தமிழ்தான் படிப்பேன் என்று சொன்ன சிறுவன்:

சென்ற நூற்றாண்டில் அறிவும் ஆற்றலும் மிகுந்த கவனமும் கொண்ட ஒரு சிறுவன் துறுதுறுவென்று இருந்தான். அவனிடம் அவனுடைய தந்தை என்ன படிக்கப் போகின்றாய்? எப்படி படிக்கப் போகின்றாய்? எந்த மொழியின் மூலமாகப் படிக்க போகின்றாய் என்று கேட்டார். அவன் எதுவும் பதில் சொல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருந்தான். அந்தத் தந்தையே, தொடர்ந்து, ’’நீ ஆங்கிலம் படித்தால் இவ்வுலகில் மகிழ்ச்சியாக இருக்கலாம். சமஸ்கிருதம் படித்தால் மேல் உலகத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஆகையால், இவ்வுலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க ஆங்கிலத்தையும் மேல் உலகத்தில் மகிழ்ச்சியாக இருக்க சமஸ்கிருதத்தையும் படி!’’ என்று வலியுறுத்தினார்.

அப்பொழுது இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்தச் சிறுவன், ’’அதற்கு எதற்கு இரண்டு மொழிகளைப் படிக்க வேண்டும்? தமிழ் ஒரு மொழியைப் படித்தாலே போதும். அது ஒன்றை வைத்துக்கொண்டே இரண்டு உலகத்திலும் மகிழ்ச்சியாக இருக்கலாம். நான் தமிழ் படிக்கப் போகிறேன்’’  என்று சொன்னானாம். அந்தச் சிறுவனின் தந்தை திக்குமுக்காடிப் போய் நின்றார். என்ன சொல்வதென்று தெரியாமல் வாயடைத்துப் போனார். தமிழைப் படித்து இரண்டு உலகத்திலும் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று சொன்ன அந்தச் சிறுவன் தான் ஓலைச்சுவடிகளில்  ஒளிந்து கிடந்த தமிழின் தங்க இலக்கியமான சங்க இலக்கியங்களைத்தேடித் தேடிப் பதிப்பித்து பின்னாளில் தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதன் ஆவார்.

‘என் தாய்மொழி நாளை மடிந்துவிடும் என்றால், இன்றே நான் மடிந்துவிட விரும்புகிறேன்’ என்பது ரஷ்ய நாட்டில் பிறந்த, ‘அவார்’ மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ரசூல் கம்சதேவ் என்னும் கவிஞனின் வரிகள்.

  

பாவாணருக்குத் தமிழே எல்லாம்….

ஒருமுறை பால் வாங்கி வந்து கொண்டிருந்த பாவாணர் மீது ஒரு மிதிவண்டிக்காரர் மோதிவிட்டார். மிதிவண்டிக்காரர் ஐயா மன்னித்துகொள்க!  என்று சொல்லியிருக்கிறார். அப்போது  பாவாணர், மன்னிப்பு உருதுச்சொல், பொருத்துக் கொள்க என்று தமிழில் சொல்லுங்கள்! என மிதிவண்டிக்காரரைச் சொல்லச் சொன்னார். தான் சாகலாம்; தமிழ் சாகக்கூடாது என்ற கொள்கைக் குணம் கொண்டவரே மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.

 

செம்மொழி நிறுவனத்தைச் சென்னைக்குக் கொண்டு வந்த கலைஞர்:

மைசூரில் உள்ள இந்திய மொழிகளுக்கான மையத்தில் செம்மொழி தமிழ் மையம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த மத்திய செம்மொழி ஆய்வு மையத்தை சென்னையில் நிறுவியதுடன் அதற்கென சென்னை பெரும்பாக்கத்தில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கி தலைவர் கலைஞர் உத்தரவிட்டார். இந்த இடத்தில் சுற்றுச்சுவர் கட்ட மத்திய அரசு 3 கோடி ரூபாய் ஒதுக்கியது. 250 கோடி ரூபாய் மதிப்பில் சர்வதேச தரத்தில் அலுவலகம் கட்டவும் ஆராய்ச்சி மையம் ஏற்படுத்தவும் அறிஞர்களுக்கென குடியிறுப்பு வசதிகள் ஏற்படுத்தவும் திட்டமிட்டு அதற்கான மதிப்பீட்டினையும் தமிழக அரசு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து இப்போது முடங்கி கிடக்கிறது.

இந்நிறுவனத்தில் பட்டறிவுமிக்க சிறந்த அறிஞர்களைக் கொண்டு உரிய ஆய்வுகள் நடைபெற்று வந்தன. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலெல்லாம்  கருத்தரங்குகள் பல நடைபெற்று சங்க இலக்கியங்கள் புத்தெழுச்சிப் பெற்று மலர்ந்தன.

இதுவரை எட்டு உலகத் தமிழ் மாநாடுகளையும் ஒருசேர நடத்தியது போல் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் உவக்க கோவை மாநகரில் 2010 ஜூன் திங்களில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை நடத்திய பெருமை கலைஞருக்குண்டு. அத்துடன் சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் 8 கோடி ரூபாய் செலவில் உலகத்தரத்திலான செம்மொழிப் பூங்கா 14.11.2010-ல் திறந்து வைக்கப்பட்டது.

 

தலைவர் கலைஞரும் தமிழும்:

சேரன் செங்குட்டுவன்’ ஓரங்க நாடகத்தின் ஒரு வசனம் எழுதியிருந்தார் கருணாநிதி. அந்த வசனம் திராவிட இயக்கத் தலைவர்களுக்கெல்லாம் கிரீடம் சூட்டும் வகையில் அமைந்தது.. அண்ணா, நெடுஞ்செழியன், ஆசைத்தம்பி, பி.எஸ். இளங்கோ, கண்ணதாசன், என்.எஸ். கிருஷ்ணன், இராம.அரங்கண்ணல் போன்ற அத்தனை தலைவர்களையும் ஒரே வசனத்தில் உள்ளடக்கியிருந்தார் கலைஞர்.

அந்த வசனம்:

“சிங்கத் திருவிடமே உன்னை இகழ்ந்தார்கள். ஈடற்ற புலவனே இளங்கோ! ஆசைத்தம்பி! உன்னை இகழ்ந்தார்கள், நீதிக்கு உயிர்தந்த பாண்டியனே ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனே! உன்னை இகழ்ந்தார்கள், அரங்கின் அண்ணலே! உன்னை இகழ்ந்தார்கள், செந்தமிழ் வளங்குறையாச் சிங்க ஏறுகளே! அறிஞரே! கவிஞரே! கலைவாணரே! உம்மையெல்லாம் இகழ்ந்தார்கள். புறப்படுங்கள்! களத்திலே உங்கள் தலைகள் பறிபோகலாம். ஆனால் கனல் கக்கும் கண்களோடு அவை கொய்யப்படட்டும்!”

 

திருவள்ளுவருக்குச் சிலை வைத்த கதை:

திருவள்ளுவருக்குச் சிலை வைக்க வேண்டும் என்கிற எண்ணம் எப்படி வந்தது?’’ என்று கருணாநிதியிடம் ஒரு பத்திரிகையாளர் கேள்வி ஒன்றை முன் வைத்தார்.

அதற்கு அவர் சொன்ன பதில்:

24.03.1960 அன்று சட்டப் பேரவையில் ’அஞ்சல் தலைகளுக்கு என்று ஓவியர் வேணுகோபால் சர்மா வரைந்த திருவள்ளுவர் ஓவியத்தைச் சட்டமன்றத்தில் வைக்கும் உத்தேசம் அரசாங்கத்துக்கு உண்டா?’ என்று நான் கேட்டேன். என்னுடைய கேள்விக்கு – பெரியவர் பக்தவத்சலனார், ’சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி அவர்கள் அம்மாதிரி ஒரு படத்தை இங்கு சமர்ப்பிக்க முன்வந்தால், கனம் சபாநாயகர் அவர்கள் அதைப் பற்றி யோசிப்பார்கள்’ என்று பதில் கூறினார். அந்த பதிலின் காரணமாகத்தான் சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் 22.3.1964 அன்று அன்றைய குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்களால் திருவள்ளுவர் படம் திறந்து வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் தி.மு.கழக ஆட்சியில் பேருந்துகள், அரசு விருந்தினர் மாளிகைகளில் திருவள்ளுவர் படங்களை வைக்கத் தொடங்கி, வள்ளுவர் கோட்டம், குமரி முனையில் அய்யன் வள்ளுவர் சிலை வைக்கும் அளவு வளர்ந்தது!’’ என்றார்

  

கலைஞரின் தமிழ்ச்சாதனைகள்:

கட்டாயப் பாடம்:

இன்றைக்குத் தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழ் கற்பிக்கப்படுவதற்குக் கலைஞர் அவர்களே காரணம். அண்ணா வழியில் கலைஞர் அவர்களும் தமிழ்ப் பயிற்றுமொழிக் கொள்கையில் உறுதியானவர். 1967-68-ம் ஆண்டு, இளங்கலை வகுப்பில் தமிழைப் பயிற்று மொழியாக்கி ஆணை பிறப்பித்தார் அறிஞர் அண்ணா. அவரைத் தொடர்ந்து,              1969 – 70 – ஆம் ஆண்டில் இளம் அறிவியல் வகுப்பில் தமிழை பயிற்றுமொழியாக ஆணை பிறப்பித்த முதலமைச்சர் கலைஞர், தமிழில் பயிலும் மாணவர்களுக்குச் சிறப்பு ஊக்கக்த்தொகை வழங்கினார்.

 

மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழ்:

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனும் கூற்றுப்படி 1996-ம் ஆண்டு, மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தமிழைப் பாடமொழியாக்கி ஆணை பிறப்பித்தார் முதலமைச்சர் கலைஞர். 2006 ஆம் ஆண்டு, அனைத்துப் பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாகக் கட்டாயம் கற்பிக்க வேண்டுமென்று சட்டம் நிறைவேற்றினார்.

 

தமிழில் பொறியியல் கல்வி:

இந்தியாவிலேயே முதன்முறையாக, அண்ணா தொழிற்நுட்ப பல்கலைக் கழகங்களில், கட்டுமானவியல், இயந்திரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் தமிழ் வழியாகக் கல்வி கற்க வகைச் செய்து ஆணையிட்டவர் தலைவர் கலைஞர்.  அனைத்துக் கல்லூரிகளிலும் choice based credit system எனப்படும் விருப்பம் சார்ந்த தகுதிப் புள்ளி முறையை2009ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார் தலைவர் கலைஞர்.

 

இணையத்தில் தமிழ் :

1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், முதலமைச்சர் கலைஞரால், உலகத் தமிழ் இணைய மாநாடு நடத்தப்பட்டு, கணினியின் விசைப்பலகை ஒரே சீராக்கப்பட்டது. இணையத்தில் தலைவர் கலைஞர் அனுப்பிய தமிழ் வாழ்த்துச் செய்தியே, முதல் வாழ்த்துச் செய்தியாகும்.

 

ஊர்திகளில் தமிழ்

ஊர்திகளில் காணப்படும் பதிவெண் பலகைகளில் ஆங்கில எழுத்துக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தன. அவற்றைத் தமிழில் எழுதிக் கொள்ள அனுமதி வழங்கி ஆணையிட்டவர் முதலமைச்சர் தலைவர் கலைஞர்.

 

சென்னை பெயர் மாற்றம்:

30.9.1996-ஆம்   ஆண்டு,     செப்டம்பர்          30-ஆம் நாள் மெட்ராஸ் என்னும் பெயரைச் சென்னை என மாற்றி ஆணையிட்டவர் தலைவர் கலைஞர்.

 

தமிழில் மருத்துவம் :

ஏழை எளிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், மருந்துச் சீட்டுகள் அனைத்தும் தமிழில் எழுதப்பட வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தவர் நம்முடைய அரும்பெரும் தலைவர்  கலைஞர் அவர்கள். இதன் காரணமாக, அரசு வெளியிடும் மாத்திரைகளுக்கான உறைகளில் தமிழ் இடம் பெறத் தொடங்கியது.

 

மாண்புமிகு தளபதியின் தமிழ்த்தொண்டு

தமிழுயர்ந்தால் தமிழ்நாடு தானுயரும்; அறிவுயரும் அறமும் ஓங்கும்”

 

மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு உரிய அங்கீகாரம்:

1970-ஆம் ஆண்டு முதல் ‘நீராரும் கடலுடுத்த‘ எனத் தொடங்கும் பாடல் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலாக நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு முதல்வர் தளபதி, 17.12.2021 அன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாநிலப் பாடலாக அறிவித்து, இப்பாடல் பாடப்படும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நின்று மரியாதை செலுத்திட வேண்டுமென்று ஆணையிட்டுத் தமிழ்மொழிக்குப் பெருமை சேர்க்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு அரசின் சார்பில் 35 விருதுகள்:

தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை அடையாளம் கண்டு அவர்களைப் பெருமைப்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசின் சார்பில் திருவள்ளுவர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, தந்தை பெரியார் விருது, அண்ணல் அம்பேத்கர் விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, முதல்வர் கணினித் தமிழ் விருது, தமிழ்ச்செம்மல் விருதுகள், இலக்கண விருது, இலக்கிய விருது, தூயத் தமிழ் பற்றாளர் விருதுகள் உள்ளிட்ட 35 இனங்களில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி சிறப்புச் செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு தளபதி விருதுத் தொகையை ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தியதோடு, புதியதாக இலக்கிய மாமணி விருது தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் மூன்று அறிஞர்களுக்கு தலா விருது தொகை ரூ.5 லட்சம் வழங்கிட ஆணையிட்டுள்ளார். கடந்த மூன்றாண்டுகளில் 260 விருதாளர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதலமைச்சர் தளபதி அவர்களால் புதிதாக உருவாக்கப்பட்டு பொதுத் துறையால் இரண்டு ஆண்டுகள் வழங்கப்பட்ட தகைசால் தமிழர் விருதும் இவ்வாண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறையின் வாயிலாக வழங்கப்படவுள்ளது. நூல்கள் நாட்டுடைமை: தமிழறிஞர்களின் படைப்புகள் எளிய முறையில் மலிவு விலையில் மக்களுக்கு கிடைத்திடும் வகையிலும், தமிழறிஞர்களின் கருத்துக் கருவூலங்கள் உலக மக்கள் அனைவரையும் சென்றடைந்திட வேண்டும் என்கின்ற உயரிய நோக்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு வருகின்றன.

 

தமிழறிஞர்களுக்குக் கனவு இல்லத் திட்டம்:            

முதல்வர் தளபதி, முத்தமிழறிஞர் கருணாநிதியின் 97ஆவது பிறந்த நாளான 03.06.2021 அன்று கனவு இல்லத் திட்டத்தின்கீழ் சாகித்திய அகாதமி விருது மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் செம்மொழித் தமிழ் விருது பெற்ற தமிழறிஞர்களுக்கு தமிழ் நாட்டிற்குள் வீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக 6 அறிஞர்கட்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய்ப் பிரிவு வீடுகள் முதல்வரால் வழங்கப்பட்டு, தமிழுக்கும் தமிழறிஞர்களுக்கும் பெருமை சேர்த்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இத்திட்டத்தினால் பயனடைந்த தமிழ்ச் சான்றோர்களும் ஆன்றோர்களும், அகமகிழ்ந்து பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

அயல்நாட்டில் தமிழ் வளர்ச்சி:

அயலகத்திலும் அண்டை மாநிலங்களிலும் தமிழ் இருக்கைகள் நிறுவிடவும் தமிழ்ப்பணி ஆற்றிடவும் நிதியுதவி: அயல்நாடு வாழ் தமிழர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்கப்படுத்துகின்ற வகையில், அயலகப் பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் தோற்றுவித்தல் திட்டத்தின்கீழ் முதல்வரால், ஜெர்மனி நாட்டிலுள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தொடர்ந்து செயற்படுவதற்காக 1 கோடியே 25 இலட்சம் ரூபாயும், ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவிட 2 கோடியே 50 லட்சம் ரூபாயும் (3 லட்சம் அமெரிக்க டாலர்), நவி மும்பைத் தமிழ்ச் சங்கக் கட்டட மேம்பாட்டிற்கு 75 லட்சம் ரூபாயும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தமிழ் இலக்கியவியல் என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாயும், ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் மொழியைக் கற்பித்திட ஏதுவாக வகுப்பறைகள் அமைத்திட ரூ.15.00 இலட்சம் ரூபாயும் வழங்கி, தாய்மொழியாம் தமிழ் மொழியை அயலகத்திலும், அண்டை மாநிலங்களிலும் வளர்த்திட நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளதை அயலகத் தமிழர்கள் நெஞ்சார பாராட்டியும், வரவேற்றும் உள்ளனர்.

 

திருக்குறளுக்குப் பெருமை:

திருக்குறளின் அருமை, பெருமைகளை அறிந்திட மாணவர்களை ஊக்கப்படுத்திடும் “குறள் முற்றோதல்” திட்டம்: 1.1.2000 ஆம் ஆண்டு குமரிமுனையில் நடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வரும் “குறள் முற்றோதல்” திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்த 451 மாணவர்களுக்கு தலா ரூ.15,000 வீதம் மொத்தம் 63 இலட்சத்து 46 ஆயிரத்து 500 ரூபாய் குறள் பரிசுத் தொகை வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளனர்

 

மாணவர்க்குத் தமிழ்ப்போட்டிகள்:

முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் மன்றம் வாயிலாக மாணவர்களிடம் தமிழ் உணர்வை ஊக்கப்படுத்திட தமிழ்க்கூடல் திட்டம்: “தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களிடையே தமிழ் ஆர்வத்தினை அதிகரிக்க, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் தமிழ் மன்றங்கள் அமைத்து மாணவர்களிடையே தமிழ் சார்ந்த போட்டிகளை நடத்திட கல்லூரிக் கல்வி இயக்ககம், தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், பொறியியல் கல்லூரி இயக்ககம் ஆகியவற்றால் தெரிவு செய்து அனுப்பப்பட்ட 100 கல்லூரிகளுக்கு ஒவ்வொரு கல்லூரிக்கும் வைப்புத் தொகையாக ரூ. 5 இலட்சம் என மொத்தம் ரூபாய் 5 கோடி ரூபாயும் முதலாண்டில் போட்டிகள் நடத்திட கூடுதலாக ரூபாய் 36 லட்சமும் வழங்கும் வகையில் முதல்வர் தளபதி அவர்களால் ஆணையிடப்பட்டுள்ளது.

இதே போன்று, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் தமிழ்மொழியின் தொன்மை – பெருமைகளை அறியவும், தமிழ் மொழி இலக்கிய இலக்கணங்களின்மீது பற்றும் ஆர்வமும் கொள்ளவும், தமிழுக்குத் தொண்டாற்றிய தமிழறிஞர்கள் – தமிழ்ச்சான்றோர்கள் பற்றி அறிந்து கொள்ளவும் உதவும் வகையில் தமிழ்நாடு முழுவதுமுள்ள 6,218 அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளிலுள்ள தமிழ் மன்றங்கள் மூலம் – ஒவ்வொரு பள்ளியிலும் ஆண்டுக்கு மூன்று ‘தமிழ்க்கூடல்‘ நடத்திட ஆண்டுதோறும் பள்ளி ஒன்றுக்கு ரூ.9000/- என மொத்தம் ரூபாய் 5 கோடியே 59 லட்சத்து 62 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடையே தமிழ் உணர்வினை ஊட்டி ஊக்கப்படுத்திட, கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள், தமிழ்மொழி இலக்கியத் திறனறித் தேர்வு, இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை, தமிழால் முடியும், இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை, இலக்கிய வினாடி வினா உள்ளிட்ட பல நிகழ்வுகள் நடத்தப்பட்டு பரிசுகளும் பாராட்டுகளும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டு வருகின்றன.

 

தீராக் காதல் திருக்குறள் திட்டம்:

‘தீராக் காதல் திருக்குறள்’ என்ற பெயரில் தமிழ் இணையக் கல்விக் கழகம் வாயிலாக தீந்தமிழ் நிகழ்ச்சிகளை நடத்திட 25 லட்சம் ரூபாய் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் வழங்கியுள்ள நிதியுதவியில் குறளோவியம் எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு, மாணவர்கள் வரைந்த ஓவியங்களைக் கொண்டு திருக்குறள் நாள்காட்டி உருவாக்கப்பட்டு முதல்வரால், 15.1.2022 அன்று வெளியிடப்பட்டு, ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

 

அருங்காட்சியகங்கள்:

முதலமைச்சர் மாண்புமிகு தளபதியின் சீரிய முயற்சியினால் தமிழ் மொழி வளர்ச்சிக்காக எண்ணற்ற திட்டங்களைக் கடந்த மூன்றாண்டுகளாக நிறைவேற்றி வருவதுடன், பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளையும் நுண்மையோடு பறைசாற்றும் வகையில், கீழடியில் அருங்காட்சியகம் அமைத்துச் சிறப்பித்ததோடு, அதன் தொடர்ச்சியாகப் பொருநையிலும் அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

ஜனவரி 12 அயலகத் தமிழர் தின விழா:

முதல்வர் தளபதி அவர்களால், உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் சனவரி 12-ஆம் நாளினை அயலகத் தமிழர் தினமாக அறிவிக்கப்பட்டு, தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாகக் கொண்டு, நடப்பாண்டில் அயலகத் தமிழர் மாநாடும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

 

கணியன் பூங்குன்றனார் நினைவுத்தூண்:

சிவகங்கை மாவட்டம் மகிபாலன் பட்டியில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் செம்மொழித் தொடர் தந்த கணியன் பூங்குன்றனார் நினைவுத் தூணைக் காணொலிக் காட்சி வாயிலாக 22.1.2024 அன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 

2025-இல் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு:

தமிழ்நாட்டில் முதன்முறையாக பார்போற்றும் வகையில் பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தியதும், தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கியும், திருக்கோயில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவது உள்ளிட்ட எண்ணற்ற தமிழ்ப்பணித் திட்டங்களை நிறைவேற்றி உலகமெங்கும் பரவியுள்ள தமிழர்களின் நெஞ்சங்களிலெல்லாம் முத்தமிழறிஞர் கருணாநிதியின் புதல்வர் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் நிறைந்துள்ளார்.

 

கலைஞர் பிறந்த நாள் செம்மொழி நாளாகட்டும்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில், “தமிழுக்குச் செம்மொழி என்ற அங்கீகாரம் கிடைத்துப் பல ஆண்டுகள் சென்ற பிறகுதான் மலையாளத்துக்குச் செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் அதைக் கொண்டாடும் விதத்தில் நவம்பர் 1-ம் தேதியைக் கேரள அரசு செம்மொழி நாளாகக் கடைப்பிடிக்கிறது. அப்படி எந்தவொரு நாளையும் செம்மொழி நாளாகத் தமிழ்நாடு அரசு அறிவிக்கவில்லை” என்று கூறுகிறார்.

மேலும், “தமிழ் மொழியைச் செம்மொழியாக்க இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தின் ஓர் அங்கமாக இயங்கி வந்த செம்மொழித் தமிழ்த் திட்டத்தை மைசூரிலிருந்து தமிழகத்துக்கு மாற்றியவரும், உலக செம்மொழி மாநாட்டினை கோவையில் நடத்தியவருமான முதல்வர் கருணாநியின் பிறந்த நாளை செம்மொழி நாளாக அறிவிக்க வேண்டும்” என முதலமைச்சர் மாண்புமிகு தளபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *