சட்டைப் பைகளும், சலம்பும் வாசனைகளும் – சூரிய தாஸின் கவிதைத் தொகுப்பை முன்வைத்து ஒரு பகிரல்

ஒவ்வொரு உடம்பிற்கும் ஒரு தனிப்பட்ட மணம் / நாற்றம் உண்டு. அது உடைகளுக்குள்ளும் ஊடுறுவி, நமக்குப் பரிச்சயமானதொரு நினைவாக ஞாபக அடுக்குகளில் தேங்கிவிடுகின்றது. அப்பாவின் 'சார்லி சென்ட்' கைக்குட்டை, அம்மாவின் ரசம் மணக்கும் முந்தானை, குழந்தைகளின் முதல் பிறந்த நாள் கவுன் - இப்படியான என் அடுக்குகளில் தனிப்பட்ட வாசனையுடன் கூடவே இருப்பது அப்பாவின் கைமடித்த வெள்ளைச் சட்டை வாசம்தான்.
	அவரது நினைவு எழும்புகையில், கண்மூடி, நாசியில் நிதானமாக நான் உள்ளிழுத்து மேற்கொணர்வது அந்தச் சட்டையின் வியர்வை வாசத்தைத்தான். இராஜபாளையம் மருத்துவமனையில் அவர் இறுதியாக அணிந்திருந்த அந்தச் சட்டையை வெகுகாலம் சலவைக்குப் போடவில்லை - அதன் மருத்துவமனை வாசனையே அப்பாவாய் சில காலம் எனக்குள்ளும் இருந்தது. இப்பொழுதும் அவரை அதிகமாகத் தேடுகின்ற துயரப்பொழுதுகளில் அச்சட்டை எனது தலையணையாகும் தான். அந்த வாசம் தான் அப்பா... அதுவே அவரது அண்மையை ஏதோ ஒரு ஸ்தூல வடிவில் எனக்குத்தருகிறது...
	இதனாலாயே எனக்குச் சூரியதாஸின் எனது சட்டைப்பையில் இன்னொருவர் வாசனை எனும் தொகுப்பின் பெயர் கூடுதலான ஈர்ப்பைத் தந்தது. பல்வேறு மனித மனங்களின் வாசத்தை நிரப்பியிருக்கின்ற அதனோடு உரையாடியதில் சில பகிர்வுகள்... உங்களோடு...
	'ஒவ்வொரு ஆயிரம் மைல் பயணமும் ஓரடி வைப்பில்தான் தொடங்குகின்றது. ஓரடி வைப்புடன் தான் முற்றுப் பெறுகின்றது' என்பார்கள். ஒரு கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை அது அச்சிலே பதிக்கப்படுவதற்கு முன்பாகவே தொடங்கி, முடிவுறாமல் புத்தக அட்டைகளைத் தாண்டிப் பயணித்துச் செல்லும். முதல் கவிதையில் தொடங்காமல் நடுப்பகுதிக்குச் சென்றால் என்ன எனச் சூர்யதாஸின் கடவுள் வாழ்த்து கவிதையிலிருந்து துவங்குகிறேன்.

	'கடவுளிடம் உருக்கமாக வேண்டினேன்
	எங்களுக்கு ஒரு நல்ல கடவுள்வேண்டுமென்று'
	என முதல் வரியிலேயே முரண்பாட்டைச் செதுக்கி விட்டார் - இப்போது இருக்கும் கடவுள் நல்லவர் இல்லை என்ற தொனியில். அதற்கான காரணங்களைச் கூறிச் செல்லும் சூர்யதாஸ் நிறைவாக,
	'கடவுள் இறந்து பலகாலமாகி விட்டது
	முதன் முதலாய் நடந்த 
	மதக்கலவரத்தின் போதே
	அவர் தற்கொலை செய்துகொண்டிருந்தார்'
என்று முடிக்கிறார். 
	"பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன் மனிதன் என்பவன் இல்லை (மேன் டஸ் நாட் எக்சிஸ்ட்) என்று அறிவிக்கிறார் ஃபூக்கோ. அதற்கு முன்னால் மனிதன் என்னும் உயிரினம் இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் அப்போது பிரபஞ்சத்துக்குக் கடவுள்தான் மையமாக இருந்தார். நீட்ஷே கடவுளின் மரணத்தை அறிவித்தபோது மனிதன் தனித்து விடப்பட்டான். கடவுள் இல்லாத உலகத்தில் தன்னைவழி நடத்திக் கொள்ளும் பொறுப்பு அவனிடமே விடப்பட்டது. அதன்பிறகுதான் மனிதனின் பிறப்பு நிகழ்கிறது" எனும் எம்.ஜி.சுரேஷின் கூற்றை நினைவுபடுத்திக் கொண்டேன். தனித்து விடப்பட்ட மனிதன் இன்னமும் கடவுளைத் தூக்கிக் கொண்டலைகிறான் - மறுப்பதற்காகவோ அல்லது குற்றம் சுமத்துவதற்காகவாவது. சூர்யதாஸின் மேற்சுட்டிய கவிதைக்கு இணையாக அடோனிஸ் என்ற அராபிய கவிஞரின் பின்வரும் கவிதை நினைவிலாடியது -
	'தோற்றுவிக்க வேண்டும் கடவுளரை நாம்
	இல்லை என்றால் இறந்தொழிய வேண்டும்
	கொல்லவேண்டும்-கடவுளரை நாம்.
	தொலைந்து போன கற்கள் கிசுகிசுக்கின்றன் 
	தம் இழந்த ராஜ்ஜியத்தில்'

	அடோனிஸ் பாக்கியவான். கடவுளைப் பற்றி முடிவெடுக்கும் உரிமை அவனுக்கு இருந்தது. சூர்யதாஸ் பாவம்.. இவர் முடிவெடுக்கும் முன்பாகவே கடவுள் தற்கொலை செய்து கொள்கிறார்.அது சூர்யதாஸின் கடவுள் மட்டுமா என்ன? கடவுள் எதனால் தற்கொலை செய்துக்கொண்டார்? மதக்கலவரம் மட்டுமா காரணம் என்றால்... இல்லை என்பதற்குச் சான்றாகச், சாட்சியங்களாக ஆதாரங்களை அடுக்கிச் செல்கிறார். வாழ்வியல் சீர்கேடு, சுற்றுச்சூழல் பாதிப்பு, அரசியல் முறைகேடு, இனப்பற்றின்மை, மானுடம் மதிப்பிழத்தல், பெண்நலன் அழிப்பு என எல்லாவற்றையும் பதிவு செய்கிறார். கவிதையில் இவற்றைப் பதிவு செய்யும் போது கலைத்துவத்தை இழந்து விடாமல் பிரச்சார நெடி இல்லாமல் சொல்வதால் தான் சூர்யதாஸை எனக்குப் பிடிக்கின்றது.
	'ஒர் உத்தியைக் கற்றுக் கொள்வதால் நமக்கது ஒரு வேலையைப் பெற்றுத்தரக் கூடும். ஆனாலதுவே நம்மைப் படைப்புத்திறம் உடையோராக்கிவிடாது.' என்பார் ஜே.கிருஷ்ணமூர்த்தி. வெறும் உத்திகளால் கவிதை எனும் புகைப் பிசாசைக் கட்டஇயலாதல்லவா - அதற்கு ஒரு சோறு பதமாக சூரியதாஸின் 
	'அணு உலை வயிற்றுப் போக்கால்
	பிரமாண்ட கழிப்பறையாகும் கடல்'
எனும் வரிகள் - 
	தமிழகத்தின் அணுஉலைக் கழிவெனும் நிகழ்கால பிரச்சினை, கடல் மாசு என்கிற எதிர்கால பிரச்சினை - இவ்விரண்டையும் ஒரு சேர சுட்டுகின்றன. இந்த வரிகளில் கொடி இல்லை. கோஷமில்லை, சங்கம் இல்லை, வெளிப்படையான அரசியல் சூளுரைப்பில்லை, பிரச்சாரமில்லை. ஆனால் இவையெல்லாமும் இருக்கிறது என்பதில்தான் அவரது கவித்திறனும் மிளிர்கிறது.
	'உங்களின் படைப்பு வசந்தகாலப் பணிபோலச் சிறந்ததாக இருக்கலாம். உலகில் பயன்பாட்டிய முக்கியத்துவத்தைக் கடந்த இயல் (ISM) என எதுவுமில்லை. ஒரு பொருள் தனது உண்மையான பயனை மக்கள் திரளுக்கு வழங்கும் போது மட்டுமே அது சிறந்தது' என்பார் மாவோ. அரசியலையும், அதன் அதிகாரத்தையும் செப்பனிடும் பணியைக் கவிதையில் செய்கின்ற அய்யா கவிஞர் இன்குலாபின் சமூக அறச்சீற்றத்தைச் சூர்யதாஸிடம் பார்க்க முடிகின்றது.	
	தற்போதைய நடைமுறையில் தகாத/நாகரீகமற்ற/ஆபாசமாகக் கருதும் மயிர் என்ற சொற் பிரயோகத்தை மகா அந்தஸ்து தந்து பட்டி தொட்டி எல்லாம் பரவச் செய்த தீப்பொறி இன்குலாபின் பின்வரும் பாடல் -
	'எதைஎதையோ சலுகையுன்னு அறிவிக்கீறீங்க
	நாங்க எரியும் போது எவன் மயிரை புடுங்க போனீங்க'
	'மனுசங்கடா' என்ற அந்தப் பாடலுக்குப் பின் இப்போது கவிஞர் சூர்யதாஸின் மூலம் அதே வீச்சுடன் இன்குலாபிடம் இருந்த அரசியல் சீற்றம் தனிமனித அக்கறையாக வெளிப்பட்டு இருக்கிறது.
	'பிறரை உண்மையாய் நேசித்தவர் பலரும்
	கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்
	எவனும் தற்கொலை செய்துகொண்டதாய் தகவலில்லை
	போடா / போடி போ
	நீ ஒரு மயிரும் புடுங்க வேண்டாம் முதலில்
	உன்னை நேசிக்க கற்றுக்கொள்ள்..'
என்ற சூர்யதாஸின் கவிதை வரியில் இருக்கும் சமூக அறச்சீற்றம் உத்திகளுக்கெல்லாம் கவலைப்படாத ஒரு படைப்பு மனதின் வெளிப்பாடுதான்.
	வாழ்வியல் சோகத்தை கவிதையில் காட்டும் சூர்யதாஸ் -
	'இருபக்கமும் ராஜாக்கள்இருந்து 
	ஆட்டத்தை தொடங்கினாலும் 
	சிப்பாய்கள் நாம் தான் வெட்டுபட்டு சாகிறோம்'
எனும் சதுரங்க ஆட்டத்தினூடே நிகழ்கால வாழ்வினை காட்டி செல்கிறார்.
	'நம் பல கவிதைகளில் வாழ்நிலம் பதிவாகாமல் தப்பித்து விடுவது எப்படியென விளங்கவில்லை. மீறி எழுதினாலும் அது அந்நிய வாழ்க்கையைத்தான் பிரதியெடுக்கின்றது. உணவில் இட்லி, தோசையெல்லாம் வராது. ரொட்டிதான் வரும். நம் மரபில் இல்லாத அந்நியச் சாத்தான் எங்கும் வலம் வருவார். மெடூஸா போன்ற கிரேக்க புராணத்துக் கதாபாத்திரங்கள் மொழி மாற்றுப் படங்களுக்கு வாயசைப்பது போல் காட்சிகள் இடம் பெறும் கவிதைகளும் இங்கு ஏராளம். ஆனால் வட்டார மொழி மட்டும் ச்சீய்...' எனும் நக்கீரனின் கணிப்புப் போல, இன்றைய இந்தச் சக்கைச் சூழலில் சூரியதாஸின் முனியும், பாலிடாலும் பச்சக்கென்று மனதில் ஒட்டிக் கொள்கின்றன.
	பெண்ணின் உள்ளத்தை, அவளின் ஆழ் மன ஏக்கத்தை நயமாகப் பின்வருமாறு பதிகின்றார் சூர்யதாஸ் -
	'ஒரு ரயில் பயணத்தில் மடியில் கிடத்தி கதை சொன்ன
	ஜாயக்கா அடிவயிற்று சூடு
	ஒரு பக்க காதோடும் கன்னக் கதுப்போடும்
	இன்னும் கதகதப்பாய் இருக்கிறது.
	வெடித்த பருத்திகாட்டில்
	முனியடித்து இறந்த முதிர்கன்னி அக்காவின் அருகில்
	பாலிடாயில் பாட்டில் கிடந்தது
	ஏனென்று இப்போது புரிகிறது.'
	வழுக்கி விழசெய்யும் விளக்கெண்ணை புன்னகை, வாழ்தலுக்கான எரிபொருள், முத்தங்களின் வாசனை, விழியற்ற அன்பு போன்ற கவிதைகளில் வரும் சொல்லாடல்கள் வாசிப்புக்கு உகந்தவை. சிறந்த உரையாடல்களை வாசக மனதில் நிகழ்த்துபவை.
	கரை ஒதுங்கிய வலம்புரி சங்கு - அகதிகள் ஈழம் பற்றி குறீயீட்டு மொழியில் பேசும் இத்தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதை.
	கலையென்பது சமயங்களில் நம்மிலிருந்து நாம் தப்பிக்க முயலும் ஒரு தற்காலிகப் புகலிடமாகத் தஞ்சமடையும் வடிகால் - அதனை நான் பலமுறை குற்றவுணர்வின் பாற் பயன்படுத்தி இருக்கின்றேன். மிகக் குறிப்பாக ஈழத்தின் இனப் படுகொலைகளுக்கு மெளன சாட்சியாக, நின்றிருந்த அவலப் பொழுதுகளில். ஆனால் சூர்யதாஸ் அவரது உணர்வை எதிர்கால நம்பிக்கையோடு முன்வைக்கிறார் பின்வரும் கவிதையில்.
	நவீன கவிதைக்கான வரம்பு மீறாமல் பிரச்சார அரசியல் சாயம் பூசாமல் ஆனால் காத்திரத்துடன் கரை ஒதுங்கும் ஒரு சங்கு. அதில் தன் பெயர் எழுதுபவன், தன்னைக் காட்சி பொருளாக்குபவன் குறித்துப் பேசுகிறது. இவர்கள் எல்லாம் யார் என்று வாசிப்பவனுக்கு தெரியாமலா இருக்கும்.. ..அந்த சங்கை ..
	'காதில் வைத்து கேட்டால் தெரியும்
	அது அகதி அல்ல 
	எப்போதும் தன்தாய்நாட்டிலேயே 
	வாழ்வதை சொல்லும்
	தன்னை கரை ஒதுக்கியவன்
	கதை முடியும் நாளில்
	ஊதும் அதன் ஓசை
	சங்கநாதம் என்றே அழைக்கப்படும்...'
என்று முடிக்கும் போது சங்கு என்பது சங்கு அல்ல தமிழ் அகதி என்ற புரிதல் வலிக்கின்றது.
	நாளுக்கொன்றாகப் பல கவிதைத் தொகுப்புகள் வெளிவந்து பயமுறுத்துகின்ற சூழலில், சமகாலச் சமூகத்தினை நுட்பமாக அவதானித்துப் பதிவு செய்த, பிரச்சாரத் தொனி தவிர்த்த தொகுப்பு இது. வாசகன் சரளமாக உள்நுழையும் எளிமையுடன், மண்தரைக் கோலமுடன் வரவேற்கின்ற அணுக்கமும் கொண்டிருக்கின்ற இத் தொகுப்பு, தமிழ் 'சென்சிபிலிட்டி'க்கு நெருக்கத்தில் வருகின்ற நவீன கவிதைகளைக் கொண்டிருக்கிறது.
	'ஒவ்வொரு முறை
	ஊர் திரும்பும் போதும்
	வெகு தொலைவு நகர்ந்திருக்கிறது
	எப்போதும்
	அங்கேயே இருக்கும்
	என் ஊர்'
எனும் கார்த்திகாவின் கவிதையைப் போல, ஒவ்வொரு முறை போகும்போதும் சூர்யதாஸின் சட்டையில் இன்னொருவர் வாசனை தான்! அதுவே அதன் வசீகரமும், புதுக்கமும்!
                                     * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *