சென்னை இலக்கிய திருவிழா

சென்னை இலக்கிய திருவிழா
வணக்கம், 
	"மனிதச் சொல், அசை பரவும் ஓளியும் 
	பொற்கொல்லனின் கலைத்திறமும் இணைந்து 
	குருதியின் எண்ணங்களைச் சேர்க்கும் 
	பாரம்பரியக் கலம்.
	சொல்லைப் பாராட்டி 
	மொழியெனும் தூய மதுவையும் 
	அல்லது 
	என்றும் வற்றா நீரையும் 
	நான் குடிக்கிறேன்.
	குருதிக்குக் குருதித்தன்மையையும் 
	வாழ்க்கைக்கு வாழ்க்கைத் தன்மையையும் 
	தருவன சொற்கள்". 
	கவிதை சொற்களால் ஆனதுதான். ஆனால் அது வெறும் சொற்கள் மட்டுமே அல்ல என்பதை உணர்த்தும் வண்ணம் Chennai Literary Association சார்பில் நடைபெறும் Chennai Literary Festival கவியரங்கத்தில் பங்குபெற்றுத் தலைமை தாங்குவதில் பெரு மகிழ்ச்சி!
	"பசி, இன்பம், அன்புக்கினிய தாய் ஆகிய எல்லாவற்றிற்கும் மேலாக நான் நேசிப்பது இலக்கியமே" என்ற ஃப்ரெஞ்சுக் கவிஞன் போதலேர் பியர் சார்ல் போதலேரின் (Baudelaire Piere Charles) வரியை மெய்ப்பிக்கும் வண்ணம் மூன்று தினங்கள் நடைபெறுகின்ற Chennai Literary Festival இன் இக்கவிதை வாசிப்பு மாலைக்கு வருகை தந்திருக்கின்ற பார்வையாளர்களுக்கும், நிழ்வினை ஒழுங்கு செய்த Chennai Literary Festival இன் அமைப்பாளர்கள் திரு. ஒளிவண்ணன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. 
	பொதுவாகத் தமிழ் இலக்கியச் சூழலில் கவியரங்கங்கள் அறிமுகமான அளவிற்குக் கவிதை வாசிப்பு அரங்கங்கள் பரிச்சயமானவை அல்ல. கவியரங்கங்கக் கவிதைகளை நீங்கள் "அறிந்து கொள்ளலாம்!". ஆனால் கவிதை வாசிப்பு அரங்குகளை நீங்கள் "உள்ளுணர்வால் உணர்ந்து கொள்ளுதலே" முடியும்! இந்த உணர்ந்து கொள்ளும் அனுபவத்தை உங்களுக்கு வழங்கவும், இக் கவிஞர்களின் அகஉலகினை நீங்கள் அறிந்து கொள்ளவுமே இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. 
	உள்ளத்தைச் சுதந்திரமாக வைத்தல், கனவுகளில் மூழ்குதல், அக்காட்சிகளின் துணையோடு புற உலகைப் புரிந்து கொள்ளுதல், வாழ்வின் அடிப்படை உண்மைகளை அனுபவத்தின் வாயிலாக அறிதல், மரபுகளை உள்வாங்கியும், அதனை மீறியும் பயணித்தல், சமகால வாழ்வின் சாட்சியாகவும், பங்காளனாகவுமிருத்தல் ஆகியவை ஒரு கவிஞனின் அடையாளம்.
	தலைமை என்பது இங்கு மேடையில் அமர்ந்திருக்கின்ற சக கவிஞர்களான இவர்களை விடப் பெரிய கவிஞர் என்ற அர்த்தத்தில் எனக்குக் கொடுக்கப்படவில்லை. மேடையினை என்னோடு பகிர்ந்து கொண்டிருக்கின்ற சக கவிஞர்கள் என்னைவிடச் சிறப்பாக எழுதுபவர்கள்! மிக அருமையாகத், தொடர்ந்து இயங்குகின்ற, எனக்கு மிகப் பிடித்தமான இந்த கவிஞர்களோடு அரங்கேறுகின்ற இந்நிகழ்வை ஒழுங்கு செய்தலே என் பணி. 
	நிகழ்விற்கு ஒதுக்கப்பட்டுள்ள நேரம் 1 மணி நேரம் - அதாவது 60 நிமிடங்கள். 5 கவிஞர்கள் பங்கேற்கிறோம். ஆகவே ஒவ்வொருவருக்கும் தலா 10 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றது. தயவுசெய்து நேரக் கவனமுடன் கவிஞர்கள் தங்கள் படைப்பினை முன்வைக்க வேண்டுகிறேன். தங்கள் கவிதைகள் சில, தங்களுக்குப் பிடித்த ஓரிரண்டு கவிதைகள் (பிற படைப்பாளிகளிடமிருந்து) எனக் கவிஞர்கள் வாசித்துப் பகிரலாம். ஆனால் 10 நிமிடங்கள் மட்டுமே நேரம் என்பதை கவனத்தில் கொள்க. 
	"பணம், உண்மையைத் தவிர எல்லாப் பொருள்களையும், உண்மைக் கவிஞனைத் தவிர எல்லோரையும் விலைக்கு வாங்கும் ஆற்றல் பெற்றிருக்கிறது" என்று நைந்து எழுதினார். Robert Graves என்ற புகழ்பெற்ற கவிஞர் "White Goddess" என்னும் நூலுக்கான முன்னுரையில்.
	இவர்கள், இந்த மேடையை இங்கு பகிர்ந்து கொண்டிருப்பவர்கள் - உண்மைக் கவிஞர்கள். 
	ஒரு ரஷ்ய நாட்ட இளங்கவிஞன் - கவிதையே! என் துரதிர்ஷ்டமே! என் செல்வமே! என் புனிதக்கலையே! என்று பாடினான். 
	கவிதை எங்களுக்கு எல்லாமும்தான்! 

கவிஞர் உமாசக்தி : 
	நம்பிக்கையூட்டுகின்ற இளம் படைப்பாளியான இவர், வண்ணாரப்பேட்டை, தியாகராயா கல்லூரியில் விரிவுரையாளர். மிக முக்கியமாகக் கவனிக்கப்பட்ட "ஜீன்ஸீம் சிகரெட்டும் தான் பெண்ணியமா?" என்கின்ற (விகடனில் 2011இல் வெளிவந்தது) இவரது கட்டுரை இவரைத் தொடர்ந்து என்னைக் கவனிக்கச் செய்தது. "அவ்வையின் போரெதிர்ப்பு அரசியல்" எனும் கட்டுரையும் அவ்வாறே என்னை ஈர்த்தது. ஒரு முனைவர் பட்டதாரி, ஆய்வாளராகப் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். கவியரங்க, கவிதைவாசிப்பு மேடைகள் பலவற்றில் பங்கு பெற்றுள்ளார். கல்லூரிகளிலும், இலக்கியப் பேரவைகளிலும், சமூகம், பெண் விடுதலை, பெளத்தம், சாதிய வங்கொடுமை முதலியன குறித்துச் சிறப்புரைகள் ஆற்றியுள்ளார். நூல் அறிமுகம் மற்றும் திறனாய்வுக் கூட்டங்களில் சிறப்பான பங்களிப்புக்கள் செய்திருக்கிறார். குறிப்பிடப்பட வேண்டிய செய்தி - இவரொரு நிகழ்த்து கலைஞர் என்பது. பேராசிரியர் கோ. பழனியின் இயக்கத்தில் "கு.ப. ராவின் கவிதை உலகம்", பவுத்த ஆய்வாளர் பாரதி பிரபுவின் இயக்கத்தில் "போர்க்கருவி, அங்குலிமாலா" நாடகங்களிலும் நடித்திருக்கிறார். நெடும்பயணம் - என்கின்ற குறும்படத்தின் துணை இயக்குநருமாவார். திசைகளைப் பருகியவள் என்பது இவரது கவிதை தொகுப்பு நூல்.
	வாழ்க்கையில் ஒரு அனுபவத்தை நாம் பெறுகிறபோது சிந்தனை பூர்வமாகவும், உணர்ச்சி பூர்வமாகவும் அதனைப் பெறுகிறோம். அந்த அனுபவத்தை கலை நேர்த்தியோடு கடத்துகையில் அது கவிதையாகிறது. உமாசக்தியின் கவிதைகள் இப்படி சிந்தனையையும், உணர்வெழுச்சியையும் ஒரே நேரத்தில் தரக் கூடியவை.

கவிஞர் அய்யப்ப மாதவன்: 
	கடந்த இருபது வருடங்களாக இலக்கியத்தில் குறிப்பாக கவிதையில் இயங்கி வருபவர். இதுவரை பதினொறு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. கவிஞர் மீரா அவர்கள் அவருடைய 
	முதல் கவிதை நூலை வெளியிட்டார். 
	அப்பா வைத்த பெயர்: ஐய்யப்பன், நண்பர்கள் வைத்த பெயர்: அய்யப்ப மாதவன் 
ஒரே ஒரு சிறுகதை நூலையும் எழுதிப்பார்த்திருக்கிறார். திரைப்படத்துறையில் ஆர்வமும், பங்களிக்க அதிக ஆசையுண்டு. தற்சமயம் திரைத்துறையில் ஒளிப்பதிவாளர் செழியனுடன் பணிபுரிந்து வருகிறார். விரைவில் திரைப்படம் இயக்கவிருக்கிறார்.
	கம்பரின் சமாதி அமைந்துள்ள நாட்டரசன்கோட்டையிலிருந்து வருகிறார், அவரது வீட்டில் யாரும் கலைத் துறையைச் சார்ந்தவர்கள் யாருமில்லை என்றாலும், கம்பன் ஊரில் அப்பன்களும் அரசர்கள் தானே. 

கவிதை நூல்கள் விவரம் 
	1. தீயின் பிணம் / ஹைகூ போன்ற கவிதைகள் 
	2. மழைக்கு பிறகும் மழை /
	3. நானென்பது வேறொருவன் 
	4. பிறகொருநாள் கோடை 
	5. நீர்வெளி 
	6. எஸ். புல்லட்
	7. நிசி அகவல் 
	8. சொல்லில் விழுந்த கணம் 
	9. குவளைக் கைப்பிடியில் குளிர்காலம் 
	10. ஆப்பிளுக்குள் ஒடும் ரயில் 
	11. குரல்வளையில் இறங்கும் ஆறு
	12. தானாய் நிரம்பும் கிணற்றடி (சிறுகதை) 

	பிரெஞ்சு இலக்கிய மேதை ழான் பால் சார்த்தர் சொல்கிறார்: "கவிஞர்கள் என்பவர்கள் சொற்களைப் பயன்படுத்த மறுப்பவர்கள்" - Poets are those who refuse to Utilise Language. சொற்களால் கவிஞன் ஏமாற்றப்படாமல் இருக்க வேண்டிய கட்டாயத்தைத்தான் இது சுட்டுகிறது. சொற்களைப் பயன்படுத்தாமல், அவற்றைத் தன் உணர்வுகளின் ஊடகமாகத் தர கவிஞர் அய்யப்ப மாதவனை இங்கு அழைக்கிறேன்.

கவிஞர் பரமேசுவரி : 
	ஆலுக்குப் பெருமை சேர்க்கும் விழுதுகள் மிகச் சிலவே. அவற்றில் எங்கள் பரமு என்கின்ற தி. பரமேசுவரியும் ஒருவர். 'தமிழ்நாடு' பெயர் வரக் காரணமாக இருந்தவர்களுள் மிக முக்கியமான பேரறிஞர், தமிழின் முதுசொம் - ம.பொ.சி. அய்யாவின் பெயர்த்தி. என்றாலும், தனக்கெனத் தனித்துவ அடையாளம் கொண்டவர். 
	மேல்நிலைப் பள்ளியில் முதுகலைத் தமிழாசிரியர் பணி. 
	எனக்கான வெள்ளிச்சம், ஓசை புதையும் வெளி என்றும், இரண்டு கவிதைத் தொகுப்புகளை எழுதியவர். ம.பொ.சியின் சிறுகதைகள், ம.பொ.சியின் சிலப்பதிகார உரை அகிய இரண்டு நூல்களின் தொகுப்பாசிரியர். ஆன்மீகமும் அரசியலும், தமிழன் குரல், தமிழர் திருமணம் உள்ளிட்ட 10 நூல்களின் பதிப்பாசிரியர். ம.பொ.சியின் நான்கு நூல்கள் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு மறுபதிப்பு வருகிறது என்பது கூடுதல் செய்தி. 
	ம.பொ.சியின் தமிழ் முரசு என்ற மாத இதழையும் செங்கோல் என்ற வார இதழையும் தொகுக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அத்துடன் ம.பொ.சியின் கடிதங்களையும் தொகுத்துக் கொண்டிருக்கிறார். 
	சமூகம் - வலைத்தளம் - பெண் என்னும் தலைப்பில் அமைந்த கட்டுரைத் தொகுப்பும், ஒற்றைப் பொய்கை என்னும் தலைப்பில் கவிதை நூலும், சாகித்ய அகாதெமி விருது பெற்ற கொற்கை நாவலை முன் வைத்து பரதவர் வாழ்வியல் சார்ந்து பலர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து ஒரு நூலும் புத்தகக் கண்காட்சிக்கு வர இருக்கின்றது. 
	பாவையர் மலர் என்னும் மாத இதழில் 'சொல்லால் அழியும் துயர்' என்னும் தலைப்பில் கல்வி சார்ந்த தொடர் ஒன்றை எழுதி வருகிறார். 
	பெண்ணே பேசு
	தெறிக்கும் உன்னின் 
	ஒரு சொல் பூமியைப் பிளக்கட்டும்
	உன்னின் ஒரு சொல்லை 
	ஆண்மையின் 
	இருள் பகுதியிலிருந்து சுரண்டி எடு 
	அப்பனோ ஆசானோ அருமை மகனோ
	ஆணாய் மாறும் 
	எவனொருவனின் 
	தோலுரித்த பச்சை ரத்தத்தின் 
	வாசமாய் இருக்கட்டும் உன் சொல். 
எனும் அ. வெண்ணிலாவின் வரிகள் எனக்கு மிகப் பிடித்தவை. பூமியைப் பிளக்கும் தன் சொல்லைத், தன் கவிதையைத் தர வருகின்றார் கவிஞர் பரமேசுவரி.

கவிஞர் ரவிசுப்பரமணியம்:
	பண்டைக் காலத்தில் கவிஞனுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்; அவன் சகலகலா வல்லவன்.
	இளங்கோ அடிகள் கவிஞர் மட்டுமல்லர்; இசை மேதை; நாடகாசிரியர்; வானநூல் வல்லுநர்; நவமணிகளின் குண வேறுபாடுகளை உணர்ந்தவர். 
	மைக்கேல் ஏஞ்சலோ ஓவியர்; சிற்பி; கவிஞர். 
	லியனார்டோ டாவின்சி ஓவியர்; சிற்பி; கட்டிடமேதை; பொறிஞர்; இயற்பியல் அறிஞர்; கவிஞர். 
	அறிவியல் மேதையான கலீலியோ கவிஞரும் கூட. 
	கெதே மாகவிஞர்; இசைமேதை; நாடகாசிரியர்; அரசியல் அறிஞர். தமது அமைச்சர் பொறுப்பிலிருந்து விடுப்பு எடுத்துக் கொண்டு பாரிசு நகரம் சென்று ஓவியம் பயின்றார்; தாவரவியல் (Botany) பற்றியும் ஒரு நூல் எழுதியிருக்கிறார். (புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள் - முருகுசுந்தரம்)
	நமது கவிஞர் ரவிசுப்ரமணியனும் அப்படிப்பட்ட பன்முக ஆளுமைதான். சிறந்த கலை ரசிகர், விமர்சகர், ஆவணப்பட இயக்குநர், திரைப்படத் துறையில் துணை இயக்குநர், விரைவில் இயக்குநராக பரிணமிக்க இருப்பவர், இசையின் நுட்பமறிந்த பாடகர். இத்தனைக்கும் மேலாகத் தொடர்ந்து இலக்கிய வெளியில் போற்றத்தகுந்த ஆளுமைகளைக் கவனப்படுத்தி, அவர்களுக்கு அங்கீகாரம் பெற்றத் தர வேண்டுமென்கின்ற முனைப்புடன் பாவலர் இலக்கிய விருது, சாரல் இலக்கிய விருது, அகல் இலக்கிய விருது போன்ற அமைப்புகளில் உறுப்பினர். தன்னை முன்னிறுத்திக் கொள்ளாமல், இலக்கியப் பயணத்தில் படைப்பின் வழியாக மட்டுமே தொடர்ந்து இயங்கிவருபவர். 
	ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, மா. அரங்கநாதன் போன்ற மிக முக்கியமான இலக்கிய ஆளுமைகளை ஆவணப்படுத்தியவர். 
	1. ஒப்பனை முகங்கள்
	2. காத்திருப்பு 
	3. வண்ணதாசன் கடிதங்கள்
	4. காலாதீத இடைவெளியில்
	5. சீம்பாலில் அருந்திய நஞ்சு 
	ஆகிய படைப்புகளுக்குச் சொந்தக்காரர். இவரது படைப்புகளில் ஒன்று, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின், தமிழ் பாடத் திட்டத்திற்குத், தரவு நூலாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது. "இலக்கிய உலகில் தனித்திருக்கும் தீவுகளெனப் பலரிருக்கையில், எல்லோருக்கும் இனியவராக, காட்சிக்கு எளியவராக, இம் மென்றால் ஓடி வந்து பிரதிபலன் கருதாதது உதவும் செயற்பாட்டாளராக இன்று வரை இருப்பவர் எங்கள் ரவிசுப்ரமண்யம்.
	வெறும் காட்சிப் படிமங்களை உருவாக்கிக் காட்டுவது ஓவியர்களின் வேலை - கவிஞர்களின் வேலை அல்ல. “நட்சத்திரங்களை விட அதிகம் பேசுவது அவற்றின் இடையே உள்ள இருள்” என்பாரே பிரமிள்! மிக நுட்பமான கவிதை பற்றிய இந்தப் புரிதலுடன் எழுதுகின்ற கவிஞர் ரவிசுப்பரமணியத்தை அடுத்ததாக இங்கு அழைக்கிறேன்.

முடிவுரை:
	ஒரு படகினைத் தீட்ட
	நீ தண்ணீரை 
	வரைய வேண்டியதில்லை 
	ஒரு புன்னகையைத் தீட்ட
	நீ ஒரு முகத்தினைத் 
	தீட்டத் தேவையில்லை 
	மலர்வினைத் தீட்ட
	நீ ஒரு மலரைத் 
	தீட்ட வேண்டியதில்லை. 
	கவிஞர்களை அறிந்துகொள்ள கவியரங்கம் தேவையில்லை - கவிதைகள் போதுமானவைதான். ஆனால் கவிஞர்களை அறிமுகப்படுத்த இந்தக் கவியரங்கம் மிக அவசியமானதாகிறது. இவ்வளவு கவிஞர்கள் இருக்கும்போது ஏன் சிலர் மட்டுமே (நான் உட்பட) கவிஞர்களாகத் தமிழ் இலக்கிய பரப்பிலே முன்னிறுத்தப்படுகிறார்கள் - இதோ இவர்களைக் கவனியுங்கள், இவர்களது குரல்களைக் காது கொடுத்துக் கேளுங்கள் - என்பதற்காகவே Chennai Literary Festival Association நடத்திய இந்தக் கவியரங்கம் மிக மகிழ்ச்சியான நிகழ்வாக நிறைவடைந்திருக்கிறது!
	சகமனிதனை வாசிப்பதே சாத்யப்படவில்லை என்றால், சகபயணியின் பங்களிப்பை எப்படி வாசித்தல் இயலும்? கவிஞன் பழையவற்றுடன் பூணும் உறவே மரபு. தன் காலத்தில் உயிரோடு இருப்பவனே கவிஞன். மரபு என்றால் இலக்கணம் அல்ல. மரபு அனுபவத்தோடு சார்ந்து நிற்கிறது. பழமையோடு பூண்ட உறவில் தன் அடையாளங்களைப் பிறப்பிப்பது தான் படைப்பு. பாதையில் பார்த்து நடந்து வந்து, அதன் குருட்டு முனையில் வெட்டி விட்டதே மரபு" எனும் பொதிய வெற்பனின் முக்கியமான பதிவை இங்கு நினைவு கூர்கிறேன். 

                                                                                     * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *