‘பத்து மிளகு இருந்தா பகையாளி வீட்ல கூடத் தைரியமாகச் சாப்பிடலாம்'ன்னு சொல்வார்கள். பத்து வேண்டாம், ஆறாம் திணை போல ஒரு புத்தகம் இருந்தால் போதும், மருத்துவமனைக்கே செல்லாமல் தைரியமாக வாழலாம். கவிதைப் புத்தகங்கள், புதினம், சிறுகதை என தினந்தோறும் பல புத்தக வெளியீடுகளுக்குச் செல்கிறேன். ஆனால் இந்தப் புத்தக வெளியீடு எனக்குக் கூடுதல் அணுக்கமும், நெருக்கமான விஷயம். ஏனெனில் நான் நம்புகின்ற, என் வாழ்வியல் முறைகளில் நான் கடைப்பிடித்துப் பயன் பெற்றிருக்கின்றவற்றைப் பற்றிப் பேசுகின்ற புத்தகமிது. தமிழரது பண்டைய உழவு, உணவு, திணை மரபு இவை குறித்துப் பேசினாலே, நம்மை ஏதோ ஒரு அருங்காட்சியகப் பொருள் போலப் பார்க்கின்ற 21ம் நூற்றாண்டின் மனோபாவத்தின் நடுவில், வளர்ச்சி என்ற பெயரால் எப்படி வீக்கத்தை ஊக்குவித்திருக்கிறோம், அதுமட்டுமல்ல, அந்த வீக்கத்தை எப்படிச் சீவச் சிங்காரித்துக், கொண்டாடிக் கொண்டிருக்கிறோம் என்பதைச் சொல்லும் மிக முக்கியமான புத்தகமிது. கிரேக்கத்தின் அரசியல் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டது. ரோமானியர்களின் அரசியல் அன்பை அடிப்படையாகக் கொண்டது என்பார்கள். தமிழனின் அரசியல் உழவை அடிப்படையாகக் கொண்டது இந்தியாவின் அரசியல் எப்படி உணவை அடிப்படையாகக் கொண்டு இன்றைக்கு எப்படித் திரிந்து, நுகர்வோர் சந்தை அடிமையாக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் குறித்துப் பேசுகின்ற இப்புத்தகம் மிக முக்கியமான அரசியல் பார்வையினையும் முன்வைக்கின்றது. ஒரு சித்த மருத்துவராக பிழைப்பு நடத்திக் கொண்டு இருக்காமல், சூழலுக்கு இசைவான வாழ்க்கையின் அவசியம், பாரம்பரிய நல்லுணவை மீட்டெடுத்தல், அதன்மூலம் இந்தப் பூமியை அடுத்த தலைமுறைக்கு ஆரோக்யமானதாக விட்டுச் செல்லுதல் என மருத்துவர் சிவராமன் வாழ முனைந்திருப்பதன் சாட்சி இப்புத்தகம். ‘பூவுலகின் நண்ர்கள்' இயக்கத்தில் இணைந்தபின் இதன் ஆனந்தமும் உண்மையும் புலப்பட்டது என்கிறார் சிவராமன். அவ்வகையில், இதனைத் தோற்றுவித்த Che என நாங்கள் அன்போடு அழைக்கின்ற செழியனை இங்கு, இக்கணம் நினைத்துப் பார்க்கிறேன். 89 இல் அவரை நான் சந்தித்தது. மணிக்கணக்கில் இந்த பூவுலகின் நண்பர்கள் குறித்து உரையாடியது நினைவிற்கு வருகிறது. அன்றைக்கு அவர் விதைத்த விதை இன்று, சிவராமன் போன்றோரால் உலகெங்கும் எடுத்துச் செல்லப்படுகின்ற பயன்தரும் பழங்களாகக் கனிந்திருப்பதில் பெரு மகிழ்ச்சி எனக்கு! ‘பூவுலகின் நண்பர்கள்' குழுவினருக்கு என் நன்றி. மறந்தே போன நமது பாரம்பர்ய உணவு முறைகள், சிறுதானியங்கள், மருத்துவமுறை இவற்றின் தற்கால அவசியத்தை இந்தத் தலைமுறைக்குக் குறிப்பாக வளரிளம் பருவத்தினருக்கு எடுத்துச் செல்லும் வகையில் இதனைத் தொடராக வெளியிட்ட ஆனந்த விகடனுக்கும், புத்தகமாகப் பிரசுரித்துள்ள விகடன் பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள். “பத்து மனிதனுடைய கண்களை விட ஒரு பெண்ணின் இதயம் அதிகம் பார்க்கிறது” என்பார்கள். மிகச் சரி அது என நிருபித்து சிறுதானிய சிறப்பு விருந்து படைக்க உதவியிருக்கிறார்கள் மருத்துவருடைய அம்மா, சித்தி, மனைவி - ஆகியோர். அவர்களுக்கும் என் பாராட்டுக்கள். அஞ்சறைப்பெட்டியும் அடுக்களையும் மருத்துவமனையின் எதிரிகள் என இவர்கள் நிரூபித்திருக்கிறார்கள். தமிழர்கள் இனத்தாலும், பண்பாட்டாலும், மொழியாலும், நீண்ட நெடிய தொடர்ச்சியான வரலாற்றைக் கொண்டவர்கள். இம்மண்ணில் காலங்காலமாக நிலவி வந்த திணைப் பண்பாடுகளின் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை) அறுபடாத் தொடர்ச்சியும், அயற்பண்பாடுகளின் பரவலும் குறித்த விழிப்புணர்வுடன், திணைப் பண்பாடுகளும், அயற்பண்பாடுகளும் தொடர்ந்து உறவாடியதால் இன்று உருவாகியுள்ள பன்மைப் பண்பாட்டுச் சூழலிலே, நாம் நமது வேர்களையும், அடையாளங்களையும் மீட்டெடுப்பதுடன், அவற்றை இந்த தலைமுறைக்கு நினைவூட்டுகின்ற ஒரு முயற்சியாகவே இப்புத்தகத்தை நான் பார்க்கிறேன். உலகின் முதன் முதலில் வேளாண்மைக்கு நீர்ப்பாசனம் பயன்படுத்தப்படத் தொடங்கியது தென்னிந்தியாவில். தென்னிந்திய நெல் நாகரிகம் தென் சீனாவிலும் இந்தோனேசியாவிலும் இருந்த நெல் நாகரிகங்களோடு ஒப்பிடத்தக்கது. கோதுமை நாகரிகத்தின் மையம் சிந்துவெளி. தென்னிந்திய அகழ்வாய்வுகளில் கிடைத்துள்ள கல்லான ‘உழு' என்பதிலிருந்தே உழவன் எனும் சொல் உருவாகி இருக்கலாம். அவ்வகையில் வேறெதற்கும் தன்னை ஒப்புவிக்காமல், மனிதனுக்கும், இயற்கைக்கும் மட்டுமே தன்னை முழுவதும் அர்ப்பணிக்கின்ற விழா ஒன்றுதான் - அது தைத்திருநாள் எனப்படும் மருத நில மக்களின் ‘பொங்கல் விழாதான்'. ஆங்கில வழிக் கல்வி கற்ற வர்க்கத்திற்கு முளப்பாரி, பந்தக்கால், பொய்க்காலாட்டம், எம்.ஆர்.ராதா, படிகாரம், புதுமனை புகுவிழா - எதுவும் தெரியாது. செலின் தியோன், சிட்னி ஷெல்டன், சிலிக்கான் பள்ளத்தாக்கு, சீன் கானர் - இவை தெரியும். அதுவே பொது அறிவு எனப் பறைசாற்றப்படுகின்றது. “'பொருளும் பொருள் சார்ந்த நிலமும்' அல்லது ‘நானும் நான் சார்ந்த இனமும்' வாழ்வதற்கென அவசர அவசரமாக ஆறாம் திணையை உருவாக்கி, அதில் அலைகிறோம். இழந்தவையும் மறந்தவையும் தொலைத்தவையும் பிடுங்கப்பட்டவையும்... வெறும் உணவும் ஆடைகளும் மட்டுமல்ல. அதுமிகப் பெரிய பட்டியல்” எனச் சொல்லும் சிவராமன் அதனை தரமான சான்றுகளுடன் முக்கியமானதொரு ஆவணமாக்கியிருக்கிறார். மண் - குறிப்பாகத் தாய்நாட்டு மண் எவ்வளவு புனிதமும், உணர்வும் வாய்ந்தது என்பதை நாமறிவோம். இன்றளவும் கூட எல்லைப் பகுதிகளில் சீனாவுடனான கோடுகளை வகுக்கின்ற பிரச்சனைகளில் நாம் மிகக் கவனமாக, உணர்வுப் பூர்வமாக இருக்கிறோம். 1962ம் ஆண்டு இந்திய - சீன போரில் இந்தியா தோல்வியுற்று, ‘அக்சைசின்'(Aksai Chin) என்ற பகுதியை இழந்தது. ‘அங்கு புல், பூண்டு எதுவுமே விளைவது இல்லை' என்று தோல்வியை நியாயப்படுத்தினார் நேரு. அதற்கு மகாவீர் தியாகி என்ற காங்கிரஸ் எம்.பி நேருவைப் பார்த்து, “பிரதமர் அவர்களே, உங்கள் தலையில் கூட முடி எதுவும் வளர்வது இல்லை. ஆதனால் உங்கள் தலையை யாருக்காவது கொடுத்த விடலாமா,” என்று கேட்டார். (ஒரு பிரதமரை அவரது கட்சி எம்.பி யே நாடளுமன்றத்தில் விமர்சனம் செய்த வரலாறு இது.) கட்டாந்தரையை இழக்கக் கூடச் சம்மதிக்க மாட்டோம், ஆனால் செயற்கை உரம், endosolphin பூச்சி மருந்து, வீரிய விதைகள் இவற்றை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து ‘வளர்ச்சி' எனும் போர்வையில் ஏற்றுக் கொண்டு மண்ணையும், மனிதர்களையும் மலடாக்குவோம் எனும் அரசியல், பொருளாதாரக் கொள்கையை அழகாகத் தோலுரித்துக் காட்டுகிறது இப்புத்தகம். ‘தினை' எனத் துவங்கும் முதல் அத்தியாயத்தில் ஒரு ஜன்னல் ஓரப் பயணத்தில் - ‘நாம் எங்கே செல்கிறோம்' எனும் மிக முக்கியமான கேள்வியைக் காணாமல் போன குளம், மரங்கள், வைக்கோலுக்குப் பதில் கற்கள் சுமக்கும் மாடுகள் இவற்றின் மூலம் எழுப்புகின்ற சிவராமன், ஒரு சுவாரஸ்யமான செய்தியைச் சொல்கிறார் - Love Birds எனப்படுகின்ற காதல் சிட்டுக்கள் ‘தினை' எனும் தானியத்தை உண்ணக் கொடுக்கும் போது எல்லாம் ஒன்றுக்கு ஒன்று முத்திட்டுக் கொள்ளும் என்பதே அது. ஒருவேளை தினை காதல் உணர்வைக் கூட்டகிறதோ எனவும் வியப்படைகிறார். “முத்தம் கொடுத்துப் பசியாற முடியாது” என்பார்கள். தினை சாப்பிட்டால் முத்தம் கொடுத்தே பசியாறலாம் என நான் புரிந்து கொண்டேன். ஒரு இனத்தை, ஒரு நாட்டை அழிக்க வேண்டுமென்றால், அதன் தாய்மொழியை முற்றிலுமாக அழித்தால் போதுமென்பார்கள். உலகின் பல தொன்மையான மொழிகள் பேசுவோரின்றி அழிந்து வருகின்றன. Ayapa Zoque - மெக்ஸிகன் தேசத்துத் தொன்மையான மொழி. சில பல ஆண்டுகளுக்கு முன் கல்விக் கூடங்களில் ஸ்பானிஷ் கட்டாய மொழி ஆக்கப்பட்டதாலும், நகரக் குடியேற்றங்களாலும் அந்த மொழி அறிந்தவர்கள் இப்போதைக்கு இரண்டு பேர்தான் இருக்கிறார்கள். விஷயம் அதுவல்ல - அந்த இரண்டு பேருக்கும் ஒருவரை ஒருவர் பிடிக்காததால் அவர்கள் பேசிக் கொள்வதில்லை. எனவே அந்த மொழி அழிந்து விடுகின்ற அபாயத்தில் இருக்கிறது எனச் சமீபத்தில் படித்தேன். இப்படி மொழி அழியும் போது மட்டுமே இனம் அழிவது என்பதல்ல - அதன் பாரம்பரிய உழவு, உணவு முறை, பல்லுயிர் ஓம்பும் பழங்கால ஒத்திசைவு முறை இவை அழிவதாலும் நாம் முற்றிலும் அடையாளமற்று அழிக்கப்பட்டு விடுகிறோம் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இப்புத்தகத்தில். தமிழ் மருத்துவத் தொன்மமான சித்த மருத்துவத்திலிருந்து Allopathy-க்குத் தாவியது போல, சங்ககிரி தினை, திருச்செங்கோடு நெல்லிக்காய், நாமக்கல் நவ்வாப் பழம் இவையனைத்தும் கைக்கெட்டும் தூரத்திலிருக்க, ஒரு ஈரோட்டுக்காரர் ஏன் ஆஸ்திரேலிய ஓட்ஸ், வாஷிங்டன் ஆப்பிள், மடகாஸ்கர் ஆரஞ்சு - இவற்றுக்கு அலைய வேண்டும் என்று இவர் கேட்கின்ற கேள்வி மிக நுட்பமான, அரசியல், பொருளாதாரக் கேள்வி. தெற்காசியா மிகக் குறிப்பாக இந்தியா, எப்படி மேற்குலகின், குறிப்பாக அமெரிக்காவின் கொழுத்த சந்தையாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதை அப்பட்டமாகப் படம் பிடிக்கும் சான்றுகள் கவனிக்கவேண்டியவை. “சிங்கத்திற்கென தனியான வரலாற்று ஆசிரியர்கள் இல்லையென்றால் வேட்டைக்காரனின் புகழ் மட்டுமே பாடப் படும்” என்ற சின்னுவா அச்சுபேயின் கூற்றை இங்கு நினைவு கூறலாம். நிலச்சாகுபடி என்னும் அடிப்படையிலேயே நமது ஆதித் தொன்மையான பொருளாதாரம் இருந்தது என்பதையும், நிலத்தின் வளப்பமே, நாட்டின் செழிப்பைத் தீர்மானித்தது என்பதையும் நமது சங்கப் பாடலில் - ஆவுர் மூலங்கிழார் “ஒரு பிடிபடியுஞ் சீறிடம், எழுகளிறு புரக்கு நாடு கிழவோயோ” என்று கிள்ளிவளவன் எனும் மன்னனை விளித்துப் பாடியதில் அறியலாம். பல்குன்றக் கோட்டம் (இன்றைய திருப்பதிக்கும், திருவண்ணாமலைக்கும் இடைப்பட்ட நாடு) போன்ற மலைப் பிராந்தியங்களில் நிலவண்மை சிறப்புற்றிருந்ததை - அங்கு விளைந்த எள் ஒரு கைப்பிடியில் ஏழு தானியங்களுக்கு மேல் கொள்ளாத அளவு செழுமையுடையது. உழாமல் வித்திய பூமியிலும் கடுகு ஏராளமாக விளைந்தது” - என்பதை மலைபடுகடாம் (102 - 106) சொல்கிறது. திருவள்ளுவரோ உழவரைப் புகழ்தலோடு இல்லாமல், அத்தொழிலோடு தொடர்புடைய சில அறிவுரைகளும் சொல்கிறார் - “கொடிப் புழுழி கஃசா உணக்கின்”, அதாவது கால்பகுதியில் உலத்திவிட்டால், அந்நிலத்திற்கு ஒரு பிடி எருவும் இட வேண்டாம் - என்பது பொருள். இப்படிச் சிங்கம் போலிருந்த நமது தமிழர் வாழ்வினை, சிவராமன் போன்றவர்கள் ‘ஆறாம் தினை' மூலமாக, அவர்தம் பண்பாட்டு வரலாற்றை, உணவே மருந்தாக வாழ்ந்த அவர்தம் வாழ்வியல் முறைகளை எழுதாவிட்டால், Macaulay போன்ற வேட்டைக்காரர்கள் எழுதியதே நம் வரலாறாகிவிடுமல்லவா? வெள்ளைச் சீனி, கடல் உப்பு வேண்டாமென அவற்றின் தீமையைச் சொல்கிறபோது ஒன்றைச் சொல்ல வேண்டும் -பழந்தமிழரது வாழ்வில் வெற்றிலைக்குக் கிளிஞ்சல் சுண்ணாம்பு மட்டுமே உபயோகப்படுத்துப்பட்டது, மேலும், ‘களி' என்கிற கருங்காலி மரத்தின் பட்டையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு மெழுகுப் பாக்கையே, சிறப்பு வகைப் பாக்கையே, அவர்கள் அதனோடு சேர்த்து உண்டார்கள் என்கிற குறிப்பு நினைவிற்கு வந்து, இன்றைய பான் மசாலாக்களின் கொடூரம் பயமுறுத்தியது. தினையரிசி இட்லி, கைக்குத்தல் அரிசி இட்லி இவற்றின் செய்முறையோடு, உலகின் எந்த மூலையிலும் இதுபோன்ற அதீத நுட்பத்துடன் நொதித்து ஓர் உணவைத் தயாரிக்கும் முறை இல்லை” என்று நமது இட்லியின் அருமையைப் புரியவைக்கிறார். 25 வருடங்களுக்கு முன்பு கடையின் ஒரு ஓரமாக வைக்கப்பட்டிருந்த ‘டூ மினிட் இன்ஸ்டன்ட் நூடூல்ஸ்' இன்றைக்கு இன்றியமையாத உணவான சோகம், அபாயம் குறித்து அவர் சொல்கையில் எனக்கு ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது (உதாரணம் - நாய் பிஸ்கட்) இவற்றிற்கு மாற்றாக நமது பாரம்பர்ய கடலை மிட்டாய் எப்படி உகந்தது என்று சொல்லி விட்டு, அவை புரட்சி நடிகா;கள், அழகுராணிகள், பணக்கார விளையாட்டுகளின் வெள்ளை வீரர்களால், சான்றளிக்கப்பட்டு சந்தைப்படுத்தப் படாததாலேயே இன்றைக்குக் குடிந்தைகளிடமிருந்து அந்நியமாகி விட்டன என்றும் சொல்கையில், கரிசல்காட்டுக் காரியான எனக்குக் கோவில்பட்டித் தீம்பண்டங்களை நினைத்து நாவூறியது. எங்களுர் காளிமார்க் கலரை, அசுர பலத்தோடு அழித்துவிட்ட Cook, Pepsi ஐ நினைத்து கோபம் தலைக்கேறுகிறது. (Bovonto) மட்டுமே சவலைப் பிள்ளைபோல இன்றுமிருக்கிறது. கடலை மிட்டாய் வியாபாரி - மொறுமொறுப்பு குறையாமல் இருக்க கெமிக்கல் சேர்க்க மறுத்தது - குறித்துக் குறிப்பிடுகிறார். “கரிக்காய் பொரித்தாள் கன்னிக்காய் தீய்த்தாள் பரிக்காயைப் பச்சடி செய்தாள் உருக்கமுள்ள அப்பைக்காய் நெய்துவட்டல் ஆக்கினாள்” என்று காளமேகப் புலவர் சொன்ன அத்திக்காய் பொரியல், வாழக்காய் தீயல், மாங்காய் பச்சடி, மற்றும் கத்தரி நெய் துவட்டலை, மேற்கோள் காட்டுகிறார். சிலப்பதிகாரம் உயர்த்திப் பாடிய பாகல், பீர்க்கு. கொத்தவரை, மாதுளங்காய் எனப் பட்டியலிடுகையில் சிவராமனுடைய பண்டைய இலக்கியப் பரிச்சயம் ஆச்சர்யப்படவைக்கின்றது. பாலிலிருந்து வெண்ணெய் (கொழுப்பு) நீக்குவதற்கு (சில மருந்துகளைக் கொண்டு) தனிப்பட்ட முறைகள் இருந்தன என்றும் அவ்வாறு வெண்ணெய் நீக்கப்பட்ட பால் விற்பனையாயிற்று என்ற நச்சினார்கினியாரின் குறிப்பு நினைவிற்கு வருகின்றது. அது போலத்தான் புலால் உணவு ஒன்றும் கீழானதல்ல, அதனை உண்போர் கீழ்மக்கள் அல்ல என்று சிவராமன் சொல்கையில், சங்கப்புலவரின் கூற்றொன்று சான்றாக நினைவிற்கு வருகிறது. தன்னைப் பாணராக வைத்து, குமட்டூர்க் கண்ணனார் என்றும் புலவர், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடுங்கால், ‘கட்குடிக்கவும், அரிசிச்சோறு ஆக்கவும், இறைச்சித் துண்டுகளை வெட்டவும், வறுத்து எடுத்துப் பிற தின்பண்டங்களைச் சமைக்கவும் வருக' என்று யாவரையும் அவ்வரசன் அழைத்தான் என்று பாடியது முன்வருகிறது. ஆனால் பாருங்கள், இம்மயக்கக் குடியைப் பெரிதும் நுகர்தற்பொருட்டு, அவர்கள் இஞ்சித் துண்டுகளை வைத்திருந்தார்களாம். குறையாமலும், தவறாமலும் இவை கிடைத்ததற்காக அவர்கள் தங்கள் கழுத்திலணிந்திருந்த மாலைகளில் பூவையும், இஞ்சித் துண்டையும் மாற்றி மாற்றித் தொடுத்து வைத்திருந்தார்களாம் கோப்பையில் கள்ளை ஒருமுறை உறிஞ்சுவதும், அடுத்து இஞ்சித் துணுக்கைக் கடித்தலும் கோடலும் மாறி மாறி நிகழ்ந்தன என்கிறது அப்பாடல். இஞ்சி எத்தகைய அருமையான சீரணத்திற்குகந்த பொருள் என நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இஞ்சிப், பூண்டு விழுதில்லா கறிக்குழம்பை கிராமப்புறங்களில் பார்க்க முடியாது. Noble பரிசு வாங்கியவர்களில் 99% சதவிகிதத்தினரும், ‘மைக்ரோசாப்ட்' ஆப்பிள் முதலாளிகளும் அசைவப் பிரியர்கள் என்று சொல்லி புலாலைத் தவிர்க்காதிர்கள், ஆனால் அடுத்த நாளே கொள்ளு ரசம், இஞ்சித் துவையலென வயிற்றுக்கு ஓய்வு கொடுங்கள் எனவும் சொல்கிறார். ஐந்து வயதுக் குழந்தைக்கு hair straightening, scrub, spray அடித்துப் பளபள உடைகளைக் கோடைகாலத்திலும் போட்டு பிறந்தநாள் கொண்டாடுகின்ற அவலம் அதன் அழகையும், ஆரோக்கியத்தையும் கெடுக்குமென்கிறார் - சான்றுகளோடு. நறுமணப் பொருட்களைப் பெரிதும் விரும்பியவர் தாம் தமிழர்கள். மாதவி கோவலனுடன் கடற்கரைக்குச் சென்றபோது “அவளது கூந்தலுக்கு மென்மை மிக்க வாசனைப் பொருள் பூசப்பட்டது - அந்நறுமணம் பத்து வகை துவர் சரக்குகள், ஐவகை வாசனை, 32 வகை நறுமணச் செடிகளில் கிடைத்த சாறுகள் என்பவற்றாலானது. அகிற்புகை கேசத்திற்கு ஊட்டப்பட்டது. கடைசியில் கத்தூரியிலாகிய ஒரு வகை மெழுகு கூந்தற்கிடப்பட்டது” என்கிற குறிப்பு காணப்படுகிறது. இன்றைக்குச் சாம்பிராணியைத் தலைக்கு இடுதல், சளித் தொந்திரவு & நறுமணம் முதலிய இருவகை நன்மை பயக்கும் என்பதை எவ்வளவு பேர் நினைக்கிறார்கள்? தமிழ் மகளிர் இயற்கை நறுமணப் பூச்சுகளை தமது உடலிற்கு இட்டுக் கொண்டனர் என்ற குறிப்புமுள்ளது. நறுமண நுகர்வுணர்வு தமிழரது ஆதிப்பண்பு என்பதற்குச் சான்று - அகஸ்டஸ் அவைக்குச் சென்ற இந்தியத் தூதுவர்களைப் பற்றிய ஸ்டராபோ என்பவரது குறிப்பு, “தூதர்களின் இடையைக் கச்சுக்கள் அலங்கரித்தன; அவர்கள் உடல், வாசனைப் பூச்சுக்களால் நறுமணம் வீசிற்று” என்கிறார் ஸ்டராபோ. இப்படி வாழ்ந்த நமது பராம்பரிய வாழ்வின் சிதைவு, அவற்றிற்கு நாம் கொடுக்கின்ற விலை, இவற்றைச் சுவை குன்றாத ஒரு எளிமையான, சுவாரஸ்யமான நடையோடு, மிகமுக்கியமாகப் பயன் தருகின்ற உணவுத் தயாரிப்புக் குறிப்புக்களோடு தருகின்ற இப்புத்தகம் ஒரு மிகச் சிறந்த பண்பாட்டியல் ஆவணம். சமயங்களில் நமக்கு நாமே ரசித்துச் சிரிப்போமே அதுபோல பலசொற்றொடர்கள் - 1. ‘ஈவது விலக்கேல்' என்பது மறந்து ‘ஈஎம்ஐ தவறேல்' என்று வாழ்கிறோம். 2. அரிசி, அரிசி என்று கொண்டாடும் பட்டை தீட்டிச் சீவிச் சிங்காரித்த வெள்ளை அரிசி. 3. வேளாண் கலாச்சாரமாக இருந்ததை வேளாண் தொழிலாக மாற்றிய புதுத் தொழில் நுட்பங்கள். 4. அவரைக் குடும்பத்தின் ஒண்ணுவிட்ட மச்சினனான கொத்தவரங்காயை வாயுக் குத்து என நாம் ஒதுக்கி விடுகிறோம். 5. கறுப்பு நிற கோக்கோவைச் சந்தைப்படுத்த எத்தனை சிவப்புநிறங்களைப் பயன் படுத்துகிறார்கள் என்பதை யோசித்தால் அந்த ‘நிறவெறி' அரசியல் புரியும். 6. வெளிநாட்டு மிளகாயை அரியாசனத்தில் வைத்துவிட்டு, நம்ம ஊர் மிளகை சூடான சூப்புக்கும், ஆம்லெட்டுக்கும், பெப்பர் சிக்கனுக்கும், வெண்பொங்கலுக்கும் என விஷேஷத்துக்கு ஒதுக்கிவிட்டோம். 7. மஞ்சளிலும் சேர்த்தி இல்லாமல், பச்சையிலும் சேர்த்தி இல்லாமல், மேக்கப் போட்டு வந்திருக்கும் பெங்களூரு வாழைப் பழம். 8. ‘மங்குனி எண்ணெய் வகையறாக்கள்' ஆன ரிஃபைண்டு ஆயில். 9. விருந்து என்றால் யூனிஃபார்ம் போட்ட சிப்பந்திகள் பரிமாற, ஹோட்டல் மேஜையில் சாப்பிடுவது மட்டும்தானா? பெளர்ணமி வெளிச்சம் பொழிய, தென்னை மரத் தாலாட்டுடன், மொட்டை மாடியில் சாப்பிடும் நிலாச் சோறும் விருந்துதான். 10. இச்சை தரும் காதலும், பச்சைத் தேநீரும் உங்கள் மனசைப் பாதுகாக்கும். 11. கடைசியாகக் கடல் பார்த்தது எப்போது, காதலியின் வெட்கத்தினைக் கண்கள் முட்டப் பார்த்துச் சிலாகித்து மலர்ந்தது எப்போது? 12. ‘நீருக்குள் நிற்கும்போதும் கூட வியர்க்கிறது ‘எனச் சிலாகிக்கும் காதல் சமீபமாக இல்லை. ‘அயித்தயும் மாமனும் சுகம்தானா?' என இப்போது மாமன் மகள்கள் கரிசனமாகப் பாடுவதில்லை. ‘எதற்கு வம்பு' என்று காதலை கசின் சிஸ்டரிடம் காட்டுவதுமில்லை. 13. நாங்க A.C இல் தூங்கி, A.C காரில் போய், A.C இல் வேலை பார்த்து, A.C மக்களுக்காகவே உழைப்பவர்கள் நாங்களுமா தண்ணீர் குடிக்க வேண்டும்? (“சுடு சோறு கொதி கஞ்சி பொசுக்கியதே இல்லை ஊர் வெயில். டயட் கோக் குளுரூட்டப்பட்ட வீடு. ‘பொதுக்குறதுன்னா' என்ன எனக் கேட்கும் மகள் அக்கினியாச்சு A.C வாழ்க்கை!) இப்படிப் பல வாசகங்கள் என்னை ஈர்த்தவை. ‘சகமனிதனை நேசி' எனக் கையால் மலம் அள்ளும் கொடுமையினைச் சாடி, இன்னமும் தமிழகத்தில் 27,000 பேர் இந்த அவல நிலையில் இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரம் சுட்டுகிறார் ‘அணுஉலை ஆபத்தினைப்' பட்டியலிட்டு சூர்ய சக்தியை மின் சக்தியாக மாற்றுகின்ற அவசியத்தையும், அதன் வெற்றியையும் அழகாகப் பட்டியலிடுகிறார். ‘அறம்சார் அறிவியல்' தான் தேவை என உறுதியாக நம்பி, மாற்றத்தின் துவக்கப்புள்ளி நம்மிடமிருந்தே ஆரம்பிக்க வேண்டுமென்கின்ற Dr.சிவராமனைப் பார்க்கையில், மருத்துவத்தை வெறும் தொழிலாகப் பார்க்காமல், வாழ்க்கை முறையாக அவர் கொண்டிருப்பதைக் காண்கையில் ஒரு சம்பவம் நினைவிற்கு வருகிறது. திருமதி சண்பகம் துரைசாமி (சில ஆவணங்களில் சண்பகம் துரைராசன் என்று காணப்படுகிறது) என்னும் பார்ப்பனப் பெண் கணவனை இழந்தவர். பி.ஏ. பட்டம் பெற்றும் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் (அப்போது அவருக்கு வயது 37க்குள் இருக்கலாம். கல்லூரியில் சேர முடியாத வயது), மருத்துவ கல்லூரிக்கு விண்ணபித்திருந்ததாகவும், தமக்கு தகுதி இருந்தும், தமிழ்நாடு அரசு பின்பற்றி வரும் இடஒதுக்கீட்டின் காரணமாகத் தமக்கு இடம் கிடைக்காமல் போய்விட்டது என்றும், எனவே இட ஒதுக்கீடு, மாணவர்களின் தகுதி திறமையைப் புறக்கணிக்கிறது என்றும், தனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வகுப்பு வாரி உரிமை தடையாக இரக்கக்கூடாது என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். திருமதி சண்பகம் துரைசாமியைப் போலவே சி.ஆர். சீனிவாசன் என்னும் பார்ப்பனரும் பொறியற் கல்லூரியில் சேர விண்ணப்பத்திருந்தும் தான் ஒரு பார்ப்பனராக இருப்பதால் தமக்கு இடம் மறுக்கப்பட்டது என்றும் எனவே இடஒதுக்கீடு கூடாது என்றும் வழக்குத் தொகுத்தார். திருமதி சண்பகம் துரைசாமிக்காக வாதாடிய வழக்கறிஞர் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் என்பவர். இவர் இந்திய அரசின் முன்னாள் அட்டர்னி ஜெனரலும், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்களுள் ஒருவரும் ஆவார். சீனிவாசன் தரப்பில் வாதாடியவர் நீதிபதியாக இருந்து ஒய்வு பெற்ற வி.வி. சீனிவாச அய்யங்கார் என்பவர். சமூக நீதிக்கு எதிராக வாதாடிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யரை, அந்த வழக்கில் அவர் அதி திறமையாக வாதாடியபோதும், முதல்தரமான வழக்குறைஞர் (First Grade Lawyer) இரண்டாந்தர அரசியல்வாதி (Second Grade Politician) மூன்றாந்தர அரசதந்திரி (Third Grade Statesman). எனப் பழம்பெரும் காங்கிரசுக்காரரான திரு. செங்கல்வராயன் வருணித்தார். * * * * *
No comment