சென்னை புத்தக திருவிழா பேச்சு – 19.01.2015

சென்னை புத்தக திருவிழா பேச்சு - 19.01.2015

	எனது சிறந்த நண்பர் யார் தெரியுமா, நான்
	படித்தேயிருக்காத புத்தகத்தை எனக்குத் தருபவர்தான்.
					- ஆபிரஹாம் லிங்கன்

•	உலக இலக்கிய நூல்கள் என்ற பெயரில் சிறிய புத்தகம் ஒன்றை ஹோரெஸ் ஷிப் என்ற ஆங்கிலேயர் 1945இல் எழுதி வெளியிட்டார். 
•	காலம், இடம், பொருள் என்ற நிர்பந்தமின்றி ஷிப் தீர்மானம் செய்த பத்து நூல்களாவன:
•	நூல் என்றால் என்ன? அதன் எந்த இலக்கணத்துக்கும் ஆட்சேபம் கிளம்பும். 
•	புத்தகத்தை மதிப்பிடுவது எப்படி? அதன் அளவைக் கொண்டா? இந்த எண்ணமே படுமோசமானது; எனினும் திடமான அடிப்படைகளைக் கொண்டு மதிப்பிட்டுப் பார்த்தால் பெயினின், காமன்ஸென்ஸ், தோரோவின், ஸிவில் டிஸ்-ஓபீடியன்ஸ், மாக்கிண்டரின், ஜோக்ராபிகல் பிவட்ஆப் ஹிஸ்டரி, ஐன்ஸ்டீனது, ஸ்பெஷல் தியரி ஆப் ரிலேடிவிடி என்ற நூலின் முதல் வெளியீடு ஆகியவை வெறும் துண்டுப் பிரசுரங்கள் என்றுதான் கருதப்பட வேண்டியவை. 
•	கடைசி மூன்றும் பத்திரிக்கைக் கட்டுரைகளாகத்தான் முதலில் வந்தன.
•	பிரின்ஸிபியா மாதமாடிகா, தி வெல்த் ஆப் நேஷன்ஸ் ஜனத் தொகையைப் பற்றிய மால்தூஸ் வெளியீட்டின் பிந்தைய பதிப்புகள், டாஸ் காபிடல், மைன் காம்ப் ஆகியவை இவற்றிற்கு நேர்மாறாகக் கன நூல்கள் என்ற வகையைச் சேர்ந்தவை. 
•	பெரு நூல்கள் எக்காலத்திலும் ஒரு சமுதாயத்தில் கிளர்ச்சியைக் கிளப்பி விட்டதில்லை என்கிறார் வால்டேர்.
•	உணர்வு மிகுதியுடன் வரையப்பெறும் சிறு நூல்கள்தாம் அவ்வாறு பயன்படுபவை என்பது வால்டோரின் கருத்து. 
•	பெயின், தோரோ ஆகியவர் நூல்கள் விஷயத்தில் இது முற்றும் பொருந்தும்; மாக்கிண்டர், ஐன்ஸ்டீன் நூல்கள் விஷயத்தில் பொருந்தாது. இந்த பட்டியலில் புத்தகத்தின் அளவுக்குச் சிறிதும் மதிப்புத் தரவில்லை.
•	ஒரு நூலின் தயாரிப்பில் செலவான காலம் கவனிப்பிற்குரிய விஷயங்களில் ஒன்று. அதிகக் காலம் எடுத்துக் கொண்டது கோபர் நிகஸ்தான். 
•	டி ரெவல்யூஷனிஸ்ட் என்ற நூலைக் கோபர் நிகஸ் தயாரிக்க முப்பது ஆண்டுகள் ஆயின. ஆனால் அவர் அந்தக் காலம் முழுவதையும் அப்பணியிலேயே செலவிடவில்லை. 
•	நியூட்டன், தமது, பரின்ஸிபியா மாதமாடிகா வை எழுதி முடிக்கப் பதினெட்டு ஆண்டுகள் ஆயின. 
•	கால அளவைக் கொண்டு மட்டும் பார்த்துக் கோபர்நிகஸின் நூல்தான் பெரியது என்று யாரே கூறுவர்? 
•	ஆடம் ஸ்மித்தின், வெல்த் ஆப் நேஷன்ஸ். டாவினது, ஆரிஜின் ஆப் தி ஸ்பீஷீஸ், மார்க்ஸின், டாஸ் காபிடல் ஆகிய ஒவ்வொன்றையும் எழுதி முடிக்கப் பதினேழு ஆண்டுகள் ஆயின. 
•	மாக்கியவெல்லின், பிரின்ஸ் ஆறே மாதங்களில் எழுதப் பெற்றது. 
•	பெயினின், காமன்ஸென்ஸ் மூன்று அல்லது நான்கு மாதங்களில் தயாராகியது. 
•	ஒரு நூலை எழுதுவதற்கு ஆகும் காலம் இவ்வாறு மிகமிக வேறுபடுவதற்குப் பல காரணங்கள் உண்டு. 
•	அவற்றில் ஒன்று ஆசிரியரின் தனித்தன்மை. தமது கண்டுபிடிப்புகளை முற்றும் சரிபார்த்துக் கடுமையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தித் தெளிவு பெற்ற பிறகுதான் அச்சகத்துக்கு அனுப்புவது என்ற முறையைக் கோபர்நிகஸ், நியூட்டன், ஹார்வே, டார்வின் போன்ற விஞ்ஞானிகள் பின்பற்றினர்.
•	பிரம்மாண்டமான தகவல்களைச் சேகரித்துத் தமது பொருளாதார நூல்களை இயற்றினர் ஸ்மித்தும் மார்க்ஸூம். 
•	அவற்றை மீண்டும் மீண்டும் படித்து விரிவான மாறுதல்களையும் செய்தனர். 
•	இதற்கெல்லாம் நிறைய அவகாசம் வேண்டியிருந்தது. மாக்கியவெல்லி, இளம் மால்துஸ், பெயின், தோரோ ஆகியோர் துடிதுடிப்புள்ளவர்கள்; தாமதமின்றி உலகிற்குச் சொல்லியாக வேண்டிய அவசர விஷயங்கள் தம்மிடம் இருப்பதாகக் கருதியவர்கள். 
•	விஞ்ஞானிகளை நீக்கிப் பார்த்தால் மற்றவர்கள் சம்பிரதாய விரோதிகள், தீவிரவாதிகள், வெறியர்கள், புரட்சியாளர், கிளர்ச்சியாளர் என்றுதான் மதிக்கப் பெறுவர். 
•	அவை பெரும் பாலும் நல்லபடி வரைந்த நூல்கள் அல்ல. சிறப்பான இலக்கிய நடை அவற்றில் இல்லை. எனினும் அவை பெரு வெற்றி அடைந்ததற்குக் காரணம் அவை காலப்பக்குவம் உள்ளவையாக இருந்ததுதான். 
•	அவற்றின் செய்தி, உணர்ச்சிமயமானது, கோடிக்கணக்கான மக்கள் மனத்தில் எதிரொலித்தது. 
•	சில சமயம் அவற்றால் நன்மை உண்டு; தீமையும் உண்டு. புத்தகங்கள் சக்தி வாய்ந்த சாதனங்கள்; பெரிய விளைவுகளைத் தம்முள் கொண்ட சாதனங்கள் அல்லது கருவிகள் என்பதை மெய்ப்பித்துக் காட்டுவது தான் இதன் நோக்கம்.
பியோடர் டாஸ்டாவ்ஸ்கி (1821-1881)
	1849-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 22-ம் தேதி அதிகாலையில் இருபது அரசியல் கைதிகள் சென் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஸெமனோவ் சதுக்கத்தில் நிறுவப்பட்டிருந்த தூக்கு மரங்களைச் சுற்றிலும் நிறுத்திவைக்கப் பட்டிருந்தார்கள். அவர்களில் முதல் மூன்று பேர்களின் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டித் தூக்கு மேடையில் நிறுத்திச் சுற்றிலும் துப்பாக்கி வீரர்கள் சுடுவதற்குத் தயாராக நின்றனர். அந்தப் பயங்காரக் காட்சியை ஏனைய 17 கைதிகளும் பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அடுத்தது அவர்கள் முறை அல்லவா? துப்பாக்கி வீரர்களின் அதிகாரி 'சுடுங்கள்' என்று உத்தரவிட வாய்திறந்த அதே நேரத்தில் ஓர் அதிகாரி வெள்ளை நிறக் கைக்குட்டையை வெண்கொடி போல் ஆட்டிக்கொண்டே ஓடிவந்து அந்த மரண தண்டனையை நிறுத்தினார். முதலாம் நிக்கலஸ் என்ற ரஷ்யச் சக்கரவர்த்தி அந்த மரண தண்டனையை சிறைத் தண்டனையாக மாற்றிவிட்டார். கைதிகள் அனைவையும் உடனே உடையணிச் செய்து சிறைக்கு அழைத்துச் சென்றார்கள். மரணத்தின் வாயிலிருந்து மயிரிழையில் தப்பிய அந்த இருபது அரசியல் கைதிகளில் நமது இலக்கியமேதை டாஸ்டாவ்ஸ்கியும் ஒருவர்! டாஸ்டாவ்ஸ்கி டம்பாச்சாரி, சந்தேகப் பேர்வழி, சிடுசிடுப்புக் குணமுள்ளவர், சுயநலமி, கர்வி, முன்கோபி, தன்னம்பிக்கையில்லாதவர், பிறருடன் பழகத்தெரியாதவர். ஆனால், சிறையிலிருந்தபோது அவர் மனம் பல மாற்றங்களுக்கு உள்ளாயிற்று. தவறுவது மனித இயல்பு; மனிதன் குற்றமும், கொலையும் கூட செய்வான்; காமமும், களவும் அவனுடன் கூடப் பிறந்தவை; என்றாலும் வீரமும், தயாள குணமும் உடையவன் என்ற உண்மை அவருக்குப் புலப்பட்டது. குற்றமும், குணமும், பண்பும் பாவமும், பச்சாத்தாபமும் உடையவனே மனிதன் என்றுணர்ந்தார். இத்தனைக்கும் தன் கையில் காசு இருந்தால் பிறருக்கு - பிச்சைக்காரருக்காயினும் சரி, சொந்தக்காரருக்காயினும் சரி - கொடுத்து உதவ அவர் எப்போதுமே தயங்கியதில்லை. தான் தரித்திரத்தில் உழன்ற போதும் கூட தன் தமையனின் மனைவிக்கும், ஏன், வைப்பாட்டிக்கும் கூடப் பணம் அனுப்பி வந்தார். தன்னுடைய இரண்டாவது மனைவியான அன்னாவை அவர் மிகவும் நேசித்தார், மதித்தார். உண்மையில் அன்னாவால் தான் அவர் வாழ்வின் கடைசிக்காலமாவது இன்பமாகக் கழிந்தது. 
	யாரும் செய்யாத அளவில் நாவலை ஆத்ம சோதனைக்கு ஒரு சாதனமாகப் பயன்படுத்தியவர் டாஸ்டாவ்ஸ்கி. மனித சிந்தனைகளைப் பின்பற்ற ஆத்மாவின் மூலை முடுக்குகளை, மனித ஆன்மாவிலே நல்லதும் தீயதும் போராடுவதை டாஸ்டாவ்ஸ்கியைப் போல் விவரித்த நாவலாசிரியர்கள் வேறு யாருமே இல்லை. மனிதர்களின் ஆன்மாவின் போராட்ட கதிகளை, உள்ளேயுள்ள எதிர்மாறான விசுவரூபங்களை எடுத்துக் காட்டி உள்ளத்தில் இருண்டு கிடக்கும் பல பகுதிகளில் வெளிச்சமிட்டுக் காட்டிய பெருமை இவருடையதே. 
	இவருடைய கதாபாத்திரங்கள் மிகவும் அசாதாரணமானவர்கள்; எனினும் காலத்தையும் இடத்தையும் கடந்து சிரஞ்சீவிகளாக வாழ்பவர்கள். அத்தனையும் மனோதத்துவ அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. 'வேறு எங்கும் படித்து அறிந்து கொள்ள முடியாத பல விஷயங்களை டாஸ்டாவ்ஸ்கியைப் படித்து அறிந்துகொண்டேன்' என்கிறார் மிகப்பெரிய மனோதத்துவ நிபுணரான டாக்டர் ஃபிராய்ட். 
	கரமாசோவ் சகோதாரர்கள் குற்றமும் தண்டனையும் அசடன் ஆகியவை மூன்றுமே மிகச் சிறந்தவை.
	உலக இலக்கியத்தின் தலைசிறந்த நாவல் டால்ஸ்டாயின் போரும் சமாதானமும் தான் என்று சொல்லப்பட்டபோதிலும் கூட, உலக இலக்கியத்தில் தலைசிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால், ஃபியோடர் டாஸ்டாவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றிச் சொல்லிவிடுவார்கள். 
டி.எச்.லாரன்ஸ் (1885-1930)
	'மனிதவாழ்க்கை சவக்குழியை நோக்கிச் செல்கின்றது, மரணத்திலேதான் எல்லோரும் சமரசம் அடைகின்றனர்' என்ற காலத்தால் செல்லரித்துப் போன ஒரு கோட்பாட்டினை விடுத்து, லாரன்ஸ், மரணத்திலும் பார்க்க உண்மையானதும், சக்தி வாய்ந்ததுமான ஒரு சமரசச் சக்தியைக் கற்பித்தார். 'மனிதவாழ்க்கை சவக்குழியை நோக்கி முன்னேறுகையில், ஆண் - பெண் உடல் தொடர்பில் சமரசம் ஏற்படுகின்றது' என்பதை அழுத்துகிறது அவருடைய புதிய வியாக்கியானம்.
	அவருடைய சாட்டர்லி சீமாட்டியின் காதலன் என்ற நாவலை முழுமையாகப் பிரசுரித்ததற்காக ஒரு பிரசுரகர்த்தர் மீது குற்றம் சாட்டி வழக்குத் தொடரப்பட்டதும், பல நாடுகள் அந்த நாவலைத் தடை செய்ததையும் நாம் அறிவோம். வாழ்க்கையைத்தான் உணர்ந்தபடியே, ஒளிவு மறைவின்றி எடுத்துச் சொல்வதுதான் லாரன்ஸின் தனிச் சிறப்பு. எனவே சாட்டர்லி சீமாட்டியின் காதலன் என்ற அவருடைய நாவல் ஆபாசமானதா, ஒழுக்கக் கேட்டைப் பரப்பக்கூடியதா என்பதெல்லாம் அவருடைய கண்ணோட்டத்தைப் பொருத்தது. 
	அவர் ஓய்வின்றி வெளிநாடுகளில் சுற்றுப்பிரயாணம் செய்து கொண்டும், உலகின் பலநிற, பலவித மக்களைக் கண்டு கலந்துறவாடிக் கொண்டுமிருந்தார். பலவித பொழுதுபோக்குகளைக் கொண்டவராகவும். யாருக்கும் விட்டுக்கொடுக்காத தமது சுபாவத்தால் பலவித தர்மசங்கடமான வாக்குவாதங்களில் ஈடுபட்டவராகவுமிருந்த அந்த மெலிந்த, நெட்டையான, குச்சுத்தாடி மனிதரால் அத்தனை நூல்களையும் அவ்வளவு குறுகிய காலத்தில் எழுதி முடிக்க முடிந்ததென்றால், அதற்கு அவருடைய உணர்ச்சிகளின் கொதிநிலையே காரணம்.
	லாரன்ஸ் ஒரு சிறந்த நாவலாசிரியர், கவிஞர், நாடகாசிரியர், கட்டுரையாளர், விமர்சகர், ஓவியர், ஒரு தீர்க்க திருஷ்டியுள்ள புதுமைப்பித்தர், புரட்சிகரமான சிந்தனையாளர்.
	இவைகளுள் காரசாரமான சர்ச்சைகளுக்கும், கண்டனங்களுக்கும், பாராட்டுகளுக்கும், தடைகளுக்கும் இலக்கானது சாட்டர்லி சீமாட்டியின் காதலன் என்ற நாவல். உண்மையில் பார்க்கப் போனால் இந்த நாவலில் பெருமளவுக்கு லாரன்ஸின் சொந்த வாழ்க்கையே பிரதிபலிக்கிறது. சுரங்கத் தொழிலாளியாயிருந்த காலத்திலேயே இன்னல்களுக்கு அடிபணிய அடம்பிடித்து மறுத்தவர் லாரன்ஸ். உறுதியும், தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு மனிதனால் சாதிக்க முடியாதது உலகில் எதுவுமே கிடையாது என்ற கொள்கையுடையவர்.
	சாட்டர்லி சீமாட்டியின் காதலன் என்ற நாவலில் ஒரு விசித்தரமான கதாநாயகனைப் படைத்திருக்கிறார். இளம் பெண் ஒருத்தியை மணம் செய்த சில நாட்களுக்குள். யுத்தத்தில் அடைந்த பெரிய காயங்களால் கணவனின் இடுப்பிற்குக் கீர் உள்ள பாகங்கள் உணர்ச்சியிழந்து ஸ்தம்பித்துவிடுகின்றன. எனவே, தாம்பத்தியக் கடமையைச் செய்யும் சக்தியை இழந்து விடுகின்றான். அதேசமயம் தன் மனைவியின் தேவைகளையும் உடலுணர்ச்சிகளையும், மன எழுச்சிகளையும் உணருகிறான், அவளோ தன் இதயவேதனைகள் அனைத்தையும் மெளனமாகச் சகித்து வருகிறாள். 
	மனைவியின் துன்பங்களை உணர்ந்த அந்த ஆண்மையிழந்த கணவன், அதைத் துடைக்க ஒரு திட்டம் வகுக்கிறான். பேசும் பொற்சித்திரமாக ஒரு குழந்தைத் தெய்வம் மட்டும் அந்த வீட்டில் தவழுமானால் அவளுடைய கவலைகள் ஓரளவு மாறக்கூடும். ஆனால் அதை உருவாக்கும் பணியில் அவனால் ஒரு கருவியாக இருக்க முடியாதே. தனக்கு விருப்பமான ஒருவனுடன் கூடி அவள் ஒரு குழந்தையைப் பிரகடனப்படுத்தத் தான் தயார் என்பதை அவளுக்கு உறுதியாக உணர்த்துகிறான். தன் கணவன் வேட்டைகளுக்குச் செல்லும்போது அவனுக்கு உதவியாளனாகச் செல்பவன்மீது அவளுக்குக் காதல் அரும்புகிறது. இந்தக் காதலால் பல சிக்கல்கள் முளைக்கின்றன. அவளுக்குப் பிறக்கும் குழந்தையைத் தன்னுடையதாக்கிக் கொள்ள காதலனும் விரும்புகிறான், இதனால் விவாக பந்தமே உடைந்துவிடுகிறது.
	திரைபோட்டு மறைக்காமல் இவ்வளவு பச்சையாகச் சித்தரித்திருப்பதால் லாரன்ஸைக் காமப்பித்துப் பிடித்தவர் என்று எடை போட்டால் அதைப் போன்ற அறியாமை எதுவுமே இருக்க முடியாது. ஏனென்றால், காலமெல்லாம் அப்பழுக்கற்ற தூய வாழ்க்கை வாழ்ந்தவர் லாரன்ஸ் என்பதை அவருடைய பரமவிரோதிகள் ஒப்புக் கொள்வார்கள். 
	எனவேதான், 'இரத்தம் எதை உணருகிறதோ, நம்புகிறதோ, கூறுகிறதோ அதுவே எப்பொழுதும் உண்மை' என்று 1912-ம் ஆண்டிலேயே எழுதினார். 
எமிலி சோலா (1840-1902)
	இவ்வுலகைவிட்டு என்றும் மறையாத சிரஞ்சீவி நாவலாசிரியர் பட்டியல் ஒன்றைத் தயாரித்தால், அதில் கட்டாயம் எமிலி சோலாவுக்கு இடம் இருந்தே தீரும். நாவலுக்கு இலக்கிய அந்தஸ்தைத் தேடித்தந்தவர்களில் அவரும் ஒருவர்.
	சோலா இவ்வுலகில் நாலு வகைகளில் தனது பெயரை நிலை நாட்டியிருக்கிறார்.
	முதலில், அவர் எதார்த்த வாத இலக்கியத்தில் நேச்சுரலிசம் (Naturalism) என்னும் இயற்கைவாதக் கொள்கையை அழுத்தமாக நிலை நாட்டியவர்.
	இரண்டாவதாக, உலகின் வாசிக்கத்தக்க நல்ல நாவலாசிரியர்களில் ஒருவராக அவர் விளங்குகிறார்.
	மூன்றாவதாக, அவர் பிரெஞ்சுக் கலை உலகின் சிறந்த விமர்சகராக ஆற்றிய சேவையைக் குறிப்பிடலாம்.
	நான்காவதாக அபலையான டிரெபஸ் என்ற யூத இராணுவத்தளகர்த்தருக்கு நீதி பெறுவதற்காக அவர் நடத்திய சரித்திரப் பிரசித்திவாய்ந்த போராட்டம்.
	இந்த நான்கு காரணங்களாலும் அவர் புகழ் காலக் கடலில் பாறைபோல் தலைதூக்கி நிற்கிறது. அலைகள் பொங்கி வருகையில் அது சிறிது மறைகிறது. ஆனால் மீண்டும் எப்படியோ கண்ணைக் கவர்ந்து விடுகிறது. 
	சோலா தெரேசா ஏக்கா (1867) நாவலோடுதான் இலக்கியக் களத்திலே பிரவேசித்தார். இது கமிலஸ் என்ற நோஞ்சாற் பேர் வழிக்கு வாய்த்த தெரேசா என்னும் மனைவியின் கதை. இக்கதையிலே பிளாபெயரின் மேடம் பவாரி யின் மணமும், டாஸ்டாவ்ஸ்கியின் குற்றமும் தண்டனையும் என்ற நூலின் மணமும் வீசுகின்றன. தடுக்கப்பட்ட கள்ளக்காதலைப் பொருத்த வரையில் தெரேசா, மேடம்பவாரியைப்போல் காட்சியளிக்கிறாள். ஆனால் கட்டிய கணவனைப் படகிலே வைத்துக் கொன்றுவிட்டு, இக்கொலையை எதற்காகச் செய்தாளோ அந்த இலட்சியம் சிறிதுகூட நிறைவேறாமல், குற்றத்தின் பயங்கர நிழல் பின்தொடர, குற்றத்திற்கேற்ற ஒரு தண்டனையும்" நூலில் வரும் ராஷ்கோல் நிக்கோவுக்கு அவளை உவமானமாகச் சொல்லலாம். பிரெஞ்சு மத்திய வகுப்பின் படப்பிடிப்பாக விளங்கும் இக்கதை மனதைப் பிணிக்கும் சக்திவாய்ந்த நூலென்று பல விமர்சகர்களால் பாராட்டப்பட்டுள்ளது. உள்ளத்தைக் கவ்வும் இந்நாவல் பிரெஞ்சு நாடக அரங்கத்தையும் அலங்கரித்தது.
	சோலா யதார்த்தவாதிகளின் யதார்த்த வாதத்துக்கு ஒருவித ஆழத்தைத் தந்தார். இந்த ஆழம்தான் இயற்கை வாதம். மனிதன் நாலுகால் மிருகம். முன்னங்கால்களை உயர்த்திக் கொண்டு அவற்றுக்குக் கைகள் என்று பெயரிட்டுவிட்டதால் இந்நிலை மாறிவிடாது. மிருகத்துக்கும், மனிதனுக்கும் இடையிலே காணப்படும் ஒருமைப்பாடுகள் வெளியே மறைந்திருந்தாலும் உள்ளே பூதாகாரமாக நடம்புரிந்து கொண்டேயிருக்கின்றன. அவையே அவனது நடவடிக்கைகளை நிர்ணயிக்கின்றன. இதை மறைத்துப் பேசும் இலட்சியவாதங்களை உடைத்தெறிந்த சோலா, மனித மிருகத்தைப் பயன்படுத்தினார். சுற்றுப் புறமும் பரம்பரையும் மனிதனின் செயல்களை உருவாக்குகின்றன என்பது சோலாவின் முடிந்த அபிப்பிராயம். இந்தக் கருத்துகளே அவர் யதார்த்த வாதத்துக்கு அளித்த ஆழம். இவையே அவரது இயற்கைவாதத்தின் மூலைக்கற்களாக விளங்குகின்றன.
சோலா தமது நாவல்களிலே இந்த ஆழத்தை எப்படி எய்தினார்? மனிதனைச் சுற்றாடலின் பிராணியெனக் கருதிய அவர் சுற்றாடலைத் திட்டவட்டமாகவும் விரிவாகவும் உண்மைக்கு மாறுபடாமலும் சித்திரித்தார். இது இலகுவான ஒரு விஷயமன்று. கதை வளரும் பிரதேசம், கதாநாயகன் செய்யும் தொழில், அவனுடன் சம்பந்தப்படும் இதர பாத்திரங்களின் பின்னணி - இவற்றை எல்லாம் தத்ரூபமாகச் சித்தரிப்பதற்குக் கதாசிரியன் அவற்றைப் பற்றித் தெளிவான அறிவு பெற்றிருக்க வேண்டும். தான் சித்திரிக்க எண்ணிய விஷயத்தைப்பற்றி இத்தகைய தெளிந்த அறிவைப் பெறுவதற்காக அவர் பல்வேறு இடங்களுக்கு விஜயஞ் செய்தார். அவ் விஷயங்களை அறிந்தவர்களுடன் உரையாடினார். பத்திரிகையில் வரும் விவரக்கட்டுரைகளைக் கத்தரித்தெடுத்தார். செய்திகளில் கூடப் பொருத்தமானவற்றை வெட்டிச் சேகரித்தார். இப்படி அவர் சேகரித்த விவரங்களும், எழுதி எடுத்த குறிப்புகளும் மலைபோல் குவிந்திருக்க அதற்கு மத்தியில் இருந்து சோலா எழுதினார். ஜெர்மினல் என்ற சுரங்கத்தொழிலாளர் கதையை எழுதுவதற்காக அவர் ஒரு தொழிற்சங்வாதியின் துணையால் தொழிலாளர் மத்தியில் சென்று அவர்களது நடை உடை பாவனைகளையும், பேச்சு வழக்குகளையும், விருப்பு வெறுப்புகளையும், அவர்களின் வேலை நிலைமைகளையும், சுற்றாடலையும் நேரிலே பார்த்தும் கேட்டும் உணர்ந்தார். இது அவர் ஜெர்மினல் சம்பந்தமாக மட்டும் அனுஷ்டித்த ஒரு கொள்கையல்ல. அவருடைய எல்லா நாவல்கள் சம்பந்தமாகவும் இவ்வித் அனுபவத்தைப் போதிய அளவு அடைந்த பின்னர்தான் அவர் அவற்றை எழுத ஆரம்பித்தார். 
	சோலா இதைக் கண்டு அஞ்சவில்லை. "நான் எனக்காக வாதாட வேண்டியதில்லை, எனது புத்தகங்கள் தமக்காக வாதாடிக் கொள்ளும்" என்று கூறிப் பேசாமல் இருந்தார். எதிரிகளின் நகைப்பு அதிகரித்தது. சோலா அதற்களித்த பதில் "முதலில் அவர்கள் எங்களைப்பார்த்து நகைப்பதில் தான் ஆரம்பிப்பார்கள். ஆனால் கடைசியில் எங்களைப் பார்த்துக் 'காப்பி' அடிப்பதில் முடிவடைவார்கள், என்பதாகும். ராணுவத் தளபதி அல்பி ரெட்டி டிரெபஸ் என்பவருக்கு நீதிகோரி நடத்திய போராட்டம்தான் அவரை உலகப் பிரசித்திபெற்ற மனிதாபிமானியாக்கியது. இப்போராட்டத்தைக் கேள்விப்பட்ட அவரது நண்பர் டர்கினீவ் "அவர் பெருமை பல அங்குலங்களால் உயர்ந்துவிட்டது" என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.
	1902-ம் ஆண்டு, வீட்டிலிருந்த காஸ் விளக்கினால் ஏற்பட்ட விபத்தில் திடீரென மரணமானார் சோலா.
	ஆனால் 1906-ம் சோலாவின் நாமம் மீண்டும் பிரான்ஸில் வான்முட்ட ஒலிக்க ஆரம்பித்தது. டிரெபஸ் விடுதலையானான். மனித உரிமைக்குப் போராடியவர்களிலே சோலாவுக்கு நிகரானவர் எவரும் இல்லை என்று சொல்லி மனித உரிமைச்சங்கம் அவருக்குப் பொற்பதக்கம் ஒன்றை அளித்துக் கெளரவித்தது. 1908-ம் ஆண்டில் புதை குழியிலிருந்து சோலாவின் சடலம் வெளியே எடுக்கப்பட்டது. வீரர் கல்லறை என்று கருதப்படும் 'பாந்திய'னில் (Pantheon) அவர் இரண்டாம் முறையாகப் புதைக்கப்பட்டார். இதுவே பிரான்ஸ் எவருக்கும் அளிக்கக்கூடிய மிகப்பெரிய கெளரவமாகும். அவர் பிரான்சின் பெரியார் வரிசையிலே இடம் பெற்றுவிட்டார். சோலாவின் கல்லறையில் பேசிய அனடோல் பிரான்ஸ் "சோலா மனிதகுலத்தின் மனச்சாட்சியில் ஒரு கணம்" என்று உளமுருகிக் கூறினார். சோலாவே முதன் முதலாகத் தொழிற் சங்கப் போராட்டங்களையும் தொழிலாளர் வாழ்க்கையயும் விவரமாகச் சித்தரித்தவர். அதன் மூலம் அவரது இயற்கைவாதம் பின்னால் வளர விருந்த பாட்டாளி இலக்கியத்துக்கும் வழிகாட்டியாக அமைந்தது.
	பிளாபெயர் ஒரு சமயம் சோலாவை "கால்கள் அழுக்கடைந்த விஸ்வரூபம்; ஆனால் என்ன? விஸ்வரூபம் தானே!" என்று வர்ணித்தார். 
	புத்தகங்களில் கெட்டித்து வைத்திருக்கும் மகத்தான வெடிச் சக்திகளை யதேச்சாதிகாரியைப் போல வேறு எவரும் கண்டு உணரவில்லை. ஜனநாயக நாடுகளும் இதே விஷயத்தைச் சில சமயம் வன்மையாக உணர நேரிடுகிறது. அமெரிக்க ராஜாங்க இலாகாவானது, அயல்நாடுகளில் நடத்தும் செய்தித் துறைப் புத்தகாலயங்களில் விரிவான புத்தகத் தணிக்கை பல இடங்களில் நடப்பதாகவும் பல இடங்களில் புத்தகங்கள் கொளுத்தப்பட்டன என்றும் சில ஆண்டுகளுக்கு முன் செய்தி கிடைத்தது. இதைக் கேட்டு அமெரிக்க மக்களும் அவர்களுடைய நண்பர்களும் பரவலாக அதிர்ச்சியடைந்தனர். அதை அவர்களால் நம்பமுடியவில்லை. அதன் விளைவு மிகக் கடுமையாகிவிடவே ஜனாதிபதி ஐஸன்ஹாவரே குறுக்கிட்டுத் தமது சர்க்காரின் நற்பெயரைக் காப்பதற்கு முயல் வேண்டியதாயிற்று. 'புத்தகம் எரிப்போருடன் சேராதீர்கள்' என்ற புகழ்பெற்ற தமது உரையை அவர் நிகழ்த்தினார்.
	மறுமலர்ச்சிக் காலம் முதல், இருபதாம் நூற்றாண்டின் மையம் வரை எந்தப் புத்தகங்கள் மிகுந்த செல்வாக்குள்ளவையாக இருந்து வந்திருக்கின்றன. புத்தகத்தைக் 'காலம் உருவாக்கியதா? காலத்தைப் புத்தகம் உருவாக்கியதா?' அதாவது, 'ஒரு குறிப்பிட்ட புத்தகம், தான் வெளிவந்த காலவிசேஷத்தால் செல்வாக்கடைந்ததா? அவறு ஒரு சகாப்தத்திலும் முதல் நூல் காலத்துப் பொருள் படைத்ததாக அது இருந்திருக்கக் கூடமா? வேறு ஏதாவது ஒரு தேதியில் அதை இயற்றி இருக்க முடியுமா?' அநேகமாக ஒவ்வொரு நூல் விஷயத்திலும் காலமே அதைத் தோற்றுவித்தது என்ற தீர்மானத்திற்கு வராமல் இருக்க முடியாது. வரலாற்றின் வேறொரு சகாப்தத்தில் அந்த நூல் தோன்றாமல் இருந்திருக்கலாம். அல்லது தோன்றியிருந்தாலும் மக்கள் கவனத்தை ஈர்க்காமல் இருந்திருக்கலாம். 
•	நிறைய உதாரணங்கள் நினைவிற்கு வரும். தான் மிகவும் நேசித்த இத்தாலியை அந்நிய ஆக்ரமிப்பினின்றும் விடுவிப்பது என்ற திட்டவட்டமான நோக்கத்துடன் மாக்கிவல்லியின், 'மன்னன் (The Prince)' எழுதப் பெற்றது. 
•	'சமுதாயங்களின் செல்வம்' என்ற நூலை ஆடம் ஸ்மித், எழுதிக் கொண்டிருந்தபோது தமது கடலாடி வர்த்தகத்தையும் தொழில் துறையையும் பெரிய அளவில் விஸ்தரிப்பதற்கு இங்கிலாந்து தயாராக இருந்தது. 
•	ஏற்கனவே வெடித்தெழும் தறுவாயில் இருந்த அமெரிக்கப் புரட்சி துவங்குவதற்குத் தாமஸ் பெயினின், 'பகுத்தறிவு (Common Sense)' காரணமாக இருந்தது. 
•	அதே மாதிரி உள்நாட்டு யுத்தம் துவங்குவதற்கு யாரியட் பீச்சர்ஸ் ஸ்டொவின், அங்கிள் டாம்ஸ் காபின் பயன்பட்டது. 
•	ஐரோப்பியத் தொழில் துறையில், முக்கியமாக இங்கிலாந்தில, தொழில் பட்டறை முறையில் பத்தொன்பதாவது நூற்றாண்டின் மத்தியில் பயங்கரமான நிலவரம் இருந்திராவிடில், டாஸ் காபிடலை இயற்றுவதற்கு விஷயம் கார்ல் மார்க்ஸூக்குக் கிடைத்திராது. 
•	ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூறுக்குப் பிறகு உலக வல்லரசுகளிடையே கடற்படைப் போட்டி துவங்கியது. 
•	அட்மிரல் மாஹன் இயற்றிய, வரலாற்றின் மீது கடலாதிக்கத்தின் செல்வாக்கு (Influence of Sea power on History) என்ற புத்தகந்தான் இதை ஊக்குவித்தது. 
•	மெதுவாக எரிந்து வெடியைக் கிளப்பும் திரி போல, சில புத்தகங்கள், வெளியான சில ஆண்டுகளுக்குப் பிறகு முழுச் செல்வாக்குடன் விளங்கியது உண்டு.
•	ஆடம் ஸ்மித், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் புத்தகங்கள் இதற்கு உதாரணங்கள்.
•	தமது நூல்களின் முக்கியத்துவத்தை உலகம் உணர ஆரம்பித்தபோது அவர்கள் உயிருடன் இருக்கவில்லை. 
•	இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் மஹாத்மா காந்தி, சட்டமறுப்பை நடத்துவதற்கு ஐம்பது ஆண்டுகள் முன்னரே அந்தச் சித்தாந்தத்திற்கு மூல கர்த்தாவான தோரோ காலமாகிவிட்டார். 
•	பெரு நூல்கள் எக்காலத்திலும் ஒரு சமுதாயத்தில் கிளர்ச்சியைக் கிளப்பி விட்டதில்லை என்கிறார் வால்டேர்.
•	உணர்வு மிகுதியுடன் வரையப்பெரும் சிறு நூல்கள் தாம் அவ்வாறு பயன்படுபவை என்பது வால்டேரின் கருத்து. 
•	பெயின், தோரோ ஆகியவர் நூல்கள் விஷயத்தில் இது முற்றம் பொருந்தும்; மாக்கிண்டர், ஐன்ஸ்டீன் நூல்கள் விஷயத்தில் பொருந்தாது. 
நிகோலோ மாக்கியவெல்லி மன்னன்
	மன்னர்களுக்கு வழிகாட்டும் நூல் என்று 'மன்னன்' மதிக்கப் பெறுகிறது. 'கொடுங்கோலர்களின் வழிமுறை நூல்' என்றும் அதைச் சிலர் வருணிக்கிறார்கள். அதிகாரத்தை எப்படிச் சம்பாதித்துக் காப்பாற்றிக் கொள்வது என்பதை அது போதிக்கிறது. ஆனால் அந்த அதிகாரமானது மன்னனின் பெருமைக்காக ஆனால் அந்த அதிகாரமானது மன்னனின் பெருமைக்காக அல்லாமல் மக்களின் நன்மையைக் கோருவதாக இருத்தல் வேண்டும்.
	'மக்கள் வாழ்கின்ற வகைக்கும் அவர்கள் வாழவேண்டிய வகைக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. கஞ்சன் என்ற பெயர் வாய்க்குமே என்று ஒரு மன்னன் கவலைப்படலாகாது.
	கலகத்தை அடக்குகிறவன், மிகுந்த தாராளப் போக்குடன் விஷயங்கள் தம் வழியே செல்லட்டும் என்று அனுமதிப்பவனைவிட இறுதியில் அதிகமான கருணை படைத்தவன் என்று கருதப்பெறுவான். தாராளப் போக்கில் செல்வதன் விளைவாக இரத்தக் களறியும் குற்றப் பெருக்கும் மிஞ்சும். மன்னனின் கடுமை, தனி நபர்களுக்குத் தீமை இழைக்கலாம். ஆனால் தாராளப் போக்கின் விளைவுகள், ராஜ்யம் முழுவதற்குமே கெடுதலை உண்டுபண்ணும்.' ஆனால் அன்பும் அச்சமும் ஒன்றாகச் சேர்ந்திருப்பது சாத்தியமல்ல. 
	மன்னர்கள் சொன்ன சொல் காத்தல் என்பதைப்பற்றிய பதினெட்டாவது அத்தியாயத்தைப் போல வேறு எதுவும் அவ்வளவு பொதுப்படையான கண்டனத்திற்கு உள்ளானதில்லை. 'மாக்கியவெல்லி வரி' என்று கேவலமாகப் பேசப்படுவதற்கான மூல காரணங்களை நூலின் பிற பகுதிகளை விட இதில்தான் அதிகமாகக் காணலாம். சொன்ன சொல் காத்தல் புகழுக்கு உரியதே என்று அவர் ஒப்புக் கொள்கிறார். ஆனால் அரசியல் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மோசடி, வஞ்சம், பொய்யுரை முதலியன அவசியமானவை, மன்னிக்கப் பெற வேண்டியவை என்று கூறுகிறார். 
•	எல்லாச் சகாப்தங்களிலும் சர்வாதிகாரிகளும் கொடுங்கோலர்களும் இந்த நூலில் கண்டிருக்கும் புத்திமதியினால் பெரிதும் பயனடைந்திருக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. 
•	இதை ஆர்வத்துடன் படித்தவர்களின் ஜாபிதா மிகவும் கவர்ச்சிகரமானது. ஐந்தாவது சார்லஸ் சக்கரவர்த்தி, காதெரின் டீ மெடிசி ஆகியோர் இதை வியந்து போற்றினர். 
•	இதன் கையெழுத்துப் பிரதி ஒன்றை ஆவிவர் கிராம்வெல் சம்பாதித்து இங்கிலாந்தில் தன் காமன்வெல்த் சர்க்காரை அதில் கூறியுள்ள கொள்கைகளைத் தழுவி நடத்தலானான். 
•	பிரான்ஸின் மன்னர்களான மூன்றாவது ஹென்றி, நான்காவது ஹென்றி ஆகிய இருவரும் கொலையுண்டபோது அவர்களிடம் இதன் பிரதிகள் காணப்பெற்றன.
•	பிரஷ்யாவின் கொள்கையை உருப்படுத்துவதில் மகா பிரெடரிக்கிற்கு இது பெரிதும் பயன்பட்டது. 
•	பதினாலாவது லூயி இந்தப் புத்தகத்தைக் கையில் வைத்துக் கொண்டுதான் படுக்கைக்குச் செல்வது வழக்கம். 
•	வாட்டர்லூ போர்க்களத்தில் நெப்போலியன் போனபார்ட்டின் கோச்சு வண்டியில் விளக்கத்துடன் கூடிய ஒரு பிரதி இருந்தது. 
•	சர்க்காரைப்பற்றிய மூன்றாவது நெப்போலியனின் கருத்துக்கள் முக்கியமாக இதிலிருந்து வெளிப்போந்தவைதாம். 
•	பிஸ்மார்க், பக்தி சிரத்தையுடன் கூட மாக்கியவெல்லியின் கொடிய சீடராக இருந்தார். 
தாமஸ் பெயின் பகுத்தறிவு:
	37வது வயதில் தாமஸ் பெயின் அமெரிக்கா வந்தடைந்தபோது. அவருடைய எதிர்காலம் மிகப் பிரகாசமானதாக இருக்கும் என்று மதிபடைத்த எவனும் கூறியிருக்க முடியாது. அதுவரை அவர் தொடர்ச்சியாகப் பல தோல்விகளைக் கண்டு நிராசையில் ஆழ்ந்திருந்தார். புது உலகிற்கு வந்த அவர், சில ஆண்டுகளில் ஆங்கில மொழியில் மகத்தான் பிரசுரங்களை வெளியிட்டு, அமெரிக்க வரலாற்றிலேயே மிக மிகச் சர்ச்சைக் குரியவராக மாறிவிடுவார் என எவரும் எதிர்பார்த்திருக்க முடியாது. அவர் பெரிய அரசியல் கிளர்ச்சிக்காரர், புரட்சியாளர், பிரிட்டனின் அமெரிக்கக் காலனிகள், பிரிட்டன், மேற்கு ஐரோப்பா ஆகியவற்றில் அவரிடம் அச்சமும் துவேஷமும் வளருமென்றோ அல்லது அவரைப் போற்றிப் புகழ் பாடுவர் என்றோ முதலில் எவரும் நினைத்திருக்க முடியாது.
	சொற்ப காலம் இவ்வாறு பள்ளியில் படித்த பின் தம் தந்தையின் தொழிலாகிய கச்சுகளின் தயாரிப்பை அவர் கற்றுக் கொண்டார். இப்பணி மூன்று ஆண்டுக் காலம் நீடித்தது. இவ்வேலையில் அலுப்புத் தட்டியதுடன் கடலின் கவர்ச்சி நீடித்தது. இவ்வேலையில் அலுப்புத் தட்டியதுடன் கடலின் கவர்ச்சி அவரை ஈர்த்தது. வீட்டை விட்டு வெளியேறி, 'டெரிபிள்' என்ற ஒரு கப்பலில் பணி புரியலானார். 'மரணம்' என்ற பயங்கரமான பெயரை வைத்துக் கொண்டிருந்தார், அந்தக் கப்பலின் காப்டன் தந்தை அவரைக் கண்டுபிடித்து, மீட்டு 19 வயது வரை பழைய பணியிலே ஈடுபடுத்தினார்.
	லண்டனில் தங்கியிருந்த காலத்தில் அதிருஷ்ட வசமாக பெஞ்சமீன் பிராங்கிளினைப் பெயின் சந்தித்தார். காலனிகளின் கமிஷனராக நியமனம் பெற்று, பிராங்கிளின் அங்கு வந்திருந்தார் பெயினின் மேதையைக் கண்டு வியந்து, அமெரிக்காவுக்குச் சென்றால் அங்கு அதிருஷ்டம் கிட்டலாம் என்று சொல்லி, அதற்கு அவரை பிராங்கிளின் இசைய வைத்தார். ஃபிலடெல்பியாவில் இருந்த பிராங்கிளினின் மருமகன், ரிச்சர்டு பாக் என்பவருக்கு ஓர் அறிமுகக் கடிதத்துடன் பெயின் புறப்பட்டுச் சென்றார். 'மதிப்புக்குரிய அபார சாமர்த்தியமுள்ள இளைஞர்' என்ற பிராங்கிளின் தமது கடிதத்தில் குறிப்பிட்டு, அவரை ஒரு குமாஸ்தாவாகவோ, பள்ளிக்கூடத்தில் ட்யூட்டராகவோ, துணை சர்வேயராகவோ நியமிக்கலாமெனச் சிபாரிசு செய்திருந்தார். 1774 டிசம்பரில் இந்த ஒரே ஓர் ஆஸ்தியுடன்கூட ஃபிலடெல்பியாவில் பெயின் அடியெடுத்து வைத்தார்.
	பெயினிடம் மதிப்பிட முடியாத வேறு வகை ஆஸ்தியொன்று இருந்தது. அது அவரது விரிவான அநுபவம். ஃபிலடெல்பியாவுக்கு வந்தவுடன் புதிதாக நிறுவப் பெற்ற 'பென்ஸில்வேனியா மாகஸீன்' என்ற சஞ்சிகையின் ஆசிரியப் பதவி பெயினுக்குக் கிடைத்தது. 
	பகுத்தறிவு (Common Sense) 1776 ஜனவரி 10ஆம் தேதி வெளியாயிற்று. ஓர் ஆங்கிலேயரால் எழுதப் பெற்றது என்ற அறிவிப்புடன் 47 பக்கங்கள், 2 ஷில்லிங் விலையுடன் கூடிய பிரசுரமாக அது வெளிவந்தது. 3 மாதங்களில் 1,20,000 பிரதிகள் செலவாயின. மொத்தம் இப்பிரசுரம் 5 லட்சம் பிரதிகள்வரை செலவானதாக மதிப்பிட்டிருக்கிறார்கள் அப்போதைக்கும் இப்போதைக்கும் உள்ள ஜனத்தொகை உயர்வைக் கருத்திற் கொண்டு பார்த்தால், இப்போது 3 கோடி பிரதிகள் விற்பதற்கு அதைச் சமமாகக் கொள்ளலாம். 13 காலனிகளிலும் எழுதப் படிக்கத் தெரிந்த அனைவரும் அதைப் படித்தார்கள் எனத் தெரிகிறது. இவ்வளவு ஏராளமாக விற்பனை ஆகியும் ஆசிரியர் என்ற வகையில் தமக்கு உரிமைப் பணம் சிறிதும் தேவையில்லை என்று அவர் கூறிவிட்டார்.
	மக்கள் மனத்தை உடனடியாக ஈர்த்த நூல் என்று 'பகுத்தறிவு'டன் ஒப்பிடக்கூடிய வேறு எந்த நாலும் இலக்கியத்தின் வரலாற்றில் வந்ததே இல்லை. சமரச உணர்வோ தயக்கமோ இன்றி, சுதந்தரத்துக்காக, அமெரிக்காவில் குடியேறி மக்கள் போரிட வேண்டும் என்று அது சங்கநாதம் செய்தது. பிரிட்டனுடனும் மூன்றாவது ஜார்ஜ் மன்னருடனும் ஏற்பட்டிருந்த தகராறுக்குப் புரட்சி ஒன்றேதான் பரிகாரம் என்று எடுத்துக் காட்டினார். 
	பாரம்பரியமாக வரும் முடியரசு முறைமீது பெயின் கடுமையான சொல்லம்புகளைத் தொடுத்திருக்கிறார். அதை விசேஷ அருவருப்புடன் கண்டனம் செய்திருக்கிறார். முடியரசுத் தத்துவத்தைப் பொதுவாகவும், ஆங்கில முடியரசை விசெஷமாகவும் அவர் தாக்கினார். 
	"போர் செய்வதும் பதவிகளை வழங்குவதும் தவிர இங்கிலாந்தில் மன்னனுக்கு வேறு ஜோலி இல்லை. பச்சையாகச் சொல்லுமிடத்துத் தேசத்தை வறுமையில் ஆழ்த்தி மக்களை ஒருவரோடொருவர் மல்லுக்கு நிற்க வைக்கிறான் மன்னன். வருஷம் எட்டு லக்ஷம் பவுனும் கொடுத்து, போதாக் குறைக்கு அவனுக்குப் பூசனையும் போட வேண்டியிருக்கிறது. இவ்வளவு லட்சணமுள்ள பணிக்கு இதுவரை மகுடதாரிகளாக விளங்கியுள்ள போக்கிரிகளையெல்லாம்விட உண்மையுடைய ஒரு நபர் சமூகத்திடமும் கடவுளின் முன்னிலையிலும் அதிக மதிப்புள்ளவனாகத் திகழ்கிறான்." 
	1802-இல் அமெரிக்காவுக்குப் பெயின் திரும்பியபோது புரட்சி வீரருக்குரிய வரவேற்பு அவருக்குக் கிடைக்கவில்லை. 
	1903-ஆம் ஆண்டுவரை நியூயார்க்கில் ஒரு ரேடியோ நிலையத்தில் பெயினைப் பற்றிப் பேசக் கூடாதெனத் தடை விதித்திருந்தார்கள். மாபெரும் அமெரிக்கர்களின் கீர்த்தி மண்டபம் நிறுவப் பெற்றது 1900-ஆம் வருஷத்தில். ஆனால் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகே டாம்பெயின் அதில் இடம் பெற்றார். 'அமெரிக்கச் சுதந்திரத்தின் ஸ்தாபகர்' என்ற விருது வேறு எவரையும்விட அவருக்குத்தான் சரியாகப் பொருந்தும். அவர் தாம் 'அமெரிக்க ஐக்கிய நாடுகள்' என்ற சொற்றொடரை உபயோகித்தார்.
	தம் மனைவிக்கு எழுதிய கடிதத்தில் ஜான் ஆடம்ஸ் கூறுகிறார்: "'பகுத்தறிவு' என்ற தலைப்புள்ள துண்டுப் பிரசுரத்தை உனக்கு நான் அனுப்பியுள்ளேன். அது நிலை நிறுத்தும் சித்தாந்தங்கள், கொடுமையையும் கொடுங்கோலாட்சியின் அக்கிரமங்களையும் விரைவில் எதிர்த்தாக வேண்டும் என்ற ஒரு பொது நம்பிக்கையை உண்டு பண்ணக் கூடியவை."
ஹென்றி டேவிட் தோரோ
	ஹார்வோர்டு சர்வகலா சாலையில் அவர் கழித்த நான்கு ஆண்டுகள் எவ்வகையிலும் குறிப்பிடத் தக்கவை அல்ல. ஆனால் ஊருக்கு ஒரு வழி என்றால் தனக்கு மட்டும் வேறு வழி என்று நினைக்கும் போக்கினர் ஆகலாம் என்று கருதுவதற்கான ஓர் அறிகுறி இருந்தது. பிரார்த்தனைக்குக் கறுப்பு நிற உடுப்பில் செல்ல வேண்டும் என்பது விதி. அப்படி விதி இருந்தது என்ற காரணத்தைச் சுட்டிக்காட்டிப் பச்சை நிற மேலங்கியுடன் அவர் சென்றார். 
	கன்கார்டு நகரில் பசுமையான வயல்களுக்கும் காடுகளுக்கும் மகிழ்ச்சியுடன் திரும்பினார் தோரோ. பின்னர் சில குறுகிய கால வெளி விஜயசங்கள் தவிர வயல் வெளிகளை விட்டு அவர் நகரவே இல்லை. 
	ரால்ப் வால்டோ எமர்ஸனின் வீட்டில் இரண்டு தடவை சிறிது காலம் தோரோ வாழ்ந்ததுண்டு. அங்கே டிரான்ஸெண்டென்டல் கிளப் (பரமார்த்திகக் குழு) என்ற அமைப்பின் நண்பர்களுடன் பரிச்சயம் ஏற்பட்டது. அவர்கள் பிரசித்திபெற்ற நியூ இங்கிலாந்து எழுத்தாளரும் சிந்தனையாளரும் ஆவர். அவர்களுடைய சர்ச்சைகளில் அவர் சுறுசுறுப்பாகப் பங்கு கொண்டார். அவரது மதிநுட்பம் வளர்ச்சி காண்பதற்கு எமர்ஸனின் செல்வாக்குப் பெரிதும் காரணமாய் இருந்தது. சட்ட மறுப்பு என்ற நூலில் இடம் பெற்றுள்ள சில கருத்துக்கள் அவருக்கு எமர்ஸன் மூலந்தான் கிடைத்தன.
	வயல்வெளிகளில் மனம் போன போக்கில் சுற்றித் திரிவது, இயற்கையை நேரிடையாச் சுவைப்பது, தியானம், படிப்பு, எழுதுவது ஆகியவையே அந்த அடிப்படைப் பணிகள். தமக்குப் பிடித்ததையெல்லாம் செய்ய விரும்பினார். சுற்றுப்புறவாசிகள் ஓயாது உழைப்பில் ஈடுபட்டிருந்தனர். அது அவருக்கு அலுப்புத் தட்டியது. தம் சொற்பத் தேவைகளை அத்தகைய உழைப்பு இல்லாமலேயே அடைந்துவிடலாம் என்று அவர் நம்பினார். ஆறு நாள் வேலை, ஒரே நாள் ஓய்வு என்பது பைபிளின் நியதி. அந்த ஏட்டை அவர் திருப்பிப் போட்டார். ஒவ்வொரு வாரமும் ஏழாவது நாள்தான் உழைப்பது என்று வைத்துக் கொண்டார். 
	அதற்காக வேண்டி, கன்கார்டு அருகில் வால்டன்பான்ட் என்னுமிடத்தில் இரண்ட வருஷம் கழித்தார். அங்கே ஒரு குடிசையைக் கட்டி மொச்சை, உருளைக்கிழங்கு பயிரிட்டார். மிக எளிய ஆகாரத்தையே உட்கொண்டார். சாதம், சொளரொட்டி, உருளைக்கிழங்கு, சர்க்கரைப்பாகு ஆகியவையே அவரது ஆகாரமாக விளங்கின. சமூகத்திலிருந்து ஒதுக்கமாகத் தனிமையில் வாழ்ந்தார். ஏகாக்கிரஹ சித்தத்டுன் சிந்தித்து நூல்களை இயற்றலானார். இக்காலத்தில்தான் அமெரிக்க இலக்கியத்திலேயே மகத்தான நூல்களில் ஒன்றாகிய வால்டன் அல்லது வனத்தில் வாழ்வு என்ற புத்தகம் வெளியாயிற்று (1854). 
	வால்டனும் முந்தைய நூலாகிய சட்ட மறுப்பும் நெருங்கிய உறவு முறை கொண்டவை. இரண்டுமே புரட்சிகரமான தஸ்தாவேஜீகள். 
	தோரோ அரசியல்வாதி அல்ல. எனினும், அரசாங்கத்தின் தன்மைகளையும் அதன் ஆட்சியையும் பற்றிப் பரிசீலனை செய்வது என்று அவர் முடிவு கட்டினார். தனி நபருக்கும் அரசாங்கத்துக்குமிடையே இருந்துவரும் உறவு முறை, இருக்க வேண்டிய நிலைமை ஆகியவற்றை விசாரணை செய்தார். இந்தப் பிரச்னைகளைப் பற்றிய சிந்தனையிலிருந்து சமூகத்தில் தனி மனிதனது அந்தஸ்து, ஒவ்வொருவனும் நாணயமாக வாழ வேண்டிய அவசியம் ஆகியவைகளைப் பற்றய தத்துவம் உருப்பெற்றது. 
	சட்ட மறுப்புக்கு வெளிப்படையான அத்தாட்சியாக ஒரு முறையை எல்லாப் பிரஜைகளும் தாராளமாகப் பின்பற்றலாம் என்று சுட்டிக் காட்டினார் தோரோ. வரிகளைச் செலுத்த மறுப்பதுதான் அந்த உபாயம். ஒரு 1000பேர், அல்லது எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் சரி சர்க்காரின் செய்கையைத் தாம் அங்கீகரிக்கவில்லை என்பதை இந்த முறையில் வெளிப்படுத்தினால் சீர்திருத்தம் அதைத் தொடர்ந்து வந்தே தீரும் என்று அவர் நினைத்தார். 
	"அரசாங்கம் அரைப் பைத்தியமாக மாறிவிட்டதே! வெள்ளிக் கரண்டிகளை வைத்துக் கொண்டு தன்னந்தனியாக வாழும் பெண்ணைப் போல அது பயந்தாங்கொள்ளியாகிவிட்டது. நண்பர்கள் யார், பகைவர்கள் யார் என்று அதற்குத் தெரியாமல் போய்விட்டது. 
	தோரோ வாழ்ந்த காலத்தில் அவரது சட்ட மறுப்பு அடைந்திருந்த செல்வாக்கு மிகமிகச் சொற்பமே.
	ஆப்பிரிக்காவில் வழக்கறிஞராகத் தொழில் நடத்தி வந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற ஹிந்து, 1907-ஆம் ஆண்டில் இந்நூலைப் பார்வையிட்டார். தம் மக்களின் உரிமைகளைக் காக்கச் சட்ட மறுப்பு ஏற்ற சாதனமாகக் கூடுமா என்று சாதகபாதகங்களை ஏற்கனவே அவர் ஆராய்ந்து கொண்டிருந்தார். இருபத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியைப்பற்றித் தோரோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஹென்றி ஸால்ட்டிடம் அவர் பின்வருமாறு கூறினார்:
	"சட்ட மறுப்புப் போராட்டத்தில் முழு மூச்சுடன் நான் ஈடுபட்டிருந்த காலையில், 1907-ஆம் ஆண்டிலோ, சற்றுப் பிறகோ, தோரோவின் நூல்களை நான் முதல்முதலாகப் பார்வையிட்டேன். சட்ட மறுப்பு என்ற கட்டுரையை ஒரு நண்பர் எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அது என் மனத்தில் ஆழப் பதிந்தது. அப்பொழுது நான் 'இந்தியன் ஒபினியன்' என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தேன். தென்னாப்பிரிக்காவில் இருந்த அதன் வாசகர்களுக்காக அதில் ஒரு பகுதியை நான் மொழிபெயர்த்தேன். பத்திரிகையின் ஆங்கிலப் பிரிவில் அந்தக் கட்டுரையின் பல பகுதிகளை எடுத்து தாராளமாகப் பிரசுரித்தேன். கட்டுரையில் கூறியிருந்த விஷயங்கள் எனக்கு விசேஷ நம்பிக்கையை உண்டு பண்ணின. அது உண்மைக்கு உறைவிடமாகி இருந்தது. எனவே, தோரோபற்றி மேற்கொண்டு தெரிந்துகொள்வது அவசியமெனக் கருதினேன். நீங்கள் எழுதிய அவரது வாழ்க்கை வரலாறு கிடைத்தது. வால்டன் என்ற நூலையும், மற்றைய சிறிய கட்டுரைகளையும் மகிழ்ச்சியுடன் படித்து மிகுந்த பயனடைந்தேன்." 
	தோரோ உருவாக்கி, காந்திஜி பழுதற்றதாக்கிய சட்ட மறுப்புச் சித்தாந்தம் எதிர்காலத்தில் சந்தேகமற மேலும் பயன்படப் போகிறது. எல்லா இடங்களிலும், இக்காலத்து இரக்கமற்ற சர்வாதிகார ஆட்சி நடைபெறும் தேசங்களிலுங்கூட, இந்த உபாயங்களின் மூலமாகத்தான் கொடுமைக்கு உள்ளாகியுள்ள மக்களின் சக்தி வெளிப்படக் கூடும். 
	எல்லாவிதமான யதேச்சாதிகாரங்களையும் தோரோ புறக்கணித்துள்ளார். தனி நபர்களின் உரிமைகளுக்கு மேலாக அரசாங்கத்தை உயர்த்திக் காட்டும் சோஷலிஸம், கம்யூனிஸம் அல்லது அவை போன்ற பிற கோட்பாடுகளுக்குத் தோரோவின் சித்தாந்தங்கள் முற்றும் நேர் எதிரிடையானவை. 
ஹாரியெட் பீச்சர் ஸ்டோவ் டாம் மாமனின் குடில்
	"தார்மிக விளைவுகள் ஒருபுறம் இருக்க, இலக்கியத்தின் வரலாற்றில் பதிவாகியுள்ள மகத்தான வெற்றிகரமான நூல்களில் இது ஒன்று" என 'டாம் மாமனின் குடிலைப்' பற்றி லாங்ஃபெலோ எழுதியிருக்கிறார். (உலகை மாற்றிய புத்தகங்கள் - ராபர்ட் பி.டவுன்ஸ் : 116)
	ஹாரியெட் பீச்சர் ஸ்டோவ் தம் வாழ்நாள் முழுவதையும் தீவிரமான சமயப் பொலிவுள்ள சூழ்நிலையில் கழித்தவர். பத்தொன்பதாவது நூற்றாண்டில் பெயரும் புகழும் பெற்று விளங்கிய லைமன் பீச்சர் என்ற சமய போதகரின் மகள். இன்னும் விசேஷ கியாதியடைந்த ஹென்றி வார்டு பீச்சரின் சகோதரி. மற்றொரு சமய போதகரை மணந்தவள். சமயப் பிரசாரகர்களின் தாயாக வாழ்ந்தவர். சமயத் துறையில் அவர் அடைந்த பயிற்சி கால்வின் மரபைக் கண்டிப்பாகத் தழுவியது. ஜானதன் எட்வர்ட்ஸ், சாமியூல் ஹாப்கின்ஸ் போன்ற நியூ இங்கிலாந்தைச் சேர்ந்த தூய்மையாளரின் (Puritans) அடிச்சுவட்டில் வளர்ந்தவர். பிள்ளைப்பிராயத்திலிருந்தே காரசாரமான ஆத்மவாத சர்ச்சை மலிந்த சூழ்நிலை. எனவே, அவர் உபதேசகராக ஆவது தவிர்க்க முடியாத நிலையாயிற்று. அவர் உபதேசகராக ஆவது தவிர்க்க முடியாத நிலையாயிற்று. அவர் தேவாலய அரங்கிலிருந்து உபதேசிக்கவில்லை. பேனாவைக் கொண்டு பிரச்சாரம் செய்தார். அவர் நிறைய எழுதிக் குவித்திருக்கிறார். டாம் மாமனின் குடில் உட்பட அவருடைய நூல்கள் அனைத்திலும் சமய உணர்வு பின்னணியில் இருக்கவே செய்தது. பிரச்சாரகருக்குரிய பேரார்வத்தையும், விவிலிய வேதத்தில் சொல்லாட்சி மிடுக்கையும் அவை ஊக்குவித்தன.
	அடிமைகளைப் பயன்படுத்தும் விதத்தை ஒரே ஒரு முறைதான் ஸ்ரீமதி ஸ்டோவ் கண்ணுக்கு மெய்யாகக் கண்டார். 1883-இல் கென்டுகியைச் சேர்ந்த மேஸ்வில்லுக்கு நண்பர்களுடன் அவர் போயிருந்தார். பல தோட்டங்களை அப்பொழுது கண்ணுற்றார். பண்ணையாரின் பெரிய மாளிகைகளையும் அடிமைகளின் விடுதிகளையும் பார்வையிட்டார். டாம் மாமனின் குடிலில் அவர் கற்பனைச் சித்திரமாகத் தீட்டிய ஷெல்லி பண்ணையை உருவாக்குவதற்கான 'மாதிரி' அமைப்பை இங்கே கண்டறிந்தார். அடிமை முறை எவ்வாறெல்லாம் வேலை செய்கிறது என்பதைப்பற்றிய எண்ணங்களும் இங்கேதான் அவரது மனத்தில் பதிவாயின. ஹாரியட்டின் சகோதரர் சார்லஸ் வர்த்தகத்துறையினர். நியூ ஆர்லியன்ஸிலும் செவ்வாற்றுத் தீரத்திலும் சுற்றித் திரிபவர். தேசத்தின் தென்பாகத்தில் உட்பகுதியில் இருந்து வந்த அடிமை நிலையின் ஆபாசமான கதைகளை அவர் வந்து கூறுவதுண்டு. மிஸிஸிபிநதிமீது படகில் செல்கையில் கஜப் போக்கிரியாகிய ஒரு கண்காணியைச் சார்லஸ் கண்டார். அவனைப்பற்றிச் சார்லஸ் தந்த விவரணைகளை வைத்துக் கொண்டுதான் டாம் மாமனின் குடிலில் வரும் சைமன் லெக்ரி என்ற பாத்திரத்தை ஹாரியெட் உருவாக்கினார். 
	நிறையப் பாத்திரங்கள் இருந்தபோதிலும் டாம் மாமனின் குடில் கதையமைப்பின் பிரதான பாகம் சிக்கல் இல்லாதது. ஷெல்பி தரும சிந்தையுள்ள அடிமை முதலாளி. தான்பட்ட கடன்களைத் திருப்பித் தருவதற்காக, டாம் மாமன் உட்பட, தன்னிடமிருந்த மிகச் சிறந்த அடிமைகளை விற்றாக வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு வாய்க்கிறது. ஹேவி என்ற நியூ ஆர்லியான்ஸ் அடிமை வியாபாரிக்கு அவர்களை விற்கிறான். 
	டாம் மாமன் அதிருஷ்டக் கட்டை. தன் எஜமானனுக்குச் சங்கடம் விளையாமல் இருக்க வேண்டுமென்பதற்காகத் தப்பியோட மறுக்கிறான். மனைவி மக்களிடமிருந்து அவனைப் பிரிக்கிறார்கள். மிஸிஸிபி நதியில் நியூ ஆர்லியன்சுக்குப் படகேறிச் செல்கையில் குழந்தை ஈவாவின் உயிரை டாம் காப்பாற்றுகிறான். நன்றியறிதலாக அக்குழந்தையின் தந்தை செயின்ட்கிளோர் அடிமை வியாபாரியிடமிருந்து டாமைக் கிரயம் கொடுத்து வாயங்கிக் கொள்கிறார். அடுத்த இரண்டு வருஷம் நியூ ஆர்லியன்சில் செயின்ட் கிளேரின் பண்புமிக்க மாளிகையில், தெய்விகக் குழந்தை ஈவாவுடனும், அவளுடன்கூட இருந்துவந்த நாப்சி என்ற விஷமமே உருவான நீக்ரோவுடனும் இன்பமாகக் கழிகின்றன டாமுக்கு. பின்னர் ஈவா காலமாகிறாள். அவள் ஞாபகார்த்தமாக டாமையும் பிற அடிமைகளையும் விடுவித்துவிடுவதற்கு, செயின்ட் கிளேர் தயாராகிறார். ஆனால் சண்டையிட்டுக் கொண்டிருந்த இருவரை விலக்கப் போய், செயின்ட் கிளேர் அகஸ்மாத்தாகக் கொலையுண்டு போகிறார். டாமை அடிமை மார்க்கெட்டுக்குக் கொண்டு போகுமாறு ஸ்ரீமதி கிளேர் கட்டளையிடுகிறாள். குடிகாரனும் முரடனுமான சைமன் லெகிரி என்ற செந்நதி தீரத்துப் பண்ணைக்காரன் அவனைப் பகிரங்க ஏலத்தில் வாங்குகிறான். அப்பழுக்கில்லாமல் நடந்து கொண்டும், குரூரமே உருவான எஜமானனைத் திருப்தி செய்விப்பதற்கு எவ்வளவு முயன்றுங்கூட, டாமை லெகிரி வெறுத்து அடிக்கடி அடிக்கிறான். காஸ்ஸி, எம்மெலின் என்ற இரண்டு அடிமைப் பெண்கள் தப்பிச் செல்வதென முடிவு கட்டித் தலைமறைவாகி விடுகின்றனர். அவர்களுக்குத் துணைபுரிந்ததாக டாம் மீது லெகிரி குற்றம் சாட்டுகிறான். அவர்களது ஒளிவிடம் டாமுக்குத் தெரியும் என்று அவன் சந்தேகிக்கிறான். எந்தத் தகவலையும் வெளியிட டாம் மறுக்கவே, லெகிரி கசையடி வழங்குகிறான். டாம் மூர்ச்சை போடுகிறான். இரண்டு தினங்களுக்குப் பிறகு, டாமின் முந்தைய ஆண்டையின் மகன் ஜான் ஷெல்பி அவனை மீட்டுச் செல்வதற்காக வருகிறான். ஆனால் காலம் தவறிவிட்டது; படுமோசமான கசையடியின் விளைவாக டாம் உயிரிழக்கிறான். லெகிரியை அடித்து வீழ்த்திவிட்டு ஜார்ஜ் ஷெல்பி, கென்டுகிக்குத் திரும்புகிறான். டாமின் பெயரால் தன் அடிமைகள் எல்லோரையும் விடுவித்துவிட்டு, அடிமை ஒழிப்புக்காகவே தனது எஞ்சிய வாழ்வை அர்ப்பணித்துக் கொள்கிறான். 
	ஜான் பி.ஜூவெட் என்ற சிறிய பாஸ்டன் பிரசுராலயம், மிகவும் பயந்த நிலையில் பிரசுர வேலையை ஏற்றுக்கொண்டது. புத்தகம் பெரிது. நூல் எழுதியவர் ஒரு பெண். விஷயமோ பலருக்கு உகப்பில்லாதது. பண நஷ்டம் ஏற்பட்டால் சமாளிப்பதற்காக வேண்டி, பிரசுரச் செலவில் பாதியை ஏற்றுக் கொண்டால், லாபத்தில் பாதியைத் தருவதாகப் பிரசுரகர்த்தா, ஸ்டோவ் தம்பதிகளிடம் அறிவித்தார். ஆனால் விற்பனையாகும் பிரதிகள் மீது பத்துச் சதம் உரிமைப்பணம் கிடைத்தால் போதும் என்று அவர்கள் கூறிவிட்டனர். இந்த முடிவினால் பெருஞ் செல்வம் அவர்களுக்குக் கிட்டாமற் போயிற்று. 
	டாம் மாமன் குடில் வெற்றிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கை நூலாசிரியைக்கோ பிரசுரகர்த்தாவுக்கோ இருக்கவில்லை. ஒரு புதிய பட்டாடையைத் தாம் வாங்கிக் கொள்வதற்கு வேண்டிய ஆதாயம் கிடைக்கலாமென்று ஸ்ரீமதி ஸ்டோவ் கூறினார். இரண்டு புத்தகங்களாக ஐயாயிரம் பிரதிகள் முதல் பதிப்பில் வெளியாயின. ஒரு நீக்ரோக் குடிலின் சித்திரம் முகப்புப் படமாகத் தீட்டப் பெற்றிருந்தது. 
	உடனடியாக நாவலை நாடகமாக உருவாக்கினார்கள். அமெரிக்காவில் எக்காலத்திலும் வேறு எந்த நாடகமும் அவ்வளவு புகழுடன் நடத்தப் பெற்றதில்லை. எண்ணற்ற நாடகக் கம்பெனிகள் சென்ற நூற்றாண்டில் உலகமெங்கும் சுற்றி இதை நடித்துக் காண்பித்துள்ளன. ஆனால் ஸ்ரீமதி ஸ்டோவுக்கு வருவாய் எதுவுமில்லை. நாடகமாக்குவதன்மீது உரிமை அளிக்கக்கூடிய வகையில் அக்காலத்திய சட்டம் அமைந்திருக்கவில்லை. உண்மையில் நாடகமாகக் காண்பிப்பதை அவர் அங்கீகரிக்கவில்லை. தமது நாவலை நாடக நூலாக வெளியிடுவதற்கு அநுமதி தர அவர் மறுத்துவிட்டார். 
	டாம் மாமனின் குடில் வெளியானதும், தென் பகுதிக்கு வெளியே, இச்சட்டத்தின் அமல் விஷயமாக மக்கள் ஒரு மனத்தினராக ஒத்துழையாமையில் ஈடுபட்டனர். அடிமை முறைக்கு எதிரிடையான உணர்ச்சி மிகப் பெரிய அளவில் திரண்டெழுவதற்க இது காரணமாயிற்று. உள்நாட்டு யுத்தத்தை ஒருகால் தவிர்க்க முடியாததாக்கிவிட்டிருக்கக் கூடும். எந்நிலையிலும் அந்தப் பேரிடியான போருக்கான பிரதான காரணமென்று இதை நிச்சயமாகச் சுட்டிச் சொல்லலாம். 1862-இல் ஜனாதிபதியின் மாளிகைக்கு ஸ்ரீமதி ஸ்டோவ் விஜயம் செய்தபோது, இந்த உண்மையை ஒப்புக் கொண்டு ஆப்ரஹாம் லிங்கன் பேசியிருக்கிறார். "இந்தப் பெரிய யுத்தத்தைத் தோற்றுவித்த புத்தகத்தை எழுதிய சிறிய மாது" என்று சொல்லி ஸ்ரீமதி ஸ்டோவுக்கு முகமன் கூறினார் லிங்கன். டாம் மாமனின் குடில் எழுதப்பெற்றிராவிடில் ஆப்ரஹாம் லிங்கன் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க மாட்டார் என்று சார்லஸ் சம்னர் கூறியுள்ளார்.
•	"நடை வெகு சாதாரணம். சொல்லாட்சி மட்டமானது, கண்ணியமற்றது; சில சமயம் இழிந்துரையாகத் தாழ்ந்து விடுகிறது. 
•	நகைச்சுவை சிரமப்பட்டு உருவாக்கியதாக இருக்கிறது" என்று சரித்திராசிரியர் ஜேம்ஸ் போர்ட் ரோட்ஸ் கூறியிருக்கிறார். 
•	நீக்ரோக்களின் பேச்சு முறையை ஸ்ரீமதி ஸ்டோவ் உபயோகித்திருப்பதைத் தென் பகுதி விமரிசகரான ஸ்டார்க் யங் ஆராய்ந்து, "அவள் நிறையக் கறுப்பர்களைப் பார்த்திருக்கிறாள். ஆனால் அவர்களைப் பேச வைக்க அவளால் முடியாது. 
•	அவளது செவிப் புலன் மகா மட்டமானது. நீக்ரோப் பேச்சின் இசையொலிப்பும், சித்திரச் செழுமையும் அவருக்கு அப்பாற்பட்டவை" என்று கூறியிருக்கிறார்.
•	கட்டுக்கோப்பு, உணர்ச்சிப் பெருக்கு என்ற குறைகள் தெளிவாக இருந்தபோதிலும், "ஒரு மகத்தான மனிதாபிமான தஸ்தாவேஜி" என்று வான் விக் புரூக்ஸ் அதைப் பற்றிப் பிரஸ்தாபித்துள்ளார். 
•	காதரின் ஆந்தொனி என்ற தற்கால விமரிசகர் கூறுகிறார்: "கற்பனைச் சிருஷ்டி, அமெரிக்கப் பழக்கவழக்கங்களின் சித்தரம் என்ற வகையில் நிச்சயமாக இதற்கு உயரிய அந்தஸ்து உண்டு. 
•	ஸ்ரீமதி ஸ்டோவுக்குத் தென் பகுதியினரிடம் விசேஷப் பிரியம் இருப்பது தெளிவு. அடிமை முறைக்குச் சாதகமாக இருப்பதை முன்னிட்டு அதை அவர் வெறுத்தார். எனினும், அதன் சூழ்நிலையை உற்சாகத்துடனும், அநுதாபத்துடனும் அவர் தீட்டியுள்ளார். 
•	நீக்ரோவை முக்கியமாக மதித்து, ஒரு கறுப்பனை நாயகனாகக் கொண்ட நாவலை உருவாக்கிய முதல் அமெரிக்க எழுத்தாாளர் ஸ்ரீமதி ஸ்டோவ்தான். 
•	ஒரு தார்மிக நோக்கத்துடன் எழுதப்பட்டதாயினும், சில சமயம், கதையைச் சொல்லும் மகிழ்ச்சியில், நோக்கத்தை அவர் மறந்துவிட்டார்." 
	டாம் மாமனின் குடில் விரைவில் ஸ்ரீமதி ஸ்டோவுக்கு ஸர்வ தேசப் புகழை அளித்தது. மொத்தம் அவர் வெளியே சென்றது மும்முறை, புத்தகம் பிரசுரமானதற்கு அடுத்த ஆண்டில் அவர் முதல் தடவையாக இங்கிலாந்துக்கும் ஸ்காட்லாந்துக்கும் சென்றார். 
	இந்தத் திக்விஜயத்தின்போது தாழ்நிலையினரின் ஆதரவாளர் என்று கருதி, சென்ற இடமெல்லாம் சாமான்ய மக்கள் அவரை ஆரவாரத்துடன் வரவேற்றனர். தேசமெங்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் ஒரு பென்னியாக வசூலித்து ஓராயிரம் பொன் சவரன்களை எடின்பரோவில் அடிமை முறையை எதிர்த்துத் தொடர்ந்து போரிடுவதற்கான அன்பளிப்பாக வழங்கினர். பிரிட்டிஷ் தீவுகளில் முன்னரும் பிறகும் ஓர் அமெரிக்க நூலாசிரியர் இவ்வளவு பரபரப்பை விளைவித்ததில்லை; இவ்வளவு பாராட்டுதலைப் பெற்றதுமில்லை. 
	வெளியான அன்றைத் தினமே மூவாயிரம் பிரதிகள் விலை போயின. மற்றவை மறுநாள் செலவாகிவிட்டன. 'ஆர்டர்கள்' வந்து குவிந்த வண்ணம் இருந்தன. ஒரு வாரத்தில் பதினாயிரம் பிரதிகள் விற்பனையாயின. முதல் ஆண்டில் அமெரிக்காவில் மட்டும் மூன்று லக்ஷம் பிரதிகளுக்குமேல் செலவாகிவிட்டிருந்தது. விசையால் இயங்கிய எட்டு அச்சு இயந்திரங்கள் இராப்பகலாகப் பணியாற்றின. மூன்று காகித ஆலைகள் தேவைப்பட்ட காகிதத்தைச் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தன. இவ்வளவுக்கும் பிறகு ஆயிரக்கணக்கான பிரதிகளுக்கான 'ஆர்டர்' பூர்த்தி செய்யப்படாத நிலவரமே இருந்து வந்தது. தேசத்தில் சுமாராக எழுதப் படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் புத்தகத்தைப் படித்தனர் என்பதை இது வெளியாக்கியது. 
	தற்காலப் பிரசுர வரலாற்றில் பிற நூல்கள் அனைத்தையும் டாம் மாமனின் குடில் மிஞ்சிவிட்டது. இதைவிட அதிகமான பிரதிகள் செலவான நூல் பைபிள் ஒன்றுதான். நாவல், நாடக், கவிதை, கீதம் என்ற உருவங்களில் பத்து லக்ஷக்கணக்கான பேரின் உடைமையாகி அது உலகெங்கும் சுற்றி வரலாயிற்று. மிகப் பெரிய எண்ணிக்கையில் பிரதிகள் விற்பனையானது போலவே, அக்காலத்துக் கருத்துக்களையும் ஆசாபாசங்களையும் டாம் மாமனின் குடில் பெருமளவில் பாதித்தது எனலாம். ஸ்ரீமதி ஸ்டோவின் மகனும் பேரப் பிள்ளையும் பின்னர் எழுதுகையில், "ஒரு பிரம்மாண்டமான தீப்பற்றி எரிவதுபோல இருந்தது, அதற்குக் கிடைத்த வரவேற்பு. எதிர்ப்பின்றி அலையலையாக அதினின்று கிளர்ந்த உணர்ச்சிப் பெருக்கு மோதியது. வானமெல்லாம் அதன் ஜோதிதான். கடலையும் கடந்து சென்றது. உலகம் அனைத்துமே இதைத் தவிர வேறு எதையும்பற்றிச் சிந்திக்கவில்லை, பேசவுமில்லை என்பதுபோலத் தோன்றியது" என்று குறிப்பிட்டுள்ளனர்.

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *