற்றை உடைத்தவை.
	ஒழுங்காக ஒரு கதை சொன்னாலே மனித வாழ்வின் பல பரிமாணங்களை உணர்த்த முடியும் என்பவை K.B. யின் படங்கள்.
	சிந்தாமணி என்ற பழைய படம் குறித்து உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம். அது ஒரு பாலியல் தொழிலாளியைப் பற்றிய கதை. அதில் அந்த வேஷம் தரித்தவர் அசுவத்தாமா, எனும் நடிகை. சிந்தாமணி படத்தில் அசுவத்தாமா உடுத்திய ஒவ்வொரு புடவையைக் கொண்டும் இன்றைய கதாநாயகிகள் மூவருக்கு உடை தைத்துவிடலாம். அந்தப் பாத்திரம் அன்று உடையின் பலத்தைச் சார்ந்திருக்கவில்லை. பாலச்சந்தரின் எந்தப் படத்திலும் பெண்ணைத் தரக்குறைவான உடைகளோடு அவர் காட்சிப்படுத்தியதேயில்லை.
	(உ-ம்) அவள் ஒரு தொடர்கதையில் கதாநாயாகி சுஜாதா உடைமாற்றுகின்ற காட்சி. ஒரு மத்தியதரவர்க்கத்தின் இடைஞ்சல்களுக்கிடையே வெகு இயல்பாக அந்தப் பெண் கதாபாத்திரம் ரவிக்கையை அணிந்து கொள்வது, விரசமின்றிக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அது போலத்தான் அரங்கேற்றம் படத்தில், நாயகின் வெற்று முதுகு பணக் கற்றையால் மறைக்கப்பட்டுப் பின் மின்விசிறியில் அது விலகுகின்ற காட்சியும். 
	பல வருடங்களுக்கு முன்பு, கர்நாடகா திரைப்பட மாணவர்கள், Poland Director Roman Polanski யின் பத்திரிக்கையாளர் சந்திப்பைப் படமெடுக்கப் பிரமாதமாக ஏற்பாடுகள் செய்திருந்தார்களாம். "யாராவது அந்த விளக்கை அணைத்து விடுகிறீர்களா ? என் தலை முடியில் தீப்பற்றிக் கொள்ளப் போகிறது !" என்று சொன்ன Polanski, "இந்த technique, இந்த மாதிரி ஒளியூட்டுவது - 30 வருடத்துப் பழசு. Before 30 yrs மேலை நாடுகளில், படம் நல்லதோ இல்லையே சினிமாவுக்குப் போய்க் கொண்டே இருப்பார்கள். இப்போது இந்தியாவில் இந்தப் பழக்கம் நீடிப்பதாக எனக்குத் தெரிகிறது. இங்கு சினிமா பார்ப்போர் பொறுமைமிக்கவர்களாக இருக்கிறார்கள் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு போன்ற technical அம்சங்களில் இங்கு இருப்பது போலக் குறைகள் அங்கு ஏற்கப்படுவதில்லை"" என்றார். அந்த குறை இன்றைக்கு மிகப் பெரிய அளவில் தீர்ந்திருக்கலம். ஆனால், அதற்கான மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவை பாலச்சந்தரது கறுப்பு & வெள்ளைப் படங்கள். அவர் வண்ணத்தில் இயக்கிய முதல் படம் நான்கு சுவர்கள் ரவிச்சந்திரன், ஜெயசங்கர் நடித்தது - 1971 ம் ஆண்டு வெளிவந்தது. அதற்குப் பின்னர் மீண்டும் கறுப்பு வெள்ளைக்கே திரும்பிய பாலசந்தர் மறுபடியும் வண்ணத்திற்குள் பிரவேசித்தது, முற்றிலும் புதுமுகங்கள் நடித்த பட்டினப் பிரவேசம் படம் - அதன் பின் கமலஹாசனின் மன்மதலீலை. அவரது கடைசிக் கறுப்பு வெள்ளைப்படம் நிழல் நிஜமாகிறது. பெண்ணின் வெளித்தோற்றம் தாண்டிய மன உணர்வுகளை நுட்பமாகப் பதிவு செய்த மிகத் தரமான படம். அரங்கேற்றம், அவள் ஓரு தொடர்கதை, அவர்கள் என கருப்பு வெள்ளைப் படங்களைக் காவியமாக்கியவர். இவரது அவள் ஓரு தொடர்கதை ரித்விக் காடக்கின் ‘மேகோ தாஹே தாரா’ என்ற படத்தின் தழுவல் எனச் சிலர் விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் - மத்தியதர வர்க்கச் குடும்ப வாழ்வின் சிக்கல்களைக், குறிப்பாகப் பணி புரிகின்ற பெண்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை, குடும்பத்தின் பலி ஆடுகளாக அவர்கள் ஆக்கப்படுவதை, தமிழ்த் திரைப்படச் சூழலில் வேறு எவரையும் விட சிறப்பாகச் சித்தரித்தவர் பாலச்சந்தர் மட்டுமே.
	மிகப் பெரிதான ஒன்றாக அவரிடம் நான் மதிக்கின்ற விஷயம் - தான் சார்ந்த சமூகம் குறித்த விமர்சனங்களை நேர்மையாக சித்தரிக்க முயன்ற நெஞ்சுரம் அவரிடம் இருந்தது என்பதே. மனதில் இருப்பதைத் துணிவுடன் சொல்கின்ற, திடமும் அவருக்கு இருக்கிறது எனபதற்கு ஒரு சாட்சி - ஒரு சமயம், ஆனந்த விகடனில் ‘விகடமேடை’ பகுதிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.அமல்ராஜ் என்பவர் பாலச்சந்தரிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார். "பொதுவாகப் பெண்விடுதலை பேசும் உங்கள் படங்களில் பாரதியாரையும் அவரது பாடல்களையும் அதிகம் பயன்படுத்தி இருக்கிறீர்கள். பாரதியாரை விடத் தீவிரமாகப் பெண்ணியம் பேசியவர் பெரியார். ஆனால் உங்கள் படங்களில் ஏன் அவரைப் பற்றிய சித்தரிப்புக்கள் இல்லை" K.B. இன் பதில் -
	"ஒரு வேளை பெரியார் பாடல்களை எழுதி இருந்தால் பயன்படுத்தி இருப்பேனோ? பெரியாருக்கு முன்பே பாரதி பிறந்து விட்டதாலும், அவருடைய பெண்ணியக் கருத்துக்களில் பாரம்பரியத்தின் நல்ல அம்சங்களும், புதுமையின் அவசியமும் சேர்ந்து இருந்ததாலும், அதுவே எனக்குப் போதுமானதாக இருத்தது."" பகுத்தறிவுக் கருத்தாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லைதான் இந்த பதிலை. ஆனால், வெளிப்படையாகச் சமரசமின்றி தனது கருத்தைத் துணிந்து சொன்னவர் - தனது படங்களைப் போலவே. மேலும், ஒரு கலைஞரின் படைப்புச் சுதந்திரம் அவரது தனிப்பட்ட விஷயம்., பாரதியாரைப் பற்றி மட்டும் ஏன் சொல்கிறீர்கள், பாரதிதாசனை விட்டுவிட்டீர்களே எனும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவன், கலைஞன் !	
	Roman Polanski லாரான்ஸ் ஒலிவியேவின் ‘Hamlet’ படத்தை முப்பது தடவைகளுக்கு மேல் பார்த்திருக்கிறாராம். நானும் இவரது தப்புத்தாளங்கள், அவள் அப்படித்தான், மூன்று முடிச்சு, வானமே எல்லை, அழகன் - முதலானவற்றை எத்தனைமுறை பார்த்தேன் எனக் கணக்கே கிடையாது. 
	சினிமாவிற்குக் கலாசாரத்தில் இருந்து வரும் உந்துதலைக் காட்டிலும், சமகாலத்தைப் பற்றி பிரக்ஞையும், பார்வையுமே மிக அவசியம் என உணர்த்தியவர் K.B. ஆரம்பத்தில் வந்த நந்தனார் படத்தை முழுக்கத் தமிழ் உணர்வும் தமிழ்த் தன்மையும் கொண்ட படமெனச் சொல்வார்கள். அதற்கு முன்மாதிரியாக எந்த வெளிப் பிரதேச, வெளிநாட்டுத் திரைப்படமும் இருக்க நியாயமில்லை என்பார்கள். அதுபோல முழுக்க, முழுக்க நடுத்தர வகுப்பினரின் அக வாழ்வுச் சிக்கல்கல், பலவீனங்கள், சமரசங்கள் போன்வற்றைக் கொஞ்சம் அதிர்ச்சியூட்டுகின்ற விதத்தில் அப்பட்டமாக சொன்னவர் K.B. சாமானிய மக்களைப் பற்றியும், தண்ணீர் தண்ணீர், தப்புத் தாளங்கள் - படம் செய்தவர் தான். "தமிழ் சினிமாவைப் பற்றிய வரலாறு ஒன்று என்னால் எழுத முடியும். ஆனால், விவாதிக்கத்தான் முடியவில்லை" என்று ஒருமுறை எழுத்தாளர் அசோகமித்திரன் குறிப்பிட்டார். சொல்லிவிட்டு, அவர், தமிழ் சினிமாவின் சில அம்சங்கள் குறித்து வந்த முறையான ஆராய்ச்சி நூல்கள் மிகக்குறைவு எனவும் வருத்தப்பட்டார். (எஸ்.கிருஷ்ணஸ்வாமியும், எரிக்கபார்னோவும், (Eric Barnow) எழுதிய இந்திய சினிமா நூலில் ஒரு பகுதி, தமிழ் சினிமா பற்றியது. அதன் பின் எஸ்.டி பாஸ்கரனின் ‘மெஜெஸ் பேரர்ஸ்’ மட்டுமே ஆய்வு பூர்வமான நூல்கள் என்கிறார் அசோகமித்திரன்.
	ஆனால் பாலச்சந்தர் விவாதத்திற்குத் தயாராக இருப்பவர். தனிப்பட்ட முறையில் கலைஞர்கள் பலருக்கும் கடிதங்கள் எழுதுவதன் மூலம், ஆக்கபூர்வமான படைப்புச் சூழலை, மகிழ்ச்சியை, நம்பிக்கையை உருவாக்குபவர். பாரதிராஜா, மணிரத்தினம் முதற்கொண்டு இன்றைய இளம் இயக்குநர்களது படைப்புகள் வரைக் கூர்ந்து கவனித்துத் தன் பாராட்டையும், விமர்சனத்தையும் முன்வைப்பவர். அதனால் generation next ஐ இணைக்கின்ற கண்ணியாக இருப்பவர்.
	K.B. அடிப்படையில் ஒரு நாடகக் கலைஞர் என்பது அவர் மீது எனக்குச் சற்று கூடுதல் மரியாதை வரக் காரணம். மேடையில் ஒளியின் மூலமாகப் பெறும் மாறுதலை ஏற்படுத்திய நாடகமாக ‘இருளும் ஒளியும்’ எனும் நாடகத்தைச் சொல்வார்கள் .அந்நாடகம் ஒரே காட்சி அமைப்பும், நான்கு அல்லது ஐந்து ஹஉவள மட்டுமே கொண்டு முதன்முறையாக நடிக்கப் பெற்ற ஒன்று. K.B.இன் Major Chandrakath, நீர்க்குமிழி போன்றவை அந்தக் காலகட்டத்தில் மிகப்புதிய முயற்சிகள்.
	இந்தி மொழியை மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று புருஷோத்தம தாஸ் தாண்டன், மொரார்ஜி தேசாய் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் முனைந்து நிற்கையில். அப்போதைய பிரதம மந்திரி நேருவின் செயலாளர் பணிக்கர், நேருவிடம் இப்படிச் சொன்னராம் - ஐயா - இந்தி மொழியின் இலக்கியங்கள் இரண்டே இரண்டு - ஒன்று துளசிதாசரின் இராமாயணம் மற்றது ஆல் இண்டியன் ரயில்வே கைடு! யாரையும் இழிவுபடுத்துவது எனது நோக்கமன்று. 30 ஆண்டுகளுக்கு முன்பு ‘இந்திய சினிமா என்றால் ஹிந்தி சினிமா தான்’ என்ற எண்ணம் நிலவியது. அந்தக் கருத்தைத் தகர்த்துத் தமிழ் சினிமாவை அகில இந்திய அளவிற்கு நகர்த்தியதில் K.B. க்குப் பெரும் பங்கு உண்டு.
	நூற்றாண்டுகளுக்கும் மேலாகிவிட்ட இத்துறையில் கொஞ்சம் யோசித்தால் எல்லாப் படங்களுமே ஏற்கனவே எடுக்கப்பட்டுவிட்டது போலத் தோன்றும். ஓரே ஆட்டத்தைத்தான் வெவ்வேறு மனிர்களை வைத்து K.B. ஆடிப்பார்த்திருப்பார். எதிரொலி படத்தில் சிவாஜி, வெள்ளிவிழாவில் ஜெமினி, நூல்வேலியில் சரத்பாபு, சிந்துபைரவியில் சிவகுமார். ஆனால், அந்த மனிதர்களில் தான் எத்தனை விதமான நுணுக்கமான ளுhயனநள ஐ வித்யாசங்களாகக் கோர்த்திருப்பார் ? அவள் ஒரு தொடர்கதையில் சுஜாதா என்றால், மனதில் உறுதி வேண்டுமில் சுஹாசினி - இருகோடுகளில் சௌகாருக்கு நேர்ந்ததுதான் சிந்துபைரவியில் சுஹாசினிக்கும். மரோசரித்திராவில் இறந்த காதலர்களில் காதலன் மட்டுமே புன்னகை மன்னனில் பிழைத்திருப்பான். ஆனால் சூழல்கள் மாறுவதில்லை - மனிதர்களும், மனங்களும் மாறிக் கொண்டேயிருக்கின்றன என்ற அடிப்படை வாழ்க்கைப் பார்வையை அழுத்தமாகச் சொல்வதுதான் K.B. யின் பலம்.
	பெண்களின் உடலை நம்பிப் பிறரைப் போல் அவர் படம் எடுத்ததில்லை என்பது எனக்கு மிகப் பெரும் ஆறுதல் தான் - என்றாலும், இன்னொரு பெண்ணைக் காப்பாற்றச் சொல்லத்தான் நினைக்கிறேனில் தன் உடலை இழக்கும் ஜெயசித்ராவின் உத்தியையே இருபது வருடங்களுக்குப் பிறகு வந்த அவரது கல்கியின் நாயகியும் பின்பற்ற வேண்டுமா என் அவரிடம் நான் கனவுகளில் உரிமையுடன் சண்டை போட்டிருக்கிறேன்.
	ஒரு போதும் நாயகத் தன்மைக்கு மட்டுமே இடமளித்த Hero Centric படங்களை அவர் எடுத்ததில்லை. M.G.R அவர்களின் காலத்திலேயே அவர் இதனைச் செயல்படுத்தியிருக்கிறார். நான் மிக மதிக்கின்ற மரியாதைக்குரிய இயக்குநர்கள் கூட பின்னாட்களில், ‘காயா, இது பழமா’ எனும் கொச்சைப் பாடலுக்கு இடமளித்து M.G.R. படங்களை இயக்கியிருக்கிறார்கள். ஆனால் தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதியதோடு - பின் K.B. எந்தவித சமரசத்திற்கும் இடமளித்ததில்லை. இத்தனைக்கும் வெற்றி, தோல்வி இரண்டையும் ஓரே நேரத்தில் தமது திரையுலக வாழ்வில் சந்தித்தவர் அவர். அவரது நான்கு சுவர்கள் தோல்வி அடைந்து ஒதுக்கப்பட்ட அதே காலகட்டத்தில், அவரது நூற்றுக்கு நூறு வெளிவந்து பெரும் வெற்றியையும், பாராட்டையும் பெற்றது.
	நாடகத்துறையில் சிவாஜி, R.S.மனோகர் உள்ளிட்டோருக்கு மத்தியில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர். அவரது வசனங்கள் தான் படங்களில் பெரும் பலம். Cinema Visual Medium - ஆனாலும் மொழியின் கூர்மையைச் சரிபார்க்கின்ற சாணைக் கத்தியும் அதுதான்.
	I Salute to you specifically for three reasons sir - தமிழ்த் திரையைப் பொறுத்தட்டில் நடிகைகளைப் பெண்களாகப் பார்க்கும் வழக்கம் பானுமதி, கண்ணாம்பா காலத்திற்குப் பிறகு மீண்டும் துளிர்த்தது. அதை மாற்றி அவர்களைக் கலைஞர்களாகவும் காட்டியது நீங்கள் தான் - சரிதாவின் கண்களை ஒரு கதாபாத்திரமாக்கியது நீங்கள் மட்டுமே. 
	Secondly, அபத்தங்களற்ற தொலைக்காட்சித் தொடர்களை பல வருடங்களுக்கு முன்பே பங்களித்தமைக்காக. உங்களின் ரயில் ஸ்நேகமும், கையளவு மனசும், சஹானாவும் மறக்கக் கூடியவையா என்ன ?
	Thirdly, for that one particular song ‘பாடறியேன் படிப்பறியேன் in சிந்து பைரவி.
	இசை உங்கள் படங்களில் மிக முக்கியமானதொரு கதாபாத்திரம். அதிலும், இளையராஜா எனும் மேதை அப்பாடலை தியாகராஜர் கீர்த்தனையுடன் கலந்து செய்த கலகம் - குறிப்பாக - 
	"எல்லாமே சங்கீதந்தான்
	சத்தத்தில் பொறந்த சங்கதிதான்.
	சட்ஜமமென்பதும் தைவதைமென்பதும் 
	பஞ்ச பரம்பரைக்கு அப்புறம்தான்"
எனும் வரிகளினூடாக நீங்கள் சொன்ன புரட்சிகரமான அந்தச் செய்தி.
	Finally, வெவ்வேறு தளங்களைத் தொட்டவையாக மட்டுமல்ல, வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்வதாக வானமே எல்லையையும், உன்னால் முடியும் தம்பியையும், வறுமையின் நிறம் சிகப்பையையும் கொடுத்தமைக்காக ! கட்டமைக்கப்பட்ட நேர்கோட்டு வாழ்விலிருந்து விலகி முதலில் Divorce, பின் திருமணம், அதன்பின் காதல் எனும் அவர்கள் பட கதாநாயகிக்காக ! வாழ்வின் வக்கிரங்களையும், சறுக்கல்களையும், எல்லா மனிதர்களும் எந்தநேரமும் வெளிப்படுத்தலாமென்கின்ற மூன்று முடிச்சு, அபூர்வராகங்களுக்காக! தமிழ் சினிமா அதுவரை பொருட்டாகக் கருதாத துணை நடிகர், நடிகையின் வாழ்வை மிக வலியோடு காட்டிய ஒரு வீடு இரு வாசலுக்காக ! திரைப்படம், நாடகம், தொலைக்காட்சித் தொடர் மூன்றும் எப்போதும் இணைந்தே செயல்பட வேண்டும் என்று சொல்லி, தொடர்ந்து இயங்கிக் கொண்டே ஒரு நதிபோல ஓடிக் கொண்டிருப்பதற்காக !
	After the second world war, ஐந்தாறு ஆண்டுகளுக்கு, ஆங்கில மொழிப்படங்கள் காட்டப்படும் நாடுகள் அனைத்திலும், "எந்த நடிகை உங்களைச் செயல் இழக்கச் செய்யும்படி மயக்குகிறார்?" என்ற கேள்விக்கான பதில் Reeta Hayworth என்பதே. Reeta, Guilda, Loves of karman என்ற வெற்றிப் படங்களில் நடித்தவர். உலகத் திரைப்படத்தின் மகா கலைஞன் எனப்படும் Arson Wells ஐ மணந்தவர். பின்னாளில் Wells ஐ விவாகரத்து செய்துவிட்டு உலகத்தின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான அலிகானை அவர் திருமணம் செய்து கெண்டார். தனது முதல் கணவரான Arson Wells பற்றி Reeta சொன்னார் - "ஒரு மேதையை யாரும் மணந்து கொள்ளக் கூடாது" என்று.
	தமிழ்த் திரையுலகம் K.B. எனப்படுகின்ற இந்த மேதையை மணந்து கொள்ளவில்லை என்றாலும் மனதாரக் காதலனாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. 
	ரித்விக் காடக்கைப் பற்றி சத்யஜித் ரே, """"இந்திய சினிமாவில் ரித்விக் கடந்து செல்ல முடியாத (unsurpassable) ஒருவராகவே இருக்கிறார்"" என்கிறார். K.B. அவர்களும் தமிழ் சினிமாவில் கடந்து செல்ல முடியாத ஒருவராகவே இருக்கிறார். எப்போதும் இருப்பார்.
	ரேயும், ரித்விக்கும் சமகாலத்தவர்கள். ஆனால், ரே அளவிற்கு ரித்விக் அறியப்படவோ, கொண்டாடப்படவோ இல்லை. ஏன் என்ற காரணத்தை Jacab Levich எனும் விமர்சகர் சொல்வார். -
	"Ray is the suitable boy of the Indian film, presentable, career – oriented, & reliably tasteful. Ghatak by contrast, is an undesirable guest, he lacks respect, has ‘Views’, makes a mess, disdains decorum”.
	Dear K.B. Sir, you are always desirable – though you have ‘views’, makes and disdain decorum. Hats off to you!.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *