சீனிவாசனது – ஓவியம் குறித்த புத்தகத்தை முன்வைத்து…

"என்னுடைய ஓவியத்தில் நான் வாழ்ந்தது போலவே, ஒரு பார்வையாளரும் வாழ வேண்டும் என்று எவ்வாறு நீங்கள் எதிர்பார்க்க முடியும்? ஒரு ஓவியம் கல்தொலைவுகள் அப்பாலிருந்து எனக்கு வருகிறது. எவ்வளவு தொலைவிலிருந்து நான் அதை உணர்ந்தேன், அதைப் பார்த்தேன், அதை வரைந்தேன் என்று யார் சொல்வது..."
								   - பிக்காசோ
	ஓவிய நுண்ரசிப்பில் எனக்கு ஆழங்கால்படுதலோ, நுண்மாண் நுழைபுலமோ இல்லை. என்றாலும், கலை தரும் இன்பம், அதிர்வு, கிளர்ச்சி, சமன்குலைப்பு, - எனும் உணர்வின் பால் அவற்றோடு உறவு கொள்ளும் எளிய பயணம் எனக்கு வாய்த்திருக்கிறது இப்புத்தகத்தில் உள்ள ஓவியங்கள் வாயிலாக! ஒரு ஓவியத் தொகுப்பிலிருந்து சீக்கிரமாக வெளியேறி அச்சுப்பிரதிக் கட்டுரை எழுதுவதென்பது அவ்வளவு எளிதானதல்ல. 
	"தனிமையில் நீ முழுவதுமாக இருக்கிறாய், பிறருடன் இருக்கும்போது நீ பாதியாக இருக்கிறாய்" எனும் லியானர்டோவின் கூற்றுப்போல ஒரு ஓவியத்தில் விழிவழி நுழைந்து உணர்வில் ஒன்றுகையில் முழுவதுமாக இருக்கின்ற நான், அந்த அனுபவத்தைப் பற்றி எழுதுகையில் பாதியாகி விடுகிறேன். அப்பாதியில் மீதியை வார்த்தை வழி இங்கு பகிர்ந்துகொள்கிறேன். 
	வண்ணம், கோடு, உருவம், வடிவம், ஓளி, வெளி-இவையெல்லாம் வெறும் சொற்கள் மட்டுமே என நான் எண்ணியிருந்தேன். ஒரு ஓவியத்தை நான் பருகும்வரை. ஆம் - ஒரு ஓவியத்தை நாம் பார்க்க முடியாது - பருகத்தான் வேண்டும். ஓவியம் ஒரு அசையாக் கலை என்றொரு பொதுப்புத்தியின் கட்டமைப்பைக் காலி செய்து விடுகின்றன சீனிவாசனின் ஓவியங்கள். படைப்பாக்கத்தின் பெருநீரூற்றும், கணினித் தொழில் நுட்பத் திறனின் பேரலையும் இணைந்து சங்கமிக்கின்ற அவரது ஓவியங்கள் சுட்டுகின்ற திசை - பெருங்கடலையும், அடிவானத்தையும் ஒருங்கிணைக்கின்ற தொடுவானம். நெருங்கிவிட்டோமெனும் நம்பிக்கையும், தொடவியலா மாயமும் நிறைந்த தொடுவானத்தின் ஈர்ப்பு விசையே இந்த ஓவியங்களின் மொழி. 
	வாழ்க்கை, வண்ணம், விழுமியங்கள், வெளி, இழைகள் - இவற்றின் ஊடுபாவு பொதுவான ஒரு ஓவியத்தன்மை என்றாலும், இவரது ஓவியங்கள் வேர்கள், நினைவுகள், அடையாளங்கள் எனும் தனிக்கலவையோடு பயணிக்கின்றன. தனது இளம்பிராயத்தின் தஞ்சை மண் தனக்களித்த ஞாபகங்களின் கொடையோடும், சைவ சித்தாந்தத்தின் ஆன்மிகத் தெளிவோடும், (எடுத்துக்காட்டு - 'துவாரபாலிகை' ஓவியம் - துவாரபாலிகையை ஓவியக் கற்பனையில் முதலில் முன்னிறுத்தியது இந்தக் கலைஞர்தான்) சமகால வாழ்வின் சிடுக்குகளோடும், இவரது தூரிகை காட்டுகின்ற உலகு - பார்த்தல் அனுபவத்தை ஒரு பரசவசமாகவும், துயரமாகவும் ஓருசேர ஆக்குகின்றது. Festival Memory எனும் ஓவியம் பரவசத்தின் ஓளி உமிழ்கிறது என்றால், Trace of existence எனும் ஓவியம் தொலைந்துபோன ஒரு பொன்னுலகின் துயரம் நிரம்பி மெளனிக்கின்றது!
	இவ்வோவியிங்களின் இயக்கம் முழுவதிலும் ஒரு நாடகத்தன்மையை உணர்ந்தேன். அதனையே விமர்சகர் Ashrafi S. Bhagat, "The Versatile articulation of his drawings is narrative, descriptive, symbolic & metaphysical" என்று சுட்டுகிறார் எனக் கருதுகின்றேன். 
	புகைப்படங்களோடு, ஓவியங்களை ஒருங்கிணைத்து வரைந்திருக்கின்ற பாங்கு தான் இந்த ஓவியங்களின் Tone. தொழில் நேர்த்தியோடு கூடிய கலையின் ஒரு கீற்றை - A slice of art foiled beautifully upon photographs - இந்த ஓவியங்கள் எனக்கு உணரத் தந்தன. சமகால வாழ்வின் அபத்தங்கள், நினைவுகளின் சேகரிப்பில் இழந்த சொர்க்கம் - இவற்றைச் சமூகக் கடப்பாடோடு (Social Sensibility) முன்வைக்கின்ற இந்த ஓவியங்களின் வழியே அற்புதமான இக்கலைஞனின் மனவெளிக்குள் நானும் சஞ்சரிக்கிறேன். வெளியேறுகையில் - என்னைத் திடுக்கிடச் செய்கிறது அதன் சில வண்ணங்கள், வழி நடத்துகின்றன வாஞ்சையோடு அதன் சில கோடுகள்.
	ஒரு ஓவியம் ஒரு மனநிலையை உருவாக்கவும், சமன் குலைக்கவும் வல்லமை உடையது என்பதை இவரது Farmer Series ஒவியங்களும், Measurement of Indian Poverty Line எனும் ஓவியமும் எனக்கு உணர்த்தின. Farmer Series ஓவியத்தின் அடர் பச்சை, கருநீல வண்ணங்கள் என்னைச் சோளக்கொல்லைப் பொம்மையாய்ச் சமைத்தன என்றால், Measurement of Indian Poverty Line இல் வரும் கோடுகளும், குறுகிய இடுப்பின், ஒடுங்கிய கால்களின் அளவும் - அதன் கட்டமைப்புத் தளமும் எனது 'தப்பித்தல்' எனும் பொதுப்புத்தியைச் சமன்குலைத்தது. 
	தனது மண்ணின், நிலத்தின் நினைவுகள், பண்டிகைகள், சடங்குகள், விழாக்கள், மகிழ்ச்சிகள், நடனங்கள் இவற்றின் பெரும்பரப்போடு இயங்குகின்ற இவரது ஓவியங்களில் என்னைக் கட்டிப் போட்டவை The Rajapart, Kallapart (Anti-Hero) எனும் இரு ஓவியங்கள். ஒரு அறிமுகமற்ற, அச்சுறுத்துகின்ற நவீன உலகத்தில் மேற்சொன்ன இந்த இரண்டு கலைஞர்களும் இப்போது எங்கே? அவர்தம் இடமெது, அவர்களது கலையின் கனவுகள் எங்கே - எனப் பலப்பல கேள்விகளோடு என்னை ஆகர்ஷித்துக் கொண்டவை அவ்விரண்டு ஓவியங்களும். ராஜபார்ட்டின் கம்பீரத்தை விட கள்ளபார்ட்டின் ஓயில் தான் என்னை மிக வசீகரித்தது. 
	ஓவியர் பால் செசான் இந்த இரண்டு ஓவியங்களைப் பார்க்கையில் என் நினைவிற்கு வந்தார். அரவக்கோன் (அ.நாகராஜன்) தனது இருபதாம் நூற்றாண்டில் ஓவிய நிகழ்வுகள் எனும் புத்தகத்தில், "ஆப்பரிக்கப் பழங்குடியினரின் கலைப்படைப்பு உத்திதான் க்யூபிசம் பாணிக்கு வித்தாக அமைந்தது என்போர் ஒரு சாரார். இன்னொரு சாரார், ஓவியர் பால் செசான் படைத்த பிந்தைய ஓவியங்களில் இரண்டு கூறுகள் தான் க்யூபிசம் பாணிக்கு வித்தாக அமைந்தது என்று கூறுவார். அவை பால் செசான் தமது ஓவியங்களில் வண்ணப் பரப்பை சிறு சிறு பகுதிகளாகப் பிரித்துக் கொண்டு அவற்றில் வண்ண பேதத்தால் புதிய கட்டமைப்பை தோற்றுவித்தது; மற்றது, அவற்றில் உருவங்களுக்கு உருளை, கோளம், கூம்பு போன்ற ஜியோமிதி வடிவங்களாக மாற்றுருவம் கொடுத்தது" எனக் குறிப்பிடுவார். 
	செசானின் அந்த முதற்கூறு - கள்ளபார்ட் ஓவியத்தில் மிகப் பொருத்தமாக வெளிப்படுகிறது. வானம், சிறுமலை, அதனடிவாரம், வயற்பரப்பு, பூக்கள், விலங்குகள் - அனைத்தும் சிறுசிறு பகுதிகள் ஆனால் வண்ண வேறுபாட்டினால் வேறொரு புதிய கட்டமைப்பினைத் தோற்றுவிப்பவை. 
	செசானினின் இரண்டாவது கூறான உருளை, கோளம், கூம்பு போன்றவற்றினை ராஜபார்ட் ஓவியத்தில் சீனிவாசன் பரீசிலித்திருப்பதனைக் காணலாம். இந்த ஓவியத்தின் தளப்பகுதியின் வண்ணகோர்வை - ஒரு மாயக் கம்பளமாய் என்னை விழுங்கியது. நெளிவும், இழையமைவும் (Texture), செதுக்கமும், வண்ணநேர்த்தியும் - காட்சி உணர்வின் முழு வலிமையையும் கொண்டதொரு கம்பளமது. பின்னணியில் ராஜபார்ட்டின் கலங்கிய நிழலுரு, சேரா நிறங்கள் (neutrals) எனப்படுகின்ற நிறக்கலவையில் (Hue) இருப்பது கூடுதல் அடர்த்தி! கவிதைக்கும் இசைக்கும் அதிபதியான Orpheus நாயகனை இவ்வோவியங்களின் வழி நான் தரிசித்தேன். 
	வண்ணமும், ஒளியும் உணர்வின் இரு கண்களென்பதை உணர்த்துபவை இவரது Hero Series ஓவியங்கள். நகரம் சார் நிகழ்ச்சிகள், இந்துக் கடவுள்கள், ஆண், பெண் இணையர் என்று பல்வேறு தளங்களில் பயணிப்பவை இவை. ஒருவித அகக்கிளர்ச்சியையும், மன உந்துதலின் உச்சத்தையும் உருவாக்குகின்ற இவ்வோவியங்கள் இசைக்கும், ஓவியத்திற்குமுள்ள நெருக்கத்தினை எனக்குப் புலப்படுத்தின. ஜெர்மனியின் புகழ்பெற்ற ஓவியர் வாஸ்லி கண்டின்ஸ்கி (Wassily Kandinsky) "எப்படி ஒரு இசை வல்லுனர் தாளத்தையும் ஒலியையும் இணைத்து இசையை உண்டாக்குகிறாரோ, அதுபோலவே ஓவியர் தமது அனுபவங்களுக்கு உருகொடுத்து ஓவியங்களைப் படைக்கிறார்" என்று கூறியது உண்மைதான் போலும்!
	'Fluids' என்கிற இவரது ஓவியங்கள் 'முரணழகு' எனும் தனித்தன்மை வாய்ந்தவை. இயந்திரங்களின் ஆதிக்கம் அதேசமயம் அவற்றின் அவசியம் இவற்றோடு விலங்குகளின் அதி உன்னத இயங்கு சக்தி இவற்றை Juxtpost ஆக முன்னிறுத்திய அவ்வோவியங்கள், கடின உழைப்பையும், தக்கன தப்பிப் பிழைத்தலையும், குறியீடுகளாகக் கொண்டவை. 
	கலையில் பிரதேசத்தன்மை ஒரு முக்கியக் கூறு என்பதைத் 'தமிழ் அழகியல்' எனும் கருத்தாக்கம் வாயிலாக மிக அழகாக முன்மொழிந்திருப்பார் கலைவிமர்சகர் இந்திரன். இவரது 'Tracing the existence' 'Personal History' & 'Grandfathers album' எனும் ஓவியங்களில் தமிழ் வாழ்வியலின் பிரதேசத் தன்மை என்னை மிகக் கவர்ந்தது. மேலைநாட்டுப் போக்குகளின் பால் சார்பு கொள்ளாமல், 'தமிழ்ப் பிரதேசம் சார்ந்த வட்டாரத்தன்மை'யினை சர்வதேச அளவில் ஒரு பொதுத்தன்மையுடன் கடத்தி அனைவரின் உணர்களோடும் உறவாடுவது கலையினால் இயலும் என்பதை இவை உரத்துச் சொல்வதாகவே நான் உணர்கிறேன். 
	ஒவ்வொரு ஓவியத்திற்கும் ஒரு கதை உண்டு. எளிய மனித வாழ்வியலை பார்வைத் தளத்தில் துவங்கி அனுபவத் தளத்திற்கு எடுத்துச் சென்ற இந்த ஓவியங்கள் ஒவ்வொன்றிலும் எனக்கு ஒரு கதை கிடைத்தது. 
	அவரவர் கைவிளக்கு கொண்டு பயணத்தைத் துவங்கினால் - அள்ளித் தரும் பெருவெளி அற்புதம் ஒரு ஓவியத்திற்கு உண்டு. அதனை என் சிற்றறிவு எட்டியவரை இவ்வோவியங்களில் தொட்டேன். ஆனால் - புலன்களனைத்தும் தோய இந்த ஓவியங்களைப் புத்தகத்தில் அல்ல - பெரும் பரப்பில் வைத்துப் பார்க்க வேண்டும். அதன் அனுபவ வீச்சே வேறல்லவா - அப்பொழுது மாயகோவ்ஸ்கி சொல்வது போல - "பெருமூச்சுகளில் வாழும் ஒரு மேகமாவேன்".	
                                        * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *