சீனு ராமசாமியின் புத்தக வெளியீட்டு விழா பேச்சு

கேப்ரியேல் இன்ஃபான்தே தன்னுடைய கட்டுரை நூலொன்றில் அர்ஜென்டினிய எழுத்தாளர் வில்லியம் ஹென்றி ஹட்சனைப் பற்றி, அவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சியொன்றைப் பற்றி இவ்வாறு எழுதுகிறார். ஹட்சன், அர்ஜென்டினியாவில் இருந்து புலம்பெயர்ந்து லண்டனில் வசித்து வருகிறார். அகதி வாழ்வைப் பல்வேறு நெருக்கடி களுக்கிடையில் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார். ஒருநாள், தெருவொன்றில் நடந்து செல்லும்போது பறவையொன்றின் குரலைக் கேட்கிறார். செல்லும் பணியை ஒத்திவைத்து விட்டு, ஒலி வந்த திசையில் நடந்து, ஒரு வீட்டை அடைகிறார். 
      கதவைத் தட்டி, வெளிப்படும் யுவதியிடம் ‘உங்களுடைய வராந்தாவில் இருக்கும் பறவை அர்ஜென்டினியாவிலிருந்து வந்ததா?’ என்று கேட்க, அந்த அழகிய யுவதியும் ‘ஆம், புயனஸ் அயர்ஸிலிருந்துதான் இதைப் பிடித்து வந்தோம்’ என்கிறார். ஹட்சன் பதிலொன்றும் சொல்லாமல் அமைதியாக அந்தப் பறவையின் பாடலை கேட்கிறார். ஹட்சன், பறவையின் குரலை அல்ல, தன் பால்யத்தின் குரலை, தன் கனவின் குரலை, கடந்த காலங்களின் குரலைத்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்கிறார் இன்ஃபான்தே. பறவையின் பாடல் முன், அன்றாடப் பணிகளை, லௌகீகத் தேவைகளை, அகநெருக்கடிகளை ஹட்சன் மறந்திருந்தது போலத்தான். - ஒரு கவிதைத் தொகுப்பினை வாசிக்கும்போதும் நாம் உணர்வது!
ஒரு மனிதன் பைத்தியமாவதற்குத் தேவையான பண்புகளாக - ஞானம், பொறுமை, சகிப்புத்தன்மை, நேர்மை, மனத்திடம் - இவற்றை ‘மச்சடோ டி ஆசிஸ்’ எழுதிய ‘மனநல மருத்துவர்’ எனும் நூலில் வருகின்ற சிமோன் பக்காமார்த்தெ சொல்கிறார். 
கவிதை எழுதும் மனோதளத்தையும் இவற்றோடு சேர்த்துக் கொள்ளலாம். 
"அவன் வனத்தில் நுழையும்போது
புற்கள் நசுங்குவதில்லை. 
நீரில் இறங்குகையில் 
சிற்றலையும் எழுவதில்லை".
ஆனால் கவிஞன் நம்மில் ஏற்படுத்தும் தாக்கமும், கவிதையின் அதிர்வுகளும் லேசுப்பட்டவை அல்ல. 
	"நமது வாழ்வின் நிம்மதியற்ற கணங்களில் நாம் நம்பிக்கை இழந்திருக்கும் தருணங்களில், நம் உடல் ஆரோக்யம் குன்றியிருக்கும்போது, சில சமயங்களில் ஒரு திரைப்படம் நம் நினைவிற்கு வந்து நம்முடைய உள்மனதை ஒளிர்விக்கும். ஒரு காட்சியோ, வசனமோ போதும், நமக்குத் தைரியம் அளிப்பதற்கு, வாழ்வில் பிடிப்பு ஏற்படுவதற்கு, ஆனந்தத்தின் சுவையை அறிவதற்கு. 
	இந்தக் காரணத்திற்காகவே த்ருஃபோவின் படங்களைப் பார்ப்பவர்கள் உண்டு" என்று ழான் கோலே சொன்னதைப் போல, நம் சம காலத்தின் மிக முக்கியமான குறிப்பாக தெற்கத்தித் தாயைப் பற்றிய யதார்த்தமான சித்திரத்தைத் ‘தென்மேற்குப் பருவக்காற்றில்’ தந்தவர் சீனு.  
மொழிபெயர்ப்பாளர் வெ. ஸ்ரீராம் ஓரிடத்தில் மெர்சோ எனும் அந்நியனின் பிரதான கதாபாத்திரம் குறித்துப் பேசும்போது சொல்கிறார்:
"மெர்சோ என்கிற பாத்திரம் தனிப்பட்ட முறையில் உட்கார்ந்து இருக்கும் போதுதான் அம்மா என்ற சொல்லைப் பயன்படுத்துகிறான். மற்றபடி சமூகத்திற்காகப் பயன்படுத்தும் போது தாயார் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறான். தாயார் என்பது பொதுச் சொல். அம்மா என்பது அன்பைக் குறிப்பது. அம்மா என்பது அவனுக்கு மட்டும் தான். தாயார் என்பது பொதுச் சொல்".
சீனுவும் திரைப்படத்தை இயக்கும் போது, சமூகத்திற்காகத் தாயார் என்றும், கவிதை வெளிப்பாட்டில் அம்மா என்றும் தன்னை ஒப்புவிக்கிறார் என்று நினைக்கிறேன். 
காம்யுவின் ‘அந்நியன்’ நாவலின் தொடக்க வரிகள்: "இன்று அம்மா இறந்துவிட்டாள். நேற்றாகவும் இருக்கலாம்". அதன் தொனி: இன்றைக்கும் நேற்றுக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.
"நாள் என்பது நாளல்ல
	பின்பொரு சமயம் 
	ஏங்கித் தவிக்கும் நினைவு"
எனும் சீனுவின் கவிதை எனக்கு அந்நியனை நினைவூட்டியது. 
	ழாக் ப்ரெவர் ஒருமுறை: "என் குழந்தைப் பருவத்தின் கண்ணீர் இன்னமும் என்னிடம் இருக்கிறது. அதன் சிரிப்பையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறேன். அதன் ஆனந்தமான ரகசியங்களையும் கூட" என்று சொன்னதுபோல, சீனுவும், தனது மகளின் வாயிலாகத் தனது பால்யத்தையே தன் கவிதைகளில் ருசிக்கிறார்.
	"குருவி நடப்பது / குருவி பறப்பது / குருவி சிறிய அலகுகளால் தானியத்தை உண்பது / குளிரில் நடுங்குவது / பதற்றமாக இங்குமங்கும் பார்ப்பது அறைக்குள் நுழைவது / இவையாவும் மகள் பிறந்த வீட்டில் நடக்கிறது. என்கிற இந்தக் கவிதையில் குருவியின் இருப்பை ரசிப்பது சீனு எனும் குழந்தைதான். 
	‘ஆரம்ப சுகாதார மருத்துவமனையில்’ எனும் கவிதையில் ஒரு குழந்தையின் பிறப்பைப் பகிர்கிறார் இப்படி - 
	"பெயர் தெரியாத பூச்சிகளும் பறவைகளும், தவளைகளும் வண்டுகளும்
	வாழ்ந்தலையும் இவ்விடத்தில் 
	உன் வருகை இனிதே நிகழ்ந்தது. 
	உனது வருகையைக் கொண்டாடும் விதத்தில் 
	உன்னைச் சுற்றிப் புளியமரங்கள் பூத்திருந்தது மகளே எனும் போது, பூச்சி, பறவை தவளை வண்டு எனக்காட்டப்படும் உலகும் சீனு எனும் இந்தக் குழந்தையின் உலகம்தான்.
	திரைப்படக் கலைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ரஷ்யாவின் தார்க்கோவ்ஸ்கின் கல்லறையில், ரஷ்ய சிற்பி ஒருவரால் செதுக்கப்பட்டிருக்கும் ஒரு வாசகம்: "தேவதூதனை நேரில் கண்ட மனிதனுக்கு (வடி வாந அயn றாடி ளயற வாந யபேநட). மனிதத்துவத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து படமெடுத்த அந்த படைப்பாளியை ரஷ்ய அரசு நிராகரித்தது. அந்த வருத்தம் அவருக்கும் இருந்தது. அதனை மீறி அவரால் தேவதூதனை நேரில் காணமுடிந்தது போலத்தான், சீனுவும் தனது முதல் திரைப்பட முயற்சியில் பல தடைகளை மீறி தேவதூதனின் கால் தடம் பற்றி முன்னேறியவர். ஒரு கவிஞராக சாத்தான்கள் பற்றியும், மனிதனின் மூலக்கூறு இரண்டும் இணைந்ததே என்பதையும் உணர்ந்தவர். ‘மனைவிக்கான’ இக்கவிதை - பின்தொடர்ந்து பின்தொடர்ந்து பின்தொடர்ந்து - என்னை கேட்காமலே நிற்கிறாள். 
	குற்றமற்றவன் போலவே 
	நடப்பது என் சுபாவம்.
கீழ்வருகின்ற, 
	"உனது துரோகத்தை ரகசியமாக 
	நான் அறிந்த பிறகு 
	பழிவாங்கும் நடவடிக்கையாக 
	மனதாள் விலகியும் 
	உடலால் இரக்கமின்றி 
	இணைவதுமாகத் தொடங்கியது 
	எனது துரோகத்தின் ஆட்டம்"
எனும் கவிதையும் நம் சாத்தானின் கூறுகள் தாம் எனச் சொல்பவை. 
	சீனுவின் கவிதைகள் மனித உறவுகளைக், குறிப்பாகப் பெண்ணோடு, ஆண் மனம், உடல் கொள்ளும் உறவை மிக யதார்த்தமாக எளிமையாக மிகையற்றுச் சொல்பவை. 
காதல் - 
"யாவரும் உறங்கிய மதியவேளையில் 
கிடைத்த தனிமையில் 
இழுத்து அணைத்த போது 
மருதாணி விரல்களில் 
பூண்டு ரச மணம்.""

கூடல் - 
வாழ்வின் அபத்தம் தொனிக்கும் அற்புதமான
சித்திரம் இக்கவிதை. 
புணர்ச்சியின் போது 
குளத்துள்ளிருந்து வெளிவந்து 
பின் மூழ்கி மறைகிறது உன் முகம்.
இத் துயர் உனக்கா, எனக்கா,
முயங்கிக் கொண்டிருக்கும் அவளுக்கா?

பிரிவு - 
	உனக்கு வெறும் சம்பவம் 
	எனக்குக் கூடறுந்து விழுந்த பரிதவிப்பு 
	உனக்கு பின்னிய வலையில் 
	செத்த ஒரு பூச்சி 
	எனக்கு என் 
	பூத உடலைத் தூக்கித்திரியுமொறு அவஸ்தை.

தாய்மை - 
	புணர்தலுக்குப் பின் திரும்பிப் படுத்தால்
	பிள்ளை தங்காதென்றுச்
	சலனமின்றிக் கட்டிலில் 
	அறியாமையின் புனிதத்தோடு கிடக்கிறான்.
	நிலைத்த பார்வையில் கையேந்தி 
	உருகும் அவள் பிராத்தனைகள் 
	இப்பெரு நகரமெங்கும் மிதக்கின்றன. 
எனச் சொல்கின்ற கவிதைகள் ஏராளம். 
	பேரன்பின் முழுமை, வேர்களின் தொடர் நீட்சி, வாழ்தலின் பரவசம், வலி, சமூக நடப்பு குறித்த அங்கதம், தன் இயலாமையினைத் தானே நுகர்ந்து வெளிப்படுத்துகின்ற பரிகசிப்பு, குழந்தைமை தொலைக்காத பயணம் - இப்படியான உலகம் சீனுவின் கவிதை உலகம். 
	"வேரில் சிறுநீர் கழிக்கிறான் பேரன் 
	பாதங்களைப் பெயர்காமல் 
	பொறுத்துக் கொள்கிறது அந்தத் தாத்தா"
இரண்டு தலைமுறைக்கான இணைப்புப் பாலம் இக்கவிதை. 
	"இப்பெருநகரத்தில் தீப்பிடிக்கும் வெயிலில் 
	குளிரூட்டும் சாதனம் வாங்கும் கனவில் 
	அலைந்து திரியும் என்னிடம் 
	ஆற்றாது பெருக்கெடுக்கும் கேள்வி - 
இவர்களால் எட்டடிக் குழந்தைகள் மீது
ரசாயணக் குண்டுகளை எறிய முடிகிறது?"
எனப் பதறுகின்ற மனம் சீனுவினுடையது.
	"பனியடர்ந்த கொண்டை ஊசிவளைவில்
	திரும்பிய பேருந்தை இடைமறித்து 
	வெளிச்சத்தில் மிரண்ட காட்டு முயலுக்குத் 
	தெரிந்திருக்குமா 
	ஊடுருவல்காரர்களின் வன்முறை?"
என ஒரு கவிஞன் பதைப்பது இயல்புதான் என்றாலும், அக்கவிதை 21ம் நூற்றாண்டின் அனைத்துவிதமான அடக்குமுறைக்குமெதிரான பதைப்பாகவும், இயலாமையாகவுமே படுகின்றது. 
	இன்னுமொரு தார்க்கோவ்ஸ்கி பற்றிய செய்தி - அண்மையில் எஸ். ஆனந்தின் கட்டுரையில் படித்தேன். மாஸ்பிலிம் ஸ்டுடியோவில் தார்க்கோவ்ஸ்கிக்கு ‘டீநே கூயமந கூசடிவளமல’ என்று பெயர். எந்த அளவுசிக்கலான காட்சியையும் ஒரே தடவையில் பதிவு செய்துவிடுவார். வெகு அரிதாகவே இரண்டாவது தடைவ பதிவு செய்வது அவருக்குத் தேவைப்படுமாம். சோலரிஸ் திரைப்படத்தில் கதை மாற்றத்தால் வீணான சிறுபகுதி, ஸ்டாக்காரில் காலாவதியான கொடாக் பிலிம் சுருள்களால் வீணான பகுதிகள் தவிர, ஒரு சுருளைக் கூட அவர் வீணாகப் படமெடுத்ததில்லையாம். 
	சீனுவின் இத்தொகுப்பும் அப்படித் தான். மனித மனத்தின் எந்த ஒரு நுட்பமான, அபத்தமான, சிக்கலான உணர்வையும் வீணாக்கவில்லை அவர். சிலவற்றில் எளிமையான நேரிடைத் தன்மையோடும், சிலவற்றில் பூடமாகவும், தன்மை, முன்னிலைகளினால் சமயங்களில் உரையாடலாகவும் வெளிப்படுகின்ற இக்கவிதைகள் சீனுவை மனதிற்கு மிக நெருக்கமானவராக உருவாக்கு உணரச் செய்கின்றன. 
	செக்கஸ்லோவாகியாவின் நவீன கவிஞர்களின் முக்கியமானவானவர் ஹோலுப். "அவருடைய கூர்மையான கவனிப்புக்களில் உள்ள புத்துணர்ச்சி அவற்றுக்கு ஒரு குழந்தைத்தனமான குணத்தைத் தருகிறது" எனச் சுட்டிக்காட்டுகின்ற பிரம்மராஜன், ஹோலூப்பின் ஹ ழளைவடிசல டுநளளடிn என்ற கவிதையில், ஒரு வரி வருவதாகச் சொல்லுவார். 
	ராஜ்யங்களின் பெருமிதமான விசாரணைகள், போர்கள், மரண தண்டனைகள் ஆகியவற்றின் விளக்கங்களுக்குப் பிறகு ஒரு குழந்தை கேட்கிறது : 
	"அந்தக் காலத்திலும் கூட வலித்திருக்குமா?"
எந்தக் காலத்திலும் வலிக்கிற, உரைக்கின்ற, கேள்வி கேட்கின்ற, பகிர்ந்து கொள்கின்ற, நேசிக்கின்ற, துரோகமிழைக்கின்ற, சவடால் செய்கின்ற, மனித மனத்தின் ஊடாகப் பயணித்துப் பிரசவிக்கப்பட்டவை சீனுவினுடைய இக் கவிதைகள் வாழ்த்துக்கள் - என் ப்ரியத்திற்குரிய இந்தப் படைப்பாளிக்கு! தோழனுக்கு! 
மச்சடோவின் சுயசரிதையில் வருகின்றன இவ்வரிகள் : இந்தப் புத்தகத்தின் ஒரே பலவீனம் - வாசகரான நீங்கள் தான். உங்களுக்கு எல்லாம் விரைவாகத் தெரிந்தாக வேண்டும். ஆனால் புத்தகங்கள் மிக மெதுவாகத்தான் நகரும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள். உங்களுக்கு நேர்கோட்டுக் கதைகள் பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். ஆனால் எனக்கோ, ஒரு குடிகாரனைப் போல் அங்குமிங்கும் சொற்கள் உமிழ்நீரைப் போல உருத்திரண்டு வரும் அதிசயம்.

                                               * * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *