கவிஞன் உலகத்தின் உண்மைகளை,

வாழ்க்கையின் ரகசியங்களை வேறு விதமாகப் பார்க்கிறான்.

அவன் கண்கள் உணர்ச்சிக் கண்கள். கனவுக் கண்கள்.

புதுமைப்பித்தன்

              மனித இனக்குழுவின் முதல் இலக்கிய வடிவமே கவிதைதான் என்று அய்யா கநாசு குறிப்பிட்டுள்ளார். அந்தக் கவிதையை உருவாக்குகின்ற கவிஞன் என்பவன் உணர்வுகளின் உளவாளியாகவும், விழிகளின் விருந்தாளியாகவும், மொழிகளின் முதலாளியாகவும் திகழ்கின்றான். மொழியை ஒரு நீண்ட போர்வாளோடு ஒப்புமைப்படுத்தினால்  அதன் நுனி கவிதையாகவும், நுனிப்பகுதிக்குச் சற்று முன்னுள்ள பகுதி சிறுகதை இலக்கியமாகவும், அதற்கும் முன்னுள்ள நடுப்பகுதி நாவல், கட்டுரைப்பகுதியாகவும் திகழ்கிறது. அந்த மொழியெனும் போர்வாளின் கைப்பிடியே மக்கள் பேசும் பேச்சு வழக்கு மொழி.

கவிதைக்குள்தான் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் சூட்சுமம் புதைந்து கிடக்கின்றது. மொழியின் மின்னல் பிரதேசமாகத் திகழ்வது கவிதையே ஆகும். சாதாரண சொற்கள்கூட, கவிதைக்குள் இடம்பெறுகிற போது நம்மை வசீகரிக்கின்ற மந்திர சக்தியைப் பெறுகின்றன. நத்தை வேகத்தில் நடைபோடும் சொற்கள் கவிதைக்குள் இடம்பெறுகிற போது, புலிப்பாய்ச்சல்  கொள்கின்றன.

பூமியில் நடமாடும் மானிடர்களோடு தொடர்புடைய மொழி, கவிதைக்குள் வியாபித்து வருகின்ற போது, வானாளாவிய தன்மையைப் பெற்று மிளிர்கின்றன.

கவிதையின் வரிகளுக்கு இடையே

வெடிகுண்டு ஒன்றை வையுங்கள்

வரிகள் அனைத்தும் சுக்கு நூறாகிச் சிதறட்டும்

பின்னர், மேலும் உண்மையானதொரு கவிதையை எழுப்புங்கள்!

அதற்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்

அந்த இடிபாடுகளில் இருந்தே!

என்று ஒரு கவிதை உருவாகும் பிரயத்தனங்கள் பற்றி கார்லோஸ் காஸரெங் நுட்பமாகக் கூறியுள்ளார்.

 

சுயம்புவாகச் சுரந்து வந்த சிற்பி:

ஒரு கவிஞன் எப்படி எழுத வேண்டும்; எப்படி இயங்க வேண்டும்; எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நம் காலத்தின் முன்னத்தி ஏராக இருப்பவர் அன்பிற்கினிய மூத்த முன்னோடிக் கவிஞர் சிற்பி. ஆத்துப்பொள்ளாச்சியிலிருந்து எந்தக் கோடையிலும் வற்றாமல் வருகின்ற கவியோடையாகத் திகழ்பவர் தொண்ணூறாம் அகவையைத் தொட்டிருக்கும் நம் கவிப்பெருந்தகை சிற்பி ஆவார்.

“அணைகளை உடையுங்கள்
ஆறுகள் பாடட்டும்”

என்று எழுதித் தமிழ் இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தவர். புதுவிதமான சொற்சேர்மானங்களைக் கொண்டு நவ கவிதை எழுதியவர். அனுபவமும், அக்கறையும் இரண்டறக் கலந்துகிடக்கும் கவிதைக்குச் சொந்தக்காரர்.

வானம்பாடி காலக்கட்டத்தில் எழுதிய எத்தனையோ கவிஞர்களில் இன்றளவும் நட்சத்திர அந்தஸ்தோடு திகழ்ந்து வருபவர் சிற்பி. மரபில் ஆழங்கால் பட்டு, புதுமையிலும் உயரம் பல தொட்டுவிட்டுத் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பவர். நிகழ்கால அவதானிப்பும்  கவிதை மீதான ஈர்ப்பும் கொண்டவராகத் தொடர்ந்து இயங்கி வருபவர். இன்றளவும் தன் சமகாலத்திலிருந்து கற்றுக் கொள்பவராகவும் அதனை உற்றுப் பார்ப்பவராகவும் இருப்பதாலேயே அற்றுப் போகாத ஆற்றலாளராக இருந்து வருகிறார்.

“ஒரு வியாபாரி கவிதை எழுதினால், அவனிடம் இருக்கும் காசு மட்டுமே காணாமல் போகும். ஒரு கவிஞன் வியாபாரியானால், அவனிடம் இருக்கும் கவிதையே காணாமல் போய்விடும்!” என்று நா.முத்துக்குமார் கூறியுள்ளார். எந்தச் சூழ்நிலையிலும் தன் கவிமனதை இழக்காமல், முதல்நாள் தன் முதல் கவிதையை எப்படி எழுதினாரோ, அதே மன ஆவேசத்துடன் இந்த நொடி வரை எழுதி வருகிறார்.

தத்துவத் தளர்ச்சியும், கொள்கைக் குன்றலும் நேரும்போது, படைப்புமனம் பாழ்பட்டுப் போகக் கூடும். ஆனால், அதிலிருந்து மாறுபட்டு, இன்றளவும்  உற்சாகம் குறையாத உள்ளக் கிளர்ச்சியோடு எழுதி வரும் சிற்பி, தன்னைப் பற்றியும் தன் கவிதைக் கோட்பாடுகள் குறித்தும்   பொட்டிலடித்தாற்போல் சுய பிரகடனம் செய்துள்ளார்.

உயரம் குறைந்தவன் நான்
ஆயினும் எனது
எழுத்துக்கள் குள்ளமானவை அல்ல

என்று தன் கவிதைகளைக் குறித்து ஒரு தெளிவான பார்வையை எடுத்தியம்புகிறார். என் கவிதைகளை எள்ளலோடும், ஏளனத்தோடும் அணுகும் எண்ணமிருப்பவர்கள் ஒதுங்கிக் கொள்ளுங்கள் எனக் கறார்த்தன்மையோடு முன்னறிவித்துள்ளார். இவ்வரிகளின் மூலம் ஒரு கவிஞன் எவ்வாறு செம்மாந்து இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

“புதுக் கவிதை குறித்த விமர்சனங்களில் முக்கியமானதாகச் சொல்லப்படுவது அவற்றுக்கு உறுதியான லட்சியங்கள் இல்லை என்பது. பாரதிக்கு லட்சியம் இருந்தது. பாரதிதாசனுக்கும் லட்சியம் இருந்திருக்கிறது. எழுபதுகளில் எழுதிவந்த சிலருக்கும் லட்சியங்கள் இருந்திருக்கலாம். சுதந்திரப் போராட்டம், திராவிட அரசியல், மார்க்சிய, லெனினிய இயக்கங்கள் இவை எல்லாம் இந்தக் காலகட்டங்களில் வெளியே நடக்கின்றன. இந்தச் சமூக நிகழ்வுகளை, லட்சியங்களைக் கவிதைகளும் எதிரொலித்தன’’2.

கூலிக்கு அவைகள் பிறந்ததுமில்லை
வேலிக்குள் முடங்கிக் கிடந்ததும் இல்லை

என்று  தன் கவிதைப்படைப்பைப் பற்றிய பார்வையைக் கொண்டிருப்பவர் கவிஞர் சிற்பி. தன் கவிதைகள் எதுபோன்ற தத்துவார்த்த போக்குகளையும் அரசியல் நோக்குகளையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை வாசகனுக்கும் விமர்சகனுக்கும் பட்டவர்த்தனமாக எடுத்துரைப்பதே சிற்பியின் கவிதைக் கோட்பாடாகும். மாறுதலற்ற தெளிவான லட்சியப்போக்கிலேயே சிற்பி  இன்றளவும் எழுதி வருகின்றார்.

 

சிற்பியெனும் நற்கவி:

மாயகோவ்ஸ்கி   ‘நாத்திகத்தின் அவசியம்’ (The Necessity of Atheism) என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வெளியிட்டதற்காக அப்போது அவர் படித்துக் கொண்டிருந்த ஷெல்லிக் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்கடுத்துக் கலைக்கல்லூரியில் படித்தபோது, காலங்காலமாக இருந்து வருகின்ற மரபுக்கலையை (Bourgeois Art) விமர்சித்துப் பேசியதற்காக அந்தக் கல்லூரியிலிருந்தும் துரத்தியடிக்கப்பட்டார். இத்தகைய புறக்கணிப்புகளுக்கெல்லாம் மாயகோவ்ஸ்கி ஒருநாளும் வருந்தியதுமில்லை. தன் இயல்புகளை இழந்ததும் இல்லை.

ஆனால், சராசரி மனநிலையைக் கொண்டிருந்த அவரின் தாய் வருந்தினார். தன் மகனின் எதிர்காலம் சூன்யமாகிப் போய்விடுமோ என்று கலங்கித் தவித்தார். மாயகோவ்ஸ்கி கலைக்கல்லூரியை விட்டு வெளியேற்றப்பட்டபோது அவரின் தாய் நீ எப்படியாவது இந்தக் கல்லூரிப் படிப்பை (Painting) முடித்தால் பரவாயில்லை என்று வேண்டினார்.  இல்லையென்றால், உன் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்று அங்கலாய்ப்பை மாயகோவ்ஸ்கியிடம் சொல்லிப் பதற்றப்பட்டார்.

அதெல்லாம் ஒன்றுமில்லை. அப்படியெல்லாம் எவனுடைய எதிர்காலமும் எங்கும் ஒளித்து வைக்கப்படவில்லை. நீ வீணாகக் கவலைப்படாதே! நான் கவிஞனாகப் போகிறேன் என்று மாயகோவ்ஸ்கி கூறுகிறார். அது சாத்தியமா? என்பதுபோல் அவரின் தாய் பார்க்கின்றாள். “ஒரு ஓவியத் தொழில் செய்யக்கூடத் தனியாக ஒரு ஓவியக் கலைக்கூடமும் (Studio) சிலபல திரைச்சீலைகளும் (canvas) வண்ணங்களும்(Paints) தூரிகைகளும்(Brush) இன்னும் பலவும் வேண்டும். ஆனால், கவிதை எழுத கொஞ்சம் தாள்கள் இருந்தால்  காடு, மேடு, மலை என எங்கிருந்தாலும் அங்கிருந்து கவிதை வடிக்கலாம்.  ஆகையால்,  கவிதை எழுதுபவனாகப் போகிறேன்.” என்று மாயகோவ்ஸ்கி கூறினார். அதே போலே  மாகவியாகவும் மலர்ந்து புகழ் பெற்றார்.

கவிஞர் சிற்பியையும்  அவருடைய தந்தை மருத்துவராக்க விரும்பினார். ஆனால், இவரோ படிப்பே வேண்டாம் என்று வீட்டை விட்டு வெளியேறினார். அதன்பிறகு, தமிழ் இலக்கியம் படித்துப் பேராசிரியரான பிறகே அவருக்குள் கவிதையெனும் பெருவெடிப்பு ஏற்பட்டு, தான் எழுதிய எண்ணற்ற கவிதைகளின் மூலம் பல உயரங்களைத் தொட்டு நிற்கின்றார். மாயகோவ்ஸ்கித்தனங்கள் கவிஞர் சிற்பியின் வாழ்க்கையிலும் நிகழ்ந்துள்ளன.

சிற்பியின் முதல் கவிதைத்தொகுதியின் பெயர் ’நிலவுப் பூ’. இந்தத் தொகுப்பு தமிழ்க்கவிதை உலகத்தில் அவருக்கென ஒரு தனித்த அடையாளத்தை ஏற்படுத்தித் தந்தது. அவரின் ஒட்டுமொத்த கவிதை வாழ்வுக்கும் முதல் கவிதைத்தொகுதி அழியாத முதலாக அமைந்துள்ளது.

புல்லின் இதழ்கள் (Leaves of Grass) எனும் புதுக்கவிதை நூலை எழுதிய வால்ட் விட்மன் கூட, மரபை அறிந்துகொண்டு மீறினாரா எனத் தெரியவில்லை. ஆனால், சிற்பியோ மரபை நன்கு அறிந்து, அதில் ஆழங்கால்பட்டு வெற்றிபெற்ற பிறகே புதுக்கவிதைக்கு மாறிப் புது சகாப்தம் படைக்கும் கவிஞராக உருவெடுத்திருக்கின்றார்.

 

மரபைத் துறந்த வானம்பாடிக் கவிஞர்:

உலகம் முழுவதும் ஏற்பட்ட மாற்றம் மரபை மறுதலித்தது. மரபுக்குள் ஏற்பட்ட சலிப்பு தமிழிலும் தலைதூக்கியது. அதனால்,  புதுக்கவிதையெனும் புத்தெழுச்சி உருவானது. பாரதியின் வசன கவிதையில் தொடங்கி, ந.பிச்சமூர்த்தியில் புதுக்கவிதையாகப் பரிணமித்தது. எழுத்து காலகட்டத்தில் எழுதிய கவிஞர்கள் மார்க்சிய பார்வையோடு எழுதிய வானம்பாடிக் கவிஞர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதே போல, வானம்பாடிக் கவிஞர்கள் எழுத்து காலகட்டத்தில் எழுதிய கவிஞர்களின் கவிதைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. இருதரப்பு கவிஞர்களுக்குள்ளும் ஒருவித ஒவ்வாமை இருந்து வந்ததை யாரும் மறுக்க முடியாது.

‘ஒளிப்பறவை’ என்ற கவிதைத்தொகுப்பு சிற்பி எழுதிய மிக முக்கியமான கவிதைத் தொகுப்பாகும். மரபார்ந்த உள்ளடக்கங்களைப் புதிய கண்ணோட்டத்தோடு தந்த கவிதைகளைக் கொண்ட நூலாகும். அந்தவகையில், தாஜ்மகாலைப் பற்றி ஒரு கவிதை எழுதியுள்ளார். அந்தக் கவிதை வழக்கமான முறையிலிருந்து முற்றிலும் புதிய பார்வையோடு அமைந்துள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழும் தாஜ்மகால் ஒரு மன்னனின் விலையுயர்ந்த காதல் சின்னமாக உள்ளது. அதைப் பல்வேறு கவிஞர்கள் பல்வேறு விதமாகச் சிலாகித்து எழுதியுள்ளனர். அந்தத் தாஜ்மகாலைப் பற்றி கவிஞர் சிற்பியும் எழுதியுள்ளார். அதைப் போற்றி எழுதிய பிறகுதான் கவிஞருக்கு ஒன்று தோன்றுகின்றது.

அதில் பதிக்கப்பட்டுள்ள பளிங்குக் கற்களும், பளபளப்புத் தன்மைகளும் மேட்டிமைக் காதலின் அடையாளமாக உள்ளது. ஆகையால், சாமான்ய மனிதனின் காதலுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டுமென்று எண்ணுகின்றார். அதன் வெளிப்பாடாகத் தாஜ்மகால் பற்றிய தன்னுடைய மாறுபட்ட சிந்தனைப் போக்கைக் கவிதையாக்கியுள்ளார்.

ஓ ! நான் காதலிக்கு மனதில்
கட்டி முடித்ததும்
மாது சலித்ததும்
நானே இடித்ததும்
இதனைக் காட்டிலும்
மதுரக் கோபுரம்
இதனைக் காட்டிலும்
அதிசயக் காவியம்

என்று சிற்பி மானசீகமாக ஓர் அரூபக்கோட்டையைக் கட்டியெழுப்புகின்றார். என் காதல் மற்ற எந்தக் காதலையும்விட புனிதமானது. அகத்தூய்மை கொண்டது.  எளியவனாக இருப்பினும் நானும் என் காதலுக்கு நினைவுச் சின்னத்தை நாட்டுவேன். கல்லும் மண்ணும் கொண்டு காதல் கோட்டை கட்டுவது ஒருவிதமென்றால், ஞாபகங்களில் நினைவுச் சின்னம் எழுப்புவது ஒருவிதமாகும்.

ஒரு சக்கரவர்த்தி காதல் சின்னம் கட்டியெழுப்பி, ஏழைகளின் காதலை ஏளனப்படுத்தியுள்ளார் என்ற கோணத்தில் இந்தக் கவிதையை எழுதியுள்ளார். சனநாயகத்தனமான எல்லோருக்குமான காதல் நினைவு மனக்கோட்டையைக் கட்டியெழுப்பியதன் மூலம் கவிஞர் இக்கவிதையில் புதுமை படைத்துள்ளார்.

 

சர்ப்ப யாகம் தந்த சாசுவத இடம்:

தனியாவர்த்தனமாக கவிதை எழுதி வந்த கவிஞர் சிற்பி அவர்கள், வானம்பாடி இயக்கத்திற்குள் வருகிறார். அவ்வாறு வந்த பிறகு அவரின் கவிதைப் பார்வைகளும் கோட்பாடுகளும் மாறுபடுகின்றன. தனக்குள் புது ரத்தம் பாய்ச்சிக்கொண்டு வெளிவந்த கவிதைத்தொகுப்பே ‘சர்ப்ப யாகம்’ ஆகும். இந்தத் தொகுப்புதான் தமிழ்கூறு நல்லுலகின் இலக்கிய வெளியில் அவருக்கென்று தனியான போக்கை வகுத்தளித்தது.

புத்தம்புது உள்ளடக்கங்களும் மாறுபட்ட சொல்லாடல்களும் ரசனைமிகு படிமங்களும், பூடகமான குறியீடுகளும் சிற்பியின் நான்காவது தொகுப்பான ‘சர்ப்ப யாக’த்திற்குள் நிரம்பி வழிந்தன. இது வாசகனைப் பரவசப்படுத்துவதாக அமைந்தது. சலிப்பில் உழன்ற வாசகனுக்கு ஒரு புதிய அரசியல் கவிதைவெளிகள் புலப்படத் தொடங்கின.

நம்முடைய தொன்மங்களைக் கொண்டு கவிதை படைக்கின்ற முறை முன்பே இருந்தாலும், கவிஞர் அதில் புதிய உச்சம் தொடுகின்றார்.  சிவன்,  துச்சாதனன், ஆதாம் ஏவாள்  எனப் பல்வேறு இதிகாச புராணப் பாத்திரங்களைக் கொண்டு கவிதைகளை உருவாக்கியுள்ளார். அதன் மூலம் இன்றைய சமுதாய நிலைமையையும், பிரச்சினைகளையும் அழுத்தந்திருத்தமாகப் பொட்டிலடித்தாற்போல் படைத்துக் காட்டியுள்ளார்.

”ஓகோ! சிவனாரே!
சாம்பல் பீழை படிந்து
தூர்ந்து போகட்டும்
உமது நெற்றி கண்!
எங்களுக்கு
மனுக்குலம் தழைக்க
மன்மதனும் வேண்டும்
எதேச்சதி காரத்தின் முகத்தில்
காறியுமிழ
நக்கீரனும் வேண்டும்”3 (ச.யா. ப.47)

என்ற சிற்பியின் இந்தக் கவிதை புதிய பார்வையைக் கொண்டமைந்துள்ளது. இறையை விமர்சிக்கக்கூடாது என்கிற சிந்தனைப்போக்கை மாற்றி, புதிய போக்கிலான கவிதையை உருவாக்கிக் காட்டியுள்ளார். உன்னால் எரித்துச் சாம்பலாக்கப்பட்ட மன்மதனும் நக்கீரனும் எங்களுக்குத் திரும்ப வேண்டுமென்று புரட்சிகர சிந்தனையை வெளிப்படுத்தியுள்ளார். யாரையும் எரித்துச் சாம்பலாக்கும் நெற்றிக் கண்ணில் பீழையும் சாம்பலும் படிந்து மறைந்து போகட்டும் – எனும் மீறல் மனக் கவிஞர் அவர்!

அரசியல் கேள்விகள் எழுப்ப நக்கீரத்தன்மையும், மனிதகுலம் தொடர்ந்து வளர மன்மதத்தன்மையும் மிகவும் அவசியமென அதிர்ச்சிகர பார்வையை முன்வைத்துச் செல்கின்றார்.

மாற்றுச் சிந்தனைகளை உள்ளடக்கி எழுபதுகளில் எழுதத் தொடங்கிய சிற்பி தன் கவிதைகளைப் பற்றித் தானே சொல்கின்றார்.  ‘‘சிகரங்கள் பொடியாகும்’ எழுபதுகளில் நான் எழுதிய தலித் கவிதை. இந்தக் கதைக் கவிதையில் ஒரு தலித் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கும் ஒருவரின் சாதியைக் குறிப்பிட்டு அதுவும் அவர் சார்ந்த உயர்சாதியைக் கவிதைக்குள் குறிப்பிட்டுப் பாடியதில் என் துணிச்சல் பலராலும் பாராட்டப்பட்டது’’.4

கருவேலங்குச்சியை

மென்றபடி நின்ற
சென்னிமலைக் கவுண்டரின் பற்களுக்கு
வயதானாலும்

உறுதி குன்றவில்லை

என்ற இக்கவிதையில் ஆதிக்க சாதியின் கோர முகத்தைத் துணிச்சலோடு படம்பிடித்துக் காட்டியுள்ளார். விளிம்புநிலை மக்களின் பாடுகளைப் புதுக்கவிதையின் பாடுபொருளாகக் கொண்ட கவிஞராகச் சிற்பியைக் குறிப்பிடலாம்.

 

சாகித்ய அகாடமி சாதித்த கவிதைகள்:

இயற்கையியலாளர் டார்வினின்  “தகுதி உள்ளது தப்பி பிழைக்கும்’’ (Survival of the fittest)   என்ற கோட்பாடு உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். அது உயிர்களுக்கு மட்டுமல்ல; இலக்கியப் படைப்புகளுக்கும் பொருந்தும். வீரியமற்ற படைப்புகள் கால வெள்ளத்தில் காணாமல் போகும். அப்படி காணாமல் போய்விடக் கூடாதென்பதே கவிஞர் சிற்பியின் படைப்பு லட்சியமாகும்.

படைப்பு நிலைத்து நிற்க வேண்டுமென்றால், மாபெரும் தனித்தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும்.   பால்யகால ஞாபகங்களோடு சீர்மிகு மொழிநடையில் ஓங்கி ஒலிக்கும் பாங்கைப் பெறும் படைப்பே நெடிய ஆயுளைப் பெறும்.   கவிஞர் சிற்பி  அவ்வாறு தன்னுடைய இளமைக்கால நினைவுகளோடு உரையாடிய உரையாடல்களின் தொகுப்புதான் அவருக்குச் சாகித்திய அகாடெமி பரிசு வாங்கிக் கொடுக்கக் காரணமாக இருந்த ‘ஒரு கிராமத்து நதி’ என்ற கவிதைத் தொகுப்பாகும்.

’’ஊரில் மூன்று பக்கமும் ஆழியாறு.  தீவு போல எங்கள் கிராமம். வருடம் முழுக்க பெருவெள்ளம் ஓடும். அந்த நதியின்  ஓட்டத்தில் நானும் இணைந்தே இருந்தேன். அதுதான்,  ‘தானும் உணவாகி, மீனும் உணவாகும் இந்த நதிக்கு நானும் உணவாவேன்!’ என  ‘ஒரு கிராமத்து நதி’ என்ற கவிதையை எழுதவும் காரணமானது. இத்தனைக்கும் நான் மீன் சாப்பிடுபவனும்  அல்ல.’’5 என்று கவிஞர் சிற்பி அவர்களே வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

எங்கிருந்து வருகிறது
இந்த நதி!
மலைகளின்
மௌனம் உடைந்தா?
முகில்களின்
ஆடை கிழிந்தா?
வனங்கள் பேசிய
இரகசிங்கள் கசிந்தா?

என்று வினாக்களை அடுக்கிக் கொண்டே வருகின்ற கவிமனம் அடுத்தடுத்து வருகின்ற வரிகளில் பதிலும் தந்து போகின்றது.

என்னிலிருந்து …..
என் அந்தரங்கங்களின்
ஊற்றுக்கண் திறந்து
என் மார்புகள்
புல்லரித்து
என் ரத்தக் குழாய்களில்
புல்லும் பூவும் மணந்து
என்னை முழுக்காட்டி
என்னையே கரைத்துக் கொண்டு..
அங்கிருந்து வருகிறது
இந்த நதி

என்று தன் கிராமத்து நதியின் மீதான ஈர்ப்பை இதயப்பூர்வமாகக் கவிஞர் சிற்பி கூறியுள்ளார். தனது மண்ணின் மீதும், அங்கு வாழும் மக்கள் மீதும், அங்குள்ள அனைத்து உயிர்களின் மீதும் கட்டுக்கடங்காக் காதல் கொண்டிருக்கின்றார். ஒரு கிராமத்து நதியில் சிற்பி உருவாக்கியுள்ள கவிதைகள் தமிழ் இலக்கியச் சூழலுக்கே உயிர் நனைத்த புது வரவாகும்.

ஆகையால்தான், அது “2003 ஆம் ஆண்டின் சாகித்ய அகாதெமி விருதுதினைப் பெற்றது. இது வெறுமனே ஒரு கிராமத்து நதியல்ல. கவனிக்கப்படத் தக்க ஒரு கவித்துவத்தின் ரிஷி மூலம், நதிமூலம், சிற்பியின் வெளிப்பாட்டு ஆற்றல். சிற்பிக்குக் கவிதை ஆளுமையின் ஆத்மார்த்தக் கரைப்பு” என்று கார்த்திகேசு சிவத்தம்பி பாராட்டியுள்ளார்.

 

கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை பாடும் ஆத்ம கீதம்:

சிற்பி எழுதிய மிக முக்கியமான தொகுப்பு ’’கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை’’.   இந்தத் தொகுப்பு சூழலியல் மற்றும் இயற்கையின் மீதான அக்கறை கொண்ட கவிதைகளை உள்ளடக்கியது. மரங்கள் வெட்டப்படுதல், பறவைகள் இறப்பது, விலங்குகள் கொல்லப்படுவது ஆகிய சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு இத்தொகுப்பு புனையப்பட்டுளது.

“பறவைகளால் அப்படி என்னதான் ஆகிவிடப்போகிறது? எதற்காக, பறவைகள், பறவைகள் என்று சொல்லிக் கொண்டிருக்கின்றீர்கள்?” என்று பறவை மனிதர் சலீம் அலியிடம் ஓர் அரசியல்வாதி கேட்டுள்ளார். அதற்கு அவர் மிகவும் அமைதியான குரலில், “பறவைகள் இனம் அழியத் தொடங்கும்போது, மனிதர்கள் இனத்துக்கும் அழிவு தொடங்கும். அது நமக்குக் கொடுக்கப்படும் எச்சரிக்கை” என்று கூறியுள்ளார். அவர் சொன்ன ஒரு கருத்து இன்றும் நமக்குத் தேவைப்படும் ஒன்று. “மனிதர்கள் இல்லாத உலகில் பறவைகளால் வாழ முடியும். ஆனால், பறவைகள் இல்லாத உலகில் மனிதர்களால் வாழ முடியாது”8  இதை வலியுறுத்துவதே சிற்பியின் ‘கண்ணாடிச் சிறகுள்ள  ஒரு பறவை’ என்ற கவிதைத் தொகுப்பாகும்.

 

கள்ள மெளனங்கள்

1.

ஒரு பேருயிர் போல

ஆரவாரித்துச் சென்ற ரயிலை

மெளனமாய்ப் பார்த்தது

தண்டவாளத்தில் கிடந்த தலை

என்ற இந்தக் கவிதை இயற்கை மீதான அக்கறையையே படம்பிடித்துக் காட்டுகின்றது. தண்டவாளத்தில் கிடப்பது மனிதத் தலையா? காட்டு விலங்குகளின் தலையா? பறவைகளின் தலையா? என்பதே நமக்குள் எழுகின்ற கேள்வியாகும். எதுவாக இருப்பினும் இயற்கையின் மீது நேசம் காட்டுவதே இந்த மண்ணுலகின் மீது மனிதராசி நீண்ட நாள் நிலைத்து வாழ்வதற்கான வழிவகையாகும்.

  

2.

அரிவாள் உழுத

காதலன் உடலருகே

ஓ வென்று அழுத

அவள் குரலை

விழுங்கி விட்டது

கடைவீதியின் இரைச்சல்

3.

குடும்பமே கொன்று

மரக்கிளையில்

தொங்கவிட்ட

சிறுமியின் உடலை

ஊஞ்சலாட்டியது காற்று

இறுகிய மௌனம் காத்தது

வேப்ப மரம்

 

4.

காதலினால்

உயிர் தோன்றும் என்று

நீசொல்லியது

என்னவாயிற்று

பாரதி?6

 

இக்கவிதைகள் மனித உயிர்களுக்கு நேரும் அதிர்ச்சி மரணங்களைத் துயரச்சித்திரமாக எடுத்துரைக்கின்றன. விலை மதிப்பில்லா மனித உயிர்களை எப்படியெல்லாம் துச்சமாகக் கருதி அழித்தொழிக்கின்றோம் என்பதைச் சொல்கின்றன. மனித உயிர்களையே துச்சமாக அழித்தொழிக்கும் கருணை மறந்த இந்த மனிதர்கள் காட்டையும், காட்டு விலங்குகளையும், பறவைகளையும் எப்படி விட்டு வைப்பார்கள் என்பதைக் கச்சிதமாகத் தன் கவிதையில் பதிவு செய்துள்ளார்.

அது ஒரு காடு, தேக்கும் பாக்கும்

மருதும் பலாவும்

ஆரமும் அகிலும் கடம்பும் அடர்ந்த

உயிர்களின் வீடு

 

புதியதாய் எவரும் விதைகள் இடாது

உரம் போடாது

பூமியும் மேகமும் புணர்ந்துரு வாகிய

முதல் தாய் நாடு

 

கதிரின் முற்றுகை ஒளி வீச்சுகளால்

காயம் படாது

கானக வேல்களும் ஆல்களும் காக்கும்

இருளின் கூடு

 

புதிர்கள் நிரம்பி முதலுயிர் தவழ்ந்த

ஆதிமைத் தொட்டில்

புதுப்புது ரகசியம் பதுக்கி வைத்திருக்கும்

அது ஒரு காடு!7

எனும் ’கண்ணாடிச் சிறகுள்ள ஒரு பறவை’ தொகுப்பிலுள்ள ’அது ஒரு காடு’ தலைப்பிலுள்ள இந்தக் கவிதை நம்முடைய காற்றும் நீரும் இயற்கை வளமும் நம்மைப் பெற்றெடுத்த மண்ணும் எவ்வளவு ரம்மியமானது என்பதைச் சொல்கின்றது. நுகர்வுக்கலாச்சாரத்தைத் தூக்கிப் பிடிக்கும்  இன்றைய உலகமயமாதல் சூழலில் இயற்கையெனும் கிடைத்தற்கரிய பெருஞ்செல்வம் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. இயற்கை பற்றிய பிரக்ஞை இழந்த மானுடனை இயற்கைக்குத் திரும்பு, நம்முடைய மண்ணைக் காப்பாற்று, நம்முடைய மனிதர்களை, நம்முடைய அடையாள வாழ்வியலை விட்டுவிடாதே என இக்கவிதைகள்  ஆதிகாலத் தொன்ம மனத்தின் குரலாகவே ஒலிக்கின்றன.

 

சூரிய நிழலில் இளைப்பாறும் கவிஞன்:

தன் கவிதைகள் பற்றிப் பெரிதாகக் கவிஞர் சிற்பி எங்கும் பேசியதில்லை. மிக மிக  அரிதாகத் தன் கவிதைச் செயல்பாடு குறித்து ஓரிடத்தில் பதிவு செய்துள்ளார்.  ’’சுருக்கமாகச் சொன்னால் இக்கால மனிதனின் சிக்கலைப் புரிந்து கொள்ளும் இடையறாத முயற்சியே என் கவிதை.’’ என்கிறார்.

அதன் தொடர்ச்சியாகவே தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தன்னுடைய ‘சூரிய நிழல்’ என்ற கவிதையில்,  தத்துவ விசாரத்தோடு வினாவை எழுப்புகின்றார். இவ்வினா மிக முக்கியமான ஒன்றாகும் . சுயம் தேடும் எல்லா கவிஞர்களுக்குள்ளும் எழும் தன்னையறியும் கேள்வியாகும்.

யாருடைய
நிழல் நான்?

என்று தன் சுயத்தின் மூலத்தை அறியும் நோக்கத்தோடு கவிஞனின் கேள்வியைச் சுமந்தபடி  இந்த வரிகள் உருவாகி வந்துள்ளன.  சமூகத்தின் நிழலா? இயற்கையின் நிழலா? இந்த மண்ணில் தோன்றிய தத்துவங்களின் நிழலா? எனப் பல்வேறு வினாக்களை எழுப்புகின்றன.

 

விமர்சகர்களோடு சமர் செய்தவர்:

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

என்பது வான்புகழ் வள்ளுவமாகும். ஆம்! இடித்துரைத்து யாதொன்றையும் செம்மைப்படுத்துவதே விமர்சனக்கலையாகும். தரமில்லாத திறனாய்வாளர்களை உரசிப் பார்ப்பதோடு நில்லாமல், உன்னதங்களைத் தன் கவிதைகளில் தொடர்ந்து உருவாக்கிக் காட்டியவரே சிற்பி.

படைப்பு எவ்வளவு முக்கியமோ; அவ்வளவு முக்கியம் விமர்சனம். சரியான பதத்தில், சரியான தளத்தில் ஒரு விமர்சனம் அமையும்போது அந்தப் படைப்பின் நுண்மை முழுமையாகப் புரிந்து கொள்ளப்படும்.  ஆனால், தமிழ்ச்சூழலில் காய்தல் உவத்தலற்ற விமர்சனக் கலை உள்ளதா? என்கிற கேள்வி எழாமலில்லை. தமிழ் விமர்சகர்களை நோக்கி ‘அகோ வாரும் பிள்ளாய்’ என்று ஒரு கவிதை எழுதியுள்ளார். இந்தக் கவிதை விமர்சகர்களை விமர்சிக்கும் கவிதையாக உள்ளது.

என்னை நானே
சிதையில் ஏற்றி
எருவிட்டு மூடி
மூணுதரம் சுற்றிவந்து
எரித்துப் பார்த்து
முடித்தாச்சு!

போடா போ! உன்
நமத்துப் போன தீக்குச்சிகளை
வெயிலில் காயப் போடு!

எனும் இந்த வரியில் உத்து உத்துப் பார்த்து வெத்து வேட்டை போல் சத்துகெட்ட விமர்சனத்தை முன்வைக்கும் திறனாய்வுப் புலிகளே! உங்கள் விமர்சன குப்பைகளைக் கொண்டு என்னை மூடிவிட முடியாது. என் மக்கள் மொழியை ஒருபோது மட்கிடச் செய்ய முடியாது என்று சவால் விடுகிறார்.

வீணையை வெட்டி
விறகாக்கு
விரலை நறுக்கிக்
குழம்பு வை
இதயத்தை வற்றலாக்கு
ஊரைக் கூப்பிட்டு
விருந்து வை

உன் திறனாய்வைக் கொண்டு என் படைப்பை ஓரங்கட்டி விடலாம் என்கிற பகற்கனவை விட்டொழிக்கச் சொல்கின்றார்.

ஒருத்தரும் வராவிட்டால்
பந்திக்கு நீயே முந்து

இப்படிக் கவிதை எழுதியதோடு மட்டுமல்லாமல், தன் கவிதைக்கு எதிராகத் தராசு தூக்கி வரும் திறனாய்வாளர்களை ஓங்கியடித்து உருக்குலையச் செய்துள்ளார். படைப்பாளிகளை எள்ளி நகையாடும் திறனாய்வாளர்கள் மீது தனக்குள் பொங்கிய சினத்தின் ‘ஒரு சிறு பகுதிதான்’ இந்தக் கவிதை’’ என்று கவிஞர் சிற்பி ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்துள்ளார். 1994-ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் விமர்சகர்களோடு எனக்கு ஒட்டும் இல்லை; உறவுமில்லை என்று தெள்ளத் தெளிவாகக் கூறியவர் அவர்.

 

நிலைத்து நிற்கும் வானம்பாடி:

Raise your words, not their volume.
Rain grows flowers, not thunder.

என்ற ரூமியின் வரிகள் கவிச்சாதனை புரிந்துள்ள சிற்பி அவர்களுக்கும் பொருந்தும்.

மரபுக் கவிதையில் தன் கவிதை வாழ்க்கையைத் தொடங்கிய சிற்பி அதில் வெற்றி பெற்று விட்டாலும் தன் தேடலைக் கைவிடாமல் தொடர்ந்து புதுப்புது கவிதை முயற்சிகளை மேற்கொண்டு அதிலும் வெற்றி கண்டார்.

மொழியின் வனாந்தரங்களில் மட்டும் பயணித்துக் கவிதை செய்த சிற்பி, புதிய உத்திகளைக் கொண்டும், புதிய உள்ளடக்கங்களைக் கொண்டும் பல்வேறு விதமான கவிதை முயற்சிகளில் ஈடுபட்டு அதில் பெருங்கவனம் பெற்றுள்ளார்.

வாராது வந்த மாமணியாய் வானம்பாடி காலகட்டம். அவரை வரவேற்று உள்ளே இழுத்துக் கொண்டது. மார்க்சிய பார்வையும், மக்கள் சிந்தனையும், சமூகப் பொறுப்பும், இயற்கை நேசமும் இருக்கும்படியாக தன்னுடைய கவிதைகளை மடைமாற்றம் செய்து, தன் எழுத்தை ஒரு சக்தி மிகுந்த ஆயுதமாக உயர்த்திப் பிடித்தவர். சமூகம் பாடியும் சாடியும் எழுதிய இவரது கவிதைகள் இவரைச் சிகரத்தில் ஏற்றி வைத்துப் பெருமைப்படுத்தியன.

எளிமையான மொழியும், லாவகமான தொடர் அமைப்பும்,  தொன்மங்களின் துணையும், படிமங்களின் பரவசத்தையும் கொண்டு கவிதையாக்கிக் கவிஞர்களை உருவாக்கும் கவிஞராக வெற்றி பெற்றார். அதன் பிறகு சாகித்ய அகாடமி விருதுகள் அவரது விலாசந்தேடி வந்தன.  நம் காலத்து நற்கவியாக ஐயா சிற்பி அவர்கள் செம்மாந்து நிற்கிறார் நம்முன்னே! என்றும் நிற்பார்!

 * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *