சீனிவாசன் – பாலசுப்ரமணியனின் “நம்மோடுதான் பேசுகிறார்கள்” புத்தக வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை

உரையாடல்களின் தொகுப்பாகப், பேச்சு மொழியில், அதீத அலங்காரத்தின் மிகையின்றி, 'கைபற்றிக் கனவுகேள்' என்பது போல இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது. உரையாடல் எனும் வகைமை கேட்பவரோடு உடனடி நெருக்கத்தை ஏற்படுத்தினாலும், அதற்கென்று சில மொழிசார் சிக்கல் உண்டு. 
	கேதரின் பெல்ஸியின் 'பின் அமைப்பியல்' (மிகச் சுருக்கமான அறிமுகம்) (தமிழில் - அழகரசன்) எனும் புத்தகத்தின் தொடக்கத்தில் ஒரு குறிப்பு வருகின்றது. ஆங்கில எழுத்தாளர் லூயி கரோலின் புதினமான 'Through the looking glass' -இல் ஹம்பி டம்டி என்ற பொம்மைக்கும், சிறுமி ஆலிஸுக்கும், "பொருள் பற்றி நடக்கும் விவாதத்தில் யார் சொல்வது சரி" எனக் கேட்கின்ற பெல்ஸி, இருவருக்குமான அந்த உரையாடலின் ஒரு பகுதியினையும் மேற்கொள்காட்டுகிறார்: (பேச்சரவம் கேட்டிலையோ - தமிழச்சி தங்கபாண்டியன், 9) 
	'நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தும்போது, அதற்கு நான் எப்படிப் பொருள் கொள்ளவிரும்பிகிறனோ அதைத்தான் குறிக்கிறது. அதற்குக் கொஞ்சமும் கூடவோ குறையவோ அல்ல' என்றது ஹம்டி டம்டி எரிச்சலுடன்.
	'அப்படிச் சொற்களைப் பல பொருள் குறிக்கச் செய்ய முடியுமா என்பதுதான் கேள்வி'- ஆலிஸ் சொன்னாள். 
	'யார் யாருக்கு எஜமானாக இருப்பது என்பதுதான் இப்போது பிரச்சினை' - என்று டம்டி ஹம்டி டம்டி சொன்னது. 
	மேலும் தொடர்கின்ற கேதரின் பெல்ஸி மிக முக்கியமான 'மொழி' குறித்த பின் அமைப்பியலின் ஒரு வாதத்தைப் பின் வருமாறு முன்வைக்கிறார். 
	உரையாடல் என்பதை மொழிதான் சாத்தியப்படுத்துகிறது. ஆனால், அதனைச் சரியான இடத்தில் சரியானபடி பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை¨யுயம் அது விதிக்கிறது. ஒரு மொழி அமைப்புக்குள் எற்கனவே (அதாவது, நாம் பரிச்சயப்படுவதற்கு முன்னரே) கொடுக்கப்பட்ட பொருள்களுக்குக் கட்டுப்பட்டுதான் நாம் அதனைப் பயன்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறது. நமக்கென்று தனிப்பட்ட மொழி என்று எதுவும் இருக்கமுடியாது என்பதைத்தான் இந்த உரையாடல் நமக்கு உணர்த்துகிறது. ஆலிஸிடம் பேசத் தொடங்கும் முன்னரே, தான் மனதில் எதைக் குறிக்கிறோம் என்பதை ஹம்டி டம்டி 'மொழியாக்கம்' செய்ய வேண்டியுள்ளது. 
	'உரையாடல்' என்பது எத்தனை சிக்கலானது என்பது மற்றவர்களுடன் ஒரு 'பேசுதல்' என்கிற சட்டகத்தினுள் அமர்ந்து பேசும் பொழுது கொஞ்சம் பிடிபடும்; அந்த உரையாடல்களை எழுத்து வடிவத்தில் அச்சுப் பதிப்பாகப் பார்க்கும்பொழுதோ, லக்கான் நினைவிற்கு வருகிறார். "தலையைச் சாய்த்தல், ஆள்காட்டி விரலால் சுட்டிக் காட்டுதல் போன்ற சைககைளும் குறிப்பான்களே" என்று சொன்ன அவரது அந்தக் குறிப்பான்கள் வடிகட்டப்பட்டு வந்த அச்சுப் பிரதி இது என்பதால், இதனை ஒரு முழுமையான உரையாடல் எனவும் பெயரிடமுடியாது. ஆயின், முழுமையான உரையாடல் என்பதே சாத்யமற்ற ஒன்றுதானே! இரண்டு ஓவியர்களது எண்ண ஓட்டங்கள், கேள்விகள், சந்தேகங்கள், ஆற்றாமைகள், விருப்பத்தேர்வுகள் - மொத்தத்தில் வாழ்வியல் இங்கே புத்தகமாயிருக்கின்றது.  
	ஒரு உரையாடல் என்பது நமது ஆளுமையை அடுத்தவருக்கு அறிமுகப்படுத்துகிறது என்பதனைவிட, நமக்கே அதனை அறிமுகப்படுத்துகிறது என்பதுதான் உண்மை. அது, 'கருத்து முரண்பாடுகளை வன்முறையில் வெடித்துவிடாமல் கருத்து வேற்றுமைகளாக எப்படி வளர்த்தெடுப்பது' என்பதைக் கற்றுத் தருகின்றது. 'நாம் என்னவாகப் போகிறோம்', என்பதைக் கற்றுத் தருகின்றது. 'நாம் என்னவாக இருக்கிறோம்' என்கின்ற முக்கியமான அவதானிப்புகளை முன் வைக்கின்றது. கனவுகளையும், விழுமியங்களையும் நம்பிக்கைகளையும், பாசாங்குகளையும், பொய்களையும், உடற்தோலுக்குள் பதுக்கி இருக்கின்ற நாம், எதிரே ஒருவர் கேள்விகளோடு வந்து உரையாடுகையில் எவ்வளவு கவனமுடன், அடிக்கு அடி யோசித்து 'தயார் நிலையில் இருக்கின்ற' பச்சோந்திகள் போலாகிவிடுகிறோம்! ஆனால், 'மொழியானது இறுதியான பதில்களைத் தருவதைவிடவும், நிலைத்திராத, ஐயப்படாடுகள் நிறைந்த கேள்விகளை எழுப்புதற்குப் பெரிதும் உதவவேண்டும்' என்பதை உணர்ந்துகொண்டோமானால் - உரையாடலில் யாரும் யாருக்கும் எஜமானனுமில்லை, அடிமையுமில்லை. (பேச்சரவம் கேட்டிலையோ - தமிழச்சி தங்கபாண்டியன் , 10&11); இதனை அச்சொட்டாகப் புரியவைக்கிறது இப்புத்தகம். எஜமானனும், அடிமையுமில்லை - ஆசிரியர் வாசகனும் இல்லை இங்கு.
	எளிமைதான் இப்புத்தகத்தின் பலம். மொழியைப் போலவே கலையும் ஒரு செய்தியை எடுத்துச்செல்கின்றதா? ஒரு கலைப்படைப்பின் பொருளைத் தெளிவாக்க நாம் எவற்றை நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டும்? கலைஞர்களின் வாழ்வுகளைப் பற்றிய புற உண்மைகளையா? அல்லது அவர்களது படைப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பதைப் பற்றிய அக உண்மைகளையா? ஒரு கலைப்படைப்பை இன்புறுதலுக்காக மட்டுமே என்று நம்மால் பார்க்க முடியாதா? (கலைக் கோட்பாடு, 141) என்னும் கேள்வியைச் சற்று மாற்றி, உரையாடல் மொழியின் மூலம், தத்துவச் சிடுக்கை விடுத்துக், கலை மற்றும் வாழ்வுசார் செய்தியை சாமான்ய வாசகனுக்கு எடுத்துச் செல்லமுடியுமா என்று கேட்டு, 'முடியுமே' என்கிறது இப்புத்தகம்.
 
	எழுத்தைப் "பேச்சின் நோய்" என்று சொன்ன ரூசோவை இங்கு நினைக்கிறேன். எழுத்தை வெறும் ஒரு சேர்த்தல் என்றும், ஒரு முக்கியமில்லாத 'உபரி' என்றும் சொன்ன அவர், எழுத்து வடிவில் இருக்கின்ற இந்தப் பேச்சை என்னவென்பாரோ? ஒருவேளை, 'பேசப்படுவதற்காக மொழிகள் உண்டாக்கப்படுகின்றன, பேச்சை நிறைவூட்டும் பொருளாகவே எழுத்து பயன்படுகிறது', என்று தான் சொன்னதையே இப்புத்தகத்தில் மறுபடியும் உறுதி செய்து கொள்வாராக இருக்கும்! 
	ஒரு உரையாடலின் வழி இவ்வளவு எளிமையாகக், காத்திரமான ஒரு விஷயத்தை வைக்க முடியுமா என்பதற்கு - ஒரு சிறு எடுத்துக்காட்டு: 
	திருத்தமாக செய்யப்பட்ட எந்தவொரு வேலையின் வெளிப்பாடும் அழகுணர்வோடு இருக்குமானால் ஓவியம். அதே திருத்தமாக செய்யப்பட்ட எந்தவொரு வேலையின் வெளிப்பாடும் சிந்தனை சார்ந்து இருக்குமானால் அது படைப்பு. அப்படின்னா சிந்தனை சார்ந்த, சிந்தனையைத் தூண்டக்கூடிய விதத்தில் அமையும் எந்தவொரு வெளிப்பாடும் ஓவியம்தான். ஓவியத்துக்கும் படைப்புக்கும் இருக்கிற மிகப்பெரிய வித்தியாசமே ஓவியம் அலங்காரமாக இருக்கலாம். அலங்காரமாகவும் இருந்து கொண்டு சிந்தனையையும் தூண்டுமானால் அது படைப்பு. பயிற்சி, பயிற்சியின் முதிர்ச்சியில் விளைபவன் ஓவியன். பயிற்சியின் முதிர்ச்சியில் இருந்து விடுபட்டு சிந்தனாவாதியாக மாறி, சிந்தித்தவற்றைப் படைப்பின் மூலமாக வெளிப்படுத்திச் சிந்தனையை தூண்டும் விதத்தில் படைப்புகள் இருக்குமானால் அவன் படைப்பாளி. (நம்மோடுதான் பேசுகிறார்கள், 56)
	அனுபவங்களின் துய்த்தலை, அறிதலின் வரையறையை வெறும் தகவல்களாகப் பதியாமல், கேள்விகளோடு துவங்கி, ஆழ்ந்த அக்கறையோடும், ஆதங்கத்தோடும் பயணிக்கின்ற, தமக்குத் தாமே தெளிவுறுகின்ற இரண்டு ஆன்மாக்களை இங்கு பார்க்கிறோம். ஒரு Lived Experience ஐச் சரிசமமாக இரண்டு ஆளுமைகள் பிட்டுத் தருகிறார்கள். அவற்றில் ஒருவர் இன்னொரு ஆளுமையைப் பார்த்துச் (சீனிவாசனைப் பார்த்துச்) சொல்கிறார்:
	வாழ்வியலே கலையா, கலையே வாழ்வியலா வச்சிருக்கற வேற யாரையுமே என் வாழ்க்கையில ஐம்பது வருஷத்துல நான் பார்த்ததில்ல. 
	ஆனா முற்று பெற்ற நிறைவான வாழ்க்கையை மிகப்பெரிய இயக்கம்னு காமிச்சிக்கிட்டிருக்கிற அவனப் பார்த்து என்னால பிரமிக்காம இருக்க முடியறதே இல்ல. எப்பவுமே நான் சொல்லுவேன்.
 
	அப்படி இருக்கறதுதான் ஒரு மிகப்பெரிய காம்போஷிஷன்னு நான் இதுவரைக்கும் சொல்லிக்கிட்ருந்தேன். அதயே நான் தன் வாழ்க்கையில் காமிக்கிறான். அவன்கிட்ட ஒரு புள்ளிய வைக்கவும் முடியாது. அவன்கிட்டேர்ந்து ஒரு எக்ஸ்ரா புள்ளிய எடுக்கவும் முடியாது. (நம்மோடுதான் பேசுகிறார்கள், 118)
	 1968இல் வெளியிடப்பட்ட 'கலையின் மொழி' (Language of Art) என்ற முக்கியத்துவம் வாய்ந்த நூலை எழுதிய ஹார்வர்டு பேராசிரியரான மறைந்த நெல்சன் குட்மேன் (Nelson Goodman) கலையின் பயன்பாட்டு நோக்கத்தை வளர்த்த ஓர் அண்மைக் காலத் தத்துவஞானி. குட்மேன் தாம் வாழ்ந்த அனுபவத்தில் (Lived experience) கலையின் பங்கை ஆதரித்தார். குட்மேன்கூட அறிவு அல்லது அறிதலின் வரையறையை உண்மை அறிக்கைகளின் வெறும் வறட்டுப்பட்டியலாகக் குறுகியதாக்கவில்லை. அவர் எழுதினார், "நான் கலையின் மூலமாகத் தெரிந்துகொள்வது நம் எலும்புகளிலும் நரம்புகளிலும் தசைநார்களிலும் உணரப்படுவதோடு தம் மனதாலும் பற்றிப்பிடித்துக் கொள்ளப்படுகிறது. உயிர்ப் பொருளின் முழுஉணர்வுத்திறனும் எதிர்வினை செய்ததிலும் (Sensitivity and responsiveness) குறியீடுகளைக் கண்டுபிடிப்பதிலும் பொருள்விளக்கம் கொடுப்பதிலும் பங்கெடுக்கின்றன". (கலைக் கோட்பாடு, 159)
	இந்த Sensitivity & responsiveners தான் ஒரு சாதாரண மனிதனை முழுமையான படைப்பாளியாகக், கலைஞனாகப் பரிணமிக்கச் செய்கிறது என்பதற்கு ஏராளமான சான்றுகள் இப்புத்தகத்தில். இயல்பாக இருந்தவை எல்லாம் எப்படி அரிதாக்கப்பட்டுக், கண்காட்சிச் சின்ன அந்தஸ்து பெறுகின்றன என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு:
	ஒரு மொழியின் அடையாளம் எளிமை, வாழ்வியலின் அடையாளம் தூய்மை, கலையின் அடையாளம் வளர்ச்சி, இம்முன்றையும் தமிழ்நாட்டில், மதராஸில் காபந்து செய்ய நினைப்பவர்க்கு வேட்டியை சலவைக்குப் போட்டால் முப்பத்தைந்து ருபாய். இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு காபி நூற்றைம்பது ரூபாய். காபந்து செய்ய நினைப்பவர்க்கு அந்த எண்ணத்தைத் தவிர வேறு வேலையில்லை.
	நான் இப்படி காபந்து செய்கிறேன் என்று சொல்லி சொல்லியே அதை அவர் தொழிலாக்கிக் கொண்டார். பரவலாக இயல்பாக இருந்த எல்லாவற்றையும் அரிதாக்கி, இது அரிதாகி போய்விட்டது. காப்பாற்ற நான் மட்டுமே மிச்சம் என்று சொல்லி அந்த வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கிறார் பண்பாட்டுக் காவலர். (நம்மோடுதான் பேசுகிறார்கள், 90)
	இப்புத்தகத்தில் எனக்கு மிகப் பிடித்தமான ஒரு பகிர்தல், ரசனை, அலங்காரம் குறித்த இவர்களது பதிவு:
	ஒரு நல்ல ரசனையோட, சமூகத்தின் மீதான ஒரு அக்கறையோட, அப்படின்னா என்னன்னு கேட்கலாம். தன் மேல யாரு அதிகமா அக்கறை எடுத்துக்கறானோ, தன்னை யாரு அதிக ரசைனையோட வச்சிருக்கானோ, தன்னை யாரு மிக அழகான அழகியலோடு வச்சிருக்கானோ, அறிவு சார்ந்த ஒரு வாழ்க்கையைத் தனக்கானதா அமைச்சிக்கிறானோ அவன்தான் சமூகத்தின் மேலே மிகப்பெரிய அக்கறை உள்ளவன். (நம்மோடுதான் பேசுகிறார்கள், 122)
	பிரெஞ்சுச் சமூகவியலாளர் பியர் பூர்தியூ இரசனையைச் சமூக - பொருளாதார வர்க்கம் மற்றும் 'கல்வி மூலதனம்' ஆகியவற்றோடு ஒப்பிட்டு ஆய்ந்துள்ளார். (கலைக் கோட்பாடு, 88) 
	"இரசனை வகைப்படுத்துகிறது, அது வகைப்படுத்துபவரை வகைப்படுத்துகிறது (Taste classifies, and it calssifies the classifier)" என்றும் அவர் சுட்டுவார். (கலைக் கோட்பாடு, 89) 
	வகைப்படுத்துபவரை வகைப்படுத்தும் ரசனை எப்படி வெளிப்படுகிறது பாருங்கள்:
	வெறும் சிற்பங்கள்லயும் ஓவியங்கள்லயும் மாத்திரம் நாம் ஆடை அலங்காரங்களைத் தேடிப் பிடிக்கல, நம்ம கண்ணு முன்னாடி வாழ்நதுகிட்டு இருக்கற பல பேரோட அலங்காரங்கள் நம்மள பாதிச்சிருக்குங்கறத நான் தெரிஞ்சுகிட்டேன். 
	இப்படியான பாதிப்புகள்ல ஒண்ணு பண்டித ஜவகர்லால் நேருவுடைய ஆடை அலங்காரம் அப்படின்னு சொல்லலாம். எல்லாருக்கும் தெரியும் நேரு எப்படி டிரஸ் பண்ணுவாரு. எப்படி நடப்பாரு, எப்படி பேசுவாருன்னு. அதே மாதிரிதான் மகாத்மாகாந்தியும். அவங்களவங்களுக்கே உரிய ஒரு அலங்காரத்த, அவங்கவங்களுக்கே உரிய பாணியில அமைச்சிட்டு அது அவங்களோட வசதிக்காகவும் அவங்களுடைய உடல் அமைப்புடைய நேர்த்திக்காகவும், அது எடுத்துக் காட்ற மாதரி பண்ணியிருக்கற அந்த அலங்காரமும் மிக சிறந்ததுதான், எங்க அப்பாவைப்போல. (நம்மோடுதான் பேசுகிறார்கள், 105)
	வாழ்க்கையில் சின்னச் சின்ன சந்தோசங்களைக் கொடுக்கக்கூடிய மிகவும் செலவு பிடிக்கக்கூடிய பாலசுப்பரமணியத்தின் டெலிபோன் உரையாடல்கூட அவருடைய வாழவியலின் அலங்காரம்தான். ஒருவருக்கு எது சந்தோசத்தைக் கொடுக்கிறதோ அது அவருடைய வாழ்வின் மிகப்பெரிய அலங்காரம். குழந்தை வரம் வேண்டிக்கட்டும் தொட்டில் அரசமரத்திற்கு எப்படி அலங்காரமோ அதுபோலத்தான். (நம்மோடுதான் பேசுகிறார்கள், 48 & 49)
	ஆனால் இவர்கள் இருவரின் பின்வரும் இந்தக் கருத்தில் எனக்கு ஒரு சிறு சந்தேகம் இருக்கிறது - 
	பொருளாதாரம் எப்பொழுதுமே கலை வெளிப்பாடுகளுக்குத் தடையாக இருந்ததில்லை. மனநிலைகள் தடையாக இருக்கிறது. சிந்தனையும் சிந்தனை சார்ந்த கலை வெளிப்பாடும் பொருளாதாரத் தடையினால் தடைப்பட்டதில்லை. மக்களையும் சமுதாயத்தையும் செழுமைப்படுத்துவது சிந்தனை சார்ந்த கலை வெளிப்பாடுகளே! (நம்மோடுதான் பேசுகிறார்கள், 33) 
	மிகச் சரியான கருத்து - எண்ணம். ஆனால் பொருளாதாரம் அக்கலை சென்று சேர்கின்ற மக்களுக்கு, ஒரு கலாரசிகனை உருவாக்குவதற்குத் தடைதானே - அவ்வாறெனில், அம்மக்களை, வெஜனனை உள்ளடக்கிய ஒரு சமுதாயத்தை ஒரு கலைஞன், படைப்பாளி எவ்வாறு செழுமைப்படுத்த இயலும்? பின்வருகின்ற இரண்டு உதாரணங்களின் மூலம் இதனை விளக்க எண்ணுகிறேன் : 
	கலையும் பணமும் பற்றிய எந்த அத்தியாமும் கலை ஏலங்களில், குறிப்பாக மிகவிலை உயர்ந்திருந்த 1980களில், கொடுக்கப்பட்ட வானுயர்ந்த விலை பற்றிய குறிப்பு இல்லாமல் நிறைவு பெற முடியாது. (கலைக் கோட்பாடு, 100)
	பில்கேட்ஸின் Corbis நிறுவனம் இன்றைக்கு மில்லியன் டாலர் விலையில் படி எடுத்திருக்கின்ற அருங்காட்சியகப் படைப்புக்கள் ஏராளம். லியனார்டோவின் முக்கியப்படைப்பான 'கோடக்ஸ் லெஸ்டர்' (Codex Leicester) அவருக்குச் சொந்தமானது.
	1989இல் நிறுவப்பட்ட கேட்ஸின் கிளை நிறுவனமான கோர்பிஸ் (Corbis), லூவர் (Louvre), ஹெர்மிட்டேஜ் (Hermitage), லண்டன் தேசிய கேலரி (London's National Gallary) மற்றும் டெட்ராயிட் கலை நிறுவனம் (Detroit Institue of Art) ஆகியவற்றிலுள்ள உருவங்களைப் படி எடுக்கும் உரிமையை வாங்குவதற்காக 100 மில்லியன் டாலருக்கு அதிகமாகச் செலவு செய்துள்ளார். 1997 வரை கோர்பிஸ் ஒரு மில்லியன் உருவங்களை டிஜிட்டல் வடிவமாக ஸ்கேன் செய்துள்ளது. மக்களின் வீடுகளிலேயே கலையைத் துல்லியமான உருவங்கள் வடிவில் மிகத்தட்டையான பெரிய திரைகளில் பாய்ச்சி வழங்குவதுதான் இறுதியான நோக்கமாகும். இவ்வித முறைமையைப் பயன்படுத்தி கேட்ஸ் தன் பல மில்லியன் டாலர் மதிப்புள்ள வீட்டில், வருகையாளர்கள் அவர்கள் நுழையும் அறைகளில் இருக்கும் கலையை அவர்களது விருப்பத்திற்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வதற்கு உதவமுயன்றுள்ளார். ஆனால், இப்போதைக்கு ஹெர்மிட்டேஜையும் லூவரையும் கணிப்பொறித் திரைகள், பின்னணிகள், மின்னணு அஞ்சல் அட்டைகள் வடிவில் அல்லது மரபு முறையிலான அச்சட்டைகள் மற்றும் சுவரொட்டிகள் வடிவில் உங்கள் மேசைமேல் வைப்பதற்கு கோர்பிஸ் முன்வந்துள்ளது. (கலைக் கோட்பாடு, 96&97) அப்படியெனில் அதனை வாங்கும் திறனைப் பொருளாதரமே தீர்மானிக்கிறதல்லவா!

	1995இல் ஆஸ்திரேலியாவின் நேளஷனல் கேலரி ஆப் ஆர்ட்டில் உறுப்பினர் சேர்க்கை வேண்டி வெளியிடப்பட்ட தகவல் சிற்றேடு (brochure), அது ஜேசன் போலாக்கின் ஓவியம் புளூ போல்ஸை (Blue Poles) வாங்கியதில் ஏற்பட்ட கருத்து வேற்றுமையைச் சித்திரித்தது. அந்த விளக்கக்குறிப்பேட்டின் அட்டை, அந்த ஓவியத்திற்குக் கண்டனம் தெரிவித்த ஒரு பத்திரிகையின் பெரிய தலைப்புச் செய்தியைக் காட்டியது. "குடிகாரர்கள் அதைச் செய்தார்கள் (Drunks did it)". ஆனால், அந்த விளக்கக் குறிப்பேட்டின் உள்ளே அந்த அருங்காட்சியகம் (அதன் உறுப்பினர்களும் என்று நம்பலாம்) பெற்ற இறுதி வெற்றியைத் தெரிவித்தது. "இப்பொழுது இந்த உலகம் அதன்மதிப்பு 20 மில்லியன் டாலருக்கு அதிகம் என்று நினைக்கிறது. அது முழுமையும் 14.50 டாலரிலிருந்து தொடங்கி (ஒரு உறுப்பினருக்கான சந்தா) உங்களுக்குரியது" இந்த வேண்டுகோளுக்குப் பணிந்தபின் அருங்காட்சியகத்தின் புது உறுப்பினர்கள் புளு போல்ஸை அதன் கலை மதிப்பீட்டிற்காக மட்டுமே உண்மையில் பார்க்க இயலுமா? (கலைக் கோட்பாடு, 100&102)
	மேற்சொன்ன இந்தக் கேள்வி மிக முக்கியமானது - செழுமைப்படுத்தப்பட வேண்டிய ஒரு மனித மனம், பொருளாதார அடிபணிதலுக்குப் பின், நிர்பந்தத்தின் முன்முடிவுகளற்று, கலை மதிப்பீட்டிற்காக மட்டுமே, ஒரு படைப்பை ரசிக்க இயலுமா? அது முடியாத பட்சத்தில், அதனைச் செழுமைப்படுத்த விளைகின்ற படைப்பாளி, கலைஞனின் பங்கு இவ்வுலகில் என்னவாக இருக்க இயலும்? 
	இத்தாலியர்களுக்கு தாந்தே, ஸ்பானியர்களுக்கு செர்வாண்டிஸ், பிரெஞ்சுக்காரர்களுக்கு ரெப்லைஸ் அன்ட் ரெஸின் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு  ஷேக்ஸ்பியர். (அரசியல், 63) என்பார்கள்.
	ஆனால், அதனைப்போல், இந்திய அளவிலாவது நமது தமிழகத்து ஓவியர்கள் கவனம் பெற்று இருக்கிறார்களா! தனபால், கிருஷ்ணராவ், சந்தானராஜ், எல்.முனுசாமி, அந்தோணிதாஸ், கன்னியப்பன் போன்ற மாமேதைகள் கண்டுகொள்ளாத நாம் எங்கே? எனும் அடிப்படை அவலத்தையும் இப்புத்தகம் சுட்டுகிறது. 
	துன்பியலின் முதற்பகுதியின் இறுதியில் நீட்சே எழுதுகிறார்: 'மனிதன் இன்று (கடவுள்களைப் படைத்த போது இருந்ததுபோல) கலைஞனாக இல்லை. மாறாக அவன் ஒரு கலைப் படைப்பாக மாறிவிட்டான்: 
	கலைப்படைப்பாக மாறுவதற்கு ஒரு எளிய முயற்சியாக இந்த உரையாடல் அமையும்போது அது மிக மேம்படுத்தப்பட்ட ஒன்றாகவே இருக்கும் அல்லவா? கலைஞனை, படைப்பாளியை நாம் மிகத் தீவிரமாகக் கருதிக் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும். தற்காலச் சமூகம் அப்படி இயங்கிக் கொண்டிருக்கவில்லை என்பதுவும் நமக்குத் தெரியும். அது பொறுமைக்கான பிரார்த்தனையைக் கூட இக்கணமே வேண்டுமெனக் கேட்கிறது! 
	ரீவிஸ்ன்னு ஒரு இளவயசுப் பையன், கட்டிடக் கலை படிக்கிறான். கூப்பிட்டு கேட்டேன். 'அடப்போங்க சார், போற வேகத்துல நான் என் டூ வீலர்லே குடும்பம் நடத்துவேன்னு நினைக்கிறேன்' அப்படிங்கறான். (நம்மோடுதான் பேசுகிறார்கள், 75)
	ஒரு கலைஞனை அணுகுவதற்குரிய பொறுமையும், அவனைப் புரிந்துகொள்ளவதற்குரிய ஆர்வமும், அன்பும் தரக்கூடிய சூழமைவு கொண்டதாக இந்த நூற்றாண்டு இருக்கிறதா என்ன? இங்கும் நீட்சே நினைவிற்கு வருகிறார் - 
	அவர் சொல்கிறார்: ஒரு கலைஞனை நாம் அவனுடைய படைப்பின் அளவுக்குத் தீவிரமாகக் கருதாமல், அவனுடைய படைப்பிலிருந்து பிரிக்க முயற்சி மேற்கொள்கிறோம்... உண்மை என்னவென்றால் அவனே தன்னுடைய படைப்பாக இருந்தால் அவன் ஒன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தவோ, மனத்தில் உருவாக்கவோ வெளியிடவோ முனையமாட்டான்: ஹோமரே அக்கிலிசாக இருந்தால், கெத்தே-வே பாஸ்ட்டாக இருந்தால், ஹோமர் ஒரு அக்கிலிஸை உருவாக்கியிருக்கமாட்டார் (ஒவ. 3.4), இதன் முடிவு என்னவென்றால், கலைஞன் மனசாட்சியற்றவன். தனது படைப்பை மேம்படுத்தும் எந்தச் சாயலையும் ஏற்பவன் என்பது தான். அவன் தனது படைப்பின் நோக்கத்திற்காக, அனுபவத்தைப் பயன்படுத்துகிறான். அதற்கும் 'உண்மை'க்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கலாம். (நீட்சே, 117)
	இந்த அறிதலும், தெளிவும் கூட ஒரு கலைஞனைப் புரிந்துகொள்ள உதவுமே அன்றி அவனைக் குறைத்து மதிப்பிட அல்ல. 
	"தொழில்நுட்பம் அதைப் பயன்படுத்துபவர்களை விட முந்திச் செல்கிறது" என்றொரு வாக்கியமுண்டு. எல்லாமும் எளிய மனதிர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முன்னுக்குச் செல்கின்ற இக்காலக்கட்டத்தில், கலையும், இலக்கியமும் மட்டுமே அவனருகே நிதானமாக அமர்கின்றன. கொஞ்சமேனும் அவன் ஆசுவாசிக்க, தன்னை உணர, தான் மதிப்புமிக்கவன் எனப் பெருமிதம் கொள்ள, அவை மட்டுமே ஆதுரத்துடன் அவன் கரம் பற்றுகின்றன. அவற்றால் மட்டுமே அவன் இன்னும் கொஞ்சம் வலிமையுடனும், உண்மையுடனும் புன்னகைக்கின்றான், கை குலுக்குகிறான், அணைத்துக் கொள்கிறான். 
	அந்த நம்பிக்கையை இன்னும் கொஞ்சம் திரி தூண்டியிருக்கிறது இந்தப் புத்தகம். 
	"சிந்தனையின் மாற்றம் வாழ்வியலின் மூலம் அவரவர் கலைப் படைப்புக்களில் வெளிப்பட்டு நவீன கலைப்படைப்புகளாக அறியப்படுவது சமுதாயத்தின் நாகாரீக வளர்ச்சிக்குப் பேருதியாக இருக்கும்" என்று பதிப்போவியங்கள் பற்றி உரையாடுகையில் ஒரு குறிப்பு வருகின்றது. 
	மாற்றங்கள் வளர்ச்சிகளாகின்ற அளவுகோல்கள் அவரவர் கைமணலளவு; அவரவர் உள்ளங்கை அளவே வானம், அவரவர் ரசனையும், சிந்தனையும், உணர்வும் அவரவரே தம்மைச் செதுக்கும் உளி என்பதை அறிவோம். 
	நான் எப்படி? அல்லது நான் அப்படி இல்லையா? என்கின்ற கேள்வியைக் கேட்டுக்கொள்ள எனக்கு உதவியது இப்புத்தகம். இன்னுமொரு தெளிவையும் இது தந்தது - அந்தக் கேள்விகளுக்கு நீங்கள் தயைகூர்ந்து பதில் அளிக்காதீர்கள். எனக்கு நீதிபதிகளும் வேண்டாம் - பரிசுகளும் வேண்டாம். 
	ஆம் -
	பேசுவது என்பது - 
		எல்லாவற்றிற்கும் மேலாக - 
		மற்றவர்களிடம் பேசுவதுதான்! 

உதவிய நூல்கள்:
	
1)	 பேச்சரவம் கேட்டிலையோ - தமிழச்சி தங்கபாண்டியன் 
2)	 சிந்தியா ஃப்ரீலேண்ட் - கலைக் கோட்பாடு - மிகச்   சுருக்கமான அறிமுகம் - தமிழில் செ.பாபு ராஜேந்திரன்
3)	 மைக்கேல் டேனர் - நீட்சே - மிகச் சுருக்கமான அறிமுகம் - தமிழில் க.பூரணச்சந்திரன்
4)	 கென்னத் மினோக் - அரசியல் - மிகச் சுருக்கமான அறிமுகம் - தமிழில் மா.ஆனந்தராஜ்
5)	 கேதரின் பெல்ஸி - பின்அமைப்பியல் - மிகச் சுருக்கமான அறிமுகம் - தமிழில் அழகரசன்

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *