டோக் பெருமாட்டி கல்லூரி – விருந்துரை விழா பேச்சு 06.09.2019

தேதி: 05 Sep 2019
ஆளுமைத்திறனில் ஆசிரியரின் பங்கு

நான் பிறந்ததற்கு என் பெற்றோர் காரணம் . 
ஆனால், நான் சிறந்ததற்கு  என் ஆசிரியரே காரணம். 
– மாவீரன் அலெக்ஸôண்டர்

இந்த உலகில் புனிதமான வேலைகளைச் செய்பவர்கள் இரண்டு பேர்தான். ஒருவர் மருத்துவர்.இன்னொருவர் ஆசிரியர். மருத்துவர்கூட மனிதனைப் பிணமாகமல்தான் பார்த்துக் கொள்கிறார். ஆசிரியர்தான் மனிதனை நடைபிணமாகாமல் பார்த்திக்கொள்கிறார்…என்று ஒரு கூட்டத்தில் வெ.இறையன்பு கூறினார்.

சீனத்தில் பூத்த செம்மலர் கன்ஃபூஷியஸ். சீனா  கன்ஃபூஷியஸ் பிறந்த நாளைத்தான் ஆசிரியர் தினமாக அனுசரிக்கிறது. 'வாழ்வின் அர்த்தம் பிறருக்கு நீ என்ன செய்கிறாய் என்பதில்தான் வெளிப்படும்’ எனத் தனது மாணவர்களுக்குப் போதித்தார் கன்ஃபூஷியஸ். தனது குடில்களில் லட்சக்கணக்கான பௌத்த நெறியாளர்களை உருவாக்கி, மாபெரும் சக்தியாக விளங்கியவர். காகிதம், எழுதும் மை, தீக்குச்சி என உலகில் அடிப்படைக் கண்டுபிடிப்புகள் பல நிகழ்த்தியவர்கள் கன்ஃபூஷியஸ்வாதிகளே.

ஆசான்கள்…
சி.வி.ராமன் முதல் அப்துல் கலாம் வரை இந்திய அறிவியலாளர்களை உருவாக்கிய டாக்டர் மஹேந்திரலால் சர்க்கார், ஒரு நியூட்டன் உருவாகிட உதவிய அவரது பள்ளித் தலைமை ஆசிரியர் ஜார்ஜ் பாரோ என உலகெங்கும் பெரிய அலைகளை ஏற்படுத்திய ஆசான்களே, உலக சரித்திரத்தின் திருப்புமுனைகளை சாதித்தவர்கள்.

அரிஸ்டாட்டில் என்னும் ஆசிரியர்….
மாசிடோனியா மன்னன் பிலிப்புக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.ஊர் மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல் நின்று கொண்டு
தங்க நாணயத்தை திரண்டு நின்று கொண்டு இருந்த மக்கள் வீது அள்ளி வீசினான். அங்கு நின்று கொண்டு இருந்த கடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும்வரை வீசி கொண்டே இருந்தான் அப்போது மக்கள்
எல்லாம் மகிழ்ச்சி பொங்க மன்னனின் குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம் பூரித்தான். மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார். மன்னர் ஆண் குழந்தை பிறந்த சந்தோசத்தை மக்களிடம் தங்க காசு கொடுத்து
அதனை தெரிவித்து மகிழ்கிறார். என்று சொன்னபோது மன்னன் குறிக்கிட்டு சொன்னான். இல்லை இல்லை எனக்கு ஆண் மகவு பிறந்ததற்காக நான் தங்கக்காசு கொடுக்கவில்லை. எனக்கு பாடம் நடத்தி என்னை புத்தி சாலியாக ஆக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில் இருக்கும்போது என் மகன் பிறந்து விட்டான். அவர் என் மகனை மிக பெரும் அறிவாளியாக இந்த உலகத்திற்கு உருவாக்கி தருவார் என்ற
சந்தோசத்தில் தான் இந்த பொற் காசுகளை அள்ளி தூவுகிறேன் என்று சொல்லி மீண்டும் அள்ளித் தூவினான் அவன் சொன்னபடி பிற்காலத்தில் மிக பெரும் அறிவாளியாக உருவெடுத்தவந்தான் பிலிப் என்ற மன்னனின்
மகன் மாவீரன் அலெக்சாண்டர் ஒரு சிறந்த ஆசிரியரால் மட்டுமே ஒருவனை மிக சிறந்த ஒருவனாக மாற்றமுடியும் என அன்றே பிலிப் மன்னன் நம்பினான். ஆசிரியர் அரிஸ்டாட்டிலும்அவன் நம்பிக்கைக்குப் பங்கம் விளைவிக்காமல் அவன் நம்பிக்கையை காப்பாற்றினான்.

The fate of the nation is decided in the class room.

ராஜ்நாத் சிங்கின் நெகிழ்ச்சி
தான் அமைச்சரான பிறகு தனக்கு மரியாதை செய்ய வந்த ஆசிரியரை தான் கவுரவித்ததை மாணவர்களிடம் கூறி நெகிழ்ந்தார். உத்தரபிரதேசத்தில் லக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது ஆசிரியர்களை மாணவர்கள் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நான் பள்ளியில் படிக்கும்போது உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தவர் மிகவும் கண்டிப்பானவர். ஒழுங்காக நடக்கவில்லை என்றால் பிரம்பால் அடிப்பார். மாநில கல்வி அமைச்சராக நான் ஆன பிறகு ஒரு நாள் என் சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். வழியில் மக்கள் வரவேற்பு அளித்தனர். சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த 90 வயது பெரியவரை பார்த்தவுடன் அவர் எனது ஆசிரியர் என்பதை அடையாளம் கண்டேன். உடனடியாக காரை விட்டு இறங்கி எனக்கு அணிவிப்பதற்காக கையில் மாலையுடன் நின்றிருந்த ஆசிரியரிடம் இருந்து மாலையை வாங்கி அவருக்கே அணிவித்துவிட்டு, காலில் விழுந்து ஆசி வழங்க கோரினேன். எனது ஆசிரியர் அழுதுவிட்டார். அதைப் பார்த்து நானும் உணர்ச்சி வசப்பட்டேன். ஆசிரியர்கள் நமது உயர்வுக்கு வழிகாட்டுபவர்கள். அவர்கள் மீது மாணவர்கள் அன்பும் மரியாதையும் செலுத்த வேண்டும். இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

தன் ஆசானுக்குக் காரோட்டியவர்….
             முன்னால் இந்திய குடியரசு தலைவர் சங்கர் தயாள் சர்மா அரசு முறை பயணமாக வளைகுடா நாடுகளில் ஒன்றான மஸ்கட் நாட்டிற்கு செல்கின்றார் . ஒரு நாட்டின் தலைவர் தங்கள் நாட்டிற்கு வரும்போது விமானத்திற்கு கீழே நின்று பூங்கொத்து கொடுத்து வரவேற்பது வழக்கம். ஆனால் மஸ்கட் மன்னர் சுல்தான் காபூஸ் இந்திய விமானம் வந்தவுடன் படிக்கட்டுகளில் மேலே ஏறி சென்று இந்திய குடியரசு தலைவரை வரவேற்றார் . தங்களது காரில் ஏறி பயணம் செய்ய கீழே இந்திய குடியரசு தலைவரை அழைத்துவந்தார் .  காரின் பின் இருக்கையில் இந்திய குடியரசுத்தலைவரை அமர வைத்துவிட்டு , காரின் முன்பக்கமாக சென்றார் மஸ்கட் மன்னர் . முன்பக்கமாக சென்று அமர்வார் என எதிர்பார்த்தபோது , நேரே ஓட்டுநரிடம் சென்று நகருமாறு பணித்து காரை ஓட்ட ஆரம்பித்தார். 
               உலக வரலாற்றில் ஒரு நாட்டின் தலைவர் இன்னொரு நாட்டின் தலைவருக்கு கார் ஓட்டுவது என்பது ஆச்சரியத்தை அளித்தது . இதற்கு முன்பாக மஸ்கட் க்கு வந்த அமெரிக்க அதிபருக்கு கூட இந்த அளவிற்கு மரியாதை கொடுக்கப்படவில்லை. விடுவார்களா செய்தியாளர்கள் ” அமெரிக்க அதிபருக்கு கூட அளிக்காத மரியாதையை இந்திய தலைவருக்கு ஏன் கொடுத்தீர்கள் என காரணம் கேட்டார்கள் ” அதற்கு சுல்தான் அளித்த பதில் ” நான் புனேவில் படித்த போது எனக்கு ஆசிரியராக இருந்தவர் இந்த சங்கர் தயாள் சர்மா . அவர் இந்திய தலைவராக மட்டும் இருந்திருந்தால் எப்போதும் போல சாதரண வரவேற்ப்பை கொடுத்திருப்பேன் . மஸ்கட்டின் மன்னராக இருந்தாலும் சங்கர் தயாள் சர்மா எனக்கு ஆசிரியர் நான் அவரின் மாணவன் ஆகையால் தான் வாகனத்தை ஓட்டி மரியாதை செய்தேன்” என்றார் . 

ஆசிரியர் பரம்பரை….
சாக்ரடீஸின் மாணவன் பிளாட்டோ
பிளாட்டோவின் மாணவன் அரிஸ்டாட்டில்
அரிஸ்டாட்டிலின் மாணவன் அலெக்சாண்டர்
இது சங்கிலித் தொடர்ச்சி…

முதல் நபர் ஆசிரியர்….
            பிலிப்பைன்ஸ் நாட்டுத் திரைப்படம். அதில் வயதான ஒருவர் தான் இறப்பதற்கு முன்பாக, இந்த வாழ்வை நல்லபடியாக வாழ்ந்து முடிக்க உதவிய மூவருக்கு நன்றிசொல்ல  ஆசைப்படுகிறார். அவரது மனைவி, அந்த மூவரையும் தேடியலைகிறாள்.மூவரில் முதலாவது – அவரது ஆசிரியர். இரண்டாவது நபர் – அவருக்கு முதன்முதலாக வேலை கொடுத்தவர். மூன்றாவது- அவரது பால்ய நண்பர்…மூவரையும் தேடிக் கண்டுபிடிப்பதற்குள்   சாவு தேவதை அந்த வயதானவரின் வீட்டுக் கதவைத் தட்டுகிறாள்.கதவைத் திறந்த மனைவிக்கு அது மரணதேவதை என்று தெரிந்துவிடுகிறது. அவள், எனது கணவர் நன்றி சொல்லாமல் உலகிலிருந்து பிரிந்துபோவது மிகவும் வேதனைக்குரியது.ஆகவே, சில மாதங்கள் அவகாசம் கேட்கிறாள்.சாவு தேவதையும் கோரிக்கையை ஏற்கிறது.
               மூவரையும் தேடிக் கூட்டி வருகிறாள்.அவர்கள் மிகுந்த சந்தோசத்துடன், தங்களை நினைவு வைத்துக் கொண்டிருந்தற்காக வயோதிகருக்கு நன்றி சொன்னார்கள். மூவரும் சந்தோசமாக விருந்து உண்பதை வயோதிகர் படுக்கையில் இருந்தபடியே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, தான் மிக மகிழ்ச்சியாகப் பிரிந்து போவதாகச் சொல்லியபடி உலகைத் துறந்துசெல்கிறார். ஆக, ஒரு மனிதன் மரணத் தருவாயிலும் சந்திக்க விரும்பும் முதல்நபர் ஆசிரியர்.

ஹெலன் கெல்லர்
பார்வையையும் கேட்கும் சக்தியையும் அவரிடமிருந்து விதி பறித்திருந்தாலும், துணிவு இருந்தால் உடல் ஊனங்கள் தூள் தூளாகும் என்று வாழ்ந்துகாட்டியவர் ஹெலன் கெல்லர். அவர் படித்தார், பட்டம் பெற்றார், பல நாடுகளுக்குச் சென்று ஊனமுற்றோரின் நலனுக்காக அயராது உழைத்தார். நலிந்தோருக்கு நம்பிக்கையூட்டும் ஒளிவிளக்கு ஹெலன் கெல்லர். இந்த ஒளிவிளக்கிற்கே ஒளியூட்டியவர் ஆன் ஸலிவன்.
பிரெயில் என்ற பார்வயற்றோருக்கான எழுத்து முறையில் தயாரிக்கப்பட்ட ஆங்கில எழுத்துத் தொகுதி இருந்தது.அதைக் கொண்டு பலநாள் போராடினாள் ஆன். அத்தீவிர முயற்சி திருவினையானது. ஆன் தான் பயின்ற பெர்க்கின்ஸ் பள்ளியை விட்டு வரும்போது, அக்குழந்தைகள் அவளுக்கு ஒரு பொம்மையைப் பரிசளித்திருந்தார்கள். அதைப் பார்த்த ஆனின் சிந்தனையில் ஒரு மின்னல். அவள் உள்ளங்கையில் பொம்மை என்பதற்கான D-O-L-L என்ற நான்கு எழுத்துக்களைத் திரும்பத் திரும்ப எழுதினாள் ஆன்.  ஆனின் கையைப் பிடித்திருந்த ஹெலன், ஆனின் கையில் doll என்ற எழுத்தை எழிதினாள். அன்று தொடங்கியது அந்தச் சரித்திர நாயகியின் வெற்றி அத்தியாயம்…ஹெலன் கெல்லர் சிகரம் தொட, தன்னையே மெழுகுவர்த்தியாக்கிக் கொண்டாள் ஆன் ஸலிவன் – anne Sullivan…

கிரேக்க சிந்தனையாளர் அரிஸ்டாட்டில் கருத்து….

ஆட்சியில் இருப்பவர்கள் முன்மாதிரியாக ஆசிரியர் போல செயல்பட வேண்டும். மக்கள் ஆட்சியாளர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்கிறார்கள்.

ஆசிரியர் = ஆசு+ இரியர்
ஆசி – குற்றம்
இரியர் – போக்குபவர்.

குற்றங்களைப் போக்குபவரே ஆசிரியர்….

ஸ்ரீமத் ராமாயணம் ஒரு காட்சி…
 மிதிலையில் சீதையின் சுயம்வரம். ராமனுக்குப் பெண் தர ஜனகன் தயங்கினான். தசரதனுக்கு 60000 மனைவியாயிற்றே. ராமன் ஏக பத்தினி விரதனாக, சீதா ராமனாக  இருப்பானா? என்ற ஐயம் ஜனகனுக்கு. இதைப் புரிந்துகொண்ட விசுவாமித்திரர், தசரதன் மகனை வேண்டுமானால் சந்தேகப்படு… வசிஷ்ட மகரிஷியின் மாணவன் ராமனை நம்பி உன் பெண்ணைக் கொடு என்றாராம். இதுதான் ஆசிரியரின் ஆளுமை…

No comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *