ஒரு தமிழ் மனத்தின் ஏக்கக்குரல் சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நீதிநூல்கள் தமிழ்ச்சமூகக் கட்டுமானத்தில் மிக முக்கிய வினையாற்றி இருப்பதாக நாம் அறிகிறோம். திணைசார்ந்த வாழ்க்கை முறையை கொஞ்சம் உருமாற்றி அறம் சார்ந்த வாழ்க்கை முறையை இலக்கியங்கள் பேச ஆரம்பித்திருக்கின்றன. சங்க இலக்கியங்களில் பெரும்பாலானவை பார்வையாளன் அல்லது வாசகன் முன் அக / புற அனுபவ பகிர்வாகவே கவிதை மொழியப்பட்டு இருந்தாலும் செவியறிவுரூஉ கணிசமான இடத்தை வகிக்கின்றது. அரசனுக்குகோ தலைவனுக்கோ தனிமனித / சமூக ஒழுக்கம் குறித்து மொழியப்பட்ட செவியறிவுரூஉ கவிதைகளை வேராகக் கொண்டு எழுந்தவையே அற இலக்கியங்கள். சங்க கால அதிகார மையங்கள் உடைந்தபோது தனிமனித ஒழுக்கங்களும் கேள்விக்குறியாகி இருக்கலாம். இதன் விளைவாகவே அற இலக்கியங்களின் தேவை எழுந்திருக்கக்கூடும். அகம் புறம் என கவிதைக் கோட்பாடு இரண்டாக இருந்த சங்ககால முடிவுக்குப்பிறகு அறம் பொருள் இன்பம் என மூன்றாக உருவெடுத்திருப்பதை நாம் உணர முடிகிறது. திருவள்ளுவர் இந்தப் புதிய முறைக்கு வித்திடுகிறார். காமத்துப்பால் அகத்திணை மரபுகளை உங்வாங்கியே படைத்திருந்தாலும் அறம் பொருள் என்று தனிமனித / சமூக ஒழுக்கங்கள் குறித்த தமது கறாரான பார்வையை வெளிப்படுத்தியிருக்கிறார். வள்ளுவன் என்கிற மாபெரும் சக்தி சமூக மனவெழுச்சியின் விளைவாக நாம் கொள்ளலாம். சமகால பள்ளத்தாக்குகளை நிரப்பிய அந்த பேராறு மானுடம் உள்ள வரைக்குமான ஞானமாக உருத்திரண்டிருக்கிறது. தலைமுறை பல கடந்து ரத்தத்தின் வழியே தொடரும் ஒளியாக வள்ளுவர் மாற்றியிருக்கிறார். சமூக விழுமியங்களை பேசுகிற அற இலக்கியங்கள் காலம்தோறும் உருவாகிக்கொண்டே வந்திருக்கின்றன. பிற்கால ஔவையார் தொட்டு அதிவீரராம பாண்டியர் தொடர்ந்து பாரதி பாரதிதாசன் வரை நமக்கு அறஇலக்கியங்களின் சங்கிலித்தொடர் அறுபடாமல் தொடர்ந்தே வந்திருக்கின்றன. அற இலக்கியங்களின் முக்கிய பண்பாக இருப்பது எளிய முறையில் வெளிப்படையாக சுருக்கமாகச் சொல்லும் உத்திதான். வள்ளுவரே இதற்கும் வழிகாட்டியாக அமைந்திருக்கிறார். கோ. ஜீவானந்த ராஜூ அவர்கள் குறளின் குரல் என்கிற கட்டுரை நூலை நமக்குத் தந்திருக்கிறார். வாழ்வின் அடிப்படைப் பண்புகளும் தேவைகளும் கேள்விக்குறியாகி-யிருக்கும் இக்காலச் சூழலை மனதில் கொண்டு திருக்குறளின் வழியாக பதில் சொல்ல முனைந்திருக்கும் நூலே இது. மனைமாட்சி, புகழ், ஒழுக்கமுடைமை, பொறைபோற்றல், ஈகை, பண்புடைமை போன்ற விழுமியங்களை வள்ளுவரின் துணையோடு நாலடியார், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, கலைஞரின் கவிதைகள் ஆகியவற்றையும் இணைத்துக்கொண்டு தற்கால சூழலுக்கேற்றவாறு கட்டுரைகள் எழுதியிருக்கிறார். நாலடியார் மட்டுமன்றி பிற நீதி நூல்களும் ஆங்கங்கே எடுத்தாளப்படுகின்றன. இன்றைய மனித அவலங்களுக்கு எதிர்வினையாற்றுகிற தமிழ் மனத்தின் வெளிப்பாடுகளே இக்கட்டுரைகள். அளவுக்கு மீறிய நுகர்வு வெறி, அடிப்படை மனித மாண்புகளை மீறுதல், கட்டற்ற வாழ்க்கை முறை என இவர் காணும் சமூக ஒழுங்கீனங்களுக்கு தீர்வாக இக்கட்டுரைகளைப் படைத்திருக்கிறார். இந்நூலில் உள்ள அனைத்து கட்டுரைகளும் தனிமனித, சமூக அறத்தை வலியுறுத்த எண்ணி எழுதப்பட்டவையாகும். அறிவைத் தண்ணீரோடு ஒப்பிட்டுப் பேசும் வள்ளுவனின் குறள் நமக்கு ஆச்சர்யமாகவே இருக்கிறது. மணல் நிலத்தில் தோண்டுகிற அளவிற்கு சுரக்கும் நீர் போன்று கற்கின்ற அளவிற்கு அறிவு பெருகும் என்பது எவ்வளவு தர்க்கரீதியான அனுபவமாக வெளிப்பட்டு இருக்கிறது! கல்வி ஒரு சிலருக்கே சொந்தம் என்கிற மோசடித்தனத்தின் எதிர்க்குரலாக ‘மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும் கற்றார் அனைத்து இலர் பாடு’ என்று வள்ளுவர் கொதித்திருக்கிறக்கிறார். கல்லாதவர் எவராயினும் அவர் முகத்தில் இருப்பவை புண்களே என்கிறார். திரியின் தீபம் கண்டால் வணங்குவர், தீப்பற்றி எரிந்தால் இகழ்வர் அதுபோல் ஒரு வீட்டில் மூத்தவன் கல்லாதவனாக இருந்து இளையவன் கற்றவனாக இருந்தால் இளையவனையே மதிப்பர் என்கிறது நான்மணிக்கடிகை. கல்லாதவனை பூதம் என்கிறது சிறுபஞ்சமூலம். எழுத்தின் வனப்பே வனப்பு என்கிறது ஏலாதி. ஓதுவது ஒழியேல் என்கிறாள் ஔவை. எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்கிறது கொன்றை வேந்தன். கல்வியின் ஊங்கு இல்லை சிற்றுயிர்க்கு உற்றதுணை என்கிறது நீதிநெறி விளக்கம். பிச்சைப் புகினும் கற்கை நன்றே என்கிறது வெற்றி வேற்கை. உலகத்தில் கல்வி குறித்து இத்தனை மதிப்பளித்த சமூகம் வேறிருக்குமா எனத் தெரியவில்லை. ஆனால் கல்வி குறித்து மதிப்பு வைத்திருந்த சமூகம் படிக்காமல் கிடந்த வேதனையை என்னவென்பது? அல்லது படிக்கவிடாமல் செய்த கொடுமையை என்னவென்பது? இன்றைக்கு படித்தவர்கள் பெருகியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் நடத்தை குறித்து அவர்களின் பண்புகுறித்து நூலாசிரியர் கேள்வி எழுப்பியிருக்கிறார். கல்வி எதற்காக பயன்பட்டிருக்கிறது என்கிற வினா நம்முன் நிற்கிறது. நிற்க அதற்குத் தக என்றானே வள்ளுவன் அது நிகழ்ந்திருக்கிறதா என உரையாடுகிறார் கல்வி எனும் கட்டுரையில். ஈதல் குறித்து வள்ளுவரின் ஏக்கம் பெரிது. சாவைத்தவிர துயரமானது வேறில்லை, ஆனால் கொடுக்காமல் வாழ்வதை விட சாவு இனிமையானது என்கிறார் வள்ளுவர். அதுகுறித்து நூலாசிரியர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஒரு கதையைக் கூறி பிறகு ஈதல் குணத்தின் பெருமையை விளக்குகிறது இக்கட்டுரை. உழவு குறித்து மிகவிரிவான கட்டுரை ஒன்று இந்நூலில் இடம்பெற்றுள்ளது. ‘உழவே தலை’ என்பது வள்ளுவம். ஆனால் இன்று நிலைமை தலைகீழாகக் கிடக்கிறது. உடலுக்கும் சமூகத்திற்கும் கேடுதரும் வேலைகளைச் செய்ய முன்வரும் சமூகத்தில் உழவு செய்ய யாரும் முன்வரவில்லை என்றெழுதுகிற நூலாசிரியர் அதற்கான தீர்வினையும் கூறுகிறார். உழவுத் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்கினால் உழவு மேம்படும், வருங்கால சந்ததி வளமாய் வாழ்வர் என்கிறார். சீரைத்தேடின் ஏரைத்தேடு என்கிறது கொன்றைவேந்தன். இன்றைக்கு ஏரைத் தேடுபவர் எவருமில்லையே என்று நூலாசிரியர் கூறும் கூற்று நம்மை கலங்கவைக்கிறது. உழுவான் உலகுக்கு உயிர் என்று தமிழ்ச்சமூகம் உழவுக்கு மதிப்பளித்தது. அதனை நாம் மறந்தால் விளைவு என்னவாகும் என்பதனை கட்டுரையில் கோடிட்டுக்காட்டுகிறார். மருத்துவம் குறித்து ஒரு நல்ல கட்டுரை இடம் பெற்றுள்ளது. பழங்காலச் செய்யுள்கள் கூறும் மூலிககளின் மருத்துவக் குணத்தினை இக்கட்டுரையில் தொகுத்திருக்கிறார். குடும்ப உறவுகள் குறித்து இவரது ஆதங்கம் மூன்று கட்டுரைகளில் வெளிப்படுகிறது. அறநூல்கள் மற்றும் காப்பியங்கள் கூறிய குடும்ப உறவுகள் குறித்த கருத்துகளை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிற கட்டுரைகள் இவை. மாறுபட்ட கருத்துகள் இவற்றின் மீது நாம் கொண்டிருந்தாலும் இவரது அக்கறையை, அன்பைக் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது. நிம்மதியற்ற குடும்பங்களை பார்த்து வேதனையோடு பேசும் ஒரு மூத்தவரின் குரலாக இக்கட்டுரையினை நாம் காணலாம். அறநூல்கள் பயின்று அதன்படி வாழத்துடிக்கிற, தம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்திற்கும் அதனை வலியுறுத்திகிற ஒரு தமிழ் மனத்தின் ஏக்கக் குரல்தான் இந்நூல். தலைவர் கலைஞர் மீது மிகுந்த பற்றும் மதிப்பும் வைத்து அவரின் எழுத்துக்களில் தோய்ந்து தேவையான இடங்களில் மேற்கோள் காட்டி கட்டுரைகளை எழுதியிருக்கிறார். ஆய்வுக் கட்டுரைகளாக இல்லாமல் ஒரு வாசக அனுபவமாக வாழ்விற்கு தேவையான அறிவுரைகளைக் கூறும் ஆசிரிய மனோபாவம் தொனிக்கிற கட்டுரைகள் இவை. திரு.வி.க., மு.வ. போன்றோர் நமக்கு இம்மாதிரியான கட்டுரைகளின் முன்னோடிகளாக இருக்கின்றனர். நூலாசிரியர் அந்த வழியைப் பின்பற்றி மேலும் மேலும் பல நல்ல நூல்களைத் தரவேண்டும். * * * * *
No comment