சத்யாவின் கவிதைகள் – பனிமூட்டம் கலைக்குமொரு ‘அக்கக்கூ’

சத்யா அசோகன் ‘கடம்பர வாழ்க்கை’ கிராமத்திலிருந்து தலைநகர் டில்லியில் குடியேறி இருபத்தி ஐந்து ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர். கவிதைகளில் ஆர்வம் கொண்டவராகவும், புத்தக வாசிப்பில் ஆர்வமிக்கவராகவும் இருக்கின்ற இவருக்கு ஆங்கிலமொழிப் புலமையும் உண்டு. அவரது தெய்வங்கள் எனும் கவிதைத் தொகுப்பு - ‘தெய்வங்கள், பெண்ணியக் கவிதைகள், உறவுகள், நெடுங்கவிதைகள், குறுக்கவிதைகள் என வரையறுக்கப்பட்டு மொத்தம் 99 கவிதைகள் அடங்கியதாக வெளிவருகின்றது. தெய்வங்கள் எனும் தலைப்பிற்குள் வருகின்ற கவிதைகள் அனைத்துமே இதுகாறும் தெய்வங்கள் குறித்துக் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற பிம்பங்களைக் கலைத்துப் போடுகின்றன. 
“‘தப்பாட்டம் ஆடியவன் நீ
ஆட்டத்திலிருந்து அரங்கத்திலிருந்து 
உன்னையல்லவா 
விலக்கி இருக்க வேண்டும்” என நடராஜரைக் குற்றம் சுமத்துகிறது.
“கண்ணனைக் கும்பிடாதே
கள்வன் அவன் குளிக்கும் பெண்கள் துணியை
ஒளித்து வைத்து மகிழ்ந்திடுவான்” என்கிறது. 
“தாரத்தை வதைத்திட்ட நாரணனைக் கும்பிடாதே” எனவும்,
“பெண் அருமை தெரியாத பேயன், பித்தன்” எனவும் சிவனைச் சாடுகிறது.
ஆனால் முடிவாக,
	“விரித்த சடையும், வெண்ணீற்று வைரமும்
மானும், மழுவும், மயக்கும் புன்னகையும்
பஞ்சாட்ச்சர படியும், பசும்பொன் கூரையும்
எதிரே நிற்கையில்
உள்ளம் கொள்ளை போகுதே
உன் கள்ளம் மறந்து போகுதே
அம்பல வாணா! அருட்பிரகாசா!
உன் திருவடி சரணம்! சரணம்!”
எனச் சரணாகதித் தத்துவத்தில் நிலைக்கிறது.
	எனக்கு மேற்சுட்டிய கவிதைகளை விடச் சமகாலத்திய நிலையைக் கண்ணனைக் கொண்டு சொல்கின்ற,
	“புல்வெளிகளில் மேய்ந்த மாடுகள்
காகிதங்களை உண்டு உயிர் வாழ்கின்றன
வேணுகானமிசைத்த கண்ணன்
ஆக்சிஜன் மாஸ்க்குடன் அலைகின்றான்.
கரையான்கள் அரித்துச் சாப்பிட்டு விட்டதால் 
சிதைந்து போனது
ஊதப்படாத புல்லாங்குழல்”
எனும் கவிதை தான் பிடிக்கின்றது.
	பெண்களது கனவுகள் தொலைந்து போன யதார்த்தம், அவர்தம் குடும்பம், சமூகச் சுமை இவை பற்றியும் பேசுகின்றன சில கவிதைகள். ‘உறவுகள்’ எனும் தலைப்பில் அம்மா, அப்பா பற்றிய கவிதைகளில் நான் மிக ரசித்தவை கீழ்ச்சுட்டியவை:
	“கைப்பிடித்து நீ சென்றால்
கங்கையிலும் குதிக்கலாம்
அருகிலே நீ இருந்தால்
அனல் மேலும் நடக்கலாம்
...
என் கடவுள் என் தந்தை
உன் கடவுள் உன் தந்தை”
டில்லியில் வாழ்ந்தாலும் தன் வேரான கிராமீய வாழ்வோடு சத்யா இன்னமும் பின்னிப் பிணைந்திருக்கிறார் என்பதற்குச் சான்றாக ஏராளமான கவிதைகள் இத் தொகுப்பில் உள்ளன.
“தில்லி வானில்
நட்சத்திரங்கள் பார்த்ததாக நினைவேயில்லை.
யாரிவள் எனப் பார்க்கின்ற
ஒற்றை கருப்பு நாய்க்குத் தெரியுமா -
என் மூலாதாரம் இது தானென்று?”
எனக் கேட்கின்ற சத்யாவை,
	அக்கா குருவியின் ‘அக்கோவ்’ கிறீச்சிடலில் தன் உடன்பிறப்பைத் தேடுகின்ற சத்யாவை,
	‘சிலுக்கு சாடின் பாவாடை கட்டித் தீபாவளியைக் கொண்டாடிய’ நினைவைச் சுமந்து தில்லியில் ஏங்கும் சத்யாவை, எனக்கு மிகப் பிடித்திருக்கிறது. 
சுற்றுப்புறச் சூழல் குறித்துக் கவனம் கொள்கின்ற கவிதைகளில் என்னைக் கவர்ந்தது,
	“ரயில் தண்டவாளத்தில்...
ஆழிப் பேருயிர்
அதோ சிதறிக் கிடக்கிறது”
எனும் கவிதையே.
	தனக்குள் தேக்கிய பகிரப்படாத சொற்களின் வலிமை குறித்துப் பல கவிதைகள் பேசுகின்றன. தனிமை, இரவு, மௌனம், மரணம், கடவுள், பயணங்கள், இயற்கை எனப் பல்வேறு தளங்களில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் சத்யா. ஞானக்கூத்தன், நா.முத்துக்குமாரை நினைவு கூர்கின்ற கவிதைகள் இவரது ரசிக மனதைப் புலப்படுத்துகின்றன.
தில்லி வாழ்க்கை குறித்து,
	“அருகிருப்பவர்
யார் எனத் தெரியாமல்
அலைக்கழிக்கும்
அதிகாலை பனிமூட்டம்
அடுத்த வீட்டிலிருப்பவர்
யார் எனத் தெரியாமல்
நகரும் என் வாழ்க்கை ஓட(ட்ட)ம்”
என்பது போன்ற ஏக்கக் குறுங்கவிதைகளும் உண்டு.
	கவிதை எழுதுவதற்குக் கிராமத்துக் காற்றைப் பிறப்பிலிருந்து சுவாசித்திருக்க வேண்டும் என்கிற சத்யாவின் கருத்தோடு எனக்கு உடன்பாடில்லை. என்றாலும் ‘நகரத்துக் கவிஞர்கள் மன்னிக்க’ என்றெழுதிவிடுவதால் தன் மண் மீது கொண்ட தீரா நேசமெனவே அதனை நான் எடுத்துக் கொள்கிறேன்.
	அவரது இந்த பிறந்த மண் பாசமும், நேசமும், தில்லித் தெருக்களிலே சுற்றும்போது கூடத் தன் தொட்டில் சீலையின் கதகதப்பைப் போத்திக் கொள்ளும் தொப்பூள்கொடி உறவும் கத்யாவை நான் நேசிக்கப் போதுமானவை.
கவிதைகளின் உள்ளடக்கம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. கவிதைக்கான மொழியும் வசப்படுகின்ற தேடல் மனதும் சத்யாவிற்கு இருக்கின்றது. 
அவரது இம்முயற்சிக்கு வாழ்த்துகள்.
தொடர்ந்து பயணப்படுங்கள் சத்யா!
தில்லி இரவுகளின் கனாக்களில் உங்களுக்கு எப்போதும் ‘கடம்பர வாழ்க்கை’ தித்திக்கட்டும்...
                                                                             * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *