சொல் எனும் தானியம் : சமகாலமும், சங்கமும் சங்கமிக்கும் அன்பின் அனற்பனி "காலை வந்து கடிக்கும் கவிதை தூண்டில் முள்ளை ஏமாற்றும்" - இந்திரன் மொழியைக் கொண்டாடும் சமூகம் தமிழ்ச்சமூகம் - மொழியை நீர்த்துப் போகச் செய்வதில் முதலிடம் வகிப்பதும் அதுவே. 'புனிதம்' என்ற பெயரால் அதனைப் பொற்சிறையில் வைத்துப் போற்றுவதும் 'அற்பம்' என்கிற சகதியில் சக்கையென மொழியைச் 'சல்லிசான' பண்டமாக ஆக்குவதில் தேர்ச்சி பெற்ற சமூகமும் நமதே. இரண்டிற்கும் இடைப்பட்ட நிதானமான அணுகுமுறை - மொழியை வாழ்வாதாரமான ஒன்றாகவும், அதே சமயத்தில், புனிதம் பண்பாட்டுச் சுமை இவற்றின் பூச்சுக்களற்ற பேச்சு, எழுத்து கருவியாகவும் கையாள்கின்ற முதிர்ச்சி இன்னமும் சரிவரக் கூடிவரவில்லை நமக்கு. இந்நிலையில் மொழியைக் கச்சாப் பொருளாகக் கொண்டியங்கும் பெண் படைப்பாளி - குறிப்பாகக், கவிதைப் பரப்பிலே இயங்குகின்ற படைப்பாளியின் முன், 'கணந்தோறும் வியப்பாக' கணந்தோறும் பெரும் சவாலாகக் காட்சியளிப்பது அவளது மொழிதான். அவளது மொழியென்பது வெறும் பேச்சு, எழுத்து ஊடகமல்ல - அது அவளது நிலம், நிலைப்பாடு, சமூகம், பண்பாட்டுப் பின்புலம், மிக முக்கியமாக அவள்தம் வாழ்வனுபவங்களின் கூட்டுத் தொகை. "வார்த்தைகள் நமது எச்சிலில் விழுந்த உடனேயே முதல்தர பொய்யாக மாறி விடுகின்றன" என்பார் மலையாளக் கவி கடம்மணிட்ட ராமகிருஷ்ணன். ஆனால் எச்சில் பட்டும் மெய்யாக மிளிர்வது கவிதை மட்டுமே. பாடுபொருளைக் கவிஞன் தீர்மானிக்கலாம் - ஆனால் கவிஞனை மொழிதான் நிர்ணயிக்கின்றது. ஒவ்வொரு கவிஞனின் மொழியும் தனித்துவமுடையதாக இருப்பது இதனால்தான். தனது வேர், வளர் சூழல், தகவமைப்பு, நம்பிக்கை இவற்றின் மொத்த அனுபவ வார்ப்பான மொழியைக், கூடுதல் பொறுப்புடன் கையாளவேண்டிய தெளிவும், கடப்பாடும் ஒரு கவிஞனுக்கு இருக்க வேண்டுமென நான் நம்புகின்றேன். அவள் ஒரு ரோஜாவைப் பாடவேண்டிய அவசியமில்லை - அவளது கவிதையில் ரோஜா மலர்ந்தால் போதும். இந்தப் புரிதலோடு எழுதுகின்ற, மிக முக்கியமான கவிஞர் சக்திஜோதி. 2000ற்குப் பின்பான தமிழ்க் கவிதைப் பரப்பில், சங்கக் கவிதைகளின் கைரேகைத் தடத்தோடு, தனக்கெனத் தனித்துவமான ஒரு மொழி வெளிப்பாட்டைக், கவிதைக்கான அழகியல் தொனியோடு வெளிக்கொணர்பவை சக்திஜோதியின் கவிதைகள். தனது நிலத்தின் வரைபடத்தைக் கவிதைக்கென்றிருக்கின்ற பூகோளத்தில் புகுத்தும் நுட்பமிக்கவர். அவரது கவிமொழி முழுக்க அத் தடயத்தின் பூக்களே - அதன் மணமோ சங்கமும், சமகால இருப்பும் பிசைந்தெடுத்த அனற்பனி நாற்றம். "காதல் ஒரு விழா நாட்குறிப்பு அல்ல" என்று ஹெலன் ஷெப்பீல்டு சொல்வார். சக்திஜோதிக்குக் கவிதை ஒரு விழா - நாட்குறிப்பு அல்ல. ஒரு மரத்தில் இலைகள் இயற்கையாக அரும்புவது போலக் கவிதை துளிர்க்க வேண்டும் என்றான் கீட்ஸ். சக்திஜோதிக்கும் அப்படித்தான் - ஒரு விதை, செடி, கவிமரமாகச் சட்டென்று கிளைத்துவிடுகின்ற அற்புதமான செழுமையும், ஈரமும், அன்பின் ஊற்றும் கொண்ட மண் மனம் சக்திஜோதியின் மனம். அந்த மனம் அவருக்குக் கவிதைக்கான ஆயிரமாயிரம் வாசல்களை அன்றாடம் திறந்துவிட்டபடியே இருக்கிறது. சூரியனின் கீழிருக்கின்ற அனைத்தையும் நேசிக்கின்ற, பாலூட்டி அணைக்கின்ற ஆதித் தாய் மனம் அது. அன்றியும், சூரியனைத் தாண்டியும் புது உலகங்களைத் தேடுகின்ற அம்மனதின் சொற்கள் தந்திருக்கின்ற விதை நெல்லே அவரது சொல் எனும் தானியம். இத்தொகுப்பு முழுவதையும் ஒரு கழுகுப் பார்வை பார்க்க முயற்சித்தால் - எதனொன்றின் பிரதியாகவும் இல்லாத புதியதொரு கவிமொழி (படிமம், குறியீடு, உருவகம்), மொழி துறுத்திக் கொண்டு கவித்துவத்தைப் பாதிக்காத எளிமை, கூறியது கூறலோ, விரித்தலோ அதிகமற்ற, அதேசமயம் பால் சுரக்கும் முலையெனக் கைவந்த ஒரு நெகிழ்ப் பிரவாகம் - இதுவே அவரது இலக்கணம் எனப் புலப்படுகிறது. சொல்லைத் தானியமாகப் பார்க்கின்ற இத் தலைப்பு, "சொல் பொருள் நிறைந்தது இது சூல் கொண்டு உயிர்களால் நிரம்பி இருக்கிறது" எனும் நெரூடாவை நினைவூட்டினாலும், சக்திஜோதியின் தானியத்திற்கான விதைநெல் தமிழ்ச் சிந்தனை தான். கலை விமர்சகர் இந்திரன் சொல்வது போல் "ஒரு தமிழ் Sensibility, ஒரு தமிழ் அழகியல், ஒரு தமிழ்த்தனம்" இவருடைய கவிதைகளின் உள் கட்டமைப்பை நிர்மாணிக்கின்றது. ஆனால் இதனை "வரலாற்றின் பழங்காலத்திற்குத் திரும்பிப் போதல்" என்கிற ஆபத்தான வாதத்தோடு ஒப்பு நோக்காமல், "தமிழ்ப் பண்பாடு என்பது தற்கால நிலைமைகளுக்கு ஏற்பத் தன்னை மறுபரீசீலனை செய்து கொண்டே போகிறது" என்கிற புரிதலோடு உள்வாங்குதல் வேண்டும். "எது ஒன்று அதனுடைய இயல்பில் இருக்கிறதோ அது அழகானது. நான் என் நிறத்தில் பூக்கிறேன். என் மணத்தில் பூக்கிறேன். எனது இயல்பில் எனது உணர்வில் இனி நான் அதிர்வேன்" எனும் இன்குலாபின் குரலை எதிரொலிப்பவை சக்திஜோதியின் கவிதைகள். அழகியல் என்பது இவரது உயரியல்போ என என்னை வியக்க வைத்த ஏராளமான கவிதைகள் இத்தொகுப்பில் என்னைக் கட்டிப்போட்டு, மயக்கத்தின் போகத்தில் ஆழ்த்துகின்றன. காதல், நதி, நிலம், மழை, பறவை, புலரி, கனவு, விதை, இசை, நிலா, சொற்கள், பருவங்கள், பெயர்கள், காற்று, வெளி, பயிர் - என விரியும் சக்திஜோதியின் உலகம் சொல்வது, பகிர்வது - கனிதலும், ஒப்புககொடுத்தலும், பூரணமாக்குதலுமான நேசத்தையும், அன்பையும் தான். இப்படி ஒரு கவி மனம் முழுவதும் அன்பால் பழுத்து இருக்க முடியுமா எனும் வியப்பு, "அடியாளம் வரையில் நிலையூன்றி நின்றிருக்கும் நேசத்தையே யாவருக்கும் பரிசளிக்க விரும்புகிறேன்" எனும் போது ஒரு துளி கண்ணீரால் முற்றடைகிறது. "கவிதை ஒன்றைச் சொல்லி இன்னொன்றைப் பெறவைப்பதற்கு யாவரும் ஒப்பக்கூடியதொரு வழியை அளிக்கிறது" என்ற ராபர்ட் ஃப்ராஸ்ட் ஒரு தீர்க்கதரிசி. "சங்கத்தின் அக இலக்கியத்தின் முக முக்கியமான கூறுகளான நெஞ்சொடு கிளத்தல், தனிமொழி, அஃறிணைப் பொருட்களுடன் பேசுதல், தெய்வம் பராவல், கனாக்கண்டு உரைத்தல், வியந்து கூறல்" ஆகிய அனைத்து வகையினையும் தனக்குள்ளே மீட்டெடுத்து ஒன்றைச் சொல்லி இன்னொன்றைத் தருகிறார் சக்திஜோதி. அவருடைய பெண், மண் அடையாளச் சின்னங்களையும் அற்புதமான வெளிப்பாடாகச் சுமந்திருக்கின்ற அம்மொழி சங்கத்தின் செல்லப் பிள்ளைதான். ஆனால் சங்கத்தை அச்சொட்டாக வடித்தெடுத்த பிரதிப் பிள்ளை அல்ல. "நீலக் கடலும் நீல வானமும் ஒன்றாகிப் போன கணத்தில் நீர் பிறந்த நிலத்தில் வெண்மையாக வெடித்திருக்கும் உப்புப் பாளத்தில் ஒளிர்கிறது அதன் நீர்மை" (நதி உறையும் நிலம்) என்று நீலக் கடல், நீர், நிலம், வெண்மை உப்பு எனும் சக்திஜோதியின் 'நீர்மை' எனும் ஆன்மா சுமந்த நிலப்பரப்பு, அகப்பாடலில் வருகின்ற, '.... எந்தையும் நீல் நிறப் பெருங்கடல் புக்கனன் யாயும்' உப்பை மாறி வெண்ணெல் தரீ இய உப்புவிளை கழனிச் சென்றனர் அதனால், பனி கரும் பரப்பின் சேர்ப்பதற்கு, 'இனிவரின் எளியன்' என்றும் தூதே (269) எனும் தலைமகள் சுட்டுகின்ற நிலம்தான். அத்தலைவியின் காதலே, சக்திஜோதியின் நீர்மையும். ஆனால் அது மட்டுமல்ல அவரது குரலும், தொனியும், செய்தியும். "மென்காற்று வீசுக¨யில் மதர்ந்தெழும் என் அழகில் மயங்கிக் கிடந்த நான் வானத்தையளக்கும் பறவையை முற்றுமறிந்த கணத்தில் பெண் என்பவள் கையகப்படுத்தப்படும் நிலம் அல்லவென உணர்ந்து நிமிர்ந்தேன்" (சூரியனை நேர்ந்து கொண்டிருப்பவள்) என்று அக்குரல் எழுகையில், இந்திரன் கூறிய, "தமிழ்ப் பண்பாடு என்பது பல்வேறு அடுக்குகள் கொண்டது" எனும் புரிதலுடனும், தற்கால நிலைமைகளுக்கு ஏற்பத் தன்னை நிலை நிறுத்திக் கொள்கின்ற தெளிவுடனும், முக்கியமாக, பழங்காலப் பெருமிதத்தில் மட்டுமே திளைக்காத, அடங்கிப்போகாத, வலுவுடன் நிற்கின்ற சமகாலத்திய பெண் குரல் அது என்பதுவும் துலங்குகின்றது. "நான் ஒரு கறுப்புப் பெண் சைப்ரஸ் மரத்தினைப் போல வலிமையானவள் என்னைப் பாருங்கள். இடம் காலம் சூழ்நிலை எல்லாம் வென்று அழியாதவளாய் நிதமும் வளர்கிறேன்" எனும் ஹார்லம் மறுமலர்ச்சியின் கருப்புக் கவிஞர் மேரி ஈவன்ஸின் ஆன்மாவே "ஒரு பெண் தன்னை முழுமைசெய்தல் எதுவெனில் தனக்கென இயங்குதலும் தான் மறந்து அசையாது நிலைப்பதுவும் உண்மையில் இயங்குதலின் உச்சம் நிலைத்திருத்தலே" (நிலைத்திருத்தல்) எனும் சக்திஜோதியின் உணர் நரம்பு ஓடும் உயிர்த்துடிப்பும்! சங்கப் பாடல்கள் அரசரை மட்டுமோ அல்லது மேட்டுக்குடியினரை விதந்து மட்டுமோ பாடப்பட்டவை அல்ல. அவை பாணன், விரலி, உழவர், உழத்தியர், பரத்தையைர் - முதலிய மக்களனைவரையும் உள்ளடக்கியவை. தனது 'பத்துப்பாட்டு எனும் பண்பாட்டு ஆவணம்' எனும் கட்டுரையில் பேரா. ப.மருதநாயகம்: "சங்க இலக்கியக் கவிதைகளின் தரம் பற்றிய மதிப்பீட்டில் வேறுபட்ட முடிவுகளுக்கு வழியில்லை. ஆனால் அவை காட்டும் பழந்தமிழ்ச் சமுதாயம் எத்தகையது என்பது பற்றி நம்மவர் சிலர் மேலை அணுகுமுறைகள் பற்றிய அரைகுறை அறிவுகாரணமாகவும், தமிழ் தவிர்த்த ஏனைய பழஞ்செல்விலக்கியங்கள், அவை காட்டும் சமுதாயங்கள் பற்றிய அறியாமை காரணமாகவும், புரட்சிக்கருத்துக்களைப் புதுமையாகச் சொல்ல வேண்டும் என்ற விழைவு காரணமாகவும் தவறான எண்ணங்களைப் பரப்பி வருகிறார்கள். அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் முதலில் வடமொழிப் பேராசிரியராகவும் இப்பொழுது தமிழ்ப் பேராசிரியராகவும் பணியாற்றிவரும் ஜார்ஜ் ஹார்ட் சங்க இலக்கியம் காட்டும் சமுதாயம் பற்றிப்பேச முழுத்தகுதி உடையவர். அவரது கருத்து பின்வருமாறு: சங்ககாலக் கவிஞர்கள் உயர்ந்தகுல மக்களின் வாழ்க்கையைப் பற்றி மட்டும் எழுதவில்லை. ஏனெனில் இப்பாடல்கள் பொதுமக்களின் வாழ்க்கையை விவரிப்பதாக அமைந்துள்ளன. அவர்களது உலகம் பொதுமக்களின் உலகம்தான். அவர்கள் கூறும் பண்பாட்டில் பல குலங்களும், பலருக்கு உயர்ந்த பதவிகளும், பலருக்குத் தாழ்ந்த பதவிகளும், அவரவர்க்கு ஏற்ற தொழில்களும், மரபும் இருந்தன என்பதை இப்பாடல்களால் அறிகிறோம். சங்கப் பாடல்கள் ஒரு குலத்தின் வாழ்வைப் பற்றியோ அல்லது பண்பாட்டைப் பற்றியோ மட்டும் விளக்கவில்லை. இதுதான் சங்கத் தமிழ்ப்பாடல்களின் தனித்தன்மை. எல்லாக் குலங்களின் வாழ்வும் அவர்களது இலக்கியத்தில் முக்கியம் இடம் பெற்றுள்ளன" என்கிறார். சொல் எனும் தானியம் தொகுப்பு முழுக்க சாமான்ய மக்களின், குறிப்பாகச் சமகாலப் பெண் ஆளுமையின் இருப்பு, சமூகச் சிக்கல், உணர்வுகள், அறிவுநிலை, தேர்வுகள், அன்பின் முதிர் தானியமென அவள் சரணடையும் சொற்கள், இவற்றையே பேசுகின்றன. "என்னிலிருந்து என்னை விடுத்துக் கொள்கிறேன் யாவற்றையும் நேசிப்பதன் வழியாக" என்பது 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனும் கணியனின் தொடர்ச்சிதானே. சக்திஜோதி முன்னிறுத்துகின்ற இப்பெண்ணின் இருப்பு மருதமும், பாலையும். வேம்பு, மருதா நதி நள்ளிரவு, கருமேகம், காற்றுக்காலம் வெயில், புங்கை - இவளது முதற்பொருள். சாம்பல் கோட்டை முனி, யட்சி, செவலை, பேய்ச்சி, மலைச்சி, பெரியநாச்சி, நாய், சாம்பல் நிறப் பூனை - இவளது கருப்பொருள். காதலும், காதலாய் இருத்தலும் உறங்க விருப்பமும், உறங்காதிருத்தலும் சொற்களும், சொற்களால் ஒளிர்தலும் - இவளது உரிப்பொருள். சங்க இலக்கியத்தின் மேற்சொன்ன அத்தனை செழுமையுடனும், உரத்துடனும் வெடிக்கின்ற சக்திஜோதியின் சொற்கள் கவிதைகளாக உருமாறுகின்ற கணங்கள் மிக அற்புதமானவை. அவ்வப்பொழுது நான் எனக்குள் எழுப்பிக்கொள்கின்ற, கவிதையில் பெண் மொழிப் புனைவு என்றால் என்ன - அது வெறும் ஆண்மையக் கருத்தாக்கங்களுக்கு எதிரான குரல்களை எழுப்புவது மட்டுமா? அல்லது தன்னுடைய உடலைக் கொண்டாடுவதும், பெண் பாலுணர்வினை தளையற்று முன்வைத்தலுமா? என்கிற கேள்விகளுக்கு "அவையும் தான், ஆனால் அவை மட்டுமே அல்ல இவை" எனும் பதிலைத் தருவதால் சக்திஜோதியின் கவிதைகளுடன் எனக்குக் கூடுதல் நெருக்கமும், இணக்கமும்! தனது நிலம், தன் வாழ்வனுபத்தின் செழுமை தந்த விதையில் கிளைக்கின்ற ஒரு அழகியல் மொழி, உரத்துக் கோஷமிடுகின்ற அறிவித்தல்களும், சவடால்களுமற்ற, ஆனால், தனது இருப்பைச், சுயத்தைத் திடமாகக், கண்ணோடு கண் நோக்கிச் சொல்கின்ற தெளிவும், தீர்க்கமுமான ஏறெடுத்தல் - இவையே இக்கவிதைகளின் பலம். இத்தன்மையே இவற்றின் கவித்துவம். பளபளக்கும் போர்வாளை விடுத்த, சுரீரெனச் சட்டென்று இறக்கும் சிறு கத்தி போன்ற சொல்லாடல் இவற்றின் உத்தி என்றாலும், 'அழகியல்' எனும் தேவதையின் பூரண அன்பைப் பெற்றவராகப் பிரவகிக்கிறார் சக்திஜோதி! அழகியல் ஓர் அறிமுகம் எனும் நூலில், "மன்பதை இறுத்தலின் பொதுவான ஒரு தனிப்பண்பை அழகியல் அனுபவம் வெளியிடுகிறது" எனும் கி.அ. சச்சிதானந்தம் அழகியல் அனுபவத்தின் பண்புக் கூறுகளாக, நுண்மையான உணர்வுக் கிளர்ச்சிகள், கூர்த்த முருகியல் மனோநிலை, உட்கிரகிக்கும் விழிப்பு மையம், வலுவூட்டப்பட்ட புலன் இயக்கம், மனோநிலை முதலியவற்றை முன்வைக்கிறார். இவை வாய்க்கப் பெற்ற ஒரு வாசகனுக்குச் சக்திஜோதியின் கவிதைகள் "உணர்வும் அறிவும் சேமிப்பும்" நிரம்பிய அழகியல் பெட்டகம். அழகியல் அனுபவத்தில் கண்களாலும், காதுகளாலும் மட்டுமே பார்ப்பதனாலும், கேட்பதாலும் உண்டாகும் மனப்பதிவுகளை நினைவில் அடிக்கடி புதுப்பித்துக் கொள்ள முடியும் எனவும் சொல்கின்ற சச்சிதானந்தத்தின் கூற்றை மெய்ப்பிப்பவை பின்வரும் சக்திஜோதியின் கவிதை வரிகள். "செவ்வரிசிப் பொறியென இளம் மஞ்சளில் செவ்வரியோடி புங்கை பூத்திருக்கும் கோடை .... உச்சிக்கிளை இலைகளுக்கிடையே தேன்ராட்டையில் அடர்ந்திருக்கும் பூஞ்சாறு வாசம் பரப்புகிறது ரீங்கரிக்கும் தேனிக்கள்" (பூவாசக் கோடைகாலம்) "வேம்பு இலையசையாது பூக்களை உதிர்த்தபடி உறங்கியது மரக்கிளையின் நடுவே கூட்டில் குஞ்சுகளோடு காகங்கள் துயின்றன. அரசமர இலை உரசலிடை அயர்ந்துறங்குகின்றன இரை தேடிக் களைத்த வேறு பறவைகள்" (மழை மறைவு நிலம்) "அடிவானத்திற்கு அப்பால் கசியும் அன்பில் பள்ளத்தாக்கில் பூக்கும் பூக்கள் தன் ஒளியை வாரியிறைக்கும்" (அடிவானத்தில் கசியும் அன்பு) "பகலெல்லாம் கசிந்து மீந்திருக்கும் பாலைச் சிசுவிற்கும் இரவைக் கணவனுக்குமாகக் காட்டி விளைநிலமாக்கிக் கொண்ட பெண்ணின் மார்பிலிருந்து காதல் பெருகி வடிந்து கொண்டிருக்கிறது நிலமெங்கும்" (முந்தானைச் சோளம்) "தேர்ந்த விரல்களின் கண்ணிவிடாது தொடுக்கும் பூக்களில் தப்பிவிடுகிற அரும்புகளைச் சேகரித்துப் புரண்டோடும் நதியில் மிதக்க விடுவோம்" (செறிந்த கணங்களில் திளைத்திருத்தல்) அற்புதமான அழகியல் அனுபவத்தைத் தருகின்ற மேற்சொன்ன கவிதைகளுக்கிடையே பளிச்சென்று பூத்திருக்கின்ற செவ்வந்திப் பூக்களின் ஒளிர்வுடன் தென்படுகின்ற உவமை நயங்களுமுண்டு. உதாரணத்திற்குப் பின்வருமொறு உவமை: "வெளிர் மேகம் நீல நிறம் வேண்டிச் சூழ்ந்திருக்க விடாப்பிடியாய் இறுகிக் கிடக்கும் பாறையைத் துளைத்து நீர் எடுத்து விடும் தேரை இவள் மனம் (என்னை வியக்கிறேன்) "புதுக்கவிதையில் மனிதப்படுத்தல் இல்லாத இடமில்லை. சாதாரணமான விஷயங்களும் மனிதப்படுதலினால் அழகாகின்றன. குளத்தின் சிற்றலையும் கரையோடிப் படியிடம் சிறுமூச்சு விட்டுச் செல்லும்" என்று நா.பிச்சமூர்த்தி எழுதும்போது, சிறுமூச்சு விட்டுச் செல்லும் என்ற சிறு வருணனை சிற்றலையை மனிதப் படுத்துகிறது. அதேபோல அதன் சிறுமூச்சைக் கேட்கும் கரையோரப் படியையும் மனிதப்படுத்துகிறது “என்பார் க. பூரணச்சந்திரன். சக்திஜோதியின் பின் வரும் கவிதைகளிலும் மிக நுட்பமாக இந்த மனிதப்படுத்துதல் கையாளப்பட்டிருக்கிறது. “வெயிலைக் குடித்து நகர்கிற நதியில் வெயிலை ஏந்தி விரிகிற நிலத்தில் பாம்பின் விஷம் போலக் காமம் தாங்கியே கோடையின் பூக்கள் மலர்கின்றன” என்று சக்திஜோதி எழுதுகையில் 'பாம்பின் விஷம் போலக் காமம் தாங்கும் பூக்கள்' இங்கு மனிதப்படுத்தப்படுகின்றன. போலவே, “எல்லா உயிர்களும் தன்னனவில் இன்புற்று இருக்க நினைப்பதே வாழ்வு எனச் சொல்லிவிடுகிறது நாவினால் தன்னை ஈரமாக்கிக் கொள்ளும் வெயிலில் உலர்ந்திருக்கும் பசு” எனும் கவிதையும், ஆறறிவற்ற பசு, தன்னிச்சையாக தன் நாவினை ஈரப்படுத்துதலை, மனிதப்படுத்துகிறது. சக்திஜோதியின கவிதைகளுடைய uniqueness அல்லது தனித்த வண்ணம் - அவற்றின் 'நாடோடித்தனமான அழகியல்'. இந்திரனின் சொற்றொடரான இந்த “Nomadic Aesthetics” ஐ முற்றிலும் உணரத் தருபவை இவரது இக்கவிதைகள். நிலமானவள், பெயர் அற்றுப் போனவள், காதலானவள், மருதாவானவள் என்றெல்லாம் பெண்ணைப் புனைந்து, படைக்கும் இவற்றின் வில் நாண் விரைப்பேற்றப்பட்டிருப்பது இந்த அழகியலால் தான். அப்பாக்கள் அறியாத புதிர் எனும் கவிதை மூன்று தலைமுறைகளைச் சார்ந்த அப்பா, அம்மா, மகள் - பற்றிப் புனையப்பட்ட, சமகாலத்தின் புரிதலோடு எழுதப்பட்ட, புகார்களற்ற கவிதை. புகார் சொல்லாத அதன் தொனியே அதன் வலியையும், புரிதலையும் கூர்மையாக்குகின்றது. என்னை உறக்கம் கலைத்து உலுக்கிய, ஒரு தொடர் தொந்திரவுக் கவிதை - யுகாந்திர உறக்கம். "எனக்கு முன்பாக உறங்காதிருந்த பெண்கள் பலரின் தசையிழைகளினாலும் நரம்புகளினாலும் என் உடல் கட்டப்பட்டுள்ளது" எனத் துவங்கி, "பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட தானியங்களையே நாம் உண்ணுகிறோம் பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட நூல் கொண்டே நாம் உடுத்துகிறோம். பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட மண் கொண்டே நாம் கட்டுகிறோம் கட்டப்பட்ட வீடு முழுக்க ஆணின் குறட்டை ஒலி நிறைந்திருக்கிறது" எனத் தொடர்ந்து.... "உண்மையில் நான் எனக்கென்று உறங்கவே விரும்புகிறேன் இத்தனை காலம் இத்தனை பெண்கள் உறங்காதிருந்த அத்தனை உறக்கமும் நான் உறங்கவே விரும்புகிறேன் சவம் போலொரு யுகாந்திர உறக்கம் என்னைத் தழுவட்டும்" என முடிகின்ற இந்தக்கவிதை தந்த உறக்கமற்ற இரவுகளில் வெடித்த கேவலையும், கண்ணீரின் ஈரவாசம் சுமந்த அழுத்தமான அன்பு முத்தமொன்றையும், நினைவுக் கிடங்கிலிருந்து உசுப்பி எடுத்து, இதோ, உங்களுக்கு இந்தக் கணம் மறுபடி தருகிறேன் - சக்திஜோதி. இந்த ஒரு கவிதைபோதும் எனக்கு. பெண் கவிஉலகில் இந்தக் கவிதை இந்த ஆண்டிற்கான சிறந்த, அற்புதமான படைப்பாக பதியப்பட வேண்டும். அதற்கான ஆழமான அத்தனை அடையாளமும் உள்ளது இக்கவிதையில். வலியும், மறக்கப்பட்ட வரலாற்றின் கசடும், விடுதலைக்கான வேட்கையும் நிரம்பிய தாபமும், ஆசையும், ஆயாசமும், நிராசையும், நெருப்பும் கொண்ட, ஒரு சமகாலப் பெண் இருப்பை, ரத்தமும் சதையுமாகச் சரிவிகித கவிதைச் செறிவு மொழியில் வெளிக்கொணர்ந்த இந்த ஒரு கவிதைக்கு முன் நான் விண்மீன்களை வியக்கின்ற சிறுமியாக மலைத்து நின்று கொண்டிருக்கிறேன். நீர்மை முத்தங்கள் அக்கவிதைக்காக உங்களுக்கு. சக்திஜோதி - உங்களுடைய உலகம் வீடு மட்டுமல்ல என்றாலும் அதுவும் தானென நானறிவேன். உங்கள் அன்பை திறப்புகளை அறிந்தவரே பருக முடியுமென்றாலும், "உன்னிடமிருந்து துவங்குகிற உன் காதல், பறவையைப் போல் திசையெங்கும் பறந்து அன்பின் முதிர் தானியத்தை" விதைத்தைபடியே தானிருக்கும். அதனைத்தான் பல்வேறு சொற்களில், சிற்சில உத்திகளில், நெகிழ்ந்தும், மலர்ந்தும், கனிந்தும், பகிர்ந்தும் இக்கவிதைகள் சொல்கின்றன. "அன்பைக் கொடுப்பதில், ஏற்பதில் மிச்சம் ஒன்றுமில்லாத" அற்புதமான மனோநிலையை இக்கவிதைகள் தன்னைத் தேடிவரும் ஒவ்வொரு வாசகனுக்கும் தரும் - கூடவே விதைநெல்லாய்ச் சேமித்து வைக்கக் கொஞ்சம் தானியங்களையும்! தொடர்ந்து பயணியுங்கள் சக்திஜோதி - காட்சிப் படுத்தாத ஆனால் கவனிக்கப்படுகின்ற இதே அழுத்தமான அழகுடன்! வசந்தம் எப்போதும் சொற்களென துணையிருக்கட்டும். மலைப்பூக்கள் அச்சொற்களுக்குத் தேன் தரட்டும். * * * * *
No comment