இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில்

ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது

உங்கள் கையில்தான் உள்ளது.

– கலாம்

மறக்க முடியாத கல்வி :

என்னுடைய குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்க்கும்போதெல்லாம், ஐந்தாம் வகுப்பில் எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஸ்ரீ சிவசுப்பிரமணியம்தான் நினைவுக்கு வருவார். பறவைகள் எப்படிப் பறக்கின்றன என்பதை விளக்கக் கரும்பலகையில் ஓர் பறவையைத் தத்ரூபமாக வரைந்து கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் பாடம் எடுத்தார். வகுப்பின் முடிவில் “பறவை எப்படிப் பறக்கிறது என்பது இப்போது புரிந்ததா?” என்று கேட்டார்.

எனக்குப் புரியவில்லை என்று சொன்னேன். இப்படி நான் சொன்னதும் மற்ற மாணவர்களுக்காவது புரிந்ததா என்று கேட்டபோது அவர்களும் புரியவில்லை, என்றனர். இதைக் கேட்டுக் கொஞ்சமும் சோர்ந்துபோகவில்லை அந்த அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்.

அன்று மாலை எங்கள் வகுப்பின் ஒட்டுமொத்த மாணவர்களையும் ராமேஸ்வரம் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். மணல் குன்றுகளை முட்டி ஆர்ப்பரிக்கும் அலைகளையும் கொஞ்சும் கீச்சல்களுடன் பறந்து செல்லும் பறவைகளையும் அங்குக் கண்டு குதூகலித்தோம். பறவைகள் எவ்வாறெல்லாம் றெக்கை விரித்துப் பறக்கின்றன என்பதைக் கண்கூடாகப் பார்த்து ரசித்தோம்.

பிறகு அவர் ஒரு கேள்வி எழுப்பினார், “இந்தப் பறவைகளின் இன்ஜின் எங்கே இருக்கிறது, அதற்கு எப்படிச் சக்தி கிடைக்கிறது?” தனக்கான சக்தியையும் உந்துதலையும் பறவை தன் வாழ்விலிருந்தே மூட்டிக்கொள்கிறது. இவை அனைத்தையும் வெறும் 15 நிமிடங்களில் எங்களுக்குப் புரியவைத்தார் எங்கள் ஆசிரியர். இதுவே உண்மையான கற்பித்தல் முறை என்று அப்துல் கலாம் தன் பள்ளி நாட்களைப் பற்றி விவரிக்கின்றார். இப்படிப்பட்ட ஏட்டுப் பாடத்தையும் செயல்வழியையுந்தான் சன் ஷைன் பள்ளியில் கற்றுக் கொடுக்கின்றார்கள். அத்தகைய பள்ளியின் மாணவ நேசன் தமிழ்மன்ற விழாவில் உரையாற்றுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

 

கலைஞர் பற்றிய கவிதை:

எல்லா குழந்தைக்கும் நிலாவை காட்டி தான் சோறு ஊட்டுவார்கள்.

திருக்குவளையில் ஒரு குழந்தைக்கு சூரியனைக் காட்டி சோறு ஊட்டினார்கள்.

அந்தக் குழந்தை சோறு சாப்பிடவில்லை சூரியனையே சாப்பிட்டது.

 

அந்த நெருப்பு படைப்பானது.

நெருப்பை எப்படி பொட்டளம் கட்ட முடியும்..

 

அவரின் எழுதுகோல் தலை குனிந்த போதெல்லாம், தமிழன் தலை நிமிர்ந்தான்.

 

எனும் நா.முத்துக்குமாரின் தலைவர் கலைஞர் பற்றிய கவிதை மிக முக்கியமான ஒன்றாகும். மாணவப் பருவத்தில் சூரியனைப் போல் ஓயா உழைப்பால் உறங்காக் கனவைச் சுமந்தால்தான் உலகை வெல்ல முடியும்! அழியாப் புகழை அள்ள முடியும்! என்று சாதித்துக் காட்டினார்.

 

மாணவப் பருவத்தில் லெனின் :

பதினேழு வயதிலேயே புரட்சிகர மாணவர் கூட்டத்தில் லெனின் கலந்துகொண்டார்.  எனவே நாடு கடத்தப்பட்டார்.  அவர் மீது பலத்த போலீஸ் கண்காணிப்பு இருந்து வந்தது. பின்னர் வரவிருக்கும் புரட்சிகரப் போராட்டத்திற்குத் தேவையான அறிவனைத்தையும் அவர் இந்தக் காலக்கட்டத்தில் தான் சேகரித்தார்.  அப்பொழுதுதான் அவரது மார்க்சிய கம்யூனிசக் கருத்துக்கள் ஓர் இறுதி வடிவம் பெற்றன.  மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் ஆகியோரது மாபெரும் லட்சியத்திற்கும் போதனைகளுக்கும் லெனின் ஓர் உண்மையான சீடரானார்.

தொழிலாளர்களால் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் தெளிவாகவும் எளிய நடையிலும் தொழிலாளர்களிடையே பிரச்சாரம் செய்தார்.  துண்டுப் பிரசுரங்களையும், கட்டுரைகளையும், சிறு நூல்களையும் எழுதி புரட்சிகரப் பணியில் பேரார்வத்துடன் லெனின் மூழ்கினார்.  தொழிலாளி வர்க்கத்தினது போராட்டத்தின் முன்னேற்றப் பாதையைச் சுட்டிக்காட்டினார்.

 

லெனினை முந்திய கலைஞர்:

தமிழ்நாடு மாணவர் மன்றம்:

இந்திக்குத் தமிழ் நாட்டில் ஆதிக்கமாம் — நீங்கள்
எல்லாரும் வாருங்கள் நாட்டினரே!
செந்தமிழ்க்குத் தீமை வந்தபின்னும் — இந்தத்
தேகமிருந்தொருலாபமுண்டோ?

எப்பக்கம் வந்து புகுந்துவிடும் — இந்தி
எத்தனை பட்டாளம் கூட்டிவரும்?
அற்பமென்போம் அந்த இந்திதனை — அதன்
ஆதிக்கந் தன்னைப் புதைத்திடுவோம்.

என்று பாவேந்தர் பாரதிதாசன் முழங்கினார். தன் தமிழ்கொண்டு எட்டுத் திக்கும் தழல் பரப்பினார். அதைத் தமிழ் மக்களின் உள்ளங்களிலெல்லாம் பதியம்போட்டவர் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர்.

தலைவர் கலைஞர் தன் பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து, ‘இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பு” என்ற இயக்கத்தைத் தொடங்கினார். இந்தி எதிர்ப்புப் பேரணிகளையும் நடத்தினார். தடையின்றிப் பொங்கி வரும் தமிழ்ப்பற்றினைத் தமிழ் நிலப்பரப்பெங்கும் பரப்பினார். அந்தப் போராட்டத்துக்கு மாணவர்களைத் திரட்டுவதற்காக, 1941-ஆம் ஆண்டு, தனது 16-வது வயதில், ‘மாணவ நேசன்’ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்தினார்.

தன் பதினேழாவது வயதில், தமிழ்நாடு மாணவர் மன்றம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, அதன் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார். கலைஞர் உருவாக்கிய தமிழ்நாடு மாணவர் மன்றம், திராவிட இயக்கத்தின் முதல் மாணவர் அணி என்ற சிறப்பைப் பெற்றது. க.அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், மதியழகன் உள்ளிட்டோர் இந்த அணியில் இணைந்து செயல்பட்டனர்.

 

மாணவ  நேசன்  எனும் வரலாற்றுத் தொடக்கம்:

பத்திரிகையின் வீரியம் உணர்ந்து 16வது வயதில் மாணவ நேசன் என்ற கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினார் தலைவர் கலைஞர். உலகிலேயே 16 வயதில் பத்திரிகை நடத்திய ஒரே தலைவர் கலைஞர்  மட்டுந்தான். கையெழுத்து பத்திரிகை நடத்திய கலைஞர், அந்த வயதிலேயே அதிலே கார்ட்டூன்களையும் வரைந்து வெளியிட்டார்.

அதில் குறிப்பிடும்படியானது இங்கிலாந்து இளவரசர் தன காதலிக்காக அரச பட்டத்தையே துறப்பது பற்றிய கருத்துப்படம். இளவரசன் ஒருவர் பட்டம் விடுகிறார். அந்தப் பட்டத்தின் நூல் அறுந்து பட்டம் தனியே பறக்கிறது. இதைத் திகைத்துப்பார்க்கும் இளவரசனைப் பட்டத்தை இழந்த இளவரசன் என்று வர்ணிக்கும் கருத்துப்படம் முன்பக்கத்தில் போட்டு மாணவ நேசன் வெளியானது. அந்தப் படத்தை வரைந்ததும் தலைவர் கலைஞரே.

  

கலைஞரைச் செதுக்கிய பள்ளி நாட்கள்:

திருக்குவளையிலிருந்து திருவாரூருக்குப் படிக்க வந்த தலைவர் கலைஞர், பள்ளி இறுதி வகுப்பு வரை தான் படித்தார். பத்தாம் வகுப்பில் அவருக்குத் துணைப்பாடமாக வைக்கப்பட்டிருந்த புத்தகம்  ‘பனகல் அரசர் வரலாறு’. நீதிக்கட்சித் தலைவரான அவரின் வரலாறு, கலைஞரை ஒடுக்கப்பட்டோர் வாழ்வு குறித்துச் சிந்திக்க வைத்தது.

படிக்காதவர்கள் உலகம் முழுதும் உள்ளார்கள். படிப்பு மறுக்கப்பட்டவர்கள் இந்தியாவில் மட்டும் தான் உள்ளார்கள்! இங்குள்ள சமூகத்தின் தனித்தன்மையான சிக்கல்களைச் சிந்திக்க வைத்தது அந்தப் புத்தகம் !. ஐம்பது பக்கங்கள் உள்ள பனகல் அரசர் வாலாற்றை மனப்படமாகச் சொல்லும் ஒரே மாணவராகக் கலைஞர் மட்டுமே அந்த வகுப்பில் இருந்துள்ளார்.

படிப்பும் பணியும் மறுக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் அவலத்தைப் பார்ப்பவராகக் கலைஞரை மாற்றியது அந்தத் துணைப்பாட நூல்! அதே காலகட்டத்தில் எழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம், இவரை மொழி காக்கும் உணர்வு நோக்கி உந்தித் தள்ளியது. பட்டுக்கோட்டை அழகிரியின் சொற்பொழிவு அப்பொழுது திருவாரூரில் நடந்துள்ளது. கேட்கச் சென்ற இவர் மனத்தைப் பகுத்தறிவுத் தீ பற்றிக் கொண்டது.

ஒத்த கருத்துடைய மாணவர்களை ஒருங்கிணைத்தார்.  ‘சிறுவர்  சீர்திருத்தச்  சங்கம்’  பிறந்தது. ‘மாணவநேசன்’ என்னும் கையெழுத்தேடு கருத்துக் பரப்பும் கருவியானது. மாதம் இருமுறை வருவதாக இதழ் இருந்தது. அதில் எழுதித் தீர்க்கும் ஒரே ஒருவராகக் கலைஞரே இருந்தார். எழுத்தார்வத்தை ஆற்றலாகச் சாணை பிடித்துத் தந்தது ‘மாணவ நேசன்’.

  

கலைஞரின் தமிழ் வெறி:

பள்ளி இறுதி வகுப்புக்கு (1942-43) வந்து விட்டார். பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் அன்பு கணபதி தொகுத்த தமிழ்ப்பாட நூல் பாடமாக இருந்தது. அதில் பாரதிதாசன் பாடலும் இருந்தது, ‘அழகின் சிரிப்பு’ நூலின் முதற்பாடலான ‘காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன். பாடலின் அழகு, தலைவர் கலைஞர் மனத்தைக் கொள்ளை கொண்டது.

திடீரெனப் பள்ளிக்கு மாவட்டக் காலத்திலிருந்து ஆணை வந்தது. ‘ பாரதிதாசன் பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர். அவர் பாடலைப் படித்தால் மாணவர்கள் கெட்டுவிடுவார்கள். பாரதிதாசனின் அழகின் சிரிப்புப் பாடலைக் கற்பிக்கக்க கூடாது’. இப்படித் தான் அந்த ஆணை அறிவித்தது.

பாரதிதாசனின் அழகின் சிரிப்புப் பாடலுக்குத் தடை விதித்தது தஞ்சை மாவட்டக் கழகம்! அதனை எதிர்த்துக் கூட்டம் ஏற்பாடு செய்து விட்டார் பள்ளி மாணவரான தலைவர் கலைஞர். கண்டனச் சொற்பொழிவாற்றச் சென்னையிலிருந்து டர்ப்பிடோ ஏ.பி.சனார்த்தனம் அழைக்கப்பட்டார். வழிச் செலவுக்கு ஐந்து உரூபா பணவிடை அனுப்பப்பட்டது.

கலைஞர் தம் வாழ்வில் ஏற்பாடு செய்த முதல் கூட்டம், திருவாரூரில் நடந்த அந்தக் கூட்டம் தான் ! கூட்டம் தந்த தமிழுணர்ச்சி மாணவர்களைத் தீயாய்ப் பற்றிக் கொண்டது. கருணாநிதி ‘அருட்செல்வம்’ ஆனார். ‘மாணவ நேசன்’ இதழிலும் அந்த பெயரையே இடம் பெறச் செய்தார். உடன் பயின்ற கே.ஆர்.ரங்கசாமி ‘இராம.அரங்கண்ணல் ஆனார். சாமிநாதன் ‘செம்மல் தங்கோ’ ஆனார்.

கருத்துணர்ச்சி தெளிவு பெற்றதால் மாணவர் அமைப்பின் பெயர் ‘ தமிழ்நாடு  தமிழ்  மாணவர் மன்றம்’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. அமைப்பின் தொடக்க விழாவிற்கு வாழ்த்துப்பா வழங்குமாறு 11.11.1942 ஆம் நாள் பாவேந்தர் பாரதிதாசனுக்குக் கலைஞர் கடிதம் எழுதினார்.  பாரதிதாசனிடமிருந்து 20.11.1942 ஆம் நாள் அஞ்சலில் வந்த வாழ்த்துப்பா, இன்று நாடறிந்த பாடலாகி விட்டது.

“தமிழ்ப் பொழிலில் குயில்பாடும் திருவாரூரில்

தமிழ்நாடு தமிழ் மாண வர் மன்றம் காண்

கிளம்பிற்றுக் காண் தமிழ்ச் சிங்கக் கூட்டம்

கிழித்தெறிய தேடுது காண் பகைக் கூட்டத்தை”

பள்ளி மாணவனாக எள்ளி ஒதுக்காமல் பாரதிதாசன் மதித்து அனுப்பிய வாழ்த்துப்பா கலைஞரின் எழுத்தார்வத்திற்கு உரமேற்றியது.  தம் எழுத்துலக வளர்ச்சியைத் தலைவர் கலைஞரே நினைவு கூர்கிறார்.

“என் 15 ஆவது வயதில் ‘மாணவ நேசன்’ என்னும் மாதம் இருமுறைக் கையெழுத்து ஏடு நடத்தினேன். பாரதிதாசன், பெரியார், சிங்காரவேலர், கைவல்யம், அண்ணா முதலியோரின் எழுத்துக்கள் என் எழுத்தாற்றலுக்கு உரமாயின. உலக எழுத்தாளர்களில் தாய் எனும் உலகம் போற்றும் நாவலைத் தந்த மாக்ஸிம் கார்க்கி என்னைக் கவர்ந்தார். இந்திய எழுத்தாளர்களில் வ.ரா, மு.வ, என்னைக் கவர்ந்தனர்” தம் எழுத்துலக ஈடுபாட்டுத் தொடக்க காலமாக 1938 இலிருந்து 1942 வரையிலான காலத்தைக் கலைஞர் குறிப்பிடுகிறார். இலக்கிய விளைச்சலுக்கு விதைப்புக்குக் காலமானது, திருவாரூர் வ.சோ. உயர் நிலைப் பள்ளியில் அவர் படித்த காலம்!

இப்படி தலைவர் கலைஞரால் கண்ணுங்கருத்துமாக வளர்த்தெடுத்த மாணவ நேசன்  என்ற பத்திரிகையின் பெயரில் அமைந்த இந்தத் தமிழ் மன்றத்தின் ஒப்புயர்வில்லா விழாவில் மாணவத் தங்கங்களின் நடுவே உரையாற்றுவதில் பெருமை கொள்கிறேன்.

  

இந்திய வம்சாவளி மாணவியின் சாதனை:

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணம் பால்டிமோரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் திறமையான மாணவர்களைக் கண்டறியும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையம் உலகெங்கிலும் உள்ள தலைசிறந்த மாணவர்களை அடையாளம் கண்டு வருகிறது. இதற்காக உயர்தர நிலை சோதனைத் தேர்வையும் அது நடத்தி வருகிறது.

உலகெங்கிலும் உள்ள மேம்பட்ட மாணவர்களை அடையாளம் காண மற்றும் அவர்களின் உண்மையான கல்வித் திறன்களின் தெளிவான விவரத்தை அறிய இத்தேர்வு நடத்தப்படுகிறது. அதாவது ஒரு மாணவர் 5 ஆம் வகுப்பு படிக்கிறார் என்றால், அவரது உண்மையான திறமை 10ஆம் வகுப்பு மாணவருக்கு ஈடாக இருக்கும். இதனைக் கண்டறிவதற்கான சோதனைத் தேர்வுதான் இது.

அந்த வகையில், நடத்தப்பட்ட SAT, ACT சோதனை தேர்வில் 84 நாடுகளைச் சேர்ந்த சுமார் 19,000 மாணவர்கள் பங்கேற்றனர். அதில் கலந்து கொண்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த 11 வயதான சிறுமி நடாஷா , உலகின் தலைசிறந்த மாணவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 5ஆம் வகுப்பு படிக்கும் அச்சிறுமியின் திறன்கள் 8ஆம் வகுப்பு படிக்கும் ஒருவருடன் ஒத்துப்போவதாக தேர்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

இந்த திறமைத் தேடல் சோதனைத் தேர்வுகளில் பங்கேற்று சாதனை புரிந்துள்ள சிறுமி நடாஷா, தேர்வு முடிவுகள் தன்னை மேலும் சிறப்பான முறையில் செயல்பட தூண்டுவதாகத் தெரிவித்துள்ளார். இந்த மாணவர்களைக் கொண்டாடுவதில் தங்களுக்கு மகிழ்ச்சி என்றும் அறிஞர்களாக மாணவர்களின் வளர்ச்சியை வளர்க்க உதவுவதில் பெருமை கொள்வதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மையம் தெரிவித்துள்ளது.

சன் ஷைன் பள்ளிக் குழந்தைகளே! மாணவர்களே! உங்களிடம் நான் ஒரு கோரிக்கை வைக்க ஆசைப்படுகிறேன். நீங்களும் இந்தப் பல்கலைக்கழகம் நடத்துகின்ற போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று தமிழ்நாட்டின் பெருமையை, உங்கள் அறிவாற்றலை உலகிற்குச் சொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றேன். மேலைநாட்டு மாணவர்களின் அறிவாற்றலுக்கு எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்லர் நம் தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்கள். அதிலும் குறிப்பாக நம் சன் ஷைன் மாணவச் செல்வங்கள் உலக மாணவர்களுக்கே அறிவாற்றலில் சவால் விடும் ஆற்றலும் ஆளுமையும் பெற்றவர்கள். அத்தகைய உங்களை வருங்காலத்தில் இது மாதிரியான போட்டிகளில் கலந்துகொண்டு உங்களுடைய IQ ஆற்றலை வெளிப்படுத்துவதற்கானா கோரிக்கையை உங்கள் முன் வைக்கின்றேன்.

 

உலகின் மகிழ்ச்சியான குழந்தைகள்:

உலகிலேயே மகிழ்ச்சியாக இருக்கும் குழந்தைகள் பற்றிய தரவரிசை ஆய்வு ஒன்றை, ஐக்கிய நாடுகள் சபை ஒவ்வோர் ஆண்டு வெளியிடுகிறது. இதில் பின்லாந்து எப்போதும் முன்னணியில் இருக்கிறது. மகிழ்ச்சியின் நறுமணத்தில் திளைக்கும் குழந்தைகள், அறிவை ஆர்வத்துடன் சுவைப்பதில் புதிர் எதுவும் இல்லை.

பின்லாந்து கல்வி முறையின் இத்தகைய சிறப்புகள் குறித்து அறிந்து வருவதற்காக, உலகமெங்கும் உள்ள கல்வியாளர்களும், பிரதிநிதிகளும் அந்த நாட்டை நோக்கி குவிகின்றனர். உலகின் 56 நாடுகளில் இருந்து 15,000 பிரதிநிதிகள் ஒவ்வோர் ஆண்டும் செல்கின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணியில் கணிசமான சதவீத கல்விச் சுற்றுலாவின் மூலமே வருகிறது.

ஆனால், இப்படி தங்களை நோக்கி வீசப்படும் புகழ்மாலைகளை பின்லாந்தின் கல்வியாளர்களும் அமைச்சர்களும் ஓடோடி வந்து ஏந்திக்கொள்வது இல்லை. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “‘பின்லாந்து கல்வி முறைதான் (பின்னிஷ் கல்வி முறை) உலகிலேயே சிறந்தது எனச் சொல்ல முடியாது. ஏனெனில் “OCED” அமைப்பின் ஆய்வில் எல்லா உலக நாடுகளும் பங்கேற்காத நிலையில் இப்படி ஒரு முடிவை ஏற்க முடியாது.

எங்களைவிட சிறந்த கல்விமுறையும் இருக்க வாய்ப்பு உள்ளது”‘ என்கிறார்கள். இல்லாத நாற்காலியைத் தேடி ஏறி அமர்ந்து, தனக்குத்தானே முடிசூட்டிக்கொள்ளும் தற்பெருமையாளர்கள் நிறைந்த உலகில் இது பண்புமிக்க பார்வை. மதிக்கத்தக்க மனநிலை. பின்லாந்தில் ஆசிரியர் பணி என்பது, மிகுந்த சமூகக் கௌரவம் உடையது.

பின்லாந்து கல்விக்கூடங்களில் இருக்கின்ற அதே அன்புமயமான சூழலும் அறிவைப் பட்டை தீட்டக் கூடிய  சுகமான சூழ்நிலையும் திகழ்கின்றது என்றே நான் கருதுகிறேன். சன் ஷைன் பள்ளி மாணவர்களே! நீங்கள் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்! இன்னும் கொஞ்சம் கடுமையாக உழையுங்கள்! நிச்சயமாக ஒரு பின்லாந்து மாணவனைக் காட்டிலும், ஒரு அமெரிக்க மாணவனைக் காட்டிலும், ஒரு சீன மாணவனைக் காட்டிலும் நீங்கள் சிறந்து விளங்க முடியும் என்பதை இந்தத் தருணத்திலே நான் சொல்வதிலே பெருமிதம் கொள்கின்றேன்.

 

யார் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம்:

தாமஸ் அல்வா எடிசன் அறிவுக்குறை கொண்ட மாணவர் எனப் பாடசாலையில் இருந்து வெளியேற்றப்பட்டவர். பின்னாளில் ஆயிரம் கண்டுபிடிப்புகளுக்கு அவரே அதிபதி.   லூயி பாஸ்டியர் சராசரி மாணவனாகப் பாடசாலையில் இருந்தவர் பின்னாளில் நோபல் பரிசு வாங்கினார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை, அவர் ஆசிரியர், “இவனைப் போன்ற மூளை அழுகிய மாணவனை நான் பார்த்ததே இல்லை” என்றார் அவர் ஆசிரியர். ஆனால் அவரே 20-ஆம்  நூற்றாண்டின் அதி சிறந்த விஞ்ஞானியானார்.

எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே..
பின் நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்ப்பதிலே.. அன்னை வளர்ப்பினிலே
நான் ஆராரோ என்று தாலாட்ட..
இன்னும் ஆராரோ வந்து பாராட்ட

என்ற பாடல் வரிகள் என் நினைவில் வந்து போகின்றன. நல்ல சூழ்நிலையும் அன்பான வளர்ப்பு முறையும் அரவணைப்பான ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் இருந்தால் எந்த ஒரு சாதாரண மாணவனும் மாண்பினை ஆக்கக்கூடிய அசாதாரணமான மாணவனாக ஆகி சாதனை புரிய முடியும். யாரையும் வெற்றியாளனாக மாற்றிக் காட்டும்  அசைக்க முடியா ஆதாரம். அதற்கு, நான் பேசுவதற்கு ’மாணவ நேசன் தமிழ் மன்றத்தில் மேடையிட்டு வாய்ப்பளித்த   இந்த சன் ஷைன் பள்ளிக்கூடமே சாட்சி என்று இந்த இனிய தருணத்தில் சொல்லி மகிழ்வதில் நான் பெருமைப்படுகிறேன்.

 

பாரதி தன் மகள்களுக்குச் சொல்லிக் கொடுத்தது:

ஓடி விளையாடு பாப்பா! – நீ
ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! – ஒரு
குழைந்தையை வையாதே பாப்பா!.

எனும் பாடல் மகாகவி பாரதி எழுதிய மிகப் புகழ்பெற்ற பாடல் வரிகளாகும். பொதுவாக இந்த ஓடி விளையாடு பாப்பா என்கிற பாடலை இரண்டாம் மூன்றாம் வகுப்பில்  குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கக்கூடிய பாடலாகவே, இதனை நாம் பாவித்து வருகின்றோம். ஆனால் இந்தப் பாடலில் மிக அழுத்தமான கருத்தைப் பெண் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதாக இந்தப் பாடல் பாரதியாரால் எழுதப்பட்டுள்ளது. இன்றைய சூழ்நிலையில் பெண்கள் எதிர்கொள்ளும் பல்வேறு சிக்கல்களுக்கு இந்த வரிகளில் பாரதி சொல்லிக் கொடுக்கின்றான்.

இந்தப் பாடல் உருவான சூழ்நிலையே மிக சுவாரசியமான ஒன்றாகும்.  ஒரு நாள் பாரதி எங்கேயோ வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வருகின்றார். பாரதியின் இரண்டு மகள்கள் தங்கம்மாள் பாரதி,  சகுந்தலா பாரதி ஆகிய இருவரும் வீட்டில் உட்கார்ந்து அச்சாங்கல் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அச்சாங்கல் வெங்கச்சங்கல் போன்று இருக்கக்கூடிய சிறு கற்களைத் தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடுகின்ற பெண்களுக்கான ஓர் எளிய விளையாட்டு. சம்மணங்கால் போட்டு அமர்ந்து கற்களைத் தூக்கிப் போட்ப்டு பிடித்து விளையாடுவதும் அந்த கற்களைப் பிடிக்கும் போது தவறவிட்டால் அவர்கள் தோற்றதாக சொல்லி, எதிராளியிடம் கொடுத்து ஆடச் சொல்வதுமாக இந்த விளையாட்டு அமைந்திருக்கும். அப்படியான விளையாட்டை அவரின் இரண்டு மகள்களும் விளையாடிக் கொண்டிருக்கும்போது பாரதி அதனைப் பார்த்து என்ன செய்கிறீர்கள் என்று கேட்கிறார்.

நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று அவர்கள் பதில் சொல்கிறார்கள். அப்பொழுது மகாகவி பாரதி விளையாட்டு என்றால் உட்கார்ந்து கொண்டு விளையாடக் கூடாது ஓடி ஆடி விளையாட வேண்டும். அதாவது, சுறுசுறுப்பாக இங்கும் அங்கும் ஓடி ஆடி விளையாடுவதே விளையாட்டுக்கான இலக்கணமாகும் எனப் பாரதியார் தன் மகள்களுக்கு சொல்லிக் கொடுக்கின்றார். மேலும், பெண்கள் பெண்களோடு சேர்ந்து விளையாடுவது என்கிற நிலையை மாற்றி ஆண்களோடு சேர்ந்து முரட்டுத்தனமாக விளையாடச் சொல்கிறார் மகாகவி பாரதி.

பெண்கள் என்றால் அடக்க ஒடுக்கமாக, அடங்கி ஒடுங்கி மூலையில் முடங்கிக் கிடக்கின்ற அந்தச் சூழ்நிலையை மாற்றித் தன் மகள்களை வீதியில் சென்று சென்று ஓடி ஆடி விளையாடுங்கள். ஆண்களுக்கு நிகராக விளையாடுங்கள் என்று சொல்லி இந்தப் பாடலை எழுதியிருக்கின்றார்.  இந்த இலக்கிய தரம் மிகுந்த பாடல் உருவாவதற்கான சூழல் தன் மகள்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு விளையாடுகின்ற அந்தக் காட்சியைப் பார்த்து உட்கார்ந்து கொண்டு விளையாடுவதற்கு பெயர் விளையாட்டே கிடையாது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பாடலை ஆக்கித் தந்துள்ளார். அவர் மகள்களுக்காக உருவாக்கித் தந்த பாடல் இன்றைக்கு அதற்குப் பின் வந்த அனைத்துத் தமிழ் மகள்களுக்கான பாடலாக ஆகிவிட்டது.

இன்றைக்கு சிறுமிகள் முதல் இளம் பெண்கள் வரை பல்வேறு தரப்பு பெண்களும் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றார்கள் அதற்கு தீர்வாக பாரதி அற்புதமாக வரிகளைக் கோபாவேஷமாக சொல்லிச் சென்றுள்ளார்.

பாதகஞ் செய்பவரைக் கண்டால் – நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! – அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

என்கிற வரிகளே அதுவாகும். அச்சப்பட்டு ஒதுங்கி நின்று தலைகுனிந்து பெண்கள் செல்லக்கூடாது. புவியில் எவருக்கும் அஞ்சாத தலைநிமிர்வோடு பெண் பிள்ளைகள் செயல்பட வேண்டும் என்பதைத் தன்னுடைய அற்புதமான எளிய கவிதைகளின் மூலமாகப் பாரதி நமக்கு எடுத்து கூறி சென்றுள்ளார்.

 

யார் சிறந்த மாணவர்?

பள்ளியே பரபரப்பாக இருந்தது. இந்த ஆண்டின் மிகச் சிறந்த மாணவருக்கான விருது இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறது. இதற்காகக் கலை, இலக்கியம், விளையாட்டு, சமூக அக்கறையில் சிறந்து விளங்கும் மாணவர்களைத் தேர்ந்தெடுத்திருந்தனர். ஒரு வாரமாக அனைவருக்கும் பல்வேறு பரிசோதனைகள் வைக்கப்பட்டன. இன்று இறுதிப் பரிசோதனை. போட்டியில் இருக்கும் மாணவர்களை எல்லாம் ஓர் அறையில் வைத்து, கதவைப் பூட்டிவிட்டனர். ஒருவருக்கும் காரணம் புரியவில்லை.

“பூட்டிய அறைக்குள் என்ன பரிசோதனை?” என்று மயில்  வாத்திடம் கேட்டது.  “அக்கா, எனக்கு மட்டும் எப்படித் தெரியும்? உன்னை மாதிரிதான் நானும் யோசிச்சிட்டு இருக்கேன்” என்று மைனாவைப் பார்த்தது வாத்து. அது பதில் சொல்லாமல், பாடிக்கொண்டிருந்தது.

“இந்த ஆந்தையைக் காணோமே? இதுவரை எல்லாப் பரிசோதனைகளிலும் அதிக மதிப்பெண் எடுத்துவிட்டு, இறுதிப் பரிசோதனைக்கு வராமல் எங்கே போனதோ?” என்று சிட்டுக்குருவி கவலைப்பட்டுக்கொண்டது. “இங்கேதான் இருக்கேன் தங்கை. கொஞ்சம் நன்றாக உற்றுப் பார். நாற்காலியும் நானும் ஒரே வண்ணமாக இருப்பதால் உனக்குத் தெரியவில்லை” என்று கண்களை உருட்டியது ஆந்தை.

“கண்ணை உருட்டாதே. எனக்குக் கொஞ்சம் பயமா இருக்கு” என்று சிட்டுக்குருவி சற்றுத் தள்ளி உட்கார்ந்துகொண்டது. “எனக்குத் தெரிந்து அழகிய மயில், வலிமையான கழுகு, இரவில் அலையும் ஆந்தை, புத்திசாலி வாத்து… இவர்களில் ஒருவருக்குத்தான் சிறந்த மாணவர் பட்டம் கிடைக்கப் போகிறது” என்று புறா சொன்ன உடன், கிளி, குயில் போன்ற பறவைகள் சண்டைக்கு வந்தன.

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டு, எல்லோரும் அமைதியானார்கள். இரண்டு கொக்குகள் சிறிய வண்டியை இழுத்துக்கொண்டு வந்தன. அதிலிருந்து உணவை எடுத்து, ஒவ்வொருவருக்கும் தட்டு நிறைய வைத்தன.

“எல்லோரும் சாப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டு, கொக்குகள் மீண்டும் கதவைத் தாழிட்டன. “ஆஹா, இன்று ராஜ விருந்து!” என்றபடி சிட்டுக்குருவி உணவைக் கொத்த ஆரம்பித்தது. “இப்படி ஒரு உணவை இதுவரை சாப்பிட்டதில்லை” என்றது கிளி.

காகம் மட்டும் சாப்பிடாமல், ஜன்னல் அருகில்  தட்டைத் தூக்கிக்கொண்டு சென்றது. ஜன்னல் திண்டில் அமர்ந்துகொண்டு, “நண்பர்களே, எல்லோரும் இங்கே வாருங்கள். சுவையான உணவு கிடைத்திருக்கிறது. பகிர்ந்து உண்ணலாம்” என்று அழைத்தது. அருகில் பறந்துகொண்டிருந்த காகங்கள் ஜன்னலை நோக்கி  வந்தன. ஆளுக்குக் கொஞ்சம் தங்கள் அலகில் கவ்விக்கொண்டன. அருகில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன.

சிறிது நேரத்தில் எல்லாப் பறவைகளும் சாப்பிட்டு முடித்தன.  குருவி, கிளி, புறா போன்ற சிறு பறவைகள் கால் பகுதி உணவை மட்டுமே சாப்பிட்டிருந்தன. கழுகு போன்ற பெரிய பறவைகளாலும் முழு உணவையும் சாப்பிட முடியவில்லை. எல்லோர் தட்டிலும் உணவு மீதி இருந்தது. காகம் ஒவ்வொரு பறவை அருகிலும் சென்று, “உங்கள் வயிறு நிறைந்துவிட்டதா? வீணாகும் இந்த உணவை எடுத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டது.

சகப் பறவைகள் ஏளனப் பார்வையுடன் உணவை எடுத்துக்கொள்ளச் சம்மதித்தன. ஆர்வத்தோடு தட்டுகளை எடுத்துக்கொண்டு ஜன்னல் அருகே வைத்தது காகம். வெளியே ஏராளமான காகங்கள் வந்துவிட்டன. அனைத்தும் சந்தோஷமாகச் சாப்பிட்டு முடித்தன. காலியான தட்டுகளை ஓர் ஓரமாக அடுக்கி வைத்தது காகம். அப்போது கதவு திறக்கப்பட்டது. “உங்கள் அனைவரையும் தலைமை ஆசிரியர் மேடைக்கு வரச் சொன்னார்” என்றது கொக்கு.

போட்டியில் பங்கேற்ற பறவைகள் மேடை நோக்கிச் சென்றன. காகம்  வகுப்பறையைப் பார்த்தது. உணவுப் பொருட்கள் அறை முழுவதும் சிதறிக் கிடந்தன. வெளியில் இருந்த தன் நண்பர்களை அழைத்து, சுத்தம் செய்யச் சொன்னது. இரண்டே நிமிடங்களில் அறை சுத்தமானது. பிறகு மேடை நோக்கி வேகமாகச் சென்றது காகம்.

“இத்தனை நேரம் என்ன பண்ணிட்டிருந்தே?”

“அறையைச் சுத்தம் செய்தேன்.”

“அதுக்குதான் நாங்க இருக்கோமே. சீக்கிரம் போ” என்றது கொக்கு.

காகம் மேடையில் ஏறி ஓரமாக நின்றுகொண்டது.

தலைமை ஆசிரியர் இருவாட்சி மேடைக்கு வந்தது. “உங்களுக்கான பரிசோதனைகள் அனைத்தும் முடிந்துவிட்டன.  யார் சிறந்த மாணவர் என்று அறிவிக்கும் நேரம் வந்துவிட்டது. யாராக இருக்கும் என்று மேடையில் உள்ளவர்கள் சொல்லலாம்” என்று கேட்டது.

சிலர் தாங்கள்தான் என்று தன்னம்பிக்கையோடு சொன்னார்கள். இன்னும் சிலர் மகிழ்ச்சியோடு மற்றவர்களைப் பரிந்துரைத்தார்கள். “உங்கள் எல்லோருக்கும் திறமை இருக்கிறது. ஒருவரின் திறமையை இன்னொருவருடன் ஒப்பிட முடியாது. அதனால் குணத்தை வைத்துதான் இப்போது யார் சிறந்த மாணவர் என்பதைத் தேர்வு செய்திருக்கிறோம். அதுக்காக வைக்கப்பட்ட பரிசோதனையில் நீங்கள் யாருமே சொல்லாத ஒரு பெயர்தான் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த ஆண்டின் மிகச் சிறந்த மாணவர் காகம். அறையில் அடைத்து வைத்தாலும்கூட, தான் மட்டுமே உண்ணாமல் தன் நண்பர்களை அழைத்து உணவைப் பகிர்ந்துகொண்டது.

நீங்கள் அனைவரும் சாப்பிடாமல் வீணாக்கிய உணவை, மற்றவர்களுக்குக் கொடுத்தது. நீங்கள் சிந்திய உணவுப் பொருட்களைச் சுத்தம் செய்தது. நீங்களே சொல்லுங்கள், காகத்தைவிட வேறு யாரைத் தேர்ந்தெடுக்க முடியும்? இந்த முடிவை அனைவருமே ஏற்றுக்கொள்வீர்கள்” என்று இருவாட்சி சொன்னதும், கரகோஷம் அதிர்ந்தது.

காகத்தின் தலையில் அழகான சிறிய கிரீடம் அணிவிக்கப்பட்டது.

 

உங்களைப் போல் ஆக வேண்டுமென்பதே லட்சியம்:

பதினாறு வயது நிரம்பிய ஒரு பள்ளிக்கூட மாணவன். 1960களில் அமெரிக்காவின் வலிமைமிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடியைச் சந்திக்கின்ற வாய்ப்பு அவனுக்குக் கிடைத்தது. அந்த மாணவன் அமெரிக்க அதிபரைப் பார்த்து பிரமித்துப் போகாமல் மிக இயல்பாக அவரிடத்திலே நெருங்கி ஒரு சில வார்த்தைகள் பேசுகின்றான்.

அவனோடு சகஜமாக உரையாடிக் கொண்டிருந்த ஜான் எஃப் கென்னடி, அதாவது இந்த நாடு உனக்கு என்ன செய்தது என்பதை விட, இந்த நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்பதே முக்கியம்! என்று சொல்லி அமெரிக்காவை உத்வேகத்தோடு ஆண்டு கொண்டிருந்த அந்த ஜான் எஃப் கென்னடி அந்த மாணவனிடம் ’’உன் எதிர்கால லட்சியம் என்ன? என்று கேட்கிறார்.

இளங்கன்று பயமறியாது என்ற அடிப்படையில் துறுதுறுவென்று இருந்த அந்த 16 வயது மாணவன் ’’இன்றைக்கு நீங்கள் இருக்கக்கூடிய வெள்ளை மாளிகையின் அதிபர் நாற்காலியில் நாளை நான் இருக்க வேண்டும் என்பதே என் லட்சியம்’’ என்று சற்றும் யோசிக்காமல் அச்சமின்றி கூறினானாம். அப்படி கூறிய  அந்த மாணவன் தான் கூறியதைப் போலவே, 30 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவின் 42வது ஜனாதிபதியாக பதவியேற்று சாதனை புரிந்தான். அவர்தான் வில்லியம் ஜெபர்ஸன் பில் கிளின்டன்.

அறுபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ஜூலை 24, 1963 அன்று, வெள்ளை மாளிகையின் ரோஸ் கார்டனில் ஜனாதிபதி ஜான் எஃப் கென்னடியுடன் பில் கிளிண்டன் கைகுலுக்கினார். அமெரிக்கன் லெஜியன் பாய்ஸ் நேஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிளிண்டனுக்கு 16 வயது. அந்தக் கைகுலுக்கல்தான் தனது பொதுச் சேவை வாழ்க்கையை ஊக்கப்படுத்தியதாகக் கிளிண்டன் கூறுகிறார். கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு, 1993 ஜனவரியில், பில் கிளிண்டன் 42வது ஜனாதிபதியாக பதவியேற்றார்.

மாணவத் தங்கங்களே உங்களுக்குள் ஒரு லட்சியத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த தமிழ் மன்ற விழாவில் இலக்கியத்தை நீங்கள் படிக்கின்ற போது, அந்த இலக்கியம் உங்களுக்குள் பெரிய லட்சியத்தை உருவாக்கி உங்களை வழிநடத்தும். நீங்கள் சோர்ந்து விழுகின்ற போதெல்லாம் உத்வேகத்தோடு எழுந்து நடை போடக்கூடிய ஒரு சூழலை இலக்கியத்தினுடைய வரிகள் உங்கள் ரத்த நாளங்களில் சக்தியை பாய்ச்சும் என்பதை இந்த இனிய தருணத்திலே உங்களிடத்தில் நான் சொல்லிக் கொள்வதிலே மகிழ்ச்சி அடைகின்றேன்.

 

போட்டியான உலகை வெல்வது எப்படி?

கொள்ளத்தான் இயலாது கொடுத்தாலும் நிறைவன்றிக் குறைவு படாது! என்று எண்ணும் எழுத்தும் கற்றதன் விளைவு? இன்று அறிவுப் போட்டி. இது அழிவுப் போட்டியா? பொறுத்திருந்துதான் யலாது கொடுத்தாலும் என்று பார்க்க வேண்டும். அதற்கு ஏற்ப நம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டும். உலக செஸ் சாம்பியன் கார்ஸ் சூப்பர் கணினியை வீழ்த்தி விட்டார். என்றால் அவரையே வெற்றி கொண்டுவிட்டான் தமிழ்நாட்டில் பிரக்ஞானந்தா. அப்படியானால் மனிதன் படைத்த சூப்பர் கம்ப்யூட்டரா? இறைவன் படைத்த மனித மூளையா? எது பெரிது ?

இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் ஆன முதல் இந்தியர் என்ற பெருமை பெற்ற சாதனையை இரண்டாவது முறையாகவும் நிழ்த்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா. இவருக்கு முன்பாக,  துபோன்ற சதுரங்க உலகின் கவனத்தை ஈர்த்தவர் யுக்ரேனின் செர்கே கர்ஜாகின். 2002 இல் அவர் தமது சாதனையை நிகழ்த்தினார். அந்த வகையில் பதின்ம வயதுக்குள் நுழைவதற்கு முன்பே கிராண்ட் மாஸ்டராகும் தகுதியை நிரூபித்தவர்கள் இந்த இரண்டு வீரர்கள் மட்டுமே.

எந்தவொரு ஆட்டத்திலும் உலகின் நம்பர் ஒன் வீரருக்கு ஒரு அடி முந்தியிருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாக இருக்கும். சில வீரர்கள் தங்களுடைய லட்சியமாக நம்பர் ஒன் வீரரை தோற்கடிப்பதை வாழ்நாள் கனவாகவும் கருதியிருப்பர்.

ஆனால், யதார்த்தத்தில் எத்தனை வீரர்களும் இந்த விஷயங்களை சாத்தியப்படுத்தியிருப்பார்கள் என்றால் அவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இங்கே இந்தியாவில் தமிழ்நாட்டில் பிறந்த பிரக்ஞானந்தா தனக்கு முன்னால் இருந்த உலக செஸ் சாதனையாளரை ஒரு முறை அல்ல இரண்டு முறை வீழ்த்தி சதுரங்க உலகையை தன் பக்கம் பார்க்க வைத்திருக்கிறார். அதுவும் முதல் முறை வெற்றி பெற்ற பிறகு அடுத்த மூன்றே மாதங்களில் இரண்டாம் முறையாகவும் அதே உலக சாம்பியனை வீழ்த்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா.

சதுரங்க போட்டிகள் மீது 17 வயது கூட ஆகாத பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் ஒன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்திருக்கிறார். ஆம்! மாணவர்களே முயன்றால்… நன்கு வித்தை பயின்றால் முடியாதது எதுவுமில்லை.

 

முயற்சியே கடவுள்:

யாளியும் டயனோசரும் எங்கு போயின? அதனை அறிய எலும்புக்கூடுகளாவது கிடைக்கின்றன இன்று.   ஆனால்,  மனிதன் அணு ஆயுதங்களால் சாம்பலாவான். எப்படி அடையாளம் காணப்போகிறார்கள் நாளை நம் இனத்தை? காரணம் போட்டி… போட்டி… எங்கும் போட்டி… எதிலும் போட்டி. .. எதற்கும் போட்டி.

ஊழையும் உப்பக்கம் காண்பர் என்று உறுதிபடச் சொல்லிவிட்டார் வள்ளுவர்.

தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும்

உள்ளங்கைக்குள் உலகை வைத்துக்கொண்டு சுற்றித் திரிகிறோம் நாம் ஒவ்வொருவரும். ஆம்! ஒவ்வொருவர் கைகளிலும் திறன்பேசி ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.  உட்கார்ந்த இடத்தில் மின்னணு பரிமாற்றம்; காணொளி மூலம் உலகளாவிய கல்வி. இத்தனை போட்டிகளுக்கு நடுவில்  எப்படி வாழப் போகிறோம்? ஆனால், மாணவச் செல்வங்களே அஞ்ச வேண்டியதில்லை.

பத்தாவது தடவையாக

விழுந்தவனை

முத்தமிட்டுச் சொன்னது பூமி

ஒன்பது முறை எழுந்தவன் அல்லவா நீ?

என்கிறார் ஈரோடு தமிழன்பன் அவர்கள். நம் திறமையைச் சந்தேகிக்க வேண்டாம். நம்பிக்கையுடன் முன்னேறுவோம்.

 

மலாலா எனும் கல்வி தேவதை:

தற்போது 23 வயதாகும் மலாலா 12 வயதிலேயே பெண் கல்விக்காகப் போராடியவர். தனக்கு கல்வி மறுக்கப்பட்டதை எதிர்த்து துணிந்து நின்று கேள்வி கேட்டவர். இதனால், தலீபான் அமைப்பினர் மலாலாவைத் துப்பாக்கிக் குண்டுகளால் துளைத்தெடுத்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய மலாலா, இங்கிலாந்தில் தஞ்சமடைந்தார்.

பூரண குணமடைந்து மீண்டு வந்ததும் அவர் அமைதியாகி விடுவார் என்று நினைத்தனர். அதன்பிறகுதான் மலாலாவின் செயல்பாடுகள் பன்மடங்கு அதிகரித்தன. பெண் கல்விக்கான தனது போராட்டத்தை உலக அளவில் விரிவுபடுத்தி பலரது கவனத்தையும் ஈர்த்தார். அவரது சேவையைப் பாராட்டி நோபல் பரிசும் வழங்கப்பட்டது. மிக இளம் வயதில் நோபல் பரிசு வென்ற பெருமையையும் பெற்றார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான அவர், தமது இளமைப் பருவத்தில் கல்வி மறுக்கப்பட்டதை நினைவு கூர்கிறார். பெண் கல்விக்காக அவர் எழுதிய புத்தகங்கள் பிரபலமானவை. சொந்தமாக பவுண்டேஷன் நடத்தி வருகிறார்.

தனிமனித வெற்றிகளைக் காட்டிலும் மலாலாவைப் போன்று சமூக வெற்றியே மிகச் சிறந்ததாகும். சன் ஷைன் பள்ளியில் மிக நல்ல கல்வியைக் கற்றுக் கொண்டிருக்கக் கூடிய மாணவச் செல்வங்களே நீங்களும் சீரிய அறிவாற்றலைப் பெற்று, நீங்களும் வென்று சமூகத்தையும் உயர்த்திக் காட்ட வேண்டும் என்று இந்த இனிய தருணத்திலே  கேட்டுக் கொள்கிறேன்.

சோதனைகள் கடந்து சாதனைகள் படைப்போம்:

நாம் விட்டில் பூச்சிகள் அல்ல! விளக்கில் தானே விழுந்து மடிவதற்கு! ஆம்….வானம்பாடிகள்! நாம் சுதந்திரமாய்ப் பறந்தபடி மழை நீரை உண்டு வாழ்வோம்! நம்மைக் கருவாக்கி உருவாக்கி வளர்த்த தாய் தந்தையரை மதித்துப் போற்றுவோம்! உலகுக்கு நம்மை அடையாளம் காட்டும் ஆசிரியப் பெருமக்களை வணங்குவோம்!

ஊது அணைத்து விட நாம் ஒன்றும் அகல் விளக்குகள் அல்ல!

சூறாவளிக்கும் அணையாத சூரிய விளக்குகள்!

 

* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *