சென்னை பல்கலைக்கழகம் – தமிழ் இலக்கியத்துறை –- பாரதி அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கம்

சென்னை பல்கலைக்கழகம் - தமிழ் இலக்கியத்துறை –-
                        பாரதி அறக்கட்டளைச் சொற்பொழிவு மற்றும் கருத்தரங்கம்

                                                   தமிழச்சி தங்கப்பாண்டியன்
                                                                   28.02.2011

                                                             பாரதியின் சக்தி
		பாரதி, பாரதிதாசன் இருவருமே தம் கவிதைகளில் மரபுபிறழாமல் புதுமைகளை வசப்படுத்த முனைந்ததில் காட்டிய அதே தீவிரத்தை பெண்ணுரிமை உள்ளிட்ட சமூக சீர்திருத்தக் கருத்துகளை அழுத்தமாக முன்வைப்பதிலும் காட்டிருக்கின்றனர். பாரதிதாசன் தம்மைவிட சற்றே முன்காலத்தவரான அல்லது சமகாலத்தில் வாழ்வதற்க்கு இயற்கை வாய்ப்பளிக்காத பாரதி தமது கவிதைகளில் பெண்ணுரிமை குறித்து பேசியதைக்காட்டிலும் விரிவானதளத்தில் பெண்ணுரிமையை அணுகியிருக்கிறார். 
	சிற்றிலக்கிய மரபு பெண்ணுடலை விதந்தோத, சித்தர்மரபு பெண்ணுடலை வெறுத்தொதுக்க பாரதியோ பெண்ணை வழிபடுபொருளாகச் சுட்டுகிறார். பெண் வழிபாடு என்பதே பெண்ணடிமை முறையின் மற்றுமொரு புறவேற்றுமை வடிவம்தான் எனும்போதும் பாரதி அவர்காலத்தில் அதை தன்னந்தனியராய் முன்வைத்ததை ஒரு கட்டுடைப்பாகவே கொள்ள வேண்டும். சக்தியை வழிபட்ட கவிஞர்கள் யாரும் பெண் கல்வியையும் ஆண் பெண் சமத்துவ உரிமையையும் பற்றி வாய் திறந்ததில்லை. பாரதியே அதை முன்னெடுக்கிறார். 
	கவிதைசொல் முறையில் பாரதியை அடியொற்றித் தொடரும் பாரதிதாசன் பெரியாரியத்தின் தாக்கத்தால் கைம்பெண் கொடுமை, மறுமணம், பாலிய விவாகம், பெண்கல்வி, சொத்துரிமை, திருமண உரிமை, காதல்மண உரிமை, திருமணம் மறுத்து உடன்பாடாக வாழவும் உரிமை, சுயமரியாதைத் திருமணம், கருத்தடை என்று வெவ்வேறு கோணங்களில் நின்று பெண்ணுரிமையின் அவசியத்தை வலியுறுத்துகிறார். 
	பாரதி, பாரதிதாசன் இருவருமே பெண்ணுரிமை எனும்போது தன்பால் மனச்சாய்வு இன்றியே அதை அணுகியிருக்கிறார்கள். பாரதிதாசன் பெரியாரியத்தை உள்வாங்கிக் கொண்டவர் என்பதால் அவர்பாடல்களில் அதன் ஆழ அகலங்கள் வெளிப்படுகிறன்றன. 
	பெண்ணுரிமை எனும் குரல் தமிழ்ச்சூழலில் முதன்முதலாய் ஒலிக்கத்துவங்கிய காலமது. இன்றைய கவிதைக் கோட்பாடுகளும் பெண்ணுரிமை குறித்த மறுவாசிப்புகளும் அவர்களை வெறும் பிரச்சாரகர்களாகவே வகைப்படுத்தலாம். சொல்லவந்த கருத்தில் முரண்பாடு உண்டென்றும் உதாரணங்களைச் சுட்டலாம். ஆனால் அவைகள் ஒருபோதும் இருவரது கவிமனதை, பெண்ணுரிமை மீது காட்டிய தீவிரத்தை சந்தேகிக்கலாகாது. சமூகப்பொதுமனதின் பிரதிபலிப்புகள் சிற்சில இடங்களில் தென்படுவதை அடிக்கோடிட்டு முன்னோடிக்கவிஞர்களை பழிதூற்ற முனைவது இலக்கிய அறமும் ஆகாது. 
	பாரதியும், பெண்ணும் என்றவுடனே முன் வருவது ‘சக்தி’ எனும் சொல்தான். அச் ‘சக்தி’ என்பது வெறும் பெண் உருவா, ஒட்டுமொத்த பெண் இனத்தின், க்ரியா சக்தியின் குறியீடா, பாரத மாதாவா, பாரதியின் சிறுவயது மையலின், சற்றே முதிர்ந்த பிற்காலக் காதலியின் ஓர் உருவமா? அல்லது இந்து மதம் முன்னிறுத்தும் ‘பராசக்தியா’ எனப் பற்பல வினாக்கள் எழுந்து, அவையெல்லாம் பாரதி மாணவர்களாலும், இரசிகர்களாலும், விமர்சகர்களாலும், ஆய்வாளர்களாலும், பல கோணங்களில் ஆராயப் பட்டிருக்கின்றன.. இன்றும் படுகின்றன.
	1909 இல் சக்தி மீது பாரதி பாடத் தொடங்கினார் எனும் சி.கனகசபாபதி சில வார்த்தைகள் தருகிறார். "பாரதிக்குப் பராசக்தியும் பாரதத் தாயும் ஒன்றாக விளங்கினர் என்றும், 
	பாரதத்தாயின் மேல் கொண்டிருந்த பாரதியின் அன்புதான் பாரதியின் பராசக்தி வணக்கத்துக்கு அடிப்படை என்றும் விளக்கம் கொடுக்க ஒருசிலர் முன் வரலாம். வங்காளத்தில் சாக்த மதம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிலவியிருந்த நிலைமையைப் பாரதி அறிந்துகொள்ள வாய்ப்பு நேர்ந்தது. அப்போது தென்னாட்டில் சிலர் சக்தி உபாசனை என்று தனிமையாக இருந்து செய்யும்போது, பழைய வழக்கத்தில் இருந்தபடி மது மாமிசங்களை அந்தத் தெய்வத்துக்கு அவசியமான நைவேத்யம் என்று கொண்டு, இரகசியமாகச் சக்தி பூசை செய்து வந்தனர் என்று பாரதி வெறுப்புடன் குறிப்பிட்டுள்ளார். வட இந்தியாவில் இருந்த நாட்களில் காளி பக்தி கொண்ட இராமகிருஷ்ணரைப் பற்றி அறிந்து (1902 இல்), புதுச்சேரியில் வாழ்ந்த நாட்களில் காளி உபாசகரான அரவிந்தரிடம் பழகியதால் (1908 இல்) சக்தி வணக்கத்தை அனுபவத்தில் பாரதி அடைந்தார் என்று முடிவு செய்ய வேறு சிலருக்குத் தோன்றக்கூடும். பாரதியின் சக்தி வழிபாட்டுக்கு இந்த விளக்கங்கள் போதுமானவை அல்ல என்று கருதி, பாரதியின் குழந்தைப்பருவ, இளமைப்பருவ உளவியலில்தான் உண்மையான மூலகாரணம் இருக்கிறது என்று மற்றும் சிலர் தேட முயலாம்". இதை இங்கே சற்று விரிவாகப் பார்க்கலாம். (பக் 20 & 21 – பாரதி சக்தியைப் பாடியது ஏன்? – டாக்டர். சி. கனகசபாபதி). 
	வட இந்தியாவில் இருந்த நாட்களில் பாரதி இராமகிருஷ்ணரைப்பற்றி (1902)இல் அறிந்ததும், நிவேதிதாதேவியை (1905)இல் நேரில் தரிசித்தபோதும், அரவிந்தருடன் (1908)இல் பழகத் தொடங்கியதும் பாரதியைச் சக்தி வழிபாடு பற்றிக்கொள்ள வைத்திருக்க வேண்டும் என்று காண்பதே பொருந்தக்கூடியதாக இருக்கிறது. புதுச்சேரியில் ‘சக்திதாசன்’ என்று புனைபெயர் வைத்துக்கொண்டதும் இதை மெய்ப்பிக்கிறது. பாரதியின் சக்திக் குறியீடு ஆற்றல், வேகம், மாற்றம், சமுதாய மாற்றம் ஆகிய உட்பொருள்களை ஆங்கங்கே உணர்த்துவது. பாரதியின் பாஞ்சாலி இலட்சியப் பெண்மையின் குறியீடு; பாரதத் தாயின் உருவகம்; ஆனால் சக்தியின் குறியீடாகப் பாரதியால் பாடப்படவில்லை. (பக் 29 & 30 – பாரதி சக்தியைப் பாடியது ஏன்? – டாக்டர். சி. கனகசபாபதி).
	பாரதிகாலத்தின் கருத்தாக்கங்கள், அவை கூறும் செய்தி, அவற்றின் அடிப்படை, பாரதியின் சிந்தனைக்கும் சமூகத்திற்கும் இருந்த உறவு, அவர்தம் படைப்புக்கோட்பாடு, விருப்பு, வெறுப்புகள், பின்னணி முதலியன ‘பாரதி’ எனும் ஆளுமையை எப்படி நிர்ணயம் செய்தன என்பதனைத் தெரிந்து கொள்ளுதல், பாரதியைப் பற்றிய விமர்சனத்திற்கு மிகவும்  தேவையானது. "பாரதியை அவனது சரித்திரச் சூழலில் வைத்து நோக்குதல் வேண்டும் என்பார் கைலாசபதி" (பாரதியின் சொல்லும் கருத்தும் - ‘சக்தி என்ற கருத்தாக்கம்’ - அ. பிரேமா). 
	பாரதி வாழ்ந்த 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதி, 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் எழுந்த சமயச் சார்பான மறுமலர்ச்சி இயக்கங்கள், பாரதிக்கு ஏற்பட்ட துறவிகள் தொடர்பு, வடமொழியின் வேதாகமங்களோடு, கம்பனையும், வள்ளுவரையும், தாயுமானவரையும் கற்றிருத்தல், முதலியவற்றால் மரபில் மனம் லயித்தும், ஆங்கிலக்கல்வி வடநாட்டு யாத்திரை இவற்றால் சமுதாய உணர்வு, புதுமை நோக்கம் முதலியவற்றைப் பெற்றார்.  "பாரதி புதிய நவீன தேசபக்தி மார்க்கத்தை முதன் முதலாக ஏற்படுத்தினார், மதத்தைப் பழைமை வாதத்திலிருந்து மீட்டுச் சமூக வாழ்வுடன் இணைத்து அறிவுவாத அடிப்படையில் தேசீய உணர்வைத் தட்டி எழுப்பப் பயன்படுத்தினார்" எனவும் தனது ‘சக்தி என்ற கருத்தாக்கம்’ கட்டுரையில் (பாரதியின் சொல்லும் கருத்தும்) குறிப்பிடுகின்ற அ.பிரேமா "இத்தன்மையே பாரதி கவிதைகளின் சமூகவியல் கோட்பாடாகும். ஆன்மீகத்தையும், சமூக வாழ்வையும் ஒன்றிணைத்துச் சமூகச் சார்புடைய நவீன மரபைத் தொடங்கி வைத்தார்" எனவும் கூறுகின்றார். பாரதியின் நவீனத்துவத்தின் பிரதான அடிப்படையும் அதுதான் என்று நூஃமான் கூறிய கருத்தையும் அவர் நினைவு கூறுகிறார். 
	அ. பிரேமா பாரதியின் இக்கருத்தாக்கத்தைத் தேசீயம், சமூகம், பெண் விடுதலை எனும் மூன்று கோணங்களில் பதிவு செய்திருக்கிறார்.  "பாரத தேசத்து மக்களுக்கு, மலர்ச்சியும், மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பிடிப்பும் உந்துதலும் ஏற்படுத்த ‘சக்தி’ என்ற தெய்வக் குறியீட்டு உருவக முறையைப் பாரதி பயன்படுத்துகிறார். பாரதியின் சமூக விஞ்ஞான உணர்வும், சக்தி கருத்தாக்க உணர்வும் பிரித்து உணர முடியாதவாறு பின்னிப் பினைந்துள்ளன. மாற்றம் ஒன்றே உலகில் மாறாதது, மாறாத இயல்புடைய மாற்றம் நிகழ இயக்கம் நடைபெறுதல் வேண்டும். அந்த இயக்கத்தையும், அது தரும் ஆற்றலையும் பாரதி சக்தியாகக் கருதுகிறார். மாற்றத்தை விதியாகக் கொண்ட இயக்கவியலைப் பாரதியார் உணர்வு ரீதியாக ஏற்றுக் கொண்டிருந்தார். அவரது இலக்கியக் கோட்பாடு இயக்கவியல் கோட்பாடு" என மூன்று கருத்துக்களை முன்னிலைப் படுத்துகிறார். 
	அவரது இந்த ‘இயங்கும் சக்தியைத் தெய்வச்சார்புடன் துடிப்புள்ள மதக் கோட்பாடாகக் காணும் மணியரசன், இக்கருத்தாக்கம் குறித்து, "மதம் என்ற இரும்புக் குண்டு காலில் கிடந்து எவ்வளவு இழுத்தாலும் செயல்வீரர் என்ற இயல்பின் காரணமாகவே எவ்வளவோ முன்னேறியிருக்கிறார். காலில் கிடந்த அந்தக் குண்டை அறுத்து எறிவதற்குப் பதில் – அதனையே கையில் எடுத்துக் கொண்டு எதிரியை விரட்டலாம் என்று நினைத்தார்" என்கிறார். மா.வளவன் என்கிற அ.மார்க்ஸோ, "பாரதி மதவாத கருத்துக்களையும் குறியீடுகளையும் நல்ல குறிக்கோளுக்காகப் பயன்படுத்தினாலும், இதுவே பின்னாளில் தேசிய உணர்வைப் பலவீனப்படுத்த நேர்ந்ததும், வகுப்புவாதச் சிந்தனைகளுக்கும், நாட்டுப் பிரிவினைகளுக்கும், இட்டுச் சென்றதும் வேறு கதைகள்" என்கிறார். "வேதகாலத்திலிருந்து இந்தியத் தத்துவமரபில் வெளிப்படையாகவும், இலைமறை காயாகவும் இருந்து வந்துள்ள இயக்கவியலை பாரதி அறிவுப் பூர்வமாகப் பற்றிக் கொண்டிருந்தார். எனவேதான் ஏட்டுக் கருத்தாக இருக்கும் வேதாந்த தத்துவத்தை, நாட்டுக்கருத்தாக, நடைமுறை வாழ்க்கையாக மாற்றியமைக்க முனைகின்ற புரட்சிவாதியாகப் பாரதி திகழ்கிறார்" என்கிறார் ரகுநாதன்.  "சக்தி உபாசகனான பாரதிக்குப் பெண் விடுதலை பேசுவது மிகவும் இயல்பானதாகவும், எந்தவித பண்பாட்டுச் சிக்கலையும் தோற்றுவிக்காததாகவும் இருந்தது. அவன் பின்பற்றிய சக்தி தத்துவம் அவனைத் தீவிரத்தன்மையுடன் பெண் விடுதலை பேசவே உந்தித் தள்ளியது" என பிரேமா பதிவு செய்கிறார். பாரதிக்கு ஷெல்லி மீதிருந்த மோகத்தை மேற்கோள்காட்டி, ஷெல்லி தாசனான அவனுடைய புதுமைப்பெண் பல்வேறு அம்சங்களிலும் ஷெல்லி படைத்த சித்னாவின் வாரிசு என்று வாதிடுகிறார் ரகுநாதன்.
	பலதரப்பட்ட விமர்சனங்களை இங்கு கோர்த்து முன்வைத்ததின் முக்கியக் காரணம், பெண், பெண் இருப்பு, பெண் விடுதலை, இவை பற்றிப் பேசிய, உருவாக்கிய, விவாதித்த அவருடைய கவிதைகள் அனைத்தையும் முழுமையாக இங்கு மட்டுமல்ல, எங்கும் ஒட்டுமொத்தமாக ஒரு ஆய்வு நோக்கில் சுருக்க முடியாது என்கின்ற காரணத்தினால்தான். இன்றைக்கு நவீனத்துவம், பின் நவீனத்துவம் முதலிய போக்குகளுடன் மிக முனைப்பாக முன்நிற்பது பெண்ணியப் போக்கும். பெண்ணிய நோக்கில் அவரது சக்தித் தத்துவத்தைப் பார்க்கின்ற அ.பிரேமா சொல்கிறார், (பக்கம் - 62, பாரதியின் சொல்லும் கருத்தும் - சக்தி என்ற கருத்தாக்கம் - அ. பிரேமா).  "பெண்ணைத் தியாகம், அன்பு, கருணை முதலியவற்றின் உருவமாகப் போற்றும் கருத்தாக்கங்கள் போலியானவை. இவை ஒடுக்கப்பட்ட அவளுக்கு ஒரு போதையான இலட்சியத்தில் நிலைநிறுத்தி, பின் அவளை யதார்த்த நிலைக்கு அடங்கிப் போகச் செய்யும் உத்தியாகும்".  சக்தித் தத்துவம் அவளை முழுமையாக வளர முடியாதபடி செய்கின்ற ஒரு போன்சாய்ப் புதிராகும். பெண்ணைத் தெய்வம் என ஒரு பக்கம் புகழ்ந்து, மறுபக்கம் அவளது இருப்பை மறுக்கும் ஆணாதிக்கக் கருத்தியலின் வெளிப்பாடு இத்தத்துவம். பெண் பிற தெய்வீகப் புனைவுகள் தேவையற்றவள். அவள் மனித உயிரி மட்டுமே. அவளுக்கு மகுடம் சூட்டும் புனைவுகள் இன்னொரு விதமான ஒடுக்கு முறையே, எனும் நவீனச் சிந்தனையின் பால் நான் நிற்கிறேன். 
	இத்தகைய நவீனத்துவ, பெண்ணிய நோக்கில் ஆய்வு செய்தால், பாரதியின் ‘சக்தி’ கருத்தாக்க சிந்தனைகள் பலமுரண்களைத் தரலாம் நமக்கு. ஆனால், "சமுதாயத்திலுள்ள சமத்துவமின்மையைப் போக்க முதலில் பாலின ஏற்றத்தாழ்வுகளை அகற்ற வேண்டும் என்கிற பெண்ணியப் பார்வை உடையவன் பாரதி. அவனது பெண் விடுதலை அல்லது பெண்ணியம் ‘சக்தி’ கருத்தாக்கத் தளத்தில் நின்று, சமூகம், பண்பாடு ஆகியவற்றின் இயக்கவியல் தன்மையை நன்கு புரிந்து கொண்டு பழமைக்கும், புதுமைக்குமான முரண்பாட்டில், புதுமையின் வழி நின்று புதிய பெண்ணுலுகத்தை, ஆற்றல் மிகு பெண்ணை உருவாக்குவதற்கான முற்போக்கு நவீன சிந்தனைப் போக்கில் அமைந்திருந்தது" (பக்-57 – பாரதியின் சொல்லும் கருத்தும் - சக்தி என்ற கருத்தாக்கம் - அ. பிரேமா) என்பதையும் நாம் மறுக்க முடியாது. அதோடு, தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு தர கவிதை படைத்தலை இதயசுத்தியாகத் தான் ஏற்றுக்கொண்டதை பாஞ்சாலி சபதத்தின் முன்னுரையில், ‘தமிழ் ஜாதிக்குப் புதிய வாழ்வு தர வேண்டுமென்று கங்கணம் கட்டி நிற்கும் பராசக்தியே என்னை கவிதை எழுதுகின்ற இத்தொழிலிலே தூண்டினாள்" என்று சொன்ன என் ஆசானும் அவனே. 
	‘சக்தி’ எனும் பராசக்தியின் துடிப்பாக, ஒளியாக, ஆத்ம விடுதலையாக, பெரு வெள்ளமாகப் பெண்ணைப் படிமப் படுத்தியவன் பாரதி. கிருத யுகத்தையும், காளி பராசக்தியின் கடைக்கண் பார்வையையும் பாடியதற்காகப் பாரதியைப் ‘பொதுவுடமை விரோதி’ என்பவர்கள் அவரது, "மேற்காயினும் சரி, கிழக்காயினும் சரி ஒரு ஒழுங்கான பண்பார்ந்த, வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு வழிதான் உண்டு. இந்தப் பூமியை எல்லாருக்கும் பொதுவாக்கிவிட்டு அதில் அனைவரும் சக தொழிலாளர்களாகவும், சக பங்குதாரர்களாகவும் வாழ்வதுதான் அந்த வழி. இந்த நாட்டில் மக்கள் அவ்வாறு கிருதயுகத்தின் போது வாழ்ந்ததாக நாம் ஒரு மரபைக் கொண்டிருக்கிறோம். அது உண்மையாக இருக்கலாம் அல்லது பொய்யாகவும் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் அத்தகையை ஒரு கிருதயுகத்தை எல்லாத் தேசங்களிலும் நிறுவுவதில் வெற்றியடையும் நாள் வெகு தூரத்தில் இல்லை" (பாரதி ஒரு சமூகவியல் பார்வை - பெ.மணியரசன் ; அ.மார்க்ஸ்)  எனும் கூற்றைப் படித்து அதன் அர்த்தத்தை உணர வேண்டும். 
	‘சக்தி’ என்று காளியைப் பூஜிப்பதிலும், பாரத மாதாவை சக்தியாக உருவகிப்பதிலும், சரஸ்வதி துதியிலும் பாரதி எப்படி வெளிப்படுகின்றான்? வெறும் சௌந்தர்ய உபாசகனாக மட்டுமா? உள்ளடக்கம் என்கின்ற மிக முக்கியமான ஒன்றைப் புறக்கணித்துவிட்டு வெறும் அழகியலை அவன் முன்னிறுத்துகின்றானா? இல்லை. சரஸ்வதியைக் கலை இலக்கியத்தின் குறியீடாக அவன் வைத்தது போல ‘சக்தி’யையும் ‘பெண் விடுதலைக்கான’ குறியீடாகவே வைக்கின்றான்.  "எறும்பு இறந்து போன புழுவை இழுத்துச் செல்லுகிறது, எதனால் – சக்தியினால். தூமகேது அநேக லட்சம் யோசனை தூரமான தனது வாலை இழுத்துக் கொண்டு திசைவெளியில் மஹா வேகத்தோடு சுழலுகின்றது. எதனால்? சக்தியினால். அந்தத் தூமகேது 75 வருஷத்தில் ஒரு மண்டலமாகத் தன்னைச் சுற்றிவரும்படி சூரியகோளம் நியமிக்கிறது. எதனால்? சக்தியினால். தமிழ் ஜனங்களுக்குள் சக்தி மென்மேலும் பெருகச் செய்ய வேண்டும் என்பது நமது நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டாகவே நாம் உயிர் தரிக்கின்றோம். மாதா இந்த நாட்டு ஜனங்களுக்குச் சக்தி அதிகரிக்கும்படி செய்க; அக்காரியத்தை நிறைவேற்றுவதற்குரிய சக்தியை எனக்குள் புரிக" (பக்கம் 510-511 - பாரதியார் கட்டுரைகள் - ஸ்ரீ சுப்ரமண்யபாரதி) எனும் பாரதியாரின் பதிவு அடிப்படையில் அவர் மானுட சக்தியின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதையும், கலை வடிவத்தில், கவிதையில், அதனைக் காளியாக, மாதாவாக உருவம் செய்வதனையும், இன்னும் ஒரு படி மேல் சென்று ‘பெண்ணை’ அவளது விடுதலையினைச் ‘சக்தி’ எனும் படிமமாக உயர்த்துவதையும் புரிந்து கொள்ள நமக்குத் துணைபுரியும். 
	பெண் விடுதலை குறித்து வெறும் பேச்சோடு நின்றவனல்ல பாரதி. ‘பெண்கள் சம்பாஷனைக் கூட்டங்கள் நடத்தியவர்’ - அவற்றைப் பத்திரிக்கைகளிலும் பதிவு செய்தவர். ‘காசி’ எழுதுவது எனும் தலைப்பில் புதுச்சேரியில் பெண்கள் "மஞ்சள் குங்குமம் (ஸம்பாஷணை) கூட்டம்" ஒன்றில் நடந்தது என ஸ்ரீமதி கிரியம்மா அவர்களின் பேச்சைப் பின் வருமாறு பதிவு செய்கிறார்: 
	"ஆரம்பத்தில் பார்வதி, லஷ்மி, ஸரஸ்வதி முதலிய படங்களுக்குப் பூஜை. பின் விடுதலைப் பாட்டுக்கள் பாடப்பட்டன என்ற அறிமுகத்துடன் ஸ்ரீமதி கிரியம்மாவின் பேச்சு, "இப்போது நாம் முயற்சி செய்ய வேண்டிய விஷயம் பெண்விடுதலை. பல்லாயிரம் வருஷங்களாக நாம் அடிமைப்பட்டு வருகிறோம். தெய்வம் தானாக நமக்கு விடுதலை கொடுத்ததா? இல்லை ‘உங்களுடைய வழி இதுதான்’, என்று ஒரு சட்டம் ஏற்படுத்தி வைத்தது. இப்போது நாம் ‘இப்படி இருக்க மாட்டோம் என்றால், சரி, ஆனால் பாருங்கள். உங்களுக்காக இன்னொரு வழி உண்டாக்கி இருக்கிறேன். அதன்படி நடவுங்கள்’ என்று கூறி நம்மை ஊக்கப்படுத்துகிறது. ................ நாம் குழந்தைகள். நாம் அழுதால் லோகமாதா பராசக்தி உணவு கொடுப்பாள்"  (பக்கம் 130 – பாரதியார் கட்டுரைகள் – மாதர், பூம்புகார் பதிப்பகம்). 
	இக்கூற்று பத்தாம் பசலித்தனமான தெய்வ நம்பிக்கையையும், இந்துத்துவ மேலாண்மையையும் பாரதி உயர்த்திப் பிடிப்பதான ஒரு தொனியைத் தருகின்றது. ஆனால், "காலங்காலமாக இந்த மண்ணில் போற்றப்பட்டு வந்த செல்லரித்துப் போன பல இலக்கியக் கொள்கைகளுக்கு வெடி வைத்துத் தகர்த்து, புத்திலக்கிய விழிப்பிற்குப் பள்ளி எழுச்சி பாடிய மகாகவி பாரதி, ஆரிய தேசம், இந்து ஜாதி, பண்டைய வேத இதிகாசங்கள் போன்றவற்றிற்கு அளவிற்கு மீறி அழுத்தம் கொடுத்துப் பார்க்க நேர்ந்ததற்கான அவசியம் அல்லது ‘உள்நோக்கம்’ என்ன என்று நாம் சரியாகப் புரிந்து கொள்வதற்குப் பாரதியின் இலக்கியப் பிரசவங்கள் நிகழ்ந்த காலச் சூழ்நிலையையும், அவன் புகுந்த களத்தில் நிகழ்ந்த போரின் தன்மையையும் நாம் பரிசீலிக்க வேண்டும்" என்னும் அ.மார்க்ஸின் கூற்று இங்கு முக்கியமானது. (பக்கம்:40 - பாரதி ஒரு சமூகவியல் பார்வை : பெ.மணியரசன், அ.மார்க்ஸ்). அவனது படைப்பில் காணப்படும் முரண்களுக்கும், சிக்கல்களுக்குமான விடையை, அது எவ்வாறு நேர்ந்தது என்பதற்கான ஆரம்பப் புள்ளியை அவனது காலகட்டத்தில் பாரதத்தில் எழுச்சி கொண்ட இயக்கங்கள், தலைவர்கள், பொது எதிரியாக, ஒரே எதிரியாக இருந்த ஆங்கில அரசாங்கம் இவற்றின் பின்புலத்திலே தான் நாம் பெறமுடியும்.
	பாரதியாரைச் ‘சர்வரோக நிவாரணியாக’ச் சித்தரிப்பதும் தவறு – குறிப்பிட்ட இனத்தில் பிறந்து வளர்ந்ததால் அவன் மீது இந்துத்துவ, ஆர்யகுல மேன்மையை உயர்த்திப் பிடித்தவன் என அவனைக் குறுக்குவதும் தவறு. இதனை மேலும் தெளிவாக்க அ.மார்க்ஸ் டால்ஸ்டாய் பற்றிய லெனினது பதிவைச் சுட்டுகிறார்.  "டால்ஸ்டாயின் படைப்புகள், பார்வைகள், கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவற்றில் உள்ள முரண்பாடுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. ஒரு புறம் ஒப்பற்ற சித்திரங்களாக ருஷ்ய வாழ்க்கையைப் படைத்துக் காட்டி, உலக இலக்கியச் செல்வக் குவியலுக்கு முதல் தரமான காணிக்கைகளைச் செலுத்திய மேதையை, மாபெரும் கலைஞனைக் காண்கிறோம். மறுபுறம் கிறித்துவின் மீது மயக்கம் கொண்ட நிலப்பிரபுவைக் காண்கிறோம்..... 
	டால்ஸ்டாயின் பார்வையிலுள்ள முரண்பாடுகள் எல்லாவற்றையும் இன்றைய உழைக்கும் வர்க்க இயக்கம் மற்றும் சோஷலிச நிலைப்பாட்டிலிருந்து கொண்டு மதிப்பிட்டுப் பார்க்கக் கூடாது. (அத்தகைய மதிப்பீடு தேவை எனினும் அதுவே போதுமானதாக இராது). மாறாக, முன்னேறி வரும் முதலாளித்துவத்திற்கும், தங்கள் நிலத்தை இழந்த மக்களின் சீரழிவிற்கும், எதிரான தந்தை வழி சமூக ருஷ்ய கிராமப்புற மக்களின் (ஞயவசயைசஉhயட சுரளளயைn ஊடிரவேசல ளுனைந) எதிர்ப்பு என்ற கண்ணோட்டத்துடனேயே நாம் பார்க்க வேண்டும்" (பக்கம் - 41 – பாரதி ஒரு சமூகவியல் பார்வை – பெ. மணிசரகன், அ. மார்க்ஸ்) அந்தக் கண்ணோட்டத்துடன் தான் நாம் பாரதியாரை அவர்தம் ‘சக்தி’ கருத்தாக்கத்திலும் புரிந்து கொள்ள வேண்டும். 
	மேற்சொன்ன புதுச்சேரி கூட்டத்திலேயே ஸ்ரீமான் சி.சுப்ரமண்ய பாரதியின் குமாரியாகிய ஸ்ரீதங்கம்மா, ‘சியுசீன்’ என்ற சீனத்து ஸ்திரீயின் கதையை வாசிக்கிறாள். இந்தக் கதையைப் பாரதியார், "ஆசியாவில் பெண்விடுலைக் கொடியை நாட்ட வேண்டுமென்று பாடுபட்டவர்களில் இவளும் ஒருத்தி" என்பதாக அறிமுகம் செய்து, சீனாவில் அப்பொழுது நடைபெற்று வந்த குடியரசுக்கு வேர் நாட்டியவர்களில் அவரும் ஒருவர் என்று சொல்லி, அந்த அம்மையார் சீன பாஷையில் தகுந்த பாண்டித்யம் பெற்றவர்; கவிதா சக்தியும் உடையவர்; ஜப்பான் சென்று ஐரோப்பிய நவீனக் கல்வி பயின்றவர்; சீனத்து அரசில் அப்போது கோலோச்சிய மஞ்சு வம்சத்திற்கு எதிராக சீர்திருத்தக் கட்சி தொடங்கி மாணாக்கர்களுக்குப் போதித்தவர் என்றெல்லாம் பட்டியலிட்டு விட்டு, மிக முக்கியமாக, ஒன்று சொல்கிறார் - "சீன சம்பிரதாயங்களின்படி கணவனுடன் கூடி வாழும் வாழ்க்கை இவளுடைய இயற்கைக்குப் பொருந்தவில்லையாதலால், இவள் தன் கணவனிடமிருந்து சமாதானமாகவே பிரிந்து வந்துவிட்டாள்" (பக்கம்:132, பாரதியார் கட்டுரைகள் :  மாதர் : பூம்புகார் பதிப்பகம்). 
	நிறைவாக அந்த "மஞ்சள் குங்குமம்" கூட்டம் எப்படி முடிகின்றது தெரியுமா? ஸ்ரீசகுந்தலா, சீனபாஷையில் ‘சியு சீன்’ என்ற ஸ்திரி பாடிய பாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பாடுகின்றார். 
	விடுதலைக்கு மகளி ரெல்லோரும் 
	வேட்கை கொண்டனம்; வெல்லுவமென்றே
	திட மனத்தின் மதுக் கிண்ணமீது 
	சேர்ந்து நாம் பிரதிக்கினை செய்வோம் 
	உடையவள் சக்தியாண் பெண்ணிரண்டும் 
	ஒரு நிகர் செய் துரிமை சமைத்தான், 
	இடையிலே பட்ட கீழ் நிலை கண்டீர் 
	இதற்கு நாமொருப் பட்டிருப்போமோ? 

	திறமையா லிங்கு மேனிலை சேர்வோம். 
	தீய பண்டை யிகழ்ச்சிகள் தேய்ப்போம். 
	குறைவிலாது முழுநிகர் நம்மைக் 
	கொள்வ ராண் களெனில் அவரோடும்  
	சிறுமை தீர நந்தாய்த்திரு நாட்டைத் 
	திரும்ப வெல்வதிற் சேர்ந்திங் குழைப்போம் 

	அற விழுந்தது பண்டை வழக்கம் 
	ஆணுக்குப் பெண் விலங்கெனு மஃதே 
	விடிய நல்லொளி காணுதி நின்றே 
	மேவு நாக ரீகம் புதிதொன்றே! 
	கொடியர் நம்மை யடிமைக ளென்றே, 
	கொண்டு தாமுதலென்றன ரன்றே!
	அடியொடிந்த வழக்கத்தைக் கொன்றே
	அறிவு யாவும் பயிற்சியில் வென்றே 
	கடமை செய்வீர் நந்தேசத்து வீரக் 
	காரிகைக் கணத்தீர் துணிவுற்றே. 
	"வெல்லுவோம் என்றே திடமனத்தின் மதுக்கிண்ணத்தின் மீது நாம் உறுதி எடுத்துக் கொள்வோம் என்று சொன்ன முற்போக்காளானால், அதனையும், திருவிளக்குப் பூஜைக்குப் பின்னரே, ‘மஞ்சள், குங்குமக் கூட்டம்’ வாயிலாகவே செய்ய முடிந்திருக்கிறது. அன்றைய காலக்கட்டத்தில், "உலகமெங்கும் விடுதலை அருவி நீர் காட்டாறு போலே ஓடி அலறிக் கொண்டு வரும் சமயத்தில் நீங்கள் நாவு ஹண்டு ஏன் தவிக்கிறீர்கள்?" என அந்த ஸ்திரிகளை ஒன்று கூட்டிக் கேள்வி கேட்டு, விழிப்புணர்வை ஏற்படுத்த, புதுச்சேரி பாரதியார் வீட்டில் திருவிளக்கு பூஜை செய்ய வேண்டியிருந்த காலக் கட்டத்தைப் பற்றிய புரிதல் இல்லை என்றால், பாரதியின் முரண்களைப், பிற்போக்குத்தனம் எனும் சிமிழுக்குள் சுலபமாக அடைத்துவிடுகின்ற அபாயம் நிகழ்ந்துவிடும். 
	தேசிய உணர்வு ஊட்டுதல், நாட்டுப்பற்று வளர்த்தல், மேற்கத்திய பண்பாட்டை விட பண்டைய இந்து அல்லது ஆரிய நாகரிகம் மேன்மையானது என உணர வைத்தல், பெண் விடுதலையினை தெய்வ நம்பிக்கையின் ஊடாகக் கொண்டு செலுத்துதல் என அன்றைய காலகட்டத்தில் பாரதிக்குப் பல அத்தியாவசியங்கள் இருந்தன. தளைகளின் ஊடாகத் தன் பாதையைச் செதுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் அவன். 
	இந்த அத்தியாவசியங்களினால் பின்னாளில், எத்தகைய ஆபத்தான, வகுப்புவாத, பிற்போக்குத்தனமான கண்ணோட்டங்கள் உருவாக நேர்ந்தது என்பதையும் எண்ண வேண்டும். பாரதியை வெறும் தேசியக் கவிஞன் என்பது தவறு என்றும், "அன்றைய தேசிய இயக்கம் மற்றும் அதன் தலைவர்களின் பொதுவான செயல் திட்டங்களையும் அரசியல் நடவடிக்கைகளையும் அவர் ஏற்றுக் கொண்டார் எனினும், அவர் ஒரு பிற்போக்குவாதி அல்ல, முற்போக்குவாதியாகப் பல இடங்களில் முரணினார்" என்று சொல்லும் அ.மார்க்ஸ் பின்னாளில் அந்த அத்யாவசியங்களினால் வந்த அபாயங்களையும் சுட்டுகிறார். 
	மகா பிற்போக்குத்தனமாக "கோஹத்தி (பசுவதை) செய்யக் கூடாதென பாரதியார் கட்டுரை எழுத நேர்ந்ததையும், " ஒவ்வொரு அம்சத்திலும் இந்திய கலாச்சாரம் மேற்கத்திய கலாச்சாரத்தைக் காட்டிலும் உயர்ந்தது என நிறுவுகின்ற அதி உற்சாகத்தில் இந்திய நாட்டின் மகா அநீதிகளாகிய சாதி முறைகளுக்கும், வருண அமைப்பிற்கும் கூட பின்னாளில் அவர் வக்காலத்து வாங்க நேரிட்ட சறுக்கலையும், அவரது "அகண்ட பாரதம், பிரிவு செயல்படாத அகண்ட பாரதம்" என்கின்ற அன்றைய ஜனநாயக நோக்கை இன்றைய பாசிஸத் தன்மை வாய்ந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் எடுத்தாள்கின்ற அவலத்தையும் நமது கவனத்துக்கு கொண்டு வருகின்ற அ.மார்க்ஸ், "பாரதி அந்தத் தவறுகளைத் திருத்திக் கொள்ள நேர்ந்த தருணத்தில் மறைந்து போனது நமது துரதிருஷ்டமே. ஆனாலும் அத்தகைய கூறுகள் அவரிடம் முகிழ்க்கத் துவங்கி இருந்தன. அவர் தனது இறுதி நாட்களில் அரவிந்தர் போன்ற சாமியார்களின் தொடர்பை விட்டுவிட்டார்; தனது இறுதிப்பாடலாக அவர் மேடையில் முழங்கியது முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை வேண்டும் என்பது பாரத சமுதாயத்தை வாழ்த்திய பாடல்தான்" என்று குறிப்பிட்டு பாரதி ஒரு முற்போக்குவாதிதான் என்பதனை உறுதிப்படுத்துகிறார். (பக்கம் : 61 : பாரதி ஒரு சமூகவியல் பார்வை : அ.மார்க்ஸ், பெ. மணியரசன்). 
	அதேசமயம் ‘சக்தி’ என்கிற கருத்தாக்கத்தின் மூலமாகப் பெண் விடுதலை, விவாவகரத்து, விதவைமணம், கற்பு போன்றவற்றில் பாரதியார் நம் தமிழ் இலக்கியப் பாரம்பர்யத்திலிருந்து வெகுதூரம் விலகி, முன்னோக்கி அடி எடுத்து வைத்திருக்கிறார். ‘பெருமையும் உரனும் ஆடவர்க்குரிய. நாணமும் அச்சமுமே மகளிர்க்குரிய’ என்றது நமது பாரம்பர்யம். ‘நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்றான் பாரதி. "கற்புநிலை என்றால் இருவருக்கும் அஃதைப் பொதுவில் வைப்போம்" என்றவன், "கற்பு மிக உயர்ந்த ஒழுக்கம் தான். ஆனால் நிச்சயமாக அதுவே வாழ்க்கையில் எல்லாமுமாகி விடாது" என்கிற துணிவுடையவன், "பெண் விடுதலை" "பெண்ணே பெரும் சக்தி" என வருகையில் மிகவும் முற்போக்காகச் செயல்பட்டிருக்கின்ற முதல் கவிஞன் அவன்.  
	ஸ்ரீமான் திலகரைத் தன் அரசியல் மதகுருவாகப் பிரகடனடம் செய்து ஏற்றுக் கொண்டவன் பாரதி. ஆனால் திலகர் 1890இல் பெண்களின் திருமண வயதைப் பத்திலிருந்து பன்னிரெண்டாக உணர்த்த முயன்றபோது "உடன்பாடு வயது மசோதாவை" எதிர்த்துப் போராட்டம் செய்கின்றார். ‘வாழ்க நீ எம்மான்’ என்று மகிழ்ந்து தான் வாழ்த்துப் பஞ்சகம் பாடிய மகாத்மா காந்தி, விதவைகள் மறுமணம் குறித்து அவரது ‘நவஜீவன்’ பத்திரிக்கையில் ஏனோதானோ என்று ஒரு கட்டுரை எழுதுகிறார். கோபமுற்ற பாரதியார், தர்க்க நியாயங்களுடன், பதிலுக்கு ஒரு கட்டுரை எழுதிக் காந்திஜீயைச் சாடுகிறார். பாரதியாரின் அவ்வாசகம் - "பால்ய விதவைகள் புனர் விவாவகம் செய்து கொள்ளலாமென்று ஸ்ரீமான் காந்தி சொல்லுகிறார். அதைக்கூட உறுதியாகச் செல்ல அவருக்குத் தைரியம் இல்லை; மழுப்புகிறார்" (பாரதி ஒரு சமூகவியல் பார்வை : அ.மார்க்ஸ், பெ.மணியரசன்). 
	தன்னுடைய குடும்பத்திலுள்ள விதவைகளுக்கு மறுமணம் செய்து வைக்க மாட்டேன் என்ற மகாத்மா எங்கே – "எல்லா விதவைகளுக்கும் மறுமணம் செய்து கொள்ள இடம் கொடுப்பதே இந்தியாவில் மாதருக்குச் செய்யப்படும் அநியாயங்கள் எல்லாவற்றிலும் பெரிதான இந்த அநியாயத்திற்குத் தகுந்த மாற்று. மற்ற பேச்செல்லாம் வீண் கதை" என்ற பாரதி எங்கே?, "திருநெல்வேலி கலவரத்தில் மறைந்து போன ஒரு வீரரின் இளம் மனைவியைப் பாரதியார், மறுமணம் செய்து கொள்ளுமாறு தூண்டிய ஒரு சம்பவத்தைக் கவியோகி சத்தானந்த பாரதியார் குறிப்பிடுகிறார்" (பக்கம் : 114, பாரதி ஒரு சமூகவியல் பார்வை : அ.மார்க்ஸ், பெ.மணியரசன்) 
	பாரதியாருக்கு மார்க்ஸீயப் பரிச்சயம் குறைவு, பாரதி சாதி ஒற்றுமை பற்றிப் பேசினானே ஒழிய சாதி ஒழிப்பைப் பற்றிப் பேசவில்லை எனக் காத்திரமான விமர்சனங்கள் பல உண்டு. ஆனால் பெண்மையைச் ‘சக்தி’  ஆகா உருவகித்ததில், ‘மதம்’ என்கிற பிம்பத்தின் கட்டமைப்பையும் மீறி, அதற்குள் வீர்யத்தைப் புகுத்தியவன் பாரதி. 	தன் இளமைக் காலத்தில் "ஓம் சக்தி" என்று பாரத தேவியைக் காளி மாதாவாகப் பாவித்துக் கவிதைகள் எழுதிய அவன், பாஞ்சாலி சபதத்தினை நிறைவு செய்கையில், பராசக்தியின் புகழைப் பாடிவிட்டு "ஆதிபராசக்தி அவள் நெஞ்சம் வன்மையுற" என்கையில், நம்முன் நிற்பது ‘பராசக்தி’ அல்ல பழிவாங்கச் சபதமேற்கிற பாஞ்சாலி எனும் பெண். 
	‘மஹா சக்தி வெண்பா’, ‘ஓம் சக்தி’, ‘பராசக்தி’, ‘சக்திக் கூத்து’, ‘சக்தி’, ‘சக்தி விளக்கம்’, ‘சக்திக்கு ஆத்மஸமர்ப்பணம்’, ‘சக்தி திருப்புகழ்’, ‘மஹாசக்தி பஞ்சகம்’, ‘மஹாசக்தி வாழ்த்து’, ‘சிவசக்தி புகழ்’, ‘மஹாசக்தி வாழ்த்து’, ‘சிவசக்தி புகழ்’, ‘மஹாசக்தி’, ‘மஹாசக்திக்கு ஸமர்ப்பணம்’, ‘மஹாசக்திக்கு விண்ணப்பம்’ எனப் பல கவிதைகள், (சில பாடல்களாக, ராகம், மெட்டுக்களுடன்) எழுதப்பட்டிருந்தாலும், 
	"துன்பமிலாத நிலையே சக்தி 
	தூக்கமிலாக் கண்விழிப்பே சக்தி
	அன்பு கனிந்த கனிவே சக்தி 
	ஆண்மை நிறைந்த நிறைவே சக்தி" 
எனப் பெண்மையைச் சற்று ஒதுக்கும் பாரதியின் வரிகளைப் பெரிதுப்படுத்தாமல், 
	"பண்டை விதியுடைய தேவி – வெள்ளை 
	பாரதி யன்னையருள் மேவி, 
	கண்ட பொருள் விளக்கும் நூல்கள் – பல 
	கற்றலில் லாதவனோர் பாவி" 
என்று "சக்தி விளக்கம்" சொல்வதை ஏற்போம், துய்ப்போம், உய்ப்போம்.
	பாரதி கட்டுரை ஒன்றில் "நான் எல்லா வகையிலும் உனக்குச் சமமாக வாழ்வதில் உனக்குச் சம்மதமுண்டானால் உன்னுடன் வாழ்வேன். இல்லா விட்டால் இன்று இராத்திரி சமையல் செய்ய மாட்டேன். எனக்கு வேண்டியதைப் பண்ணித் தின்று கொண்டிருப்பேன். உனக்குச் சோறு போட மாட்டேன். நீ அடித்து வெளியே தள்ளினால் ரஸ்தாவில் கிடந்து சாவேன். இந்த வீடு என்னுடையது. இதை விட்டு வெளியேறவும் மாட்டேன் என்று கண்டிப்பாகச் சொல்லிவிடவும் வேண்டும். இங்கனம் கூறும் தீர்மான வார்த்தையை, இந்திரிய இன்பங்களை விரும்பியேனும், நகை, துணி முதலிய வீண் டம்பங்களை இச்சித்தேனும் நிலையற்ற உயிர் வாழ்வைப் பெரிதாகப் பாராட்டியேனும் மாற்றக் கூடாது. சிறுது சிறிதாக, படிப்படியாக ஞாயத்தை ஏற்படுத்திக் கொள்வோம் என்னும் கோசா நிதானக் கட்சியாளரின் மூடத்தனத்தை நாம் கைக் கொள்ளக்கூடாது. நமக்கு ஞாயம் வேண்டும். அதுவும் இந்த க்ஷணத்தில் வேண்டும். ............... இப்படிச் சொல்லுவதால் நமக்கு மரணமே நேரினும் நாம் அஞ்சக்கூடாது. ஸகோதரிகளே! ஆறிலும் சாவு; நூறிலும் சாவு, தர்மத்துக்காக மடிகிறவர்களும் மடியத்தான் செய்கிறார்கள். ஆதலால் ஸகோதரிகளே, பெண் விடுதலைக்காக இந்த க்ஷணத்திலேயே தர்மயுத்தம் தொடங்குகள். நாம் வெற்றி பெறுவோம். நமக்கு மஹாசக்தி துணை செய்வாள்" என்று பாரதி வலுவான வார்த்தைகளால் பெண் விடுதலை பேசுகிறார். அதற்குப் பராசக்தி துணை செய்வாள் என்றும் கூறுவதை நோக்க வேண்டும். (பக்:61 : பாரதியின் சொல்லும் கருத்தும் - சக்தி என்ற கருத்தாக்கம் - அ. பிரேமா) பெண் விடுதலைக்கான மிகத் தெளிவான, உறுதியான குரல் இது. 
	இருக்கும்போதுதான் உடலில் சுகமும் வலிமையும் இருக்கின்றன. உடலுக்கு வலிமை கொடுப்பது சக்தி என்று இப்படி எழுதுகிறார். 
	"சக்தி அநந்தம்; எல்லையற்றது, முடிவற்றது, 
	அசையாமையில் அசைவு காட்டுவது, 
	பிணைப்பது, கலப்பது, உதறுவது, 
	புடைப்பது, வீசுவது, சுழற்றுவது, 
	கட்டுவது, சிதறடிப்பது, தூற்றுவது, 
	ஊதிவிடுவது, நிறுத்துவது, ஓட்டுவது, 
	ஒன்றாக்குவது, பலவாக்குவது, 
	சக்தி குளிர் செய்வது, அனல் தருவது, 
	குதுகுதுப்புத் தருவது 
	குதூகலம் தருவது, நோவு தருவது, நோவு தீர்ப்பது, 
	இயல்பு தருவது, இயல்பு மாற்றுவது, 
	சோர்வு தருவது, ஊக்கம் தருவது, 
	எழுச்சி தருவது, கிளர்ச்சி தருவது, 
	மகிழ்விப்பது, புளகம் செய்வது, 
	கொல்வது, உயிர் தருவது, 
	சக்தி மகிழ்ச்சி தருவது, சினம் தருவது, 
	வெறுப்பு தருவது, உவப்பு தருவது, 
	பகைமை தருவது, காதல் மூட்டுவது
	உறுதி தருவது, அச்சம் தருவது
	கொதிப்பு தருவது, ஆற்றுவது
		சக்தி முகர்வது, சுவைப்பது, தீண்டுவது, கேட்பது, காண்பது
	சக்தி நினைப்பது, ஆராய்வது, கணிப்பது, தீர்மானம் செய்வது
	கனாக் காண்பது, கற்பனை புரிவது, தேடுவது, சுழல்வது, 
	பற்றி நிற்பது, எண்ணமிடுவது, பகுத்தறிவது, 
	சக்தி மயக்கம் தருவது, தெளிவு தருவது சக்தி உணர்வு" (பக்:64: பாரதியின் சொல்லும் கருத்தும் : சக்தி என்ற கருத்தாக்கம் - அ. பிரேமா).
	"பாரதியின் ‘சக்தி’ கவிதை விளக்கத்திலிருந்து செயலும் செயலின் விளைவான பண்புகளும் ‘சக்தி’ கவிதையில் ‘சக்தி’யாகச் சொல்லப்படுகிறது என்று விளக்கலாம். இது மட்டுமல்லாமல் நல்வாழ்வும் அதற்குத் தேவையான நற்பண்பு, நற்செய்கை, ஆற்றல், அறிவு, வலிமை, முயற்சி,தவம், முக்தி ஆகியவற்றையெல்லாம் ‘சக்தி’ என்ற ஆதாரப் பொருளில் அடக்கிக் காண்கிறார் என்றும் கூறலாம். பாரதியின் கடவுள் கொள்கையிலும், பகுத்தறிவு வாதம் மேலோங்கியிருப்பதை இது உணர்த்துகிறது. பாரதியின் இந்நோக்கினைக் குறித்து "பெண்தான் படைப்பின் அடிப்படைக் காரணமென்பதால் ஆற்றலைப் பெண் தெய்வமாக உருவகம் செய்து வணங்குவதே சாக்தம் என்பது. சக்தி வழிபாடு பகுத்தறிவிற்குப் பொருத்தமாக அமைந்திருப்பதை உணர்ந்தே பாரதி இவ்வழிபாட்டில் ஈடுபட்டார்" என்பர். (பக்:64 : பாரதியின் சொல்லும் கருத்தும் : சக்தி என்ற கருத்தாக்கம் - அ. பிரேமா).

உதவிய நூல்கள் : 

	பாரதி சக்தியைப் பாடியது ஏன்? – டாக்டர். சி. கனகசபாபதி
	பாரதியின் சொல்லும் கருத்தும் - சக்தி என்ற கருத்தாக்கம் - அ.பிரேமா
	பாரதி ஒரு சமூகவியல் பார்வை - பெ.மணியரசன் ; அ.மார்க்ஸ்
	பாரதியார் கட்டுரைகள் - ஸ்ரீ சுப்ரமண்யபாரதி
	பாரதியார் கட்டுரைகள் – மாதர், பூம்புகார் பதிப்பகம்

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *