சொற்களைப் பிரியாதவனின் சொல்லில் விழுந்தகணம் (அய்யப்பமாதவன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது – 17.07.2011

சொற்களைப் பிரியாதவனின் சொல்லில் விழுந்தகணம்
(அய்யப்பமாதவன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியது - 17.07.2011)
	“Life ought to be like that” என்பவன் ஒழுக்கவாதி. “Life looks like that” என்பனே கலைஞன். அய்யப்பமாதவன் ஒரு கலைஞன். 
	"பார்த்த இடமெங்கும் 
	கண்குளிரும் பொன் மணல் 
	என் பாதம் பதித்து நடக்கும் 
	இடத்தில் மட்டும் 
	நிழல் தேடி 
	என்னோடு அலைந்து எரிகிறது 
	ஒரு பிடி நிலம்”.
	ப்ரமிளின் இக்கவிதையோடு அய்யப்பமாதவனின் கவிதை குறித்த பகிரலைத் துவங்குகிறேன். அவரது கவிதை வெளியில் நமது பாதத்தை மட்டும் பதித்து நடந்தால் அவரது கவிதைத் தளம் புலப்படாது. உடலின் அனைத்துப் புலன்களையும், விழிப்போடும், உயிர்ப்போடும் மீட்டி அவற்றின் மீது புரண்டால் மட்டுமே மாதவனின் கவி உலகைக் கண்டு, கேட்டு, உண்டு, உய்த்து, உணர முடியும். ஏனென்றால் புத்திசாலித்தனத்தைவிட புலன்களின் மேன்மையைக் கொண்டாடும் கவிஞர் அவர். சிற்றூரிலிருந்து பெருநகரம் வந்து சேர்ந்த நாடோடி மனமும், யாழ் நகர் குறித்துக் கலையுறுகின்ற பூர்வீகக் குடியின் நிலப்பற்றும் கலந்ததொரு நவீனக் கவிஞர். கூடவே கலகக்காரரும் கூட. Beethoven சொன்னதுபோல "நீங்கள் விதிகளை உருவாக்குகிறீர்கள், நான் எப்போதுமே அதை மீற வந்தவன்” எனும் கலகக் கவிஞர். 
	அய்யப்பமாதவனின் கவிஉலகம் மிக நுட்பமான உருவகத்தன்மை உடையது. வெறும் ஸ்தூலக் கைகளாலும், உத்தி, இசைக்கோர்வை, படிமம் போன்ற வழமையான அளவு கோல்களினாலும் அதனை அளக்க, அல்லது புரிந்து கொள்ள முயல்வதும், பகிர்வதும் இயலாதது. 
	அவரது இக்கவிதையைப் பாருங்கள் - 
	"எதுவும் சொல்வதற்கில்லை
	காதல் போதமா அபோதமா 
	உயிரேயறியாத சஞ்சலம்” 
அவரது கவிதையும், 
போதமா அபோதமா 
உயிரே அறியாத சஞ்சலம். 
சொல்லில் விழுந்த கணம் - எனும் தலைப்பிற்கு வருகின்றேன். 
	மனிதச் சொல்தான் எவ்வளவு வலிமையானதும். அதே சமயத்தில் பலவீனமானதும் கூட! 
	"மனிதச் சொல், அசை - பரவும் ஒளியும்
	பொற்கொல்லனின் கலைத்திறமும் இணைந்து 
	குருதியின் எண்ணங்களைச் சேர்க்கும் 
	பாரம்பரியக் கலம்” என்பார்கள். 
	குருதிக்குக் குருதித் தன்மையும், வாழ்க்கைக்கு வாழ்க்கைத் தன்மையும் தரும் சொற்களால், தன் கவிதைக் கணங்களை நம்மோடு பகிர்ந்துகொண்டிருக்கின்றார் கவிஞர். 
	‘சொல்’ தன் பலவீனத்தைக் கடந்து ஒரு பாத்திரமாகக், சாட்சியாகப், படிமமாக இவர் கவிதைகளில் மீட்சி பெற்றிருக்கிறது. 	‘பாயும் காலம்’ எனும் அவரது இக்கவிதையில் காலத்தின் முன் கரைந்து போகும் புள்ளியான மனிதன் இயம்பும் இச்சொற்களைக் கேளுங்கள் : 
	"உடைக்கத் திராணியில்லாப் பாறைகளிடம் 
	ஓங்கிய ஆயுதத்துடன் நிற்கிறேன். 
	விஸ்வரூபமான பூமி 
	உருண்டையிடையே 
	ஒரு சிறு பூச்சி அளவில் 
	புலப்படாது போகிறேன்” 
	அதோடு, பெரும்பாலான இவரது கவிதைகள் சொல்லின் துணையின்றித் தம்மைத் தாமே visual ஆக வெளிப்படுத்திக் கொள்கின்ற காட்சிக் கவிதைகள் தான். மிகக் குறிப்பாக : நிலவு குறித்த கவிதைகள், காடு, காமம், சிக்குண்டிருந்தவற்றைக் கிழிப்பது குறித்துப் பேசுபவை. 
	‘மஞ்சள் நிற ஓவியன்’ எனும் இக்கவிதையை வாசிக்கிறேன் - ‘காட்சிக்கவிதை’ இது.
 	"தெளிக்கப்பட்ட மஞ்சள் கனவினில் 
	மஞ்சளாகயிருந்தான் வின்சென்ட் வான்கா. 
	காதறுத்த நோவின்றி உயிர்த்த துரிகைகைகளாய்
	வாழ்ந்து திரிந்த வானத்தின் கீழ் ஓடிக்கொள்டிருந்தான்
	மஞ்சள் துளிகளாய் ஒழுகிய வண்ணம் 
	அந்திமத்தின் மஞ்சள் கலவைக்குள் 
	மஞ்சளாய் மறைந் கொண்டிருந்தான்”. 
	‘விழுந்த கணம்’ என்பது மிக அற்புதமானதொரு பிரயோகம், காதலில் விழுந்தேன் என்று சொல்வது மாதிரி! Nobody rises up in love, everybody falls in love - கவிதைக்கான பிறப்பு ஒரு சொல்லில் விழுந்த அந்த மாயக் கணத்தில் மாதவனுக்கு நிகழ்கிறது. 
	"மாய்ந்து போகிற சமயம் கூட 
	விரும்பிய கடைசிச் சொல்லைக் கூட 
	உச்சரிக்க நேரமில்லை "
என யாழ் நகரின் துயரைப் பதிவது அந்தக் கணத்தில்தான்.
	"சொற்களைப் பிரியாதவன் எனவும், ஊரின் நினைவுகளில் அவன் சொற்கள் மட்டும் அவளுடன் தங்கவிட்டன என்றும், இறப்பிலாவது தன்னைத் தன் தாய் மொழியின் முதல் சொல்லைப் பேசத்துவங்கிய தன் நிலத்தில் புதையுங்கள்” என்றும் கவிஞன் அறிவித்தாலும், சொல்லில் விழுந்த கணங்களைச் சொற்களைத் தாண்டி மற்றெல்லாப் புலன்களாலும் உய்க்கத் தருவதுதான் மாதவனது தனிச்சிறப்பு.  
	France நாட்டின் சிறந்த அறிஞர் Ernest ரெனான் (Ernest Renon) தேசத்தைக் "கூட்டு ஆன்மா” எனக் குறிப்பிட்டார். அய்யப்பமாதவனின் இத்தொகுப்பைக் கூட கவிஞர்களின் கூட்டு ஆன்மாவாக நான் பார்க்கிறேன். குறிப்பாக மலையாளக் கவிஞர் அய்யப்பமாதவனுக்கும், சுகந்தி சுப்ரமணியத்திற்கும் அவர் எழுதி இருக்கின்ற அஞ்சலிக் கவிதைகளும், மெடூசா கவிதையும் இதனை உறுதிப் படுத்துகின்றன. 
உதாரணத்திற்கு :
	"கிழித்தனர் சிக்குண்டிருப்பதை” என்றொரு கவிதை. படங்களில், ஓவியங்களில், இன்றும் பிற சட்டகங்களில் அடைபட்டு இருப்பவற்றைக் கிழித்தவுடன் கிடைக்கின்ற விடுதலை குறித்தது: 
	"வர்ணமடித்தவனின் பச்சையழகு
	கிழித்ததும் பறந்தது பச்சையழகு” என்கிறார். 
	
"வட்டிக்காரணின் மிக மோசமான சொற்களில் 
	உடைந்திருந்த வீட்டினுள் 
	அவளின் விவரிக்க முடியாத 
	கண்ணீர் வாக்கியங்கள்” என்பதும், 

	"கட்டுங்கடங்காமல் விரல்கள் 
தாவி விரல்களைக் கவ்வ 
நாணம் புற்றீசல்களாய் பறந்தது” 
என்பதும் மிக அழகு. 	

நிலவு குறித்த இவர் பார்வையைப் பாருங்கள்,
	"வானத்தின் ஆகப்பெரும் சுவரில் தொங்கும் 
	வட்ட ஓவியத்தை யாரும் 
	இன்றும் கடத்திவிடவில்லை. 
	சுவடுகள் பதித்து அழுக்காக்கிவிட்டனர்”- என்கிறார்.

திரைப்படத்துறையில் ஒரு இயக்குநர் ஆகின்ற கனவில் இருக்கிறார் மாதவன். 
	"கலையால் வழங்கப்பட்டிருப்பது மிகுந்த கவிதைத் தன்மையோடும், அதே சமயத்தில் மிக யதார்த்தமாகவும் விளங்குகின்ற ஒரு கனவுதான்! திரைப்படம் ஓர் இணையற்ற வெளிப்பாட்டு முறையைப் பிரதிநிதித்துவம் செய்யக்கூடும். தாராள மனப்பான்மையும், உயர்ந்த மனமும் கொண்ட மனிதர்கள் மட்டுமே தங்களது வாழ்வின் முழுமையான, புதிரான கணங்களில் திரைப்படச் சூழலுக்குள் நுழைகிறார்கள்” - என்றார் Alexandre Arnoux (அலெக்சாண்ரே அர்னூ). 
	அதிமென்மையான, மிக நுட்பமான, சமூக அக்கறையும், புலன்களின் வழி உலகை உய்க்கின்ற தீவிரமும் சம அளவில் இருக்கின்ற இந்தக் கவிஞர் இதே அளவில் திரைப்படத் துறையிலும் வெளிவரவேண்டுமே எனும் ஆதங்கமும், அக்கறையும் இத் தொகுப்பைப் படித்து முடித்த பின்பு ஒரு பெருமூச்சாய் வெளியேறியது. மனித மனத்தின் நுண்ணிய உணர்வுகளைத் துல்லியமான கவிதைச் சித்திரங்களாய்த் தீட்டுகின்ற இவர் திரைப்படத்துறைக்கான சமரசங்களை எவ்வாறு எதிர் கொள்வாரோ என்ற கவலையும் உடன் வந்தது. 
	"பிரிட்டிஷ் சாம்ராஜ்யம், சிறிது நேர ஞாபக இழப்பால் அடையப் பெற்றது” என து.சு.சீலி ஒரு முறை அறிவித்தார். எதனை அடைவதற்கும் கவிஞன் தனது ஞாபகங்களை இழக்கச் சம்மதிக்க மாட்டான் என்பதால், திரைப்பட சாம்ராஜ்யம் வெற்றிகரமாக இவரின் கைவருவது குறித்துக் காத்திருப்போம். 
	அழகியல், அகவியல், நுண்ணுர்வு, சமூகம் குறித்த கூர் கணிப்பு, கனவு, காதல் இவை அனைத்தும் கொண்டு பிசையப்பட்டவை இவரது கவிதைகள். அதன் ஒரு ‘பிடிக்கனவாய்’ இத் தொகுப்பை வாசித்து முடித்தபோது, கேட்டுக் கொண்டேன்- இவரது கவிதைக்கான சாவி எங்கிருக்கிறது என. நம் அனைத்துப் புலன்களிலுமிருக்கின்றது என்பதே விடை. 
ஒரு சிறு குறையுண்டு - 
	"காதல் நுரை எங்கும் பொங்க 
	அவன் மீது ஒரு அலையென ஓடிப்பார்த்தான்” - எனும் வரிகள் அய்யப்பமாதவனுக்கான கவிமனம். இடையில், 
	"அம்மணத்திற்கு உடுப்பாகவிருந்தான், 
ஆகாரமில்லாத முலைகளில் பலகாரமாகவிருந்தான்” - என இது ஏன்? 
இலக்கியத்தின் அதிகாரம் குறித்த கட்டுரை ஒன்றில் ஆர்.ஏ.ஸ்காட் ஜேம்ஸ் சொல்வார் -
	"இலக்கியமாக இருக்கின்ற எதுவும் ஒரு அதிகாரத்தை உட்செலுத்த முனையும்; இலக்கியம் அல்லாதது வெறும் அறிவை மட்டுமே உட்செலுத்தும்” (All that’s literature seeks to communicate power; all that is not literature, to communicate knowledge. The function of first is to ‘move’; the function of second is to teach). 
	கவிதையின் நோக்கமும் அதுதான். ஒரு அனுபவத்தை வெளிப்படுத்துவதன் மூலம், அது நம்மை அடியோடு புரட்டிப்போடுகிறது. என்னப் பொறுத்தவரை ஒரு கவிதை எப்பொழுதும் தர்க்கத்தினால் உலுக்கப்படுவதே இல்லை. அதன் விதிகளில் பகுத்தறிவிற்கும், அறிவிற்கும் ஆன இடம் மிக மிகக் குறைவே. கற்பனையும், புனைவும், உள்ளுணர்வும், அனுபவத்தின் தீச்சுடரும், கலை நேர்த்தியும் - இவை மட்டுமே கவிதையின் புகலிடங்கள். அய்யப்பமாதவனின் கவிதைத் தடமும் அதுவே. 
	Tolstoy இன் Anna Karenina Novel குறித்து Mathew Arnold சொல்வார் -
	"உண்மை என்னவெனில் - Anna Karenina  வெறும் கலைப்படைப்பு மட்டும் அல்ல - அது வாழ்க்கையின் ஒரு பகுதி. அதன் ஆசிரியர் அதனைக் கண்டுபிடிக்கவோ, கோர்க்கவோ இல்லை - மாறாக - அதனை அவர் பார்த்திருக்கிறார் - தன் மனக் கண்களில்”. 
	அய்யப்பமாதவனும் கவிதைகளைத் தன் அக, புற வாழ்க்கையைப் பார்த்துப், பதிவாக்கி இருக்கிறார். அவருக்கு வாழ்த்துக்கள். அவரது படைப்பிலே மூழ்கித் துய்த்த எனக்கு, அவரது தனித்ததொரு குரலை உங்கள் முன் பகிர்ந்தளிக்க முடிந்தது பெரு மகிழ்ச்சி. நன்றி. 

* * * * *

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *